கள்வனின் காதலி

பாய்ஸ் கம்பெனி நாடகம் மாதிரி சிம்பிளான கதைதான். ஆனால் கல்கியின் நடை அதை சுவாரசியமானதாக மாற்றுகிறது.

கதை தெரிந்திருக்கலாம். முத்தையன் ஹீரோ. ஏழை. ஒரே தங்கை அபிராமி. அவனுக்கும் கல்யாணிக்கும் காதல். காதல் கை கூடவில்லை. கல்யாணிக்கு ஒரு பெரியவரோடு திருமணம் ஆகிறது. முத்தையன் ஒரு மடத்தில் கணக்குப் பிள்ளை ஆகிறான். மடத்தின் இன் சார்ஜ் கார்வார் சங்குப் பிள்ளை அபிராமியோடு தவறாக நடக்க முயற்சிக்கிறான். முத்தையன் அவனை அடிக்கப் போக, பிள்ளை போலீசில் பொய்ப் புகார் கொடுத்து அவனை ஜெயிலில் தள்ளுகிறான். இன்ஸ்பெக்டர் சர்வோத்தம சாஸ்திரி உண்மை தெரிந்து முத்தையனை விடுவிப்பதற்குள் முத்தையன் ஜெயிலிலிருந்து தப்புகிறான். பிறகு திருடனாக மாறுகிறான். அபிராமியை சாஸ்திரி ஒரு பெண்கள் ஸ்தாபனத்தில் சேர்த்துவிடுகிறார். இதற்கிடையில் கல்யாணியின் கணவர் இறந்து போகிறார். இறப்பதற்கு முன் அவர் பொருந்தாத கல்யாணத்துக்காக மனம் வருந்தி கல்யாணியை இன்னொரு முறை திருமணம் செய்து கொள்ளும்படி சொல்கிறார். கல்யாணி முத்தையன் தன் வீட்டுக்கு திருட வரமாட்டானா, அவனை சந்திக்கமாட்டோமா என்று காத்திருக்கிறாள். முத்தையன் வருகிறான், அவர்கள் காதல் மீண்டும் துளிர்க்கிறது. அபிராமிக்கு ஒரு வழி காட்டிவிட்டு இருவரும் மலேயாவுக்கு போய்விடுவது என்று தீர்மானிக்கிறார்கள். முத்தையன் ஒரு நாடகக் கம்பெனியில் சேர்ந்து சென்னை செல்கிறான். அங்கேயும் அவனுக்கு கள்ளபார்ட் வேஷம்தான். இவனை தேடிக் கொண்டிருக்கும் சாஸ்திரி சந்தேகப்பட்டு அபிராமியையும் நாடகம் பார்க்க அழைத்துக்கொண்டு வருகிறார். முகமூடியை கள்ளபார்ட் அவிழ்க்கும்போது அபிராமி தன் அண்ணன் என்பது நிச்சயமாக தெரிந்து மயக்கமாகிறாள். ஆனால் முத்தையன் சாஸ்திரியிடமிருந்து தப்பிவிடுகிறான். கொள்ளிடம் காடுகளில் கல்யாணிக்கு மட்டும் தெரிந்த மாதிரி மறைந்திருக்கிறான். அவனுக்கு மலேயா டிக்கெட் வாங்கிக்கொண்டு அவன் நண்பனும் நாடகத்தில் ஸ்திரீபார்ட் வேஷம் போடுபவனும் ஆன கமலபதி பெண் வேஷத்தில் வருகிறான். கல்யாணி முத்தையனோடு ஒரு “பெண்ணை” பார்த்து சந்தேகப்பட்டு மூளை குழம்பி சாஸ்திரியிடமே முத்தையன் எங்கே என்று சொல்லிவிடுகிறாள். முத்தையன் சுடப்பட்டு இறக்கிறான்.

கல்கியின் ஆதர்ச எழுத்தாளர் சார்லஸ் டிக்கன்சாக இருக்கவேண்டும். டிக்கன்ஸ் ஒரு காவிரி பின்புலத்தில் கதை எழுதிய மாதிரி இருக்கிறது. ஆனால் கல்கி எழுதிய காவேரியும் கொள்ளிடமும் இன்னும் இருக்கிறதா என்று தெரியவில்லை.

ஜம்புலிங்க நாடார் என்று கேள்விப்பட்டிருக்கலாம். முப்பதுகளின் பிரபல திருடன். இந்த நாவலின் ஹீரோவான முத்தையனுக்கு அவன்தான் inspiration-ஆம். நாவலில் வரும் “சின்ன” வில்லன் கார்வார் சங்குப் பிள்ளை, மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சர்வோத்தம சாஸ்திரி ஆகியோரும் உண்மை மனிதர்களை மனதில் வைத்து உருவாக்கப்பட்ட பாத்திரங்களாம்.

டைம் பாஸ், அவ்வளவுதான்.

முழு நாவலும் சென்னை லைப்ரரி தளத்தில் கிடைக்கிறது.

சிவாஜி, பானுமதி நடித்து சினிமாவாகவும் வந்திருக்கிறது.

பிற்சேர்க்கை: ஜெயமோகன் சொல்கிறார்.

டிகேசியின் வட்டத்தொட்டி என்ற மாதாந்திர சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிக்கொண்டிருக்கையில் முத்தையா பிள்ளை என்ற இன்ஸ்பெக்டர் கல்கிக்கு அறிமுகமாகியிருக்கிறார். அவர்தான் மக்களுக்கு பெரிய அச்சத்தை உருவாக்கிக் கொண்டிருந்த புகழ் பெற்ற திருடனாகிய ஜம்புலிங்கத்தை கொன்றவர். கொஞ்ச நாள் அவர் பேசப்பட்டார், பிறகு மறந்துவிட்டார்கள். ஆனால் ஜம்புலிங்கம் அவரது சாதியினரால் வீர வழிபாடு செய்யப்பட்டு மெல்ல மெல்ல நாயகனாக ஆனார். ’திருடனுக்கு வந்த புகழும் மரியாதையும் போலீஸுக்கு வரவில்லை’ என்று முத்தையா பிள்ளை சொல்கிறார். இந்நிகழ்ச்சியால் உந்தப்பட்ட கல்கி ஒரு திருடனை எப்படி மக்கள் நாயகனாக கருதமுடியும் என்ற கோணத்தில் யோசித்து [சில ஆங்கில ராபின்ஹூட் நாவல்களின் ஊக்கத்துடன்] எழுதியதே கள்வனின் காதலி. கதாநாயகன் பெயரை முத்தையா என்றே வைத்துவிட்டார்.

தொகுக்கப்பட்ட பக்கம்: கல்கி