ஜெகசிற்பியன்: பத்தினிக் கோட்டம்

சிறு வ்யதில் ஜெகசிற்பியன் ஓரளவு பரிச்சயமான பெயர்தான். ஆனால் அதிகம் படித்ததில்லை. அவர் கல்கியில் எழுதும்போது நாங்கள் விகடன் வாங்கினோம், விகடனில் எழுதும்போது குமுதம் வாங்கினோம் என்று நினைக்கிறேன். 🙂

ஜெயமோகனின் நாவல் பட்டியலைப் பார்த்தபோது – பத்து வருஷத்துக்கு முன்னால் – சில புத்தகங்களைத் தேடிப் பிடித்துப் படித்தேன். திருச்சிற்றம்பலம், நாயகி நற்சோணை. இவை இரண்டும் காகித விரயமே. என்ன இவருக்கு காகிதம் இலவசமாகக் கிடைத்ததா, இத்தனை வளவளவளவளவளவளவளவளவென்று எழுதுகிறாரே என்றுதான் தோன்றியது. ஜெயமோகனின் பட்டியலில் உள்ள ஒவ்வொரு நாவலையும் படிக்க வேண்டும் என்று எனக்கு ஒரு நப்பாசை உண்டு. ஆனால் ஜெகசிற்பியன் என்றால் பயந்தேன்.

பல வருஷம் கழித்து கொஞ்சம் தைரியம் வந்து பத்தினிக் கோட்டம் நாவலைப் படிக்க ஆரம்பித்தேன். இதுவும் வளவளதான். நகுபோலியனின்மழநாட்டு மகுடம்” சிறுகதையை நினைவுபடுத்தும் பாணிதான். தற்செயல் நிகழ்ச்சிகள் நிறைந்ததுதான். ஆனால் திருச்சிற்றம்பலத்துக்கு பரவாயில்லை.

சாளுக்கிய அரசன் விக்ரமாதித்தன் பல்லவ அரசன் பரமேஸ்வரவர்மனைத் தோற்கடித்ததையும் பரமேஸ்வரவர்மன் மீண்டும் எழுந்து வந்ததையும் விவரிக்கிறது. இதில் வழக்கமான அரண்மனைச் சதிகள். அவ்வளவுதான் கதை. ஆயிரம் பக்கமாவது இருக்கும். கதையைக் காப்பாற்றுவது சம்பவங்களின் தொடர்ச்சி. ஏதாவது நடந்து கொண்டே இருக்கிறது. அது நடக்கக் கூடியதுதானா, அதிசயத் தற்செயல் நிகழ்ச்சியா என்பதெல்லாம் இரண்டாம் பட்சம்.

பத்தினிக் கோட்டம் ஜெயமோகனின் பட்டியலில் இரண்டாம் வரிசை வரலாற்று நாவல்களில் இடம் பெறுகிறது.

தமிழ் வணிக/வரலாற்று நாவல்கள் எப்படி பரிணமித்தன என்பதில் ஆர்வம் உள்ளவர்களுக்கு மட்டுமே பரிந்துரைப்பேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் வரலாற்று நாவல்கள்

படிக்க விரும்பும் சரித்திர நாவல்கள்

இந்தப் பதிவுகள் முன்பு எப்போதோ கூட்டாஞ்சோறு தளத்தில் எழுதப்பட்டவற்றை (கணிசமாக) திருத்தி எழுதப்பட்டவை என்பதைச் சொல்ல மறந்துவிட்டேன். அப்போது வந்த மறுமொழிகளில் சிலர் வேறு புத்தகங்களை சிபாரிசு செய்திருந்தனர்.

பத்திரிகையாளர் ஞானி அரு. ராமநாதன் எழுதிய வீரபாண்டியன் மனைவி புத்தகத்தை சிபாரிசு செய்திருந்தார்.

எழுத்தாளர் மாலன் பாலகிருஷ்ண நாயுடு எழுதிய டணாய்க்கன் கோட்டை புத்தகத்தை சிபாரிசு செய்திருந்தார்.

நண்பர் நந்தாவின் சிபாரிசுகள்:

 1. சேது நாட்டு வேங்கை, இந்திரா சௌந்தர்ராஜன்: கிழவன் சேதுபதியைப் பற்றியது. ராமேஸ்வரம் மற்றும் ராமலிங்க விலாசம் என்று அந்த அரண்மனையைப் பற்றி நன்றாக குறிப்பிடப்பட்டிருக்கும்.
 2. பொன் அந்தி, எஸ்.பாலசுப்ரமணியம்: மருதநாயகத்தை வைத்து எழுதப்பட்டது
 3. காஞ்சிபுரத்தான், ரா.கி.ரங்கராஜன்: பாளையத்தார்கள் காலத்திய முழுக்க முழுக்க கற்பனைக் கதை. நடை நன்றாய் இருக்கும்
 4. பாண்டிமாதேவி, நா.பார்த்தசாரதி

பாண்டிமாதேவி சென்னை லைப்ரரி தளத்தில் கிடைக்கிறது.

நந்தா மேல் எனக்கு கொஞ்சம் காண்டு. அவர் ரமணிசந்திரனை பற்றி எழுதிய ஒரு பதிவை பார்த்துவிட்டு எப்படியாவது கஷ்டப்பட்டு வாழ்க்கையில் ஒரு ரமணிசந்திரன் புத்தகமாவது படிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்.:-)

இவற்றைத் தவிர நான் படிக்க விரும்புபவை:

  1. அனுஷா வெங்கடேஷ் எழுதிய காவிரி மைந்தன் – இது பொன்னியின் செல்வனின் தொடர்ச்சியாம்
  2. ஸ்ரீவேணுகோபாலன் எழுதிய திருவரங்கன் உலா
  3. பாலகுமாரன் எழுதிய உடையார்
  4. சு. வெங்கடேசன் எழுதிய காவல் கோட்டம்
  5. ரா.கி. ரங்கராஜன் எழுதிய நான், கிருஷ்ணதேவராயன்
  6. நா.பா.வின் மணிபல்லவம்

இவற்றைத் தவிர ஜெயமோகன் சிபாரிசுகளில் நான் இன்னும் படிக்காதவை: ஆலவாய் அழகன் மற்றும் பத்தினிக் கோட்டம் (ஜெகசிற்பியன்), வேங்கையின் மைந்தன் மற்றும் வெற்றித்திருநகர் (அகிலன்), கோபுர கலசம் (எஸ்.எஸ். தென்னரசு), ரோமாபுரிப் பாண்டியன் மற்றும் தென்பாண்டி சிங்கம் (மு. கருணாநிதி), நந்திபுரத்து நாயகி (விக்ரமன்). எனக்கு ஜெகசிற்பியன் என்றாலே இப்போதெல்லாம் கொஞ்சம் பயம்தான். இருந்தாலும் புத்தகங்கள் கிடைத்தால் படித்துவிடுவது என்று இருக்கிறேன்.

தொடரும்…

தொடர்புடைய பதிவுகள்:
தமிழில் சரித்திர நாவல்கள் பகுதி 1 (கல்கி), பகுதி 2 (கல்கியின் வாரிசுகள்)