எம்ஜிஆர் பற்றி சில புத்தகங்கள்

எம்ஜிஆர் பற்றி சில புத்தகங்களை சமீபத்தில் படித்தேன்.

ஆர்.எம். வீரப்பன் எம்ஜிஆர் யார் என்று ஒரு புத்தகத்தை எழுதி இருக்கிறார். அதில் எம்ஜிஆரை விட ஜெயலலிதா பற்றிதான் அதிகம் எழுதி இருக்கிறார். ஜெ மீது எப்போதும் எம்ஜிஆருக்கு ஒரு soft corner இருந்திருக்கிறது. ஜெ தான் எம்ஜிஆரின் ‘துணைவி’, தன்னால் எம்ஜிஆரை அடக்கி ஆள முடியும் என்று காட்ட அறுபதுகளின் இறுதியிலும் எழுபதுகளின் ஆரம்பத்திலும் முயன்றாராம். ஆர்எம்வீயின் தலையீட்டால்தான் ஜெ உலகம் சுற்றும் வாலிபனில் நடிக்க முடியாமல் போயிற்றாம். ஆர்எம்வீ ஜெவை நீங்கள் அழைத்துச் சென்றால் உங்கள் கீப்பை அழைத்துக் கொண்டு ஜாலியாகப் போகிறீர்கள் என்றுதான் பேச்சு வரும் என்ற் வெளிப்படையாகவே எம்ஜிஆரிடம் சொன்னாராம். அப்போது ஆரம்பித்த உரசல் அரசியலிலும் நீடித்திருக்கிறது.

முன்னாள் போலீஸ் அதிகாரி மோகன்தாஸ் – எம்ஜிஆருக்கு மிகவும் நெருக்கமானவர் என்று சொல்லப்பட்டவர் – எழுதிய MGR: The Man and the Myth புத்தகத்தில் புதிதாக எதுவுமில்லை. அந்தக் காலத்து செய்தித் தாள்களைத் தொகுத்தது போலத்தான் இருக்கிறது.

ரவீந்தர் எம்ஜிஆருடன் கூடவே இருந்திருக்கிறார். எம்ஜிஆருக்காக பல ட்ரீட்மென்ட்களை எழுதி இருக்கிறார், அவற்றில் வெகு சிலவே படமாகி இருக்கின்றன என்று தெரிகிறது. நாடோடி மன்னன் படத்தில் இவரது பங்களிப்பு இருந்திருக்கிறது. எம்ஜிஆரைப் பற்றி வேதநாயகன் எம்ஜிஆர் என்று ஒரு புகழ்மாலை எழுதி இருக்கிறார். ஆனாலும் அதில் அங்கங்கே எம்ஜிஆரின் பழி வாங்கும் குணம் வெளிப்படத்தான் செய்கிறது. தியாகராஜ பாகவதர் அசோக்குமார் திரைப்படத்தில் எம்ஜிஆர் நடிப்பதை விரும்பவில்லையாம், முதல்வராக இருந்தபோது அவரது மனைவியை காத்துக் கிடக்க வைத்திருக்கிறார், கடைசியில் அரசு மூலம் ஏதோ சிறு உதவி செய்திருக்கிறார். வில்லன் நடிகர் அசோகன் ஏதோ சொல்லிவிட்டார் என்று அவரை பழி வாங்கி இருக்கிறார். மஞ்சுளா போட்ட ஒப்பந்தத்தை மீறி வெளிப்படங்களில் நடித்ததற்காக அவரை விரட்டி இருக்கிறார். தன் இமேஜில் வெகு கவனமாக இருந்திருக்கிறார் என்று தெரிகிறது.

நாடோடி மன்னன் திரைப்படத்தை எம்ஜிஆர் தயாரித்து இயக்கியது தெரிந்ததே. திரைப்படத்திற்கு பங்களித்த பலரைப் பற்றி எம்ஜிஆரே எழுதிய புத்தகம் ஒன்று கிடைத்தது. படிக்கலாம்…

இவற்றில் எதுவும் படித்தே ஆக வேண்டிய புத்தகமில்லை. (ஆர்எம்வீ புத்தகம் கொஞ்சம் பரவாயில்லை) தமிழர்களைத் தவிர வேறு யாருக்கும் இவை சுவாரசியப்படவும் போவதில்லை. ஆனால் எம்ஜிஆர் பற்றிய பிம்பம் இன்னும் உறுதிப்படுகிறது. என்றைக்காவது எம்ஜிஆரைப் பற்றிய நடுநிலையான, உண்மைகளை மட்டுமே பிரதானப்படுத்தும் வாழ்க்கை வரலாறு வராதா, தமிழில் ராஜ்மோகன் காந்தியும் ராமச்சந்திர குஹாவும் சர்வபள்ளி கோபாலும் என்றுதான் அவதரிக்கப் போகிறார்கள் என்ற ஏக்கம் எழுகிறது. அது சரி, உண்மையை எழுதினால் தொ/குண்டர் படை வீட்டுக்கு அனுப்பப்படலாம்…

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் அபுனைவுகள்

நாடோடி மன்னன் திரைப்படத்தின் மூலக்கதையை எழுதிய முஸ்லிம் பெண்

ziddi_junaidha_begumஆபிதினின் ஒரு பழைய பதிவில் சித்தி ஜுனைதா பேகம் என்ற முஸ்லிம் பெண்மணி – நாகூர்ப் பெண்மணி – பற்றி வாசித்தேன். 1936 வாக்கில் காதலா கடமையா என்று ஒரு நாவலை எழுதினார், அதற்கு உ.வே. சாமிநாதய்யர் ஒரு முன்னுரை எழுதி இருக்கிறார், அதுதான் நாடோடி மன்னன் திரைப்படத்தின் மூலக்கதை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. என்னடா எம்ஜிஆருக்கு Prisoner of Zenda போதவில்லையா, இதிலிருந்து வேறு உருவினாரா என்று ஆச்சரியப்பட்டேன். பிறகு நாவலின் மின்வடிவம் கிடைத்தது. ஆபிதின் சொல்வது சரிதான். ஏறக்குறைய இந்த நாவல்தான் திரைப்படமாக வந்தது. ஆனால் நாவலே ஜெண்டாவை ஏறக்குறைய மொழிபெயர்த்ததுதான். இதைத்தான் ஊத்திக்கினும் கடிச்சுக்கலாம் கடிச்சுக்கினும் ஊத்திக்கலாம் என்று பெரியவர்கள் சொல்லுவார்கள். 🙂

காதலா கடமையா நாவலின் மின்பிரதியை இணைத்திருக்கிறேன். எழுபது வருஷத்துக்கு முன் ஒரு பெண், அதுவும் முஸ்லிம் பெண், அதுவும் மூன்றாவது வகுப்பைத் தாண்டாதவர் என்ற “தகுதிகள்” எல்லாம் இல்லாவிட்டால் நானே இந்தப் புத்தகத்தை சீந்தமாட்டேன். Curiosity value மட்டுமே இருக்கிறது.

பிற்சேர்க்கை: தமிழ் ஹெரிடேஜ் தளத்தில் காதலா கடமையா நாவலின் பிரதி இருப்பது பின்னால்தான் தெரிந்தது. அங்கே மகிழம் என்ற இன்னொரு நாவலுக்கு சுட்டி இருக்கிறது, ஆனால் நாவலில் பாதிதான் இருக்கிறது.

தொடர்புள்ள சுட்டிகள்:
விக்கி குறிப்பு
பேகத்தின் பேட்டி
நாகூர் ரூமியின் குறிப்பு
கீரனூர் ஜாகிர் ராஜாவின் குறிப்பு
ஜே.எம். சாலியின் குறிப்பு

அந்தோணி ஹோப்பின் சாகசக் கதைகள்

anthony_hopeஎன்னைக் கவர்ந்த திரைப்படங்களில் நாடோடி மன்னனும் ஒன்று. எம்ஜிஆரின் எல்லா சாகசப் படங்களுக்கும் பின்னால் ஏதோ ஒரு ஆங்கிலத் திரைப்படமோஅல்லது புத்தகமோ இருக்கும் என்பதை பின்னால்தான் புரிந்து கொண்டேன். பிற்காலத்தில் Prisoner of Zenda புத்தகத்தைப் படித்தபோது நாடோடி மன்னனின் மூலக்கதையை அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது.

Zenda இத்தனைக்கும் அசகாய சூரத்தனம் நிறைந்த கதை அல்ல. என் கண்ணில் அதன் கவர்ச்சியே கதை நம்பக் கூடிய விதத்தில்தான் எடுத்துச் செல்லப்படுவதுதான். ஒரே ஆள் நூறு பேரை சுற்றி சுற்றி அடிப்பது போன்ற மிகைப்படுத்தல்கள் எல்லாம் கிடையாது. கதையில் ஒரே ஒரு அதிசயம்தான். அதற்கும் ஹோப் பலமான அடிப்படை போட்டிருப்பார். Zenda-வை விட அதன் தொடர்ச்சியான Rupert of Hentzau இன்னும் திறமையாகப் பின்னப்பட்ட கதை. இரண்டையும் minor classics என்று சொல்லலாம்.

prisoner_of_zendadouglas_fairbanks_as_rupert_ofhentzauZenda நாவல் 1894-இல் வெளிவந்தது. ரூபர்ட் 1898-இல் வெளிவந்தது. கூடன்பர்க் தளத்தில் இரண்டு புத்தகத்தையும் படிக்கலாம்.

Zenda நாவல் பல முறை திரைப்படமாக்கப்பட்டது. 1937-இல் ரொனால்ட் கோல்மன், டக்ளஸ் ஃபேர்பாங்க்ஸ், டேவிட் நிவன் நடித்து வெளியான படம்தான் சிறந்தது என்று சொல்வார்கள். பார்க்கக் கூடிய படம்தான். ஆனால் எனக்கு எப்போதும் நாடோடி மன்னன்தான் டாப்!

nadodi_mannanபதின்ம வயதில் படிக்க சுவையான சாகசக் கதைகள். அந்த வயதில் இருக்கும் பையன்களுக்கு வாங்கிக் கொடுங்கள்!

பிற்சேர்க்கை: நண்பர் ரெங்கசுப்ரமணி அசோகமித்திரன் இந்த genre திரைப்படங்களைப் பற்றி எழுதியதை ஒரு பின்னூட்டத்தில் கொஞ்சம் சுருக்கமாகத் தந்திருக்கிறார். அது கீழே:

அசோகமித்திரன் அவரது ஆதி நாடோடி மன்னன் கட்டுரையில்

இரட்டை வேட கத்திச்சண்டை படங்களுக்கு முன் மாதிரியான படங்கள் மூன்று, Corsican Brothers, Man in the Iron Mask, Prisoner of Zenda. முதலிரண்டு நாவல்களில் கதாநாயகனின் அச்சாக இன்னொருவர் இருக்க முக்கியக் காரணம், அவர்கள் இரட்டையர்கள். ப்ரிஸனரில் வேறு வேறு குடும்பத்தை சேர்ந்தவர்கள். பிரிஸனரில் காதலர்கள் காதலை தியாகம் செய்து விடுவார்கள். வில்லன் சாகாமல் எங்கோ ஓடி விடுவான்

ஆறாம் ஜார்ஜ் பட்டம் தரித்ததை ஒட்டி எடுக்கப்பட்டது. பதினாறு ஆண்டுகளுக்கு பிறகு, இன்னொரு பிரிட்டிஷ் முடிசூட்டு விழா நடந்தது. அப்போதும் இன்னொரு Prisoner of Zenda படம் வண்ணத்தில் வந்தது. இரண்டு படங்களும் பெரிய வெற்றி பெறவில்லை.

ஹிந்தியில் அப்படம் கைதி என்ற பெயரில் உப்புச்சப்பில்லாமல் வந்தது. அது பத்மினியின் முதல் அசல் ஹிந்திப்படம். நாடோடி மன்னன் ஹிந்தியிலும் டப் செய்யப்பட்டு அசல் படத்தின் கதியை அடைந்தது.

அந்தோணி ஹோப் வக்கீல் தொழிலை விட்டு முழு நேர நாவலாசிரியரானார். Rupert of Hentzau என்ற நாவலை எழுதினார். ரூபர்ட், பிரிஸனரின் வில்லன்.

இது சுருக்கம், அவரது வரிகளல்ல. அடுத்து வருவது அவரது வரிகள் அப்படியே.

//ஒரு மோசமான நாவல் கூட ஓரளவு சுவாரசியமான திரைப்படமாக மாற்றப்படலாம் என்பதற்கு Prisoner of Zenda ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.//


தொகுக்கப்பட்ட பக்கம்: உலக இலக்கியம்

தொடர்புடைய சுட்டிகள்:
புத்தகத்தை இணையத்தில் படிக்க
Prisoner of Zenda – IMDB குறிப்பு