பதின்ம வயதில் எழுந்த கேள்விக்கு காந்தியின் பதில்

சிறு வயதில் என் அம்மா கோவிலுக்குப் போனால் லேசில் வீட்டுக்கு வரமாட்டாள். ஒரே பக்தி மயம். அதன் எதிர்விளைவாகத்தானோ என்னவோ பிள்ளைகள் யாரும் பெரிய பக்திசீலர்களாக இல்லை. அதிலும் பதின்ம வயதில் எல்லாம் அறிந்த கடவுளிடம் எனக்கு இதைக் கொடு அதைக் கொடு என்று பிரார்த்திப்பது, வட்டக் குதத்தை வல்வேல் காக்க வேண்டுவது எல்லாம் பொருளற்ற செயல்களாகத் தெரிந்தன. கடவுள் எனக்கு இதுதான் சரி என்று தீர்மானித்துவிட்டால் அவரிடம் பிரார்த்தனை செய்தால் அதை மாற்றிவிடுவாரா? “பக்தோவிஹாரிணி மனோஹர திவ்ய மூர்த்தே” என்று ஜால்ரா அடித்தால் நாட்டாமை தீர்ப்பை மாற்றி சொல்லிவிடுவார் என்றால் அவர் என்ன விதமான நாட்டாமை? இந்த மாதிரி கேள்விகளுக்கு பதிலே இல்லை. இருந்தாலும் பழக்கதோஷம், சில சமயம் நம் கையை மீறிய விஷயம் என்றால் எப்போதாவது அது வேண்டும் இது வேண்டும் என்று பிரார்த்தித்திருக்கிறேன்.

சமீபத்தில் காந்தியின் பதில் கிடைத்தது.

பிரார்த்தனை என்னத்திற்கு? ஆண்டவன் ஒருவன் இருந்தால் நம்முடைய விஷயம் அவனுக்குத் தெரியாதா? அவனுக்கு நாம் சொல்லித்தான் தெரிய வேண்டுமா? அவன் செய்ய வேண்டியதை நாம் அவனுக்கு சொல்லிக் காட்ட வேண்டுமா?

இல்லை. ஆண்டவனுக்கு நாம் நினைவூட்ட வேண்டியதில்லை. அவன் வெகு தூரத்தில் இல்லை. நமக்குள்ளேயே இருக்கிறான். அவன் அனுமதியின்றி எதுவும் நடப்பதில்லை. நம்முடைய பிரார்த்தனை நம்முடைய உள்ளத்தை சோதிப்பதற்காகவேதான் அவசியமாகிறது. ஆண்டவனுடைய அருள் இன்றி நாம் ஒன்றுமே செய்து முடிக்க இயலாது என்பதை பிரார்த்தனையினால் நமக்கு நாம் நினைவூட்டிக் கொள்கிறோம்.

எந்த முயற்சியும் பிரார்த்தனையின்றி செய்தால் அது முயற்சியாகாது. ஆண்டவனுடைய அருள் கிட்டாமல் மனிதனுடைய எந்தப் பெருமுயற்சியும் ஒரு பயனும் பெறாது என்பதை நாம் உணர வேண்டும். இந்த அடக்கத்தைப் பெறுவதற்கு பிரார்த்தனை செய்கிறோம். உள்ளத்தில் உள்ள அழுக்கை துடைப்பதற்காகவே இதை செய்ய வேண்டும்

– ஹரிஜன் பத்திரிகை, ஜூன் 8, 1935, ராஜாஜியின் மொழிபெயர்ப்பு.

அதுவும் சில துயரங்களால் எனக்கு படிப்படியாக கடவுள் நம்பிக்கை போயேவிட்டது. கடவுள் என்று யாராவது இருந்தால் அவர் நம்மைப் போன்ற எறும்புகள் வாழும் புற்றுகளில் நடந்து செல்லும் மதயானையே, அவருக்கு நம்மைப் போன்ற எளியவர்களைப் பற்றி எல்லாம் பிரக்ஞையே இல்லை என்றுதான் கருதுகிறேன். அப்படி பிரக்ஞை இருந்தால் மனித வாழ்வில் இத்தனை துக்கங்கள் ஏன்? ஜாப் எதற்காக இத்தனை கஷ்டப்பட வேண்டும்? ஏதோ பழக்கதோஷத்தினால் ஆண்டவா பிள்ளையாரே என்று அவ்வப்போது மனதுக்குள் குரல் எழும், எப்போதாவது கோவிலுக்கு போகிறேன், அவ்வளவுதான்.

ஆனால் இந்த மாதிரி பிரார்த்தனை – உள்ளத்தில் உள்ள அழுக்கைப் போக்குவதற்காக, எந்தப் பெருமுயற்சியும் தனி ஒருவனாக என்னால் மட்டுமே முடியாது என்ற அடக்கத்தை பெறுவதற்காக – எனக்கும் அப்பீல் ஆகிறது. காந்தியின் தெய்வ நம்பிக்கையே எனக்கும் உகந்ததாக இருக்கிறது…

தொகுக்கப்பட்ட பக்கம்: காந்தி பக்கம்

ராமநவமிக்காக: முஸ்லிம்களும் ராமநாமமும்

காந்தியின் ராமநாம பஜனைகளில் முஸ்லிம்கள் பங்கு பெறுவது பற்றி அன்றைய முஸ்லிம்களுக்கு தயக்கம் இருந்திருந்த்தால் வியப்பில்லை – “காஃபிர்களோடு” சேர்ந்து வழிபடுவதா என்று தயங்கி இருக்கலாம். அதுவும் பஜனைகளில் ராமனின் உருவப்படம் இருந்துவிட்டால் நிறையவே தயங்கி இருக்கலாம். ஆனால் சில ஹிந்துக்களும் ஆட்சேபித்திருக்கிறார்கள் போலிருக்கிறது. காந்தியின் பதில், ஏப்ரல் 28, 1946 ஹரிஜன் இதழில், ராஜாஜி மொழிபெயர்ப்பு.

ஹிந்துக்களுக்குத்தான் ராமனும் ராமநாமமும், முஸல்மான்களுக்கு அதில் ஏது இடம் என்று யாரேனும் ஆட்சேபிக்கும்போது எனக்கு சிரிப்பு வருகிறது. முஸல்மான்களுக்கு வேறு ஆண்டவன், நமக்கு வேறு ஆண்டவனா? முஸல்மான்களுக்கும் ஹிந்துக்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் பார்ஸியர்களுக்கும் அனைவருக்குமே ஒரே ஒரு ஆண்டவன், எங்கும் நிறைந்து சர்வ வல்லமையும் கொண்டுள்ள ஒரே ஈசனுக்கு பல நாமங்களிட்டு இறைஞ்சி வருகிறோம்.

நான் ‘ராமன்’ என்பது அயோத்தியில் ஆண்ட தசரதனுடைய குமாரனாகிய அந்த சரித்திர ராமன் அல்ல. காலத்துக்கு அப்பால், பிறப்பற்று, ஒரே பொருளாக எப்போதும் நிற்கும் கடவுளைத்தான் நான் ராமன் என்று அழைத்து வருகிறேன். அவனுடைய அருளைத்தான் நான் நாடி வருகிறேன். நீங்களும் அதைத்தான் நாட வேண்டும். ஆனபடியால் முஸல்மான்களாவது வேறு யாராவது என்னுடன் சேர்ந்து ராமனை வழிபடுவதில் என்ன குற்றம்? நான் ‘ராம்’ என்று சொல்லும்போது என்னுடைய முஸல்மான் சகோதரன் ‘அல்லா’ என்றும் ‘குதா’ என்றும் மனதுக்குள் சொல்லி தியானிக்கலாம். அதனால் என் பூஜையோ, பஜனையோ கெட்டுப் போகாது.

ராம் என்பது கடவுளை நான் அழைக்கும் பெயர், பஜனை என்பது கடவுள் வழிபாடு, கூட்டு பஜனை என்பது நாம் அனைவரும் நமக்குத் தெரிந்த வகையில் கடவுளை வழிபடுவது மட்டுமே, என் வழிபடுமுறையை உன் மேல் புகுத்துவதோ அல்லது உன் வழிபடுமுறையை என் மேல் புகுத்துவதோ அல்ல, கூட்டாக வழிபடும்போது மத நல்லிணக்கம் பெருகும் என்பதை இதை விட சிம்பிளாக சொல்லிவிட முடியாது.

தொகுக்கப்பட்ட பக்கம்: காந்தி பக்கம்

வக்காளி இந்தாளு மனுசந்தானா?

(மீள்பதிவு, காந்தி நினைவு நாளான ஜனவரி 30 அன்று மீள்பதிக்க நினைத்திருந்தேன், தவறிவிட்டது)

சமீபத்தில் படித்த கட்டுரை. மனதைக் கவர்ந்த ஒன்று.

டூஃபான் ரஃபாய் 1921-இல் ஏழை பக்கிரி குடும்பத்தில் பிறந்தவர். காந்தியை சிறு வயதில் சந்தித்திருக்கிறார். இரண்டு விரல்களை ஒரு விபத்தில் இழந்துவிட்டார். எப்படியோ கலை பயின்றிருக்கிறார். வேலைக்குப் போயிருக்கிறார், ஓய்வும் பெற்றுவிட்டார். ஓய்வு பெற்ற பின்னர், 1979 வாக்கில், அவருக்கு 58-59 வயது இருக்கும்போது ஒரு பழைய புத்தகக் கடையில் அவர் கண்ணில் தற்செயலாகப் பட்ட ஒரு சிறு புத்தகம் – வனஸ்பதியோன் நூ ரங் – அவரது வாழ்க்கையை மாற்றிவிட்டது. காந்தி எழுதிய புத்தகம்! எதைப் பற்றி? இயற்கை மூலப் பொருட்களைக் கொண்டு, வேதிப் பொருட்கள் (chemicals) சேர்க்காமல் வண்ணங்களை உற்பத்தி செய்வது பற்றி! கதர் துணிகளுக்கு செயற்கைச் சாயங்களை வைத்து வண்ணம் தருவதை காந்தி விரும்பவில்லையாம், அதனால் இயற்கைச் சாயங்களைப் பற்றி யோசித்து இந்தப் புத்தகத்தை எழுதி இருக்கிறார். டூஃபானுக்கு இந்தப் புத்தகம்தான் கீதை, குரான், பைபிள் எல்லாமே.

புத்தகம் கண்ணில் பட்ட நாளிலிருந்து டூஃபான் இலை, வேர், மரப்பட்டை, பூ, வெங்காயச் சருகு, மாதுளம் விதை இன்ன பிறவற்றிலிருந்து சாயங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். அவற்றை வைத்து ஒரு புடவைக்கு வண்ணம் கொடுத்திருக்கிறார். அது இந்திரா காந்தியிடம் போய்ச் சேர்ந்திருக்கிறது. டூஃபானுக்கும் அவரது சாயங்களுக்கும் கிராக்கி அதிகரித்துக் கொண்டே போயிருக்கிறது. அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளுக்குச் சென்று சாயம் தயாரிப்பது, துணிகளுக்கு வண்ணம் தருவது ஆகியவற்றை கற்றுத் தந்திருக்கிறார். முன்னூறுக்கும் மேற்பட்ட இயற்கைச் சாயங்களை உருவாக்கி இருக்கிறார். ஒரு சாயம் பசு மூத்திரத்திலிருந்து!

92 வயதில்தான் – மூன்று நான்கு வருஷங்களுக்கு முன்னால்தான் இறந்திருக்கிறார். அவரது பேட்டியை, குறிப்பாக பள்ளி மாணவனாக காந்தியை சந்தித்தது பற்றிய பகுதியைத் தவற விடாதீர்கள்! காந்தி ‘ஏண்டா என் உயிரை வாங்குகிறாய்’ என்று அலுத்துக் கொள்வதும், ஏழைச் சிறுவன் ஒரு தொப்பிக்கு மேல் ஒருவரிடம் எப்படி இருக்க முடியும் என்று குழம்புவதும் மிக அருமையாக விவரிக்கப்படுகின்றன.

காந்தியைப் பற்றிய வியப்பும் பிரமிப்பும் அதிகரித்துக் கொண்டே போகின்றன. தலைக்கு மேலே வேலை, இந்தியா மாதிரி பெரிய நாட்டின் பெரிய பிரச்சினைகள் தோள் மேலே பாரமாகக் குவிந்திருக்கின்றன, இத்தனைக்கு நடுவில் இந்தாள் மலம் அள்ளுவது, துணிக்கு சாயம் போடுவது, இயற்கை வைத்தியம், கதர், ராட்டை என்றெல்லாம் யோசித்து அதை செயல்படுத்தியும் இருக்கிறார்! அவரது சிந்தனைகளின் தாக்கத்தால் எத்தனை பேர், எத்தனை துறைகளில் இப்படி மன நிறைவோடு சாதித்திருக்கிறார்கள்! வனஸ்பதியோன் நூ ரங் புத்தகத்தைப் படித்தேன், அதில் உள்ள கருத்துக்களை செயல்படுத்தினேன், அவ்வளவுதான் என் வாழ்க்கை, என் சாதனை என்று ரஃபாய் சாப் சொன்னதைப் படித்ததும் மனதில் ஆங்கிலத்தில் politicaly incorrect வாக்கியம் ஒன்றுதான் ஓடிற்று. அதைத்தான் ‘வக்காளி இந்தாளு மனுசந்தானா!’ என்று தமிழ்ப்படுத்தி இருக்கிறேன். 🙂

வாழ்க்கை மிக எளிமையானது, சுலபமானது, அற்புதமானது. அதை காந்தி முழுமையாக உணர்ந்து வாழ்ந்திருக்கிறார். நம் போன்ற சராசரிகள்தான் வாழ்க்கையை சிக்கலாக்கிக் கொள்கிறோம், நம்மால் முடிந்தவற்றில் ஒரு சதவிகிதம் கூட செய்வதில்லை.

தொகுக்கப்பட்ட பக்கம்: காந்தி பக்கம்

தொடர்புடைய சுட்டி: டூஃபான் ரஃபாயின் பேட்டி

“நான் ஏன் காந்தியைக் கொன்றேன்?” – கோட்சேயின் விளக்கம்

(மீள்பதிவு)

nathuram_godseகோட்சேயின் விளக்கத்தை நான் 200% நிராகரிக்கிறேன். ஆரம்பப் புள்ளி தவறானது என்றால் அதன் மேல் கட்டப்படும் எந்த வாதமும் சரியாக இருக்கப் போவதில்லை. காந்தி எப்போதும் தன் அரசியலை நடைமுறை அரசியலை விட உயர்ந்த தளத்தில் வைத்திருக்க முயன்றார் என்பதை கோட்சேயால் புரிந்து கொள்ள முடியவில்லை.

ஆனால் கோட்சேயின் வாதங்கள் முக்கியமானவை, ஆவணப்படுத்தப்பட வேண்டியவை என்று கருதுகிறேன். அவற்றைப் படிக்கும்போது காந்தியின் தளமே வேறு, அவர் எப்பேர்ப்பட்ட மாமனிதர் என்பது இன்னும் நன்றாகப் புரிகிறது. ஏதோ என்னாலானது அதற்கு சுட்டி தந்திருக்கிறேன்.


தொகுக்கப்பட்ட பக்கம்: காந்தி பக்கம்

காந்தி-சுபாஷ் போஸ் தகராறுகள்

காந்திக்கும் சுபாஷ் சந்திர போசுக்கும் முப்பதுகளின் இறுதியில் ஒத்துப் போகவில்லை. சுபாஷுக்கு காந்தி மீது எக்கச்சக்க மதிப்பும் மரியாதையும் இருந்த போதிலும் காந்தியின் நிதானப் போக்கைப் பொறுத்துக் கொள்வது கடினமாக இருந்தது. காந்தி சுபாஷின் அவசரப் போக்கு இளைஞர்களை தவறான பாதைக்கு செலுத்திவிடும், விபரீதத்தில் கொண்டுபோய்விடும் என்று நினைத்திருக்கிறார். சுபாஷின் எண்ணங்களும் நேருவின் எண்ணங்களும் ஒத்துப் போனாலும் காந்தி முகாமிலிருந்து விலகி வேறொருவரை ஆதரிப்பது என்பது நேருவுக்கு சாத்தியமே இல்லை. நேருவே இப்படி என்றால் படேல், ராஜாஜி, ராஜேந்திர பிரசாத் போன்றவர்களைப் பற்றி சொல்லவே வேண்டாம்.

1938-இல் சுபாஷ் காங்கிரஸ் தலைவராக ஆனபோது கூட இந்தப் பூசல் பெரிதாக வெடிக்கவில்லை. ஆனால் 1939-இலும் சுபாஷ் தலைவர் பதவிக்குப் போட்டி இட்டபோது காந்தி அவருக்கு எதிராக பட்டாபி சீதாராமய்யாவை நிறுத்தினார். பட்டாபியின் தோல்வி தனது தோல்வி என்று வெளிப்படையாக அறிவித்தார். படேல் சுபாஷுக்கு ஓட்டு போடுவது நாட்டுக்குத் தீமை, தேசத் துரோகம் என்றே சொல்லி இருக்கிறார். இருந்தாலும் சுபாஷ் ஜெயித்தார். அவர் ஜெயிக்க முத்துராமலிங்கத் தேவர் பெரும் உதவியாக இருந்தாராம்.

பிரச்சினை பூதாகாரமாக வெடித்திருக்கிறது. ஜபல்பூர் அருகில் உள்ள திரிபுரியில் காங்கிரஸ் மாநாடு நடந்திருக்கிறது. காந்தி ஏதோ சமஸ்தானத்தில் சத்தியாக்கிரகம் என்று வரவில்லை போலிருக்கிறது. போசுக்கு உடல்நிலை மோசமாக இருந்திருக்கிறது, இருந்தாலும் வந்து தலைவராக பொறுப்பேற்றிருக்கிறார். இரண்டு கோஷ்டிகளும் முட்டிக் கொண்டிருக்கின்றன. ராஜாஜி அன்றைய மெட்ராஸ் மாகாணத்தின் பிரதமர். (பிரதமர் என்றுதான் அப்போதெல்லாம் சொல்வார்கள்). அவர் காந்தி என்ற படகு பழையதாக இருந்தாலும் பெரியது, உறுதியானது, அனுபவம் உள்ள படகோட்டியால் செலுத்தப்படுவது, சுபாஷ் என்ற புதிய படகு பார்க்க அழகாக இருக்கலாம், ஆனால் ஓட்டைப் படகு என்று மாநாட்டில் பேசி இருக்கிறார். கோவிந்த வல்லப பந்த் காந்தியின் தலைமையே தேவை, அதனால் காரியக் கமிட்டியை அவரே தேர்ந்தெடுக்க வேண்டும் என்று ஒரு தீர்மானம் கொண்டு வந்திருக்கிறார். எம்.என். ராய், மற்றும் நாரிமன் போசுக்கு ஆதரவாக பேசி இருக்கிறார்கள்.

காரியக் கமிட்டி விவகாரம் தீர்வதாக இல்லை. காந்திக்கும் போசுக்கும் கடிதப் போக்குவரத்து நடந்திருக்கிறது. போஸ் எவ்வளவு தூரம் தழைந்து வந்தாலும் காந்தி பிடி கொடுக்கவே இல்லை. போஸ் நான் ஏழு பேரை நியமிக்கிறேன், படேல் எழுவர் பேரைச் சொல்லட்டும் என்று சொல்லிப் பார்த்திருக்கிறார். காந்தி மாற்றுத் தரப்புக்கு இடம் தரவே முடியாது, வேண்டுமென்றால் நீங்களே எல்லாரையும் நியமித்துக் கொள்ளுங்கள் என்று பிடிவாதம் பிடித்திருக்கிறார். நமக்குள் பரஸ்பரம் நம்பிக்கை இல்லை, மரியாதை கூட இல்லை என்று காந்தி எழுதி இருக்கிறார். காந்திக்குத்தான் நம்பிக்கை இல்லை என்றுதான் தோன்றுகிறது.

இந்த நிகழ்ச்சிகளை ‘திரிபுரி முதல் கல்கத்தா வரை‘ என்ற சிறு புத்தகமாக சக்திதாசன் எழுதி இருக்கிறார். முக்கியமான ஆவணம். மின்பிரதியை இணைத்திருக்கிறேன். கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

பின்குறிப்பு: ஷ்யாம் பெனகலின் ‘நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்’ படம் மரண மொக்கை. தவிருங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: வரலாறு

நேருவைப் பற்றி காந்தியின் செயலாளர்

இன்று நேருவின் 128-ஆவது பிறந்த நாள். நேரு இந்தியா கண்ட மாமனிதர். இன்றைய இந்தியாவின் முக்கியச் சிற்பிகளின் ஒருவர். அவர் குறையே இல்லாத, தவறே செய்யாத மனிதர் அல்லர். ஆனால் அவரது சாதனைகள் அவரது தவறுகளை விட பல மடங்கு அதிகம் என்பது தெள்ளத் தெளிவான உண்மை.

நேரு விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் அல்லர். அப்படி நேருவே நினைத்திருக்க மாட்டார். ஆனால் சமீப காலத்தில் நேருவை எதற்கெடுத்தாலும் குற்றம் சொல்லும் போக்கு பரவலாகிக் கொண்டிருக்கிறது – குறிப்பாக ஹிந்துத்துவர்களிடம். ஏறக்குறைய வன்மம்தான் வெளிப்படுகிறது. கூர்மையான சிந்தனையாளரான அரவிந்தன் நீலகண்டனே ஒரு முறை தமிழகக் கோவில்களில் உள்ள சிற்பங்கள் வெகு அலட்சியமாக சேதப்படுத்தப்படுவதை நேருவிய சிந்தனை முறையின் தாக்கம் என்று குறிப்பிட்டிருந்தார். எல்லாப் பிரச்சினைகளுக்கும் கணவனே காரணம் என்று உறுதியாக நம்பும் மனைவிகளின் நினைவுதான் வந்தது. விமர்சனங்கள் வேறு, வன்மம் வேறு.

விமர்சனங்கள் – அதுவும் வரலாற்று நாயகர்களைப் பற்றிய நடுநிலையான விமர்சனங்கள் – தேவை. வரலாற்று நாயகர்களைப் பற்றிய பிம்பங்கள் பல சமயம் உண்மைக்கு அருகில் இருக்கின்றன, ஆனால் முழு உண்மைக்கு கொஞ்சம் தூரத்தில் இருக்கின்றன. காந்தியின் பிரதம சீடர் என்று கருதப்படும் நேரு காந்தியை விமர்சித்தவர்களில் ஒருவர் என்பது வியப்பளிக்கலாம். நேருவின் தன் சுயசரிதையில் காந்தியை தீவிரமாக விமர்சித்திருக்கிறாராம். காந்தியின் தனிப்பட்ட செயலாளரான (private secretary) மஹாதேவ் தேசாய் நேருவின் சுயசரிதையை ஆங்கிலத்திலிருந்து குஜராத்திக்கு மொழிபெயர்த்திருக்கிறார். அப்படி மொழிபெயர்க்கும்போது தீவிர காந்தி பக்தர்கள் காந்தியைப் பற்றிய விமர்சனங்கள் உள்ள புத்தகத்தை மொழிபெயர்ப்பது காந்திக்கு விரோதமான செயல் என்று தேசாயை குறை சொல்லி இருக்கிறார்கள். நேரு ஆதரவாளர்கள் – குறிப்பாக அன்றைய சோஷலிஸ்டுகள் – தேசாய் நேருவின் எண்ணங்களைத் திரித்துவிடுவார் என்று பயப்பட்டிருக்கிறார்கள். அப்படி என்றால் எத்தனை தீவிரமான விமர்சனமாக இருக்க வேண்டும்?

தேசாய் தன் மொழிபெயர்ப்புக்கு ஒரு முன்னுரை எழுதி இருக்கிறார். மிகச் சிறப்பான முன்னுரை. அதை மட்டும்தான் படித்திருக்கிறேன், இனி மேல்தான் நேருவின் சுயசரிதையைத் தேட வேண்டும். இந்தப் பதிவு அந்த முன்னுரையைப் பற்றித்தான்.

மஹாதேவ் தேசாயின் வார்த்தைகளில் – நேரு தன் சுயசரிதையில்:

காந்திஜியின் செயல்களையும் வேலைத் திட்டத்தையும் தத்துவத்தையும் கடுமையாகத் தாக்கியிருக்கிறார். சில இடங்களில் கண் மூக்கு தெரியாமல் தாக்கி இருக்கிறார்.

ஆனால் தேசாயின் கண்ணில் நேரு எண்ணங்களை விண்ணிலும் பாதங்களை மண்ணிலும் திடமாக வைத்துக் கொண்டிருப்பவர். கருத்து வித்தியாசம் காந்தியையும் அவரை தெய்வமாகக் கொண்டாடியவர்களையும் நேருவையும் பிரித்துவிடவில்லை!

நேரு தடியடியை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை – அப்போது ஓடிவிட வேண்டும் என்ற பயம், திருப்பி அடிக்க வேண்டும் என்ற ஆங்காரம் எல்லாவற்றையும் உணர்ந்திருக்கிறார். மயிரிழையில்தான் தான் தீரத்தோடு அந்த தடியடியை எதிர்கொண்டேன் என்று வெளிப்படையாகச் சொல்கிறார். காந்தியின் மிகப் பெரிய தாக்கமே இதுதான் – தன் தவறுகளை ஒத்துக் கொள்ளும் தைரியம். தன்னால் மாற முடியும், தவறுகளைத் திருத்திக் கொள்ள முடியும் என்ற துணிவுள்ளவர்கள்தான் தவறுகளை ஒத்துக் கொள்ள முடிகிறது. கோழைகள்தான் வரிந்து சப்பைக்கட்டு கட்டுகிறார்கள்.

முன்னுரையிலிருந்து சில வரிகளை அப்படியே கொடுத்திருக்கிறேன்.

ராஜி (compromise) செய்து கொள்வது அவருக்கு (நேருவுக்கு) பிடிக்காத விஷயம். ஆனால் அவரது வாழ்வு முழுவதும் ராஜியாக இருக்கிறது. காந்திஜியின் இணையற்ற துணிவும் ஆண்மையும் ஜவஹரை அவர்பால் இழுக்கின்றன. ஆனால் காந்திஜியின் சமயப் பற்றும் ஆன்மீகப் போக்கும் மேனாட்டுப் முறையில் வளர்ந்த ஜவஹருக்கு விளங்கவில்லை. ஆகையினால் எரிச்சல் உண்டாகிறது.

ஜவஹரும் காந்திஜியைப் பார்த்து ‘அவர் சாதாரண நடைமுறைகளைக் கடந்தவர். மற்றவர்களை நாம் நிதானிப்பது போல அவரையும் நிதானித்து மதிப்பிட முடியாது’ என்று கூறுகிறார். கூறிவிட்டு தானே மதிப்பிடுகிறார்.

ஒத்துழையாமை இயக்கத்தை காந்திஜி நிறுத்தியது ஒழுக்கக் கேடு

அஹிம்சை நமக்குப் பெரிதும் உதவும். ஆனால் அது முடிவான லட்சியத்துக்கு நம்மை அழைத்துச் செல்லுமா என்பது சந்தேகம்தான்.

அவருடைய வீட்டு வாசலில் நிற்கும் ஆயிரக்கணக்கான யாத்திரிகர்களைப் பார்த்து ‘இவர்களையும் இவர்களது முன்னோர்களையும் இந்தியாவின் நாலாமூலையிலிருந்தும் ஆயிரக்கணக்கான வருஷங்களாய் புண்ணிய கங்கையில் நீராடும்படி வரவழைக்கிற இந்த மதம் எவ்வளவு அற்புதமானது’ என்று கூறுகிறார்.

தேசாய் நேருவைப் பற்றி எடை போடுவது:

ஜவஹர் மிகவும் சிக்கலான பேர்வழி. அவர் முரண்பாடுகளின் அதிசயமான கலப்பு. உறுதியும் சந்தேகமும் நம்பிக்கையும் அதன் குறைவும் மதமும் அதன் வெறுப்பும் கலந்தவர். ஓய்வொழிவற்ற உழைப்பும் துன்பமும் துயரமும் நிறைந்த வாழ்க்கை வேறு விதமாக இருக்க முடியாது.

முன்னுரையை இணைத்திருக்கிறேன். (தமிழில் மொழிபெயர்த்தவர் யார் என்று தெரியவில்லை). கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

பின்குறிப்பு: மஹாதேவ் தேசாய் கிட்டத்தட்ட 25 வருஷங்கள் – தான் இறக்கும் வரை – காந்தியின் செயலாளராகப் பணி புரிந்தவர். காந்தியின் செயலாளர் என்றால் சிறை செல்லாமலா? பல முறை சிறைக்கு சென்றிருக்கிறார், சிறையில்தான் இறந்தார். காந்தியின் சுயசரிதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் இவர்தான்.

தொகுக்கப்பட்ட பக்கம்: விடுதலைப் போராட்டம்

தொடர்புடைய சுட்டி: மஹாதேவ் தேசாயின் மகன் நாராயண் தேசாய் காந்தி ஆசிரமத்தில் வளர்ந்ததைப் பற்றி எழுதிய புத்தகம்

புத்தகங்களைப் பற்றி ஒபாமா

Official portrait of President Barack Obama in the Oval Office, Dec. 6, 2012. (Official White House Photo by Pete Souza) This official White House photograph is being made available only for publication by news organizations and/or for personal use printing by the subject(s) of the photograph. The photograph may not be manipulated in any way and may not be used in commercial or political materials, advertisements, emails, products, promotions that in any way suggests approval or endorsement of the President, the First Family, or the White House.
Official portrait of President Barack Obama in the Oval Office, Dec. 6, 2012. (Official White House Photo by Pete Souza)
This official White House photograph is being made available only for publication by news organizations and/or for personal use printing by the subject(s) of the photograph. The photograph may not be manipulated in any way and may not be used in commercial or political materials, advertisements, emails, products, promotions that in any way suggests approval or endorsement of the President, the First Family, or the White House.
புத்தகங்களைப் பற்றி அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா (இந்தப் பதிவு வரும்போது அவர் முன்னாள் ஜனாதிபதியாக மாறி இருப்பார்) கொடுத்த ஒரு பேட்டி கண்ணில் பட்டது. இப்படி புத்தகங்களைப் பற்றி பேசக் கூடிய தலைவர்கள் எல்லாம் இந்தியாவில் காணாமல் போய்விட்டார்களே என்ற வருத்தம் ஏற்பட்டது. மோடி பெரிதாகப் படிப்பதாகத் தெரியவில்லை. ஓ.பி. பன்னீர்செல்வம் புத்தகம் பக்கம் போவாரா என்று தெரியவில்லை. பிற மாகாண முதல்வர்கள் யாராவது வாசிப்பார்களா?

ஒபாமாவே (Dreams of My Father, Audacity of Hope) சில புத்தகங்களையும் எழுதி இருக்கிறார்.

ஒபாமா குறிப்பிட்ட புத்தகங்கள்

 1. Naked and the Dead (Normal Mailer, 1948)
 2. One Hundred Years of Solitude (Marquez, 1967)
 3. Golden Notebook (Doris Lessing, 1962)
 4. Woman Warrior (Maxine Hong Kingston, 1976)
 5. A Moveable Feast (Hemingway, 1964)
 6. Underground Railroad (Colson Whitehead, 2016)
 7. Three Body Problem (Liu Ciuxin, 2007)
 8. Gone Girl (Gilian Flynn, 2012)
 9. Fates and Furies (Lauren Groff, 2015)
 10. Song of Solomon (Tony Morrison, 1977)
 11. A Bend in the River (V.S. Naipaul, 1979)
 12. Gilead (Marilynne Robinson, 2004)

இவற்றைத் தவிர, ஷேக்ஸ்பியர் தான் மீண்டும் மீண்டும் படிக்கும் ஆசிரியர் என்றும் கெட்டிஸ்பர்க் உரையை அவ்வப்போது படிப்பது உண்டு என்றும், லிங்கன், காந்தி, மார்ட்டின் லூதர் கிங், மண்டேலா ஆகியோரின் எழுத்துகள் தன் சோர்வை ஓரளவு நீக்கும் என்றும், சர்ச்சில், தியோடோர் ரூசவெல்ட், ஜுனோ டியஸ், ஜும்பா லாஹிரி, ஃபிலிப் ராத், சால் பெல்லோ ஆகியோரின் எழுத்தை விரும்பிப் படிப்பதாகவும் சொல்லி இருக்கிறார்.

பேட்டியைப் படித்ததும் மனதில் ஒரு சின்ன அங்கலாய்ப்புதான் முதலில் எழுந்தது. காந்தி, நேரு, ராஜாஜி, ஈஎம்எஸ் தலைமுறைக்குப் பிறகு இப்படி தன் வாசிப்பைப் பற்றி பேசிய இந்தியத் தலைவர் யாரையும் எனக்குத் தெரியவில்லை. நரசிம்ம ராவும், வாஜ்பேயியும், மன்மோகன் சிங்கும் வாசிக்கும் பழக்கம் இருந்திருக்கலாம், ஆனால் அதைப் பற்றி எங்கும் பேசியதாகத் தெரியவில்லை. வாஜ்பேயி ஒரு வேளை ஹிந்தியில் தன் வாசிப்பைப் பற்றி பேசி/எழுதி இருக்கலாம். ஒரு வேளை அண்ணாதுரையும் நிறைய எழுதி இருக்கலாம், எனக்கு தெரியாமல் இருக்க வாய்ப்புண்டு. கருணாநிதி நிறைய படித்தாலும் அவர் தன்னைப் பற்றி எப்படி பெருமை அடித்துக் கொள்வது என்ற நோக்கத்துடன் படிப்பார் என்று தோன்றுகிறது.

ஒரு நல்ல தலைவனுக்கு படிக்கும் பழக்கம் mandatory requirement அல்லதான். ஆனால் அந்தப் பழக்கம் இருக்க வேண்டும், வாசிப்பைப் பற்றி தெளிவாக பேசவும் வேண்டும் என்றுதான் நினைக்கிறேன். நம் தலைவர்களை நினைத்து பெருமூச்சுதான் விடமுடிகிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: பரிந்துரைகள்