(குவளைக்) கண்ணன் என் சேவகன் – பாரதியார் கவிதை

கண்ணன் என் சேவகன் கவிதை பாரதியின் அணுக்கர் குவளைக்கண்ணனை மனதில் வைத்துத்தான் எழுதப்பட்டது என்கிறார்கள். ஏழெட்டு வயதில் பாரதியார் கவிதைகளைப் படித்தபோது மனம் கவர்ந்த கவிதைகளில் ஒன்று. “பானையிலே தேளிருந்து பல்லால் கடித்ததென்பான்” என்ற வரிக்கு விழுந்து விழுந்து சிரித்தது நினைவிருக்கிறது. “எள் வீட்டில் இல்லை என்றால் எங்கும் முரசறைவார்’ என்ற வரியும் கவர்ந்தது.

கூலி மிகக் கேட்பார் கொடுத்ததெலாம் தாம்மறப்பார்
வேலை மிக வைத்திருந்தால் வீட்டிலே தங்கிடுவார்
ஏனடா நீ நேற்றைக்கிங்கு வரவில்லை என்றால்
பானையிலே தேளிருந்து பல்லால் கடித்ததென்பார்
வீட்டிலே பெண்டாட்டி மேற்பூதம் வந்ததென்பார்
பாட்டியார் செத்துவிட்ட பன்னிரண்டாம் நாளென்பார்
ஓயாமல் பொய்யுரைப்பார்; ஒன்றுரைக்க வேறு செய்வார்
தாயாதியோடு தனியிடத்தே பேசிடுவார்
உள்வீட்டுச் செய்தியெல்லாம் ஊரம்பலத்துரைப்பார்
எள் வீட்டில் இல்லையென்றால் எங்கும் முரசறைவார்
சேவகரால் பட்ட சிரமம் மிக உண்டு, கண்டீர்
சேவகரில்லாவிடிலோ செய்கை நடக்கவில்லை

இங்கிதனால் யானும் இடர் மிகுந்து வாடுகையில்
எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்
மாடு கன்று மேய்த்திடுவேன் மக்களை நான் காத்திடுவேன்
வீடு பெருக்கி விளக்கேற்றி வைத்திடுவேன்
சொன்னபடி கேட்பேன் துணிமணிகள் காத்திடுவேன்
சின்னக் குழந்தைக்குச் சிங்காரப் பாட்டிசைத்தே
ஆட்டங்கள் காட்டி அழாதபடி பார்த்திடுவேன்
காட்டு வழியானாலும் கள்ளர் பயமானாலும்
இரவிற் பகலிலே எந்நேரமானாலும்
சிரமத்தைப் பார்ப்பதில்லை தேவரீர் தம்முடனே
சுற்றுவேன் தங்களுக்கோர் துன்பமுறாமற் காப்பேன்
கற்ற வித்தை ஏதுமில்லை காட்டு மனிதன் ஐயே!
ஆன பொழுதும் கோலடி குத்துப்போர் மற்போர்
நானறிவேன் சற்றும் நயவஞ்சனை புரியேன்
என்று பல சொல்லி நின்றான் ஏது பெயர்? சொல் என்றேன்
ஒன்றுமில்லை கண்ணனென்பார் ஊரிலுள்ளோர் என்னை என்றான்

கட்டுறுதி உள்ள உடல் கண்ணிலே நல்ல குணம்
ஒட்டுறவே நன்றாய் உரைத்திடும் சொல் ஈங்கிவற்றால்
தக்கவனென்றுள்ளத்தே சார்ந்த மகிழ்ச்சியுடன்
மிக்க உரை பல சொல்லி விருது பல சாற்றுகிறாய்
கூலி என்ன கேட்கின்றாய்? கூறு என்றேன் ஐயனே!
தாலி கட்டும் பெண்டாட்டி சந்ததிகள் ஏதுமில்லை
நானோர் தனியாள் நரை திரை தோன்றாவிடினும்
ஆன வயதிற்களவில்லை தேவரீர்
ஆதரித்தாற் போதும் அடியேனை நெஞ்சிலுள்ள
காதல் பெரிதெனக்குக் காசு பெரிதில்லை என்றான்

பண்டைக் காலத்துப் பைத்தியத்தில் ஒன்றெனவே
கண்டு மிகவும் களிப்புடனே நானவனை
ஆளாகக் கொண்டுவிட்டேன் அன்று முதற்கொண்டு
நாளாக நாளாக நம்மிடத்தே கண்ணனுக்கு
பற்று மிகுந்து வரல் பார்க்கின்றேன் கண்ணனால்
பெற்று வரும் நன்மை எல்லாம் பேசி முடியாது
கண்ணை இமை இரண்டும் காப்பது போல் என் குடும்பம்
வண்ணமுறக் காக்கின்றான் வாய் முணுத்தல் கண்டறியேன்
வீதி பெருக்குகிறான் வீடு சுத்தமாக்குகிறான்
தாதியர் செய் குற்றமெலாம் தட்டி அடக்குகிறான்
மக்களுக்கு வாத்தி, வளர்ப்புத்தாய், வைத்தியனாய்
ஒக்க நயம் காட்டுகிறான் ஒன்றும் குறைவின்றி
பண்டமெலாம் சேர்த்து வைத்து பால் வாங்கி மோர் வாங்கி
பெண்டுகளைத் தாய் போல பிரியமுற ஆதரித்து
நண்பனாய் மந்திரியாய் நல்லாசிரியனுமாய்
பண்பிலே தெய்வமாய் பார்வையிலே சேவகனாய்
எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி என்று சொன்னான்.
இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்!

கண்ணன் எனதகத்தே கால் வைத்த நாள் முதலாய்
எண்ணம் விசாரம் எதுவுமவன் பொறுப்பாய்
செல்வம் இளமாண்பு சீர்ச சிறப்பு நற்கீர்த்தி
கல்வி அறிவு கவிதை சிவயோகம்
தெளிவே வடிவாம் சிவஞானம் என்றும்
ஒளிசேர் நலமனைத்தும் ஓங்கி வருகின்றன காண்!
கண்ணனை நான் ஆட்கொண்டேன்! கண்கொண்டேன்! கண்கொண்டேன்!
கண்ணனை யாம் கொள்ளக் காரணமும் உள்ளனவே!


படிக்காத மேதை திரைப்படத்தில் இந்தக் கவிதையிலிருந்து நாலு வரிகளை எடுத்து பயன்படுத்தி இருப்பார்கள்.


குவளைக்கண்ணன் பாரதியாரின் அணுக்கர். மரியாதையாகச் சொல்ல வேண்டுமென்றால் தோழர். ஏறக்குறைய அல்லக்கைதான். பாரதிக்கு பாதுகாவலர் போல இருந்திருக்கிறாராம். அவரைத் தாண்டித்தான் பாரதியை அணுக முடியுமாம். பாரதியை யானை தாக்கியபோது இவர்தான் போய் பாரதியை தூக்கிக் கொண்டு வந்திருக்கிறார்.

ஆசாரமான பிராமணர் குடும்பத்தில் பிறந்தவராம். தயக்கங்கள் இருந்தும் பாரதி சொன்னதால் அந்தக் காலத்தில் முதலியார் வீட்டில் எல்லாம் சாப்பிட்டிருக்கிறாராம். குவளைக்கண்ணன்தான் புதுவையில் பாரதிக்கு பல சாமியார்களை அறிமுகம் செய்து வைத்தாராம். குவளைக்கண்ணனுக்கு ஏதோ கம்பெனியில் வேலை கிடைத்தபோது பாரதி நீ போகக்கூடாது, போனால் எனக்குத் துணையில்லை என்று தடுத்துவிட்டாராம்.

பாரதி புதுவைக்கு வந்தபோது இவர் மூலமாக சுந்தரேச ஐயர் என்ற வாசகர்/அன்பரை சந்தித்தாராம். இவருக்கும் பாரதி, இந்தியா பத்திரிகை மேல் ஈர்ப்பு இருந்தாலும் இவர்தான் பாரதி என்று தெரிந்து கொள்ள நாளாயிற்றாம்.

பாரதிக்கு எப்படி இந்த மாதிரி ஒரு “சீடர்” குழு அமைந்தது என்று வியப்பாகத்தான் இருக்கிறது. வேலை வெட்டி இல்லாமல் இவரோடு சுற்றிக் கொண்டிருந்தால் சாப்பாட்டுக்கு என்ன செய்வார்கள்? குவளைக்கண்ணனே கி.வா.ஜ.விடம் சொன்னாராம்.

நான் ஏழை; அறிவில்லாதவன். அவர் எனக்கு தன் செய்யுட்களில் ஒரு ஸ்தானம் கொடுத்திருக்கிறார். “கிருஷ்ணா, பொருட்செல்வம் அழிந்துவிடுமடா; கவிச்செல்வம் தருகிறேன் உனக்கு”

கடைசி காலத்தில் பொருளாதார ரீதியாக கொஞ்சம் கஷ்டப்பட்டிருக்கிறார் என்று கி.வா.ஜ. சொல்கிறார். பாரதி மாதிரி அபூர்வ ஆளுமைகளிடம் இந்த மாதிரி ஒரு ஸ்தானம் கிடைத்தால் மற்றதெல்லாம் இரண்டாம் பட்சம்தான் போலிருக்கிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: பாரதி பக்கம்

தொடர்புடைய சுட்டிகள்:
கி.வா.ஜ. குவளைக்கண்ணனின் கடைசி காலத்தை நினைவு கூர்கிறார்.
பாரதி-குவளைக்கண்ணன் முதல் சந்திப்பு

சாஹித்ய அகடமி விருது பெற்ற புத்தகம்: கி.வா.ஜ.வின் “வீரர் உலகம்”

1967-இல் தமிழுக்கான சாஹித்ய அகடமி விருது பெற்ற புத்தகம்.

புத்தகம் தமிழரின் போர் சம்பிரதாயங்களை சிறப்பாக விளக்குகிறது.

வெட்சி நிரைகவர்தல்; மீட்டல் கரந்தையாம்;
வட்கார்மேற் செல்வது வஞ்சியாம்; உட்காது
எதிரூன்றல் காஞ்சி; எயில் காத்தல் நொச்சி;
அது வளைத்தல் ஆகும் உழிஞை – அதிரப்
பொருவது தும்பையாம்; போர்க்களத்து மிக்கோர்
செரு வென்றது வாகையாம்

என்ற செய்யுளின் நீட்சிதான் இந்தப் புத்தகம். அந்தக் காலத்தில் போர் புரிவதற்கு ஒரு சம்பிரதாயம், ஒழுங்குமுறை இருந்திருக்கிறதாம். போரின் ஒவ்வொரு கட்டத்துக்கும் வேறு வேறு மலர்கள் அணிந்து வந்து போரிடுவார்களாம். ஒரு வேளை சூடி இருக்கும் மலரை வைத்துத்தான் இவன் நம்மவன், இவன் எதிரி என்று அடையாளம் கண்டுகொண்டார்களோ என்னவோ. போரை ஆரம்பிக்கும் மன்னன் வெட்சிப்பூ அணிந்த வீரர்களை அனுப்பி எதிரி நாட்டின் ஆடுமாடுகளை கவர்ந்து வரச் செய்ய வேண்டும். அவர்களைத் தடுக்க வருபவர்கள் கரந்தைப் பூ அணிந்து வந்து தடுக்க வேண்டும். பிறகு அடுத்த கட்டமாக படையெடுத்த் செல்ல வேண்டும், அப்போது வஞ்சிப்பூ அணிந்திருக்க வேண்டும். அதை தடுத்து நிறுத்துபவர்கள் காஞ்சிப்பூ. எயிலை – அதாவது கோட்டையைக் காப்பவர்கள் நொச்சிப்பூ அணிந்திருக்க வேண்டும், முற்றுகை இடுபவர்களுக்கு உழிஞைப்பூ. இரு படைகளும் நேருக்கு நேர் நின்று சண்டை இடும்போது இரண்டு பேருக்கும் தும்பைப்பூவாம் (எதிரி, நம்மவன் என்று அடையாளம் கண்டுகொள்வது சிரமம் ஆயிற்றே!) வென்றவர் வாகைப்பூ அணியலாம்.

தும்பைப்பூவைத் தவிர் மிச்சப் பூக்கள் எப்படி இருக்கும் என்று கூடத் இதை எழுத ஆரம்பிக்கும்போது தெரியாது. இந்தப் பதிவுக்காக கூகிளில் தேடியபோது கிடைத்த படங்கள் கீழே. வஞ்சிப்பூவுக்கான படம் கிடைக்கவில்லை. பிறவற்றில் வெட்சி, கரந்தை, உழிஞை ஆகியவற்றைப் பார்த்திருக்கிறேன். யாருக்காவது தெரியுமா?

போர் நடவடிக்கை பூவின் பெயர் பூ ஆங்கிலப் பெயர்
எதிரி நாட்டின் கால்நடைகளைக் கவர்தல் வெட்சிப்பூ West Indian Jasmine
கால்நடைகளை மீட்டல் கரந்தைப்பூ ஆங்கிலப் பெயர் தெரியவில்லை
எதிரி நாட்டின் மீது படையெடுத்து செல்லுதல் வஞ்சிப்பூ Rattan
படையெடுத்து வருபவர்களை எதிர்த்தல் காஞ்சிப்பூ ஆங்கிலப் பெயர் தெரியவில்லை
கோட்டையை முற்றுகையிடல் நொச்சிப்பூ Chinese Chaste Tree
கோட்டையை காத்து நிற்றல் உழிஞைப்பூ Baloon Vine
நேருக்கு நேர் போர் தும்பைப்பூ Thumba
வெற்றி வாகைப்பூ Siris

எல்லாத்துக்கும் ஒரு சம்பிரதாயமா, இதெல்லாம் எப்படி ஆரம்பித்திருக்கும், ஏன் நிலை பெற்றிருக்கும், இந்தப் பூ எல்லாம் எப்போதும் பூக்குமா, பூக்காத காலத்தில் போரே நடக்காதா என்று பல கேள்விகள் எழுகின்றன. இதில் ஒவ்வொரு கட்டத்தையும் சங்கக் கவிதைகளையும் பிற்காலக் கவிதைகளையும் உதாரணமாக வைத்து சிறப்பாக கி.வா.ஜ. விளக்கி இருக்கிறார். அவரைப் போன்ற பண்டிதரின் பெருமை இந்தப் புத்தகத்தில் சரியாக வெளிப்படுகிறது.

ஆனால் இதற்கெல்லாம் சாஹித்ய அகடமி விருதா? நல்ல தமிழாசிரியர் கல்லூரியில், மேல்நிலைப் பள்ளியில் கொடுக்கக் கூடிய விளக்கம் மட்டுமே இது. கோனார் நோட்சுக்கு கொஞ்சம் மேலே. நல்ல அறிமுகப் புத்தகம், அவ்வளவுதான். கி.வா.ஜ.வுக்கு கொடுக்க வேண்டும் என்று தீர்மானித்துவிட்டார்கள், இருப்பதில் எது பெஸ்ட் என்று பார்த்திருக்கிறார்கள் என்றுதான் தோன்றுகிறது. கி.வா.ஜ.வுக்கு எதற்கு சாஹித்ய அகடமி பரிசு என்றுதான் தோன்றுகிறது. அடுத்தபடி என்ன, கோனார் நோட்சுக்கு சாஹித்ய அகடமி விருது கொடுத்துவிடலாமா?

தொகுக்கப்பட்ட பக்கம்: சாஹித்ய அகடமி விருது

உ.வே. சாமிநாதய்யரின் ‘என் சரித்திரம்’

உ.வே.சா.வின் என் சரித்திரம் ஒரு காலத்தின் வாழ்க்கை முறைக்கு ஆவணம். அவருடைய உண்மையான தேடலை எடுத்துக் காட்டுகிறது. அவரது குணாதிசயம் மிக நன்றாகப் புரிகிறது. கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம்.

உ.வே.சா., உ.வே.சா.வின் குருநாதரான மீனாட்சிசுந்தரம் பிள்ளை, மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் சமகாலத்தவரான கோபாலகிருஷ்ண பாரதியார், ஏன் உ.வே.சா.வின் அப்பா கூட  19-ஆம் நூற்றாண்டின் பாணர்கள். அவர்களுக்கு தமிழில் புலமை, சங்கீதத் திறமை, செய்யுள் எழுதும் திறன், கீர்த்தனங்கள் எழுதும் திறன் என்று ஏதாவது ஒன்று இருந்திருக்கிறது. வாழ்க்கையை ஓட்ட கிராமங்களில் கச்சேரி, கதாகாலட்சேபம், உரைகள், எதையாவது நடத்தி இருக்கிறார்கள். மிராசுதார்கள், பண்ணையார்கள், சமஸ்தான அதிபதிகள், ஆதீனங்கள் யார் தயவாவது வேண்டி இருந்திருக்கிறது. ஆங்கிலேய ஆட்சியில் தமிழ் பண்டிதர்கள் மெதுமெதுவாக அரசு வேலைகளை நோக்கி நகர்ந்திருக்கிறார்கள். மீனாட்சிசுந்தரம் பிள்ளை அப்படி புரவலர் ஆதரவில் வாழ்ந்தவர்களின் கடைசி பிரதிநிதிகளில் ஒருவர். உ.வே.சா. மெதுமெதுவாக அரசு வேலைகள் பக்கம் நகர்ந்தவர்களின் முதல் பிரதிநிதிகளில் ஒருவர்.

சிறு வயதிலேயே உ.வே.சா.வின் மனம் தமிழில் ஈடுபட்டுவிட்டது. யாராவது ஏதாவது சொல்லித் தரமாட்டார்களா, எந்த நூலையாவது கற்றுக் கொள்ள மாட்டோமோ என்று அலைந்திருக்கிறார். அந்தக் காலகட்டத்தில் முதன்மையான தமிழ் பண்டிதர் மீனாட்சிசுந்தரம் பிள்ளை. முட்டி மோதி கடைசியில் அவரிடம் சேர்ந்திருக்கிறார். மெதுமெதுவாக பிள்ளையின் முதன்மை சீடர் ஆகி இருக்கிறார். பிள்ளையின் மறைவுக்குப் பிறகு பிள்ளை இருந்த ஸ்தானத்தில் திருவாவடுதுறை ஆதீனத்தின் ஆதரவில் வாழ்ந்திருக்கிறார்.

இந்தக் காலகட்டத்தில் தெளிவாகத் தெரிவது உ.வே.சா. பணம், பதவி உள்ளவர்களிடம் பணிவுடன் நடந்து கொள்வது. சில பல அவமானங்களை சகித்துக் கொள்வது. அவர்களின் ஆதரவு இல்லாமல் வாழ்க்கையை ஓட்ட முடியாது என்று அவருக்கு தெளிவாகத் தெரிந்திருக்கிறது. அவரை விடுங்கள், பிள்ளையே வளைந்து கொடுத்துத்தான் வாழ்க்கையை ஓட்ட முடிந்திருக்கிறது.

தெளிவாகத் தெரியும் இன்னொரு விஷயம் ஜாதி ஆசாரம். உ.வே.சா. பிராமணர். குருநாதர் மீது எத்தனை மரியாதை, அன்பு இருந்தாலும் பிள்ளை வீட்டில் இவர் சாப்பிட முடியாது, பிராமணர் சமைத்துத்தான் சாப்பிட வேண்டும். ஆனால் ஓரளவு நெகிழ்வுத்தன்மையும் தெரிகிறது. பிள்ளையின் சீடர்கள் பல ஜாதியினர். ஏன், கிறிஸ்துவரான சவேரிநாதப் பிள்ளை பிள்ளையின் முதன்மை சீடர்களில் ஒருவர்.

சில காலத்துக்குப் பிறகு தியாகராஜ செட்டியார் பரிந்துரையில் கும்பகோணம் கல்லூரியில் தமிழாசிரியராக பணி புரிகிறார். அப்போதும் கல்லூரி முதல்வர் தன் பணியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற டென்ஷன் எல்லாம் இருந்திருக்கிறது. அதாவது, கல்லூரி முதல்வர் தன் சொந்தப் பணத்தை இவருக்கு சம்பளமாகத் தரவில்லை என்றாலும், அவர்தான் இப்போது உ.வே.சா.வுக்கு புரவலர், அவர் மனம் கோணாமல் நடந்து கொள்ளவேண்டும் என்று முயன்றிருக்கிறார்.

தமிழில் பல பிரபந்தங்கள், உலாக்கள் போன்ற கொஞ்சம் பிற்கால நூல்களைப் படித்திருந்தாலும் உ.வே.சா. சிலப்பதிகாரம், மணிமேகலை, போன்ற பல நூல்களைப் பற்றி கேட்டதே இல்லை. அது வரை தமிழ் நூல்களைப் படிப்பது என்றால் குரு சீடருக்கு தலைமுறை தலைமுறையாக சொல்லித் தந்து வருவதுதான். சிறந்த தமிழறிஞர்களான மீனாட்சிசுந்தரம் பிள்ளை, தியாகராஜ செட்டியார் போன்றவர்களே சீவக சிந்தாமணி போன்ற நூல்கள் சரியாக புரியவில்லை என்று விட்டுவிட்டார்களாம். இந்த நூல்களைப் படிக்கும் சரடு எப்படியோ அறுந்து போயிருக்கிறது.

தற்செயலாக சேலம் ராமசாமி முதலியார் மூலம் இந்த நூல்களைப் பற்றி அறிந்து கொண்டிருக்கிறார். அவரது வாழ்க்கையே மாறிவிட்டது. சிந்தாமணியைப் புரிந்து கொள்ள பல வருஷம் உழைத்திருக்கிறார். சிந்தாமணியில் பல ஜைன மதம் சார்ந்த குறிப்புகள் உண்டாம். உ.வே.சா. பல ஜைனர்களிடம் சென்று பாடம் கேட்டிருக்கிறார்.  உ.வே.சா. பட்டினியோடு போராடவில்லை என்றாலும் பணக்காரர் அல்லர். பதிக்க பணம் வேண்டும். சி.வை. தாமோதரம் பிள்ளை தன்னால் பணம் புரட்ட முடியும்,  தான் பதிக்கிறேன் என்று கேட்டிருக்கிறார். தன் உழைப்புக்கு சி.வை.தா. புகழ் பெறுவதில் உ.வே.சா.வுக்கு சம்மதமில்லை, ஆனால் அவருக்கு நல்ல பதவியில் இருப்பவரை மறுப்பது சுலபமாகவும் இல்லை. தான் பணம், பதவி உள்ளவர்களின் ஆதரவில் வாழும் பாணன் என்ற மனப்பான்மை அவரை கடைசி வரையில் விடவே இல்லை என்றுதான் நினைக்கிறேன். பல போராட்டங்களுக்கு பின்னால் சிந்தாமணி பதிக்கப்பட்டிருக்கிறது.

அதற்குப் பிறகு அவரது வாழ்க்கை முறையே இதுதான் – ஏடுகளைத் தேடுவது, பதிப்பது. பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம் என்று புத்தகத்திற்கு மேல் புத்தகமாக பதித்திருக்கிறார். புகழ் பெற்றிருக்கிறார். இன்றும் பழைய புத்தகங்களைப் பதித்தவர்களில் முதல்வர் அவரே.

வளையாபதியின் முழு வடிவத்தை திருவாவடுதுறை ஆதீனத்தில் சிறு வயதில் பார்த்ததாகவும் ஆனால் புத்தகங்களைப் பதிக்க ஆரம்பித்த பிறகு அது கிடைக்கவில்லை என்றும் ஓரிடத்தில் சொல்கிறார். கொஞ்சம் வருத்தமாக இருந்தது.

உ.வே.சா.வின் வாழ்க்கையின் முதல் தாக்கம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை. அவரை ஆதரித்தவர் திருவாவடுதுறை சுப்ரமணிய தேசிகர். அவருடைய அருமை தெரிந்து அவரை உயர்த்தப் பாடுபட்டவர் தியாகராஜ செட்டியார். அவரது வாழ்க்கையை மாற்றியவர் சேலம் ராமசாமி முதலியார். படிக்கும்போது ஆச்சரியமாக இருந்தது. ஜாதி ஆசாரம் மிகுந்து இருந்த நாட்களில் ஒரு பிராமணரின் வாழ்க்கைக்கு பிள்ளை, செட்டியார், முதலியார் என்று பலரும் கை கொடுத்திருக்கிறார்கள்!

வேறு சில இடங்களில் உ.வே.சா. பிராமணர்களுக்கு மட்டுமே தமிழ் சொல்லித் தருவார் என்றும் படித்திருக்கிறேன். அவருடைய முதன்மை சீடர் கி.வா. ஜகன்னாதன் என்பது தெரிந்ததே. குறிப்பாக நாரண. துரைக்கண்ணனின் தமிழறிவைப் பாராட்டினாலும் துரைக்கண்ணன் சூத்திரன், சூத்திரனுக்கு தமிழ் சொல்லித் தரமாட்டேன் என்று மறுத்துவிட்டாராம். இது உண்மையாக இருந்தால் ஆச்சரியம்தான் – மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் ஏறக்குறைய பக்தியே உள்ளவர், சவேரிநாதப் பிள்ளையையும் தியாகராஜ செட்டியாரையும் ராமசாமி முதலியாரையும் தன் உயிர் நண்பர்களாகக் கருதியவர், செட்டியார் வீட்டிலும் முதலியார் வீட்டிலும் பல காலம் தங்கியவர், சூத்திரனுக்கு தமிழ் கற்றுத் தர மாட்டேன் என்று சொல்லி இருப்பாரா? ஒரு வேளை துரைக்கண்ணனுக்கு தமிழ் சொல்லித் தரக் கூடிய சூழ்நிலை இல்லாமல் இருந்திருக்கலாம், அது இப்படி பிராமணன்-சூத்திரன் என்று கொஞ்சம் மிகைப்படுத்தப்பட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது.

உ.வே.சா. பலரது வாழ்க்கை வரலாறுகளை எழுதி இருக்கிறார். அவருடைய ஆப்தரான தியாகராஜ செட்டியார் மீது, அவருக்கு சில காலம் சங்கீதம் கற்றுக் கொடுத்த கோபாலகிருஷ்ண பாரதியார் மீது எல்லாம் எழுதி இருக்கிறார்.

புதியதும் பழையதும் போன்றவை அவர் எழுதிய பல கட்டுரைகளின் தொகுப்பு. Charming ஆக இருந்தது.

‘என் சரித்திரம்’ புத்தகத்தை கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் அபுனைவுகள்

தமிழறிஞர் வரிசை 26: கி.வா. ஜகன்னாதன்

கி.வா.ஜ. உ.வே.சாமிநாதய்யரின் அணுக்க சீடர். சம்பிரதாயமான தமிழ் பண்டிதர். சிலேடையாகப் பேசுவதில் வல்லவராம். ‘சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ.‘, ‘கி.வா.ஜ. சிலேடைகள்‘ என்று அவரது சிலேடைப் பேச்சை புத்தகமாகவே போட்டிருக்கிறார்கள். கலைமகள் ஆசிரியராக வெகு நாள் இருந்தவர். வீரர் உலகம் என்ற புத்தகத்துக்காக சாஹித்ய அகாடமி விருது பெற்றிருக்கிறார். அவரது புத்தகங்கள் பொதுவாக ஏதாவது சங்கக் கவிதை விளக்கமாகவோ, அல்லது முருகன் துதி விளக்கமாகவோ இருக்கும். சம்பிரதாயமான இலக்கிய விளக்கம் எல்லாம் நமக்கு கொஞ்சம் தூரம், ஜெயமோகன் மாதிரி ஆள்தான் சரிப்பட்டு வருகிறது. அவரை மறந்துவிடுவார்கள் என்றே நினைக்கிறேன்.

கி.வா.ஜ.வின் சொந்த வாழ்க்கை அன்றைய தமிழ் பண்டிதர்களின் வாழ்க்கைக்கு ஒரு ஜன்னல். ஏழை பிராமணக் குடும்பம். சிறு வயதில் தமிழார்வம், பக்தி. பள்ளிப் படிப்பு முடிக்கவில்லை. கவிதை எழுத வந்தது. கிராம மிராசுதார்களின் தயவில் 20-25 வயது வரை வாழ்க்கை. கிராமத்து குழந்தைகளுக்கு படிப்பு சொல்லிக் கொடுத்து, சொற்பொழிவுகள் ஆற்றி, நாலு பெரிய மனிதர்களை புகழ்ந்து கவி பாடி, வெள்ளைகாரர் ஒருவருக்கு தமிழ் கற்றுக் கொடுத்து, ஐந்தும் பத்தும் சம்பாதித்து வாழ்க்கை ஓடி இருக்கிறது. உ.வே.சா.விடம் சேர வேண்டும் என்று ஆசை. உ.வே.சா.வும் பெரும் பணக்காரர் அல்லர். அவர் என்னிடம் பாடம் கற்றுக் கொள்ளலாம், ஆனால் நிலைத்து இருக்க வேண்டும், உன் செலவுக்கு நீதான் பொறுப்பு என்று சொல்லி இருக்கிறார். சேர்த்து வைத்திருந்த பணத்தை வைத்து கொஞ்ச நாள் ஓட்டி இருக்கிறார். பிறகு மீண்டும் பெரிய மனிதர்கள் அவ்வப்போது உதவுவது. உ.வே.சா. ஒரு கட்டத்தில் இவருக்கு மாத சம்பளம் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார். விகடன் உட்பட்ட சில இடங்களில் வேலைக்கு கூப்பிட்டிருக்கிறார்கள், ஆனல் இவருக்கு குருபக்தி அதிகம், உ.வே.சா.வை விட்டு போக மறுத்திருக்கிறார். கலைமகளில் பகுதி நேர வேலை, நினைத்தபோது வரலாம், போகலாம் என்றதும் அதை ஏற்றுக் கொண்டிருக்கிறார். பிறகு கலைமகள் ஆசிரியராகி, பேச்சாளராகி…

கி.வா.ஜ. மந்தவெளியில் வாழ்ந்தவர். நான் சிறுவனாக இருந்தபோது ஒரு முறை அவர் வீட்டுக்குப் போயிருக்கிறேன். கட்டை குட்டையாக இருப்பார். அப்போதெல்லாம் கந்தர் அனுபூதி, கந்தரலங்காரம் ஆகியவற்றைப் பற்றி சொற்பொழிவுகள் பிரபலமாக இருந்தன. கந்தரலங்காரம் பற்றிய சொற்பொழிவுத் தொகுப்பு – தனி வீடு – ஒன்றை நாஸ்டால்ஜியாவுக்காக புரட்டிப் பார்த்தேன். இனி மேல் படிக்க முடியாது என்று நினைக்கிறேன்.

அவரது சில புத்தகங்களை கொஞ்சம் தம் கட்டிப் பிடித்தேன். அவற்றைப் பற்றி:

புது மெருகு: பல தொன்மக் கதைகள் – எல்லாம் புலவர்கள் பற்றியது. தொல்காப்பியரிலிருந்து ஆரம்பிக்கிறது. எனக்குப் பிடித்திருந்தது.

தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்: கி.வா.ஜ.வுக்கு கல்கியே தமிழ் நாவலின் உச்சம். அவரது கருத்துகளை இன்றைக்கு பொருட்படுத்த வேண்டியதில்லைதான், ஆனால் ஓரளவு ஆவண முக்கியத்துவம் உள்ள புத்தகம். பத்தொன்பதாம் நூற்றாண்டில் வெளியான பல தமிழ் நாவல்களைப் பற்றி கொஞ்சம் விவரம் கிடைக்கிறது.

தமிழ் நூல் அறிமுகம் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு நூல்களைப் பற்றி சிறிய, படிக்கக் கூடிய அறிமுகங்களைத் தருகிறது

தமிழ்த் தாத்தா: உ.வே.சா.வைப் பற்றிய சம்பிரதாயமான வாழ்க்கை வரலாறு. இதை விட உ.வே.சா.வின் சுயசரிதையையே படித்துக் கொள்ளலாம்.

என் ஆசிரியப்பிரான்: உ.வே.சா.வைப் பற்றிய துதி நூல் என்றே சொல்லலாம். கி.வா.ஜ.வைப் பற்றியும் குறை சொல்வதற்கில்லை, உ.வே.சா. அவருக்கு ஏறக்குறைய தெய்வம்தான். ஆனால் உபயோகமான தகவல்கள் எதுவும் இல்லை, உ.வே.சா.வை யார் பாராட்டினார்கள், என்ன சொன்னார்கள் என்பதைத் தவிர வேறு ஒன்றுமே இல்லை.

வாருங்கள் பார்க்கலாம்: பாடல் பெற்ற சிவஸ்தலங்களை சுற்றிப் பார்த்திருக்கிறார். சீர்காழி, வைத்தீஸ்வரன்கோவில், திருவாமூர், திருவெண்ணெய்நல்லூர், திருவதிகை என்று பல ஸ்தலங்கள். எனக்கும் இப்படி கோவில் கோவிலாக சுற்ற வேண்டும் என்று இப்போதெல்லாம் ஒரு ஆசை இருக்கிறது. ஜெயமோகனால் வந்த வினை.

அறப்போர், காவியமும் ஓவியமும், எல்லாம் தமிழ், மனை விளக்கு, அதியமான் நெடுமான் அஞ்சி, இன்பமலை, கன்னித்தமிழ் போன்றவை சங்கப் பாடல்களின் விளக்கங்கள் மற்றும் புலவர்கள் பற்றிய குறிப்புகள். என் கண்ணில் இவற்றுக்கான தேவை இன்னமும் இருக்கிறது. ஆனால் அவரது விளக்கங்கள் சம்பிரதாயமானவையே. கோனார் நோட்சை சுவாரசியமாக எழுதும் முயற்சி, அவ்வளவுதான். ஆனால் வாழும் தமிழ் என்ற புத்தகத்தை குறிப்பிட்டு சொல்ல வேண்டும். தொல்காப்பியத்துக்கு – அது கூட இல்லை, அதில் சில பகுதிகளுக்கு – நல்ல அறிமுகம்.

நாயன்மார் கதை போன்றவை முக்கியமானவை. பெரிய புராணத்தை சுருக்கமாக தரும் முயற்சி.

சகலகலாவல்லி போன்ற புத்தகங்கள் முக்கியமானவை. குமரகுருபரர் இயற்றிய செய்யுள்களை விளக்கி இருக்க்கிறார். இவர் போன்றவர்கள் இல்லாவிட்டால் இப்படி ஒரு பாடல் இருப்பதே நமக்கெல்லாம் தெரியப் போவதில்லை.

ஒரு சாண் வயிறு போன்ற புத்தகங்களின் முக்கியத்துவம் கவிதைகள் நம் ரேடாரில் பட வைக்கிறது என்பதுதான். இவையெல்லாம் முக்கியமான பங்களிப்பு என்பது வயதாக வயதாகத்தான் தெரிகிறது.

பரம்புமலை வள்ளல், எழுபெரு வள்ளல்கள், குமண வள்ளல் வரலாறு, கரிகால்வளவன் போன்ற புத்தகங்களை தவிர்க்கலாம்.

கவிதைகளையும் சிறுகதைகளையும் முயற்சித்திருக்கிறார். கலைஞனின் தியாகம், குமரியின் மூக்குத்தி, மூன்று தலைமுறை, வளைச்செட்டி, கலைச்செல்வி என்ற சிறுகதைத் தொகுப்புகள் கிடைத்தன. எதுவும் குறிப்பிடும்படி இல்லை. சிறுவர் நூல்களைக் கூட விடவில்லை. (நல்ல பிள்ளையார், நாலு பழங்கள்)

என் கண்ணில் கி.வா.ஜ. பொருட்படுத்தப்பட வேண்டிய புனைவு எழுத்தாளர் அல்லர். ஆனால் அவர் போன்ற பண்டிதர்கள் தேவை. இல்லாவிட்டால் பழைய தமிழ் இலக்கியங்களைப் பற்றி யாரிடம் போய் கேட்பது? கலைமகள் ஒரு காலத்தில் நல்ல இலக்கியத் தரம் வாய்ந்த சிறுகதைகள், நாவல்களைப் பதித்தது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். (எழுபதுகளில் அப்படி எல்லாம் இல்லை.) அதற்கு அவரது பங்களிப்பும் இருந்திருக்கும். அவர் வீடு சென்னை மந்தவெளியில் இருந்தது. சிறு வயதில் ஒரு முறை அவர் வீட்டுக்குப் போயிருக்கிறேன். நான் பார்த்த முதல் தமிழ் எழுத்தாளர் அவர்தான். அதற்கப்புறம் நான் தமிழ் எழுத்தாளர்கள் பக்கம் தலை வைத்துப் படுக்க ரொம்ப நாளாயிற்று. 🙂

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழறிஞர்கள்