பரிந்துரை: ஜெயமோகனின் “கந்தர்வன்”

இன்று படித்த சிறுகதை – கந்தர்வன்.

என்னைக் கவர்ந்த அம்சங்கள்:

சங்கட ஹர்ஜி! ஹர்ஜ் என்பது ஹிந்தியில் புழக்கத்தில் இருக்கும் வார்த்தை. எங்களுக்கு சங்கடங்கள் இருக்கின்றன என்று விண்ணப்பித்துக் கொள்கிறார்களாம். ஒரு பிராதை அரசனிடம் சேர்ப்பதில் எத்தனை பிரச்சினைகள்! சாமி முன்னால் நின்று வரம் கேட்பதற்கு முன் ஆயிரம் பூசாரிகளைத் தாண்ட வேண்டி இருக்கிறது. இன்றும் அப்படித்தானே! இதை மிகச் சிறப்பாக சித்தரிக்கிறார்.

நுண்விவரங்கள்: காராய்மைக்காரர் (விவசாயி) vs ஊராய்மைக்காரர் (ஊர் அதிகாரி?) சங்கட ஹர்ஜியில் அத்தனை பூசாரிகளையும் அரசனையும் புகழ வேண்டி இருக்கிறது. வரி கட்டுவதில் பிரச்சினைகள் மட்டுமல்ல, அனுகூலங்களும் இருக்கின்றன. கோவிலிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டவனுக்கு கொள்ளி போட்டால் முதல் மரியாதை கிடைக்க நல்ல வாய்ப்பு. வெள்ளிக் கண்டிகை குலச்சின்னம், ஜாதிச் சின்னமாக இருப்பது. சொல்லிக் கொண்டே போகலாம். மெய்நிகர் உலகத்தை உருவாக்கி இருக்கிறார்.

எனக்கு பெரிய மானிட தரிசனம் கிடைக்கவில்லை என்பதையும் பதிவு செய்துவிடுகிறேன். ஜெயமோகன் கதையின் முடிச்சு பெரிய தரிசனம் தரும் என்று நினைத்திருக்கலாம். அதிலும் முருகப்பனின் உருவத்தைப் பற்றிய சிறு சித்தரிப்பு (இழுத்து இழுத்து நடப்பது, குலுங்கும் தொந்தி), இளைஞன் அணஞ்ச பெருமாள் ஊரில் பெண்களின் கனவுக் கண்ணனாக இருப்பதைப் பற்றி பெரிய விவரிப்பு இரண்டையும் அப்படி மானுட தரிசனம் தர வேண்டும் என்பதற்காகவே எழுதி இருக்கலாம். எனக்கு இவை இரண்டிலும் தொழில் நுட்பத் திறமை மட்டும்தான் தெரிகிறது.

நானும் எப்படியாவது மீண்டும் படிக்க ஆரம்பித்துவிட வேண்டும் – ஒரு நாளைக்கு அரை மணி நேரமாவது – என்று பார்க்கிறேன். ஒரு நாள் படித்தால் அடுத்த ஒன்பது நாள் படிக்க முடிவதில்லை. இந்த மாதிரி நாலு கதை வந்தால் எண்ணம் நிறைவேறிவிடும் என்று நினைக்கிறேன்.


கந்தர்வனின் தொடர்ச்சியாக இந்த சிறுகதை – யட்சன். நன்றாகத்தான் இருக்கிறது, ஆனால் என்னைப் பொறுத்த வரை இதன் கவர்ச்சி என்பது இது கந்தர்வனின் தொடர்ச்சியாக இருப்பதுதான்.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஜெயமோகன் பக்கம்

எழுத்தாளர் கந்தர்வனின் டாப் டென் தமிழ் நாவல்கள்

  1. மோகமுள் – தி. ஜானகிராமன் மிக அருமையான புத்தகம். அந்த கால கும்பகோணத்தின் தூசியை இதன் பக்கங்களில் சுவாசிக்கலாம்.
  2. தலைமுறைகள் – நீல. பத்மநாபன்
  3. சாயாவனம் – சா. கந்தசாமி சிறு வயதிலேயே என்னை கவர்ந்த இலக்கியத்தரம் வாய்ந்த புத்தகம்.
  4. மலரும் சருகும் – டி. செல்வராஜ் படித்ததில்லை.
  5. கோபல்ல கிராமம் – கி. ராஜநாராயணன் மிக அருமையான புத்தகம். ராஜநாராயணனின் பல புத்தகங்கள் அருமையானவை.
  6. கடல்புரத்தில் – வண்ணநிலவன் படிக்கலாம், ஆனால் எல்லாரையும் போல் நான் இந்த புத்தகத்தை சிலாகித்து சொல்ல மாட்டேன்.
  7. கீறல்கள் – ஐசக் அருமைராஜன் கேள்விப்பட்டதே இல்லை.
  8. புத்தம் வீடு – ஹெப்சியா ஜேசுதாஸன் நல்ல புத்தகம்.
  9. பொய்த்தேவு – க.நா. சுப்ரமணியம்
  10. கோவேறுகழுதைகள் – இமையம் படித்ததில்லை.

நண்பர் ராஜனுக்காக கந்தர்வனின் ஒரு சிறுகதை

கந்தர்வன் எழுதிய இந்தக் கதையின் சுட்டி நண்பர் திருமலைராஜனுக்காக. மதமாற்றத்தைப் பற்றி பெரிய கவலைகளும் கோபமும் உள்ளவர் அவர்.

மரியம்மா டீச்சர் போன்றவர்களை (ஓரிருவரே) நானே பார்த்திருக்கிறேன். கந்தர்வனின் தத்ரூபமான சித்தரிப்பால் இவரை, இவரது மனநிலையை புரிந்துகொள்ள முடிகிறது. டீச்சரை அவர் “வில்லியாக” சித்தரிக்கவில்லை, ஆனால் அவரது அதீத நம்பிக்கையை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார். திறமையாக எழுதப்பட்ட கதைதான், ஆனால் என் anthology-யில் வராது.

ஆனால் நான் படித்த பள்ளிகளில் – கிருஸ்துவ பள்ளிகளில் கூட – மத மாற்றத்துக்கான அழுத்தம் இருந்ததில்லை என்பதையும் சொல்லிவிடுகிறேன். சின்ன அளவில் – தேவபிதா எந்தன் மேய்ப்பனல்லோ என்று சில சமயம் காலை ப்ரேயரின்போது பாட வைப்பது, எப்போதாவது பைபிள் கிளாஸ் நடத்துவது என்று சில விஷயங்கள் உண்டு. நான் படித்த கிருஸ்துவ பள்ளிகள்: செய்யூரில் ஒரு பள்ளி (பேர் நினைவில்லை), தாம்பரம் கார்லி பள்ளி, செங்கல்பட்டு செயின்ட் ஜோசஃப் பள்ளி.