வ.உ.சி., திரு.வி.க., ஸ்ரீனிவாச சாஸ்திரியார், பங்காரு அடிகள்… – அ.ச. ஞானசம்பந்தன் கண்ட பெரியவர்கள்

(மீள்பதிப்பு) – சமீபத்தில் இந்தப் புத்தகத்தை மீண்டும் புரட்டிப் பார்த்தேன், அதனால் மீள்பதித்திருக்கிறேன்.

இந்தப் புத்தகத்தைப் படிப்பதற்கு முன்னால் நான் அ.ச.ஞா. என்ற பேரை மட்டுமே கேள்விப்பட்டிருக்கிறேன். யார், எவர் என்று எந்த விவரமும் தெரியாது. ஏதோ கல்லூரிப் பேராசிரியராக இருக்கலாம், அவ்வப்போது காப்பியம், தேவாரம், திருவாசகம், கம்பன் என்று சொற்பொழிவு செய்வாராக்கும் என்று யூகித்திருப்பேன்.

இந்தப் புத்தகத்தைப் படிப்பதற்கும் காரணம் இதில் வ.உ.சி., திரு.வி.க. என்றெல்லாம் இருந்த பேர்கள்தான். என்னை fascinate செய்யும் தலைவர்கள் லிஸ்டில் இவர்கள் இருவரும் உண்டு. சரி என்னதான் எழுதி இருக்கிறார் என்று பார்க்கலாம் என்றுதான் ஆரம்பித்தேன்.

அ.ச.ஞா.வுக்கு கம்பன் – ஒரு புதிய பார்வை என்ற புத்தகத்துக்காக 1985-இல் சாஹித்ய அகாடமி விருது கிடைத்திருக்கிறது. நிறைவாழ்வு வாழ்ந்திருக்கிறார். 1916-இல் பிறந்தவர் 85 வயதில் 2002-இல் இறந்திருக்கிறார். பச்சையப்பன் கல்லூரி பேராசிரியர், வானொலியில் பதவி, தமிழ்த்துறையில் பதவி வகித்திருக்கிறார்.

அ.ச.ஞா.வின் அப்பா சரவண முதலியார் சைவப் பாரம்பரியத்தில் வந்த தமிழறிஞர். சின்ன வயதிலேயே அ.ச.ஞா.வும் மேடைகளில் பேச ஆரம்பித்துவிட்டார். அப்படித்தான் சிறுவனாக இருந்தபோது சொற்பொழிவாற்ற ஏதோ ஒரு ஊருக்குப் போன வேளையில் வ.உ.சி. வீட்டில்தான் தங்கி இருக்கிறார். அப்போது வ.உ.சி. பொருளாதார ரீதியாக நொடிந்து போயிருந்திருக்கிறார், ஆனால் சமூகத்தில் மிகவும் மதிப்பிற்குரியவராகத்தான் இருந்தாராம்.

பிறகு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இயற்பியல் படிக்கப் போயிருக்கிறார். சோமசுந்தர பாரதியார் சரவண முதலியார் பையனே தமிழ் படிக்கவில்லை என்றால் எப்படி என்று இவரைக் கட்டாயப்படுத்தி தமிழில் சேர்த்திருக்கிறார். இவர் வெறும் மாணவர் – ஆனால் கண்டிஷன் போட்டிருக்கிறார். ரா. ராகவையங்கார் பாடம் நடத்தினால் நான் தமிழில் சேர்கிறேன் என்று. அவரும் ஒத்துக் கொண்டு பாடம் எடுத்திருக்கிறார்! சரவண முதலியாரின் கீர்த்தி அப்படி! துணைவேந்தராக இருந்த வி.எஸ். ஸ்ரீனிவாச சாஸ்திரியார் இவருக்கு முழு சப்போர்ட். சாஸ்திரியார் இவருக்கு சமயத்தில் ஃபீஸ் கட்டி இருக்கிறார்.

வேற்று ஜாதிப் பெண்ணைக் காதலித்து, அப்பாவை எதிர்த்து (சாஸ்திரியாரின் ஆதரவில்) திருமணம். பிறகு திரு.வி.க.வுடன் நெருக்கம். பிள்ளைகள் இல்லாத திரு.வி.க. விருப்பப்படியே இவரும் மு.வ.வும் சேர்ந்துதான் கொள்ளியே போட்டிருக்கிறார்கள். தெ.பொ. மீனாட்சிசுந்தரம்தான் தமிழைப் பொறுத்த வரையில் தனக்கு குருநாதர் என்கிறார். பச்சையப்பா கல்லூரியில் பேராசிரியர், பிறகு வானொலி, பிறகு தமிழ்த்துறை என்று பதவிகள். சொற்பொழிவு, இலக்கிய விமர்சனம், சைவம் (வைணவமும் விலக்கு இல்லை) இவைதான் முக்கியமாக இருந்திருக்கிறது. மேல்மருவத்தூர் பங்காரு அடிகளுடன் நெருக்கம் இருந்திருக்கிறது.

சில பல அதிசயங்களை விவரித்திருக்கிறார். அதுவும் ஒரு இலங்கைச் சாமியார் இரண்டு இடங்களில் இருந்ததை தானே பார்த்ததாக எல்லாம் சொல்கிறார். நம்ப முடியாத சம்பவங்கள்தான், ஆனால் அவரது எழுத்து முறை இப்படியும் நடந்திருக்குமோ என்று யோசிக்க வைக்கிறது.

என்னை மிகவும் கவர்ந்த பகுதி அவரது அண்ணாமலைப் பல்கலைகழக வாழ்க்கைதான். உண்மையிலேயே நல்ல மாணவன், புத்திசாலியான மாணவன் வேண்டுமென்று பெரிய பெரிய மனிதர்கள் எல்லாம் அலைந்திருக்கிறார்கள். இளைஞர்களுக்கே உரிய வேகத்தோடு பரிமேலழகர் கண்றாவியாக உரை எழுதி இருக்கிறார் என்று ராகவையங்கார் முதன்முதலாக எடுத்த தமிழ் வகுப்பில் இவர் நீட்டி முழக்கி பேசி இருக்கிறார். ஐயங்காருக்கோ பரிமேலழகர் மேல் அபார மரியாதை. ஆனால் இவர் இப்படி எடுத்தெறிந்து பேசுவதைக் கேட்டு, புத்திசாலிப் பையன்தான், நான் பாடம் எடுக்க சம்மதிக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார். மாணவர் சபையின் தலைவராக இருந்தபோது துணைவேந்தர் சாஸ்திரியார் பார்வையாளர் வரிசையில் உட்கார்ந்துகொண்டு மற்ற மாணவர்களை அப்படி கேள் இப்படி கேள் என்று சொல்லிக் கொடுத்து குறும்பு செய்வாராம். ஒரு முறை இங்கே இரண்டு மின்விசிறி சுழலவில்லையே, தலைவர் கவனிக்க வேண்டாமா என்று ஒரு மாணவனைத் தூண்டிவிட்டு கேள்வி கேட்க செய்தாராம். அ.ச.ஞா.வின் பதில் – “இந்த அற்ப வேலைகளை கவனிப்பது இந்த மாபெரும் மன்றத் தலைவரின் பணியன்று. இதற்கெனவே பெருந்தொகையைச் சம்பளமாகக் கொடுத்து, துணைவேந்தர் என்ற பெயரையும் கொடுத்து ஒருவரை நியமித்துள்ளார்கள். அவருக்குத் தகவல் அனுப்பி இவற்றை கவனிக்குமாறு செய்கிறேன்.” இந்த நக்கல் பேச்சைக் கேட்டு எல்லாரையும் விட விழுந்து விழுந்து சிரித்தது சாஸ்திரியார்தானாம்.

அ.ச.ஞா.வின் வார்த்தைகளிலேயே ராகவையங்கார், சாஸ்திரியார் இருவரோடும் ஒரு நாள்: (சுவாமிகள் என்று அவர் குறிப்பிடுவது ராகவையங்காரை)

தினந்தோறும் மாலை நான்கரை மணிக்குத் தன் தடிக் கம்பை ஊன்றிக் கொண்டு சுவாமிகள் வருவதை, அந்தக் கைத்தடி சிமெண்டுத் தரையில் பட்டு டொக் டொக் என்று ஒலி எழுப்புவதை வைத்தே அறியமுடியும். ஒரு நாள் நான்கரை மணியாகியும் சுவாமிகள் வரவில்லை. அவர் காலம் தாழ்த்தி வரக் கூடும் என்று நினைத்த நான் ஆசிரியருக்குரிய நாற்காலியில் அமர்ந்து கொண்டு பெருங்குரலில் “சின்னக் கவலைகள் தின்னத் தகாதென்று நின்னைச் சரணடைந்தேன்” என்ற பாட்டைப் பாடிக் கொண்டிருந்தேன். திடீரென்று சுவாமிகள் வகுப்பினுள் நுழைந்துவிட்டார். டொக் டொக் சத்தம் கேட்காததால் ஏமாந்துவிட்டோம். காரணத்தைப் பின்னர் அறிந்தோம். அவர் பயன்படுத்தும் கைத்தடியின் அடியில் ரப்பர் வைத்துக் கட்டிவிட்டதால் சத்தம் எழவில்லை. அவரைக் கண்டவுடன் பதைபதைப்புடன் எழுந்து பயபக்தியுடன் நின்று கொண்டிருந்தோம். என் குரலை நன்கு அறிந்திருந்த சுவாமிகள் “முதலியார் மகனே! யார் பாட்டுடா அது?” என்று கேட்டார். அது பாரதியாருடைய பாடல் என்று விடையிறுத்தேன். சுவாமிகள் “ஏண்டா! அரசாங்கத்துக்கு விரோதமா நாட்டுப் பாடல்கள்தான் பாடியிருக்கிறான் பாரதின்னு நினைச்சேன், இப்படிக் கூடப் பாடியிருக்கிறானா? இன்னும் சில பாடல்களைச் சொல்லு” என்றார். நான் மேலும் பாடிக் கொண்டிருந்தேன். “என்று தணியும் இந்த சுதந்திர தாகம்” என்று தொடங்கும் பாடலில் வரும்

“பஞ்சமும் நோயும் நின் மெய்யடியார்க்கோ?
பாரினில் மேன்மைகள் வேறினி யார்க்கோ?
தஞ்ச மடைந்தபின் கைவிடலாமோ?
தாயும் தன் குழந்தையைத் தள்ளிடப் போமோ?”

என்ற பகுதியைப் பாடும்போது கண்ணீர் வடிக்கத் தொடங்கிய சுவாமிகள், கண்ணீரும் கம்பலையுமாகவே கேட்டுக் கொண்டிருந்தார். பாட்டை நிறுத்தியவுடன் “அடேய்! நம்மாழ்வார் பாட்டு தெரியுமா உனக்கு!

“நண்ணாதார் முறுவலிப்ப நள்ளூற்றார் கரைந்து ஏங்க
எண்ணாராத் துயர் விளைக்கும் இவையன்ன உலகியற்கை” (2502)

என்ற பாடல்தான் ‘பஞ்சமும் நோயும்’ என்ற சொற்களில் வெளிப்படுகிறது” என்றார்.

“காக்கைச் சிறகினிலே நந்தலாலா – நின்றன்
கரியநிறம் தோன்றுதடா நந்தலாலா
தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா – நின்னைத்
தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா”

என்ற பகுதியைப் பாடியவுடன், “இதே கருத்தை நம்மாழ்வார் ஒரு பாடலில் பாடியுள்ளார்” என்று கூறிவிட்டு அந்த அடிகளையும் எடுத்துச் சொன்னார். அவை:

“மண்ணையிருந்து துழாவி வாமனன் மண்ணிது என்னும்
விண்ணைத் தொழுதவன் மேவு வைகுந்த மென்றுகை காட்டும் – (நம். 2447)

“அறியும் செந்தீயைத் தழுவி அச்சுதன் என்னும் மெய் வேவாள்” – (நம் 2449)

சைவக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த எனக்கு நம்மாழ்வரைப் பற்றியோ அவர்கள் பாடல்கள் பற்றியோ ஒன்றும் தெரியாது.

அதன் பின்னர் அன்றிரவு துணை வேந்தரின் கார் மாணவர் விடுதிக்கு வந்து அ.ச.ஞா.வை அழைப்பதாகக் கூறி கார் டிரைவர் அழைத்துச் சென்றார். அப்போது:

துணைவேந்தர் எனக்கு மிகவும் பழக்கமானவர். ‘அடே! கம்மனாட்டி’ என்றுதான் என்னை அழைப்பார். உள்ளே நுழைந்தவுடன் இந்தச் செல்லப் பெயரில் என்னை அழைத்து “நீ சுவாமிகளுக்கு ஏதோ பாரதி பாட்டுப் பாடிக் காட்டினாயாமே! அதைக் கேட்டுச் சுவாமிகள் மிகவும் உருகிப் போய்விட்டார். எங்கே அதைத் திரும்பிப் பாடு” என்றார். எதிரே அமர்ந்து பாடினேன். எதிரே இருந்த இருவரும் பெருமூப்படைந்தவர்கள். ஆனாலும் என்ன! இருவர் கண்களிலிருந்தும் கண்ணீர் தாரையாகப் பொழிந்து கொண்டிருந்தது. ஒருவர் தமிழறிஞர். உலகம் தலை மேல் வைத்துக் கொண்டாடும் மூதறிஞர்; மற்றொருவர் உலகம் முழுவதும் போற்றும் மாபெரும் அரசியல்வாதி, துணைவேந்தர் மகாகனம் வி.எஸ்.சீனிவாச சாஸ்திரியார் அவர்கள் – இந்த இரண்டு மேதைகளும் கண்ணீர் பெருகப் பாரதியின் பாடல்களைக் கேட்டது எனக்கு வியப்பைத் தந்தது.

1938இல் பாரதியின் நாட்டுப் பாடல்கள் மட்டும்தான் மக்களால் ஓரளவு அறியப் பெற்றிருந்தன. ஏனைய பாடல்கள் சிறுசிறு நூல்களாக வந்திருந்த போதிலும் அவற்றை யாரும் விரும்பிப் படிப்பதில்லை. அன்றியும் அன்றைய தமிழ்ப் புலவர்கள் பாரதியை ஒரு கவிஞனாக நினைத்ததேயில்லை. மரபுக் கவிதைகளைத் தவிரப் பிறவற்றை அவர்கள் கண்ணெடுத்தும் பார்த்ததில்லை. இந்தச் சூழ்நிலையில் இப்பெருமக்கள் இருவரும் பாரதியின் பாடல்களை வழிந்தோடும் கண்ணீருடன் கேட்டது பெருவியப்பை தந்தது. இரண்டு மாமனிதர்களைச் சந்தித்ததாக அன்று நான் புரிந்துகொள்ளவில்லை. அறுபது ஆண்டுகள் கழித்து இப்போது அதனை உணர்கிறேன்.

ஓப்பன் ரீடிங் ரூம் தளத்தில்தான் நான் இந்தப் புத்தகத்தைப் படித்தேன். தளத்தையே இப்போது காணோம். நல்ல வேளையாக இங்கே அவரது பல புத்தகங்கள் கிடைக்கின்றன.

தம்பியர் இருவர் என்ற புத்தகத்தை கொஞ்சம் முயற்சி செய்து படித்தேன். அ.ச.ஞா. கம்பனை ஆராய்வது மட்டுமில்லை அனுபவிக்கவும் செய்கிறார். கம்பன் கவிதை புரிகிறதோ இல்லையோ அவர் ரசிக்கிறார், அனுபவிக்கிறார் என்பது மிகத் தெளிவாகப் புரிந்தது. இந்தப் புத்தகம் ஒரு சிறந்த மேடைப் பேச்சாக இருக்கும். ராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் புத்தகமும் இப்படிப்பட்ட உணர்வைத்தான் ஏற்படுத்தியது. இன்று இப்படி சிறப்பாக உரையாற்றக் கூடியவர்கள் இருக்கிறார்களா என்று தெரியவில்லை. ஆனால் சாகித்ய அகாடமி விருது பெற்ற கம்பன் – ஒரு புதிய பார்வை புத்தகத்தை என்னால் படிக்க முடியவே இல்லை. முதலில் கம்பனைப் படித்துவிட்டுத்தான் இதை எல்லாம் படிக்க வேண்டும். இதைப் போலத்தான் பெரிய புராணம் – ஓர் ஆய்வு என்ற புத்தகமும். பெரிய புராணத்தை கரைத்துக் குடித்திருக்கிறார், நானெல்லாம் ஆரம்பிக்கவே பல வருஷம் ஆகும்.

மற்ற புத்தகங்களில் திருவிக என்ற புத்தகம் அவரது சொற்பொழிவுகளின் தொகுப்பு. பேச்சாக இன்னும் நன்றாக இருந்திருக்கும். தமிழ் நாடக வரலாறும் சங்கரதாஸ் சுவாமிகளும் என்ற புத்தகம் எனக்கு கொஞ்சம் போரடித்தது. .

மிகவும் சுவாரசியமான memoirs. கட்டாயம் படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.

தொடர்புடைய சுட்டிகள்:
நான் கண்ட பெரியவர்கள் மின்னூல்
விக்கி குறிப்பு

14 தமிழறிஞர் பட்டியல

14 தமிழறிஞர் பட்டியல் என்று ஒன்று பாஸ்டன் பாலா தளத்தில் கண்ணில் தென்பட்டது. வசதிக்காக கீழே கொடுத்திருக்கிறேன்.

இதில் ஏறக்குறைய எல்லா பேர்களும் கேள்விப்பட்டவையே. ஆனால் இவர்களில் பலர் தமிழுக்கு என்ன செய்தார்கள் என்று தெரியாது. எடுத்துச் சொல்ல எங்கள் சேதுராமனும் இல்லை. சரி எனக்குத் தெரிந்த வரை குறிப்புகள் எழுதுகிறேன்.

மு. வரதராஜன் (மு.வ.): ஒரு காலத்தில் பாப்புலராக இருந்து இப்போது யாருடைய பிரக்ஞையிலும் இல்லாத எழுத்தாளர். இவருடைய திருக்குறள் உரை இன்னும் பாப்புலராக இருக்கிறதா? ஆனால் இவர் எழுதிய இரண்டு நாவல்கள் – கரித்துண்டு மற்றும் அகல் விளக்கு – எனக்குப் பிடித்தமானவை. சேதுராமன் எழுதிய அறிமுகம் இங்கே.

கரந்தைக் கவியரசு வேங்கடாசலம் பிள்ளை: பேரைக் கூட நான் கேள்விப்பட்டதில்லை. இந்தப் பதிவுக்காக கூகிளில் தேடியபோது வடமொழி கலப்பு இல்லாத தனித்தமிழ் வேண்டும் என்று முயன்றிருக்கிறார் என்று தெரிகிறது. அவருடைய நல்வினை, இன்றைய பீட்டர் தமிழைக் கேட்பதற்குள்ளாகவே மறைந்துவிட்டார்.

ரா.பி. சேதுப்பிள்ளை: அலங்காரத் தமிழில் எழுதுவார், சில கட்டுரைகள் படித்திருக்கிறேன். ஆனால் தமிழில் என்ன ஆராய்ச்சி செய்தார் என்று தெரியவில்லை. தமிழுக்காக முதல் சாகித்திய அகாடமி விருது பெற்றவர் – தமிழ் இன்பம் என்ற கட்டுரைத் தொகுப்புக்காக.

திரு.வி. கல்யாணசுந்தரம் (திரு.வி.க.): திரு.வி.க.வின் தமிழ் படிக்க சுகமானது. உண்மையிலேயே பெரிய மனிதர். தமிழ், அரசியல், தொழிலாளர் இயக்கம், பத்திரிகை உலகம் என்று பல துறைகளில் சாதித்தவர். அவருடைய வாழ்க்கை குறிப்புகள் படிக்க வேண்டிய புத்தகம். அவருடைய தமிழ்த் தொண்டு என்பது பத்திரிகைகள் (தேசபக்தன், நவசக்தி) மூலமும், தமிழ் நூல்களுக்கு உரை எழுதியதும் மட்டுமே என்று நினைக்கிறேன்.

ரசிகமணி டி.கே. சிதம்பரநாத முதலியார் (டி.கே.சி.): டி.கே.சி.யின் இதய ஒலி புத்தகம் குறிப்பிட வேண்டியது. தன் ரசனையை மட்டுமே அடிப்படையாக வைத்து கம்பனையும் முத்தொள்ளாயிரத்தையும் மற்றும் பல தமிழ் செய்யுள்களையும் சாதாரண வாசகனுக்கு புரிய வைத்தார். அவருடைய மிக பெரிய தொண்டு என்பது அவர் உருவாகிய வட்டம்தான். பல அறிஞர்கள் – ராஜாஜி, கல்கி, கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை, பாஸ்கரத் தொண்டைமான் இன்னும் நிறைய பேரின் மேல் அவரது தாக்கம் பெரியது. அது தமிழை முன்னே கொண்டுபோனது.

வித்துவான் தியாகராஜச் செட்டியார்: இவர் உ.வே.சா.வின் சம காலத்தவர், மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் மாணவர் என்று நினைவு. ஆனால் இவர் ஆற்றிய பணி என்ன என்று கண்டுபிடிக்க முடியவில்லை.

ஆறுமுக நாவலர்: நாவலர் சைவத்தையும் தமிழையும் போற்றியவர். மிஷனரிகளினால் மனக் கொதிப்பு அடைந்து அவர்கள் பாணியிலேயே சைவத்தை பரப்ப முயற்சி செய்தவர். மிஷனரிகளை எதிர்த்து அவர் எழுதிய சைவ தூஷணப் பரிகாரம் சுவாரசியமான புத்தகம். ஆனால் இவர் என்ன செய்தார் என்றும் என்னால் சொல்ல முடியவில்லை.

நாவலர் சோமசுந்தர பாரதியார்: 1937-38-இல் ராஜாஜி அரசுக்கு எதிராக நடந்த ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றிருக்கிறார் என்பதைத் தவிர வேறு எதுவும் எனக்கு முக்கியமாகத் தெரியவில்லை. சுவாரசியமான விஷயம் – வ.உ.சி.யின் கப்பல் கம்பெனியில் செயலாளராக இருந்தாராம்.

பரிதிமாற் கலைஞர் தமிழ்ப்பற்றால் பேரை மாற்றிக் கொண்டார். தாங்க முடியாத சில புனைவுகளை (மதிவாணன்) எழுதி இருக்கிறார். அதைத் தவிர?

உ.வே. சாமிநாதையர்: உ.வே.சா.வைப் பற்றி நான் சொல்லித்தானா தெரிய வேண்டும்?

பண்டிதமணி கதிரேசன் செட்டியார்: செட்டியாரும் பேராசிரியராக இருந்திருக்கிறார் என்பதைத் தவிர எனக்கு வேறு எதுவும் முக்கியமாகத் தெரியவில்லை.

மறைமலையடிகள்: இருபது வருஷங்களுக்கு முன்பே படிக்க முடியாத பண்டிதத் தமிழில் பல கட்டுரைகள் எழுதி இருக்கிறார். இவரையெல்லாம் அவரது தாக்கத்தின் அடிப்படையில்தான் மதிப்பிட வேண்டும் என்று நினைக்கிறேன்.

மீனாட்சிசுந்தரம் பிள்ளை: பத்தொன்பதாம் நூற்றாண்டின் பெரிய தமிழறிஞர் இவராகத்தான் இருக்க வேண்டும். உ.வே.சா.வின். ஆசிரியர். சிறு காவியங்களை எழுதி இருக்கிறார். இவரது சீடர் சவேரிநாதப் பிள்ளைக்கு? இவரே அரிச்சந்திர புராணத்தை எழுதிக் கொடுத்தார் என்று சொல்வார்கள்.

பாண்டித்துரைத் தேவர்: மீண்டும் தமிழ்ச்சங்கத்தை ஸ்தாபித்தார் என்பதைத் தவிர வேறு எதுவும் தெரியவில்லை.

இவர்களில் பலரும் தமிழ்ப் பேராசிரியர்களாக இருந்து தமிழில் ஆர்வும் உள்ள ஓரிரு தலைமுறைகளை உருவாக்கி இருக்கிறார்கள் என்று தெரிகிறது. அது tangible பணியாக இல்லாமல் போகலாம், ஆனால் பெரிய பணிதான். இவர்களில் பலரை அவர்களது தாக்கத்தின் அடிப்படையில்தான் மதிப்பிட வேண்டும் என்று நினைக்கிறேன். இரண்டு ராகவையங்கார்கள், கம்பன் அடிப்பொடி சா. கணேசன், ம.பொ.சி., அ.ச.ஞானசம்பந்தம், ஜேசுதாசன், சாலமன் பாப்பையா, கு. ஞானசம்பந்தன் ஆகியோருக்கும் இப்படிப்பட்ட தாக்கம் இருந்திருக்கும்/இருக்கும் என்று நினைக்கிறேன்.

இந்தப் பட்டியலில் முக்கியமான விடுபடல் சி.வை. தாமோதரம் பிள்ளை மற்றும் வையாபுரிப் பிள்ளை. அது என்னவோ உ.வே.சா.வுக்கு இருக்கும் புகழில் தாமோதரம் பிள்ளைக்கு பத்தில் ஒரு பங்கு கூட இல்லை. ஆனால் அவரது பணியும் உ.வே.சா. அளவுக்கு முக்கியமானதுதான். முதல் அகராதி வையாபுரிப் பிள்ளை பதித்ததுதான் என்று நினவு. அந்தக் காலத்தில் வெள்ளக்கால் சுப்ரமணிய முதலியார், வேங்கடசாமி நாட்டார் ஆகியோரும் இடைப்பட்ட காலத்தில் நா. வானமாமலை போன்றோரும் இப்போது அ.கா. பெருமாள், வேதசகாயகுமார், அ.இரா. வேங்கடாசலபதி (சில குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டாலும்) ஆகியோரும் குறிப்பிடப்பட வேண்டிய முக்கியமான களப்பணி புரிந்திருக்கிறார்கள்/புரிகிறார்கள் என்று நினைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: பலதும்

அந்தக் கால எழுத்தாளர்கள் – மு.வ.

இதை அனுப்பிய டாக்டர் கைலாசத்துக்கு நன்றி! மு.வ. நூற்றாண்டு தருணத்தில் இதை டாக்டர் கைலாசம் அனுப்பி இருப்பது மிகவும் பொருத்தமானது. இது கலைமகள் இதழில் பிரசுரமானது. கலைமகளுக்கும் நன்றி!

டாக்டர் கைலாசம் மலர்ச்சோலை மங்கை, கயல், மணிமகுடம் உட்பட்ட சில சரித்திர நாவல்களை எழுதி உள்ளார். இன்னும் படிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஓவர் டு டாக்டர் கைலாசம்!

mu_ varadarajanஆசிரியர் என்பவர் எப்படி இருக்க வேண்டும்? ஊருக்கு உலகுக்கு குற்றம் இல்லா உரைதனை உரைப்பவராகவும், எல்லோருக்கும் பொதுவானவராகவும், சத்தியத்தின் வழிதனில் வாழ்பவராகவும், சமத்துவத்தை ஊணில் கலந்து ஊட்டும் நெறி தவறாதவராகவும் இருக்க வேண்டும் அல்லவா? இந்தக் குணங்கள் அனைத்தும் கொண்டு, இந்த புவிதனில் அழியா இடம் பெற்ற எழுத்தாளராகவும் விளங்கியவர் மு. வரதராசனார் அவர்கள். மலர் போன்ற இரக்க நெஞ்சமும், மலை போன்ற கொள்கையும் கொண்ட பண்பாளர்; அறிவுத் தந்தையாய், அன்புள்ளமும் கொண்ட தாயுள்ளமும் கொண்டு கொள்கைப் பிடிவாதமும், நெறியுடன் வாழ்ந்த பெருந்தகையாளர் வரதராசனார் அவர்களின் வாழ்வும் எழுத்தும் பற்றிப் பார்ப்போம்.

ஆறுகாடுகளை கொண்ட ஆற்காடு மாவட்டத்தில் அமைந்த திருப்பத்தூரின் அருகில் அமைந்த வேலம் என்ற சிறிய ஊரில் முனுசாமி முதலியார் அவர்கள் பெருவாழ்வு வாழ்ந்து வந்தார்கள். அவர்களுக்கும் அவர்களின் துணைவியார் அம்மாக்கண்ணுவுக்கும் ஏப்ரல் 15ஆம் தேதி 1912 ஆம் ஆண்டு வேங்கடவன் அருளால் ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அந்த குழந்தைக்கு திருவேங்கடம் என்று பெயரிட்டு சீராட்டி வளர்த்து வந்தார்கள். முனுசாமி அவர்களின் தகப்பனார் பெயர் வரதராசனார். தனது தந்தையின் பெயரையே தனது மகனுக்கும் இட்டு வரதராசனார் என்று அழைத்து வந்தார். வேலம் கிராமத்தில் அமைந்த தொடக்ககல்வி நிலயத்தில் வரதராசனாரை கல்வி பயிலச் சேர்த்தார்.. அதன்பிறகு உயர்நிலைக் கல்விக்காக வரதராசனார் திருப்பத்தூர் சென்று ஆழ்ந்து படித்தார். தனது பதினாறு வயதில் பள்ளி இறுதித் தேர்வில் வெற்றி பெற்றார். அந்த சிறிய வயதிலேயே திருப்பத்தூர் தாலுகா அலுவலகத்தில் எழுத்தராக வரதராசனார் பணியாற்றினார்.

தாலுகா அலுவலகத்தில் எழுத்து வேலை மிகவும் அதிகம். விடாது வேலை செய்ததால் வரதராசனாரின் உடல் நலம் குன்றியது. வேறு வழியில்லாமல் ஓய்வு எடுக்க வேண்டி வந்தது. தனது சொந்த ஊரான வேலம் கிராமத்துக்குச் சென்று சிறிது நாள் ஓய்வு எடுத்தார். அந்த சமயங்களில் தமிழ் பண்டிதரான முருகையா முதலியாரைச் சந்தித்தார். அந்தச் சந்திப்பு வரதராசனாரின் வாழ்வின் திருப்பு முனையாக அமைந்தது. முருகையா முதலியாரின் தமிழ் ஆர்வம் வரதராசனாரையும் தொற்றிக் கொண்டது. அவரிடம் ஆழ்ந்து தமிழ் கற்றார். தனது பத்தொன்பதாவது வயதில் வித்வான் முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்றார். தமிழ் வரதராசனாரின் இரத்தத்தில் ஓட ஆரம்பித்தது. தானாகவே பயின்று தனது இருபத்து மூன்றாவது வயதில் வித்வான் தேர்வில் மாநிலத்தில் முதல் மாணாக்கராகத் தேர்ச்சி பெற்று திருப்பனந்தாள் மடத்தின் மிக உயரிய பரிசனான ஆயிரம் ரூபாய் பரிசினைப் பெற்றார். இந்த சமயத்தில் வரதராசனாருக்கு திருமணப் பேச்சு நடந்தது. தனது மாமன் மகளான ராதா அம்மையாரை 1935ஆம் ஆண்டு மணம் செய்து கொண்டார். ராதா அம்மையாரை திருமணம் செய்ததும், அவரது வாழ்வில் பெரும் மகிழ்ச்சியும் மாற்றமும் ஏற்பட்டது. அந்த ஆண்டே திருப்பத்தூர் தமிழ் ஆசிரியராக பணிக்குச் சேர்ந்தார். தனது மனம் விரும்பியபடியே தமிழ் அமுதத்தை மாணவர்களுக்கும் ஊட்ட முடியும் என்பதே அவருக்கு பெரும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆசிரியராக வேலை பார்த்தாலும் அவர் தனது படிப்பை விடவில்லை. பி.ஓ.எல். தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்றார்.

நான்கு ஆண்டு ஆசிரியப் பணிக்கு பின்னர் பச்சையப்பன் கல்லூரியில் அவருக்கு விரிவுரையாளராகப் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. ‘கீழ்த்திசை மொழிகளில் விரிவுரையாளர்’ என்ற அந்த பதவியை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்ட வரதராசனார், ‘தமிழ் வினைச் சொற்களின் தோற்றமும் வளர்ச்சியும்‘ என்ற தலைப்பில் ஆராய்ச்சி செய்து எம்.ஓ.எல். பட்டம் பெற்றார். ஆனாலும் அவர் தமிழாராய்ச்சியை விடவில்லை. பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்த் துறையின் தலைவராக பொறுப்பு ஏற்றுக் கொண்டார். தனது முப்பதாறாவது வயதில் ‘சங்க இலக்கியத்தில் இயற்கை’ என்ற தலைப்பில் பெரும் ஆராய்ச்சி செய்தார். அந்த ஆராய்ச்சியின் முடிவுகளை சென்னைப் பல்கலைகழகத்தில் சமர்ப்பித்தார். சென்னை பல்கலைக்கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தது (1948). சென்னைப் பல்கலைக் கழகத்தில் முதன் முதலாக தமிழில் முனைவர் பட்டம் வாங்கியவர் வரதராசனார் அவர்களேயாவர்.

பச்சையப்பன் கல்லூரியில் பணியாற்றும் போதும் சரி, சென்னைப் பல்கலைகழகத்தில் பணியாற்றும் போது வரதராசனார் அவர்கள் மாணவர்களிடத்தில் மிகுந்த அன்புடன் பழகுவார். அவர்கள் வாழ்வின் ஒவ்வொரு முன்னேற்றத்திலும் அவர் கவனம் செலுத்த தவறியதில்லை. சீடர்களின் எண்ணங்களை சீர்படுத்தி அவர்களை தெளிவடையச் செய்வதில் அவரைப் போல சிறந்தவர் யாரும் இல்லை. மாணவர்கள் படிப்பில் முழு கவனம் செலுத்த வேண்டும் என்பதில் அவர் முழுக்கவனமாக இருப்பார். விடுமுறையில் கூட அடுத்த தேர்வுக்கு உரிய நூல்களைப் படிக்கும்படி மாணவர்களிடம் சொல்லுவார். தேர்வில் கடினமான பாடங்களை முதலிலேயே எழுதி தேர்வு பெற வேண்டும் என்று சொல்லுவார். கடினமான பாடங்கள் தேர்ச்சிக்கு இடையூராக இருக்கக் கூடாது என்ற எண்ணம் கொண்டு அதை மாணவர்களிடம் அன்பாக எடுத்துக் கூறி அவர்களை கவனமாகப் படிக்க வைப்பார். தேவையில்லாது நண்பர்களை மாணவ பருவத்தில் பெருக்கினால் அது படிப்புக்கு இடையூராக இருக்கும் என்பதை மாணவர்களுக்கு அன்பாக உணர்த்துவார்.

மாணவர்கள் தங்கள் வாழ்க்கையில் வசதியாகவும் வளமாகவும் இருக்க வேண்டும் என்பதில் வரதராசனார் அவர்கள் மிகவும் முனைப்பாக இருப்பார். மாணவர் பருவம் நீங்கிய பின்னும் அந்தத் தொடர்பை விடாமல் குடும்பப் பாசத்தோடு அவர்களுடைய தேவைகளை அறிந்து, வாழ்க்கையின் மேடு பள்ளங்களை சமாளிக்கும் சக்தியை அவர்களுக்கு சொல்லித் தருவார். அமெரிக்காவில் படித்துக் கொண்டு இருந்த தனது மாணவரின் அமெரிக்க சூழ்நிலையை அறிந்து, அவரது தேவையை அறிந்து அவருக்கு உதவியாக அவரின் தந்தையை அனுப்பாமல், தாயை அனுப்ப வேண்டிய நியாயத்தை அவரது குடும்பத்தாருக்கு புரிய வைத்து அனுப்பவும் செய்தார். மணமக்களைப் பிரிக்க வரதராசனார் என்றுமே தயங்குவார். உண்மையான காரணங்களை அறிந்து அதை சரி செய்ய முயற்சி செய்வார். மகாநாடு போன்று முன் அறிமுகம் இல்லாத பலரும் கூடும் இடங்களில் கவனமாக இருக்க வேண்டிய அவசியத்தை அவர் மற்றவர்களுக்கும் புரிய வைப்பார். புத்தகங்களும், பண உதவியும் செய்ய அவர் என்றுமே தயங்கியது கிடையாது.

எழில் மிகு தோற்றம், கூரிய மூக்கு, சுடர் விட்டுப் பிரகாசிக்கும் கண்கள், அவற்றின் மேல் மூக்குக் கண்ணாடி, அகன்ற நெற்றி, புன்னகை பூத்த முகம், நீண்ட மெலிந்த கைகள், மிக அழகான பல் வரிசையுடன் பண்பட்ட நெஞ்சம் உடைய வரதராசனாரைப் போன்று இயற்கையை அனுபவிப்பதில் இனி ஒருவர் பிறந்துதான் வரவேண்டும். தனது இல்லமான தாயகத்தில் பெரும் தொட்டியை கட்டி அதிலிருந்து அருவியில் இருந்து நீர் விழுவது போல அமைத்து இருந்தார். நீர்வீழ்ச்சி போன்ற இயற்கை காட்சிகள் அவரை குழந்தையாகவே மாற்றி விடும். ஹொகேனக்கல் நீர்வீழ்ச்சியில் யாரோ ஒருவர் கரித்துண்டில் எழுதிய ஆடிப் பதினாறு தங்கம் காவிரியில் கலந்த நாள் என்று சிறிய சொற்றொடர் கூட வரதராசனார் அவர்களை பெரிதும் பாதித்தது.

சென்னைப் பல்கலைக்கழகம் 1961ஆம் ஆண்டு அவரை தனது புகழ் பெற்ற தமிழ்துறை தலைவராக பொறுப்பு ஏற்றுக் கொள்ளும்படி அழைத்து அவருக்கு அந்த பெரும் பொறுப்பைக் கொடுத்தது. அந்தப் பொறுப்பை திறம்பட வகித்த வரதராசனாரை 1971 ஆண்டு மதுரைப் பல்கலைக்கழகம் துணை வேந்தராக பொறுப்பு ஏற்கும்படி கேட்டுக் கொண்டது. அதை ஏற்றுக் கொண்ட வரதராசனார், அந்தப் பொறுப்பு மிக்க பதவியை திறம்ப்பட நிர்வகித்தார். அமெரிக்காவின் ஊஸ்டர் கல்லூரி வரதராசனாருக்கு 1972ஆம் இலக்கிய பேரறிஞர் என்ற பட்டத்தை கொடுத்து பெருமை படுத்தியது.

அன்னாருக்கு திருநாவுக்கரசு, நம்பி, பாரி ஆகிய மூன்று ஆண்மக்கள் பிறந்தார்கள். அவர்களை மிக நல்வழிப் படுத்தி இன்று அவர்கள் பெரும் மருத்துவர்களாக பணி புரிகின்றனர்.

வரதராசனார் பல மொழிப் பண்டிதராவார். அவருக்கு தமிழையும் ஆங்கிலத்தையும் தவிர, தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழியும் தெரியும். சென்னை பல்கலை கழகத்தைத் தவிர திருப்பதி, அண்ணாமலைப் பல்ககலைக் கழங்களின் செனட் உறுப்பினராக பதவி வகித்தார். இதைத் தவிர கேரள, மைசூர், உஸ்மானியா, பெங்களூர், ஆந்திரா, தில்லி பல்கலைக்கழகங்களின் கல்வி வாரிய உறுப்பினர் பதவிகளையும் வகித்தார்.

பல்கலைகழகங்களைத் தவிர, சாகித்ய அகாதெமி, பாரதிய ஞானபீடம், தேசிய புத்தக்குழு, இந்திய மொழிக் குழு, நாட்டுப்புறப்பாடல்களும் நடனங்களும் பற்றிய குழு, தமிழ் அகராதிக் குழு, தமிழ் நாடு, ஆந்திரா மற்றும் மத்திய அரசு பணி தேர்வாணைக்குழு, தமிழ் நாட்டு புத்தக வெளியீட்டுக் கழகம், ஆட்சி மொழிக்குழு, தமிழ் வளர்ச்சிக் கழகம், தமிழ்கலை மன்றம், தமிழிசைச் சங்கம், மாநில வரலாற்று கழகம், தமிழ் கலைக் களஞ்சியம், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் போன்ற பல நிறுவனங்களிலும் அங்கம் வகித்து தனது அரிய பணிகளையும் ஆற்றியுள்ளார்.

புத்தகங்களை வரதராசனாரைப் போல பாதுகாப்பார் யாருமில்லை. தன்னிடம் இருக்கும் புத்தகங்களின் நடுவில் வேப்பிலை வைத்து இருப்பார். கரையான் பெரும் புத்தகப் பூச்சிகளை இந்த வேப்பிலை அண்ட விடாது. இந்த எளிமையான புத்தகப் பாதுகாப்பு முறையை தனது மாணாக்கர்களுக்கும் சொல்லி தருவார்.

வரதராசனார் அவர்கள் ஆறு மொழியியல் நூல்களும், கட்டுரை தொகுப்புகள் பதினொன்றும், பதிமூன்று புதினங்களும், சிந்தனைக் கதைகள் இரண்டும், ஆறு நாடகங்களும், இலக்கிய கட்டுரைகள் இருபத்து நான்கும், சிறுகதைகள் இரண்டும், நான்கு கடித இலக்கியங்களும், வாழ்க்கை வரலாறு நான்கும், ஆங்கில நூல்கள் இரண்டும் எழுதியுள்ளார். வரதராசனார் சிறுவர்களை என்றுமே மறந்ததில்லை. அவர்கள் நாளைய பாரத நாட்டு பெருமை மிகு குடிமக்கள் என்ற எண்ணம் அவருக்கு என்றும் இருந்தது. சிறுவர் இலக்கியத்துக்கு அவர் என்றும் முக்கியத்துவம் கொடுத்தார். சிறுவர்களுக்காக ஐந்து தொகுப்புகள் அவர் எழுதியுள்ளார். அவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கை என்பத்தைந்து. வரதராசனார் எழுதிய ‘திருக்குறள் தெளிவுரை‘ பலராலும் விரும்பிப் படிக்கப்பட்டது. இந்த உரை சைவ சிந்தாந்த நூற்பதிப்புக் கழகத்தாரால் நூற்றுக்கும் மேற்பட்ட பதிப்புகள் வெளியிடப்பட்டன.

வரதராசனாரின் புதினங்கள் எளிதில் புரியும்படி எழுதப்பட்டிருக்கும். பண்பாட்டுச் சிக்கல்களை கதை மாந்தர்களின் வாயிலாக முன் வைப்பதில் வரதராசனாரைப் போலச் சிறந்தவர் யாரும் இல்லை எனலாம். வாழ்க்கையில் சந்தர்ப்பச் சூழ்நிலையால் தவறிப் போய்விட்ட பெண்களின் வாழ்க்கையைப் பல நாவல்களில் காட்டியுள்ளார். அவர்கள் தவறு செய்வதற்கான பல்வேறு காரணங்களை வரதராசனார் விளக்கியுள்ளார்.

தனது ‘எது குற்றம்?‘ சிறு கதையில் வரதராசனார் அவர்கள் “வாழ்க்கையில் எத்தனையோ ஏமாற்றங்கள் வந்து போகின்றன. ஆனால் இத்தகைய கொடிய ஏமாற்றத்தை எதிர்த்து நின்று என்னோடு போராடும் ஏமாற்றத்தை இது வரையில் கண்டதில்லை. மற்ற ஏமாற்றங்கள் வரும் போது பெருமூச்சு விட்டுத் தெளிவேன். போகும் போது பெருமூச்சு விட்டுக் கலங்குவேன். இந்த ஏமாற்றமோ வரும்போதே என் உயிரைப் பணயமாக வைத்துக் கொண்டு வந்தது. என் உயிரைப் பணயமாகப் பெற்றுக் கொண்டே செல்லும் போல் இருந்தது” என்று அவர் காதலில் ஏமாந்தவரைப் பற்றி சொல்ல ஆரம்பிக்கிறார். வாழ்க்கையின் எதார்த்தத்தை சொல்லி தன்னுடன் வரத் தயங்கி வெகுதூரம் சென்று விட்டவளை எண்ணி வாடாமல் தனக்கு அருகில் இருப்பவளை ஏற்றுக் கொண்டு வாழ்வதின் அர்த்தத்தை அவர் இந்த சிறுகதையின் மூலம் அனைவருக்கும் சொல்கிறார். இது போன்று தனது தேங்காய் துண்டுகள், வாய்திறக்க மாட்டேன், எதையோ பேசினார், கட்டாயம் வேண்டும், விடுதலையா போன்ற சிறுகதைகளில் வாழ்வின் எதார்த்தத்தை அவர் சொல்லியுள்ளார்.

வரதராசனார் எழுதிய புதினங்களில் சாகித்திய அகடெமி பரிசு பெற்றது ‘அகல் விளக்கு‘ இந்தப் புதினத்தை வாசிக்கும் பொழுது நற்பண்புகள் பலவற்றையும் குணங்களையும் சொல்லித் தருவது போலிருக்கும். ஆழ்ந்து படிக்கும் பொழுது மனித மாந்தர்களுக்கு வேண்டிய ஆளுமை தன்மைகளை இந்தப் புதினம் சொல்லித்தரும். அகல்விளக்கில் வரும் கதாபாத்திரங்களான வேலுவும், சந்திரனும் வாழ்வின் எதிர் துருவங்களின் குறியீடுகள். அவர்களின் இயல்புகளைச் சொல்லும் பொழுது சந்திரனுடைய வாழ்க்கை அரளிச் செடியைப் போல் ஒருபுறம் கண்ணைக் கவரும் அழகும் நறுமணமும் உடைய மலர்களைக் கொண்டு மற்றொரு புறம் அவற்றிற்கு மாறான இயல்புள்ள இலைகளைக் கொண்டிருப்பது. வேலய்யனுடைய வாழ்க்கை துளசிச் செடியைப் போன்றது. துளசிச் செடிக்கு அழகிய மலர்கள் இல்லை, வேருக்கத்தக்க பகுதியும் இல்லை. மலரும் இலையும் தண்டும் வேரும் எல்லாம் ஒத்த ஒரே வகையான மணம் கமழ்வது அது என்கிறார். வேலய்யனிடம் சந்திரன் கதையின் கருப்பொருளை “நீ மண் அகலாக இருந்த காலத்தில் நான் பித்தளை அகலாக இருந்தேன். சிறிது காலம் பளபள என்று மின்னினேன். என் அழகையும் அறிவியயும் அப்போது எல்லோரும் விரும்பினார்கள், பராட்டினார்கள் என்ன பயன்? வரவர எண்ணெயும் கெட்டது திரியும் கெட்டது, சிட்டமும் பிடித்தது. ஒளி மங்கியது. மங்கி விட்டேன். நீதான் நேராக்ச் சுடர் விட்டு அமைதியாக எரியும் ஒளிவிளக்கு” என்று சொல்வதாக மிக அழகாக அமைத்துள்ளார். சந்திரனின் சின்னம்மா பாத்திரத்தின் மூலம் பெண் விடுதலையைப் பற்றி மிக அழகாக சொல்கிறார். பெண்களுக்கு எவ்வளவு ஆற்றல் இருந்தும் தங்கள் சிந்தனையை நடைமுறை படுத்த முடியாதபடி முடக்கப்படுவதால் குடும்பத்துடன் தாங்களும் அழிந்து போகிறார்கள். வேகம் வேண்டாம்டா, வேகம் உன்னையும் கெடுக்கும், உன்னைச் சார்ந்தவர்கள்யும் கெடுக்கும் என்றும், விளையாட்டாக இருந்தாலும் விதிகளுக்குக் கட்டுப்பட வேண்டும் தெரியுமா? நீயே அரசர் என்று எண்ணிக்கொண்டு உன் விருப்பம் போல் ஆடமுடியாது என்றும் பல வாழ்க்கைக்கு உதவும் யோசனைகளை-கருத்துகளை இந்த புதினத்தில் பதிந்துள்ளார்.

தமிழ் காப்பியங்களைப் பற்றி கதையின் நடுவில் அவர் சொல்ல தவறுவதில்லை. கோவலனுடைய தவறு நன்றாக தெரிந்திருந்தும் எதிர்த்துப் பிரிந்து வாழ்வதை விட அந்த தவறான வாழ்வுக்கும் துணையாக இருந்து சாவதே நல்லது என்ற துணிவு கண்ணகிக்கு இருந்தது. அதனால்தான் பொருள் இழந்து வருந்திய கணவனுக்கு தன் கால்சிலம்பைக் கொடுக்க முன் வந்தாள். கணவனை திருத்த முடியும் என்ற நம்பிக்கை இல்லாத போதும் அந்த வாழ்வுக்கு துணையாக இருந்து விட்டுச் சாகத் துணிந்த மனம் அது. அந்த மனம் எளிதில் வராது. தியாகத்தில் ஊறிப் பண்பட்ட மனம் அது. குடிகார மகனாக இருந்தாலும் அவனுக்கு கொடுத்துக் கொடுத்துச் செல்வத்தை அழிக்கத் தூண்டும் தாயின் மனம் அது. அதற்கு எவ்வளவு அன்பு வேண்டும்! எவ்வளவு தியாகம் வேண்டும் என்கிறார்.

அது மட்டுமல்லாமல் தமிழ் மொழியின் ஒலிவளம், தமிழ் நாட்டின் நான்கு வகை நில அமைப்பு முதலான சிறப்புகளை எல்லாம் இந்தப் புதினத்தில் சொல்கிறார். இந்தக் கதையைப் படிக்கும் பொழுது இது வெறும் பொழுதுபோக்குக்கு படிப்பதன்று வாழ்க்கையின் சிக்கல்களை உணர்ந்து அதை சீர்படுத்த உதவும் கருத்துகள் என்று புரிகின்றது.

கரித்துண்டு‘ புதினத்தில், ஓவியக் கலையில் சிறந்த கணவன் முடமானதால் அவரை விட்டு விலகி பேராசிரியருடன் சேர்ந்து வாழும் ஓவியரின் மனைவியைப் பற்றியும், மனைவி விலகியதாலும், முடமானதாலும் ஏழ்மை அடைந்த ஓவியரைப் பற்றியும் அந்த நிலையிலும் ஓவியர் ஒரு குழந்தைக்கு தாயான பெண்ணை அவர் ஏற்றுக்கொள்வதையும் வரதராசனார் மிக அருமையாகச் சொல்லியுள்ளார். இது தவிர ஆந்திர தமிழக எல்லை தகராறு, அமெரிக்க தனமான வாழ்க்கையின் சாதக பாதகங்கள், தேர்தல் முறையில் உள்ள பலவீனங்கள் போன்ற பல விவரங்களையும் அவர் தனது கதையில் சொல்லத் தவறுவதில்லை. நெஞ்சில் ஒரு முள் நவீனம் வறுமைக்காக தன் உடலை ஒரு பெண் விற்பதாக காட்டுகிறது. கயமை என்ற கதையில் பகட்டான வாழ்வை விரும்பி அதற்காகவே பலரையும் கைக்குள் போட்டுக் கொள்வதற்காக வசீகரம் என்ற பெண் கற்பை விற்பதாகச் சொல்கிறார்.

அவர் எழுதிய கள்ளோ காவியமோ, கரித்துண்டு, பெற்ற மனம், நெஞ்சில் ஒரு முள்,அகல் விளக்கு, மண் குடிசை, செந்தாமரை ஆகிய அனைத்துப் புதினங்களும் படிப்பவர்களைக் கவர்ந்தன.

கி.பி.2000 (சிந்தனைக் கதை) என்ற அன்னாரின் புதினத்தில் அவரின் கனவுகள் பதிவாகியுள்ளன. கள்ளோ காவியமோ, அரசியல் அலைகள், மொழியியல் கட்டுரைகள் ஆகியவற்றுக்கு தமிழக அரசின் பரிசு கிடைத்தது. அவரின் ஆறு நூல்கள் தமிழ் வளர்ச்சி கழகத்தின் பராட்டு பெற்றவை. அவரின் பல நூல்கள் ஆங்கிலம், இந்தி, மராத்தி, ரஷ்ய மொழி, சிங்கள மொழி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பிற மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு பலரின் பாராட்டையும் பெற்றது.

கலை என்பது நெஞ்சத்தில் இருந்து பொங்கி வரும் உணர்ச்சியாக இருக்க வேண்டும். கலைஞர்கள அதை வெளிப்படுத்துகிறார்களைத் தவிர அதை உற்பத்தி செய்வதில்லை. கவிஞர்கள், போன்ற கலைஞர்களைப் பற்றி வரதராசனார் அவர்கள்

பூனையின் கண்கள் மனிதன் கண்களைவிட ஆற்றல் மிகுந்தது. ஆதலால் நள்ளிருளில் மனிதருடைய கண்ணுக்கு தெரியாதவையெல்லாம் பூனையின் கண்ணுக்குப் புலனாகின்றன. நாயின் மூக்கு ஆற்றல் மிகுந்தது. அதனால் மனிதனைவிட முகர்ந்தறியும் திறன் மிகுந்ததாக மோப்பத்தாலேயே பலவற்றை அறியவல்லதாக உள்ளது. இவ்வாறே கவிஞனுடைய உள்ளமும் மற்ற மக்களின் உள்ளத்தைவிட உணர்ச்சி மிக்கதாக இருக்கிறது. அதனால் மற்றவர்கள் உணர்கின்றவற்றையும் அவர்களை விட ஆழ்ந்து உணர முடிகிறது. கவிஞனுடைய அகக்கண்ணும் மிக வளர்ந்து பண்பட்டதாகையில் கற்பனையில் பலவற்றையும் படைத்து காக்கவும் அவனால் முடிகின்றது. இத்தகைய கற்பனை உலகில் உணர்ச்சி மிக்கவனாக கவிஞன் இருக்கும் நேரமே மிக மிகச் சிறந்த நேரம். அந்நிலையில் அவன் மனிதனாக வாழவில்லை. படைக்கும் கடவுள் போன்றவனாக அந்த நேரத்தில் வாழ்கிறான். அவனுடைய சாதாரண வாழ்க்கை வேறு. கற்பனை உலகில் திளைக்கும் அந்தப் பொழுது சிறிது நேரமே ஆயினும் அவன் உயர்ந்த கலைச் செல்வத்தைப் படைக்கும் நேரம் அது. அவன் தன்னை இழந்து தன்னை மறந்து கலையின் கருவியால் ஏய்த்து அமைந்துள்ள நேரம் அது. புல்லாங்குழலில் நுழையும் காற்று தானகாவே இசையைப் பிறப்பித்தல் போல அவனுடைய உள்ளத்தில் எழும் உணர்ச்சிகள் அவனை அறியாமலேயே பாட்டுகளைப் படைத்துக் கொள்கின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.

கலைஞர்களில் ஒரு பிரிவினராக எழுத்தாளர்களைப் பற்றி வரதராசனார் அவர்கள் சொல்லும் பொழுது திருவள்ளுவர், இளங்கோ போன்ற கவிஞர்களுடன் தொடர்பு கொள்ளாதவாறு காலம் நம்மைப் பிரித்து வைத்த போதிலும் அவர்களின் நூல்கள் அந்த அரிய தொடர்பை ஏற்படுத்தித் தருகின்றன. திருக்குறளையும் சிலப்பதிகாரத்தையும் பயின்றவர்கள் வேண்டும் இடத்தில் வேண்டும் காலத்தில் அந்த பெருமக்களின் திருவுள்ளங்களோடு தொடர்பு கொள்ள முடிகிறது என்றவர் ஆங்கில அறிஞர் ரஸ்கின் சொன்னதான அரசர், அமைச்சர் முதலானவர்களைக் காண்பதற்கு நாம் காத்திருக்கும் நிலை போல் அல்லாமல் நாம் எளிதில் கண்டு மகிழுமாறு நமக்காக அந்தப் புலவர் பெருமக்கள் என்றும் எங்கும் கருணை கொண்டு நூல் வடிவில் காத்திருக்கின்றனர். ஆகவே நல்ல நூல் என்பது எழுத்துச் சொற்பொருள்களால் ஆன ஏடுகள் அடங்கிய ஒன்று அன்று; நமக்காக காத்திருக்கின்ற பெருந்தகையின் திருவுருவம் எனலாம் என்று சொல்லி முடிக்கிறார்.

இன்றும் அன்னாரின் நூல்களைப் படிக்கும் போது அவரே நேரில் வந்து நம்மிடம் சொல்வது போல்தான் இருக்கிறது. அன்னாருக்கு அறுபத்திரண்டு அகவை ஆகும் போது அவரின் உடல் நலம் குன்றியது. அக்டோபர் மாதம் 10ஆம் தேதி 1974ஆம் ஆண்டு தமது கருத்துகளை நூல் வடிவில் நமக்கு தந்து விட்டு நம்மையெல்லாம் விட்டு பிரிந்து சென்றார்.


தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் எழுத்தாளர்கள்

தொடர்புடைய சுட்டிகள்:
மு.வ. நூற்றாண்டு
அகல் விளக்கு பற்றி பக்ஸ்
கரித்துண்டு

மு.வ.வின் “கரித்துண்டு”

இது மு.வ.வின் நூற்றாண்டு. மு.வ. ஒரு காலத்தில் பெரிய சமூக சக்தி என்பது இன்று கொஞ்சம் ஆச்சரியமாக இருக்கிறது. அவருடைய புத்தகங்கள் எல்லாம் இன்று காலாவாதியானவையே. ஆனால் க.நா.சு.வே ஒரு காலத்தில் அவருடைய புத்தகங்களை பாராட்டி இருக்கிறார். அவருடைய நினைவாக ஒரு பழைய பதிவை மீண்டும் இங்கே கொடுத்திருக்கிறேன்.

நான் மு.வ.வை அதிகமாக படித்ததில்லை. மொண்ணையாகத்தான் கதைகள் எழுதுவார் என்று எனக்கு ஒரு impression. தமிழ் பட்டப் படிப்பில் எப்போதும் அவரது நூல்கள் பாடமாக வைக்கப்படுவதால் எழுந்த ஒரு prejudice என்று நினைக்கிறேன். இத்தனைக்கும் அவர் எழுதிய மொழி நூல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அது ஒரு நல்ல ஆசிரியர் மாணவர்களுக்கு சொல்லி கொடுப்பது போல இருந்தது.

கரித்துண்டு க.நா.சு.வால் படித்திருக்கிறீர்களா புத்தகத்தில் பரிந்துரைக்கப்பட்டது. அதை சமீபத்தில் மீண்டும் படித்தபோதுதான் கவனித்தேன். சரி என்றாவது படிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். மறைந்த நண்பர் சேதுராமன் கரித்துண்டு, அகல் விளக்கு ஆகிய இரு புத்தகங்களையும் எங்களுக்கு கொடுத்து அனுப்பினார், அவர் புண்ணியத்தில்தான் படித்தேன். அவர் நினைவாக எங்களிடம் இருப்பது அந்த இரண்டு புத்தகங்கள்தான்.

கரித்துண்டின் கதை அவ்வளவு முக்கியமில்லை. கணவன் முடமானதால் விலகும் மனைவி, மனைவி விலகியதாலும், முடமானதாலும் உயர் மத்தியதர நிலையிலிருந்து ஏழ்மையை விரும்பி ஏற்றுக்கொள்ளும் ஒரு ஓவியர், அவர் சேர்த்துக்கொண்ட ஒரு பெண், அவரது ஓவியங்களை ரசிக்கும் கதை சொல்பவர், அமெரிக்க வாழ்வினால் impress ஆன ஒரு பேராசிரியர், கம்யூனிச சிந்தனை கொண்ட அவரது மாணவன் – இவர்களை வைத்து தொழில், கைத்தொழில் ஆகியவற்றில் அரசு என்ன செய்ய வேண்டும், ஆந்திர-தமிழக எல்லை தகராறு, அமெரிக்கத்தன வாழ்க்கையின் சாதக பாதகங்கள், திருக்குறள், தேர்தல் முறையின் பலவீனங்கள் ஆகியவற்றை பற்றி பல லெக்சர்கள். இதுதான் புத்தகம்.

அந்த காலத்துக்கு புரட்சிகரமான கதையாக இருந்திருக்கும். ஓவியரின் மனைவி பேராசிரியருடன் மணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்கிறாள். கற்பை பற்றி லெக்சர்கள் எல்லாம் இல்லை – ஆனால் ஓவியர் ஒரு குழந்தைக்கு தாயான பெண்ணை சேர்த்துக் கொள்கிறார். கற்பை பற்றி ஒரு பாத்திரம் பேசும்போது தமிழர்கள் சீர்திருத்தம் பற்றி பேசினாலும் கன்னித்தன்மைக்கு பெரும் முக்கியத்துவம் கொடுப்பார்கள் என்று கிண்டல் தொனிக்க பேசுகிறாள்.

மிக சரளமான நடை. கல்கியின் நடை மாதிரி ஓடுகிறது. படிக்க ஆரம்பித்தால் சுலபமாக படித்துக்கொண்டே போகலாம்.

மேலே சொன்ன லெக்சர்கள்தான் இந்த புத்தகத்தில் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவை எல்லாம் எனக்கு இசைவானவை இல்லை. ஆனால் அந்த காலத்துக்கு மிக பெரிய விஷயமாக இருந்திருக்கும். அரசின் கடமைகள், காபிடலிசம், முதலாளித்துவம் பற்றி மிக எளிமையாக புரிய வைத்துவிடுகிறார். இன்றும் இது பெரிய விஷயம்தான்.

ஒரு புத்தகத்தை வைத்து சொல்லிவிட முடியாதுதான், ஆனால் மு.வ.வின் பலம், பலவீனம் இரண்டுமே அவரிடமிருக்கும் வாத்தியார்த்தனம்தான் என்று நினைக்கிறேன். அவர் எதையும் படிப்பவனின் சிந்தனைக்கு விடுவதில்லை. கடைசி சொட்டு வரை நமக்கு புகட்டி விடுகிறார்.

படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் நாவல்கள்

தொடர்புடைய பதிவுகள்:
மு.வ.வின் நூற்றாண்டு
மு.வ.வைப் பற்றி ஜெயமோகன்
மு.வ.வின் “அகல் விளக்கு”
க.நா.சு.வின் படித்திருக்கிறீர்களா?

மு.வ. நூற்றாண்டு

மு. வரதராஜன் ஐம்பதுகளின் லட்சியங்களை, மன ஓட்டங்களை, சிந்தனைகளை தன் புனைவுகளில் பிரதிபலித்தவர். அந்த காலத்தில் ஒரு சூப்பர்ஸ்டார் என்றே சொல்ல வேண்டும். அவரது நாவல்கள் கரித்துண்டு, அகல் விளக்கு ஆகியவற்றையும், சில சிறுகதைகளையும், பச்சையப்பர் என்ற நாடகத்தையும், சில பல கட்டுரைகளையும், மொழி நூல், மொழி வரலாறு என்ற “பாடப் புத்தகங்களையும்” படித்திருக்கிறேன்.

கரித்துண்டு, அகல் விளக்கு இரண்டையும் நான் ரசித்தேன். இவை நாவல் என்ற முறையில் வெற்றி பெறவில்லைதான். கதையை அவர் தான் லெக்சர் அடிக்க ஒரு சட்டமாகவே பயன்படுத்தி இருக்கிறார். ஆனால் அந்தக் காலத்தில் இதை விட சுவாரசியமாக காபிடலிசம், கம்யூனிசம், அரசின் கடமை ஆகியவற்றை விளக்கி இருக்க முடியாது. இன்றே கடினம். கரித்துண்டு க.நா.சு.வே சிலாகித்த நாவல்.

மொழி நூல் எனக்கு மிக பிடித்த ஒன்று. மொழி எப்படி உருவாகிறது என்று எல்லாருக்கும் புரியும் வகையில் அருமையாக எழுதி இருப்பார். படியுங்கள் என்று எல்லாருக்கும் சிபாரிசு செய்கிறேன். இவை எல்லாம் ஓரளவு ஆரம்ப நிலை விளக்கங்கள்தான். வானொலியில் மொழி உருவானது பற்றிய பேச்சுகள் கூட நன்றாக இருக்கின்றன. (சொல்லின் கதை என்ற புத்தகமாகத் தொகுக்கப்பட்டிருக்கிறது)

பச்சையப்பா கல்லூரி பச்சையப்ப முதலியார் பணத்தில்தான் நிறுவப்பட்டது என்பதைத் தவிர எனக்கு முதலியாரைப் பற்றி வேறு எதுவும் தெரியாது. மு.வ. எழுதிய இந்த நாடகம் அவரது வாழ்க்கையை சுருக்கமாக விளக்குகிறது. கஷ்டப்பட்டு, ஆனால் சின்ன வயதிலேயே பெரும் பணக்காரர் ஆன பச்சையப்ப முதலியார் 40 வயதிலேயே இறந்துவிட்டார். அவர் 1794-இல் விட்டுச் சென்ற சில லட்சங்கள் பல கோடிகளாகப் பெருகி இன்று கோவில், கல்லூரி என்று பயன்பட்டுக் கொண்டிருக்கிறது. மோசமான நாடகம்தான், ஆனால் பச்சையப்ப முதலியாரின் வாழ்க்கை வரலாறு வேறு எங்கேயாவது எழுதப்பட்டிருக்கிறதா என்பதே தெரியவில்லை, அப்படியே எழுதப்பட்டிருந்தாலும் இதை விட பிரமாதமாக இருந்துவிடும் என்ற நம்பிக்கையும் இல்லை. ஆவண முக்கியத்துவம் உள்ள நாடகம். பேசாமல் அவர் ஒரு வாழ்க்கை வரலாறாகவே எழுதி இருக்கலாம். pdf வடிவத்தை இணைத்திருக்கிறேன்.

மு.வ. இன்னும் சில நாடகங்களையும் எழுதி இருக்கிறார். இளங்கோ அடிகள், திலகவதியார், வீண்கனவு. சொல்லும்படி எதுவுமில்லை.

தம்பிக்கு புத்தகத்தில் கதை என்ற framework இல்லாமலே கடித வடிவில் லெக்சர் அடிக்கிறார். தேறவில்லை.

நான் படித்த சிறுகதைகள் எதுவும் தேறவில்லை.

அவரது திருக்குறள் தெளிவுரை மிக புகழ் பெற்றது. அறுபதுகளிலும், ஏன் எழுபதுகளிலும் கூட தமிழ் பிரியர்களிடம் இந்த நூல் கட்டாயமாக இருக்கும். நூறு பதிப்புகளுக்கு மேல் வந்திருக்கிறது என்று மறைந்த சேதுராமன் குறிப்பிடுகிறார்.

அவர் எழுதிய தமிழ் இலக்கிய வரலாறு புகழ் பெற்றது. பட்டப் படிப்பில் பாடப் புத்தகமாக இருந்தது என்று நினைவு. இலக்கிய மரபு புத்தகமும் அப்படிப்பட்டதுதான். எப்போ பார்த்தாலும் அவர் எழுதிய கரித்துண்டு, கள்ளோ காவியமோ, அகல் விளக்கு ஆகியவற்றை பாடமாக வைப்பார்கள். ஆனால் காந்தி அண்ணல் மாதிரி ஏதாவது புத்தகத்தை வைக்காமல் போனார்களே என்று சந்தோஷப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான்.

மு.வ. ஓரளவு ஜாதிப் பற்று உள்ளவர், முதலியார் ஜாதி மாணவர்களிடம் சலுகை காட்டினார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். உண்மையோ பொய்யோ தெரியாது. திரு.வி.க. இவரையும் அ.ச. ஞானசம்பந்தனையும் (இவரும் ஒரு முதலியார், ஆனால் கலப்புத் திருமணம் செய்தவர்) தனக்கு கொள்ளி போடச் சொன்னதாக அ.ச.ஞா. சொல்கிறார்.

மு.வ. பற்றி ஜெயமோகன் ஒரு சிறந்த மதிப்பீடு எழுதி இருக்கிறார். அவரது வார்த்தைகளில்:

மு.வ ஓர் ஆசிரியராக அவரது காலகட்டத்துக்கு அவர் பணியாற்றினார். அவரது நூல்கள் ஆசிரியர் தன் மாணவர்களுக்காக எழுதிய பாடநூல்களைப் போன்றவை. அவரது நாவல்களுக்கு இலக்கிய முக்கியத்துவம் என ஏதும் இல்லை. ஆனால் ஒரு காலகட்டத்தில் அக்கால இலட்சியங்களை அவை ஒரு சாராருக்கு எடுத்துச் சென்றன. அந்த அளவிலேயே அவருக்கு தமிழ்ச் சிந்தனை மரபிலும் இலக்கிய வரலாற்றிலும் இடம்.

இது மிகத் துல்லியமான மதிப்பீடு. ஆனால் அவருக்கு முன்னோடி என்ற வகையில் முக்கியத்துவம் இருப்பதாக நான் நினைக்கிறேன்.

மு.வ.வின் கள்ளோ காவியமோ புத்தகத்தை ஜெயமோகன் தன் நல்ல பரப்பிலக்கியப் பட்டியலில் சேர்க்கிறார்.

2009-இல் அவர் எழுத்துக்கள் நாட்டுடமை ஆனது பாராட்டப்பட வேண்டிய விஷயம். அதுதான் சரியான நேரமும் கூட. ஒரு நாற்பது ஐம்பது வருஷங்கள் போனால்தான் ஒரு எழுத்தாளரின் பங்களிப்பு என்ன என்று சரியாக உணர முடியும். நாட்டுரிமை ஆக்கப்பட்டபோது சேதுராமன் எழுதிய அறிமுகத்தை மீள்பதித்திருக்கிறேன்.

எதிர்காலம் இன்னும் எத்தனையோ எழுத்தாளர்களை, பேராசிரியர்களை, துணை வேந்தர்களைப் பெறலாம். ஆனால் மலர் போன்ற இரக்க நெஞ்சமும், மலை போன்ற கொள்கை உறுதியும் கொண்ட ஒரு பண்பாளர் – அறிவுத் தந்தையாய், அன்புள்ள தாயாய்ப் பலருக்கு விளங்கிய ஒரு நல்ல மனிதரை – இறுதி வரையில் கொள்கைப் பிடிவாதம் கொண்டு, அளவோடு நெறி வகுத்து, வாழ்ந்து காட்டிய ஒரு பெருந்தகையாளரை எதிர்காலத்தில் இனி பார்க்க முடியுமா? (மு.வ. நூல்களைத் திறனாய்வு செய்தவரும், அவரது மாணவருமான இரா. மோகன்)

மு.வரதராசன், வட ஆற்காடு திருப்பத்தூர் தாலுகா வேலம் என்ற கிராமத்தில் திரு. முனுசாமி முதலியாருக்கும் அம்மாக்கண்ணு அவர்களுக்கும், 1912ம் வருடம் ஏப்ரல் மாதம் 25ம் தேதி பிறந்தவர். பிறப்பின்போது இவருக்கு இடப்பட்ட பெயர் திருவேங்கடம், ஆனால் காலப்போக்கில் வரதராசன் என்ற பெயரே நிலைத்தது. இளமையில் ஆதாரக் கல்வியை கிராமத்திலும், உயர் நிலைக் கல்வியை அருகிலுள்ள திருப்பத்தூரிலும் 1928ல் முடித்தார்.

இவர் தமிழ் பயின்றது முருகையா முதலியார் என்பவரிடம். உயர் நிலைக் கல்வி முடிந்ததும், சில காலம் திருப்பத்தூர் தாலுகா காரியாலயத்தில் எழுத்தராகப் பணியாற்றினார்.

பின்னர் தமிழ்க் கல்வியைத் தொடர்ந்தவர் தமிழ் வித்துவான் முதல் நிலைப் படிப்பை 1931ல் முடித்து மேல் நிலைப் படிப்பை 1935ல் மாநிலத்திலேயே முதல்வராகத் தேறி திருப்பனந்தாள் மடத்தின் ஆயிரம் ரூபாய்ப் பரிசும் பெற்றார்.

அதே வருடம் மு.வ. தனது மாமன் மகள் ராதா அம்மாளை மணந்து கொண்டார். இத்தம்பதிகளுக்கு திருநாவுக்கரசு, நம்பி, பாரி என்ற மூன்று மகன்கள் உண்டு.

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழாசிரியராக 1939ம் ஆண்டு சேர்ந்தவர் தொடர்ந்து 1961ம் வருடம் வரை அங்கு பணி புரிந்தார். பணியிலிருந்தவாறே தமிழ்க் கல்வியைத் தொடர்ந்த மு.வ. 1939ல் பி.ஓ.எல். பட்டத்தையும், தமிழ் வினைச் சொற்களின் தோற்றமும் வளர்ச்சியும் என்ற தனது ஆய்வின் மூலம் 1944ல் எம்.ஓ.எல்.பட்டமும் பெற்றார். மேலும் தமது தமிழாராய்ச்சியைத் தொடர்ந்து 1948ல், சங்க இலக்கியத்தில் இயற்கை என்ற படைப்பில் முனைவரானார்.

பச்சையப்பன் கல்லூரிப் பணியை விட்டுவிட்டு, மு.வ. சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராக 1961ம் ஆண்டு சேர்ந்தார். இப்பணியிலேயே தொடர்ந்த மு.வ. 1971ம் ஆண்டு மதுரை காமராசர் பல்கலைக்கழகத் துணை வேந்தராகப் பதவியேற்றார். 1972ம் வருடம் அமெரிக்காவிலுள்ள வூஸ்டர் பல்கலைக் கழகம் இவருக்கு இலக்கியப் பேரறிஞர்(D.Litt) என்ற பட்டத்தையளித்துக் கௌரவித்தது.

டாக்டர் மு.வரதராசனார் 1974ம் வருடம், அக்டோபர் மாதம் 10ம் தேதி காலமானார்.

நாவல்களும், சிறுகதைகளும், கட்டுரைகளும், வாழ்க்கை வரலாறுகளும் இவரது படைப்புகள். இவர் எழுதிய அகல் விளக்கு என்ற நாவலுக்கு 1963ல் சாகித்திய அகாதெமி பரிசு கிடைத்தது. கள்ளோ காவியமோ என்ற இவரது நாவல் தமிழக அரசின் விருது பெற்றது. இவரது படைப்புகளின் விவரங்கள் கீழே:

நாவல்கள்:

  1. கள்ளோ காவியமோ?
  2. கரித்துண்டு
  3. பெற்ற மனம்
  4. நெஞ்சில் ஒரு முள்
  5. அகல்விளக்கு
  6. மண் குடிசை
  7. செந்தாமரை (மு.வ. தானே பதிப்பித்தது)
  8. பாவை
  9. அந்த நாள்
  10. அல்லி
  11. கயமை
  12. வாடாமலர்

சிறுகதைத் தொகுதி

  1. விடுதலையா?
  2. குறட்டை ஒலி

வாழ்க்கை வரலாறு

  1. அறிஞர் பெர்னார்ட் ஷா
  2. மகாத்மா காந்தி
  3. ரவீந்திரநாத் தாகூர்
  4. திரு.வி.க.

சிறுவர் இலக்கியம்

  1. குழந்தைப் பாட்டுகள்
  2. இளைஞர்களுக்கான இனிய கதைகள்
  3. படியாதவர் படும் பாடு
  4. கண்ணுடைய வாழ்வு

கட்டுரைகள்

  1. அறமும் அரசியலும்
  2. அரசியல் அலைகள்
  3. பெண்மை வாழ்க
  4. போர்
  5. உலகப் பேரேடு
  6. மொழிப் பற்று
  7. நாட்டுப் பற்று
  8. மண்ணின் மதிப்பு
  9. கி.பி. 2000
  10. பழியும் பாவமும்

இலக்கியம்

  1. திருக்குறள் தெளிவுரை(முதற் பதிப்பு 1949, இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட பதிப்புகள் வெளிவந்துள்ளன – என்னிடமிருப்பது 1987ல் வெளியான 78வது பதிப்பு)
  2. தமிழ் நெஞ்சம்
  3. தமிழ் இலக்கிய வரலாறு
  4. வாழ்க்கை விளக்கம்
  5. ஓவச்செய்தி
  6. கண்ணகி
  7. மாதவி
  8. இலக்கிய ஆராய்ச்சி
  9. கொங்குதேர் வாழ்க்கை
  10. சங்க இலக்கியத்தில் இயற்கை
  11. இலக்கியத் திறன்
  12. இலக்கிய மரபு
  13. முல்லைத்திணை
  14. நெடுந்தொகை விருந்து
  15. குறுந்தொகை விருந்து
  16. நற்றிணை விருந்து
  17. நடைவண்டி
  18. புலவர் கண்ணீர்
  19. இளங்கோ அடிகள்
  20. இலக்கியக் காட்சிகள்
  21. குறள் காட்டும் காதலர்
  22. மொழி நூல்
  23. மொழியின் கதை
  24. மொழி வரலாறு
  25. மொழியியற் கட்டுரைகள்

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் எழுத்தாளர்கள்

தொடர்புள்ள சுட்டிகள்:
மு.வ. பற்றி ஜெயமோகன்
கரித்துண்டு
அகல் விளக்கு
தமிழ் விக்கிபீடியா

மு. வரதராஜனின் (மு.வ.) கரித்துண்டு

நான் மு.வ.வை அதிகமாக படித்ததில்லை. மொண்ணையாகத்தான் கதைகள் எழுதுவார் என்று எனக்கு ஒரு impression இருந்தது. தமிழ் பட்டப் படிப்பில் எப்போதும் அவரது நூல்கள் பாடமாக வைக்கப்படுவதால் எழுந்த ஒரு prejudice என்று நினைக்கிறேன். இத்தனைக்கும் அவர் எழுதிய மொழி நூல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அது ஒரு நல்ல ஆசிரியர் மாணவர்களுக்கு சொல்லி கொடுப்பது போல இருந்தது.

கரித்துண்டு க.நா.சு.வால் படித்திருக்கிறீர்களா புத்தகத்தில் பரிந்துரைக்கப்பட்டது. அதை சமீபத்தில் மீண்டும் படித்தபோதுதான் கவனித்தேன். சரி என்றாவது படிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இணையத்தின் மூலம் நண்பரான மறைந்த சேதுராமன் எங்களுக்கு மு.வ.வின் கரித்துண்டு, அகல் விளக்கு இரண்டையும் அனுப்பினார். அவர் நினைவாக இன்று எங்களிடம் இருப்பவை இந்த இரண்டு புத்தகங்கள்தான்.

கரித்துண்டின் கதை அவ்வளவு முக்கியமில்லை. கணவன் முடமானதால் விலகும் மனைவி, மனைவி விலகியதாலும், முடமானதாலும் உயர் மத்தியதர நிலையிலிருந்து ஏழ்மையை விரும்பி ஏற்றுக்கொள்ளும் ஒரு ஓவியர், அவர் சேர்த்துக்கொண்ட ஒரு பெண், அவரது ஓவியங்களை ரசிக்கும் கதை சொல்பவர், அமெரிக்க வாழ்வினால் impress ஆன ஒரு பேராசிரியர், கம்யூனிச சிந்தனை கொண்ட அவரது மாணவன் – இவர்களை frame ஆக வைத்து தொழில்+கைத்தொழில் ஆகியவற்றில் அரசு என்ன செய்ய வேண்டும், ஆந்திர-தமிழக எல்லை தகராறு, அமெரிக்கத்தன வாழ்க்கையின் சாதக பாதகங்கள், திருக்குறள், தேர்தல் முறையின் பலவீனங்கள் ஆகியவற்றை பற்றி பல லெக்சர்கள்தான் புத்தகம்.

அந்த காலத்துக்கு புரட்சிகரமான கதையாக இருந்திருக்கும். ஓவியரின் மனைவி பேராசிரியருடன் மணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்கிறாள். கற்பை பற்றி லெக்சர்கள் எல்லாம் இல்லை – ஆனால் ஓவியர் ஒரு குழந்தைக்கு தாயான பெண்ணை சேர்த்துக் கொள்கிறார். கற்பை பற்றி ஒரு பாத்திரம் பேசும்போது தமிழர்கள் சீர்திருத்தம் பற்றி பேசினாலும் கன்னித்தன்மைக்கு பெரும் முக்கியத்துவம் கொடுப்பார்கள் என்று கிண்டல் தொனிக்க பேசுகிறாள்.

மேலே சொன்ன லெக்சர்கள்தான் இந்த புத்தகத்தில் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவை எல்லாம் எனக்கு இசைவானவை இல்லை. ஆனால் அந்த காலத்துக்கு மிக பெரிய விஷயமாக இருந்திருக்கும். அரசின் கடமைகள், காபிடலிசம், முதலாளித்துவம் பற்றி மிக எளிமையாக புரிய வைத்துவிடுகிறார். இன்றும் இது பெரிய விஷயம்தான்.

மிக சரளமான நடை. படிக்க ஆரம்பித்தால் சுலபமாக படித்துக்கொண்டே போகலாம்.

ஒரு புத்தகத்தை வைத்து சொல்லிவிட முடியாதுதான், ஆனால் மு.வ.வின் பலம், பலவீனம் இரண்டுமே அவரிடமிருக்கும் வாத்தியார்த்தனம்தான் என்று நினைக்கிறேன். அவர் எதையும் படிப்பவனின் சிந்தனைக்கு விடுவதில்லை. கடைசி சொட்டு வரை நமக்கு புகட்டி விடுகிறார்.

படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன். உடுமலை.காம் தளத்தில் கிடைக்கிறது. விலை அறுபது ரூபாய்.

தொடர்புடைய பதிவுகள்
மு.வ.
க.நா.சு.வின் படித்திருக்கிறீர்களா?