இந்த வருஷ சாஹித்ய அகடமி விருது – இமையம் எழுதிய “செல்லாத பணம்”

இமையம் எழுதிய செல்லாத பணம் என்ற நாவலுக்காக 2020க்கான சாஹித்ய அகடமி விருது கிடைத்திருக்கிறது . தேர்வுக்க்குழுவில் வண்ணதாசனும் இருந்திருக்கிறார்.

செல்லாத பணம் நாவலின் கரு பல முறை பார்த்ததுதான். குடும்பத்தின் ஆட்சேபணையை மீறி தன்னை விட குறைவான படிப்பு, பணம், “ஜாதி”த் தகுதி உள்ள “ரௌடி” ஆட்டோக்காரனை மணக்கும் ரேவதி. திருமணம் ஆன பிறகு பணப் பற்றாக்குறை, அவமானங்கள், மனைவியை அடித்து உதைக்கும் கணவன். அப்பாவும் அண்ணனும் ஒதுக்கிவிட, அம்மா மட்டும் பண உதவி செய்து கொண்டிருக்கிறாள். ஒரு நாள் ரேவதி தீக்குளித்துவிடுகிறாள்.

இந்தக் கருவை திறமையற்ற எழுத்தாளர் கையாண்டிருந்தால் வெறும் மிகை உணர்ச்சி எழுத்தாகப் போயிருக்கும். இமையம் சிறப்பாக எழுதி இருக்கிறார். ஓரளவு மரத்துப் போன உள்ளம் கொண்ட எனக்கே அய்யோ அய்யோ என்றுதான் இருந்தது. தீக்குளித்தபின் மருத்துவமனையில் இருக்கும் நாலைந்து நாட்கள்தான் கதையின் முக்கியப் பகுதி. அப்பாவும் அண்ணனும் அண்ணியும் புலம்புவதுதான் கதை. மருத்துவமனைதான் பின்புலம்.

என் அப்பா மருத்துவமனையில் ICU-இல் வாரக்கணக்கில் இருக்க, வெளியே காத்திருந்த அனுபவம் எனக்குண்டு. மருத்துவமனை சித்தரிப்பு மெய்நிகர் அனுபவம். வெளியில் காத்திருப்பவர்களின் தத்தளிப்பு, கொஞ்சம் அடுத்த நிலை உறவினர்/நண்பர்களின் நல்லெண்ணம் உள்ள நச்சரிப்பு உரையாடல்கள், புலம்பல்கள் எல்லாவற்றையும் உண்மையாகக் கொண்டு வந்திருக்கிறார்.

அப்பா, அண்ணன், அண்ணி, அம்மா, சித்தி எல்லாருடைய பாத்திரங்களும் அருமையாக வார்க்கப்பட்டிருக்கின்றன. அப்பா, அண்ணனுக்கு ஏற்பட்ட தலைகுனிவு, ஒழுங்காக இல்லாத கணவனால் இன்னும் அதிகரிக்கும் அவமானம் எல்லாம் மருத்துவமனையில் அர்த்தம் இல்லாத உணர்வுகளாக மாறிவிடுவது உண்மையான சித்திரம்.

தங்கையை மனதார திட்ட வேண்டும் என்று நினைத்திருக்கும் அண்ணன் எரிந்து கிடக்கும் தங்கை மன்னிக்கும்படி கேட்டதும் எல்லாவற்றையும் மறந்து கதறுவதும், தங்கை என்னை ஒரு முறை ரேவதி என்று கூப்பிடு என்று சொல்வது மனதில் பதியாமல் வெளியே வந்த பிறகு நினைவு வந்து மீண்டும் உள்ளே சென்று அவளை பேர் சொல்லி கூப்பிடத் துடிப்பதும், அதற்கு அனுமதி கிடைக்காமல் தவிப்பதும் மிக நல்ல காட்சி. இதே போல போலீஸ்கார ஆனந்த்குமார் கண் கலங்கும் காட்சி, அப்பா நடேசன் காவல் நிலையத்தில் எப்படி நடந்து கொள்வது என்று தெரியாமல் திணறும் காட்சி, கணவன் ரவி தன் பக்கத்து நியாயங்களை எடுத்து வைக்கும் காட்சி ஆகியவற்றை குறிப்பிட்டு சொல்லலாம்.

இமையம் தன்னை திராவிட இயக்க எழுத்தாளர் என்று அடையாளப்படுத்திக் கொள்கிறார். பாரதிதாசன் சாஹித்ய அகடமி விருது வென்ற முதல் திராவிட இயக்க எழுத்தாளர், தான் இரண்டாவது என்று சொன்னாராம். திராவிட இயக்கத்தில் யாரும் எழுத்தாளரில்லை. கொஞ்சம் தாட்சணியம் பார்த்தால் அண்ணாதுரையை அவரது நாடகங்களுக்காக சேர்த்துக் கொள்ளலாம். பாரதிதாசன் என் கண்ணில் நல்ல கவிஞர் அல்லர். இவர் சொல்வது சரியாக இருந்தால் திராவிட இயக்கப் பின்னணியில் இருந்து வந்த இரண்டாவது எழுத்தாளரே இவர்தான். (அண்ணாவுக்குப் பிறகு)

இமையத்துக்கு ஒரு தளம் இருக்கிறது. அங்கே அவரது சில சிறுகதைகளும் கிடைக்கின்றன.

ஆனால் என் கண்ணில் இந்த நாவல் இரண்டாம் மூன்றாம் வரிசை நாவலே. வெறும் அனுபவச் சித்தரிப்பு மட்டுமே நல்ல நாவல் ஆகிவிடாது என்றெல்லாம் இப்போது தோன்றுகிறது. (நாளை என் மனம் மாறினாலும் மாறலாம்.)

கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: இமையம் பக்கம்

தொடர்புடைய சுட்டி: இமையம் பற்றிய விக்கி குறிப்பு

இமையத்துக்கு சாஹித்ய அகடமி விருது

இமையத்துக்கு 2020க்கான சாஹித்ய அகடமி விருது கிடைத்திருக்கிறதுசெல்லாத பணம் என்ற நாவலுக்காக. தேர்வுக்க்குழுவில் வண்ணதாசனும் இருந்திருக்கிறார்.

சு. வேணுகோபால் எழுதிய வலசை, சுப்ரபாரதிமணியன் எழுதிய ரேகை, தேவிபாரதி எழுதிய நடராஜ் மகராஜ், கே. பஞ்சாங்கம் எழுதிய அக்கா ஆகிய நாவல்களும், கோவை ஞானி (என்றுதான் நினைக்கிறேன்) எழுதிய என் கையெழுத்துப் படிகளிலிருந்து இலக்கியத் திறனாய்வு, டி.எஸ். நடராஜன் எழுதிய தமிழ் அழகியல்: மரபும் கோட்பாடும் ஆகிய திறனாய்வு நூல்களும், கலாப்ரியா எழுதிய பனிக்கால ஊஞ்சல் என்ற கவிதைத் தொகுப்பும், ஆ. சிவசுப்ரமணியன் எழுதிய பனைமரமே! பனைமரமே! என்று பண்பாட்டு நூலும் பரிசீலனையில் இருந்திருக்கின்றன. சுப்ரபாரதிமணியனுக்கும் வேணுகோபாலுக்கும் கலாப்ரியாவுக்கும் இன்னும் சாஹித்ய அகடமி விருது கிடைக்கவில்லை என்பது ஆச்சரியமாக இருந்தது.

பிற மொழிகளில் கேள்விப்பட்டிருந்த ஒரே பெயர் – வீரப்ப மொய்லி! மொய்லி முன்னாள் கர்நாடக முதல்வர். ஸ்ரீ பாஹுபலி அஹிம்சா திக்விஜயம் என்ற காவியத்தை கன்னடத்தில் எழுதி இருக்கிறாராம், அதற்காகத் தரப்பட்டிருக்கிறது.

இமையத்தை நான் அதிகம் படித்ததில்லை. படித்த சில சிறுகதைகளும் என் மனதில் நிற்கவில்லை. ஆனால் படித்தபோது இலக்கியம் படைத்திருக்கிறார் என்றுதான் மதிப்பிட்டிருக்கிறேன்.

மனதில் நின்றது இரண்டு விஷயங்கள்தான். இமையம் தன்னை திராவிட இயக்க எழுத்தாளர் என்று அடையாளப்படுத்திக் கொள்கிறார். பாரதிதாசன் சாஹித்ய அகடமி விருது வென்ற முதல் திராவிட இயக்க எழுத்தாளர், தான் இரண்டாவது என்று சொன்னாராம். திராவிட இயக்கத்தில் யாரும் எழுத்தாளரில்லை. கொஞ்சம் தாட்சணியம் பார்த்தால் அண்ணாதுரையை அவரது நாடகங்களுக்காக சேர்த்துக் கொள்ளலாம். பாரதிதாசன் என் கண்ணில் நல்ல கவிஞர் அல்லர். இவர் சொல்வது சரியாக இருந்தால் திராவிட இயக்கப் பின்னணியில் இருந்து வந்த இரண்டாவது எழுத்தாளரே இவர்தான். (அண்ணாவுக்குப் பிறகு)

இரண்டாவதாக தனது நாவலில் வரும் பெண்கள் பற்றி மிக அருமையான கட்டுரை ஒன்றை எழுதி இருக்கிறார். கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

இமையத்துக்கு ஒரு தளம் இருக்கிறது. அங்கே அவரது சில சிறுகதைகளும் கிடைக்கின்றன.

தொகுக்கப்பட்ட பக்கம்: விருதுகள்

தொடர்புடைய சுட்டி: இமையம் பற்றிய விக்கி குறிப்பு

அண்ணாதுரையின் படைப்புகள்

அண்ணாவின் முக்கியப் பங்களிப்பாக நான் கருதுவது அவரது நாடகங்களைத்தான். அவரது நாடகங்கள் குறைகள் மலிந்தவையே. பிரச்சார நெடி அடிப்பவையே. பிராமண பாத்திரம் – இல்லை இல்லை பார்ப்பன, ஆரிய பாத்திரம் – என்றால் அந்தப் பாத்திரம்தான் வில்லன். அவரது நாடகத்தின் கதைகள் அவரது “முற்போக்கு” வசனங்களை மாட்ட உதவும் சட்டகம் (frame) மட்டுமே. தற்செயல் அதிசய நிகழ்ச்சிகள் கொண்ட மிகை உணர்ச்சி, ஃபார்முலா நாடகங்களே. ஆனால் ஓரிரவு அந்த ஃபார்முலாவை மீறுகிறது. சிவாஜி கண்ட ஹிந்து சாம்ராஜ்யம் நாடகத்தை மீறிய கலைத் தாக்கம் உடையது. வேலைக்காரி தமிழ் நாடக வரலாற்றில் முக்கியமான நாடகம். (ஆனால் நல்ல நாடகம் இல்லை.) இவை மூன்றையுமே அவரது முக்கியப் பங்களிப்பாக நான் கருதுகிறேன்.

பிற நாடகங்களில் சந்திரோதயம் நாடகம் குறிப்பிட வேண்டிய ஒன்று. இதில் பிரச்சாரத்துக்காக அவர் பயன்படுத்தும் உத்திகள் புத்திசாலித்தனமானவை. நாடகத்தின் நடுவே திமுக செயலாளர் நெடுஞ்செழியனின் ரேடியோ பேச்சாக ஒரு சிறு உரை; புத்திசாலித்தனமான வசனங்கள் (கடவுள் நம்பிக்கை உள்ள வேலைக்காரனை அவனது எஜமான் காலைத் தூக்கிக் கொண்டு நில் என்கிறான். இரண்டு நிமிஷத்தில் கால் வலிக்கிறது என்று அவன் காலை கீழே வைக்க நடராஜர் மட்டும் எப்படிய்யா காலைத் தூக்கிக் கொண்டே நிற்கிறார் என்று கேட்கிறான். அது கல்லுங்க என்று அந்த வேலைக்காரன் சொல்லிவிடுகிறான்.) 1943-இல் எழுதப்பட்ட நாடகம், ஆனால் பிற்காலத்தில் கொஞ்சம் அப்டேட் செய்திருக்கிறார். திமுக செயலாளர் நெடுஞ்செழியன், அரியலூர் ரயில் விபத்து என்றெல்லாம் வருகிறது.

நீதிதேவன் மயக்கம் என்ற நாடகத்தையும் குறிப்பிடலாம். நாடகத்தில் ராவணன் தன் கேசை எமன் முன்னால் வாதிடுகிறான். இதை வைத்து “கடவுள்கள்”, தேவர்கள் செய்த அநீதிகளை எடுத்துச் சொல்லி வாங்கு வாங்கென்று வாங்குகிறார். சிந்திக்க ஆரம்பிக்கும் காலத்தில் – பதின்ம வயதுகளி – தோன்றக் கூடிய சாதாரணக் கேள்விகளின் தொகுப்புதான். இருந்தாலும் அந்தக் காலத்தில் தேவை இருந்திருக்குமோ என்று தோன்றுகிறது.

ஆனால் அனேகமான நாடகங்கள் தண்டமே. ராகவாயணம்காதல் ஜோதி நாடகங்களில் பார்ப்பனர்களை வில்லன்களாக காட்ட வேண்டும் என்ற முனைப்பு மட்டுமே தெரிகிறது. இந்த லட்சணத்தில் இது ஜெய்ஷங்கர், ரவிச்சந்திரன், காஞ்சனா நடித்து திரைப்படமாகவும் வேறு வந்தது. சொர்க்கவாசல் இன்னொரு தண்டம். நன்கொடைகண்ணாயிரத்தின் உலகம், ரொட்டித்துண்டு, கல் சுமந்த கசடர், இரக்கம் எங்கே, புதிய மடாதிபதி போன்ற இன்னும் சில பிரச்சார நாடகங்களையும் படித்துத் தொலைத்திருக்கிறேன். கண்ணீர்த்துளி நாடகத்தில் காமராஜர் ஒரு முக்கிய பாத்திரம் – அவர் ஈ.வே.ரா.வை சாமர்த்தியமாக ஏய்த்துவிட்டதாக எழுதி இருக்கிறார்.

வேலைக்காரி, ஓரிரவு, நல்லதம்பி, ரங்கோன் ராதா சினிமாவாகப் பார்த்திருக்கிறேன்.

நான் அண்ணாதுரையின் சிறுகதைகள்/நாவல்களை அதிகமாகப் படித்ததில்லை. செவ்வாழை என்ற சிறுகதை தவிர வேறு எதுவும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய தரத்திலும் இல்லை. பிரச்சாரக் கதைதான், ஆனால் சராசரி பிரச்சாரக் கதையை விடப் பரவாயில்லை என்று சொல்லலாம். அதுவும் மலையாளைப் படைப்பு ஒன்றைத் தழுவியது, ஒரிஜினல் சரக்கு அல்ல என்று ஜெயமோகன் தகவல் தருகிறார்.

இமையம் எழுதிய இந்த கட்டுரையில் சில விவரங்கள் கிடைக்கின்றன. 113 சிறுகதைகள் எழுதி இருக்கிறாராம். எல்லாவற்றிலும் பிரசாரம்தான் போலிருக்கிறது. தன்னை வருத்திக் கொள்ள விரும்புபவர்களுக்காக (for masochists) – பித்தளை அல்ல பொன்னேதான் என்ற தொகுப்பு ப்ராஜெக்ட் மதுரை தளத்தில் கிடைக்கிறது.

படித்தவற்றில் சிறந்தது ரங்கோன் ராதா (1947). பிரச்சார நோக்கம் உள்ள, நயம் குறைவான நாவல்தான், ஆனால் அதுதான் இருப்பவற்றில் சிறந்தது. வண்டிக்காரன் மகன் படுசுமார். என் வாழ்வு (1940) பெரும் ஏமாற்றம். இவ்வளவு தண்டமாக எழுதுவார் என்று தெரியாமல் போனது. வில்லன்களை முனைந்து பார்ப்பனராகக் காட்டுவது, சாமியாரின் இன்ப வெறி, தாசிகள் என்று போகிறார். கலிங்க ராணி நாவல் தண்டம். வில்லனுக்கு பேர் கூட இல்லை, ‘ஆரியன்’ என்றே குறிப்பிடுகிறார். குமரிக் கோட்டம் என்று குறுநாவலில் கீழ்ஜாதிப் பெண்ணை மணம் செய்து கொள்ள விரும்பும் மகனை வீட்டை விட்டு விரட்டிவிடும் அப்பா இன்னொரு கீழ்ஜாதிப் பெண்ணிடம் மயங்குகிறார், அதனால் திருந்தி சுயமரியாதை இயக்கத்தில் சேர்ந்துவிடுகிறார். அந்தக் காலத்து திராவிட இயக்கத்தினர் விரும்பிப் படித்திருப்பார்கள் என்று எனக்கு நம்பிக்கை இல்லை. இன்று தவிர்த்துவிடுவது ஓடிவிடுவது பெட்டர். கபோதிபுரத்து காதல், குமாஸ்தாவின் பெண் குறுநாவல்கள் தண்டம்.  கன்னி விதவையான கதை, தசாவதாரம், வாழ்க்கைப்புயல் சிறுகதை தொகுப்புகளைத் தவிர்ப்பது நலம்.

அண்ணாவின் எழுத்துகளை நாட்டுடமை ஆக்கினார்களா இல்லையா என்று கூடத் தெரியவில்லை. தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் மின் நூலகத்தில் அவரது படைப்புகள் எதுவும் இது வரை இல்லை. நல்ல விமர்சகர்கள் என்று நான் கருதும் எவரும் – க.நா.சு., சுஜாதா, ஜெயமோகன் இத்யாதியினர் – யாரும் அவரது எழுத்துகளைப் பற்றி நல்லபடியாக ஒரு வார்த்தை சொன்னதில்லை. அவரது எழுத்துகளை யாரும் ஆய்வு செய்தும் நான் பார்த்ததில்லை.

நான் படிக்க விரும்பியவற்றில் கம்பரசம் ஆகியவற்றைப் படித்து எழுதியும் விட்டேன். ரங்கோன் ராதா இன்னும் கிடைக்கவில்லை.

அவரது அபுனைவுகள் பதின்ம வயதில் தோன்றக் கூடிய சிந்தனைகளை எழுதியது போலத்தான் இருக்கிறது. புராண மதங்கள் சிந்திக்க ஆரம்பிக்கும் காலத்தில் தோன்றக் கூடிய சாதாரணக் கேள்விகளின் தொகுப்பு – கிருஷ்ணன் செய்தது அயோக்கியத்தனம் (வியாசரே அப்படி சொல்கிறார்), அவனை வழிபடலாமா இத்யாதி. இவற்றுக்கு அந்தக் காலத்திலாவது தேவை இருந்திருக்குமோ என்று தெரியவில்லை. அண்ணா கண்ட தியாகராயர் போன்றவை அலங்காரத் தமிழில் விஷயமே இல்லாமல் எழுதப்பட்டவை. பணத்தோட்டம் “பனியா” ஆதிக்கம் பற்றி பேசுகிறது. படிக்கும்போது தென்னிந்தியர்களுக்கு எதிராகக் கிளம்பிய சிவசேனா நினைவுதான் வந்தது. ஆரிய மாயை போன்ற புத்தகங்களோ ஏறக்குறைய இன்றைய ஹிந்துத்துவர்கள் “அன்னிய” இனங்களைப் பற்றிப் பேசுவது போல இருக்கிறது. எண்ணித் துணிக கருமம் அவர் திராவிட நாடு என்ற பிரிவினை கோரிக்கையை ஏன் கைவிட்டார் என்பதற்கான விளக்கம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் எழுத்தாளர்கள்

தொடர்புடைய சுட்டிகள்:
ஓரிரவு நாடகம்
சிவாஜி கண்ட ஹிந்து சாம்ராஜ்யம் நாடகம்
வேலைக்காரி நாடகம்
கம்பரசம்

எழுத்தாளர் இமையத்தின் கட்டுரை – “நான் எழுதிய பெண்கள்”

imaiyamநான் இமையத்தின் எழுத்தை இது வரை படித்ததில்லை. அவரது கட்டுரையைப் படிக்கும்போது இவை எனக்குப் பிடித்த மாதிரி – உபதேசம் இல்லாமல் இருக்குமா என்பது சந்தேகமாகத்தான் இருக்கிறதுஇருந்தது. ஆனால் தன் படைப்புகளை இத்தனை தீர்க்கமாக அணுகி இத்தனை சாரத்துடன் எழுதி இருப்பது என்னைக் கவர்ந்தது. கலையம்சம் இருக்குமோ இல்லையோ நல்ல ஆவணமாக இருக்கும் என்று தோன்றியது.

பிறகு அவர் தளத்தைக் கண்டுபிடித்து அங்கே சில சிறுகதைகளைப் படித்தேன். Subtlety என்பது கொஞ்சமும் இல்லாவிட்டாலும் நிச்சயமாக இலக்கியம்தான். அவரை நான் தலித்திய எழுத்தாளர் என்றெல்லாம் வரையறுக்கமாட்டேன். நல்ல எழுத்தாளர், முக்கியமான எழுத்தாளர், தலித் பின்புலத்தில், தலித் பிரச்சினைகளை ஆவணப்படுத்தும் இலக்கியவாதி என்றே வரையறுப்பேன்.

பேராசை என்ற சிறுகதை ஒரு ஆஃப்ரிக்க (சூடான்?) சிறுகதையை (பெயர் நினைவு வரவில்லை) நினைவுபடுத்தியது. சிறு பெண் வயதான மாப்பிள்ளையின் கிராமத்தில் தினமும் தண்ணீர் எடுக்க மைல் கணக்கில் நடக்க வேண்டாம் என்று அவனை மணக்க சம்மதிப்பாள். யாராவது படித்திருக்கிறீர்களா? கதையின் பெயர் நினைவு வருகிறதா?

இமையம் தன்னை தி.மு.க. தொண்டர் என்று பெருமையாகச் சொல்லிக் கொள்கிறார். இவ்வளவு தெளிவாக சிந்திக்கக் கூடியவர், அதை எழுத்தில் கொண்டுவரக் கூடியவர் தி.மு.க.காரர் என்பது ஆச்சரியப்படுத்தியது. கலைஞருக்குத் தெரிந்தால் அவரே வடிவேலு குரலில் “இன்னுமா நம்மள நம்பறாங்க?” என்று சொல்லிக் கொள்வார்!

இந்தக் கட்டுரை இமையத்தால் 04.03.2013ல் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் படிக்கப்பட்டது.

வெள்ளிக்கிழமயில என்னெப் பெத்தியே மாதாவே
உன் வெள்ளி வயித்திலியும் நான் கருவா தரிச்சதும்
பச்ச கற்பூரமெல்லாம் தீஞ்சதும்
அன்னிக்கி இந்தக் கருவக் கலச்சியிருந்தா
எனக்கு இன்னிக்கி இந்தக் கலகம் வந்து நேராது
அந்தக் கருவ சிசுவாக்கி இந்தப் பொல்லாத சீமையில
என்னெக் களங்கப்பட வச்சியம்மா…

இந்தப் பாடல் செடல் நாவலில் வருகிறது. இப்பாடலை செடல்தான் பாடினாள். அதனால் அவளுக்கு மட்டும்தான் இது பொருந்தும் என்று சொல்ல முடியாது. என்னுடைய மூன்று நாவல்களில் வரும் பெண்கள் பாடியதாகவும் கொள்ளமுடியும். அப்பெண்களுக்கும் இது பொருந்துவதாகவும் கொள்ளமுடியும். அதே போன்று இப்பாடல் நான் எழுதிய சிறுகதைகளில் வரும் பெண்களுக்கும் பொருந்தும். அவர்கள் பாடியதாகவும் கொள்ள முடியும்.

கோவேறு கழுதைகள்(1994), ஆறுமுகம்(1999), செடல்(2006) ஆகிய மூன்று நாவல்களும், மண்பாரம்(2004), வீடியோ மாரியம்மன்(2008) கொலைச்சேவல்(2013) ஆகிய மூன்று சிறுகதை தொகுப்புகளையும் ‘பெத்தவன்‘ என்கிற நெடுங்கதையையும் எழுதியிருக்கிறேன். மூன்று தொகுப்பிலும் சேர்த்து 43 கதைகள். மூன்று நாவல்களும் மூன்று பெண்களின் வாழ்வையே பேசுகிறது. 43 சிறுகதைகளில் 36 கதைகளில் பெண்கள் – அவர்களுடைய வாழ்க்கை நிறைந்திருக்கிறது. இது ஆச்சரியமான நிகழ்வு. எனக்கே நம்புவதற்கு வியப்பாக இருக்கிறது. என் நாவல்களில், என் சிறுகதைகளில் பெண்களாகவே நிறைந்திருக்கிறார்கள்.

நான் எழுதிய பெண்கள் என்ற கட்டுரையை எழுதுவதற்காக நான் எழுதிய பெண்களை சென்று பார்த்தேன். அதாவது அந்த கதைகளை படித்தேன். கதை எழுதுவதற்காக அல்ல. கட்டுரை எழுதுவதற்காக. கதை எழுதுவது வேறு. கட்டுரை எழுதுவது வேறு. ஒரு கட்டுரையாளனாக எனது பெண்களை பார்த்தபோதுதான் பல உண்மைகள் எனக்கே தெரிந்தது. என்னுடைய பெண்கள் அதிகம் படித்தவர்கள் அல்ல. பெண் உடல், பெண் அரசியல், உடல் அரசியல், பெண் மொழி, பெண் முன்னேற்றம், பெண் இருப்பு, பாலியல் சுதந்திரம் பேசுபவர்கள் அல்ல. ஆங்கிலம் படித்தவர்களோ, தத்துவ விசாரங்களில் ஈடுபடுபவர்களோ அல்ல. பெரிய அழகிகளும் அல்ல. சமூகம் சார்ந்து பேசக்கூடிய சிந்தனாவாதிகளோ, புரட்சிப் பெண்களோ அல்ல. ‘ஆணாதிக்கம் ஒழிக, பெண்மை வாழ்க‘ என்றோ ‘தாய்மையைத் தவிர்ப்போம் பெண்மையைக் காப்போம்‘ என்றோ கோஷமிடாதவர்கள். என்னுடைய பெண்கள் வாயாலும் வயிற்றாலும் உருவானவர்கள், அதே மாதிரி வாயாலும் வயிற்றாலும் வாழ்பவர்கள். வாழ்நாளெல்லாம் வாயையும் வயிற்றையும் நிரப்புவதற்காக போராடுபவர்கள். போராட்டத்தில் ஓயாமல் தோற்றுக் கொண்டே இருப்பவர்கள். என்னுடைய பெண்களுக்கு கனவுகள் கூட வருவதில்லை. மீறி வந்தாலும் வயிறு நிறைய சாப்பிட்டதுபோலவே கனவு காண்பவர்கள். காரணம் வயிறுதான் அவர்களுக்கு வாழ்க்கை. நமக்கும் அதுதான் வாழ்க்கை.

என்னுடைய பெண்கள் லட்சியப் பெண்களோ, புதுமைப் பெண்களோ அல்ல. சராசரிக்கும் கீழே உள்ளவர்கள். உயர்ந்த சாதி இல்லை. உயர்ந்த பண்புகள் இல்லை. சொத்து இல்லை. நகைகள் இல்லை. சமூக அந்தஸ்து இல்லை. அழகாகவும் இல்லை. குடும்ப பாதுகாப்பு, கணவன், குழந்தைகள் என்ற பாதுகாப்பு கூட அற்றவர்கள். பெரும்பாலானவர்கள் விதவைகள். கிழவிகள், நாகரீகமற்ற கிராமத்துப் பெண்கள். இவர்கள் எப்படி கதையானார்கள், தமிழ் சமூகத்தின் அடையாளமானார்கள்? அதுவும் பெண்கள்? தமிழ்ச் சமூகம், இந்திய சமூகம் உருவாக்கி வைத்திருக்கும் ஒழுக்கப் பண்புகளோ, அறப் பண்புகளோ இல்லாதவர்கள். சமூகத்தின் கேலிக்கும் கிண்டலுக்கும், ஏளனத்திற்கும் ஆளான பெண்கள். சமுகத்தின் இழிவு சின்னங்களாக இருக்கக்கூடியவர்கள் எப்படி தமிழ் சமூகம் மதிக்கும் கதையானார்கள்? தமிழ் வாழ்வின் மாதிரியானார்கள்?

என்னுடைய பெண்கள் குடும்பப் பெண்கள் அல்ல. சிலப்பதிகாரத்தில் “பத்தினி பெண்டீர் அல்லோம்“ என்று மாதவிக்கு அவளுடைய தாய் சித்திராபதி கூறுவாள். அத்தகைய பெண்கள்தான் நான் எழுதிய பெண்கள். சமூகத்திற்காக சமூகம் உருவாக்கிய பெண்கள். அதாவது பொதுச் சொத்து. சமூகத்திற்காக – சமூகத்தால் பலி கொடுக்கப்பட்ட பெண்கள். சமூகத்தின் உழைப்பிற்காகவும், சமூகத்தின் உல்லாசத்திற்காகவும், சமூகத்தின் நம்பிக்கைகளுக்காகவும் பலியிடப்பட்ட பெண்கள். இப்பெண்கள்தான் இன்று தமிழ்ச் சமூக வாழ்க்கையாக, தமிழின் பண்பாட்டு கலாச்சார அடையாளமாக இருக்கிறார்கள்.

பெண்களைப் பற்றி எழுதவேண்டும் என்பது என் விருப்பமல்ல. தேர்வல்ல. நான் பெண்களுக்காக பரிந்து பேசுபவனும் அல்ல. நிஜத்தில் நான் ஒரு ஆணாதிக்கவாதிதான். தமிழ்–இந்திய சமூகம் ஆண்களுக்கு என்று வரையறுத்துள்ள அத்தனை குணங்களும் என்னிடத்திலும் இருக்கின்றன. சற்று கூடுதலாகவும். பிறகு எப்படி பெண்களைப் பற்றி எழுதுகிறேன்? கல்யாணத்திற்கோ, பிற விசேசங்களுக்கோ என்னை அழைத்தபோது – கல்யாணத்திற்கு முன் ‘நீ வந்துரு‘ என்று சொன்னார்கள். கல்யாணம் நடந்த பிறகு ‘குடும்பத்தோடு வந்துரு‘ என்று சொன்னார்கள். கல்யாணம் ஆகாத வரை நான் ‘காலிப்பயல்‘. கல்யாணமானதும் நான் குடும்பஸ்தன். குடும்பம், குடும்பஸ்தன் என்ற சொல் – பெண்ணோடு ஆண் சேர்ந்த பிறகுதான் வருகிறது. பெண் வெறும் பெண்ணல்ல. குடும்பம். அதனால் நான் பெண்களை அல்ல குடும்பங்களை எழுதியிருக்கிறேன். பெண்கள்தான் படைப்புக்கான ஊற்றுக்கண். நிலம்.

என்னுடைய பெண்கள் குடும்பப் பெண்கள் மாதிரி வீடும், தெருவும் கணவனும் பிள்ளையும் என்று மட்டுமே இருக்கக் கூடியவர்கள் அல்ல. பல ஊர் சனங்கள் திரண்டு இருக்கக்கூடிய சபையில் ஆடக் கூடியவர்கள், பாடக் கூடியவர்கள். பேசக் கூடியவர்கள். எந்த நிலையிலும் தேங்கிப் போகாமல் தண்ணீர் மாதிரி ஓடிக் கொண்டே இருப்பவர்கள். ஒவ்வொரு கணத்தையும் ஆசை தீர வாழத் துடிப்பவர்கள். என்னுடைய பெண்களில் ஒருத்தி கூட தற்கொலை செய்து கொண்டவர்கள் அல்ல. அந்த எண்ணம் என்னுடைய எந்த பெண்ணின் மனதிலும் வந்ததே இல்லை. ஆறுமுகம் நாவலில் வரும் தனபாக்கியத்தைத் தவிர. மாதாமாதம் உதிரத்தைப் பார்க்கிறவர்கள் பெண்கள். ஒவ்வொரு பிரசவத்தின்போதும் உதிரத்தைப் பார்க்கிறவர்கள். ஆனால் தன் குழந்தையின் கையில் ஒரு துளி ரத்தத்தை கண்டதும் துடித்துப் போகிறவர்களும் பெண்கள்தான். இந்த துடிப்பு – வசீகரம் – அழகுதான் பெண்களைப்பற்றி எழுத வைக்கிறது. அதே மாதிரி பெண் தன்னை விட்டு அந்நியப்பட்டுவிடுவாளோ என்ற அச்சத்திலேயே, ஒவ்வொரு கணவனும் வாழ்நாளெல்லாம், ஒவ்வொரு கணமும் வாழ்கிறான். அந்த அச்சத்தை போக்கத்தான் சமூக ஒழுக்க, நீதி, நெறி, அறப் பண்புகளை எல்லாம் பெண்ணை மையப்படுத்தியே சமூகம் வைத்திருக்கிறது. பெண் ஓடிவிடுவாளோ என்ற தனி மனித அச்சம், சமூக அச்சம்தான் – என்னைப் பெண்களைப் பற்றி எழுத வைக்கிறது. முன்பின் தெரியாத ஒரு ஆணோடு வாழ்வதற்குப் போகிறாள் ஒரு பெண். பதினாறு பதினேழு வயதிலேயே ஒரு பெண்ணால் குழந்தையை பிரசவிக்க முடிகிறது. எவ்வளவு பெரிய தைரியம் இது, துணிச்சல் இது? இந்த தைரியத்தில், துணிச்சலில் நூறில் ஒரு பங்கு கூட ஆணிடம் இல்லை.

நம்முடைய புராண, இதிகாச, ஐதீகக் கதைகள், நீதிக் கதைகள், நாட்டார் பாடல்கள், கதைகள், வாய்மொழிக் கதைகள், எல்லாமும் ஏன் பெண்ணுக்கான ஒழுக்கத்தை, அறத்தைப் பற்றி மட்டுமே பேசுகின்றன? பத்தினி சொன்னால் மழை வரும், பத்தினி சொன்னால் மாநகரம் எரியும், பத்தினி கட்டளையிட்டால் பஞ்சபூதங்களும் கை கட்டி நிற்கும், பத்தினி சொன்னால் வானத்து மழையே நின்றுவிடும், கற்பில் குறைபாடு இருந்தால் மழையே வராது என்றும் எதற்காக சொன்னார்கள்? பெண் வலிமையானவள். மன ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும். அதனால் அவளை வெல்ல முடியாது. அதனால் ஆண்கள் தந்திரம் செய்தார்கள். அந்த தந்திரங்கள்தான் நம்முடைய புராண, இதிகாச, காப்பிய, ஐதீக, நீதிக் கதைகள், சமூக ஒழுக்கங்கள்.

தாய் வழிச் சமூக அமைப்பிலேயே பெண்ணுக்கு தீயை, மழையை, காற்றை தன் ஏவலுக்கு உட்படுத்தும் ஆற்றல் இருந்தது என்று நம்பப்பட்டது. காப்பிய காலத்திலும் அதே நம்பிக்கை இருந்தது. ஆனால் அது கற்பு உள்ள பெண்களுக்கு மட்டுமே சாத்தியம் என்று வரையறுத்தது.

மாநகர் உள்ளீர் மழை தரும் இவள்‘ என்று மணிமேகலை சொல்கிறது.

‘வானம் பொய்யாது வளம் பிழைப்பு அறியாது
நீணில வேந்தர் கொற்றம் சிதையாது
பத்தினிப் பெண்டிர் இருந்த நாடு’

என்று சிலப்பதிகாரம் சொல்கிறது.

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை‘ என்று வள்ளுவர் சொல்கிறார்.

என்னுடைய பெண்கள் மழையை வரவழைக்கிறவர்களோ – மழையை நிறுத்துகிறவர்களோ, மழை வராமல் இருப்பதற்கான காரணத்தைத் செய்கிறவர்களோ அல்ல. ‘இருந்த வெள்ளத்த வந்த வெள்ளம் கொண்டு போச்சி‘ என்ற வகையறாக்கள். ஒரு வகையில் சாமி குத்தம் செய்யாதவர்கள்.

நான் உருவாக்கிய பெண்களில் ஒருத்தி கோவேறுகழுதைகள் நாவலில் வரும் ஆரோக்கியம். வண்ணாத்தி. அவள் மூலமாகத்தான் ஊர் துணிகள் வெளுக்கப்படுகின்றது. அவளுடைய உதவியால்தான் ஊரில் குழந்தைகள் பிறக்கின்றன. பிறந்த குழந்தைகளின் பீத்துணி, மூத்திரத் துணி அலசப்படுகிறது. பிள்ளை பெற்ற பெண்ணின் தீட்டுத்துணியை அவள்தான் அலசித்தர வேண்டும். பிள்ளை பெற்ற பெண்களுக்கு மார் கட்டிக்கொண்டால் அவள்தான் வைத்தியம் செய்ய வேண்டும். பிள்ளைக்கு பால் கொடுக்க தாய்க்கு சுரக்கவில்லை என்றால் வண்ணாத்தியின் மார்பகத்தில்தான் பிள்ளை பால் குடிக்க வேண்டும். பெண் பிள்ளை வயசுக்கு வந்தால் சடங்கு முடியும்வரை நாள்தோறும் தீட்டுத்துணியை எடுத்துக்கொண்டு போய் அலச வேண்டும். ஊரில் யார் செத்தாலும் முதலில் அவள்தான் போக வேண்டும். எழவு சொல்ல, வாய்க்கரிசி தூக்க, பாடை கட்ட, குடம் உடைக்க, பால் தெளிக்க என்று அவள்தான் போக வேண்டும். அறுவடை காலத்தில் ஒவ்வொரு வீட்டுக்கும் களம் தூற்றப் போக வேண்டும். இரவில் ஒவ்வொரு வீட்டுக்கும் சோறு எடுக்க போக வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக திருட்டுப் பிள்ளை வாங்கும் பெண்களின் கருவை கலைக்கவும் ஆரோக்கியம் வேண்டும். ஊர் ஆண்கள் செய்யும் பாலியல் தொல்லைகளையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். தன் மகள் மேரி எதிர்கொள்ளும் வன்புணர்ச்சியையும் அவள் சகித்துக்கொள்கிறாள்.

ஆரோக்கியத்தை யார் உருவாக்கினார்கள்? சமூகம். ஊரின் நலனுக்காக – பொதுச் சொத்தாக்கப்பட்ட, பலியாக்கப்பட்ட, பலி கொடுக்கப்பட்ட பெண். அவளைத் தெரியாமல் அந்த ஊரில் யாராவது இருக்க முடியுமா? ஆண்களே இல்லையா, ஆண்கள் வேலையே செய்யவில்லையா என்று கேட்கலாம். நாவலில் ஆண்கள் இருக்கிறார்கள். தாய் ஆட்டுக்குப் பின்னால் ஓடும் குட்டியாடுகள் மாதிரி. ஆரோக்கியத்தின் பின்னால் சவுரி. மேரியின் பின்னால் அவளுடைய புருசன். மனைவியின் பேச்சுக்கு மறு பேச்சில்லாமல் கையைக் கட்டிக்கொண்டு சின்ன சேலத்திற்கு ஓடுகிறான் ஜோசப்.

கோவேறுகழுதைகள் நாவலில் ஆரோக்கியம் மட்டும்தான் சமூகம் பலி கொடுத்த பெண் என்று சொல்ல முடியாது. ஆறுமுகம் நாவலில் வரக்கூடிய தனபாக்கியம், சின்னப்பொண்ணு, வசந்தா, அபிதா – எல்லாருமே தனது உல்லாசத்திற்காக சமூகம் – பலி கொடுத்த சமூகத்தின் பொதுச் சொத்தாக்கிய பெண்கள். பாலியல் தொழிலாளிகள். இந்த நாவலில் ஆண்கள் நிறையவே இருக்கிறார்கள். ஆள் பிடித்து வரும் தரகர்கள், பெண்களை வைத்து தொழில் செய்யும் ஏஜெண்ட்டுகள், போலீஸ் ஸ்டேஷன், கோர்ட் என்று அலையும் ஆண்கள் இருக்கிறார்கள். எல்லாருமே தனபாக்கியம், சின்னப்பொண்ணு, வசந்தா, அபிதா என்ற பெயர்களுக்குப் பின்னால் இருக்கும் நிழல்கள். ஆண்கள் காற்றிலாடும் மரங்களாக இருக்கிறார்கள். பெண்கள் சூறைக்காற்று. என்னுடைய நாவல்களில், சிறுகதைகளில் ஆண்கள் நிறையவே இருக்கிறார்கள். எப்படி இருக்கிறார்கள்? பெண்களுடைய ஏவல் ஆட்களாக, எடுபிடிகளாக. என்னுடைய பெண்கள் உழைக்கிறவர்கள், உழைப்பையே வாழ்க்கையாக கொண்டவர்கள். அதனால் சுதந்திரம் பெற்றவர்களாக இருக்கிறார்கள். உழைப்பு அவர்களுக்கு வலிமையைக் கொடுக்கிறது.

நகரமயமாதல் – பெண்களை ஒரு வகையில் சுதந்திரமானவர்களாக மாற்றுகிறது. அதே நேரத்தில் பெண்களை இரட்டை உழைப்புக்கு ஆளாக்குகிறது. கிராமத்தில் மட்டுமல்ல நகரத்திலும் பெண்களுக்கு குறைந்த சம்பளம் தரப்படுகிறது. பெண்களை வேலைக்கு எடுப்பதே குறைந்த சம்பளம் கொடுக்கலாம் என்பதற்காகத்தான். அதிக உழைப்பு. குறைந்த சம்பளம். பெண்கள் என்றால் போராட்டமும் வராது. பாலியல் சீண்டலும் செய்யலாம். ஆறுமுகம் நாவலில் வரக்கூடிய பெண்களில் ஒருத்தி கூட பாலியல் சீண்டலுக்கு, பாலியல் வக்கிரத்திற்க்கு ஆளாகாதவள் என்று யாரையும் அடையாளம் காட்ட முடியாது. இது நகரமயமாதல் பெண்களுக்கு தந்த வெகுமதி. இதைத்தான் வளர்ச்சி என்றும் முன்னேற்றம் என்றும் போற்றுகிறோம். அதிவேக வளர்ச்சி அதிவேக சீரழிவு.

பாலியல் தொழிலாளி ஆவதுதான் என் வாழ்வின் லட்சியம், கனவு என்று சொன்ன பெண் யாரு? ஆசைப்படாதபோதும், விரும்பாதபோதும் எப்படி பெண்கள் பாலியல் தொழிலாளிகளாக மாற்றப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள்? இது யாருடைய விருப்பத் தேர்வு?

சாதி சார்ந்த ஒழுக்கம், சமயம் சார்ந்த ஒழுக்கம், சமூகம் சார்ந்த ஒழுக்கம், கலாச்சார பண்பாட்டு விழுமியங்கள், பெருமைகள் அனைத்தும் ஏன் பெண்ணை மையமாகக் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளன? உருவாக்கப்படுகின்றன? இவையெல்லாம் ஏன் ஆண்களுக்கு பெருந்துவதில்லை? யோனியை வெல்லும் திறன் உலகில் எந்த ஆணிடமும் இல்லை. பெண்ணின் உடலை வெல்ல முடியாது என்கிற உண்மையை மறைப்பதற்காக ஆணின் இயலாமையை மறைப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒழுக்க நெறிதான் – கற்பு. காலத்திற்கு காலம் சமூகம் மாறுகிறது. வாழ்வியல் முறைகள் மாறுகின்றன. ஆனால் பெண்ணுக்கென்று உருவாக்கப்பட்ட கற்பு நெறி – என்பது மட்டும் மாறவே இல்லை. நம்முடைய சமூகம் பெண்ணின் பெருமையை, முழுமையை அவளுடைய கன்னித்திரையில் வைத்திருக்கிறது. கன்னித்திரையை புதுப்பித்துக் கொள்வதின் வழியாக தங்களுடைய புனிதத்தன்மையை மீட்டுருவாக்கம் செய்துகொள்வதில் இன்றைய நவீன பெண்கள் அதிக ஈடுபாடு காட்டுகின்றனர். கன்னித்திரையை மீட்டுத் தருவதற்கான மருத்துவ மனைகளும் பெருகிவிட்டன.

ஆண்கள் என்ற புனிதர்கள், உத்தமர்கள், இறை தூதர்கள் கன்னித்திரையின் ஒழுக்கத்தையே பெண்ணின் ஒழுக்கமாக, கற்பு நெறியாக உருவாக்கிய புனிதத்திற்கு எதிரானவர்கள் என்னுடைய பெண்கள். அவர்களுடைய வாழ்க்கையில் கற்பு நெறி என்று ஒன்றும் இல்லை. புனிதம் என்று ஒன்றும் இல்லை. கன்னித்திரையை புதுப்பித்துக் கொண்டு தங்களுடைய பெண்மையின் புனிதத்தை நிரூபிக்க வேண்டிய அவசியமும் அவர்களுக்கு இல்லை. சமூக எதார்த்தத்தின் முகம் கொடூரமானது, குரூரமானது என்பதை என்னுடைய பெண்கள் காட்டுகிறார்கள். அதோடு சமூகத்தின் பித்துக்குளித்தனத்தையும்.

கோவேறுகழுதைகள் நாவலின் ஆரோக்கியம் ஒரு கிராமத்தின் சொத்தாக, ஒரு கிராமத்திற்காக மட்டுமே பலியிடப்பட்டவளாக இருக்கிறாள். ஆறுமுகம் நாவலில் வரும் தனபாக்கியம், சின்னப்பொண்ணு, வசந்தா, அபிதா – ஒரு நகரத்தின் சொத்தாக, பலியிடப்பட்டவர்களாக இருக்கிறார்கள்.

செடல் நாவலில் வரும் செடல், பாஞ்சாலி, லட்சுமி ஆகியோர் கிராமம், நகரம் என்ற எல்லையை மீறி பல ஜில்லாவிற்கும் பொதுவாக, பல ஜில்லாவுக்குமாக பலி கொடுக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள். செடலுக்கு முப்பது கிராமங்கள் பட்டயம் எழுதி தருகிறது. அதே மாதிரி பாஞ்சாலிக்கும் இருபது கிராமங்கள் பட்டயம் எழுதி தருகிறது. இருவருமே கிராம தெய்வத்திற்கு பொட்டு கட்டிவிடப்பட்டவர்கள். பொட்டு கட்டிவிடப்பட்ட கோவில்களில் ஆடுவதோடு ஜில்லா விட்டு ஜில்லா சென்று தெருக் கூத்து ஆடுகிற ஆட்டத்தினால் பல ஜில்லாவிலும் புகழ் பெற்ற பெண்களாக இருக்கிறார்கள். இன்று குறவன் குறத்தி ஆட்டத்தில் ஆடுகிற பெண்கள் குறித்து பொது சமூகத்தின் மனநிலை என்ன? ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன் ஊர் ஊராக தெருக்கூத்து ஆடச் சென்றவர்கள் பாஞ்சாலியும் செடலும். சமூகம் அவர்களை எப்படி பார்த்திருக்கும்? எப்படி நடத்தியிருக்கும்? எப்படி அதை இப்பெண்கள் சகித்துக் கொண்டார்கள்? சங்க இலக்கியம் வர்ணித்த ‘ஆடற் மகளிர்‘ இனத்தின் கடைசி வாரிசுகள்தான் பாஞ்சாலியும், செடலும்.

ஒரு கிராமத்தின் தேவைக்காக பலியிடப்பட்ட பெண் ஆரோக்கியம். நகரத்தின் தேவைக்காக பலியிடப்பட்டவர்கள் தனபாக்கியம், வசந்தா, சின்னப்பொண்ணு, அபிதா. சமூகத்தின் சாதிய, சமய நம்பிக்கைகளுக்காக, கலாச்சார பண்பாட்டுக் கூறுகளுக்காக பலியிடப்பட்ட செடலும் பாஞ்சாலியும். வண்ணாத்தி இல்லாமல் இருக்க முடியுமா? காமச் செயல்பாடுகள்தானே ஆணின் வீரத்திற்கு எடுத்துக்காட்டு. அது இல்லாமல் எப்படி? சமூகம் என்றால் சாதி வேண்டும், சமயம் வேண்டும், நம்பிக்கைகள், அறம், நீதி வேண்டும். சமூகத்தின் இந்த மூன்று தேவைகளுக்காகவும் உருவாக்கப்பட்டவர்கள்தான். செடல், பாஞ்சாலி நான் உங்களுக்கு காட்டிய ஆரோக்கியம், தனபாக்கியம், சின்னப்பொண்ணு, அபிதா, வசந்தா. மாற்றிக்கூறினால் பொது உழைப்பிற்கு ஆரோக்கியம், பொது உல்லாசத்திற்கு தனபாக்கியம், பொது நம்பிக்கைக்கு செடல். இப்பெண்களின் வாழ்க்கையை தீர்மானித்தது – சம்பந்தப்பட்ட பெண்கள் அல்ல. அவர்கள் சம்பந்தப்பட்ட குடும்பம் கூட அல்ல. சமூகம்.

என்னுடைய நாவல்களில் வரக் கூடிய பெண்கள்தான் பொது சொத்தாக, ஊர் அறிந்தவர்களாக, சமூகத்திற்காக சமூகத்தால் பலியிடப்பட்டவர்கள் என்றால் என்னுடைய பெரும்பாலான சிறுகதைகளில் வரக்கூடிய பெண்களின் வாழ்க்கையையும் சமூகமே தீர்மானிக்கிறது.

திருட்டுப்போன பொண்ணு – சாமக் கோடாங்கி இனத்தை சார்ந்த ஒரு பெண்ணின் கதை. அந்த இனத்தில் பெண்கள் வயதுக்கு வந்தால் உடனே ஊர் மந்தையில் குச்சில் கட்டி தங்கவைத்து, இருபது நாட்கள் கழித்து சடங்கு முடித்துத்தான் பெண்ணை வீட்டுக்கு அழைத்துக்கொண்டு வருவார்கள். குச்சிலில் பெண் தங்கியிருக்கும்போது – பெண்ணுக்குரிய தாய்மாமன்கள், முறை மாமன்கள் – அவர்களுக்கிடையே பெண்ணை யார் கட்டிக்கொள்வது என்று போட்டியிருந்தால் பெண்ணைத் தூக்கிக் கொண்டுபோய் தாலி கட்டி விடுவார்கள். அவ்வாறு தாலி கட்டிவிட்டால் பெண்ணை பெற்றவர்களால் கூட ஒன்றும் செய்ய முடியாது. சேர வேண்டியவனுக்கு சேர்ந்துவிட்டது சொத்து – என்று சாதி பஞ்சாயத்தில் தீர்ப்பாகிவிடும். அந்த மாதிரி எதுவும் நடக்கக் கூடாது என்று காவல் இருப்பார்கள். காவலை மீறி பெண்கள் திருட்டுப் போவது வழக்கம். ஒரு ஊரில் ஒரே நேரத்தில் நான்கு பெண்கள் வயதுக்கு வந்துவிட்டார்கள். அதில் ஒரு பெண்ணை யார் கட்டிக்கொள்வது என்று கடும் போட்டி. அதனால் இரவோடு இரவாக ஒரு பெண்ணைத் தூக்கிக் கொண்டு போய்விடுகிறார்கள். விடிந்து பார்த்தபோதுதான் தெரிந்தது – தூக்கிக் கொண்டு வரவேண்டிய பெண் ஒன்று, தூக்கிக் கொண்டு வந்த பெண் ஒன்று. பெண் மாறிவிட்டது. ஊர்ப் பஞ்சாயத்துக்கு, சாதி பஞ்சாயத்துக்கு பயந்துக்கொண்டு எட்டு நாள் வெளியில் சொல்லாமல் வைத்திருந்துவிட்டு பெண்ணை அனுப்பி விடுகிறார்கள். திரும்பி வந்த பெண்ணுக்கு – அதாவது திருட்டுப் போன பொண்ணுக்குக் கல்யாணம் நடக்கவில்லை. காரணம் திருட்டுப் போன பொண்ணு என்பதால் கல்யாணம் நடக்காமலேயே கிழவியாகிவிடுகிறாள். கல்யாணம் நடக்காமல் வீட்டிலேயே இருந்துவிட்டதால் தெருவிலிருக்கும் குமரி பிள்ளைகளுக்கு அவள்தான் துணை. விளையாட்டுத் தோழி. பிள்ளைக்காரிகளுக்கு பிள்ளை வைத்திருக்கிற ஆள். கிழவிகளுக்கு கதை கேட்கிற ஆள் – என்று கிழவியாகிவிடுகிறாள். திருட்டுப் போன காரணத்தினால் அந்த ஊருக்கு மட்டுமல்ல. சுற்றுவட்டார ஊர்களுக்கும் தெரிந்த பெண்ணாக – பெயர் பெற்ற பெண்ணாக இருக்கிறார்கள். அவளுடைய வாழ்க்கையை யார் தீர்மானித்தது? திருட்டுப் போனதால் அவளைக் கல்யாணம் கட்டிக் கொள்ளத்தான் யாரும் வரவில்லை. ஆனால் திருட்டுக் காதல் செய்யவும், திருட்டுப் பிள்ளை கொடுக்கவும் ஊர் உலகத்து ஆண்கள் எல்லாம் வந்தார்கள் என்பது முக்கியமானது.

அணையும் நெருப்பு கதையில் வரும் பெண்ணின் பெயர் சந்தோசம். ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது தன்னுடன் படித்த ஒரு பையனைக் காதலித்ததால் அவளுடைய காதலை பள்ளிக்கூட சுவர், வாட்டர் டேங்க் என்று பையன்கள் எழுதி விடுவதால் – சந்தோசத்தின் காதல் விசயம் பத்து இருபது ஊர்களுக்கு தெரிந்துவிடுகிறது. அதனால் சந்தோசத்திற்கு அவசரமாக கல்யாணம் நடக்கிறது. மாப்பிள்ளை போலீஸ்காரர். இரண்டு பெண் பிள்ளைகள் பிறக்கிறது. பன்னிரெண்டாவது வருசத்தில் ஒரு விபத்தில் சந்தோசத்தின் புருசன் இறக்க கருணை அடிப்படையில் வேலை கேட்டு – புருசன் வேலை செய்த காவல் நிலையத்திற்கு போகிறாள். அங்கிருக்கும் ஆய்வாளர் உதவுகிறார். மேலதிகாரிகளுக்கு விண்ணப்பம் எழுத, ஒவ்வொரு அலுவலகமாக, ஒவ்வொரு ஊராக செல்ல உதவுகிறார். இரண்டாண்டு கடக்கிறது. ஆய்வாளருக்கும் சந்தோசத்திற்கும் காதல் ஏற்படுகிறது. வேலை கிடைக்கிற நேரத்தில் ஆய்வாளரின் மனைவி சந்தோசத்தின் பெயரை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொள்கிறாள். ஆய்வாளரை கைது செய்யக் கோரி பிணத்தை வைத்துக்கொண்டு சாலை மறியல் செய்கிறார்கள். சாலை மறியல் என்பதால் செய்தித்தாள், தொலைக்காட்சிகள் வருகின்றன. ஆய்வாளருக்கும் சந்தோசத்திற்குமான காதல் – உலகம் முழுவதும் பரப்பப்படுகிறது. ஊடகத்தால் சந்தோசம் விபச்சாரியாக்கப்படுகிறாள். ஆய்வாளரின் மனைவி பத்தினியாக்கப்படுகிறாள். சந்தோசத்தின் காதல் ஏன் பள்ளியின் சுவர்களில் எழுதப்படுகிறது? முப்பது வயதில் ஏற்பட்ட காதல் ஏன் உலகம் முழுவதும் தெரிவிக்கப்பட்டது? உலகம் முழுவதும் அறியப்பட்ட பெண்.

வரம் என்ற கதையில் வரும் பெரியநாயகம். தான் பெற்ற ஒரே பிள்ளையும் சாக வேண்டும் என்று குலத்தெய்வத்திடம் வேண்டுகிறாள். பெரியநாயகத்தின் மகள் +2வில் கடைசி பரீட்சை எழுதப் போனவள் சொந்த பெரியப்பா மகனோடு ஓடிப்போய்விடுகிறாள். விசயம் ஊர் உலகத்திற்கே தெரிந்துவிடுகிறது. அப்போது குலதெய்வத்திடம் வேண்டுகிறாள். ‘இன்னம் எட்டாம் நாளுக்குள்ளார அவ சாவணும். இல்லன்னா ஒம் மூஞ்சியில சாணிய கரச்சி ஊத்திப்புடுவன்‘ என்று சாமிக்கு உத்தரவு போடுகிறாள். சாமியின் முகத்தில் சாணியைக் கரைத்து ஊற்றுகிற பெண் – பெரியநாயகம்.

பொன்னம்மாவின் குடும்பக் கதையில் வரும் பொன்னம்மா. ஒரு குடும்பம் பஞ்சம் பிழைக்க வெளியூர் போகிறது. அப்படிப் போகும்போது குலதெய்வத்தை ஒரு கூடையில் வைத்து தூக்கிக் கொண்டு போகிறார்கள். ஒரு ஊரில் நிலை பெறுகிறார்கள். குலசாமியை குடி வைக்கிறார்கள். குடும்பம் பெருகுகிறது. குலசாமியின் புகழ் பரவுகிறது. படிப்படியாக குடும்பம் பல குடும்பமாகி, பல ஊர், பல தேசம் என்று சிதறுகிறது. ஒரே ஒரு பெண் மட்டும் எஞ்சுகிறாள். அவள்தான் பொன்னம்மா. அனாதையாகிவிட்டதால் இரவும் பகலும் கோவிலைக் கூட்டிக் கொண்டு கிடக்கிறாள். இரவில் சாமி வந்து பொன்னம்மாவோடு படுத்துக்கொள்கிறது. அவள் புருசனோடு படுத்திருந்தாலும், புருசனை விலக்கி விட்டுவிட்டு குள்ளக்கருப்பு சாமி அவளோடு படுத்துக்கொள்ளும். சாமியோடு படுத்துக்கொள்கிற பெண் – பொன்னம்மா.

பெத்தவன் கதையில் வரும் பாக்கியம் – அவளுடைய காதலை பல ஊர் பேசுகிறது. பல ஊர் பஞ்சாயத்து பேசுகிறது. சாதி பேசுகிறது. கட்சி பேசுகிறது. பாக்கியத்தின் காதலை – வாழ்வை யார் தீர்மானிக்கிறார்கள்? பஸ் ஏற போன பாக்கியம் தன் காதலனுடன் போய் சேர்ந்தாளா? வழியிலேயே கொலை செய்யப்பட்டாளா? தெரியாது.

சத்தியக்கட்டு கதையில் வரும் பொன்னருவி தாழ்த்தப்பட்ட இனத்துப் பெண். உயர்ச்சாதிக்காரனால் காதலிக்கப்பட்டு கர்ப்பமாகிறாள். எட்டு மாதம். கல்யாணம் செய்து கொள்ள கேட்கிறாள். உயர்ச்சாதிக்காரனின் வாரிசு தாழ்த்தப்பட்ட இனத்தின் பெண்ணின் வயிற்றில் வளருகிறது. ஆனால் தாழ்த்தப்பட்ட இனத்துப் பெண் உயர்ச்சாதிக்காரர்கள் வசிக்கும் தெருவில் வாழ முடியுமா? முடியாது. அப்படியிருக்கும்போது அவள் எப்படி உயர்ச்சாதிக்காரனோடு இணைந்து வாழ்வது? அதனால் ஒரு குளத்தில் மூழ்கடித்து கொல்லப்படுகிறாள். தாழ்த்தப்பட்ட சாதிக்காரி செத்ததால் அந்த குளம் தீட்டுக்குளம் என்றாகி, ஆடுமாடுகள்கூட அந்தக் குளத்தில் தண்ணீர் குடிப்பதை நிறுத்திவிடுகின்றன. போலீஸ், கோர்ட், வழக்குக்குப் பயந்துகொண்டு பொன்னருவி – சாமியாக்கப்படுகிறாள். பொன்னருவி சாமி. கல்யாணமாகாத பெண்களுக்கு கல்யாண வரம் கொடுக்கும் சாமி. பிள்ளையில்லாத பெண்களுக்கு பிள்ளை வரம் கொடுக்கும் சாமி. பால் சுரக்காத பெண்களுக்கு பால் சுரக்க வரம் கொடுக்கும் சாமி. ஒவ்வொரு வருசமும் பொன்னருவி சாமிக்கு திருவிழா நடக்கிறது. அவள் கொலை செய்யப்பட்ட குளம் மட்டும் இன்றும் தீட்டுக்குளம். பொட்டைக்குளம். பறச்சிக்குளம்.

தமிழகத்தில் பெண் தெய்வங்களாக உள்ள எல்லா சாமிகளுமே ஒரு காலத்தில் கொலை செய்யப்பட்ட பெண்களே. உயர்ச்சாதிக்காரனை காதலித்த தாழ்த்தப்பட்ட பெண்கள் – தாழ்த்தப்பட்ட இனத்து ஆண்களை காதலித்த உயர்குலத்துப் பெண்கள் கொல்லப்பட்டனர். சாமிகளாக்கப்பட்டனர். சாதியின் பெருமைக்காக, சாதியின் பெருமையை காக்கக் கொலை செய்யப்பட்ட பெண்கள்தான் மாரியம்மன், தீப்பாஞ்சம்மன், செங்கேணியம்மன். சீலைக்காரி அம்மன். மானங்காத்தாள் – என்று ஒரு சாமி இருக்கிறது. தாழ்த்தப்பட்ட இனத்து ஆணை காதலித்த உயர்குலத்து பெண் கல்யாணி. அவளுடைய காதலை வீடும், ஊரும், சாதியும் எதிர்க்கிறது. ஊர் கொல்வதற்கு முன் நீயாகவே செத்துவிடு என்று சொல்கிறார்கள். அதை ஏற்று தானாகவே செங்கல் சூளைக்குள் இறங்கி மாண்ட பெண் கல்யாணி. சாதிப் பெருமையை காப்பதற்காக செங்கல் சூளையில் உயிர்விட்டாள். சாதியின் மானத்தைக் காப்பாற்றினாள். அதனால் அந்த பெண்ணுக்கு – அதாவது சாமிக்கு மானங்காத்தாள் என்று பெயர். இந்தியத் தொன்மம் என்பது இவர்கள்தான். இப்படியான பெண்களில் கண்ணகி – கொற்றவை என்கிற தொன்மமும் அடங்கும்.

ஆரோக்கியம், மேரி, தனபாக்கியம், சின்னப்பொண்ணு, வசந்தா, அபிதா, செடல், பாஞ்சாலி, திருட்டுப்போன பொண்ணு, சந்தோசம், பெரியநாயகம், பொன்னம்மா, பாக்கியம் – பொன்னருவி, கோகிலா இத்தனை பெண்களில் – ஒருத்தி கூட தன்னுடைய வாழ்வை – விருப்பத்தை தானே முடிவு செய்தவர்கள் அல்ல. மாறாக ஊர் முடிவெடுக்கிறது – உலகம் முடிவெடுக்கிறது. திருட்டுப்போன பொண்ணை யார் தூக்கிக்கொண்டு போனார்கள்? தெரியாது. பெத்தவன் கதையில் பாக்கியத்தின் காதலன் யார்? தெரியாது. இப்பெண்கள் தங்களுக்கு விதித்த வாழ்க்கையை முகச்சுளிப்பு இல்லாமல் ஏற்றுக்கொண்டவர்கள். தங்களுடைய வாழ்க்கையை மற்றவர்கள் – அதாவது சமூகம் ஏன் தீர்மானித்தது என்று ஒருபோதும் கேள்வி கேட்காதவர்கள். ஆனால் விதிக்கப்பட்ட வாழ்க்கையை அவ்வளவு விருப்பத்துடன், அவ்வளவு ஈடுபாட்டுடன் – முழு அர்த்தத்தோடு வாழ்ந்தவர்கள். தாங்கள் வாழ்வது இழிவானது என்றோ, கேவலமானது என்றோ வெறுப்புடன் அவர்கள் ஒருபோதும் வாழ்க்கையை குறை கூறியதில்லை. குற்றம் சாட்டியதில்லை. ஆசை கொண்ட மனங்களுக்குத்தான் இக்குணங்கள் இருக்கும். என்னுடைய பெண்கள் அவர்களுடைய வாழ்க்கையை வாழ்ந்தார்கள். அவர்களுடைய மொழியைப் பேசினார்கள். தாங்கள் வாழ்ந்த வாழ்க்கையை இப்பெண்கள் என்னிடம் கண்ணீராகவும் சொற்களாகவும், ஒப்பாரிப் பாடலாகவும் தந்தார்கள். அதைத்தான் நான் நாவல்களாகவும் சிறுகதைகளாகவும் தந்திருக்கிறேன்.

அணையும் நெருப்பு – சந்தோசம் விதவை. ஒரு கதையும் இரண்டு மனிதர்களும் கதையில் வரும் குள்ளம்மாள், பழம்புளி வீடு கதையில் வரும் பஞ்சவர்ணம், அவரவர் பாடு கதையில் வரும் தீபாவின் அம்மா, உயிர்நாடி கதையில் வரும் தங்கம்மா, அன்னக்கிளியும் பன்றிக்கறியும் கதையில் வரும் பழனியம்மா, விடியாத இரவு பழனியம்மா, தொடரும் கதையில் வரும் சின்னம்மா, அம்மாவின் இடம் கதையில் வரும் அம்மா, நிஜமும் பொய்யும் கதையில் வரும் மொட்டையம்மாள், பயணம் கதையில் வரும் லோகாம்பாள், அம்மா கதையில் வரும் பெண், நாளை கதையில் வரும் பெண், கொலைச்சேவல் கதையில் வரும் கோகிலா இவர்கள் அனைவரும் விதவைகளே. இப்படி எல்லாருமே விதவைகளாக இருக்கிறார்கள். கணவன் இல்லாததை ஒரு குறையாக, பெரிய இழப்பாக கருதாதவர்கள். முடங்கிப் போகாதவர்கள். சகிப்புத் தன்மையை தங்களுக்கான பொக்கீசமாக, ஆபரணமாக ஏற்றுக்கொண்டவர்கள்.

சமூகத்தில் எவ்வளவோ பெண்கள் இருக்கும்போது – சமூகத்தால் இழிவு செய்யப்படுகிற பெண்களையே நான் உருவாக்கி இருக்கிறேன். ஆரோக்கியம் ஒரு பெண் அல்ல. ஒர கிராமத்தின் மொத்த வாழ்க்கை. செடல் நம் சமூகத்தின் மிகப் பெரிய நம்பிக்கைகள். தனபாக்கியம், திருட்டுப்போன பொண்ணு, சந்தோசம், பெரியநாயகம், பொன்னம்மா – இது எல்லாம் வெறும் பெயர்கள் அல்ல. இவர்கள் சமூகத்தின் நடப்புகளாக, சமூகத்தின் நிகழ்வுகளாக இருந்தவர்கள். இவர்கள்தான் தமிழ் சமூகம் குறிப்பிட்ட காலத்தில், குறிப்பிட்ட இடத்தில் எப்படி வாழ்ந்தது என்பதற்கான சாட்சிகள். தமிழ்ச் சமூகம் வாழ்ந்ததற்கான சாட்சிகளையே நான் உருவாக்கி இருக்கிறேன். எது இலக்கியம், யார் எழுத்தாளன் என்பதை இந்த சமூக அசைவியக்க சாட்சிகள்தான் நிர்ணயிக்கிறார்கள். என்னுடைய பெண்கள் கேட்பது பணமல்ல, நகை அல்ல, பங்களா, கார், அதிகாரம், காமம் அல்ல. சோறு. அதைத்தான் சமூகம் தர மறுத்திருக்கிறது. அதற்காகத்தான் இப்பெண்கள் போராடுகிறார்கள்.

நான் ஒரு பெண்ணின் கதையை எழுதவில்லை. ஒரு குடும்பத்தின் கதையை எழுதவில்லை. ஒரு பெண்ணின் கதையை, ஒரு குடும்பத்தின் கதையை எதற்காக எழுத வேண்டும்? யாரும் வாழாத வாழ்க்கையையா அவர்கள் வாழ்ந்தார்கள்? ஒரு மனிதனின் கதைக்கும், ஒரு குடும்பத்தின் கதைக்கும் வரலாற்றில் எந்த முக்கியத்துவமும் இல்லை. மாறாக ஒரு சமூகத்தின் கதையை எழுதவேண்டும். அதுதான் ஒரு இடத்தின் வாழ்வு – ஒரு காலத்தின் வாழ்வு. ஒரு கதையை ஏன் எழுதுகிறேன் என்றால் – ஒரு நிலவியலை பதிவு செய்வதற்காக – ஒரு குறிப்பிட்ட காலத்தில் சமூகம் எப்படியிருந்தது என்பதை சொல்லவே – கதை எழுதுகிறேன். பாத்திரங்களை உருவாக்குவது என் வேலை அல்ல.
ஒரு நிலப்பரப்பை, குறிப்பிட்ட காலத்தை, அக்கால சமூக நடவடிக்கையை சொற்களுக்குள் சேமித்து வைக்க இப்பெண்கள் எனக்கு உதவினார்கள். வழிகாட்டியாக இருந்தார்கள். கண்ணாடியாக இருந்தார்கள்.


தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் எழுத்தாளர்கள்

தொடர்புடைய சுட்டிகள்:
இமையத்தின் தளம்
இமையம் பற்றிய விக்கி குறிப்பு
இன்னும் சில சிறுகதைகள்

கடந்த இருபது ஆண்டுகளின் முக்கிய தமிழ் படைப்புகள் – வெங்கட் சாமிநாதன்

வெங்கட் சாமிநாதன் திண்ணை இணைய இதழில் இரண்டு வருஷத்துக்கு முன்பு ஒரு கட்டுரை (பாகம் 1, பாகம் 2, பாகம் 3) எழுதி இருக்கிறார். கடந்த இருபது வருஷங்களில் அவர் முக்கியமானவையாக நினைக்கும் புத்தகங்கள், எழுத்தாளர்கள் பற்றியும் இவற்றில் எழுதி இருக்கிறார். அந்த காலத்தில் இருந்த ஒழுக்கங்கள் இன்று கைவிடப்படுகின்றன என்று அலுத்தும் கொள்கிறார்.

அன்றைக்கிருந்தாப் போல இன்றைக்கில்லை என்பது எல்லா பெரிசுகளும் சொல்லும் குறைதான். இன்னும் 20 வருஷம் கழித்து நான் உயிரோடு இருந்தால் நானும் இப்படித்தான் பேசுவேன். ஆனால் காந்தியின் தாக்கம் கணிசமானவர்களை ஒழுக்கமானவர்களாக மாறியது என்றுதான் தோன்றுகிறது. இன்று காந்தியின் தாக்கம் மதுக் கடைகள் அவர் பிறந்த நாள் அன்று மூடப்படுவது மட்டும்தான். நம்முடைய ரோல் மாடல்கள் இன்று அம்பானியும், மாறன்களும், பில் கேட்சும், நாராயண மூர்த்திகளும், ப்ரேம்ஜிகளும், ரஜினிகாந்த்களும், விஜய்களும், அஜித்களும், டெண்டுல்கர்களும், தோணிகளும்தான். காந்தி, நேரு, காமராஜ், படேல், ராஜாஜி, வ.உ.சி. போன்றவர்கள் அல்ல. அதனால் நமது value system மாறித்தான் விட்டது.

சரி அதை விடுவோம். புத்தகங்கள், எழுத்தாளர்கள் பற்றி அவர் நிறைய எழுதி இருக்கிறார். அவற்றை பற்றி என் குறிப்புகள் கீழே.

முதல் பாகத்தில் அவர் குறைகள்தான் பெரிதாக இருக்கிறது. கடைசியில் சில பெயர்களை மட்டும் சொல்கிறார். அவர்களைப் பற்றிய விவரங்கள் அடுத்த இரண்டு பகுதிகளில் வருகின்றன. நேரடியாக சிபாரிசுகளைப் பற்றி படிக்க விரும்புபவர்கள் முதல் பாகத்தை தவிர்க்கலாம்.

இரண்டாம் பகுதியில் அவர் குறிப்பிடுபவர்களில் அ. முத்துலிங்கம் கொண்டாடப்பட வேண்டியவர். அவர் கதைகளை நான் ஓசியில் இணையத்தில்தான் படித்தேன். அசோகமித்ரனின் வாரிசு இவர்தான். ஆனால் அசோகமித்ரனை விட இவரது எழுத்துக்கள் கொஞ்சம் optimism உள்ளவை. பல கதைகளை படித்து புன்னகை வரும்.

ராஜமார்த்தாண்டனின் கொங்குதேர் வாழ்க்கை ஒரு சிறப்பான கவிதை தொகுப்பு என்று குறிப்பிட்டிருக்கிறார். நான் கவிதையை கண்டாலே ஓடுபவன். எங்கேயாவது ஓசியில் கிடைத்தால் புரட்டிப் பார்க்கலாம். சல்மா, உமாமகேஸ்வரி, மாலதி மைத்ரி, திலகபாமா ஆகியோரை முக்கியமான பெண், பெண்ணிய கவிஞர்கள் என்று குறிப்பிடுகிறார். நமக்கு கவிதையே ததிங்கிணத்தோம், பெண்ணியக் கவிதை என்றால் பேச்சு மூச்சே நின்றுவிடும்!

ஜெயமோகனின் விஷ்ணுபுரம், பின் தொடரும் நிழலின் குரல், ஏழாம் உலகம் ஆகிய நூல்களை சிலாகிக்கிறார். நான் காடு என்ற புத்தகத்தையும் இந்த லிஸ்டில் சேர்த்துக் கொள்வேன். என் கருத்தில் ஜெயமோகன் நோபல் பரிசு வாங்கும் தரத்தில் எழுதுகிறார். ஆழமாகவும், அதே சமயத்தில் விரிவாகவும் எழுதுகிறார். Deep and wide. பேய் பிடித்தவன் போல் எழுதுகிறார். ஒரு வருஷத்துக்கு 2000-3000 பக்கங்கள் எழுதுவார் போலிருக்கிறது. நானும் எழுத முயற்சித்தேன், ஒரு பக்கம் எழுதவே எனக்கு ஒரு வாரம் ஆகிறது. 😦 ஜெயமோகனின் விமர்சனங்களும் முக்கியமானவை.

வெ.சா. ஜெயமோகனை புதுமைப்பித்தனுக்கு இணையான சாதனை என்கிறார். என் கண்ணிலும் ஜெயமோகன் ஜீனியஸ்தான், ஆனால் புதுமைப்பித்தன் இன்னும் கொஞ்சூண்டு மேலே நிற்கிறார். 🙂 இவர்கள் இருவர், மற்றும் அசோகமித்ரன் ஆகியோரே தமிழ் எழுத்தாளர்களில் (என் கண்ணில்) ஜீனியஸ்கள்.

எம். கோபாலகிருஷ்ணன் எழுதிய மணல் கடிகை ஒரு புது உலகத்தை நம் முன் வைக்கிறது என்று சொல்கிறார். நான் படித்ததில்லை. சூத்ரதாரி என்ற பேரில் எழுதுபவரும் கோபாலகிருஷ்ணன்தானோ?

ஜோ டி குருசின் ஆழிசூழ் உலகு பற்றி சிலாகித்து சொல்கிறார். இந்த புத்தகத்தை படிக்க ஆரம்பித்தேன். அருமையான புத்தகம் என்று ஒரு நூறு பக்கம் படித்ததும் தெரிந்தது. ஆனால் ஒரு பக்கம் வைத்துவிட்டேன். சில சமயம் இப்படி ஆகிவிடுகிறது.

பெருமாள் முருகன் கவுண்டர்-தலித் பற்றி உண்மையாக எழுதுவதாக குறிப்பிடுகிறார். நான் நிழல் முற்றம் மட்டுமே படித்திருக்கிறேன். திருச்செங்கோடு மாதிரி ஒரு சிறு நகரத்தில் இருக்கும் ஒரு தியேட்டரை பின்புலமாக வைத்து எழுதப்பட்ட மிக நல்ல நாவல். ஏழாம் உலகம் அளவுக்கு தாக்காவிட்டாலும், இந்த நாவல் சித்தரிக்கும் விளிம்பு நிலை மனிதர்கள் நிஜமாகத்தான் தெரிகிறார்கள்.

பி.ஏ.கிருஷ்ணனின் புலிநகக்கொன்றை பற்றி குறிப்பிடுகிறார். மிக அருமையான புத்தகம். லா.ச.ராவின் பாற்கடலுக்கு பிறகு குடும்ப உறவுகளை வைத்து இவ்வளவு அருமையான autobiographical நாவல் படித்ததில்லை. இதைப் போலத்தான் எனக்கும் ஒரு புத்தகம் எழுத ஆசை.

மேலும் கண்மணி குணசேகரனின் அஞ்சலை, யூமா. வாசுகியின் ரத்த உறவு இரண்டையும் சிலாகிக்கிறார். நான் படித்ததில்லை. படித்தவர்கள் யாராவது இருந்தால் உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்!

மூன்றாவது பகுதியில் அவர் குறிப்பிடுபவர்கள் தோப்பில் முகம்மது மீரான், சல்மா (இரண்டாம் ஜாமங்களின் கதை), இமையம் (செடல், கோவேறு கழுதைகள்), சோ. தர்மன்(கூகை, தூர்வை), பாமா (கருக்கு) மற்றும் தேவகாந்தன். ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன் போன்றவர்கள் சினிமாவில் நுழைந்திருப்பது நல்ல விஷயம் என்று குறிப்பிடுகிறார். அதே நேரத்தில் சுஜாதா போன்ற அறிவாளிகளும் சினிமா என்ற கடலில் அடையாளம் தெரிவதில்லை என்பதையும் சொல்கிறார். ஜெயகாந்தன் மட்டுமே தான் தானாகவே இருந்த எழுத்தாளராம். எனக்கு உன்னைப் போல் ஒருவன் பார்க்க மிகவும் ஆசையாக இருக்கிறது. பிரிண்ட் இருக்கிறதோ இல்லையோ?

மீரானின் ஒரு கடலோர கிராமத்தின் கதை மட்டுமே நான் படித்திருக்கிறேன். நல்ல புத்தகம். மீரான், சல்மா இருவரும் எப்படி தங்கள் மதக் கட்டுகளை கொஞ்சம் தாண்டி வந்து எழுதுகிறார்கள் என்று வியக்கிறார்.

இமையம், சோ. தர்மன், பாமா ஆகியோரை முக்கியமான தலித்திய எழுத்தாளர்களாக கருதுகிறார். நான் படித்திருப்பது பாமாவின் வன்மம் மட்டுமே. அருமையான நாவல். பள்ளர் பறையர் உப ஜாதிகளுக்கு இடையே உள்ள தகராறுகளை பற்றி எழுதி இருக்கிறார்.

கனடாவின் தேவகாந்தன் புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களின் வாழ்க்கையை ஒரு ஆவணம் போன்ற நாவலாக எழுதி இருக்கிறாராம். பேர் என்ன என்று சொல்லவில்லை. யாருக்காவது தெரியுமா?

முதல் பகுதியில் அவர் குறிப்பிடும் பிற எழுத்தாளர்கள் நாஞ்சில் நாடன், சுப்ரபாரதிமணியன், யுவன் சந்திரசேகர் ஆகியோர்தான். எஸ். ரா.வைக் காணோம்.

சமீபத்தில்தான் நாஞ்சிலின் சிறுகதைத் தொகுதி ஒன்றைப் படித்தேன். இன்னும் எழுத கைவரவில்லை.

சுப்ரபாரதிமணியனை நான் கிட்டத்தட்ட இருபது வருஷங்களுக்கு முன் சந்தித்திருக்கிறேன். அருமையான மனிதர். அவருடைய “அப்பா” என்ற சிறுகதைத் தொகுதியை நான் மிகவும் ரசித்தேன்.

யுவன் சந்திரசேகரின் ஒளி விலகல் புத்தகம் அபாரமான புத்தகம். விக்ரமாதித்தன் கதை பாணியை வைத்துக் கொண்டு இவ்வளவு அருமையாக எழுத முடியுமா? வேறு புத்தகங்கள் இல்லை, என்றாவது வாங்கி படிக்க வேண்டும்.