எனக்குத் தெரிந்து தமிழ் நாடகங்களில் இலக்கியம் குறைவு. சுஜாதா, இ.பா., சோ ராமசாமியைத் தவிர்த்துப் பார்த்தால் ஜெயந்தன், ந. முத்துசாமி, மெரினா மூவரைத்தான் கணக்கிலேயே எடுத்துக் கொள்ள முடியும். போனால் போகிறது என்று அண்ணாதுரையைச் (ஓரிரவுக்காக) சேர்த்துக் கொள்ளலாம். மனோன்மணீயம் எழுதிய சுந்தரம் பிள்ளை, சங்கரதாஸ் சுவாமிகள், பம்மல் சம்பந்த முதலியார், வெ. சாமிநாத சர்மா இவர்களின் முயற்சிகள் எல்லாம் முன்னோடி முயற்சிகள் என்பதைத் தாண்டாது. இதற்கு என்ன காரணம்?
தமிழ் நாடகங்கள் என்ன தலைவிதியாலோ ஆரம்பத்திலிருந்தே மூன்று நான்கு டைப்களில் அடங்கிவிடுகின்றன. இதைத் தாண்டி நவீன நாடகம் எழுதி அதைப் பிரபலமும் ஆக்கக் கூடிய ஒரு ஆகிருதி, அதற்கு வேண்டிய பண வசதியை செய்து தரக்கூடிய புரவலர்கள் இன்னும் தமிழில் வரவில்லை என்பதுதான் எனக்கு முக்கிய காரணமாகத் தெரிகிறது.
அது என்ன வகைகள்? முதல் டைப் புராண, தொன்மக் கதைகளை திருப்பி சொல்வது. சங்கரதாஸ் சுவாமிகள், பம்மல் சம்பந்த முதலியார் போன்றவர்கள் இதில்தான் ஸ்பெஷலைஸ் செய்தார்கள். ஒரே கதையை பெரும் வேறுபாடுகள் இன்றி பலரும் நாடகமாக்குவார்கள். பாட்டை மட்டும் மாற்றினால் போதும். வி.ஏ. தியாகராஜ செட்டியார் எழுதிய பக்த பிரஹலாதா, சாவித்ரி எல்லாம் இந்த ரகம்தான். வள்ளித் திருமணம் கதையை அறியாதவர் யார்? ஆர்.எஸ். மனோகர் வரைக்கும் இது தொடர்ந்தது. மறுவாசிப்பு என்பது மிகவும் அபூர்வம். (மனோகர் தான் செய்தது மறுவாசிப்பு என்று நினைத்திருக்கலாம்.) உண்மையான மறுவாசிப்பு என்றால் இ.பா. எழுதிய நந்தன் கதை ஒன்றுதான் எனக்கு நினைவு வருகிறது.
இந்த வகை நாடகங்களில் ஒரு உட்பிரிவும் உண்டு. தமிழனின் (பழம்)பெருமை பேசும் நாடகம். பல கர்ண பரம்பரைக் கதைகளைத் தொகுத்து ஒரு நாடகம் ஆக்கிவிடுவார்கள். அவ்வையார் சிறந்த உதாரணம். நாரண. துரைக்கண்ணன் எழுதிய திருவள்ளுவர், கு.சா. கிருஷ்ணமூர்த்தி எழுதிய கலைவாணர் (ஒட்டக்க்கூத்தர்-புகழேந்திப் புலவர் தகராறுகள் பற்றிய கர்ணபரம்பரைக் கதைகள்) நாடகங்களையும் குறிப்பிடலாம். தியாகராஜ செட்டியார் எழுதிய தூக்குத்தூக்கி (ஒரு கர்ணபரம்பரை வாக்கியத்தை நாடகமாக்கி இருப்பார்), ஞானசௌந்தரி (ஏசு அருள் புரிகிறார்) எல்லாம் இதே ரகம்தான். என் கண்ணில் இ.பா.வின் ராமானுஜரும் இதே வகைதான். எஸ்.டி. சுந்தரத்தின் இன்னொரு நாடகமான வீர சுதந்திரத்தையும் நான் இந்த வரிசையில் சேர்ப்பேன். அது சுதந்திரப் போராட்ட வீரர்களின் (வாஞ்சிநாதன், லாலா லஜ்பத் ராய், பகத் சிங், திருப்பூர் குமரன்…) கதைகளைத் தொகுப்பது.
ஆனால் ஒன்றை ஒத்துக் கொள்ள வேண்டும். அது என்னவோ தெரியவில்லை, எனக்கு வர வர பழைய தமிழ் மேடை நாடகங்கள் மீது ஒரு fascination. அதுவும் சங்கரதாஸ் சுவாமிகள் என்றால் விடாமல் படிக்கிறேன். அவரது மொழியை நான் மிகவும் ரசிப்பவன். அவருக்கு குசும்புத்தனமான நகைச்சுவை உணர்வும் உண்டு. உதாரணமாக பவளக்கொடி நாடகத்தில் அல்லியிடம் அர்ஜுனன் கிருஷ்ணன் தலையில் அடித்து சத்தியம் செய்கிறான். அதற்கு கிருஷ்ணன் இப்படி நீ சத்தியம் செய்து செய்து என் தலையில் நாலைந்து முடிதான் மிச்சம் என்று அலுத்துக் கொள்கிறான்!
இரண்டாவது டைப் சென்டிமென்டல் மெலோட்ராமா. இடையூறுகளை சந்திக்கும் காதல், தாய் சென்டிமென்ட், அண்ணன்-தங்கை பாசம், கல்லானாலும் கணவன் சென்டிமென்ட், தாலி சென்டிமென்ட் என்று இதில் பல வகைகள் இருப்பது போலத் தெரிந்தாலும் ஒரே கதைதான். நாயகன்/நாயகிக்கு சில ஸ்டாண்டர்ட் இன்னல்கள் (அடங்காப்பிடாரி அண்ணி, ஏமாற்றும் நண்பன், காதலைப் பிரிக்கும் அந்தஸ்து, தாசிகளின் மோசவலை என்று இதில் ஒரு பத்து பனிரண்டு உட்பிரிவுகள் உண்டு) வரும்; அவை தீர்ந்தால் இன்பியல் நாடகம்; தீராவிட்டால் துன்பியல் நாடகம். இதுதான் கதை. இதில் பி.எஸ். ராமையா போன்றவர்கள் கொஞ்சம் மெலோட்ராமாவைக் குறைத்து எழுதி இருப்பார்கள்.
மூன்றாவது டைப் “சமூக” பிரக்ஞை உள்ள நாடகங்கள். டம்பாச்சாரி விலாசத்திலிருந்து வரும் மரபு இது. அன்றைக்கு சூடாக இருக்கும் ஒரு விஷயத்தை “முற்போக்கு” அணுகுமுறையில் பார்ப்பது. அண்ணாதுரையின் “சிவாஜி கண்ட ஹிந்து சாம்ராஜ்யம்” மற்றும் “வேலைக்காரி“, வெ. சாமிநாத சர்மாவின் “பாணபுரத்து வீரன்“, கு.சா. கிருஷ்ணமூர்த்தி எழுதிய “அந்தமான் கைதி“, எஸ்.டி. சுந்தரம் எழுதிய கவியின் கனவு எல்லாம் நல்ல உதாரணங்கள். விடுத்லைப் போர், மன்னராட்சி ஒழிந்து மக்களாட்சி, சர்வாதிகாரி, சிறையில் வாடும் கவிஞன், என்று பல தேய்வழக்குகள் (cliches). வெட்டி நாடகமே என்றாலும் இது அப்போது வெற்றி பெற்றிருக்கும். எப்படி என்றுதான் எனக்குப் புரியவில்லை. ஒரு வேளை நாடகம் வந்து பல ஆண்டுகள் சென்றுவிட்டதால் நான் தேய்வழக்கு என்று உணர்கிறேனோ என்னவோ.
நான்காவது வகை நாடகம்தான் எனக்கு சின்ன வயதில் தெரிந்த நாடகம் – எஸ்.வி. சேகர், கிரேசி மோகன் டைப் நாடகங்கள். அதுவும் ஒரு காலத்தில் கிரேசி தீவ்ஸ் இன் பாலவாக்கம் (எஸ்.வி. சேகர் நடித்தது), டெனன்ட் கமாண்ட்மெண்ட்ஸ், ஒன் மோர் எக்சார்சிஸ்ட், மகாபாரதத்துல மங்காத்தா, காதுல பூ, காட்டுல மழை என்று தொடர்ச்சியாக வந்தன. இன்னும் சிரிக்கலாம். காத்தாடி ராமமூர்த்தியும் அப்போது இரண்டு நாடகங்கள் – ஐயோ அம்மா அம்மம்மா, இன்னொரு பெயர் நினைவு வராத நாடகம், அதில் அவர் ஊட்டிக்கு வயதான காலத்தில் ஹனிமூன் போவார் – இதே ஸ்டைலில் போட்டார். அதற்கப்புறம் ஜோக் தோரணமாகவே நாடகங்கள் மாறிவிட்டன. நல்ல நாடகம் என்றால் என்னவென்றே தெரியாமல்தான் வளர்ந்தோம். காலத்தால் பிந்தைய நாடகங்கள், எழுத்துக்கள் சலித்துவிடுகின்றன, இப்போதெல்லாம் சிரிக்கவும் முடிவதில்லை. க்ரேசி மோகனின் நாடகங்களாவது தேவலாம், அவர் நகைச்சுவைப் பத்திகள் தாங்கமுடிவதில்லை. அமெரிக்காவில் கிச்சா, ஃபைவ் ஸ்டார் பலகாரக்கடை போன்றவை சகிக்க முடிவதில்லை.
சோ ராமசாமியும் இந்த வகை நாடகம்தான் எழுத முயற்சித்தார், ஆனால் அவரது சமூகப் பிரக்ஞை அதில் பல சமயம் ஒரு அழுத்தமான சமூகப் பிரச்சினையை முன்வைக்கிறது, சில சமயம் கொஞ்சம் நல்ல நாடகங்களை (சாத்திரம் சொன்னதில்லை, முகமது பின் துக்ளக், யாருக்கும் வெட்கமில்லை, உண்மையே உன் விலை என்ன?) எழுத வைத்துவிட்டது என்று நான் கருதுகிறேன். மெரினாவும் இப்படிப்பட்ட ஹாஸ்ய நாடகங்களைத்தான் முன்வைத்தார், ஆனால் அவரது தத்ரூபமான சித்தரிப்பு – குறிப்பாக பிராமண சூழல்களின் சித்தரிப்பு, அதிலும் குறிப்பாக மாப்பிள்ளை முறுக்கு நாடகம் – அவரது நாடகங்களை உயர்த்துகிறது.
இ.பா.வுக்கும் சுஜாதாவுக்கும் இதை மீறக் கூடிய இலக்கிய ஆகிருதி இருந்தாலும் சுஜாதாவுக்கு மட்டுமே அந்த வாய்ப்பு இருந்தது. அவரது லாண்டிரி லிஸ்டைக் கூட படிக்க ஒரு கூட்டம் ஒரு காலத்தில் தயாராக இருந்தது. அதைப் பயன்படுத்திக்கொண்டு அவர் சிறந்த நாடகங்களை எழுதி இருக்கிறார் (ஊஞ்சல், டாக்டர் நரேந்திரன்) என்றாலும் அது தமிழ் நாடக உலகில் பெரிய மாறுதல்களைக் கொண்டு வந்ததாக எனக்குத் தெரியவில்லை.
ந. முத்துசாமி போன்றவர்கள் இன்னொரு ட்ராக்கில் போனார்கள். சின்ன “அறிவுஜீவி” கூட்டம், சிறுபத்திரிகைகள் படிக்கும் கூட்டத்துக்காக நாடகம் போட்டார்கள். நான் நாற்காலிக்காரன் நாடகம் மட்டுமே படித்திருக்கிறேன். அதை எல்லாம் பார்க்க வேண்டும், படிக்கக் கூடாது என்று தெளிவாகத் தெரிந்தாலும், அது என்னை பெரிதாகக் கவரவில்லை.
இந்த டைப்களைத் தாண்டிதான் தமிழ் நாடகம் உயிர்த்தெழ வேண்டும். காத்திருப்போம், வேறென்ன செய்ய?
பிற்சேர்க்கை: நான் இங்கே நடிக்கப்படும் நாடகங்களைப் பற்றி மட்டுமே எழுதி இருக்கிறேன். ஜெயமோகன் வடக்கு முகம் (பகுதி 1, பகுதி 2, பகுதி 3, பகுதி 4, பகுதி 5, பகுதி 6) மற்றும் பதுமை என்ற இரண்டு நாடகங்களை எழுதி இருக்கிறார், இரண்டுமே சிறந்த நாடகங்கள்தான். ஆனால் அவற்றை யாரும் நடிக்கக் கூடாது என்று தடை விதித்திருக்கிறார்.
கு.சா. கிருஷ்ணமூர்த்தி எழுதிய “தமிழ் நாடக வரலாறு” பழைய தமிழ் நாடகங்கள், நாடக நடிகர்கள் பற்றி நிறைய விவரங்களைத் தருகிறது.
தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் நாடகங்கள்
Like this:
Like ஏற்றப்படுகின்றது...