பி.ஏ.கிருஷ்ணனின் ‘மேற்கத்திய ஓவியங்கள்’

p_a_krishnanசிலிகன் பள்ளத்தாக்கு பாரதி தமிழ்ச் சங்கம் எழுத்தாளர்கள் ஜெயமோகனையும் பி.ஏ. கிருஷ்ணனையும் கௌரவிக்க ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் நண்பர் பாலாஜி ஆற்றிய உரை கீழே.

தன்னுடைய புத்தகத்தில் திரு. பி.ஏ. கிருஷ்ணன் ஒரு சம்பவத்தை சொல்கிறார்: ஐம்பது வருடங்களுக்கு முன்னால் திருநெல்வேலி ஜங்ஷனில் ஒரு டாக்டரின் வரவேற்பு அறையில் ஒரு படம் ஒன்று தொங்கிக்கொண்டிருந்தது. அந்த ஓவியத்தில் ஒருவனின் உடல் மேஜை மேல் கிடத்தப்பட்டிருந்தது. இடக்கை அறுக்கப்பட்டு உள்ளே இருக்கும் சதை தெளிவாகத் தெரிந்தது. மருத்துவர் ஒருவர் கையில் கூர்மையான உலோகக் குச்சி ஒன்றை வைத்துக்கொண்டு தன்னைச் சுற்றியிருப்பவர்களிடம் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தார். அந்தப் படம் பி.ஏ.கேவை ஈர்த்திருக்கிறது. பல ஆண்டுகள் கழித்து ஹேக்கில் மாரிட்ஸ்ஹ்யூஸ் மியூஸியத்தில் அந்த ஓவியத்தை பிஏகே பார்க்கிறார், பழைய நினைவுகள் வெள்ளமிடுகின்றன. எத்தனை வருடங்கள் ஆனாலும் மனதின் ஏதோ ஒரு மூலையில் அந்த பிம்பம் இருந்து கொண்டே இருக்கிறது.

rembrandt_anatomy_lesson_of_dr_tulp

அந்த ஓவியம் “Anatomy lesson of Dr. Tulp” ரெம்ப்ராண்ட்டுடையது.

நான் அந்த ஓவியத்தை முதன் முதலில் பார்த்தது, ஆஸ்டிரிக்ஸ் காமிக்ஸ் டிரிவியாவை படிக்கும்போது. அதில் ஒரு பானல் அப்படியே அனாடமி லெசனைப் போலவே அமைந்திருக்கும்.
asterix_obelix_anatomy_lesson_of_dr_tulp

எத்தனையோ ஓவியங்கள் நம்முன் பல வடிவங்களில் வந்து போகின்றன. சில மனதுக்குள் தங்கிவிடுகின்றன. மகத்தான ஓவியங்கள் பல வகைகளில் நம் சிந்தனைகளை, நம் கற்பனையை தூண்டிவிடுகின்றன. இதற்கு பல உதாரணங்கள் சொல்லலாம். இங்குள்ள பல ஆபீஸ் வரவேற்பறைகளில் இருக்கும் வான் கோவின் Sunflowers, இல்லை மோனேவின் வாட்டல் லில்லீஸ். திரும்பத் திரும்ப பாப்புலர் கல்ச்சரில் தன் தடங்களை பதித்துக்கொண்டே செல்கின்றன இவ்வோவியங்கள். திரு. ஜெயமோகன் அடிக்கடி கூறும் செவ்விலக்கியத்தின் பாதிப்பு இதைப் போலத்தான். சில தினங்களுக்கு முன் ஒரு தமிழ் பத்திரிகையில் ஒரு கார்ட்டூன் பார்த்துக்கொண்டிருந்தேன். சமீபத்தில் நடந்து முடிந்த இடைத்தேர்தலைப் பற்றி. ஆர்.கே நகரில் கம்யூனிஸ்ட் வேட்பாளர், டிராஃபிக் ராமசாமி ஆகியோர் ஜெயலலிதாவின் பெரிய அலையில் அடித்து செல்லப்படுவதாக ஒரு கார்ட்டூன். கார்ட்டூன் முக்கியமில்லை. ஆனால், அதில் அந்த அலை… அப்படியே ஹொகுசாயின் Great wave off Kanagawaவை நகல் எடுத்திருந்தது. அலை என்றாலே அந்த ஓவியம் ஞாபகத்துக்கு வருதே, அது தான் ஓவியத்தின் மகத்துவம்.
great_wave_off_kanagawa

மேற்கத்திய ஓவியங்கள் பி.ஏ.கே எழுதி சென்ற வருடம் வெளியான புத்தகம். இது முதல் பாகம். குகை ஓவியங்களிலிருந்து ஃபெரெஞ்சு புரட்சிக்கு முந்தைய ஆண்டுகள் வரை. இதை ஒரு எளிய அறிமுகம் என்றோ, நமக்கு புரிய வேண்டும் என்று அச்சுப்பிச்சு நகைச்சுவையோ இல்லாமல், ஒரு ஆத்மார்த்தமான கலாரசிகனால், வரலாற்று மாணவனால் எழுதப்பட்ட புத்தகம். இதையெல்லாம் ரசிக்கணும், ஏன்னா இந்த ஓவியங்களில் இன்னின்ன சூட்சுமங்கள் இருக்கின்றனன்னு ஒரு கோடு போட்டு காண்பிக்கிறார்.

இது போல பல அறிமுகப் புத்தகங்கள் இங்கிலீஷில் வந்திருந்தாலும், அவற்றை விட இது ஒரு படி மேலே இருக்கிறது. முதல் காரணம், ஒவ்வொரு ஓவியத்தையும் பி.ஏ.கே பல வருடங்களாக பார்த்து, படித்து, அனுபவித்து எழுதியிருக்கிறது. வெர்மியரின் girl with the pearl earring பார்க்கும்போது அவர் சொல்கிறார் “நம்மாழ்வார் சொல்லும் அடங்கெழில் சம்பத்து என்ற செல்வ சமுத்திரத்தின் ஒரு திவலை இந்த ஓவியம்”. ஒரு தேர்ந்த ரசிகரின், தன் பயணங்களின் மூலம் பல ஓவியங்களைப் பார்த்தவரின் அனுபவம் நமக்கு இந்தப் புத்தகம் மூலம் கிடைக்கிறது.
vermeer_girl_with_a_pearl_earring

இன்னொன்று, அறிமுகப் புத்தகங்கள் ஒரே சீரான ஸ்ட்ரக்சர் கொண்டவை. எல்லா ஓவியர்களைப் பற்றியும் ஒரு சிறு குறிப்பு, அவர்களுடைய படைப்புகளின் ஒன்று இரண்டு எடுத்து அவற்றை விவரித்தல் என்று. பி.ஏ.கேக்கு அப்படி எந்தக் கட்டுப்பாடும் இல்லை. அதனால், அவருக்கு பிடித்த ஓவியர்களைப் பற்றி விரிவாக எழுத முடிகிறது. டியூரரைப் பற்றி ஒரு முழு சாப்டர். ஓவியர்களிலேயே மிகவும் கலகக்காரனான, சுவாரஸ்யமான வாழ்க்கை வாழ்ந்த காரவாஜ்ஜியோ வாழ்க்கையைப் பற்றி சில பக்கங்களுக்கு வர்ணனை. எனக்குப் பிடித்த டச்சு ஓவியர்கள் ஹல்ஸ், வெர்மியர், ரெம்ப்ராண்ட் பற்றி ஒரு சாப்டர் என்று. எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார், எதை ஓரிரு வாக்கியங்களில் கடந்து போகிறார் என்பதை வைத்தே அவரது ரசனையை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.

merkatthiya_oviyangalசுமார் 160 ஓவியங்களை விவரிக்கிறது இந்த புத்தகம். ஹார்ட் கவர், முற்றிலும் வண்ணப் பக்கங்கள் என்று எதிலும் காம்பிரமைஸ் செய்துக்கொள்ளாமல் மிகவும் நேர்த்தியாக அச்சடிக்கப்பட்டிருக்கிறது. இதன் முன்னுரையில் சொல்லியிருப்பது போல், தமிழில் இப்போது தான் நாவல் இலக்கியம் என்றால் கல்கி, மு.வ, அகிலன், நா. பா, லக்ஷ்மி என்று அவர்களை கடந்து வர ஆரம்பித்திருக்கிறார்கள். அதே போல், ஓவியத்தைப் பொறுத்த வரையில் தமிழனின் புரிதல்கள் மணியம் செல்வன், மணியம், கோபுலுவோடு முடிந்துவிடுகிறது. இந்த நிலையில் மேற்கத்திய ஓவியங்களைப் பற்றி எழதி பயமுறுத்த வேண்டுமா என்பதற்கு பதில் சொல்கிறார், நல்ல ஓவியங்கள் திறனாய்வாளர்களுக்குப் புதிராக இருக்கும், பல கேள்விகளை எழுப்பும், ஆனால் சாதாரணப் பார்வையாளர்களுக்குச் சொற்களால் விளக்க முடியாத அளவுக்கு பேருவகையை கொடுக்கும், கேட்காமலே பதில்களையும் அளிக்கும் என்கிறார். இதற்கு மேல் இந்தப் புத்தகத்தின் மதிப்பை, இது பட்டியலிடும் ஓவியங்களப் பற்றி கூற முடியுமா என்பது சந்தேகமே.

balaji_srinviasanஇது முதல் பாகம்தான். இரண்டாம் பாகத்தில், இம்பெரஷனிஸத்தையும், மற்ற புதிய மாடர்னிஸ்ட் பெயின்டிங்களையும் பி.ஏ.கே எப்படி கொண்டுவரப் போகிறார் என்று பார்க்க ஆவலாக இருக்கிறேன். இப்படி ஒரு முயற்சி வெளியே வர வேண்டுமானால், முன்பதிவு செலுத்தி வாங்க ஆர்வலர்கள் ஆதரவு அளிக்க வேண்டும். நாங்கள் எங்களால் முடிந்ததை முதல் பாகத்துக்கு அனுப்பினோம். இங்கு வந்துள்ளவர்கள் இரண்டாம் பாகத்துக்கு உதவ வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

மேற்கத்திய ஓவியங்கள். காலச்சுவடு பதிப்பகம். 2014 வெளியீடு.

தொகுக்கப்பட்ட பக்கம்: பி.ஏ. கிருஷ்ணன் பக்கம், பாலாஜி பதிவுகள்

தொடர்புடைய சுட்டிகள்: இதே புத்தகத்தைப் பற்றி ஆர்வி

பாலாஜியின் பரிந்துரைகள்

balaji_srinviasanஎனக்கு ஒரு பிரச்சினை உண்டு. நான் படிக்க வேண்டும் என்று நினைத்திருக்கும் சீரியஸ் எழுத்தாளர்கள் பலரும் ஓரிரு தலைமுறைக்கு முந்தியவர்கள். ஜோசஃப் கான்ராடும் ஜான் கால்ஸ்வொர்த்தியும் என்ன மாதிரி எழுதுவார்கள் என்று ஓரளவு ஐடியா இருக்கும், என்ன புத்தகம் படிக்கலாம் என்று தெரியும். ஆனால்  ஒரு முரகாமியோ, ஜான் இர்விங்கோ என்ன மாதிரி எழுதுவார்கள், எந்த நாவலில் ஆரம்பிக்கலாம் என்று எனக்குத் தெரிவதே இல்லை.

என்னை மாதிரி ஆட்களுக்கு நண்பர் பாலாஜி ஒரு வரப்பிரசாதம். ஒரு முறை பக்கத்தில் ஒரு வாக் போனபோது அவர் பரிந்துரைத்த புத்தகங்கள் இவை. ஓரிரண்டு பழைய புத்தகங்கள் உண்டென்றாலும் அனேகமாக இன்றைய புத்தகங்கள்தான்…

 • Salman Rushdie – Satanic Verses
 • Umberto Eco – Foucault’s Pendulum
 • Vikram Seth – An Equal Music
 • Haruki Murakami – Kafka on the Shore
 • Orhan Pamul – Snow
 • Kazuo Ishiguro – Remains of the Day, Never Let Me Go
 • Monica Ali – Brick Lane
 • Toni Morrison – Beloved
 • Gabriel Garcia Marquez – One Hundred Years of Solitude
 • Michael Ondaatje – English Patient
 • Lewis Carroll – Through the Looking Glass
 • John Irving – Cider House Rules
 • Joseph Conrad – Heart of Darkness
 • Joesph Heller – Catch 22
 • John Steinbeck – East of Eden
  • முடிந்தால் நாடகங்களை சினிமாவாக பார்த்துவிடுவேன் என்றார். அப்படி திரைப்படமாக்கப்பட்ட நாடகங்களில் அவர் குறிப்பிட்டவை:

   அவர் குறிப்பிட்ட புத்தகங்களில் Catch-22 தண்டம் என்று நான் கருதுகிறேன்.

   There was only one catch and that was Catch-22, which specified that a concern for one’s safety in the face of dangers that were real and immediate was the process of a rational mind. Orr was crazy and could be grounded. All he had to do was ask; and as soon as he did, he would no longer be crazy and would have to fly more missions. Orr would be crazy to fly more missions and sane if he didn’t, but if he were sane he had to fly them. If he flew them he was crazy and didn’t have to; but if he didn’t want to he was sane and had to. Yossarian was moved very deeply by the absolute simplicity of this clause of Catch-22 and let out a respectful whistle.

   என்ற ஒரு அற்புதமான பாராவைத் தவிர்த்து புத்தகத்தில் ஒன்றுமே கிடையாது. தவிர்த்துவிடுங்கள் என்றுதான் நான் சொல்வேன். 🙂


   தொகுக்கப்பட்ட பக்கம்: பரிந்துரைகள்

பி.ஏ. கிருஷ்ணனின் “புலிநகக் கொன்றை”

பாலாஜி ஸ்ரீனிவாசன் ஃப்ரீமான்ட் நிகழ்ச்சியில் பேசியதை இங்கே பதித்திருக்கிறேன்.

புலிநகக் கொன்றை திரு. பி.ஏ. கிருஷ்ணன் அவர்களின் முதல் நாவல். இதன் மூல வடிவம் ஆங்கிலத்தில் “The Tiger Claw Tree” என்ற பெயரில் 1998இல் வெளிவந்தது. 2002ஆம் ஆண்டில் அவரே இதை “புலிநகக் கொன்றை” என்று தமிழில் எழுதியிருக்கிறார்.

எங்கள் சிலிகான் ஷெல்ஃப் வாசகர் வட்டத்தில் இந்தப் புத்தகத்தை சில மாதங்களுக்கு முன் அலசி விவாதித்தோம். எல்லோருக்கும் பிடித்த நாவலாக இது அமைந்தது.

தலைப்பிலேயே நம்மை உள்ளிழுக்கிறார் பிஏகே. Tiger Claw Tree என்ற டைட்டிலை ஏ.கே. ராமானுஜத்தின் ஐங்குறுநூறு பாடல் ஒன்றின் மொழிபெயர்ப்பில் இருந்து எடுக்கிறார். (எழுத்தாளர் விக்ரம் சந்திராவின் நாவல் Red Earth and Pouring Rain டைட்டிலும் இதில் இருந்து தான் எடுக்கப்பட்டது).

புலிநகக் கொன்றை திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்த தென்கலை ஐயங்கார் குடும்பத்தின் வரலாற்றைக் கூறுகிறது. 1870-இல் இருந்து கிட்டத்தட்ட 1970 வரையிலான நான்கு தலைமுறைகளின் வாழ்க்கையை விவரிக்கிறது. ஆனால் அதற்கும் முன்பாக முதல் தலைமுறையின் மூதாதையர்களைப் பற்றியும் தொட்டுச் செல்கிறது. ஆக, கட்டபொம்மன் காலத்திலிருந்து ஆரம்பித்து விரிவடைகிறது.

குடும்பத்தின் வயதான பாட்டி சாகக் கிடக்கிறாள் என்ற எளிய ஆரம்பமாக இருந்தாலும் இது சாதாரண குடும்ப வரலாற்றை சொல்லும் நாவல் இல்லை. மாறாக, இது ஒரு out and out பொலிட்டிகல் நாவல். கதாபாத்திரங்கள் அவர்கள் காலகட்டத்தின் சித்தாந்தங்களால் உந்தப்பட்டு அதை ஆழமாக விவாதிக்கிறார்கள். ஒரு நூறு பக்கங்களுக்கு குடும்பக் கதையாக செல்லும் நாவல், நீண்ட பாய்ச்சலில் அரசியல் சூழலுக்குள்ளே செல்கிறது. நம்மாழ்வார் என்னும் கேரக்டர், தீவிரவாத காங்கிரஸ் பின்னால் செல்கிறார். திலகரின் எழுத்துக்களால் கவரப்பட்டு, ஆயுதப் புரட்சியால் விடுதலை வரும் என்று உழைக்கிறார். வாஞ்சிநாதன் ஆஷ் துரையை சுட்டுக் கொல்லும் சம்பவம் அவர் வாழ்க்கையில் பெருத்த மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

அவர் மகன் மதுரகவி, காங்கிரஸ்காரராக ஆரம்பித்து கம்யூனிஸத்தால் உந்தப்பட்டு தீவிர கம்யூனிஸவாதி ஆகிறார்.

அவருடைய பையன் நம்பி, கம்யூனிஸ்டாகி அதனால் அவன் வாழ்க்கையே சூறையாடப்படுகிறது.

இந்தக் குடும்பத்தில் இழையோடும் சரடு இளவயதில் நிகழும் துர்மரணங்கள். விதியின் வலிய விளையாட்டு ஒவ்வொரு முறையும் எதிர்பாராத விதமாக அடித்துக்கொண்டே இருக்கிறது. இதற்கு காரணமாக ஊமைத்துரை காலத்தில் நடந்த ஒரு சம்பவத்தையும் பிஏகே விவரிக்கிறார். இந்த கனெக்ஷன் வலிந்து நுழைக்கப்பட்டது போல எனக்கு தோன்றியது.

பொன்னா பாட்டி பல இடங்களில் காப்ரியல் கார்ஸியா மார்குவெஸின் 100 years of solitudeஇல் வரும் உர்சுலா பாட்டியை ஞாபகப்படுத்துகிறாள்.

நிறைய யோசித்தால் எந்த வித சித்தாந்தத்தையும் முழுவதுமாக நம்பமுடியாது என்ற அடிச்சரடு இந்த நாவலில் மறுபடியும் மறுபடியும் வருகிறது. நம்மாழ்வாரும் சரி, நம்பியும் சரி, அவர்கள் நம்பிய கொள்கைகளை திரும்பத் திரும்ப மறுபரிசீலனை செய்கிறார்கள். இதற்கு அச்சாரமாக வரும் கண்ணன் என்ற காரெக்டர். அவனால் தான் எதை நம்புகிறோம், எதை நம்ப வேண்டும் என்று நிலையாக ஒரு முடிவு எடுக்க முடியவில்லை. ஆனால், அவனைச் சுற்றி இருக்கும் பெண்கள் (அவன் தங்கை, காதலி, அண்ணி) அவனை விடத் தெளிவாக இருக்கிறார்கள்.

இது மேல்தட்டு குடும்பத்தின் கதை. அதனால் நாவல் முழுவதும் இவர்களின் வருமானம் பற்றிய கவலையோ பசி, வறுமை போன்றவைகள் இடம்பெறவில்லை. நிலம் நீச்சு எக்கச்சக்கம். உண்டியல் கடை குடும்பம் என்று அழைக்கப்படும் குடும்பம்.

பிஏகேயின் முதல் டச், பொன்னாவின் மகள், இளம் விதவை ஆண்டாள் மறுமணம். நம்மாழ்வார் சுதேசமித்திரன் ஆசிரியர் பொண்ணுக்கு மறுமணம் செய்தது போல ஆண்டாளுக்கும் செய்யவேண்டும் என்று கூறுகிறான். இது ஜீயரால் தடுத்து நிறுத்தப்படுகிறது. சம்பிரதாயமான குடும்பத்தில் புதுவித கருத்துக்கள் வருவதற்கு ஒரு முன்னோடி. அடுத்த தலைமுறையில் நம்மாழ்வார், கல்யாணம் ஆன பிறகும் மனைவியை விட்டுவிட்டு செல்கிறார். உச்சக்கட்டமாக நம்மாழ்வாரின் மகன் மதுரகவி, தான் நம்பிய கொள்கைக்காக உயிர் துறக்கிறான். அடுத்ததாக வரும் தலைமுறையில் கண்ணன் அரசியலில் கால் நனைத்தாலும் கடைசியில் அதிலிருந்து விலகி, தன் வாழ்க்கையை கவனிக்க ஆரம்பிக்கிறான். ஒரு வகையில் பார்த்தால், இந்தியாவின் psyche இதில் தெரியும். 1970 வரை இளைஞ்ர்கள் அரசியலில் ஆர்வமாக பங்கெடுத்து, அதன் பின் அந்த ஆர்வம் குறைய ஆரம்பித்திருப்பதை கோடிட்டு காட்டியிருக்கிறார். நம் காலகட்டத்தில் எல்லா போராட்டங்களும் “யாரோ” செய்கிறார்கள் என்று டிவியில் பார்த்துவிட்டு போய்விடுகிறோம். இப்படியும் மனிதர்கள் இருந்தார்களா, அரசியல் இப்படியெல்லாம் அவர்கள் வாழ்க்கையில் விளையாடியிருக்கிறதா என்று எண்ணிப்பார்க்கையில் ஆச்சரியமாக இருக்கிறது.

நாவலின் ஸ்கோப் பெரிதாக இருப்பதால் அதில் பிஏகே அத்தனை விதமான தகவல்களையும் உள்ளே இழுத்து சுவையாக எடுத்துச் செல்ல முடிகிறது. வ.உ.சி, சிவா, பாரதி, வ.வே.சு ஐயர், பெரியார், ராஜாஜி எல்லாரும் கதாபாத்திரங்களாக வந்து போகிறார்கள். அறியாத தகவல்கள் பக்கத்துக்கு பக்கம் அள்ளித் தெறிக்கிறார் பிஏகே (எம்.ஆர். ராதா எம்ஜியாரை சுட்ட தினம் சோபர்ஸ் வெஸ்ட் இண்டீஸ் அணி சேப்பாக்கத்தில் விளையாட ஆரம்பிக்கும் நாள்) என்று. பிஏகேயின் ஜெனரல் நாலெட்ஜ் நன்கு வெளிப்படுகிறது. இது எல்லாம் நேம் ட்ராப்பிங்காக இல்லாமல் ஆழமாக அன்றைய சூழலை நம் மனதில் கொண்டு வருகிறது. நாவலில் வரும் கதாபாத்திரங்கள் பல. ஆழமாக மனதில் நிற்கின்றன. நம்மாழ்வார், நம்பி, கண்ணன் போன்ற ஆண் பாத்திரங்களுக்கு மத்தியில் ஆண்டாள், ரோஸா, பொன்னா பாட்டி போன்ற மிகவும் பவர்ஃபுலான பெண் பாத்திரங்கள். குறிப்பாக, ஆண்டாள் பாத்திரத்தை வைத்து ஒரு தனி நாவலே எழுதலாம். உபரி பாத்திரங்கள் கூட மனதில் நிற்கின்றன (ஜெர்மன் ஐயங்கார், கோபால பிள்ளை, நரசிம்மன் போன்றோர்).

எனக்குப் பிடித்த இன்னொன்று, இதில் வரும் literary references. ஷேக்ஸ்பியர், கம்பனில் இருந்து ஜி.கே. செஸ்டர்டன், மார்க்சிய சிந்தனையாளர்கள் வரை நிறைய ரெஃபெரன்ஸஸ். பல எழுத்தாளர்களை கூகிள் செய்து பார்க்க வேண்டி இருந்தது. ஒவ்வொரு காலகட்டத்திலும் கதை மாந்தர்கள் படிக்கும் புத்தகங்கள். ரெம்ப்ராண்டின் The anatomy Lesson of Dr.Tulp போன்ற ஓவியங்கள் பற்றிய குறிப்பும் படிக்க சுவையாக இருக்கிறது. என்னைப் போன்ற ட்ரிவியா, க்விஸ்ஸிங் buffகளுக்கு மறுபடியும் மறுபடியும் படிக்கக்கூடிய நாவலாக அமைந்திருக்கிறது.

பிஏகேயின் சென்ஸ் ஆஃப் ஹியூமர் பற்றி குறிப்பிடவேண்டும். கதை நெடுக பல நகைச்சுவை சம்பவங்கள். உதாரணத்துக்கு, கல்லூரி பேராசிரியர்கள் கோட், டை அணியவேண்டும் என்பதை எதிர்த்து போராடுகிறார்கள். கல்லூரி முதல்வர் கண்டிப்பானவர். அவருக்கு எதிராக சுவரொட்டி போராட்டம். ஒரு சுவரொட்டி அவரை “ஜின்னா மைனர்” என்றது. ஜின்னா நல்ல உடை அணிவதில் பிரியம் உள்ளவர் என்பது நெல்லையில் பலருக்குத் தெரியாது. “காந்தி பிறந்த மண்ணில் கால் சாராய் அணியச் சொல்லிக் கட்டாயப்படுத்தும் ஜின்னா மைனரே! டை கட்டச் சொல்வது எதற்காக? உம் பின்னால் கை கட்டிச் செல்வதற்கா? கோட்டு போடச் சொல்வது எதற்காக? உமக்குப் பின் பாட்டுப் பாடுவதற்கா?” மற்றொரு சுவரொட்டி அவரை இட்லரின் மறுபிறப்பு என்றது. “இட்லரின் மறுபிறப்பே! ஆசிரியரை மூச்சடைக்க வைக்காதே! அன்று ஆஸ்விட்ஸ்! இன்று இறுக்கமான வகுப்பறைகள்!”

இதற்கு கல்லூரி முதல்வரின் கமெண்ட் “காலேஜுப் பசங்க ஜின்னாவைக் கண்டானா ஹிட்லரைக் கண்டானா? ஆஸ்விட்ஸாம்ல ஆஸ்விட்ஸு. நாளைக்கு முப்பது தோசை திங்கிறவங்க ஒரு நாளு உள்ளாலுமே அங்க போனாத் தெரியும்”.

நாவலின் மையக் கருத்து வரலாறு நமக்காக காத்திருப்பதில்லை. சில சமயம் நம்மை மீறி போய்விடுகிறது, சில சமயம் நம்மை உள்ளே இழுத்து மாற்றிவிடுகிறது, சில சமயம் நம்மை விளிம்பில் நிற்கவைத்து உள்ளே இழுக்காமல் சென்றுவிடுகிறது. இந்த கதையில் இது எல்லாம் நடக்கிறது. இது அப்படி வரலாற்றால் சுழட்டி அடிக்கப்பட்ட ஒரு குடும்பத்தின் கதை.

எழுத்தாளர் ஒரு சமூகத்தின் மனசாட்சி என்று சொல்வார்கள். இந்த நாவல் ஒரு நூறாண்டு கால தமிழ் நாட்டு அரசியல் வரலாற்றின் மனசாட்சி.

A well-written novel that we can’t put down. கண்டிப்பாக படியுங்கள்.

தொகுக்கப்பட்ட பக்கம்: பி.ஏ. கிருஷ்ணன் பக்கம், பாலாஜி பதிவுகள்

தொடர்புடைய சுட்டிகள்:
பி.ஏ. கிருஷ்ணனின் “கலங்கிய நதி“, “திரும்பிச் சென்ற தருணம்

ஜெயமோகனின் “சங்க சித்திரங்கள்”

நான் பள்ளியில் டாப் மாணவன். முதலிரண்டு ராங்க்தான் எப்போதும். தமிழிலும் ஒரு எண்பது மார்க்காவாது வாங்குவேன். பேச்சுப் போட்டி கட்டுரைப் போட்டி என்று பல பரிசுகள் வாங்கி இருக்கிறேன். எல்லாவற்றிலும் எக்கச்சக்கமாக கவிதைகளை மேற்கோள் காட்டுவேன். ஆனால் பாடப்புத்தகங்களில் படித்ததில் ஒரு கவிதை என்றால் ஒரு கவிதை பிடித்ததில்லை. கடனே என்றுதான் படிப்பேன். கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி மாதிரி ஒரு மோசமான கவிதையை எழுத சிவபெருமான் கர்ப்பகிரகத்தை விட்டு வெளியே வந்திருக்கவே வேண்டாம் என்று நக்கல் அடிப்பேன். கடவுளே இவ்வளவு மோசமாய் கவிதை எழுதினால் மனுஷன் மட்டும் எப்படி நன்றாக எழுதுவான்? (ஆனால் பாரதியார் கவிதைகள் என்றால் அப்போதெல்லாம் உயிர்) பிடித்துப் படித்தது இரண்டு விஷயம்தான் – ஒன்று அசை, சீர் பிரிப்பது. அதில் இருந்த கணித அணுகுமுறை எனக்குப் பிடித்திருந்தது. ஆனால் இப்போது தேமா புளிமா எல்லாம் சுத்தமாக மறந்துவிட்டது. இரண்டாவது குற்றாலக் குறவஞ்சியின் சந்தம்.

வளர்ந்த பிறகும் பலரும் ரசிப்பவை எனக்கு அப்பீல் ஆகவே இல்லை. ஒரு நல்ல கவிதை படிக்க ஆயிரம் கவிதைகள் படிக்க வேண்டி இருந்தது. வேற வேலை வெட்டி கிடையாதா என்ன? எப்போதாவது நற்றிணை, நல்ல குறுந்தொகை, கற்றறிந்தார் ஏத்தும் கலி(த்தொகை) என்று படிக்க முயற்சி செய்தால் வார்த்தைகள் புரிவதில்லை. ஆழ்வார், நாயன்மார், கம்பன் எதுவும் பெரிதாக அப்பீல் ஆகவில்லை. ந. பிச்சமூர்த்தியின் கவிதைகள் எனக்கு ஓரளவு பிடித்திருந்தன. ஆனால் மு. மேத்தா, அப்துல் ரஹ்மான், மீரா போன்றவர்களின் கவிதைகள் எனக்கு அனேகமாக pretentious ஆக இருந்தன. அடப் போங்கப்பா என்று விட்டுவிட்டேன்.

ஷெல்லி, கீட்ஸ், பைரன், வோர்ட்ஸ்வொர்த் போன்றவர்களும் என் ரசனைக்கு ஒத்தே வரவில்லை. Ode to a Grecian Urn, Ode to the West Wind மாதிரி எதையாவது கண்டால் ஓட ஆரம்பித்தேன். உண்மையில் இந்த மாதிரி கவிதைகளுக்கும் புண்ணாக்குக்கும் ஒரு வித்தியாசமும் தெரியவில்லை.

ஜெயமோகன் இங்கே வந்திருந்தபோது சில கவிதைகளைப் (தேவதேவன்) பற்றி சொல்ல முயற்சித்தார். ஏதோ மரியாதைக்காக தலை ஆட்டினேன். ஜெயமோகனே ஒரு முறை உனக்கு கவிதை சரிப்படாது என்ற ரேஞ்சில் ஒரு கமென்ட் அடித்தார். அபார பொறுமை உள்ளவரையே சாய்த்துவிட்டோம், சரி நமக்கு அவ்வளவுதான் கற்பூர வாசனை விதித்திருக்கிறது, ஏதோ ஒரு கவிதை அபூர்வமாக பிடித்திருந்தால் அதுவே நமக்கு பெரிய அதிர்ஷ்டம் என்று விட்டுவிட்டேன்.

கவிதையை அணுகுவதிலேயே எனக்கு நிறைய பிரச்சினை உண்டு. எனக்கு மொழியால் கட்டுப்படுவது உயர்ந்த இலக்கியம் இல்லை. ஜெயமோகன் உள்ளிட்ட பலரும் ஒரு கவிதை மொழியை முழுவதுமாகத் தாண்ட முடியாது என்றே கருதுகிறார்கள். எனக்கு இதில் கொஞ்சமும் சம்மதமில்லை. புத்தம்வீடு நாடார் பின்புலம் உள்ள இலக்கியம், பனைமரத்தில் ஒரு முறை கூட ஏறாத எனக்குப் புரியாது என்றால் அதை நான் இலக்கியமாகக் கருதவே மாட்டேன். பாரதியைப் பற்றிய என் எண்ணம் ஆட்டம் கண்டதே என் கேரள நண்பன் ஒருவன் என்னவோ பாரதி பாரதி என்று தமிழர்கள் கொண்டாடுகிறீர்களே, உனக்கு மிகவும் பிடித்த ஒரு நாலு வரியை மொழிபெயர்த்து சொல்லு என்றபோதுதான். எனக்கு நினைவு வந்த வரிகள் எல்லாம் மொழிபெயர்த்தால் சர்வசாதாரணமாக இருந்தன. பக்கத்து ஊர்க்காரனுக்கே புரிய வைக்க முடியவில்லை என்றால் இது என்ன இழவு இலக்கியம் என்று தோன்றியது அப்போதுதான்.

முதல்மூன்றாவது முறையாக அனுபவித்துப் படித்த கவிதைப் புத்தகம் சங்க சித்திரங்கள்தான். அனேகமாக ஜெயமோகன் தேர்ந்தெடுத்திருக்கும் எல்லா கவிதைகளுமே மொழிக்குள் கட்டுப்படுபவை இல்லை. அப்படி மொழிக்குள் கட்டுப்படுபவையாக இருந்தால் இந்த சங்கத் தமிழ் எல்லாம் எனக்கு எங்கே புரியப் போகிறது? நாற்பத்து சொச்சம் கவிதைகளை ஜெயமோகன் விளக்குகிறார். அதில் ஒரு இருபத்தைந்து முப்பதாவது எனக்குப் பிடித்தது. மொழி என்ற constraintஐ இந்தக் கவிதைகள் படுசுலபமாகத் தாண்டுகின்றன. கவிதைகள் எல்லாம் ஒரு வாழ்க்கை அனுபவத்தை, எல்லாராலும் புரிந்து கொள்ளக் கூடிய விஷயங்களை நயமாக, universal appeal-ஓடு ரத்தினச் சுருக்கமாக கொடுக்கின்றன. அப்படிக் கொடுப்பதுதான் எனக்கு கவிதை!

என் பிரச்சினை என்ன என்று சங்க சித்திரங்களைப் படித்த பிறகுதான் எனக்கே புரிகிறது. ஒன்று இன்று புழக்கத்தில் இல்லாத தமிழ். படித்தவுடன் எதுவும் புரிந்துவிடுவதில்லை. இரண்டாவது தமிழ் வாத்தியார்கள் மற்றும் கோனார் நோட்ஸ். சாரத்தை பிழிந்து எடுத்துவிட்டு சக்கையை மாணவர்களுக்கு கொடுப்பதில் இவர்கள் வல்லவர்கள். எனக்கு கொஞ்சநஞ்சம் இருந்த கவிதை ஆர்வம் இவர்களால்தான் முக்தி அடைந்திருக்க வேண்டும். வையம் தகளியா வார்கடலே நெய்யாக வெய்ய கதிரோன் விளக்காக என்ற கவிதையை ரசிக்க யார் உதவியும் தேவை இல்லை. ஆனால் அந்த வரிகளை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து ஒவ்வொரு வார்த்தைக்கும் என்ன அர்த்தம் என்று விளக்கி அதை எப்படி எழுதினால் கூட அரை மார்க் கிடைக்கும் என்று யோசிப்பதில்தான் பள்ளிப் பருவம் செலவழிந்தது. கவிதை? அதை யார் கவனித்தது?

என்னடா நமக்கு இந்தக் கவிதை விஷயத்தில் செக்கும் சிவலிங்கத்துக்கும் வித்தியாசம் தெரியவில்லையே என்று எனக்கு கொஞ்சம் வருத்தம் இருந்தது. எனக்கு எல்லா உருளையும் சிவலிங்கம் இல்லை, சரியான அளவுகளில் இருந்தால்தான் அது சிவலிங்கம் என்று இப்போதுதான் புரிகிறது. கவிதை என்றால் அழகான படிமம், அருமையான உவமை என்று பலரும் நினைக்கிறார்கள். அவர்கள் எடுத்துக் காட்டும் கவிதைகளில் அப்படி படிமங்களும், காட்சிகளும், உவமைகளும் நிறைந்து காணப்படுகிறது. எனக்கோ உவமைகள் கூட (வையம் தகளியா, அச்சுடைச் சாகாடு ஆரம் பொருந்திய…) நான் நேரடியாகக் கண்டு அனுபவித்த அல்லது உணரக்கூடிய உவமைகளாக இருந்தால்தான் சரிப்படுகிறது. நான் கவிதைகளில் எதிர்பார்ப்பது வேறு. எனக்குக் கவிதை என்பது வாழ்க்கை அனுபவம். அதை நாலிலிருந்து நாற்பது வரிக்குள் சுருக்கமாக, ஆனால் மனதுக்குள் பெரிதாக விரியும் கதையாகச் சொல்வதுதான் கவிதை. “வாரணம் பொருத மார்பும்” என்ற கம்பன் கவிதை எனக்குப் பிடித்திருக்கிறது என்றால் அது தோல்வியை விவரிக்கிறது, நானும் அப்படி வீரத்தைக் களத்தில் போட்டுவிட்டு வந்திருக்கிறேன். குறுகுறு நடந்து சிறுகை நீட்டி நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்த மகள்கள், nephews, nieces, பக்கத்து வீட்டுக் குழந்தைகள் உண்டு. டி.எஸ். எலியட் சொன்ன மாதிரி காலை ஐந்து மணிக்கு சப்பாத்திக் கள்ளியை சுற்றி வருவது (Here we go round the prickly pear at five o’clock in the morning) போல அர்த்தமில்லாமல் நாட்களைமாதங்களை செலவழித்திருக்கிறேன். அந்தக் கவிதைகள்தான் என் நெஞ்சைத் தொட்டிருக்கின்றன. அப்படி அனுபவத்தைச் சொல்லும் கவிதைகளை நான் படித்த வரை கம்பனிலும், ஆழ்வார்களிலும், தேவாரம், திருவாசகத்திலும், ஏன் பாரதி, பிச்சமூர்த்தியிலும் கூட பெரிதாகக் காணவில்லை. சங்கக் கவிதைகளில்தான் அப்படித் தெரிகிறது.

சங்க சித்திரங்களைப் பற்றி இரண்டு மூன்று மாதம் முன்னால் இங்கே உள்ளூர் சிலிகான் ஷெல்ஃப் குழுமத்தினர் விவாதித்தோம். தோழி காவேரி அருமையாகப் பேசினார். நண்பர் பாலாஜி இந்தப் புத்தகத்தின் நடையைப் பற்றி குறிப்பிட்டார். இந்தப் புத்தகத்தில் சரளமான நடை; சுலபமாகப் படிக்கும் வகையில் கொஞ்சம் dumb down செய்திருக்கிறாரோ என்று கேட்டார். உண்மைதான், ஜெயமோகன் எழுத்தில் அடர்த்தி அதிகம், பொதுவாக ஊன்றிப் படிக்க வேண்டும். யோசித்து செய்ததோ, இல்லை தற்செயலாக அமைந்ததோ, அதுதான் சரியான அணுகுமுறை. பாலாஜி இன்னொரு கேள்வி கேட்டார் – இந்தக் கவிதைகளில் தரும் சமகாலத்தன்மை (நான் காலம் கடந்த தன்மை என்று சொல்வேன்) பொதுவாக எல்லா சங்கக் கவிதைகளிலும் காணப்படுகிறதா, இல்லை ஜெயமோகன் அப்படிப்பட்ட 40 கவிதைகளைத் தேர்ந்தெடுத்திருக்கிறாரா என்று. என்னைப் பொறுத்த வரை இந்தப் புத்தகத்தின் பயன் சங்கக் கவிதைகளை சாதாரணர்களிடம் கொண்டு போய்ச் சேர்ப்பது. அதற்கு இந்த இரண்டு அம்சங்களும் உதவியாக இருக்கின்றன. அவ்வளவுதான்.

எல்லா கவிதைகளுக்கும் ஒரு உக்ரமான சம்பவத்தை வைத்துப் பேசுவது நாற்பது கவிதைகளுக்குத் தாங்கலாம். நானூறு கவிதைகளுக்கு தாங்கமுடியுமா என்று தெரியவில்லை. இந்த அனுபவங்கள் அனைத்தும் உண்மையா, இல்லை புனைவு கலந்த உண்மையா என்ற கேள்விக்கே நான் போகவில்லை.

நான் கவிதையில் என்ன எதிர்பார்க்கிறேன் என்று எனக்கே இப்போதுதான் புரிய ஆரம்பித்திருக்கிறது, ஜெயமோகன் புரிய வைத்திருக்கிறார். என்றாவது சங்கக் கவிதைகளைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டிவிட்டிருக்கிறார். அவர் நன்றி எல்லாம் எதிர்பார்த்து இதை எல்லாம் எழுதவில்லை, இருந்தாலும் நன்றி!

கவிதைகளையும் ஜெயமோகனின் மொழிபெயர்ப்பையும் (விளக்கம் கிளக்கம் இல்லாமல்) அடுத்த சில பதிவுகளில் கொடுக்க முயற்சிக்கிறேன்.

பின்குறிப்பு: நான் இந்தப் புத்தகத்தை ரசித்ததைப் பார்த்தோ என்னவோ காவேரி வேறு சில புதுக்கவிதைப் புத்தகங்களை என்னிடம் தள்ளப் பார்த்தார்; எனக்கு இன்னும் அவ்வளவு தைரியம் வரவில்லை, ஜகா வாங்கிவிட்டேன். 🙂

தொகுக்கப்பட்ட பக்கம்: கவிதை பக்கம்

நண்பர் பாலாஜி வாங்கிய புத்தகங்கள்

புத்தகங்களை லிஸ்ட் போடுவதில் ஒரு தனி சுகம் இருக்கிறது. சிலிகன் ஷெல்ஃப் குழும உறுப்பினரான பாலாஜியும் புத்தகக் கண்காட்சி சமயத்தில் இந்தியா போயிருக்கிறார், புத்தகங்களை வாரிக்கொண்டு வந்திருக்கிறார்! புத்தகக் கண்காட்சி சமயத்திலேயே பதித்திருக்க வேண்டும், எப்படியோ கைதவறிவிட்டது.

 1. India after Gandhi – ராமச்சந்திர குஹா
 2. Following Fish – சமந்த் சுப்ரமணியம்
 3. River of Smoke – அமிதவ் கோஷ்
 4. Muddy Riverபி.ஏ. கிருஷ்ணன்
 5. துயில் – எஸ். ராமகிருஷ்ணன்
 6. சில இலக்கிய ஆளுமைகள் – வெங்கட் சாமிநாதன்
 7. இந்திரா பார்த்தசாரதி கதைகள்
 8. கந்தர்வகானம் (ஜிஎன்பி)லலிதாராம், வி. ராம்நாராயண்
 9. துருவ நட்சத்திரம்லலிதாராம்
 10. நம்பக் கூடாத கடவுள் – அரவிந்தன் நீலகண்டன்
 11. கம்யூனிசம் – அரவிந்தன் நீலகண்டன்
 12. சூடிய பூ சூடற்க – நாஞ்சில்நாடன்
 13. பனுவல் போற்றுதும் – நாஞ்சில்நாடன்
 14. வாழ்விலே ஒரு முறை – ஜெயமோகன்
 15. இரவு – ஜெயமோகன்
 16. உலோகம் – ஜெயமோகன்
 17. அறம் – ஜெயமோகன்
 18. எக்சைல் – சாரு நிவேதிதா
 19. தேகம் – சாரு நிவேதிதா
 20. சரசம், சல்லாபம், சாமியார் – சாரு நிவேதிதா
 21. வெள்ளெருக்கு – கண்மணி குணசேகரன்
 22. கன்னி – ஜே. பிரான்சிஸ் க்ருபா
 23. ஓரிரு எண்ணங்கள் – சுஜாதா
 24. இரண்டாம் இடம் – எம்.டி. வாசுதேவன் நாயர்
 25. பாத்திமாவின் ஆடு – வைக்கம் முஹம்மது பஷீர்
 26. சப்தங்கள் – வைக்கம் முஹம்மது பஷீர்
 27. தவிப்பு – ஞானி
 28. அஞ்ஞாடி – பூமணி
 29. ஒரு இலக்கியவாதியின் சினிமா அனுபவங்கள்ஜெயகாந்தன்
 30. சினிமாவுக்குப் போன சித்தாளு – ஜெயகாந்தன்
 31. எம் தமிழர் செய்த படம் – தியோடோர் பாஸ்கரன்
 32. சித்திரம் பேசுதடி – தியோடோர் பாஸ்கரன்
 33. அடூர் கோபாலகிருஷ்ணன் – கௌதமன் பாஸ்கரன்
 34. மணிரத்னம், தலைகீழ் ரசவாதி – மகாதேவன்
 35. தமிழ் சினிமாவின் பரிமாணங்கள்

தொடர்புடைய சுட்டிகள்:
2012 புத்தகக் கண்காட்சியில் அருணா