நாடக ஆசிரியர் டேவிட் மாமெட்

david_mametஎனக்கு நாடகம் என்பது ஆர்தர் மில்லர், டென்னசி வில்லியம்ஸ், பெர்டோல்ட் ப்ரெக்ட் ஆகியோரோடு நின்றுவிடுகிறது. நண்பர் பாலாஜியோடு பேசிக் கொண்டிருந்தபோது அவர் இன்றைய நாடக ஆசிரியர்கள் என்று மாமெட், மற்றும் ஆரன் சோர்கின் ஆகியோரைக் குறிப்பிட்டார். சரி படித்துப் பார்ப்போமே என்று சில கேள்விப்பட்ட பெயர்களைப் படித்தேன்.

நாடகம் எல்லாம் படிக்க இல்லை, பார்க்க வேண்டியவை என்று நான் உறுதியாகக் கருதுகிறேன். ஆனால் என்ன செய்ய, நாடகம் எல்லாம் போய்ப் பார்க்கும் வசதி இல்லை. படிப்பதை விட திரைப்படமாகப் பார்ப்பது நல்லது என்றே சொல்வேன். (இதெல்லாம் பொதுவாக பிராட்வே ஷோவாக வரும். சமீபத்தில் ஒரு பிராட்வே ஷோ போனபோது டிக்கெட் விலை 120 டாலரோ என்னவோ. தியேட்டரில் சினிமா பார்த்தால் 10 டாலர் ஆகும். ரெட்பாக்ஸில் டிவிடி வாடகைக்கு எடுத்தால் ஒரு டாலர். இன்னும் காத்திருந்து நூலகத்தில் இருந்து டிவிடி கொண்டுவந்தால் செலவே இல்லை. :-)) ஆனால் எனக்கு படித்தால்தான் திருப்தி.

மாமெட்டின் இரு நாடகங்கள் – Glengarry Glen Ross மற்றும் American Buffalo – நாடகங்களைப் பார்க்க வேண்டும் என்ற என் எண்ணத்தை மேலும் உறுதிப்படுத்துகின்றன. இரண்டு நாடகங்களையுமே நமக்கு கொண்டு வர திறமையுள்ள நடிகர்கள் தேவைப்படுகிறார்கள். மாமெட் வெறும் கோடு மட்டுமே போட்டிருக்கிறார். அதை ரோடாக்க ஜாக் லெம்மனும் அல் பசினோவும் டஸ்டின் ஹாஃப்மனும் தேவைப்படுகிறார்கள். இரண்டு நாடகங்களை வைத்து சொல்ல முடியாதுதான். ஆனால் மாமெட் எப்படியாவது முழுகிவிடாமல் தப்பித்துக் கொள்ள வேண்டும் என்று துடிக்கும் மனிதர்களை நன்றாக சித்தரிக்கிறார்.

American Buffalo-வில் மூன்று losers. ஒரு திருட்டை திட்டமிடுகிறார்கள். அதில் வெளிப்படும் அவர்கள் குணசித்திரம்தான் நாடகம். டீச் பாத்திரம் நடிப்பதற்கு மிகவும் scope உள்ள பாத்திரம். இதையும் திரைப்படமாகப் பாருங்கள் என்றே பரிந்துரைப்பேன். 1975-இல் முதலில் நடிக்கப்பட்டது.

Glengarry Glen Ross-இல் வீடு வாங்க விற்க உதவும் ப்ரோக்கர்களை வேலைக்கு வைத்திருக்கும் ஒரு ரியல் எஸ்டேட் கம்பெனி. கம்பெனி அவர்களுக்குள் ஒரு போட்டி வைக்கிறது. யார் நிறைய ஆர்டர் கொண்டு வருகிறார்களோ அவருக்கு பரிசு. யார் குறைவான ஆர்டர் கொண்டு வருகிறாரோ அவருக்கு வேலை காலி. முக்கியமான கருவி வீடு, நிலம் வாங்க வேண்டும் என்று நினைத்திருப்பவர்களின் பட்டியல். இதை வைத்து ஒரு powerful நாடகத்தை உருவாக்கி இருக்கிறார். குறிப்பாக ரோமா லிங்க் என்பவருக்கு நிலத்தை விற்பது, லிங்கின் மனம் மாறும்போது ரோமாவும் லெவீனும் ஆடும் நாடகம், லெவீன் மாட்டிக் கொள்வது எல்லாம் மிக நல்ல காட்சிகள். ஆனால் நாடகத்தின் முழு சக்தியும் படிக்கும்போது அல்ல, Glengarry Glen Ross திரைப்படத்தைப் பார்த்தபோதுதான் வெளிப்பட்டது. லெவீனாக நடிக்கும் ஜாக் லெம்மன் தன் desperation-ஐ மிக நன்றாகக் கொண்டு வந்திருப்பார். ரோமாவாக நடிப்பது அல் பசினோ. முடிந்தால் திரைப்படத்தைப் பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

Glengarry Glen Ross முதலில் நடிக்கப்பட்டது 1983-இல். 1984-இல் புலிட்சர் பரிசை வென்ற நாடகம். திரைப்படம் வெளிவந்தது 1992-இல்.

மாமெட் பல படங்களுக்கு திரைக்கதை எழுதி இருக்கிறார். எனக்குப் பிடித்த சில திரைப்படங்கள் – Verdict, Untouchables, Wag The Dog மற்றும் Ronin. குறிப்பாக Wag The Dog. இது வரை பார்க்கவில்லை என்றால் பார்த்துவிடுங்கள்.

பிறர் நாவல்களுக்கு திரைக்கதை எழுதுவதில் வல்லவர். Verdict முதலில் நாவலாக வெளிவந்தது. Barry C. Reed எழுதியது. படிக்கலாம். ஜேம்ஸ் எம். கெய்ன் எழுதிய Postman Always Rings Twice நாவலுக்கும் திரைக்கதை எழுதி இருக்கிறார். Wag The Dog கூட யாரோ எழுதிய நாவல் என்று நினைவு.

சில படங்களை இயக்கவும் செய்திருக்கிறார். நண்பன் மனீஷ் ஷர்மா பரிந்துரைத்த திரைப்படம் – Spanish Prisoner. நான் இன்னும் பார்க்கவில்லை; ஆனால் மனீஷின் பரிந்துரைகள் எனக்கு சாதாரணமாக work out ஆகும்.


தொகுக்கப்ப்ட்ட பக்கம்: நாடகங்கள், திரைப்படங்கள்

ஜேம்ஸ் எம். கெய்னின் இரண்டு நாவல்கள்

ஜேம்ஸ் எம். கெய்ன் பல நாவல்கள் எழுதி இருந்தாலும் போஸ்ட்மன் ஆல்வேஸ் ரிங்க்ஸ் ட்வைஸ் (Postman Always Rings Twice), மற்றும் டபிள் இன்டெம்னிடி (Double Indemnity) இரண்டும் புகழ் பெற்றவை. பல விமர்சகர்கள் அவற்றை த்ரில்லர் என்ற genre-ஐத் தாண்டிய இலக்கியம் என்று கருதுகிறார்கள்.

எனக்கு இவை இலக்கியம் இல்லை. இரண்டும் சிறந்த திரைப்படங்களாக வெளிவந்தன. அது இந்தப் புத்தகங்களின் பிரபலத்தை, ஸ்டேடசை, அதிகரித்துவிட்டன என்று நினைக்கிறேன். இரண்டு புத்தகங்களையும் நான் பிரமாத த்ரில்லர் என்று கூட சொல்லமாட்டேன். ஆனால் முப்பதுகளின் பிற்பாதியில் இருந்த அமெரிக்க சமூகத்தை, அதுவும் குற்றங்களின் ஓரத்தில் நடமாடும், ஒயிட் காலர் வேலைக்குப் போகும், சிறுதொழில் செய்யும் மத்தியதர வர்க்கத்தை உண்மையாகப் படம் பிடிக்கின்றன. Great Depression அப்போதுதான் நீர்க்க ஆரம்பித்திருந்தது. அற உணர்வுகள் மழுங்கிப் போன, பணமே பிரதானம் என்று நினைக்கும் ஒரு சூழல். பெண்கள் தனியாக வாழ, வேலைக்குப் போக ஆரம்பித்திருந்த சூழல். அங்கீகரிக்கப்பட்ட உறவுகளுக்கு வெளியே செக்ஸ் என்பது நகர்ப்புறங்களில் புருவத்தைத் தூக்க வைக்காத ஒரு நிகழ்ச்சி. அந்த ambience-ஐ, கசடுகள் நிறைந்த ஒரு சமூகத்தை கெய்ன் உண்மையாகச் சித்தரிக்கிறார். அதுதான் அவரது பலம். குற்றம் எப்படி நடக்கிறது என்பதை விட குற்றவாளிக்கு எப்படி தண்டனை கிடைக்கிறது என்பதுதான் முக்கியமாக இருக்கிறது.

நாவல்களைப் பற்றிய சிறு குறிப்புகள்:

போஸ்ட்மன் ஆல்வேஸ் ரிங்க்ஸ் ட்வைஸ் (1934): சாலையின் ஒதுக்குப்புறமான இடத்தில் ஒரு சின்ன ஹோட்டல். ஹோட்டல் முதலாளி நிக். நிக்கின் மனைவி கோரா. ஃப்ராங்க் அங்கே தற்செயலாக வந்து சேர்கிறான். கோராவுக்கும் ஃப்ராங்க்குக்கும் உறவு ஏற்படுகிறது. நிக்கைக் கொன்றுவிட்டு ஹோட்டலை நடத்தத் திட்டம். நிக்கைத் தலையில் அடித்துக் கொன்றுவிட்டு விபத்து என்று செட்டப். கொலையில் அனேகமாக மாட்டிக் கொள்கிறார்கள், ஆனால் தண்டனையிலிருந்து தப்புகிறார்கள். ஆனால் அதே போன்ற ஒரு விபத்தில் கோரா இறக்கிறாள். ஃப்ராங்க் இந்த முறை குற்றம் செய்யாவிட்டாலும் சுலபமாக மாட்டிக் கொண்டு தண்டனை அடைகிறான்.
கவுரவம் திரைப்படத்தில் மேஜர் சுந்தரராஜன் இப்படித்தான் முதல் முறை தப்பித்துக்கொண்டு இரண்டாவது முறை செய்யாத கொலைக்கு தண்டனை அடைவார். இங்கிருந்து திருடிய ஐடியாதான். 🙂

டபிள் இன்டெம்னிடி (1936): இன்ஷூரன்ஸ் ஏஜென்ட் வால்டர் நெஃப் ஃபைலிசொடு சேர்ந்து பயங்கரத் திட்டம் போட்டு ஃபைலிசின் கணவனைத் தீர்த்துக் கட்டுகிறான். விபத்து என்றுதான் போலீஸ் நினைக்கிறது. இன்ஷூரன்ஸ் பணம் வரக் காத்திருக்கிறார்கள். ஆனால் இன்ஷூரன்ஸ் கம்பெனியைச் சேர்ந்த கெயெஸ் இது கொலை என்று யூகிக்கிறான். நெஃப்புககு தான் கொன்றவனின் பெண் லோலாவோடு காதல் வேறு உண்டாகிறது. கெயெஸ்-நெஃப் இருவருக்கும் நடுவில் உள்ள டென்ஷன்தான் கதையில் சிறந்த பகுதி.

இரண்டு நாவல்களுமே படிக்கலாம் ரேஞ்சில்தான் மதிப்பிடுவேன். ஆனால் அமெரிக்க crime noir-இல் ஆர்வம் உள்ளவர்கள் மிஸ் செய்யக் கூடாது.

தொகுக்கப்பட்ட பக்கம்: த்ரில்லர்கள்

தொடர்புடைய சுட்டிகள்:
ஜேம்ஸ் எம். கெய்ன் விக்கி குறிப்பு
ஐஎம்டிபி தளத்தில் போஸ்ட்மன் ஆல்வேஸ் ரிங்க்ஸ் ட்வைஸ்
ஐஎம்டிபி தளத்தில் டபிள் இன்டெம்னிடி