ஸ்டூவர்ட் நெவில் எழுதிய “கொல்யூஷன்”

முந்தைய பதிவு: நெவில் எழுதிய Ghosts of Belfast

Collusion எனக்கு ஏமாற்றம் அளித்தது. இது sequel ஆக இல்லாவிட்டால் இதைப் பற்றி எழுதவே மாட்டேன்.

Ghosts of Belfast சாதாரண ஆக்ஷன் மசாலா த்ரில்லர் என்ற லெவலை அநாயாசமாகத் தாண்டியது. ஃபெகனைத் துரத்தும் ஆவிகள் என்ற ஐடியா அந்த நாவலை என் கண்ணில் இலக்கியம் என்று உயர்த்தியது. இதில் அப்படி எதுவும் இல்லை. வெறும் ஆக்ஷன்தான். ஒரே ஒரு இடத்தில்தான் ஆஹா என்று வியந்தேன்.

பழைய பதிவைப் படிக்க சோம்பல் படுபவர்களுக்காக: ஜெர்ரி ஃபெகன் (Jerry Fegan) வட அயர்லாந்து தீவிரவாதி. 12 பேரைக் கொன்றுவிட்டு ஜெயிலுக்குப் போனவன். பிரம்மஹத்தி போல அவர்களின் ஆவிகள் அவனைப் பின் தொடர்கின்றன. சமாதானப் பேச்சு நடந்து பழைய தீவிரவாதிகள் எல்லாம் இப்போது சிஸ்டத்தில் பங்கேற்கிறார்கள். ஜெர்ரியும் விடுதலை ஆகிவிட்டான். இந்த பின்தொடரும் ஆவிகளால் ஏறக்குறைய மனநிலை பிறழ்ந்தவன் போல இருக்கிறான். இப்படி கொலை செய்யும்படி அவனுக்கு ஆணையிட்டவர்களை இப்போது பழி தீர்த்து கொன்றாலொழிய அந்த ஆவிகள் அவனை விடாது என்று அவனுக்கு தெரிகிறது. அவன் அவர்களைக் கொல்ல ஆரம்பிக்கிறான். அப்படி முதலில் கொல்லப்பட்ட மக்கென்னாவின் சகோதரன் மகள் மேரியிடம் அவனுக்கு ஈர்ப்பு ஏற்படுகிறது. அவளுடைய நாலு வயதுக் குழந்தையை தன் உயிரைக் கொடுத்தாவது காப்பாற்ற வேண்டி இருக்கிறது. சண்டைகள் பெரிதாகி கடைசியில் புல் ஓ’கேன் என்ற பெரிய தாதாவின் பண்ணையில் ஏறக்குறைய எல்லாரையும் கொன்றுவிடுகிறான். ஓ’கேன் மட்டுமே தப்பிக்கிறான், ஆனால் அவனுக்கும் இனி மேல் படுத்த படுக்கைதான். மேரியும் குழந்தையும் ஒரு இடத்துக்கும் ஃபெகன் நியூ யார்க்குக்கும் தப்பிக்கிறார்கள். மேரியிடம் எப்போது அபாயம் என்றாலும் தனக்கு ஃபோன் செய்யுமாறு சொல்கிறான் ஃபெகன்.

Collusion இங்கிருந்து ஆரம்பிக்கிறது. படுத்த படுக்கையாக இருக்கும் ஓ’கேன் ஃபெகனைத் தேடுகிறான். Traveller என்று மட்டுமே அறியப்படும் ஒரு கொலையாளியை நியமிக்கிறான். வட அயர்லாந்தின் சிஸ்டத்தில் எல்லாருமே – முன்னாள் Catholic தீவிரவாதிகள், அவர்களை எதிர்த்த ப்ராடஸ்டெண்டுகள், போலீஸ், கிரிமினல்கள் எல்லாருமே ஒருவருக்கொருவர் உள்கையாக இருக்கிறார்கள். ஃபெகன் செய்த கொலைகள் எல்லாம் பூசி மெழுகப்பட்டுவிட்டன. மேரியின் குழந்தைக்கு அப்பா ஒரு போலீஸ்காரன். ஆனால் அவன் Catholics இங்கிலாந்தை எதிர்த்துப் போராடியபோது போலீசில் சேர்ந்து ஏறக்குறைய ஒதுக்கி வைக்கப்பட்டவன். மேரியும் அவனும் பிரிந்துவிட்டாலும் இன்று அவன் தன் குழந்தை எங்கே என்று தேடிக் கொண்டிருக்கிறான். Traveller-இன் திட்டம் மேரியை வைத்து ஃபெகனைப் பிடிப்பது. ஓ’கேன் பற்றிய உண்மைகளைத் தெரிந்த எல்லா பழைய கூட்டாளிகளையும் அவன் போட்டுத் தள்ளுகிறான். மேரியை ஃபெகனால் காப்பாற்ற முடிந்ததா, குழந்தையும் அப்பாவும் இணைந்தார்களா என்பதுதான் கதை.

கதையில் எனக்குப் பிடித்த இடம் அந்த சின்னப் பெண் Traveller-ஐ முதல் முறையாக சந்திக்கும் இடம்தான். Traveller எப்படி அந்தப் பெண்ணை கடத்துவது என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது அந்தப் பெண்ணே அவனிடம் வருகிறது. ஃபெகனுக்குப் பின்னால் எப்போதும் சுற்றிக் கொண்டிருந்த ஆவிகளைப் போல இவன் பின்னும் சுற்றும் ஆவிகள் அவள் கண்ணுக்குத் தெரிவதுதான் காரணம். அபாரமான கற்பனை.

ஒருவருக்கொருவர் உள்கை என்பது நன்றாக வந்திருக்கிறது. விடுதலைப் புலிகள் சமாதானமாகப் போயிருந்தால் பழைய கதை எல்லாம் வெளியே வந்துவிடக் கூடாது என்று புலிகள், இலங்கை அரசு, இந்திய அரசு எல்லாரும் முயற்சி செய்வார்கள் இல்லையா? அது போல.

ஆனால் ஆக்ஷன் த்ரில்லர் என்ற லெவலைத் தாண்டவில்லை. Sequel-களை மிஸ் செய்ய விரும்பாதவர்கள், த்ரில்லர் விரும்பிகள் படிக்கலாம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: த்ரில்லர்கள்

தொடர்புடைய சுட்டி: Ghosts of Belfast

ஸ்டூவர்ட் நெவில் எழுதிய “கோஸ்ட்ஸ் ஆஃப் பெல்ஃபாஸ்ட்”

எனக்கு ஒரு தியரி உண்டு. பொழுதுபோக்குக்காக எழுதப்படும் “வணிக” எழுத்தில் சில ஏதோ ஒரு கூறு பிரமாதமாக அமைந்து இலக்கியம் என்ற நிலையை எட்டிவிடுகின்றன. பொன்னியின் செல்வனின் கதைப் பின்னல், சாத்திரம் சொன்னதில்லையின் கச்சிதமான அமைப்பு, நிர்வாண நகரத்தில் வெளிப்படும் ஒரு இளைஞனின் பாத்திரப் படைப்பு, ஜான் லே காரின் பல புத்தகங்கள் – குறிப்பாக ஸ்மைலி சீரிஸ் என்று நிறைய உதாரணம் சொல்லலாம். அந்த லிஸ்டில் ஸ்டூவர்ட் நெவில் எழுதிய Ghosts of Belfast-க்கும் ஒரு இடம் உண்டு.

கதையின் ஒன் லைனரை ரொம்ப சிம்பிளாக இப்படி சொல்லலாம். முன்னாள் ஐரிஷ் தீவிரவாதி ஜெர்ரி ஃபெகன். 12 பேரைக் கொன்றதற்காக ஜெயிலில் இருந்துவிட்டு இப்போதுதான் வெளியே வந்திருக்கிறான். அவன் பின்னாலேயே அந்த 12 பேரின் ஆவிகளும் பிரம்மஹத்தி போல, கிரேக்க தொன்மங்களின் furies போல, அலைகின்றன. இப்போது வடக்கு அயர்லாந்தில் பிரச்சினைகள் “முடிந்து” முன்னாள் தீவிரவாதித் தலைவர்கள் அரசு பொறுப்பில் இருக்கிறார்கள். இந்த 12 பேர் இறந்த குண்டு வெடிப்புக்கு ஆணை இட்டவர்கள், உதவியாக இருந்தவர்கள் இத்யாதியினரில் 12 பேர் இறந்தால்தான் இந்த ஆவிகள் அவனை விட்டு விலகும். “முடிந்து போன” பிரச்சினையைக் கிளற யாருக்கும் விருப்பமில்லை. அடுத்தது என்ன?

நான் இதை ஒரு த்ரில்லர் என்றுதான் எடுத்துப் படித்தேன். இது சர்வ நிச்சயமாக இலக்கியமே என்பது முதல் இருபது முப்பது பக்கத்திலேயே தெரிந்துவிட்டது. எக்கச்சக்க ஆக்ஷன் சீன்கள் உண்டு. ஆனால் இந்தக் கதையின் கரு ஜெர்ரியின் redemption -தான். ஜெயிலுக்குப் போவதற்கு முன் ஜெர்ரி தான் ஒரு வேலை பார்ப்பதாகவே நினைக்கிறான். அவனுடைய மாற்றம், குற்ற உணர்வு, முன்னாள் முதலாளிகளை எதிர்ப்பதைத் தவிர வாழ வேறு வழியே இல்லை என்று அவனும் அவன் மூலம் நாமும் உணர்வது, அவனை விடாமல் துரத்தும் ஆவிகள் (அவன் ஒவ்வொரு காரணியாகக் கொல்லக் கொல்ல ஒவ்வொரு ஆவியாக மறைகிறது) எல்லாம் மிக அற்புதமாக வந்திருக்கிறது.

இதுதான் நெவில்லின் முதல் நாவலாம். 2009-இல் இங்கிலாந்தில் ட்வெல்வ் (Twelve) என்ற பேரில் வெளிவந்திருக்கிறது. அமெரிக்க எடிஷனின் பேர் கோஸ்ட்ஸ் ஆஃப் பெல்ஃபாஸ்ட். பல பரிசுகளை வென்றிருக்கிறது. இதற்கு ஒரு sequel-உம் உண்டு – “Collusion“. அதிலும் ஜெர்ரிதான் ஹீரோ, இன்னும் படிக்கவில்லை அதைப் பற்றிய பதிவு இங்கே..

தொடர்புடைய சுட்டிகள்: