விக்ரம்

பல மாதங்களுக்குப் பிறகு அரங்கத்தில் பார்த்த திரைப்படம். ஹேமா பார்க்கலாம் என்று சொன்னதால் முதல் நாளே போய்ப் பார்த்தோம். டிக்கெட் எக்கச்சக்க விலை. எக்கச்சக்கம் என்று தெரிந்ததால் என்ன என்று தெரிந்து கொள்ள கூட விரும்பவில்லை.

வியாழக்கிழமை இரவில் கூட ஓரளவு கூட்டம் இருந்தது. அதிலும் பக்கத்தில் இருந்தவர் அதிதீவிர கமல் ரசிகர் என்று நினைக்கிறேன், அவ்வப்போது கூச்சல் போட்டுக் கொண்டிருந்தார். அது திரைப்படத்தை மேலும் ரசிக்க வைத்தது.

திரைப்படத்தின் சுருக்கத்தை எல்லாம் எழுதி இனி மேல் பார்ப்பவர்களுக்கு ஏற்படக் கூடிய அதிர்ச்சி/மகிழ்ச்சி/ஏமாற்றங்களை குறைக்க விரும்பவில்லை. ஆனால் படம் முழுவதும் நானும் ஹேமாவும் ஏன் இப்படி கொக்கு தலையில் வெண்ணெய் வைக்கிறார்கள் என்று சிரித்துக் கொண்டே இருந்தோம். சில இடங்களில் தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட் ஜெய்சங்கர் படம் பார்ப்பது போல இருந்தது. லாஜிக் எல்லாம் பார்ப்பதாக இருந்தால் தவிர்க்கலாம். ஆனால் எதற்காகப் பார்க்க வேண்டும்? சும்மா ஜாலியாகப் பாருங்கள்!

லாஜிக் அங்கங்கே இடித்தாலும், சில இடங்களில் திரைக்கதை நன்றாகவே அமைக்கப்பட்டிருக்கிறது. விஜய் சேதுபதியின் குடும்பப் பாசம், கமலின் அந்தக் கால சக வீரர்கள் அவருக்குக் கூட்டாளிகளாக அமைவது, அதிலும் டினா என்ற கூட்டாளி சண்டையிடும் காட்சி, கொஞ்சம் மிகைப்படுத்தல் இருந்தாலும் சூரியா வரும் காட்சி, ஃபஹத்திடம் அவரது மனைவி ஒரு வழியாக நீ எங்கே வேலை பார்க்கிறாய் என்று கேட்கும் காட்சி, காலைத் தாக்கும் அந்தக் குள்ளமான வில்லன் என்று சிலவற்றை குறிப்பிட்டு சொல்லலாம்.

கதையின் நாயகன் கமல் அல்லர், ஃபஹத் ஃபாசில்தான். ஃபஹத்தின் பாத்திரத்தில் மிகைகள் உண்டுதான். உதாரணமாக வேலை மும்முரத்தில் திருமணத்தை மறந்துவிடுவதெல்லாம் திரைப்படத்தில்தான் நடக்கும். ஆனால் அவர் நன்றாக நடித்திருக்கிறார்.

கமல் இன்றும் நன்றாக ஆடுகிறார். குறிப்பாக பத்தல பத்தல பாட்டுக்கு சாண்டி மாஸ்டரின் நடன அமைப்பும் சரி, அதற்கு கமல் ஆடி இருப்பதும் சரி, நன்றாகவே இருக்கிறது. கொஞ்சம் “மாஸ்”, அதீத ஹீரோயிச காட்சிகளைக் குறைத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். அனிருத்திற்கு இந்தப் பாட்டு இன்னும் ஒரு பெரிய வெற்றி. ஆனால் போதை மருந்துகளைப் பற்றி இத்தனை வெளிப்படையாகப் பாடுவது எனக்கு கொஞ்சம் உறுத்தலாக இருக்கிறது. சின்னக் குழந்தைகள் பாட்டைத்தான் பாடும். நாளைக்கு ஒரு எட்டு வயதுக் குழந்தை சூப்ப்ர் சிங்கர் ஜூனியரில் வெள்ளைப் பௌடரை மூக்குறிஞ்சுவதைப் பற்றி பாடத்தான் போகிறது.

விஜய் சேதுபதிக்கு பெரிதாக வேலை இல்லை. கமலோடு நடிக்க வேண்டும் என்ற ஆசையால் இந்தப் படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டாரோ என்னவோ. சும்மா தோற்றத்தை வைத்தே ஓட்டிவிடலாம் என்று இயக்குனர் நினைத்திருக்கிறார். ஏறக்குறைய எம்ஜிஆர் படத்து நம்பியார் மாதிரி இருக்கிறது.

ப்ரதீப் சக்தி, குமரவேல், நரேன் ஆகியோருக்கு ஓரளவு நல்ல ஸ்கோப். நன்றாகப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

லாஜிக் எல்லாம் பார்ப்பதில் அர்த்தமில்லைதான். இருந்தாலும் அருள்ராஜை அத்தனை அனாயாசமாக அணுக முடிகிறது, அப்புறம் எதற்காக கடத்திப் போய் கொல்ல வேண்டும்? மண்டபத்திலேயே கொல்ல வேண்டியதுதானே? கடத்தினால்தான் சேஸ் வைக்க முடியும், கமல் 40 பேரை அடித்து நொறுக்குவதாக காட்சி அமைக்க முடியும் என்று இயக்குனர் நினைத்திருக்கிறார். கடைசி சண்டைக் காட்சியில் குமரவேலுக்கு தற்கொலை செய்து கொள்ள ஆசையா, இல்லாவிட்டால் குழந்தையைக் கொன்றுவிட ஆசையா? எதற்காக அப்படி குழந்தையைத் தூக்கிக் கொண்டு வில்லன்களை நோக்கிப் போகிறார்? கடைசி சண்டையில் வி. சேதுபதி மாத்திரையை விழுங்க ஏன் இத்தனை தாமதம் செய்கிறார்? முதலில் மூன்று நிமிஷம் அடி வாங்கின பிறகுதான் “ஊக்க மருந்து” சாப்பிடுவாரா? எதற்காக ஃபஹத் திரும்பி வந்து குழந்தையைக் காட்டுகிறார்? அந்தக் காலத் திரைப்படங்களில் க்ளைமாக்ஸ் காட்சிகளில் நாயகன் குடும்பத்தினர் வலிய வந்து மாட்டிக் கொள்வார்கள், அதைத்தான் நினைவுபடுத்தியது.

நொட்டை சொன்னால் என்ன? படத்தை ஜாலியாகப் பார்க்கலாம். கமல் பல வருஷங்களுக்குப் பிறகு நடித்திருக்கிறார். அவருக்காக வடிவமைக்கப்படும் “அதீதக்” காட்சிகள் குறைவாக இருக்கின்றன. பொதுவாக நடிப்பு நன்றாக இருக்கிறது. பல துணைப் பாத்திரங்கள் வலுவானவை. குறைந்தபட்சம் ஒரு பாட்டாவது ஹிட். பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: திரைப்படங்கள்