ஜோ டி க்ரூசின் அரசியல் நிலை

இது படிப்புக்காகவே உருவாக்கப்பட்ட தளம். என் நேரம், இங்கெல்லாம் வந்து அரசியல் நிலை பற்றி எழுத வேண்டி இருக்கிறது.

joe de cruzஜோ டி க்ரூஸ் பா.ஜ.க. மற்றும் மோடிக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார். அதனால் அவர் புத்தகத்தின் மொழிபெயர்ப்பை வெளியிட மாட்டோம் என்று நவயானா பதிப்பகம் ஒதுங்கி இருக்கிறது.

நவயானா பதிப்பகம் எதை வெளியிட விரும்புகிறது, எதை விரும்பவில்லை என்பதெல்லாம் அவர்களுடைய உரிமை. ஆர்.எஸ்.எஸ். தன் பதிப்பகத்தில் பெந்தேகோஸ்த் பிரசுரங்களை அச்சடிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியுமா என்ன? ஆனால் ஒப்பந்தம் போடப்பட்டபோது எங்கள் அரசியல் நிலை இது, அந்த அரசியல் நிலைக்கு எதிரான கருத்து உள்ளவர்களோடு நாங்கள் தொழில் செய்யமாட்டோம் என்று டி க்ரூசுக்கு தெளிவாகச் சொல்லவில்லை, அது ஒரு ஒப்பந்த ஷரத்தாக இல்லை என்றுதான் தெரிகிறது. (என் யூகம்தான்; அப்படி ஒரு ஷரத் இருந்தால் டி க்ரூசும் சரி, என் போன்றவர்களும் சரி, பொத்திக் கொண்டு போக வேண்டியதுதான்.) At will cancellation என்று ஏதாவது ஒரு clause இருந்தால் கூட டி க்ரூஸ் இதை எதிர்த்து வழக்கு தொடர வேண்டும், இந்தப் பதிப்பகம் டி க்ரூசுக்கு நஷ்ட ஈடு தர வேண்டும்.

நவயானா பதிப்பகம் தங்களின் லட்சியமாக குறிப்பிடுவது ஜாதி எதிர்ப்பு மட்டுமே. டி க்ரூஸ் ஏதேனும் ஒரு ஜாதிக்கு ஆதரவு நிலை எடுத்திருந்தால் – அட எதிர்ப்பு நிலை எடுத்திருந்தால் கூட – நவயானா பதிப்பகம் தங்களை நியாயப்படுத்திக் கொள்ளலாம். இது கேவலமாக இருக்கிறது.

நான் மோடிக்கு இந்த நாட்டின் பிரதமராக வர – குஜராத் முதல்வராக இருக்கக் கூட – தார்மீக உரிமை இல்லை என்று உறுதியாகக் கருதுபவன். ஹிந்துத்துவம் என்ற கருத்தாக்கத்தை கடுமையாக எதிர்ப்பவன். ஆனால் மற்றவர்களும் அதே போல நினைக்க ஒரு அவசியமும் இல்லை என்றும் உணர்ந்திருக்கிறேன். டி க்ரூஸ் தான் யாரை ஆதரிக்கிறேன் என்று வெளிப்படையாகச் சொல்ல அவருக்கு எல்லா உரிமையும் உண்டு. அவரது அரசியல் நிலையால் அவருக்கு காங்கிரசில் எம்.எல்.ஏ. சீட் கிடைக்கவில்லை என்றால் சரி. ஒரு பதிப்பகம் இப்படி பின்வாங்குவதை எப்படி நியாயப்படுத்த முடியும்?

டி க்ரூசுக்கு எதிராக, இந்தப் பதிப்பகத்துக்கு ஆதரவாக, குரல் எழுப்பும் இடதுசாரி சார்பு உள்ள பலரும் எம்.எஃப். ஹுசேனுக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்திருப்பார்கள். அதே போல இன்று இந்தப் பதிப்பகத்தை எதிர்த்து குரல் எழுப்பப் போகும் வலதுசாரி, பா.ஜ.க./மோடி சார்பு உள்ள பலரும் ஹுசேன் எப்படி சரஸ்வதி படத்தை வரையலாம் என்று ஆவேசமாகக் கேள்வி எழுப்பி இருப்பார்கள். எப்படிய்யா? Logical consistency என்பதெல்லாம் ஒரு மேட்டரே இல்லையா? நண்பர்கள் ஜடாயு, ராஜன், ஏன் அரவிந்தன் நீலகண்டன் போன்றோர் என்ன சொல்லப் போகிறார்கள், ஹுசேனை எதிர்ப்பது சரிதான் என்று சப்பைக்கட்டு கட்டுவார்களா என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

பின்குறிப்பு: இந்தப் பதிவை ஏப்ரல் 15 அன்று வெளிவருமாறு ஏற்பாடு செய்திருந்தேன். ஜெயமோகனது கட்டுரை சில மணி நேரங்களுக்கு முன் வந்திருக்கிறது. ஒரு இடதுசாரி “மாஃபியா” இங்கே செல்வாக்குடன் விளங்குகிறது, அதற்கு ஒத்து ஊதினால் விருதுகளும் அங்கீகாரமும் சல்லிசாகக் கிடைக்கும், தெரியாத்தனமாக “வலதுசாரி/ஹிந்துத்துவ” சார்புடைய டி க்ரூசுக்கு பரிசு கொடுத்துவிட்டு தவிக்கிறார்கள் என்று எழுதி இருக்கிறார். Truth is stranger than fiction, இருந்தாலும் இவ்வளவு முட்டாள்களாக இருப்பார்கள் என்பது ஆச்சரியமாக இருக்கிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஜோ டி க்ரூஸ் பக்கம்

ஜோ டி குருசின் புத்தகப் பரிந்துரைகள்

joe de cruz

 1. பைபிள்
 2. கில்கமேஷ் கதை
 3. கலீல் கிப்ரனின் “Prophet
 4. திருக்குறள்
 5. சிலப்பதிகாரம்
 6. ரிச்சர்ட் பாக் எழுதிய “Illusions
 7. அரவிந்தன் நீலகண்டன் மற்றும் ராஜீவ் மல்ஹோத்ரா எழுதிய “Breaking India
 8. ப. சிங்காரத்தின் “புயலிலே ஒரு தோணி”
 9. பா. பிரபாகரனின் “குமரிக் கண்டமா சுமேரியமா?”
 10. ராபின் ஷர்மா எழுதிய “Monk Who Sold His Ferrari

ஜோ டி குருசின் பரிந்துரைகளில் நான் கிப்ரனின் Prophet தவிர வேறு எதையுமே முழுதாகப் படித்ததில்லை. என் கண்ணில் கிப்ரன் சுத்த வேஸ்ட் . 🙂

தொகுக்கப்பட்ட பக்கம்: புத்தகப் பரிந்துரைகள், ஜோ டி குருஸ் பக்கம்

ஆழி சூழ் உலகு பற்றி Bags

இது இன்னொரு ஆழி சூழ் உலகு புத்தக விமர்சனம்.

கடலோடிகளின் அனுபவத்தை நம்முடன் பகிர்ந்துள்ளார் என்று எளிதாகக் கூறினால் அது அபத்தமாகத்தான் முடியும். நம்மை அழைத்து சென்று எந்த அளவு அவ்வாழ்க்கையில் ஈடுபடுத்தமுடியுமோ அவ்வளவு ஈடுபடுத்தியிருக்கிறார். ஜோ சொல்வதுபோல் ஒரு இரண்டு பக்க கட்டுரையிலோ ஒரு அரசாங்க குறை கேட்கும் அமைப்புக்கு அனுப்பும் விண்ணப்பத்திலோ பரதவர் அவலங்களை எழுதி தன் சமுதாய கடமையை சுருக்கியிருந்தால் கேளாச் செவிகளில் விழாமலோ கவனிக்கப்படாத குப்பையாகவோ முடிந்திருக்கும். ”மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களை காணவில்லை” என்ற செய்திகளை பத்திரிக்கைகளை வாசிக்கும் பொழுது, சம்பந்தப்பட்டவர்களைத் தவிற பிறர் காலை காஃபியுடன் சொகுசாக செய்தியுடன் எந்தத் தொடர்பும் ஏற்படுத்தத் தெரியாமல் வறட்டுத் தனமாக மனமும் அறிவும் பதிவு செய்ய மறுத்து அதனை புறந்தள்ளி கடப்பவர்களை தடுத்து நிறுத்துகிறார் ஜோ. மகத்தான வெற்றியும் அடைந்திருக்கிறார்.

பொருளியல் தளத்தில் பிற குலத்தவர் புரிந்துக் கொள்ளாவிட்டால் ஒருவிதமாக எடுத்துக் கொள்ளலாம். தங்கள் உணர்வுகளின் அருகில் இருக்கும் ”மெனக்கடன்”காரர்களும், ”மேஜை” காரர்களுமே புரிந்து கொள்ளாவிட்டால் பிரச்சனை தீர்வுக்கு வராமல் நழுவி ஓடுகிறது. இவர்களுடன் சேர்ந்து விசைப்படகுக் காரர்கள் தொழில் போட்டியாக வந்து மீன்களின் சந்தை மதிப்பை கீழே இழுக்கும் பொழுது நிலை குலைந்து மூர்க்கமாகிறார்கள் மரக்கரர்கள். கடலில் 6 கிமீ தொலைவு வரை மரங்களில் இறங்குபவர்களுக்கே அனுமதி என்பதும், கப்பல்களுக்கு இன்னும் தொலைவிலே என்பது பெயரளவிலேயே இருக்கிறது. தண்ணீருக்கு கீழே சிறிய மீனை பெரியது உட்கொள்வது போல் கப்பல்கள் போட்டையும், போட் மரங்களையும் விழுங்குகிறது. அந்த சோகத்தின் உந்துதலினால் ”மெனக்கடனே” தங்களுக்கு நிலைக்கு மாற்றாகவும், இலட்சியமாகவும் பார்க்கத் தொடங்குகிறார்கள். அப்பொழுது அங்கே ஒரு வாழ்க்கை முறை, ஒரு எளிய நாகரிகம் சிதைய தொடங்குகிறது.

தங்கள் இலட்சியப் பாதையை மாற்ற முயற்ச்சிக்கும் பொழுது கல்வி பயிலும் பள்ளியிலிருந்து தொடங்கி இவர்கள் பல அறைகூவல்களை சந்திக்கிறார்கள். சமுதாயம் முன்முடிவுடன் செயல்படும் பொழுது இந்த அறைகூவல்கள் அசாதரணமாக உருமாறி அவர்களை கடலை நோக்கியே விரட்டிக் கொண்டிருக்கிறது. கடலுடனே இணைத்து பொருளாதார எல்லைகளுக்குள் உட்படுத்தப்பட்டு சூழ்நிலைக் கைதிகளாக காலம் தள்ளுகிறார்கள். அதனால் சமூக தளமும் சிக்கல் நிறைந்ததாக பரிணமிக்கிறது. குடும்பச் சண்டைகள், சச்சரவுகள், கட்சி, கமிட்டி, பாலியல் குற்றங்கள் என்று ஊர் பல்வேறு வகையில் துண்டுபட்டு நிற்கிறது. ஆனால் இவைகளிடனிடையே தான் இவர்களை இணைக்கும் சரடான பாசங்களும் பந்தங்களும் கொட்டிக் கிடக்கின்றன.

மரிய அல்ஃபோன்ஸ் காகு சாமியார் அன்பிற்கு கட்டுப்பட்டு செலுத்தப்படும் ஆமந்துரை மக்களின் வாழ்க்கை மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கிறது. கதை மாந்தர்களின் குடும்-பங்களின் மூலம் மனிதர்களின் உணர்வுகள், ஆசைகள், இயலாமைகள், கோபங்கள், தாபங்கள் வாசகனை வந்தடைகிறது. எந்தச் சமூகத்திலும் இருக்கும் உணர்வுகள்தான் இந்தச் சமூகத்திலும் கொட்டிக் கிடக்கிறது. பெருங் கல்வி கற்ற் சமூகத்திலும் பார்க்கமுடியாத உயர் பண்புகளை நாம் பார்க்கிறோம். சூசை-சிலுவை-கோத்ரா வலை திரும்பாத கடைசி நாட்களில் மேரி சுந்தரி டீச்சரையும் தன்னுடன் இணைத்து பரிதவிக்கும் தருணம் தமிழ் இலக்கியங்களில் சந்திக்கும் தமிழ் பெண்ணைப் எதிர்கொள்கிறோம். தோக்களத்தா-கோதரா தங்கள் இறுதி மூச்சு வரை ஒருமையாக் சிந்திப்பது வியக்க வைக்கிறது. குடுமப வாழ்க்கையை தியாகம் செய்து வாழ்க்கை அர்பணிக்கும் அவர்களை காகு சாமியார் தேவனின் ஆசிர்வாதத்திற்கு உரியவர்களாக அடையாளப் படுத்துகிறார். தொம்மாந்திரையை கூட அந்த அளவிற்கு அவர் உயர்த்தவில்லை. வானவில்லின் மறுபகுதியாக மானாப்பிள்ளை-மந்தாப்பிள்ளை உறவுகள். மானிட மனம் விடும் விடுகதைகள். ஜஸ்டின் கதை கெட்ட குமாரனின் கதை. வசந்தாவின் பொறுமையற்ற வாழ்க்கை மூலம் யதார்த்த பெண்ணை சந்திக்கிறோம். சூசை ஒரு யதார்த்த மனிதனாக உருவாக்கப் பட்டிருக்கிறார். அவர் சிலுவையின் வாழ்க்கையில் இரண்டு முகங்களுடன் பவனி வருகிறார். உயர்ந்த பண்புகள் இருந்தாலும் கட்டுக் கடங்காமல் போகும் காமத்தால் சிலுவையின் தாயை கொடிய முறையில் பலிகடா ஆக்குவதை சொல்வதன் மூலம் பாத்திரங்களை சமரசமின்றி இயல்பாக படைத்திருக்கிறார் ஜோ. அதே சமயத்தில் மனிதர்கள் தங்கள் உணர்வுகளுடன் போராடி மீளமுடியாமல் எந்த எல்லையையும் தாண்டத் தயாராகும் நுண்ணுணர்வு சூசை மூலம் உணர்த்தப்படுகிறது. விரசமாக இருந்தாலும் காரக்டரைசஷன் பலமாக இருக்கிறது.

கடலுக்கடியில் ஒங்கல்களும் மற்ற மீன்கள் தொடர்ந்து வருவதை விவரிக்கும் பொழுது ஜோவின் நடையில் கவித்துவம் எட்டிப் பார்க்கிறது. பரதவர்களின் வாழ்க்கையை பற்றி ஒளிவு மறைவு இல்லாத ஒரு illustration.

பின் குறிப்பு – ஆமந்துறை கற்பனை பெயர். உண்மைப் பெயர் உவரி.

தொடர்புடைய சுட்டி:

ஆழி சூழ் உலகு பற்றி ஜெயமோகன் பதிவு

ஆழி சூழ் உலகு பற்றி ஆர்வி

ஜோ டி க்ரூஸின் “ஆழிசூழ் உலகு”

ஒரு இரண்டு வருஷம் முன்னால் படிக்க ஆரம்பித்த புத்தகம். கவனமாகப் படிக்க வேண்டிய புத்தகம் என்று தெரிந்தது. சரி அப்புறம் படிக்கலாம் என்று எடுத்து வைத்தேன், படிக்க இப்போதுதான் நேரம் வந்தது.

சிறந்த புத்தகங்களில் ஒன்று. எந்த வித சந்தேகமும் இல்லை. குறிப்பாக கடல் காட்சிகள் அற்புதமானவை. உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும்போது சுற்றி இருக்கும் மீன்களில் கூட்டத்தின் அழகை ரசிக்கும் தருணம் புத்தகத்தின் ஒரு உச்சம். தொம்மந்திரை, கோத்ரா, போஸ்கோ மூவரும் சுறா வேட்டைக்குப் போகும் காட்சி ஒரு தொன்மம் ஆவதற்கான தகுதி உள்ள சித்தரிப்பு. தென் மாவட்டத்து மீனவர் வாழ்க்கையை இத்தனை நுண்விவரங்களுடன் படிப்பது ஆனந்தமாக இருக்கிறது.

மீனவர் வாழ்க்கையை – அதுவும் கிருஸ்துவ பரதவர் வாழ்க்கையை – இது வரையில் இவ்வளவு அருமையாக யாரும் சித்தரித்தே இல்லை. (கடல்புரம் நாவலையும் கணக்கில் வைத்துக்கொண்டுதான் இதைச் சொல்லுகிறேன்)

நான் கதைச் சுருக்கம் எல்லாம் எழுதப் போவதில்லை. பரதவர் வாழ்க்கை, அவ்வளவுதான். இதில் யார் யாருக்கு துரோகம் செய்தான்(ள்), யார் குடும்பம் வாழ்ந்தது, யார் குடும்பம் வீழ்ச்சி அடைந்தது, யார் யாரை கொன்றது, யார் யாரோடு படுத்தது எல்லாம் வெறும் பரதவர் வாழ்க்கையை விவரிக்க உதவும் ஒரு சட்டம்தான் (framework). குசும்பு, அடிதடி, காதல், காமம், கோபம், வன்மம், துரோகம், அடுத்த ஊர்க்காரர்களோடு சண்டை, கடைசி வரை நல்லவர்களாகவே இருந்த சிலர், தவறு செய்யும் பலர், அவர்களில் திருந்தி வாழும் சிலர், ஊரின் நீண்ட கால பொருளாதார முன்னேற்றத்துக்கு உழைத்த ஒரு பாதிரி (நிஜ மனிதராம்), ஊரைச் சுரண்டும் பல பாதிரிகள் என்று கதை போகிறது.

எனக்குப் பிடித்த காட்சிகளில் சில: சுறா வேட்டை; பெரிய மீன் கட்டுமரத்தைத் தூக்குவது; பரதவர்கள் கிருஸ்துவர்கள் ஆக மாறி பல நூறு ஆண்டுகள் ஆனாலும் கன்னியாகுமரி அம்மனை விட முடியாதது; சவேரியார் குகைக்கு போகும் சேகர்; ஒரு ஓரத்தில் காட்டப்படும் நாடார்களின் வளர்ச்சி; உயிருக்குப் போராடும்போது மீன் கூட்டத்தின் அழகை ரசிக்கும் சூசையும் சிலுவையும்; தங்கள் பாதுகாப்பில் விடப்பட்ட நகைப்பெட்டி என்ற பெரும் பொறுப்பின் சுமையில் அழுந்திக் கொண்டிருப்பவர்களிடம் ஒரு வருஷமாக அது காலியாகத்தான் இருக்கிறது என்று அலட்சியமாக சொல்லும் செலின்; சண்டையைத் தவிர்க்க விரும்பும் முன்னாள் சண்டியர் ஜஸ்டின் தன் மகனிடம் உன்னால்தான் கோழையாகிவிட்டேன் என்று சொல்வது; ஜஸ்டினின் இறப்பு; சுந்தரி-சூசை உறவு சூசையின் மனைவிக்குத் தெரியும் என்று சுந்தரி உணரும் இடம்; ஹிந்து-கிருஸ்துவ மதங்களைப் பற்றிப் பேசும் இடம்; மனைவியை முதலாளிக்குக் கூட்டிக் கொடுக்க முயல, முதலாளி நாசூக்காக மறுப்பது…

குறை என்று பெரிதாக எதுவும் சொல்வதற்கில்லை. 1936-இல் கலர் என்றும் லோன் என்றும் ஆங்கில வார்த்தைகளை சாதாரணர்கள் பயன்படுத்துவது கொஞ்சம் நெருடியது. அதே வருஷத்தில் சிதம்பரம் பிள்ளைக்கு என்னாயிற்று என்று விசாரிப்பது anachronism ஆகத் தெரிகிறது. அப்போது அவர் இறந்தே போய்விட்டார், ஜெயிலிருந்து வந்தே இருபது வருஷம் ஆகிவிட்டது.

மனித மனத்தின் உள்ளுணர்வுகள் பற்றிய தரிசனங்கள் சொல்லும்படியாக இல்லை, அப்படி இருந்திருந்தால் புத்தகத்தை இன்னும் உயர்ந்த இடத்தில் வைத்திருப்பேன். ஆசிரியர் முயன்றிருக்கிறார்; வசந்தாவுக்கு ஜஸ்டின் மீது உள்ள வன்மமும், சூசை-சிலுவை உறவும் அவற்றுக்கான முயற்சிகள்தான். ஆனால் அவற்றில் ஏதோ குறைகிறது.

நண்பர் பாலாஜி இது நேர்கோட்டில் செல்லும் straightforward narrative என்று சொன்னார்; உண்மைதான், ஆனால் ஒரு literary டெக்னிக் பயன்படுத்தப்படவில்லை என்பது எனக்கு குறையாகத் தெரியவில்லை. தனித்துவமுள்ள பாத்திரங்கள் இல்லை என்ற அவர் விமர்சனத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன், ஆனால் அதுவும் அப்படி இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்றுதான் சொல்ல முடியும்.

என் அப்பா படித்துவிட்டு இத்தனை “கெட்ட” வார்த்தைகளை ரியலிசத்துக்காக அப்படியே பயன்படுத்தி இருக்க வேண்டாம் என்று சொன்னார். அவருடைய வால்யூ சிஸ்டம் வேறு என்பதைப் புரிந்து கொள்கிறேன், ஆனால் அவரது நிலையை நிராகரிக்கிறேன். நான் ரசித்த ஒரு வார்த்தைப் பிரயோகத்தை அவருடைய நிலை கருதி இங்கே பிரசுரிக்கவில்லை. 🙂

தோழி காவேரி சில உடல் உறவுக் காட்சிகள் மிகவும் graphical ஆக இருப்பது கொஞ்சம் நெருடியதாகச் சொன்னார்; எனக்கு அப்படித் தெரியவில்லை. நாங்கள் சிறு வயதில் படித்த புத்தகங்கள் வேறு என்று தெளிவாகத் தெரிகிறது. 🙂

எஸ்.ரா.வின் நூறு சிறந்த நாவல்கள் லிஸ்டில் இருக்கிறது. ஆனால் ஜெயமோகனின் லிஸ்டில் இல்லை. அவரது லிஸ்ட் வெளியான பிறகு பதிப்பிக்கப்பட்ட புத்தகம் என்பதுதான் காரணமாக இருக்க வேண்டும். பேசும்போது புகழ்ந்து பேசி இருக்கிறார். ஒரு பதிவும் எழுதி இருக்கிறார்.

தமிழினி வெளியீடு. விலை 320 ரூபாய். தமிழக அரசின் சிறந்த நாவலுக்கான பரிசைப் பெற்றிருக்கிறது. 2004-இல் வெளிவந்திருக்கிறது.

சாதனை. கட்டாயமாகப் படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.

தொடர்புடைய சுட்டி: ஆழி சூழ் உலகு பற்றி ஜெயமோகன் பதிவு

கடந்த இருபது ஆண்டுகளின் முக்கிய தமிழ் படைப்புகள் – வெங்கட் சாமிநாதன்

வெங்கட் சாமிநாதன் திண்ணை இணைய இதழில் இரண்டு வருஷத்துக்கு முன்பு ஒரு கட்டுரை (பாகம் 1, பாகம் 2, பாகம் 3) எழுதி இருக்கிறார். கடந்த இருபது வருஷங்களில் அவர் முக்கியமானவையாக நினைக்கும் புத்தகங்கள், எழுத்தாளர்கள் பற்றியும் இவற்றில் எழுதி இருக்கிறார். அந்த காலத்தில் இருந்த ஒழுக்கங்கள் இன்று கைவிடப்படுகின்றன என்று அலுத்தும் கொள்கிறார்.

அன்றைக்கிருந்தாப் போல இன்றைக்கில்லை என்பது எல்லா பெரிசுகளும் சொல்லும் குறைதான். இன்னும் 20 வருஷம் கழித்து நான் உயிரோடு இருந்தால் நானும் இப்படித்தான் பேசுவேன். ஆனால் காந்தியின் தாக்கம் கணிசமானவர்களை ஒழுக்கமானவர்களாக மாறியது என்றுதான் தோன்றுகிறது. இன்று காந்தியின் தாக்கம் மதுக் கடைகள் அவர் பிறந்த நாள் அன்று மூடப்படுவது மட்டும்தான். நம்முடைய ரோல் மாடல்கள் இன்று அம்பானியும், மாறன்களும், பில் கேட்சும், நாராயண மூர்த்திகளும், ப்ரேம்ஜிகளும், ரஜினிகாந்த்களும், விஜய்களும், அஜித்களும், டெண்டுல்கர்களும், தோணிகளும்தான். காந்தி, நேரு, காமராஜ், படேல், ராஜாஜி, வ.உ.சி. போன்றவர்கள் அல்ல. அதனால் நமது value system மாறித்தான் விட்டது.

சரி அதை விடுவோம். புத்தகங்கள், எழுத்தாளர்கள் பற்றி அவர் நிறைய எழுதி இருக்கிறார். அவற்றை பற்றி என் குறிப்புகள் கீழே.

முதல் பாகத்தில் அவர் குறைகள்தான் பெரிதாக இருக்கிறது. கடைசியில் சில பெயர்களை மட்டும் சொல்கிறார். அவர்களைப் பற்றிய விவரங்கள் அடுத்த இரண்டு பகுதிகளில் வருகின்றன. நேரடியாக சிபாரிசுகளைப் பற்றி படிக்க விரும்புபவர்கள் முதல் பாகத்தை தவிர்க்கலாம்.

இரண்டாம் பகுதியில் அவர் குறிப்பிடுபவர்களில் அ. முத்துலிங்கம் கொண்டாடப்பட வேண்டியவர். அவர் கதைகளை நான் ஓசியில் இணையத்தில்தான் படித்தேன். அசோகமித்ரனின் வாரிசு இவர்தான். ஆனால் அசோகமித்ரனை விட இவரது எழுத்துக்கள் கொஞ்சம் optimism உள்ளவை. பல கதைகளை படித்து புன்னகை வரும்.

ராஜமார்த்தாண்டனின் கொங்குதேர் வாழ்க்கை ஒரு சிறப்பான கவிதை தொகுப்பு என்று குறிப்பிட்டிருக்கிறார். நான் கவிதையை கண்டாலே ஓடுபவன். எங்கேயாவது ஓசியில் கிடைத்தால் புரட்டிப் பார்க்கலாம். சல்மா, உமாமகேஸ்வரி, மாலதி மைத்ரி, திலகபாமா ஆகியோரை முக்கியமான பெண், பெண்ணிய கவிஞர்கள் என்று குறிப்பிடுகிறார். நமக்கு கவிதையே ததிங்கிணத்தோம், பெண்ணியக் கவிதை என்றால் பேச்சு மூச்சே நின்றுவிடும்!

ஜெயமோகனின் விஷ்ணுபுரம், பின் தொடரும் நிழலின் குரல், ஏழாம் உலகம் ஆகிய நூல்களை சிலாகிக்கிறார். நான் காடு என்ற புத்தகத்தையும் இந்த லிஸ்டில் சேர்த்துக் கொள்வேன். என் கருத்தில் ஜெயமோகன் நோபல் பரிசு வாங்கும் தரத்தில் எழுதுகிறார். ஆழமாகவும், அதே சமயத்தில் விரிவாகவும் எழுதுகிறார். Deep and wide. பேய் பிடித்தவன் போல் எழுதுகிறார். ஒரு வருஷத்துக்கு 2000-3000 பக்கங்கள் எழுதுவார் போலிருக்கிறது. நானும் எழுத முயற்சித்தேன், ஒரு பக்கம் எழுதவே எனக்கு ஒரு வாரம் ஆகிறது. 😦 ஜெயமோகனின் விமர்சனங்களும் முக்கியமானவை.

வெ.சா. ஜெயமோகனை புதுமைப்பித்தனுக்கு இணையான சாதனை என்கிறார். என் கண்ணிலும் ஜெயமோகன் ஜீனியஸ்தான், ஆனால் புதுமைப்பித்தன் இன்னும் கொஞ்சூண்டு மேலே நிற்கிறார். 🙂 இவர்கள் இருவர், மற்றும் அசோகமித்ரன் ஆகியோரே தமிழ் எழுத்தாளர்களில் (என் கண்ணில்) ஜீனியஸ்கள்.

எம். கோபாலகிருஷ்ணன் எழுதிய மணல் கடிகை ஒரு புது உலகத்தை நம் முன் வைக்கிறது என்று சொல்கிறார். நான் படித்ததில்லை. சூத்ரதாரி என்ற பேரில் எழுதுபவரும் கோபாலகிருஷ்ணன்தானோ?

ஜோ டி குருசின் ஆழிசூழ் உலகு பற்றி சிலாகித்து சொல்கிறார். இந்த புத்தகத்தை படிக்க ஆரம்பித்தேன். அருமையான புத்தகம் என்று ஒரு நூறு பக்கம் படித்ததும் தெரிந்தது. ஆனால் ஒரு பக்கம் வைத்துவிட்டேன். சில சமயம் இப்படி ஆகிவிடுகிறது.

பெருமாள் முருகன் கவுண்டர்-தலித் பற்றி உண்மையாக எழுதுவதாக குறிப்பிடுகிறார். நான் நிழல் முற்றம் மட்டுமே படித்திருக்கிறேன். திருச்செங்கோடு மாதிரி ஒரு சிறு நகரத்தில் இருக்கும் ஒரு தியேட்டரை பின்புலமாக வைத்து எழுதப்பட்ட மிக நல்ல நாவல். ஏழாம் உலகம் அளவுக்கு தாக்காவிட்டாலும், இந்த நாவல் சித்தரிக்கும் விளிம்பு நிலை மனிதர்கள் நிஜமாகத்தான் தெரிகிறார்கள்.

பி.ஏ.கிருஷ்ணனின் புலிநகக்கொன்றை பற்றி குறிப்பிடுகிறார். மிக அருமையான புத்தகம். லா.ச.ராவின் பாற்கடலுக்கு பிறகு குடும்ப உறவுகளை வைத்து இவ்வளவு அருமையான autobiographical நாவல் படித்ததில்லை. இதைப் போலத்தான் எனக்கும் ஒரு புத்தகம் எழுத ஆசை.

மேலும் கண்மணி குணசேகரனின் அஞ்சலை, யூமா. வாசுகியின் ரத்த உறவு இரண்டையும் சிலாகிக்கிறார். நான் படித்ததில்லை. படித்தவர்கள் யாராவது இருந்தால் உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்!

மூன்றாவது பகுதியில் அவர் குறிப்பிடுபவர்கள் தோப்பில் முகம்மது மீரான், சல்மா (இரண்டாம் ஜாமங்களின் கதை), இமையம் (செடல், கோவேறு கழுதைகள்), சோ. தர்மன்(கூகை, தூர்வை), பாமா (கருக்கு) மற்றும் தேவகாந்தன். ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன் போன்றவர்கள் சினிமாவில் நுழைந்திருப்பது நல்ல விஷயம் என்று குறிப்பிடுகிறார். அதே நேரத்தில் சுஜாதா போன்ற அறிவாளிகளும் சினிமா என்ற கடலில் அடையாளம் தெரிவதில்லை என்பதையும் சொல்கிறார். ஜெயகாந்தன் மட்டுமே தான் தானாகவே இருந்த எழுத்தாளராம். எனக்கு உன்னைப் போல் ஒருவன் பார்க்க மிகவும் ஆசையாக இருக்கிறது. பிரிண்ட் இருக்கிறதோ இல்லையோ?

மீரானின் ஒரு கடலோர கிராமத்தின் கதை மட்டுமே நான் படித்திருக்கிறேன். நல்ல புத்தகம். மீரான், சல்மா இருவரும் எப்படி தங்கள் மதக் கட்டுகளை கொஞ்சம் தாண்டி வந்து எழுதுகிறார்கள் என்று வியக்கிறார்.

இமையம், சோ. தர்மன், பாமா ஆகியோரை முக்கியமான தலித்திய எழுத்தாளர்களாக கருதுகிறார். நான் படித்திருப்பது பாமாவின் வன்மம் மட்டுமே. அருமையான நாவல். பள்ளர் பறையர் உப ஜாதிகளுக்கு இடையே உள்ள தகராறுகளை பற்றி எழுதி இருக்கிறார்.

கனடாவின் தேவகாந்தன் புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களின் வாழ்க்கையை ஒரு ஆவணம் போன்ற நாவலாக எழுதி இருக்கிறாராம். பேர் என்ன என்று சொல்லவில்லை. யாருக்காவது தெரியுமா?

முதல் பகுதியில் அவர் குறிப்பிடும் பிற எழுத்தாளர்கள் நாஞ்சில் நாடன், சுப்ரபாரதிமணியன், யுவன் சந்திரசேகர் ஆகியோர்தான். எஸ். ரா.வைக் காணோம்.

சமீபத்தில்தான் நாஞ்சிலின் சிறுகதைத் தொகுதி ஒன்றைப் படித்தேன். இன்னும் எழுத கைவரவில்லை.

சுப்ரபாரதிமணியனை நான் கிட்டத்தட்ட இருபது வருஷங்களுக்கு முன் சந்தித்திருக்கிறேன். அருமையான மனிதர். அவருடைய “அப்பா” என்ற சிறுகதைத் தொகுதியை நான் மிகவும் ரசித்தேன்.

யுவன் சந்திரசேகரின் ஒளி விலகல் புத்தகம் அபாரமான புத்தகம். விக்ரமாதித்தன் கதை பாணியை வைத்துக் கொண்டு இவ்வளவு அருமையாக எழுத முடியுமா? வேறு புத்தகங்கள் இல்லை, என்றாவது வாங்கி படிக்க வேண்டும்.

படிக்க விரும்பும் டாப் டென் தமிழ் புத்தகங்கள்

நான் படிக்க விரும்பும் டாப் டென் தமிழ் புத்தகங்களை இங்கே ஒரு லிஸ்ட் போட்டிருக்கிறேன். இவற்றை நான் இன்னும் படிக்க ஆரம்பிக்கவில்லை அல்லது பாதி படித்துவிட்டு வைத்திருக்கிறேன். (சில சமயம் நல்ல புத்தகம் என்று தெரிந்தும் முழு ஈர்ப்போடு படிக்க வேண்டும் என்று எடுத்து வைப்பதுண்டு.)

 1. ஜெயமோகனின் கொற்றவை – ஆரம்பம் அற்புதமாக இருந்தது. முழு ஈர்ப்போடு படிக்க வேண்டும் என்று வைத்திருக்கிறேன்.
 2. ஜோ டி க்ரூஸின் ஆழி சூழ் உலகு – இதுவும் பாதி படித்து வைத்திருக்கும் புத்தகம்தான்.
 3. ப. சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணி மற்றும் கடலுக்கு அப்பால் – இவை இரண்டையும் ஏனோ ஒரே புத்தகமாகத்தான் கருதத் தோன்றுகிறது.
 4. சு. வெங்கடேசனின் காவல் கோட்டம்
 5. பாலகுமாரனின் உடையார்
 6. நீல. பத்மநாபனின் பள்ளிகொண்டபுரம்
 7. நாஞ்சில் நாடனின் தலைகீழ் விகிதங்கள் – இது இயக்குனர் சேரன், மற்றும் ரதி நடித்து சொல்ல மறந்த கதை என்ற திரைப்படமாக வந்தது.
 8. அரு. ராமநாதனின் வீரபாண்டியன் மனைவி
 9. வடுவூர் துரைசாமி ஐயங்காரின் திகம்பர சாமியார்
 10. பாலகிருஷ்ண நாயுடுவின் டணாய்க்கன் கோட்டை

போனஸ்:

 1. பாரதி மணியின் பல நேரங்களில் பல மனிதர்கள்
 2. கோவை அய்யாமுத்துவின் எனது நினைவுகள்
 3. கிருத்திகாவின் வாசவேஸ்வரம்
 4. தேவனின் சி.ஐ.டி. சந்துரு
 5. அ.கா. பெருமாளின் சுண்ணாம்பு கேட்ட இசக்கி

இதைப் படிப்பவர்களும் தாங்கள் படிக்க விரும்பும் தமிழ் புத்தகங்களை சொல்லுங்களேன்!