தமிழறிஞர் வரிசை 22: சிதம்பரநாதன் செட்டியார் தேர்வுகள்

(மீள்பதிவு) – முதல் பதிவு 2012 நவம்பரில்

சிதம்பரநாதன் செட்டியார் என்ற பேரை நான் முதல் முதலாகக் கேளிவ்ப்பட்டது 2009-இல் அவரது எழுத்துக்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டபோதுதான். அவர் எழுதிய தமிழ் சிறுகதை: தோற்றமும் வளர்ச்சியும் என்ற சின்னக் கட்டுரையைப் படித்துக் கொண்டிருந்தேன். அவருடைய இரண்டு பட்டியல்கள் கீழே. இவை எல்லாம் ஐம்பதுகளுக்கு முன் வந்த சிறுகதைகள் என்று நினைக்கிறேன். Curiosity value-க்காக மீண்டும் பதித்திருக்கிறேன். யாராவது பழைய நினைப்பைப் பற்றி பேச விரும்பினால் எழுதுங்கள்!

பத்திரிகைகளில் வந்த சிறந்த சிறுகதைகள்:

  1. கணையாழி எழுதிய நொண்டிக் குருவி
  2. ஜெகசிற்பியன் எழுதிய ஜல சமாதி
  3. சோமு எழுதிய கடலும் கரையும்
  4. ஞானாம்பாள் எழுதிய தம்பியும் தமையனும்
  5. கே.ஆர். கோபாலன் எழுதிய அன்னபூரணி
  6. சோமாஸ் எழுதிய அவன் ஆண்மகன்
  7. கௌசிகன் எழுதிய அடுத்த வீடு
  8. எஸ்.டி. ஸ்ரீனிவாசன் எழுதிய கனிவு

பிற மொழிகளில் மொழிபெயர்க்க வேண்டிய தகுதி படைத்த சிறுகதைகள்:

  1. கு.ப.ரா.வின் “காணாமலே காதல்”
  2. புதுமைப்பித்தனின் “வழி”
  3. கல்கியின் “விஷ மந்திரம்”
  4. சுத்தானந்த பாரதியாரின் “கடிகாரச் சங்கிலி”
  5. அகிலனின் “இதயச் சிறையில்”
  6. விந்தனின் “முல்லைக் கொடியாள்”
  7. லட்சுமியின் “வில் வண்டி”
  8. ஜீவாவின் “வேதாந்த கேசரி”
  9. டி.கே. ஸ்ரீனிவாசனின் “துன்பக் கதை”
  10. புஷ்பத்துறை சுப்ரமணியத்தின் “ஜீவசிலை”
  11. கணையாழியின் “நொண்டிக் குருவி”

பாதிப் பேர் யாரென்றே தெரியவில்லை. கல்கி, விந்தன், கு.ப.ரா.வின் சிறுகதைகள் சுமார் என்ற நிலைக்கு மேல் போகாது எல்லாம் வெட்டிக் கதைகள். கொஞ்சம் உருக்கமாக இருந்தால் இவருக்குப் பிடித்துப்போய்விடும் போலிருக்கிறது. இருந்தாலும்

செட்டியார் பெரியார் மன்றோ என்று முன்னாள் ஆங்கிலேய சென்னை கவர்னர் தாமஸ் மன்றோவைப் பற்றி எழுதிய புத்தகம் ஒன்றும் படித்தேன். எனக்குத் தெரியாத விவரங்கள், ஆனால் சுவாரசியமான புத்தகம் என்று சொல்லமாட்டேன். இங்கே வந்த ஆங்கிலேயர் எல்லாம் சுக வாழ்வு வாழ்ந்தார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். தாமஸ் மன்றோ கிழிந்த சட்டையும் அழுக்குத் துணியுமாக சுற்றி இருக்கிறார், சம்பளம் பற்றவில்லையாம்.

செட்டியாரைப் பற்றி மறைந்த சேதுராமன் எழுதிய அறிமுகம் கீழே:

கும்பகோணத்தைச் சேர்ந்த அமிர்தலிங்கம் செட்டியார், பார்வதியம்மாள் தம்பதியினருக்கு, ஏப்ரல் 3, 1907 அன்று பிறந்தவர், செந்தமிழ்க் காவலர் டாக்டர் அ. சிதம்பரநாத செட்டியார். மூன்று சகோதரிகளும், இரண்டு சகோதரர்களும் உடன்பிறந்தவர்களாவர். பள்ளிப் பருவத்தில், கும்பகோணம் பேட்டையிலுள்ள தொடக்கப்பள்ளியிலும், பின்னர் நேடிவ் உயர் நிலைப் பள்ளியிலும் இறுதி வகுப்பு வரை படித்துத் தேறினார். தொடக்கத்திலிருந்தே தமிழையும் ஆங்கிலத்தையும் சம அளவில் கற்று வந்தார் சிதம்பரநாதர். அதன் பின் கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் சேர்ந்தவர் தமது பி.ஏ. வகுப்பில் சிறப்புப் பாடமாகத் தமிழை எடுத்துக் கொண்டார். கல்லூரித் தேர்வில் வெற்றி பெற்றவர் 1928ல் சென்னைப் பல்கலைக் கழக அலுவலகத்திலும், பின்னர் தலைமைச் செயலகத்திலும் எழுத்தராகப் பணியாற்றினார். பணியிலிருக்கும் போதே அரசினர் நடத்திய வருவாய்த் துறைத் தேர்விலும், வரவு செலவு கணக்குத் தேர்விலும் முதலிடம் பெற்றவர். இவரது திறமையை நன்குணர்ந்த அன்றைய அரசு சென்னை அரசாங்க முகமதியக் கல்லூரியில் (அண்ணா சாலையிலுள்ள இன்றைய அரசு கலைக் கல்லூரி) தமிழாசிரியராக நியமித்தது. கல்லூரியில் தமிழ் ஆசிரியராக இருந்த போதே இடை நிலை வகுப்பிற்கு ஆங்கிலத் துணைப்பாடம் நடத்தவும் ஆங்கிலக் கட்டுரை ஏடுகளைத் திருத்தவும் அரசு இவரை நியமித்தது. மூன்று வருஷங்கள் கலைக் கல்லூரியில் பணியாற்றிய பின் பாலக்காடு அரசினர் கல்லூரியில் தமிழாசிரியராகப் பொறுப்பேற்றார்.

1933ல் பெரியநாயகி அம்மையை இவர் மணம் புரிந்து கொண்டார். அம்மையாரும் தமிழ் எழுத்தாளருமன்றி ஓவியக் கலை வல்லுநருமாவார். இவர் வரைந்த அண்ணல் காந்தியடிகளின் ஓவியம் இன்றும் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியை அணிசெய்கிறது.

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் 1933ல் தமிழ் எம்.ஏ. வகுப்பில் சேர்ந்த சிதம்பரநாதர் 35ல் முதலிடத்தில் தேறி, மீண்டும் சென்னை அரசு கலைக் கல்லூரியில் விரிவுரையாளரானார். இவரது புலமையை நன்குணர்ந்த அன்றைய துணைவேந்தர் ஸ்ரீநிவாச சாஸ்திரியார் பல்கலைக் கழகத்திலேயே, நாவலர் சோமசுந்தர பாரதியார் பேராசிரியாக இருந்த தமிழ்த்துறையிலேயே இவரை விரிவுரையாளராக்கினார்.

தமிழகத்தில் தமிழராய்ச்சியில் முதன் முதலாக டாக்டர் பட்டம் பெற்ற தமிழ்ப் பேராசிரியர் சிதம்பரநாதர்தான். பட்டத்திற்கு இவர் ஆராய்ந்தது தமிழ்ச் செய்யுள் இலக்கணம் (Advanced Studies in Tamil Prosody)

ஆங்கிலத்திலும் தமிழிலும் பல ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதியுள்ள சிதம்பரநாதரின் முதல் தமிழ் நூல் இந்திய சரித்திர மாலை (1930) – இவர் சுமார் இருபதுக்கும் மேலாக நூல்கள் எழுதியுள்ளார். சென்னைப் பல்கலைக்கழக வெளியீடான ஆங்கிலம் – தமிழ்ச் சொற்களஞ்சியம் என்ற நூலின் தலைமைப் பதிப்பாசிரியராகப் பொறுப்பேற்று, குறிப்பிட்ட காலத்துக்குள் நூலை வெளியிட்டார். 1958 ஏப்ரல் மாதம் சென்னைச் சட்டசபை மேலவைக்குப் போட்டியிட்டு இரு முறை வென்று உறுப்பினர் ஆனது குறிப்பிடத்தக்கது. சென்னையிலிருந்து வெளிவந்த மாத இதழான “செந்தமிழ்ச் செல்வி”க்கு மதிப்புறு ஆசிரியராகவும் பணியாற்றினார்.

திரு சிதம்பரநாதச் செட்டியார் 22 நவம்பர் 1967ல் மதுரையில் காலமானார். இவர் இறக்கும்போது மதுரைத் தியாகராசர் கல்லூரியில் 1965 முதல் முதல்வராக அரும்பணியாற்றிக் கொண்டிருந்தார்.

இவர் எழுதிய நூல்களின் பட்டியல் வருமாறு:

  1. இந்திய சரித்திர மாலை (1930)
  2. கட்டுரைக் கொத்து (1933)
  3. காக்காய் பிடித்தலும் குருவி பிடித்தலும் (சிற்றிலக்கண நூல் – 1940)
  4. பெரியார் மன்றோ (1941)
  5. Advanced Studies in Tamil Prosody (Doctoral thesis – 1942)
  6. உழைப்பால் உயர்ந்த ஒருவர் (புக்கர் வாஷிங்டன் (1952)
  7. முன்பனிக்காலம் (இலக்கியக் கட்டுரைகள் – 1951)
  8. சிறுகதையும் அதன் வளர்ச்சியும் (1954)
  9. தமிழோசை (1956)
  10. Cilappadikaram the earliest Tamil Epic (1956)
  11. தமிழ் காட்டும் உலகு(இலக்கியக் கட்டுரைகள் – 1957)
  12. வீட்டுத் திருமகள் (கட்டுரைகள் – 1958)
  13. மன்னுயிர்க்கன்பர் (ஆல்பர்ட் சுவைட்சர் – 1958)
  14. Introduction to Tamil Poetry (1958)
  15. சிறுகதைக் களஞ்சியம் (தொகுப்பாசிரியர் – 1959)
  16. Indian Words in English Dictionary (1964)
  17. ஆங்கிலம் தமிழ்ச் சொற்களஞ்சியம் (தலைமைப் பதிப்பாசிரியர்)
  18. மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆயிரந்திரு நாம அர்ச்சனை (1967)
  19. இளங்கோவின் இன்கவி (சிலப்பதிகாரத் திறனாய்வுக் கட்டுரைகள் – 1972)
  20. செங்கோல் வேந்தர் (1977)
  21. தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும் (1977)
  22. ஒத்தெல்லோ (ஆங்கில நாடகத் தமிழ் மொழி பெயர்ப்பு – சாகித்ய அகாதெமிக்காக)
  23. Ancient Tamil Kings – Their High Ideals

(ஆதாரம்: இந்திய இலக்கியச் சிற்பிகள்: அ. சிதம்பரநாதச் செட்டியார் – திரு ந.வேலுசாமி எழுதியது, சாகித்திய அகாதெமி முதல் பதிப்பு – 2005)

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழறிஞர்கள்