தக்காளியின் அரசியல்

(மீள்பதிவு)

இன்று உலகெங்கும் தக்காளி மிக அதிகமாக பயன்படுத்தப்படும் ஒரு காய்கறி. நன்றாகப் பழுத்த தக்காளியின் லேசான இனிப்பும் லேசான புளிப்பும் எல்லாவற்றுக்கும் மேலாக அதன் juicyness-ஐயும் விரும்பாதவர் யார்? காய்ந்த மிளகாயை நன்றாக அரைத்து அதனுடன் தக்காளியை வதக்கி தாளித்து சட்னி செய்தால் – அட அட அதன் சுவையை விவரிக்க நாஞ்சிலால் கூட முடியுமோ என்னவோ தெரியவில்லை. இது சாப்பாட்டுக்கான தளம் இல்லை என்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

barry_estabrookTomatoland பாரி எஸ்டப்ரூக் எழுதிய அபுனைவு. புத்தகம் அவர் நெடுஞ்சாலையில் காரை ஓட்டிச் செல்வதிலிருந்து ஆரம்பிக்கிறது. அவருக்கு முன்னால் ஒரு லாரி, அது நிறைய தக்காளி. திடீரென்று சில தக்காளிகள் லாரியிலிருந்து விழுகின்றன. 70 மைல் வேகத்தில் ஒரு தக்காளி வந்து உங்கள் காரின் முன்பக்கக் கண்ணாடியில் அடித்தால் என்னாகும்? கண்ணாடி முழுவதும் சிவந்த தக்காளிச்சாறு, முன்னால் பார்க்க முடியாமல் விபத்து என்று நினைப்பீர்கள். அதுதான் இல்லை. தக்காளி கான்க்ரீட் சாலையில் அந்த வேகத்தில் விழுந்தாலும் உடைவதில்லை. ஏறக்குறைய ஒரு சிவப்புக் கல் வந்து அடிப்பது போலத்தான் இருக்கிறது.

எஸ்டப்ரூக் வியந்து போகிறார். வீட்டுக்கு வந்து நாலு தக்காளியைத் தரையில் போடுகிறார். வீசி எறிகிறார். தக்காளி உடைவதே இல்லை. (இதைப் படித்துவிட்டு நானும் தக்காளியை கல் தரையில் போட்டுப் பார்த்தேன். உடையவில்லைதான், ஆனால் மெதுவாகத்தான் போட்டேன், எஸ்டப்ரூக் சொன்னதைக் கேட்டு வேகமாக வீசி எறிந்து அது தப்பித் தவறி உடைந்து போனால் வீட்டம்மாவிடம் யார் பேச்சு வாங்குவது?)

இன்று அமெரிக்காவில் – குறிப்பாக ஃப்ளோரிடாவில் விளையும் தக்காளிகள் அப்படி மாற்றப்பட்டிருக்கின்றன. மரபணுவிலேயே மாற்றம், கடினத்தோல் உடைய தக்காளியுடன் ஒட்டு என்று பல விதமாக இது நடந்திருக்கிறது. ஃப்ளோரிடாவின் தக்காளி வியாபாரிகள் சங்கம் அங்கிருந்து விற்பனைக்குப் போகும் ஒவ்வொரு தக்காளியும் இந்த அளவு கடினத்தோல், இந்த மாதிரி வடிவம் உள்ளவையாக இருக்க வேண்டும் என்று பல குணங்களை strict ஆக கடைப்பிடிக்கிறது.

ஆஹா ஓஹோ அமெரிக்கான்னா அமெரிக்காதான், என்ன மாதிரி தரக்கட்டுப்பாடு என்பவர்கள் அடுத்த பாராக்களை கட்டாயமாகப் படிக்க வேண்டும்.

தக்காளிக்கான விவசாயக் கூலிகள் அனேகமாக மெக்சிகோக்காரர்கள். அவர்கள் பல இடங்களில் கொத்தடிமைகளாகத்தான் நடத்தப்படுகிறார்கள். பரதேசி படத்தில் வரும் கொத்தடிமைகளுக்கும் இந்தக் கூலிகளுக்கும் வித்தியாசமே இல்லை. வன்முறை கொஞ்சம் குறைவாக இருக்கிறது, அவ்வளவுதான். தப்பிக்க முடியாது. வரும் பணம் இருக்கும் இடத்துக்கும் சாப்பாட்டுக்குமே சரியாகப் போய்விடும். தக்காளி விவசாயம் இன்று அனேகமாக பெரிய நிறுவனங்கள் கையில். அவர்கள் மேஸ்திரிகளை வைத்து விவசாயம் செய்கிறார்கள். இருக்கும் இடம், சாப்பாடு இரண்டையும் தருவது மேஸ்திரிதான். கொடுமையான விஷம் உள்ள பூச்சி மருந்தை கையால் தெளிப்பது என்பதெல்லாம் சர்வசாதாரணம். இப்படி விஷத்தோடு நேரடி தொடர்பு இருப்பதால் குறையுள்ள குழந்தைகள் பிறந்து அது பெரிய வழக்காகி இருக்கிறது.

எஸ்டப்ரூக் சொல்லும் இரண்டாவது விஷயம் – சுவை. இந்தத் தக்காளிகளில் சுவையே இருப்பதில்லை. நான் பெரிதாக இதையெல்லாம் கவனிப்பவன் இல்லை. ஆனால் கடைசியாக எப்போது ரசத்தில் அட தக்காளி இத்தனை சுவையாக இருக்கிறதே என்று சாப்பிட்டு பல மாதங்களாகிறது. தக்காளி அரைக்கப்பட்டால்தான் கொஞ்சமாவது ருசி தெரிகிறது. சுவையை விதி விதித்து கட்டுப்படுத்த முடியாது, வடிவம், தோல் பற்றி கவலைப்படாமல் தக்காளி விவசாயம் செய்யும் சிறு விவசாயிகளிடம்தான் சுவையான தக்காளி கிடைக்கிறது என்கிறார்.

மூன்றாவதாக அவர் சொல்வது தக்காளியின் பல வகைகள் காணாமல் போய்க் கொண்டிருப்பது. இப்படி ஒரேயடியாக சீரான தக்காளி என்று போனால காட்டுத் தக்காளியின் பல வகைகள் காணாமல் போய்விடுகின்றன. ஒட்டு விவசாயம் நடப்பது எதிர்காலத்தில் கஷ்டம். பல கல்லூரிகள் இன்று இந்தக் காட்டுத் தக்காளியின் விதைகளை சேகரித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் அதற்கெல்லாம் பணம் வருவது பெரிய நிறுவனங்கள் மூலம்தான், நாளை ஒரு தென்னமெரிக்க விவசாயி அவன் வீட்டு பக்கத்திலுள்ள மலையில் விளைந்து கொண்டிருந்த தக்காளி விதையை இந்தப் பெரிய நிறுவனங்கள் தயவு வைத்தால்தான் பெறக் கூடிய நிலை உண்டாகலாம்.

இந்தியத் தக்காளிகளின் நிலை எப்படி? யாருக்காவது தைரியம் இருந்தால் கீழே போட்டு உடைகிறதா என்று பாருங்கள்!

இது தக்காளியின் அரசியல் மட்டுமல்ல, அமெரிக்காவின் விவசாயக் கூலிகளின் அரசியல்; விவசாயம் பெரிய நிறுவனங்கள் கையில் போய்க் கொண்டிருப்பதின் அரசியல். படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: அபுனைவுகள்

இந்திய விடுதலையின்போது இங்கிலாந்தின் பிரதமராக இருந்த அட்லி

க்ளமெண்ட் அட்லி 1945-1951 வரை இங்கிலாந்தின் பிரதமராக இருந்தவர். இங்கிலாந்தின் சிறந்த பிரதமர்களில் ஒருவர் என்று கருதப்படுகிறார். இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் துணைப் பிரதமராக இருந்தவர். அவர் லேபர் கட்சித் தலைவர், பொதுவாக லேபர் கட்சியினர் காலனிய ஆதிக்கம் தவறு என்று நினைப்பவர்கள். அட்லியும் அதற்கு விதிவிலக்கல்ல. இந்தியாவிற்கு விடுதலை தந்தே ஆக வேண்டும் என்று கருதினார் என்று எனக்கு ஒரு பிம்பம் இருந்தது. அவரது சுயசரிதை அதை ஓரளவு உறுதிப்படுத்துகிறது. To put it uncharitably, தான் பிரதமரானதும் இந்தியாவை எத்தனை சீக்கிரம் முடியுமோ அத்தனை சீக்கிரம் கைகழுவிவிட வேண்டும் என்று கருதினார் என்றும் சொல்லலாம்.

அட்லியின் சுயசரிதையைப் – As It Happened – படிக்கும்போது நான் வியந்த விஷயம், என் takeaway, ஒன்றுதான். இந்தியா ஆங்கிலேயருக்கு ஒரு பொருட்டே அல்ல என்று தெரிகிறது. 250-300 பக்க சுயசரிதையில் காந்தி ஒரு முறை மட்டுமே குறிப்பிடப்படுகிறார். இத்தனைக்கும் அட்லி 1920களிலிருந்து அரசியலில் ஈடுபட்டிருக்கிறார். 1927-இன் சைமன் கமிஷனின் உறுப்பினராக இந்தியா வந்திருக்கிறார். அவர் துணைப் பிரதமராக இருந்த காலகட்டத்தில், 1942-இன் Quit India இயக்கம், 1943-இன் பெரும் பஞ்சம் போன்றவை கூட அவர் கண்ணில் படவில்லை. நேரு அவர் கண்ணில் காமன்வெல்த் நாடு ஒன்றின் பிரதமராக ஆன பிறகுதான் அவருக்கு தென்பட்டிருக்கிறார். படித்த, மேல்தட்டு குடும்பத்தை சேர்ந்த, இடதுசாரி சார்புடைய, காலனிய ஆதிக்கத்தை தவறு என்று நினைக்கும், சைமன் கமிஷனுக்காக இந்தியாவிற்கு சுற்றிப் பார்க்க வந்த லேபர் கட்சி தலைவருக்கு துணைப்பிரதமராகவும் பிரதமராகவும் இருந்த காலத்தில் கூட இந்தியாவைப் பற்றிய பிரக்ஞை இவ்வளவுதான் என்றால் சாதாரண ஆங்கிலேயனுக்கு என்ன அக்கறை இருந்திருக்கும்?

அட்லி இளமையிலேயே இடதுசாரி சார்பு நிலை எடுத்திருக்கிறார். அப்போதுதான் ஆரம்பித்திருந்த லேபர் கட்சியில் சேர்ந்திருக்கிறார். மெதுமெதுவாக கட்சியில் வளர்ந்திருக்கிறார். கட்சி பலம் பெறுவதில் வழக்கமான பிரச்சினைகள். அவற்றை தாண்டி கட்சியின் தலைவராக பரிணமித்திருக்கிறார். சர்ச்சில் எல்லா கட்சிகளையும் சேர்த்து இரண்டாம் உலகப் போரில் தேசிய அரசை அமைத்தபோது துணைப் பிரதமராக இருந்திருக்கிறார். உலகப்போரிற்கு பிறகு நடந்த தேர்தலில் சர்ச்சிலை தோற்கடித்து பிரதமராகி இருக்கிறார். வெற்றிக்கு பெரும் விலை கொடுத்த இங்கிலாந்தை மீட்பதில் பெரும் பங்கு வகித்திருக்கிறார்.

சர்ச்சிலின் தலைமைப் பண்புகளை விதந்தோதுகிறார். போர்க்காலத்தில் அவரை விட சிறந்த தலைவர் இருந்திருக்க முடியாது என்று கருதுகிறார்.

இந்தப் புத்தகத்தை நான் எல்லாருக்கும் பரிந்துரைக்கமாட்டேன். ஆனால் காந்தியும் காங்கிரசும் ஆங்கிலேயர்களுக்க் பெரும் தலைவலியாக இருந்தார்கள் என்ற பிம்பத்தை இது உடைக்கிறது. எங்கேயோ தொலைதூரத்துப் பிரச்சினை என்றுதான் சராசரி ஆங்கிலேயன் கருதி இருப்பான் என்று தெளிவாகத் தெரிகிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: அபுனைவுகள்

சுவாரசியமான கட்டுரை

ராபர்ட் காரோ முன்னாள் அமெரிக்க அதிபர் லிண்டன் ஜான்சன் பற்றி சிறந்த புத்தகங்களை (Master of the Senate, Passage to Power) எழுதியவர். குறிப்பாக ‘Passage to Power’ மிகச் சிறப்பான புத்தகம். புத்தகங்களை எழுத கடுமையாக உழைப்பவர், தரவுகளை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து மேய்ந்துவிடுவார்.

இந்தக் கட்டுரையில் தனக்கு இந்தப் பழக்கம் எப்படி வந்தது என்பதையும் ஜான்சனின் அதிகாரக் கைப்பற்றலில் ஒரு முக்கியமான படிக்கல்லையும் விவரிக்கிறார். ஜூனியர் காங்கிரஸ்மான் ஜான்சன் திடீரென்று – கிட்டத்தட்ட ஒரு மாத காலத்துக்குள் – ஒரு அதிகார மையமாக மாறிவிடுகிறார். ஒரே மாத அவகாசத்தில் இது நடந்திருக்கிறது என்பதைக் கண்டுபிடிப்பதே பெரும்பாடாக இருக்கிறது. ஏன், எப்படி இது நடந்தது என்பதை விடாமல தேடிப் பிடித்து கண்டுபிடித்திருக்கிறார்.

சுவாரசியமான கட்டுரை, படியுங்கள் என்று பரிந்திரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: அபுனைவுகள்

தொடர்புடைய சுட்டிகள்: Master of the Senate, Passage to Power

யூக்ளிடின் ஜன்னல் (Euclid’s Window)

(மீள்பதிப்பு, மூலப்பதிப்பு அக்டோபர் 12, 2010-இல்)

லியனார்ட் ம்ளோடினோ (Leonard Mlodinow) அறிவியல் கருத்துக்களை அறிவியலில் வலுவான அடிப்படை இல்லாதவர்களும் சுலபமாகப் புரிந்து கொள்வதற்காக புத்தகங்கள் எழுதுபவர். இந்தத் துறையில் தமிழில் மிகச் சிறப்பாக எழுதியவர் சுஜாதாதான். ஒரு காலத்தில் பெ.நா. அப்புசாமி எழுதிய புத்தகங்களைப் படித்து எனக்கு அறிவியலில் ஆர்வம் ஏற்பட்டது/பெருகியது. இன்று யாராவது முயற்சிக்கிறார்களா என்று கூடத் தெரியவில்லை.

இந்தப் புத்தகம் வடிவகணிதத்தின் (geometry) அடிப்படைகளை விளக்குகிறது. வடிவகணிதம் என்றால் ஓடுபவர்கள் கூடப் புரட்டிப் பார்க்கலாம். அத்தனை தெளிவாக எழுதப்பட்டது.

யூக்ளிட் என்ற மனிதரைப் பற்றி நமக்கு எதுவும் தெரியாது. அவர் ஆண் என்பது கூட வெறும் யூகம்தான் என்று நினைக்கிறேன். ஆனால் அவர் எழுதிய Elements புத்தகம்தான் ஐரோப்பிய அறிவியலின் மூல நூல். கணிதத்தின் இன்றைய rigor – அதாவது மிக தெளிவாக தேற்றங்களை (theorems) நிரூபிப்பது – பல நூற்றாண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட இந்த புத்தகத்தில் இருப்பது பெரிய அதிசயம். (இந்திய கணிதத்தில் பொதுவாக இந்த rigor குறைவு)

Elements புத்தகம் இப்படி ஆரம்பிக்கிறது. புள்ளி (point) என்றால் என்ன, கோடு (line) என்றால் என்ன மாதிரி சில வரையறைகள் (definitions), நிரூபிக்கத் தேவை இல்லாத சில அடிப்படை முடிவுகள் (postulates) – இரண்டு புள்ளிகளை ஒரு கோட்டால் இணைக்கலாம் மாதிரி – தெளிவாக வைக்கப்படுகின்றன. பிறகு இந்த முன் முடிவுகளின் அடிப்படையில் சில தேற்றங்கள், அந்த தேற்றங்களின் வைத்து வேறு சில தேற்றங்கள் என்று போகிறது. வீடு கட்டும்போது அஸ்திவாரம், பிறகு வீடு, பிறகு முதல் மாடி என்று போவதில்லையா? அந்த மாதிரி.

இந்த அடிப்படை முடிவுகளில் ஐந்தாவது அடிப்படை – the famous fifth postulate – ஒரு தேற்றமாக இருக்க வேண்டும் என்று ரொம்ப நாளாக எல்லாருக்கும் ஒரு நினைப்பு இருந்தது. அதை ஆங்கிலத்திலேயே தருகிறேன். – Given any straight line and a point not on it, there “exists one and only one straight line which passes” through that point and never intersects the first line, no matter how far they are extended. தமிழில் சொன்னால்: ஒரு கோடு, அந்த கோட்டில் இல்லாத ஒரு புள்ளி. அந்த புள்ளியின் மூலம் முதல் கோட்டை வெட்டாத ஒரே ஒரு கோடுதான் வரைய முடியும். இன்னும் சுலபமாக சொன்னால் ஒரு கோடு, ஒரு புள்ளி. அந்த புள்ளியின் மூலம் ஒரே ஒரு இணைகோடுதான் (parallel line) வரைய முடியும்.

ஆனால் parallel என்றால் என்ன? நம் எல்லாருக்கும் இது புரிகிறது, ஆனால் கணிதத்தில் இதை எப்படி சொல்வது? அதைத்தான் “வெட்டாத ஒரு கோடு” என்கிறார். நீங்கள் ஒரு காகிதத்தில் ஒரு கோட்டை வரைந்து, கொஞ்சம் தள்ளி ஒரு புள்ளியை வைத்தால் அட ஆமாம், இந்தப் புள்ளியை உள்ளடக்கி ஒரே ஒரு இணைகோடுதான் வரைய முடியும் என்று சொல்வீர்கள்.

பல நூற்றாண்டுகளாக கணித வல்லுனர்கள் பலருக்கும் இது அடிப்படை முன்முடிவாக இருக்க வேண்டாம், இது நிரூபிக்கக் கூடிய தேற்றம்தான் என்று தோன்றிக் கொண்டே இருந்தது. இதைத் தேற்றமாக நிரூபிக்க பலரும் படாத பாடுபட்டனர். ஆனால் பப்பு வேகவில்லை. ஏனென்றால் இது சில வடிவகணிதத்தில்தான் பொருந்தும்! காகிதத்துக்கு பதிலாக ஒரு பந்தில் ஒரு “கோடு” போடுங்கள். இந்த கோடு உண்மையில் ஒரு வட்டம் – பந்தை சுற்றி வந்து ஆரம்பித்த இடத்திலேயே முடியும் இல்லையா? இதை வெட்டாத இன்னொரு “கோடு”, ஆனால் பார்த்தாலே இணையாக ஆக இல்லாத கோடு வரைய முடியாதா? இந்த படத்தில் இருக்கும் சிவப்பு “கோடும்” பச்சை “கோடும்” இணையானவை என்று நாம் சொல்ல மாட்டோம். ஆனால் அவை ஒன்றை ஒன்று வெட்டுவதில்லை!

ஒன்றும் புரியவில்லை என்றால் கவலைப்படாதீர்கள். என்னை விட ம்ளோடினோ நன்றாக எழுதி இருக்கிறார், அது புரிந்துவிடும். கணிதம் எவ்வளவு சுவாரசியமானது என்பதை இந்த புத்தகத்தை படித்தால் புரிந்து கொள்ளலாம். இப்படிப்பட்ட வடிவகணிதத்தை அடிப்படையாக வைத்துதான் ஐன்ஸ்டீன் தன் ரிலேடிவிட்டி தியரியை உருவாக்க முடிந்தது என்று நினைவு வைத்துக் கொள்ளுங்கள்!

பின்குறிப்பு: பி.ஏ. கிருஷ்ணன் இந்தப் புத்தகத்தைப் பற்றி ஒரு நல்ல அறிமுகத்தை எழுதி இருக்கிறார் – அ. முத்துலிங்கம் தொகுத்த கடிகாரம் அமைதியாக எண்ணிக் கொண்டிருக்கிறது என்ற புத்தகத்தில் படிக்கலாம்.

பின்பின்குறிப்பு: கணிதம், வடிவகணிதம், இணைகோடு என்பதற்கெல்லாம் இன்னும் நல்ல தமிழ் வார்த்தைகள் இருக்கின்றனவா? எனக்கு வடமொழி வார்த்தைகளில் எந்தப் பிரச்சினையும் இல்லை, (இணைகோடு வடமொழி இல்லை என்றுதான் நினைக்கிறேன்) ஆனால் நல்ல தமிழ் வார்த்தையாக இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும், பழக்கத்தில் இருக்கும் வார்த்தையாக இருந்தால் உத்தமம். கணிதம், வடிவகணிதம் என்பதெல்லாம் பழக்கத்தில் இருக்கும் வார்த்தைகள் என்று தோன்றவில்லை.

தொகுக்கப்பட்ட பக்கம்: கணிதம்

தொடர்புடைய சுட்டிகள்:
கடிகாரம் அமைதியாக எண்ணிக் கொண்டிருக்கிறது தொகுப்பு பற்றி அ. முத்துலிங்கம்
கடிகாரம் அமைதியாக எண்ணிக் கொண்டிருக்கிறது புத்தகம் வாங்க

ட்ரம்ப் வென்றது எப்படி? – காதரின் ஈடின் எழுதிய ‘$2.00 A Day’

kathryn_edinஅமெரிக்கா பணக்கார நாடு என்றுதான் உலகம் முழுவதும் இருந்து இங்கே குடியேறிவிட ஆசைப்படுகிறோம். ஆனால் அமெரிக்காவில் ஏழ்மை என்பது அதிசயம் அல்ல.

காதரின் ஈடின் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக்ப் பேராசிரியர். அவரது கணக்குப்படி பதினைந்து லட்சம் குடும்பங்கள் அமெரிக்காவில் படு பயங்கர ஏழ்மையில் வாடுகின்றன. (அமெரிக்காவில் குத்துமதிப்பாக பத்து கோடி குடும்பங்கள் இருக்கின்றன, முப்பத்து கோடி மக்கள் தொகை). ஒரு நாளைக்கு இரண்டு டாலர் வருமானம் இருந்தால் அதிகம். பலருக்கு ஆனால் இருக்க வீடு உண்டு. நகரங்களில் குடியிருப்பவர்களை வெளியேற்றுவது சிரமம். Rent Control உங்களுக்கு ஓரளவு பாதுகாப்பு தரும். ஆனால் தங்க இடம் இல்லாவிட்டால் பெரும் கஷ்டம். சாப்பாட்டுக்கு Food Stamps-ஐ அரசு தருகிறது. (இதை வைத்து உணவுப் பொருட்களை மட்டும் பெற்றுக் கொள்ளலாம்.) ஆனால் காசு இல்லாமல் வாழ்ந்துவிட முடியுமா? வீட்டுக்கு மின்சாரத்துக்கு, அலைபேசிக்கு, பஸ்ஸுக்கு பணம் இல்லாமல் வேலை தேட முடியுமா? அதிலும் இந்தக் குடும்பங்களில் அனேகருக்கு குழந்தைகள் உண்டு. அவர்களுக்கு ஷூ வாங்க வேண்டாமா?

ஈடின் இவர்களைப் பற்றி ஆய்வு செய்திருக்கிறார். இவர்களுக்கு வேலை செய்ய விருப்பம் இருந்தும் வாய்ப்புகள் இல்லை என்கிறார். அதுவும் டெக்னாலஜி வளர வளர ஆரம்ப நிலை வேலைகள் கிடைப்பது கஷ்டமாகிக் கொண்டே போகிறது. ஒரு காலத்தில் கிடைத்த தொழிற்சாலை வேலைகள் இப்போது கிடைப்பதில்லை. இவர்கள் எப்படித்தான் வாழ்க்கையை நடத்துகிறார்கள்?

Food Stamps-ஐ விற்பது சட்ட விரோதம், ஆனால் விற்கிறார்கள். ரத்தத்தை விற்கிறார்கள். உடலை விற்கிறார்கள். தெருவில் குப்பைகளைப் பொறுக்குகிறார்கள். ஒரு பெண் தினமும் காலை உணவுக்காக மக்டோனல்ட்ஸில் காஃபி சாப்பிடுகிறாள், அதில் ஆறு ஸ்பூன் சர்க்கரை போட்டுக் கொள்வாள். பண்டமாற்று செய்துகொள்கிறார்கள். ஒவ்வொரு நாளும் போராட்டம்தான்.

அரசு ஒரு காலத்தில் கொஞ்சம் பணம் கொடுத்தது. இப்போது பணம் கொடுப்பதில் பல கட்டுப்பாடுகள், அனேகருக்கு பணம் கிடைப்பதில்லை. அதுவும் ரிபப்ளிகன் அரசு அமைந்தால் இது மேலும் சிரமம். வேலை தேடிக் கொள்ள வேண்டும் என்று அழுத்தம் தருகிறது. ஆனால் கொஞ்சமாவது காசு இல்லாமல் – பஸ்ஸுக்கும் அலைபேசிக்கும் காசு இல்லாமல் – இந்த நாட்களில் வேலை கிடைப்பது மகா கஷ்டம்.

ஈடின் இந்தப் புத்தகத்தை anecdotes-களால் நிரப்பி இருக்கிறார். ஒவ்வொரு சம்பவமும் நம்மை உச்சுக் கொட்ட வைக்கிறது. ஆனால் இது எத்தனை பெரிய பிரச்சினை என்று தெரியவில்லை. சான் ஃப்ரான்சிஸ்கோவில் நான் அலுவலகத்துக்கு நடக்கும் ஒரு மைல் தூரத்தில் பத்து வீடற்ற, நடைபாதைவாசிகளைப் பார்க்கலாம். மழை கொட்டும் நாட்களில் மனம் வருந்தத்தான் செய்யும், ஆனால் இது எத்தனை பெரிய பிரச்சினை, சான் ஃப்ரான்சிஸ்கோவில் இப்படி எத்தனை நடைபாதைவாசிகள் இருக்கிறார்கள், நூறு பேரா, ஆயிரம் பேரா, பத்தாயிரம் பேரா என்று தெரிவதில்லை. அவர் கொடுக்கும் data பதினைந்து லட்சம் குடும்பம் என்பதுதான். அது அமெரிக்க ஜனத்தொகையில் ஒரு சதவிகிதம், ஒன்றரை சதவிகிதம் இருக்கலாம். அது உண்மையாக இருந்தால் அமெரிக்க சூழலில் இது பெரிய பிரச்சினைதான்.

நான் வாழும் கலிஃபோர்னியா பகுதியில் ட்ரம்ப் வெல்ல வாய்ப்பே இல்லை என்றுதான் எல்லாரும் நினைத்தோம். ஆனால் எங்களுக்கு இப்படிப்பட்ட அமெரிக்கா பழக்கமே இல்லை. இந்த ஏழைகள்தான் ஹில்லரி க்ளிண்டன் வேண்டவே வேண்டாம், நல்ல மாற்றமோ இல்லையோ ட்ரம்ப் மாற்றத்தைக் கொண்டு வருவார் என்று நினைத்து அவருக்கு ஓட்டுப் போட்டிருக்க வேண்டும்…

படிக்கலாம். அமெரிக்காவின் இருண்ட பக்கங்களைப் பற்றி கொஞ்சம் புரிகிறது. ஆனால் படித்தே ஆக வேண்டிய புத்தகம் இல்லை.

தொகுக்கப்பட்ட பக்கம்: அபுனைவுகள்

டா-நெஹிசி கோட்ஸ் எழுதிய Between the World and Me

ta_nehisi_coatesBetween the World and Me 2015-இல் எழுதப்பட்டது. நியூ யார்க் டைம்ஸ் அந்தப் புத்தகத்தை 2015-இன் பத்து சிறந்த புத்தகங்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுத்திருந்தது. ஆனால் நான் இந்தப் புத்தகத்தைப் படிக்கக் காரணம் நியூ யார்க் டைம்சின் பரிந்துரை அல்ல, என் மகள் ஸ்ரேயாதான் காரணம்.

ஸ்ரேயா இளைஞி. அவளுக்கு சமூக அநீதிகளைக் காணும்போது கடுங்கோபம் வருகிறது. இந்தப் புத்தகத்தைப் படிக்க வேண்டும் என்று பேச்சுவாக்கில் ஒரு நாள் சொன்னாள், அவளுக்கு முன்பாக நான் படித்துவிட்டேன்!

American Dream என்பதைத்தான் அமெரிக்கப் பண்பாட்டின் அடிப்படை என்றே சொல்லலாம். உன் உழைப்பால் நீ முன்னேறலாம், நீ அடையும் வெற்றிக்கும் தோல்விக்கும் நீயே முழுக் காரணம், அனைவருக்கும் வாய்ப்பு இருக்க வேண்டும் என்பதுதான் அமெரிக்க அரசாங்கத்தின் ஒரே தார்மீகத் தேவை என்று சுருக்கமாகச் சொல்லலாம். இன்னும் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’, அவ்வளவுதான். ஆனால் அமெரிக்காவின் வெற்றி செவ்விந்தியர்களை ஏமாற்றி, கறுப்பர்களை ஒடுக்கி அடையப்பட்டது. நியாயமாகவே எல்லாம் நடந்திருந்தால் அமெரிக்காவின் வளர்ச்சி இவ்வளவு பெரிதாகக் இருந்திருக்காது.

கோட்ஸ் முன்வைப்பது அமெரிக்கக் கனவின் அடிப்படை முரணை. அமெரிக்கக் கனவு என்பது அனேகக் கறுப்பர்களுக்கு எட்டாக் கனவுதான். ஒவ்வொரு தாயும் தகப்பனும் தன் குழந்தைகளுக்கு நல்ல கல்வி, அடிப்படை வசதிகள் வேண்டுமென்றுதான் முயற்சிக்கிறார்கள். ஆனால் கறுப்பர்களுக்கு – குறிப்பாக நகர்ப்புறங்களில், குற்றச் சூழலில் வாழும் ஏழைக் கறுப்பர்களுக்கு – அந்தக் கனவை அடைவதில் இன்னும் பல நடைமுறைச் சிரமங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அவர்களின் நிறம் அவர்களுக்கு (ஏன் பல மாநிலங்களில் பழுப்பு நிற இந்தியர்களுக்குக் கூடத்தான்) பலவீனமாகத்தான் இருக்கிறது. வன்முறை கறுப்பர்களின் வாழ்வில் சகஜமாக இருக்கிறது. இந்த அடிப்படை முரணைத்தான் கோட்ஸ் மேலும் மேலும் வலியுறுத்திச் சொல்கிறார்.

இந்தப் புத்தகம் கோட்ஸ் தன் பதின்ம வயது மகனுக்கு எழுதும் கடிதங்கள் வடிவில் அமைந்திருக்கிறது. அந்தக் கடிதங்களை வடிவமைத்திருப்பதில் கோட்சின் எழுத்துத் திறமை வெளிப்படுகிறது. பல இடங்களில் இவர் சொல்வது நியாயம்தானே என்று தோன்றத்தான் செய்கிறது.

உண்மையை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும், நான் இந்தப் புத்தகத்தை பெரிதாக ரசிக்கவில்லை. கோட்சின் அடிப்படைக் கருத்து – அமெரிக்காவில் வெள்ளையர்களின் மேலாதிக்கம் ஒரு நாளும் மாறாது, அதனால் கறுப்பர்கள் எல்லாருக்கும் எதுவும் எப்போதும் நடக்கலாம் – எனக்கு ஏற்புடையதல்ல. என் வாழ்நாளிலேயே அபிராமணர்கள் என் உறவினர் வீடுகளில் நடத்தப்படும் விதத்தில் மாற்றங்களைப் பார்த்திருக்கிறேன். அபிராமணர்கள் தண்ணீரை சீப்பிக் குடிக்காமல் தூக்கியே குடித்தாலும் அந்த டம்ளர் தனியாக கழுவி வைக்கப்படுவது ஒரு காலத்தில் என் உறவினர்கள் வீட்டில் சகஜமாக நடந்தது. வீட்டுக்கு வருபவன் என்ன ஜாதி என்று தெரிந்து கொள்ள ஆர்வம் இருக்கும். இன்றோ பெரிதாக யாருக்கும் இதிலெல்லாம் அக்கறையில்லை. (அதற்காக வேற்று ஜாதிப் பெண்ணோடு திருமணம் என்றால் சுலபமாக ஒத்துக் கொண்டுவிடுவார்கள் என்பதில்லை.) எதுவுமே மாறாது என்றால் வாழ்வதிலேயே பொருளில்லை. மாற்றங்கள் வர நிறைய காலம் எடுக்கிறது என்பது மனதைத் தளர வைக்கக் கூடிய விஷயம்தான், ஆனால் அதற்காக எதுவும் நடக்காது என்று சோர்வடைவதில் அர்த்தமில்லை. ஒரு வேளை நான் கறுப்பனாக இருந்திருந்தால் எனக்கு வேறு விதமாகத் தோன்றி இருக்குமோ என்னவோ.

தொகுக்கப்பட்ட பக்கம்: அபுனைவுகள்

Phillipe Petit எழுதிய ‘A Walk in the Clouds’

philippe_petit_tightrope_mid-xlargeநியூ யார்க் நகரத்தின் இரட்டை கோபுரம் 2011-இல் அல் கேடா பயங்கரவாதிகளால் தகர்க்கப்பட்டதை யாரும் மறந்திருக்க முடியாது. ஆனால் அது எப்போது கட்டப்பட்டது என்று தெரியுமா? 1975-இல்தான். கட்டிடம் எழுந்த காலத்தில் நடந்த உண்மைச் சம்பவம் இது. ஃபிலிப் பெடி தன் சாகசங்களை விவரிக்கிறார். (மோர்டிகாய் கெர்ஸ்டைன் ஒரு சிறுவர் புத்தகமாகவும் (Man Who Walked Between the Towers) இந்தச் சம்பவத்தை எழுதி இருக்கிறார்)

ஃபிலிப் பெடி ஃப்ரான்ஸ் நாட்டை சேர்ந்தவர். சிறு வயதிலிருந்தே சர்க்கஸ் சாகசங்களில் ஈடுபாடு. குறிப்பாக கயிற்றின் மேல் நடப்பதில் ஈடுபாடு. பொதுவாக சர்க்கஸில் நடப்பவர்களுக்கு கீழே ஒரு வலைப்பின்னல் இருக்கும். விழுந்தால் பலத்த அடிபடாது, உயிருக்கு அபாயம் இல்லை. ஆனால் இவருக்கு உயரமான இடங்களில் கயிற்றைக் கட்டி எந்த வித பாதுகாப்பும் இல்லாமல் அதன் மேல் நடக்க வேண்டும் என்பதுதான் வாழ்வின் லட்சியமே. அப்படி நடக்கும்போது விபத்து ஏற்பட்டால் யார் பொறுப்பேற்பது? அதனால் அதிகாரபூர்வமாக அப்படி செய்ய இவருக்கு அனுமதி கிடைக்காது.

phillip_petit_notre_dameபல நாள் திட்டமிட்டிருக்கிறார். பிறகு ஒரு நாள் இரவு நண்பர்களின் உதவியோடு பாரிஸ் நோட் ரே தாம் சர்ச்சின் இரட்டை கோபுரங்களின் நடுவே ஒரு கயிற்றைக் கட்டி இருக்கிறார். அடுத்த நாள் காலை பாரிஸ் மக்கள் ஆவென்று பார்க்க, அந்த கயிற்றின் மீது நடை. அதற்காக (சின்ன அளவில்) தண்டனையும் கிடைத்திருக்கிறது.

ஒரு நாள் பல் வலி. மருத்துவரைப் பார்க்கப் போயிருக்கிறார். அங்கே ஒரு பத்திரிகை கிடந்திருக்கிறது. வலியை மறக்க பத்திரிகையைப் புரட்டும்போது நியூ யார்க் நகரில் இரட்டை கோபுரங்கள் கட்டப்படுவதைப் பற்றி படித்திருக்கிறார். யாருக்கும் தெரியாமல் அந்தக் கட்டுரையைக் கிழித்துக் கொண்டு வந்துவிட்டார். அன்றிலிருந்து இரட்டைக் கோபுரங்களின் நடுவே கயிற்றின் மேல் நடப்பது பற்றித்தான் வாழ்வின் ஒவ்வொரு நிமிஷமும் சிந்தித்திருக்கிறார்.

நண்பர்கள் பலரும் உதவி இருக்கிறார்கள். இந்த முயற்சியில் உதவி செய்ய புது நண்பர்களும் சேர்ந்து கொண்டிருக்கிறார்கள். காவலர்களை ஏமாற்றி கட்டிடத்தின் உள்ளே செல்லும் வித்தை எல்லாம் கை வந்த கலையாக இருக்கிறது. பல தடங்கல்களை மீறி ஒரு நாள் இரவு உள்ளே சென்றுவிட்டார். ஆனால் கயிற்றைக் கட்டுவதற்குள் உயிர் போய்விடுகிறது. எதிரே இருக்கும் கோபுரத்திலிருந்து வில்லை வைத்து இங்கே கயிற்றை அனுப்புகிறார்கள், ஆனால் அது கொஞ்சம் தள்ளி விழுந்துவிடுகிறது. எப்படியோ கயிற்றைக் கட்டிவிட்டார்.

காலை நியூ யார்க் நகரம் விழிக்கிறது. மேலே சிறு புள்ளியாக ஒரு உருவம். நடக்க ஆரம்பிக்கிறது. கீழே கூட்டம் ஆர்ப்பரிக்கிறது. அந்தப் பக்கம் போனவர் பேசாமல் இறங்க வேண்டியதுதானே? கிடையாது, திருப்பி இந்தப் பக்கம் நடந்து வருகிறார். போலீஸ் வந்துவிடுகிறது. இறங்கிவிடு என்று மிரட்டுகிறார்கள், கெஞ்சுகிறார்கள். இவர் அப்போதுதான் கயிற்றின் மேல் உட்கார்கிறார், படுத்துக் கொள்கிறார், இல்லாத வித்தை எல்லாம் காண்பிக்கிறார். அவரை போலீஸ் கயிற்றின் மேல் நடந்து பிடிக்கவா முடியும்? பல முறை (ஆறா, எட்டா என்று சரியாகத் தெரியவில்லை) இந்தப் பக்கத்திலிருந்து அந்தப் பக்கமும் அங்கிருந்து இங்கும் நடக்கிறார். ஒரு வழியாக இறங்கி வந்ததும் போலீஸ் கைது செய்கிறார்கள்.

என்ன தண்டனை? நியூ யார்க் நகரின் சென்ட்ரல் பார்க்கில் ஒரு ஆறேழு அடி உயரத்தில் கயிற்றைக் கட்டி கொஞ்ச நேரம் சிறுவர்களுக்கு வித்தை காட்ட வேண்டும். தண்டனை விதித்த நீதிபதியைப் பாராட்டாமல் இருக்க முடியாது.

இரட்டை கோபுரங்கள் இருந்தபோது அங்கே செல்ல டிக்கெட் வாங்க வேண்டும். ஆனால் கட்டிடக் காவல்துறை அவருக்கு எப்போது வேண்டுமானாலும் வருவதற்கான அனுமதிச் சீட்டை அவருக்குத் தருகிறது. 🙂

திரைப்படமாக (Walk) வந்தது. பல மில்லியன்களை சம்பாதித்தது. ஆனால் பெடி பெரும் பணக்காரர் அல்லர். இந்த சாகசங்கள்தான் அவரது வாழ்வின் பொருள், அதனால் இப்படி உயிரைப் பணயம் வைத்தார். பணத்துக்காக அல்ல.

திரைப்படத்தையும் புத்தகத்தையும் பாருங்கள்/படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: அபுனைவுகள்

தக்காளியின் அரசியல்

இன்று உலகெங்கும் தக்காளி மிக அதிகமாக பயன்படுத்தப்படும் ஒரு காய்கறி. நன்றாகப் பழுத்த தக்காளியின் லேசான இனிப்பும் லேசான புளிப்பும் எல்லாவற்றுக்கும் மேலாக அதன் juicyness-ஐயும் விரும்பாதவர் யார்? காய்ந்த மிளகாயை நன்றாக அரைத்து அதனுடன் தக்காளியை வதக்கி தாளித்து சட்னி செய்தால் – அட அட அதன் சுவையை விவரிக்க நாஞ்சிலால் கூட முடியுமோ என்னவோ தெரியவில்லை. இது சாப்பாட்டு ப்ளாக் இல்லை என்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

barry_estabrookTomatoland பாரி எஸ்டப்ரூக் எழுதிய அபுனைவு. புத்தகம் அவர் நெடுஞ்சாலையில் காரை ஓட்டிச் செல்வதிலிருந்து ஆரம்பிக்கிறது. அவருக்கு முன்னால் ஒரு லாரி, அது நிறைய தக்காளி. திடீரென்று சில தக்காளிகள் லாரியிலிருந்து விழுகின்றன. 70 மைல் வேகத்தில் ஒரு தக்காளி வந்து உங்கள் காரின் முன்பக்கக் கண்ணாடியில் அடித்தால் என்னாகும்? கண்ணாடி முழுவதும் சிவந்த தக்காளிச்சாறு, முன்னால் பார்க்க முடியாமல் விபத்து என்று நினைப்பீர்கள். அதுதான் இல்லை. தக்காளி கான்க்ரீட் சாலையில் அந்த வேகத்தில் விழுந்தாலும் உடைவதில்லை. ஏறக்குறைய ஒரு சிவப்புக் கல் வந்து அடிப்பது போலத்தான் இருக்கிறது.

எஸ்டப்ரூக் வியந்து போகிறார். வீட்டுக்கு வந்து நாலு தக்காளியைத் தரையில் போடுகிறார். வீசி எறிகிறார். தக்காளி உடைவதே இல்லை. (இதைப் படித்துவிட்டு நானும் தக்காளியை கல் தரையில் போட்டுப் பார்த்தேன். உடையவில்லைதான், ஆனால் மெதுவாகத்தான் போட்டேன், எஸ்டப்ரூக் சொன்னதைக் கேட்டு வேகமாக வீசி எறிந்து அது தப்பித் தவறி உடைந்து போனால் வீட்டம்மாவிடம் யார் பேச்சு வாங்குவது?)

இன்று அமெரிக்காவில் – குறிப்பாக ஃப்ளோரிடாவில் விளையும் தக்காளிகள் அப்படி மாற்றப்பட்டிருக்கின்றன. மரபணுவிலேயே மாற்றம், கடினத்தோல் உடைய தக்காளியுடன் ஒட்டு என்று பல விதமாக இது நடந்திருக்கிறது. ஃப்ளோரிடாவின் தக்காளி வியாபாரிகள் சங்கம் அங்கிருந்து விற்பனைக்குப் போகும் ஒவ்வொரு தக்காளியும் இந்த அளவு கடினத்தோல், இந்த மாதிரி ஷேப் உள்ளவையாக இருக்க வேண்டும் என்று பல குணங்களை strict ஆக கடைப்பிடிக்கிறது.

ஆஹா ஓஹோ அமெரிக்கான்னா அமெரிக்காதான், என்ன மாதிரி தரக்கட்டுப்பாடு என்பவர்கள் அடுத்த பாராக்களை கட்டாயமாகப் படிக்க வேண்டும்.

தக்காளிக்கான விவசாயக் கூலிகள் அனேகமாக மெக்சிகோக்காரர்கள். அவர்கள் பல இடங்களில் கொத்தடிமைகளாகத்தான் நடத்தப்படுகிறார்கள். பரதேசி படத்தில் வரும் கொத்தடிமைகளுக்கும் இந்தக் கூலிகளுக்கும் வித்தியாசமே இல்லை. வன்முறை கொஞ்சம் குறைவாக இருக்கிறது, அவ்வளவுதான். தப்பிக்க முடியாது. வரும் பணம் இருக்கும் இடத்துக்கும் சாப்பாட்டுக்குமே சரியாகப் போய்விடும். தக்காளி விவசாயம் இன்று அனேகமாக பெரிய கம்பெனிகள் கையில். அவர்கள் மேஸ்திரிகளை வைத்து விவசாயம் செய்கிறார்கள். இருக்கும் இடம், சாப்பாடு இரண்டையும் தருவது மேஸ்திரிதான். கொடுமையான விஷம் உள்ள பூச்சி மருந்தை கையால் தெளிப்பது என்பதெல்லாம் சர்வசாதாரணம். இப்படி விஷத்தோடு நேரடி தொடர்பு இருப்பதால் குறையுள்ள குழந்தைகள் பிறந்து அது பெரிய கேசாகி இருக்கிறது.

எஸ்டப்ரூக் சொல்லும் இரண்டாவது விஷயம் – சுவை. இந்தத் தக்காளிகளில் சுவையே இருப்பதில்லை. நான் பெரிதாக இதையெல்லாம் கவனிப்பவன் இல்லை. ஆனால் கடைசியாக எப்போது ரசத்தில் அட தக்காளி இத்தனை சுவையாக இருக்கிறதே என்று சாப்பிட்டு பல மாதங்களாகிறது. தக்காளி அரைக்கப்பட்டால்தான் கொஞ்சமாவது ருசி தெரிகிறது. சுவையை விதி விதித்து கட்டுப்படுத்த முடியாது, ஷேப், தோல் பற்றி கவலைப்படாமல் தக்காளி விவசாயம் செய்யும் சிறு விவசாயிகளிடம்தான் சுவையான தக்காளி கிடைக்கிறது என்கிறார்.

மூன்றாவதாக அவர் சொல்வது தக்காளியின் பல வகைகள் காணாமல் போய்க் கொண்டிருப்பது. இப்படி ஒரேயடியாக சீரான தக்காளி என்று போனால காட்டுத் தக்காளியின் பல வகைகள் காணாமல் போய்விடுகின்றன. ஒட்டு விவசாயம் நடப்பது எதிர்காலத்தில் கஷ்டம். பல கல்லூரிகள் இன்று இந்தக் காட்டுத் தக்காளியின் விதைகளை சேகரித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் அதற்கெல்லாம் பணம் வருவது பெரிய கம்பெனிகள் மூலம்தான், நாளை ஒரு தென்னமெரிக்க விவசாயி அவன் வீட்டு பக்கத்திலுள்ள மலையில் விளைந்து கொண்டிருந்த தக்காளி விதையை இந்தப் பெரிய கம்பெனிகள் தயவு வைத்தால்தான் பெறக் கூடிய நிலை உண்டாகலாம்.

இது தக்காளியின் அரசியல் மட்டுமல்ல, அமெரிக்காவின் விவசாயக் கூலிகளின் அரசியல்; விவசாயம் பெரிய கம்பெனிகள் கையில் போய்க் கொண்டிருப்பதின் அரசியல். படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: அபுனைவுகள்

ராபர்டோ சாவியானோவின் ‘Gomorrah’

கொமொரா நான் பரிந்துரைக்கும் புத்தகம் அல்ல.

angelina_jolie_white_suitஇருந்தாலும் ஒரு கட்டுரை ஏறக்குறைய இலக்கியம். இந்த மாஃபியாதான் ஏறக்குறைய இத்தாலிய ஃபாஷன் தொழிலைக் கட்டுப்படுத்துகிறது. அர்மானி, வெர்சாசி எல்லாருக்கும் நேபிள்ஸ் ஏரியாவில்தான் துணிகள் தைக்கப்படுகின்றனவாம். போலி அர்மானி துணிகளும் இங்கேதான். அப்படி தைப்பவர்களிலும் பாலோ என்ற ஒரு தையல்காரன் புகழ் பெற்றிருக்கிறான். ஒரு நாள் அவன் டிவி பார்த்துக் கொண்டிருக்கும்போது ஏஞ்சலினா ஜோலி ஒரு வெள்ளை சூட்டில் ஏதோ ஒரு நிகழ்ச்சியில் பங்கெடுத்துக் கொள்வது காட்டப்படுகிறது. சூட்டைத் தைத்தவன் பாலோ. அவனுக்கு அளவுகள் கொடுக்கப்பட்டு ஒரே மாதிரி மூன்று சூட்டைத் தைத்திருக்கிறான். ஏஞ்சலினா ஜோலிக்குத்த்தான் தைக்கிறான் என்று அவனுக்குத் தெரியாது. பாலோவின் புகழ் எல்லாம் உள்ளூரில்தான். தான் தைத்த சூட்டை அணிந்துகொண்டு ஏஞ்சலினா ஜோலி வலம் வருவதைக் காணும்போது அவனுக்கு மூச்சே நின்றுவிடுகிறது. அதற்குப் பிறகு அவன் தையல் தொழிலையே கைவிட்டுவிடுகிறான்!

அந்தக் கட்டுரை இணையத்தில் கிடைக்குமா என்று நானும் நாலு நாளாக தேடிப் பார்க்கிறேன், கிடைக்கமாட்டேன் என்கிறது…

கொமொராவின் பேசுபொருள் இத்தாலிய மாஃபியா. குறிப்பாக நேபிள்ஸ் பகுதியில் ஆக்கிரமித்திருக்கும் மாஃபியா. புத்தகத்தில் படித்த சில காட்சிகள் எப்போதும் நினைவிருக்கும். ஹெராயின் போதை மருந்தை மற்ற filler-களோடு கலந்து அதை அதி தீவிர போதை மருந்து பயனாளர்களை வைத்து பரிசோதிப்பார்களாம். எப்படி? கடும் வறுமையில் இருக்கும் பயனாளர்கள் நிறைந்திருக்கும் பகுதிக்குப் போய் அங்கே யாராவது வருவார்களா என்று பார்ப்பார்களாம். எப்படியாவது ஹெராயின் கிடைத்தால் போதும் என்று நிச்சயமாக யாராவது வருவார்கள். அப்படி வந்த ஒருவனுக்கு ஊசியைப் போட்டு, அவன் நுரை தள்ளி சாகிறான். செத்துவிட்டான் என்று இவர்கள் கிளம்புகிறார்கள். செத்தவனின் தோழி அவன் முகத்தின் மேல் உட்கார்ந்து சிறுநீர் கழிக்கிறாள், அவன் பிழைத்துக் கொள்கிறான்! மாண்ட்ரகோரா என்ற ஊரில் மாஃபியா தலைவன் ஏறக்குறைய ஆட்சி செய்கிறான். அங்கே போதை மருந்துகள் விற்கப்படக் கூடாது என்று ஆணை! அந்த ஊரில் யாருக்கும் ஆணுறை அணிய வேண்டியதில்லை. அப்படி தப்பித் தவறி யாருக்காவது எய்ட்ஸ் என்று சந்தேகம் இருந்தால் அவள்/அவன் கொல்லப்படுவான்! அதனால் இந்த மாதிரி நோய் எல்லாம் பரவ வாய்ப்பே இல்லை!

மாஃபியாவுக்கும் பிற பன்னாட்டுத் தொழில்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. பணத்தைப் புரட்டுதல், கையிலிருக்கும் பணத்தை முதலீடு செய்தல், சட்டத்துக்கு உட்பட்டு முதலீடு செய்தல், அடுத்த லெவலில் இருப்பவர்கள் தனியாக தொழில் செய்யாமல் பார்த்துக் கொள்ளுதல், பிற நாட்டு மாஃபியாக்கள் தங்கள் ஏரியாவில் வளரவிடாமல் பார்த்துக் கொள்ளுதல் என்று ஏறக்குறைய அதே கவலைகள். என்ன, வன்முறை, குற்றங்கள் மூலம் கிடைக்கும் வருமானம். இத்தாலியில் ஈட்டும் பணத்தை வைத்து ஸ்காட்லாண்டில் நியாயமான தொழில் செய்து முக்கியத் தொழிலதிபராக எல்லாம் ஆகி இருக்கிறார்கள். எதிர்த்துப் போராட முன் வந்தது ஒரே ஒரு பாதிரி. சுட்டுக் கொல்லப்படுகிறார்.

ஆனாலும் இந்தப் புத்தகத்தை நான் பரிந்துரைக்க மாட்டேன். உள்ளூர் கிரிமினல்களைப் பற்றி நிறைய விவரிக்கிறார். ஹாஜி மஸ்தான், வரதராஜ முதலியார், தாவூத் இப்ரஹிம் என்றால் கூட கொஞ்சம் ஆர்வம் இருக்கும். இத்தாலிய மாஃபியா அடித்துக் கொள்வதைப் பற்றி எல்லாம் வந்தால் வேகவேகமாக பக்கத்தைப் புரட்டிவிட்டேன். அதுதான் நிறைய இருக்கிறது…

தொகுக்கப்பட்ட பக்கம்: அபுனைவுகள்

அணுகுண்டு வெடித்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரூமனின் வாழ்க்கை வரலாறு

trumanடேவிட் மகல (David McCullough) அமெரிக்க வரலாற்று எழுத்தாளர். இரண்டு முறை புலிட்சர் பரிசை வென்றவர். அவர் வென்ற முதல் புலிட்சர் பரிசு முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ட்ரூமனின் வாழ்க்கை வரலாற்றுக்காக.

1948-இலிருந்து யார் சிறந்த அமெரிக்க ஜனாதிபதி என்று பல கணிப்பெடுப்புக்கள் நடந்திருக்கின்றன. இவற்றில் பங்கு கொண்டவர்கள் வரலாற்று ஆய்வாளர்கள், பத்திரிகையாளர்கள், பேராசிரியர்கள்… – அதாவது நிபுணர்கள். இந்த கணிப்புகளை எல்லாம் மொத்தமாக சேர்த்துப் பார்த்தால் ட்ரூமன் ஆறாவது இடத்தில் இருக்கிறார். முதல் ஐந்து இடங்கள் ஏப்ரஹாம் லிங்கன், ஃப்ராங்க்ளின் ரூஸவெல்ட், ஜார்ஜ் வாஷிங்டன், தாமஸ் ஜெஃபர்சன், தியோடோர் ரூஸவெல்ட் ஆகியோருக்கு. உட்ரோ வில்சன், ஆண்ட்ரூ ஜாக்சன், ட்வைட் ஐசன்ஹோவர், ஜேம்ஸ் போக் ஆகியோர் டாப் டென்னை பூர்த்தி செய்கிறார்கள்.

ட்ரூமன் கிட்டத்தட்ட எட்டு வருஷங்களாக ஜனாதிபதியாக இருந்தவர். ஃப்ராங்க்ளின் ரூஸவெல்ட்டுடன் துணை ஜனாதிபதியாக 1944-இல் தேர்ந்தெடுக்கப்பட்டார். ரூஸவெல்ட் இரண்டு மாதங்களில் இறந்துவிட இவர் ஜனாதிபதி ஆனார். ரூஸவெல்ட் போன்ற பெரிய ஆளுமைக்கு பதிலாக இவரா என்று எல்லார் மனதிலும் கேள்விதான். இவருடைய ஆட்சி காலத்தில்தான் ஜெர்மனி தோற்கடிக்கப்பட்டது. ஜப்பான் மீது அணுகுண்டு வீச முடிவெடுத்தவர் இவர்தான். கம்யூனிஸ்ட் ரஷியா மேலை நாடுகளுக்கு தலைமை எதிரியாக உருவானது இவர் காலத்தில்தான். ஜெர்மனி உள்ளிட்ட மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு பல உதவிகள் செய்து அவற்றை மீண்டும் ஒரு வலிமையான பொருளாதார சக்தியாக உருவாக்கியதில் இவருக்கும் இவரது சகா ஜார்ஜ் மார்ஷலுக்கும் பெரும் பங்குண்டு. அந்த திட்டத்துக்கே மார்ஷல் திட்டம் என்றுதான் பேர். ஜார்ஜ் மார்ஷலுக்கு இந்தத் திட்டத்துக்காக சமாதானத்துக்கான நோபல் பரிசு கிடைத்தது.

ட்ரூமன் கம்யூனிசம் மற்ற நாடுகளுக்கு பரவக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார், அதை அமெரிக்க அரசின் கொள்கையாகவே – ட்ரூமன் கொள்கை – என்று அறிவித்தார். அதன் விளைவாகத்தான் கொரியப் போரில் அமெரிக்கா ஈடுபட்டது. ஆனால் அமெரிக்கத் தளபதி மக்கார்தர் – அமெரிக்க மக்களின் பேராதரவு பெற்ற நாயகன் – வாலை ஆட்டியபோது எந்தத் தயக்கமும் இல்லாமல் மக்கார்தரை வேலையிலிருந்து தூக்கிவிட்டார். மன உறுதிக்கும், வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று முடிவெடுப்பதற்கும், முடிவெடுத்த பிறகு எந்தத் தயக்கமும் இல்லாமல் அதை நிறைவேற்றுவதற்கும், விடாமுயற்சிக்கும், தனிப்பட்ட நேர்மைக்கும் பேர் போனவர்.

மகல ட்ரூமனின் கொள்ளுத்தாத்தா காலத்திலிருந்து ஆரம்பிக்கிறார். மிசௌரி மாநிலத்தில் வந்து செட்டில் ஆகிறார்கள். விவசாயம். அப்பா சில தொழில்களை செய்து பார்க்கிறார். மத்தியதரக் குடும்பம். பணம் புரண்டெல்லாம் ஓடவில்லை. ட் ரூமன் தலையெடுத்து வங்கி ஒன்றில் வேலை பார்க்கிறார். ஆனால் குடும்ப நிலத்தை கவனிக்க வேண்டும் என்பதற்காக ஊருக்கு திரும்பிவிடுகிறார். முதல் உலகப் போரில் காப்டனாக பணி புரிகிறார். அங்கிருந்து திரும்பி வந்து கான்சாஸ் நகரில் துணிக்கடை வைக்கிறார். திவால்!

பிறகு அரசியலில் இறங்குகிறார். அப்போது பெண்டர்காஸ்ட் குடும்பத்தின் கையில்தான் கான்சாஸ் நகரே இருக்கிறது. பெண்டர்காஸ்ட் எல்லாம் ஊழல் பேர்வழிகள், காட்ஃபாதர்கள். கொஞ்சம் ராபின் ஹூட் டைப். ஏழை எளியவர்களுக்கு உதவி கட்டாயம் உண்டு. அவர்களிடம் ஓட்டுகளைப் பெற்றுக் கொண்டு அரசை தன் கையில் வைத்திருந்தவர் அதைச் சுரண்டிக் கொண்டிருந்தார்கள். அன்றைய ஜனநாயகக் கட்சியில் இது போன்று பல நகரங்களில் party bosses உண்டு. இதை machine என்று சொல்வார்கள். அவர்களைப் பகைத்துக்கொண்டு யாரும் ஜனநாயகக் கட்சியை நடத்த முடியாது. ட்ரூமன் பெண்டர்காஸ்ட்டை எதிர்க்கவில்லை. மாறாக அவர்களுடன் சேர்ந்து ஒரு பதவி பெறுகிறார். ட்ரூமனிடம் ஊழல், லஞ்சம் என்ற பேச்சே கிடையாது. எல்லாரும் வியக்கும் வண்ணம் ரோடு போடுகிறார், பிரமாதமாக நிர்வகிக்கிறார். ஒரு கட்டத்தில் மிசௌரி மாநில கவர்னராக ஆசைப்படுகிறார். ஆனால் பெண்டர்காஸ்ட்டின் ஆதரவு இல்லை. கடைசியில் செனடராகிறார்.

செனட்டில் ஒன்றும் பிரமாதமாக கிழித்துவிட முடியவில்லை. கஷ்டம்தான். இரண்டாம் உலகப்போர் தொடங்கியபின் வேகவேகமாக தளவாடங்கள் எல்லாம் தேவைப்படுகிறது. முதலாளிகள் கொள்ளை அடிக்கிறார்கள். ட்ரூமன் கடுப்பாகி பல ஊழல்களைக் கண்டுபிடிக்கிறார். ட்ரூமன் கமிட்டியிடம் சொன்னால் போதும், ஆப்புதான் என்ற அளவுக்கு பிரபலமாகிறார். 15 பில்லியன் டாலர்கள் (நாற்பதுகளில்) அவரால் மிச்சமாகிற்று என்று சொல்கிறார்கள்.

dewey-truman-1948பிறகுதான் உபஜனாதிபதி, ஜனாதிபதி, ஜெர்மனி, ஜப்பான், அணுகுண்டு, மார்ஷல் திட்டம், ட்ரூமன் கொள்கை எல்லாம். 48-இல் ஜனாதிபதி தேர்தலுக்கு நிற்கிறார். அவருக்கு சான்சே இல்லை என்று எல்லாரும் நினைக்கிறார்கள். ட்ரூமன் விடுவதாக இல்லை. நாடெங்கும் சென்று பிரச்சாரம் செய்கிறார். யாருமே எதிர்பார்க்காத வகையில் வெல்கிறார். பத்திரிகைகள் எல்லாம் ட்ரூமன் தோல்வி என்று அச்சடித்தேவிட்டன. அப்படி ஒரு பேப்பரை கையில் வைத்துக் கொண்டு ட்ரூமன் கொடுக்கும் போஸ் மிகவும் பிரபலமானது.

இப்போதுதான் கொரியப்போர், மக்கார்தரை வேலையை விட்டு தூக்குவது எல்லாம்.

mcculloughட்ரூமனின் ஆளுமை மிகச் சுவாரசியமானது. முடிவெடுக்க வேண்டியது தானே – ஜனாதிபதியே – என்பதை அவர் நன்றாக உணர்ந்திருந்தார். ‘The buck stops here’, மற்றும் ‘If you can’t take the heat, get out of the kitchen!’ என்ற இரண்டும் அவரது பிரபலமான மேற்கோள்கள். அவரது இன்னொரு மேற்கோள் – ஜனாதிபதியாக என்னை விட தகுதி வாய்ந்தவர்கள் லட்சக்கணக்கானவர்கள் உண்டுதான்; ஆனால் நான்தான் ஜனாதிபதி, நான்தான் முடிவெடுக்க வேண்டும்!”

லிங்கன், ரூஸவெல்ட் போன்றவர்கள் மாபெரும் ஆளுமைகள். ஆனால் ட்ரூமன் சாதாரணர் என்ற எண்ணத்தைத்தான் உருவாக்குகிறார். குறைகளே இல்லாத மாமனிதரும் அல்லர். தனிப்பட்ட முறையில் நேர்மையானவர்தான், (ஜனாதிபதியாக இருந்தபோதே கொஞ்சம் பணக்கஷ்டம்தான்) பல ஆண்டு நண்பர்கள், வேண்டியவர்கள் சின்ன லெவலில் ஊழல் செய்தால் அவர்களை கண்டு கொள்வதில்லை, மாறாக அவர்களை ஆதரித்தே இருக்கிறார். அவரது விடாமுயற்சியும் நேர்மையும் முடிவெடுக்கும் விதமும் நம்மைப் போன்ற சாதாரணர்களிடமிருந்து அப்படி ஒன்றும் வெகு தூரத்தில் இருப்பதாகத் தெரியவில்லை. ஒரு விதத்தில் காமராஜோடு ஒப்பிடலாம். காமராஜ் காந்தி-நேரு-படேல்-ராஜாஜி போன்றவர்களோடு ஒப்பிட்டால் அந்த அறிவு கூர்மையும் படிப்பும் நாகரீகமும் இல்லாத கிராமத்தான் மாதிரித்தான் தெரிகிறார்; அந்த மாதிரிதான் இவரும். சாதாரணராகத் தெரியும் அசாதாரண மனிதர்.

மகல தண்டி தண்டியாக தலையணை சைசில் புத்தகம் எழுதுபவர். இதுவும் அப்படித்தான். Scholarly tome. கிடுக்கிப்பிடி சுவாரசியம் என்றெல்லாம் சொல்ல முடியாது. ட்ரூமனின் ஆளுமை என்னை கவர்ந்த ஒன்று, அதனால் நான் படித்தேன். வரலாற்றுப் பிரியர்களுக்கு மட்டும்தான் பரிந்துரைப்பேன்.

ஒவ்வொரு தலைமுறையிலும் அமெரிக்கத் தலைவர்களைப் பற்றி இப்படி பாரபட்சம் இல்லாமல் எழுத நல்ல உழைப்பைக் கொடுக்கும் வரலாற்று ஆய்வாளர்கள் எங்கிருந்தோ வந்துவிடுகிறார்கள். தண்டி தண்டியாக இருந்தாலும் இவர்கள் புத்தகங்கள் எல்லாம் பெஸ்ட்செல்லர் பட்டியலில் கூட வந்துவிடுகின்றன. இந்த மாதிரி இந்தியத் தலைவர்களைப் பற்றி யாரும் எழுதுவதில்லையே என்று கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கிறது. சரி இந்தத் தலைமுறைக்கு ராமச்சந்திர குஹாவும் ராஜ்மோஹன் காந்தியும் இருக்கிறார்கள், போன தலைமுறைக்கு சர்வபள்ளி கோபால். எதிர்காலத்திலும் யாராவது வருவார்கள் என்று நம்புவோம்…

பிற்சேர்க்கை: மிஸ்டர் சிடிசன் பற்றிய பதிவில் இவருக்கும் அட்லாய் ஸ்டீவன்சனுக்கும் ஆகவில்லை என்று சொல்லி இருந்தேன். அது என் தவறான புரிதல். 52-இல் இவர்தான் மிகவும் முயன்று ஸ்டீவன்சனை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வைத்திருக்கிறார்.

தொகுக்கப்பட்ட பக்கம்: அபுனைவுகள்

தொடர்புடைய சுட்டி: ட்ரூமன் எழுதிய புத்தகம் – மிஸ்டர் சிட்டிசன்