இங்கே கல்கி பாணியில் (அரண்மனைச் சதி genre) சரித்திர நாவல் எழுதிய சிலரைப் பற்றி மட்டும்:
தமிழில் சரித்திர நாவல் என்றால் சாண்டில்யன்தான் என்று ஒரு காலம் இருந்தது. ஆனால் சாண்டில்யனின் மிகச் சிறந்த நாவல் கூட சிவகாமியின் சபதம் தரத்துக்கு வரவில்லை.
சாண்டில்யனுக்கு ரஃபேல் சபாடினிதான் ஆதர்சம் என்று நினைக்கிறேன். அவரது நாயகனுக்கு boss-ஆக ஒரு பெரிய ஆளுமை இருக்கும். நாயகன் எப்போதுமே வீரன். நிறைய தந்திர வேலை எல்லாம் செய்வான். தந்திர வேலை என்றால் பெரிதாக எதுவும் நினைத்துக் கொள்ளாதீர்கள். உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் தாய்லாந்தில் எம்ஜிஆரின் படகை அசோகன் இன்னொரு படகில் துரத்துவார். முன்னாள் எம்ஜிஆர், பின்னால் அசோகன். எம்ஜியார், அசோகன், எம்ஜிஆர், அசோகன். திடீரென்று எம்ஜிஆர் தூய தமிழில் தாய்லாந்தை சேர்ந்த சப்பை மூக்கு படகோட்டியிடம் “இடது பக்கம் திரும்பு” என்பார். அங்கே ஒரு பெரிய படகு இருக்கும். இவர்கள் அந்தப் படகுக்குப் பின்னால் போனது தெரியாமல் அசோகன் தான் வந்த வழியிலேயே போவார். வாத்யாரைக் காணோம்! எம்ஜிஆர் தப்பிவிட்ட ஏமாற்றத்தில் அசோகன் ஒரு கையில் இன்னொரு கையால் குத்திக்கொண்டே ஆ! என்று தலையை ஒரு ஆட்டு ஆட்டிக் கொள்வார். சாண்டில்யனின் கதாநாயகன்கள் தந்திரம் எல்லாம் இந்த ரேஞ்சில்தான் இருக்கும்.
அவருடைய நாவல்களில் எனக்குப் பிடித்தவை யவனராணி, கடல்புறா, மலைவாசல், ராஜமுத்திரை, கன்னிமாடம். இவை எல்லாம் சின்ன வயதில் படிக்கத்தான் லாயக்கு. பார்த்திபன் கனவு லெவலில் இருக்கும்.
இது சாண்டில்யனின் நூற்றாண்டு. அவரைப் பற்றிய பதிவுகள் இங்கே மற்றும் இங்கே.
சாண்டில்யன் இன்றும் பல wannabe எழுத்தாளர்களுக்கு ஆதர்சமாக இருக்கிறார். கமலப்ரியா (தீரன் சின்னமலை பற்றிய “கொங்குத் தங்கம்” என்ற நாவல்) என்பவர் அவரது பாணியை, மொழியை, கதைப் பின்னலை, ஏன் சேலை விலகி இரண்டு மொட்டுக்கள் தெரிந்தன பாணி கிளுகிளுப்பைக் கூட அப்படியே பிரதிபலிக்கிறார். ஆசிரியர் பெயர் தெரியவில்லை என்றால் ஏதோ தெரியாத சாண்டில்யன் எழுத்தோ என்று சந்தேகம் வரலாம்! சின்ன சாண்டில்யன் என்ற புனைபெயரிலேயே ஒருவர் எழுதுகிறார். (ஜெம்புலிங்க நாடாரை வைத்து ஒரு நாவல் – )
சாண்டில்யன் அளவுக்கு பிரபலம் இல்லாவிட்டாலும் ஜெகசிற்பியன் ஓரளவு பிரபலமான சரித்திரக் கதை ஆசிரியர்தான். பல சமூகக் கதைகளையும் எழுதி இருக்கிறார். நான் படித்திருப்பது திருச்சிற்றம்பலம், மற்றும் நாயகி நற்சோணை.
திருச்சிற்றம்பலம் பேப்பருக்குப் பிடித்த கேடு. வளவளவளவளவளவளவளவளவென்று எழுதி இருக்கிறார். குலோத்துங்க சோழன் சிதம்பரம் கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியை இடித்ததாகவும் அந்த மூலவர் சிலையை கடலில் போட்டதாகவும், பொதுவாக வைணவர்களை கொடுமை செய்ததாகவும், குறிப்பாக ராமானுஜரின் பிரதம சிஷ்யர் கூரத்தாழ்வாரை குருடாக்கியதாகவும் ஸ்ரீரங்க வைஷ்ணவ குருபரம்பரையில் சொல்லப்படுகிறது. மூலவர் சிலை கடலில் போடப்பட்டது சமீபத்தில் தசாவதாரம் படத்தில் பார்த்திருக்கலாம். அந்த நிகழ்ச்சியை பின்புலமாக வைத்து அதில் காதல், இரண்டாம் கிளாஸ் பிள்ளைகள் தரத்தில் ஒரு சதி என்று எழுதி இருக்கிறார். சிவன் கோவிலை விரிவாக்க பெருமாள் சந்நிதி தடையாக இருக்கிறது. பெருமாள் பாற்கடலில் பள்ளி கொள்பவர், அதனால் கடலில் போடுவேன் என்கிறான் சோழன்; சிவபெருமான் சிலையை சுடுகாட்டில் வைக்க வேண்டியதுதானே?
நா. நற்சோணை ஏறக்குறைய திருச்சிற்றம்பலம் ஃபார்முலாதான். இந்த முறை இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன். ஒரு soft காதலி. ஒரு சாமர்த்தியமான, காதலனுக்கு எல்லா விதத்திலும் உதவி செய்யும் காதலி. வளவளதான். ஆனால் இதில் சொல்லப்படும் வரலாறு கொஞ்சம் intriguing. எனக்கு எப்போதும் ஒரு சந்தேகம் உண்டு. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், கரிகாலன், கங்கை கொண்ட சோழன் எல்லாரையும் பற்றி வட நாட்டு ரெகார்ட் ஏதாவது இருக்கிறதா? இந்த கனக விஜயர் யார், எந்த நாட்டு மன்னர்கள்?
ஆனால் ஒரு ஆரம்ப நிலை எழுத்தாளன் என்ற முறையில் I am awestruck by திருச்சிற்றம்பலம். இந்த கதையை என்னால் நாலு பக்கம் கூட எழுதமுடியாது. அவரால் நானூறு பக்கம் எழுத முடிந்திருக்கிறது! இப்படி கதையை வளர்ப்பதில் எனக்கு பத்தில் ஒரு பங்கு ஆற்றல் இருந்தால் கூட போதும்!
கோவி. மணிசேகரன் எழுதிய குற்றாலக் குறிஞ்சிக்கு சாஹித்ய அகாடமி விருது கிடைத்திருக்கிறது. ஒவ்வொரு சாப்டர் ஆரம்பத்திலும் தலைப்பு மாதிரி ஏதாவது ஒரு ராகம் பற்றி இரண்டு வரி இருக்கும். அந்த இரண்டு வரிதான் மொத்தப் புத்தகத்திலும் சுவாரசியமான ஒரே பகுதி.
அவர் எழுதியதில் மறவர் குல மாணிக்கங்கள் என்ற ஒரு புத்தகம்தான் கொஞ்சமாவது படிக்கிற மாதிரி இருந்தது. பெரிய மருது, சின்ன மருது ஆகியோரின் காலத்தை வைத்து எழுதப்பட்டது. எது ஆசிரியரின் கற்பனை, எது பேச்சு வழியாக வளர்ந்த தொன்மம், எது பதிவு செய்யப்பட வரலாறு என்றுதான் தெரியவில்லை. பெரிய மருது ராணி வேலு நாச்சியாரின் இரண்டாவது கணவரா? சின்ன மருதுவுக்கும் பெரிய மருதுவின் மனைவி மீனாட்சிக்கும் தொடர்பு இருந்தது என்று ஒரு வதந்தி இருந்ததா? காளையார் கோவில் ரதம், குப்பமுத்தாச்சாரி என்று ஒரு செவி வழிக் கதை இருக்கிறதா? லூயிஸ் என்ற வெள்ளைக்காரன் மருது சகோதரர்களுக்காக தீக்குளித்தானா? பெரிய மருதுவுக்கு ஒரு வெள்ளைக்கார பாதிரியார் அடைக்கலம் தந்தாரா? இது சுதந்திர பூமியில் வெள்ளை நாரைகள் பகுதி 2 என்றும் வந்திருக்கிறது.
இவற்றைத் தவிர நாயகன் நாயகி, செஞ்சி அபரஞ்சி என்ற நாவல்களையும் சித்ராங்கி, ராஜதரங்கிணி, காந்தாரி, மிதக்கும் திமிங்கலங்கள் என்ற சிறுகதைத் தொகுப்புகளையும் படித்திருக்கிறேன். குப்பமுத்தாச்சாரி கதை அப்படியே “மறவர் குல மாணிக்கங்கள்” நாவலில் எடுத்தாளப்பட்டிருக்கிறது. ஒரு தொகுப்பில் உள்ள கதையை சில சமயம் இன்னொரு தொகுப்பில் recycle பண்ணி இருக்கிறார். செஞ்சி அபரஞ்சி அவர் லெவலுக்கு சுமாரான நாவல். நாயகன் நாயகியில் வரலாறும் இல்லை, கதையும் இல்லை. தவிர்க்கலாம்.
கோவி அலங்காரத் தமிழை விரும்புபவர். வீரர்களின் மார்பு எப்போதும் விரிந்து பரந்திருக்கும், அழகிகளின் மார்பு எப்போதும் விம்மித் ததும்பும். அந்த மாதிரி கதைகளின் காலம் போய்விட்டது. தானே அதிகமான சரித்திர சிறுகதைகளை எழுதியவன் என்ற புகழ் வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறார். அதற்காக ராமாயணம், பாரதம் பற்றி எழுதுபவையும் சரித்திரக் கதை என்றால் எப்படி?
அகிலன் எழுதிய கயல்விழியும் இதே டைப்தான். மூன்றாம் தர நாவல். பேப்பருக்கு பிடித்த கேடு. இதைத்தான் எம்ஜிஆர் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் என்று திரைப்படமாக வேறு எடுத்தார். இந்த நாவல் பிடிக்காததால், நான் சாகித்ய அகாடமி விருது பெற்ற வேங்கையின் மைந்தன், வெற்றித்திருநகர் போன்றவற்றையும் படிக்கவில்லை படிப்பதை தள்ளிப் போட்டுக்கொண்டே இருந்தேன்.
நா. பார்த்தசாரதி: ராணி மங்கம்மாள், கபாடபுரம் இரண்டு படித்திருக்கிறேன். நா.பா.வின் நாவல்களில் எப்போதும் நிறைய உபதேசம் இருக்கும். ராணி மங்கம்மாளும் அப்படித்தான். நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய புத்தகம் இல்லை, ஆனால் ரொம்ப மோசமும் இல்லை. விரிவாக இங்கே படிக்கலாம். கபாடபுரம் ரம்பம். ஜெயமோகன்
தமிழில் கல்கியின் நாவலின் தளத்தில் இருந்து மேலே சென்றவை என மணிபல்லவம் [ நா.பார்த்தசாரதி] போன்ற நாவல்களை உறுதியாகச் சொல்லமுடியும்
என்கிறார். படித்துப் பார்க்க வேண்டும்.
சுஜாதாவின் ரத்தம் ஒரே நிறம், காந்தளூர் வசந்தகுமாரன் கதை: ர. ஒ. நிறம் ஓரளவு நல்ல கதை. கல்கி பாணியில் இருக்காது. வசந்தகுமாரன் கதை பாதியிலேயே நின்றுவிட்டமாதிரி இருக்கிறது. வசந்தகுமாரன் இன்னும் காந்தளூர் இருக்கும் திசையில் கூட போக ஆரம்பிக்கவில்லை, அதற்குள் புத்தகமே முடிந்துவிட்டது.
ர.சு. நல்லபெருமாள் எழுதிய மருக்கொழுந்து மங்கை (1982) தன் பின்புலத்தால் கொஞ்சம் சுவாரசியமானது. இந்திரா காந்தி அமுல்படுத்திய நெருக்கடி நிலையை சரித்திர நாவலில் பிரதிபலிக்கிறார். இந்திராவுக்கு பதிலாக இரண்டாம் பரமேஸ்வர்வர்மனின் ராணி; சஞ்சய் காந்திக்கு பதிலாக இளவரசன் சித்திரமாயன்; துர்க்மான் கேட்டை இடித்தது போன்ற ஒரு சம்பவம்; ஜெயப்பிரகாஷ் நாராயண் போலவே ஒரு பாத்திரம் சிறைப்படுத்தப்படும்போது “வினாச காலே விபரீத புத்தி” என்று சொல்கிறார். நல்லபெருமாள் இப்படி பிரதிபலிக்க வேண்டும் என்று நினைத்துத்தான் எழுதினாராம். பல பத்திரிகைகள் பயந்து பிரசுரிக்க மறுத்தனவாம். கடைசியில் தினமணி கதிரில் வந்திருக்கிறது. சிம்மவிஷ்ணு பரம்பரை முடிவடைந்து தாயாதி பரம்பரையிலிருந்து நந்திவர்மன் ராஜா ஆனதை வைத்து எழுதப்பட்டது.
கலைஞர்: பொன்னர் சங்கர் என்ற ஒரு புத்தகம் படித்திருக்கிறேன். அதில் எவ்வளவு சரித்திரம், எவ்வளவு folklore என்று தெரியவில்லை. ரோமாபுரிப் பாண்டியன், தென்பாண்டி சிங்கம், பாயும் புலி பண்டார வன்னியன் என்ற புத்தகங்களையும் எழுதி இருக்கிறார். பொன்னர் சங்கர் மட்டும் வைத்துப் பார்த்தால் இவரெல்லாம் எழுதாமலே இருந்திருக்கலாம்.
கௌசிகன்: பாமினிப் பாவை என்று ஒரு நாவல் சிறு வயதில் படித்திருக்கிறேன். நாஸ்டால்ஜியா, அதனால் அதையும் இங்கே சேர்த்திருக்கிறேன். கௌசிகன் என்பது வாண்டுமாமாவின் இன்னொரு புனைபெயர்.
“கல்கி” ராஜேந்திரனின் ரவிகுலதிலகன்: விஜயாலய சோழன் முத்தரையர்களை முறியடித்து அதிகாரத்துக்கு வந்த கதை. என்னை intrigue செய்த ஒரே விஷயம் விஜயாலயனை வழக்கமான மாசுமறுவற்ற உத்தம வீரனாகக் காட்டாமல் கோபமும், பழி வாங்கும் உணர்ச்சியும் உள்ள ஒருவனாக காட்ட முயற்சித்திருக்கிறார் என்பதுதான். ஆனால் கதை படு சுமார்.
திலகவதி எழுதிய “தீக்கு கனல் தந்த தேவி“யும் இப்படி ஒரு டைம்பாஸ் குறுநாவல்தான்.
கண்ணதாசன் சினிமாவுக்கு நன்றாக பாட்டெழுதுவார் என்பது தெரியாத தமிழன் கிடையாது. அவர் சரித்திரக் கதைகளும் எழுதுவார் என்பது அவ்வளவாகத் தெரியாது. கதைகளின் தரம் அப்படி! இந்த லட்சணத்தில் அவர் எழுதிய சேரமான் காதலி என்ற புத்தகத்துக்கு சாஹித்ய அகாடமி விருது வேறு கொடுத்திருக்கிறார்கள். நான் நல்ல புத்தகத்தை சில சமயம் பாதியில் நிறுத்திவிட்டு சரியான மூட் வந்ததும் தொடர்வேன். ஆனால் தண்டமான ஒரு புத்தகத்தில் இருபது முப்பது பக்கம் படித்துவிட்டால் அதை (அசட்டுப்) பிடிவாதமாகப் படித்துவிடுவேன். என்னாலேயே இந்தப் புத்தகத்தில் ஐம்பது பக்கத்துக்கு மேல் படிக்க முடியவில்லை. சரியான போர். இதைத் தவிர ஊமையன் கோட்டை (கட்டபொம்மன் மறைவுக்குப் பிறகு ஊமைத்துரையின் தொடரும் புரட்சி), மற்றும் பாரிமலைக்கொடி என்ற கதைகளைப் படித்திருக்கிறேன். பாரிமலைக்கொடி பாரியின் கொடை, அங்கவை, சங்கவை, மூவேந்தர் படையெடுத்து பாரியை வெல்லுதல் என்ற சம்பிரதாயக் கதை. முன்னுரையில் மூவேந்தர் பாரி மீது பொறாமை கொண்டு பாரி மீது படை எடுத்தார்கள் என்று சொல்லப்படுகிறது, பொறாமை மட்டுமே போதுமான காரணம் என்று தனக்கு தோன்றவில்லை, அதனால் மேலும் கற்பனை செய்திருக்கிறேன் என்று சொல்லிவிட்டு, அதே பொறாமை என்று முடித்தது மிகவும் எரிச்சல் ஊட்டியது. மனிதனுக்கு தான் கதையில் என்ன எழுதி இருக்கிறோம் என்று கூட தெரியாதா?
ஆனால் கண்ணதாசனே பரவாயில்லை என்று நினைக்க வைத்தவர்களும் உண்டு. கவியழகன் எழுதிய “மாவீரன் புலித்தேவன்” இந்த ரகத்தைச் சேர்ந்தது.
அனுஷா வெங்கடேஷ் இந்த genre-இல் literal ஆகவே கல்கியின் வாரிசாக வர முயற்சிப்பவர். அவர் எழுதிய காஞ்சித்தாரகை சிவகாமியின் சபதம் நாவலின் தொடர்ச்சி. கதையே இல்லாமல் பக்கம் பக்கமாக எழுதிக் குவித்திருக்கிறார். தில்லையில் ஒரு கொள்ளைக்காரன் கதையை இரண்டு வரியில் எழுதிவிடலாம், இவருக்கு நானூறு பக்கம் பிடித்திருக்கிறது.
மு. மேத்தா எழுதிய சோழ நிலா அந்தக் காலத்தில் ஆனந்த விகடனின் பரிசு பெற்றது. அந்தக் காலத்தில் டைப்ரைட்டரில் கார்பன் காகிதம் வைத்து பிரதி எடுப்பார்கள். இது சாண்டில்யனின் சுமாரான நாவல் ஒன்றை எட்டாவது பிரதி எடுத்தது போன்ற உணர்வைத்தான் ஏற்படுத்தியது. கற்றுக்குட்டித்தனமான நாவல்.
இவர்களைத் தவிர விக்ரமன், கௌதம நீலாம்பரன் (வீரத்தளபதி மருதநாயகம்), தாமரைமணாளன், வல்லிக்கண்ணன் ஆகியோர் எழுதியதையும் அங்கும் இங்குமாக படித்திருக்கிறேன். எதுவும் என்னைக் கவரவில்லை. குறிப்பாக விக்ரமன் எழுதிய “வந்தியத்தேவன் வாள்” உண்மையில் வாள் இல்லை ரம்பம். சாஹித்ய அகாடமி விருதெல்லாம் வாங்கியவராயிற்றே என்றுதான் வல்லிக்கண்ணன் எழுதிய விடிவெள்ளியைப் (பாண்டியன் கடுங்கோன்) படித்தேன். உலக மகா தண்டம். கோவிந்தராஜன் கிருஷ்ணராவ் எழுதிய விக்கிரமனின் சபதம் கற்றுக்குட்டித்தனமாக இருக்கிறது.
தமிழில் சரித்திர நாவல் என்றால் ஆ! அவள் அங்கங்கள் தங்கமாக ஜொலிக்கிறதே! என்ற நடையில் எழுத வேண்டும் என்றும் நிறைய பேர் நினைக்கிறார்கள். நகுபோலியன் என்பவர் இவர்கள் நடையை கிண்டல் செய்து எழுதிய மழநாட்டு மகுடம் கோப்பெருந்தேவி எங்கே என்ற சிறுகதை ஞாபகம் வருகிறது. அந்த சிறுகதை ஒரு தொடர்கதையின் 35-ஆவது சாப்டர் போல எழுதப்பட்டிருக்கும். ஒரு நாலு பக்கத்துக்கு குதிரை மேல் போய்க்கொண்டே கோப்பெருந்தேவி எங்கே என்று யோசிப்பார் ஹீரோ. சிரித்து சிரித்து எனக்கு வயிறு புண்ணாகிவிட்டது. இந்த கதையை யாராவது படித்திருக்கிறீர்களா?
நான் படித்த வரையில் சாண்டில்யன், சுஜாதா, நா.பா. மூன்று பேர்தான் பொருட்படுத்தக் கூடிய முறையில் எழுதி இருக்கிறார்கள். சுஜாதாவின் ரத்தம் ஒரே நிறம்தான் இவற்றில் பெஸ்ட். ஆனால் படிக்க இன்னும் இருக்கிறது. அது அடுத்த பகுதியில். அது வரையில் reference-க்காக ஜெயமோகனின் historical romances லிஸ்டை இங்கே ஒரு அனுபந்தமாகக் கொடுத்திருக்கிறேன். ஜெயமோகன் பிரபஞ்சனின் “மானுடம் வெல்லும்” நாவலை romance என்ற நிலையைத் தாண்டிய இலக்கியம் என்றும், சிறந்த தமிழ் நாவல்களில் ஒன்றாகவும் குறிப்பிடுகிறார். எஸ்.ரா. பொ. செல்வன், வீ. மனைவி, மா. வெல்லும், சுஜாதாவின் ர.ஒ. நிறம், பாலகுமாரனின் உடையார் ஆகியவற்றை நூறு சிறந்த தமிழ் நாவல்கள் லிஸ்டில் சேர்க்கிறார்.
தொடரும்…
அனுபந்தம் (Appendix) – ஜெயமோகனின் Historical Romances லிஸ்ட்
முதல் பட்டியல்:
- பொன்னியின் செல்வன் — கல்கி
- சிவகாமியின் சபதம் — கல்கி
- மன்னன் மகள் — சாண்டில்யன்
- யவன ராணி — சாண்டில்யன்
- கடல்புறா — சாண்டில்யன்
- வீரபாண்டியன் மனைவி — அரு. ராமநாதன்
- ஆலவாய் அழகன் — ஜெகசிற்பியன்
- திருவரங்கன் உலா — ஸ்ரீ வேணுகோபாலன்
- வேங்கையின் மைந்தன் — அகிலன்
- மணிபல்லவம் — நா. பார்த்தசாரதி
இரண்டாம் பட்டியல்:
- பார்த்திபன் கனவு — கல்கி
- ஜலதீபம் — சாண்டில்யன்
- கன்னிமாடம் — சாண்டில்யன்
- மூங்கில் கோட்டை — சாண்டில்யன்
- ராஜ முத்திரை — சாண்டில்யன்
- கயல்விழி — அகிலன்
- வெற்றித்திருநகர் — அகிலன்
- ரத்தம் ஒரே நிறம் — சுஜாதா
- கோபுர கலசம் — S.S. தென்னரசு
- ராணி மங்கம்மாள் — நா. பார்த்தசாரதி
- ரோமாபுரிப் பாண்டியன் — மு. கருணாநிதி
- தென்பாண்டி சிங்கம் — மு. கருணாநிதி
- பத்தினிக் கோட்டம் — ஜெகசிற்பியன்
- நந்திபுரத்து நாயகி — விக்ரமன்
- திருச்சிற்றம்பலம் — ஜெகசிற்பியன்
தொடர்புள்ள பதிவுகள்:
தமிழில் சரித்திர நாவல்கள் பகுதி 1 (கல்கி)
Like this:
Like ஏற்றப்படுகின்றது...