மணிபால்

எனக்கு பேஸ்பால் குன்ஸாகத்தான் புரியும். மணிபால் (Moneyball) பேஸ்பால் புள்ளிவிவரங்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டிருக்கும் புத்தகம். At bat, on base என்று நிறைய சொல்கிறார். இதெல்லாம் என்ன என்றே எனக்கு சரியாகத் தெரியாது. இருந்தாலும் புத்தகத்தை ரசித்துப் படித்தேன்.

புத்தகம் ஓக்லாண்ட் ஏ (Oakland A) பேஸ்பால் அணி பற்றியது. குறிப்பாக அதன் ஜெனரல் மானேஜர் பில்லி பீன் (Billy Beane) எப்படி அந்த அணியை குறைந்த பணத்தை வைத்துக் கொண்டு ஒரு வலுவுள்ள அணியாக மாற்றினார் என்பதைப் பற்றியது.

நம்மூரில் கிரிக்கெட்டுக்கு ஐபிஎல் போலத்தான் அமெரிக்காவில் பேஸ்பாலுக்கு மேஜர் லீக் பேஸ்பால். முப்பது அணிகள் விளையாடுகின்றன. நியூ யார்க் யாங்கீஸ் போன்ற அணிகளிடம் நிறைய பணம் உண்டு. அவர்களால் சிறந்த விளையாட்டு வீரர்களை சுலபமாக “வாங்க” முடிகிறது. ஓக்லாண்ட் ஏ அணியிடம் பணம் மிகக் குறைவு.

பில்லி பீன் சிறந்த விளையாட்டு வீரர் என்றால் என்ன என்று கேள்வி கேட்க ஆரம்பிக்கிறார். பதிலைக் கண்டுபிடிக்க பால் டிபோடெஸ்டாவின் (Paul DePodesta) உதவி கிடைக்கிறது. புள்ளிவிவரங்களை வேறு கோணத்தில் பார்க்க ஆரம்பிக்கிறார்கள். அன்று வரை முக்கியமாக இருந்த சராசரி (batting average) மட்டுமில்லாமல் பிற விவரங்களையும் கவனிக்க ஆரம்பிக்கிறார்கள். ஒவ்வொரு புள்ளிவிவரமும் அந்த வீரரைப் பற்றி நமக்கு என்ன சொல்கிறது, ஆட்டத்தில் வெற்றி பெறும் வாய்ப்பை அதிகரிக்கிறதா இல்லையா என்று மறுபரிசீலனை செய்கிறார்கள்.

பேஸ்பால் அணிகள் புதிய வீரர்களை – பள்ளிகளில், கல்லூரிகளில் விளையாடிக் கொண்டிருப்பவர்கள் – பற்றி ஆராய்வதற்காக “baseball scouts”-களை வேலைக்கு வைத்திருக்கின்றன. இவர்கள் ஊர் ஊராகப் போய் அங்கே கல்லூரி/பள்ளிகளுக்குள் நடக்கும் போட்டிகளைப் பார்த்து அவர்கள் கண்ணில் யார் நன்றாக வரக் கூடியவர்கள் என்பதை முடிவு செய்பவர்கள். இது அனேகமாக அவர்களுடைய ஜட்ஜ்மென்ட். இதையும் மாற்றுகிறார்கள். புள்ளிவிவரங்களுக்கு முக்கியத்துவம் தருகிறார்கள். பள்ளிப் போட்டிகளை விட கல்லூரிப் போட்டிகள் அதிகம் நடப்பதால் கல்லூரிப் போட்டிகள் statistically significant என்று கல்லூரி வீரர்களை அதிகமாக சேர்க்கிறார்கள்.

எந்தப் புது முயற்சிக்கும் எதிர்ப்பு இருக்கத்தான் செய்யும். இதற்கும் அப்படித்தான். ஆனால் விடாமல் போராடி இந்த அணுகுமுறையில் விளையாட ஆரம்பிக்கிறார்கள். மீண்டும் மீண்டும் playoffs வரை போகமுடிகிறது. இன்னும் போட்டியை வெல்லவில்லை.

பேஸ்பால் விளையாட்டை ஒரு அறிவியலாக (science) மாற்றி இருக்கிறார்கள். அந்த அணுகுமுறையை புரிந்து கொள்ள நமக்கு பேஸ்பால் பற்றி பிரமாதமாக தெரிய வேண்டியதில்லை. நான் ரசித்துப் படித்தேன். நீங்களும் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

மைக்கேல் லூயிஸ் 2003-இல் எழுதி இருக்கிறார். பிராட் பிட் (Brad Pitt) நடித்து திரைப்படமாகவும் வந்தது. திரைப்படமாக பார்ப்பது இன்னும் சுலபம்.

Flash Boys (2014) இன்னுமொரு சிறந்த புத்தகம். பங்கு சந்தையில் சில நொடிகள், சில மில்லி நொடிகள் இடைவெளியில் யார் எதை வாங்குகிறார்கள், விற்கிறார்கள் என்று கண்டுபிடித்து அவற்றை அவர்களுக்கு முன்னால் வாங்கி விற்று பில்லியன்கள் கணக்கில் பணத்தை சுருட்டும் பற்றிய High Frequency Trading புத்தகம்.

பின்குறிப்பு: நான் படித்த இன்னொரு புத்தகம் Coach. தவிர்க்கலாம். அதிஉணர்ச்சிவசப்படும் ஒரு பள்ளி விளையாட்டு கோச்சிடம் கற்ற வாழ்க்கைப்பாடங்கள்.


தொகுக்கப்பட்ட பக்கம்: அபுனைவுகள்