லா.ச.ரா.வின் “அபிதா”

(திருத்தப்பட்ட மீள்பதிப்பு)

லா.ச.ரா.வின் அபிதா படிக்க வேண்டும் என்று ரொம்ப நாள் ஆசை. நண்பர் ராஜன் புண்ணியம் கட்டிக்கொண்டார்.

சின்ன வயதில் அம்பி சகுந்தலா மீது ஆசைப்படுகிறான். ஆனால் ஊரை விட்டு ஓடிப் போகிறான். அங்கே கல்யாணம் ஆகி இப்போது “கிழவன்” ஆகியாயிற்று, ஆனாலும் சகுந்தலாவின் நினைவு அடிமனதில் ஓடிக்கொண்டே இருக்கிறது. பல வருஷம் கழித்து ஊருக்கு திரும்புகிறான். சகுந்தலா மேலே போயாச்சு, ஆனால் சகுந்தலாவின் மகள் அபிதாவைக் கண்டு அவன் மனம் தடுமாறுகிறது. அபிதாவின் பாய்ஃபிரெண்டைக் கண்டால் கோபம் வருகிறது. என்ன நடக்கிறது என்பதுதான் கதை. கதை முக்கியமில்லை.

அபிதாவின் பலம் அதன் மொழி. சொகுசான நடை. லா.ச.ரா.வின் நடையை விவரிப்பது கஷ்டம். மிக அற்புதமான படிமங்களை கொண்டு வருகிறார். சில உதாரணங்கள்.
“நேற்றிரவே மின்சாரம் தோற்றுவிட்டது” (பவர் கட் ஆகிவிட்டதாம்)
“வாய்க்கால் வளைந்து தன் தலையை தேடும் பாம்பு போல ஓடிற்று.”
“கல் வடித்த கண்ணீர்” (கல் திட்டுக்களுக்கு அடியில் ஒரு ஊற்று கசிகிறது)
“(வெற்றி) இருவரில் ஒருவருக்கு துரோகம் செய்தே ஆக வேண்டும்.”

மீண்டும் மீண்டும் படிக்கலாம். கவனிக்க தவறிய வார்த்தைகள், படிமங்கள் கண்ணில் பட்டுக்கொண்டே இருக்கின்றன. அவர் சொல்வாராம், நெருப்புன்னு எழுதினா படிக்கறவனுக்கு சுடணும் என்று.(சரியான வார்த்தைகள் ஞாபகம் இல்லை, ஆனால் இந்த அர்த்தத்தில்தான்) யோசித்து யோசித்து செதுக்கி இருக்க வேண்டும்.

சில சமயம் யோவ் கிழவா, என்னய்யா சொல்றே என்று ஒரு கடுப்பும் கிளம்புகிறது.

கதையின் பலவீனமும் மொழிதான். மொழி மட்டுமே போதுமா? லா.ச.ரா. படிமங்கள், அழகு இல்லை இல்லை ஸௌந்தர்யம், அதை தாண்டி போக பிரயாசைப்படுவதில்லை. அவருக்கு கதையே அவரது வார்த்தைகளை, படிமங்களை மாட்டும் ஒரு சட்டம்தானோ(frame) என்று தோன்றுகிறது.

புத்தகத்தை பதிப்பித்த வாசகர் வட்டத்தை பற்றி ஒரு வார்த்தை. புத்தகம் வெளியிட்டு 40 வருஷம் ஆகிவிட்டது. இன்னும் கருக்கு குலையாமல் அப்படியே இருக்கிறது. இந்த கால புத்தகம் கூட நாலு முறை படித்தால் பைண்டிங் கிழிந்து விடும், பக்கம் கசங்கிவிடும். வாசகர் வட்டம் காலத்தில் நான் இருந்திருக்க கூடாதா என்று தோன்றுகிறது. நல்ல முறையில் அச்சிடப்பட்ட புத்தகத்தை படிப்பதும் ஒரு சுகம்!

அபிதா ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன் இருவர் லிஸ்டிலும் இடம் பெறுகிறது.

டாக்டர் ருத்ரன் இதை நாடகமாக ஆக்கி இருக்கிறார். அந்த அனுபவத்தை இங்கே விவரிக்கிறார்.

கிழக்கு தளத்தில் கிடைக்கிறது. விலை 75 ரூபாய்.

அழியாச்சுடர்களில் ஒரு excerpt-ஐ படிக்கலாம்.

படிக்க வேண்டிய நாவல். ஆனால் நாவல் முழு வெற்றி பெறவில்லை.

லா.ச.ரா.வின் சிறுகதை – பாற்கடல்

அழியாச்சுடர்கள் தளத்திலிருந்து ஒரு சிறந்த சிறுகதை.

இந்த மாதிரி குடும்பங்கள் இன்று இல்லை. ஆனாலும் இது அந்நியமாகத் தோன்றவே இல்லை. என் தலைமுறைக்காரர்களுக்கு கூட்டுக் குடும்பம் என்பதுதான் மனதளவில் – மனதளவில் மட்டுமே, ப்ராக்டிகலாக இல்லை – சரி…

லா.ச.ரா. எப்போதுமே உணர்ச்சிப் பிரவாகம். இதிலும் அப்படித்தான். என் தமிழ் சிறுகதை anthology-யில் இடம் பெறும். அதற்கு மேல் விவரிக்க விரும்பவில்லை, நேராக படித்துக் கொள்ளுங்கள்!

முப்பது வயதுக்குள் படிக்க வேண்டிய முப்பது புத்தகங்கள்

இப்படி ஒரு பதிவை சமீபத்தில் பார்த்தேன். எனக்கு முப்பது வயதுக்கு மேல் ஆகிவிட்டது. இருந்தாலும் இதைப் பற்றி எழுதினால் யாராவது நான் இளைஞன் என்று ஒத்துக்கொள்ள மாட்டார்களா என்ற நப்பாசைதான்.

 1. Siddhartha by Herman Hesse – பல வருஷங்கள் முன்னால் (எனக்கு 30 வயது ஆவதற்குள்) படித்தது. என்னைக் கவரவில்லை. சித்தார்த்தா (புத்தர் இல்லை) தன் வாழ்க்கையின் அர்த்தத்தை தேடுகிறான்.
 2. 1984 by George Orwell – இதையும் முப்பது வயதுக்குள் படித்துவிட்டேன். சிறந்த புத்தகம். கட்டாயமாக படிக்க வேண்டிய புத்தகம்.
 3. To Kill a Mockingbird by Harper Lee – உனக்கு மிகவும் பிடித்த புத்தகம் எது என்று கேட்டால் நிறைய யோசித்து அனேகமாக இந்த புத்தகத்தைத்தான் சொல்வேன். ஒரு அப்பாவாக சொல்கிறேன் – இந்த புத்தகத்தில் இருப்பதைப் போல என் பெண்களுக்கும் எனக்கும் உறவு இருந்தால் என் வாழ்க்கைக்கு அதுவே போதும். (இதையும் முப்பது வயதுக்குள் படித்துவிட்டேன்.)
 4. A Clockwork Orange by Anthony Burgess – படித்ததில்லை. ஆனால் சினிமா பிரமாதமாக இருந்தது.
 5. For Whom the Bell Tolls by Ernest Hemingway – படித்ததில்லை.
 6. War and Peace by Leo Tolstoy – ரொம்ப நாளாக ஷெல்ஃபிலேயே இருக்கிறது. புத்தகத்தின் சைஸ் பயமுறுத்துகிறது.
 7. The Rights of Man by Tom Paine – படித்ததில்லை. படிப்பேன் என்றும் தோன்றவில்லை. அரசு தன் கடமைகளை நிறைவேற்றாதபோது புரட்சி சரியே என்று சொல்கிறது.
 8. The Social Contract by Jean-Jacques Rousseau – படித்ததில்லை. படிப்பேன் என்றும் தோன்றவில்லை. தனி மனித உரிமைகளைப் பற்றி பேசுகிறது.
 9. One Hundred Years of Solitude by Gabriel García Márquez – என் டாப் டென் புத்தகங்களிலாவது வரும். இதில் என்ன கதை என்று சொல்வது கஷ்டம். பல நுண்விவரங்கள் உள்ள மிகப் பெரிய ஓவியத்தைப் பார்ப்பது போன்ற ஒரு உணர்ச்சி படிக்கும்போது ஏற்பட்டது. (இதையும் முப்பது வயதுக்குள் படித்துவிட்டேன்.)
 10. The Origin of Species by Charles Darwin – படித்ததில்லை. அவருடைய பரிணாமம் பற்றிய தியரி இதில் இருக்கிறது என்று நினைக்கிறேன். படிப்பேன் என்றும் தோன்றவில்லை.
 11. The Wisdom of the Desert by Thomas Merton – கேள்விப்பட்டதே இல்லை.
 12. The Tipping Point by Malcolm Gladwell – நல்ல புத்தகம். புத்தகம் வரும்போது எனக்கு முப்பது வயதுக்கு மேல் ஆகிவிட்டது. 🙂 ஒரு ஐடியாவுக்கு சில சமயம் ஒரு டிப்பிங் பாயின்ட் வருகிறது. அந்த பாயிண்டுக்கு பிறகு அது வேகமாக பரவுகிறது, அதை தடுக்க யாராலும் முடிவதில்லை. அதைப் பற்றி நிறைய பேசுகிறது.
 13. The Wind in the Willows by Kenneth Grahame – சூப்பர் டூப்பர் புத்தகம். குழந்தைகளுக்காக எழுதப்பட்டது என்றாலும் நானே இன்னும் விரும்பிப் படிப்பேன். பத்து வயது குழந்தைகளை படிக்க சொல்லுங்கள், இன்னும் சிறு குழந்தைகளுக்கு நீங்கள் படித்து சொல்லுங்கள்! (இதையும் முப்பது வயதுக்குள் படித்துவிட்டேன்.)
 14. The Art of War by Sun Tzu – நல்ல புத்தகம். எப்படி எதிரியை அழிப்பது என்று சொல்கிறது. (இதையும் முப்பது வயதுக்குள் படித்துவிட்டேன்.)
 15. The Lord of the Rings by J.R.R. Tolkien – இதை டீனேஜ் காலத்தில் படித்தேன். இது ஒரு cult புத்தகம். அமெரிக்காவிலும் இந்த புத்தகத்தின் விசிறி என்றால் உடனே ஒரு கனெக்ஷன் ஏற்பட்டுவிடுகிறது!
 16. David Copperfield by Charles Dickens – படிக்கலாம், ஆனால் சூப்பர் டூப்பர் என்றெல்லாம் சொல்லமாட்டேன். பத்தொன்பதாம் நூற்றாண்டு சமுதாயத்தில் வளரும் ஒருவனின் கதை. டிக்கன்சின் சுயசரிதை என்று சொல்வார்கள். (இதையும் முப்பது வயதுக்குள் படித்துவிட்டேன்.)
 17. Four Quartets by T.S. Eliot – எலியட் சென்ற நூற்றாண்டின் பெரும் கவிஞர் என்று கருதப்படுகிறார். ஆனால் நான் கவிதையைக் கண்டால் பின்னங்கால் பிடரியில் பட ஓடுகிறவன். அப்படி இருந்தும் அவருடைய Wasteland கவிதையில் சில வரிகள் – Here we go around the prickly pear at 4’o clock in the morning – மனித வாழ்க்கையில் அர்த்தம் இல்லாததை அருமையாக சொல்கின்றன. பல வருஷங்களுக்கு முன்னால் படித்திருந்தாலும், அந்த வரிகள் மிக ஆழமாக பதிந்துவிட்டன.
 18. Catch-22 by Joseph HellerOrr would be crazy to fly more missions and sane if he didn’t, but if he was sane he had to fly them. If he flew them he was crazy and didn’t have to; but if he didn’t want to he was sane and had to. இந்த ஒரு அற்புதமான வரியில் கதை அடங்கிவிடுகிறது. பிறகு மிச்ச முன்னூற்று சொச்ச பக்கத்தை கஷ்டப்பட்டுதான் படித்தேன். முப்பது வயதுக்குள் படித்ததால்தான் முடிக்க முடிந்தது, இப்போது ஆரம்பித்திருந்தால் தூக்கிப் போட்டுவிட்டுப் போயிருப்பேன்.
 19. The Great Gatsby by F. Scott Fitzgerald – படித்ததில்லை.
 20. The Catcher in the Rye by J.D. Salinger – இதையும் கொஞ்சம் கஷ்டப்பட்டுதான் படித்தேன். ஆனால் பிடித்திருந்தது. ஒரு டீனேஜரின் குழப்பமான மனநிலை என்பது over-simplification . ஆனால் ட்விட்டர் ஸ்டைலில் அவ்வளவுதான் முடியும்.
 21. Crime and Punishment by Fyodor Dostoyevsky – ரொம்ப நாளாக ஷெல்ஃபிலேயே இருக்கிறது. இங்கேயும் புத்தகத்தின் சைஸ் பயமுறுத்துகிறது.
 22. The Prince by Niccolo Machiavelli – படித்ததில்லை. அர்த்த சாஸ்திரம் மாதிரி என்று வைத்துக் கொள்ளலாம்.
 23. Walden by Henry David Thoreau – அற்புதமான புத்தகம். ஆனால் நான் இன்னும் இதை படித்து முடிக்கவில்லை. சில சமயம் நல்ல புத்தகங்களை படிக்க சரியான மனநிலை வேண்டும். அந்த மனநிலைக்காக வருஷக்கணக்காக வெயிட் செய்துகொண்டிருக்கிறேன். 🙂
 24. The Republic by Plato – படித்ததில்லை. படிப்பேன் என்றும் தோன்றவில்லை. ஒரு அரசு எப்படி இருக்க வேண்டும் என்று சொல்லும் புத்தகம்.
 25. Lolita by Vladimir Nabokov – கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு சிறுமியின் பேரில் ஏற்படும் obsession. லா.ச.ரா. இந்த புத்தகத்தின் inspiration-ஆல்தான் “அபிதா” எழுதினர் என்று கேள்வி.
 26. Getting Things Done by David Allen – புரட்டிப் பார்த்திருக்கிறேன். எப்படி செய்ய வேண்டியவற்றை effective ஆக செய்வது என்று சொல்கிறார். படிக்கலாம்.
 27. How To Win Friends and Influence People by Dale Carnegie – புரட்டிப் பார்த்திருக்கிறேன். பிரபலமான புத்தகம். படிக்கலாம்.
 28. Lord of the Flies by William Golding – கேள்விப்பட்டிருக்கிறேன். சிறுவர்கள் ஒரு தீவில் மாட்டிக் கொள்கிறார்கள். கிளாசிக் கதைகளில் வருவது போல அவர்கள் ஒன்றுபடவில்லை, தகராறுதான்.
 29. The Grapes of Wrath by John Steinbeck – படித்ததில்லை, புத்தகத்தின் சைஸ் இங்கும் பயமுறுத்துகிறது. அமெரிக்காவில் 1930-களில் பெரும் பொருளாதார வீழ்ச்சி. அந்த காலத்தில் விவசாயக் கூலி வேலை செய்யும் பரம ஏழைகளைப் பற்றிய கதை. ஸ்டீன்பெக் பக்கத்து ஊர்க்காரர். அவரது ஊரான சாலினாஸ் இங்கிருந்து ஒரு ஒரு மணி நேரத்தில் போய்விடலாம். அவருக்கு அங்கே ஒரு ம்யூசியம் இருக்கிறது.
 30. The Master and Margarita by Mikhail Bulgakov – கேள்விப்பட்டதே இல்லை.
 31. BONUS: How To Cook Everything by Mark Bittman – கேள்விப்பட்டதே இல்லை.
 32. BONUS: Honeymoon with My Brother by Franz Wisner – கேள்விப்பட்டதே இல்லை.

தொகுக்கப்பட்ட பக்கம்: லிஸ்ட்கள்

தொடர்புடைய பதிவுகள்:
மூலப்பதிவு
லா.ச.ரா.வின் அபிதா