பாலகுமாரனின் “கரையோர முதலைகள்”

பாலகுமாரன் ஒரு intriguing எழுத்தாளர். அவருடைய திறமை அவரது எழுத்தில் முழுதாக வெளிப்படவில்லை. வெற்றி என்பதை அவர் வாரப் பத்திரிகை உலகில் வெற்றி என்றே புரிந்துகொண்டிருந்தார். பிராபல்யத்துகான தேடல், வாசகனை அதிர்ச்சிக்குண்டாக்க வேண்டும் என்ற விழைவு, கொஞ்சம் பெரிசு ஆனதும் உபதேசம் செய்யும் மனநிலை இவை எல்லாம் அவரை நீர்த்துப் போகவைத்துவிட்டன என்றேதான் கருதுகிறேன்.

அதிலும் ஆரம்பத்தில் இருந்த சூடு, படைப்புகளில் இருந்த நேர்த்தி எல்லாம் காலம் காலம் போக குறைந்துவிட்டது. நீர்த்துப் போய்விட்டார். ஒரு காலத்தில் – மெர்க்குரிப் பூக்களையும், ஆனந்த வயலையும், இரும்புக் குதிரைகளையும், கரையோர முதலைகளையும், பந்தயப் புறாவையும், அகல்யாவையும் மட்டுமே நான் படித்திருந்த காலத்தில் – இவரால் திருப்பித் திருப்பி ஒரே சூழலை எழுதும் தி.ஜா.வை மிஞ்ச முடியும் என்றே நான் கணித்திருந்தேன். தி.ஜா.வின் அருகே இவரால் நிற்கக் கூட முடியாது என்று இப்போது தெரிகிறது. அப்படி குறுகிய காலத்துக்கு நினைத்தது என் முட்டாள்தனத்தைத்தான் காட்டுகிறது!

கரையோர முதலைகள் அவரது பொற்காலத்தில் – எண்பதுகளின் பிற்பாதி, தொண்ணூறுகளின் முற்பாதி – எழுதப்பட்டது. வாரப்பத்திரிகையில் (விகடன்?) தொடர்கதையாக வந்தது. செக்ஸ் பற்றி கொஞ்சம் விவரித்து – அன்றைய வாரப் பத்திரிகைகளில் எல்லைகளை கொஞ்சம் மீறி – நம்மை எல்லாம் ஷாக் செய்யும் எண்ணம் தெளிவாகத் தெரிகிறது. அம்மா பெண்ணைப் பார்த்து “சூடான சாம்பலை வைத்து தேய்த்துக்கொள்” என்று சொல்வாள். அந்தக் காலத்தில் அதுவும் விகடனில் அப்படி ஒரு வரி அதிர்ச்சிதான். ஆனால் அப்படி பத்திரிகைகளில் எல்லைகளை கொஞ்சூண்டு மீறுவது பல வருஷஙகளாக சாண்டில்யனும் சுஜாதாவும் புஷ்பா தங்கதுரையும் செய்து கொண்டிருந்ததுதான். இப்படி எல்லாரும் கொஞ்சம் கொஞ்சமாக மீறி ஐம்பது வருஷத்துக்கு முன்பிருந்த எல்லைகள் இப்போது கண்ணுக்கே தெரிவதில்லை.

சரளமான, சிம்பிளான, நேரடியான கதை. நாயகி ஸ்வப்னா இரண்டு பேரால் ஏமாற்றப்படுகிறாள். அது அவளிடம் பெரிய வன்மத்தைக் தூண்டி இருக்கிறது. இன்று உத்தமக் கணவன், நல்ல நட்பு எல்லாம் இருந்தாலும் அந்த வன்மம் அவ்வப்போது பிறரிடம் வெடிக்கிறது. அவர்களைப் பழி வாங்க முயல்கிறாள்.

பாலகுமாரனின் வாரப் பத்திரிகை தொடர்கதைகளில் ஒரு pattern உண்டு. ஆர்ப்பாட்டமாக ஆரம்பிப்பார், படிப்பவர்களின் ஆர்வத்தைத் தூண்டுவார், எப்படி முடிப்பது என்று தெரியாமல் திணறுவார். செயற்கையாக ஒரு crisis-ஐ உருவாக்கி அதை climax ஆகக் காட்டுவார். அகல்யா, ஆனந்தவயல் என்று பல நாவல்களை எடுத்துக்காட்டாக சொல்லலாம். இதிலும் அப்படித்தான். கடைசி பழி வாங்கும் முயற்சிகள், பாய்ஃப்ரெண்ட் வேறு திருமணம் வேறு என்று பேசும் இளம்பெண் எல்லாம் செயற்கையாக இருக்கின்றன.

இந்தக் கதைக்கு அன்றிருந்த தாக்கத்தை இன்று உணர்வதே கஷ்டம். கோபக்காரி நாயகிகளே அப்போதெல்லாம் அபூர்வம். இவளோ நடு ரோட்டில் செருப்பைக் கழற்றி அடிக்கிறாள். இரண்டு பேரோடு பழகிய பிறகு உத்தமக் கணவன் என்றால் அலுவலகத்துக்கு மதிய உணவு கட்டிக் கொண்டு வாரப் பத்திரிகையை ரயிலில் படிக்கும் பெண்கள் கூட்டம் கவரப்படும். பழி வாங்கத் துடிக்கும் நாயகி என்பது புதுமை. அங்கங்கே பாலியல் வர்ணனைகள் வேறு. (அப்போதெல்லாம் கழுத்துக்கே கீழே கை போனது என்று படித்தாலே கிளர்ச்சி அடையும் பருவம்). நடுநடுவே கவிதை வேறு. அதுவும் முதலைகளைப் பற்றி. தொடர்கதை பெரிய வெற்றி பெற்றது.

இன்றைக்கு மீண்டும் படிக்கும்போது ஸ்வப்னா அலுவலகத்தில் உண்டாக்கும் சின்னச் சின்ன சிக்கல்கள் உண்மையாகத் தெரிகின்றன. கோபக்கார மனைவி, மனைவியை சாந்தப்படுத்த கணவனின் முயற்சிகள், போலீஸ் கேஸ் வேண்டாம் என்று நகர்ந்து போக முயற்சிப்பது எல்லாம் உண்மையாகத் தெரிகின்றன. அதாவது ஸ்டீரியோடைப் – ஸ்டீரியோடைப் என்பது முற்றிலும் சரியல்லதான், ஆனால் கோபக்கார மனைவி, உத்தமக் கணவன் என்பது அவர்களை விவரித்துவிடுகிறது – படைப்பையும் மீறி உண்மையான சித்தரிப்பு தெரிகிறது. அதனால்தான் இதை பாலகுமாரனின் வெற்றியாகக் கருதுகிறேன்.

கரையோர முதலைகளை ஜெயமோகன் தனது சிறந்த வணிக நாவல்கள் பட்டியலில் வைக்கிறார். ஜெயமோகனுக்கு நேரடித்தன்மை, சரளம் போன்றவை குறைகள். எனக்கு அவை உத்திகள். எனக்கு இது முதல் நிலை இலக்கியம் அல்லதான், ஆனால் இலக்கியமே.

தொகுக்கப்பட்ட பக்கம்: பாலகுமாரன் பக்கம்
தொடர்புடைய சுட்டிகள்:
பாலகுமாரன் பற்றி ஜெயமோகன்

இயக்குனர் ஷங்கர் பாலகுமாரனின் “கடலோரக் குருவிகள்” நாவலுக்கு எழுதிய முன்னுரை

பாலகுமாரன் மறைந்தபோது இதைப் பதிவு செய்ய வேண்டும் என்று நினைத்தேன், இப்போதுதான் முடிந்தது.

பாலகுமாரனை ஆசானாக ஏற்ற ஒரு பெரிய கூட்டமே உண்டு. அவரது தாக்கம் பெரிதாக இருந்த காலம் இருந்தது. இயக்குனர் ஷங்கர் அவரது எழுத்தில் மிகவும் impress ஆகி எழுதிய முன்னுரை இந்தத் தாக்கத்தை நன்றாகவே காட்டுகிறது. ஓவர் டு ஷங்கர்!

‘இந்தியன்’ ஷூட்டிங் நெருங்கிடுச்சு. போட்ட திட்டப்படி ஷூட்டிங் நடத்தத் தயாராய் இருந்தாலும் வெளியே ஏகப்பட்ட பேச்சு. ஆரம்பிக்குமோ ஆரம்பிக்காதோ? ஆகஸ்ட்லதான் ஷூட்டிங்காமே? பிரச்சினைதான், கஷ்டம்தான் என்கிற பேச்சு.

இந்த சூழ்நிலையில கடைசி நேரத்தில கழுத்தறுத்தான் கூடவே உழைச்ச டெக்னீஷியன். உங்க படத்தில நடிக்கறதே பெரிய பாக்கியம்னு நெளிஞ்சு வழிஞ்சு நடிக்க ஒத்துக்கிட்ட ஆர்டிஸ்ட் கடைசி நிமிஷத்தில ஏகப்பட்ட பணம் கேட்டு தட்டிக் கழிச்சாங்க. வேற சில விஷயங்களும் திருப்தியா வரலே.

சோர்ந்து போயிருந்தபோது உங்க புத்தகத்தை – கடலோரக் குருவிகள் – எடுத்தேன். டக்குனு அந்த கர்ப்பிணி மேட்டர் கண்ணில பட்டு மறுபடி மறுபடி படிச்சேன்.

படிக்கப் படிக்க ஒரு பக்கம் மனசுக்குள்ளே அடுத்தடுத்து கேள்விங்களா வருது. உடனேயே அதுக்குண்டான பதில்களையும் அடுத்தடுத்து சொல்லி இருக்கீங்க பாலா.

31, 32, 33-ஆவது அத்தியாயத்தை எடுத்து ஒரு ஆள் தன் ட்ரஸ்ஸிங் டேபிள்ல ஒட்டிக்கலாம். டெய்லி சோர்வடையும்போது டானிக்கோ க்ளூக்கோசோ மருந்தோ தேவையில்லை. உங்க எழுத்தே போதும்.

வாழ்க்கைல பல ஸ்டேஜ்ல உங்க எழுத்து என் சிந்தனையை பாதிச்சிருக்கு. மாத்தியிருக்கு. என்னுடைய தற்போதைய வெற்றிக்கு நிச்சயம் உங்க எழுத்தும் ஒரு காரணம். உஙக எழுத்தைப் படிச்சா போதும், நல்ல ஆரோக்கியமான சிட்டிசன்ஸ் உருவாயிடுவாங்கன்ற நம்பிக்கை எனக்கு இருக்கு. சினிமாவில பிஸியானாலும் உங்க எழுத்தைப் படிக்கற ஆர்வம் எனக்கு குறையல.

பத்து வருஷம் நான் மோல்டாயிட்டிருக்கிற ஸ்டேஜ்ல உங்க எழுத்துக்களைப் படிச்சதாலதான் நான் மன ஆரோக்கியமுள்ள ஆளானேன். இதுக்கு நீங்க காரணம்கறதை என்னால மறுக்க முடியாது. மறக்க முடியாது.

பத்து வருஷம் கழிச்சு இப்ப இருக்கிற மனநிலைக்கும் மெச்சூரிட்டிக்கும் உங்க எழுத்து ஆறுதலா பொருந்தி வரதை நினைக்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு. You are always a good teacher, a friendly teacher.

பதினஞ்சு வயசுக்கு மேல ஆயுசு வரைக்கும் எந்த ஸ்டேஜ்ல உங்க எழுத்தைப் படிச்சாலும் நீங்க படிக்கறவங்களுக்கு உபயோகமாறீங்க. இது ரொம்பப் பெரிய விஷயம்.

உங்க எழுத்தைப் படிக்கற அத்தனை பேருக்கும் ஒரு true friend கிடைக்கறது நிச்சயம். பல்லாயிரக்கணக்கானவங்களுக்கு true friend-ஆ ஒருத்தர் வாழறது எவ்வளவு பெரிய விஷயம்! இது யாருக்குக் கிடைக்கும்!

உங்க எழுத்தை எல்லாரும் படிக்கணுமேன்னு ஆதங்கமாவும் கவலையாவும் இருக்கு.

வேலையில் perfection முக்கியம் என்று சொல்வது, நம்மைச் சுற்றி திருடர்கள், பொய்யர்கள் இருக்கத்தான் செய்வார்கள் என்று அறிவுறுத்துவது, நேர்மையற்ற வெற்றி கண்டு மயங்காதே என்று தேற்றுவது, நல்லவர்கள் தாங்குவது என்று நிறைய நிறைய இந்த நாவலில் சொல்லித் தருகிறீர்கள்.

எப்படி ஒருவன் தன்னை உருவாக்கிக்கணும்னு எவ்வளவு அன்பா, அழகா, வக்கணையா சொல்லிக் கொடுக்கறீங்க!

ரொம்ப நாளா இந்த கடலோரக் குருவிகள் படிச்சு எழுதித் தரணும்னு நினைச்சு தள்ளிப் போயிக்கிட்டே இருந்தது. இன்னிக்கு மனசு சூழ்நிலை சரியா இல்லாததால ஒரு ஆறுதல் தேடி உங்க புக் படிக்க, ஆட்டோமாட்டிக்கா முன்னுரை லெட்டர் எழுத உட்கார்ந்துட்டேன். அடிமனசுலேருந்து ஒரு பொங்கு பொங்கி எழுத ஆரம்பிச்சிட்டேன். இதுதான் உங்க வெற்றி பாலா. You moved me so many times, so many occasions, as also right now. உங்க எழுத்து ஒரு சொத்து பாலா. எல்லாரும் மனசுங்கற bank-ல fixed deposit-ஆ போட்டு வச்சிக்கணும்.

என்றென்றும் அன்புடன்
ஷங்கர்

தொகுக்கப்பட்ட பக்கம்: பாலகுமாரன் பக்கம்

இரும்பு குதிரைகள் முன்னுரை

எழுத்தாளர், பத்திரிகையாளர் மாலன் பாலகுமாரனின் இரும்பு குதிரைகளுக்கு எழுதிய முன்னுரை. பாலகுமாரனுக்கு அஞ்சலியாக இதைப் பதிக்கலாம் என்று மீண்டும் படித்தபோது நான் படித்த இரும்பு குதிரைகள் புத்தகத்தைத்தான் இவரும் படித்தாரா, என்னவோ இத்தனை சிலாகிக்கிறாரே என்று தோன்றியது. 🙂 முன்னுரையை எழுத நிறைய மெனக்கெட்டிருப்பது தெரிகிறது. கல்கியில் தொடர்கதையாக வந்தபோது நிறைய கவனம் பெற்றது என்று நினைவு, மாலனும் புல்லரித்துப் போயிருக்கிறார்.

பாலா, நினைவிருக்கிறதா உனக்கு?

உணக்கையாய் வெயில் அடித்துக் கொண்டிருந்த ஜூன் மாதம். நடுங்கி ஒடுங்குகிற குளிரோ, புழுங்க அடிக்கிற சூடோ இல்லாத இதம்.

நினைத்துக் கொண்டாற்போல கிளம்பி நீ தஞ்சாவூர் வந்தாய். திடுமென்று என் ஆஃபீஸில் பிரசன்னமானாய். அந்த க்ஷணமே ஆஃபீஸை உதறினோம். அடுத்த நிமிஷம் பஸ்ஸில் ஏறிப் புறப்பட்டோம்.

நிசப்தம் இசையாய் பெருகி நதியாய் ஓடுகிற திருவையாறு. ‘களுக் களுக்’ என்று பக்கத்தில் சுருள்கிற ஆற்றின் சிரிப்பிலும், பனித்துளியாய் பெய்கிற பலாப்பூவிலும், எங்கேயோ சோற்றுக்கு கரைகிற காகத்தின் குரலிலும் சங்கீதத்தைக் கேட்டுக் கொண்டு உட்கார்ந்திருக்கிற தியாகப் பிரம்மம்.

எத்தனை பெரிய உயிர்! சங்கீதத்திலும் தவத்தையும் உருக்கத்தையும் ஒன்றாய் இணைத்த மனுஷன். எளிமையும் இனிமையும் கலந்த வடிவம். சொல்கிற விஷயத்துக்கு ஏற்ற வடிவம். புரண்டு புரண்டு கற்ற கல்வி. உயிர் தொட்டுப் பெற்ற அனுபவம். மனம் குவித்துத் தேறிய சிந்தனை. அடிபட்டுத் துடித்த வலி எதுவுமில்லாது வெறும் பொழுதுபோக்காகவே வாழ்க்கையைக் கழித்துக் கொண்டிருக்கும் மூடனுக்குக் கூட, நாம் கூட பாடிவிடலாம் என நம்பிக்கையும், பிரமிப்பும், சந்தோஷமும் தரும் உருவங்களைப் படைத்த கலைஞன்.

இவனை ராஜாக்கள் கும்பிட்டார்கள். வித்வான்கள் விற்றுப் பிழைத்தார்கள். வியாபாரிகள் கேட்டு இளைப்பாறினார்கள். ஜனங்கள் கேட்டு நெகிழ்ந்தார்கள். ஆனால் ஒரு தாசி அல்லவோ கோவில் கட்டினாள்!

தாசி மாதிரிதான் காவிரி புரள்கிறது. பூணூல் மாதிரி ஒடுங்கின காவிரியைப் பார்த்திருக்கிறோம். கணுக்காலைத் தொட்டு வணங்கிப் போன காவிரியைப் பார்த்திருக்கிறோம். பாலத்தின் முதுகின் மீது சீற்றத்துடன் துப்பிவிட்டு விரைகிற காவிரியைப் பார்த்திருக்கிறோம்.  ஆனால் அன்றைக்கு காவிரி புரள்கிறது. தாசி மாதிரி புரள்கிறது. காலை அகட்டி மல்லாந்து படுத்துக் கொண்டு வெட்கமில்லாமல் சிரிக்கிறது. மோகம் கொண்ட பொம்மனாட்டி காரணமின்றி பின்னலை முன் வீசி, பிரித்து கால் மாற்றிப் பின்னியது போல சந்தேகம் பேசுகிறது. புத்திசாலிப் பெண் போல வதைக்கிறது. தொடுவாயோ என்று சீண்டுகிறது. தொட்டால் மாட்டிக் கொண்டாய் என மிரட்டுகிறது.

நமக்குத் தாங்கவில்லை. இறங்கிவிட்டோம். உடுத்தின துணியை அர்ச்சகரிடம் கொடுத்துவிட்டு அவர் அகத்திலேயே துண்டு வாங்கிக் கொண்டு இறங்கிவிட்டோம்.

நெஞ்சு வரை இறங்கிவிட்டோம். காவிரிக்கு இணையாகத் துளைந்தோம். கையில் நீர் வாரி வான் நோக்கி இறைத்தோம். நாசித் துளையைப் பொத்தி தலை நனைத்து சிலும்பிச் சிலும்பி மூழ்கிக் களித்தோம். இடுப்புத் துண்டைக் காவிரி உருவிற்று. மனம் தளை அறுந்து காற்றில் மிதந்தது. நாம் கற்ற பாசுரங்களை இறைத்தோம். நெஞ்சில் இறங்கி ஊறின பாரதியைத் துப்பினோம். முறை வைத்து கவிதை கட்டி காற்றில் ஊதினோம். மனசு அடங்கவில்லை. தமிழின் புதிய ருசி புரிந்தது. வழக்கமான வார்த்தைகளுக்கு வேறு புதிய அர்த்தங்கள் துலங்கின.

அன்றைக்கு காவிரியின் சுழிகளை எனக்கு அடையாளம் காட்டினாய். அதன் நெளிவுசுளிவு பற்றி கற்றுக் கொடுத்தாய்.

காவிரியை விடப் பெரிய இன்னொரு நதியை அடையாளம் காட்டி சொல்லித் தந்தான் இன்னொருவன்.அதுவும் மோகம் கொண்டு அழைக்கிற நதிதான். இறங்கினால் ஆளைப் புரட்டி விடுகிற நதிதான். இந்த வண்டல் சேர்ந்துவிட்டால் பிறகு எதை முழுங்கினாலும் பசேல் என்று கிளைத்து எழுந்து நிற்கும். புத்தகப் படிப்பு, எழுத்து, கவிதை, இலக்கியம் என்று சின்னச் சின்னதாய் ஓடைகள் சேர்ந்து பெருகின வாழ்க்கை நதி அது.

படிப்பை முடித்துக் கொண்டு ஒரு வேலையை சம்பாதித்துக் கொண்டு சென்னை வந்த எனக்கு ஏற்பட்ட முதல் ஸ்னேகம் அவன்தான். அது அதிருஷ்டம்தான். அவன்தான் உன்னை எனக்குச் சொன்னான். என்னை உனக்குச் சொன்னான். சின்னப் பத்திரிகை, நல்ல சினிமா என்று ஒரு கதவைத் திறந்தான். புத்தகப் படிப்போடு நிறுத்திக் கொண்டுவிடவில்லை. வெறுமனே பேசிக் களைத்து ஓய்ந்துவிடவில்லை. தன் தலைக்குப் பின்னால் ஒளிவட்டம் சுழல்கிறது என்ற பிரமையில் கிறங்கிப் போய் உட்கார்ந்துவிடவில்லை. கற்றதை எழுத்தில் வடித்துக் காண்பித்தான்.

சுறுசுறுவென்று, ஆனால் உறுத்தாத கூர்மையும் ஒளியும் கொண்ட எழுத்து அவனுடையது. அவன் குரலைப் போலவே அவன் எழுத்தும் உரத்து நான் பார்த்ததில்லை. ஆனால் சொல்வதைத் தீர்மானமாக, அழுத்தமாக, நயமாக சொல்கிற எழுத்தாய் அது இருக்கும். அரைப் பக்க சினிமா விமர்சனம் ஆனாலும் சரி, நாலு வரி கேள்வி பதிலானாலும் சரி, கவிதை, சிறுகதை, நாவல் என்று கனமான விஷயங்கள் ஆனாலும் சரி.

ஞாபகம் இருக்கிறதா? கணையாழி கடைசிப் பக்கத்தில் சுஜாதா ஒரு மானசீகத் தொகுப்பு வெளியிட்டார். கு.ப.ரா., லா.ச.ரா., புதுமைப்பித்தன் என்று பெரிய பெயர்களோடு தொடங்கிய பட்டியலில் நமது தலைமுறையில் இருந்தது அவன் பெயர் ஒன்றுதான். தி. ஜானகிராமன் நன்றாய் எழுதுகிற புதியவர்கள் பற்றிய தில்லி இலக்கிய உரையாடலில் ஸ்பான்டேனியஸாகச் சொல்லிய பெயர் அவனுடையதுதான்.

அவனை இன்று ஆஃபீஸ் தின்றுவிட்டது. லேடக்ஸ் பீப்பாய்களுக்கும் கணக்குப் புத்தகங்களுக்கும் ஆஃபீஸ் ஃபைல்களுக்கும் நடுவே அவனுடைய கவிதையும் இலக்கியமும் விழுந்துவிட்டன. அவன் அந்தப் பெரிய ஆஃபீஸின் இன்னொரு இயந்திரம் ஆகிப் போனான். அவனைக் கண்டு வியந்துபோய் இங்கே நீ அவனை நாவலாக்கி இருக்கிறாய். அவனை நாயகனாக்கி இருக்கிறாய்.

கவிதையும் இலக்கியமும் வாழ்க்கையும் ஒன்றாய் இருந்த காலங்கள் காணாமல் போய்விட்டன. வெகு வருடங்களுக்கு முன்னால், அம்மா அவளுக்கு வேண்டிய சாந்தை அவளே தயாரித்துக் கொண்டிருந்தாள். அதை வைப்பதற்கென்றே தனியாகப் பாத்திரங்கள் கூட இருந்தன. வெண்கலத்தில், வெள்ளியில். தேங்காய் சிரட்டையில் ஊற்றி வைத்த சாந்து முற்றத்தில் காய்ந்துகொண்டிருக்கும். மேலே பாத்திரம் ஜவ்வு கட்டி இருக்கிற அந்த சின்னச் சின்ன வட்டங்களில் ரேகை பார்த்தது மெத்தென்ற சுகமான அனுபவம். சின்ன வயதில் என் ரேகைகளின் அத்தனை அழகையும் பார்க்கக் கிடைத்த அந்தச் சிரட்டைகள்தான் எத்தனை விதம்! இனி மேல் அந்த சாந்துச் சிரட்டைகள் நமக்கு பார்க்கக் கூட கிடைக்காது.

இது பிளாஸ்டிக் குப்பிகள் யுகம். மாஸ் ப்ரொடக் ஷன் யுகம். நம்முடைய கையின் பதிவுகள் நமக்குக் கவிதைகளாய்க் கிடைத்துக் கொண்டிருந்த காலங்கள் தொலைந்து போய்விட்டன.

திருநெல்வேலிக்குப் போயிருக்கிறாயோ, பாலா? டிங்கர் வொர்க்ஸ், சா மில், ஸ்கூட்டர் வொர்க்‌ஷாப், லாரி கம்பெனி என்று வரிசையாய் பட்டறைகளாய் இருக்கும். சத்தமும் குப்பையும் குவிக்கிற பட்டறைகள். இரும்புத் துரு, வெட்டின தகடு, க்ரீஸ் எண்ணெய் என்று அழுக்கும் பிசுக்குமாய் குவிந்து கிடக்கிற பட்டறைகள். இத்தனை குப்பைக்கு அடுத்தாற்போல், சட்டென்று பெரிய பெரிய வயல்வெளிகள் விரிந்திருக்கும். இடைவெளி தெரியாமல் கிண்ணங்களாய் நெருக்கி அடித்து மண்டிக் கொண்டு நீரைப் போர்த்தி இருக்கிற ஒரு குளம் வரும். நெருக்கமான பச்சை நடுவில் குவளையா, அல்லியா இன்னதென்று தெரியாத நீலப் பூக்கள் பூத்திருக்கும். வெள்ளையாய் நாரையும் கொக்கும் குளத்தைச் சுற்றி வரும்.

இந்த ஊரைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு நம் தலைமுறை ஞாபகம் வரும். கடை, ஆஃபீஸ், ஃபாக்டரி என்று அலைந்துவிட்டு, அழுக்கும் பிசுக்குமாக வேலை செய்துவிட்டு, வீட்டுக்குத் திரும்பி கவிதை எழுதும் காலம் நமக்குத்தான் வந்திருக்கிறது. ஸ்பானரை எடுத்து மிஷினை முடுக்குகிற கையில்தான் பேனாவையும் எடுத்து கதை, நாவல் எழுதுகிற காலம்.

இது முன்னேற்றமா? துரதிருஷ்டமா? இதை துக்கம் எனப் புரிந்து புலம்புவதா? சோகம் எனச் சுருண்டு கொள்வதா?

நம்முடைய இந்த நண்பன் சுப்ரமணிய ராஜு – இந்த நாவலின் விஸ்வநாதன் – தன்னுடைய அம்மா இறந்து போன இரண்டாம் நாள் எனக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தான். படிக்கிறவனை கதற் அடித்துவிடுகிற கடிதம் அது. தன் துக்கம் முழுக்கச் சொன்ன அந்தக் கடிதம் புலம்பவில்லை. ‘எனக்கு வாழ்க்கையின் அபத்தம், குரூரம், irony எல்லாம் புரிந்துவிட்ட மாதிரி இருக்கிறது மாலன். ஆனால் இது அல்ல சாஸ்வதம். எதுவுமே அல்ல.’

உன்னுடைய நாவலும் இதைத்தான் சொல்கிறது. வாழ்க்கை என்பது யுத்தம் எதிர்கொள் எனச் சொல்கிறாய். இந்த யுத்தத்தில் எந்த துக்கமும் வலியும் அபத்தமும் தோல்வியும் சாஸ்வதம் அல்ல. அழ வேண்டாம். புலம்ப வேண்டாம். எதுவும் செய்ய வேண்டாம். முதலில் இது இயல்பு, இயற்கை, சுபாவம் எனப் புரிந்து கொள் என்று உன் நாவல் மன்றாடுகிறது. இலக்கியத்துக்கும் உத்தியோகத்துக்கும் உள்ள முரண்பாட்டை மட்டும் பெரிதாக எடுத்துக் கொண்டு பேசாமல் மொத்த வாழ்க்கையையும் எடுத்துக் கொண்டு பேசுகிறது.

எடை போட்டு எழுபது ரூபாய்க்கு எடுத்த விரிசல் சக்கரத்தை இருநூறு ரூபாய்க்குத் தள்ளிவிடுவது அநியாயமா? வியாபாரமா? மூன்று லட்ச ரூபாய் சரக்கை கிணற்றில் இறக்கிவிட்டு ஒரு வார்த்தை கூட சொல்லாமல் ஓடிப் போவது தற்காப்பா? நம்பிக்கை துரோகமா? லட்சக்கணக்கில் வியாபாரம் செய்தவன் ஒரு இரவில் நொடித்துப் போவது துரதிருஷ்டமா? கடவுள் சித்தமா? விபசாரம் செய்த பணத்தில் லாரி வாங்குவதும் விபத்துக்கு ஈடாய் வந்த பணத்தில் விபசாரம் செய்வதும் வயிற்றுப் பிழைப்பா? வக்கிரமா? பிரியத்தின் நிமித்தம் கொடுத்த பிரிவுபசாரப் பணத்தை கணக்கு பார்க்கிற, விமர்சனம் செய்கிற வாத்தியார் ஞானியா? மூர்க்கனா? உதவி செய்தவனை முட்டாள் எனச் சொல்லும் பெண் அகங்காரியா? கணவனின் கவிதையைப் பொறுத்துக் கொள்ளாத மனைவியும் மனைவியின் அவஸ்தையை புரிந்து கொள்ளாத கணவனும் குழந்தை பெற்றுக் கொள்வது காதலா? காமமா?

எல்லாமே இயற்கை. இயல்பு. சுபாவம். அதைப் புரிந்து கொள் முதலில் என்று உன் பாத்திரங்கள் சொல்கின்றன. சரி, இந்தப் புரிதல் இல்லை என்றால் என்ன கஷ்டம்?

புரிந்து கொள்ளாதவனுக்கு வலி நிச்சயம். வாழ்க்கையை, இதன் இயல்பைப் புரிந்து கொள்ளாதவன் அதை ஜெயிப்பது எப்படி சாத்தியம்? இந்த கூரிய முரண்பாடுகள் விளங்காமல் முன்னேறுவது எப்படி? ஜெயிப்பது, முன்னேறுவது எல்லாம் இரண்டாம் பட்சம். இந்தப் புரிதல் இல்லாமல் போனால் இருத்தலே இம்சையாகும். எதிலும் தெளிவின்றி எப்போதும் சுலபமின்றி இருக்கும் வாழ்க்கை நரகமாகிவிடாதா? தன்னையும் துன்புறுத்திக் கொண்டு உடன் வாழ்பவனையும் காயப்படுத்திக் கொண்டிருந்தால் ஒரு மொத்த சமூகமே நாசப்பட்டுப் போகாதா?

இந்தப் புரிதல் இல்லாமல்தான் நமது இளைஞர்கள் தலை கலைந்து போகிறார்கள். அன்னியமாதல் பற்றி பேசுகிறார்கள். எதிலும் நம்பிக்கையற்று சிதைகிறார்கள். எதிர்மறையாய் யோசிக்கிறார்கள். எளிதில் கலங்குகிறார்கள். கவிதை எழுதி இலக்கியம் பேசி ஊர் விட்டு ஊர் போய் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

இன்னொரு வகை இளைஞர்கள் இருக்கிறார்கள். இந்த முதல் படி தாண்டியவர்கள். இந்த வாழ்க்கையின் முரண்பாடு பற்றி தெரிந்தவர்கள். இது இயல்பு என்று விளங்கியவர்கள்.

சரி புரிந்துவிட்டது. ஆனால் இந்த முரண்பாடுகளும் அநீதிகளும் வக்கிரங்களும் இப்படியே இருக்கத்தான் வேண்டுமா? இவற்றை என்ன செய்வது? ‘சும்மா இரு’ என்கிறாய். ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி ‘just be’ என்று சொன்ன தொனியில், பொருளில் சும்மா இருக்கச் சொல்கிறாய். காஞ்சிப் பெரியவர் ‘மௌனமாய் இருப்பது என்றால் பேசாமல் இருப்பது மட்டும்தானா?’ என்று கேட்ட அர்த்தத்தில் சொல்கிறாய்.

எனக்கு சும்மா இருப்பதில் விருப்பமில்லை. விருப்பமில்லை என்பதால் சாத்தியமில்லை. செயலற்று சும்மா இருப்பது முறைதானா என்று எனக்குள் கேள்விகள் இருக்கின்றன. இவை எல்லாம் இங்கே புறம்பான விஷயங்கள். வேறு ஒரு சமயம் பேசித் தெளிய வேண்டிய கேள்விகள். என்னைத் துலக்க இன்னொரு நாவல் எழுது.

இந்த நாவலை அற்புதமாக எழுதி இருக்கிறாய். ஒவ்வொரு வரியும் இழைத்து இழைத்துப் பூட்டின மணியாக விழுந்திருக்கிறது. மெருகு பொலிய எழுதுவது சாதாரண விஷயம் இல்லை. இதற்கு பக்கம் பக்கமாக நான் உதாரணம் காட்ட முடியும். வேண்டாம். தன் ரசனையை மெய்ப்பிப்பதற்காக கம்பனை அக்கக்காகப் பிரித்த தமிழ் வாத்தியார் ஞாபகம் வருகிறது. சுயமாக ஒன்றினை அறிதலும் புரிந்து கொள்ளலும் ரசிக்கக் கற்றலும் மகா பாக்கியம். உன் வாசகர்கள் ரசனைக்கு நடுவே நான் குருவியாகப் பறக்க வேண்டாம். உன் எழுத்துக்கள் மறுபடி மறுபடி எனக்கு ஒன்றை நிச்சயிக்கின்றன. ‘உள்ளத்தில் உண்மை உண்டாயின் வாக்கில் ஒளி உண்டாகும்’.

எத்தனை காலமாக உன் உரைநடையை நான் அறிவேன்! எதிரே உட்கார்ந்து பேசுகிற பேச்சாகப் பெருகுகிற நடை அது. உன்னைப் போல கம்பீரம் கொண்ட நடை. உன் கவிதைகளை நான் காதலிக்கிறேன். யாப்புதான் கவிதை என்கிற மௌடீகத்தையும் வார்த்தைகள்தான் கவிதை என்கிற ரொமான்டிசிஸத்தையும் தாண்டிய சரியான கவிதைகள். தி. ஜானகிராமன் சொல்கிற மாதிரி சரியான் ஆண்பிள்ளை அல்லது பெண்பிள்ளைக் கவிதைகள். இந்த நாவலை கவிதையும் உரைநடையுமாக ஊடும் பாவுமாக நெய்திருக்கிறாய். ஆணும் பெண்ணும் புணர்தல் போல சரியான முறையில், சரியான இடத்தில், சரியான அளவில் கவிதையும் உரைநடையும் கலந்திருக்கின்றன. முறையும் இடமும் அளவும் தவறினால் விகாரமாகும். மிகுந்தால் ஆபாசமாகும். குறைந்தால் நோய் காணும். தாம்பரத்தில் ஏறி கிண்டியில் இறங்குவதற்குள் இந்த வார அத்தியாயத்தைப் படித்து முடித்து ஜீரணமும் செய்து கொள்ள வாசகன் ஆசைப்படுகிற காலம் இது. இதில் கவிதையிலேயே ஒரு அத்தியாயம் எழுதி இருக்கிறாய். என்ன அதிசயம் இது!

ஒரு முறை ஒரு நண்பனைப் பார்க்க அரசூர் சென்றிருந்தேன். மெயின் ரோட்டில் இறங்கி கிளைச் சாலையில் நடக்க வேண்டும். மையிருட்டு. ஆங்காங்கே ஒன்றிரண்டு மின்மினி. தூரத்தில் ‘களக் களக்’ என்று சுண்ணாம்புக் காளவாய். நடக்கத் தயங்கி நின்றிருந்தபோது டயரைக் கொளுத்தி கையில் பிடித்தபடி எதிரே ஒருவன். நின்று நிதானித்து எரிகிற ரப்பர் சுடர். லேசில் அணையாத ஜோதி.

இன்றைக்கு சூழ்ந்திருக்கிற இருளுக்கு நடுவில் மொய்க்கின்ற மின்மினிகளுக்கு நடுவில் பயம் காட்டுகிற காளவாய்களுக்கு மத்தியில் இப்படி ஒரு வழி காட்டுகிற சுடராகப் பொலிகிறது உன் நாவல். இருட்டு மண்டுகிறபோது வெளிச்சம் காட்டுவது முக்கியம். இதற்கு நெய்ப்பந்தம்தான் சிலாக்கியம் என்று மரபு பேசுவது காலவிரயம். எல்லா ரோடுகளுக்கும் எலக்ட்ரிக் பல்ப் என்பது மிகுந்த யோக்கியமான சிந்தனை என்றாலும் உடனடியாகச் சாத்தியமாகாத காரியம். குழம்பிச் சோர்ந்துவிடாமல் குதர்க்கம் பேசிச் சிரிக்காமல் ஒரு சுடரை ஏற்றி இருக்கிறாய். உனக்குள்ளே ஆகுதி சொரிந்த காலங்காலமாய் வளர்ந்த யாகத் தீயில் ஏற்றிய சுடர்.

இதற்காக ஒரு தலைமுறை உனக்குக் கடன்பட்டிருக்கிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: பாலகுமாரன் பக்கம்

பாலகுமாரன் – அஞ்சலி

ஒரு காலத்தில் – சில மாதங்களாவது – நான் பாலகுமாரனை தி.ஜா.வுக்கும் மேலாக எடை போட்டிருந்தேன். பிறகு மூளை தெளிந்து நம்ம ரசனை இவ்வளவு கேவலமாகப் போய்விட்டதே என்று நொந்தும் கொண்டேன்.

என்ன தற்செயலோ தெரியவில்லை, அந்த நேரத்தில்தான் தி.ஜா.வின் சில படைப்புகள் – மரப்பசு, நளபாகம் – போன்றவை என்ன இந்த ஆள் அரைத்த மாவையே அரைக்கிறாரே என்று ஒரு சின்னக் கடுப்பை கிளப்பிவிட்டன. அப்போது நான் படித்த பாலகுமாரனின் புத்தகங்கள் – மெர்க்குரிப் பூக்கள், பந்தயப் புறா, ஆனந்த வயல், அகல்யா, பல தரப்பட்ட ஜாதி, ஊர், தொழில் பின்புலங்களில் எழுதப்பட்ட மாத நாவல்கள் (நீ பௌர்ணமி, இரவல் கவிதை, காதல் வெண்ணிலா, என்னருகே நீ இருந்தால்… ), சின்னச் சின்ன வட்டங்கள், நெட்டி பொம்மைகள் போன்ற சிறுகதைகள் எல்லாமே பிடித்திருந்தன. இரும்பு குதிரைகள், கரையோர முதலைகள், கடல் பாலம் போன்றவற்றில் குறைகள் தென்பட்டாலும் நல்ல கூறுகள் இருந்தன.

இன்று அந்த பாலகுமாரனையே – தி.ஜா.வையே விஞ்சக் கூடியவர் என்று தோன்ற வைத்தவரையே – நினைவு கூர விரும்புகிறேன்.

பாலகுமாரனின் பலம் எந்தத் தருணத்திலும் மனதில் ஓடும் எண்ணங்களை சிறப்பாக எழுதுவது. பல சூழல்களை நம்பகத் தன்மையோடு விவரிப்பது. அவரது பலவீனம் கட்டுக்கோப்பான கதை இல்லாதது. ஆரம்ப காலத்தில் வாசகனை – குறிப்பாக அன்றைய விகடன்/குமுதம் வாசகிகளை அதிர்ச்சிக்குள்ளாக்க வேண்டும் என்ற விழைவு. தொடர்கதை எழுதி பிரபலமான எழுத்தாளனாக இருக்க வேண்டும் என்ற முனைப்பு.

அவருடைய பங்களிப்பை மூன்று பங்காகப் பிரிக்கலாம். முதல் பகுதியில் – வாரப் பத்திரிகையில் எழுதி வரும்போது அங்கங்கே செயற்கைத்தனம் தென்பட்டாலும் உணர்ச்சிகள் பொங்கும் மனிதர்களை நம்பகத்தன்மையோடு சித்தரித்தார். அனேகமாக அவை படிக்கக் கூடிய படைப்புகளே. குறைகள் உள்ள படைப்புகள்தான், ஆனால் இலக்கியம் என்றுதான் மதிப்பிடுவேன்.

இரண்டாம் பகுதியில் – மாத நாவல்களாக எழுதிக் குவித்த காலம் – பலதரப்பட்ட சூழல்களை, ஜாதிகளை, பின்புலங்களை, தொழில்களை சித்தரித்தார். ஒரு நாவல் வேர்க்கடலை – இல்லை இல்லை மல்லாட்டை – பயிரிடும் பின்புலத்தில் இருக்கும். இன்னொன்று மேல்மருவத்தூரை நினைவுபடுத்தும். ஒன்று அச்சுத் தொழிலைப் பற்றி இருக்கும். இன்னொன்று ஜெம்பை கோவில் கல்வெட்டைப் பற்றி இருக்கும். அடுத்தது அந்தக் காலத்தில் சென்னையில் கண்காட்சி (exhibition) என்று ஒன்று நடக்கும், அதைப் பற்றிய Arthur Haileysque நாவலாக இருக்கும். பெருங்களத்தூரின் ஸ்டாண்டர்ட் மோட்டார்சில் வேலை பார்க்கும் இரு தொழிலாளிகளைப் பற்றி ஒன்று வரும். வீட்டுத் தரகுத் தொழில், அபார்ட்மெண்ட் கட்டும் தொழில், பட்டிமன்றச் சூழல், கவிதை எழுதி பிரபலமாகும் கல்லூரி மாணவன் என்று ரவுண்ட் கட்டி அடித்தார். எனக்குத் தெரிந்த வரையில் யாருமே இத்தனை பின்புலங்களைப் பற்றி எழுதியதில்லை. அதே நேரத்தில் (அனேகமாக) தரமான படைப்புகள். இன்று பாலகுமாரனைப் புகழ்ந்து எழுதுபவர்கள் கூட அவரது இந்த முகத்தை கண்டுகொள்வதில்லை.

மூன்றாவது பகுதியை நான் நினைவு கூர விரும்பவில்லை. நினைவு கூரும் அளவுக்கு அது வொர்த்தும் இல்லை. முழுவதுமாக நீர்த்துப் போனார் என்பதோடு நிறுத்திக் கொள்கிறேன். ஆனால் இந்தக் காலத்தில்தான் உடையார் எழுதினார். எனக்கு திறக்க பயமாக இருக்கிறது, ஆனால் அதுதான் அவரது சாதனை என்று சொல்லப்படுகிறது. அப்படி சாதனையாகவே இருக்க வேண்டும் என்று மனப்பூர்வமாக விரும்புகிறேன்.

பாலகுமாரனின் இன்னொரு குறிப்பிட வேண்டிய பங்களிப்பு அவரது சரித்திர நாவல்கள். அரண்மனைச் சதி genre-இலிருந்து வெளியே வந்தார் என்பது தமிழ் சூழலில் பெரிய விஷயம்.

என் கண்ணில் அவர் இலக்கியவாதியே. ஆனால் அவர் இன்னும் சிறப்பாக எழுதி இருக்க முடியும். இன்று தமிழ் இலக்கியவாதிகளின் பட்டியலில் எங்கோ பின்னால்தான் வருவார். இலக்கியத்தில் அவருடைய தாக்கம் என்பது பெரிதாக இல்லை, நாள் செல்லச் செல்ல மறக்கப்படுவார் என்றுதான் மதிப்பிடுகிறேன்.

என்னைப் பொறுத்தவரை எழுத்தாளனுக்கு அஞ்சலி என்பதெல்லாம் அவன் எழுத்தைப் பற்றி பேசுவதுதான். ஆனால் எழுத்தைத் தாண்டி பாலகுமாரனை ஆசானாகக் கருதிய ஒரு கூட்டம் இருந்தது. ஆசானை இழந்து நிற்கும் வாசகர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இந்த இழப்பை எதிர்கொள்ளும் மனோதிடத்தை ஆண்டவன் அருளட்டும்.

தொகுக்கப்பட்ட பக்கம்: அஞ்சலிகள், பாலகுமாரன் பக்கம்

பாலகுமாரனின் ‘இரும்பு குதிரைகள்’

இரும்பு குதிரைகள் கல்கியில் தொடர்கதையாக வந்தது என்று நினைவு. தொடர்கதையாகப் படிக்கும்போது மனதில் ஆழமாகப் பதிந்தது மன்னார்குடி வாத்தியார் ஒருவர் தான் வேலையிலிருந்து ஓய்வு பெறும்போது பிரிவுபசார நிகழ்ச்சியில் பேசுவது. போதும் போதாமல் இருக்கும் சம்பளமும் போய்விட்டால் ஏழை வாத்தியாரின் கதி என்ன என்ற கேள்வி மிக நிஜமானது. என் அம்மா/அப்பா பள்ளி ஆசிரியர்கள்தான். என் அத்திம்பேர் (அபிராமண மொழியில் அத்தையைக் கட்டிய மாமா) மன்னார்குடியில் ஆரம்பப் பள்ளி ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். இப்போது இருப்பதைப் போல ஓய்வூதியத்தில் சௌகரியமாக எல்லாம் வாழ்ந்துவிட முடியாத காலம். என்னை தாக்கிய உரை அது.

பிற்காலத்தில் அந்த வாத்தியார் பாத்திரம் கரிச்சான் குஞ்சுவால் inspire ஆனது என்று தெரிய வந்தது ஒரு சின்ன சுவாரசியம்.

ஆனால் அப்போதே அடுத்தடுத்த பகுதிகளில் என்ன இந்த ஆள் பெண்கள் பற்றிய தன் கனவுகளை (fantasies) கதையில் வலிந்து புகுத்துகிறாரே என்று தோன்றியது. நாயகி மணம் செய்து கொள்ளாமல் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்புவாள். குழந்தையின் உயிரியல் தந்தைக்கு எந்தப் பொறுப்பும் கிடையாது. இன்றே அப்படி ஒரு விருப்பம் சமூகத்தில் புருவத்தைத் தூக்க வைக்கும். அன்று மகா செயற்கையாக இருந்தது. மீண்டும் இந்தப் பதிவுக்காகப் படித்துப் பார்த்தேன், வெறுமனே வாசகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்குவதற்காக – பகல் உணவை டப்பாவில் கட்டிக் கொண்டு கையில் விகடனையோ கல்கியையோ எடுத்துக் கொண்டு அலுவலகத்துக்கு பஸ்ஸிலோ ரயிலிலோ சென்று கொண்டிருந்த அன்றைய டிபிகல் மத்திய தர வர்க்க வாசகனை, குறிப்பாக முப்பத்தி சொச்சம் வயது வாசகியை, ‘பாருடீ இப்படி எல்லாம் எழுதறான்’ என்று லேசான கிளுகிளுப்புடன் அங்கலாய்த்துக் கொள்ள வைப்பதற்காக – வலிந்து புகுத்தப்பட்ட செயற்கையான முடிச்சு என்று நிச்சயமாகத் தெரிந்தது. உண்மையைச் சொல்லப் போனால், இந்த செயற்கையான முடிச்சு இல்லாவிட்டால், வாத்தியாரின், அவரது மகள் காயத்ரியின், கவிதை எழுதும் நாயகனின் சித்தரிப்பு கதையின் தரத்தை உயர்த்தி இருக்கும்.

சமூகத்தில் உள்ள விழுமியங்களை, பிம்பங்களை தன் எழுத்தால் கட்டுடைக்க வேண்டும் என்ற விழைவுக்கும் வாசகர்கள் தன் எழுத்தால் அதிர்ச்சி அடைய வேண்டும் என்ற விழைவுக்கும் நடுவில் ஒரு மெல்லிய கோடுதான் இருக்கிறது. புதுமைப்பித்தன் பொன்னகரத்திலும், ஜெயகாந்தன் அக்னிப்பிரவேசத்திலும் தி.ஜா. அம்மா வந்தாளிலும் அந்தக் கோட்டை அனாயாசமாகத் தாண்டுகிறார்கள். திறமை இருந்தும் பாலகுமாரனால் அந்தக் கோட்டை என்றுமே தாண்ட முடிந்ததில்லை. தனிப்பட்ட முறையில் தனக்கு எந்த மாதிரி உறவு வேண்டும் என்று நினைக்கிறாரோ அதை வலிந்து புகுத்திவிடுகிறார், அது அவரது சில நல்ல படைப்புகளையும் பெரிதும் பலவீனப்படுத்துகிறது.

நண்பர் ரெங்கசுப்ரமணி இதற்கு ஒரு சிறப்பான விமர்சனம் எழுதி இருக்கிறார். அதைப் படித்த பிறகு எனக்கு லாரித் தொழிலின் பின்புலம் இந்த நாவலின் பலங்களில் ஒன்று, அதைக் குறிப்பிட மறந்துவிட்டோமே என்று தோன்றியது.

பாலகுமாரன் ஏன் நல்ல இலக்கியவாதி இல்லை என்பதைப் புரிந்து கொள்ள இந்த ஒரு புத்தகம் போதும்.

தொகுக்கப்பட்ட பக்கம்: பாலகுமாரன் பக்கம்

தொடர்புடைய சுட்டி: ரெங்கசுப்ரமணியின் விமர்சனம்

சுஜாதா பாலகுமாரனுக்குக் கொடுத்த டிப்ஸ் – நல்ல சிறுகதை எழுதுவது எப்படி?

sujathaமுன்கதைச் சுருக்கம் என்ற பாலகுமாரன் சுயசரிதையிலிருந்து: பாலகுமாரனுக்கு ஆரம்ப காலத்தில் சிறுகதை எழுதுவதில் நுட்பங்கள் பிடிபடவில்லையாம். ஒரு முறை சுப்ரமணியராஜுவுடன் சுஜாதாவை சந்தித்து “எத்தனை ட்ரை பண்ணாலும் சிறுகதை எழுத வரலை. சிக்கறது. தப்பா கதை எழுதறோம்னு தெரியறது. ஒரு நல்ல சிறுகதை எப்படி எழுதறது?” என்று கேட்டிருக்கிறார். சுஜாதா பத்து நிமிஷத்தில் சொல்லித் தருகிறேன் என்று ஒரு மணி நேரம் விளக்கினாராம். அது கீழே.

கதை எழுதறது கஷ்டம் இல்லைய்யா, சுலபம். ஒரு பத்து நிமிஷம் நான் சொல்லித் தரேன். புடிச்சுக்க!

முதல் வரில கதை ஆரம்பி. உதாரணத்துக்கு ஒண்ணு சொல்றேன். இப்படி ஆரம்பி.

ராமு ஜன்னல் பக்கம் நின்றபடி தன் தலையை அழுத்தி வாரிக் கொண்டிருந்தான். தெருவில் ஒருவன் நடந்து போய்க்கொண்டிருப்பது தெரிந்தது. ராமு திகைத்தான். தெருவில் நடந்தவனுக்கு தலையே இல்லை. ஃபுல் ஸ்டாப்.

இதுதான் ஆரம்பம். இனி அடுத்த பாரா.

அவன் தலையை யாரோ வெட்டிட்டாங்க. முண்டம் மட்டும் நடந்துபோய் விழுந்ததுன்னு சொல்லு. இல்லை… அவன் தலைல பானைய கவுத்துக்கிட்டுப் போயிருந்தான்னு சொல்லு. தடால்னு ஆரம்பி கதையை.

பலபலவென்று விடிந்தது. சார் போஸ்ட் என்று குரல் கேட்டது.

அன்று தீபாவளி. சரசு புதுப்புடவை சரசரக்க ஹாலுக்கு வந்தாள்னு ஆரம்பிக்காதே.

கதை ஆரம்பிச்சிட்ட. என்ன சொல்லப்போற? முடிஞ்சவரைக்கும் சிறுகதை நடக்கற காலத்தை ஒன் அவர், டூ அவர்ல வச்சுக்க. ஒரு இம்பாக்ட் மட்டும் போறும். ஒரு சிறுகதைல மூணு தலைமுறை சொல்லாதே.

இதனால் அறியப்படும் நீதி யாதெனில் என்றூ முடிக்காதே. நீதி சொல்றது தப்பில்லை. உள்ளடக்கமா அமைதியா இருக்கட்டும். ஒரு சின்ன சண்டை, அதில ஒரு க்ளைமாக்ஸ், அதுல கிடைச்ச இம்பாக்ட் சிறுகதைக்குப் போறும்.

balakumaranடீடெய்ல்ஸ் எங்க தரணும் தெரியுமா? ஒரு ஹால் பத்தி எழுதினா அந்த ஹால் எப்படி இருந்ததுன்னு எழுது. படிக்கறவங்க மனசுல டிராயிங் மாதிரி விழட்டும். ஃபர்ஸ்ட் பர்சன் சிங்குலர்ல ஆரம்பிக்காதே. நான் தூங்கி எழுந்தபோது இருட்டாகி விட்டிருந்ததுன்னு எழுதாதே. தள்ளி நின்று அவன் எழுந்தபோது இருட்டாய் இருந்ததுன்னு எழுது. உன்னை பாதித்த விஷயம் பத்தி எழுது. உன்னை உன்கிட்டேர்ந்து தள்ளிப் பார்த்து எழுது. எழுதிட்டு மறுவாரம் வரைக்கும் பொட்டில வச்சுட்டு மறுபடி பார். உன் தப்பு உனக்கே தெரியும்.

பாலகுமாரன் பற்றி ஹரன் பிரசன்னா

balakumaranபாலகுமாரனைப் பற்றி ஹரன் பிரசன்னா எழுதிய இந்த ஃபேஸ்புக் பதிவு கண்ணில் பட்டது. அவர் பாலகுமாரன் பற்றி சொல்வதில் எனக்கு நிறைய இசைவு உண்டு. பாலகுமாரனே எழுத்தின் எல்லை என்று எப்போதும் நான் நினைத்ததில்லைதான், ஆனால் தி.ஜா.வை விட பாலகுமாரன் நல்ல எழுத்தாளர் என்று சில சமயம் கருதியதுண்டு. கொஞ்சம் புத்தி தெளிந்த பின்னால் அடச்சே நம்ம ரசனை இவ்வளவு கேவலமாகப் போய்விட்டதே என்று அருவருப்படைந்ததும் உண்டு. ஹரன் மீது பாலகுமாரனுக்கு இருந்த தாக்கத்தில் நூற்றில் ஒரு பங்கு கூட எனக்கு இருந்ததில்லை, ஆனாலும் என் பதின்ம பருவத்தில் சுஜாதாவின் தாக்கம் இந்த ரேஞ்சில்தான் இருந்திருக்கும். அவரது உணர்வுகளை என்னால் நன்றாகவே புரிந்து கொள்ள முடிகிறது.

வசதிக்காக இங்கே பதித்திருக்கிறேன்.

haran_prasannaநீண்ட நாள் கழித்து பாலகுமாரனின் ஒரு நாவலை வாசித்தபோது, மனத்தில் பல்வேறு பழம் நினைவுகள் என்னை அலைக்கழித்தன. அன்று பாலகுமாரனே எழுத்தின் எல்லை என்று நினைத்த நிமிடங்கள் இன்று அப்படி இல்லை என்றாகிப் போன மாற்றமே அதன் முக்கியப் புள்ளியாக இருந்தது. அதை ஒட்டி எழுந்த எண்ணங்களில் சிதறல்களை எழுதி வைத்தேன். அவை:

பாலகுமாரனின் பிரச்சினைகள் – எதையும் அதன் ஆழத்துக்குள் சென்று பரிசீலனைக்குட்படுத்தாதது. எல்லா ஆண் பெண் உறவுகளிலும் ஒரு செக்ஸ் எலிமெண்ட் எப்படியாவது இருந்துவிடுவது. அதிலிருந்து வெளிவர பெண்ணை தெய்வமாக்க முயல்வது. பெண்கள் ஆண்கள் என எல்லோரும் தத்துவார்த்தப் பிரச்சினைகளுக்குள் சிக்கிக் கொள்வது. மெல்ல எப்படியாவது ஜாதிய சிந்தனை இருந்தே தீரும் என்று தொடர்ந்து பின் நின்று சொல்வது. இவை எல்லாவற்றிலும் அவர் ஆழம் போயிருந்தால் ஒவ்வொன்றும் ஒரு கேஸ் ஸ்டடியாகி இருக்கும். ஆனால் எல்லாவற்றிலும் மூன்று மேலோட்டமான முடிவுகளுக்கு அவர் வந்தார். ஆண் பெண் உறவுகளில் செக்ஸ் அதற்குப் பின்னான வருத்தம், தத்துவார்த்தப் பிரச்சினைகளில் மிகவும் மேலோட்டமான எரிச்சலான தன்னிரக்கம், ஜாதிய சிந்தனைகளில் அவரது பிற்போக்குத்தனம் இவையே அவரை தேங்க வைத்தன. இதே மேலோட்டமான வேகத்தில் அவர் ஆன்மிகத்துக்குப் போனார். எனக்கு ஆன்மிகம் பற்றி அதிகம் பரிச்சயமில்லை. ஆனால் ஆன்மிகத்தை இவர் எழுதியதை வாசித்தபோது அவற்றிலும் ஒரு அவசரத்தன்மையும் தனது வாசகர்களைத் தான் செல்லும் திசைக்குத் திருப்பிக் காட்ட வேண்டும் என்கிற வேகமும் முடியும் என்கிற மமதையும் மட்டுமே தென்பட்டன.

ஆனால் என் பால்யம் முழுக்க பாலகுமாரனே நிறைத்துக் கிடந்தார். அதில் காமத்தை பெரும்பாலும் தன் எழுத்துகள் மூலம் அவரே கட்டமைத்தார். ஒவ்வொரு இளைஞனும் வெறும் காமம் பற்றியே பேசும்போது அவர் எனக்குள் ஒரு விஸ்வரூபம் எடுத்தார். பல நாள்களில் பல நேரங்களில் நான் பாலகுமாரனுடன் மானசீகமாகப் பேசினேன். எனக்கு குருக்கள் என்று யாரும் இன்று வரை இல்லை. ஆனால் மானசீகமாக என் வாழ்க்கையை பாலகுமாரன், ஜெயகாந்தன், சோ, சுஜாதா, ஜெயமோகன் போன்றவர்களே வடிவமைத்தார்கள். அந்த வகையில் பாலகுமாரனிடன் எனக்கு எப்போதும் ஒரு மென்மை உண்டு. எப்போதும் நான் அவரை நோக்கிக் கை கூப்புவேன்.

பாலகுமாரனின் மயக்கத்தை சுஜாதா போக்கடித்தார். சுஜாதாவிடமிருந்து ஜெயகாந்தன் என்னைக் கொண்டு போனார். இவர்கள் அத்தனை பேரையும் ஒரு சேரக் கடாச வைத்தார் ஜெயமோகன். ஆனால் இன்று நோக்கும்போது இவர்கள் அத்தனை பேரும் ஒவ்வொரு வகையில் எத்தனை முக்கியமானவர்கள் என்று தெரிகிறது. அதிலும் சுஜாதாவின் பங்களிப்பு பிரமிக்க வைக்கிறது. ஜெயமோகன் எங்கேயோ போய்விட்டார்.

பாலகுமாரனின் பெண்களை மிகக் கறாராக வரையறுத்தால், உணவாலும் உடலாலும் ஒரு ஆணைக் கட்டிப்போட முடியும், முடியவேண்டும் என்று சொல்பவர்களாகவே இருந்தார்கள். ஆணிடம் ஒரு பெண் தோற்கும்போது அவர்கள் காமத்தை அனுபவமாக்கியே கடந்தார்கள். வெற்றி பெற்ற ஒவ்வொரு பெண்ணும் ஏதோ ஒரு நொடியில் வீட்டுப் பெண்ணே என்று காண்பிக்க பாலகுமாரன் தவறுவதில்லை. அதேபோல் எந்த ஒரு நொடியிலும் ஒரு வீட்டுப் பெண் பல தளங்கள் உயர்ந்து வெற்றிப் பெண்ணாக வலம் வரவைக்கவும் அவர் தவறுவதில்லை. என்ன, இவை இரண்டுமே நொடி நேர மின்னல்களாக நிகழ்ந்துவிடுவதுதான் சோகம். இதற்கேற்ற ஆழமான காரணங்களோ சம்பவங்களோ இருப்பதில்லை. அப்படி ஒரு பெண்ணால் மாற முடியும் என்ற ஒற்றைக் காரணம் எல்லா நாவல்களிலும் பாலகுமாரனுக்குப் போதுமானதாக இருந்துவிடுகிறது.

அனல் காற்று ஜெயமோகன் எழுதியது. பாலகுமாரனின் கதை போன்ற ஒன்றுதான். ஆனால் அதில் ஜெயமோகன் நிகழ்த்திக் காட்டியிருக்கும் அனுபவங்கள் ஒரு ஆணையும் பெண்ணையும் அவர்கள் மனத்தில் அப்படியே நிர்வாணமாக்கி நிற்கவைப்பவை. ஆணின் எல்லையையும் பெண்ணின் எல்லையையும் அவர் தொட்டிருக்கும் அற்புதம் வாசித்தால்தான் புரியும். அனல்காற்று நாவலில் பல இடங்களில் நாம் பாலகுமாரனை நினைவு கூர்வோம். ஆனால் பாலகுமாரனால் செல்லவே முடியாத அலசல்களை ஜெயமோகன் நிகழ்த்திக்கொண்டிருப்பார்.

அனல் காற்று ஜெயமோகனின் நாவல்களில் ஒன்றாக வைக்கத் தக்கதல்ல. அத்தனை ஆழமான அலசல்களை மீறியும் அது ஒரு சுமாரான நாவலே. ஆனால் அது ஒரு திரைக்கதையாக எழுதப்பட்டது என்பதை மனத்தில் வைத்தே படிக்கப்படவேண்டும். சட்டென தெளியும் நிலையில் வரும் உறவு விவரணைகளில் உண்மையில் நான் மிரண்டுவிட்டேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: பாலகுமாரன் பக்கம்

டைம் பாஸ் பாலகுமாரன் கதைகள்

இந்தப் பதிவும் ஒரு ரெகார்டுக்காகத்தான். பாலகுமாரன் எக்கச்சக்க மாத நாவல்களை எழுதித் தள்ளி இருக்கிறார். என்ன கதைக்கு என்ன பேர் என்று நினைவு வைத்துக் கொள்ள முடிவதில்லை. அதனால் அவரது டைம் பாஸ் கதைகளை – ஏதோ ஒரு சின்ன விஷயமாவது இருக்கும், முழு தண்டம் இல்லை, பஸ்ஸில் படித்துவிட்டு தூக்கிப்போட்டுவிடலாம் – பற்றி சின்னச் சின்னக் குறிப்புகள்.

அப்பம் வடை தயிர்சாதம்: சுவாரசியமாக ஆரம்பிக்கிறது. இன்றைய பிராமண, மத்திய தரக் குடும்பம் ஒன்றின் குலச் சடங்கு – என்ன வேலை செய்தாலும், ஒரு பிரார்த்தனையாக சில வருஷங்களுக்கு ஒரு முறை ரயில்வே ஸ்டேஷனின் அப்பம், மசால்வடை, தயிர்சாதம் விற்பது. நாலைந்து தலைமுறைக்கு முன்னால் வைதீகத்திலிருந்து சமையல் தொழிலுக்கு மாறினார்களாம்.ரயில்வே ஸ்டேஷனில் அப்பம், மசால்வடை, தயிர்சாதம் விற்றார்களாம். அதன் நினைவாக இந்தச் சடங்கு. மாயவரத்தில் ஹோட்டல், சென்னையில் ஹோட்டல், சென்னையில் ஆங்கிலேயருக்கு உதவியாக ஒரு பதவி, வியாபாரம் என்று மாறினாலும் இந்தச் சடங்கை விடுவதில்லை. படிக்கலாம், ஆனால் ரொம்பக் கேள்வி கேட்கக்கூடாது. 1800களில் மசால்வடையா? அது மசால்வடை என்று அழைக்கப்பட்டதா? பாசந்தி போன்ற வட இந்திய இனிப்புகளா? விடுதலைக்கு முன்னாலேயே லட்சாதிபதிக் குடும்பம் எப்படி திருப்பி மத்திய தர வாழ்க்கைக்கு வந்துவிட்டது? இப்படி எல்லாம் யோசிப்பவராக இருந்தால் தவிர்த்துவிடுங்கள்.

பவிஷு: கதை “சின்னவர்” அதாவது எம்ஜிஆரின் அரசியல் வாழ்க்கையை ஓரளவு தொடர்கிறது. அவர் ரிக்ஷாக்காரர்களுக்கு ரெயின்கோட் கொடுத்தது, கட்சி உடைந்தது எல்லாம் கதையில் பின்புலமாக வருகிறது. முன்புலமாக ஒரு வியாபாரக் குடும்பத்தின் வாழ்க்கை. படிக்கலாம்.

தனரேகை: சுமாரான கதை. மாடு வைத்து வியாபாரம் செய்யும் யாதவர் குடும்பம். மில் வைத்திருக்கும் முதலியார் குடும்பம் என்று போகிறது.

என்னவளே அடி என்னவளே: சிம்பிளான காதல் கதை. யோகா டீச்சருக்கும் விளம்பரம் செய்யும் ராமச்ச்சந்திரனுக்கும் காதல். பெண் வீட்டில் எதிர்ப்பு. பையன் வீட்டில் கொஞ்சம் குறைவான எதிர்ப்பு. அவர்களே பேசி, ஏற்பாடு செய்து சம்பிரதாயமாக கல்யாணம் செய்து கொள்கிறார்கள். அனாவசிய digression இல்லாதது பெரிய நிம்மதி. அதற்காகவே படிக்கலாம்.

எழில்: சினிமா டைரக்டர் கனவோடு சென்னைக்கு வருபவன் வீடியோ எடுப்பவனாக மாறுகிறான். தவிர்க்கலாம்.

என்னுயிரும் நீயல்லவோ: சுமாரான நாவல்தான், ஆனால் ஏலக்காய்த் தோட்டப் பின்புலம் இதை குறிப்பிட வைக்கிறது. சிம்ப்ளிஸ்டிக்கான விவரிப்புதான் என்றாலும் கொஞ்சம் அந்தத் தொழிலின் போக்கு புரிகிறது. செட்டியார் இறந்த பிறகு அவரது மகன் அவரது வைப்பாட்டி மேற்பார்வை பார்க்கும் தோட்டத்தை எடுத்து நடத்துகிறான்.

ஜீவநதி: அரசியல்வாதி, அவருக்கு துணையாக அவரது சித்தப்பா பையன். பஸ்ஸில் படித்துவிட்டு தூக்கிப் போட்டுவிடலாம்.

காதல் சிறகு: நான் என் வாழ்க்கையில் இது வரையிலும் ஒரு டிவி மெகாசீரியலை – ஒரு எபிசோட் கூட முழுதாகப் பார்த்ததில்லை. இந்த நாவல் மாதிரிதான் இருக்கும் என்று தோன்றுகிறது. நிச்சயதார்த்தம் நடந்து கல்யாணம் முடிவதற்குள் துபாய்க்கு வேலைக்குப் போகும் பையன். இதை வைத்து நானூத்தி சொச்சம் பக்கம்! சும்மா இசு இசுன்னு இசுத்திருக்கிறார்.

கடலோரக் குருவிகள்: கஷ்டப்படும் பிராமணப் பையன். அவனுக்கு திடீரென்று ஒரு கோடீஸ்வரப் பெண்ணின் நட்பு கிடைக்கிறது. அவளுக்கு உதவி செய்கிறான், வளர்ந்து காதலாகிறது. தமிழ் சினிமாவில் ஒரு பாட்டு முடிவதற்குள் பணக்காரன் ஆவது போல இருக்கிறது. உபதேசம் செய்வதற்காகவே இந்த கதையை எழுதி இருக்கிறார் என்று நினைக்கிறேன். பஸ்ஸில் படிக்கலாம். இதை இயக்குனர் ஷங்கர் வெகுவாகப் புகழ்ந்து பாலகுமாரனுக்கு எழுதிய கடிதமும் புத்தகத்தோடு வெளியிடப்பட்டிருக்கிறது.

கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை: இசையைத் தவிர வேறு எதுவும் தெரியாத ஒரு இசை அமைப்பாளர்; அவருக்கு உண்மையான ஒரு மானேஜர்; அவருக்கு விசுவாசமான அவர் மனைவியின் தம்பி. இவர்களை வைத்து கொஞ்சம் சினிமா பின்புலத்தை வைத்து ஒரு கதை. படிக்கலாம். ஆனால் பிரமாதம் என்றெல்லாம் இல்லை.

கள்ளி: வழக்கறிஞர் சுமதியைப் பின்புலமாக வைத்து ஒரு சின்னக் கதை

கனவு கண்டேன் தோழி: பாட்டுப் பாடும் செல்வராணி.

கண்ணாடி கோபுரங்கள்: ஒரு மாஃபியா டான் சிறு தொழிலதிபர் சிவப்பிரகாசத்திடம் கடத்தல் பொருளை கொடுத்தனுப்புகிறான். சிவப்பிரகாசத்துக்கு என்ன என்று தெரியாது. மாட்டிக் கொள்கிறான். ஒரு வருஷம் விசாரணை இல்லாமல் ஜெயில் என்று கூட்டிப் போய்விடுகிறார்கள். மனைவி தைரியமாக நின்று தொழில் செய்கிறாள். கதை ஓரளவு நன்றாக வந்திருக்கும். ஆனால் சிவப்பிரகாசம் ஆன்மீக வழியில் போகிறான் என்று ஆரம்பித்து கதையின் கட்டுக்கோப்பை குலைத்துவிடுகிறார். மோசம் என்று சொல்வதற்கில்லை, படிக்கலாம்.

குயிலே குயிலே: ஓவியம் வரையும் ஒருவன்.

மணல் நதி: காசிக்கு யாத்திரை போகும் சீனிவாசன். சீனிவாசன் என்ற பெயர் உள்ள ஒருவர் அவ்வப்போது பாலகுமாரன் கதைகளில் வருவார். எப்போதுமே அவர் ஐயர்தான். ஹிந்து மத சடங்கு, சம்பிரதாயம், மந்திரம் பற்றி எல்லாம் பேசுவார். அது பாலகுமாரனேதான் என்பதைப் புரிந்து கொள்ள பெரிய மூளை ஒன்றும் தேவையில்லை…

மரக்கால்: கால் போன ஒரு இளைஞன், வாழ்க்கையில் முன்னேறினாலும் பெண்கள் என்ன நினைப்பார்களோ என்ற பயம் இருக்கிறது. பரவாயில்லை.

மீட்டாத வீணை: அப்பாவால் கைவிடப்பட்ட குடும்பம். பையனும் பெண்ணும் துடிப்பாக இருக்கிறார்கள். அம்மா ராமா ராமா என்று கனவுலகில். டைம் பாஸ்…

முந்தானை ஆயுதம்: அக்கா கல்யாணம் ஆன பிறகும் தன் முன்னாள் காதலன், இந்நாள் வெற்றி அடைந்த சினிமா இயக்குனரோடு ஓடிப் போகிறாள். தங்கை வாழ்க்கைப்பட்ட குடும்பத்தில் நன்றாக ஒட்டிக் கொள்கிறாள். சுமார், படிக்கலாம்.

நெல்லுக்கு இறைத்த நீர்: இசை வேளாளர் குடும்பத்திலிருந்து படித்து வரும் முதல் ஆள்; முறைப் பெண்ணையும் படிக்கத் தூண்டுகிறான். இருவரையும் இணைய விடாமல் செய்வது செயற்கையாக இருக்கிறது.

நேற்று வரை ஏமாற்றினாள்: கணவன் கணேசன் மனைவியைப் புரிந்து நடந்து கொள்கிறான். கதை வந்த காலத்தில் நிச்சயமாக நாலு கல்யாண வயசுப் பெண்கள் கணேசன் மாதிரி ஒருவனை நினைத்து பெருமூச்சு விட்டிருப்பார்கள்.

நிலாவே வா: மன வளர்ச்சி இல்லாத ஒரு பையனை வைத்து பிச்சை எடுத்துப் பிழைக்கும் கிழவி. அவளிடமிருந்து அந்தப் பையனைக் காப்பாற்றும் நிருபன். அந்த மாதிரிப் பிள்ளைகளுக்காக ஒரு இல்லம் நடத்தும் விதவைப் பெண். படிக்கலாம்.

பச்சை வயல் மனது: கல்யாணம் ஆகாத மூன்று சகோதரிகள். மாப்பிள்ளைக்கு விளம்பரம் கொடுத்துவிட்டு ஒரு சின்ன விளையாட்டு என்று ஆரம்பிக்கிறார்கள். பஸ்ஸில் படிக்கலாம்.

பொய்மான்: சின்ன வயதில் காதலில் தோற்று பின்னால் வென்ற கதை. ஏறக்குறைய சூரியவம்சம் திரைப்படம் மாதிரி இருக்கிறது.

சிநேகமுள்ள சிங்கம்: காலேஜ் அரசியலில் கொலை செய்துவிட்டு ஜெயிலுக்குப் போகும் பாண்டியன் திரும்பி வந்து மீண்டும் காலேஜ் அரசியலில் மாட்டிக் கொள்கிறான். கதைப்பின்னல் சரியில்லை. ஆனால் சீன் சீனாகப் பார்த்தால் நல்ல சீன்கள் இருக்கின்றன – தலைவரை காலேஜுக்கு அழைப்பது, கவிதை பாடுவது எல்லாம் நன்றாக வந்திருக்கின்றன.

தெம்மாங்கு ராஜ்ஜியம்: கதை யாரைப் பற்றியது என்ற முடிவை நடுவில் மாற்றிவிட்டார் என்று நினைக்கிறேன். ஜெயிலில் வாத்தியாராக இருக்கும் ஒருவனைப் பற்றி கதை ஆரம்பிக்கிறது. மூன்றாவது சாப்டரில் அது ஒரு கைதியின் கதையாக மாறிவிடுகிறது. கைதி ஒரு கைநாட்டு, கிராமத்தில் அவனை ஏமாற்றி நிலத்தை பிடுங்குகிறார்கள். அவன் வீட்டுப் பெண்களை நாசம் செய்வோம் என்று மிரட்டும்போது அவன் கொலை செய்துவிட்டு மீண்டும் ஜெயிலுக்கே திரும்புகிறான். பஸ்ஸில் படிக்கலாம்.

திருமணத் தீவு: கொஞ்சம் கஷ்டத்திலிருக்கும், அப்பா கடனை அடைக்கப் பாடுபடும் டீச்சர் தமயந்தி கஷ்டத்திலிருக்கும் இன்னொரு பையனோடு இணைகிறாள். படிக்கலாம்.

தொட்டால் பூ மலரும்: சுயமாகத் தொழில் செய்யும் இரண்டு இளைஞர்கள். குடும்பங்கள் இணைகின்றன. சில சித்தரிப்புகள் நிஜமாக இருக்கின்றன. படிக்கலாம்.

வன்னி மரத் தாலி: அம்மாவை மிதிக்கும் அப்பா கையை உடைத்து அதற்காக ஜெயிலுக்கு போன பையன் பிரம்பு பின்னுவதைக் கற்றுக் கொள்கிறான். அம்மனுக்கு சீரியல் செட் போட பிரம்பில் சட்டம் செய்யும்போது ஒரு பெண்ணுடன் பேசிப் பழகி… மோசம் என்று சொல்வதற்கில்லை.

வேட்டை: என்னவோ ஒரு வெட்டிக்கதை. இதற்கெல்லாம் கதைச்சுருக்கம் வேறு எழுத வேண்டுமென்றால் போரடிக்கிறது.

வில்வமரம்: நடுத்தரக் குடும்பம். அக்காவுக்கு அறுபதுகளில் கல்யாணம் ஆகிறது. அப்போதே கணவனுக்கு ஆயிரத்தைநூறு ரூபாய் சம்பளம். பிறந்த வீட்டில் ஏழ்மை. தங்கச்சிகள், தம்பிகள் படித்து வேலைக்குப் போய் செழிப்பாக இருக்கிறார்கள். அக்காவுக்கு இப்போது பொறாமை. அண்ணன் தங்கைக்குள் வசதிகள் மாறும்போது ஏற்படும் ஆங்காரத்தை அருமையாக எழுதி இருக்கிறார். கதையில் ஓட்டைகள் உண்டு, ஆனாலும் படிக்கலாம்.

பாலகுமாரனுக்கு பிடித்த புத்தகங்கள்

பாலகுமாரனின் ஒரிஜினல் சுட்டி இங்கே. யார் போட்ட பட்டியலும் இன்னொருவருக்கு முழுதாக ஒத்துப் போகப் போவதில்லை, இருந்தாலும் அவர் சொல்லி இருக்கும் புத்தகங்களில் பெருவாரியானவை நல்ல படைப்புகள். வசதிக்காக பட்டியலை இங்கே மீண்டும் போட்டிருக்கிறேன், என் குறிப்புகளுடன்.

படித்த நாவல்கள்:

 1. கமலாம்பாள் சரித்திரம் – ராஜம் ஐயர்: கமலாம்பாள் சரித்திரத்தைத்தான் நான் தமிழின் முதல் நாவல் என்று கருதுகிறேன். பிரதாப முதலியார் ட்ரெய்லர் மாதிரிதான்.
 2. பொன்னியின் செல்வன்கல்கி: அற்புதமான கதைப் பின்னாலும் முடிச்சுகளும் கொண்ட நாவல். தமிழின் சிறந்த சரித்திர நாவல் இதுவே என்று ஒரு காலத்தில் எண்ணி இருந்தேன். இப்போது வானம் வசப்படும், மானுடம் வெல்லும் இரண்டும் பொ. செல்வனோடு முதல் இடத்துக்கு போட்டி போடுகின்றன.
 3. மோகமுள், செம்பருத்திதி.ஜானகிராமன்: மோகமுள் தமிழின் சிறந்த நாவல்களில் ஒன்று. செம்பருத்தி இப்போது சரியாக நினைவில்லை.
 4. மிஸ்டர் வேதாந்தம், ஜஸ்டிஸ் ஜகந்நாதன்தேவன் மிஸ்டர் வேதாந்தம் என் கண்ணில் தேறாது. ஜ. ஜகன்னாதன் நல்ல நாவல்.
 5. பசித்த மானுடம்கரிச்சான் குஞ்சு: எனக்கு முழுதாகப் புரிந்துவிட்டது என்று சொல்வதற்கில்லை. ஆனாலும் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.
 6. ஜே.ஜே. சில குறிப்புகள்சுந்தர ராமசாமி: படித்துப் பல வருஷம் ஆகிவிட்டது. சாதனை என்று அப்போது நினைத்தேன், மீண்டும் ஒரு முறை படித்துப் பார்க்க வேண்டும்.
 7. ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்ஜெயகாந்தன்: பிரமாதமான பாத்திரப் படைப்பு. சாதனை.
 8. 18வது அட்சக்கோடு, கரைந்த நிழல்கள்அசோகமித்திரன்: கரைந்த நிழல்கள் ஒரு tour de force. ப. அட்சக்கோடும் சிறந்த நாவல்.
 9. சாயாவனம்சா. கந்தசாமி: சாயாவனம்தான் நான் முதன்முதலாகப் படித்த இலக்கியம் என்று நினைக்கிறேன். கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம்.
 10. குருதிப்புனல்இந்திரா பார்த்தசாரதி: என் கண்ணில் இது முழுதாக வெற்றி அடையாத படைப்புதான்.
 11. வாடிவாசல்சி.சு.செல்லப்பா: குறுநாவல் என்றுதான் சொல்ல வேண்டும். அற்புதமான புத்தகம்.
 12. தலைமுறைகள்நீல. பத்மநாபன்: சிறந்த தமிழ் நாவல்களில் ஒன்று. வட்டார வழக்குக்காகவே படிக்கலாம்.
 13. குறிஞ்சி மலர்நா. பார்த்தசாரதி: இன்று மகா தட்டையான படைப்பாகத்தான் தெரிகிறது. ஆனால் எழுதப்பட்டபோது இதன் லட்சியவாதம் பெரிய தாக்கத்தை உருவாக்கியது என்பதை மறுப்பதற்கில்லை.
 14. ஒரு புளியமரத்தின் கதைசுந்தர ராமசாமி: நல்ல நாவல், படிக்க வேண்டிய நாவல்.
 15. வாசவேஸ்வரம்கிருத்திகா அற்புதமான நாவல்.
 16. தரையில் இறங்கும் விமானங்கள்இந்துமதியின் பிற புத்தகங்கள் எல்லாம் குப்பையாக இருக்கும்போது எப்படி இந்த ஒரு புத்தகம் மட்டும் இலக்கியமாக இருக்கிறது என்று வியந்திருக்கிறேன்.
 17. பிறகுபூமணி இன்னும் ஒரு சிறந்த நாவல்.
 18. கதவு/கோபல்ல கிராமம்கி. ராஜநாராயணன்: கி.ரா.வெல்லாம் ஆங்கிலத்தில் எழுதி இருந்தால் நோபல் நிச்சயம்.
 19. கடல்புரத்தில்வண்ணநிலவன்: பல வருஷங்கள் முன்னால் படித்தபோது என்னைப் பெரிதாகக் கவரவில்லை. மீண்டும் படித்துப் பார்க்க வேண்டும்.
 20. என் பெயர் ராமசேஷன் – ஆதவன்: சில புத்தகங்கள் மனதில் ஒரு ஸ்பெஷல் இடத்தைப் எடுத்துக் கொள்கின்றன. எ.பெ. ராமசேஷன் எனக்கு அப்படித்தான். படிக்காதவர்கள் அதிருஷ்டசாலிகள், அவர்களுக்கு ஒரு நல்ல வாசிப்பு அனுபவம் காத்திருக்கிறது.
 21. நாளை மற்றுமொரு நாளே – ஜி.நாகராஜன்: இதுவும் ஒரு சாதனை.
 22. புத்தம் வீடு – ஹெப்சிபா ஜேசுதாசன்: ஹெப்சிபா எழுத்தாளர். அவர் படைத்திருப்பது இலக்கியம். அவருக்கு பெண் எழுத்தாளர் என்று அடைமொழி எல்லாம் கொடுக்கத் தேவையில்லை.
 23. யவனராணிசாண்டில்யன்: சிறு வயதில் படித்தபோது இளஞ்செழியனின் சாகசங்கள் மனதைக் கவர்ந்தன என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அவையெல்லாம் எம்ஜிஆர் பட சாகசங்கள் என்பதையும் சொல்லத்தான் வேண்டும்.
 24. வழிப்போக்கன் – சாவி உப்பு சப்பில்லாத வாரப் பத்திரிகை தொடர்கதை. இதையெல்லாம் பாலகுமாரன் எப்படி விரும்பிப் படித்தாரோ தெரியவில்லை. இந்த லிஸ்டில் உள்ள மற்ற புத்தகங்களுக்கும் இதற்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம்.

படிக்காதவை:

 1. வேள்வித்தீ -எம்.வி. வெங்கட்ராம்:
 2. எங்கே போகிறோம் – அகிலன்: அகிலன் உருப்படியாக எதையாவது எழுதி இருப்பார் என்று எனக்கு நம்பிக்கையே இல்லை.
 3. அலைவாய்க் கரையில் – ராஜம் கிருஷ்ணன்:
 4. புதிய கோணங்கி – கிருத்திகா
 5. கடலோடி – நரசையா
 6. சின்னம்மாஎஸ்.ஏ.பி.
 7. படகு வீடு – ரா.கி.ரங்கராஜன்
 8. புயலில் ஒரு தோணி – ப.சிங்காரம்

சிறுகதைகள், தொகுப்புகள்:

 1. மங்கையர்க்கரசியின் காதல்வ.வே.சு.ஐயர்: முன்னோடி சிறுகதை. பேரை கிளிக்கினால் அழியாச்சுடர்கள் தளத்தில் படிக்கலாம்.
 2. புதுமைப்பித்தன் சிறுகதைகள்: புதுமைப்பித்தனைத்தான் நான் தமிழின் நம்பர் ஒன் எழுத்தாளர் என்று கருதுகிறேன். என்றாவது நான் பணக்காரன் ஆனால் அவரது எழுத்துகளை மொழிபெயர்த்து விளம்பரம் செய்து எல்லாரையும் படிக்க வைப்பேன்…
 3. மூங்கில் குருத்துதிலீப் குமார் மீண்டும் மீண்டும் anthologize செய்யப்படும் இந்தச் சிறுகதை சிறப்பானதுதான். ஆனால் திலீப் குமாரின் கடவு சிறுகதையே எனக்கு எல்லாவற்றிலும் மிகவும் பிடித்தமானது.
 4. சிறிது வெளிச்சம்கு.ப.ரா.: நல்ல சிறுகதை, படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.
 5. தெய்வம் பிறந்ததுகு. அழகிரிசாமி
 6. கலைக்க முடியாத ஒப்பனைகள்வண்ணதாசன்: நல்ல சிறுகதை.
 7. சிறகுகள் முறியும்அம்பை: இந்த மாதிரி பெண்ணிய சிறுகதை எழுத அம்பைக்கு சொல்லித் தர வேண்டுமா என்ன?
 8. இன்று நிஜம் – சுப்ரமண்ய ராஜு
 9. தேவன் வருகைசுஜாதா
 10. ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள், ஒரு மனுஷிபிரபஞ்சன்
 11. கல்லிற்கு கீழும் பூக்கள் – மாலன்
 12. அப்பாவும் இரண்டு ரிக்ஷாக்காரர்களும் – ம.வெ. சிவகுமார்
 13. பச்சைக்கனவுலா.ச.ரா.
 14. நுணலும் புனலும்ஆ. மாதவன்
 15. மௌனி சிறுகதைகள் – மௌனி
 16. நினைவுப் பாதை – நகுலன்
 17. சம்மதங்கள் – ஜெயந்தன்
 18. நீர்மைந. முத்துசாமி பேரை கிளிக்கினால் அழியாச்சுடர்கள் தளத்தில் படிக்கலாம். எனக்கு சிறுகதை புரியவில்லை.
 19. சோற்றுப்பட்டாளம் – சு. சமுத்திரம்
 20. குசிகர் குட்டிக் கதைகள் – அ. மாதவய்யா
 21. ஒரு ஜெருசேலம் – பா. ஜெயப்ரகாசம்
 22. ஒளியின் முன்ஆர். சூடாமணி

கவிதைகள்

 1. அன்று வேறு கிழமை – ஞானக்கூத்தன்
 2. பெரிய புராணம் – சேக்கிழார்
 3. நாச்சியார் திருமொழி – ஆண்டாள்
 4. அழகின் சிரிப்பு – பாரதிதாசன்
 5. வழித்துணை – ந. பிச்சமூர்த்தி
 6. தீர்த்த யாத்திரை – கலாப்ரியா
 7. வரும் போகும் – சி. மணி
 8. சுட்டுவிரல்/பால்வீதி – அப்துல் ரஹ்மான்
 9. கைப்பிடி அளவு கடல் – தர்மு சிவராமு
 10. ஆகாசம் நீல நிறம் – விக்ரமாதித்யன்
 11. நடுநிசி நாய்கள் – சுந்தர ராமசாமி

கட்டுரைகள்

 1. பாரதியார் கட்டுரைகள் – சி. சுப்பிரமணிய பாரதி
 2. பாலையும் வாழையும் – வெங்கட் சாமிநாதன்
 3. சங்கத் தமிழ் – கலைஞர் மு. கருணாநிதி
 4. வளரும் தமிழ் – தமிழண்ணல்
 5. மார்க்சியமும், தமிழ் இலக்கியமும் – ஞானி
 6. இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள் – வைரமுத்து

வாழ்க்கை சரித்திரம்

 1. என் சரித்திரம் – உ.வே. சாமிநாத ஐயர்
 2. காரல் மார்க்ஸ் – வெ. சாமிநாத சர்மா

நாடகங்கள்

 1. சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்சி. என். அண்ணாதுரை எழுதிய இந்த நாடகம் என் ரசனைக்கு ஒத்து வராவிட்டாலும் தமிழுக்கு முக்கியமான நாடகம்தான். ஆவணம் என்ற விதத்திலும் முக்கியமானது.

மொழிபெயர்ப்புகள்:

 1. அழிந்த பிறகு, பாட்டியின் நினைவுகள் – சிவராம கரந்த்
 2. அந்நியன் – ஆல்பெர் காம்யு
 3. வால்காவிலிருந்து கங்கை வரைராகுல சாங்க்ரித்தியாயன் இன்னுமொரு பிரமாதமான எழுத்து. இதை பாலகுமாரன் கட்டுரை என்று வரிசைப்படுத்தி இருக்கிறார்!
 4. சிறுகதைகள் – ஓ. ஹென்றியின் சிறுகதைகள் பலவற்றைப் படித்திருக்கிறேன். Gift of the Magi, Last Leaf மாதிரி ஒரு சில சிறுகதைகளே மனதில் நிற்கின்றன. அவரை பேரிலக்கியம் படைத்தவர் என்று சொல்வதற்கில்லை.

இந்தப் பட்டியல் முழுமையானதாய் கருத வேண்டாம். என் நினைவில் தைத்தவரை எழுதியிருக்கிறேன். நல்லவை சில மறந்து போயிருக்கலாம். இதை தவிர என் அபிப்பிராயம் என்னவெனில் ஜெயகாந்தன், தி. ஜானகிராமன், லா.ச.ரா, அசோகமித்திரன், சுஜாதா, சுந்தர ராமசாமி ஆகியோரின் எல்லா படைப்புகளையும் படிக்க வேண்டுமென்று வற்புறுத்துகிறேன். —— பாலகுமாரன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: புத்தகப் பரிந்துரைகள்

பாலகுமாரனின் இதிகாச, தொன்ம, அமானுஷ்யக் கதைகள்

பொதுவாக புத்தகப் பரிந்துரைகள்தான் இங்கே. இன்று புத்தகத் தவிர்த்துரை! பாலகுமாரனின் இதிகாசம், தொன்மம், மகான்களின் வாழ்க்கை, அமானுஷ்யக் கதைகளைப் அனேகமாகத் தவிர்த்துவிடலாம்.

பாலகுமாரன் படைப்புகளில் வெகு சிலவே இலக்கியம். அவர் தொன்மங்கள், இதிகாசங்கள், மகான்கள் பற்றி எழுதுவதெல்லாம் அனேகமாக இலக்கியத் தரத்தோடு இருக்காது. முதல் காரணம் அலுப்புத் தட்டுவதுதான். சுவாரசியம் என்பது குறைவாகவே இருக்கும். வாய்ப்பு கிடைத்தால் உபதேசமாக பொழிந்துவிடுவார். நிறைய அலட்டல், pretentiousness தெரியும். ஏதோ கோவிலில் போரடிக்கும் கதாகாலட்சேபம் கேட்பது போல இருக்கும். சுருக்கமாகச் சொன்னால் இவை மறுவாசிப்புகள், மறு ஆக்கங்கள், ஏன் சுவாரசியமான கதைகள் கூட அல்ல. பக்த விஜயம் (பக்தி இயக்கத்தின் பெரும் தலைகளின் வாழ்க்கைக் குறிப்புகள் – நாமதேவ், சோகாமேளர், துக்காராம், மீராபாய், கோராகும்பார், சாந்த சக்குபாய், ஜனாபாய்…) கூட இவரது பல மகான்களின் கதைகளை விட படிக்கக் கூடிய விதத்தில் இருக்கும். இவற்றின் ஒரே பயன் நமக்கே மறந்து போயிருக்கும் சில தொன்மக் கதைகளை நினைவு கூர்வதுதான். தொன்மங்களில் எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு என்பதால் நான் கையில் கிடைப்பதை விடாமல் படித்திருக்கிறேன். ஆனால் இவற்றில் ஒன்றைக் கூட நான் பரிந்துரைக்க மாட்டேன்.

இவற்றைத் தவிர அமானுஷ்யக் கூறு உள்ள கதைகளை நிறைய எழுதித் தள்ளி இருக்கிறார். பொதுவாக அவை மகா மோசமாக இருக்கும். மந்திரங்களின் மகிமைகள், அந்தணர்கள் (பிராமணர்கள் இல்லை அந்தணர்கள்) வேதம், யோகம், பூஜை, மந்திரம் இத்யாதியை கருத்தோடு பேண வேண்டிய அவசியம், ஏதோ ஒரு குரு அல்லது கடவுள் வழிநடத்திப் போவது என்று ஒரு தீம் வரும். பல சமயம் குழந்தைத்தனமாக பிரார்த்தனை செய், ஆத்தாவுக்குப் படையல் வை, கணபதி உச்சிஷ்ட மந்திரம் ஜபி, உனக்கு எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்ற ரேஞ்சில்தான் கதை இருக்கும். அவரது சொந்த நம்பிக்கையாக இருக்க வேண்டும், அதை அம்புலி மாமாத்தனக் கதைகளில் எழுதுவார். இவற்றில் அநேக கதைகள் தவிர்க்க வேண்டியவையே. Wish fulfilment, அவர் கண்ட பகல் கனவு எல்லாம் கதையாகிவிடுமா? சில சமயம் இந்தக் கதைகளில் பிற கூறுகள் இணைந்து வரும், உதாரணமாக மஞ்சக்காணியில் பட்டிமன்றக் காட்சிகள், எம்ஜிஆர் ஒரு ஊனமுற்ற பெண் வீட்டுக்குப் போய் பசும்பால் குடித்த காட்சிகள். அவை மட்டுமே கொஞ்சமாவது சுமாராக இருக்கும்.

ஆனால் இவற்றிலும் ஒரு ஜெம் உண்டு. என்னருகில் நீ இருந்தால் கச்சிதமான, சிறப்பான கதை. ராஜராஜ சோழனின் படைத்தலைவன் காரி குளிப்பாகை இப்போது தாம்பரத்தில் பிறந்திருக்கிறான். அவனுக்கு ராஜராஜன், மற்றும் அவரது சபையினரின் ஆவிகள் அறிவுரை சொல்லி அவனைப் பிறவிப் பெருங்கடலிலிருந்து மீட்கின்றனர். இதற்கு நான் எழுதி இருக்கும் கதை சுருக்கம் சரியில்லை, நேராக புத்தகத்தை படித்துக் கொள்ளுங்கள். இதை பாலகுமாரனின் சரித்திரக் கதை என்றும் வகைப்படுத்தலாம். இப்படி ஒரு முத்துக்காக நூறு மாத நாவல் படிக்க வேண்டி இருப்பது பெரிய கஷ்டம்!

இன்னும் ஒரு படிக்கக் கூடிய கதை நினைவு வருகிறது. கதை பெயர்தான் மறந்துவிட்டது. (கடல் பாலம்? கடலோரக் குருவிகள்?) அம்மன் வழிபாடு பற்றி ஒரு கதை. ஆரம்பத்தில் ஏதோ பைப்பிலிருந்து தண்ணீர் இழுப்பதோடு ஆரம்பிக்கும். இறுதியில் அம்மன் சிலையோடு ஓடிவிடுவார்கள். புடவை கட்டிக் கொண்டு அம்மனை வழிபடுவது என்றெல்லாம் வரும்.

கீழே கண்ட குறிப்புகள் புத்தகங்களைத் தவிர்க்கத்தான்.

இதிகாசக் கதைகள்

உத்தமன்: பரசுராமர், விஸ்வாமித்திரர் தொன்மங்களைத் திருப்பிச் சொல்கிறார். படிக்கலாம். இதிகாசக் கதைகளில் எதையாவது படித்தே ஆக வேண்டும் என்றால் இதைத்தான் பரிந்துரைப்பேன்.

பட்டாபிஷேகம்: மீண்டும் விஸ்வாமித்திரர் தொன்மம். விஸ்வாமித்ரர் வசிஷ்டரோடு பிணங்கி பிரம்ம ரிஷியானது, மற்றும் பாலகாண்டத்து ராம லட்சுமணர்களை வழி நடத்தியது. இதையெல்லாம் படிப்பதை விட காலட்சேபம் கேட்கலாம்.

கடவுள் வீடு: மகாபாரதப் பித்து உள்ள எனக்கே அலுப்பு தட்டும்படி எழுதி இருக்கிறார். விதுரனின் கதை, எக்கச்சக்க உபதேசம்.

கிருஷ்ண அர்ஜுனன்: கிருஷ்ணன் ஒரு கந்தர்வனின் தலையை தன காலடியில் வீழ்த்துவதாக சபதம் செய்ய அவனைக் காப்பாற்றுவதாக அர்ஜுனன் வாக்கு கொடுத்துவிட்டு கிருஷ்ணனோடு போர் புரிவதாக ஒரு கதை உண்டு. அதை எழுதி இருக்கிறார், தவிர்க்கலாம்.

என்னுயிர்த் தோழி: வசுதேவர்-தேவகி-கம்சனைப் பற்றி ஒரு மாத நாவல். தவிர்க்கலாம்.

அம்பையின் கதை: அம்பையின் கதையேதான், சொல்லும்படி ஒரு விஷயமும் இல்லை. தவிர்க்கலாம்.

பெண்ணாசை: பீஷ்மர் கதையை ஜாதியை வைத்து மறு வாசிப்பு செய்திருக்கிறார். அதாவது சத்யவதியின் படகுக்கார ஜாதியினர் க்ஷத்ரியர்களால் நசுக்கப்பட்டதாகவும், அவர்களின் துயர் தீர்க்கவே தங்கள் ரத்தம் உள்ள வாரிசு ஆட்சிக்கு வரவேண்டும் என்று கேட்டதாகவும், இதை பீஷ்மரும் புரிந்துகொண்டதாகவும் கதை. சரியாக வரவில்லை. கல்யாணம் ஆனபிறகு சத்யவதி க்ஷத்ரியர் தவிர்த்த மற்ற ஜாதியினருக்கு ஏதாவது செய்ததாக பாரதத்தில் இருந்திருந்தால் கதையின் நம்பகத்தன்மை கூடி இருக்கும். பஸ்ஸில் படிக்கலாம்.

இதை விட நான் எழுதிய “மீன்வாசம்” சிறுகதை நன்றாக இருக்கும். ஜெயமோகன் எழுதி வரும் வெண்முரசிலும் க்ஷத்ரியர்-பரதவர் பற்றி எல்லாம் வருகிறது. அது மலை என்றால் என் கதை சமவெளி, இது மடு.

தனிமைத் தவம்: – கீசக வதம் கதை.

??: – கர்ணனைப் பற்றியும் ஒரு கதை உண்டு, பெயர் நினைவு வரவில்லை.

திருவடி: வாமன அவதாரக் கதையை இவ்வளவு தூரம் அலுப்புத் தட்டும்படி யாரும் சொல்லி நான் பார்த்ததில்லை. அலட்டல் வேறு நிறைய தெரிகிறது.

நாரதர் கதைகள்: எல்லா கதைகளிலும் நாரதரைப் புகுத்தி கடுப்படிக்கிறார். பசுவைப் பற்றி படித்துவிட்டு வந்த மாணவனிடம் தென்னைமரம் பற்றி கட்டுரை எழுதச் சொன்னால் பசுவைப் பற்றி எழுதிவிட்டு தென்னைமரத்தில் அந்தப் பசுவை கட்டினார்கள் என்று முடித்துவிட்டானாம். அந்த மாதிரி எந்தக் கதையாக இருந்தாலும் நாரதர் வந்து விசாரித்தார் என்று எழுதிவிடுகிறார்.

தொன்மக் கதைகள்

ஆலமரம்: பாடகச்சேரி ராமலிங்கம் பற்றி ஒரு கதை

அன்பரசு: மாணிக்கவாசகர்தான் கதையின் ஹீரோ. நரியை பரியாக்குவதும் மீண்டும் நரியாக்குவதும்தான் கதையின் முக்கிய நிகழ்ச்சி. லாஜிக் இல்லை. குதிரை வாங்கினால் அதைக் கண்டு மற்ற மன்னர்கள் பொறாமைப்படுவார்கள், குதிரை வாங்க வரி விதித்து மக்கள் கஷ்டப்படுவார்கள் என்றெல்லாம் யோசிக்கும் மணிவாசகர் மற்ற அரசுகளை பயமுறுத்த 1008 தேர், சக்கரம் வீசும் தனிப்படையை மட்டும் உருவாக்குவாராம். ஏன்யா அப்போது பிற மன்னர்கள் பொறாமைப்படமாட்டார்களா இல்லை படைக்கு சம்பளம் கொடுக்க வரி எல்லாம் வேண்டாம், நேராக என்னிடமிருந்தே வாங்கிக் கொள்ளலாம் என்று சிவபெருமான் சொன்னாரா? திருவிளையாடல் புராணத்தையோ, பெரிய புராணத்தையோ நேரடியாக படிக்கலாம், இதை தவிர்த்து விடலாம்.

என் கண்மணித் தாமரை: பெயர் சரிதானா என்று நிச்சயமாகத் தெரியவில்லை. அபிராமிபட்டர் பற்றிய கதை. இதுதான் இந்த மாதிரி கதைகளில் சிறந்தது. That’s not saying much.

காதல் அரங்கம்: உறங்காவில்லி-பொன்னாச்சி கதை.

காதற்பெருமான்: அருணகிரிநாதரின் கதை. பஸ்ஸில் படிக்கலாம்.

முதிர்கன்னி: அவ்வையின் கதை போரடிக்கும் விதத்தில்

புருஷ வதம் கதை பெயர் நினைவில்லை. பழையனூர் நீலி. நீலியை விட்டுவிட்டு அவள் கணவன் புவனபதியின் பிரதாபம்தான் பெரிதாக இருக்கிறது. தவிர்த்துவிடுங்கள்.

ஒரு சொல்: ஒரு legend உண்டு – முஸ்லிம்களால் கைப்பற்றப்பட்ட ஒரு பெண் மீண்டும் வந்து தன் கணவன் தன்னை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்கிறாள். கற்பிழந்த பெண்ணாயிற்றே என்று குழப்பம். கடைசியில் ஒரு “மகானிடம்” கேட்கிறார்கள். அவர் சொல்கிறார் ராமா ராமா ராம என்று மூன்று முறை சொல்லி குளத்தில் முங்கி எழுங்கள் என்று. மகானின் கூட இருப்பவர் கோபிக்கிறார், ராம நாமத்தின் சக்தி அறியாதவனா நீ, மூன்று முறை எதற்கு, ஒரு முறையே போதுமே என்று. இந்த நிகழ்ச்சியை போதேந்திரர் பார்ப்பதாக பாலகுமரான் இந்த கதையை எழுதி இருக்கிறார். தவிர்க்கலாம்.
பெரிய புராணக் கதைகள்: அனேகமாக நேரடியாக பெரிய புராணக் கதைகளை திருப்பி சொல்கிறார். சில சமயங்களில் கோணத்தை மாற்றுகிறார். எடுத்துக்காட்டாக சிறுத்தொண்டர் கதையை வீட்டு வேலைக்காரி சொல்கிறார். இப்படி கோணத்தை மாற்றுவது நல்ல ஐடியா, ஆனால் அதை சரியாக செயல்படுத்த வேண்டுமே? என்னை பெரிதாகக் கவரவில்லை.

சக்ரவாஹம்: துகாராம் கதை

சிநேகிதன்: சுந்தரர் நாயன்மார்களில் சுவாரசியமானவர். அவருக்கு மட்டும் சிவன் தூது போவானேன்? அர்ஜுனனுக்கு கிருஷ்ணன் போல உதவி செய்வானேன்? இந்த சுவாரசியமான விஷயத்தை போரடிக்கும் விதத்தில் எழுதி இருக்கிறார்.

தங்கக் கை: சேஷாத்ரி சுவாமிகள் பற்றி கொஞ்சம்.

அமானுஷ்யக் கதைகள்

சொர்க்கம் நடுவிலே: கலந்து கட்டி அடிக்கிறார். இறப்புக்குப் பிறகு என்ன என்ற பௌராணிக யூகங்களை எழுதி இருக்கிறார். ஒன்றும் பிரமாதப்படுத்திவிடவில்லை என்றாலும் அந்தத் தளத்தைத் தொட்டவர்கள் மிகக் குறைவு. எனக்குத் தெரிந்து சம்பத்தின் இடைவெளி மட்டுமே.

திருப்பூந்துருத்தி: இந்தப் புத்தகத்திலும் குறிப்பிட வேண்டிய அம்சம் அனேகமாக இறந்து உயிர் பிழைக்கும் ஒருவனின் out of body அனுபவங்கள் மட்டுமே. ஆனால் உடனே சாமியார், கூடுவிட்டுக் கூடு பாய்வது என்று போய்விடுகிறார்.

காசும் பிறப்பும்: இது ஓரளவு பிரபலமான நாவல்.  அவர் கண்ட பகல் கனவு மட்டுமே. சும்மா உட்கார்ந்திருக்கும் நேரத்தில் தான் கர்நாடகத்தில் ஒரு விவசாயியாக, தஞ்சாவூரில் ஒரு நாதஸ்வரக்காரனாக, திருப்பதியில் ஒரு வேத விற்பன்னனாக, ஒரு சாமியாராகப் பிறந்திருந்தால் வாழ்க்கை எப்படிப் போயிருக்கும் என்று யோசித்து அதை தன் நான்கு பிறவிகளாக எழுதி இருக்கிறார். Pretentiousness, அலட்டல் அதிகம். தவிர்க்கலாம்.

மஞ்சக்காணி: எம்ஜிஆர் அரசியல், supernatural ஆவி, காமம் என்று பல ஃபேவரிட் தீம்கள் இணைந்து வருகின்றன. பட்டிமன்றத்தில் தூள் பரத்தும் மாதவி; காதலன்+முறைப்பையன் செல்வா; செல்வாவின் அமைச்சர் அப்பா; அப்பா கைவிட்ட செல்வாவின் அம்மா; அம்மாவுக்கு சொந்தமான நிலத்தில் அலையும் ஆவிகள் என்று கதை போகிறது. படிக்கலாம். குறிப்பாக மதுரையில் எம்ஜிஆர் ஒரு ஊனமுற்ற பெண் வீட்டுக்குப் போய் பசும்பால் குடித்த காட்சிகள் நன்றாக வந்திருக்கின்றன.

ஆயிரம் கண்ணி: ஒரு சின்ன neighborhood. அங்கே ஆயிரம் கண்ணி அம்மனின் கோவில். கோவிலில் கும்பிடுபவர்கள் நன்றாக இருக்கிறார்கள். இதெல்லாம் ஒரு கதை என்று எழுதுகிறார்.

அருகம்புல்: ஆவியாக இருக்கும் ஒரு அம்மா இன்று வீடு கட்டும்/இடிக்கும் இருவரை சேர்த்து வைக்கிறாள். தவிர்க்கலாம்.

அவரும் அவளும்: சீனிவாசன் ஊர் ஊராய் சுற்றுவாராம். போகிற ஊரில் எல்லாம் யாராவது வந்து வீட்டுக்குக் கூட்டிப் போய் உபசரிப்பார்களாம். இதில் ஒரு கோவில் புராணம் வேறு. வாசகர்கள் மேல் என்ன கோபமோ இவ்வளவு மோசமாய் எழுதுகிறார்.

தாசி: இந்த ஜன்மத்தில் பியூட்டி பார்லர். போன ஜன்மத்தில் தாசி. பாலகுமாரனுக்கு இந்த தாசி obsession விடாது.

எட்ட நின்று சுட்ட நிலா: பாபு ஞானி ஆகிவிடுகிறான். அவன் குடும்பத்தில் யாரும் நல்ல வழியில் போகவில்லை. அக்கா ஊர் மேய்கிறாள், அப்பா கோவில் சொத்தை திருடுகிறார்… தவிர்க்கலாம்.

பூசுமஞ்சள்: மஞ்சள் வியாபாரம் செய்து வாழும் குடும்பம் ஒன்று விட்ட அண்ணனால் ஏமாற்றப்படுகிறது. அப்பா இறக்க, அம்மா ஏறக்குறைய சூனியம் வைத்து அண்ணன் குடும்பம் அழிகிறது. இதெல்லாம் ஒரு கதையா? பாலகுமாரன் வீணாக தன் தனிப்பட்ட மத, அமானுஷ்ய நம்பிக்கைகளை பரப்புகிறார்.

புஷ்பக விமானம்: பல கதைகளை கலந்து கட்டி அவியலாக்கி கெடுத்துவிட்டார். பட்டிக்காட்டு வேளாளர் குடும்பத்திலிருந்து டாகடர் ஆகும் பையனின் கதை, வீராயி என்ற நாட்டார் தெய்வம், தலித் ஜாதியினர் ஒடுக்கப்படுதல் என்று பல கோணங்கள். தவிர்க்கலாம்.

வாலிப வேடம்: பத்மினி என்ற பெண்ணின் மேல் சமயபுரம் மாரியம்மன் வருகிறாள். அதனால் முரளி என்ற, எம்.எஸ். சுவாமிநாதனிடம் வேலை செய்யும் ஒரு வாலிபனின் வாழ்க்கை மாறுகிறது. திருமங்கலக்குடி என் ஒன்று விட்ட சித்தியின் ஊர். சித்தி கல்யாணத்துக்கு சிறு வயதில் அங்கே போயிருக்கிறேன். இந்த கதையின் தளம் அந்த ஊர்தான். நாஸ்டால்ஜியா! தவிர்க்கலாம்.

தேடிக் கண்டுகொண்டேன் என்ற அபுனைவையும் பற்றி இங்கேயே எழுதிவிடுகிறேன். பல ஊர் கோவில்கள் பற்றி எழுதி இருக்கிறார்.

சுருக்கமாகச் சொன்னால் தொன்மம், மகான், இதிகாசம், அதிசய நிகழ்ச்சிகள் பற்றிய பாலகுமாரன் கதை என்றால் தவிர்த்துவிடுங்கள் – என்னருகே நீ இருந்தால் தவிர.

தொகுக்கப்பட்ட பக்கம்: பாலகுமாரன் பக்கம்