தமிழ்ச் சிறுகதை : ஜெயமோகன் பட்டியல் பாகம் 2

ரொம்ப நாள் கழித்து இந்த சீரிசைத் தொடர்கிறேன். புதுமைப்பித்தன் என்ற ஜீனியசைப் பற்றி முதல் பகுதியில் எழுதினேன். இப்போது அசோகமித்ரன் என்ற ஜீனியஸ் எழுதிய சிறுகதைகளைப் பற்றி.
மூன்று தமிழ் எழுத்தாளர்களை நான் ஜீனியஸ் என்று கருதுகிறேன். அசோகமித்ரன் இந்த மூவரில் ஒருவர். அவரது பாணி அலாதியானது. அவர் சமுத்திரத்தைப் பற்றி எல்லாம் எழுதுவதில்லை, அவர் எழுதுவது ஒரு துளி தண்ணீரைப் பற்றி. அனாவசியமாக ஒரு வார்த்தை எழுதமாட்டார். அவரது பிரயாணம், புலிக்கலைஞன், காலமும் ஐந்து குழந்தைகளும், ஒருவனுக்கு திடீரென்று கார் டிரைவிங் வசப்படும் ஒரு நிமிஷம் பற்றிய சிறுகதை (திருப்பம்) என்று சொல்லிக் கொண்டே போகலாம்.
முதலில் ஒரு உண்மையை வெளிப்படையாக ஒத்துக் கொள்கிறேன். அசோகமித்ரனின் எல்லா கதைகளும் எனக்கு புரிந்துவிடுவதில்லை. மிகவும் subtle ஆன எழுத்தாளர். வெளிப்படையாக எதையும் சொல்லும் பழக்கம் கிடையாது. தேவைக்கு அதிகமாக ஒரு சொல் இருக்காது. எனக்கோ நேரடியாக சொன்னாலே சில சமயம் புரிவதில்லை. ஆனால் புரியும்போது சில சமயம் மண்டையில் பல்ப் எரிகிறது, மணி அடிக்கிறது. அந்த அனுபவத்தை நான் அதிகமாகப் பெற்றது அசோகமித்ரன் கதைகளிலேயே. அதனால்தானோ என்னவோ எனக்கு இவரது கதைகளை எத்தனை முறை வேண்டுமானாலும் படிக்க முடிகிறது.
அவர் கதைகள் எல்லாம் என்னவோ அவர் மறைந்து நின்று நடப்பதைப் பார்த்து அதை அப்படியே ரெகார்ட் செய்வது போன்ற ஒரு உணர்வைத் தருகின்றன. எழுத்தாளர் குரல் எப்போதும் ஒலிப்பதில்லை. உபதேசம் என்ற பேச்சே கிடையாது. அவர் ரெகார்ட் செய்யும் சம்பவங்களோ சர்வ சாதாரணமானவை. ரயில் டிக்கெட் வாங்குவது, பொறியில் விழுந்த எலி, சிகரெட் பிடிக்க விரும்பும் ஒருவன் இதை எல்லாம் வைத்து என்ன எழுதுவது? ஒரு அசாதாரண சம்பவம் நடந்தால்தான் அதைப் பற்றி ஒரு கதை எழுதலாமா என்று என்னால் யோசிக்கக் கூட முடிகிறது.
அவருக்குப் பிடித்தமான தீம் மாறுதல் என்று நினைக்கிறேன். அது விமோசனம் சிறுகதையில் மனைவி உம் என்று சொல்லும் கணமாகட்டும், பெயர் நினைவு வராத ஒரு திருப்பம் சிறுகதையில் கிராமத்தில் இருந்து வந்து கார் ஓட்டக் கற்று கொண்டிருக்கும் ஒருவனுக்கு ஒரு கணத்தில் கார் ஓட்டும் கலை பிடிபட்டு அவன் திடீரென்று நகரத்தில் வசிக்கும் தொழிலாளி ஆவதாகட்டும் அங்கிருந்துதான் உண்மையான கதையே தொடங்குகிறது. அப்படி தொடங்கும் கதையைப் பற்றி அவர் ஒரு வார்த்தை சொல்வதில்லை. அந்தக் கதை எல்லாம் Exercise to the reader என்று விட்டுவிடுவதில்தான் அவருடைய மேதமை தெரிகிறது. ஒரு ஜப்பானிய ஓவியத்தில் பெரிய வெள்ளைக் கான்வாஸின் இடது ஓரத்தில் பறந்து கொண்டிருக்கும் பறவையில் பின்பகுதி மட்டும் தெரியுமாம். மிச்சம் எத்தனைப் பறவை, அதெல்லாம் எங்கே என்றெல்லாம் பார்ப்பவர்களின் கற்பனைக்கு ஓவியன் விட்டுவிடுகிறானாம். அந்த ஓவியன் வம்சத்தில் இவர் வந்திருக்க வேண்டும்.
ஒரு கணம், நொடி, நக்மா இதைப் படம் பிடிப்பதில் சூரன். அந்தக் கணத்தை அவரை விட திறமையாக நமக்கு காட்டுபவர்கள் யாருமில்லை. காலமும் ஐந்து குழந்தைகளும் நல்ல உதாரணம்.
அசோகமித்திரன் நகரத்து எழுத்தாளர். அவர் கதைகளில் நகரமும் ஒரு பாத்திரம். எனக்கு அவர் எழுதிய ஒரு கிராமத்துக் கதை கூட நினைவு வரவில்லை, உங்கள் யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்! ஒரு வேளை இருவர் என்ற குறுநாவலைச் சேர்த்துக் கொள்ளலாம். அது வைத்தீஸ்வரன் கோவில், அதன் அருகே உள்ள ஓரிரு சின்ன கிராமங்களைக் கதைக்களமாகக் கொண்டது.
அசோகமித்ரனை மிஞ்சியவர் எவருமில்லை என்றாலும் அவரது பாணியில் எழுதுவதில் வெற்றி பெற்றவர் என்று நான் கருதுவது அ. முத்துலிங்கம் ஒருவரையே. முத்துலிங்கம் optimism என்ற கூறு உள்ள அசோகமித்திரன் என்று எனக்குத் தோன்றுகிறது. மெல்லிய நகைச்சுவை இருவருக்கும் பொதுவாக உள்ள இன்னொரு அம்சம். முத்துலிங்கம், அசோகமித்திரன் இருவரையும் ஒப்பிடுவதை articulate செய்ய எனக்கே இன்னும் கொஞ்சம் நாளாகும். இதைப் படிப்பவர்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று எழுதினால் என் எண்ணங்கள் crystallize ஆக எனக்கு உதவியாக இருக்கும்.
அவரது பாணியில் எழுதும் குறிப்பிட வேண்டிய எழுத்தாளர்கள் என்று நான் கருதுவது திலீப்குமார், சுப்ரபாரதிமணியன், விமலாதித்த மாமல்லன் மூவரையும்தான். அதுவும் அசோகமித்ரனோடு ஒப்பிடக் கூடிய அளவு நகைச்சுவை உள்ளவர் திலீப்குமார்தான். அசோகமித்ரனைப் போல சர்வசாதாரணமான சம்பவங்களில் கதையைக் காண்பவர் சுப்ரபாரதிமணியன். ஆனால் இவர்கள் மூவரில் எவரும் அசோகமித்திரன் லெவலைத் தொட்டுவிடவில்லைதான்.
ஜெயமோகன் 12 சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். அவரது தேர்வுகளும், என் சிறு குறிப்புகளும் கீழே.
- விமோசனம்: கதை பூராவும் டென்ஷன்தான். கணவனுக்கு அடங்கி வாழும் மனைவி ஒரு தருணத்தில் உம் என்று திருப்பி மிரட்டுகிறாள். கணவன் அவளுடன் பேசுவதையே நிறுத்திவிடுகிறான். ஒரு மகானை தரிசித்து முறையிட்டால் தனக்கு விமோசனம் கிடைக்கும் என்று அவரிடம் போகிறாள். அவரிடம் பேசக்கூட முடியவில்லை. திரும்புகிறாள். விமோசனம் கிடைக்கிறது. என்ன மாதிரி விமோசனம்?
- காத்திருத்தல்: தேர்தலில் தோற்ற கட்சித் தொண்டன் அவன். வீட்டில் கல்லெறிகிறார்கள். இதை விவரிப்பது கஷ்டங்க, என்னை விட்டுட்டுங்க! நேராக படிச்சுக்கங்க!
- காட்சி: இது ஜெயமோகன் ஸ்டைல் சிறுகதை.நாஜிகளின் யூத முகாம்களைப் பற்றி இத்தனை சிக்கனமாக எழுதி – பத்து வாக்கியம் இருக்கலாம், அவ்வளவுதான் – இப்படி அந்த அவலத்தை உணர வைப்பவர் யாருமில்லை. “பார்த்தால்தான் அவைகளில் நான் பங்கேற்றவனாவேனா?” என்ற வரி எனக்கு சாகும் வரை மறக்காது.
- பறவை வேட்டை: மிக subtle ஆன கதை. எனக்கு இரண்டு முறை படித்த பின்தான் புரிந்தது. (என்று நினைக்கிறேன்) அந்தக் கடைசி வரிகள் அற்புதம்!
- குழந்தைகள்: அற்புதம்! அம்மையப்பன் என்றால் என்ன, உலகம் என்றால் என்ன என்று பிள்ளையார் கேட்டுவிட்டு சிவன் பார்வதியை சுற்றி வந்து மாம்பழத்தை வாங்கிக் கொள்வது போல சர்வ சாதாரண நிகழ்ச்சியில் உலகத்தையே, வரலாற்றையே காண்பிக்கிறார்.
- காலமும் ஐந்து குழந்தைகளும்: ஒரு கணத்தைக் காட்டுவதில் இவருக்கு இணை யாருமே இல்லை. நாரதர் விஷ்ணு இருவர் பற்றி ஒரு தொன்மம் உண்டு – நாரதரை தண்ணீர் எடுத்துக் கொண்டு வரச்சொல்லி விஷ்ணு அனுப்ப, நாரதர் நதிக்கரையில் ஒரு பெண்ணைக் கண்டு, மணம் செய்து, குழந்தை பெற்று… என்று போகும். அந்தத் தொன்மத்தை நினைவுபடுத்துகிறது.
- புலிக்கலைஞன்: அற்புதமான சிறுகதை. ஒரு நாலு வரியில் டகர்ஃபைட் காதரை கண் முன்னால் நிறுத்திவிடுகிறார். எத்தனை சிக்கனமான எழுத்தாளர், நாலு வரியே அவருக்குப் போதும்! இந்தக் கதையின் உச்சம் கதையின் நடுவில் நிகழ்கிறது. சிறுகதை என்பது ஒரு உச்சத்தை நோக்கி சீராகச் செல்ல வேண்டும் என்ற விதி எல்லாம் மேதைகளுக்கு இல்லை!
- காந்தி: காந்தி எனக்கு சிறுகதையாகவே தெரியவில்லை. என்றைக்காவது மண்டையில் மணி அடிக்குமோ என்று ஏழெட்டு முறை படித்துப் பார்த்துவிட்டேன், இன்னும் அடிக்கவில்லை.
- பிரயாணம்: நான் படித்த தலை சிறந்த சிறுகதைகளில் ஒன்று. இந்தக் கதையைப் படித்த பிறகுதான் நான் அசோகமித்ரனின் பக்தன் ஆனேன் என்று நினைக்கிறேன். முதல் முறை படிக்கும்போது கடைசி வரிகளில் “ஆங்? என்னாது? ஓ மை காட்! வாத்யாரே, நீ மேதை!” என்று தோன்றியது. இது ஒரு வேளை காப்பி அடித்த கருவாகக் கூட இருக்கலாம். ஆனால் உன்னதமான படைப்பு.
- பார்வை: எனக்குப் புரியாத இன்னொரு சிறுகதை. இன்னும் மண்டைக்குள் பல்ப் எரியவில்லை.
- மாறுதல்: இன்னுமொரு சிறப்பான சிறுகதை. வேலை செய்யும் வீட்டில் வெள்ளித்தட்டைத் திருடிவிட்டு மாட்டிக் கொள்ளும் சாயனா மீண்டும் அங்கேயே வந்தால்?
- குகை ஓவியங்கள்: கஷ்டப்பட்டு மலை ஏறி குகை ஓவியத்தில் காண்பது என்ன? நல்ல சிறுகதைதான், ஆனால் என் anthology-யில் இடம் பெறாது.
தொகுக்கப்பட்ட பக்கம்: அசோகமித்திரன் பக்கம், ஜெயமோகன் பக்கம்
தொடர்புடைய சுட்டிகள்:
அழியாச்சுடர்கள் தளத்தில் அசோகமித்ரன் சிறுகதைகள்
ஓப்பன் ரீடிங் ரூம் தளத்தில் அசோகமித்திரன் சிறுகதைகள்
அசோகமித்ரன் படைப்புலகுக்கு ஒரு வாசல்
இரு நகரங்களுக்கு நடுவே- அசோகமித்திரனின் புனைவுலகு
ஜெயமோகனின் படிக்கும் அறையில் உள்ள படங்கள்
அசோகமித்ரன் பேட்டி, இன்னொரு பேட்டி
அசோகமித்ரனின் இன்றைய பொருளாதார நிலை – ஒரு pointer
நோபல் பரிசு பெறத் தகுதி உள்ளவர்
அசோகமித்ரன்-ஜெயமோகன் ஒரு சந்திப்பு
அசோகமித்ரனும் எஸ்.எஸ். வாசனும்
Like this:
Like ஏற்றப்படுகின்றது...