2017 பத்மபூஷன், பத்மஸ்ரீ விருதுகள்

இந்த வருஷம் வெகு சில புனைவெழுத்தாளர்கள்/கவிஞர்களுக்கே – நரேந்திர கோலி (ஹிந்தி), அக்கிதம் அச்சுதன் நம்பூதிரி (மலையாளம்), எலி அஹமத் (அஸ்ஸாமிய மொழி), பிர்கா பஹதூர் லிம்பு முரிங்லா (சிக்கிமில் பேசப்படும் லிம்பூ மொழி) பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. அசோகமித்ரன், கி.ரா. இவர்களெல்லாம் எப்போதுதான் அங்கீகாரம் பெறப் போகிறார்களோ!

இலக்கியத்துக்காக சோ ராமசாமிக்கு பத்மபூஷன் விருது தரப்பட்டிருக்கிறது. சோ என் கண்ணில் நாடக இலக்கியம் படைத்தவர்தான், பத்மபூஷன் விருதுக்கு தகுதியானவர்தான். ஆனால் இலக்கியத்துக்காக என்று கொடுத்திருப்பது அவரது எழுத்துக்களின் இலக்கியத் தரத்தை மிக அதிகமாக மதிப்பிடுவது. பத்திரிகையாளர் என்று ஒரு category இல்லை போலிருக்கிறது.  கடைசி பதினைந்து சொச்சம் வருஷங்களில் அவரது நடுநிலை தவறிவிட்டாலும், அவரது பல கருத்துக்கள் – குறிப்பாக பெண்கள் பற்றிய கருத்துக்கள் எனக்கு இசைவானவை இல்லை என்றாலும் இது சரியான விருதுதான். அவருடைய நடுநிலை பிசகியதால்தான் இந்த விருது கிடைத்திருக்கிறது என்பதுதான் நகைமுரண்.

தமிழகத்திலிருந்து மிஷல் டானினோவுக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்திருக்கிறது. எனக்குத் தெரிந்து டானினோ ஒரே ஒரு புத்தகத்தைத்தான் பண்டைய இந்தியா பற்றி சில அபுனைவுகளை எழுதி இருக்கிறார். Lost River: On the Trail of Saraswati (2010) என்ற புத்தகத்தைப் பற்றி அரவிந்தன் நீலகண்டன் எழுதிய குறிப்பை இங்கே படிக்கலாம். நண்பர் ரெங்கசுப்ரமணி எழுதிய அறிமுகம் இங்கே. அவரது எழுத்துக்கு ஒரு உதாரணமாக ஜெயமோகன் தளத்தில் இந்தக் கட்டுரையைப் (பகுதி 1, பகுதி 2) படிக்கலாம்.

ஹிந்தியின் பிரபல எழுத்தாளர் நரேந்திர கோலிக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்திருக்கிறது. மொழிபெயர்ப்புகள் எதுவும் (எனக்குத் தெரிந்து) இல்லை என்றாலும், ஹிந்தியை எழுத்துக் கூட்டி படிக்கவே தடுமாறும் நானே இவர் பேரை கேட்டிருக்கிறேன்.

அக்கிதம் அச்சுதன் நம்பூதிரி மலையாளக் கவிஞராம். சாஹித்ய அகாடமி விருது பெற்றவர்.

பிர்கா பஹதூர் லிம்பு முரிங்லா சிக்கிமில் பேசப்படும் மொழியான லிம்பூ எழுத்தாளர்.

எலி அஹமத் அஸ்ஸாமிய மொழி எழுத்தாளர், கவிஞர்.

ஜி. வெங்கடசுப்பையா கன்னடத்தில் அகராதியைத் தொகுத்திருக்கிறார். மேலும் பல இலக்கிய விமர்சன நூல்களை எழுதி இருக்கிறார்.

விஷ்ணு பாண்டியா குஜராத்தி பத்திரிகையாளர், எழுத்தாளர். பல அபுனைவுகளை எழுதி இருக்கிறார்.

தொகுக்கப்பட்ட பக்கம்: விருதுகள்

சோ ராமசாமி – ஒரு மதிப்பீடு

(விரிவுபடுத்தப்பட்ட மீள்பதிப்பு)

பல்லாண்டு பல்லாண்டு பல கோடி நூறாண்டு பல்லாயிரத்தாயிரம்!

ChoRamaswamyசோவுக்கு பல முகங்கள் உண்டு. வக்கீல், நாடக ஆசிரியர், நாடக, திரைப்பட நடிகர், திரைப்படக் கதாசிரியர், அரசியல் இதழியலாளர் என்று.

thuglaqஎன்னைப் பொறுத்த வரை அவரது அதிமுக்கியமான முகம் இதழியல் முகம்தான். துக்ளக் நடத்த முதல் ஐந்து ஆறு வருஷங்களாவது மிகுந்த துணிச்சல் வேண்டும். அந்தக் காலகட்டத்தில் முதல்வராக இருந்த கருணாநிதி அவருக்கு பல நெருக்கடிகளை ஏற்படுத்தினார். நெருக்கடி நிலையின் போது அவர் ஜெயிலுக்கு போய் அடி வாங்காதது எப்படி என்று ஆச்சரியமாக இருக்கிறது. He made Thuglaq an institution! நல்ல உதவி ஆசிரியர்கள் இருந்தும் அவருக்கு பிறகு துக்ளக் வராது என்று நினைக்கிறேன், வருத்தமாக இருக்கிறது.

துக்ளக் 45 ஆண்டுகளாக வெளிவருகிறது என்று நினைக்கிறேன். குறைந்தது முப்பது வருஷமாவது அது இளைஞர்களுக்கு அரசியலை அறிமுகம் செய்து வைத்திருக்கிறது. தமிழகத்தின் முக்கியமான அரசியல் குரலாக இருந்திருக்கிறது. தனக்கென்று ஒரு value system, அந்த விழுமியங்களை வைத்து அரசியலை, அரசியல் தலைவர்களை கறாராக எடை போட்டிருக்கிறது.

தனக்கு தனிப்பட்ட முறையில் நண்பர் என்று தயவு தாட்சணியம் பார்த்ததில்லை. (‘பாபர்’ மசூதி இடிக்கப்பட்டபோது துக்ளக்கின் அட்டைப்படம் வெறும் கறுப்பு அட்டை. அத்வானி மீது இருந்த மதிப்பு மரியாதையால் அவர் ஜகா வாங்கிவிடவில்லை.) தனக்கு நஷ்டம் வரும் என்று போகும் பாதையை மாற்றிக் கொண்டதில்லை. (அறுபதுகளின் கடைசி ஓரிரு ஆண்டுகளில் எம்ஜிஆர் படங்களில் நாகேஷின் இடத்திற்கு சோ வந்துவிட்டார். துக்ளக் ஆரம்பிக்கப்பட்டபோது எம்ஜிஆர் இவரை பத்திரிகை எல்லாம் வேண்டாமே என்று சொல்லிப் பார்த்திருக்கிறார். இவர் கேட்கும் ஜாதி இல்லையே! அதற்குப் பிறகு ஒரு எம்ஜிஆர் படத்தில் கூட சோ நடித்ததில்லை) தன் கருத்துக்களுக்கு எத்தனை தூரம் மக்களிடம் எதிர்ப்பு இருக்கும் என்பது அவரது நிலைப்பாடுகளை மாற்றியதே இல்லை. எண்பதுகளில் பிரபாகரனையும் புலிகளையும் எதிர்த்துப் பேசிய ஒரே குரல் அவருடையதுதான். இவ்வளவு ஏன், அடி விழுமோ என்று கூட அஞ்சியதும் இல்லை. மிசா காலத்தில் மொரார்ஜிக்கும் ஜெயப்பிரகாஷ் நாராயணுக்குமே ஜெயில், கருணாநிதி பையன் என்ற ஒரே காரணத்தால் ஸ்டாலினுக்கு அடி-உதை, எம்.பி.யாக இருந்த சிட்டிபாபு அடி வாங்கியே செத்தார் என்பதெல்லாம்ம் தெரிந்திருந்தும் அடக்கி வாசிக்க மறுத்தார். மிசாவை எதிர்த்து குரல் கொடுத்ததுதான் அவரது இதழியல் வாழ்வின் உச்சம்.

துக்ளக்கில் அவரது கேள்வி-பதில் கடைசி வரை விரும்பிப் படிக்கப்பட்டது. ஒண்ணரை பக்க நாளேடு மிகவும் பாப்புலர்.

அரசியல் விளைவுகளை அனேகமாக ஊகித்துவிடுவார். அரசியலில் ஒரு தீர்க்கதரிசி என்றே சொல்லலாம். புலிகளை பற்றி எண்பதுகளில் குறை சொன்ன ஒரே பத்திரிகையாளர் அவர்தான். புலிகள் ராஜீவ்-ஜெயவர்த்தனே உடன்பாட்டை நிறைவேற விடமாட்டார்கள் என்று சரியாக கணித்தார். வி.பி. சிங்கை ஆதரிப்பது ஜனதாவுக்கு தற்கொலைக்கு சமமானது என்று அவர் கணித்தது சரியாக அமைந்தது. சரண் சிங், ராஜ் நாராயண் ஆகியோர் மொரரஜியின் முதுகில் குத்தக்கூடும் என்று சந்தேகப்பட்டார். அப்படியே ஆயிற்று. ஆனைக்கும் அடி சறுக்கும் என்பது மாதிரி 2004 நாடாளுமன்றத் தேர்தலில் ஜெ வெல்வார் என்று சொன்னது மட்டும் தவறாகிவிட்டது.

அவரது கருத்துக்கள் மாறுவதே இல்லை. காமராஜின் ஆட்சி பொற்காலம், மொரார்ஜி, சந்திரசேகர் போன்றவர்கள் அப்பழுக்கில்லாதவர்கள், வி.பி. சிங் ஒரு துரோகி, பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். ஆகியோரை செலுத்துவது தேச பக்தியே, பெண் சுதந்திரம் என்பது பம்மாத்து, நரேந்திர மோடிதான் இன்றைய இந்தியாவின் சிறந்த தலைவர், புலிகள் அயோக்கியர்கள் இந்த மாதிரி பல. இவற்றை எப்போதும் மறுபரீசீலனை செய்யமாட்டார், வறட்டுப் பிடிவாதம் தெரியும். ஆனால் நேர்மையாகவே நல்ல நகைச்சுவையுடன் தன் அபிப்ராயங்களை வெளிப்படுத்துவார், இதை வெளியே சொன்னால் நம்மை பிற்போக்கு என்பார்கள் என்பதெல்லாம் அவருக்கு ஒரு பொருட்டே அல்ல.

ஆனால் கடைசி பத்து பதினைந்து வருஷத்தில் அவரது நடுநிலைமை போய்விட்டது. நடுநிலை என்றால் எல்லா அரசியல் நிகழ்வுகளையும் ஒரே value system வைத்து பார்த்தார். அதனால் எம்ஜிஆர், கலைஞர், இந்திரா, ஜனதா கட்சி ஒருவரையும் விட்டதில்லை. மொரார்ஜி, காமராஜ் மீது அவருக்கு பெரும் மரியாதை இருந்தது, ஆனால் அவர்களது குறைகளையும் சொல்லுவார்.

என் கணிப்பில் என்று அவர் பா.ஜ.க. மத்தியில் அரசை அமைக்கக் கூடும் என்று உணர்ந்தாரோ அன்றிலிருந்து மெதுமெதுவாக ஒரு பக்கமாக சாயத் தொடங்கினார். ஒரு முறை சபாநாயகர் என்பவர் ஆளும் கட்சி தரப்பில் இருக்கும் நியாயங்களை எடுத்துச் சொல்பவர் என்று வரையறுத்திருந்தார். அதைப் போல இவரும் பா.ஜ.க. தரப்பில் இருக்கும் நியாயங்களை எடுத்துச் சொல்பவராக மாறத் தொடங்கினார். ஜெயலலிதாவின் ஊழல், குஜராத் கலவரங்கள் போன்றவை மோடியின் தனிப்பட்ட நேர்மை, வளர்ச்சித் திட்டங்கள், கருணாநிதியின் புலிகள் ஆதரவு போன்றவற்றை விட அவருக்கு மிகச் சிறிதாகத் தெரியத் தொடங்கின. கலைஞர் ஆட்சிக்கு வந்தால் புலிகளுக்கு ஆதரவு மறைமுகமாக தரப்படும், அது இந்தியாவுக்கு ஆபத்து என்று அவர் உறுதியாக நம்பினார். கலைஞருக்கு புலிகளை விட, தமிழர்களை விட பதவி முக்கியம் என்பது அவருக்கு புரியவில்லை. அதனால் ஜெ போன்ற ஒரு மோசமான சர்வாதிகாரி மேல் அவருக்கு ஒரு soft corner இருந்தது. எழுபது-எண்பதுகளின் சோவுக்கு அப்படித் தெரிய வாய்ப்பே இல்லை.

நான் முதன்முதலாக வந்த பிரதியிலிருந்து கடைசிப் பிரதி வரை படிக்க வேண்டும் என்று விரும்பும் பத்திரிகைகள் இரண்டுதான். ஒன்று துக்ளக், இன்னொன்று சுபமங்களா.

அவரது இரண்டாவது முக்கிய முகமாக நான் கருதுவது அவரது எழுத்தாளர்/நாடக ஆசிரியர் முகம்தான். அவரது நாடகங்களின் ஃபார்முலா ரொம்ப சிம்பிள். ஏதாவது ஒரு பிரச்சினை – ஜாதி, விபசாரம், உண்மை vs. பணபலம், லஞ்சம் என்று ஏதாவது ஒரு விஷயம் – அதை சுற்றி நிறைய அன்றைய அரசியல் பற்றிய அடிவெட்டுகள், கெக்கே பிக்கே ஜோக்குகள் இவற்றை வைத்து ஒரு நாடகம் பின்னி விடுவார்.

அவர் ஷேக்ஸ்பியரோ, இப்சனோ இல்லை. எழுத ரொம்ப அலட்டிக் கொள்வதில்லை. சமூகப் பிரச்சினைகளை கருவாக வைத்து எழுதினாலும் சிரிக்க வைப்பதுதான் அவரது எழுத்துக்களின் முக்கிய நோக்கம் என்று தோன்றுகிறது. அதனால் நாடகங்களில் தனக்கென்று ஒரு கோமாளி பாத்திரத்தை படைத்துக் கொள்வார். சாத்திரம் சொன்னதில்லை போன்ற நல்ல நாடகங்களில் கூட இந்தக் கோமாளி பாத்திரம் செயற்கையாக புகுத்தப்பட்டிருப்பது உறுத்தும். அந்தக் கோமாளி பாத்திரங்களைத் தவிர்த்திருந்தால் பல நாடகங்கள் இன்னும் மிளிர்ந்திருக்கும். ஆனால் அவரது நாடகங்கள் நடத்தப்பட்ட அவரது பெருவெற்றிக்குக் காரணமே அந்த கோமாளி பாத்திரங்கள்தான்.

அவரது நாடகங்கள் சென்னை சபா வட்டங்களில் எனது பதின்ம வயதில் வெகு பிரபலமாக இருந்தன. ஆனால் அவரது நாடகங்களை நான் பார்த்ததை விட படித்ததுதான் அதிகம். வந்தேமாதரம் பார்த்த நினைவிருக்கிறது. நேர்மை உறங்கும் நேரம் பார்த்து விழுந்து விழுந்து சிரித்த நினைவிருக்கிறது. தொலைக்காட்சியில் மெட்ராஸ் பை நைட் என்று ஒரு நாடகம் பார்த்து ரசித்தது நினைவிருக்கிறது.

சில சமயம் Pygmalion (மனம் ஒரு குரங்கு), Tale of Two Cities (வந்தேமாதரம்) போன்ற புகழ் பெற்ற இலக்கியங்களை தழுவியும் நாடகங்களை எழுதி இருக்கிறார். சில சமயம் கதையே இல்லாமல் சும்மா அரசியல் அடிவெட்டுகளை வைத்து வாஷிங்டனில் நல்லதம்பி, கூவம் நதிக் கரையினிலே, சர்க்கார் புகுந்த வீடு, என்று தணியும் இந்த சுதந்திர தாகம் போன்ற நாவல்கள்/நாடகங்களை எழுதி இருக்கிறார்.

சில சமயங்களில் நாடகம் அருமையாக வந்து விழுவதும் உண்டு. அவரது நாடகங்களில் நல்ல கதை அமைவது கஷ்டம்தான், ஆனாலும் தமிழின் சிறந்த நாடக ஆசிரியர்களில் அவரும் ஒருவர். என் கண்ணில் சாத்திரம் சொன்னதில்லை, முஹம்மது பின் துக்ளக், உண்மையே உன் விலை என்ன, யாருக்கும் வெட்கமில்லை ஆகிய நாடகங்களும் சர்க்கார் புகுந்த வீடு, கூவம் நதிக் கரையினிலே ஆகிய நாவல்களும் இலக்கியமே. அவசியம் படிக்க வேண்டியவை. இந்த நாடகங்களில்தான் கோர்வையான கதை இருக்கும்.

அவரை கிரேக்க நாடக ஆசிரியரான அரிஸ்டோஃபனசுடன் ஒப்பிடலாம். சமகாலத்து அரசியல், சமூகம் பற்றிய கமெண்ட்கள்தான் அவருடைய ஸ்பெஷாலிடி. ஏறக்குறைய எம்.ஆர். ராதா பாணியில் நக்கல் அடிப்பார். அரிஸ்டோஃபனஸ், சோ இருவரிடமும் ஒரே பிரச்சினைதான். அந்த கால கட்டத்தில் வாசிக்காதவர்களுக்கு அவர் எதை கிண்டல் செய்கிறார் என்று புரிவது கஷ்டம். அரிஸ்டோஃபனஸ் அன்றைய கிரேக்க அரசியல்வாதியான க்ளியானை கிண்டல் செய்வதை நாம் இன்று எப்படி முழுதாக புரிந்து கொள்ள முடியும்? சோவுக்கு உதாரணமாக ஒன்று – சர்க்கார் புகுந்த வீடு என்ற நாவலில் வரும் முக்கிய பாத்திரங்களான ரகுநாத ஐயர், கந்தசாமி இருவருக்கும் மளிகைக் கடையிலும் பால்காரரிடமும் கடன் தொந்தரவு. அவர்கள் அன்றைய விவசாயிகள் சங்கத் தலைவர் நாராயணசாமி நாயுடுவிடம் ஆலோசனை கேட்கப் போவார்கள். அவர் “பொதுவா வாங்கின கடனை திருப்பி கொடுக்கக் கூடாது என்பதுதான் நம்ம கொள்கை” என்பார். இதற்கு நீங்கள் சிரித்தீர்கள் என்றால் எண்பதுகளில் நாயுடு நடத்திய போராட்டங்கள் உங்களுக்கு நினைவிருக்கிறது என்று அர்த்தம்.

சோ இலக்கியம் படைத்திருக்கிறார் என்று கருதும் தமிழ் வாசகன் அனேகமாக நான் ஒருவன்தான். அரிஸ்டோஃப்னஸ் க்ளாசிக் எழுத்தாளராகக் கருதப்படும்போது அவருக்கு எந்த விதத்திலும் குறையாத சோ மீது என்ன இளக்காரம் என்று எனக்குப் புரிவதில்லை. ஒரு வேளை அரிஸ்டோஃபனஸ் 2500 வருஷங்களுக்கு முன்பு எழுதி இருக்காவிட்டால் அவரது நாடகங்களையும் இலக்கியம் என்று கருத மாட்டார்களோ என்னவோ.

சோவின் முக்கியமான மூன்றாவது முகம் அவரது அரசியல் முகம். அவரோடு தனிப்பட்ட முறையில் நட்பு பாராட்டாத தலைவரே இல்லை என்று சொல்லலாம். அதனால் தலைவர்களுக்கு நடுவே பாலமாக அவ்வப்போது இருந்திருக்கிறார். ஜெயலலிதாவுக்கு திட்டம் வகுத்துக் கொடுத்தவர் என்பது ஊருக்கே தெரிந்ததுதான். போன தேர்தலில் ஜெ-விஜயகாந்த் கூட்டணிக்கு அச்சாரம் போட்டவர் இவர்தான். கருணாநிதி-மூப்பனார்-ரஜினிகாந்த ஓரணியாகத் திரள அஸ்திவாரம் போட்டதும் தெரிந்த விஷயமே. மொரார்ஜி காலத்தில் சரண்சிங் ஜனதாவை விட்டு விலகியபோது எம்ஜிஆர் மொரார்ஜிக்கு ஆதரவாக இருந்தார், அதற்கும் இவர்தான் மூலகாரணம். (மொரார்ஜி பதவி விலகியதும் எம்ஜிஆரும் சரண்சிங்குக்கு ஆதரவாக கட்சி மாறிவிட்டார்) அதற்கும் முன்னால் காங்கிரஸ் அனுதாபி. காமராஜ் காலத்தில் காங்கிரஸின் பிரச்சார நட்சத்திரங்களில் ஒருவர். (சிவாஜி, ஜெயகாந்தன், நா.பா. பிற நட்சத்திரங்கள்)

சினிமா உலகத்திலும் ஓரளவு வெற்றி பெற்றார். தனது நாடகங்களை திரைப்படமாக எடுத்தார், நாடகம் மாதிரியேதான் இருக்கும். புகழ் பெற்ற துக்ளக், மற்றும் யாருக்கும் வெட்கமில்லை, உண்மையே உன் விலை என்ன ஆகியவை ஓரளவு வெற்றியும் பெற்றன. மனம் ஒரு குரங்கும் திரைப்படமாக வந்தது. நான் பார்க்க விரும்புவது மிஸ்டர் சம்பத். ஆனால் பிரிண்டே இல்லையாம்.

அவர் அவ்வளவு நல்ல நடிகர் அல்லர். அவர் நன்றாக நடித்ததாக எனக்கு ஒரு நாடகம்/திரைப்படம் கூட நினைவில்லை. அவரது காமெடியும் வெகு சில படங்களிலேயே சோபித்தது. (வா வாத்யாரே ஊட்டாண்டே இடம் பெற்ற பொம்மலாட்டம், தேன் மழை) அரசியல் கலந்த காமெடி சில படங்களில் நன்றாக வந்தது (துக்ளக், அன்னபூரணி). எல்லா திரைப்படத்திலும் ஒரே ரோல்தான், சும்மா முட்டைக் கண்ணை வைத்து முழித்து முழித்துப் பார்ப்பார். ஆனால் கொஞ்ச நாள் அவர்தான் டாப் காமெடியன் ஆக இருந்தார். பொம்மலாட்டம் தவிர நீலகிரி எக்ஸ்ப்ரஸ், ஆயிரம் பொய், நிறைகுடம், நினைவில் நின்றவள் ஆகிய படங்களுக்கு திரைக்கதையும் எழுதினார். நிறைகுடத்தில் நல்ல ஓ.ஹென்றி ட்விஸ்ட் வைத்திருப்பார். வந்தாளே மகராசி படத்தில் அவருக்கு ஜோடி ஜெயலலிதா!

வக்கீலாக அவர் வெற்றி பெற்றாரா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது.

மொத்தத்தில் அவர் ஒரு நல்ல நாடக ஆசிரியர். தமிழில் நல்ல நாடக ஆசிரியர்கள் அபூர்வம். அதனால் அவரது நாடக பங்களிப்பு மிக பெரியதாக தெரிகிறது. அவரது நகைச்சுவை அற்புதமானது. கிட்டத்தட்ட முப்பது வருஷங்கள் அவர் அரசியல், சமூகம் பற்றி பட்டையை கிளப்பும் நடுநிலையான கமெண்ட்களை போட்டு தாக்கி இருக்கிறார். தான் நினைப்பதுதான் சரி என்று பிடிவாத குணமும், குதர்க்கம் பேசும் புத்தியும் அவருடைய குறைகள்தாம். அவர் நல்ல நடிகர் இல்லை. நகைச்சுவைக்காகவும், ஒரு நாடக ஆசிரியராகவும், தைரியமான, ஆனால் கடைசி நாட்களில் ஒரு பக்கம் சாய்ந்து விட்ட இதழியலாளர்/அரசியல் விமர்சகராகவும், நினைவு கூரப்பட வேண்டியவர்.

தொகுக்கப்பட்ட பக்கம்: அஞ்சலிகள்

தொடர்புடைய சுட்டிகள்:
துக்ளக் உதவி ஆசிரியர்கள்
தமிழ் நாடகங்கள்
நானும் நாடகங்களும்
சாத்திரம் சொன்னதில்லை
சர்க்கார் புகுந்த வீடு

துக்ளக்

thuglaqதமிழ் பத்திரிகைகளில் ஒவ்வொரு இதழையும் படிக்க வேண்டும் என்று நான் விரும்பியது/விரும்புவது இரண்டே இரண்டு பத்திரிகைகள்தான். ஒன்று துக்ளக், இன்னொன்று சுபமங்களா. துக்ளக்கின் 45 கால வாழ்க்கையின் ஒவ்வொரு இதழும் ஆவணப்படுத்தப்பட வேண்டிய ஒன்று.

சோChoRamaswamy தனியாக தன் தோளில் சுமக்கும் பத்திரிகைதான் என்றாலும் துக்ளக் உதவி ஆசிரியர்கள் இல்லாத பத்திரிகை இல்லை. ஆனால் துக்ளக் குழுவில் சத்யா, துர்வாசர் என்ற பேரில் எழுதும் வண்ணநிலவன்/ராமச்சந்திரன் ஆகிய இருவர் பேர்தான் வெளியில் கொஞ்சமாவது தெரிகிறது. மற்றவர்கள் பேர் எதுவும் தெரிவதில்லை. சோ ‘எழுதிய’ சமீபத்திய புத்தகம் – ‘ஒசாமஅசா‘, எழுத்தும் தொகுப்பும்: மணா – ஒன்றில் அவரது குழுவினரைப் பற்றிய தகவல்கள் கிடைக்கின்றன. புத்தகத்தைப் படிக்க ஆசையாக இருக்கிறது.

முழு கட்டுரையை இங்கே படிக்கலாம். துணை ஆசிரியர்களைப் பற்றிய பகுதி மட்டும் வசதிக்காக கீழே.

மதலை: துக்ளக்கைத் துவங்கியதில் இருந்து என்னுடன் தொடர்ந்து பணியாற்றுகிறவர். மிகவும் பொறுமையானவர். வாழைப்பழத்தையும், வெண்டைக்காயையும் சேர்த்துப் பிசைந்து, விளக்கெண்ணெயில் தோய்த்து எடுத்து உருவாக்கிய கருத்துகள் இவரிடமிருந்து வரும். கல்லில் இருந்து நார் உரித்துவிடலாம். மதலையிடம் இருந்து ஒரு அபிப்பிராயத்தை வாங்கிவிட முடியாது.

சத்யா: நகைச்சுவைப் பிரியர். ஒரு மரணத்திற்கு அனுதாபச் செய்தி எழுதுவது என்றால், அதைக்கூட கொஞ்சம் தமாஷாக எழுதலாமே என்று சொல்பவர். விற்பனைக்கு எந்தக் கருத்து உதவுமோ, அதைச் சொல்வதுதான் பத்திரிகை தர்மம் என்று நம்புகிறவர்.

ரமேஷ்: தான் சொன்னதுதான் சரி என்ற பிடிவாதம் இல்லாதவர். ஏனென்றால் இன்று சொன்னதை நாளை மாற்றிவிடுவார். அதோடு மட்டுமல்ல; ‘நான் அப்படிச் சொல்லவே இல்லை’ என்றும் அடித்துப் பேசுவார். சர்வக் கட்சி அரசியல்வாதிகளிடமும் நல்ல பழக்கம் உண்டு. அவர்களுடைய அத்தனை குண விசேஷங்களும் சகவாச தோஷத்தினால் இவருக்கும் வந்துவிட்டது. அதனால் கொள்கை என்ற வறட்டுப் பிடிவாதம் எல்லாம் கிடையாது.

மணா: ஆரம்பக் காலத்தில் இவர் ‘லக்ஷ்மணன்’ என்ற இயற்பெயரிலேயே துக்ளக்கில் எழுதிக் கொண்டிருந்தார். தமிழ் ஆர்வம் மிக்கவர். அதனால் இலங்கைத் தமிழ், இந்தியத் தமிழ், சென்னைத் தமிழ் என்று தமிழுக்குப் பின்னாலும் மறைந்து கொண்டிருப்பார். இவர் இலக்கியத் தமிழுடன் கொண்டிருக்கும் நெருக்கத்தினால் தமிழை வெறித்தனமாகக் கொண்டாடிக் கொண்டு, அதன் காரணமாகச் சிக்கல்களைத் தோற்றுவிப்பவர்களுடன் இவருக்கு நெருங்கிய உறவு இருக்கும். அதை நாம் தவறாக எடுத்துக் கொண்டுவிடக் கூடாது. இப்போதும் கூட இந்த ‘ஒசாமஅசா’ தொடரை நான் டேப்ரிக்கார்டரில் பதிவு செய்யச் செய்ய அதை இவர் எழுத்தில் வடித்திருக்கிறார். அதில் என்னுடைய அணுகுமுறை கொஞ்சமும் பாதிக்கப்படாத விதத்தில் பார்த்துக் கொண்டு இந்தத் தொடரை முடிக்கப்போகிறார். நேர்மையானவர். நல்ல எதிர்காலம் உள்ளவர்.

ஸ்வாமிநாதன்: இவரிடம் ஒரு மிக நல்ல விஷயம் உண்டு. இவர் கருத்தினால் எந்தத் தொந்தரவும் ஏற்படாது. ஏனென்றால் இவர் என்ன சொல்கிறார் என்று யாருக்கும் புரியாது. வாயில் வெற்றிலையைக் போட்டுக்கொண்டு, “ழ்ழ்ழழ்ழ்ழழ்ழ்ழ்” என்றுதான் இவருடைய அபிப்பிராயம் எல்லாம் வெளிவரும். விவாதம் முடிந்தவுடன் என்ன கருத்து வந்தாலும் சரி, வெற்றிலையைத் துப்பிவிட்டு வந்து `நான் அதைத்தான் சொன்னேன்’ என்று கூறிவிடுவார்.

ராமச்சந்திரன்: மார்க்சிஸம், லெனினிஸம், பெண்ணியம், சுற்றுச்சூழலுக்கு மதிப்பு இப்படியெல்லாம் ஏதாவது சொல்லிக் கொண்டு சமூகத்தைத் தாங்கள்தான் முன்னிறுத்தப் போகிறோம் என்கிற கனவில் மிதப்பவர்கள் நிறையப் பேருண்டு.அந்தச் சிந்தனையில் இருந்து அவர்களை மாற்றுவது லேசான காரியமாக இருக்காது. ஆனால் அந்தச் சாதனையை நான் செய்து காட்டியிருக்கிறேன். வண்ணநிலவன் என்கிற புகழ் பெற்ற இலக்கியவாதி அவருடைய போறாத காலத்தினால் துக்ளக் ஆபீஸிற்கு வந்து சேர்ந்தார். காரசாரமாக எல்லோரிடமும் இடதுசாரித் தத்துவங்கள், முற்போக்குச் சிந்தனைகளை எல்லாம் விவாதித்துக் கொண்டிருப்பார். துக்ளக்கில் சேர்ந்த பிறகு அவற்றைப் பற்றி அவரிடம் யாராவது பேசினால் ‘உருப்படாத தத்துவங்கள்’ என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார். அந்த அளவுக்கு அவரை மாற்றிய பெருமை எனக்குண்டு. ராமச்சந்திரன் என்கிற இயற்பெயருள்ள அவருடைய தமிழ் நடையிலுள்ள வீச்சு எனக்கு மிகவும் பிடிக்கும்.

வசந்தன் பெருமாள்: இவர் எதையும் மிக அழகாகப் பார்ப்பவர். ஒரு செய்தி, பத்திரிகையில் வந்தால், அதன் பின்னணி என்ன, அதிலுள்ள உண்மை என்ன, அது எந்த அளவுக்கு நாட்டின் பொருளாதாரத்தைப் பாதிக்கும் என்பதை எல்லாம் பற்றி தீவிரமாகச் சிந்தித்து, சுயமாக சிந்தித்து அதை கட்டுரை ஆக்குவதில் வல்லவர். தவிர, நன்றாக மொழிபெயர்ப்பார். இவர் பேசுவதைக் கேட்டால், தினமும் இவர் தமிழ்நாட்டு மக்கள் அத்தனை பேரையும் சந்திக்கிறாரோ என்ற சந்தேகம் வந்துவிடும். இவர் எதைச் சொன்னாலும் `ஜனங்க எல்லோரும் இப்படித்தான் பேசிக்கிடறாங்க” என்று ஆரம்பத்திலாவது அல்லது முடிவிலாவது சொல்லிவிடுவார்.

எஸ்.ஜே. இதயா: துக்ளக்கின் தென் மாவட்டச் சிறப்பு நிருபர். தேர்தல் என்று வந்துவிட்டால் போதும். இவர் மிகவும் ஆர்வத்துடன் துள்ளிக் குதிக்க ஆரம்பித்துவிடுவார். மக்களைச் சந்தித்துக் கருத்துக்களைக் கேட்பார். திங்கட்கிழமை காலை ஃபோன் பண்ணி “சார், அ.தி.மு.க.தான் ஸ்வீப்” என்பார். அன்று இரவு ஃபோன் பண்ணி “அ.தி.மு.க.வுக்கு சான்ஸ் இல்லை” என்பார். செவ்வாய்க்கிழமை ஃபோன் பண்ணி மறுபடியும் “அ.தி.மு.க.வுக்கு ஸ்வீப்தான் சார்” என்பார். ஏன் இப்படி மாற்றி மாற்றிப் பேசுகிறீர்களே என்றால், “இருக்கும் நிலவரத்தைத்தான் சொல்கிறேன். எல்லாம் ஈக்வல் ஃபைட்டாகத்தான் இருக்கு” என்பார். அதனால் அவருக்கு ‘ஈக்வல் ஃபைட் இதயா’ என்ற பெயர் வைத்தோம். ஆனால், அவர் தருகிற அரசியல் கட்டுரைகள் நடைமுறைக்கு உகந்ததாக இருக்கும். இலங்கைக்கும், குஜராத்திற்கும் சென்று மற்ற பத்திரிகைகளில் வராத கட்டுரைகளைத் தந்திருக்கின்ற அவர், தானாகச் சிந்தித்து எழுதக் கூடியவர்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் பத்திரிகைகள்

தமிழ் நாடகங்கள்

எனக்குத் தெரிந்து தமிழ் நாடகங்களில் இலக்கியம் குறைவு. சுஜாதா, இ.பா., சோ ராமசாமியைத் தவிர்த்துப் பார்த்தால் ஜெயந்தன், ந. முத்துசாமி, மெரினா மூவரைத்தான் கணக்கிலேயே எடுத்துக் கொள்ள முடியும். போனால் போகிறது என்று அண்ணாதுரையைச் (ஓரிரவுக்காக) சேர்த்துக் கொள்ளலாம். மனோன்மணீயம் எழுதிய சுந்தரம் பிள்ளை, சங்கரதாஸ் சுவாமிகள், பம்மல் சம்பந்த முதலியார், வெ. சாமிநாத சர்மா இவர்களின் முயற்சிகள் எல்லாம் முன்னோடி முயற்சிகள் என்பதைத் தாண்டாது. இதற்கு என்ன காரணம்?

தமிழ் நாடகங்கள் என்ன தலைவிதியாலோ ஆரம்பத்திலிருந்தே மூன்று நான்கு டைப்களில் அடங்கிவிடுகின்றன. இதைத் தாண்டி நவீன நாடகம் எழுதி அதைப் பிரபலமும் ஆக்கக் கூடிய ஒரு ஆகிருதி, அதற்கு வேண்டிய பண வசதியை செய்து தரக்கூடிய புரவலர்கள் இன்னும் தமிழில் வரவில்லை என்பதுதான் எனக்கு முக்கிய காரணமாகத் தெரிகிறது.

Sankaradas Swamigalஅது என்ன வகைகள்? முதல் டைப் புராண, தொன்மக் கதைகளை திருப்பி சொல்வது. சங்கரதாஸ் சுவாமிகள், பம்மல் சம்பந்த முதலியார் போன்றவர்கள் இதில்தான் ஸ்பெஷலைஸ் செய்தார்கள். ஒரே கதையை பெரும் வேறுபாடுகள் இன்றி பலரும் நாடகமாக்குவார்கள். பாட்டை மட்டும் மாற்றினால் போதும். வி.ஏ. தியாகராஜ செட்டியார் எழுதிய பக்த பிரஹலாதா, சாவித்ரி எல்லாம் இந்த ரகம்தான். வள்ளித் திருமணம் கதையை அறியாதவர் யார்? ஆர்.எஸ். மனோகர் வரைக்கும் இது தொடர்ந்தது. மறுவாசிப்பு என்பது மிகவும் அபூர்வம். (மனோகர் தான் செய்தது மறுவாசிப்பு என்று நினைத்திருக்கலாம்.) உண்மையான மறுவாசிப்பு என்றால் இ.பா. எழுதிய நந்தன் கதை ஒன்றுதான் எனக்கு நினைவு வருகிறது.

இந்த வகை நாடகங்களில் ஒரு உட்பிரிவும் உண்டு. தமிழனின் (பழம்)பெருமை பேசும் நாடகம். பல கர்ண பரம்பரைக் கதைகளைத் தொகுத்து ஒரு நாடகம் ஆக்கிவிடுவார்கள். அவ்வையார் சிறந்த உதாரணம். நாரண. துரைக்கண்ணன் எழுதிய திருவள்ளுவர், கு.சா. கிருஷ்ணமூர்த்தி எழுதிய கலைவாணர் (ஒட்டக்க்கூத்தர்-புகழேந்திப் புலவர் தகராறுகள் பற்றிய கர்ணபரம்பரைக் கதைகள்) நாடகங்களையும் குறிப்பிடலாம். தியாகராஜ செட்டியார் எழுதிய தூக்குத்தூக்கி (ஒரு கர்ணபரம்பரை வாக்கியத்தை நாடகமாக்கி இருப்பார்), ஞானசௌந்தரி (ஏசு அருள் புரிகிறார்) எல்லாம் இதே ரகம்தான். என் கண்ணில் இ.பா.வின் ராமானுஜரும் இதே வகைதான். எஸ்.டி. சுந்தரத்தின் இன்னொரு நாடகமான வீர சுதந்திரத்தையும் நான் இந்த வரிசையில் சேர்ப்பேன். அது சுதந்திரப் போராட்ட வீரர்களின் (வாஞ்சிநாதன், லாலா லஜ்பத் ராய், பகத் சிங், திருப்பூர் குமரன்…) கதைகளைத் தொகுப்பது.

ஆனால் ஒன்றை ஒத்துக் கொள்ள வேண்டும். அது என்னவோ தெரியவில்லை, எனக்கு வர வர பழைய தமிழ் மேடை நாடகங்கள் மீது ஒரு fascination. அதுவும் சங்கரதாஸ் சுவாமிகள் என்றால் விடாமல் படிக்கிறேன். அவரது மொழியை நான் மிகவும் ரசிப்பவன். அவருக்கு குசும்புத்தனமான நகைச்சுவை உணர்வும் உண்டு. உதாரணமாக பவளக்கொடி நாடகத்தில் அல்லியிடம் அர்ஜுனன் கிருஷ்ணன் தலையில் அடித்து சத்தியம் செய்கிறான். அதற்கு கிருஷ்ணன் இப்படி நீ சத்தியம் செய்து செய்து என் தலையில் நாலைந்து முடிதான் மிச்சம் என்று அலுத்துக் கொள்கிறான்!

இரண்டாவது டைப் சென்டிமென்டல் மெலோட்ராமா. இடையூறுகளை சந்திக்கும் காதல், தாய் சென்டிமென்ட், அண்ணன்-தங்கை பாசம், கல்லானாலும் கணவன் சென்டிமென்ட், தாலி சென்டிமென்ட் என்று இதில் பல வகைகள் இருப்பது போலத் தெரிந்தாலும் ஒரே கதைதான். நாயகன்/நாயகிக்கு சில ஸ்டாண்டர்ட் இன்னல்கள் (அடங்காப்பிடாரி அண்ணி, ஏமாற்றும் நண்பன், காதலைப் பிரிக்கும் அந்தஸ்து, தாசிகளின் மோசவலை என்று இதில் ஒரு பத்து பனிரண்டு உட்பிரிவுகள் உண்டு) வரும்; அவை தீர்ந்தால் இன்பியல் நாடகம்; தீராவிட்டால் துன்பியல் நாடகம். இதுதான் கதை. இதில் பி.எஸ். ராமையா போன்றவர்கள் கொஞ்சம் மெலோட்ராமாவைக் குறைத்து எழுதி இருப்பார்கள்.

annaமூன்றாவது டைப் “சமூக” பிரக்ஞை உள்ள நாடகங்கள். டம்பாச்சாரி விலாசத்திலிருந்து வரும் மரபு இது. அன்றைக்கு சூடாக இருக்கும் ஒரு விஷயத்தை “முற்போக்கு” அணுகுமுறையில் பார்ப்பது. அண்ணாதுரையின் “சிவாஜி கண்ட ஹிந்து சாம்ராஜ்யம்” மற்றும் “வேலைக்காரி“, வெ. சாமிநாத சர்மாவின் “பாணபுரத்து வீரன்“, கு.சா. கிருஷ்ணமூர்த்தி எழுதிய “அந்தமான் கைதி“, எஸ்.டி. சுந்தரம் எழுதிய கவியின் கனவு எல்லாம் நல்ல உதாரணங்கள். விடுத்லைப் போர், மன்னராட்சி ஒழிந்து மக்களாட்சி, சர்வாதிகாரி, சிறையில் வாடும் கவிஞன், என்று பல தேய்வழக்குகள் (cliches). வெட்டி நாடகமே என்றாலும் இது அப்போது வெற்றி பெற்றிருக்கும். எப்படி என்றுதான் எனக்குப் புரியவில்லை. ஒரு வேளை நாடகம் வந்து பல ஆண்டுகள் சென்றுவிட்டதால் நான் தேய்வழக்கு என்று உணர்கிறேனோ என்னவோ.

crazy_mohanநான்காவது வகை நாடகம்தான் எனக்கு சின்ன வயதில் தெரிந்த நாடகம் – எஸ்.வி. சேகர், கிரேசி மோகன் டைப் நாடகங்கள். அதுவும் ஒரு காலத்தில் கிரேசி தீவ்ஸ் இன் பாலவாக்கம் (எஸ்.வி. சேகர் நடித்தது), டெனன்ட் கமாண்ட்மெண்ட்ஸ், ஒன் மோர் எக்சார்சிஸ்ட், மகாபாரதத்துல மங்காத்தா, காதுல பூ, காட்டுல மழை என்று தொடர்ச்சியாக வந்தன. இன்னும் சிரிக்கலாம். காத்தாடி ராமமூர்த்தியும் அப்போது இரண்டு நாடகங்கள் – ஐயோ அம்மா அம்மம்மா, இன்னொரு பெயர் நினைவு வராத நாடகம், அதில் அவர் ஊட்டிக்கு வயதான காலத்தில் ஹனிமூன் போவார் – இதே ஸ்டைலில் போட்டார். அதற்கப்புறம் ஜோக் தோரணமாகவே நாடகங்கள் மாறிவிட்டன. நல்ல நாடகம் என்றால் என்னவென்றே தெரியாமல்தான் வளர்ந்தோம். காலத்தால் பிந்தைய நாடகங்கள், எழுத்துக்கள் சலித்துவிடுகின்றன, இப்போதெல்லாம் சிரிக்கவும் முடிவதில்லை. க்ரேசி மோகனின் நாடகங்களாவது தேவலாம், அவர் நகைச்சுவைப் பத்திகள் தாங்கமுடிவதில்லை. அமெரிக்காவில் கிச்சா, ஃபைவ் ஸ்டார் பலகாரக்கடை போன்றவை சகிக்க முடிவதில்லை.

சோ ராமசாமியும் இந்த வகை நாடகம்தான் எழுத முயற்சித்தார், ஆனால் அவரது சமூகப் பிரக்ஞை அதில் பல சமயம் ஒரு அழுத்தமான சமூகப் பிரச்சினையை முன்வைக்கிறது, சில சமயம் கொஞ்சம் நல்ல நாடகங்களை (சாத்திரம் சொன்னதில்லை, முகமது பின் துக்ளக், யாருக்கும் வெட்கமில்லை, உண்மையே உன் விலை என்ன?) எழுத வைத்துவிட்டது என்று நான் கருதுகிறேன். மெரினாவும் இப்படிப்பட்ட ஹாஸ்ய நாடகங்களைத்தான் முன்வைத்தார், ஆனால் அவரது தத்ரூபமான சித்தரிப்பு – குறிப்பாக பிராமண சூழல்களின் சித்தரிப்பு, அதிலும் குறிப்பாக மாப்பிள்ளை முறுக்கு நாடகம் – அவரது நாடகங்களை உயர்த்துகிறது.

sujathaஇ.பா.வுக்கும் சுஜாதாவுக்கும் இதை மீறக் கூடிய இலக்கிய ஆகிருதி இருந்தாலும் சுஜாதாவுக்கு மட்டுமே அந்த வாய்ப்பு இருந்தது. அவரது லாண்டிரி லிஸ்டைக் கூட படிக்க ஒரு கூட்டம் ஒரு காலத்தில் தயாராக இருந்தது. அதைப் பயன்படுத்திக்கொண்டு அவர் சிறந்த நாடகங்களை எழுதி இருக்கிறார் (ஊஞ்சல், டாக்டர் நரேந்திரன்) என்றாலும் அது தமிழ் நாடக உலகில் பெரிய மாறுதல்களைக் கொண்டு வந்ததாக எனக்குத் தெரியவில்லை.

ந. முத்துசாமி போன்றவர்கள் இன்னொரு ட்ராக்கில் போனார்கள். சின்ன “அறிவுஜீவி” கூட்டம், சிறுபத்திரிகைகள் படிக்கும் கூட்டத்துக்காக நாடகம் போட்டார்கள். நான் நாற்காலிக்காரன் நாடகம் மட்டுமே படித்திருக்கிறேன். அதை எல்லாம் பார்க்க வேண்டும், படிக்கக் கூடாது என்று தெளிவாகத் தெரிந்தாலும், அது என்னை பெரிதாகக் கவரவில்லை.

இந்த டைப்களைத் தாண்டிதான் தமிழ் நாடகம் உயிர்த்தெழ வேண்டும். காத்திருப்போம், வேறென்ன செய்ய?

பிற்சேர்க்கை: நான் இங்கே நடிக்கப்படும் நாடகங்களைப் பற்றி மட்டுமே எழுதி இருக்கிறேன். ஜெயமோகன் வடக்கு முகம் (பகுதி 1, பகுதி 2, பகுதி 3, பகுதி 4, பகுதி 5, பகுதி 6) மற்றும் பதுமை என்ற இரண்டு நாடகங்களை எழுதி இருக்கிறார், இரண்டுமே சிறந்த நாடகங்கள்தான். ஆனால் அவற்றை யாரும் நடிக்கக் கூடாது என்று தடை விதித்திருக்கிறார்.

கு.சா. கிருஷ்ணமூர்த்தி எழுதிய “தமிழ் நாடக வரலாறு” பழைய தமிழ் நாடகங்கள், நாடக நடிகர்கள் பற்றி நிறைய விவரங்களைத் தருகிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் நாடகங்கள்

நானும் நாடகங்களும்

நண்பர் முத்துகிருஷ்ணன் மேற்குலக நாடகங்கள் பற்றி கேட்டிருந்தார். அப்போது நாடகம் பார்த்த படித்த என் அனுபவங்களைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன், அதையே ஒரு பதிவாகவும் எழுதுகிறேன்.

எனக்கு நாடகத்தைப் பார்த்த அனுபவம் எல்லாம் சென்னை சபா வட்டங்களில் பதினேழு-பதினெட்டு வயதுக்குள் ஒரு நாலைந்து வருஷம் பார்த்தது மட்டும்தான். உறவினர்களுக்குள் நாலைந்து சபா memberships இருந்ததால் ஏதோ சில நாடகங்களைப் பார்க்க முடிந்தது. அப்போதுதான் மௌலி, ஒய்.ஜி.பி. எல்லாருக்கும் வயதாகிக் கொண்டிருந்தது. ஆனால் சோவுக்கு மவுசு இருந்தது. க்ரேசி மோகன், எஸ்.வி. சேகர் போன்றவர்களுக்கு ஏறுமுகம். நான் நாடகங்களை சீரியசாகப் படிக்க ஆரம்பித்தபோது எனக்குத் தெரிந்த நாடக உலகம் இது மட்டும்தான். வேண்டுமென்றால் ஒரு ஏழெட்டு வருஷம் கிராமங்களில் வருஷத்துக்கு ஒரு கூத்து பார்த்ததையும் சேர்த்துக் கொள்ளலாம்.

பதினைந்து வயதுக்கு முன் நான் படித்த தமிழ் நாடகங்களோ (பாரதிதாசனின் பிசிராந்தையார், பள்ளி ஆண்டு விழாவில் எப்போதும் நடிக்கப்படும் சி.பி. சிற்றரசின் சாக்ரடீஸ் நாடகம் (விஷக்கோப்பை), சில பல சிறுவர் நாடகங்கள்) எதுவும் எனக்கு அப்போதே தேறவில்லை. என் அப்பா ஆங்கில இலக்கியம் M.A. படித்துக் கொண்டிருந்தார். அவருக்குக் கொடுக்கப்பட்டிருந்த நாடகங்களோ (பென் ஜான்சனின் Volpone the Fox, ஜான் வெப்ஸ்டரின் Duchess of Malfi) தம் கட்டித்தான் படிக்க வேண்டி இருந்தது. போரடித்தன. ஷேக்ஸ்பியரின் ஆங்கிலமோ அந்தக் காலத்தில் ஒத்துவரவில்லை.

நாடகத்தின் சாத்தியங்களைப் பற்றி நான் முதலில் புரிந்து கொண்டது பெர்னார்ட் ஷாவிடமிருந்துதான். ஷாவின் நாடகங்களைப் பார்க்கலாம், ஆனால் படித்தால் ஒன்றும் குறைந்துவிடாது. மேலும் நாடகங்களுக்கு அவர் எழுதிய முன்னுரைகள் எனக்கு ஓரளவு பிடிக்கும், அவற்றை படிக்கத்தான் முடியும். ஷாவிடமிருந்து இப்சன், டென்னசி வில்லியம்ஸ், ஆர்தர் மில்லர், பெர்டோல்ட் ப்ரெக்ட் ஆகியோரைக் கண்டடைந்தேன். அவர்களிடமிருந்துதான் ஷேக்ஸ்பியருக்கு மீண்டும் போனேன். அங்கிருந்து கிரேக்க நாடகங்களுக்குத் தாவினேன். அதற்குப் பின்னால் பலரைக் கண்டடைந்தாலும் (செகாவ், ஆஸ்கார் வைல்ட், அயனஸ்கோ, பெக்கெட், லுயிஜி பிராண்டெல்லோ…) இன்னும் ஷா, இப்சன், வில்லியம்ஸ், மில்லர், ப்ரெக்ட், ஷேக்ஸ்பியர்தான் எனக்கு முதல் வரிசையில் இருக்கிறார்கள்.

மேற்குலகமே எனக்கு நாடகத்தில் சாத்தியங்களைக் காட்டியது என்றாலும் இந்தியர்களுக்கும் நீண்ட நாடக பாரம்பரியம் இருக்கிறது. மிருச்சகடிகம் உலகின் தலை சிறந்த நாடகங்களில் ஒன்று. ஆனால் முத்ராராக்ஷசம் எல்லாம் அந்தக் காலத்தில் ஜேம்ஸ் பாண்ட் படம் பார்ப்பது போல இருந்திருக்கும். (காளிதாசனை நான் இன்னும் படிக்கவில்லை, ரொம்ப வர்ணனையாக இருக்கும் என்று ஒரு நினைப்பு) ஆனால் நடுவில் எங்கேயோ மறைகழன்று போய் மத்தவிலாசப் பிரகடனம் மாதிரி எழுத ஆரம்பித்திருக்கிறார்கள். (இது எல்லா ஊரிலும் நடந்திருக்கிறது. மேற்குலகில் harlequin என்று சில நூற்றாண்டுகளுக்கு முன் கழுத்தை அறுத்திருக்கிறார்கள்). அதற்குப் பிறகு பாதல் சர்க்காரும் (ஏவம் இந்த்ரஜித்) விஜய் டெண்டுல்கரும் (ஷாந்ததா! கோர்ட் சாலு ஆஹே! மற்றும் காஷிராம் கொத்வால்) கிரிஷ் கார்னாடும் (துக்ளக், நாகமண்டலா, ஹயவதனா) வந்துதான் நாடகத்தை மீட்டிருக்கிறார்கள். இது குருஜாதா அப்பாராவ் (கன்யாசுல்கம்) போன்ற முன்னோடிகளை குறைத்து மதிப்பிடுவதல்ல, கறாராக மதிப்பிடுவது.

மிருச்சகடிகத்தின் சிறந்த திரைப்பட வடிவம் – கிரிஷ் கார்னாட் இயக்கத்தில் ரேகா, சஷி கபூரி, சேகர் சுமன், நீனா குப்தா, சங்கர் நாக் நடித்த உத்சவ் திரைப்படத்தை இங்கே பார்க்கலாம்.

கார்னாடின் துக்ளக் நாடகத்தை இங்கே பார்க்கலாம். (மெட்ராஸ் ப்ளேயர்ஸ் நடித்தது)

ஹிந்தி நாடகங்களைப் பற்றி பெரிதாகப் பேசுகிறார்கள் (உதாரணம் – தரம்வீர் பாரதி) ஆனால் நான் படித்ததில்லை.

தமிழில் உலகத் தரத்தில் மூன்றே பேர்தான் நாடகங்கள் எழுதி இருக்கிறார்கள். (சங்கரதாஸ் ஸ்வாமிகளும், பம்மல் சம்பந்த முதலியாரும் முக்கியமான முன்னோடிகள் மட்டுமே.) சுஜாதா, சோ ராமசாமி மற்றும் இந்திரா பார்த்தசாரதி. சுஜாதா, இ.பா. முக்கியமான தமிழ் நாடக எழுத்தாளர்கள் என்றால் யாரும் பெரிதாக ஆட்சேபிக்கப் போவதில்லை, ஆனால் சோவா என்று புருவம் தூக்குபவர்கள் நிறையப் பேர் இருப்பார்கள். சோ ஒரு கோமாளி என்ற நினைப்பு பரவலாக இருக்கிறது, அதில் உண்மையும் இருக்கிறது. சோவின் நாடகங்களைக் கெடுப்பதே அவர் தனக்கென்று உருவாக்கிக் கொள்ளும் கோமாளி பாத்திரம்தான். ஆனால் சென்னை சபா வட்டாரத்தில் அவர் நாடகங்கள் வெற்றி பெற அதுதான் முக்கியமான காரணம். அவருக்கே அந்த கோமாளி பாத்திரம்தான் தனது நாடகங்களைக் கெடுக்கிறது என்ற பிரக்ஞை இருக்கிறதா என்று சந்தேகம்தான். ஆனால் பெரிதும் கொண்டாடப்படும் அரிஸ்டோஃபனசின் தரத்தில்தான் அவர் சில நாடகங்களையாவது – உண்மையே உன் விலை என்ன, யாருக்கும் வெட்கமில்லை, முகமது பின் துக்ளக், சாத்திரம் சொன்னதில்லை – எழுதி இருக்கிறார். குறிப்பாக சாத்திரம் சொன்னதில்லை எனக்கு மிகவும் பிடித்த நாடகங்களில் ஒன்று. ந. முத்துசாமியின் நாடகங்கள் எல்லாம் (நாற்காலிக்காரன்) எனக்கு கொஞ்சம் செயற்கையாகத் தெரிகின்றன. ஒரு வேளை பார்த்தால் என் எண்ணம் மாறுமோ என்னவோ. விட்டுப்போன ஒரு பெயர் ஜெயந்தன். ஆனால் கணக்கன் போன்ற நாடகங்கள் எல்லாம் மங்கலாகத்தான் நினைவிருக்கின்றன. என்றாவது மீண்டும் படிக்க/பார்க்க முடிந்தால்தான் என் எண்ணங்கள் உறுதிப்படும்.

முஹமது பின் துக்ளக் திரைப்படத்தை இங்கே பார்க்கலாம்.

ஆனால் என்னதான் படித்தாலும் நாடகங்களைப் பார்த்தால்தான் நாடகம் என்றால் என்னவென்று உண்மையில் புரிந்து கொள்ள முடியும். காஷிராம் கொத்வால் நாடகத்தை (மோஹன் அகாஷே நடித்து) பார்க்கும் வரையில் எனக்கு நாடகம் என்றால் என்னவென்ற புரிதல் முழுமையாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். எஸ்.வி. சேகர் நாடகங்களைத்தான் சிறந்த நாடகங்கள் என்று நினைத்திருந்தவனுக்கு அது பெரிய கண்திறப்பு. எப்படி விளக்குவது என்றே தெரியவில்லை. காலமெல்லாம் சஹாரா பாலைவனதத்தில் தொண்டை வறட்சியோடு வளர்ந்த ஒருவனை; தொண்டை வரண்டிருக்கிறது என்ற பிரக்ஞை கூட இல்லாமல் அதுவே இயல்பு நிலை என்று உணர்ந்திருக்கும் ஒருவனை; திடீரென்று நயாகராவின் நடுவில் இறக்கிவிட்டது போன்ற கண்திறப்பு அது. இன்று வரையில் நான் பார்த்திருக்கும் வெகு சில நாடகங்களில் சிறந்தது காஷிராம் கொத்வாலே. அதைப் பின்னால் படித்தும் பார்த்தேன், சிறந்த படைப்புதான், ஆனால் நாடகத்துக்கும் புத்தகத்துக்கும் நடுவே தூரம் அதிகம்.

இந்த அனுபவம் பல முறை நிகழ்ந்திருக்கிறது. கிரிஷ் கார்னாடின் தலேதண்டா, நாகமண்டலா ஆகியவற்றையும் எனக்கு படித்தத்தை விட பார்ப்பதுத்தான் பிடித்திருந்திருந்தது. இ.பா.வின் நந்தன் கதையைப் பார்த்த பிறகுதான் என்னால் அதன் நாடக சாத்தியங்களை உணர முடிந்தது. ஒதெல்லோ நாடகம் படித்துப் பார்க்கும்போது போரடித்தது; ஆனால் ஓம்காரா என்ற திரைப்படத்தைப் பார்த்ததோ மறக்க முடியாத அனுபவம். பொதுவாக ஷேக்ஸ்பியரின் இன்பியல் நாடகங்கள் எனக்கு அவ்வளவாகப் பிடிப்பதில்லை. Comedy of Errors-உம் அப்படித்தான். ஆனால் அதன் திரைப்பட வடிவான அங்கூர் நான் பார்த்த சிறந்த திரைப்படங்களில் ஒன்று.

காஷிராம் கொத்வால் நாடகத்தை இங்கே பார்க்கலாம்.

சினிமாவுக்கும் நாடகங்களுகும் நடுவே உள்ள எல்லைகள் மழுங்கிக் கொண்டிருக்கின்றன. ஆனால் நாடகங்களில் வசனமும் நடிப்பும் மகா முக்கியம். சினிமாவில் visual ஆக கதையை நகர்த்த வேண்டும், நாடகத்தில் வசனம்-நடிப்பு மூலம்தான் அதை நகர்த்த முடியும். அதனால் கொஞ்சம் மிகை நடிப்பு அவசியமாக இருக்கிறது. மேலும் சினிமாவில் இல்லாத பல constraints நாடகங்களில் உண்டு. அவற்றை எவ்வளவுக்கவ்வளவு புத்திசாலித்தனமாக பயன்படுத்துகிறார்களோ அத்தனைக்கத்தனை நாடகம் சிறக்கிறது. உதாரணமாக முகமூடிகள் இந்த constraints-ஐ புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துகின்றன (கமல் மாதிரி எல்லா வேஷத்தையும் தானே போட வேண்டுமென்றால் சுலபமாகச் செய்யலாம்). காஷிராம் கொத்வாலில் அரண்மனைக் கதவை காட்ட வேண்டுமா, கோரஸிலிருந்து இரண்டு பேர் கையைத் தூக்கி இணைத்துக் கொள்ள அவர்கள் நடுவே போக வேண்டும் அதுதான் கதவு. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

ஆனால் அமெரிக்காவைப் பொறுத்த வரை நாடகம் கொஞ்சம் பணக்காரர்களுக்கான விஷயம். வாழ்க்கையில் ஒரே ஒரு முறை நியூ யார்க் பிராட்வேயில் குடும்பத்தோடு ஒரு இசை நாடகம் (musical) – Once – பார்த்தோம். ஏறக்குறைய சொத்தையே எழுதி வைத்துத்தான் ஆறு டிக்கெட் வாங்க வேண்டி இருந்தது. டிக்கெட்டுக்கு கிட்டத்தட்ட நூறு டாலர் கொடுத்து கடைசி வரிசையில் உட்கார்ந்து பார்த்தோம். நாள் முழுதும் நியூ யார்க் நகரத்தில் நடந்த களைப்பில் நான் நன்றாகத் தூங்கிவிட்டேன். இடைவேளையில் எழுந்து “என்னாச்சு?” என்று விஜய் சேதுபதி ஸ்டைலில் கேட்டதை என் இரண்டு பெண்களும் இன்னும் என்னைக் கிண்டல் செய்து கொண்டிருக்கிறார்கள். இத்தனை பணம் கொடுத்து நாடகம் பார்ப்பானேன், Glengarry Glen Ross, A Few Good Men எல்லாம் சினிமாவாகப் பார்த்த மாதிரி பேசாமல் சினிமாவாக வந்தால் பார்த்துக் கொள்ளலாம் என்று தோன்றுகிறது!

தொகுக்கப்பட்ட பக்கம்: நாடகங்கள்

சோவின் “சாத்திரம் சொன்னதில்லை”

தமிழில் நல்ல நாடகங்கள் அபூர்வம். சோ ராமசாமி எழுதிய எல்லா நாடகங்களும் தேறும் என்று சொல்வதற்கில்லை, ஆனால் சோவின் நல்ல நாடகங்களும் அவருடைய கோமாளி இமேஜால் கண்டுகொள்ளப் படுவதில்லை.

சோவை பழைய கிரேக்க நாடக ஆசிரியர் அரிஸ்டோஃபனசுடன் ஒப்பிடலாம். அரிஸ்டோஃபனஸ் முதல் காமெடி நாடக எழுத்தாளர், சடையர் என்பது இவரோடுதான் ஆரம்பித்தது என்கிறார்கள். ஆனால் அரிஸ்டோஃபனசை இன்று முழுதாக புரிந்து கொள்வது கஷ்டம். அடிக்கடி க்ளியான் என்ற தலைவரை கிண்டல் அடித்து நிறைய வசனம் வரும். க்ளியானைப் பற்றி நமக்குத் தெரிவதே இந்த வசனங்களின் மூலம்தான். கிண்டல் அடிப்பது எப்படி புரியும்? சோவும் இப்படித்தான் அன்றைய அரசியல் நிகழ்ச்சிகளைப் பற்றி ஏதாவது கிண்டல் அடிப்பார், இன்றைய இளைஞனுக்கு எப்படி புரியும்?

சோவின் பொற்காலத்தில் – அறுபதுகள், எழுபதுகளின் முற்பாதி – அவர் ஏதாவது ஒரு சமுதாயப் பிரச்சினையை எடுத்துக் கொள்வார். அதை சில பாத்திரங்களை வைத்து விளக்குவார். மெலோட்ராமா ஸ்டைல்தான். சில சமயம் விளக்கம் நன்றாக இருக்கும், பல சமயம் உருப்படாது. ஆனால் நன்றாக விளக்கி இருந்தாலும் ஒரு பிரச்சினை இருக்கும் – வலிந்து புகுத்தப்பட்ட நகைச்சுவை. அவர் நடிக்கவென்றே ஒரு கோமாளி பாத்திரம் இருக்கும். அந்தக் கோமாளித்தனம் நாடகத்தின் பெரிய பலவீனம். ஆனால் அந்த பலவீனம், கோமாளித்தனம் இல்லாவிட்டால், சென்னை சபா சர்க்யூட்டில் அவருடைய நாடகங்கள் வெற்றி பெற்றிருக்க முடியாது.

அரிதாக அந்த கோமாளித்தனத்தையும் மீறி சில நல்ல நாடகங்கள் வந்திருக்கின்றன. அவற்றில் சாத்திரம் சொன்னதில்லையும் ஒன்று. (உண்மையே உன் விலை என்ன, யாருக்கும் வெட்கமில்லை, முகமது பின் துக்ளக் ஆகியவையும் என் கண்ணில் வெற்றி அடைந்த நாடகங்களே.)

சாத்திரம் சொன்னதில்லையில் அவர் ஜாதிப் பிரச்சினையை எடுத்துக் கொள்கிறார். ஜாதிப் பிரக்ஞை, ஜாதி ஸ்டீரியோடைப்கள் நம் மனதில் எவ்வளவு ஆழமாக ஊறிப் போயிருக்கின்றன என்பதை. அதை சிக்கனமாக, சில பாத்திரங்களையே வைத்துக் காட்டுகிறார்.

சாரியார் பிராம்மணோத்தமர். ஜாதி பார்க்கமாட்டார். ஒரே மகன் பாச்சா. பாச்சாவுக்கு படிப்பு வரவில்லை. பல வருஷமாக பி.யு.சி. பரீட்சை எழுதிக் கொண்டிருக்கிறான். ஆனால் சாரியாருக்கு அவன் செல்ல மகன். அவனுக்காக சப்பைக்கட்டு கட்டிக்கொண்டே இருக்கிறார். துரைக்கண்ணு ஹரிஜன். எம்.எல்.ஏ. அவருக்கும் பாச்சா வயதில் ஒரு மகன் இருக்கிறான். பெருமாள். பாச்சாவும் பெருமாளும் ஒரே ஆஸ்பத்திரியில் ஒரே நாளில் பிறந்தவர்கள். பெருமாள் நன்றாகப் படிக்கிறான். காண்ட்ராக்டர் முதலியார் மகள் உமாவோடு பெருமாளுக்குக் காதல். சாரியார் போன்றவர்கள் சிபாரிசு செய்தும் ஜாதி பார்க்கும் முதலியார் மறுக்கிறார். பாச்சா உமாவை கல்யாணம் செய்து கொள்கிறேன் என்றால் சாரியார் சம்மதிப்பாரா என்று கேள்வி கேட்கிறார். சாரியார் சம்மதிப்பேன் என்கிறார், ஆனால் முதலியார் நம்பவில்லை. இதற்குள் இவர்கள் காதல் ஊரெல்லாம் தெரிந்துவிடுகிறது. அது துரைக்கண்ணுக்கு பிரச்சினை ஆகிறது. ஏன் பெருமாளுக்கு ஹரிஜன் பெண்ணாகப் பார்க்கவில்லை என்று கேள்வி எழுகிறது. முதலில் காதலை ஒத்துக் கொண்ட துரைக்கண்ணு இப்போது உமாதான் என் பையன் பின்னால் சுற்றினான், பெருமாள் அவளைக் காதலிக்கவில்லை என்று பெருமாளைச் சொல்ல வைக்கிறார். முதலியார் அவமானப்படுகிறார்.

சாரியார் உண்மையிலேயே ஜாதி பார்க்கமாட்டாரா என்று அவரது டாக்டர் நண்பர் அவரை பரீட்சிக்க நினைக்கிறார். சாரியார் காதுபட பெருமாள்தான் சாரியாருக்குப் பிறந்தவன், பாச்சா துரைக்கண்ணுக்குப் பிறந்தவன், ஆஸ்பத்திரியில் குழந்தைகள் மாறிவிட்டனர் என்று சாரியார் நம்பும்படி பேசுகிறார். சாரியாருக்கு மண்டையில் லைட் எரிகிறது. பிராமணப் பையன், சாரியாரின் வித்துக்கு படிப்பு எப்படி வராமல் இருக்கும் என்ற கேள்விக்கு விடை கிடைத்துவிடுகிறது. பெருமாளின் மீது பாசமும் பாச்சா மீது கோபமும் வருகிறது. பாச்சா உமாவை மணக்க விரும்புவதாக சொல்கிறான். ஹரிஜன் முதலியாரை மணந்துகொண்டால் எனக்கென்ன போச்சு என்று சாரியார் சம்மதிக்கிறார், ஆனால் அவரது ஜாதி பார்க்காத உயர்ந்த உள்ளத்தைக் கண்டு ஊரே பாராட்டுகிறது.

சாரியாருக்கு உண்மை தெரிந்ததா, உமா யாரை மணக்கிறாள், என்பதுதான் மிச்சக் கதை.

எனக்கு சில விதங்களில் இது எஸ்.எல். பைரப்பா எழுதிய தாட்டு என்ற கதையை நினைவுபடுத்தியது. இதே போல சிக்கனமாக, வெகு சில பாத்திரங்களை வைத்து (ஒரு பிராமணக் குடும்பம், ஒரு கௌடா குடும்பம், ஒரு ஹரிஜன் குடும்பம்) ஜாதியை அற்புதமாக அலசி இருப்பார். சோவுக்கும் பைரப்பாவுக்கும் தூரம் அதிகம். இருந்தாலும் அதே சிக்கனம் இந்த நாடகத்திலும் தெரிகிறது.

சாரியார் அற்புதமான பாத்திரம். மிச்ச பாத்திரங்களில் ஜீவன் இல்லை. சோ நடிப்பதற்காக எழுதப்பட்ட நிரஞ்சன் பாத்திரம் சில இடங்களில் எரிச்சல் ஊட்டுகிறது. அதுவும் “வ” என்ற ஒலியைச் சொல்ல வரவில்லை (வங்காளிகள் போல), பிறகு “ப” வரவில்லை என்று கழுத்தை அறுக்கிறார். ஆனால் நாடகமாகப் பார்ப்பவர்கள் நிச்சயம் சிரித்திருப்பார்கள்.

நல்ல நாடகம், படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன். பார்த்தால் படிக்கும்போது தெரியும் சில குறைகளும் மறைந்துவிடும், அதனால் முடிந்தால் பார்த்துவிடுங்கள்.

அல்லையன்ஸ் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. விலை நாற்பது ரூபாய்.

சோவின் “சர்க்கார் புகுந்த வீடு”

பழைய கிரேக்க நாடகங்களைப் படித்திருக்கிறீர்களா? எஸ்கைலஸ் (Aeschylus), சோஃபோக்ளிஸ் (Sophocles), யூரிபிடிஸ் (Euripides), அரிஸ்டோஃபனஸ் (Aristophanes) ஆகிய நான்கு ஆசிரியர்களின் நாடகங்கள் இன்றும் கிடைக்கின்றன. ஏறக்குறைய 2500 ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்டவை என்று சொல்கிறார்கள். முதல் மூவரும் ட்ராஜடி நாடகங்களை எழுதினார்கள். அரிஸ்டோஃபனசோ காமெடி நாடகங்கள். சாக்ரடீசை கிண்டல் செய்யும் Clouds, பெண்கள் படுக்கைக்கு வரமாட்டேன் என்று அடம் பிடித்து போரை நிறுத்தும் Lysistrata என்று சில நாடகங்கள் நினைவு வருகின்றன. எல்லாவற்றிலும் கேலியும் கிண்டலும்தான். அதுவும் அந்தக் கால அரசியல்வாதி ஒருவரை – க்ளியான் (Cleon) – போட்டுத் தாக்கி இருப்பார். அருமையான நகைச்சுவை நாடகங்களை எழுதியவர் என்று கொண்டாடப்படுபவர்.

எனக்கு சோ ராமசாமிக்கும் அரிஸ்டோஃபனசுக்கும் தரத்தில் பெரிய வித்தியாசம் தெரியவில்லை. ஆனால் அரிஸ்டோஃபனசுக்கு இருக்கும் மதிப்பில் சோவுக்கு நூற்றில் ஒரு பங்கு கூட கிடையாது. சோவை நாடக ஆசிரியர் என்றோ, நகைச்சுவையாக எழுதுபவர் என்றோ பாராட்டுபவர்கள் அபூர்வமே. பழைய காலத்து எழுத்து எது கிடைத்தாலும் – அதுவும் 2500 வருஷத்துக்கு முன் எழுதப்பட்ட நாடகங்கள் – அவற்றை ஆராய, அலச ஒரு நிபுணர் கூட்டம் இருக்கும்தான். அரிஸ்டோஃபனசுக்கு இருக்கும் புகழில் பெரும் பங்கு அந்த புராதனத் தன்மையால்தான் என்று எனக்கு ஒரு எண்ணம் உண்டு. ஆனால் அவர் எழுதியவை இலக்கியம் என்றே பொதுவாக கருதப்படுகிறது. சர்க்கார் புகுந்த வீடு மாதிரி ஒரு புத்தகத்தை சோ கூட இலக்கியம் என்று கருதமாட்டார்.

சர்க்கார் புகுந்த வீடு புத்தகத்தில் சோ கருணாநிதி, எம்ஜிஆர், இந்திரா காந்தி எல்லாரையும் கிழி கிழி என்று கிழிக்கிறார். ஒருவரை ஒருவர் மட்டம் தட்டுவதையே குறிக்கோளாகக் கொண்டிருந்ததை, இந்திரா காந்தி இருவரையும் கிள்ளுக்கீரையாக நினைத்ததை, இருவரும் இந்திரா போடு தோப்புக்கரணம் என்றால் எண்ணிக்கோ என்று ஜால்ரா போட்டதை, கிண்டல் செய்து மாளவில்லை. அவ்வப்போது தன்னைத் தானே – குறிப்பாக தன் இந்திரா எதிர்ப்பு நிலையை – கிண்டல் செய்துகொள்கிறார். பக்கத்துக்கு இரண்டு முறையாவது சிரிக்கலாம்.

கதை என்று ஒன்றுமில்லை. 1980-82 காலம். எம்ஜிஆர் இரண்டாம் முறை முதல்வர். கருணாநிதி அவருக்கு வழக்கமான எதிர்கட்சித் தலைவர் பதவியில். மத்தியில் இந்திரா அரசு. ரிடையர் ஆன கந்தசாமி ஒரு சர்வ கட்சி பொதுக்கூட்டத்தில் நடுவில் புகுந்து அரசு நிர்வாகத்தை குறை சொல்கிறார். நாட்டை என்ன நிர்வாகிப்பது, ஐந்து குடும்பங்கள் தங்கி இருக்கும் எங்கள் வீட்டை நிர்வகியுங்கள் என்று சவால் விடுகிறார். அவர் போதாத காலம், சவால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அவரையும் ரகுநாத ஐயர் என்ற இன்னொரு குடும்பத்துப் பெரியவரையும் முன்னால் வைத்து எல்லாரையும் சகட்டு மேனிக்கு சாடுகிறார்.

முதல் அத்தியாயத்திலேயே களை கட்டிவிடுகிறது. காந்தி பிறந்த நாள் அன்று சர்வகட்சி கூட்டம். எம்ஜிஆர் வந்தபிறகுதான் போவேன் என்று கருணாநிதியும், அவர் வந்த பிறகுதான் போவேன் என்று எம்ஜிஆரும் உட்கார்ந்திருக்கிறார்கள். மேடையில் இருக்கும் பிற கட்சித் தலைவர்கள் எல்லாருக்கும் காத்திருந்து காத்திருந்து அலுத்துவிடுகிறது. பிறகு கண்ணதாசன் ஒரு ஐடியா கொடுக்கிறார் – இங்கே ஒருத்தர் வந்திருக்கிறார், யாரென்று தெரியவில்லை, பார்த்தால் மத்திய அரசில் ஏதோ துணை அமைச்சர் மாதிரி இருக்கிறது என்று இருவருக்கும் ஃபோன் செய்யச் சொல்கிறார். இங்கே இரண்டு பேரும் வந்த பிறகு யாரென்று கேட்டால் எல்லாரும் மறந்துவிட்ட பா. ராமச்சந்திரனை காட்டி சமாளித்துக் கொள்ளலாம் என்கிறார்.

கந்தசாமியின் சவால் பற்றி வரும் பத்திரிகை ரிபோர்ட்கள் அபாரம்! சவால் விடும்போது கந்தசாமியின் கையிலிருந்து தவறி விழுந்த பட்டாணியை எம்ஜிஆர் பிடிக்கிறார். அ.தி.மு.க. பத்திரிகை பட்டாணி விழுந்ததை நாட்டு வெடிகுண்டு என்கிறது. முரசொலி பட்டாணி கூட இல்லை, பட்டாணித் தோல் என்கிறது. மக்கள் குரல் டி.ஆர்.ஆர். ஒரு பட்டாணியின் எடை எவ்வளவு, அது விழுந்த வேகம் என்ன என்றெல்லாம் பெரிதாக கணக்குப் போட்டு அது ஒரு பயங்கர ஆயுதம் என்கிறார். முடியே இல்லாத தலை, முடிவே இல்லாத விழி கொண்ட துக்ளக் ஆசிரியர் (இதெல்லாம் அவரது description) இந்திரா ஆட்சி இப்படியே தொடர்ந்தால் நாளைக்கு வீச பட்டாணி கிடைக்காதே என்று கவலைப்படுகிறார். விகடனோ பட்டாணி சாப்பிடுவதால் வரும் தீமைகள் என்று கவர் ஸ்டோரி எழுத முற்படுகிறது. குமுதம் வீட்டில் இருக்கும் பெண்களை கவர்ச்சியாகப் படம் எடுத்து அட்டைப்படத்தில் போடத் துடிக்கிறது.

ஒரு கவியரங்கம் நடக்கிறது பாருங்கள், மு.மேத்தா தாத்தா பற்றி பாடுகிறார். மதரை மரியாதை இல்லாமல் சொன்னால் அது நகைச்சுவை என்கிறார் ஒருவர். (மரியாதை இல்லாமல் சொன்னால் மதர் மதன் ஆகிவிடுகிறது, மதன் கார்ட்டூன்கள் அந்தக் காலத்தில் பிரபலம்)

பிரச்சினை என்னவென்றால் புத்தகம் ரொம்பவுமே topical. ஒரு கட்டத்தில் கந்தசாமி, ரகுநாத ஐயர் இருவரும் கடன் தொந்தரவு தாளாமல் நாராயணசாமி நாயுடு என்ற விவசாயிகள் சங்கத் தலைவரைப் பார்க்கிறார்கள். கடனை எப்படி திருப்பிக் கொடுப்பது என்று தெரியவில்லை என்று கவலைப்படுகிறார்கள். அவர் கடனைத் திருப்பி தருவதா, நீங்கள் எல்லாம் எம்ஜிஆர் ஆட்களா என்கிறார். நாயுடு அந்தக் காலத்தில் விவசாயிகள் கடனை அரசு தள்ளுபடி செய்யவேண்டும் என்று தீவிரமாகப் போராடியவர். அது தெரியாதவர்களுக்கு இந்த ஜோக் புரியாது. இந்த மாதிரி நிறைய – மக்கள் குரல் டி.ஆர்.ஆர்., இதயம் பேசுகிறது மணியன், ம.பொ.சி. எல்லாரும் எம்ஜிஆருக்கு சோப் போடுவது, விகடன் திடீர் திடீரென்று இது கெடுதல், அது கெடுதல் என்று எழுதுவது, அப்போது அடிக்கடி நடந்த ரயில் விபத்துகள், இந்திராவின் சாமியார் fixation, என்று பலப்பல ஜோக்குகள். (அரிஸ்டோஃபனசுக்கும் இதே பிரச்சினைதான். க்ளியான் என்ன செய்தார் என்று யாருக்குத் தெரியும்?)

எனக்கும் இது இலக்கியம் இல்லைதான். பொழுதுபோக்கு நாவல்தான். ஆனால் நான் இதை ஒரு minor classic என்றே கருதுகிறேன். மாண்டி பைதானைப் (Monty Python) போல, பி.ஜி. உட்ஹவுசைப் போல சோ இந்திய, தமிழக அரசியலை வைத்து ஒரு உலகத்தைப் படைத்திருக்கிறார். படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.

தொடர்புடைய சுட்டிகள்: சோ ராமசாமி – ஒரு மதிப்பீடு