ஜெயகாந்தன் – மகராஜன் அருணாசலம் கடிதம்

ஜெயமோகன் சீரிசுக்கு நடுவே ஒரு digression. ஜெயகாந்தன் அஞ்சலி பதிவுக்கு வாசக நண்பர்களில் ஒருவரான மகராஜன் அருணாசலம் எழுதிய பின்னூட்டம் எனக்குப் பிடித்தமான ஒன்று. அதை இங்கே பதித்திருக்கிறேன்.


jeyakanthanஉண்மையில் ஜெயகாந்தன் மறைந்துவிட்டார் என்றவுடன் தோன்றியது சிங்கம் போய்விட்டது என்ற எண்ணம்தான். அவரின் சிறுகதைகளில் என்னை மிகவும் கவர்ந்தது ‘அந்தரங்கம் புனிதமானது’ தான். இன்று கூட நம்மால் ஏற்க இயலாத ஒரு கதைக்கரு. ஆனால் அது ஓர் கனவு. ஒட்டுமொத்த மானுடத்துக்கான கனவு. டேய், இதுதாண்டா நீ போய்ச் சேர வேண்டிய இடம், சேர முடியுமா என்ற அறைகூவல். தலைமுறைகள் தாண்டியாவது சென்று சேர வேண்டும் என்ற அவா.

அவர் தன் படைப்புகளை விட தன் ஆளுமையாலேயே என்னை மிகவும் கவர்ந்திருக்கிறார் என்றே இப்போது உணர்கிறேன். நான் படிக்க ஆரம்பித்த 90களுக்குப முன்பே அவர் எழுதுவதை நிறுத்தியிருந்தார். மேலும் அவரது படைப்புகள் மிக நேரடியாக, உரத்த குரலில் பேசுபவை. அது அவற்றின் தேவையும் கூட. ஆனால் அவரின் மேடைப் பேச்சுக்கள், அவரின் காணொளிகள் என்னில் ஏற்படுத்திய தாக்கங்கள் அலாதி. நம் கம்யூனிஸ்டுகளில் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்திருந்த வகையில் அவர் என்னை ஈர்த்தார். கம்யூனிச சித்தாந்தத்தில் ஆர்வம் வந்தபோது, அப்போதையில் முழுமையாக மூழ்காமல் தடுத்ததில் அவர் பங்கு அதிகம். “சோவியத் யூனியனில் எது இல்லை என நான் உணர்ந்தேன்!! இங்கு நம்மிடம் படாத பாடு பட்டுக்கொண்டிருக்கிறதே அந்த ஜனநாயகம் அது அங்கு இல்லை. அதை முறையாகப் பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் அது வெடித்து விடும். இப்படித்தான் இங்கே வெடிக்கிறது. ஆனால் நாம் ஒரு போதும் ஜனநாயகத்தால் சோர்வுற மாட்டோம். இந்த ஜனநாயகம் அனைத்து மானிடரையும் வெல்லும். இந்த ஜனநாயகம் அனைத்து சர்வாதிகாரத்தையும் தூள் தூளாக்கி விடும்” என்று முழங்கிய அவர் குரல் எனக்கு என்றும் நம்பிக்கையூட்டும் ஒன்று. ஒவ்வொரு முறை நம் ஜனநாயகத்தால் சோர்வடையும் போதும் இச்சொற்கள் என் காதில் ஒலிக்காமல் போனதில்லை. மேலும் நல்ல சர்வாதிகாரி என்ற கருத்துருவிலும் சிக்கிக் கொள்ள விடுவதில்லை.

அவரை அவரின் அனைத்து முரண்களோடும் நம்மால் ஏற்றுக் கொள்ள இயன்றதற்கு, இன்றும் கொண்டாடுவதற்கு அவரின் நெஞ்சத் திறமும், நிமிர்வும், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நேர்மையும், திமிர்ந்த ஞானச் செருக்குமே காரணங்கள். அவரின் அனைத்து கருத்து மாறுபாடுகளையும் அவர் பாசாங்கில்லாது முன்வைத்தார். இதுதான் நான் என்று நிமிர்ந்து நின்றார்.

அவரின் உடல் மொழி, அந்த கம்பீரமான குரல், சிரிப்பினூடே பேசுவது, அவர் கொள்ளும் சீற்றம், அவர் தலையசைவு, அவர் கூந்தல் என அனைத்துமே ஓர் சிங்கத்தை நினைவுபடுத்திக் கொண்டேயிருக்கும். இவை அவரை சிங்கம் என்று அழைக்கத் தூண்டியதா அல்லது சிங்கம் என்றழைக்கப்பட்டதால் அவர் இவற்றைக் கொண்டாரா! உண்மையில் ஜெயமோகன் சொல்வது போல ஓர் எழுத்தாளரின் மறைவு என்பது ஓர் துவக்கமே. அவரின் படைப்புகள் மீள்வாசிப்பு செய்யப் படும். அவர் இன்னும் நுட்பமாக அணுகப்படக் கூடும். அவர் படைப்புகளூடு நம்மோடு உரையாடவும் முடியும். எனினும் அவர் தன் சிந்தனைகளை கட்டுரைகளாகவாவது எழுதி வைக்காமல் போனது ஒருவிதத்தில் இழப்பே. தன் ஆன்மாவை எழுதியவன் என்றுமே அழிவதில்லை, வெகு சிறிதேயென்றாலும்.


டேவிட் ராஜேஷ் தன் பின்னூட்டத்தில் “ஜெயகாந்தனது பார்வை வீச்சு தமிழில் அரிது. மரங்களை பாடுபொருளாய் கொண்ட தமிழ் எழுத்தளர்களுள் காடுதனை பாடுபொருளாய்க் கொண்டவரவர்” என்று சொல்லி இருப்பதும் ரொம்பச் சரி!

வாசக நண்பர், சஹிருதயர் ரெங்கசுப்ரமணியின் பதிவு இங்கே

தொகுக்கப்பட்ட பக்கம்: ஜெயகாந்தன் பக்கம்