2017 பத்மபூஷன், பத்மஸ்ரீ விருதுகள்

இந்த வருஷம் வெகு சில புனைவெழுத்தாளர்கள்/கவிஞர்களுக்கே – நரேந்திர கோலி (ஹிந்தி), அக்கிதம் அச்சுதன் நம்பூதிரி (மலையாளம்), எலி அஹமத் (அஸ்ஸாமிய மொழி), பிர்கா பஹதூர் லிம்பு முரிங்லா (சிக்கிமில் பேசப்படும் லிம்பூ மொழி) பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. அசோகமித்ரன், கி.ரா. இவர்களெல்லாம் எப்போதுதான் அங்கீகாரம் பெறப் போகிறார்களோ!

இலக்கியத்துக்காக சோ ராமசாமிக்கு பத்மபூஷன் விருது தரப்பட்டிருக்கிறது. சோ என் கண்ணில் நாடக இலக்கியம் படைத்தவர்தான், பத்மபூஷன் விருதுக்கு தகுதியானவர்தான். ஆனால் இலக்கியத்துக்காக என்று கொடுத்திருப்பது அவரது எழுத்துக்களின் இலக்கியத் தரத்தை மிக அதிகமாக மதிப்பிடுவது. பத்திரிகையாளர் என்று ஒரு category இல்லை போலிருக்கிறது.  கடைசி பதினைந்து சொச்சம் வருஷங்களில் அவரது நடுநிலை தவறிவிட்டாலும், அவரது பல கருத்துக்கள் – குறிப்பாக பெண்கள் பற்றிய கருத்துக்கள் எனக்கு இசைவானவை இல்லை என்றாலும் இது சரியான விருதுதான். அவருடைய நடுநிலை பிசகியதால்தான் இந்த விருது கிடைத்திருக்கிறது என்பதுதான் நகைமுரண்.

தமிழகத்திலிருந்து மிஷல் டானினோவுக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்திருக்கிறது. எனக்குத் தெரிந்து டானினோ ஒரே ஒரு புத்தகத்தைத்தான் பண்டைய இந்தியா பற்றி சில அபுனைவுகளை எழுதி இருக்கிறார். Lost River: On the Trail of Saraswati (2010) என்ற புத்தகத்தைப் பற்றி அரவிந்தன் நீலகண்டன் எழுதிய குறிப்பை இங்கே படிக்கலாம். நண்பர் ரெங்கசுப்ரமணி எழுதிய அறிமுகம் இங்கே. அவரது எழுத்துக்கு ஒரு உதாரணமாக ஜெயமோகன் தளத்தில் இந்தக் கட்டுரையைப் (பகுதி 1, பகுதி 2) படிக்கலாம்.

ஹிந்தியின் பிரபல எழுத்தாளர் நரேந்திர கோலிக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்திருக்கிறது. மொழிபெயர்ப்புகள் எதுவும் (எனக்குத் தெரிந்து) இல்லை என்றாலும், ஹிந்தியை எழுத்துக் கூட்டி படிக்கவே தடுமாறும் நானே இவர் பேரை கேட்டிருக்கிறேன்.

அக்கிதம் அச்சுதன் நம்பூதிரி மலையாளக் கவிஞராம். சாஹித்ய அகாடமி விருது பெற்றவர்.

பிர்கா பஹதூர் லிம்பு முரிங்லா சிக்கிமில் பேசப்படும் மொழியான லிம்பூ எழுத்தாளர்.

எலி அஹமத் அஸ்ஸாமிய மொழி எழுத்தாளர், கவிஞர்.

ஜி. வெங்கடசுப்பையா கன்னடத்தில் அகராதியைத் தொகுத்திருக்கிறார். மேலும் பல இலக்கிய விமர்சன நூல்களை எழுதி இருக்கிறார்.

விஷ்ணு பாண்டியா குஜராத்தி பத்திரிகையாளர், எழுத்தாளர். பல அபுனைவுகளை எழுதி இருக்கிறார்.

தொகுக்கப்பட்ட பக்கம்: விருதுகள்

ஜெயமோகன், பத்மஸ்ரீ, விருதுகளின் அவசியம்

jeyamohanஜெயமோகன் பத்மஸ்ரீ விருதை நிராகரித்ததுதான் இன்றைக்கு ஹாட் நியூஸ்.

என் கண்ணில் அது பிழைதான். ஆனால் ஜெயமோகன் கண்களுக்கு அது எப்படி தெரிகிறது என்பதுதான் முக்கியம். அது அவரது தனிப்பட்ட முடிவு, இதில் மூக்கை நுழைக்க யாருக்கும் உரிமையில்லை.

ஆனால் என் கண்ணில் ஏன் அது பிழையாகத் தெரிகிறது என்று ஒரு நிமிஷம் யோசித்தேன். தெரிந்தவருக்கு, நண்பருக்கு எல்லாவற்றையும் விட தகுதியானவருக்கு விருது கிடைப்பதில் உள்ள சந்தோஷம் போய்விட்டதே, இந்த விருதின் மேல் அவரே விழையும்போதும் நடக்கவில்லையே, நியாயமாகக் கிடைக்க வேண்டிய கௌரவத்தை என்னவோ சாக்கு சொல்லி புறம் தள்ளிவிட்டாரே, என்பதெல்லாம் இருந்தாலும் முக்கியமான காரணம் நான் அவரை ஒரு வாசகனாகப் பார்ப்பதுதான். அவர் என் கண்ணில் முதலாவதாக, இரண்டாவதாக, மூன்றாவதாக ஒரு எழுத்தாளர். நண்பர், தெரிந்தவர் எல்லாம் அதற்கப்புறம்தான்.

அது தெளிவான பிறகு சாஹித்ய அகடமி பற்றி அவரோடு உள்ள கருத்து வேறுபாட்டின் தொடர்ச்சிதான் இதுதான் என்பதும் தெளிவாகத் தெரிந்தது. தமிழ் எழுத்தாளர்களில் மேதை என்று சொல்லக் கூடிய மூவரில் ஒருவர். மற்ற இரண்டு பேரையும் (புதுமைப்பித்தன், அசோகமித்ரன்) அண்டை மாநிலத்து இலக்கிய வாசகர்களுக்கு கூடத் தெரியாது. மொழிபெயர்க்கப்பட்டால்தான் தெரிய வரும், அப்படி மொழிபெயர்க்கப்படுவதற்கு இந்த விருதுகள் பல சமயம் கிரியா ஊக்கியாக (catalyst) செயல்படுகின்றன. யாரும் முனைந்து தற்காலத் தமிழ் இலக்கியத்தை பிற இந்திய மொழிகளில் மொழிபெயர்ப்பதாக எனக்குத் தெரியவில்லை. தீவிர தமிழ் இலக்கிய வாசகர்கள் எல்லாருக்கும் காண்டேகர் பெயர் தெரிந்திருப்பது எப்படி? நல்ல தமிழ் இலக்கியம் பிற இந்திய வாசகர்களை அடைய வேண்டும், அதற்கு உதவக் கூடிய ஒரு விருதை (என் கண்ணில்) சொத்தைக் காரணங்களுக்காக நிராகரிப்பது எனக்கு தவறவிடப்பட்ட வாய்ப்பாகத்தான் தெரிகிறது.

அவருடைய கண்ணோட்டம் வேறாக இருக்கிறது. மனக் குழப்பங்கள் நீங்க வேண்டும், இதை விடவும் பெரிய விருதுகள் எதிர்காலத்தில் அவரைத் தேடி வர வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஜெயமோகன் பக்கம், விருதுகள்