அப்பாவின் நினைவில்: ஆர். எல். ஸ்டீவன்சனின் “Treasure Island”

(மீள்பதிவு, சில திருத்தங்களுடன்)

என் அப்பா இறந்து இன்றோடு ஒரு வருஷம் முடிகிறது. என் முதல் ரோல் மாடல் அவரே. அவரது நினைவு வந்துகொண்டேதான் இருக்கிறது. அவரோடு போட்ட சண்டைகள், சிரித்த தருணங்கள், அவரோடு உட்கார்ந்து ரேடியோவில் கேட்ட கிரிக்கெட் கமெண்டரிகள், அவர் அடித்துவிட்ட கதைகள், சோர்ந்திருந்தத்போது அவர் தந்த தைரியம், அவர் சோர்ந்திருந்தபோது என்னால் தர முடிந்த தைரியம், அவரது கொஞ்சம் கனமான குரல் எல்லாம் அவ்வப்போது நினைவு வந்து wry smile ஒன்றை உருவாக்கிக் கொண்டேதான் இருக்கின்றன.

அவர் இறந்தபோது அவரைப் பற்றி எழுதினேன். ஆனால் அதை இன்னும் பதிப்பதற்கில்லை. இப்போதைக்கு அவர் சிறு வயதில் சொன்ன கதையைப் பற்றி மீள்பதித்திருக்கிறேன்.

என் சிறு வயதில் என் அம்மா எனக்கும் என் தங்கைகளுக்கும் நிறைய கதை சொல்லி இருக்கிறாள். ஆனால் அப்பா எங்களுக்கு இரண்டே இரண்டு கதைகள் மட்டுமே சொல்லி இருக்கிறார். ஒன்று Tale of Two Cities, இரண்டு Treasure Island. கொஞ்சம் கனமான குரலில் மங்கலான லைட் பல்ப் ஒளியில் அவர் “15 Men on the Dead Man’s Chest” என்று பாடுவது அழியாத நினைவு.

இப்படி நாஸ்டால்ஜியாவோடு எந்தப் புத்தகத்தைப் படித்தாலும் பிடிக்கத்தான் பிடிக்கும். இந்தப் புத்தகமும் அப்படித்தான்.

நான் கதைச்சுருக்கம் எல்லாம் எழுதப் போவதில்லை. வேண்டுமென்றால் விக்கியில் படித்துக் கொள்ளுங்கள்.

எனக்கு கதையின் ஆரம்பம்தான் மிகவும் பிடித்த பகுதி. கடற்கொள்ளையர், பில்லி போன்ஸ், அவனுக்குக் கொடுக்கப்படும் Black Spot, அதைக் கொண்டு வரும் குருட்டு ப்யூ, அங்கே நடக்கும் சண்டை, அந்த atmosphere எல்லாமே மிகவும் த்ரில்லிங் ஆக இருக்கும். லாங் ஜான் சில்வரின் பாத்திரப் படைப்பு நன்றாக இருந்தாலும், கதை சில்வரின் வருகைக்குப் பிறகு கொஞ்சம் தொய்வடைகிறது. பென் கன் பேய் போல அவர்களை பயமுறுத்துவது எனக்கு பர்சனலாக நாஸ்டால்ஜியாவை உருவாக்குகிறது.

சிறு வயதில் ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய புத்தகம் என்று சொல்வேன். கட்டாயம் குழந்தைகளை – குறிப்பாக பத்து வயது சிறுவர்களை – படிக்க வையுங்கள்.

ஒரே ஒரு சோகம் என்னவென்றால் கதையை என் குழந்தைகளுக்கும் சொல்ல முயற்சித்திருக்கிறேன். அவர்கள் அதை அவ்வளவாக ரசிக்கவில்லை. சின்னவளுக்கு அதை ரசிக்கும் வயதில்லை. பெரியவளுக்கு நான் சொல்ல ஆரம்பித்தபோது என்னிடம் கதை கேட்கும் ஆர்வம் இல்லை, அவளே படித்துக் கொள்வதுதான் அவளுக்கு சரிப்பட்டு வந்தது.