தி.ஜா. சிறுகதைகள்

தமிழ்ச் சிறுகதை : ஜெயமோகன் பட்டியல் பாகம் 3

தி. ஜானகிராமன் சிறுகதைகளில் எட்டு ஜெயமோகனின் சிறந்த தமிழ்ச் சிறுகதைகள் லிஸ்டில் இடம் பெறுகின்றன.

  1. தீர்மானம்
  2. சிலிர்ப்பு
  3. பாயசம்
  4. பரதேசி வந்தான்
  5. கடன் தீர்ந்தது
  6. கோதாவரிக்குண்டு
  7. தாத்தாவும் பேரனும்
  8. மாப்பிள்ளைத் தோழன்

சிலிர்ப்பு, பாயசம், பரதேசி வந்தான், கடன் தீர்ந்தது ஆகியவற்றை தி.ஜா.வின் சிறந்த கதைகளாக நானும் கருதுகிறேன். சிலிர்ப்பில் சிறுவனிடம் தெரியும் உயர்ந்த மானுட நேயம்; கடன் தீர்ந்ததுவில் இருபத்து நாலாயிரம் ரூபாய் மோசடி செய்தவன் மனைவியிடம் இரண்டணா வாங்கிக் கொண்டு அம்மா பராசக்தி ஆணையாக உன் கணவன் கடன் தீர்ந்து போய்விட்டது என்று சொல்லும் உச்சம்; பரதேசி வந்தானில் தெரியும் அறச்சீற்றம்; பாயசத்தை விட எங்கும் அசூயையை இவ்வளவு சிறப்பாகக் காட்டிவிட முடியாது. தவம் என்ற சிறுகதையும் எனக்குப் பிடித்தமானது.

பரதேசியின் சாபம் பற்றி ஜெயமோகன் அமெரிக்கா வந்திருந்தபோது ஒரு அருமையான உரையாற்றினார்.

தீர்மானமும் நல்ல கதை. பால்ய விவாகம். சம்பந்திகளுக்குள் சண்டை. பெண்ணை பிள்ளை வீட்டுக்கு அனுப்ப மறுக்கும் அப்பா. பொறுமையை இழந்த பிள்ளை வீட்டுக்காரர்கள் பெண் வீட்டிற்கு வந்து பத்து பனிரண்டு வயதுப் பெண்ணை இங்க பாரும்மா, நீ வந்தா அழைச்சிக்கிட்டுப் போறோம் என்கிறார்கள். வரவில்லை என்றால் உறவு முடிந்துவிடும் என்று தெரிகிறது. வீட்டில் அப்பா இல்லை. இந்தப் பெண்ணும் கிளம்பிவிடுகிறது. அப்பா திரும்பி வந்து பெண்ணின் தீர்மானத்தைப் புரிந்துகொண்டு சாதத்தையும் அவள் விளையாடும் சோழிப்பெட்டியையும் எடுத்துக் கொண்டு போய் கொடுக்கிறார். தி.ஜா. ஒரு மாஸ்டர்!

கோதாவரிக் குண்டு நல்ல கதைதான். கடன் வாங்கி சொகுசாக மல்லிகைப்பூ வைத்துக் கொண்டு புது சினிமா பார்க்கப் போகும் கங்காபாய் பாத்திரப் படைப்பு நன்றாக இருக்கிறதுதான். ஆனால் என் லிஸ்டில் வராது.

தாத்தாவும் பேரனும் சிறுகதையும் நன்றாகவே இருக்கிறது, ஆனால் என் லிஸ்டில் வராது. ஜாதியைப் பற்றிய அருமையான கதை.

மாப்பிள்ளைத் தோழன் சிறுகதையும் நன்றாகவே இருக்கிறது, ஆனால் என் லிஸ்டில் வராது. எத்தனையோ சிரமங்களுக்கு நடுவே பாட்டு பாடும் அந்த சமையல்காரர் ஒரு உச்சம்தான்.

பாயசம் எஸ்.ரா.வின் நூறு சிறந்த சிறுகதைகள் லிஸ்டிலும் இடம் பெறுகிறது. (எஸ்.ரா. தேர்ந்தெடுத்த இன்னொரு சிறுகதை – பஞ்சத்து ஆண்டி)

காலச்சுவடு பதிப்பகம் பிரபஞ்சன் மூலம் தி.ஜா. வின் சிறந்த சிறுகதைகளை தேர்ந்தெடுத்து அவற்றை சிலிர்ப்பு என்ற தலைப்பில் வெளியிட்டிருக்கிறது. அனேகமாக எல்லா சிறுகதைகளுமே நன்றாகத்தான் இருக்கின்றன என்றாலும் துணை (பென்ஷன் வாங்கப்போகும் மூன்று தலைமுறைக் கிழவர்கள்), சிவப்பு ரிக்ஷா (ஜொள்ளர்களை சமாளிக்கும் அன்றைய புதுமைப்பெண்), தேவர் குதிரை (பெருங்காயப் பாண்டமான தேவரின் குதிரையை பவுண்டில் அடைத்தால்?), சத்தியமா (அருமையான கடைசி வரிகள் – சத்தியமா தரேன் என்று சொல்லிவிட்டதால் தான் விரும்பிய காலண்டரை அடுத்த வீட்டுக் குழந்தைக்குத் தந்துவிடும் சிறுவன்), கோபுர விளக்கு (வேசி செத்ததற்கு கோவில் விளக்கை அணைத்து வைக்கும் மானேஜர்) என்ற கதைகளை குறிப்பிட்டுச் சொல்லுவேன். ஜெயமோகன் தேர்ந்தெடுத்த சிலிர்ப்பு, பாயசம், பரதேசி வந்தான், கோதாவரிக் குண்டு, கடன் தீர்ந்தது ஆகிய கதைகளை பிரபஞ்சனும் தேர்ந்தெடுத்திருக்கிறார்.

நாவல்களில் தி.ஜா. அரைத்த மாவை அரைப்பது போல எனக்கு சில சமயம் தோன்றுகிறது. ஆனால் என் கருத்தில் தி.ஜா. வின் எல்லா சிறுகதைகளுமே படிக்க வேண்டியவைதான்.


கேசவமணி தரும் தகவல்: சிலிர்ப்பு கதை உருவானது எப்படி என்று தி.ஜா.சொல்கிறார்:

என் மகன் ஆறு வயதில் ஒரு விடுமுறைக்கு அவன் தாத்தா வீட்டுக்குப் போயிருந்தான். நான் போய்த் திரும்பி அழைத்து வந்தேன். குணத்தில் எனக்குநேர் விரோதம் அவன். கூப்பிடாததற்கு முன் போய் யாரோடும் பேசிச் சிரித்து, நெடுநாள் சிநேகம் போல ஐக்கியமாகிவிடுகிற சுபாவம். பார்ப்பதற்கும் அப்போது கஷ்கு முஷ்கென்று உருட்டி விட்டாற்போல் இருப்பான். கூடப் பிரயாணம் செய்தவர்களோடு பேசிச் சிரித்துக் களைத்துப்போய் அவன் தூங்கத் தொடங்கினான். ஆரஞ்சுப் பழத்திற்காகக் கத்திவிட்டு, வாங்கிக் கொடுத்ததும் சாப்பிடாமல் தூங்கிவிட்டான். அது கையிலிருந்து உருண்டு ஒரு ஓரமாகக் கிடந்தது. அவ்வளவு கத்தினவன் ஏன் உடனே அதைத் தின்னவில்லை? எனக்கு அப்போது முன்பொருதடவை ரயில் பயணம் செய்தபோது பார்த்த அந்தப் பெண்ணின் ஞாபகம் வந்தது. இந்த இரண்டு படங்களும் எனக்கு அடிக்கடி ஞாபகம் வருவதுண்டு. ஆனால் எழுத வேண்டும் என்று தோன்றவில்லை. சுமார் ஒரு வருடம் கழித்து கலைமகள் தீபாவளி மலருக்காக அழைப்பு வந்தபோது,இந்த இரண்டு படங்களும் இணைந்து கலந்து “சிலிர்ப்பு” என்ற கதையாக உருவாயின. அதை வேகமாக எழுதின ஞாபகம் எனக்கு. கம்ப்யூட்டரில் கொடுத்தது போல இந்த இரு நிகழ்ச்சிகளும் அந்த ஒரு வருஷ காலத்திற்குள் ஒரு கதையை உருவாக்கிவிட்டனவோ என்னவோ! உட்கார்ந்து கதையை எழுதி முடிக்கிற வரையில் என்னால் துயரம் தாங்கமுடியவில்லை. ஒரு அபூர்வமான உணர்ச்சிலயம் அது. உடல், உள்ளமெல்லாம் நிரம்பி அன்று நான் கரைந்து கொண்டிருந்த ஞாபகம். 13 வருஷம் கழிந்தும் இன்னும் தெளிவாக நினைவிருக்கிறது. கடைசி வரிகளை எழுதும்போது ஒரு குழந்தையின் நிர்மலமான அன்பில் திளைக்கும் சிலிர்ப்பும் கசிவும் என்னைக் கரைத்துக் கொண்டிருந்தன. எழுதி முடித்ததும் ஒரு அதிசயமான சுமையிறக்கமும் விடுதலையும் நெஞ்சு கொள்ளாத நிறைவும் என்னை வந்து அணைத்துக்கொண்ட நினைவு இன்னும் எனக்கு இருக்கிறது. “சிலிர்ப்பு’ என்றே பெயர்வைத்துக் கதையை அனுப்பினேன். (எழுதி முடித்த பிறகுதான் தலைப்புக் கொடுக்கிற பழக்கம் எனக்கு.)

தொகுக்கப்பட்ட பக்கம்: தி.ஜா. பக்கம்

தொடர்புடைய பதிவுகள்:
ஜெயமோகனின் சிறுகதை லிஸ்ட்
பரதேசி வந்தான் சிறுகதையைப் பற்றி ஜெயமோகன்
பாயசம் சிறுகதையைப் பற்றி நான்
தி.ஜா.வின் சிறுகதைத் தொகுப்பு – கொட்டுமேளம்

தி. ஜானகிராமனின் “கொட்டுமேளம்”

க.நா.சு. தன் “படித்திருக்கிறீர்களா?” புத்தகத்தில் சிபாரிசு செய்த இன்னொரு புத்தகம். சிறுகதைத் தொகுப்பு. நண்பர் ராஜனிடம் இருந்து இரவல் வாங்கியது. அதில் உள்ள சிறுகதைகளைப் பற்றி.

கொட்டுமேளம்: ஒரு பிழைக்கத் தெரியாத டாக்டர், அவருக்கேற்ற காதலி. நல்ல கதை.
சண்பகப் பூ: அழகான இளம் பெண் விதவையாகி நிற்கிறாள். கணவனின் அண்ணனோடு உறவு என்பதை சொல்லாமல் சொல்கிறார். எழுத்துக் கலை கை வந்தவர்!
ரசிகரும் ரசிகையும்:அருமையாக எழுதப்பட்ட கதை. வித்வான், ரசிகத்தன்மை உள்ள தாசி. திருவையாறு உற்சவம் என்று அவர் போவதே அவளைப் பார்க்கத்தான். சரசமாடும்போது தியாகையரைப் பற்றி வித்வான் கொஞ்சம் மட்டமாக சொல்லிவிட விரட்டிவிடுகிறாள்!
கழுகு: சாகப் போகிறார் என்று ஊரே எதிர்ப்பார்க்கிறது. ஒவ்வொரு முறையும் வேறு யாராவது போகிறார்கள்.
பசி ஆறிற்று:சாமிநாத குருக்கள்-அகிலாண்டம் பொருத்தமில்லாத திருமணம். அகிலா பக்கத்து வீட்டு ராஜத்தை சைட் அடிக்கிறாள். ஆனால் ஒரு தருணத்தில் அவள் மனம் தெளிந்துவிடுகிறது. அந்த ஒரு நிமிஷத்தை அருமையாக எழுதி இருக்கிறார்.
வேண்டாம் பூசணி: வயதான அம்மா, விட்டுப்போன சொந்தங்கள். இன்றும் அதே கதைதானே! நல்ல கதை.
இக்கரைப் பச்சை, அத்துவின் முடிவு: இரண்டிலும் அதே பாத்திரங்கள்தான். முதல் கதையில் அத்து கொழிக்கிறார், கதைசொல்லி வீட்டில் கொஞ்சம் பற்றாக்குறைதான். அத்துவை அவர் மனைவி மதிப்பதில்லை என்று தெரியும்போது இக்கரைப் பச்சை என்று நினைத்துக் கொள்கிறார். இரண்டாவது கதையில் அத்து செத்துக் கொண்டிருக்கிறார். அவர் மனைவி அவரை சீந்துவதில்லை. அத்து இறந்தபிறகு அவரது சொத்தை விட கடன் அதிகம் என்று தெரியவருகிறது.
நானும் எம்டனும்: சின்னப் பையன், மூழ்கும் பையனை காப்பாற்ற தன் உயிரைக் கொடுக்கிறான்.
பொட்டை: குருடான சன்னாசியை உத்தண்டியாரின் தத்துப் பிள்ளை கொஞ்சம் தரக் குறைவாக பொட்டை என்று அழைக்கிறான். அவனை ஒரு பெண்ணோடு கோவிலில் சன்னாசி கையும் களவுமாக பிடிக்கிறான்.
தவம்: செல்லூர் சொர்ணாம்பா புகழ் பெற்ற தாசி. அவளிடம் போக ஆசைப்படும் ஏழை சிங்கப்பூர் சென்று வருஷக்கணக்கில் உழைத்து சம்பாதிக்கிறான். திரும்பும்போது அவள் கிழவி.
சிலிர்ப்பு: ஏழை குழந்தைக்கு கருணை காட்டும் பற்றாக்குறை குடும்பத்தின் சின்னப் பையன். மிக நன்றாக எழுதப்பட்ட கதை.

சிலிர்ப்பு இந்த தொகுப்பின் சிறந்த சிறுகதை. பசி ஆறிற்று, தவம் நல்ல கதைகள். மற்ற கதைகளும் சோடை போகவில்லை.

சிலிர்ப்பு சிறுகதையை ஜெயமோகனும் தி.ஜா.வின் சிறந்த சிறுகதைகளில் ஒன்றாக குறிப்பிடுகிறார். இந்தத் தொகுப்பிலிருந்து வேறு எந்த கதையையும் அவர் குறிப்பிட்டு சொல்லவில்லை. எஸ்.ரா.வும் இந்தத் தொகுப்பிலிருந்து எந்த கதையையும் தேர்ந்தெடுக்கவில்லை.

படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் சிறுகதைகள்

தொடர்புடைய பக்கங்கள்:
க.நா.சு.வின் “படித்திருக்கிறீர்களா?”
தி.ஜா. அறிமுகம்
தி. ஜானகிராமன் + சிட்டி எழுதிய “நடந்தாய் வாழி காவேரி” – சாரதா அறிமுகம் செய்கிறார்