கண்ணதாசனின் புனைவுகள்

கண்ணதாசன் சினிமாவுக்கு நன்றாக பாட்டெழுதுவார் என்பது தெரியாத தமிழன் கிடையாது. அவர் கதைகளும் எழுதுவார் என்பது அவ்வளவாகத் தெரியாது. தரம் அப்படி!

சில கதைகளை சமீபத்தில் படித்தேன். ஏண்டா படித்தோம் என்று ஆகிவிட்டது. எல்லா கதைகளுமே இப்படித்தானா என்று தெரியவில்லை. பொதுவாக சினிமாவுக்கு எழுதும்போது கொஞ்சம் சிம்பிளாக எழுதினால்தான் சரியாக வரும். இவர் கதைகளையும் அப்படியே சிம்பிளாக எழுத வேண்டும் என்று நினைத்துவிட்டார் என்று தோன்றுகிறது. மகா போர்!

சேரமான் காதலி என்ற சரித்திர நாவல் சாகித்ய அகாடமி விருதெல்லாம் பெற்றிருக்கிறது. எனக்கு ஒரு அசட்டுத்தனம் உண்டு. தண்டமான புத்தகத்தில் ஒரு ஐம்பது பக்கம் படித்துவிட்டால் எப்படியாவது தம் கட்டி படித்துவிடுவேன். இந்தப் புத்தகத்தைப் பொறுத்த வரையில் வடிவேலு மாதிரி “முடியல!”

படித்த சில புத்தகங்கள் பற்றி கீழே:
ஆயிரங்கால் மண்டபம்: ஹீரோவைப் பார்த்து உலகில் உள்ள எல்லா பெண்களும் சொக்குகிறார்கள், என் கூட படு என்று கெஞ்சாத குறைதான். இதில் சரத்பாபு (சரத் சந்திர சாட்டர்ஜி) மாதிரிதான் எழுத வருகிறது என்று பீற்றல் வேறு. என்றைக்காவது சரத்சந்திரரை படிக்க வேண்டும் என்றும் நினைத்திருந்தேன், இவர் பீற்றலைப் பார்த்தால் பயமாக இருக்கிறது.
ஊமையன் கோட்டை: ஊமைத்துரை சிறையிலிருந்து தப்பி வந்து மீண்டும் போரிட்டதை வைத்து எழுதி இருக்கிறார். கொடுமை!
மனம் போல் வாழ்வு: மகா தண்டம். இதற்கெல்லாம் கதைச்சுருக்கம் எழுத வேண்டும் என்றால் கடுப்புதான் வருகிறது. இதில் சரத்சந்திரர் பேரை வேறு இழுக்கிறார்!
பாரிமலைக்கொடி: பாரி, அங்கவை, சங்கவை, மூவேந்தர் படையெடுத்து பாரியை வெல்லுதல் என்ற சம்பிரதாயக் கதை. முன்னுரையில் மூவேந்தர் பாரி மீது பொறாமை கொண்டு பாரி மீது படை எடுத்தார்கள் என்று சொல்லப்படுகிறது, பொறாமை மட்டுமே போதுமான காரணம் என்று தனக்கு தோன்றவில்லை, அதனால் மேலும் கற்பனை செய்திருக்கிறேன் என்று சொல்லிவிட்டு, அதே பொறாமை என்று முடித்தது மிகவும் எரிச்சல் ஊட்டியது. மனிதனுக்கு தான் கதையில் என்ன எழுதி இருக்கிறோம் என்று கூட தெரியாதா?
வேலங்குடித் திருவிழா: இன்னொரு உலக மகா தண்டம். வழக்கம் போல பெண்கள் வந்து மேலே விழுந்து கொண்டே இருக்கிறார்கள். அக்காவைக் கட்டியவனுக்கு தங்கையும் கேட்கிறது.
சிவப்புக்கல் மூக்குத்தி: உலகமகா தண்டம்.

சரி அபுனைவுகளைப் படித்துப் பார்ப்போம் என்று நினைத்தேன். அதுவும் ஒரு நண்பர் வனவாசம் பற்றி அடிக்கடி சொல்லுவார். அது ஒரு உருப்படாத சுயசரிதை. ஆவண முக்கியத்துவம் மட்டுமே உள்ள புத்தகம். கண்ணதாசனின் ஆரம்பகால வாழ்க்கை (1950கள் வரை). கருணாநிதியுடன் நட்பு. தி.மு.க.வில் கருணாநிதி எப்படி ஆதிக்கம் செலுத்தினார், சம்பத்அண்ணாதுரை தகராறு ஆகியவற்றை ஒரு insider விவரிக்கிறார். கருணாநிதியின் பலவீனங்கள், அரசியல் சூழ்ச்சிகள் பேசப்படுவதால் மட்டுமே இது இன்னும் படிக்கப்படுகிறது. மனவாசம் இதை விட உருப்படாத சுயசரிதை. 1960கள். என்னை எல்லாரும் ஏமாற்றிவிட்டார்கள் என்ற புலம்பலைத் தவிர வேறு எதுவுமில்லை. கருணாநிதி மீது கொஞ்சம் காழ்ப்பு, ஈ.வெ.கி. சம்பத் மீது சில வருத்தங்கள் என்று சில பக்கங்கள். கட்டாயமாகத் தவிருங்கள்.

முழுதாக தவிர்க்க வேண்டிய புனைவுகள், அபுனைவுகள். கண்ணதாசனின் சினிமா பாடல்களை மட்டும் கேட்டால் போதும். என்ன எனக்கு ஒரு பிடிவாதம், சாஹித்ய அகடமி விருது பெற்ற எல்லா தமிழ் நாவல்களையும் படிக்க வேண்டும் என்று. என்றாவது ஒரு நாள் சேரமான் காதலியை முடிக்க வேண்டும்.

உங்களுக்குப் பிடித்த புத்தகம் ஏதாவது உண்டா? எதையாவது பரிந்துரைப்பீர்களா?

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் எழுத்தாளர்கள்