இந்த சீரிசின் அடுத்த நாவலான Sword of the Kings (2019) -ஐப் படித்தததால் மீள்பதித்திருக்கிறேன்.
Sword of the Kings மற்ற நாவல்களைப் போலவேதான் இருக்கிறது. அதே மாதிரி கொஞ்சம் வரலாற்றுப் பின்னணி, சில பல போர்க்காட்சிகள், அதே மாதிரி நல்ல மசாலா நாவல். வித்தியாசமாக எதுவுமில்லை. என்ன வரலாறு? ஆல்ப்ரெடின் மகன் எட்வர்ட் இறந்துவிட வாரிசு சண்டை. அதெல்ஸ்டான் தென் இங்கிலாந்தின் மன்னனாகிறான். ஆல்ஃப்ரெடின் கனவு – ஆங்கிலம் பேசும் எல்லாரையும் ஒரே ராஜ்ஜியத்தில் இணைக்க வேண்டும் – கிட்டத்தட்ட நிறைவேறிவிட்டது. இன்னும் வட இங்கிலாந்துதான் (இன்றைய யார்க்ஷையர் பகுதி) பாக்கி.
ராஜா ஆல்ஃப்ரெட் ஒன்பதாம் நூற்றாண்டில் தென் இங்கிலாந்தை ஆண்ட மன்னன். இன்று நாம் இங்கிலாந்து என்று குறிப்பிடும் நிலப்பரப்பு அன்று வேல்ஸ், வெஸ்ஸெக்ஸ், மெர்சியா, கிழக்கு ஆங்கிலியா, நார்த்தம்பர்லாண்ட் என்று பலவாகப் பிரிந்து கிடந்தது. (தமிழ்நாடு சேர, சோழ, பாண்டிய நாடுகளாக இருந்த மாதிரி). இவற்றை எல்லாம் இங்கிலாந்து என்ற ஒரே ராஜ்ஜியமாக இணைத்தது ஆல்ஃப்ரெட். இந்த நாவல் சீரிசைப் படித்த பிறகு ஆல்ஃப்ரெட் அவற்றை எல்லாம் ஒன்றிணைக்கும் வேலையை ஆரம்பித்தாலும் அப்படி ஒன்றாக இணைய இன்னும் இரண்டு தலைமுறை ஆனது என்று தெரிய வருகிறது. அந்தக் காலகட்டத்தில் டென்மார்க், ஸ்காண்டிநேவிய நாடுகளிலிருந்து சாரிசாரியாக வீரர்கள் வந்து ஆல்ஃப்ரெட் மற்றும் பல மன்னர்களோடு போரிட்டிருக்கிறார்கள். சில ராஜ்ஜியங்களை கைப்பற்றியும் இருக்கிறார்கள். சோழர்களும் சாளுக்கியர்களும் போரிட்டுக் கொண்டே இருந்த மாதிரி.
கார்ன்வெல்லே விளக்குகிறார் – ஆங்கிலேயர்கள் – குறிப்பாக இளைஞர்கள் – இங்கிலாந்து எப்போதுமே இருந்த ஒரு அமைப்பு என்று எண்ணுகிறார்கள், இங்கிலாந்து எப்படி உருவானது என்ற சரித்திரப் பிரக்ஞை அவர்களுக்கு இல்லை. அந்தப் பின்புலத்தை விளக்கவே இந்த நாவல்களை எழுதினாராம்.
கார்ன்வெல் வழக்கம் போல இவற்றை ஒரு போர் வீரனின் பார்வையிலிருந்து விவரிக்கிறார். இந்த முறை அந்த வீரனின் பேர் உத்ரெட். உத்ரெட் சின்ன வயதில் டேனிஷ் பிரபு ராக்னாரால் கைப்பற்றப்படுகிறான். சின்னப் பையனாக இருந்தாலும் அவன் தைரியத்தை கண்டு வியக்கும் ராக்னார் உத்ரெட்டை தன் மகன் போலவே வளர்க்கிறான். உத்ரெட் கிறிஸ்துவனாகப் பிறந்தவன். ராக்னார் தோர், ஓடின் போன்ற ஸ்காண்டிநேவியக் கடவுள்களை வழிபடுபவன். டேனிஷ் மதம் வாழ்க்கையை அனுபவி, போரிடு, இறந்தால் வீர சொர்க்கம் போவாய், அங்கே மற்ற வீரர்களோடு போரிட்டு காலத்தைக் கழிக்கலாம், சுருக்கமாக என்ஜாய் என்கிறது. கிறிஸ்துவ மதமோ எல்லாமே பாவம், ஏசு மட்டுமே உன்னை ரட்சிக்க முடியும் என்கிறது. உத்ரெட் ராக்னாரை தன் அப்பா ஸ்தானத்தில் வைத்திருக்கிறான், டேனிஷ் மதத்தைத்தான் கடைப்பிடிக்கிறான். ஆனால் அவன் வாழ்க்கை முழுவதும் அவன் கிறிஸ்துவ ராஜ்ஜியங்களுக்காக, டேனிஷ் படைகளை எதிர்த்துப் போராடி அவர்களை மீண்டும் மீண்டும் தோற்கடிக்கிறான். ஆனால் அவனுக்குக் கிடைக்க வேண்டிய பட்டம் பதவி எல்லாம் அவன் கிறிஸ்துவன் இல்லை என்பதால் அவனுக்கு முழுதாகக் கிடைப்பதில்லை. உள்ளுணர்வின்படி டேனிஷ்காரனான உத்ரெட் டேனிஷ் படைகளை வென்று கிறிஸ்துவ அரசை நிலைநிறுத்தும் முரண்பாடுதான் இந்த நாவல்களின் அடிநாதம்.
இந்த முறை ஒன்பது 12 நாவல்கள் வந்திருக்கின்றன. Last Kingdom (2004), Pale Horseman (2005), Lords of the North (2006), Sword Song (2007), Burning Land (2009), Death of Kings (2011), Pagan Lord (2013), Empty Throne (2014), Warriors of the Storm (2015), Flame Bearer (2016), Warrior of the Wolf (2018), Sword of the Kings (2019)
இவை எவையும் இலக்கியம் அல்ல. சரித்திர அடிப்படை கொண்ட சாகசக் கதைகளே. இவற்றின் முக்கியக் குறை என்று நான் கருதுவது ஒன்பது நாவல்களும் ஒரே நாவலைத் திருப்பி திருப்பி எழுதியது போல இருக்கிறது என்பதுதான். ஒரு வேளை நான் ஆங்கிலேயனாகப் பிறந்திருந்தால் எனக்கு அப்படி தோன்றாமல் இருக்குமோ என்னவோ. (சாண்டில்யன் நாவல்கள் எல்லாம் எனக்கு வேறு வேறாகத்தான் தெரிகின்றன.)
ஆனால் பிரமாதமான மசாலா கதைகள். அவற்றின் ஊடாக ஒரு மெல்லிய நகைச்சுவை ஓடிக் கொண்டே இருக்கிறது. (மெர்சியாவின் அரசியாக ஏதல்ஃப்ளாட் பதவி ஏற்கும் காட்சி, ஆல்ஃப்ரெட்டின் அறிமுகக் காட்சியில் தன் பெண் பித்தின் ‘பாவச்சுமையை’ ஆல்ஃப்ரெட் உணரும் விதம், மறைந்த புனிதர்களின் அடையாளச் சின்னங்களைத் தேடும் கிறிஸ்துவ மதம் (வாந்தி எடுத்து துடைத்த துணி எல்லாம் புனிதச் சின்னமாகக் கருதப்படுகிறது). கார்ன்வெல்லின் ட்ரேட்மார்க்கான நம்பகத்தன்மை உள்ள போர்க்காட்சிகள் நிறைந்திருக்கின்றன. உத் ரெட்டின் துணைவர்களாக வருபவர்கள் (ஐரிஷ்காரனான ஃபினன், பெரும் பலசாலியான ஸ்டீபா, அவனது சின்ன வயது வாத்தியாரான மதகுரு பியோக்கா, ஆல்ஃப்ரெடின் முறைதவறிப் பிறந்த மகன் ஆஸ்ஃபெர்த், உத்ரெடின் மகனான உத்ரெட்) எல்லாரும் உயிருள்ள பாத்திரங்கள்.
இந்தக் கதைகளில் ஆல்ஃப்ரெட் அரசனாகிறான். போர்த்திறமைக்கு மட்டுமல்ல, படிப்பறிவு, சட்டம், நிர்வாகம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தருகிறான். கிறிஸ்துவ மதத்தில் முழு நம்பிக்கை உள்ளவன். அது மதகுருக்களின் மீதும் நம்பிக்கையாகப் பரிணமித்திருக்கிறது. உத்ரெட் செய்யும் சேவைகளுக்கு அவன் தான் இறக்கும் தருணம் வரை முழுவதாக பரிசு, பட்டம் வழங்கவில்லை. உத்ரெட்டின் போர்த்திறமை எல்லாருக்கும் தெரிந்திருந்தும், மதகுருக்களின் எதிர்ப்பினால் ஆல்ஃப்ரெட் அவனை தன் தளபதி ஆக்கவில்லை. அவன் மகள் ஏதல்ஃப்ளாடுக்கும் உத்ரெட்டிற்கும் ஏற்படும் உறவு ஆல்ஃப்ரெட்டுக்கு மேலும் சிக்கல்களை ஏற்படுத்துகிறது. உத்ரெட் தன் போர்த் திறமையால் மீண்டும் மீண்டும் டேனிஷ் படைகளை வெல்கிறான். ஆர்தரின் பேரனான ஏதல்ஸ்டானை உத்ரெட் வீரனாக வளர்க்கிறான். தனிப்பட்ட கதைகள் முக்கியமே அல்ல, ஆனால் அவை ஒன்றாகச் சேர்ந்து நல்ல படிக்கும் அனுபவத்தை ஏற்படுத்துகின்றன.
சாகசத்துக்காகப் படிக்கலாம், சரித்திரத்துக்காகவும் படிக்கலாம். நான் இரண்டு காரணங்களுக்காகவும் படித்தேன், படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.
தொகுக்கப்பட்ட பக்கம்: பெர்னார்ட் கார்ன்வெல் பக்கம்