மணிக்கொடி சதஸ்

ஒரு புகைப்படம் இல்லாமல் போய்விட்டதே என்று வருத்தமாக இருக்கிறது. வேறு பீடிகை இல்லாமல்.

லா.ச.ரா.வின் சிந்தாநதியிலிருந்து:

நாற்பத்தைந்து, நாற்பத்தேழு வருடங்களுக்கு முன் கூடவே இருக்கலாமோ? ஆனால் ஐம்பது ஆகவில்லை.

உங்களை மெரினாவுக்கு அழைத்துச் செல்கிறேன்.

சொல்லத் தேவையில்லையானாலும் கண்ணகி சிலை இல்லை.

ஸப்வே இல்லை. மூர்மார்க்கெட், பின்னால் வந்த பர்மா பஜார் போல் எல்லாப் பொருள்களும் வாங்கக்கூடிய சந்தையாக மெரினா மாறவில்லை. இத்தனை ஜனமும் இல்லை.

மாலை வேளை, வானொலியின் ஒலி பெருக்கிகளை மாட்டியாகிவிட்டது. அங்கேயே சுட்டு அப்பவே விற்கும் பஜ்ஜியின் எண்ணெய் (எத்தனை நாள் Carryover-ஓ?) புகை சூழவில்லை. நிச்சயமாக இப்போதைக் காட்டிலும் மெரினா ஆசாரமாகவும், சுகாதாரமாகவும், கெளரவமாகவும், காற்று வாங்கும் ஒரே நோக்கத்துடனும் திகழ்ந்தது. பூக்கள் உதிர்ந்தாற்போல், இதழ்கள் சிதறினாற்போல், எட்ட எட்ட சின்னச் சின்னக் குடும்பங்கள். நண்பர்களின் ஜமா. அமைதி நிலவுகிறது.

இதோ மணலில், வடமேற்கில் ப்ரஸிடென்ஸி கல்லூரி மணிக் கோபுரத்துக்கு இலக்காக அக்வேரியம் பக்கமாக என்னோடு வாருங்கள். ஆ, அதோ இருக்கிறார்களே, ஏழெட்டுப் பேர் கூடி உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

உஷ் – மணிக்கொடி சதஸ் கூடியிருக்கிறது. அதன் நடு நாயகமாக- அப்படியென்றால் அவர் நடுவில் உட்கார்ந்திருக்கவில்லை. எல்லாருமே சப்தரிஷி மண்டலம் போல் வரிசை இல்லாமல்தான் அமர்ந்திருப்பார்கள். நாயகத் தன்மையை அவருடைய தோற்றம் தந்தது.

அந்நாளிலேயே அவரைத் தென்னாட்டுத் தாகூர் என்று அந்த வட்டம் அழைக்கும். அந்த ஒப்பிடலுக்குப் பொருத்தமாகத்தான் இருந்தார். நடு வகிடிலிருந்து இருமருங்கிலும் கரும்பட்டுக் குஞ்சலங்கள் போலும் கேசச் சுருள்கள் செவியோரம் தோள் மேல் ஆடின. கறுகறுதாடி மெலிந்த தவ மேனி. ஆனால் அந்தக் கூட்டத்தில் பெரும்பாலும் மெலிந்த உடல்தான். சிதம்பர சுப்ரமணியனைத் தவிர, அவர் பூசினாற் போல், இரட்டை நாடி. க.நா.சு, சிட்டி சாதாரண உடல் வாகு.

ந. பிச்சமூர்த்தியின் அழகுடன் சேர்ந்த அவருடைய தனித்த அம்சம் அவருடைய விழிகள். ஊடுருவிய தீக்ஷண்யமான பார்வை. அதன் அற்புதக்ரணத் தன்மை அவருக்குக் கடைசிவரை இருந்தது. உயரத்தில் சேர்த்தி அல்ல. அவரிடம் மற்றவர்கள் காட்டின மரியாதையும், அவர் பேச்சுக்குச் செவி சாய்த்த தனிக் கவனமும், என்றும் சபாநாயகர் அவர்தான் என்பதை நிதர்சனமாக்கியது.

எத்தனைக்கெத்தனை பிச்சமூர்த்தி ஒரு பர்ஸனாலிட்டியாகப் பிதுங்கினாரோ அத்தனைக்கத்தனை அவர் எதிரே உட்கார்ந்திருந்த கு.ப.ரா. தான் இருக்குமிடம் தெரியாமலிருப்பதே கவனமாயிருந்தார் எனத் தோன்றிற்று. பிச்சமூர்த்தியைக் காட்டிலும் குட்டை. அவருடைய கனத்த மூக்குக் கண்ணாடி இல்லாவிட்டால் அவர் பாடு திண்டாட்டம்தான். பேசும்போது அவர் குரல் அவருக்குக் கேட்டதா என்பது என் சந்தேகம்.

பிச்சமூர்த்தியும், கு.ப.ரா.வும் எழுத்தில் கையாள எடுத்துக்கொண்ட விஷயம், பாணி தனித்தனி, ஆனால் ஏன் இவர்களைச் சிறுகதை இரட்டையர்கள் என்று குறிப்பிட்டார்கள்? எனக்குப் புரியவில்லை.

புதுமைப்பித்தனை மனதில் கூட்டுகையில், பளிச்சென்று நினைவில் படுவது அவருடைய உயர்ந்த dome like நெற்றியும் வெடிப்பான உரத்த சிரிப்பும்தான். அடிக்கடி சிரிப்பார்.

எனக்கு நினைவு தெரிந்தவரை, பி.எஸ். ராமையா எப்பவுமே உற்சாகமான பேர்வழி, நிமிர்ந்த முதுகும் வரித்த கழி போன்ற உடலுக்கு உறையிட்டாற் போல், ஜிப்பாவும், தரையில் புரளும் வேட்டியும் அவரை உயரமாகக் காட்டின. கைகளை உற்சாகமாக ஆட்டி உரக்கப் பேசுவார்.

இந்தக் கூட்டத்தை நான் உங்களுக்குப் பரிச்சயம் பண்ணும் சமயத்தில் கலைமகளில் சக்ரவாகம் என்கிற அவர் கதை வெளியாகி அதன் வெற்றிப்ரபை சிதம்பர சுப்ரமணியனைச் சூழ்ந்து ஒளி வீசிக்கொண்டிருந்தது. அவரிடம் விஷயம் நிறைய இருந்தது. ஆனால் சங்கோஜி. அப்படியே அபிப்ராயமாக ஏதேனும் அவர் சொல்ல ஆரம்பித்தாலும் சரியாக முடிக்காமல், சிரிப்பில், பலமான தலையாட்டலில் மழுப்பிவிடுவார். நுண்ணிய முக அங்கங்கள். அலைபாயும் க்ராப்.

தி.ஜ.ர. முழங்கால்களைக் கட்டியபடி குந்திட்டபடி உட்கார்ந்திருக்கிறார். அவருக்கு செளகர்யமான போஸ்ட்சர். தலையை அழுத்த வாரி, உடனேயே மெனக்கெட்டுத் தானே கையை உள்ளே விட்டுக் கலைத்துக் கொண்டாற்போல் குட்டையாக வெட்டிய க்ராப் விரைத்துக் கொண்டிருக்கும். அவர் தோற்றத்தில் கவனம் இன்னும் கொஞ்சம் செலுத்தியிருந்தால் அழகான மனிதனாகவே வெளிப்படுவார் என்பது என் கருத்து. செதுக்கினாற் போன்ற மூக்கு, வாய், வரிசையான முத்துப் பற்கள். சிரிக்கும்போது அவர் முகத்தில் ஐந்தாறு வயதுகள் உதிரும்.

சிட்டி, சி.சு. செல்லப்பா, க.நா.சு. இவர்களின் படங்களைச் சமீபமாகப் பத்திரிகைகளில் பார்க்கிறீர்கள். அன்றைக்கு இன்று வருடங்கள் இவர் தோற்றங்களை அதிகம் பாதித்திருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

ஒருவர், இருவர் அல்லது இருவர் மூவர். கூட்டத்தில் சேரலாம். குறையலாம். ஆனால் மாலை, இந்த வேளைக்கு இந்த இடத்தில் இந்த ஏழு பேர் நிச்சயம்.

அத்தனை பேரும் கதராடை.

இவர்களை விழுங்கும் விழிகளால் பார்த்துக்கொண்டு இவர்கள் பேச்சைச் செவியால் உறிஞ்சிக் குடித்துக் கொண்டிருப்பதில் எனக்கு அலுப்பே இல்லை.

இலக்கிய ஆர்வம் மிக்க என் நண்பன் குஞ்சப்பாவும் நானும், எங்கள் மரியாதையில், இயற்கையான வயதின் அச்சத்தில் இவர்களுக்கு நாலு அடி எட்ட உட்கார்ந்திருப்போம்.

நான் அப்போத்தான் மொக்கு கட்டியிருந்த எழுத்தாளன். எஸ்.எஸ்.எல்.சி. குட்டெழுத்து தட்டெழுத்துப் பரீட்சைகள் தேறிவிட்டு வேலைக்கு அலைந்து கொண்டிருந்தேன். தேடினால் கிடைத்துவிடுகிறதா? பறித்து எடுத்துக்கொள் என்கிற மாதிரி அப்பவே, வேலை ஒண்ணும் காய்த்துத் தொங்கவில்லை. அந்த ரோசம், அதனால் படும் கவலை சமயங்களில் தவிர, சிந்தனைக்கும் இலக்கியச் சிந்தனைக்கும் வயது காரணமாகப் பற்றிக் கொண்டிருக்கும் ஆக்கக் கனல் வெளிப்பட வழி காணாது, உள் புழுங்கவும் வேண்டிய நேரம் இருந்த அந்தப் பருவத்தில் என்னை என்னிலிருந்து மீட்டு எனக்குத் தருவதற்கு இந்தக் கடற்கரைக் குழுவின் பாதிப்பு தன் பங்கைச் செய்தது என்றால் மிகையில்லை.

மஞ்சேரி எஸ்.ஈஸ்வரன் ஆசிரிமையில் வெளி வந்து கொண்டிருந்த ‘ஷார்ட் ஸ்டோரி’ ஆங்கில மாதப் பத்திரிகையில் என் கதைகள் இரண்டு பிரசுரமாகியிருந்தன, அடுத்து மணிக்கொடி (ஆசிரியர் ப.ரா) யில் மூன்று கதைகள், ஹனுமான் வாரப் பத்திரிகையில் ஒன்று. உம், ஆமாம்.

“ஏண்டா, அங்கே தனியா உட்கார்ந்திண்டிருக்கே, இங்கே வாயேன்!”

தி.ஜ.ர, அழைப்பார். அப்படியே நகர்ந்து, அவருக்கும் ஈஸ்வரனுக்கும் இடையே (என் நினைப்பில்) அவர்கள் பாதுகாப்பில் இடுங்குவேன். அந்தக் கூட்டத்தில் ஒருவனாக நான் என்னைப் பாவித்துக் கொள்ளும் அதிர்ஷ்டம் இது மாதிரி நேர்ந்தால் வலிக்குமா? ஆனால் இங்கே வாய் திறக்க எனக்கு தில் கிடையாது. போயும் போயும் இங்கே றாபணாவா? என்னைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? அப்போதெல்லாம் யார் சொல்வதையும் கவனமாகக் கேட்டுக் கொள்ளும் பங்குதான் என்னுடையது.

என்ன பேசினார்கள்? இலக்கியம். இங்கே மார்தட்டல் கிடையாது. வகுப்பு நடத்தவில்லை. உபதேசம் செய்யவில்லை. இலக்கியத்திலேயே யாருக்கேனும் வாரிசு எடுத்துக்கொண்டு கட்சிப் பிரசாரம் கிடையாது. உலக இலக்கிய கர்த்தாக்களின் சிருஷ்டிகள் நடமாடின. அவர்கள் பெயர்களைச் சொல்லிச் சுவைக்க எனக்கு ஆசைதான். ஆனால் ஏதோ வெறும் பெயர்களை உதிர்த்து அதில் பெருமை அடையப் பார்க்கிறேன் எனும் சந்தேகத்துக்குக்கூட நான் ஆளாக விரும்பவில்லை. அந்த மாதிரிப் பெருமையால் எனக்கு இனி ஆக வேண்டியது ஏதுமில்லை. தவிர அப்போதேனும் மாப்பஸான், மாம், செக்கோவ் என்று எழுத்தாளர்கள் முனகினார்கள். Chase, Robbins, Maclean என்று இடத்தைப் பிடித்துக்கொண்டு, எழுத்து ஒரு ஃபாக்டரியாக மாறியிருக்கும் இந்நாளில் நாங்கள் பழகிய பெயர்கள், அந்த எழுத்துக்களின் சத்தியங்கள் எடுபடா.

பிச்சமூர்த்தியின் வெளிப்பாட்டில் விஷயம் நிறைய இருக்கும். அபூர்வமான விதானங்கள் தட்டும். இத்தனைக்கும் பேச்சில் சிங்காரங்கள், நகாசுகள் effect உண்டாக்க வேண்டும் எனும் தனி முயற்சி இல்லை. உள்ளது உள்ளபடி அவர் கண்டபடி. ஆனால் எப்படியும் கவிஞன் மனம் இல்லையா? லேசாக நடுக்கம் கொடுத்த குரலில் வார்த்தைகள் வெளிப்படுகையில், பிசிர்கள் கத்தரிக்கப்பட்டு, சொல்லும் பொருளும் சுளை சுளையாக விழுவது போலத் தோன்றும். ரத்னச் சுருக்கம். இதற்குள் முடிஞ்சு போச்சா? இன்னும் கொஞ்சம் பேசமாட்டாரா?

“ராஜகோபாலா! சிட்டி! செல்லப்பா!” என்று அழைக்கையில் அந்தக் குரல் நடுக்கத்தில் ததும்பிய இனிமை, பரஸ்பரம் யாரிடம் இப்போ காண முடிகிறது? அவர் பார்வையே ஒரு ஆசீர்வாதம்.

இலக்கிய விழாக்கள் இந்நாளில் கொண்டாடப்படுகின்றன. கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள் நடைபெறுகின்றன. டி.வி., வானொலி வழி வேறு: பேட்டிகள், சந்திப்புகள், மோஷியாரா, ஸம்மேளனம்.., எந்தச் சாக்கிலேனும் மேடை.

ஆனால் கடற்கரையில் மாலை அந்த இரண்டு, இரண்டரை மணி நேரம் இந்த ஏழெட்டுப் பேர் கூடி மனம் விட்டுப் பேசிக்கொண்டிருந்தார்களே, அதுதான் உண்மையில் இலக்கியப் பட்டறை.

இத்தனை வருடங்களின் பின்னோக்கில் எனக்கு இன்னும் வேறு ஏதேதோ உண்மைகள் புலப்படுகிறாப் போல் ஒரு உணர்வு.

ஏதோ ஒரு வகையில், இவர்கள் எழுத்துக்குத் தங்களை அர்ப்பணித்துக்கொண்ட பிக்குகள்.

இந்த ஏழெட்டுப் பேரில் நாலுபேர் இப்போது நம்முடன் இல்லை. இவர்களில் மூவரேனும் எழுத்துக்கே பலியானவர்கள்.

அந்த மஹாராஜியைப் பற்றி எனக்குக் கொஞ்சம் தெரியும். அவள் மோஹினி. மிக்க அழகி. இரக்கமற்றவள். Medusa “வா, வா. என்னைப் பார். என் அழகைப் பார்!”

அவன் நெஞ்சை நீட்டுகிறாள். உள் உள்ளேயே பாடுகிறாள்.

கொல் இசை.

சிந்தா நதி மேல் கவிந்த ஒரு பனிப் படலம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: லா.ச.ரா. பக்கம்

பொங்கல் சிறுகதை – லா.ச.ரா.வின் ‘மண்’

pongal

பொங்கலுக்காக ஒரு சிறுகதை என்றவுடன் முதலில் நினைவு வந்தது லா.ச.ரா. எழுதிய ‘மண்‘ சிறுகதைதான். மகிழ்ச்சியாக பொங்கலைக் கொண்டாட வேண்டிய வேளையில் இப்படி ஆங்காரத்தை வெளிப்படுத்தும் கதையா என்று ஒரு நிமிஷம் யோசித்தேன். அப்புறம் லா.ச.ரா.வே பாற்கடல் என்ற சிறுகதையில் எழுதிய சில வரிகள் நினைவு வந்தன.

குடும்பம் ஒரு பாற்கடல். அதிலிருந்து லக்ஷ்மி, ஐராவதம், உச்சஸ்ரவஸ் எல்லாம் உண்டாயின. அதிலிருந்து முளைத்துத்தான் எனக்கு நீங்கள் கிட்டினீர்கள். ஆலஹால விஷமும் அதிலிருந்துதான் உண்டாகியது; உடனே அதற்கு மாற்றான அம்ருதமும் அதிலேயேதான்…

மண் லா.ச.ரா.வின் பிரமாதமான சிறுகதைகளில் ஒன்று. இது வரை படித்ததில்லை என்றால் கட்டாயம் தவறவிடாதீர்கள்!

பொங்கல் என்றால் உங்களுக்கு நினைவு வரும் சிறுகதை என்ன? கட்டாயம் அதை மறுமொழியில் குறிப்பிடுங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: லா.ச.ரா. பக்கம்

புத்ர பற்றி லா.ச.ரா.

ஹிந்து பத்திரிகையின் தமிழ் வடிவத்தில் வந்த கட்டுரையை மீள்பதித்திருக்கிறேன், நன்றி, ஹிந்து!

La_Sa_Raஎங்கோ ஒரு இடத்தில் ஏற்கனவே உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன். நான் என் முன்னோர்களின் சரித்திரகன் தவிர வேறு இல்லையென்று. அவர்கள் எல்லாருமே அவர்கள் தன்மையில் அதீதமானவர்கள். முன்கோபிகள். கர்வம் பிடித்தவர்கள். ஆனால் முற்றிலும் நாணயமானவர்கள். இந்த நாவலை எழுதும்போது நான் அப்படி விடுவித்த வாக்குமூலம் எனக்கு அத்தனை ஸ்பஷ்டமாக விளங்கவில்லை. ஆனால் இப்போது அதைப் படிக்கையில் அது சர்வ உண்மையே. இதில் இடம்பெறும் பாத்திரங்கள் ஐந்து தலைமுறை ஆசாமிகள். அதாவது சுமார் நூறு வருஷங்களுக்கு முன்னவர்களாய் இருக்கலாமா?

என் நாவலின் கதாநாயகி ஜகதாவாக, அவளுடைய மாமியாராக மாற்றி மாறி என் தாயாரைத்தான் பார்க்கிறேன். அவளுடைய மாமனார் பல இடங்களில் என் பாட்டனாரை ஒத்திருக்கிறார். ஜகதாவின் கணவன் அங்கங்கு என் தகப்பனாரை நினைவூட்டுகிறார். ஜகதாவின் பிறந்த கத்தின் ஏழ்மை எங்கள் குடும்பத்தின் ஏழ்மை. இந்த நாவல் தோன்றுவதற்கே அடிப்படையாக விளங்கும் சாபம், எங்கள் குடும்பத்தில் யாரோ ஒரு பாட்டி வயிறு கொதித்து இட்டு பலித்துவிட்ட வாக்கு. மாதா பிதாவின் சாபம் மக்கள் தலைமேலே என்கிற வழக்கு சும்மா பிராசத்திற்காக அல்ல. THE SINS OF THE FATHERS SHALL BE VISITED ON THE CHILDREN. இது பைபிள் வாக்கு. இரண்டும் ஒன்று அல்ல எனினும் ஏறக்குறைய ஒன்றுதான். பரம்பரை அதன் ஆசாரம், பண்பு, வாழ்முறை அவைகளைப் பேணுவதில் இருக்கும் இன்பம் அவசியம். நான் ஐதீகவாதி.

‘அடே!’ இந்த விளிப்பைப் படிக்கையில் எனக்கு இப்போதே குலை நடுங்குகிறது. இந்த ‘அடே’ பெரிசு இல்லை. தொடர்ந்து வரும் சாபத்தின் வார்த்தைகள் பெரிசு இல்லை. ஆனால் அந்த த்வனி நாபிக் கொதிப்பினின்று கக்கும் அந்த எரிமலைப் பிழம்பு – எப்படி என் வாழ்த்தைகளில் பிடிபட்டன என்று இப்போதும் வியப்பாய், பயமாய் இருக்கிறது. இப்பொழுது எனக்கு இப்படி எழுதவருமா? வராது என்பதே என் துணிபு. சொல்லின் உக்ரம் எப்படிப்பட்டது என்று இப்போது உணர்கிறேன்.

பொதுவாகவே என் எழுத்து என் உயிரைக் குடித்து விட்டது. அதுவும் புத்ர, அபிதா இரண்டும் என்னை உறிஞ்சிவிட்டன. அப்படியும் அல்லது அதனாலேதானோ ஒரு சந்தோஷமும் இருக்கிறது. இத்தனை வருடங்கள் கழித்து, இந்த நாவலைப் பற்றி இன்னமும் பேசுகிறார்கள். என் வாசகர் வட்டம் சலிக்கவில்லை என்று என் பதிப்பாளர்களே சொல்லும்போது அதுவேதான் எனக்கு பலம் – உடல் உள்ளம் இரண்டும் சேர்ந்துதான்.

நான் எழுதிக்கொண்டது எனக்குத்தான். வாசகர்கள் நீங்கள் படிப்பதும் உங்களுக்காகத்தான். அதனால்தான் ‘புத்ர’ இன்னமும் பேசப்படுகிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: லா.ச.ரா. பக்கம்

லா.ச.ரா. பற்றி வெங்கட் சாமிநாதன்

‘விடுமுறையில்’ – வெங்கட் சாமிநாதன் லா.ச.ராவைப் பற்றி எழுதிய ஒரு பிரமாதமான அறிமுகம் ஒன்று கண்ணில் பட்டது. ஆனால் மலிந்து கிடந்த எழுத்துப் பிழைகளால் படிக்க ரொம்ப கஷ்டமாக இருந்தது. எனக்குத் தெரிந்தவரை திருத்தி இங்கே பதித்திருக்கிறேன். (இப்போது விக்கியிலும் சேர்ந்து அங்கும் திருத்திவிட்டேன்.)



டச்சு சைத்ரீகர் வான்கோ தனது சகோதரர் தியோவுக்கு எழுதிய கடிதங்கள் ஒன்றில் ஜப்பானிய உகியோ-யி கலைஞர்களைப் பற்றி எழுதுகிறார்: “தன் வாழ்க்கை முழுதும் அவன் ஒரு புல் இதழைத்தான் ஆராய்கிறான்: ஆனால் எல்லா தாவரங்களையும், மிருகங்களையும், பட்சிகளையும், மனித உருவங்களையும் அவனால் வரைந்துவிட ஒரு புல் இதழின் ஆராய்வில் சாத்யமாகிறது. இதற்குள் அவன் வாழ்க்கையே முடிந்து விடுகிறது. அவனுடைய ஆராய்ச்சி மேற்செல்லமுடியாது வாழ்க்கை முடிந்து விடுகிறது. ஏனெனில் வாழ்க்கை மிகக் குறுகியது.”

ரவீந்திரநாத் டாகூரின் கவிதை ஒன்றில் உலகத்தைச் சுற்றிவந்து காணும் ஆசையில் ஒருவன் மேற்கொண்ட நீண்ட பயணத்தில் எண்ணற்ற மலைகள், நதிகள், தேசங்கள் கடந்து கடைசியில் களைப்புற்று தன் வீடு திரும்புகிறான். திரும்பியவன் கண்களில் முதலில் பட்டது, அவன் குடிசையின் முன் வளர்ந்திருந்த புல் இதழின் நுனியில் படிந்து இருந்த பனித்துளி. அதில் அவன் சுற்றி வந்த உலகம் முழுதையும் கண்டு அவன் ஆச்சரியப்பட்டுப் போகிறான். சுற்றிய உலகம் முழுதும் அவன் காலடியிலேயே காணக் கிடைக்கிறது.

La_Sa_Raலா.ச. ராமாம்ருதம் எழுத ஆரம்பித்த முப்பதுக்களின் பின்பாதியிலிருந்தே, இடைப்பட்ட நாற்பத்தைந்து வருட காலத்தில் அவரது எழுத்துலகம் அவரது வீட்டையும் குடும்பத்தையும் விட்டு வெளியே கால் வைத்ததில்லை. அவர் எழுதியதெல்லாம் அந்த குடும்ப எல்லைக்குட்பட்ட உலகைப் பற்றித்தான். அதன் என்றென்றுமான குடும்ப பாசங்களும், உறவுகளும் குழந்தைகள் பிறப்பும், வீட்டில் நிகழும் மரணங்களும், சடங்குகளும், பெண்களின் ஆளுமை ஓங்கி உள்ள உறவுகளும்தான் அவரது கதைகளின் கருப்பொருள்களாகியுள்ளன. அம்மாக்களும் மாமியார்களும் நிறைந்த உலகம் அது. அந்த மாமியார்களும் அம்மாக்களாக உள்ளவர்கள்தான். ராமாம்ருதத்திற்கு இந்த வட்டத்திற்கு அப்பால் உள்ள உலகம் இல்லாத உலகம்தான். இந்த வட்டத்திற்கு வெளியே சமூகத்தில், வெளி உலகில் நிகழ்ந்துள்ள, நிகழும் எதுவும் – சமூக மாற்றங்கள், தேசக் கிளர்ச்சிகள், போர்கள், புரட்சிகள் எதையும் – ராமாம்ருதமோ, அவர் கதைகளின் பாத்திரங்களோ, கேட்டிருக்கவில்லை போலவும் அவற்றோடு அவர்களுக்கு ஏதும் சம்பந்தமில்லை போலவும் அவர்கள் உலகில் காலம் உறைந்து விட்டது போலும் தோன்றும். ஆனால் அவர் கதைகளில் குடும்ப பாசங்கள், தளைகள், பிரிவுகள் என்ற குறுகிய உலகினுள்ளேயே நாம் காலத்தின் ப்ரவாஹத்தையும் பார்க்கிறோம்.

முப்பதுகளிலிருந்து அவருடைய கதைகளில் திரும்பத் திரும்ப வரும் காட்சிகளும், பாத்திரங்களும் 1890களைச் சேர்ந்தவைகளாகக் கூட இருக்கலாம். ஆனால் அந்த உறவுகளின் உணர்வுகளையும், பாசங்களையும், ராமாம்ருதம் தனது தூரிகையில் தீட்டிவிடுகையில், அவற்றிலிருந்து எழும் மன உலகத் தேடல்களும் தத்துவார்த்தப் பிரதிபலிப்புகளும் 1990களில் வாழும் நம்மைப் பாதிக்கின்றன. 2090-ல் வாசிக்கக்கூடும் ஒரு வாசகனின் மன எழுச்சிகளும் அவ்வாறுதான் இருக்கும் என்று நாம் நிச்சயித்துக்கொள்ளலாம். கண்கள் ப்ரகாசிக்க, குறும்புப் புன்னகையுடன் ராமாம்ருதம் நம்மைக் கேட்கக் கூடும், “ருஷ்யப் புரட்சியும் வியட்நாம் யுத்தமும் புல்லின் மீது படிந்திருந்த பனித்துளியை என்ன செய்தன? அது எம்மாற்றமும் அடைந்ததா? அல்லது பனித்துளிதான் உலகத்தில் நிகழும் எண்ணற்ற மாற்றங்களை, அது செர்னோபில்லிலிருந்து கிளம்பிய அணுப்புகை நிறைந்த மேகங்களேயாக இருந்தாலும், தன் பனித்திரைக்குள் பிரதிபலிக்கத்தான் தவறிவிட்டதா?” இந்த அகங்காரம் நிறைந்த தனிமைக்கு நாம் தலை வணங்கித்தான் ஆகவேண்டும். இத்தனிமை கலைஞனாக சுய ஆராய்வில் தனது ஆளுமைக்கும் நேர்மைக்கும், ஏற்ப அவர் தேர்ந்தெடுத்துக் கொண்டது. ஏனெனில் ராமாமிர்தம் அவர் காலத்திய சரித்திர நிகழ்வுகளோடும் இலக்கிய நிகழ்வுகளோடும் வாழ்பவர். அவர் தனது மத்திய தர பிராமண குடும்ப பிணைப்புகளையும் பாசங்களையும் பற்றியே எழுதுபவராக இரூக்கலாம். ஆனால் அவர் அறிந்த அவருக்கு முந்திய சமஸ்க்ருத, ஆங்கில, தமிழ் செவ்விலக்கியங்களுக்கெல்லாம் அவர் வாரிசான காரணத்தினால் அவற்றிற்கெல்லாம் அவர் கடமைப்பட்டவர். லா.ச. ராமாம்ருதம் பிதுரார்ஜிதமாகப் பெற்ற இந்த குறுகிய கதை உலகத்தை அவர் மிகக் கெட்டியாக பற்றிக் கொண்டுள்ள தகைமையைப் பார்த்தால் அதை ஏதோ மதம் என எண்ணிப் பற்றியுள்ளது போல் தோன்றும். அவர் எழுத்தில் காணும் நனவோடை உத்தி ஜேம்ஸ் ஜாய்ஸிடமிருந்து பெறப்பட்டதாகச் சொல்லப்பட்டாலும், ராமாம்ருதம் ஜாய்ஸின் எழுத்தையும் உத்தியையும் ஆபாசம் என்று உதறி விடுவார். அது போக ஜாய்ஸின் நனவோடை உத்தி துண்டாடப்பட்ட சப்த நிலையில் காண்பதற்கு எதிராக ராமாம்ருததின் நனவோடை உருவகங்களின், பிம்பங்களின் சப்த பிரவாஹம் எனக் காணலாம். (புத்ர ப. 9-10).

க.நா. சுப்ரமண்யம் லா.ச. ராமாம்ருதத்தின் எழுத்துக்களைப் பற்றி ஒரு விசேஷமான கருத்து ஒன்றைச் சொல்லி இருக்கிறார். அதாவது, ராமாம்ருதம் இவ்வளவு வருஷங்களாக ஒரே கதையைத்தான் எழுதிக் கொண்டிருக்கிறார் என்று க.நா.சு. சொல்கிறார். ராமாம்ருதமும் இதை சந்தோஷத்துடன் ஒப்புக்கொள்வார். “நான்தான் நான் எழுதும் கதைகள், என்னைப் பற்றித்தான் இவ்வளவு நாளும் தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறேன் நான்,” என்பார். சாஹித்திய அகாடமி பரிசு வாங்கிய சிந்தாநதிக்கு இணை என்று சொல்லத் தக்க, அதற்கு முந்திய புத்தகமான பாற்கடல் மிகவும் குறிப்பிடத்தக்க விசேஷமான புத்தகம். லா.ச. ராமாம்ருதம் பாற்கடலை தன் குடும்பத்தைக் குறிக்கும் உருவகமாகப் பயன்படுத்துகிறார். பாற்கடல் ராமாம்ருதத்தின் குடும்பத்தினதும் அவர் மூதாதையரதும் மூன்று தலைமுறை வரலாற்றை, காலவரிசையில் அல்ல, அவ்வப்போது நினைவு கூறும் பழம் சம்பவத் துணுக்குகளாக எழுதிச் செல்கிறார். அதில் அவர் நமக்கு அறிமுகப்படுத்தும் ஆண்கள், பெண்கள் எல்லோரும் நம்மில் வெகு ஆழமாக பதிபவர்கள். அவர்கள் எல்லோர்களுக்கிடையில் அவரது பாட்டனாரும் விதவையாகிவிட்ட அத்தைப் பாட்டியும்தான் காவிய நாயகர்கள் எனச் சொல்லத் தக்கவர்கள். பாற்கடல் ராமாமிர்தத்தின் வாலிப வயது வரையான நினைவுகளைச் சொல்கிறது.

இதற்குப் பிந்திய கால நினைவுகளைத் தொகுத்துள்ள சிந்தாநதி ராமாமிர்தம் தன் எல்லா எழுத்துக்களிலும் தன்னைப் பற்றியும் தன் குடும்பத்தினரைப் பற்றியுமே எழுதி வந்துள்ளார் என்பதற்கு சாட்சிமாக நிற்கிறது. அவர்கள் எல்லோருமே அவரது போற்றுதலுக்கும் வணக்கத்துக்கும் உரியவர்களாக இருக்கிறார்கள். அவர் வீட்டில் நடக்கும் நிகழ்ச்சிகள் பலவும் ஒரு தேர்வில் அதில் இடம் பெறுகின்றன. இவற்றைப் பற்றி நினைக்கும்போதெல்லாம் ராமாம்ருதம் பெரும் திகைப்புக்கும் ஆச்சர்யத்துக்கும் உள்ளாவார். நாற்பது வருடங்களாக அவர்களைப் பற்றி, கிட்டத்தட்ட நூறு கதைகளிலும், மூன்று நாவல்களிலும் எழுதிய பிறகும் கூட, இன்னமும் அவர்களைப் பற்றிய அவரது சிந்தனை வற்றிவிடவில்லை, அப்பிரமையிலிருந்து அவர் இன்னும் விடுதலை பெறவில்லை என்றுதான் அவருக்குத் தோன்றுகிறது. மற்ற எவரையும் விட, அவரது குடும்ப தெய்வமான பெருந்திரு, அவருடைய தாத்தா, கொள்ளுப் பாட்டி, பின் அவரது பெற்றோர்கள், இவர்களனைவரும் அவர் மீது அதிகம் செல்வாக்கு கொண்டுள்ளனர். இவர்கள்தான் அவருக்கு ஆதர்சமாக இருக்கின்றனர். இவர்களிலும் கூட குடும்ப தெய்வமான பெருந்திருவும் அவருடைய பாட்டியும்தான் அவர் சிந்தனைகளை அதிகம் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளனர். அவரது தாத்தா ஒரு கவிஞராக இருந்திருக்கிறார். அவர்களது குடும்ப தெய்வம் பெருந்திரு பற்றி அவருக்குத் தோன்றியதையெல்லாம் அவர் கவிதைகளாக எழுதி நிரப்பிய நோட்டுப் புத்தகங்கள் எல்லாம் அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அவரைத் தவிர வேறு யாரும் அவற்றைத் தொடுவது கிடையாது. எழுதுவது என்ற காரியம், இன்னொருவருக்குச் சொல்ல என்று இல்லாமல், அதை ஒரு தியானமாகக் கருதுவது, எழுதுவதை கவிதைப் பாங்கில் எழுதுவது, சக்தி பூஜையும், வாழ்வையும் மரணத்தையும் கொண்டாடுவது போன்ற ராமாம்ருதத்தின் இயல்புகள் அனைத்தும் அவரது பாட்டனாரிடமிருந்து அவர் பெற்றார் போலும். இதை சாதாரணமாகச் சொல்லி விடக் கூடாது. அடிக்கோடிட்டு வலியுறுத்த வேண்டிய விஷயம் இது.

ராமாம்ருதத்தின் எழுத்தில் காணும் அனேக விசேஷமான அவருக்கே உரிய குணாம்சங்களை அது விளக்கும். ராமாம்ருதம் தான் எவ்வளவு பக்தி உணர்வு கொண்டவர் என்பதோ, அதை எவ்வளவுக்கு வெளியே சொல்வார் என்பதும் நமக்குத் தெரியாது. ஆனால், அவரது கதைப் பாத்திரங்கள் மற்றவரையும் தம்மையும் உக்கிர உணர்ச்சிவசப்பட்ட வேதனைக்கு ஆட்படுத்துவது, ராமாமிருதத்தின் பேனாவிலிருந்து கொட்டும் வெப்பமும் சக்தியும் மிகுந்த வார்த்தைகள், குடும்பத்தைத் தாங்கிக் காக்கும், அதற்கு உயிர் கொடுக்கும், குடும்பத்தின் ஏற்றம் இறக்கங்களுக்கெல்லாம் தாம்தான் அச்சு போன்றும் இயங்கும் பெண் பாத்திரங்களின் சித்தரிப்பு (ராமாம்ருதம் தன் உள்மன ஆழத்தில், தென்னிந்திய சமூகமே அதன் நடப்பிலும் மதிப்புகளிலும் இன்னமும் தாய்வழிச் சமூகம் தான் என்ற எண்ணம் கொண்டவராகத் தெரிகிறது) அவரது ஆழ்மனதிலிருந்தே வெளிப்பட்டிருக்க வேண்டும்.

திரும்பத் திரும்ப அவர் கதைகளில் காட்சி தரும் புஷ்பங்கள், குங்குமம், சடங்கு வழிப்பட்ட ஸ்நானங்கள், அக்னி, சாபங்கள், ஆசீர்வாதங்கள், நமஸ்காரங்கள் எல்லாமே சக்தி ஆராதனை சம்பந்தப்பட்ட படிமங்கள். இவை அவர் எழுத்துக்களில் நிறைந்து காணப்படுவதை வைத்துப் பார்த்தால் அவரது குடும்பத்தின் தேவி வழிபாடு தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து வருவதன் இலக்கிய வெளிப்பாடுதான் ராமாமிருதத்தின் எழுத்து என்று எண்ணத் தோன்றுகிறது. அவரது எழுத்துக்களில் மிகச் சக்தி வாய்ந்ததும், பரவலாகக் காணப்படுவதுமான கருப்பொருள் மரணம்தான். இந்த சக்தி வாய்ந்த கரு அவரை மிகவும் கவர்ந்துள்ளது போலும். அவர் இந்த விஷயத்திற்குத்தான் தன் எழுத்துக்களில் அவர் திரும்பத் திரும்ப வருகிறார், இந்த நித்திய உண்மை அவரை ஆட்கொள்ளும் போதெல்லாம் அவர் தன்னை இழந்தவராகிறார். முரணும் வேடிக்கையும் என்னவென்றால், மரணத்தில்தான் ஒருவன் வாழ்க்கையின் மகத்துவத்தை அறிந்துகொள்கிறான்.

ராமாம்ருதம் கதை சொல்லும் பாங்கே அவருக்கேயான தனித்துவம் கொண்டது. அவருடைய பாத்திரங்கள் நிச்சயம் நாம் அன்றாட சாதாரண வாழ்க்கையில் காணும் சாதாரண மனித ஜீவன்கள்தான். ஆனால் ராமாம்ருதம் கதைகளில் அவர்கள் உணர்ச்சிகளின் கொந்தளிப்பில் கொதிநிலையில் அறிமுகமாகிறார்கள். அவர்கள் ஒருவரை ஒருவர் வருத்திக் கொண்டு வேதனைப்படுகிறார்கள். அவர்கள் வாழ்க்கையில் நேர் எதிர்முனை நிலைகளில்தான் வாழ்கிறார்கள். அது சந்தோஷம் தரும் வேதனைகளும், வேதனைகள் தரும் சந்தோஷமும்தான். பெரும்பாலும் பின்னதே உண்மையாகவும் இருக்கும். எல்லாம் தடித்த கோடுகளில் வரையப்பட்ட சித்திரங்கள். இத்தகைய அறிமுகத்திற்குப் பிறகு ராமாம்ருதம் நம்மை அப்பாத்திரங்களின் மனப் பிரக்ஞைகளின் பாதைகளுக்கு, அவை அகன்ற சாலைகளோ, குறுக்கு ஒற்றையடிப்பாதைகளோ, சந்துகளோ, அவற்றின் வழி அவர்தான் இட்டுச்செல்கிறார். இவை கடைசியில் பிரபஞ்ச விஸ்தாரத்திற்கு இட்டுச் சென்று அவற்றின் இயக்கத்தின் அங்கங்களாகத் தான் மனித ஜீவன்களின் மற்ற உயிர்களின் இயக்கங்களும் சொக்கட்டான் காய்களாக விதிக்கப்பட்டுள்ளன, விதிக்கப்பட்டதை ஏற்று அனுபவிப்பதுதான் என்று சொல்கிறார் போலும். இந்லையில் ராமாம்ருதத்தின் பாத்திரங்களின் உணர்வுகளின் மனச் சலனங்களின் குணத்தையும் வண்ணங்களையுமே பிரபஞ்சப் பின்னணியும் ஏற்பதாகத் தோன்றுகிறது. இதில் எது எதன் பின்னணி, எது எதன் பிரதிபலிப்பு என்று சொல்வது கடினமாகி விடும். இது ஒரு பிரும்மாண்ட அளவிலான சலனங்களின், உணர்வுகளின் இசைத்தொகுப்பு.

தரங்கிணி என்னும் அவரது ஒரு சிறுகதைத் தொகுப்பை ‘பஞ்சபூதக் கதைகள்‘ என்கிறார் ராமாமிர்தம். அதன் ஒவ்வொரு கதையிலும் பிரதானமான ஒரு பெண்ணின் வாழ்க்கையைத் தீர்மானிப்பது, அதன் ஒவ்வொரு முக்கிய திருப்பத்தையும் பின்னிருந்து பாதித்து மறைமுகமாக நடத்திச் செல்வது பஞ்சபூதங்களில் ஒன்று. ஒவ்வொரு கதையிலும் ஒன்று, நீர், அக்னி, ஆகாயம், பூமி, காற்று இப்படி. அந்தந்தக் கதையில் திரும்பத் திரும்ப வரும் படிமம், பெண்ணின் அலைக்கழிக்கும் மன உளைச்சல், வாழ்க்கையின் ஒவ்வொரு அடிவைப்பையும் தீர்மானிக்கும் சக்தி அந்த பூதங்களில் ஒன்றாக இருக்கும். இத்தொகுப்பு, ராமாம்ருதத்தின் எழுத்துத் திறனுக்கும், தரிசனத்திற்கும் சிறந்த அத்தாட்சி. ஆனால் இந்த குணங்களை ராமாம்ருதத்தின் எல்லா எழுத்துக்களிலும் காணலாம். நினைவலைகள், சொற்சித்திரங்கள், படிமங்கள் எல்லாம் அவருடைய கதை சொல்லும் வழியில் வெள்ளமெனப் பெருக்கெடுக்கும். அவை மனித பிரக்ஞை நிலையின் வெவ்வேறு அடுக்குகளில், படிகளில், முன்னும் பின்னுமாக, மேலும் கீழுமாகப் பாயும். அடிமன நினைவோட்டமாக ஒரு கணம் இருக்கும் ஒன்று அடுத்த கணம் விஷம் கக்கும் சொல்லம்புகளாக பிரக்ஞை நிலையில் உருக்கொள்ளும். அன்றாட வாழ்க்கையின் மனிதமன தர்க்கத்திற்கும், காரண காரிய சங்கிலித்தொடர் புரிதலுக்கும், சாவதானமான நின்று நிதானித்த மன ஆராய்ச்சிகளுக்கும் இங்கு இடம் இருப்பதில்லை. பிரக்ஞை நிலையில் அவர்கள் இரு கோடிகளில் எதிரும் புதிருமாக நின்று வெறி பிடிஒத்துக் கனல் கக்குவதைப் பார்க்கிறோம். ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள்? ஒரே பதில், அவர்கள் அப்படித்தான் விதிக்கப்பட்டிருக்கிறார்கள். கிரேக்க துன்பியல் நாடக பாத்திரங்களைப் போல. விதிக்கப்பட்ட அந்த முடிவுக்குத் தான் அவர்கள் விரைந்து கொண்டிருப்பார்கள். ராமாமிர்தத்தின் உலகம் தரும் அசாதாரண மாயமும் மிகுந்த பிரயாசையில் சிருஷ்டிக்கப்பட்ட வார்த்தைகளுமான உலகில், சாதாரண அன்றாட சம்பவங்கள் கூட வாழ்க்கையின் மிக முக்கிய திருப்பங்களாகின்றன, வெடித்துச் சிதறும் நாடகார்த்த விசேஷம் கொள்கின்றன. சாதாரண மனித பாத்திரங்கள், காவிய ரூபம் தரித்துக் கொள்கின்றன. சாதாரண அன்றாட வார்த்தைகள் தெய்வ அசரீரி வாக்குகளாக மயிர் கூச்சலெரியும் சக்தி பெற்றுவிடுகின்றன. எல்லோருமே ஏதோ பேய் பிடித்தவர்களைப் போல, பேசுகிறார்கள், நடந்து கொள்கிறார்கள். அம்மன் கோயில்களில் காணும் காட்சி போல. தலை விரித்த பெண் கால் சம்மட்டியிட்டு தரையிலமர்ந்திருக்கும் விரித்த தலையும் உடலும் வெறி பிடித்து ஆடக் காணும் காட்சி.

ஏன், ராமாமிர்தமே கூட, எழுதும் போதும், நண்பர்களுடன் பேசும்போதும், சின்ன கூட்டங்களில் கிட்ட நெருக்கத்தில் பேசும்போதும் அவர் உணர்வு மேல் நிலைப்பட்ட மனிதர் தான். அவர் தன் எழுத்தக்கள் பற்றிப் பேசும்போது கூட அவரிடமிருந்து வரும் வார்த்தைகள் அவர் கதைகளின் பாத்திரங்கள் பேசும் பாணியில் தான் இருக்கும். ஒரே சமயத்தில் பயப்படுத்தும், ஆசீர்வதிக்கும், அன்பு பொழியும், அழகிய சிருஷ்டி மனத்தில் இருக்கும் ஊர்த்துவ தாண்டவம்தான் அது. அட்டகாசமான, உடைகளும் தோற்றமும் கொண்டு தன்னை மறந்த உணர்ச்சி வசப்பட்டு ஆடும் தெய்யம் போல. அல்லது உயர்த்திப் பிடித்த நீண்ட வாளுடன் தாக்கத் தயாராக வந்தது போன்று கோயில் இருளில் அங்குமிங்கும் பலத்த அடி வைப்புகளுடன் எண்ணெய் விளக்கின் ஒளியில் பகவதி அம்மனின் முன் நடந்து வரும் வெளிச்சப்பாடு போல. வெளித்தோற்றத்தில் பயமுறுத்தும் உடைகளும் ஆட்டமும் கொண்ட தெய்யம்தான் பக்தி கொண்டு சூழும் மக்களை ஆசீர்வதிக்கும் தெய்யம், தாயின் மடியிலிருந்து குழந்தையை வாங்கிக்கொண்டு கனிவோடு ஆசீர்வதிக்கும் தெய்யமும். உணர்வு திரும்பிய வெளிச்சப்பாடு, பழைய சாதுவான மனிதன்தான். ராமாமிர்தமும் சிரித்த முகத்துடன் மெல்லிய குரலில் பேசும் சாது மனிதர்தான். அவர் எழுத்துக்களை மாத்திரம் படித்து மனதில் கற்பனை செய்து கொண்டிருக்கும் மனிதரா இந்த ராமாமிர்தம் என்று வியக்கத் தோன்றும். அவரது குலதெய்வம் பெருந்திருவும் அவரது கொள்ளுப்பாட்டி லக்ஷ்மியும் இன்னும் அவரைப் பிடித்தாட்டத் தொடங்கவில்லை. இரண்டு உணர்வு நிலைகளில் நாம் காணும் வெளிச்சப்பாடு போலச் சாதுவாக சிரித்த முகத்துடன் காணும் ராமாமிர்தம்.

என்னதான் உணர்ச்சிகளின் வெப்பங்களும், சில்லிட வைக்கும் படிமங்களும் ராமாமிர்தத்தின் எழுத்துக்களில் நிறைந்திருந்த போதிலும் அவர் எழுத்து அதன் சாரத்தில் மனிதனையும் அவனை தெய்வ நிலைக்கு உயர்த்தும் நினைப்புகளையும் கொண்டாடும் எழுத்துத்தான்.

கடந்த ஐம்பது வருடங்கள் நீண்ட தன் எழுத்து முயற்சிகளில் ராமாமிர்தம் தனக்கென ஒருமொழியையும் நடையையும் சிருஷ்டித்துக் கொண்டுள்ளார். அது அவரை மற்ற எல்லா எழுத்தாளர்களிடமிருந்து வேறுபடுத்தும். அவ்ரது கதை ஏதும் ஒன்றின் ஆரம்ப சில வரிகளின், வாக்கியத்தின் சொற்களையும் சொற்றொடர்களையும் படித்த மாத்திரத்திலேயே அவற்றை எழுதியது யாரென்று தெரிந்துவிடும். படிப்பவருக்கு ராமாமிர்தத்தைப் பிடிக்கிறதா இல்லையா எனபது ஒரு பிரச்சினையே இல்லை. படிக்கத் தொடங்கியதுமே அவரது நடையும் மொழியும் அவரை அடையாளப் படுத்தி விடும். ஒரு பாரா எழுதி முடிப்பதற்கு ராமாமிர்தத்திற்கு சில மணி நேரமாவது ஆகிவிடும். ஒரு கதை எழுதி முடிக்க சில மாதங்கள். அவரது ஐம்பது ஐம்பத்தைந்து வருடங்கள் நீளும் அவரது எழுத்து வாழ்க்கையில் இதுகாறும் அவர் எழுதியிருப்பது ஒரு நூறு கதைகளே இருக்கும். ஆனால் அவருக்கென ஒரு வாசகர் கூட்டம், அவரை வழிபடும் நிலைக்கு வியந்து ரசிக்கும் ஒரு வட்டம் அவருக்கு உண்டு. அவருடைய சொல்லாட்சிக்கும் மொழிக்கும் மயங்கி மதுவுண்ட நிலையில் கிறங்கிக் கிடக்கும் வட்டம் அது. ராமாமிர்தத்தின் கதைகளை மொழிபெயர்த்தல் என்பது சிரமமான காரியம்தான். அவரது மொழியும் நடையும் அவருக்கே உரியதுதான். மொழிபெயர்ப்பவர் எத்தனை திறமைசாலியாக இருந்தாலும் மொழிபெயர்ப்பு செயற்கையாகத்தான் இருக்கும். ராமாமிருதத்திற்கு மொழி என்பது ஒரு கருத்து வெளியீட்டுச் சாதனம் மாத்திரம் அல்ல, கருத்தை வெளியிட்ட பிறகு அது ஒன்றுமில்லாமல் போவதற்கு. அவருக்கு ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு வடிவம், ஒரு ஆளுமை, கலாச்சார உறவுகளும் காட்சிப் படிமமும் கொண்ட ஒன்று. அதை ராமாமிர்தம் த்வனி என்கிறார். இவ்வளவு சிக்கலும் கலவையுமான சிருஷ்டிக்கப்பட்டுள்ள சொல் எப்படி இன்னொரு மொழியில் பெயர்க்கப்படும்? மொழிபெயர்ப்பில், ராமாமிர்தத்தின் தமிழ்ச்சொற்கள் அதன் மற்ற பரிமாணங்களை, அதன் முழு ஆளுமையை இழந்து நிற்கும். இதன் விளைவு, மொழிபெயர்க்கப்பட்ட ராமாமிர்தம் அதன் சாரத்தில் தமிழர் அறிந்த ராமாமிர்தமாக இருக்கப் போவதில்லை.

ராமாமிர்தத்தின் உரைநடை எவ்வகைப்படுத்தலுக்கும் அடங்காதது. அதை உரைநடை என்று கூறக் காரணம் அது உரைநடை போல் எழுதப்பட்டிருக்கும் காரணத்தால்தான். இல்லையெனில் அதை கவிதை என்றுதான் சொல்ல வேண்டும். அதில் நிறைந்திருக்கும் படிமங்கள், குறியீடுகள், உருவகங்கள், பின் அது இயங்கும் சப்தலயம் காரணமாக அதை கவிதை என்று சொல்லவேண்டும். ஆனால் லயம் என்பது சங்கீதத்தின் லயமாகவும் இருக்கக் கூடும். ஏனெனில் அனேக சமயங்களில் அவர் சிருஷ்டிக்கும் நிழல் இசை உணர்வை எழுப்பும் அவரது உரை இசையின் லயத்தை உணர்த்திச் செல்கிறது. ஒரு வேளை மொழி யந்திரத்தனமாக அர்த்தமற்ற உபயோகத்தினால் நச்சுப்படுத்தப்பட்டதால், அதன் இழந்த அர்த்தச் செறிவையும் உக்கிரத்தையும் அதற்குத் திரும்பப் பெற்றுத் தர ராமாமிர்தம் எடுத்த முயற்சியாகவும் இருக்கலாம்.நெருப்பு என்று சொன்னால் வாய் வெந்து போக வேண்டும் என்று கூட அவர் ஒரு இடத்தில் சொல்லியிருக்கிறார்.

திரும்ப பல இடங்களில் அவர் சொற்கள் வேதங்களின் மந்திர உச்சாடனம் போல ஒரு நிலைக்கு உயர்கிறது. குறிப்பாக ரிக்வேதம். அதன் கவித்வ சொல்லாட்சியும், இயற்கையும் மனிதனும் அதில் கொண்டாடப்படுவதும், மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையேயான பரஸ்பர பிணைப்பை உணர்த்துவதும், அது தரும் பிரபஞ்ச தரிசனமும், இவை எல்லாவற்றோடும் அதில் முழுதுமாக விரவியிருக்கும் கவித்வமும். ராமாமிருதம் சமஸ்கிருதம் அறிந்தவரில்லை. பின் இவை அத்தனையையும் அவர் எங்கிருந்து பெற்றார்? நிச்சயமாக அவரது தாத்தாவிடமிருந்து, குடும்ப பாரம்பரியத்தில் வந்த பிதிரார்ஜிதம்.

ராமாமிருதத்தின் எழுத்துக்களில் புராணங்களும் தொன்மங்களும் நிறைந்திருக்கும். காப்ரியேல் கார்சியா மார்க்வெசின் நாவல்களிலும் பாப்லோ நெருடாவின் கவிதைகளிலும் மச்சுப் பிச்சுவின் சிகரங்கள் தெரிவத்து போல. ஆனால் ராமாமிருதத்தின் எழுத்தில் அது ரிக்வேத உச்சாடனமாகத் தொனிக்கும். வெளித்தோற்றத்தில் ஏதோ பாட்டி கதை போலவிருக்கும் ஒன்றில் ஒரு கலாச்சாரத்தின் பிரவாஹத்தையே கதை என்னும் சிமிழுக்குள் அவர் எப்படி அடைத்துவிட முடிகிறது! அதுதான் ராமாம்ருதத்தின் கலை செய்யும் மாயம்.

ராமாமிருதம் கடந்த ஐம்பது ஆண்டுகளாக ஒரு பிடிவாதத்தோடு சொல்லி வரும் இக்கதைகள், ஒரு பாமர நோக்கில் நவீனத்துமற்றதாக, ஃபாஷனற்றதாகத் தோன்றலாம். ஆனால் ராமாமிருதம் இம்மாதிரியான கவலை ஏதும் இல்லாதே தொடர்ந்து எழுதி வருகிறார். சமீப தமிழ் இலக்கியத்தில் பாட்டி கதைகள் என்ற தோற்றம் தரும் ஃபாஷன் அற்ற எழுத்துக்களைப் பிடிவாதமாக ஐம்பதாண்டுகள் எழுதிக்கொண்டு, வழிபாடு என்றே சொல்லத்தக்க ஒரு ரசிகர் கூட்டத்தை மது உண்ட கிறக்கத்தில் கிடக்கும் வாசகர் கூட்டத்தை வேறு எந்த எழுத்தாளரும் பெற்றது கிடையாது.

கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் இது பற்றி ஆச்சரியப்பட வேண்டியதில்லை. மேற்கத்திய சிற்ப, சித்திர வரலாற்றில் தாயும் குழந்தையும் என்றென்றும் தொடர்ந்து வரும் படிமம். இன்றைய ஹென்றி மூர் வரை. நாம் வரலாற்றுக்கு முந்திய காலத்திற்கும் அதன் தெரிய வந்த ஆரம்பங்களுக்கே கூட திரும்பிப் போகலாம். ஆஃப்ரிக்க மரச் சிற்பங்களானாலும் சரி, மொஹஞ்சாதாரோவின் சுதை மண் சிற்பங்களானாலும் சரி. மனித மனத்தின் ஆழங்களில் உறைந்திருக்கும் தாய்த் தெய்வ வழிபாடு எத்தனையோ ரூபங்களில் தொடர்கிறது, 1990களில் கூட.

ஆங்கில மூலம்: Indian Literature, No. 138, July-August, 1990 Sahitya Akademi, New Delhi



தொகுக்கப்பட்ட பக்கம்: லா.ச.ரா பக்கம்

பாலகுமாரனுக்கு பிடித்த புத்தகங்கள்

பாலகுமாரனின் ஒரிஜினல் சுட்டி இங்கே. யார் போட்ட பட்டியலும் இன்னொருவருக்கு முழுதாக ஒத்துப் போகப் போவதில்லை, இருந்தாலும் அவர் சொல்லி இருக்கும் புத்தகங்களில் பெருவாரியானவை நல்ல படைப்புகள். வசதிக்காக பட்டியலை இங்கே மீண்டும் போட்டிருக்கிறேன், என் குறிப்புகளுடன்.

படித்த நாவல்கள்:

  1. கமலாம்பாள் சரித்திரம் – ராஜம் ஐயர்: கமலாம்பாள் சரித்திரத்தைத்தான் நான் தமிழின் முதல் நாவல் என்று கருதுகிறேன். பிரதாப முதலியார் ட்ரெய்லர் மாதிரிதான்.
  2. பொன்னியின் செல்வன்கல்கி: அற்புதமான கதைப் பின்னாலும் முடிச்சுகளும் கொண்ட நாவல். தமிழின் சிறந்த சரித்திர நாவல் இதுவே என்று ஒரு காலத்தில் எண்ணி இருந்தேன். இப்போது வானம் வசப்படும், மானுடம் வெல்லும் இரண்டும் பொ. செல்வனோடு முதல் இடத்துக்கு போட்டி போடுகின்றன.
  3. மோகமுள், செம்பருத்திதி.ஜானகிராமன்: மோகமுள் தமிழின் சிறந்த நாவல்களில் ஒன்று. செம்பருத்தி இப்போது சரியாக நினைவில்லை.
  4. மிஸ்டர் வேதாந்தம், ஜஸ்டிஸ் ஜகந்நாதன்தேவன் மிஸ்டர் வேதாந்தம் என் கண்ணில் தேறாது. ஜ. ஜகன்னாதன் நல்ல நாவல்.
  5. பசித்த மானுடம்கரிச்சான் குஞ்சு: எனக்கு முழுதாகப் புரிந்துவிட்டது என்று சொல்வதற்கில்லை. ஆனாலும் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.
  6. ஜே.ஜே. சில குறிப்புகள்சுந்தர ராமசாமி: படித்துப் பல வருஷம் ஆகிவிட்டது. சாதனை என்று அப்போது நினைத்தேன், மீண்டும் ஒரு முறை படித்துப் பார்க்க வேண்டும்.
  7. ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்ஜெயகாந்தன்: பிரமாதமான பாத்திரப் படைப்பு. சாதனை.
  8. 18வது அட்சக்கோடு, கரைந்த நிழல்கள்அசோகமித்திரன்: கரைந்த நிழல்கள் ஒரு tour de force. ப. அட்சக்கோடும் சிறந்த நாவல்.
  9. சாயாவனம்சா. கந்தசாமி: சாயாவனம்தான் நான் முதன்முதலாகப் படித்த இலக்கியம் என்று நினைக்கிறேன். கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம்.
  10. குருதிப்புனல்இந்திரா பார்த்தசாரதி: என் கண்ணில் இது முழுதாக வெற்றி அடையாத படைப்புதான்.
  11. வாடிவாசல்சி.சு.செல்லப்பா: குறுநாவல் என்றுதான் சொல்ல வேண்டும். அற்புதமான புத்தகம்.
  12. தலைமுறைகள்நீல. பத்மநாபன்: சிறந்த தமிழ் நாவல்களில் ஒன்று. வட்டார வழக்குக்காகவே படிக்கலாம்.
  13. குறிஞ்சி மலர்நா. பார்த்தசாரதி: இன்று மகா தட்டையான படைப்பாகத்தான் தெரிகிறது. ஆனால் எழுதப்பட்டபோது இதன் லட்சியவாதம் பெரிய தாக்கத்தை உருவாக்கியது என்பதை மறுப்பதற்கில்லை.
  14. ஒரு புளியமரத்தின் கதைசுந்தர ராமசாமி: நல்ல நாவல், படிக்க வேண்டிய நாவல்.
  15. வாசவேஸ்வரம்கிருத்திகா அற்புதமான நாவல்.
  16. தரையில் இறங்கும் விமானங்கள்இந்துமதியின் பிற புத்தகங்கள் எல்லாம் குப்பையாக இருக்கும்போது எப்படி இந்த ஒரு புத்தகம் மட்டும் இலக்கியமாக இருக்கிறது என்று வியந்திருக்கிறேன்.
  17. பிறகுபூமணி இன்னும் ஒரு சிறந்த நாவல்.
  18. கதவு/கோபல்ல கிராமம்கி. ராஜநாராயணன்: கி.ரா.வெல்லாம் ஆங்கிலத்தில் எழுதி இருந்தால் நோபல் நிச்சயம்.
  19. கடல்புரத்தில்வண்ணநிலவன்: பல வருஷங்கள் முன்னால் படித்தபோது என்னைப் பெரிதாகக் கவரவில்லை. மீண்டும் படித்துப் பார்க்க வேண்டும்.
  20. என் பெயர் ராமசேஷன் – ஆதவன்: சில புத்தகங்கள் மனதில் ஒரு ஸ்பெஷல் இடத்தைப் எடுத்துக் கொள்கின்றன. எ.பெ. ராமசேஷன் எனக்கு அப்படித்தான். படிக்காதவர்கள் அதிருஷ்டசாலிகள், அவர்களுக்கு ஒரு நல்ல வாசிப்பு அனுபவம் காத்திருக்கிறது.
  21. நாளை மற்றுமொரு நாளே – ஜி.நாகராஜன்: இதுவும் ஒரு சாதனை.
  22. புத்தம் வீடு – ஹெப்சிபா ஜேசுதாசன்: ஹெப்சிபா எழுத்தாளர். அவர் படைத்திருப்பது இலக்கியம். அவருக்கு பெண் எழுத்தாளர் என்று அடைமொழி எல்லாம் கொடுக்கத் தேவையில்லை.
  23. யவனராணிசாண்டில்யன்: சிறு வயதில் படித்தபோது இளஞ்செழியனின் சாகசங்கள் மனதைக் கவர்ந்தன என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அவையெல்லாம் எம்ஜிஆர் பட சாகசங்கள் என்பதையும் சொல்லத்தான் வேண்டும்.
  24. வழிப்போக்கன் – சாவி உப்பு சப்பில்லாத வாரப் பத்திரிகை தொடர்கதை. இதையெல்லாம் பாலகுமாரன் எப்படி விரும்பிப் படித்தாரோ தெரியவில்லை. இந்த லிஸ்டில் உள்ள மற்ற புத்தகங்களுக்கும் இதற்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம்.

படிக்காதவை:

  1. வேள்வித்தீ -எம்.வி. வெங்கட்ராம்:
  2. எங்கே போகிறோம் – அகிலன்: அகிலன் உருப்படியாக எதையாவது எழுதி இருப்பார் என்று எனக்கு நம்பிக்கையே இல்லை.
  3. அலைவாய்க் கரையில் – ராஜம் கிருஷ்ணன்:
  4. புதிய கோணங்கி – கிருத்திகா
  5. கடலோடி – நரசையா
  6. சின்னம்மாஎஸ்.ஏ.பி.
  7. படகு வீடு – ரா.கி.ரங்கராஜன்
  8. புயலில் ஒரு தோணி – ப.சிங்காரம்

சிறுகதைகள், தொகுப்புகள்:

  1. மங்கையர்க்கரசியின் காதல்வ.வே.சு.ஐயர்: முன்னோடி சிறுகதை. பேரை கிளிக்கினால் அழியாச்சுடர்கள் தளத்தில் படிக்கலாம்.
  2. புதுமைப்பித்தன் சிறுகதைகள்: புதுமைப்பித்தனைத்தான் நான் தமிழின் நம்பர் ஒன் எழுத்தாளர் என்று கருதுகிறேன். என்றாவது நான் பணக்காரன் ஆனால் அவரது எழுத்துகளை மொழிபெயர்த்து விளம்பரம் செய்து எல்லாரையும் படிக்க வைப்பேன்…
  3. மூங்கில் குருத்துதிலீப் குமார் மீண்டும் மீண்டும் anthologize செய்யப்படும் இந்தச் சிறுகதை சிறப்பானதுதான். ஆனால் திலீப் குமாரின் கடவு சிறுகதையே எனக்கு எல்லாவற்றிலும் மிகவும் பிடித்தமானது.
  4. சிறிது வெளிச்சம்கு.ப.ரா.: நல்ல சிறுகதை, படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.
  5. தெய்வம் பிறந்ததுகு. அழகிரிசாமி
  6. கலைக்க முடியாத ஒப்பனைகள்வண்ணதாசன்: நல்ல சிறுகதை.
  7. சிறகுகள் முறியும்அம்பை: இந்த மாதிரி பெண்ணிய சிறுகதை எழுத அம்பைக்கு சொல்லித் தர வேண்டுமா என்ன?
  8. இன்று நிஜம் – சுப்ரமண்ய ராஜு
  9. தேவன் வருகைசுஜாதா
  10. ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள், ஒரு மனுஷிபிரபஞ்சன்
  11. கல்லிற்கு கீழும் பூக்கள் – மாலன்
  12. அப்பாவும் இரண்டு ரிக்ஷாக்காரர்களும் – ம.வெ. சிவகுமார்
  13. பச்சைக்கனவுலா.ச.ரா.
  14. நுணலும் புனலும்ஆ. மாதவன்
  15. மௌனி சிறுகதைகள் – மௌனி
  16. நினைவுப் பாதை – நகுலன்
  17. சம்மதங்கள் – ஜெயந்தன்
  18. நீர்மைந. முத்துசாமி பேரை கிளிக்கினால் அழியாச்சுடர்கள் தளத்தில் படிக்கலாம். எனக்கு சிறுகதை புரியவில்லை.
  19. சோற்றுப்பட்டாளம் – சு. சமுத்திரம்
  20. குசிகர் குட்டிக் கதைகள் – அ. மாதவய்யா
  21. ஒரு ஜெருசேலம் – பா. ஜெயப்ரகாசம்
  22. ஒளியின் முன்ஆர். சூடாமணி

கவிதைகள்

  1. அன்று வேறு கிழமை – ஞானக்கூத்தன்
  2. பெரிய புராணம் – சேக்கிழார்
  3. நாச்சியார் திருமொழி – ஆண்டாள்
  4. அழகின் சிரிப்பு – பாரதிதாசன்
  5. வழித்துணை – ந. பிச்சமூர்த்தி
  6. தீர்த்த யாத்திரை – கலாப்ரியா
  7. வரும் போகும் – சி. மணி
  8. சுட்டுவிரல்/பால்வீதி – அப்துல் ரஹ்மான்
  9. கைப்பிடி அளவு கடல் – தர்மு சிவராமு
  10. ஆகாசம் நீல நிறம் – விக்ரமாதித்யன்
  11. நடுநிசி நாய்கள் – சுந்தர ராமசாமி

கட்டுரைகள்

  1. பாரதியார் கட்டுரைகள் – சி. சுப்பிரமணிய பாரதி
  2. பாலையும் வாழையும் – வெங்கட் சாமிநாதன்
  3. சங்கத் தமிழ் – கலைஞர் மு. கருணாநிதி
  4. வளரும் தமிழ் – தமிழண்ணல்
  5. மார்க்சியமும், தமிழ் இலக்கியமும் – ஞானி
  6. இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள் – வைரமுத்து

வாழ்க்கை சரித்திரம்

  1. என் சரித்திரம் – உ.வே. சாமிநாத ஐயர்
  2. காரல் மார்க்ஸ் – வெ. சாமிநாத சர்மா

நாடகங்கள்

  1. சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்சி. என். அண்ணாதுரை எழுதிய இந்த நாடகம் என் ரசனைக்கு ஒத்து வராவிட்டாலும் தமிழுக்கு முக்கியமான நாடகம்தான். ஆவணம் என்ற விதத்திலும் முக்கியமானது.

மொழிபெயர்ப்புகள்:

  1. அழிந்த பிறகு, பாட்டியின் நினைவுகள் – சிவராம கரந்த்
  2. அந்நியன் – ஆல்பெர் காம்யு
  3. வால்காவிலிருந்து கங்கை வரைராகுல சாங்க்ரித்தியாயன் இன்னுமொரு பிரமாதமான எழுத்து. இதை பாலகுமாரன் கட்டுரை என்று வரிசைப்படுத்தி இருக்கிறார்!
  4. சிறுகதைகள் – ஓ. ஹென்றியின் சிறுகதைகள் பலவற்றைப் படித்திருக்கிறேன். Gift of the Magi, Last Leaf மாதிரி ஒரு சில சிறுகதைகளே மனதில் நிற்கின்றன. அவரை பேரிலக்கியம் படைத்தவர் என்று சொல்வதற்கில்லை.

இந்தப் பட்டியல் முழுமையானதாய் கருத வேண்டாம். என் நினைவில் தைத்தவரை எழுதியிருக்கிறேன். நல்லவை சில மறந்து போயிருக்கலாம். இதை தவிர என் அபிப்பிராயம் என்னவெனில் ஜெயகாந்தன், தி. ஜானகிராமன், லா.ச.ரா, அசோகமித்திரன், சுஜாதா, சுந்தர ராமசாமி ஆகியோரின் எல்லா படைப்புகளையும் படிக்க வேண்டுமென்று வற்புறுத்துகிறேன். —— பாலகுமாரன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: புத்தகப் பரிந்துரைகள்

லா.ச.ரா.வைப் பற்றி ஜடாயு

லா.ச.ரா.வைப் பற்றி நண்பர் ஜடாயு ஒரு அருமையான கட்டுரை (பகுதி 1, பகுதி 2) எழுதி இருக்கிறார். பிரமாதமான அலசல். கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

அவ்வளவு பெரிய கட்டுரை படிக்க சோம்பேறித்தனம், நாலு வரியில் லா.ச.ராவைப் பற்றி சொல்லு என்றால்: லா.ச.ரா.வை ஒரு திறமை வாய்ந்த பொற்கொல்லருக்கு, மினியேச்சர் ஓவியம் வரைபவருக்கு ஒப்பாக சொல்வேன். நகாசு வேலைக்கு நிறைய முக்கியத்துவம் கொடுப்பவர். மனிதரின் களம் மிகவும் சின்னது. அவர் குடும்பம், பிராமணப் பின்புலத்தைத் தாண்டிப் போகமாட்டார். எப்போதாவது பிற ஜாதியினரைப் பற்றி எழுதினாலும் அதில் பிராமணப் பார்வை தெரியும். ஆனால் அவர் காட்டும் உலகம் மிகவும் பெரியது. எந்த microcosm-த்திலும் மனித உணர்ச்சிகள் ஒன்றுதான் என்பதைப் புரிந்து கொள்ள அவர் எழுத்து போதும். அவர் காட்டும் மனிதர்கள் மன அழுத்தம் நிறைந்தவர்கள், உணர்ச்சி கொந்தளிக்கும்; ஜாலியான ஒரு extrovert பாத்திரத்தைக் காண்பது மிக அரிது. சொற்களைப் பொறுக்கி பொறுக்கி எழுதுவார். தீ என்று எழுதினால் வாசகனுக்கு சுடவேண்டும் என்று நினைப்பவர். சொகுசான மொழி அவரது பலம்; பலவீனமும் கூட. சமயங்களில், அதுவும் சின்ன வயதில், அவரது மொழி, பாயின்ட் புரியாதபோது யோவ் கிழவா என்னய்யா சொல்ல வரே என்று ஒரு கடுப்பு கிளம்பும். என்றாவது அவர் எழுதிய பாற்கடல் போல என் குடும்பத்தைப் பற்றி நான் எழுதிவிட்டால் என் ஜன்மம் சாபல்யம் அடையும்.

தொகுக்கப்பட்ட பக்கம்: லா.ச.ரா.

தொடர்புடைய சுட்டி: அபிதா

கணையாழியின் கதை – கஸ்தூரிரங்கன்

கணையாழி தொகுப்பு என்று இரண்டு வால்யூம்கள் என்னிடம் இருக்கின்றன. கஸ்தூரிரங்கன் எழுதிய முன்னுரையில் அவர் கணையாழியை எப்படி ஆரம்பித்தார் என்று விவரிக்கிறார். ஓவர் டு கஸ்தூரிரங்கன்!

புது தில்லி. பொழுது போகாத ஒரு மாலை வேளையில் நண்பர் ரங்கராஜனுடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்தபோது பத்திரிகை ஆரம்பிக்கும் யோசனை தோன்றியது. இது போன்ற விபரீத ஆசைகள் அவ்வப்போது தோன்றுவது உண்டு. சினிமா எடுக்க வேண்டும்; நாடகம் நடத்த வேண்டும்; மிருந்தங்க வித்வானாக வேண்டும்; மானசரோவர் யாத்திரை போய் வர வேண்டும். சமுதாயத்தை சீர்திருத்த ஒரு இயக்கம் ஆரம்பிக்க வேண்டும் என்றெல்லாம் திட்டம் போட்டுக்கொண்டு அதை அப்படியே கைவிட்டு விடுவது வழக்கம்.

பத்திரிகை ஆரம்பிப்பது ஒரு செயல்படுத்தக் கூடிய திட்டமாகத் தோன்றியது. அன்றைய விலைவாசியில் ஐநூறு ரூபாய் இருந்தால் 32 பக்கங்களுக்கு ஆயிரம் பிரதிகள் அச்சடித்து விடலாம். ஆண்டுச் சந்தா ஐந்து ரூபாய் என்று ஒரு ஆயிரம் பேரைப் பிடித்து விடலாம். மேலும் ஐநூறு முதல் ஐயாயிரம் பிரதி வரை ஏஜெண்டுகள் மூலம் விற்று விட பத்தாயிரம், ஐம்பதாயிரம் என்று பெருகி ஐந்து லட்சம் வர கூட எட்டி விடலாம். இதெல்லாம் என்னுடைய அல்நாஷர் கனவு. பேஷாகச் செய்து விடலாம் என்று சொன்னார் ரங்கராஜன். தன் பங்குக்கு ஒவ்வொரு இதழிலும் எழுதுவதாக உறுதி அளித்தார்.

தமிழில் வெளிவந்து கொண்டிருந்த பத்திரிகைகளிலிருந்து வித்தியாசமாக இருக்க வேண்டும். அரசியல், ஆன்மிகம், மருத்துவம், அத்துடன் கொஞ்சம் இலக்கியம் என்று முடிவாயிற்று. ஆங்கிலப் பத்திரிகைகளின் தரத்தில் அறிவார்த்தமாக இருக்க வேண்டும். ஜோக்குகள் கூடாது. அப்போது கலைமகள் தரமான இலக்கிய இதழாக வெளிவந்து கொண்டிருந்தது. தி. ஜானகிராமன், லா.ச.ரா., அகிலன் மற்றும் பிறமொழிக் கதைகள் என்று நன்றாக வந்து கொண்டிருந்தது. கலைமகள் போல் ஒரு தமிழ் பெயராக இருக்க வேண்டும் என்று யோசித்து கணையாழி என்ற பெயரை வைத்தேன். அதை முறைப்படி பதிவு செய்து முதல் இதழுக்காக விஷயங்களைச் சேகரித்தேன். பாதி நானே எழுதியது. ஸ்ரீரங்கம் எஸ்.ஆர். என்ற பேரில் ரங்கராஜன் ஒரு பக்கம் எழுதித் தந்தார். பிற்காலத்தில் அவர் சுஜாதா என்று பிரபலமானார்.

தில்லிக்கு அப்போது வந்திருந்த ஜெயகாந்தனுடன் ஒரு பேட்டி, கலைமகளில் அரசியல் கட்டுரைகள் எழுதி வந்த கே. ஸ்ரீனிவாசன் கட்டுரை, ஓரிரண்டு கதைகள் என்று நாற்பது பக்கத்திற்கு விஷயங்கள் தயாராகி விட்டன. சினிமா, நாடகம் பற்றிய தகவல்கள், விமர்சனங்கள், ந. பிச்சமூர்த்தி கவிதைகள் பற்றி ச.து. நளினியின் ஒரு அலசல் என்றெல்லாம் இருந்தன.

தில்லியில் அப்போது தமிழ் அச்சகம் இல்லை. அதனால் சென்னைக்குச் சென்று ஒரு மாதம் தங்கி அச்சகமே கதி என்று உட்கார்ந்தேன். ஆனால் ஒரு மாதத்திற்குள் வேலை முடியவில்லை. என்னுடைய அலுவலகத்தில் அதற்கு மேல் விடுப்பு கிடையாது என்ற எச்சரிக்கையுடன்தான் புறப்பட்டேன். நான் அப்பொழுது அமெரிக்கப் பத்திரிகையான நியூ யார்க் டைம்ஸ் தில்லி அலுவலகத்தில் ஒரு அமெரிக்கருக்கு உதவி நிருபராக இருந்தேன்.

டெம்மி சைசில் நாற்பது பக்கம் என்று திட்டமிட்டிருந்தது. ஆனால் இருபத்திநாலு பக்கங்கள்தான் அச்சடிக்க முடிந்தது. இரண்டாயிரம் பிரதிகள். பைண்ட் செய்து தில்லிக்கு அனுப்பி விடுங்கள் என்று சொல்லிவிட்டு என் உறவினர் ஒருவரை அதற்குப் பொறுப்பாக்கி திரும்பி விட்டேன். பிரதிகள் வந்து சேர மேலும் இரண்டு வாரங்களாகின.

ஜூலை 1965, விலை 40 காசு என்று முதல் பக்கத்தில் அச்சடித்து வந்த கணையாழி ஆகஸ்ட் 15-ஆம் தேதிதான் வெளி வந்தது. அட்டைப் படமாக இந்தியா தேசம். அதற்குள் நேருவும் சாஸ்திரியும். அதுதான் அட்டைப்படக் கட்டுரை. ஜவஹர்லால் நேரு காலமாகி லால்பகதூர் சாஸ்திரி பிரதமராகப் பொறுப்பேற்று ஓராண்டு முடிந்திருந்தது. நாடு சிறப்பாக முன்னேறுவதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்று சாஸ்திரிக்கு ஆலோசனைகள் வழங்கி இருந்தேன். அவற்றை செயல்படுத்த வாய்ப்பில்லாமலேயே அவர் அடுத்த சில மாதங்களுக்குள் இறந்து போய் விட்டார். இரண்டாயிரம் பிரதிகளை என்ன செய்வது? சென்னையில் ஒரு ஏஜென்ட் ஐநூறு பிரதிகள் வாங்கிக் கொண்டார். தில்லியில் கன்னாட் பிளேசில் இருந்த சௌத் இந்தியா ஹோட்டலில் ஆயிரம் காப்பிகள் விற்பனைக்குக் கொடுத்தேன். சென்னையில் நூறு பிரதிகளும் தில்லியில் ஐம்பது பிரதிகளும் விற்றன. ஐநூறு பிரதிகளை இலவசமாக பலருக்கு அனுப்பினேன். ஆனாலும் உற்சாகம் குறையவில்லை. படித்தவர்கள் நன்றாக இருக்கிறது, வித்தியாசமாக இருக்கிறது, நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று பாராட்டினார்கள்.

சந்தாக்கள் வரத் தொடங்கின. அதற்கு மேல் எழுத்தாளர்களின் படைப்புகளும் வரத் துவங்கின. தில்லிவாசிகளான சுப்புடு, பி.எஸ். ரங்கநாதன், பூர்ணம் விஸ்வநாதன், லா.சு.ர. (லா.சு. ரங்கராஜன்) போன்றவர்கள் எழுதினார்கள். அதன் பிறகு இந்திரா பார்த்தசாரதி, தி. ஜானகிராமன், என்.எஸ். ஜகன்னாதன், கே.எஸ். ஸ்ரீனிவாசன் என்று ஒரு ஐந்து நட்சத்திரத் தரத்தில் படைப்புகள் கணையாழியில் வெளி வரத் துவங்கின.

இளம் எழுத்தாளர்கள் ஆதவன், சம்பத், மாலன், பாலகுமாரன் ஆகியோர் ஆர்வத்துடன் எழுதினார்கள். ஞானக்கூத்தன், எஸ். வைத்தீஸ்வரன், தி.ஸௌ. வேணுகோபாலன், சி. மணி முதலான ‘எழுத்து‘க் கவிஞர்கள் புதுக் கவிதைகள் எழுதினார்கள். முக்கியமாக அசோகமித்திரன் கணையாழியின் பொறுப்பாசிரியராக சென்னையிலிருந்து செயல்பட்டார். மிகவும் பொறுப்புடன் பிரதிபலன் எதிர்பார்க்காது மாதாமாதம் கணையாழியை அச்சடித்து தில்லிக்கு அனுப்பி வைத்தார். அவருடைய கட்டுரைகள், கதைகள், தொடர்கதை என்று ஒவ்வொரு இதழிலும் ஏதாவது உண்டு. விமர்சனக் கட்டுரை, சுஜாதாவின் கடைசிப் பக்கம், சுப்புடுவின் சங்கீத வித்வான்கள் அறிமுகம் என்று இதழ் தவறாமல் வெளிவந்தன. நேர்முகப் பேட்டிகள். இந்திரா காந்தி, மொரார்ஜி, காமராஜ், அண்ணா, கருணாநிதி போன்ற பெரிய அரசியல் புள்ளிகளுடன், கணையாழிக்கு ஒரு அந்தஸ்து கிடைத்தது. ஆனால் விற்பனை எண்ணிக்கை ஆயிரத்துக்கும் குறைவாகவே இருந்தது.

முப்பது ஆண்டுகள் நடத்திய பின் கணையாழியின் பொருளாதாரமும் என் உடல் நிலையும் நலிந்து போக பத்திரிகை நடத்தும் பொறுப்பை ‘தசரா’ அறக்கட்டளைக்கு மாற்றிய கட்டத்தில் அதன் உச்ச கட்ட விற்பனை மூவாயிரம் பிரதிகள்தான். அறிவார்த்தமான சீரியஸ் படைப்புகளுக்கு தமிழக வாசகர்களிடமிருந்து ஆதரவு அதிக அளவில் எப்போதுமே இருந்ததில்லை.

என் பொறுப்பில் முப்பது ஆண்டுகள் வெளிவந்த கணையாழியின் தொகுப்புகளை வெளியிட வேண்டும் என்ற ஆசை வெகு காலமாகவே எனக்கு இருந்தது. ஆனால் அதற்கும் ஊக்கத்துடன் ஆதரவு தர யாரும் முன்வரவில்லை. திட்டத்தை கைவிட்டு விடலாம் என்று முடிவு செய்தபோது கடவுளே அனுப்பியது போல ‘கலைஞன்’ நந்தா முன் வந்தார். பத்தாண்டுகளுக்கு ஒரு தொகுப்பாக மூன்று தொகுப்புகளை வெளியிடுவதாக அவர் சொன்னபோது நான் வியப்படைந்தேன். அவருடைய தன்னம்பிக்கையைப் பாராட்டிவிட்டு என்னுடைய சம்மதத்தையும் கொடுத்தேன். முதல் பத்தாண்டுத் தொகுப்புகள் காணாமல் போய்விட்டன. யாரிடமோ கொடுத்துத் திரும்பி வரவில்லை. இந்நிலையில்தான் வே. சபாநாயகம் கிடைத்தார். ஆரம்பத்திலிருந்து இன்று வரை ஓர் இதழ் விடாமல் சேர்த்து பைண்ட் செய்து வைத்திருக்கும் சபாநாயகம் ஓர் இலட்சிய வாசகர். சிறந்த படைப்பாளியும் கூட. கணையாழியில் குறுநாவல், கட்டுரைகள் என்று எழுதி இருக்கிறார். எனவே அவரை விட பொருத்தமான தொகுப்பாசிரியர் வேறு யாரும் இருக்க முடியாது என்று நந்தாவிடம் சொன்னேன்.

முதல் பத்தாண்டு கணையாழியில் வெளிவந்த ஏராளமான படைப்புகளிலிருந்து மிகவும் அக்கறையுடன் தேர்வு செய்து தந்திருக்கிறார். ஆரம்ப கால நோக்கங்களைப் பூர்த்தி செய்யும் விதமாக இந்த முதல் தொகுப்பு அமைந்திருக்கிறது. அரசியல் முதல் இலக்கியம் வரை பலதரப்பட்ட விஷயங்கள். பிற்பாடு கணையாழியில் இலக்கிய மணம் அதிகமாக கமழ ஆரம்பித்து அரசியல் வாடை அமுங்கி விட்டது. இதற்குக் காரணம் தமிழில் புதிது புதிதாக இலக்கியம் எழுத ஆரம்பித்திருக்கும் இளைஞர்கள். இவர்களில் பலர் கணையாழியில்தான் முதலில் எழுதி அதனாலேயே ஒரு இலக்கியப் படைப்பாளி என்று முத்திரை பெற்று வேறு பத்திரிகைகளில் எழுதிக் கொண்டிருப்பவர்கள். கணையாழியின் ஒரு சாதனை என்று சொல்ல வேண்டுமானால் புதிய எழுத்தாளர்களுக்கு ஊக்கம் கொடுத்து அவர்களை இலக்கிய உலகுக்கு உரிய முறையில் அறிமுகம் செய்து வைத்ததைச் சொல்லலாம்.

முப்பது ஆண்டுகள் தொடர்ந்து வெளிவந்த கணையாழி இக்கால கட்டத்தில் தனக்கென்று ஒரு சிறப்பான இடத்தைப் பெற்றிருக்கிறது என்றால் அதற்குரிய பெருமை என்னுடன் ஒத்துழைத்த நண்பர்கள், எழுத்தாளர்கள் மற்றும் இந்தியாவிலும் அயல் நாடுகளிலும் பரந்து விரவி இருக்கும் கணையாழி வாசகர்களையே சேர வேண்டும்.

இந்தத் தொகுப்பில் காணப்படும் படைப்புகள் பல பல்வேறு படைப்பாளிகளின் தனி வெளியீடுகளிலும் இடம் பெற்றுள்ளன. முதல் ஒன்பது ஆண்டு கணையாழி கதைகள் மற்றும் கவிதைகள் 1986-இலேயே பிரசுரமாகி இருக்கின்றன. அவற்றிலுள்ள படைப்புகளை இத்தொகுப்பில் தவிர்த்திருக்கிறோம். மேலும் இரண்டு தொகுப்புகள் அடுத்தடுத்து வரவிருக்கின்றன. இன்டர்நெட்டிலும் முப்பதாண்டு கால கணையாழியின் உள்ளடக்கம் ஒன்று கூட விடாமல் பதிவாகி இருக்கிறது. http://www.ambalam.com என்ற முகவரியிலிருந்து பெறலாம்.

அம்பலம் டாட் காம் என்ற இணைய முகவரி இப்போது வேலை செய்யவில்லை. யாருக்காவது புதிய முகவரி தெரியுமா?

மூன்று தொகுப்புகள் வரும் என்று சொல்லி இருக்கிறார். மூன்று வந்ததா இல்லை இரண்டோடு நின்றுவிட்டதா?

கஸ்தூரிரங்கன் குறிப்பிட்டிருக்கும் பி.எஸ். ரங்கநாதன் கடுகு என்ற புனைபெயரில் பிரபலமானவர்.

தொகுப்பாசிரியர் வே. சபாநாயகத்தின் தளம் இங்கே.

தொடர்புடைய சுட்டி:
கஸ்தூரிரங்கன் மறைவு
கணையாழி அனுபவம் – வே. சபாநாயகம்