க. நா. சு.: படித்திருக்கிறீர்களா?

மீள்பதிவு, ஒரிஜினல் பதிவு இங்கே. அதுவே கூட்டாஞ்சோறு தளத்திலிருந்து மீள்பதித்ததுதான். மீள்பதிக்க காரணம் அழிசி பதிப்பகம் இந்தப் புத்தகத்தை மீண்டும் கொண்டு வருவதுதான். அழிசி ஸ்ரீனிவாச கோபாலனுக்கு ஒரு ஜே!

ஃபேஸ்புக்கிலிருந்து:

புதிய வெளியீடு
படித்திருக்கிறீர்களா? (தொகுதி 1)
க. நா. சுப்ரமண்யம்
‘சுதேசமித்திரன்’ வாரப் பதிப்பில் வெளியான கட்டுரைத் தொடர் ‘படித்திருக்கிறீர்களா?’ மூன்று தொகுதிகளாக நூல் வடிவம் பெற்றுள்ளன. இது முதல் தொகுதியின் மறுபதிப்பு. இரண்டாவது தொகுதியின் மறுபதிப்பும் விரைவில் வெளியாகும்.
*
‘தமிழ் விக்கி’ இணையக் கலைக்களஞ்சியத்திலிருந்து…
க. நா. சுப்ரமணியத்தின் புகழ்பெற்ற ‘படித்திருக்கிறீர்களா?’ என்னும் நூல் பரிந்துரைப் பட்டியல் சுதேசமித்திரன் வாரப் பதிப்பில் வந்த தொடர். அது க. நா. சுப்ரமணியம் முன்வைத்த அறிவியக்கத்திற்குத் தொடக்கமாக அமைந்தது. அந்தப் பரிந்துரைப் பட்டியலை ஒட்டி ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக தமிழில் ஆதரவும் எதிர்ப்புமாக விவாதங்கள் நிகழ்ந்துள்ளன. அந்நூல் தமிழில் ஒரு மூலநூல்தொகை (Modern Tamil Canon) ஒன்றை உருவாக்கும் முயற்சி. அப்பட்டியலை தொடர்ந்து தன் வாழ்நாள் முழுக்க க.நா.சுப்ரமணியம் விரிவாக்கிக் கொண்டே இருந்தார். அதில் அவர் புதிய படைப்பாளிகளைச் சேர்த்தார், பழையவர்கள் சிலரை தவிர்த்தார். அவர் பரிந்துரைத்தவர் களில் ஷண்முகசுப்பையா, அநுத்தமா போன்ற சிலர் பின்னாட்களில் அவருடைய வழிவந்த விமர்சகர்களாலும் அவரை ஏற்கும் வாசகர் களாலும்கூட ஏற்கப்படாது மறைந்தனர். அவரால் முதன்மைப் படுத்தப்பட்ட ஆர். ஷண்முகசுந்தரம் போன்ற சிலர் அவர் அளித்த இடத்தை அடையவில்லை. அவர் பொருட்படுத்தாத ப. சிங்காரம் போன்றவர்கள் பின்னாளில் அவருடைய வழிவந்த விமர்சகர் களாலேயே முதன்மையான இடத்தில் வைக்கப்பட்டனர். ஆனால் இந்த மாறுபாடுகளை கடந்து க. நா. சுப்ரமணியம் உருவகித்த அந்த மூலநூல்தொகையே நவீனத் தமிழிலக்கியத்தின் மையத்தொகுதி என இன்றும் மறுக்கப்படாமல் நிலைகொள்கிறது.
*
படித்திருக்கிறீர்களா? (தொகுதி 1)
க. நா. சுப்ரமண்யம்
விலை ரூ.170
தொடர்புக்கு: 70194-26274

(மேம்படுத்தப்பட்ட மீள்பதிவு, ஒரிஜினல் பதிவு இங்கே.)

க.நா.சு.வின் இந்தப் பட்டியல் எனக்கு தனிப்பட்ட முறையில் மிக முக்கியமானது. Eye opener. தமிழ் புனைவுலகு டைம் பாஸ் மட்டுமே அல்ல, விகடன்/குமுதம், சுஜாதா/சாண்டில்யன்/பொ. செல்வன் மட்டுமே அல்ல, மிகச் சிறந்த படைப்புகள் நிறைய உண்டு, அவற்றை பற்றி பேசவும் எழுதவும் ஆட்கள் இருக்கிறார்கள் என்று இதை படிப்பதற்கு முன் எனக்கு தெளிவாக தெரியாது. ஏதோ நாலைந்து நல்ல எழுத்தாளர்கள்/புத்தகங்கள் இருக்கலாம் என்றுதான் நினைத்திருந்தேன். தமிழில் நல்ல எழுத்துகளுக்கான என் தேடலுக்கு வழி காட்டிய முதல் புத்தகம் இதுதான். இந்தப் புத்தகத்தை வாங்கி அடுத்த ஒரு மணி நேரத்தில் படித்தபோது கிடைத்த மகிழ்ச்சிக்கு ஈடாக திலீப்குமாரின் புத்தகக் கடையை கண்டுபிடித்தபோது கிடைத்த மகிழ்ச்சி, ஜெயமோகனை முதல் முறை சந்தித்தபோது கிடைத்த மகிழ்ச்சியைத்தான் சொல்லலாம்.

செகந்தராபாதில் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் அந்த காலத்தில் வருஷா வருஷம் ஒரு தமிழ் புத்தக கண்காட்சி நடத்துவார். அங்கே இதை வாங்கிவிட்டு வராந்தாவிலேயே படித்ததும், இதில் உள்ள புத்தகம் எல்லாம் வருவதில்லை என்று அவர் சொன்னதும் ஏமாற்றத்துடன் திரும்பியதும் நினைவிருக்கிறது. எஸ்.வி.வி. எழுதிய உல்லாச வேளை மட்டும் அப்போது கிடைத்தது.

தன் ரசனையின் அடிப்படையில், தனக்கு பிடித்த புத்தகங்களை பற்றி இங்கே க.நா.சுப்ரமண்யம் அலசுகிறார். நான் தமிழில் இதற்கு முன் சமகால தமிழ் படைப்புகளைப் பற்றி பேசும் வேறு புத்தகங்களை படித்ததில்லை. நற்றிணை, நல்ல குறுந்தொகை, ஐங்குறுநூறு, ஒத்த பதிற்றுப்பத்து, ஓங்கு பரிபாடல் மாதிரி இலக்கியங்கள் பற்றி நிறைய கிடைக்கும், ஆனால் அதை எல்லாம் எவன் படிப்பது என்றுதான் அன்று தோன்றியது. இன்று இவற்றைப் படிக்கும் முதிர்ச்சி வந்திருக்கிறது, ஆனால் இன்றும் அவற்றை நேரடியாகப் படிப்பதைத்தான் விரும்புகிறேன், கோனார் நோட்ஸ்களை அல்ல.

க.நா.சு.வின் அணுகுமுறை எனக்கு மிகவும் இசைவானதுதான். ஆனால் அவர் ரசனைக்கும் எனது ரசனைக்கும் ஒத்துப் போகவில்லை என்பது பெரிய நகைமுரண். க.நா.சு.வின் பட்டியலில் அனேகமானவை எனக்கு சாதாரணப் புத்தகங்களாகத் தெரிகின்றன. சில சமயம் க.நா.சு. போன்ற ஜாம்பவான் இதை எப்படிய்யா பரிந்துரைத்தார் என்று வியக்கிறேன். ஜெயமோகன் சட்டகங்களை வகுத்து வரையறைகளை செதுக்கி இந்தப் புத்தகம் இந்தப் பாணி இப்படிப் படிக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லும்போது புத்தகத்தைப் படிக்க வேண்டும் அதற்கு என்ன இத்தனை சட்டதிட்டம் என்று தோன்றும். ஆனால் அவர் எனக்கு ஒரு புத்தகம் பிடித்திருக்கிறது என்று சொன்னால் அனேகமாக எனக்கும் பிடித்திருக்கும். இது அடுத்த நகைமுரண்!

அதாவது க.நா.சு.வின் அணுகுமுறையைத்தான் என்னால் ஏற்க முடிகிறது. ஆனால் ஜெயமோகனின் ரசனைதான் எனக்கு ஒத்து வருகிறது. 🙂

இந்த புத்தகத்தின் முதல் பதிப்பு 1957-இல் வந்தது. அதற்கு முன் வந்த புத்தகங்களை பற்றித்தான் அவர் இங்கே எழுதி இருக்க முடியும். Obviously. விலை என்ன தெரியுமா? இரண்டே முக்கால் ரூபாய்!

ஜெயமோகன் ஒரு பின்னோட்டத்தில் சொன்னார்.

அவர் (க.நா.சு.) போட்டு 30 வருடம் புழங்கிய பட்டியல்தான் படித்திருக்கிறீர்களா? இன்றும் தமிழில் புழங்கும் தரவரிசை அதில் உருவாகி வந்ததே. அதற்காக கநாசு 30 வருடம் வசைபாடப்பட்டார். வசை தாங்க முடியாமல் சென்னையை விட்டே ஓடி டெல்லியில் தஞ்சம் புகுந்தார்.

க.நா.சு. போட்டதுதான் முதல் பட்டியல் போலிருக்கிறது. இதற்கு வசை பாடப்பட்டாரா? என்ன மக்களோ!

க.நா.சு.வின் பட்டியல் கீழே. இவற்றில் சில இன்னும் கிடைக்கவில்லை, ரசனை வேறுபட்டிருக்கிறது என்று தெரிந்தாலும் இன்னும் தேடுவதை நானும் நிறுத்தவில்லை.

  • புதுமைப்பித்தனின் காஞ்சனைபுதிய கூண்டு, கடவுளும் கந்தசாமி பிள்ளையும், சுப்பையா பிள்ளையின் காதல்கள், செல்லம்மாள், சாப விமோசனம் ஆகிய கதைகள் உலகத்தின் சிறந்த சிறுகதைகள் என்று தொகுத்தால் கூட போடலாம். சுப்பையா பிள்ளையின் காதல்கள் ஜேம்ஸ் தர்பர் எழுதிய Secret Life of Walter Mitty என்ற அருமையான கதையை நினைவுபடுத்தலாம். தர்பர் கதையை படித்துவிட்டு புதுமைப்பித்தன் எழுதினாரா என்று எனக்கு தெரியாது. ஆனால் அப்படியே எழுதி இருந்தாலும் கூட இது ஒரு அற்புதமான கதை என்பதில் எந்த மாற்றமும் இல்லை. காஞ்சனைதான் தமிழின் முதல் பேய்க்கதையாம். க.நா.சு. இந்தச் சிறுகதை தொகுப்பை பற்றி எழுதியதை இங்கே முழுமையாகப் படிக்கலாம். புதுமைப்பித்தனே எழுதிய முன்னுரை இங்கே. என் ரசனைக்கு ஒத்துப் போகும் க.நா.சு. தேர்வு.
  • தீபனின் அரும்பிய முல்லை – நான் படித்ததில்லை. தீபன் டி.கே.சி.யின் புதல்வர். அவர் எழுதிய கதை, கவிதை, விமர்சனம், கடிதங்களிலிருந்து சில பகுதிகள் இந்தப் புத்தகத்தில் தொகுக்கப்பட்டிருக்கின்றன. யாராவது படித்திருந்தால் இதைப் பற்றி எழுதுங்களேன்!
  • சிதம்பர சுப்ரமணியனின் இதயநாதம் – இந்த புத்தகம் பற்றி க.நா.சு. எழுதியதை படித்த பின்னர் இது கிடைக்காதா என்று பெரிய ஏக்கமே இருந்தது. நண்பர் ராஜனிடம் இந்தப் புத்தகமும் மண்ணில் தெரியுது வானம் என்ற புத்தகமும் கிடைத்தது. ஆனால் படித்தபோது இது ஒரு சுமாரான நாவல் என்றுதான் எண்ணினேன். ஏன் இதைப் பரிந்துரைத்தார் என்று யோசிக்க வைத்தது. படிக்கலாம், ஆனால் படித்தே ஆக வேண்டிய நாவல் இல்லை.
  • எஸ். வையாபுரிப் பிள்ளையின் தமிழ் சுடர்மணிகள் – நல்ல புத்தகம், நானும் பரிந்துரைக்கிறேன். பிள்ளையைப் பற்றிய சில பதிவுகள் இங்கே, இங்கே மற்றும் இங்கே.
  • லா.ச.ரா.வின் ஜனனி – நல்ல சிறுகதைத் தொகுப்பு, ஆனால் என் கண்ணில் இதை விட சிறந்த புத்தகங்களை லா.ச.ரா. எழுதி இருக்கிறார். பாற்கடல், புத்ர, அபிதா, சிந்தாநதி, இதழ்கள்… லா.ச.ரா.வின் எழுத்துகள் எப்போதுமே உணர்ச்சி பிரவாகம், இதுவும் அப்படித்தான். கண்ணாடியில் பிம்பம் விழும் ஓசை என்று அவர் எழுதிய ஒரு வரி மிக பிரபலம். நல்ல வரியும் கூட. பூப்பூக்கும் ஓசை பாட்டின் வரிகள் மாதிரி இல்லை?
  • எஸ்.வி.வி.யின் உல்லாச வேளை – அந்தக் காலத்தில் படித்தபோது எஸ்.வி.வி. கலக்கிவிட்டார் என்று தோன்றியது. நகர்ப்புற, மேல் மத்திய தர வர்க்க, பிராமண milieu. படிக்க உண்மையிலேயே உல்லாசமாக இருந்தது. “படித்திருக்கிறீர்களா” பட்டியலைப் பார்த்துவிட்டு அதே புத்தகக் கண்காட்சியில் தேடியபோது கிடைத்து ஒரே புத்தகம் இதுதான். கல்கியின் நகைச்சுவை மாதிரி இருந்தது. ஆனால் 15-20 வருஷம் கழிந்த பிறகு மீள்வாசிப்பில் வெறும் fluff என்று தோன்றியது. அப்போதே அவரது ராமமூர்த்தி போன்ற பிற புத்தகங்கள் எனக்கு ரசிக்கவில்லை. என் கண்ணில் இதற்கு இன்றைக்கு ஒரு curiosity value மட்டுமே.
  • வ.வே.சு. ஐயரின் மங்கையர்க்கரசியின் காதல் – நான் முழு புத்தகத்தையும் படித்ததில்லை. ஆனால் இதில் வரும் குளத்தங்கரை அரசமரம் நல்ல சிறுகதை, தமிழின் முதல் சிறுகதை என்று பரவலாகக் கருதப்படுகிறது. மங்கையர்க்கரசியின் காதல் சிறுகதையை இங்கே படிக்கலாம்.
  • யதுகிரி அம்மாளின் பாரதி நினைவுகள் யதுகிரி அம்மாள் பாரதியாரின் நண்பர் (மண்டயம் திருமலாச்சாரியார்) ஒருவரின் மகள். பாண்டிச்சேரியில் சிறுமியாக இருந்தபோது பாரதியாரை அருகில் இருந்து பார்த்தவர். மிகைப்படுத்துதல் எதுவும் இல்லாத, மிக உண்மையான அவதானிப்புகள். என் ரசனைக்கு ஒத்துப் போகும் க.நா.சு.வின் தேர்வு.
  • வ.ரா.வின் நடைச்சித்திரம் – வாழ்க்கையில் உள்ள மனிதர்களை பற்றி ஒன்றிரண்டு பக்கங்களில் நன்றாக எழுதி இருப்பார். போஸ்ட்மன் பொன்னம்பலம், காய்கறிக்காரி அம்மாக்கண்ணு, தமிழ் வாத்தியார் முத்துசாமி என்று இருக்கும். சின்ன வயதில் படித்திருக்கிறேன். மீள்வாசிப்பிலும் பிடித்திருந்தது. என் ரசனைக்கு ஒத்துப் போகும் க.நா.சு.வின் தேர்வு.
  • சங்கரராமின் மண்ணாசை – படித்ததில்லை. படிக்க வேண்டும் என்று க.நா.சு. ஏக்கப்பட வைக்கிறார். யாராவது படித்திருந்தால் இதைப் பற்றி எழுதுங்களேன்!
  • ஏ.கே. செட்டியாரின் உலகம் சுற்றும் தமிழன் – நல்ல தேர்வு.
  • தி. ஜானகிராமனின் கொட்டுமேளம் – சிறுகதை தொகுப்பு. இதுவும் நண்பர் ராஜனிடம் கிடைத்தது. அதைப் பற்றிய பதிவு இங்கே. சிலிர்ப்பு அருமையான சிறுகதை. பசி ஆறிற்று, தவம் என்ற இன்னும் இரண்டு சிறுகதைகளும் குறிப்பிட வேண்டியவை. எந்த சிறுகதையும் சோடை போகவில்லை.
  • மு.வ.வின் கரித்துண்டு. மறைந்த நண்பர் சேதுராமன் அனுப்பிய புத்தகம். மு.வ.வின் நாவல்கள் எனக்கு அவ்வளவாக பிடிப்பதில்லை. ஆனால் இது பிடித்திருந்தது. ஆனால் இது எல்லாருக்குமான நாவல் அல்ல. தமிழின் சிறந்த நாவல்கள் என்று நான் ஒரு பட்டியல் போட்டால் அதில் வராது.
  • தி.ஜ.ர.வின் பொழுதுபோக்கு – படித்ததில்லை. யாராவது படித்திருந்தால் இதைப் பற்றி எழுதுங்களேன்!
  • டி.எஸ்.எஸ். ராஜனின் நினைவு அலைகள்/. நானும் பரிந்துரைக்கும் புத்தகம். விரிவாக இங்கே.
  • ஆர். ஷண்முகசுந்தரத்தின் நாகம்மாள் -க.நா.சு.வின் விவரிப்பு படிக்க வேண்டும் என்று ஏக்கப்பட வைத்தது. ஆனால் முதல் வாசிப்பு எனக்கு ஏமாற்றம் தந்தது. க.நா.சு. கொடுத்த பில்டப் அளவுக்கு புத்தகம் இல்லை என்று நினைத்தேன். மறுவாசிப்பில் எனது வாசிப்பின் குறைகள் தெரிந்தன, நல்ல புத்தகம் என்று நினைத்தேன்.
  • கு. அழகிரிசாமி கதைகள்அழகிரிசாமி அற்புதமான எழுத்தாளர். மேலே வார்த்தைகளை வளர்த்துவானேன்?
  • அ. சுப்ரமணிய பாரதியாரின் ஜடாவல்லவர் இந்தப் புத்தகம்தான் எங்கள் ரசனை வேறுபாட்டை சந்தேகம் இல்லாமல் காட்டுகிறது. இதெல்லாம் ஒரு புத்தகம், இதை க.நா.சு. பரிந்துரைக்கிறார் என்ற வியப்பு அடங்கவே இல்லை.
  • கல்கியின் சங்கீத யோகம் – தமிழிசை இயக்கம் பற்றி கல்கி எழுதியவை. படித்ததில்லை. க.நா.சு.வின் முழுக் கட்டுரையும் இங்கே.
  • பாரதிதாசன் கவிதைகள் – அவருக்கு சந்தம் கை வந்த கலை, அவ்வளவுதான். எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு என்று சொல்லிப் பாருங்கள்! இல்லை கொடு வாளினை எடடா பல கொடியோர் செயல் அறவே என்று சொல்லிப் பாருங்கள்! அவருக்கு நல்ல நகைச்சுவை உணர்வு உண்டு. இருண்ட வீடு என்ற சிறு காவியத்தை படித்துப் பாருங்கள். இல்லை என்றால் தமிழ் சினிமாவின் நிலை பற்றி அவர் எழுதியதிலிருந்து ஒரு வரி – பத்தினிக்கு இன்னல் வரும், பழையபடி தீரும். ஆனால் பாரதிதாசன் நல்ல கவிஞர் இல்லை என்பது என் உறுதியான கருத்து. இத்தனைக்கும் எனக்கும் கவிதைக்கும் ரொம்ப தூரம் என்பது எனக்கு நன்றாகவே தெரியும்.
  • கு.ப.ராவின் கனகாம்பரம் – சிறுகதைத் தொகுப்பு. கனகாம்பரம், திரை, பண்ணை செங்கான், விடியுமா? ஆகியவை மிக நல்ல கதைகள். கு.ப.ரா. மிகவும் subtle ஆக எழுதக்கூடியவர்.

தொகுக்கப்பட்ட பக்கம்: க.நா.சு. பக்கம், புத்தகப் பரிந்துரைகள்

சுஜாதாவின் அறிவியல் சிறுகதைகள்

சுஜாதாவின் அறிவியல் சிறுகதைகள் அனேகமாக காலாவதி ஆகிவிட்டவை. (தமிழாசிரியர், திமலாவைத் தவிர). ஆலையில்லாத ஊருக்கு இலுப்பைப்பூ கேஸ்தான். அவருடைய கதைகளில் பெரும் கேள்விகள் எழுவதே இல்லை. அவர் புதிதாக எந்த கருவையும் உருவாக்கிவிடவும் இல்லை. சின்னச் சின்ன நகாசு வேலைகள், (உதாரணம் – கவிதை படிக்கும் ரோபோ) மெல்லிய நகைச்சுவை ஆகியவைதான் அவற்றின் பலம். ஒரு ரோபோ உயிர் பெறும் கருவை அலுப்புத் தட்டும் வரையில் பயன்படுத்தி இருக்கிறார்.

ஆனால் அறிவியல் புனைவுகள் எனக்கு அறிமுகம் ஆனதே சுஜாதா மூலம்தான். 1976 வாக்கில் கல்கி பத்திரிகையில் ஏழெட்டு சிறுகதைகளை எழுதினார். காலப்பயணம், நடப்பதை முன் கூட்டியே சொல்லும் கம்ப்யூட்டர், அணு ஆயுதப் போரில் அழிந்த உலகம் என்று பல கருக்களை வைத்து எழுதினார். அந்த வயதில் மிகவும் கவர்ந்தன. அறிவியல் புனைவுகளின் சாத்தியங்கள் புரிந்தன. ஒரு அதிசயம் நடந்துவிட்டால் அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்று யோசிக்க வைத்தன. குறிப்பாக கால எந்திரம் சிறுகதையில் இறந்த காலத்தில் ஏற்படும் சிறு மாற்றமும் வரலாற்றை முழுமையாக மாற்றிவிடலாம் என்ற கருத்தை முதல் முறையாகப் படித்தேன். ஆங்கிலத்தில் SF படித்தவர்களுக்கு அது தேய்வழக்காகக் கூட இருக்கலாம். ஒன்பது பத்து வயது சிறுவனுக்கு அது கண்திறப்பு.

அந்த கல்கி சிறுகதைகளின் தொகுப்பு கிடைத்தது, அதைப் பற்றித்தான் எழுத வேண்டும் என்று நினைத்தேன். பிறகு பிற அறிவியல் சிறுகதைகளையும் பற்றி எழுத ஆரம்பித்துவிட்டேன்.

கல்கி சிறுகதைகளில் அன்று எனக்கு மிகவும் பிடித்திருந்த சிறுகதை தமிழாசிரியர். இன்று படித்ததைப் போலவே நினைவிருக்கிறது. இன்றும் புத்திசாலித்தனமான கரு என்றே கருதுகிறேன்.

என்ன கதை? பல நூறு ஆண்டுகள் கடந்துவிட்டன, தமிழ்தான் உலகத்தின் பொதுமொழி. ஆனால் தமிழ் எக்கச்சக்கமாக மாறிவிட்டது. சங்கத தமிழை இன்று நாம் புரிந்து கொள்ள கஷ்டப்படுவது போல நமது தமிழை அன்று யாராலும் புரிந்து கொள்ள முடியாது. அது பழந்தமிழ், வழக்கொழிந்துவிட்டது. தமிழ் சுருங்கிவிட்டது – “உனக்குப் புரிகிறதா?” என்பது “புரி?” என்று மாறுகிறது. புரியவில்லை என்று சொல்ல வேண்டுமா? “அபுரி!” பழந்தமிழை கற்ற ஒரே ஒருவர்தான் இன்னும் இருக்கிறார் – அவர்தான் தமிழாசிரியர். பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கிறார். பல வருஷங்களாக ஒரு மாணவனும் பழந்தமிழைப் படிக்க வரவில்லை. அவரது வேலை அபாயத்தில். திடீரென்று 2 பேர் வருகிறார்கள். மாணவர்கள் கிடைத்துவிட்டார்கள், வேலைக்கு இருந்த அபாயம் போயிற்று என்று இவருக்கு சந்தோஷம். பல்கலைக்கழகத் தலைவர் மாணவர்களை பார்வையிட வருகிறார், யாரையும் காணவில்லை. தமிழாசிரியர் அவர்களைத் தேடுகிறார். கடைசியில் அவர்கள் வேற்றுக் கிரகத்திலிருந்து படையெடுத்து வருபவர்கள், தங்கள் தொடர்பு மொழியாக பழந்தமிழை பயன்படுத்தி இருக்கிறார்கள் என்று தெரிகிறது. எந்தக் கம்ப்யூட்டராலும் உடைக்க முடியாது இல்லையா? தமிழாசிரியருக்கு இப்போது அசதித் துறையில் வேலை. (சதியின் எதிர்ச்சொல் அசதி!)

மொழி எப்படி மாறக் கூடும், எப்படி குறைவான ஒலிகளைக் கொண்டு அதே கருத்துக்களை சொல்ல முயற்சிக்கும் என்பதெல்லாம் அப்போது (இப்போதும்) உற்சாகமூட்டிய கருத்துக்கள். சதி-அசதி வார்த்தை விளையாட்டெல்லாம் இத்தனை வருஷம் கழித்தும் மறக்கவில்லை. இரண்டாம் உலகப் போரின்போது நவாஹோ இந்தியர்களின் மொழியை ரகசிய தொடர்பு மொழியாக பயன்படுத்தினார்களாம். சுஜாதா எங்காவது இந்தச் செய்தியைப் படித்திருப்பார் என்று நினைக்கிறேன்.

கல்கி சிறுகதைகளில் தேவன் வருகை அவருக்கு பிடித்தமானது என்று தெரிகிறது. ஆனால் ஓ. ஹென்றி ட்விஸ்ட் மட்டுமே உள்ள, கடைசி வரிக்காகவே எழுதப்பட்ட சிறுகதை. கடவுள் ஆறு மணிக்கு தரிசனம் தருகிறேன் என்கிறார். பிறகு என்ன? சூரியன் சிறுகதை அவ்வப்போது anthology-களில் இடம் பெறுகிறது. அணுகுண்டுப் போரால் நிலப்பரப்பு முழுதும் கதிர்வீச்சு, மனிதர்கள் பூமிக்கடியே வாழ்கிறார்கள். ஒரு சிறுவனுக்கு சூரியனைப் பார்க்க விருப்பம். காலமானவர் சிறுகதையில் பத்திரிகையின் ஜீவநாடியான கம்ப்யூட்டர் நாளை பத்திரிகை ஆசிரியர் இறக்கப் போவதை இன்றைய செய்தியாக பிரசுரிக்கிறது. நகர்வலம் சிறுகதையில் மூழ்கிவிட்ட சென்னை சுற்றுலாத் தலமாக மாறி இருக்கிறது. வாசல் சிறுகதையில் உணவுப் பற்றாக்குறையை சமாளிக்க மக்களைக் கொல்லும் நாட்டின் தலைவர் நரகத்துக்கு செல்கிறார். யயாதி சிறுகதையில் 25 வயதுக்கு திரும்ப மருந்து சாப்பிடும் அறுபது வயதுக்காரர் கொஞ்சம் அதிகமாக மருந்தை சாப்பிட்டுவிடுகிறார். ரூல் நம்பர் 17-இல் அரசு குழந்தை பிறப்பை கடுமையாக கட்டுப்படுத்தும் வேளையில் ஒரு clerical error-ஆல் அனுமதி இருக்கிறது என்று நினைக்கும் அப்பா. கால எந்திரம் அந்த வயதில் கொஞ்சம் சிந்திக்க வைத்த கதை. 2020களின் மனிதன் தொல்காப்பியரை சந்திக்கிறான்.

பிற சிறுகதைகளில் திமலா சிறப்பானது. அவரது திறமை வெளிப்படும் அபூர்வ SF. இன்னும் 500 வருஷம் கழித்து கோவில், சடங்கு எல்லாம் எப்படி நடக்கும்? திருப்பதியில் ஜருகண்டி ஜருகண்டி என்று இன்னும் சொல்லிக் கொண்டிருப்பார்களா? பல தளங்களில் யோசிக்க வைக்கும் சிறுகதை. விஞ்ஞானம் முன்னேறிக் கொண்டே போனால் சடங்குகள் சார்ந்த ஆன்மீகம் என்னவாகும் என்ற கேள்வியை எழுப்புகிறார்.

அறிவியல் சிறுகதைகள் என்று சொன்னாலும் இவற்றில் அறிவியல் சிறுகதைகள், அமானுஷ்ய சிறுகதைகள் எல்லாவற்றையும் பற்றியும் கலந்து கட்டி எழுதி இருக்கிறேன். மீண்டும் ஜீனோ, என் இனிய இயந்திரா, சொர்க்கத்தீவு, சில பல கணேஷ்-வசந்த் நாவல்கள் ஆகியவற்றை அறிவியல் புனைவுகள் என்று வகைப்படுத்தலாம்தான், ஆனால் நாவல்களை தவிர்த்திருக்கிறேன்.

ஒரு நாள் போன்ற சிறுகதைகளில் அவர் முனைந்திருந்தால் நல்ல சிறுகதைகள் கிடைத்திருக்கலாம். நல்ல கரு. திமலாவின் பாதிப்பு உள்ள சிறுகதை. கனவு வாழ்க்கை வாழ விரும்பும் ஒருவனை விவரிக்கிறது. தலைதீபாவளி கொண்டாட்டம். ஆனால் அன்றைய முன்னேறிய நாகரீகத்தில் தலைதீபாவளி என்ற பேச்சே கிடையாது. ஆசைப்படும் எஞ்சினியருக்காக ஒரு அனுபவத்தை உருவாக்கித் தருகிறார்கள்.

சோம்னா (1971) நல்ல அறிவியல் சிறுகதை என்பதை விட நல்ல சிறுகதை. கொஞ்சம் போரடித்துக் கொண்டே போயிற்று, கடைசி வரியில் மாற்றிவிடுகிறார்.

அவருக்கு இரண்டு கருக்களில் ஓரளவு விருப்பம் இருந்திருக்கிறது. ரோபோ உயிர் பெறுவது, பல நூறாண்டுகளுக்குப் பின் பெண்களின் நிலை. இவற்றை வைத்து பல சிறுகதைகளை எழுதி இருக்கிறார். பிற்காலத்தில் அவர் எழுதிய மீண்டும் ஜீனோ போன்றவை ரோபோ உயிர் பெறும் கருவை வேறு விதமாக யோசித்ததுதான்.

ரோபோ உயிர் பெறும் கருவை வைத்து எழுதியவற்றில் திவாவில் உயிர் பெற்ற ரோபோ தன்னை உருவாக்கியவனைக் கொல்கிறது.

பெண்களின் நிலை கருவை வைத்து எழுதியவற்றில் வாசனை சிறுகதையில் பெண்கள் அருகிவிட்டனர், உலகிலேயே பத்து பெண்கள்தான் இருக்கின்றனர், அவர்களை கண்காட்சியில் வைத்து காட்டுகிறார்கள். வெளியில் இருக்கும் சில பெண்கள் காட்சிப் பொருளாக மாற விரும்பாமல் ஒளிந்து வாழ வேண்டிய நிலை. ஒன்பதாவது பெண் சிறுகதையில் பெண்கள் குழந்தை பெற விரும்புவதில்லை. ஏமாற்றி தாயாக்குபவர்களுக்கு அரசு ஊக்கப் பரிசு தருகிறது. முன்னால் சொன்ன கல்கி சிறுகதைகளில் ஒன்று. மஞ்சள் ரத்தம் சிறுகதையில் அறைக்கு வரும் பெண் ரோபோவோ என்று சந்தேகித்தால் அவள் பூமியின் மனுஷி.

டாக்டர் ராகவானந்தம் வரும் சிறுகதைகள் அனேகமாக அறுபதுகளில் எழுதப்பட்டவை. அவற்றில் சுஜாதா உத்தேசித்தது மெல்லிய நகைச்சுவையை மட்டுமே. ராகவானந்தம் விஞ்ஞானி. எதையாவது கண்டுபிடிப்பார், அது வேலைக்காகாது. இந்தக் கருவை வைத்து சின்னதாக தமாஷ் செய்வார். ராகவேனியும் 277 சிறுகதையில் உலகை அழித்துவிடக் கூடிய புதிய element ஒன்றைக் கண்டுபிடித்துவிட்டு அதை ஆஃப் செய்ய முயற்சிக்கிறார்கள். 1000 வருஷங்கள் வாழ்வது எப்படி சிறுகதையில் காயகல்பம் சாப்பிட்டுவிட்டு 300 வருஷம் உயிரோடு இருக்கும் ஒருவரை சந்திக்கிறார்கள். வாட்டர் கார் விவகாரத்தில் பெட்ரோலுக்கு பதிலாக தண்ணீரை வைத்து காரை ஓட்டுகிறார்கள்.

ராகினி என் வசமாக அமானுஷ்ய சிறுகதை என்றுதான் வகைப்படுத்த வேண்டும். பெரியவர் என்னவெல்லாமோ வித்தை காட்டுகிறார். அஷ்டமாசித்தி தெரிந்தவர் போலிருக்கிறது. முடிவு வரிக்காகவே எழுதி இருக்கிறார். நல்ல வரிதான் – “நான் எழுந்து சென்று அந்தக் கூட்டத்தில் மறைவதை நானே பார்த்தேன்”. ஆனால் அது மட்டும் பத்தாது.

அனாமிகா போன்ற சிறுகதைகள் SFதானா என்பதே சந்தேகம்தான். சுனாமியில் இறந்த ஒரு பெண்ணின் கையில் சுஜாதாவின் விஞ்ஞானச் சிறுகதைகள் புத்தகம் இருந்ததாம். அதைக் கேட்ட நெகிழ்வில் இறந்து போன பெண் சுஜாதாவிடமே பீச்சில் வந்து பேசுவதாக ஒரு கதை. ராகினி என் வசமாக சிறுகதையை கொஞ்சம் உல்டா செய்தது போல இருக்கிறது.

ஜில்லு சிறுகதை கல்கி சிறுகதையான சூரியனை நினைவுபடுத்தியது. கதிரியக்க மழை பெய்யப் போகிறது. அரசு ஊரையே காலி செய்கிறது. நாய்க்கு இடமில்லை. சிறுவன் தன் நாயோடு ஓடிவிடுகிறான்.

சில சமயம் அவர் படித்த கதைகளை தமிழ்ப்படுத்தி இருக்கிறார். மிஸ்டர் முன்சாமி ஒரு 1.2.1 (1969) Flowers for Algernon-இன் தமிழ் வடிவம்.

இன்னும் இருக்கின்றன, ஆனால் நினைவில் வந்தது, சமீபத்தில் படித்தது இவ்வளவுதான்.

பொதுவாக அறிவியல் புனைவுகளில் அறிவியல் plausible ஆக இருந்தால் நல்லது. இன்று நடக்காவிட்டாலும் இன்னும் ஆயிரம் வருஷங்கள் கழித்து நடக்கும் சாத்தியக்கூறு இருந்தால் நல்லது. ஆனால் சுஜாதா இந்த சிறுகதைகளில் பொதுவாக உத்தேசிப்பது மெல்லிய நகைச்சுவையை மட்டுமே.பல கதைகளில் சின்னதாக தமாஷ் பண்ணவே எழுதி இருக்கிறார். அதுவும் டாக்டர் ராகவானந்தம் கதைகளில் இது மிகத் தெளிவாகத் தெரியும்.

விதிவிலக்குகள் இருந்தாலும் பொதுவாக இன்று படிக்கும்போது அவரது அறிவியல் சிறுகதைகள் பெரிதாக கவர்வதில்லை. அடுத்த தலைமுறை இளைஞர்களைக் கவரும் என்ற நம்பிக்கையும் எனக்கில்லை. இன்று அவரது தீவிர ரசிகர்கள், அல்லது முன்னோடி முயற்சிகளில் ஆர்வமுள்ளவர்கள் தவிர்த்து வேறு யாருக்கும் இதில் ஆர்வம் இருக்கப் போவதில்லை. உங்கள் பதின்ம வயது மகனோ மருமகளோ nephew-ஓ niece-ஓ தமிழில் என்ன படிக்கலாம் என்று கேட்டால் இவற்றை பரிந்துரைத்துவிடாதீர்கள். திமலா கூட உலகமகா தரிசனம் என்று சொல்லிவிட முடியாது. தமிழாசிரியர் புத்திசாலித்தனமான சிறுகதை, அவ்வளவுதான்.

அதற்காக அவரது முன்னோடி முயற்சிகளை குறைத்து மதிப்பிடுவதற்கும் இல்லை. கால்குலேட்டர்கள் வந்துவிட்டதால் பதினாறாம் வாய்ப்பாடு வரை சொல்லிக் கொடுத்த மூன்றாம் வகுப்பு ஆசிரியர் மேல் மரியாதை போய்விடுகிறதா என்ன? ஆனால் அவருக்கு நன்றி சொல்ல இந்த பதிவு. இன்றும் அவரே தமிழின் முதன்மை அறிவியல் சிறுகதைகளை எழுதி இருக்கிறார். (ஜெயமோகனின் முயற்சிகளை நான் gothic fiction என்றே வகைப்படுத்துவேன்.)

அவரது அறிவியல் அபுனைவுகளைப் பற்றியும் ஒரு வார்த்தை. இன்று இவற்றால் பெரிய பயன் இல்லை. அவற்றின் தாக்கத்தை இன்றைய இன்டர்நெட் யுகத்தில் உணர்வது கஷ்டம். ஆனால் ஒரு காலத்தில் அவற்றுக்கு இருந்த மவுசு மிக அதிகம். ஒரு தலைமுறைக்கே அறிவியலில் ஆர்வத்தை வளர்த்தவர் அவர். கடவுள் இருக்கிறாரா இன்றும் படிக்கக் கூடிய அறிமுகப் புத்தகம். ஏன் எதற்கு எப்படி, ஜீனோம், ஒரு விஞ்ஞானப் பார்வையிலிருந்து போன்ற புத்தகங்களை இன்று நாஸ்டால்ஜியாவுக்காகத்தான் படிக்க வேண்டும். அவற்றைப் பற்றி எழுத பெரிதாக எதுவும் இல்லை.

படிக்க வேண்டுமென்றால் தமிழாசிரியர், திமலா இரண்டை மட்டுமே பரிந்துரைப்பேன். முன்னோடி மட்டுமே. இன்றும் தமிழில் இவரை அடித்துக் கொள்ள ஆளில்லை என்பதுதான் வருத்தம். எனக்கு அந்த வெற்றிடத்தை நிரப்ப வேண்டும் என்ற கனவு உண்டு…

தொகுக்கப்பட்ட பக்கம்: சுஜாதா பக்கம்

பொன்னியின் செல்வன் திரைப்படம்

ஒரு வழியாகத் திரைபப்டத்தைப் பார்த்துவிட்டேன்.

என்னைப் பொறுத்த வரையில் கதையின் நாயகர்கள் கலை இயக்குனர் தோட்டா தரணியும் நடன இயக்குனர் பிருந்தாவும்தான். தோட்டாவோடும் பிருந்தாவோடும் ஒப்பிட்டால் மற்றவர் எல்லாம் – மணிரத்னம் உட்பட – கொஞ்சம் சோட்டாவாகத்தான் தெரிகிறார்கள்..

மணிரத்னத்தின் திரைப்படங்களில் பாடல் காட்சிகள் எப்போதுமே அருமையாகப் படமாக்கப்பட்டிருக்கும். இந்தப் படத்திலும் அப்படித்தான். அவர் இசை வீடியோக்களோடு நிறுத்திக் கொண்டிருக்கலாம் என்று எனக்கு சில சமயம் தோன்றியதுண்டு (உதாரணமாக காற்று வெளியிடை திரைப்படம்) நல்ல வேளையாக இந்தப் படத்தின் takeaway பாட்டுக்கள் மட்டும் அல்ல.

குறிப்பாக தேவராளன் ஆட்டம் வண்ணங்கள் நடனம் ஆடுவதைப் போல இருந்தது. ராட்சஸ மாமனே படமாக்கப்பட்டிருக்கும் விதம் பிரமாதம். Visual treat. இரண்டிற்கும் வீடியோ கிடைக்கவில்லை. யூட்யூபில் வர இன்னும் கொஞ்சம் நாளாகும் போலிருக்கிறது.

ஆனால் இன்னொன்றையும் சொல்லிவிடுகிறேன். பூங்குழலி அறிமுகக் காட்சியில் படகில் பூங்குழலி ஏறி நிற்கும்போது நிலா அது வானத்து மேலே பாட்டு இந்தப் படத்திலுமா என்று ஒரு நொடி தோன்றியது!

திரைப்படத்தின் பல காட்சிகள் – உடையும் பாலத்தின் மீது செல்லும் தேர், ஆற்றை தெப்பத்தின் மேல் கடக்கும் குதிரை, பழுவேட்டரையர் அரணமனை, இலங்கை அரசன் மஹிந்தன் வரும் காட்சி போன்றவை அழகுணர்ச்சியுடன் படமாக்கப் பட்டிருந்தன.

வேறு எதுவுமே இல்லாவிட்டாலும் இவற்றுக்காகவே பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன். ஆனால் இன்னும் இருக்கின்றன.

திரைக்கதை வசனத்திலிருந்து ஆரம்பிக்கிறேன். கதை பொன்னியின் செல்வனை இம்மியும் மாற்றாமல் எழுதப்பட்டிருக்கிறதா? இல்லை. ராஷ்டிரகூடர்களுடன் போர், நுளம்பம்பாடி போர், குந்தவை பழுவேட்டரையரை மடக்குவது என்றெல்லாம் நாவலில் கிடையாது. பெரிய பழுவேட்டரையரும், அனிருத்த பிரம்மராயரும், ஏன் ஆழ்வார்க்கடியானும் கூட நாவலில் இன்னும் பெரிய பாத்திரங்கள். ஆனால் திரைப்படத்தின் பெரும் பகுதி நாவலை அடியொற்றித்தான் செல்கிறது. நாவல் சில ஆயிரம் பக்கம் உடையது, கொஞ்சம் ramble ஆகத்தான் செய்யும். திரைப்படத்தின் விடுபடல்கள் நாவலை இன்னும் coherent ஆக்கும் முயற்சிகள் அவ்வளவுதான்.

திரைப்படத்தில் சேர்க்கப்பட்டிருக்கும் காட்சிகளும் அப்படித்தான். உதாரணமாக நாவல் முழுவதும் குந்தவை ஒரு பெண் சாணக்கியர் என்ற ரேஞ்சுக்குத்தான் கல்கி விவரிப்பார். ஆனால் ஓலை அனுப்புவதைத் தவிர குந்தவை வேறு எதுவும் செய்யமாட்டாள். சிற்றரசர் கூட்டத்தில் தம்பிகளுக்கு உங்களில் இருவர் மகள்கள் மனைவி ஆகலாம் என்று ஆசை காட்டுவது அந்தப் பாத்திரத்தை வலுப்படுத்துகிறது.

ராஷ்டிரகூடர்களோடு போர் என்பது இன்னொரு நிராயுதபாணியை கொல்லமாட்டேன் என்ற ஒரு நொடி வசனத்துக்காக கட்டி எழுப்பப்பட்ட பிரம்மாண்ட போர்க்காட்சியோ என்று தோன்றுகிறது. வீரபாண்டியனைக் கொல்வதால் ஆதித்தகரிகாலனுக்கு ஏற்படும் அகச்சிக்கல்களை அந்த ஒரு நொடி வசனம் நன்றாகவே காட்டிவிடுகிறது.

மிக நீண்ட நாவலை கெடுக்காமல் நல்லபடி திரைக்கதை ஆக்குவது சிரமம். அதை மணிரத்னம், ஜெயமோகன், இளங்கோ குமரவேல் மூவரும் நன்றாகவே செய்திருக்கிறார்கள். வசனங்கள் மனோகரா வசனம் போல anachronism ஆகவும் இல்லை, அதே போல கொச்சையான பேச்சுத் தமிழாகவும் இல்லை. இயல்பாக இருக்கின்றன. அது ஜெயமோகனுக்கு ஜுஜுபி வேலைதான்.

முந்தைய பதிவிலிருந்து:

ஜெயமோகனிடம் மாற்றங்களைப் பற்றி ஒரு முறை பேசி இருக்கிறேன். அவர் நாவலில் உள்ள முரண்பாடுகளை சரி செய்ய வேண்டி இருந்தது என்று சொன்னார். உதாரணமாக ஆதித்த கரிகாலனை கொலை செய்தது யார் என்று நாவலைப் படித்துவிட்டு எந்த முடிவுக்கும் வர முடியாது. அப்படி எல்லாம் திரைப்படத்தில் அரைகுறையாக விட்டுவிடுவது கஷ்டம். நந்தினியின் தந்தை யார்? வீரபாண்டியனா? அப்பாவையே கணவன் என்று ஆதித்த கரிகாலனிடம் சொன்னாளா? மந்தாகினிக்கு சுந்தர சோழர், வீரபாண்டியன் இருவருடனும் உறவு இருந்ததா? இதை எல்லாம் கல்கி வேண்டுமென்றே விவரிக்கவில்லை, சில முடிச்சுகளை வேண்டுமென்றே அவிழ்க்காதது அவரது உத்தி. நாவலை இன்னும் பிரமாதமாக்குகிறௌ என்று நண்பர்கள் அந்தக் காலத்தில் பேசிக் கொள்வோம். அதை எல்லாம் சரிப்படுத்த தேவை இருந்தது என்று ஜெயமோகன் சொன்னார். அதாவது நாவலின் இடைவெளிகளை நிரப்ப வேண்டிய கட்டாயம் அவருக்கு இருந்திருக்கிறது.

திரைக்கதையில் எனக்கு நொட்டை சொல்ல வேண்டுமென்றால்; வந்தியத்தேவனின் கதாபாத்திரம் நாவலில் முதலில் வீரன்; பிறகு கொஞ்சம் குறும்புத்தனம் உள்ளவன். திரைப்படத்தில் முதலில் பெண்களோடு flirt செய்யும் குறும்புக்காரன், அப்புறம்தான் வீரம் எல்லாம் என்ற சித்திரம் எழுகிறது. ஆ. கரிகாலன் பார்க்கும் இள வயது நந்தினிக்கும் வீரபாண்டியனின் மரணப்படுக்கையில் பார்க்கும் நந்தினிக்கும் உருவ வித்தியாசம் அதிகம். எப்படி பார்த்தவுடன் தெரிந்தது? வீரபாண்டியனே நந்தினி என்று அழைக்கிறார்தான், ஆனால் உலகத்தில் ஒரே நந்தினிதானா? ஓலை கொண்டு வந்த வந்தியத்தேவனைப் பார்த்து நீர் சோழ இளவரசியை மணப்பீர் என்று அருண்மொழி சொல்கிறார். கையில் இருப்பது நீ உடனே கிளம்பி வா என்று ஒரு ஓலை மட்டுமே; அதில் அக்காவின் உள்ளம் எப்படித் தெரியும்?

இரண்டாவதாக நடிப்பு; விக்ரமுக்கு இந்த மாதிரி பாத்திரம் எல்லாம் அல்வா சாப்பிடுவது மாதிரி. ஜெயம் ரவி பொருத்தமான தேர்வுதானா என்று எனக்கு சந்தேகம் இருந்தது. ஆனால் அவரும் நன்றாகவே செய்திருக்கிறார். கார்த்தியும் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார். ஆனால் கலக்கி இருப்பவர் ஐஸ்வர்யா ராயும், அவருக்கு அடுத்தபடியாக த்ரிஷாவும். மற்ற பாத்திரங்களில் ஜெயராமும், பார்த்திபனும், ஐஸ்வர்யா லட்சுமியும், கிஷோரும் நன்றாக செய்திருக்கிறார்கள். ஜெயராமின் பாத்திரத்தை இன்னும் கொஞ்சம் பெரிதாக்கி இருக்கலாம், அந்த மெல்லிய நகைச்சுவை கொஞ்சம் மாறுதலாக இருந்திருக்கும்.

ஆனால் முக்கிய நடிகர்களின் முதிர்ச்சியான தோற்றம் கொஞ்சம் உறுத்துகிறது. ஆதித்த கரிகாலன் இறக்கும்போது 30 வயது கூட இருக்காது. விக்ரமைப் பார்த்தால் நாற்பதாவது சொல்லலாம். அதே போல ஜெயம் ரவி கதையில் வரும் அருண்மொழியைப் போல இளைஞன் அல்ல. கார்த்தியும் மனதில் இருக்கும் வந்தியத்தேவனை விட கொஞ்சம் முதிர்ச்சியாகத்தான் தெரிகிறார்.

வந்த புதிதில் – ஒரு ஏழெட்டு வருஷமாவது – ஏ.ஆர். ரஹ்மானின் பாட்டுக்களை முதல் முறை கேட்கும்போதே பிடித்துவிடும். சின்னச் சின்ன ஆசையாகாட்டும், போறாளே பொன்னுத்தாயியாகட்டும், பேட்டை ராப் ஆகட்டும், அப்படித்தான். அப்புறம் சில வருஷம் முதலில் கேட்கும்போது பெரிதாக ஈர்க்காது, ஆனால் கேட்க கேட்கப் பிடித்துவிடும். இந்தத் திரைப்படத்தின் பாடல்கள் அப்படித்தான் இருக்கின்றன. இது வரை அடிக்கடி கேட்கவில்லை, அதனால்தானோ என்னவோ எதுவும் சரியாக நினைவிலேயே இல்லை. பார்ப்போம்.

என்னா கூச்சல் போட்டார்கள்! ஆழ்வார்க்கடியான் நாராயணா என்று சொல்லவில்லை, நெற்றியில் நீறு இல்லை, ஹிந்துக்களை இழிவு செய்கிறார்கள் என்று வெறும் டீசரைப் பார்த்துவிட்டு ஒரு கும்பல் கத்தியது. படம் வந்த பிறகு தானாக அடங்கி இருக்கிறது. ஆனால் பார்ப்பன ஆதரவு திரைப்படம், ராஜராஜன் ஹிந்துவே அல்ல என்று அடுத்த கும்பல் கிளம்பி இருக்கிறது. படத்தை எதிர்ப்பது என்று முடிவு எடுத்தாயிற்று, படம் எப்படி இருந்தால் என்ன, சும்மா கத்துவோம், என்று கிளம்பி இருக்கிறீர்களா? உங்கள் கடமை உணர்ச்சிக்கு ஒரு எல்லையே இல்லையாடா?

இதில் நடுவாந்தரமாக ஒரு கும்பல் கல்கியின் கதையை மாற்றிவிட்டார்கள் என்று கத்துகிறது. பொ.செ.யைப் இந்த சாக்கிலாவது ஒரு முறை படித்துப் பாருங்கப்பா!

பொ.செ. தமிழில் ஒரு cult நாவல். திரைப்படம் அப்படி ஒரு cult திரைப்படமாக அமையாது என்று நினைக்கிறேன். நன்றாக ஓடும், அடுத்த பாகம் வரும்போது நினைவிலிருக்கும், ஆனால் இன்னும் இரண்டு வருஷம் கழித்து மறந்தும் போய்விடும் என்று தோன்றுகிறது. விக்ரம் 2 திரைப்படம் போலத்தான் முடியும், பாஹுபலி போல cult திரைப்படமாக மாறாது என்று தோன்றுகிறது.

அதனால் என்ன? ஒரு குறைவுமில்லை. திரைப்படம் நன்றாகவே இருக்கிறது. அரங்கங்களில் சென்று பாருங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: திரைப்படங்கள், கல்கி பக்கம்

தொடர்புடைய சுட்டிகள்:

ராஜாஜி, கல்கி, மதுவிலக்கு

ராஜாஜி பற்றிய பதிவில் அவர் விமோசனம் என்ற பத்திரிகையை நடத்தியதைப் பற்றி எழுதி இருந்தேன். அதைப் பற்றி இன்னும் விவரங்கள் இருந்த ஒரு கூட்டாஞ்சோறு பதிவை மீள்பதித்திருக்கிறென்.

பாங்கர் விநாயகராவ் என்ற புத்தகத்தை சமீபத்தில் எப்போதோ படித்தேன். கல்கி மதுவிலக்கு அவசியம் என்ற கருத்தை வலியுறுத்தி விமோசனம் என்ற பத்திரிகையில் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு. எந்த கதையும் சுகமில்லை. பிரசாரம் கதையை விட முக்கியமாக இருக்கும்போது கதையில் இலக்கிய நயம் தொலைந்து போய்விடுகிறது. மேலும் கல்கியின் ஆரம்ப கால சிறுகதைகள் இவை – சுவாரசியம் குன்றாமல் எழுதும் கலையை அவர் இன்னும் முழுதாக தெரிந்துகொள்ளாத காலம் என்றுதான் சொல்லவேண்டும்.

ஆனால் ஒரு முன்னுரை எழுதி இருக்கிறார். அந்த முன்னுரையில் விமோசனம் பத்திரிகை உருவான விதம், அவருக்கும் ராஜாஜிக்கும் எப்படி உறவு ஏற்பட்டது என்பதை பற்றி எல்லாம் விவரித்திருக்கிறார். பிரமாதமாக இருந்தது. இந்த புத்தகம் வானதி பதிப்பகம் வெளியீடு, இதற்காகவே வாங்கலாம்!

ராஜாஜிக்கு அப்போதெல்லாம் கல்கியை அவ்வளவு தெரியாது. கல்கி கதர் போர்டில் பார்த்துக்கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு நவசக்தி பத்திரிகையில் உதவி ஆசிரியராக சேர சென்னை போகும்போது கல்கியை அவர் பார்த்திருக்கிறார். ராஜாஜி ஒரு மதுவிலக்கு பத்திரிகை நடத்த கல்கியை அழைத்துக் கொள்ளலாம் என்ற நினைத்து கல்கியிடம் சொல்லியிருக்கிறார். கல்கிக்கு இஷ்டம்தான், ஆனால் பத்திரிகை ஆரம்பிக்க நாளாகும் என்பதால் நவசக்தியில் திரு.வி.க.விடம் சேர்ந்திருக்கிறார். மூன்று வருஷம் ஒரு தகவலும் இல்லை. ஒரு நாள் ராஜாஜி சென்னைக்கு வந்திருந்தபோது அவரை பார்க்கப் போயிருக்கிறார். என்னவோ காரணத்தால் நவசக்தி வேலையையும் விட்டுவிட்டார். ராஜாஜி மூன்று மாதத்தில் வந்து சேர்ந்துகொள் என்று சொல்ல இவர் இன்றைக்கே வருகிறேன் என்று சொல்லி இருக்கிறார். ராஜாஜி நீ சென்னையில் வேலை இல்லாமல் இருந்தால் கெட்டுப் போய்விடுவாய்! என்று சொல்லி அவரை திருச்செங்கோட்டுக்கு அனுப்பி இருக்கிறார்.

அங்கே அவருக்கு மாதம் ஐம்பது ரூபாய் சம்பளம். இது அந்தக் காலத்தில் போதுமா போதாதா என்று தெரியாது. போதாது என்றுதான் நினைக்கிறேன். ஆனால் ராஜாஜியின் மகனான சி.ஆர். நரசிம்மனுக்கு நாற்பதுதான். அந்த சம்பளத்தில்தான் அவர், அப்பா ராஜாஜி, தங்கை லக்ஷ்மி (எதிர்காலத்தில் காந்தியின் மருமகள்) எல்லாரும் வாழவேண்டுமாம்! அதுவும் 17×10 அடி உள்ள ஒரே அறை கொண்ட வீட்டில்!

பணக்கார வக்கீல் தன் பங்களா, ஆயிரக்கணக்கில் வருமானம் எல்லாவற்றையும் விட்டுவிட்டு நாற்பது ரூபாய் சம்பளத்தில் எதற்கு வாழ்ந்தார்? (இதே போல் ஈ.வெ.ரா.வும் வருமானம் வரும் தோப்புகளை எல்லாம் அழித்தார்.) சரி அவருக்கு பைத்தியம் என்றாலும், கல்கி, மற்றும் பலரும் எதற்கு அவர் பேச்சை கேட்டுக்கொண்டு சொற்ப சம்பளத்தில் அங்கே வேலை செய்தார்கள்?

மதுவிலக்குக்காக ஒரு பத்திரிகை – இது எப்படி விற்கும் என்று தெரியவில்லை. கல்கிக்கும் இதே சந்தேகம்தான். பத்து இதழ்கள் வந்திருக்கின்றன. ராஜாஜியும் கல்கியுமே எல்லா பக்கங்களையும் நிரப்பி இருக்கிறார்கள். ராஜாஜி உப்பு சத்தியாகிரகத்தில் ஈடுபட்டு ஜெயிலுக்கு போனதும் கல்கி இழுத்து மூடிவிட்டாராம்.

இரண்டு கேள்விகள்:

  • ஒரு இடத்தில் அந்த ஊரில் பஞ்சம் என்றும் இந்த ஆசிரமம் மூலம் கதர் நூற்பதன் மூலம் லட்சக்கணக்கில் நிவாரணம் வழங்கப்பட்டது என்றும் குறிப்பிடுகிறார். கதர் விற்று அவ்வளவு லாபம் வந்திருக்கப்போவதில்லை. பிறகு லட்சங்கள் எங்கிருந்து வந்தன?
  • சில ஹரிஜன்கள், பிராமணர் அல்லாதார் பற்றி குறிப்பிட்டாலும் ஆசிரமத்தின் முக்கியஸ்தர்கள் எல்லாரும் பிராமணர்கள் போலத்தான் தோன்றுகிறது. காங்கிரஸில் அப்போது இருந்த பிராமணர் அல்லாதோர் (திரு.வி.க., வரதராஜுலு நாயுடு, முத்துரங்க முதலியார் – இவர் பின்னால் முதலமைச்சரான பக்தவத்சலத்தின் மாமனார், ஜே.சி. குமரப்பா, சர்தார் வேதரத்தினம் பிள்ளை) யாருமே இதில் பங்கெடுத்துக்கொள்ள முன் வரவில்லையா? இல்லை ராஜாஜி பிராமணர்களுக்கு முன்னுரிமை அளித்தாரா?

தொகுக்கப்பட்ட பக்கம்: கல்கி பக்கம்

பொன்னியின் செல்வன்

ஒரு வழியாக பொ.செ. திரைப்படமாக வந்துவிட்டது. அதனால் புத்தகம் பற்றிய என் பதிவை மீள்பதித்திருக்கிறேன். மூலப்பதிவு இங்கே

பதின்ம வயதில் நடிக நடிகையர்களுக்கு எங்கள் தேர்வு:

ரஜினி ஆதித்தகரிகாலனாக; சிவகுமார்தான் அருண்மொழிவர்மனுக்கு சிறந்த தேர்வு என்று தோன்றியது, அதனால் கமல் அவ்வள்வு பொருத்தம் இல்லை என்று தோன்றினாலும் கமலுக்கு வந்தியத்தேவன் ரோல். பெரிய பழுவேட்டரையராக சிவாஜி; தேங்காய் ஆழ்வார்க்கடியான். முத்துராமன் கந்தமாறன். விஜயகுமார் சேந்தன் அமுதன். வெண்ணிற ஆடை மூர்த்தி பினாகபாணி. மேஜர் சுந்தர சோழன். சுஜாதா மந்தாகினி. சரிதா அல்லது ராதா பூங்குழலி. லட்சுமி குந்தவை. மனோகர் சின்ன பழுவேட்டரையர். நம்பியார் ரவிதாசன். வானதி அம்பிகா. கடைசியில் நந்தினியாக நடிக்க யாரும் இல்லாததால் திரைப்படம் எடுக்கும் முயற்சியை கைகழுவிவிட்டோம்.

இன்று விக்ரம் ஆதித்தகரிகாலன்; ஜெயம் ரவி அருண்மொழிவர்மன்; கார்த்தி வந்தியத்தேவன்; பெரிய பழுவேட்டரையராக சரத்குமார்; ஜெயராம் ஆழ்வார்க்கடியான்… பிரகாஷ் ராஜ் சுந்தர சோழன். ஐஸ்வர்யா ராய் மந்தாகினி/நந்தினி; த் ரிஷா குந்தவை; பார்த்திபன் சின்ன பழுவேட்டரையர்; கிஷோர் ரவிதாசன்… பொருத்தமாகத்தான் இருக்கும், ஆனால் பிரகாஷ் ராஜ் பெரிய பழுவேட்டரையராக இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்குமோ? என் கண்ணில் சுந்தர சோழன் ஒரு filler, மொக்கை ரோல். அதுவும் பிரகாஷ் ராஜ் எப்படி மந்தாகினி/நந்தினியைப் பார்த்து துடிப்பார் என்று இப்போதே கண்ணில் தெரிகிறது. அவருக்கு கொஞ்சம் meatier பாத்திரமான பெரிய பழுவேட்டரையர் ரோலைக் கொடுத்திருக்கலாமோ? திரைப்படத்தைப் பார்க்காமல் சொல்லக் கூடாதுதான், ஆனால் அருண்மொழிக்கு ஜெயம் ரவியைப் பற்றி எனக்கு கொஞ்சம் சந்தேகமாக இருக்கிறது…

கதையிலிருந்து மாற்றிவிட்டார்கள் என்று சில விமர்சனங்களைப் பார்க்கிறேன். வந்தியத்தேவன் தற்செயலாக கடம்பூர் மாளிகையில் சதி நடக்கிறதா என்று கண்டுபிடித்தானா இல்லை அதை உளவறியத்தான் அனுப்பப்பட்டானா என்பதெல்லாம் கதையின் போக்கை மாற்றுவதில்லை. இதைப் போன்ற சின்ன சின்ன கதையின் போக்கை மாற்றாத மாற்றங்களுக்கு ஆயிரம் காரணம் இருக்கலாம், இதெல்லாம் ஒரு பிரச்சினையா? உதாரணமாக ராஷ்டிரகூடர்களோடு சண்டையைக் காட்டுவதில் என்ன பிரச்சினை? பிரம்மாண்டப்படுத்துவதற்காக சேர்த்திருப்பார்கள். நொட்டை சொல்பவர்கள் நாவலை உள்வாங்கிக் கொண்டார்களா என்பதே சந்தேகமாக இருக்கிறது.

ஆனால் ஜெயமோகனிடம் மாற்றங்களைப் பற்றி ஒரு முறை பேசி இருக்கிறேன். அவர் நாவலில் உள்ள முரண்பாடுகளை சரி செய்ய வேண்டி இருந்தது என்று சொன்னார். உதாரணமாக ஆதித்த கரிகாலனை கொலை செய்தது யார் என்று நாவலைப் படித்துவிட்டு எந்த முடிவுக்கும் வர முடியாது. அப்படி எல்லாம் திரைப்படத்தில் அரைகுறையாக விட்டுவிடுவது கஷ்டம். நந்தினியின் தந்தை யார்? வீரபாண்டியனா? அப்பாவையே கணவன் என்று ஆதித்த கரிகாலனிடம் சொன்னாளா? மந்தாகினிக்கு சுந்தர சோழர், வீரபாண்டியன் இருவருடனும் உறவு இருந்ததா? இதை எல்லாம் கல்கி வேண்டுமென்றே விவரிக்கவில்லை, சில முடிச்சுகளை வேண்டுமென்றே அவிழ்க்காதது அவரது உத்தி. நாவலை இன்னும் பிரமாதமாக்குகிறௌ என்று நண்பர்கள் அந்தக் காலத்தில் பேசிக் கொள்வோம். அதை எல்லாம் சரிப்படுத்த தேவை இருந்தது என்று ஜெயமோகன் சொன்னார். அதாவது நாவலின் இடைவெளிகளை நிரப்ப வேண்டிய கட்டாயம் அவருக்கு இருந்திருக்கிறது.

திரைப்படத்தை நான் கட்டாயமாகப் பார்ப்பேன். எல்லாரும் பார்க்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறேன். தமிழ் நாவல்களுக்கு மார்க்கெட் அதிகரிக்க வேண்டுமென்றால் இந்த மாதிரிப் படங்கள் வெற்றி பெற வேண்டும். இது வென்றால் அடுத்தபடி யவனராணியையும் கடல்புறாவையும் திரைப்படமாக்க யாராவது முன் வருவார்கள். இது தோல்வி அடைந்தால் அது இன்னும் பத்து வருஷம் தள்ளிப் போகும். இவையே தள்ளிப் போனால் அம்மா வந்தாளுக்கு இன்னும் இருபது வருஷம் ஆகும்!

பீடிகை போதும், பழைய பதிவு கீழே

பொன்னியின் செல்வனை முதன்முதலாகப் படிக்கும்போது 13 வயதிருக்கலாம். கல்கி பத்திரிகை பக்கங்களைக் கிழித்து பைண்ட் செய்த புத்தகங்கள். வைத்திருந்த உறவினரோ தருவதற்கு ஒரே பிகு. கெஞ்சிக் கூத்தாடி வாங்கிப் படித்தேன். கீழே வைக்க முடியவில்லை. கதைப்பின்னல் அத்தனை சுவாரசியமாக இருந்தது. ஆதித்த கரிகாலனைக் கொன்றது யார் என்பதை பதில் இல்லாத கேள்வியாக இல்லை இல்லை எந்த பதிலிலும் ஓட்டை இருக்கும் கேள்வியாகப் படைத்தது அபாரமான உத்தி ஆகத் தெரிந்தது/தெரிகிறது. நந்தினியின் பாத்திரப் படைப்பு, ஆழ்வார்க்கடியானின் அலப்பறைகள், ஆதித்த கரிகாலனின் மனச்சிக்கல்கள், அருண்மொழிவர்மன், பெரிய பழுவேட்டரையர், பூங்குழலி, மந்தாகினி, குந்தவை ஏன் கந்தமாறனும் மணிமேகலையும் பினாகபாணியும் மதுராந்தனும் ரவிதாசன் தலைமையிலான ஆபத்துதவிகள் வரை மிகவும் அருமையான பாத்திரப் படைப்புகள். இன்று வரையில் தமிழில் இதை விடச் சிறந்த அரண்மனைச் சதி sub-genre சரித்திர நாவல் வந்ததில்லை. இதற்கு சமமான ஆகிருதி உள்ள சரித்திர நாவல் என்று எனக்குத் தெரிவது பிரபஞ்சனின் மானுடம் வெல்லும் ஒன்றுதான். அலெக்சாண்டர் டூமா மேலை உலகத்தில் கொண்டாடப்படுகிறார். அவர் எழுதிய எந்த நாவலையும் விட பொ. செல்வன் சிறப்பான கதைப்பின்னல் கொண்டது. வால்டர் ஸ்காட் எல்லாம் எங்கோ பின்னால்தான் நிற்க வேண்டும்.

இன்றும் கல்கி போட்ட ரோட்டில்தான் அனேகத் தமிழ் வரலாற்று நாவல் எழுத்தாளர்கள் வெறும் கோடு மட்டுமே போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் யாரும் அவரை நெருங்க முடியவில்லை. சாண்டில்யன் உட்பட.

ஆனால் இன்று 13 வயது இல்லை, நாலு கழுதை வயதாகிவிட்டது. அதனால் குறைகள் தெரிகின்றன. பொ. செல்வனைப் படிப்பவர்களுக்கு தமிழகத்தில் அன்று ஜாதி என்று ஒன்று இருந்ததா என்பது கூடத் தெரியாது. ராஜாவும் இளவரசர்களும் குறுநில மன்னர்களும் ஒற்றர்களும் அமைச்சர்களும்தான் சமூகமே. ஏதோ பேருக்கு அங்குமிங்கும் ஒரு ஜோதிடரும் வைத்தியரும் ஓடக்காரன்/ஓடக்காரியும் வருகிறார்கள். ஆனால் அவர்களுக்கு அரண்மனையோடு நெருங்கிய உறவிருக்கிறது. சரித்திர நாவலின் வீச்சு என்பது மிகவும் குறைந்திவிடுகிறது. கதைப்பின்னல் மட்டுமே நாவலின் பெரும்பலமாக நிற்கிறது. பெரும் மானிட தரிசனம் என்று எதுவும் கிடைத்துவிடப் போவதில்லை. மனிதர்களில் இயல்புகளைத் தோலுரித்துக் காட்டிவிடும் படைப்பில்லை. சுவாரசியம் மட்டுமே இலக்காக வைத்து எழுதப்பட்ட நாவல். அதில் பெரும் வெற்றி பெற்றிருக்கிறது. ஷெர்லக் ஹோம்ஸ் கதைகள் போல. அதனால் minor classic என்றுதான் வகைப்படுத்துவேன்.

பொ. செல்வனைப் படிக்காதவர்களுக்காக: பொ. செல்வன் என்று அழைக்கப்படுபவன் அருண்மொழிவர்மன் – பிற்காலத்தில் ராஜராஜ சோழன். அருண்மொழிவர்மனின் அண்ணனும் பட்டத்து இளவரசனும் ஆன ஆதித்தகரிகாலன் நந்தினியை விரும்புகிறான். நந்தினிக்கோ ஆதித்த கரிகாலனின் எதிரியான வீரபாண்டியனோடு உறவு. இது தெரிந்ததும் ஆதித்த கரிகாலன் வீரபாண்டியனைக் கொல்கிறான். நந்தினி ஆதித்த கரிகாலனை பழிவாங்க சோழ அரசின் முக்கியத் தூணான கிழவரான பெரிய பழுவேட்டரையரை மணக்கிறாள். பழுவேட்டரையர் அவள் சொல்படி ஆடுகிறார். ஆதித்த கரிகாலனுக்கு பதிலாக அவனது பெரியப்பாவின் மகனான “போலி” மதுராந்தகனை அரசனாக்க சதி செய்கிறாள். எதிர்தரப்பில் வந்தியத்தேவனும், இளவரசி குந்தவையும், அருண்மொழிவர்மனும். ஆதித்தகரிகாலன் கொல்லப்படுகிறான். அருண்மொழி அரசனாகாமல் உண்மையான மதுராந்தகனை அரசனாக்குவதுடன் கதை முடிகிறது.

வந்தியத்தேவன் தற்செயலாக சம்புவராயர் அரண்மனைக்கு வருவதும் அங்கே சதியோலாசனை ஒன்றை ஒட்டுக் கேட்பதிலும் ஆரம்பிக்கும் கதை அங்கிருந்தே கீழே வைக்க முடிவதில்லை. வந்தியத்தேவன் நந்தினியைச் சந்திப்பதும், கந்தமாறன் அவனை துரோகி என்று நினைப்பதும், குந்தவையின் ஓலை கொண்டு வந்தியத்தேவன் அருண்மொழியை சந்திக்க செல்வதும், பூங்குழலியின் உதவியோடு சந்திப்பதும், ஆபத்துதவிகள் சோழ மன்னர் பரம்பரையையே ஒழித்துக் கட்ட முயற்சிப்பதும் இரண்டு கொலை முயற்சிகள் தோற்பதும், ஒன்று வெல்வதும், பெரிய பழுவேட்டரையரின் மரணமும் ஒன்றன்பின் ஒன்றாக நம்மை வேறு உலகத்துக்கு கொண்டு போய்விடுகின்றன. ஆழ்வார்க்கடியான், பூங்குழலி போன்றவர்கள் சிறப்பாக வடிக்கப்பட்ட பாத்திரங்கள்.

பதின்ம வயதில் நண்பர்கள் பல மணி நேரமாக ஆதித்த கரிகாலனைக் கொன்றது யார் என்று பேசி இருக்கிறோம். பெரிய பழுவேட்டரையர் தான்தான் கொன்றேன் என்று ஒத்துக் கொள்கிறார். ஆனால் அவர் இறக்கும்போது தான் கொலையாளி இல்லை என்று சொல்லிவிட்டு இறக்கிறார். ஆதித்தகரிகாலன் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று சொல்வதாக ஒரு வரி வரும், ஆனால் தற்கொலை இல்லை என்றும் கல்கி தெளிவுபடுத்திவிடுவார். நந்தினி கொல்லவில்லை. ஆபத்துதவியை பெரிய பழுவேட்டரையரே தாக்கிவிடுவார். பிறகு யார்தான் கொன்றது? பேசிக் கொண்டே இருந்திருக்கிறோம்.

இன்னொரு பொழுதுபோக்கு திரைப்படமாக எடுத்தால் யார் யார் நடிக்க வேண்டும் என்று பேசுவது. அன்றைய எங்கள் தேர்வு ரஜினி ஆதித்தகரிகாலனாக; சிவகுமார்தான் அருண்மொழிவர்மனுக்கு சிறந்த தேர்வு என்று தோன்றியது, அதனால் கமல் அவ்வள்வு பொருத்தம் இல்லை என்று தோன்றினாலும் கமலுக்கு வந்தியத்தேவன் ரோல். பெரிய பழுவேட்டரையராக சிவாஜி; தேங்காய் ஆழ்வார்க்கடியான். முத்துராமன் கந்தமாறன். விஜயகுமார் சேந்தன் அமுதன். வெண்ணிற ஆடை மூர்த்தி பினாகபாணி. மேஜர் சுந்தர சோழன். சுஜாதா மந்தாகினி. சரிதா அல்லது ராதா பூங்குழலி. லட்சுமி குந்தவை. மனோகர் சின்ன பழுவேட்டரையர். நம்பியார் ரவிதாசன். வானதி அம்பிகா. கடைசியில் நந்தினியாக நடிக்க யாரும் இல்லாததால் திரைப்படம் எடுக்கும் முயற்சியை கைகழுவிவிட்டோம்.

பொ. செல்வனை சுருக்க முடியாது. படியுங்கள் என்றுதான் சொல்ல முடியும். இதை சரியானபடி மொழிபெயர்த்தால் டூமாவின், ஸ்காட்டின் இடத்தில் கல்கி உட்கார வாய்ப்பிருக்கிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: கல்கி பக்கம்

நெருங்கிய உறவினர் கல்கி

என் தங்கையின் (அருணா) மூத்த மைத்துனரின் (விசு) இளைய மருமகளின் (சாரதா) அப்பாவின் கஸின் (அத்தான்? அம்மாஞ்சி? ஒன்று விட்ட அண்ணா/தம்பி?) ராம்நாராயணின் (முன்னாள் கிரிக்கெட் வீரர் உட்பட பல முகங்கள் கொண்டவர்) மனைவியின் (எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், பாடகி கௌரி ராம்நாராயண்) தாத்தா கல்கி!

ஆங்கிலத்தில் எப்படி வருகிறது என்று பார்க்கிறேன்.

I am Kalki’s granddaughter’s husband’s first cousin’s daughter’s father-in-law’s sister-in-law’s elder brother! Just 7 hops! MS is just a couple more hops away!

தொகுக்கப்பட்ட பக்கம்: கல்கி பக்கம்

க. நா. சு.: படித்திருக்கிறீர்களா?

(மேம்படுத்தப்பட்ட மீள்பதிவு, ஒரிஜினல் பதிவு இங்கே.)

க.நா.சு.வின் இந்தப் பட்டியல் எனக்கு தனிப்பட்ட முறையில் மிக முக்கியமானது. Eye opener. தமிழ் புனைவுலகு டைம் பாஸ் மட்டுமே அல்ல, விகடன்/குமுதம், சுஜாதா/சாண்டில்யன்/பொ. செல்வன் மட்டுமே அல்ல, மிகச் சிறந்த படைப்புகள் நிறைய உண்டு, அவற்றை பற்றி பேசவும் எழுதவும் ஆட்கள் இருக்கிறார்கள் என்று இதை படிப்பதற்கு முன் எனக்கு தெளிவாக தெரியாது. ஏதோ நாலைந்து நல்ல எழுத்தாளர்கள்/புத்தகங்கள் இருக்கலாம் என்றுதான் நினைத்திருந்தேன். தமிழில் நல்ல எழுத்துகளுக்கான என் தேடலுக்கு வழி காட்டிய முதல் புத்தகம் இதுதான். இந்தப் புத்தகத்தை வாங்கி அடுத்த ஒரு மணி நேரத்தில் படித்தபோது கிடைத்த மகிழ்ச்சிக்கு ஈடாக திலீப்குமாரின் புத்தகக் கடையை கண்டுபிடித்தபோது கிடைத்த மகிழ்ச்சி, ஜெயமோகனை முதல் முறை சந்தித்தபோது கிடைத்த மகிழ்ச்சியைத்தான் சொல்லலாம்.

செகந்தராபாதில் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் அந்த காலத்தில் வருஷா வருஷம் ஒரு தமிழ் புத்தக கண்காட்சி நடத்துவார். அங்கே இதை வாங்கிவிட்டு வராந்தாவிலேயே படித்ததும், இதில் உள்ள புத்தகம் எல்லாம் வருவதில்லை என்று அவர் சொன்னதும் ஏமாற்றத்துடன் திரும்பியதும் நினைவிருக்கிறது. எஸ்.வி.வி. எழுதிய உல்லாச வேளை மட்டும் அப்போது கிடைத்தது.

தன் ரசனையின் அடிப்படையில், தனக்கு பிடித்த புத்தகங்களை பற்றி இங்கே க.நா.சுப்ரமண்யம் அலசுகிறார். நான் தமிழில் இதற்கு முன் சமகால தமிழ் படைப்புகளைப் பற்றி பேசும் வேறு புத்தகங்களை படித்ததில்லை. நற்றிணை, நல்ல குறுந்தொகை, ஐங்குறுநூறு, ஒத்த பதிற்றுப்பத்து, ஓங்கு பரிபாடல் மாதிரி இலக்கியங்கள் பற்றி நிறைய கிடைக்கும், ஆனால் அதை எல்லாம் எவன் படிப்பது என்றுதான் அன்று தோன்றியது. இன்று இவற்றைப் படிக்கும் முதிர்ச்சி வந்திருக்கிறது, ஆனால் இன்றும் அவற்றை நேரடியாகப் படிப்பதைத்தான் விரும்புகிறேன், கோனார் நோட்ஸ்களை அல்ல.

க.நா.சு.வின் அணுகுமுறை எனக்கு மிகவும் இசைவானதுதான். ஆனால் அவர் ரசனைக்கும் எனது ரசனைக்கும் ஒத்துப் போகவில்லை என்பது பெரிய நகைமுரண். க.நா.சு.வின் பட்டியலில் அனேகமானவை எனக்கு சாதாரணப் புத்தகங்களாகத் தெரிகின்றன. சில சமயம் க.நா.சு. போன்ற ஜாம்பவான் இதை எப்படிய்யா பரிந்துரைத்தார் என்று வியக்கிறேன். ஜெயமோகன் சட்டகங்களை வகுத்து வரையறைகளை செதுக்கி இந்தப் புத்தகம் இந்தப் பாணி இப்படிப் படிக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லும்போது புத்தகத்தைப் படிக்க வேண்டும் அதற்கு என்ன இத்தனை சட்டதிட்டம் என்று தோன்றும். ஆனால் அவர் எனக்கு ஒரு புத்தகம் பிடித்திருக்கிறது என்று சொன்னால் அனேகமாக எனக்கும் பிடித்திருக்கும். இது அடுத்த நகைமுரண்!

அதாவது க.நா.சு.வின் அணுகுமுறையைத்தான் என்னால் ஏற்க முடிகிறது. ஆனால் ஜெயமோகனின் ரசனைதான் எனக்கு ஒத்து வருகிறது. 🙂

இந்த புத்தகத்தின் முதல் பதிப்பு 1957-இல் வந்தது. அதற்கு முன் வந்த புத்தகங்களை பற்றித்தான் அவர் இங்கே எழுதி இருக்க முடியும். Obviously. விலை என்ன தெரியுமா? இரண்டே முக்கால் ரூபாய்!

ஜெயமோகன் ஒரு பின்னோட்டத்தில் சொன்னார்.

அவர் (க.நா.சு.) போட்டு 30 வருடம் புழங்கிய பட்டியல்தான் படித்திருக்கிறீர்களா? இன்றும் தமிழில் புழங்கும் தரவரிசை அதில் உருவாகி வந்ததே. அதற்காக கநாசு 30 வருடம் வசைபாடப்பட்டார். வசை தாங்க முடியாமல் சென்னையை விட்டே ஓடி டெல்லியில் தஞ்சம் புகுந்தார்.

க.நா.சு. போட்டதுதான் முதல் பட்டியல் போலிருக்கிறது. இதற்கு வசை பாடப்பட்டாரா? என்ன மக்களோ!

க.நா.சு.வின் பட்டியல் கீழே. இவற்றில் சில இன்னும் கிடைக்கவில்லை, ரசனை வேறுபட்டிருக்கிறது என்று தெரிந்தாலும் இன்னும் தேடுவதை நானும் நிறுத்தவில்லை.

  • புதுமைப்பித்தனின் காஞ்சனைபுதிய கூண்டு, கடவுளும் கந்தசாமி பிள்ளையும், சுப்பையா பிள்ளையின் காதல்கள், செல்லம்மாள், சாப விமோசனம் ஆகிய கதைகள் உலகத்தின் சிறந்த சிறுகதைகள் என்று தொகுத்தால் கூட போடலாம். சுப்பையா பிள்ளையின் காதல்கள் ஜேம்ஸ் தர்பர் எழுதிய Secret Life of Walter Mitty என்ற அருமையான கதையை நினைவுபடுத்தலாம். தர்பர் கதையை படித்துவிட்டு புதுமைப்பித்தன் எழுதினாரா என்று எனக்கு தெரியாது. ஆனால் அப்படியே எழுதி இருந்தாலும் கூட இது ஒரு அற்புதமான கதை என்பதில் எந்த மாற்றமும் இல்லை. காஞ்சனைதான் தமிழின் முதல் பேய்க்கதையாம். க.நா.சு. இந்தச் சிறுகதை தொகுப்பை பற்றி எழுதியதை இங்கே முழுமையாகப் படிக்கலாம். புதுமைப்பித்தனே எழுதிய முன்னுரை இங்கே. என் ரசனைக்கு ஒத்துப் போகும் க.நா.சு. தேர்வு.
  • தீபனின் அரும்பிய முல்லை – நான் படித்ததில்லை. தீபன் டி.கே.சி.யின் புதல்வர். அவர் எழுதிய கதை, கவிதை, விமர்சனம், கடிதங்களிலிருந்து சில பகுதிகள் இந்தப் புத்தகத்தில் தொகுக்கப்பட்டிருக்கின்றன. யாராவது படித்திருந்தால் இதைப் பற்றி எழுதுங்களேன்!
  • சிதம்பர சுப்ரமணியனின் இதயநாதம் – இந்த புத்தகம் பற்றி க.நா.சு. எழுதியதை படித்த பின்னர் இது கிடைக்காதா என்று பெரிய ஏக்கமே இருந்தது. நண்பர் ராஜனிடம் இந்தப் புத்தகமும் மண்ணில் தெரியுது வானம் என்ற புத்தகமும் கிடைத்தது. ஆனால் படித்தபோது இது ஒரு சுமாரான நாவல் என்றுதான் எண்ணினேன். ஏன் இதைப் பரிந்துரைத்தார் என்று யோசிக்க வைத்தது. படிக்கலாம், ஆனால் படித்தே ஆக வேண்டிய நாவல் இல்லை.
  • எஸ். வையாபுரிப் பிள்ளையின் தமிழ் சுடர்மணிகள் – நல்ல புத்தகம், நானும் பரிந்துரைக்கிறேன். பிள்ளையைப் பற்றிய சில பதிவுகள் இங்கே, இங்கே மற்றும் இங்கே.
  • லா.ச.ரா.வின் ஜனனி – நல்ல சிறுகதைத் தொகுப்பு, ஆனால் என் கண்ணில் இதை விட சிறந்த புத்தகங்களை லா.ச.ரா. எழுதி இருக்கிறார். பாற்கடல், புத்ர, அபிதா, சிந்தாநதி, இதழ்கள்… லா.ச.ரா.வின் எழுத்துகள் எப்போதுமே உணர்ச்சி பிரவாகம், இதுவும் அப்படித்தான். கண்ணாடியில் பிம்பம் விழும் ஓசை என்று அவர் எழுதிய ஒரு வரி மிக பிரபலம். நல்ல வரியும் கூட. பூப்பூக்கும் ஓசை பாட்டின் வரிகள் மாதிரி இல்லை?
  • எஸ்.வி.வி.யின் உல்லாச வேளை – அந்தக் காலத்தில் படித்தபோது எஸ்.வி.வி. கலக்கிவிட்டார் என்று தோன்றியது. நகர்ப்புற, மேல் மத்திய தர வர்க்க, பிராமண milieu. படிக்க உண்மையிலேயே உல்லாசமாக இருந்தது. “படித்திருக்கிறீர்களா” பட்டியலைப் பார்த்துவிட்டு அதே புத்தகக் கண்காட்சியில் தேடியபோது கிடைத்து ஒரே புத்தகம் இதுதான். கல்கியின் நகைச்சுவை மாதிரி இருந்தது. ஆனால் 15-20 வருஷம் கழிந்த பிறகு மீள்வாசிப்பில் வெறும் fluff என்று தோன்றியது. அப்போதே அவரது ராமமூர்த்தி போன்ற பிற புத்தகங்கள் எனக்கு ரசிக்கவில்லை. என் கண்ணில் இதற்கு இன்றைக்கு ஒரு curiosity value மட்டுமே.
  • வ.வே.சு. ஐயரின் மங்கையர்க்கரசியின் காதல் – நான் முழு புத்தகத்தையும் படித்ததில்லை. ஆனால் இதில் வரும் குளத்தங்கரை அரசமரம் நல்ல சிறுகதை, தமிழின் முதல் சிறுகதை என்று பரவலாகக் கருதப்படுகிறது. மங்கையர்க்கரசியின் காதல் சிறுகதையை இங்கே படிக்கலாம்.
  • யதுகிரி அம்மாளின் பாரதி நினைவுகள் யதுகிரி அம்மாள் பாரதியாரின் நண்பர் (மண்டயம் திருமலாச்சாரியார்) ஒருவரின் மகள். பாண்டிச்சேரியில் சிறுமியாக இருந்தபோது பாரதியாரை அருகில் இருந்து பார்த்தவர். மிகைப்படுத்துதல் எதுவும் இல்லாத, மிக உண்மையான அவதானிப்புகள். என் ரசனைக்கு ஒத்துப் போகும் க.நா.சு.வின் தேர்வு.
  • வ.ரா.வின் நடைச்சித்திரம் – வாழ்க்கையில் உள்ள மனிதர்களை பற்றி ஒன்றிரண்டு பக்கங்களில் நன்றாக எழுதி இருப்பார். போஸ்ட்மன் பொன்னம்பலம், காய்கறிக்காரி அம்மாக்கண்ணு, தமிழ் வாத்தியார் முத்துசாமி என்று இருக்கும். சின்ன வயதில் படித்திருக்கிறேன். மீள்வாசிப்பிலும் பிடித்திருந்தது. என் ரசனைக்கு ஒத்துப் போகும் க.நா.சு.வின் தேர்வு.
  • சங்கரராமின் மண்ணாசை – படித்ததில்லை. படிக்க வேண்டும் என்று க.நா.சு. ஏக்கப்பட வைக்கிறார். யாராவது படித்திருந்தால் இதைப் பற்றி எழுதுங்களேன்!
  • ஏ.கே. செட்டியாரின் உலகம் சுற்றும் தமிழன் – நல்ல தேர்வு.
  • தி. ஜானகிராமனின் கொட்டுமேளம் – சிறுகதை தொகுப்பு. இதுவும் நண்பர் ராஜனிடம் கிடைத்தது. அதைப் பற்றிய பதிவு இங்கே. சிலிர்ப்பு அருமையான சிறுகதை. பசி ஆறிற்று, தவம் என்ற இன்னும் இரண்டு சிறுகதைகளும் குறிப்பிட வேண்டியவை. எந்த சிறுகதையும் சோடை போகவில்லை.
  • மு.வ.வின் கரித்துண்டு. மறைந்த நண்பர் சேதுராமன் அனுப்பிய புத்தகம். மு.வ.வின் நாவல்கள் எனக்கு அவ்வளவாக பிடிப்பதில்லை. ஆனால் இது பிடித்திருந்தது. ஆனால் இது எல்லாருக்குமான நாவல் அல்ல. தமிழின் சிறந்த நாவல்கள் என்று நான் ஒரு பட்டியல் போட்டால் அதில் வராது.
  • தி.ஜ.ர.வின் பொழுதுபோக்கு – படித்ததில்லை. யாராவது படித்திருந்தால் இதைப் பற்றி எழுதுங்களேன்!
  • டி.எஸ்.எஸ். ராஜனின் நினைவு அலைகள்/. நானும் பரிந்துரைக்கும் புத்தகம். விரிவாக இங்கே.
  • ஆர். ஷண்முகசுந்தரத்தின் நாகம்மாள் -க.நா.சு.வின் விவரிப்பு படிக்க வேண்டும் என்று ஏக்கப்பட வைத்தது. ஆனால் முதல் வாசிப்பு எனக்கு ஏமாற்றம் தந்தது. க.நா.சு. கொடுத்த பில்டப் அளவுக்கு புத்தகம் இல்லை என்று நினைத்தேன். மறுவாசிப்பில் எனது வாசிப்பின் குறைகள் தெரிந்தன, நல்ல புத்தகம் என்று நினைத்தேன்.
  • கு. அழகிரிசாமி கதைகள்அழகிரிசாமி அற்புதமான எழுத்தாளர். மேலே வார்த்தைகளை வளர்த்துவானேன்?
  • அ. சுப்ரமணிய பாரதியாரின் ஜடாவல்லவர் இந்தப் புத்தகம்தான் எங்கள் ரசனை வேறுபாட்டை சந்தேகம் இல்லாமல் காட்டுகிறது. இதெல்லாம் ஒரு புத்தகம், இதை க.நா.சு. பரிந்துரைக்கிறார் என்ற வியப்பு அடங்கவே இல்லை.
  • கல்கியின் சங்கீத யோகம் – தமிழிசை இயக்கம் பற்றி கல்கி எழுதியவை. படித்ததில்லை. க.நா.சு.வின் முழுக் கட்டுரையும் இங்கே.
  • பாரதிதாசன் கவிதைகள் – அவருக்கு சந்தம் கை வந்த கலை, அவ்வளவுதான். எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு என்று சொல்லிப் பாருங்கள்! இல்லை கொடு வாளினை எடடா பல கொடியோர் செயல் அறவே என்று சொல்லிப் பாருங்கள்! அவருக்கு நல்ல நகைச்சுவை உணர்வு உண்டு. இருண்ட வீடு என்ற சிறு காவியத்தை படித்துப் பாருங்கள். இல்லை என்றால் தமிழ் சினிமாவின் நிலை பற்றி அவர் எழுதியதிலிருந்து ஒரு வரி – பத்தினிக்கு இன்னல் வரும், பழையபடி தீரும். ஆனால் பாரதிதாசன் நல்ல கவிஞர் இல்லை என்பது என் உறுதியான கருத்து. இத்தனைக்கும் எனக்கும் கவிதைக்கும் ரொம்ப தூரம் என்பது எனக்கு நன்றாகவே தெரியும்.
  • கு.ப.ராவின் கனகாம்பரம் – சிறுகதைத் தொகுப்பு. கனகாம்பரம், திரை, பண்ணை செங்கான், விடியுமா? ஆகியவை மிக நல்ல கதைகள். கு.ப.ரா. மிகவும் subtle ஆக எழுதக்கூடியவர்.

தொகுக்கப்பட்ட பக்கம்: க.நா.சு. பக்கம், புத்தகப் பரிந்துரைகள்

கல்கி: சிவகாமியின் சபதம்

சிவகாமியின் சபதம் தமிழ் கூறும் நல்லுலகுக்கு நன்றாகத் தெரிந்த நாவல். கல்கி மறைந்த பிறகும் கல்கியின் பழைய தொடர்கதைகளில் ஏதோ ஒன்று – பார்த்திபன் கனவு, சி. சபதம், பொன்னியின் செல்வன், அலை ஓசை – கல்கி பத்திரிகையில் மாற்றி மாற்றி வந்து கொண்டே இருக்கும். நான்கும் மீண்டும் மீண்டும் விரும்பிப் படிக்கப்பட்டன, கல்கி பத்திரிகை விற்றது. அந்த அளவுக்கு பிரபலமான நாவல்.

கதையின் பலம் பாத்திரங்கள் – குறிப்பாக நாகநந்தி. நாகநந்தி கற்பனைப் பாத்திரம். புலிகேசியின் இரட்டை சகோதரர். அதே உருவம். புத்த பிக்ஷுவாக சாளுக்கிய அரசுக்கு ஒற்று வேலை பார்ப்பவர். நாகநந்தியின் பாத்திரம்தான் கதையை ஒருங்கிணைக்கிறது, கதையின் சுவாரசியம் குறையாமல் பார்த்துக் கொள்கிறது. இரண்டாவதாக மகேந்திரவர்மர். புலிகேசியின் படையெடுப்பை தடுக்க மகேந்திரவர்மர் செய்யும் தந்திரங்கள் சுவாரசியமானவை. சிவகாமி, நரசிம்மவர்மர், நரசிம்மவர்மரின் படைத்தளபதியாக பரிணமிக்கும் பரஞ்சோதி, சிவகாமியின் அப்பா ஆயனச் சிற்பி எல்லாருமே பலமான பாத்திரங்கள்.

இரண்டாவது பலம் கதைப்பின்னல். அதிசயத் தற்செயல் நிகழ்ச்சிகள் குறைவு. ஒரு சம்பத்திலிருந்து இன்னொரு சம்பவத்துக்கு சரளமாகச் செல்லும் கதை. என் கண்ணில் வெகு சில தமிழ் சரித்திர நாவல்களே இப்படி கட்டுக்கோப்புடன் எழுதப்பட்டிருக்கின்றன.

பலவீனம்? இது பொழுதுபோக்கு நாவல்தான், வணிக நாவல்தான், இலக்கியம் அல்ல. கல்கியே அப்படித்தான் எழுத விரும்பி இருப்பார். பெரிய மானுட தரிசனங்களை எதிர்பார்க்க முடியாது. நல்ல அரண்மனைச் சதி நாவல், அவ்வளவுதான். பாத்திரங்கள் – நாகநந்தி உட்பட – caricatures மட்டுமே. வாசகர்கள் விரும்பிப் படிக்க வேண்டும், அடுத்த அத்தியாயம் எப்போது வரும் என்று வாசகர்கள் காத்திருந்து படிக்க வேண்டும் என்று எண்ணியே கல்கி இதை எழுதி இருப்பார். கட்டுக்கோப்பான கதை, முடிச்சு, சாகசம், ஒரு “பயங்கர” வில்லன், மாமல்லபுரம் பற்றிய பெருமிதம், ஆகியவையே இவற்றின் பலம். 10-11 வயதில் படித்தால் மனதில் நீங்காத இடம் பெறும்.

சி. சபதத்தை விரும்பிப் படித்த தலைமுறைக்கு வயதாகிவிட்டதால் கதை சுருக்கமாக: சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசி பல்லவ அரசர் மகேந்திரவர்மர் மீது படையெடுத்து வந்ததும், ஆரம்பத்தில் வெற்றி பெற்றதும் மகேந்திரவர்மர் புலிகேசியை வென்று தன் ராஜ்யத்துக்கு திரும்பச் செய்ததும், பின்னாளில் மகேந்திரவர்மரின் மகனான நரசிம்மவர்மர் புலிகேசி மீது படையெடுத்துச் சென்று வெற்றி பெற்றி சாளுக்கியத் தலைநகரான வாதாபியை அழித்ததும் வரலாறு. இந்தப் பின்புலத்தில் இளைஞரான நரசிம்மவர்மர் – நடனப் பெண் சிவகாமி காதல், புலிகேசி திரும்பிச் செல்லும்போது சிவகாமியைக் கடத்திச் செல்லுதல், சிவகாமி வாதாபி அழிக்கப்பட்டாலொழிய காஞ்சி திரும்பமாட்டேன் என்று சபதம் செய்தல், காதல் முறிவு, நாகநந்திக்கு சிவகாமி மீது ஏற்படும் காதல் – obsession, சபதப்படி வாதாபி அழிக்கப்படல் என்று கதை.

கல்கி போட்ட கோட்டில்தான் ஓரிரண்டு தலைமுறைக்கு தமிழ் சரித்திர நாவல்கள் எழுதப்பட்டன – அரண்மனைச் சதிகள். அது அவரது தவறு இல்லைதான். ஆனால் அப்படி சரித்திர நாவல்கள் வெறும் அரண்மனைச் சதி நாவல்களாக குறுகிவிட்டது பா. கனவு, சி. சபதம், பொ. செல்வன் நாவல்களின் துரதிருஷ்டமான விளைவு என்று கருதுகிறேன்.

ஜெயமோகன் இந்த நாவலை சிறந்த சரித்திர பொழுதுபோக்கு நாவல்கள் பட்டியலில் சேர்க்கிறார். எஸ்ரா பட்டியலில் இந்த நாவல் இடம் பெறவில்லை.

ஆயிரம் நொட்டை சொன்னால் என்ன, படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: கல்கி பக்கம்

பார்த்திபன் கனவு

1895-இலேயே முதல் சரித்திர நாவல் (மோகனாங்கி) வந்துவிட்டதாம். இருந்தாலும் தமிழர்களுக்கு 1942-இல் வந்த பார்த்திபன் கனவுதான் முதல் சரித்திர நாவல்.

பார்த்திபன் கனவுக்கும் வடுவூர் துரைசாமி ஐயங்கார் நாவல்களுக்கும் கதைப்பின்னல் என்ற வகையில் பெரிய வித்தியாசம் கிடையாது. மாயாவினோதப் பரதேசி நாவலில் திகம்பர சாமியார் செய்யும் அஜால்குஜால் வேலைகளை இங்கே சிவனடியார் செய்கிறார். ரோமியோ ஜூலியட் போல ஒரு ஜோடி, சுலபமாக யூகிக்கக்கூடிய முடிச்சுகள், திருப்பங்கள், இன்டர்நெட்டும் ஈமெயிலும் இல்லாத காலத்திலேயே நாட்டில் ஒவ்வொரு மூலையிலும் நடப்பதைத் அடுத்த நிமிஷமே தெரிந்து கொள்ளும் சக்கரவர்த்தி, caricature என்ற லெவலில் உள்ள பாத்திரங்கள் என்று பலவிதமான பலவீனங்கள் உள்ள நாவல். எனக்கு இது அவருக்கு ஒரு practice நாவலோ, எழுதிப் பழகி கொண்டாரோ என்று தோன்றுவதுண்டு. Fluff என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆனால் கல்கி வடுவூராரை விட பல மடங்கு தொழில் திறமை உள்ளவர். அவரால் வெகு சரளமாக எழுத முடிகிறது. யூகிக்கக் கூடிய கதை என்றாலும் கல்கியால் அதை சுவாரசியமாக எழுத முடிகிறது. எங்க வீட்டுப் பிள்ளையும் ஷோலேயும் இன்றும் ரசிக்கும்படிதானே இருக்கின்றன? இன்றே ரசிக்க முடிகிறதென்றால் அன்று இந்த நாவல் எத்தனை தாக்கத்தை ஏற்படுத்தி இருக்க வேண்டும்? வாசகர்கள் எத்தனை தூரம் விரும்பிப் படித்திருக்க வேண்டும்? கல்கி ஆனந்த விகடன் பத்திரிகையிலிருந்து விலகி கல்கி பத்திரிகையை ஆரம்பித்த சில மாதங்களிலேயே இதை தொடர்கதையாக எழுத ஆரம்பித்துவிட்டார். வியாபாரம் பெருக இந்த நாவல் ஒரு முக்கிய காரணமாக இருந்திருக்க வேண்டும். பத்திரிகையில் தொடர்கதையாக வருவது இந்த நாவலுக்கான வாசகர் வட்டத்தையும் அதிகரித்திருக்க வேண்டும்.

கல்கி எழுதியது ஒரு முன்னோடி நாவல். முன்னோடி முயற்சிக்கு உண்டான பலங்களும் பலவீனங்களும் அதில் நிறைய இருக்கின்றன. அவரைச் சொல்லியும் குற்றமில்லை, அவரது ரோல் மாடல்கள் அலெக்சாண்டர் டூமாவும், வால்டர் ஸ்காட் ஆகியோரின் பாணியில் ஆனால் அவர்களை விட சிறப்பாக எழுதினார்.

கல்கி எழுதியது வணிக நாவல். வணிக நாவல் எழுத வேண்டும், வாசகர்கள் விரும்பிப் படிக்க வேண்டும், அடுத்த அத்தியாயம் எப்போது வரும் என்று வாசகர்கள் காத்திருந்து படிக்க வேண்டும் என்று எண்ணியே இதை எழுதி இருப்பார். இதில் பெரிய மானுட தரிசனங்கள் இல்லை. கல்கியின் எந்த நாவலிலும் அதெல்லாம் கிடையாது. கட்டுக்கோப்பான கதை, முடிச்சு, சாகசம், ஒரு “பயங்கர” வில்லன், மாமல்லபுரம் பற்றிய பெருமிதம், காவிரி பற்றிய வர்ணனைகள் ஆகியவையே இவற்றின் பலம். எட்டு ஒன்பது வயதில் படித்தால் மனதில் நீங்காத இடம் பெறும்.

பார்த்திபன் கனவை விரும்பிப் படித்த தலைமுறைக்கு வயதாகிக் கொண்டே போகிறது. அதனால் கதை சுருக்கமாக: சோழ அரசன் பார்த்திபன் பல்லவ அரசன் சக்ரவர்த்தி நரசிம்மவர்ம பல்லவருக்கு கப்பம் கட்ட மறுக்கிறான். அவனது கனவு சோழ அரசு பல்லவர்களிடமிருந்து விடுதலை பெற வேண்டும், கரிகாலன் காலத்து கீர்த்தியை மீண்டும் அடைய வேண்டும் என்பது. மகன் விக்ரமன் சிறுவனாக இருக்கும்போதே நரசிம்மவர்மரை எதிர்த்துப் போராடி இறக்கிறான். அவன் வீரத்தைக் கண்டு பூரித்துப் போன சிவனடியார் ஒருவர் அவன் இறக்கும்போது விக்ரமனை வீரனாக வளர்க்கிறேன் என்று வாக்களிக்கிறார். விக்ரமன் வாலிபன் ஆன பிறகு சக்ரவர்த்தியை எதிர்த்து நாடு கடத்தப்படுகிறான். உண்மையில் நரசிம்மவர்மர் அவனை தொலைதூர தீவு ஒன்றுக்கு அரசனாக அனுப்புகிறார். அனுப்புவதற்கு முன் நரசிம்மவர்மரின் மகள் குந்தவி விக்ரமனை நோக்க அண்ணலும் நோக்குகிறான். குந்தவியைத் தேடி மீண்டும் தமிழகம் திரும்பும் விக்ரமன், அவனைத் துரத்தும் காபாலிகன் ஒருவன், சிவனடியார் உண்மையில் யார் என்ற மர்மம், அடுத்தபடி எழுதப் போகும் சிவகாமியின் சபதம் நாவலுக்கு அங்கே இங்கே ஒரு தீற்றல்…

ஜெமினி கணேசன், வைஜயந்திமாலா, எஸ்.வி. ரங்காராவ் நடித்து திரைப்படமாகவும் வந்தது.

கல்கி சரித்திர நாவலை இப்படி எழுதலாம் என்று ஒரு கோடு போட்டார், ரோடு போட இரண்டு தலைமுறைக்கு யாரும் வரவில்லை. அந்த நாவலின் தாக்கத்தில் இருந்து இன்றும் தமிழகம் முழுதாக வெளிவரவில்லை. அன்று அவர் நிறுவிய parameters-ஐ ஒரு பரம்பரையே தொடர்ந்து பின்பற்றி வந்திருக்கிறது.

கல்கியைத் தாண்டி அடுத்தவர்கள் போகாததற்கு அவரைக் குறை சொல்ல முடியாதுதான். ஆனால் சரித்திரக் கதை என்றால் அது ராஜா-ராணி, இளவரசன், இளவரசி, அவர்களுக்கு உதவி செய்யும் மந்திரிகள், ஒற்றர்கள், போர்கள், அரண்மனைச் சதிகள், அங்கங்கே தமிழ்(இந்திய) கலை+இலக்கியப் பாரம்பரியம் பற்றிய பெருமிதம், ஃபார்முலா மனிதர்கள், எம்ஜிஆர் படம் மாதிரி கொஞ்சம் வீரம்+சாகசம்+காதல்+அன்பு+தந்திரம் எல்லாம் கலந்த ஒரு மசாலா என்றே சரித்திரக் கதை ஆசிரியர்களின் புரிதல் இருக்கிறது.

ஆயிரம் நொட்டை சொன்னாலும் தமிழர்கள் படிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: கல்கி பக்கம்

சுதந்திரப் போராட்ட நாவல்கள்

மீள்பதிவு. இன்னும் நிறைய இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.ஆனால் இரண்டு வருஷத்துக்கு முன்னால் போட்ட பட்டியலில் இன்றும் பெரிதாக மாற்றமில்லை. உங்களுக்கு நினைவு வருவதை சொல்லுங்களேன்!

ரொம்ப நாளாச்சு ஒரு பட்டியல் போட்டு. ஆகஸ்ட் 15 வேற. போட்டுடுவோமே!

கண்ணதாசன்: ஊமையன் கோட்டை (ஊமைத்துரை)
கமலப்ரியா: கொங்குத் தங்கம் (தீரன் சின்னமலை பற்றிய நாவல்)
கல்கி: அலை ஓசை, தியாகபூமி, மகுடபதி
கா.சி. வேங்கடரமணி: முருகன் ஓர் உழவன், தேசபக்தன் கந்தன்
கு. ராஜவேலு: 1942
கோவி. மணிசேகரன்: மறவர் குல மாணிக்கங்கள்
சாண்டில்யன்: புரட்சிப் பெண்
சி.சு. செல்லப்பா: சுதந்திர தாகம்
சிதம்பர சுப்ரமணியன்: மண்ணில் தெரியுது வானம்
சுஜாதா: ரத்தம் ஒரே நிறம்
நா.பா.: ஆத்மாவின் ராகங்கள்
ப. சிங்காரம்: கடலுக்கு அப்பால்/புயலிலே ஒரு தோணி
ர.சு. நல்லபெருமாள்: கல்லுக்குள் ஈரம்

இவற்றில் ஊமையன் கோட்டை, கொங்குத் தங்கம், மகுடபதி, மறவர் குல மாணிக்கங்கள், புரட்சிப் பெண் ஆகியவற்றை தவிர்த்துவிடலாம். அலை ஓசை, தியாகபூமி, முருகன் ஓர் உழவன், தேசபக்தன் கந்தன், மண்ணில் தெரியுது வானம், கல்லுக்குள் ஈரம் எல்லாம் சுமார் ரகம். 1942, ஆத்மாவின் ராகங்கள், கடலுக்கு அப்பால்/புயலிலே ஒரு தோணி, சுதந்திர தாகம் இவற்றை நான் படித்ததில்லை.

இத்தனைதான் ஞாபகம் இருக்கிறது. நிச்சயமாக இன்னும் வந்திருக்க வேண்டும், உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்களேன்!

தொகுக்கப்பட்ட பக்கம்: பரிந்துரைகள்