ஜெயகாந்தன்: பிரம்மோபதேசம்

ஜெயகாந்தனின் புனைவுகள் சென்ற தலைமுறையில் பெரும் கேள்விகளை எழுப்பி இருக்கும். “பழைய” மரபார்ந்த விழுமியங்களும் அன்றைய நவீன விழுமியங்களும் சந்திக்கும் இடம் ஒவ்வொன்றும் அவருக்கு யுகசந்தியாகத் தெரிந்திருக்கிறது. அதை காத்திரமான எழுத்தின் மூலம் விவரித்திருக்கிறார். “கெட்டுப் போனவள்” தலையில் தண்ணீர் ஊற்றி அவளை புனிதமாக்குவது என் அம்மா தலைமுறையினருக்கு அதிர்ச்சியாக இருந்திருக்கும், நினைத்து நினைத்து பேசுபொருளாக இருந்திருக்கும். என் தலைமுறையினருக்கு அது நன்றாகவே புரிந்திருக்கும், ஆனால் அதிர்ச்சி குறைவாகத்தான் இருந்திருக்கும். ஆனால் என் 19 வயதுப் பெண்ணிடம் சில நேரங்களில் சில மனிதர்கள் கதையைச் சொன்னால் ஏதோ ஒரு நாள் யாரோடோ படுத்தாளாம், அவள் வாழ்க்கையே தடம் புரண்டுவிட்டதாம் வாட் நான்சென்ஸ் என்றுதான் சொல்லுவாள். “கெட்டுப் போனவள்” என்றால் என்ன என்று அவளுக்கு சரியாகப் புரியுமா என்பதே சந்தேகம்.

யுகசந்தி சிறுகதையின் பாட்டி அன்று நாயகி, புதுமைப்பெண்; இன்று சாதாரணப் பெண்! நாடகம் பார்த்த நடிகையின் கணவன் அன்று ஆயிரத்தில் ஒரு அபூர்வக் கனவான் (gentleman). இன்று ஆயிரத்தோடு ஆயிரத்தொருவன் மட்டுமே. அவருக்கு பெரும் பிரச்சினைகளாத் தெரிந்தவற்றில் பல இன்று சுலபமாகக் கடக்கக் கூடியவை. அவருக்கு பெரும் அகச்சிக்கல்களாகத் தெரிந்தவை பொருளிழந்து கொண்டே போகின்றன.
அவற்றில் மிஞ்சி இருப்பது எழுத்தின் காத்திரம் மட்டுமே, அதை உணர முடியாவிட்டால் விரைவிலேயே காலாவாதி ஆகிவிடுமோ என்று இன்று தோன்றுகிறது. இன்று சில நேரங்களில் சில மனிதர்கள் ஒரு கிளாசிக். இன்னும் ஐம்பது வருஷங்கள் கழித்து? பிரதாப முதலியார் சரித்திரம் போல வெறும் ஆவண முக்கியத்துவம் உள்ள படைப்பாக குறைந்துவிடுமோ என்று கொஞ்சம் அச்சமாகத்தான் இருக்கிறது.

பிரம்மோபதேசம் அந்த வரிசையில் உள்ள ஒரு சிறுகதை/குறுநாவல். தூய பிராமணரான சர்மா; வயிற்றுப் பிழைப்புக்காக சமையல் வேலை பார்த்தாலும் மரபார்ந்த ஞானம் உள்ளவர். வடமொழி, தமிழ் இரண்டிலும் பாண்டித்தியம் உள்ளவர். மனுஸ்மிரிதியை கரைத்துக் குடித்தவர், குறிப்பாக பிராமணனின் கடமைகள் பற்றி அதில் உள்ளதை அதை பூரணமாக நம்புபவர். தன் 19 வயது மகள் மைத்ரேயிக்கு உண்மையான பிராமணனான ஒரு மாப்பிள்ளையைத் தேடுகிறார், அது அறுபதுகளிலேயே கிடைப்பது மகா கஷ்டம்.

பிராமணாகப் பிறந்த சேஷாத்ரி சர்மாவின் சமையல் குழுவில் சேர்கிறான். சேஷாத்ரி நாஸ்திகன்; கம்யூனிஸ்ட். சர்மாவுக்கு அவன் பிராமணன் இல்லை, அவரைப் பொறுத்த வரை எந்த நாஸ்திகனும் பிராமணனாக இருக்க முடியாது. ஆனால் சேஷாத்ரியை பிராமணனாக மதிக்காவிட்டாலும் மனிதனாக மதிக்கிறார், மாற்றுக் கருத்து உள்ளவன் என்பதை ஏற்கிறார், இருவருக்கும் பரஸ்பர மரியாதை இருக்கிறது.

சர்மா ஒரு ஓதுவார் பையனை – சதானந்தன் – சந்திக்கிறார். சதானந்தன் சர்மாவைப் போலவே மரபார்ந்த விழுமியங்களில் முழு நம்பிக்கை உள்ளவன். சமஸ்கிருதம் அறியான், ஆனால் தமிழில் பாண்டித்தியம் உள்ளவன். சர்மாவின் கண்ணில் ஓதுவார் குடும்பத்தில் பிறந்த பிராமணன்.

சேஷாத்ரிக்கும் மைத்ரேயிக்கும் காதல் ஏற்படுகிறது. சர்மாவால் அதை ஏற்க முடியவில்லை. மைத்ரேயிக்கும் அவர் பிராமணன் என்று மதிக்காத சேஷாத்ரி மேல் காதல் என்று தெரிகிறது. அவருக்கு துளியும் இஷடமில்லை. ஆனால் மனுஸ்மிருதியில் பருவம் வநது 3 ஆண்டுகளுக்குள் மணம் செய்து வைக்காவிடில் பெண் யாரை தேர்ந்தெடுக்கிறாளோ அவளை பெற்றோர் மறுக்கக் கூடாது என்று இருக்கிறதாம். சேஷாத்ரி அதைக் காட்டியே சர்மாவை மடக்குகிறான். சர்மா மறுக்கவில்லை, ஆனால் மைத்ரேயியை முற்றாக விலக்குகிறார். அதே நேரத்தில் சதானந்தனுக்கு பிரம்மோபதேசம் செய்து – பூணூல் போட்டு – அவனை பிராமணனாக மாற்றுகிறார்.

சர்மாவின் பாத்திரப் படைப்பு பிரமாதம். ஜெயகாந்தனை பிராமணன் என்ற archetype பெரிதும் கவர்ந்திருக்கிறது. இந்தப் புனைவில் மட்டுமல்ல, ஜெயஜெய சங்கர, நான் என்ன சேயட்டும் சொல்லுங்கோ ஆகியவற்றிலும் இந்த archetype-ஐ அற்புதமாகக் கண் முன் கொண்டு வருகிறார். திறமை குறைந்த எழுத்தாளர் கையில் சேஷாத்ரி பாத்திரம் வெறும் ஸ்டீரியோடைப் ஆகி இருக்கலாம். ஆனால் மிக இயல்பான சித்திரமாக கொண்டு வருகிறார். சர்மாவின் விழுமியங்களை ஏறக்குறைய முழுமையாக நிராகரிக்கும் என் போன்றவர்களுக்கே சர்மாவின் கோணம் புரிகிறது, அவர் மேல் மதிப்பும் மரியாதையும் வருகிறது. மிக அருமையாக எழுதப்பட்ட கதை. வேறென்ன சொல்ல?

காலாவதி ஆகிவிட்டதோ, ஆகப் போகிறதோ எனக்கென்ன அக்கறை? என் கண்ணில் இது ஜெயகாந்தனின் சாதனைகளில் ஒன்று. படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஜெயகாந்தன் பக்கம்