டைம் பாஸ் பாலகுமாரன் கதைகள்

இந்தப் பதிவும் ஒரு ரெகார்டுக்காகத்தான். பாலகுமாரன் எக்கச்சக்க மாத நாவல்களை எழுதித் தள்ளி இருக்கிறார். என்ன கதைக்கு என்ன பேர் என்று நினைவு வைத்துக் கொள்ள முடிவதில்லை. அதனால் அவரது டைம் பாஸ் கதைகளை – ஏதோ ஒரு சின்ன விஷயமாவது இருக்கும், முழு தண்டம் இல்லை, பஸ்ஸில் படித்துவிட்டு தூக்கிப்போட்டுவிடலாம் – பற்றி சின்னச் சின்னக் குறிப்புகள்.

அப்பா குறுநாவலின் பின்புலம் – கொத்தவால் சாவடியில் கமிஷன் வியாபாரம் – நன்றாக வந்திருக்கும். ஆனால் கதைப்பின்னல் ரொம்ப வீக்.

அப்பம் வடை தயிர்சாதம்: சுவாரசியமாக ஆரம்பிக்கிறது. இன்றைய பிராமண, மத்திய தரக் குடும்பம் ஒன்றின் குலச் சடங்கு – என்ன வேலை செய்தாலும், ஒரு பிரார்த்தனையாக சில வருஷங்களுக்கு ஒரு முறை ரயில்வே ஸ்டேஷனின் அப்பம், மசால்வடை, தயிர்சாதம் விற்பது. நாலைந்து தலைமுறைக்கு முன்னால் வைதீகத்திலிருந்து சமையல் தொழிலுக்கு மாறினார்களாம்.ரயில்வே ஸ்டேஷனில் அப்பம், மசால்வடை, தயிர்சாதம் விற்றார்களாம். அதன் நினைவாக இந்தச் சடங்கு. மாயவரத்தில் ஹோட்டல், சென்னையில் ஹோட்டல், சென்னையில் ஆங்கிலேயருக்கு உதவியாக ஒரு பதவி, வியாபாரம் என்று மாறினாலும் இந்தச் சடங்கை விடுவதில்லை. படிக்கலாம், ஆனால் ரொம்பக் கேள்வி கேட்கக்கூடாது. 1800களில் மசால்வடையா? அது மசால்வடை என்று அழைக்கப்பட்டதா? பாசந்தி போன்ற வட இந்திய இனிப்புகளா? விடுதலைக்கு முன்னாலேயே லட்சாதிபதிக் குடும்பம் எப்படி திருப்பி மத்திய தர வாழ்க்கைக்கு வந்துவிட்டது? இப்படி எல்லாம் யோசிப்பவராக இருந்தால் தவிர்த்துவிடுங்கள்.

பவிஷு: கதை “சின்னவர்” அதாவது எம்ஜிஆரின் அரசியல் வாழ்க்கையை ஓரளவு தொடர்கிறது. அவர் ரிக்ஷாக்காரர்களுக்கு ரெயின்கோட் கொடுத்தது, கட்சி உடைந்தது எல்லாம் கதையில் பின்புலமாக வருகிறது. முன்புலமாக ஒரு வியாபாரக் குடும்பத்தின் வாழ்க்கை. படிக்கலாம்.

தனரேகை: சுமாரான கதை. மாடு வைத்து வியாபாரம் செய்யும் யாதவர் குடும்பம். மில் வைத்திருக்கும் முதலியார் குடும்பம் என்று போகிறது.

என் கண்மணி: நடிகை சாவித்திரியின் வாழ்வை வைத்து கற்பனை கலந்து ஒரு கதை.

என்னவளே அடி என்னவளே: சிம்பிளான காதல் கதை. யோகா டீச்சருக்கும் விளம்பரம் செய்யும் ராமச்ச்சந்திரனுக்கும் காதல். பெண் வீட்டில் எதிர்ப்பு. பையன் வீட்டில் கொஞ்சம் குறைவான எதிர்ப்பு. அவர்களே பேசி, ஏற்பாடு செய்து சம்பிரதாயமாக கல்யாணம் செய்து கொள்கிறார்கள். அனாவசிய digression இல்லாதது பெரிய நிம்மதி. அதற்காகவே படிக்கலாம்.

என்றென்றும் அன்புடன் அவரது தன்வரலாற்றின் ஒரு பகுதி. இரண்டாவது மனைவி வந்த கதை.

எழில்: சினிமா டைரக்டர் கனவோடு சென்னைக்கு வருபவன் வீடியோ எடுப்பவனாக மாறுகிறான். தவிர்க்கலாம்.

என்னுயிரும் நீயல்லவோ: சுமாரான நாவல்தான், ஆனால் ஏலக்காய்த் தோட்டப் பின்புலம் இதை குறிப்பிட வைக்கிறது. சிம்ப்ளிஸ்டிக்கான விவரிப்புதான் என்றாலும் கொஞ்சம் அந்தத் தொழிலின் போக்கு புரிகிறது. செட்டியார் இறந்த பிறகு அவரது மகன் அவரது வைப்பாட்டி மேற்பார்வை பார்க்கும் தோட்டத்தை எடுத்து நடத்துகிறான்.

இனி இரவு எழுந்திரு: கமாண்டோ தன் தங்கை மீது திராவகம் வீசியவர்களைத் தேடுகிறான்.

ஜீவநதி: அரசியல்வாதி, அவருக்கு துணையாக அவரது சித்தப்பா பையன். பஸ்ஸில் படித்துவிட்டு தூக்கிப் போட்டுவிடலாம்.

காதல் சிறகு: நான் என் வாழ்க்கையில் இது வரையிலும் ஒரு டிவி மெகாசீரியலை – ஒரு எபிசோட் கூட முழுதாகப் பார்த்ததில்லை. இந்த நாவல் மாதிரிதான் இருக்கும் என்று தோன்றுகிறது. நிச்சயதார்த்தம் நடந்து கல்யாணம் முடிவதற்குள் துபாய்க்கு வேலைக்குப் போகும் பையன். இதை வைத்து நானூத்தி சொச்சம் பக்கம்! சும்மா இசு இசுன்னு இசுத்திருக்கிறார்.

கடல் நீலம்: அப்பா வேசியோடு கூட ஹோட்டலில் அறை எடுத்துத் தங்கும்போது இறந்துவிடுகிறார். அவரிடமிருந்த பணம் இருந்த சிவப்புப் பெட்டியை மகள் தேடுகிறாள்.

கடலோரக் குருவிகள்: கஷ்டப்படும் பிராமணப் பையன். அவனுக்கு திடீரென்று ஒரு கோடீஸ்வரப் பெண்ணின் நட்பு கிடைக்கிறது. அவளுக்கு உதவி செய்கிறான், வளர்ந்து காதலாகிறது. தமிழ் சினிமாவில் ஒரு பாட்டு முடிவதற்குள் பணக்காரன் ஆவது போல இருக்கிறது. உபதேசம் செய்வதற்காகவே இந்த கதையை எழுதி இருக்கிறார் என்று நினைக்கிறேன். பஸ்ஸில் படிக்கலாம். இதை இயக்குனர் ஷங்கர் வெகுவாகப் புகழ்ந்து பாலகுமாரனுக்கு எழுதிய கடிதமும் புத்தகத்தோடு வெளியிடப்பட்டிருக்கிறது.

கை வீசம்மா கை வீசு – இந்த நாவலைக் காப்பாற்றுவது இந்த நாவல் வந்த காலகட்டத்தின் (88-89) பெண்களின் மனக் குழப்பத்தை நம்பகத்தன்மையோடு விவரிப்பது. பெண்களைக் கணக்கு பண்ண நினைக்கும் பையன்கள், அவர்கள் போடும் சீன்கள், குடும்பம் vs காதலிக்கும் பெண் என்று வந்தால் ஏற்படும் குழப்பங்கள் என்று விவரிக்கிறார். ஆனால் வளவளப்பு அதிகம்…

கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை: இசையைத் தவிர வேறு எதுவும் தெரியாத ஒரு இசை அமைப்பாளர்; அவருக்கு உண்மையான ஒரு மானேஜர்; அவருக்கு விசுவாசமான அவர் மனைவியின் தம்பி. இவர்களை வைத்து கொஞ்சம் சினிமா பின்புலத்தை வைத்து ஒரு கதை. படிக்கலாம். ஆனால் பிரமாதம் என்றெல்லாம் இல்லை.

கள்ளி: வழக்கறிஞர் சுமதியைப் பின்புலமாக வைத்து ஒரு சின்னக் கதை

கனவு கண்டேன் தோழி: பாட்டுப் பாடும் செல்வராணி.

கண்ணாடி கோபுரங்கள்: ஒரு மாஃபியா டான் சிறு தொழிலதிபர் சிவப்பிரகாசத்திடம் கடத்தல் பொருளை கொடுத்தனுப்புகிறான். சிவப்பிரகாசத்துக்கு என்ன என்று தெரியாது. மாட்டிக் கொள்கிறான். ஒரு வருஷம் விசாரணை இல்லாமல் ஜெயில் என்று கூட்டிப் போய்விடுகிறார்கள். மனைவி தைரியமாக நின்று தொழில் செய்கிறாள். கதை ஓரளவு நன்றாக வந்திருக்கும். ஆனால் சிவப்பிரகாசம் ஆன்மீக வழியில் போகிறான் என்று ஆரம்பித்து கதையின் கட்டுக்கோப்பை குலைத்துவிடுகிறார். மோசம் என்று சொல்வதற்கில்லை, படிக்கலாம்.

கற்பு வெறி: மூன்று தங்கைகளை கஷ்டப்பட்டு வளர்க்கும் அண்ணன். அதில் இரண்டு பேர் அண்ணனிடம் சம்மதம் கேட்காமல் தஙகள் துணையைத் தேர்ந்தெடுக்கிறார்கள்

குங்குமத்தேர்: காதல், ஊரில் எதிர்ப்பு.

குயிலே குயிலே: ஓவியம் வரையும் ஒருவன்.

மணல் நதி: காசிக்கு யாத்திரை போகும் சீனிவாசன். சீனிவாசன் என்ற பெயர் உள்ள ஒருவர் அவ்வப்போது பாலகுமாரன் கதைகளில் வருவார். எப்போதுமே அவர் ஐயர்தான். ஹிந்து மத சடங்கு, சம்பிரதாயம், மந்திரம் பற்றி எல்லாம் பேசுவார். அது பாலகுமாரனேதான் என்பதைப் புரிந்து கொள்ள பெரிய மூளை ஒன்றும் தேவையில்லை…

மரக்கால்: கால் போன ஒரு இளைஞன், வாழ்க்கையில் முன்னேறினாலும் பெண்கள் என்ன நினைப்பார்களோ என்ற பயம் இருக்கிறது. பரவாயில்லை.

மீட்டாத வீணை: அப்பாவால் கைவிடப்பட்ட குடும்பம். பையனும் பெண்ணும் துடிப்பாக இருக்கிறார்கள். அம்மா ராமா ராமா என்று கனவுலகில். டைம் பாஸ்…

முந்தானை ஆயுதம்: அக்கா கல்யாணம் ஆன பிறகும் தன் முன்னாள் காதலன், இந்நாள் வெற்றி அடைந்த சினிமா இயக்குனரோடு ஓடிப் போகிறாள். தங்கை வாழ்க்கைப்பட்ட குடும்பத்தில் நன்றாக ஒட்டிக் கொள்கிறாள். சுமார், படிக்கலாம்.

நெல்லுக்கு இறைத்த நீர்: இசை வேளாளர் குடும்பத்திலிருந்து படித்து வரும் முதல் ஆள்; முறைப் பெண்ணையும் படிக்கத் தூண்டுகிறான். இருவரையும் இணைய விடாமல் செய்வது செயற்கையாக இருக்கிறது.

நேற்று வரை ஏமாற்றினாள்: கணவன் கணேசன் மனைவியைப் புரிந்து நடந்து கொள்கிறான். கதை வந்த காலத்தில் நிச்சயமாக நாலு கல்யாண வயசுப் பெண்கள் கணேசன் மாதிரி ஒருவனை நினைத்து பெருமூச்சு விட்டிருப்பார்கள்.

நிலாவே வா: மன வளர்ச்சி இல்லாத ஒரு பையனை வைத்து பிச்சை எடுத்துப் பிழைக்கும் கிழவி. அவளிடமிருந்து அந்தப் பையனைக் காப்பாற்றும் நிருபன். அந்த மாதிரிப் பிள்ளைகளுக்காக ஒரு இல்லம் நடத்தும் விதவைப் பெண். படிக்கலாம்.

பச்சை வயல் மனது: கல்யாணம் ஆகாத மூன்று சகோதரிகள். மாப்பிள்ளைக்கு விளம்பரம் கொடுத்துவிட்டு ஒரு சின்ன விளையாட்டு என்று ஆரம்பிக்கிறார்கள். பஸ்ஸில் படிக்கலாம்.

பலா மரம்: சிறுவர் சீர்திருத்தப் பள்ளியை திருத்தப் பாடுபடும் அதிகாரி

பணம்காய்ச்சி மரம்: ஓவியர் தன் திறமையால் பணக்கஷ்டத்திலிருந்து மீள்கிறார்.

பழமுதிர்குன்றம்: நீங்கள் மலை என்று நினைப்பது 800 அடிக்கு குறைவாக இருக்கிறது, அதனால் ஊர் பேரை பழமுதிர்மேடு என்று மாற்ற வேண்டும் என்று ஆங்கிலேய சர்வேயர் சொல்ல, ஊர் மலைக்கு மேல் பாறைகளை ஏற்றி பத்தடி உயரத்தை அதிகப்படுத்துகிறது.

பொய்மான்: சின்ன வயதில் காதலில் தோற்று பின்னால் வென்ற கதை. ஏறக்குறைய சூரியவம்சம் திரைப்படம் மாதிரி இருக்கிறது.

சிநேகமுள்ள சிங்கம்: காலேஜ் அரசியலில் கொலை செய்துவிட்டு ஜெயிலுக்குப் போகும் பாண்டியன் திரும்பி வந்து மீண்டும் காலேஜ் அரசியலில் மாட்டிக் கொள்கிறான். கதைப்பின்னல் சரியில்லை. ஆனால் சீன் சீனாகப் பார்த்தால் நல்ல சீன்கள் இருக்கின்றன – தலைவரை காலேஜுக்கு அழைப்பது, கவிதை பாடுவது எல்லாம் நன்றாக வந்திருக்கின்றன.

தெம்மாங்கு ராஜ்ஜியம்: கதை யாரைப் பற்றியது என்ற முடிவை நடுவில் மாற்றிவிட்டார் என்று நினைக்கிறேன். ஜெயிலில் வாத்தியாராக இருக்கும் ஒருவனைப் பற்றி கதை ஆரம்பிக்கிறது. மூன்றாவது சாப்டரில் அது ஒரு கைதியின் கதையாக மாறிவிடுகிறது. கைதி ஒரு கைநாட்டு, கிராமத்தில் அவனை ஏமாற்றி நிலத்தை பிடுங்குகிறார்கள். அவன் வீட்டுப் பெண்களை நாசம் செய்வோம் என்று மிரட்டும்போது அவன் கொலை செய்துவிட்டு மீண்டும் ஜெயிலுக்கே திரும்புகிறான். பஸ்ஸில் படிக்கலாம்.

திருமணத் தீவு: கொஞ்சம் கஷ்டத்திலிருக்கும், அப்பா கடனை அடைக்கப் பாடுபடும் டீச்சர் தமயந்தி கஷ்டத்திலிருக்கும் இன்னொரு பையனோடு இணைகிறாள். படிக்கலாம்.

தொட்டால் பூ மலரும்: சுயமாகத் தொழில் செய்யும் இரண்டு இளைஞர்கள். குடும்பங்கள் இணைகின்றன. சில சித்தரிப்புகள் நிஜமாக இருக்கின்றன. படிக்கலாம்.

வன்னி மரத் தாலி: அம்மாவை மிதிக்கும் அப்பா கையை உடைத்து அதற்காக ஜெயிலுக்கு போன பையன் பிரம்பு பின்னுவதைக் கற்றுக் கொள்கிறான். அம்மனுக்கு சீரியல் செட் போட பிரம்பில் சட்டம் செய்யும்போது ஒரு பெண்ணுடன் பேசிப் பழகி… மோசம் என்று சொல்வதற்கில்லை.

வேட்டை: என்னவோ ஒரு வெட்டிக்கதை. இதற்கெல்லாம் கதைச்சுருக்கம் வேறு எழுத வேண்டுமென்றால் போரடிக்கிறது.

வில்வமரம்: நடுத்தரக் குடும்பம். அக்காவுக்கு அறுபதுகளில் கல்யாணம் ஆகிறது. அப்போதே கணவனுக்கு ஆயிரத்தைநூறு ரூபாய் சம்பளம். பிறந்த வீட்டில் ஏழ்மை. தங்கச்சிகள், தம்பிகள் படித்து வேலைக்குப் போய் செழிப்பாக இருக்கிறார்கள். அக்காவுக்கு இப்போது பொறாமை. அண்ணன் தங்கைக்குள் வசதிகள் மாறும்போது ஏற்படும் ஆங்காரத்தை அருமையாக எழுதி இருக்கிறார். கதையில் ஓட்டைகள் உண்டு, ஆனாலும் படிக்கலாம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: பாலகுமாரன் பக்கம்