க.நா.சு. புதுமைப்பித்தனை சந்திக்கிறார்

க.நா.சு. மணிக்கொடி அலுவலகத்துக்கு முதல் முறையாகப் போகிறார், தன் கதைகளை பிரசுரிப்பார்களா என்று தெரிந்து கொள்ள. அங்கே பி.எஸ். ராமையாவையும் புதுமைப்பித்தனையும் சந்திக்கிறார். இரண்டும் நிமிஷம் பேசிய பிறகு க.நா.சு.வும் தங்கள் கோஷ்டிதான், தேறாத கேஸ் என்று புதுமைப்பித்தன் தீர்ப்பு சொல்லிவிடுகிறார்! சுட்டி இங்கே.

அழிசி ஸ்ரீனிவாச கோபாலனுக்கும் அழியாச்சுடர்களுக்கும் நன்றி!

சுட்டி கொடுத்தால் போதும்தான், ஆனால் இதை சிலிகன் ஷெல்ஃபிலும் பதித்து வைக்க வேண்டும் என்று ஒரு நப்பாசை. அதனால் கீழே கட் பேஸ்ட் செய்திருக்கிறேன்.


முதல் தடவை புதுமைப்பித்தனைச் சந்தித்தது நினைவுக்கு வருகிறது. மணிக்கொடி காரியாலயத்தில் ஒரு சனிக்கிழமை நண்பகல் பன்னிரண்டு மணிக்கு கதைகள் கொடுத்தால் அவர்கள் போடுவார்களா என்று கேட்கப் போயிருந்தேன். 1935 நவம்பர் என்று எண்ணுகிறேன். மழை பெய்து ஓய்ந்திருந்தது.

இரண்டு ஆசாமிகளைச் சந்தித்தேன். ஒருவர் கண்ணால் பயமுறுத்துகிறவராக இருந்தார். ஒருவர் பல்லால் பயமுறுத்துகிறவராக இருந்தார். இருவரும் பயமுறுத்துகிறவர்களாகத்தான் அப்போது தோன்றினார்கள். கண் பி. எஸ். ராமையா என்றும், பல் சொ. விருத்தாசலம் என்கிற புதுமைப்பித்தன் என்றும் அறிந்துகொண்டேன்.

“ராசா கதை எழுதப் போறாக, என்ன சொல்றீக?” என்று பல் கண்ணைக் கேட்டது.

“எழுதட்டுமே. நமக்கென்ன ஆட்சேபம்?” என்றது கண்.

“கதை போட்டால் ஏதாவது பணம் கொடுப்பதுண்டா?” என்று அப்பாவித்தனமாகக் கேட்டேன். சொ.வி. கடகடவென்று உள்பற்களும் தெரிய சிரிக்க ஆரம்பித்துவிட்டார். கண் ஆசிரியராக லட்சணமாகப் பதில் சொல்லிற்று. “மணிக்கொடியில் கதை போட நீங்கள்தான் பணம் கொடுக்க வேண்டும். நாங்கள் கதைகளை விலை கொடுத்து வாங்குவதில்லை” என்றார்.

“விலைமதிப்பில்லாத கதைகளாக எழுதுங்கள்” என்றது பல்.

“போன இதழில் ‘சில்பியின் நரகம்’ என்று ஒரு கதை வந்ததே… படித்தீரா?” என்று கேட்டது கண்.

“நல்ல கதை. படித்தேன். அதனால்தான் என் கதையையும் போடுவீர்களா என்று கேட்க வந்தேன்?”

“நல்ல கதைகளாக நான் ஒருவன் எழுதுகிறேனே, போதாதா?” என்று கேட்டது பல்.

“அவர்தான் அந்தக் கதையின் ஆசிரியர்.”

“அப்படியா? சந்தோஷம் உங்களைச் சந்தித்ததில்.”

“அப்படிச் சொல்லு ராசா!” என்றது பல்.

இது ‘ஹோப்லெஸ் கேஸ்’ என்று நான் எண்ணிக்கொண்டிருக்கும்போது மூன்றாவது ஆசாமி ஒருவர் உள்ளே வந்தார். நல்ல சிவப்பாக, நல்ல உயரமாக, எடுப்பான மூக்குடன், தீட்சண்யமான கண்களுடன், பல்லுக்கும் கண்ணுக்கும் நல்ல காண்ட்ராஸ்ட்.

“இவர் என் ஆர்டிஸ்ட். கே. பாஷ்யம் ஆர்யா” என்றது கண்.

ஆர்யா என்று அவர் சொன்னது ஆர்.ஏ. என்று எனக்குக் காதில் விழுந்தது. ஆர்.ஏ. என்றால் கலை உலகில் ராயல் அகேடெமிசியன் என்பதன் சுருக்கம். கதைகளுக்குப் பணம் தராத பத்திரிகை ஒரு ஆர்.ஏ.யை வேலைக்கு…

“‘ஆர்யா’ என்கிற புனைப்பெயரில் சித்திரங்கள் போடுகிறார். பெரிய ஆர்டிஸ்ட். ஆனால் அதைவிடப் பெரிய தேசபக்தர். பாஷ்யம் சட்டையைத் தூக்கிக் காட்டுங்கள்.” என்று ராமையா பாஷ்யத்துக்கு உத்தரவிட்டார்.

இந்த உத்தரவுக்குப் பழக்கப்பட்டவர் போல ஆர்யா தன் சட்டையைக் கழுத்துவரைத் தூக்கிக் காட்டினார். விரல் மொத்தம் குறுக்கும் நெடுக்குமாகத் தழும்புகள் – கசையடித் தழும்புகள். நான் பிரமித்துப்போய் நின்றேன். ஒவ்வொரு தழும்பும் ஒன்பது வாய்களுடன் ‘நீயும் இருக்கிறாயே’ என்று கேட்பது போலத் தோன்றிற்று.

என் பிரமிப்பை நீக்குவதற்கே போல பல் சொல்லிற்று, அவருடைய பேடண்ட் கடகடச் சிரிப்புடன். “என்ன ராசா? பேச்சு வரவில்லை? அவர் தழும்புகள் அவர் முதுகில் தெரிகின்றன. எங்கள் தழும்புகள் உள்ளத்தில் இருப்பதனால் வெளியே தெரிவதில்லை. பாரதியார் கேள்விப்பட்டிருக்கிறீர்களா ராசாவே!”

“படித்திருக்கிறேன்.”

“ஹா! ஹா! கேள்விப்பட்டது மட்டுமில்லை. படித்தும் இருக்கிறார் மனுஷன். இதுவும் நம்மைப்போலத் தேறாத கேஸ் என்றுதான் தோன்றுகிறது ராமையா” என்றார்.

இப்படியாக நானும் அன்று தேறாத கேஸாக ‘மணிக்கொடி’ கோஷ்டியில் சேர்ந்துகொண்டேன். உள்ளத்தில் உள்ள வெளியே தெரியாத தழும்புகள், தேறாத கேஸ், பணமில்லாத இடைவிடாத இலக்கிய சேவை என்கிற விஷயங்கள் எல்லாம் தொடருகின்றன. மகாராஜர்கள் ராமையாவும் சொ.வி.யும் போய்விட்டார்கள். நான், அலாஸ் – இருக்கிறேன். சில சமயம் சொ.வி. நல்ல அதிருஷ்டக்காரர். சீக்கிரம் போய்விட்டார் என்று எனக்குத் தோன்றுவதுண்டு

முன்றில் இதழ் 5 (க.நா.சு. நினைவு மலர்)

பின்குறிப்பு: வேலை மும்முரத்தில் இந்தப் பக்கம் வரமுடியவே இல்லை, இனி மேலாவது கொஞ்சம் ரெகுலராக எழுத வேண்டும்…

தொகுக்கப்பட்ட பக்கம்: க.நா.சு. பக்கம், புதுமைப்பித்தன் பக்கம்

எஸ்விவி பற்றி க.நா.சு.

படித்திருக்கிறீர்களா புத்தகம் பற்றி சில முறை எழுதி இருக்கிறேன். எனக்கு அது ஒரு seminal புத்தகம். செகந்தராபாத் புத்தகக் கண்காட்சி ஒன்றில் வாங்கிய கையோடு அங்கேயே வராந்தாவில் படித்தேன், படித்து முடித்தவுடன் அதில் குறிப்பிட்டிருந்த புத்தகங்களைக் கண்காட்சியில் தேடினேன். கிடைத்தது எஸ்விவி எழுதிய உல்லாச வேளை ஒன்றுதான். படிக்கும்போது பிடித்திருந்தது. 20-25 வருஷங்களுக்குப் பிறகு மீள்வாசிப்பில் வெறும் fluff என்றும் தோன்றியது.

அதனால் ஒரு குறைவுமில்லை. க.நா.சு.வின் ரசனையும் என் ரசனையும் வேறு. ஆனால் புத்தகங்களை க.நா.சு. அணுகும் முறையும் நான் அணுகும் முறையும் ஒன்றுதான். அதனால் பசுபதி சார் தளத்தில் இந்தக் கட்டுரையைப் பார்த்தவுடன் சந்தோஷமாக இருந்தது. வசதிக்காக கீழேயும் பதித்திருக்கிறேன். பசுபதி சாருக்கு நன்றி!


தினசரி பழகி, விருப்பும் வெறுப்பும் கொள்கிற மனிதர்களை அறிகிற அளவுக்கு அவர்களையும் நாம் அறிந்து கொள்ள எஸ்.வி.வி.யின் மேதை நமக்கு உதவுகிறது. எவ்வளவு நுட்பமாக எல்லாவற்றையும் கவனித்து, சுலபமாக மனத்தில் பதியும்படியாக விஷயங்களைச் சொல்லியிருக்கிறார் எஸ்.வி.வி.! ஹாஸ்யமாக எழுதியதால்தான் அவருக்குப் பெருமை என்று சொல்லமுடியாது. உண்மைக்கும் கலைக்கும் விரோதமில்லாமல், முரண்பாடில்லாமல், அந்த ஹாஸ்யத்தைக் கையாள முடிந்தது என்பதுதான் எஸ்.வி.வி. யின் தனிச்சிறப்பு.

உல்லாச வேளை என்கிற நூலை நாவல் என்று சொல்வதா? கதைத் தொகுப்பு என்று சொல்வதா? வெறும் கட்டுரைகள் என்று சொல்வதா? மூன்றுமே சொல்லலாம். இலக்கியத்தில் அது எந்த வகுப்பில் சேரும் என்பது பற்றி எஸ்.வி.வி.க்கு ஒரு போதும், தன் எந்த எழுத்திலுமே கவலையிருந்ததில்லை. கலை என்கிற ஞாபகமே அற்ற ஒரு கலைஞர் அவர். இலக்கிய நண்பர்கள் கூட்டமொன்றில் அவர் தான் எழுதுகிறது எப்படி? என்பதைப் பற்றி விவரித்துச் சொன்னார்:

“பேனாவை எடுக்கும்போது எனக்கு என்ன எழுதப் போகிறேன் என்றே தெரியாது. கதைத் திட்டமோ , கதாநாயகன், நாயகியின் பெயரோ என் மனத்திலிராது. சட்டென்று ஏதாவது ஒரு பெயர் வரும். அவன் ஸ்டேஷனுக்குப் போவான். ஸ்டேஷனுக்குப் போய் என்ன செய்வான்? டிக்கெட் வாங்குவான். எந்த ஊருக்கு? ஏதாவது ஒரு ஊருக்கு. தனக்கா? தனக்காகவும் இருக்கலாம், வேறு யாருக்காகவும் இருக்கலாம். அது ரெயில் கிளம்பும்போது தெரிந்திருந்தால் போதுமே! கதாநாயகி அநேகமாக அவன் அறிந்தவளாகவே இருப்பாள். ஆனால், அவளைக் கதாநாயகியாக அதுவரை அறிந்திருக்கமாட்டான் அவன். நான் மனசு வைத்தால்தான் அறிந்துகொள்ள முடியும்…”

எஸ்.வி.வி.யை மற்ற எழுத்தாளர்களிடமிருந்து பிரித்து வைத்தன அவருடைய கண்களும் காதுகளும் என்று சொன்னால் அது மிகையல்ல. காண்பது பூராவையும் கண்ணில் வாங்கவும், கேட்பது பூராவையும் கொச்சை மொழி அந்தரார்த்தங்கள் உள்படக் காதில் வாங்கவும் அவருக்கு ஒரு சக்தியிருந்தது. தான் பார்த்ததையும் கேட்டதையும் அப்படி அப்படியே அழகு பெறச் சிருஷ்டித்துத் தந்திருக்கிறார் எஸ். வி. வி.

நாம் நேரில் அறிந்து கொண்டவர்களையே பல சமயங்களில் எஸ்.வி.வி.யின் எழுத்துக்களிலும் அறிந்து கொள்கிறோம். ஒரு திடமான பழங்கால அறிவுடனும், அநுபவ முதிர்ச்சியுடனும் இன்றைய வாழ்க்கையின் விசேஷங்களை, முக்கியமல்லாவிட்டாலும் அநுபவிக்கக் கூடிய அதிசயங்களை, எடுத்துச் சொன்னவர் எஸ்.வி.வி. இதைத் தினசரி பேச்சுத் தமிழில் சொன்னார் என்பதும், இயற்கையாகவுள்ள ஒரு ஹாஸ்யத்துடனும் சொன்னார் என்பதும் தனி விசேஷங்கள்தான்.

நேற்று – இன்று என்கிற இரண்டு தத்துவங்களுக்குமிடையே இவ்வுலகில் என்றுமே போராட்டம் நடந்து கொண்டுதான் வருகிறது. மனோதத்துவ நிபுணர்கள், தகப்பன் பிள்ளை, தாய் மகன் என்கிற உறவுகள் சிநேக உறவுகள் அல்ல, வெறுப்பு உறவுகளே என்று நிரூபிக்க இந்தக் காலத்தில் வெகுவாக முயன்று ஓரளவு வெற்றியும் பெற்று விட்டார்கள். மனோதத்துவம் என்கிற கானல் நீரிலே எஸ்.வி.விக்கு அவ்வளவாக நம்பிக்கை கிடையாது. அவர் கொண்டுள்ள முடிவுகளும் வற்புறுத்துகிற தன்மைகளும் வாழ்க்கையை நேர்ப் பார்வை பார்த்து அவர் அறிந்து கொண்டவை. ஆனால் நேற்று – இன்று என்கிற தத்துவத்தின் போராட்டத்தை அவரைப்போல தம் தலைமுறைக்கு விவரித்துள்ளவர்கள் வேறு யாருமில்லை என்றுதான் சொல்ல வேண்டும். போராட்டம் என்றோ, தத்துவம் என்றோ, இது பெரிய விஷயம் என்றோ சொல்லாமல் (உணராமல் என்று கூடச் சொல்லலாம்) லேசாகச் சொல்லிவிட்டு நகர்ந்து விடுகிறார்.

எஸ்.வி.வி. ஒரு கலைஞர். அவர் எந்த விஷயத்தை எடுத்துக் கையாளலாம், எந்த விஷயத்தைக் கைவிட்டு விட வேண்டுமென்று யாரும் சட்டம் விதிக்க முடியாது. எதுவும், எவ்வளவு சிறிய விஷயமுமே, அவர் நோக்குக்கு உட்பட்டதுதான் – கலைக்கு அஸ்திவாரம்தான்.

உல்லாச வேளையில் நாம் அறிந்து கொள்கிறவர்கள் எல்லோரும் நம்மை விட்டு அகலாத தோழர்கள். முகத்தைச் சுளிக்காமல் நாம் எங்கு சென்றாலும் நம்முடன் கூட வருவார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

முப்பது வருஷங்களுக்கு முன் நான் கோவையில் இண்டர்மீடியேட் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கும் போது எஸ்.வி.வி. என்கிற மூன்று எழுத்துக்கள் கொண்ட பெயருடன் ஒருவர் தன் முதற் கட்டுரையை ஹிந்துப் பத்திரிகையில் வெளியிட்டார். ஆங்கிலத்தில்தான் எழுதினார் என்றாலும், அது முழுக்க முழுக்கத் தமிழ்க் கட்டுரைதான் என்றே சொல்லலாம். தமிழன் ஆங்கிலம் எழுதினால் இப்படித்தான் எழுத வேண்டும் என்று ஆங்கிலத்தில் ஆசை கொண்டிருந்த எனக்கு அப்போது தோன்றியது. எஸ்.வி.வி. ஒரு ஏழெட்டு வருஷங்களுக்குப் பிறகு தமிழில் எழுதத் தொடங்கினார். அதனால் இன்றையத் தமிழ் இலக்கியம் ஒரு தனி வளம் பெறவே செய்திருக்கிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: க.நா.சு. பக்கம்

க. நா. சு.: படித்திருக்கிறீர்களா?

மீள்பதிவு, ஒரிஜினல் பதிவு இங்கே. அதுவே கூட்டாஞ்சோறு தளத்திலிருந்து மீள்பதித்ததுதான். மீள்பதிக்க காரணம் அழிசி பதிப்பகம் இந்தப் புத்தகத்தை மீண்டும் கொண்டு வருவதுதான். அழிசி ஸ்ரீனிவாச கோபாலனுக்கு ஒரு ஜே!

ஃபேஸ்புக்கிலிருந்து:

புதிய வெளியீடு
படித்திருக்கிறீர்களா? (தொகுதி 1)
க. நா. சுப்ரமண்யம்
‘சுதேசமித்திரன்’ வாரப் பதிப்பில் வெளியான கட்டுரைத் தொடர் ‘படித்திருக்கிறீர்களா?’ மூன்று தொகுதிகளாக நூல் வடிவம் பெற்றுள்ளன. இது முதல் தொகுதியின் மறுபதிப்பு. இரண்டாவது தொகுதியின் மறுபதிப்பும் விரைவில் வெளியாகும்.
*
‘தமிழ் விக்கி’ இணையக் கலைக்களஞ்சியத்திலிருந்து…
க. நா. சுப்ரமணியத்தின் புகழ்பெற்ற ‘படித்திருக்கிறீர்களா?’ என்னும் நூல் பரிந்துரைப் பட்டியல் சுதேசமித்திரன் வாரப் பதிப்பில் வந்த தொடர். அது க. நா. சுப்ரமணியம் முன்வைத்த அறிவியக்கத்திற்குத் தொடக்கமாக அமைந்தது. அந்தப் பரிந்துரைப் பட்டியலை ஒட்டி ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக தமிழில் ஆதரவும் எதிர்ப்புமாக விவாதங்கள் நிகழ்ந்துள்ளன. அந்நூல் தமிழில் ஒரு மூலநூல்தொகை (Modern Tamil Canon) ஒன்றை உருவாக்கும் முயற்சி. அப்பட்டியலை தொடர்ந்து தன் வாழ்நாள் முழுக்க க.நா.சுப்ரமணியம் விரிவாக்கிக் கொண்டே இருந்தார். அதில் அவர் புதிய படைப்பாளிகளைச் சேர்த்தார், பழையவர்கள் சிலரை தவிர்த்தார். அவர் பரிந்துரைத்தவர் களில் ஷண்முகசுப்பையா, அநுத்தமா போன்ற சிலர் பின்னாட்களில் அவருடைய வழிவந்த விமர்சகர்களாலும் அவரை ஏற்கும் வாசகர் களாலும்கூட ஏற்கப்படாது மறைந்தனர். அவரால் முதன்மைப் படுத்தப்பட்ட ஆர். ஷண்முகசுந்தரம் போன்ற சிலர் அவர் அளித்த இடத்தை அடையவில்லை. அவர் பொருட்படுத்தாத ப. சிங்காரம் போன்றவர்கள் பின்னாளில் அவருடைய வழிவந்த விமர்சகர் களாலேயே முதன்மையான இடத்தில் வைக்கப்பட்டனர். ஆனால் இந்த மாறுபாடுகளை கடந்து க. நா. சுப்ரமணியம் உருவகித்த அந்த மூலநூல்தொகையே நவீனத் தமிழிலக்கியத்தின் மையத்தொகுதி என இன்றும் மறுக்கப்படாமல் நிலைகொள்கிறது.
*
படித்திருக்கிறீர்களா? (தொகுதி 1)
க. நா. சுப்ரமண்யம்
விலை ரூ.170
தொடர்புக்கு: 70194-26274


(மேம்படுத்தப்பட்ட மீள்பதிவு, ஒரிஜினல் பதிவு இங்கே.)

க.நா.சு.வின் இந்தப் பட்டியல் எனக்கு தனிப்பட்ட முறையில் மிக முக்கியமானது. Eye opener. தமிழ் புனைவுலகு டைம் பாஸ் மட்டுமே அல்ல, விகடன்/குமுதம், சுஜாதா/சாண்டில்யன்/பொ. செல்வன் மட்டுமே அல்ல, மிகச் சிறந்த படைப்புகள் நிறைய உண்டு, அவற்றை பற்றி பேசவும் எழுதவும் ஆட்கள் இருக்கிறார்கள் என்று இதை படிப்பதற்கு முன் எனக்கு தெளிவாக தெரியாது. ஏதோ நாலைந்து நல்ல எழுத்தாளர்கள்/புத்தகங்கள் இருக்கலாம் என்றுதான் நினைத்திருந்தேன். தமிழில் நல்ல எழுத்துகளுக்கான என் தேடலுக்கு வழி காட்டிய முதல் புத்தகம் இதுதான். இந்தப் புத்தகத்தை வாங்கி அடுத்த ஒரு மணி நேரத்தில் படித்தபோது கிடைத்த மகிழ்ச்சிக்கு ஈடாக திலீப்குமாரின் புத்தகக் கடையை கண்டுபிடித்தபோது கிடைத்த மகிழ்ச்சி, ஜெயமோகனை முதல் முறை சந்தித்தபோது கிடைத்த மகிழ்ச்சியைத்தான் சொல்லலாம்.

செகந்தராபாதில் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் அந்த காலத்தில் வருஷா வருஷம் ஒரு தமிழ் புத்தக கண்காட்சி நடத்துவார். அங்கே இதை வாங்கிவிட்டு வராந்தாவிலேயே படித்ததும், இதில் உள்ள புத்தகம் எல்லாம் வருவதில்லை என்று அவர் சொன்னதும் ஏமாற்றத்துடன் திரும்பியதும் நினைவிருக்கிறது. எஸ்.வி.வி. எழுதிய உல்லாச வேளை மட்டும் அப்போது கிடைத்தது.

தன் ரசனையின் அடிப்படையில், தனக்கு பிடித்த புத்தகங்களை பற்றி இங்கே க.நா.சுப்ரமண்யம் அலசுகிறார். நான் தமிழில் இதற்கு முன் சமகால தமிழ் படைப்புகளைப் பற்றி பேசும் வேறு புத்தகங்களை படித்ததில்லை. நற்றிணை, நல்ல குறுந்தொகை, ஐங்குறுநூறு, ஒத்த பதிற்றுப்பத்து, ஓங்கு பரிபாடல் மாதிரி இலக்கியங்கள் பற்றி நிறைய கிடைக்கும், ஆனால் அதை எல்லாம் எவன் படிப்பது என்றுதான் அன்று தோன்றியது. இன்று இவற்றைப் படிக்கும் முதிர்ச்சி வந்திருக்கிறது, ஆனால் இன்றும் அவற்றை நேரடியாகப் படிப்பதைத்தான் விரும்புகிறேன், கோனார் நோட்ஸ்களை அல்ல.

க.நா.சு.வின் அணுகுமுறை எனக்கு மிகவும் இசைவானதுதான். ஆனால் அவர் ரசனைக்கும் எனது ரசனைக்கும் ஒத்துப் போகவில்லை என்பது பெரிய நகைமுரண். க.நா.சு.வின் பட்டியலில் அனேகமானவை எனக்கு சாதாரணப் புத்தகங்களாகத் தெரிகின்றன. சில சமயம் க.நா.சு. போன்ற ஜாம்பவான் இதை எப்படிய்யா பரிந்துரைத்தார் என்று வியக்கிறேன். ஜெயமோகன் சட்டகங்களை வகுத்து வரையறைகளை செதுக்கி இந்தப் புத்தகம் இந்தப் பாணி இப்படிப் படிக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லும்போது புத்தகத்தைப் படிக்க வேண்டும் அதற்கு என்ன இத்தனை சட்டதிட்டம் என்று தோன்றும். ஆனால் அவர் எனக்கு ஒரு புத்தகம் பிடித்திருக்கிறது என்று சொன்னால் அனேகமாக எனக்கும் பிடித்திருக்கும். இது அடுத்த நகைமுரண்!

அதாவது க.நா.சு.வின் அணுகுமுறையைத்தான் என்னால் ஏற்க முடிகிறது. ஆனால் ஜெயமோகனின் ரசனைதான் எனக்கு ஒத்து வருகிறது. 🙂

இந்த புத்தகத்தின் முதல் பதிப்பு 1957-இல் வந்தது. அதற்கு முன் வந்த புத்தகங்களை பற்றித்தான் அவர் இங்கே எழுதி இருக்க முடியும். Obviously. விலை என்ன தெரியுமா? இரண்டே முக்கால் ரூபாய்!

ஜெயமோகன் ஒரு பின்னோட்டத்தில் சொன்னார்.

அவர் (க.நா.சு.) போட்டு 30 வருடம் புழங்கிய பட்டியல்தான் படித்திருக்கிறீர்களா? இன்றும் தமிழில் புழங்கும் தரவரிசை அதில் உருவாகி வந்ததே. அதற்காக கநாசு 30 வருடம் வசைபாடப்பட்டார். வசை தாங்க முடியாமல் சென்னையை விட்டே ஓடி டெல்லியில் தஞ்சம் புகுந்தார்.

க.நா.சு. போட்டதுதான் முதல் பட்டியல் போலிருக்கிறது. இதற்கு வசை பாடப்பட்டாரா? என்ன மக்களோ!

க.நா.சு.வின் பட்டியல் கீழே. இவற்றில் சில இன்னும் கிடைக்கவில்லை, ரசனை வேறுபட்டிருக்கிறது என்று தெரிந்தாலும் இன்னும் தேடுவதை நானும் நிறுத்தவில்லை.

  • புதுமைப்பித்தனின் காஞ்சனைபுதிய கூண்டு, கடவுளும் கந்தசாமி பிள்ளையும், சுப்பையா பிள்ளையின் காதல்கள், செல்லம்மாள், சாப விமோசனம் ஆகிய கதைகள் உலகத்தின் சிறந்த சிறுகதைகள் என்று தொகுத்தால் கூட போடலாம். சுப்பையா பிள்ளையின் காதல்கள் ஜேம்ஸ் தர்பர் எழுதிய Secret Life of Walter Mitty என்ற அருமையான கதையை நினைவுபடுத்தலாம். தர்பர் கதையை படித்துவிட்டு புதுமைப்பித்தன் எழுதினாரா என்று எனக்கு தெரியாது. ஆனால் அப்படியே எழுதி இருந்தாலும் கூட இது ஒரு அற்புதமான கதை என்பதில் எந்த மாற்றமும் இல்லை. காஞ்சனைதான் தமிழின் முதல் பேய்க்கதையாம். க.நா.சு. இந்தச் சிறுகதை தொகுப்பை பற்றி எழுதியதை இங்கே முழுமையாகப் படிக்கலாம். புதுமைப்பித்தனே எழுதிய முன்னுரை இங்கே. என் ரசனைக்கு ஒத்துப் போகும் க.நா.சு. தேர்வு.
  • தீபனின் அரும்பிய முல்லை – நான் படித்ததில்லை. தீபன் டி.கே.சி.யின் புதல்வர். அவர் எழுதிய கதை, கவிதை, விமர்சனம், கடிதங்களிலிருந்து சில பகுதிகள் இந்தப் புத்தகத்தில் தொகுக்கப்பட்டிருக்கின்றன. யாராவது படித்திருந்தால் இதைப் பற்றி எழுதுங்களேன்!
  • சிதம்பர சுப்ரமணியனின் இதயநாதம் – இந்த புத்தகம் பற்றி க.நா.சு. எழுதியதை படித்த பின்னர் இது கிடைக்காதா என்று பெரிய ஏக்கமே இருந்தது. நண்பர் ராஜனிடம் இந்தப் புத்தகமும் மண்ணில் தெரியுது வானம் என்ற புத்தகமும் கிடைத்தது. ஆனால் படித்தபோது இது ஒரு சுமாரான நாவல் என்றுதான் எண்ணினேன். ஏன் இதைப் பரிந்துரைத்தார் என்று யோசிக்க வைத்தது. படிக்கலாம், ஆனால் படித்தே ஆக வேண்டிய நாவல் இல்லை.
  • எஸ். வையாபுரிப் பிள்ளையின் தமிழ் சுடர்மணிகள் – நல்ல புத்தகம், நானும் பரிந்துரைக்கிறேன். பிள்ளையைப் பற்றிய சில பதிவுகள் இங்கே, இங்கே மற்றும் இங்கே.
  • லா.ச.ரா.வின் ஜனனி – நல்ல சிறுகதைத் தொகுப்பு, ஆனால் என் கண்ணில் இதை விட சிறந்த புத்தகங்களை லா.ச.ரா. எழுதி இருக்கிறார். பாற்கடல், புத்ர, அபிதா, சிந்தாநதி, இதழ்கள்… லா.ச.ரா.வின் எழுத்துகள் எப்போதுமே உணர்ச்சி பிரவாகம், இதுவும் அப்படித்தான். கண்ணாடியில் பிம்பம் விழும் ஓசை என்று அவர் எழுதிய ஒரு வரி மிக பிரபலம். நல்ல வரியும் கூட. பூப்பூக்கும் ஓசை பாட்டின் வரிகள் மாதிரி இல்லை?
  • எஸ்.வி.வி.யின் உல்லாச வேளை – அந்தக் காலத்தில் படித்தபோது எஸ்.வி.வி. கலக்கிவிட்டார் என்று தோன்றியது. நகர்ப்புற, மேல் மத்திய தர வர்க்க, பிராமண milieu. படிக்க உண்மையிலேயே உல்லாசமாக இருந்தது. “படித்திருக்கிறீர்களா” பட்டியலைப் பார்த்துவிட்டு அதே புத்தகக் கண்காட்சியில் தேடியபோது கிடைத்து ஒரே புத்தகம் இதுதான். கல்கியின் நகைச்சுவை மாதிரி இருந்தது. ஆனால் 15-20 வருஷம் கழிந்த பிறகு மீள்வாசிப்பில் வெறும் fluff என்று தோன்றியது. அப்போதே அவரது ராமமூர்த்தி போன்ற பிற புத்தகங்கள் எனக்கு ரசிக்கவில்லை. என் கண்ணில் இதற்கு இன்றைக்கு ஒரு curiosity value மட்டுமே.
  • வ.வே.சு. ஐயரின் மங்கையர்க்கரசியின் காதல் – நான் முழு புத்தகத்தையும் படித்ததில்லை. ஆனால் இதில் வரும் குளத்தங்கரை அரசமரம் நல்ல சிறுகதை, தமிழின் முதல் சிறுகதை என்று பரவலாகக் கருதப்படுகிறது. மங்கையர்க்கரசியின் காதல் சிறுகதையை இங்கே படிக்கலாம்.
  • யதுகிரி அம்மாளின் பாரதி நினைவுகள் யதுகிரி அம்மாள் பாரதியாரின் நண்பர் (மண்டயம் திருமலாச்சாரியார்) ஒருவரின் மகள். பாண்டிச்சேரியில் சிறுமியாக இருந்தபோது பாரதியாரை அருகில் இருந்து பார்த்தவர். மிகைப்படுத்துதல் எதுவும் இல்லாத, மிக உண்மையான அவதானிப்புகள். என் ரசனைக்கு ஒத்துப் போகும் க.நா.சு.வின் தேர்வு.
  • வ.ரா.வின் நடைச்சித்திரம் – வாழ்க்கையில் உள்ள மனிதர்களை பற்றி ஒன்றிரண்டு பக்கங்களில் நன்றாக எழுதி இருப்பார். போஸ்ட்மன் பொன்னம்பலம், காய்கறிக்காரி அம்மாக்கண்ணு, தமிழ் வாத்தியார் முத்துசாமி என்று இருக்கும். சின்ன வயதில் படித்திருக்கிறேன். மீள்வாசிப்பிலும் பிடித்திருந்தது. என் ரசனைக்கு ஒத்துப் போகும் க.நா.சு.வின் தேர்வு.
  • சங்கரராமின் மண்ணாசை – படித்ததில்லை. படிக்க வேண்டும் என்று க.நா.சு. ஏக்கப்பட வைக்கிறார். யாராவது படித்திருந்தால் இதைப் பற்றி எழுதுங்களேன்!
  • ஏ.கே. செட்டியாரின் உலகம் சுற்றும் தமிழன் – நல்ல தேர்வு.
  • தி. ஜானகிராமனின் கொட்டுமேளம் – சிறுகதை தொகுப்பு. இதுவும் நண்பர் ராஜனிடம் கிடைத்தது. அதைப் பற்றிய பதிவு இங்கே. சிலிர்ப்பு அருமையான சிறுகதை. பசி ஆறிற்று, தவம் என்ற இன்னும் இரண்டு சிறுகதைகளும் குறிப்பிட வேண்டியவை. எந்த சிறுகதையும் சோடை போகவில்லை.
  • மு.வ.வின் கரித்துண்டு. மறைந்த நண்பர் சேதுராமன் அனுப்பிய புத்தகம். மு.வ.வின் நாவல்கள் எனக்கு அவ்வளவாக பிடிப்பதில்லை. ஆனால் இது பிடித்திருந்தது. ஆனால் இது எல்லாருக்குமான நாவல் அல்ல. தமிழின் சிறந்த நாவல்கள் என்று நான் ஒரு பட்டியல் போட்டால் அதில் வராது.
  • தி.ஜ.ர.வின் பொழுதுபோக்கு – படித்ததில்லை. யாராவது படித்திருந்தால் இதைப் பற்றி எழுதுங்களேன்!
  • டி.எஸ்.எஸ். ராஜனின் நினைவு அலைகள்/. நானும் பரிந்துரைக்கும் புத்தகம். விரிவாக இங்கே.
  • ஆர். ஷண்முகசுந்தரத்தின் நாகம்மாள் -க.நா.சு.வின் விவரிப்பு படிக்க வேண்டும் என்று ஏக்கப்பட வைத்தது. ஆனால் முதல் வாசிப்பு எனக்கு ஏமாற்றம் தந்தது. க.நா.சு. கொடுத்த பில்டப் அளவுக்கு புத்தகம் இல்லை என்று நினைத்தேன். மறுவாசிப்பில் எனது வாசிப்பின் குறைகள் தெரிந்தன, நல்ல புத்தகம் என்று நினைத்தேன்.
  • கு. அழகிரிசாமி கதைகள்அழகிரிசாமி அற்புதமான எழுத்தாளர். மேலே வார்த்தைகளை வளர்த்துவானேன்?
  • அ. சுப்ரமணிய பாரதியாரின் ஜடாவல்லவர் இந்தப் புத்தகம்தான் எங்கள் ரசனை வேறுபாட்டை சந்தேகம் இல்லாமல் காட்டுகிறது. இதெல்லாம் ஒரு புத்தகம், இதை க.நா.சு. பரிந்துரைக்கிறார் என்ற வியப்பு அடங்கவே இல்லை.
  • கல்கியின் சங்கீத யோகம் – தமிழிசை இயக்கம் பற்றி கல்கி எழுதியவை. படித்ததில்லை. க.நா.சு.வின் முழுக் கட்டுரையும் இங்கே.
  • பாரதிதாசன் கவிதைகள் – அவருக்கு சந்தம் கை வந்த கலை, அவ்வளவுதான். எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு என்று சொல்லிப் பாருங்கள்! இல்லை கொடு வாளினை எடடா பல கொடியோர் செயல் அறவே என்று சொல்லிப் பாருங்கள்! அவருக்கு நல்ல நகைச்சுவை உணர்வு உண்டு. இருண்ட வீடு என்ற சிறு காவியத்தை படித்துப் பாருங்கள். இல்லை என்றால் தமிழ் சினிமாவின் நிலை பற்றி அவர் எழுதியதிலிருந்து ஒரு வரி – பத்தினிக்கு இன்னல் வரும், பழையபடி தீரும். ஆனால் பாரதிதாசன் நல்ல கவிஞர் இல்லை என்பது என் உறுதியான கருத்து. இத்தனைக்கும் எனக்கும் கவிதைக்கும் ரொம்ப தூரம் என்பது எனக்கு நன்றாகவே தெரியும்.
  • கு.ப.ராவின் கனகாம்பரம் – சிறுகதைத் தொகுப்பு. கனகாம்பரம், திரை, பண்ணை செங்கான், விடியுமா? ஆகியவை மிக நல்ல கதைகள். கு.ப.ரா. மிகவும் subtle ஆக எழுதக்கூடியவர்.

தொகுக்கப்பட்ட பக்கம்: க.நா.சு. பக்கம், புத்தகப் பரிந்துரைகள்

மணிக்கொடி சதஸ்

ஒரு புகைப்படம் இல்லாமல் போய்விட்டதே என்று வருத்தமாக இருக்கிறது. வேறு பீடிகை இல்லாமல்.

லா.ச.ரா.வின் சிந்தாநதியிலிருந்து:

நாற்பத்தைந்து, நாற்பத்தேழு வருடங்களுக்கு முன் கூடவே இருக்கலாமோ? ஆனால் ஐம்பது ஆகவில்லை.

உங்களை மெரினாவுக்கு அழைத்துச் செல்கிறேன்.

சொல்லத் தேவையில்லையானாலும் கண்ணகி சிலை இல்லை.

ஸப்வே இல்லை. மூர்மார்க்கெட், பின்னால் வந்த பர்மா பஜார் போல் எல்லாப் பொருள்களும் வாங்கக்கூடிய சந்தையாக மெரினா மாறவில்லை. இத்தனை ஜனமும் இல்லை.

மாலை வேளை, வானொலியின் ஒலி பெருக்கிகளை மாட்டியாகிவிட்டது. அங்கேயே சுட்டு அப்பவே விற்கும் பஜ்ஜியின் எண்ணெய் (எத்தனை நாள் Carryover-ஓ?) புகை சூழவில்லை. நிச்சயமாக இப்போதைக் காட்டிலும் மெரினா ஆசாரமாகவும், சுகாதாரமாகவும், கெளரவமாகவும், காற்று வாங்கும் ஒரே நோக்கத்துடனும் திகழ்ந்தது. பூக்கள் உதிர்ந்தாற்போல், இதழ்கள் சிதறினாற்போல், எட்ட எட்ட சின்னச் சின்னக் குடும்பங்கள். நண்பர்களின் ஜமா. அமைதி நிலவுகிறது.

இதோ மணலில், வடமேற்கில் ப்ரஸிடென்ஸி கல்லூரி மணிக் கோபுரத்துக்கு இலக்காக அக்வேரியம் பக்கமாக என்னோடு வாருங்கள். ஆ, அதோ இருக்கிறார்களே, ஏழெட்டுப் பேர் கூடி உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

உஷ் – மணிக்கொடி சதஸ் கூடியிருக்கிறது. அதன் நடு நாயகமாக- அப்படியென்றால் அவர் நடுவில் உட்கார்ந்திருக்கவில்லை. எல்லாருமே சப்தரிஷி மண்டலம் போல் வரிசை இல்லாமல்தான் அமர்ந்திருப்பார்கள். நாயகத் தன்மையை அவருடைய தோற்றம் தந்தது.

அந்நாளிலேயே அவரைத் தென்னாட்டுத் தாகூர் என்று அந்த வட்டம் அழைக்கும். அந்த ஒப்பிடலுக்குப் பொருத்தமாகத்தான் இருந்தார். நடு வகிடிலிருந்து இருமருங்கிலும் கரும்பட்டுக் குஞ்சலங்கள் போலும் கேசச் சுருள்கள் செவியோரம் தோள் மேல் ஆடின. கறுகறுதாடி மெலிந்த தவ மேனி. ஆனால் அந்தக் கூட்டத்தில் பெரும்பாலும் மெலிந்த உடல்தான். சிதம்பர சுப்ரமணியனைத் தவிர, அவர் பூசினாற் போல், இரட்டை நாடி. க.நா.சு, சிட்டி சாதாரண உடல் வாகு.

ந. பிச்சமூர்த்தியின் அழகுடன் சேர்ந்த அவருடைய தனித்த அம்சம் அவருடைய விழிகள். ஊடுருவிய தீக்ஷண்யமான பார்வை. அதன் அற்புதக்ரணத் தன்மை அவருக்குக் கடைசிவரை இருந்தது. உயரத்தில் சேர்த்தி அல்ல. அவரிடம் மற்றவர்கள் காட்டின மரியாதையும், அவர் பேச்சுக்குச் செவி சாய்த்த தனிக் கவனமும், என்றும் சபாநாயகர் அவர்தான் என்பதை நிதர்சனமாக்கியது.

எத்தனைக்கெத்தனை பிச்சமூர்த்தி ஒரு பர்ஸனாலிட்டியாகப் பிதுங்கினாரோ அத்தனைக்கத்தனை அவர் எதிரே உட்கார்ந்திருந்த கு.ப.ரா. தான் இருக்குமிடம் தெரியாமலிருப்பதே கவனமாயிருந்தார் எனத் தோன்றிற்று. பிச்சமூர்த்தியைக் காட்டிலும் குட்டை. அவருடைய கனத்த மூக்குக் கண்ணாடி இல்லாவிட்டால் அவர் பாடு திண்டாட்டம்தான். பேசும்போது அவர் குரல் அவருக்குக் கேட்டதா என்பது என் சந்தேகம்.

பிச்சமூர்த்தியும், கு.ப.ரா.வும் எழுத்தில் கையாள எடுத்துக்கொண்ட விஷயம், பாணி தனித்தனி, ஆனால் ஏன் இவர்களைச் சிறுகதை இரட்டையர்கள் என்று குறிப்பிட்டார்கள்? எனக்குப் புரியவில்லை.

புதுமைப்பித்தனை மனதில் கூட்டுகையில், பளிச்சென்று நினைவில் படுவது அவருடைய உயர்ந்த dome like நெற்றியும் வெடிப்பான உரத்த சிரிப்பும்தான். அடிக்கடி சிரிப்பார்.

எனக்கு நினைவு தெரிந்தவரை, பி.எஸ். ராமையா எப்பவுமே உற்சாகமான பேர்வழி, நிமிர்ந்த முதுகும் வரித்த கழி போன்ற உடலுக்கு உறையிட்டாற் போல், ஜிப்பாவும், தரையில் புரளும் வேட்டியும் அவரை உயரமாகக் காட்டின. கைகளை உற்சாகமாக ஆட்டி உரக்கப் பேசுவார்.

இந்தக் கூட்டத்தை நான் உங்களுக்குப் பரிச்சயம் பண்ணும் சமயத்தில் கலைமகளில் சக்ரவாகம் என்கிற அவர் கதை வெளியாகி அதன் வெற்றிப்ரபை சிதம்பர சுப்ரமணியனைச் சூழ்ந்து ஒளி வீசிக்கொண்டிருந்தது. அவரிடம் விஷயம் நிறைய இருந்தது. ஆனால் சங்கோஜி. அப்படியே அபிப்ராயமாக ஏதேனும் அவர் சொல்ல ஆரம்பித்தாலும் சரியாக முடிக்காமல், சிரிப்பில், பலமான தலையாட்டலில் மழுப்பிவிடுவார். நுண்ணிய முக அங்கங்கள். அலைபாயும் க்ராப்.

தி.ஜ.ர. முழங்கால்களைக் கட்டியபடி குந்திட்டபடி உட்கார்ந்திருக்கிறார். அவருக்கு செளகர்யமான போஸ்ட்சர். தலையை அழுத்த வாரி, உடனேயே மெனக்கெட்டுத் தானே கையை உள்ளே விட்டுக் கலைத்துக் கொண்டாற்போல் குட்டையாக வெட்டிய க்ராப் விரைத்துக் கொண்டிருக்கும். அவர் தோற்றத்தில் கவனம் இன்னும் கொஞ்சம் செலுத்தியிருந்தால் அழகான மனிதனாகவே வெளிப்படுவார் என்பது என் கருத்து. செதுக்கினாற் போன்ற மூக்கு, வாய், வரிசையான முத்துப் பற்கள். சிரிக்கும்போது அவர் முகத்தில் ஐந்தாறு வயதுகள் உதிரும்.

சிட்டி, சி.சு. செல்லப்பா, க.நா.சு. இவர்களின் படங்களைச் சமீபமாகப் பத்திரிகைகளில் பார்க்கிறீர்கள். அன்றைக்கு இன்று வருடங்கள் இவர் தோற்றங்களை அதிகம் பாதித்திருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

ஒருவர், இருவர் அல்லது இருவர் மூவர். கூட்டத்தில் சேரலாம். குறையலாம். ஆனால் மாலை, இந்த வேளைக்கு இந்த இடத்தில் இந்த ஏழு பேர் நிச்சயம்.

அத்தனை பேரும் கதராடை.

இவர்களை விழுங்கும் விழிகளால் பார்த்துக்கொண்டு இவர்கள் பேச்சைச் செவியால் உறிஞ்சிக் குடித்துக் கொண்டிருப்பதில் எனக்கு அலுப்பே இல்லை.

இலக்கிய ஆர்வம் மிக்க என் நண்பன் குஞ்சப்பாவும் நானும், எங்கள் மரியாதையில், இயற்கையான வயதின் அச்சத்தில் இவர்களுக்கு நாலு அடி எட்ட உட்கார்ந்திருப்போம்.

நான் அப்போத்தான் மொக்கு கட்டியிருந்த எழுத்தாளன். எஸ்.எஸ்.எல்.சி. குட்டெழுத்து தட்டெழுத்துப் பரீட்சைகள் தேறிவிட்டு வேலைக்கு அலைந்து கொண்டிருந்தேன். தேடினால் கிடைத்துவிடுகிறதா? பறித்து எடுத்துக்கொள் என்கிற மாதிரி அப்பவே, வேலை ஒண்ணும் காய்த்துத் தொங்கவில்லை. அந்த ரோசம், அதனால் படும் கவலை சமயங்களில் தவிர, சிந்தனைக்கும் இலக்கியச் சிந்தனைக்கும் வயது காரணமாகப் பற்றிக் கொண்டிருக்கும் ஆக்கக் கனல் வெளிப்பட வழி காணாது, உள் புழுங்கவும் வேண்டிய நேரம் இருந்த அந்தப் பருவத்தில் என்னை என்னிலிருந்து மீட்டு எனக்குத் தருவதற்கு இந்தக் கடற்கரைக் குழுவின் பாதிப்பு தன் பங்கைச் செய்தது என்றால் மிகையில்லை.

மஞ்சேரி எஸ்.ஈஸ்வரன் ஆசிரிமையில் வெளி வந்து கொண்டிருந்த ‘ஷார்ட் ஸ்டோரி’ ஆங்கில மாதப் பத்திரிகையில் என் கதைகள் இரண்டு பிரசுரமாகியிருந்தன, அடுத்து மணிக்கொடி (ஆசிரியர் ப.ரா) யில் மூன்று கதைகள், ஹனுமான் வாரப் பத்திரிகையில் ஒன்று. உம், ஆமாம்.

“ஏண்டா, அங்கே தனியா உட்கார்ந்திண்டிருக்கே, இங்கே வாயேன்!”

தி.ஜ.ர, அழைப்பார். அப்படியே நகர்ந்து, அவருக்கும் ஈஸ்வரனுக்கும் இடையே (என் நினைப்பில்) அவர்கள் பாதுகாப்பில் இடுங்குவேன். அந்தக் கூட்டத்தில் ஒருவனாக நான் என்னைப் பாவித்துக் கொள்ளும் அதிர்ஷ்டம் இது மாதிரி நேர்ந்தால் வலிக்குமா? ஆனால் இங்கே வாய் திறக்க எனக்கு தில் கிடையாது. போயும் போயும் இங்கே றாபணாவா? என்னைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? அப்போதெல்லாம் யார் சொல்வதையும் கவனமாகக் கேட்டுக் கொள்ளும் பங்குதான் என்னுடையது.

என்ன பேசினார்கள்? இலக்கியம். இங்கே மார்தட்டல் கிடையாது. வகுப்பு நடத்தவில்லை. உபதேசம் செய்யவில்லை. இலக்கியத்திலேயே யாருக்கேனும் வாரிசு எடுத்துக்கொண்டு கட்சிப் பிரசாரம் கிடையாது. உலக இலக்கிய கர்த்தாக்களின் சிருஷ்டிகள் நடமாடின. அவர்கள் பெயர்களைச் சொல்லிச் சுவைக்க எனக்கு ஆசைதான். ஆனால் ஏதோ வெறும் பெயர்களை உதிர்த்து அதில் பெருமை அடையப் பார்க்கிறேன் எனும் சந்தேகத்துக்குக்கூட நான் ஆளாக விரும்பவில்லை. அந்த மாதிரிப் பெருமையால் எனக்கு இனி ஆக வேண்டியது ஏதுமில்லை. தவிர அப்போதேனும் மாப்பஸான், மாம், செக்கோவ் என்று எழுத்தாளர்கள் முனகினார்கள். Chase, Robbins, Maclean என்று இடத்தைப் பிடித்துக்கொண்டு, எழுத்து ஒரு ஃபாக்டரியாக மாறியிருக்கும் இந்நாளில் நாங்கள் பழகிய பெயர்கள், அந்த எழுத்துக்களின் சத்தியங்கள் எடுபடா.

பிச்சமூர்த்தியின் வெளிப்பாட்டில் விஷயம் நிறைய இருக்கும். அபூர்வமான விதானங்கள் தட்டும். இத்தனைக்கும் பேச்சில் சிங்காரங்கள், நகாசுகள் effect உண்டாக்க வேண்டும் எனும் தனி முயற்சி இல்லை. உள்ளது உள்ளபடி அவர் கண்டபடி. ஆனால் எப்படியும் கவிஞன் மனம் இல்லையா? லேசாக நடுக்கம் கொடுத்த குரலில் வார்த்தைகள் வெளிப்படுகையில், பிசிர்கள் கத்தரிக்கப்பட்டு, சொல்லும் பொருளும் சுளை சுளையாக விழுவது போலத் தோன்றும். ரத்னச் சுருக்கம். இதற்குள் முடிஞ்சு போச்சா? இன்னும் கொஞ்சம் பேசமாட்டாரா?

“ராஜகோபாலா! சிட்டி! செல்லப்பா!” என்று அழைக்கையில் அந்தக் குரல் நடுக்கத்தில் ததும்பிய இனிமை, பரஸ்பரம் யாரிடம் இப்போ காண முடிகிறது? அவர் பார்வையே ஒரு ஆசீர்வாதம்.

இலக்கிய விழாக்கள் இந்நாளில் கொண்டாடப்படுகின்றன. கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள் நடைபெறுகின்றன. டி.வி., வானொலி வழி வேறு: பேட்டிகள், சந்திப்புகள், மோஷியாரா, ஸம்மேளனம்.., எந்தச் சாக்கிலேனும் மேடை.

ஆனால் கடற்கரையில் மாலை அந்த இரண்டு, இரண்டரை மணி நேரம் இந்த ஏழெட்டுப் பேர் கூடி மனம் விட்டுப் பேசிக்கொண்டிருந்தார்களே, அதுதான் உண்மையில் இலக்கியப் பட்டறை.

இத்தனை வருடங்களின் பின்னோக்கில் எனக்கு இன்னும் வேறு ஏதேதோ உண்மைகள் புலப்படுகிறாப் போல் ஒரு உணர்வு.

ஏதோ ஒரு வகையில், இவர்கள் எழுத்துக்குத் தங்களை அர்ப்பணித்துக்கொண்ட பிக்குகள்.

இந்த ஏழெட்டுப் பேரில் நாலுபேர் இப்போது நம்முடன் இல்லை. இவர்களில் மூவரேனும் எழுத்துக்கே பலியானவர்கள்.

அந்த மஹாராஜியைப் பற்றி எனக்குக் கொஞ்சம் தெரியும். அவள் மோஹினி. மிக்க அழகி. இரக்கமற்றவள். Medusa “வா, வா. என்னைப் பார். என் அழகைப் பார்!”

அவன் நெஞ்சை நீட்டுகிறாள். உள் உள்ளேயே பாடுகிறாள்.

கொல் இசை.

சிந்தா நதி மேல் கவிந்த ஒரு பனிப் படலம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: லா.ச.ரா. பக்கம்

க. நா. சு.: படித்திருக்கிறீர்களா?

(மேம்படுத்தப்பட்ட மீள்பதிவு, ஒரிஜினல் பதிவு இங்கே.)

க.நா.சு.வின் இந்தப் பட்டியல் எனக்கு தனிப்பட்ட முறையில் மிக முக்கியமானது. Eye opener. தமிழ் புனைவுலகு டைம் பாஸ் மட்டுமே அல்ல, விகடன்/குமுதம், சுஜாதா/சாண்டில்யன்/பொ. செல்வன் மட்டுமே அல்ல, மிகச் சிறந்த படைப்புகள் நிறைய உண்டு, அவற்றை பற்றி பேசவும் எழுதவும் ஆட்கள் இருக்கிறார்கள் என்று இதை படிப்பதற்கு முன் எனக்கு தெளிவாக தெரியாது. ஏதோ நாலைந்து நல்ல எழுத்தாளர்கள்/புத்தகங்கள் இருக்கலாம் என்றுதான் நினைத்திருந்தேன். தமிழில் நல்ல எழுத்துகளுக்கான என் தேடலுக்கு வழி காட்டிய முதல் புத்தகம் இதுதான். இந்தப் புத்தகத்தை வாங்கி அடுத்த ஒரு மணி நேரத்தில் படித்தபோது கிடைத்த மகிழ்ச்சிக்கு ஈடாக திலீப்குமாரின் புத்தகக் கடையை கண்டுபிடித்தபோது கிடைத்த மகிழ்ச்சி, ஜெயமோகனை முதல் முறை சந்தித்தபோது கிடைத்த மகிழ்ச்சியைத்தான் சொல்லலாம்.

செகந்தராபாதில் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் அந்த காலத்தில் வருஷா வருஷம் ஒரு தமிழ் புத்தக கண்காட்சி நடத்துவார். அங்கே இதை வாங்கிவிட்டு வராந்தாவிலேயே படித்ததும், இதில் உள்ள புத்தகம் எல்லாம் வருவதில்லை என்று அவர் சொன்னதும் ஏமாற்றத்துடன் திரும்பியதும் நினைவிருக்கிறது. எஸ்.வி.வி. எழுதிய உல்லாச வேளை மட்டும் அப்போது கிடைத்தது.

தன் ரசனையின் அடிப்படையில், தனக்கு பிடித்த புத்தகங்களை பற்றி இங்கே க.நா.சுப்ரமண்யம் அலசுகிறார். நான் தமிழில் இதற்கு முன் சமகால தமிழ் படைப்புகளைப் பற்றி பேசும் வேறு புத்தகங்களை படித்ததில்லை. நற்றிணை, நல்ல குறுந்தொகை, ஐங்குறுநூறு, ஒத்த பதிற்றுப்பத்து, ஓங்கு பரிபாடல் மாதிரி இலக்கியங்கள் பற்றி நிறைய கிடைக்கும், ஆனால் அதை எல்லாம் எவன் படிப்பது என்றுதான் அன்று தோன்றியது. இன்று இவற்றைப் படிக்கும் முதிர்ச்சி வந்திருக்கிறது, ஆனால் இன்றும் அவற்றை நேரடியாகப் படிப்பதைத்தான் விரும்புகிறேன், கோனார் நோட்ஸ்களை அல்ல.

க.நா.சு.வின் அணுகுமுறை எனக்கு மிகவும் இசைவானதுதான். ஆனால் அவர் ரசனைக்கும் எனது ரசனைக்கும் ஒத்துப் போகவில்லை என்பது பெரிய நகைமுரண். க.நா.சு.வின் பட்டியலில் அனேகமானவை எனக்கு சாதாரணப் புத்தகங்களாகத் தெரிகின்றன. சில சமயம் க.நா.சு. போன்ற ஜாம்பவான் இதை எப்படிய்யா பரிந்துரைத்தார் என்று வியக்கிறேன். ஜெயமோகன் சட்டகங்களை வகுத்து வரையறைகளை செதுக்கி இந்தப் புத்தகம் இந்தப் பாணி இப்படிப் படிக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லும்போது புத்தகத்தைப் படிக்க வேண்டும் அதற்கு என்ன இத்தனை சட்டதிட்டம் என்று தோன்றும். ஆனால் அவர் எனக்கு ஒரு புத்தகம் பிடித்திருக்கிறது என்று சொன்னால் அனேகமாக எனக்கும் பிடித்திருக்கும். இது அடுத்த நகைமுரண்!

அதாவது க.நா.சு.வின் அணுகுமுறையைத்தான் என்னால் ஏற்க முடிகிறது. ஆனால் ஜெயமோகனின் ரசனைதான் எனக்கு ஒத்து வருகிறது. 🙂

இந்த புத்தகத்தின் முதல் பதிப்பு 1957-இல் வந்தது. அதற்கு முன் வந்த புத்தகங்களை பற்றித்தான் அவர் இங்கே எழுதி இருக்க முடியும். Obviously. விலை என்ன தெரியுமா? இரண்டே முக்கால் ரூபாய்!

ஜெயமோகன் ஒரு பின்னோட்டத்தில் சொன்னார்.

அவர் (க.நா.சு.) போட்டு 30 வருடம் புழங்கிய பட்டியல்தான் படித்திருக்கிறீர்களா? இன்றும் தமிழில் புழங்கும் தரவரிசை அதில் உருவாகி வந்ததே. அதற்காக கநாசு 30 வருடம் வசைபாடப்பட்டார். வசை தாங்க முடியாமல் சென்னையை விட்டே ஓடி டெல்லியில் தஞ்சம் புகுந்தார்.

க.நா.சு. போட்டதுதான் முதல் பட்டியல் போலிருக்கிறது. இதற்கு வசை பாடப்பட்டாரா? என்ன மக்களோ!

க.நா.சு.வின் பட்டியல் கீழே. இவற்றில் சில இன்னும் கிடைக்கவில்லை, ரசனை வேறுபட்டிருக்கிறது என்று தெரிந்தாலும் இன்னும் தேடுவதை நானும் நிறுத்தவில்லை.

  • புதுமைப்பித்தனின் காஞ்சனைபுதிய கூண்டு, கடவுளும் கந்தசாமி பிள்ளையும், சுப்பையா பிள்ளையின் காதல்கள், செல்லம்மாள், சாப விமோசனம் ஆகிய கதைகள் உலகத்தின் சிறந்த சிறுகதைகள் என்று தொகுத்தால் கூட போடலாம். சுப்பையா பிள்ளையின் காதல்கள் ஜேம்ஸ் தர்பர் எழுதிய Secret Life of Walter Mitty என்ற அருமையான கதையை நினைவுபடுத்தலாம். தர்பர் கதையை படித்துவிட்டு புதுமைப்பித்தன் எழுதினாரா என்று எனக்கு தெரியாது. ஆனால் அப்படியே எழுதி இருந்தாலும் கூட இது ஒரு அற்புதமான கதை என்பதில் எந்த மாற்றமும் இல்லை. காஞ்சனைதான் தமிழின் முதல் பேய்க்கதையாம். க.நா.சு. இந்தச் சிறுகதை தொகுப்பை பற்றி எழுதியதை இங்கே முழுமையாகப் படிக்கலாம். புதுமைப்பித்தனே எழுதிய முன்னுரை இங்கே. என் ரசனைக்கு ஒத்துப் போகும் க.நா.சு. தேர்வு.
  • தீபனின் அரும்பிய முல்லை – நான் படித்ததில்லை. தீபன் டி.கே.சி.யின் புதல்வர். அவர் எழுதிய கதை, கவிதை, விமர்சனம், கடிதங்களிலிருந்து சில பகுதிகள் இந்தப் புத்தகத்தில் தொகுக்கப்பட்டிருக்கின்றன. யாராவது படித்திருந்தால் இதைப் பற்றி எழுதுங்களேன்!
  • சிதம்பர சுப்ரமணியனின் இதயநாதம் – இந்த புத்தகம் பற்றி க.நா.சு. எழுதியதை படித்த பின்னர் இது கிடைக்காதா என்று பெரிய ஏக்கமே இருந்தது. நண்பர் ராஜனிடம் இந்தப் புத்தகமும் மண்ணில் தெரியுது வானம் என்ற புத்தகமும் கிடைத்தது. ஆனால் படித்தபோது இது ஒரு சுமாரான நாவல் என்றுதான் எண்ணினேன். ஏன் இதைப் பரிந்துரைத்தார் என்று யோசிக்க வைத்தது. படிக்கலாம், ஆனால் படித்தே ஆக வேண்டிய நாவல் இல்லை.
  • எஸ். வையாபுரிப் பிள்ளையின் தமிழ் சுடர்மணிகள் – நல்ல புத்தகம், நானும் பரிந்துரைக்கிறேன். பிள்ளையைப் பற்றிய சில பதிவுகள் இங்கே, இங்கே மற்றும் இங்கே.
  • லா.ச.ரா.வின் ஜனனி – நல்ல சிறுகதைத் தொகுப்பு, ஆனால் என் கண்ணில் இதை விட சிறந்த புத்தகங்களை லா.ச.ரா. எழுதி இருக்கிறார். பாற்கடல், புத்ர, அபிதா, சிந்தாநதி, இதழ்கள்… லா.ச.ரா.வின் எழுத்துகள் எப்போதுமே உணர்ச்சி பிரவாகம், இதுவும் அப்படித்தான். கண்ணாடியில் பிம்பம் விழும் ஓசை என்று அவர் எழுதிய ஒரு வரி மிக பிரபலம். நல்ல வரியும் கூட. பூப்பூக்கும் ஓசை பாட்டின் வரிகள் மாதிரி இல்லை?
  • எஸ்.வி.வி.யின் உல்லாச வேளை – அந்தக் காலத்தில் படித்தபோது எஸ்.வி.வி. கலக்கிவிட்டார் என்று தோன்றியது. நகர்ப்புற, மேல் மத்திய தர வர்க்க, பிராமண milieu. படிக்க உண்மையிலேயே உல்லாசமாக இருந்தது. “படித்திருக்கிறீர்களா” பட்டியலைப் பார்த்துவிட்டு அதே புத்தகக் கண்காட்சியில் தேடியபோது கிடைத்து ஒரே புத்தகம் இதுதான். கல்கியின் நகைச்சுவை மாதிரி இருந்தது. ஆனால் 15-20 வருஷம் கழிந்த பிறகு மீள்வாசிப்பில் வெறும் fluff என்று தோன்றியது. அப்போதே அவரது ராமமூர்த்தி போன்ற பிற புத்தகங்கள் எனக்கு ரசிக்கவில்லை. என் கண்ணில் இதற்கு இன்றைக்கு ஒரு curiosity value மட்டுமே.
  • வ.வே.சு. ஐயரின் மங்கையர்க்கரசியின் காதல் – நான் முழு புத்தகத்தையும் படித்ததில்லை. ஆனால் இதில் வரும் குளத்தங்கரை அரசமரம் நல்ல சிறுகதை, தமிழின் முதல் சிறுகதை என்று பரவலாகக் கருதப்படுகிறது. மங்கையர்க்கரசியின் காதல் சிறுகதையை இங்கே படிக்கலாம்.
  • யதுகிரி அம்மாளின் பாரதி நினைவுகள் யதுகிரி அம்மாள் பாரதியாரின் நண்பர் (மண்டயம் திருமலாச்சாரியார்) ஒருவரின் மகள். பாண்டிச்சேரியில் சிறுமியாக இருந்தபோது பாரதியாரை அருகில் இருந்து பார்த்தவர். மிகைப்படுத்துதல் எதுவும் இல்லாத, மிக உண்மையான அவதானிப்புகள். என் ரசனைக்கு ஒத்துப் போகும் க.நா.சு.வின் தேர்வு.
  • வ.ரா.வின் நடைச்சித்திரம் – வாழ்க்கையில் உள்ள மனிதர்களை பற்றி ஒன்றிரண்டு பக்கங்களில் நன்றாக எழுதி இருப்பார். போஸ்ட்மன் பொன்னம்பலம், காய்கறிக்காரி அம்மாக்கண்ணு, தமிழ் வாத்தியார் முத்துசாமி என்று இருக்கும். சின்ன வயதில் படித்திருக்கிறேன். மீள்வாசிப்பிலும் பிடித்திருந்தது. என் ரசனைக்கு ஒத்துப் போகும் க.நா.சு.வின் தேர்வு.
  • சங்கரராமின் மண்ணாசை – படித்ததில்லை. படிக்க வேண்டும் என்று க.நா.சு. ஏக்கப்பட வைக்கிறார். யாராவது படித்திருந்தால் இதைப் பற்றி எழுதுங்களேன்!
  • ஏ.கே. செட்டியாரின் உலகம் சுற்றும் தமிழன் – நல்ல தேர்வு.
  • தி. ஜானகிராமனின் கொட்டுமேளம் – சிறுகதை தொகுப்பு. இதுவும் நண்பர் ராஜனிடம் கிடைத்தது. அதைப் பற்றிய பதிவு இங்கே. சிலிர்ப்பு அருமையான சிறுகதை. பசி ஆறிற்று, தவம் என்ற இன்னும் இரண்டு சிறுகதைகளும் குறிப்பிட வேண்டியவை. எந்த சிறுகதையும் சோடை போகவில்லை.
  • மு.வ.வின் கரித்துண்டு. மறைந்த நண்பர் சேதுராமன் அனுப்பிய புத்தகம். மு.வ.வின் நாவல்கள் எனக்கு அவ்வளவாக பிடிப்பதில்லை. ஆனால் இது பிடித்திருந்தது. ஆனால் இது எல்லாருக்குமான நாவல் அல்ல. தமிழின் சிறந்த நாவல்கள் என்று நான் ஒரு பட்டியல் போட்டால் அதில் வராது.
  • தி.ஜ.ர.வின் பொழுதுபோக்கு – படித்ததில்லை. யாராவது படித்திருந்தால் இதைப் பற்றி எழுதுங்களேன்!
  • டி.எஸ்.எஸ். ராஜனின் நினைவு அலைகள்/. நானும் பரிந்துரைக்கும் புத்தகம். விரிவாக இங்கே.
  • ஆர். ஷண்முகசுந்தரத்தின் நாகம்மாள் -க.நா.சு.வின் விவரிப்பு படிக்க வேண்டும் என்று ஏக்கப்பட வைத்தது. ஆனால் முதல் வாசிப்பு எனக்கு ஏமாற்றம் தந்தது. க.நா.சு. கொடுத்த பில்டப் அளவுக்கு புத்தகம் இல்லை என்று நினைத்தேன். மறுவாசிப்பில் எனது வாசிப்பின் குறைகள் தெரிந்தன, நல்ல புத்தகம் என்று நினைத்தேன்.
  • கு. அழகிரிசாமி கதைகள்அழகிரிசாமி அற்புதமான எழுத்தாளர். மேலே வார்த்தைகளை வளர்த்துவானேன்?
  • அ. சுப்ரமணிய பாரதியாரின் ஜடாவல்லவர் இந்தப் புத்தகம்தான் எங்கள் ரசனை வேறுபாட்டை சந்தேகம் இல்லாமல் காட்டுகிறது. இதெல்லாம் ஒரு புத்தகம், இதை க.நா.சு. பரிந்துரைக்கிறார் என்ற வியப்பு அடங்கவே இல்லை.
  • கல்கியின் சங்கீத யோகம் – தமிழிசை இயக்கம் பற்றி கல்கி எழுதியவை. படித்ததில்லை. க.நா.சு.வின் முழுக் கட்டுரையும் இங்கே.
  • பாரதிதாசன் கவிதைகள் – அவருக்கு சந்தம் கை வந்த கலை, அவ்வளவுதான். எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு என்று சொல்லிப் பாருங்கள்! இல்லை கொடு வாளினை எடடா பல கொடியோர் செயல் அறவே என்று சொல்லிப் பாருங்கள்! அவருக்கு நல்ல நகைச்சுவை உணர்வு உண்டு. இருண்ட வீடு என்ற சிறு காவியத்தை படித்துப் பாருங்கள். இல்லை என்றால் தமிழ் சினிமாவின் நிலை பற்றி அவர் எழுதியதிலிருந்து ஒரு வரி – பத்தினிக்கு இன்னல் வரும், பழையபடி தீரும். ஆனால் பாரதிதாசன் நல்ல கவிஞர் இல்லை என்பது என் உறுதியான கருத்து. இத்தனைக்கும் எனக்கும் கவிதைக்கும் ரொம்ப தூரம் என்பது எனக்கு நன்றாகவே தெரியும்.
  • கு.ப.ராவின் கனகாம்பரம் – சிறுகதைத் தொகுப்பு. கனகாம்பரம், திரை, பண்ணை செங்கான், விடியுமா? ஆகியவை மிக நல்ல கதைகள். கு.ப.ரா. மிகவும் subtle ஆக எழுதக்கூடியவர்.

தொகுக்கப்பட்ட பக்கம்: க.நா.சு. பக்கம், புத்தகப் பரிந்துரைகள்

லா.ச.ரா.: ஜனனி

ஜனனி சிறுகதைத் தொகுப்பு. க.நா.சு. தன் படித்திருக்கிறீர்களா புத்தகத்தில் பரிந்துரைத்த புத்தகங்களில் ஒன்று. மின்புத்தகமாகக் கிடைக்கிறது.

லா.ச.ரா.வின் புத்தகங்களில் எனக்கு மிகவும் பிடித்தது பாற்கடல். என்றாவது ஒரு நாள் என் குடும்பத்தினரைப் பற்றி எழுத வேண்டும்.

இந்தத் தொகுப்பின் மிகச் சிறந்த கதை யோகம். விவரிப்பது கஷ்டம். ஒரு கல். அதன் மேல் புகையிலை துப்பப்படுகிறது. அதன் அருகே கணவன் மனைவி சண்டை போட்டுக் கொள்கிறார்கள். ஒரு விதவை தன் தோழியின் கணவனோடு உறவு கொள்கிறாள். என்னென்னவோ நடக்கிறது. அந்தக் கல் ஒரு சுயம்புலிங்கம்.

இதே பாணியில் அமைந்த சிறுகதை ரயில். ஒரு ரயில் பெட்டி பிரயாணிகளின் விவரிப்பு. கதை சுமாராகத்தான் போய்க் கொண்டிருந்தது. ஆனால் அதன் முத்தாய்ப்பில் (denouement) வயசாளி கணவர் மனைவியிடம் பேசுவது நன்றாக வந்து விழுந்திருந்தது.

அக்காவை விரட்டிக் கொண்டு ஜன்னலின் வெளியே வேடிக்கை பார்க்கும் சின்னப் பையனாக நான் இருந்திருக்கிறேன். இன்னமும் மாப்பிள்ளை கருக்கு கழியாமல் வண்டியே தனக்காகத்தான் ஓடுகிறது என்று நினைத்துக் கொண்டிருக்கும் வயசுப் பிள்ளையாகவும் இருந்திருக்கிறேன். ஏண்டாப்பா இத்தனை பெரிய குடும்பத்தைப் படைத்தோம் என்று ஏங்கும் அந்தச் சம்சாரியாகவும் இருந்திருக்கிறேன்….

உப்புமில்லை புளியுமில்லாதற்கு எல்லாம் உறுமிக் கொண்டும் கருவிக் கொண்டும் குலாவிக் கொண்டும் கொக்கரித்துக் கொண்டும் இருந்திருக்கிறோம் – இருக்கிறோம்.

அக்காவை சின்னத் தம்பி மிரட்டுவதும் புன்னகைக்க வைக்கிறது.

டேய் சொன்னத்தைக் கேளு. நீ ரொம்ப எட்டிப் பாக்கறே, காலை வாரி விட்டுடப் போறது…

நீ என் காலைப் பிடிச்சுக்கோ, அதை விட உனக்கு என்னடி வேலை?

ஜனனி, புற்று, அரவான், பூர்வா, கணுக்கள், கொட்டுமேளம் சிறுகதைகள் அவர் பாணி சிறுகதைகள். படிக்கலாம்.

ஜனனி சிறுகதையை கல்கியின் முன்னாள் ஆசிரியர் சீதா ரவி சூடாமணியின் ஒரு சிறுகதையோடு ஒப்பிட்டு எழுதிய ஒரு கட்டுரை இங்கே.

புற்று சிறுகதையில் அம்மா மகனை நீ அழிந்து போவாய் என்று சாபம் விடும் காட்சி வருகிறது. இந்தக் காட்சிதான் பிற்காலத்தில் புத்ர நாவல் ஆனதோ?

அரவானில் பணக்கார வீட்டுக் குழந்தைக்கு பாலூட்டும் வேலை பார்க்கும் மனைவியும் தங்கள் குழந்தைக்கு பாலில்லையே என்று உளைச்சல்படும் கணவனும் நல்ல சித்தரிப்பு. பூர்வாவில் ஒரு வரி புன்னகையை வரவழைத்தது. எந்த ஜன்மத்தில் பார்த்தாரோ!

வீட்டின் பின்புறத்தில் அடையாறு அழுக்கற்று அமைதியாக ஓடுகிறது

கொட்டுமேளம் உணர்ச்சிப் பிரவாகம். அண்ணனும் விதவையாகிவிட்ட தங்கையும் பயங்கர அன்னியோன்யம். மனைவி சந்தேகப்பட்டு, கணவன் வீம்பாய் நின்று என்று கதை போகிறது. எனக்குப் பிடித்தது சில வரிகள்தாம்.

அவள் விழுங்கியது ஜலமா, அந்த நாதத்தின் விறுவிறுப்பா?

நாயனத்தின் வாசிப்பை விட மேளத்தின் சப்தம்தான் தூக்கி நின்றது. யாரோ சின்னப்பயல், முழு உற்சாகத்துடன் வெளுத்து வாங்குகிறான். வேளையின் சந்தோஷமே அவன் மேளத்திலிருந்து குண்டு குண்டு மணிகளாய்த் தெறித்து கல்யாணக்கூடம் முழுதும் சிதறி ஓடி உருண்டு பந்துகள் போல எகிறி எழும்பியது.

அண்ணனுக்கு இள வயதிலேயே தலை நரைத்துவிட தங்கை பார்ப்பவர் முடியை எல்லாம் நோட்டம் விடுகிறாள். வழுக்கைத்தலையனனான நானும் அப்படித்தான்.

கதைகள் சோடை போகவில்லை. ஆனால் இந்தத் தொகுப்பின் சிறந்த சிறுகதையான யோகத்தை விட நல்ல சிறுகதைகளை லா.ச.ரா. எழுதி இருக்கிறார்.

தொகுக்கப்பட்ட பக்கம்: லா.ச.ரா. பக்கம்

தொடர்புடைய சுட்டிகள்:
மின்பிரதி
சீதா ரவி கட்டுரை

க.நா.சு. பரிந்துரை – ஜடாவல்லவர்

இருபது இருபத்திரண்டு வயது வரை தமிழில் படிக்க பெரிதாக எதுவுமில்லை என்றுதான் எண்ணி இருந்தேன். நற்றிணையையும், நல்ல குறுந்தொகையையும் சிலப்பதிகாரத்தையும் திருக்குறளையும் கம்ப ராமாயணத்தையும் என்னால் அந்த வயதில் படிக்க முடியவில்லை. (திருக்குறளை இன்னமும் படிக்க முடியவில்லை.) புதுமைப்பித்தன் மேதை என்ற முடிவுக்கு வந்திருந்தாலும், சாயாவனம், கோபல்ல கிராமம், சில நேரங்களில் சில மனிதர்கள் மாதிரி சிலவற்றைப் படித்திருந்தாலும் தமிழ் வாசிப்பு என்றால் சுஜாதாவும் கல்கியும் விகடனும் குமுதமும்தான், டைம் பாஸ் வாசிப்புதான், தமிழில் படித்து பழகிவிட்ட ஒரே காரணத்தால்தால் நிறுத்த முடியவில்லை, படித்து தொலைக்க வேண்டி இருக்கிறது என்றுதான் நினைத்திருந்தேன். அந்த மாதிரி வாசிப்புக்கும் பெர்னார்ட் ஷாவுக்கும் இப்சனுக்கும்  ஹ்யூகோவுக்கும் ஹெமிங்க்வேக்கும் மார்க்வசுக்கும் ஆலன் பேடனுக்கும் ஹார்பர் லீக்கும், ஏன் டிக்கன்சுக்கும், தாக்கரேவுக்கும், எமிலி ப்ரான்டேவுக்கும் கூட நிறைய தூரம் இருந்தது.

அப்போது செகந்தராபாத்தில் (முதல்) வேலை. மாரட்பள்ளியில் கீஸ் உயர்நிலைப் பள்ளியில் தமிழ்ப் புத்தகக் கண்காட்சி என்று கேள்விப்பட்டேன். நான் வசித்ததும் மாரட்பள்ளிதான். கையில் முதல் முறையாக புத்தகம் வாங்கும் அளவுக்கெல்லாம் காசு இருந்தது. சுப்ரபாரதிமணியன் கஷ்டப்பட்டு வருஷாவருஷம் அதை நடத்தி வந்தார். போனவன் வழக்கமான சுஜாதா புத்தகங்களோடு சாயாவனத்தையும் வாங்கினேன். அவர் கண்ணில் பல்ப் எரிந்தது. சின்னப் பையனுக்கு சாயாவனம் பற்றி தெரிந்திருக்கிறதே என்று அவருக்கு சின்ன சந்தோஷம். அவருடைய பரிந்துரையில் சில பல புத்தகங்களை வாங்கினேன்.

அப்போது கண்ணில் பட்ட புத்தகம் க.நா.சு.வின் படித்திருக்கிறீர்களா? புத்தகத்தை வாங்கிய கையோடு அங்கேயே பள்ளி வராந்தாவில் படித்து முடித்தேன். எனக்கு அந்தப் புத்தகம் பெரிய கண்திறப்பு. எந்த உலக மொழிக்கும் இணையான நவீன இலக்கியம் தமிழில் உண்டு என்று உணர்ந்த தருணம். அவர் போட்டிருந்த பட்டியலில் ஒன்றோ இரண்டோ கூட அப்போது படித்திருக்கவில்லை. ஆனாலும் அவரது விவரிப்பிலிருந்தே தமிழ் வாசிப்பு பற்றிய எனது எண்ணம் வெறும் அறியாமை என்று தெரிந்தது. இன்னும் கூட கிழிந்த ஒரு பிரதி என் அலமாரியில் எங்கோ இருக்கிறது, வாங்கி முப்பது வருஷமாவது இருக்கும்.

க.நா.சுவின் பரிந்துரை பாணி – இது என ரசனைக்கு ஒத்து வருகிறது, இந்த மாதிரி புத்தகம் – என்னைப் பொறுத்தவரை மிகச் சரியான அணுகுமுறை. எனக்கு ஏற்ற அணுகுமுறை. ஆனால் பின்னால் அவர் பரிந்துரைத்த புத்தகங்களில் பல என் ரசனைக்கு ஒத்தே போகாது என்பது புரிந்தது. அவர் பரிந்துரைத்த இதயநாதம், உல்லாச வேளை, கரித்துண்டு போன்றவை எனக்கு சரிப்படாது. படிக்கலாம், ஆனால் க.நா.சு. பரிந்துரைக்காவிட்டால் படித்திருக்கமாட்டேன், படிக்கவில்லை என்றால் எந்த வருத்தமும் இராது. அதாவது அவரது அணுகுமுறை எனக்கு சரிப்படுகிறது, அவரது ரசனை எனக்கு ஒத்துப் போகவில்லை. அவர் பரிந்துரைத்திருக்கும் புத்தகங்களில் ஒன்றோ இரண்டோ எனக்கு நல்ல இலக்கியமாக இருந்தால் அதிகம். அனேகம் வெறும் fluff மட்டுமே. என் கண்ணைத் திறந்த பரிந்துரைப் பட்டியல், ஆனால் பரிந்துரைகளில் வெகு சிலவே எனக்குத் தேறும் என்பது பெரிய நகைமுரண்.

அவர் பட்டியலில் எனக்கு மிகவும் ஏமாற்றம் அளித்த புத்தகம் ஜடாவல்லவர் (1939).

ஏதோ ஒரு தஞ்சாவூர் கிராமத்தில் ஆசாரமான பிராமணக் குடும்பத்தில் பிறந்த சந்திரசேகரன். ஆங்கிலம் படிக்கவில்லை, தமிழிலும் சமஸ்கிருதத்திலும் தேர்ச்சி. விவசாயம், ஆனால் தங்கைகள் திருமணம், செலவுகள் என்று சொத்து கரைந்து கொண்டிருக்கிறது. முன்சீப் வேலை, கடன், திருமணம், மாமியார்-மருமகள் தகராறு, கடன் தீர்வது, மகள், மகளுக்குத் திருமணம், சுபம் என்று போகிறது.

மகா மோசமான கதை. ஒவ்வொரு அத்தியாயத்தில் முதல் இரண்டு பக்கம் உபதேசம், மேற்கோள்கள். திடீரென்று கதாநாயகன் காசிக்கு குடும்பத்தோடு போகிறான். அதனால் கதை எப்படி நகர்கிறது என்றால் ஒன்றுமில்லை. பாத்திரங்களோ வெறும் தேய்வழக்குகள். மாமியார் மோசமானவள்; “நாகரீக” மாற்றங்களால் வைதிக பழக்கங்கள் சிலவற்றை கைவிடும் மாப்பிள்ளை முட்டாள், மூர்க்கன். நாயகனும் நாயகியும் உலக மகா உத்தமர்கள். கொடுமை செய்யும் மாமியார் கிணற்றில் மருமகளை பிடித்துத் தள்ளப் போனால் அவள் தலையில் சரியாக தேங்காய் விழுகிறது. பிரதாப முதலியார் சரித்திரம் எத்தனையோ ramble ஆகும். அதற்கு ஐம்பது வருஷம் கழித்து வெளியான புத்தகம் கொஞ்சமாவது முன்னேற வேண்டாமா? இது பின்னேறி இருக்கிறது!

கதையின் சுவாரசியம் இன்று ஒன்றுதான். என்னவெல்லாம் ஆசிரியருக்கு தவறாகத் தெரிகிறது! மீசை வைத்த பிராமணன்; குருக்கள் தாழ்ந்த ஜாதி (பிராமணர்களுக்குள் தாழ்ந்தவர்களா? எனக்குத் தெரியவில்லை); காப்பி குடிப்பது, அதிலும் சீப்பிக் குடிப்பது; ஆங்கிலக் கல்வி; சுருட்டு பிடிக்கும் மேலதிகாரி. சொல்லிக் கொண்டே போகலாம்.

க.நா.சு. தன் சிறு வயதில் பார்த்த தஞ்சாவூர் கிராமங்களை, வைதிகப் பிராமணர் குடும்பங்களை ஓரளவு உண்மையாகப் பிரதிபலிக்கும் நாவல் என்று நினைக்கிறேன். மெய்நிகர் அனுபவம் என்று நினைத்து பரிந்துரைத்துவிட்டார் என்று தோன்றுகிறது.

நாவலை எழுதியவர் வரகவி என்று பட்டம் பெற்ற அ. சுப்ரமணிய பாரதி. இவர் கவிஞர் பாரதியின் நண்பர். அவரோடு சுதேசமித்திரனில் பணியாற்றி இருக்கிறார். இரண்டு பேருக்கும் எப்படித்தான் ஒத்துப் போயிற்றோ தெரியவில்லை. இவர் இந்தப் புத்தகத்தில் நாகரீக வளர்ச்சியின் பின்விளைவுகள் என்று சொல்லும் அத்தனையும் கவிஞருக்கு உண்டு – மீசை, ஜாதி ஆசாரம் பார்க்காமல் இருத்தல்…

அ. சுப்ரமணிய பாரதியைப் பற்றி க.நா.சு. தவிர வேறு யாரும் குறிப்பிட்டு நான் பார்த்ததில்லை. நீங்கள் யாராவது ஏதாவது கேள்விப்பட்டிருந்தால் சொல்லுங்கள்!

அவர் எழுதிய மாயாவதி (1911) என்ற நாடகமும் கிடைத்தது. பிரத்யும்னன் – சம்பராசுரன் கதை. 1911க்கு நிறைய உரைநடை. அன்று வெற்றி பெற்றிருக்கலாம். பக்த மஹிமை (1920) புண்டரீகன், நாம்தேவ், கோரா கும்பார் ஆகியோர், இரண்டு பக்த சிரோன்மணிகள் (1925) மாணிக்கவாசகர், பத்ராசல ராமதாஸ் ஆகியோரின் சுருக்கமான “வரலாறு”. பாண்டவ வனவாசம் (1923), பாலகோபால லீலை என்றும் சில புத்தகங்களைப் படித்தேன்.

தஙகளைத் தாங்களே வருத்திக் கொள்ள நினைக்கும் masochist-களுக்காக – ஜடாவல்லவர், மாயாவதி இரண்டும் இணையத்தில் கிடைக்கிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் நாவல்கள்

பிரமிள் தேர்வுகள்

பிரமிளின் இந்தக் கட்டுரை 1987-இல் அரும்பு என்ற பத்திரிகையில் வந்திருக்கிறது. தி.ஜா. ஃபேஸ்புக் குழுமத்தில் பார்த்தேன். வசதிக்காக இங்கே மீள்பதித்திருக்கிறேன். அவர்களுக்கு நன்றி!


முதல் நாவல் என்று கருதப்படும் பிரதாப முதலியார் சரித்திரம், அன்றைய சமூக நிலையினைச் சிறுசிறு நிகழ்ச்சிகள் மூலம் சித்தரிக்கிறது. கமலாம்பாள் சரித்திரத்தில் வாழ்வின் துயில்நிலையிலிருந்து இரண்டு பாத்திரங்கள் ஆத்மிகமாக விழிப்படையும் பயணம் சித்தரிக்கப்படுகிறது. பத்மாவதி சரித்திரமும் பிரச்சினைகளைக் கட்டுக்கோப்பாகக் கொண்டதுதான். இவற்றில் உள்ள சம்பாஷணைத் திறனும் பாத்திரங்களும், இன்று கூட வீர்யம் குன்றாதவை.

இந்த ஆரம்பங்களை, வை.மு. கோதைநாயகி அம்மாள் போன்றவர்களின் மலிவான உணர்ச்சிக் கதைகளும் வடுவூர் துரைசாமி ஐயங்கார் போன்றோரின் ருசிகரக் கதைகளும், இரண்டு புறமும் இழுத்தன. நமது வாழ்வினையும் மனிதர்களையும் கவனிக்காமல், வெளிநாட்டு நாவல்களது தழுவல்களை நமது வாழ்வின் சித்தரிப்பாக காட்டும் அவசரத் தொடர்கதைகள் தொடர்ந்தன. பத்திரிக்கை வியாபாரத்துக்காக இதைக் கூசாமல் செய்த கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி, நமது பகைபுலத்தை உபயோகிக்கிறபோது கூட, நிகழ்ச்சிகளின் ஒழுங்கும் தர்க்கமும் வெளிநாட்டு சுவாரஸ்ய கதைகளினது தழுவல்களாகவே இருந்தன. டி.கே.சிதம்பரநாத முதலியார் இதை வெளிப்படையாகவே குறிப்பிட்டிருக்கிறார். கல்கி ஆரம்பித்த இந்த சுவாரஸ்யத் தழுவல், தமிழ்வாணனிலிருந்து சுஜாதா ஈறாகத் தொடர்ந்திருக்கிறது. பெருவாரிப் பத்திரிகையினில், இந்தத் தோரணையைக் கையாளாததுடன், இலக்கிய பூர்வமாகக் கணிக்கத் தக்க எழுத்தையும் கூட படைத்தவர்கள் தி. ஜானகிராமனும் த. ஜெயகாந்தனும்தான். இத்தகைய திறனாளிகளைப் படிப்பது, இவர்களை விட நுட்பமாக எழுதுவோரை ரசிப்பதற்கான ஒரு ஆரம்பப் பயிற்சியாகவேனும் இருக்கும்.

இடதுசாரி எழுத்தாளர்கள், தங்களது அரசியல் தீர்வைத்தான் கலைஞர்கள் யாவருமே வெளியிட வேண்டும் என்று கூப்பாடு போட ஆரம்பித்தபோது, எழுத்துலகில் மிகுந்த குழப்பம் பிறந்தது. இடதுசாரி பக்கம் தலையைத் திருப்பி, சல்யூட் அடித்தபடி நடை போடும் படைப்புகள் பிறந்தன. தொன்மையான மரபில் ஊறிய கிராம வாழ்வும் சமூக வாழ்வும், ஒரு பூர்வகுடித்தனமான சரீர வாழ்வாக மட்டும் இவர்களால் சித்திரிக்கப்பட்டுள்ளது. இதற்காக, காமம் சம்மந்தமான சில சுவாரஸ்ய அம்சங்களையும் இவர்களுள் ஓரிருவர் உபயோகித்துள்ளனர். எதையுமே பிரச்னையாக்கி ஒழுக்கத்துடன் தொடர்புபடுத்தும் மனித இயற்கைக்கூட, இவர்களுக்கு அத்துபடியாகவில்லை.

நாவலை ஒரு கலைப் படைப்பாக சிறப்பிக்கக் கூடிய மனம் சிந்தனை சார்ந்த மனமாக இருக்கவேண்டும். பாத்திரங்களது செயல்களுக்கும் முடிவுகளுக்கும் சிந்தனையே ஆதாரமாக வேண்டும். அப்போதுதான் நாவலின் பரந்த களம் அலுப்பு தராது. வெறும் சரீரப் பிரச்சினைகளைச் சார்ந்த மதிப்பீடுகள், ஒரு சில பக்கங்களுக்குள் பிசுபிசுத்துவிடும். மனித மனம் மதிப்பீடுகளை உருவாக்கி அவற்றை அநுபவத்துடன் பொருத்தி விசாரிக்கும் குணத்தைக் கொண்டது. இந்த அடிப்படையுடன், நாவலின் கட்டுக்கோப்புக்குள் முரண்படாதவாறு பாத்திரம் இயற்கையாக வளரவும் வேண்டும். இதற்காக, இயற்கையில் உள்ளதை அப்படியே போட்டோ பிடித்த மாதிரி எழுதவேண்டும் என்று கருதுவது தவறு. பார்க்கப் போனால், ஒவ்வொரு நாவலும் உலகை ஆதாரமாக கொண்டு வளர்ந்த வேறு ஒரு உலகம்தான். எனவே, ‘யதார்த்தம்’ என்பதன் பொருளை, நாவலின் கட்டுக்கோப்புக்குள் ஏற்படும் தர்க்கங்களுக்குள்தான் பார்க்க வேண்டும். இது, இன்று தங்களை விமர்சகர்கள் என்று நம்பிக்கொண்டிருக்கும் சிலருக்குப் புரியாதது, தெரியாதது.

இன்றைய தலைமுறை வாசகர்களுள் எத்தனை பேர், பொய்த்தேவு என்ற நாவலைப் படித்திருப்பார்கள் என்பது சந்தேகம். இதை எழுதியவர் க.நா. சுப்ரமண்யம். தமிழின் மிகச் சிறந்த நாவல் என்று இதைத்தான் சொல்ல வேண்டும்…

புயலிலே ஒரு தோணி, ஒரு கலவர நிலையை அதன் பின்னணியில் மட்டுமே சித்தரிக்கும் நாவல். சுஜாதா பாணியில் எழுதப்பட்ட நாவல் என்றுதான் அதைச் சொல்லவேண்டும். விசேஷமாக, ஜே.ஜே.யை மிகச் சிறப்பிப்பதற்காக வேண்டுமென்றே செய்யப்பட்ட தேர்வு இது. மிகச் சிறந்த தமிழ் நாவலை எழுதிய க.நா.சு. இந்த நாவலை நாவலே அல்ல என்று கூறியதுக்காக, க.நா.சு.வின் நாவலைக் கீழிறக்கிக் கூட இந்தக் குழு கணித்திருக்கிறது. க.நா.சு.வுடன் எனக்கும்தான் தீவிரமான அபிப்ராய வேறுபாடுகள் உள்ளன. அதற்காக, ஒரு சிறந்த நாவலைச் சிறப்பில்லாத நாவல் என்று கூறிவிட முடியுமா?

மோகமுள், தன்னளவில் ஒரு பூரணமான நாவல். தலைப்பைத் தொட்டு நிற்கும் பிரச்சினையுடன் தொடர்புள்ள வேறு பிரச்சினைகளின் கிளைகளும் அதற்கு உண்டு. ஜே.ஜே. சில குறிப்புகளில் எந்த விதப் பிரச்சினையுமே இல்லை. இடதுசாரிகளின் பார்வையை, சரியாக காட்டாமலே, அதை ஓரிரு பாத்திரங்களின் மூலம் ஆசிரியர் கிண்டல் பண்ணுகிறார். இந்தப் பாத்திரங்கள் குறுக்கு வழியில் இடதுசாரி அரசியலை உபயோகித்தமையால் இந்தக் கிண்டல். ஆனால் மதிப்பீடுகளின் யாத்திரையோ அதைப் பிரதிப்பலிக்கும் பாத்திரமோ நாவலின் இல்லாததால், இந்தக் கிண்டல் ஆழமற்ற விகடக் கச்சேரியாகவே நிற்கிறது.

உலகை ஆதாரமாகக் கொண்டு வளர்ந்த இன்னொரு உலகின் ‘யதார்த்தம்’ கூட ஜே.ஜே.யில் இல்லை. ஏனெனில், தன்னளவில் தர்க்கபூர்வமாக ஒருமை பெறாத உலகம் அது. ஜே.ஜே. என்பவன் சந்திக்கும் முதல் மனிதனாலேயே, உணர்வு நாசம் பெறுகிறான் என்கிறார் ஆசிரியர். நாவலில், அவனைச் சந்திக்கும் முக்கியப் பாத்திரம்தான் உணர்வு நாசம் பெறுகிறது. ஜே.ஜே. என்ற பாத்திரமே பிறருக்கு உணர்வு நாசம் தரும் பாத்திரம்தான். இப்படித் தன்முரணான ஒரு உலகம் தன்னளவில் யதார்த்தமானதல்ல. மேலும், ‘அவனுடைய உயிர் திராவிட உயிர் என்றாலும் தமிழ் உயிர் அல்ல’ என்ற மறைமுகமான இனவாதமும் நாவலில் உண்டு. இதை நான் விரிவாக வேறு இடங்களில் விமர்சித்துக் காட்டி உள்ளேன்.

புயலிலே ஒரு தோணி, ஒரு கலவர நிலையையும் அதனூடே தப்பி ஓடிவருவதையும் ‘டாக்குமெண்டரி’யாக, அதுவும் சுவாரஸ்யத்தை முன்னிறுத்தி எழுதப்பட்ட நாவல். பிரச்சினை என்று மதிப்பீட்டு ரீதியாக எதையும் எழுப்பாத நாவல்.

பின் இரு நாவல்களையும் விடச் சிறந்தவை என்று, கீழேவரும் நாவல்களை குறிப்பிட முடியும். (கீழுள்ள வரிசைக்கிரமத்துக்கு விசேஷ அர்த்தம் இல்லை.)

1. கமலாம்பாள் சரித்திரம்பி. ஆர். ராஜமையர்
2. பொய்த்தேவுக. நா. சுப்ரமண்யம்
3. நாகம்மாள்ஆர். ஷண்முகசுந்தரம்
4. ஒரு நாள்க. நா. சுப்ரமண்யம்
5. வாழ்ந்தவர் கெட்டால்க. நா. சுப்ரமண்யம்
6. அசுரகணம்க. நா. சுப்ரமண்யம்
7. ஜீவனாம்சம்சி.சு. செல்லப்பா
8. வாடிவாசல்சி.சு. செல்லப்பா
9. மோகமுள்தி. ஜானகிராமன்
10. புத்தம்வீடுஹெப்ஸிபா ஜேசுதாசன்
11. நிழல்கள்நகுலன்
12. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்த. ஜெயகாந்தன்

பொய்த்தேவு: சிறந்த தமிழ் நாவல். அரும்பு, மார்ச்-ஏப்ரல் 1987.

தொகுக்கப்பட்ட பக்கம்: பரிந்துரைகள்

கொங்கு நாட்டின் முதல் நாவல் – ஷண்முகசுந்தரத்தின் ‘நாகம்மாள்’ II

மறுவாசிப்பு. முதல் பகுதி இங்கே.

நாகம்மாள்
நாகம்மாள்

க.நா.சு கொடுத்த பில்டப்பால்தான் இந்தப் புத்தகத்தைத் தேடிக் கொண்டிருந்தேன். முதல் வாசிப்பில் புத்தகம் எனக்கு ஏமாற்றம் அளித்தது. க.நா.சு.வின் ரசனையும் என் ரசனையும் வேறோ என்று தோன்றியது. அப்போது எனக்குத் தோன்றியதை இப்படி சுருக்கலாம்.

ஹெப்சிபா ஜேசுதாசனின் புத்தம் வீடு, பூமணி, கி.ரா.வின் படைப்புகள், ஜோ டி க்ரூசின் ஆழிசூழ் உலகு என்று இஇதை விட நல்ல வட்டார இலக்கியம் நிறைய வந்துவிட்டன. ஒரு வேளை க.நா.சு. இப்படிப்பட்ட தமிழில் இப்படிப்பட்ட genre-இல் எழுதப்பட்ட முதல் புத்தகம், முன்னோடி நாவல் (1942-இல் வெளி வந்த புத்தகமாம்) என்று பூரித்துப் போய்விட்டாரோ என்னமோ. புத்தகம் உண்மையான மனிதர்களை, உண்மையான சூழ்நிலைகளை சித்தரிக்கிறதுதான். ஆனால் சுவாரசியமான முடிச்சுகள், ஒரு புதிய உலகம், மனிதர்களைப் பற்றிய insights என்று எதுவுமே இல்லை.

இன்று நாவலை மீண்டும் படிக்கும்போது மிகக் கச்சிதமாக எழுதப்பட்ட நாவல் என்று புரிகிறது. (ஆசிரியரின் குரல் அங்கங்கே இருந்தாலும் கூட). விடை இல்லாத கேள்விகள் புத்தகத்தை சுவாரசியப்படுத்துகின்றன. நாகம்மாள் உண்மையில் விரும்பியது என்ன? சின்னய்யனின் இறப்பையா? அவளுக்கு ராமாயி கணவனோடு வாழ்வது கண்டு பொறாமையா? முதலில் சின்னையன் இறந்துவிட்டானா? அவளுக்கு கெட்டியப்பன் மேல் ஈர்ப்பு இருக்கிறதா இல்லையா? காட்டிலும் மேட்டிலும் யாரும் அறியாமல் சந்தித்துக் கொண்டே இருப்பது எங்கே கொண்டு போகும் என்று அறியாமலா இருப்பாள்? ஊர் என்ன பேசும் என்று உணராமலா இருப்பாள்?

ஆனால் புத்தகம் பாதியில் முடிந்துவிட்டது போலத்தான் உணர்ந்தேன். விடை இல்லாத கேள்விகள் என்பதெல்லாம் சரிதான், ஆனால் இன்னும் கொஞ்ச தூரமாவது போயிருக்க வேண்டும் என்று தோன்றியது.

எனக்கு அரைகுறையாகத் தெரிந்தாலும் சிறப்பான வட்டார நாவல்தான். ராஜம் ஐயரோடும் மாதவையாவோடும் தேங்கிப் போயிருந்த தமிழ் நாவல் உலகத்தை அடுத்த நிலைக்கு இவர்தான் கொண்டு போயிருக்க வேண்டும். இன்றும் படிக்கக் கூடிய, காலாவதி ஆகாத, எதார்த்தவாத நாவல். அவர் காட்டுவது கொங்கு நாட்டு கிராம சூழ்நிலையில் தன் உரிமையைக் காப்பாற்றிக் கொள்ள நினைக்கும் தைரியமான பெண்ணை. அவளுக்கு நேர் எதிர் குணாதிசய்ம் கொண்டவள் அவள் கொழுந்தன் மனைவி ராமாயி – அடங்கி ஒடுங்கிப் போகும் ‘குடும்பப் பெண்’. ராமாயி மூத்தவள் மீது கசப்போடு அடிபணிந்து போவது சிறப்பான சித்திரம். சின்னச் சின்ன பாத்திரங்கள் – சின்னையனை வீட்டோடு மாப்பிள்ளை ஆக்கிக் கொள்ள விரும்பும் மாமியார், சண்டியர் கெட்டியப்பன், முன்விரோதம் பாராட்டும் மணியக்காரர், அவரின் உதவியாளர் – மிகக் கச்சிதமாக செதுக்கப்பட்டிருக்கின்றன.

எனக்கு புத்தகம் இன்னும் நீண்டிருக்க வேண்டும்தான். மனக்குறை இருந்தாலும் என் எண்ணம் மாறிவிட்டது என்பதைப் பதிவு செய்கிறேன். இன்னும் சிறப்பான வட்டார நாவல்கள் வந்திருக்கலாம், ஆனால் இந்த நாவல் காலாவதி ஆகிவிடவில்லை. இன்னும் பல வருஷம் உயிரோடு இருக்கும் முன்னோடி நாவல் என்றே இப்போது கருதுகிறேன். கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன். இப்போது காலச்சுவடு பதிப்பு ஒன்று இருக்கிறதாம்.

முந்தைய பகுதி

தொகுக்கப்பட்ட பக்கம்: ஷண்முகசுந்தரம் பக்கம்

தொடர்புடைய பதிவுகள்: நாகம்மாள் பற்றி பலர்

கொங்கு நாட்டின் முதல் நாவல் – ஷண்முகசுந்தரத்தின் ‘நாகம்மாள்’

நாகம்மாள்
நாகம்மாள்
கிட்டத்தட்ட முப்பது வருஷங்களுக்கு முன்னால் இந்த புத்தகத்தைப் பற்றி முதல் முறையாக கேள்விப்பட்டேன். க.நா.சு.வின் படித்திருக்கிறீர்களா? புத்தகத்தில் என்னை மிகவும் கவர்ந்த அறிமுகங்கள் இரண்டு – ஒன்று சிதம்பர சுப்ரமணியத்தின் இதயநாதம், இன்னொன்று இது. புத்தகம் எங்கும் கிடைப்பதில்லை. புத்தகம் கிடைப்பது பத்து வருஷத்துக்கு முன்னால் குதிரைக் கொம்புதான். பல வருஷமாகத் தேடியதை நண்பர் ராஜன் இரவல் கொடுத்து புண்ணியம் கட்டிக் கொண்டார். இப்போது காலச்சுவடு ஒரு பதிப்பைக் கொண்டு வந்திருக்கிறது.

முதல் வாசிப்பில் புத்தகம் எனக்கு ஏமாற்றம் அளித்தது. க.நா.சு.வின் பில்டப் என் எதிர்பார்ப்புகளை மிக அதிகமாக்கிவிட்டதோ என்னவோ. ஆனால் வாங்கி என் நூலகத்தில் வைத்துக் கொள்ள வேண்டிய புத்தகம் என்பதில் எனக்கு அப்போதே எந்த சந்தேகமும் இல்லை. இந்த முறை நூலகம் சென்றபோது தற்செயலாக கண்ணில் பட்டது. மறுபடியும் படித்துப் பார்ப்போம் என்று கொண்டு வந்தேன்.

எதற்காக மறுவாசிப்பு? முதல் காரணம், முக்கிய காரணம் இந்த முறை எந்த எதிர்பார்ப்பும் இல்லை என்பதால்.

இரண்டாவது காரணம் பல நல்ல வாசகர்கள் பரிந்துரைப்பதால். அந்தப் பரிந்துரைகளை கீழே தொகுத்திருக்கிறேன். என் கருத்தை அடுத்த பதிவில் எழுத உத்தேசம்.

க.நா.சு.வைப் பற்றி ஏற்கனவெ சொல்லி இருந்தேன். மீண்டும் மீண்டும் இந்த நாவலைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறார். அவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தபோது ஷண்முகசுந்தரமே ஹாஸ்டல் ஹாஸ்டலாக சுற்றி இந்த நாவலை விற்றிருக்கிறாராம், க.நா.சு. அவரிடமிருந்தே நேரடியாக வாங்கி இருக்கிறார். (இப்போது திடீர் குழப்பம், அப்படி விற்றது சங்கரராமோ? விற்கப்பட்டது மண்ணாசை நாவலோ? நினைவிருப்பவர்கள் நான் தவறாக எழுதி இருந்தால் திருத்துங்கள்!)

முற்றம் இலக்கிய கூட்டத்தில் சுந்தர ராமசாமி நிகழ்த்திய உரையின் ஒரு பகுதி (உபயம்: நண்பர் கேசவமணி). அக்டோபர் 2012 காலச்சுவடில் வெளியாகி உள்ளது. (யாருக்காவது சுட்டி கிடைத்தால் கொடுங்கள்!)

…1940களின் தொடக்கத்தில் ஷண்முகசுந்தரம் எழுதிய நாகம்மாள் ஒரு குறுநாவல். அதில் நாகம்மாள் என்று ஒரு கேரக்டர். பலர் படித்திருக்கலாம். கிராமத்தைச் சேர்ந்த அம்மா. அவர்தான் நாவலில் மையத்தில் இருக்கிறார். ஒரு படைப்பின் மையத்தில் எவ்வளவோ பேர் இருந்திருக்கிறார்கள். ராமன் இருந்திருக்கிறான். கிருஷ்ணன் இருந்திருக்கிறான். துரியோதனன் இருந்திருக்கிறான். அர்ஜுனன் இருந்திருக்கிறான். மிக உன்னதமான புருஷர்களெல்லாம் படைப்பின் மையத்தில் இருந்திருக்கிறார்கள். முதன்முதலாகச் சமுதாயத்திலிருக்கக்கூடிய ஒழுக்கம், அமுக்கக்கூடிய விஷயம் இவற்றை எல்லாம் ஏற்றுக் கொள்ளாத, மீறிப் போகக்கூடிய தன்னிச்சையான, தனக்காகவே சுதந்திரத்தை வரவழைத்துக் கொண்ட, என்னுடைய வாழ்க்கையை நான்தான் தீர்மானிப்பேன், நீ என்ன சொன்னாலும் நான் கவலைப்படமாட்டேன் என்னும் இயல்பு கொண்ட ஒரு பாத்திரம் – அதிலும் ஒரு பெண் பாத்திரம் – அந்த நாவலுடைய மையத்துக்கு வருகிறார். அந்த மாதிரி ஒரு நபர் வந்து ஊரிலிருந்தால் ‘ஒரு மாதிரியான கேஸ்’ என்று ஒதுக்கிவிடுவார்கள். ஊரில் அவரைப் பற்றி மற்றவர்கள் சொல்லக்கூடிய அபிப்பிராயம். அபிப்பிராயம் என்பதைவிட ஒரு விமர்சனம் – எதிர்மறையான விமர்சனம் – இவர் மோசமான ஆத்மா, நல்ல ஆத்மா இல்லை என்று தொடர்ந்து திரும்பத் திரும்பச் சொல்லிச் சொல்லி அந்த விமர்சனத்தையே அவர் தலை மேல் வைத்துக் கட்டி அந்த விமர்சனத்துடைய ஒரு வடிவமாகவே பார்க்கக்கூடியது சமூகத்தில் ஒரு பழக்கமாகப் போய்விட்டது. நாவலுக்குள் வரக்கூடிய சமயத்தில் என்ன ஏற்படுகிறது என்று பாருங்கள்.

நாவல் ஆசிரியர் இந்தப் பார்வையைத் தலைகீழாக மாற்றிப் போடுகிறார். அவர் அந்த நாவலை எழுத வந்ததற்கான காரணம் இவர் கூறுகெட்ட அம்மாவென்று சொல்வதற்கு அல்ல. இந்தக் கூறுகெட்ட அம்மாவுக்கும் கூறுள்ள அம்மாக்களுக்கும் நிறைய ஒற்றுமை இருக்கிறதென்று சொல்கிறார். எந்த அம்மாக்களெல்லாம் உயர்வானவர்களென்று நினைத்துக் கொண்டு இருக்கிறீர்களோ அவர்களது மனிதத்தன்மை, அவர்களிடம் இருக்கக்கூடிய காதல், உறவுமுறை, திறமை, கெட்டிக்காரத்தனம், மனிதப் பண்பு எல்லாமே இவரிடமும் இருக்கிறது. இத்தனை விஷயங்கள் இருக்கும் சமயத்தில் இந்த ஒரு விஷயத்தை மட்டும் சொல்லிக் கொண்டிருக்கிறீர்களே என்று அந்தப் பார்வையைத் திருப்பிப் போடுகிறார். பார்வையைத் திருப்பிப் போடுவதன் மூலம் உன்னதமான நாவல் என்று நீங்கள் சொல்வதோடு விஷயம் முடிந்துவிடவில்லை. ஓரம் கட்டப்பட்ட அம்மாக்கள் சமூகத்தில் மையத்துக்கு வந்துவிடுகிறார்கள். சமூகத்தோடு ஓரத்திலிருந்தவர் தட்டிக் கேட்கலாம், தட்டிக் கேட்பவர் ஆபீசுக்குள் உட்கார்ந்துவிட்டார். தட்டிக் கேட்பவர் கலெக்டராக வந்துவிட்டார். தட்டிக் கேட்பவர் ஆசிரியராக வந்துவிட்டார். யாருடைய பார்வை மாற்றம் அடைந்ததால் வந்தாங்க? அந்த ஆணித்தரமான, அடிப்படையான ஒரு வாதத்தை முன்வைத்து வாழ்க்கை சார்ந்த ஒரு தர்க்கத்தை முன்வைத்து இந்தப் பார்வையை மாற்றியது யாரு?

நாவல் ஆசிரியர்தான் அந்தப் பார்வையை மாற்றினார். உலகம் முழுவதும் மனிதருடைய பார்வையை அடிப்படையாக மாற்றியதில் நாவல் ஆசிரியர்கள் மிகப் பெரிய பங்கு வகிக்கின்றனர்….

ஜெயமோகன் தன் சிறந்த தமிழ் நாவல்களின் seminal பட்டியலில் நாகம்மாளை வைக்கிறார். வார்த்தைகளில் நாகம்மாள்:

தமிழ் இயல்புவாத (நாச்சுரலிச) நாவல்களுக்கு முன்னோடியான (குறு)நாவல். நாகம்மாள் ‘கெட்டி எலும்புள்ள’ கிராமத்து விதவை. அவளுடைய காதல் கொலையில் முடிகிறது. கிராமத்து ‘இட்டேறிகளை’, கானல் பறக்கும் கரிசல் மண்ணை, ராகம் போடும் கொங்கு மொழியை ஆசிரியர் தன்னைப் பின் தொடர்ந்தவர்களை விட சிறப்பாகவே அளித்திருக்கிறார்.

எஸ். ராமகிருஷ்ணனும் இதை நூறு சிறந்த தமிழ் நாவல்களில் ஒன்றாக குறிப்பிடுகிறார்.

சாரு நிவேதிதா தினமணியில் பழுப்பு நிறப் பக்கங்கள் என்ற ஒரு தொடரை எழுதினார். அதிலும் ஷண்முகசுந்தரத்தையும் நாகம்மாளையும் பற்றி எழுதிய நினைவு இருக்கிறது. இப்போது இணையத்தில் சுட்டி கிடைக்க மாட்டேன் என்கிறது. நினைவிருப்பவர்கள் சொல்லுங்கள், சுட்டி கொடுத்தால் இன்னும் உத்தமம்.

என் ரசனையோடு பெரிதும் ஒத்துப் போகும் கேசவமணியின் வார்த்தைகளில்:

நாவலை படிக்க ஆரம்பித்தவுடன் நம் மனதில் எழும் முதல் கேள்வி, ‘நாவலாசிரியர் ஏன் இடையிடையே பேசுகிறார்?’ என்பதுதான். அவர் பேசுவது ஒரு குறையே. நாவல் எளிமையான நடையில் செல்கிறது. கிராமத்து வாழ்க்கை நம் கண்முன் சிறப்பாகவே விரிகிறது. நாகம்மாள், சின்னப்பன், ராமாயி, கெட்டியப்பன் ஆகிய பத்திரங்கள் தத்தம் குணங்களோடு சித்தரிக்கபட்டிருக்கிறார்கள். எல்லாருக்குமே அவரவர்களுக்கு என்று தனித்தனி ஆசைகள் உள்ளன. சுயநலம் என்று கூட சொல்லலாம். அதுவே நாவலின் கருவாகவும் உள்ளது. கணவனை இழந்த நாகம்மாள் தன் கணவனின் தம்பி கெட்டியப்பனுடன் சேர்ந்து வாழ்கிறாள். கெட்டியப்பன் மனைவி ராமாயிக்கும் நாகம்மாவை பிடிப்பதில்லை. நாகம்மாவின் அதிகாரம், ராமாயின் சுயகௌரவத்தை பாதிக்கிறது. மணியக்காரருக்கு நாகம்மாவின் கணவன் மேல் கோபம் இருக்கிறது. கெட்டியப்பனுக்கும் அதே கோபம் இருக்கிறது. ராமாயின் அம்மா காளியம்மாவுக்கு, தன் மகள் மருமகனை தன்னுடன் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை. இப்படி ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் சுயநலத்திற்காக, நாகம்மாவுக்கும் சின்னப்பனுக்கும் இடையேயான பிரச்சினையை பயன்படுத்தி கொள்கிறார்கள்.

அதன் விளைவாக என்ன ஆகிறது என்பதுதான் கதை. ஆசிரியர் சரளமாக கதையை நகர்த்திச் செல்கிறார். ஆனால் கதை அதன் கடைசி முடிவை நோக்கி நகரும் ஒற்றைப்படைத் தன்மை கொண்டதாக உள்ளது. இது சிறுகதைக்கான ஒரு அம்சம். கடைசியில் கதையும் சடாரென ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறது. கடைசியில் நடந்துவிட்ட விபரீதம், நாகம்மாள் சம்மதத்துடன் நடந்ததா என்பதை ஆசிரியர் நம் ஊகத்திற்கே விட்டுவிடுகிறார். ஆசிரியர் பாஷையில் சொல்வதென்றால், ‘நாகம்மாளும் அதைத்தான் விரும்பினாளா என்பது நமக்கு தெரியவில்லை’.

ஒவ்வோர் சமயம் கோபம், மற்றோர் சமயம் கனிவு என்பதாகவே நாகம்மாள் மற்றும் சின்னப்பனின் மனவோட்டங்கள் சொல்லபடுகிறது. என்ன இருந்தாலும் அவர்களும் மனிதர்கள்தானே என்று ஆசிரியர் காட்டுகிறார். கதை முடிவிலும் அதையே நாம் எடுத்துகொள்ளலாம்.

இந்த நாவலின் விவாத தளம் எது என்று பார்க்கும்போது, பெண்களுக்கு சொத்தில் பங்கு உண்டா இல்லையா என்பதை இந்நாவல் சொல்ல வருகிறது. ஆனால் அது முழுமையாக விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளவில்லை. இருந்தும் வாசகன் மனதில் அது பற்றிய ஒரு கேள்வியை எழுப்புகிறது. இன்றும் கூட அது பற்றி சமூகத்தில் இரண்டு விதமான பார்வை இருப்பதை நாம் பார்க்கிறோம்.

நாகம்மாள் எளிமையான ஒரு குறுநாவல். நாவலுக்குண்டான அம்சங்கள் அதில் குறைவு. அலங்காரமான வார்த்தைகளோ, ஆர்பாட்டமான உத்திகளோ எதுவும் இல்லாத ஒரு குறுநாவல். படித்து முடித்ததும், பசுமையான சோலையில், கிராமத்தில், சில்லென்ற காற்றின் இதத்தில், மோருடன் சேர்ந்து பழைய சோறு சாப்பிட்ட உணர்வு ஏற்படுகிறது. கூடவே கடித்துக் கொள்ள மிளகாயும் உண்டு.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஷண்முகசுந்தரம் பக்கம்

தொடர்புடைய சுட்டி: ஆம்னிபஸ் விமர்சனம்