குறுந்தொகை 5

அதுகொ றோழி காம நோயே
வதிகுருகுறங்கு மின்னிழற் புன்னை
உடைதிரைத் திவலை அரும்பும் தீநீர்
மெல்லம் புலம்பன் பிரிந்தெனப்
பல்லிதழுண்கண் பாடொல்லாவே

– நரி வெருவூத்தலையார், நெய்தல் திணை

It is poetry like this that makes me strongly feel the inadequacies of my translation skills! Anyway, here goes…

My friend,
He is the lord of the narrow beach.
The waves on that beach are breaking into a spray against the sweet Punnai tree.
Egrets are sleeping under the shade offered by tree.
But my lotus shaped eyes don’t close and I cannot sleep as the lord is parted from me

IMO, Kurunthokai 4 is not great poetry. I am including that for the sake of completion only. But the phrase “tears that singe the eyelashes” is brilliant. It is even better in Tamil “இமை தீய்ப்பன்ன கண்ணீர்” – until you get a better translator, you will have to live with my translation 🙂

நோம்என் நெஞ்சே நோம்என் நெஞ்சே
இமை தீய்ப்பன்ன கண்ணீர் தாங்கி
அமைதற்கு அமைந்த நம் காதலர்
அமைவிலர் ஆகுதல் நோம்என் நெஞ்சே

– காமஞ்சேர் குளத்தார், நெய்தல் திணை

My translation:

My heart, don’t hurt; my heart, don’t hurt
I know; the one who loves us isn’t there
To wipe the tears that singe the eyelashes.
My heart, don’t hurt.

தொகுக்கப்பட்ட பக்கம்: குறுந்தொகை

குறுந்தொகை 3

குறுந்தொகை 2 பிரபலமான “கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி“. சிவனே மதுரை கோவிலில் இருந்து இறங்கி வந்து பெண்ணின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டு என்று பாடி பாண்டியனின் சந்தேகத்தை தீர்த்து வைத்தாராம். நக்கீரர் சிவன் சொல்வது தவறு என்று வாதாடினாராம். எனக்கு இது கவிதையாகவே தெரிவதில்லை. சின்ன வயதில் கூட. பள்ளிப் பருவத்தில் சிவன் இப்படி ஒரு கவிதையை எழுதியதற்கு பதிலாக கர்ப்பகிரகத்திலேயே இருந்திருக்கலாம் என்று நக்கலடிப்பேன்.

முழுமைக்காக கீழே கொடுத்திருக்கிறேன்.

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்
செறி எயிற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீ அறியும் பூவே

– இறையனார், குறிஞ்சித்திணை.

எனக்கு அடுத்தபடி பிடித்த கவிதையான குறுந்தொகை 3க்கு போய்விடுகிறேன்.

தலைவி கூற்று:

நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரளவின்றே – சாரல்
கருங்கோற் குறிஞ்சிப் பூக் கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே.

ஏ.கே. ராமானுஜனின் மொழிபெயர்ப்பு (Interior Landscape புத்தகத்திலிருந்து)

What She said:

Bigger than earth, certainly,
Higher than the sky,
More unfathomable than the waters
Is this love for this man

Of the mountain slopes
Where bees make rich honey
From the flowers of the Kurinji
That has such black stalks

தேவகுலத்தார், குறிஞ்சித் திணை.

ஐந்து வரியில் ஒரு microcosm-த்தையே காட்டிவிடுகிறார்.

சாதாரண விஷயம். என் காதல் இவ்வளவு பெரியது என்று தலைவி இரண்டு கைகளையும் எத்தனை தூரம் விரிக்க முடியுமோ அதற்கு மேலும் கொஞ்சம் விரித்துக் காட்டுவது போன்ற ஒரு கவிதை. அப்படி எல்லாம் சிந்திக்கும் நாயகிக்கு என்ன வயதிருக்கும்? வாலிபத்தின் காதலாகத்தான் இருக்க முடியும். இளைஞர்களின் காதல் காதலிக்கும் இளைஞர்களை மட்டுமல்ல, பார்ப்பவர்களையும் (அவர்கள் பெற்றோர்களாக இல்லாத பட்சத்தில்) புன்னகைக்க வைக்கும். அப்படிப்பட்ட ஒரு கணத்தைத்தான் கவிஞர் காட்டுகிறார்.

இரண்டாம் பகுதியாக நாயகன் எந்த ஊர்க்காரன் என்று சொல்வதுதான் எனக்கு இந்தக் கவிதையை இன்னும் உயர்த்துகிறது. கவிதையின் நம்பகத்தன்மையை அதிகரிக்கிறது.

ராமானுஜன் ‘நிலத்தினும் பெரிதே’ என்பதை ‘Bigger than earth’ என்று மொழிபெயர்த்திருந்தால் அது சாதாரணமாக இருந்திருக்கும். ‘Bigger than earth, certainly,’ என்று மொழிபெயர்த்திருப்பது அபாரமாக இருக்கிறது. அதை நாயகி எப்படி சொல்லி இருப்பாள்? ‘Bigger than earth’ என்று ஆரம்பித்துவிட்டு, ஒரு நொடி அது உண்மைதானா, இல்லை மிகைப்படுத்திச் சொல்கிறோமா என்று யோசித்துவிட்டு, ‘certainly’ என்று தொடர்ந்திருக்க வேண்டும். ராமானுஜன் கவிதையை உள்வாங்கி அதைக் கவிதையாகவே மொழிபெயர்க்கிறார்.

தொகுக்கப்பட்ட பக்கம்: கவிதைகள்

குறுந்தொகை 1

செங்களம் படக்கொன்று அவுணர் தேய்த்த
செங்கோல் அம்பின், செங்கோட்டு யானை,
கழல் தொடி சேஎய் குன்றம்
குருதிப் பூவின் குலைக் காந்தட்டே

திப்புத்தோளார், குறிஞ்சித்திணை

ரத்தம் வழியும் தந்தங்களை உடைய யானையின் மீது ரத்தம் தோய்ந்த செந்நிற வேலுடனும் அம்புகளுடனும் அரக்கர்களின் ரத்தம் ஊறி செங்களமாகவே மாறிய போர்க்களத்திலிருந்து திரும்பி வரும் முருகன் ஆளும் எங்கள் குன்றும் காந்தள் மலரால் நிறைந்திருக்கிறது.

Riding on the elephant with blood dripping tusks
With blood reddened spear and arrows that had killed the demons
Returning from the blood soaked red battlefield
This hill our fiery Murugan rules
Is full of the the blood flower blooms

– என் மொழிபெயர்ப்பு

காந்தள் மலரை முதன்முதலாகப் பார்த்தபோது எனக்கு பத்து பனிரண்டு வயது இருக்கும். நாங்கள் வசித்த மானாம்பதி கிராமத்திலிருந்து இரண்டு இரண்டரை கிலோமீட்டர் தூரத்தில் ஒரு சிறிய குன்று உண்டு. நெடுங்கல் என்று பேர். வரண்ட நிலப்பரப்பு. ஓணானும் அரணையும் சில சமயம் உடும்பும் ஓடிக் கொண்டிருக்கும். அப்போதெல்லாம் எனக்கு அந்தக் குன்றுப் பக்கம் தனியாக நடக்கப் பிடிக்கும். ஒரு நாள் போகும் வழியில் சிவந்த, விரல்கள் போன்று தெரிந்த இந்தப் பூவைக் கண்டேன். கொடி, இரும்பு வேலி மீது படர்ந்திருந்தது. சாலையிலிருந்து கீழே இறங்கிப் போய் தண்ணீர் இல்லாத வாய்க்காலைத் தாண்டி அந்தப் பூவை அருகிலே பார்த்தது ஒரு அற்புதத் தருணம். காந்தள், காந்தள் என்று படித்திருக்கிறோமே, அது இந்தப் பூதான் என்று உணர்ந்தது இன்னொரு அற்புதத் தருணம். அந்தப் பூவைப் பறித்துக் கொண்டு திரும்பிவிட்டேன். அம்மாவிடம், அப்பாவிடம், தங்கைகளிடம், நண்பர்களிடம் காட்டி ஒரே பீற்றல். அதன் தாவரவியல் பெயர் Gloriosa Lily என்று கண்டுபிடித்தேன். ஆனால் எந்தக் கவிதை வரிகளிலிருந்து இதுதான் காந்தள் மலர் என்று கண்டடைந்தேனோ, அந்த வரிகள் நினைவு வர மாட்டேன் என்கிறது.

இந்தக் கவிதையைப் படிக்கும்போது கண் முன்னால் அந்த சிவப்பு நிறம் விரிகிறது. காந்தள்; அதுவும் குன்று நிறைய பூத்துக் குலுங்கும் காந்தள். நினைக்கும்போதே பரவசமாக இருக்கிறது.

திப்புத்தோளார் சிறந்த உத்தியைப் பயன்படுத்துகிறார். செங்களம்; செங்கோல்; செந்நிற அம்பு; செங்கோட்டு யானை; தழல்; இதற்கப்புறம் குன்று முழுவதும் காந்தள். நிறத்தை வைத்து சும்மா புகுந்து விளையாடுகிறார்.

கவிதையின் பொருளே இரண்டாம் பட்சமாகிவிடுகிறது. இதை உரையாசிரியர்கள் தலைவன் தலைவியை மடக்க அவளுக்கு அழகிய காந்தள் மலரைத் தருவதாகவும், ஆ, எங்க ஊர்லியும் நிறைய இருக்கு என்று தலைவி மறுப்பதாகவோ, அல்லது பிகு பண்ணிக் கொள்வதாகவோ விளக்குகிறார்கள். நான் வேறு வகையாகப் புரிந்து கொள்கிறேன். நீ உன் காதலை ஒரு காந்தள் பூவைக் கொடுத்து குறிப்புணர்த்துகிறாய், ஆனால் என் மனதில் இருப்பதோ குன்றளவு கா(ந்)தள்(ல்) என்று தலைவி சொல்வதாகப் புரிந்து கொள்கிறேன். அதுதான் இன்னும் அழகாக இருக்கிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: குறுந்தொகை

குறுந்தொகை 119

சிறு வெள்ளரவின் அவ்வரிக் குருளை
கான யானை அணங்கியா அன்று
இளையள், முளைவாள் எயிற்றள்
வளையுடைக் கையள் எம் அணங்கியோளே

சத்திநாதனார், குறிஞ்சித் திணை

சிறிய, இளைய, வரிகள் ஓடும் உடலைக் கொண்ட, வெள்ளை நிறப் பாம்பு கானகத்தின் பெரும் யானையை துன்புறுத்துவதைப் போல, வயதில் இளைய, முளை போன்ற பற்களைக் கொண்ட, வளையல் அணிந்த கைகளுடய இவள் என்னைத் துன்புறுத்துகிறாள்.
– என் மொழிபெயர்ப்பு

நாலே வரி. அதில் எப்பேர்ப்பட்ட சித்திரத்தை தீட்டி இருக்கிறார்?

பெண் இளையவள். 16-17 வயது இருக்கும் என்று வைத்துக் கொள்கிறேன். ஆணோ யானைக்கு ஒப்பிடப்படுகிறான். அப்படி என்றால் சமுதாயத்தில் பெரிய வெற்றி பெற்றவனாக இருக்க வேண்டும். அப்படி வெற்றி பெற கொஞ்சம் வயதாகி இருக்க வேண்டும். அதிலும் பாம்புக் குட்டி (குருளை), இளையள் என்று பெண் விவரிக்கப்படுகிறாள். பெண் இளையள் என்றால் ஒப்பு நோக்க ஆணுக்கு கொஞ்சம் வயதாகி இருக்க வேண்டும் இல்லையா? ஏற்கனவே மணமாகி இருக்கலாம், குழந்தைகள், குடும்பம் எல்லாம் இருக்கலாம். ஆனால் இந்த இளையள் அவனை அணங்குகிறாள். She is troubling him. தொந்தரவு செய்கிறாள் என்று தமிழில் மொழிபெயர்த்தால் சரியாக வரவில்லை. அதிலும் பெண்ணையும் சரி, பாம்பையும் சரி, prosaic ஆக விவரிக்கிறார். வெள்ளரவு, வரிக்குருளை. (பாம்புக் குட்டிக்கு வெள்ளை நிறம், வரிகள் ஓடிய உடல்) பெண்ணுக்கு முளைவாள் எயிறு, வளைக்கை. (எயிறு என்றால் பல், ஈறு என்ற வார்த்தை இதிலிருந்துதான் வந்ததோ என்னவோ). அது ஒரு master’s touch. நீ வாழ்க்கையில் என்ன வெற்றி பெற்றிருந்தாலும் காலி!

இது நடப்பதுதான். எம்ஜிஆர் ஜெயலலிதா நினைவு வரலாம். 1940களிலேயே காரும் பங்களாவுமாக வாழ்ந்த என் அத்தையின் கணவர் மகனுக்கு 15-16 வயது இருக்கும்போது என் அத்தையைக் கைவிட்டுவிட்டு இன்னொரு பெண்ணோடு வாழ்க்கை நடத்தத் தொடங்கினார். ஏன் என்று கேள்வி கேட்டால் தர்க்கரீதியாக விளக்கிவிட முடியுமா என்ன?

நாலே வரி, எவ்வளவு யோசிக்க வைக்கிறார்! இது கவிதை, வெறும் வார்த்தை அலங்காரத்தை வைத்து எழுதப்பட்டதில்லை. நயத்தை முன்வைக்கவில்லை. இதற்கு மொழியே தேவையில்லை, ஆங்கிலத்தில், ஸ்வாஹிலியில் எதில் வேண்டுமானாலும் மொழிபெயர்க்கலாம். உலகத்தில் இருக்கும் அத்தனை மனிதர்களாலும் புரிந்து கொள்ள முடியும். ஏன் இது போன்ற கவிதைகள் தமிழில் அழிந்துபோய்விட்டன? எனக்குத் தெரிந்த வரையில் (குறைவாகவே படித்திருக்கும்) கம்பனும் (நிறையவே படித்திருக்கும்) பாரதியும் வெகு சில மொழி தேவையில்லாத கவிதைகளைத்தான் எழுதி இருக்கிறார்கள். தேமாவும் புளிமாவும் சீரும் அசையும் கவிதையை அழித்தேவிட்டனவா?

குறுந்தொகையை நான் படிப்பதில்லை. அங்கும் இங்குமாக புரட்டிப் பார்க்கிறேன், அவ்வளவுதான். எனக்கு கோனார் நோட்ஸ் தேவைப்படாத கவிதை கண்ணில் பட்டால் அதைப் பற்றி எழுதுகிறேன். (சில சமயம் சங்க சித்திரங்கள், Interior Landscape இரண்டு புத்தகங்களையும் புரட்டிப் பார்ப்பதும் உண்டு.)

இந்தக் கவிதையில் குருளை, அணங்குதல், எயிறு என்ற வார்த்தைகள் அவ்வளவாக பழக்கத்தில் இல்லை. அணங்குதல் என்ற ஒரு வார்த்தை எனக்குத் தெரியாதது, ஆனால் ஊகித்துக் கொள்ள முடிகிறது. அதை “துன்புறுத்துகிறாள்” என்று மொழிபெயர்ப்பது கவிதையில் இருப்பதை விட அதிகம்; தொந்தரவு செய்கிறாள் என்பது கவிதையில் இருப்பதை விடக் குறைவு. அது தொண்டையில் முள் சிக்கிக் கொண்டதைப் போன்ற உணர்வு. இந்த மாதிரி நேரத்தில்தான் தமிழறிந்த, நல்ல பண்டிதர்களின் தேவை புரிகிறது!

தொகுக்கப்பட்ட பக்கம்: கவிதைகள்

குறுந்தொகை 112

எனக்கு மிகவும் பிடித்த கவிதைகளில் ஒன்று. “பெருங்களிறு வாங்க முரிந்து நிலம்படா நாருடை ஒசியலற்றே” என்பது மிக மிக மிக மிக மிக மிக மிக மிக அருமையான உவமை.

கௌவை அஞ்சின் காமம் எய்க்கும்
எள்ளற விடினே உள்ளது நாணே
பெருங்களிறு வாங்க முரிந்து நிலம்படா
நாருடை ஒசியலற்றே
கண்டிசின் தோழி அவர் உண்ட என் நலனே

ஊரார் பேச்சுக்கு அஞ்சினால் காமம் நிறைவடையாது. இழிசொற்களை நிறுத்த காமத்தை மறந்தால் மிச்சம் இருப்பது நாணம் மட்டுமே. காமத்தையும் விடமுடியவில்லை, நாணத்தையும் விட முடியவில்லை பெரிய யானை உண்பதற்காக ஒடித்த கிளை முற்றிலும் முறியாமல் கொஞ்சம் ஒட்டிக் கொண்டிருந்தால் அந்தக் கிளை கீழேயும் விழாது, மரத்திலூம் இருக்காது. அது போல தலைவர் என் பெண்மையை முழுதாக உண்ணவில்லை, கொஞ்சம் மிச்சம் இருக்கிறது. அந்தக் கிளையின் நிலையைப் போல – என்னால் தலைவருடனும் சேரவும் முடியவில்லை, காமம் அறியாத கன்னி நிலைக்கும் போக முடியவில்லை, தோழி!

பாடியவர் ஆலத்தூர் கிழார். குறிஞ்சித்திணை.

தொகுக்கப்பட்ட பக்கம்: கவிதைகள் பக்கம்

நல்லை அல்லை – குறுந்தொகை 47

கருங்கால் வேங்கை வீயுகு துறுகல்
இரும்புலிக் குருளையிற் தோன்றும் காட்டிடை
எல்லி வருநர் களவிற்கு
நல்லை அல்லை நெடுவெண்ணிலவே

காட்டில் கருமையான அடிமரம் உள்ள வேங்கை மரங்கள். அவற்றிலிருந்து மஞ்சள் நிறப் பூக்கள் பாறை மீது விழுந்து கிடக்கின்றன. நிலவொளியில் பார்த்தால் புலிக்குட்டி போல தோற்றமளிக்கிறது. காட்டு வழியே நடந்து வருபவர்கள் அஞ்சமாட்டார்களா? களவுமுறை உறவு கொள்ள வரும் தலைவனுக்கு வரத் தாமதம் ஆகிறதே! என் தலைவிக்கு நீ நல்லை அல்லை வெண்ணிலவே!

அருமையான காட்சி. நேரடியாகச் சொல்லப்படுவதை விட நாமாக உணர்வதுதான் இந்தக் கவிதையின் அழகு. நிலவொளியில் தலைவன் அஞ்சலாம், தாமதம் ஆகலாம் என்பதுதானா தோழியின் குறை? நிலவொளியில் அவன் வருவதை ஊரார் பார்த்துவிடப் போகிறார்களே என்றுதானே சொல்லாமல் சொல்கிறாள்? சீக்கிரம் மணம் செய்து கொள் என்று குறிப்பா? சொல்லும் ஒரு வார்த்தையிலிருந்து நம்மை இத்தனை யோசிக்க வைக்கிறாள்! காட்சியும் மிகவும் அருமை. நிலவு, கரிய பாறை மீது மஞ்சள் நிறப் பூக்கள்…

பாடியவர் பெயர் தெரியவில்லை. நெடுவெண்ணிலவினார் என்றே அழைக்கப்படுகிறார். குறிஞ்சித்திணை.

வேங்கை மரத்துக்கு ஆங்கிலத்தில் Malabar Kino என்று பேராம்.

கவிதைக்கும் இந்தப் பாட்டுக்கும் சம்பந்தம் இல்லைதான். இருந்தாலும் நம்மில் எத்தனை பேர் “நல்லை அல்லை” என்று இந்தப் பாட்டு வருவதற்கு முன் கேட்டிருப்போம்?

தொகுக்கப்பட்ட பக்கம்: கவிதைகள்

குறுந்தொகையிலிருந்து ஒரு கவிதை

எல்லை கழிய முல்லை மலர
கதிர் சினம் தணிந்த கையறு மாலை
உயிர் வரம்பாக நீந்தினம் ஆயின்
எவன்கொல் வாழி தோழி
கங்குல் வெள்ளம் கடலினும் பெரிதே

எழுதியவர் கங்குல்வெள்ளத்தார் என்றே அறியப்படுகிறார். முல்லைத்திணை.

இன்னும் இந்தக் கவிதை நமக்குப் புரியும் வார்த்தைகளில் இருப்பது ஆச்சரியம்தான். கங்குல் என்ற வார்த்தைக்கு மட்டும்தான் பொருள் தேட வேண்டி இருந்தது.

கதிரவன் சினம் தணிந்தான். பகலின் எல்லை முடிகிறது. மாலைப் பொழுது தொடங்கிவிட்டது. முல்லை மலர ஆரம்பித்துவிட்டது. நான் என் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு யாருக்காக நீந்துகிறேன், தோழி? இரவென்னும் வெள்ளம் கடலை விடப் பெரியது…

தொகுக்கப்பட்ட பக்கம்: கவிதைகள்

பிடித்த கவிதை – அவரோ இல்லை, பூத்த முல்லை

கம்பராமாயணம் பற்றி எழுதும்போது கண்ணில் பட்டதால் மீள்பதிவு


அவரோ வாரார் முல்லையும் பூத்தன
பறியுடைக் கையர் மறியினத் தொழியப்
பாலொடு வந்து கூழொடு பெயரும்
ஆடுடை இடைமகன் சென்னி
சூடிய எல்லாம் சிறுபசு முகையே
– குறுந்தொகை 221(உறையூர் முதுகொற்றனார்)

அவரோ வாரார் முல்லையும் பூத்தன‘ என்ற வரியை விட சிறந்த கவிதையை அபூர்வமாகவே பார்த்திருக்கிறேன். இடையர்கள் பாதி மொட்டாகவே இருக்கும் முல்லையைச் சூடிக் கொண்டு செல்கிறார்கள் என்ற வரிகளும் பிரமாதம்தான். ஆனால் முதல் வரியே எனக்குப் போதுமானதாக இருக்கிறது. அந்த வரியில் தெரியும் ஏக்கத்தையும் ஆதங்கத்தையும் தனிமையையும் ஆற்றாமையையும் தாண்டி அடுத்த வரிக்குக் கூட போக முடியவில்லை. இடையர்களைப் பற்றிய வர்ணனை எத்தனைதான் பிரமாதமாக இருந்தாலும் அது எனக்கு ஆன்டி-க்ளைமாக்சாகத்தான் இருக்கிறது.

அவரோ வாரார். ஏன்? பணம் சம்பாதிக்க வெளியூருக்கு போயிருக்கிறானா, வசந்த காலம் பிறந்த பிறகும் வரவில்லையா? ஊடலா, இன்னும் வந்து சமாதானம் செய்யவில்லையா? இல்லை ஏதோ தற்செயலாக கொஞ்சம் தாமதம் ஆனதைக் கூட இவளால் தாங்க முடியவில்லையா, நை நை என்று நச்சரிக்கும் ஜாதியா? இல்லை விஷயம் கொஞ்சம் சீரியசா? இவளைக் கழற்றி விட்டுவிட்டானா படுபாவி? வேறு பெண் பின்னால் சுற்றுகிறானா? அவரோ வாரார், முல்லையும் பூத்தன, கண்டவனும் பூ வச்சுக்கிட்டு சுத்தறீங்க, எல்லாரும் நாசமாப் போங்கடா மயிராண்டிங்களா!

தொகுக்கப்பட்ட பக்கம்: கவிதைகள்

குறுந்தொகை 7

உண்மையை ஒத்துக் கொள்கிறேன். எனக்கு இந்தக் கவிதை முதல் வரிசையில் இல்லை, நான் என்றாவது எனக்குப் பிடித்த கவிதைகள் என்று ஒரு தொகுப்பு போட்டால் அதில் இடம் பெறாது. ஆனால் இந்தக் கவிதையும் இன்றும் நாம் காணக் கூடிய காட்சிதான். பழக்க்கப்பட்ட காட்சிதான். என்ன, பாலைவனத்தில் அல்ல, வெளிநாட்டு விமான நிலையங்களிலும், ரயில்வே ஸ்டேஷன்களிலும் ஷாப்பிங் மால்களிலும் பார்க்கிறோம், அவ்வளவுதான்.

இந்தக் கவிதை காட்டும் காட்சி புது இடத்தில், பழக்கப்படாத இடத்தில், துணையாக வரும் ஆணைத் தவிர வேறு யாரையும் அறியாத பெண்; தனக்கு புது இடமோ இல்லையோ பழகிய இடம் மாதிரி கொஞ்சம் பந்தா காண்பிக்கும் ஆண். இன்னும் கொஞ்சம் யோசித்தால் பெற்றோரை எதிர்த்து வீட்டை விட்டு வெளியேறிய காதலர்கள். கவிதையைப் படிக்கும்போது அப்படி ஒரு backstory தோன்றுவதுதான் இந்தக் கவிதையின் வெற்றி.

பாடலை எழுதியவர்: பெரும்பதுமனார் திணை: பாலை

A.K. Ramanujan’s Translation:

This bowman has a warriors band
on the ankle;
the girl with the bracelet on her arm
has a virgin’s anklets
on her tender feet
They look like good people
In these places
the winds beat
upon the vakai tree
like drums for acrobats
dancing on the tightropes

Poor things, who could they be?
and what makes them walk
with all the others
through these desert ways
so filled with bamboos?

ஒரிஜினல் கவிதை:

கண்டோர் கூற்று:

வில்லோன் காலன கழலே தொடியோள்
மெல்லடி மேலவும் சிலம்பே நல்லோர்
யார்கொல் அளியர் தாமே யாரியர்
கயிறாடு பறையிற் கால்பொரக் கலங்கி
வாகை வெண்ணெற்றொலிக்கும்
வேய்பயிலழுவ முன்னியோரே.

தொகுக்கப்பட்ட பக்கம்: கவிதைகள்

குறுந்தொகை 6

இதுவும் சர்வசாதாரணமான விஷயம்தான். ஏறக்குறைய தேய்வழக்காகவே ஆகிவிட்ட விஷயம்தான். பல சினிமாப் பாடல்களில் கேட்டிருப்போம். உதாரணமாக வாலி படகோட்டி திரைப்படத்துக்காக ரத்தினச் சுருக்கமாக ‘ஊரெங்கும் தூங்கையிலே, நான் உள்மூச்சு வாங்கையிலே’ என்று எழுதி இருக்கிறார். ஹிந்தியில் கூட ஒரு பாட்டு நினைவுக்கு வருகிறது – ஸோ கயா யே ஜஹான் (திரைப்படம்: தேசாப்). ஆனாலும் அதில் ஏதோ இருக்கிறது.

பாடலை எழுதியவர்: பதுமனார் திணை: நெய்தல்

A.K. Ramanujan’s Translation:

What She said:

The still drone of the time
past midnight.
All words put out,
men are sunk into the sweetness
of sleep. Even the far-flung world
has put aside its rages
for sleep.

Only I
am awake.

ஒரிஜினல் கவிதை:

தலைவி கூற்று:

நள்ளென்றன்றே யாமஞ் சொல்லவிந்து
இனிதடங்கினரே மாக்கண் முனிவின்று
நனந்தலை உலகமும் துஞ்சும்
ஓர்யான் மன்ற துஞ்சாதேனே.

தொகுக்கப்பட்ட பக்கம்: கவிதைகள்