Million Dollar Baby திரைப்படத்தின் மூலக்கதை

(மீள்பதிவு, மூலப்பதிவு இங்கே)

million_dollar_babyமில்லியன் டாலர் பேபி (2004) நான் பார்த்த சிறந்த திரைப்படங்களில் ஒன்று. க்ளிண்ட் ஈஸ்ட்வுட் இயக்கிய திரைப்படங்கள் பொதுவாக சோடை போவதில்லைதான், ஆனால் அவற்றுக்குள்ளும் இது அபாரமான திரைப்படம். மார்கன் ஃப்ரீமன், ஹில்லரி ஸ்வாங்க் ஆகியோரோடு சேர்ந்து ஈஸ்ட்வுட்டும் பிரமாதமாக நடித்திருந்தார். சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கார் விருதுகளை வென்றது.

F.X. Toole என்பவர் அதே தலைப்பில் எழுதிய சிறுகதைதான் இந்தத் திரைப்படத்தின் மூலக்கதை. Rope Burns என்ற சிறுகதைத் தொகுப்பில் உள்ள ஒரு சிறுகதை. (திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு அதே தொகுப்பை மில்லியன் டாலர் பேபி என்ற பேரில் மீண்டும் வெளியிட்டிருக்கிறார்கள்.) திரைப்படம் அளவுக்கு வருமா என்ற சந்தேகத்தில் படிப்பதை ரொம்ப நாளாகத் தள்ளிப் போட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் ஆரம்பித்த பிறகு கீழே வைக்க முடியவில்லை.

f_x_tooleடூல் என்பது குத்துச்சண்டை பயிற்சியாளர் ஜெர்ரி பாய்டின் புனைபெயராம். பாய்ட் கொஞ்சம் வயதான காலத்தில் குத்துச்சண்டை போட்டிருக்கிறார். அதற்குப் பிறகு பயிற்சியாளர். குத்துச்சண்டை உலகை – எனக்குத் தெரியாத உலகம், அவ்வளவு ஆர்வம் இல்லாத உலகம் – கண் முன்னால் கொண்டு வருகிறார். அதன் நாயகர்களோடு – வீரர்களோடு – நிறுத்திவிடாமல் பயிற்சியாளர்கள், துணையாக நிற்பவர்கள், அதை வியாபாரமாகச் செய்பவர்கள், ஆர்வம் இருந்தும் திறமை கொஞ்சம் கூட இல்லாதவர்கள், சின்னச் சின்ன வேலைகளைச் செய்பவர்கள் என்று பிரமாதமாகச் சித்தரிக்கிறார். எந்த உலகமாக இருந்தால் என்ன, மனிதர்கள் எப்போதுமே சுவாரசியமானவர்கள்தான். அவரது கதைகள் மனிதர்களைப் பற்றியது – அவர்கள் குத்துச்சண்டை போடுகிறார்கள், பயில்கிறார்கள், பயிற்றுவிக்கிறார்கள், மருந்து போட்டுவிடுகிறார்கள், மசாஜ் செய்து விடுகிறார்கள், ஏமாற்றுகிறார்கள், ஏமாறுகிறார்கள், பகல் கனவு காண்கிறார்கள்…

அவரது கதைகளில் மீண்டும் மீண்டும் வரும் ஒரு படிமம் – ஐரிஷ் வம்சாவளி, சர்ச்சுக்குப் போகாத, ஆனால் தன் மத நம்பிக்கையை முற்றிலும் இழந்துவிடாத, பண்பாட்டுப் பின்புலம் உள்ள ஓரளவு வயதான துணையாக நிற்பவன். அதுவும் அனேகமாக cut-man – சண்டையின்போது தோல் பிளந்து ரத்தம் கொட்டுவதை நிறுத்துவதில் ஸ்பெஷலிஸ்ட்கள். அவர்கள் கண்ணோட்டத்தில்தான் கதை அனேகமாகச் சொல்லப்படுகிறது. அப்படி இல்லாவிட்டால் அவர் பயிற்சியாளாராக இருப்பார்.

சிறுகதைத் தொகுப்பில் ஆறு சிறுகதைகள் இருக்கின்றன. மில்லியன் டாலர் பேபிதான் எனக்கு மிகவும் பிடித்த சிறுகதை. குத்துச்சண்டை பயில விரும்பும் அந்தப் பெண், அவள் குடும்பம், பயிற்சியாளன் எல்லார் சித்திரமும் மிகவும் உண்மையானது. மனதைத் தொடுவது. நீ என் ரத்தம் என்று சொல்லும் பயிற்சியாளனோடு சேர்ந்து நானும் அப்படித்தான் உணர்ந்தேன். (நான் ரத்தத்தைக் கண்டால் பயந்து ஓடுபவன்). பெரிதாக விவரிக்க விரும்பவில்லை, ஒரே ஒரு சிறுகதை படிக்க வேண்டுமென்றால் இதை மட்டும் படியுங்கள்.

Fightin’ in Philly-யும் வெற்றி பெறும் சிறுகதைதான். கஷ்டப்பட்டு பயிற்சி எடுத்து சண்டை. தோற்றுக் கொண்டிருக்கும் எதிரி இவனை இடுப்புக்குக் கீழே அடிக்கிறான். பணம் வாங்கி இருக்கும் நடுவர் கண்டு கொள்வதில்லை. இவன் திருப்பி இடுப்புக்குக் கீழே அடித்தால் இவனுக்கு வார்னிங் கிடைக்கிறது, பாயிண்ட் போகிறது. உண்மையில் வென்றது நாயகன்தான் என்றாலும் எதிரிக்கு வெற்றி என்று அறிவிக்கப்படுகிறது. அடுத்து என்ன?

Rope Burns இந்த அளவுக்கு இல்லை என்றாலும் குறிப்பிடப்பட வேண்டிய சிறுகதை. கொஞ்சம் நீளமான சிறுகதை. லாஸ் ஏஞ்சலசில் ராட்னி கிங் என்ற கறுப்பரை போலீஸ் அடித்துத் துவைத்தது, ஆனால் யாருக்கும் தண்டனை இல்லை என்று தீர்ப்பு. தீர்ப்பு வந்தபோது லாஸ் ஏஞ்சலசில் பெரிய கலவரம் நடந்தது. அந்தப் பின்புலத்தை வைத்து எழுதப்பட்ட சிறுகதை.

Monkey Look, Black Jew, Frozen Water ஆகிய மூன்றும் கொஞ்சம் சுமார்தான். ஆனால் எல்லா சிறுகதைகளும் சேர்ந்து காட்டும் உலகம் உண்மையானது.

மில்லியன் டாலர் பேபி சிறுகதை பிரமாதம் என்றாலும் திரைப்படம் அதை விடவும் பிரமாதம். நல்ல நடிகர்கள், இயக்கம் எல்லாம் சேரும்போது ஒரு நல்ல கதை இன்னும் உயர்வு பெறும் என்பதற்கு எடுத்துக்காட்டு இந்தத் திரைப்படம்.

படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: உலக இலக்கியம்

தொடர்புடைய சுட்டிகள்:
டூலின் தளம்
எனக்குப் பிடித்த குத்துச்சண்டை சிறுகதை – ஜாக் லண்டனின் ‘A Piece of Steak

பிடித்த சிறுகதை: Lottery

Shirley Jackson

ஷிர்லி ஜாக்சனின் படைப்புகளில் இதுதான் மிகவும் பிரபலமானது என்று நினைக்கிறேன். 1948-இல் எழுதப்பட்ட சிறுகதை.சுஜாதா இந்த சிறுகதையை எப்போதோ குறிப்பிட்டிருந்தார், அதனால்தான் தேடிப் பிடித்து படித்தேன் என்று நினைவு.

நான் கதைச்சுருக்கம் எல்லாம் எழுதப் போவதில்லை. நேரடியாக இங்கே படித்துக் கொள்ளுங்கள்.

முதல் முறை படிக்கும்போது, அந்தக் கடைசி வரிகள் புரிந்தபோது ஏற்பட்ட பயங்கர உணர்ச்சி (horror) நன்றாக நினைவிருக்கிறது.

இந்தக் கதைக்கு நிறைய sub-textகளைப் பொருத்தி வைத்துப் பார்க்கிறார்கள். எல்லாருடனும் சேர்ந்து செய்யும் தவறுகள் நமக்கு அதிகம் உறுத்துவதில்லை (mob mentality), பாரம்பரியம் என்ற பேரில் மனிதத் தன்மையை இழந்துவிடுகிறோம், எவனாவது ஏமாளி கிடைத்தால் ஏறி மிதிப்பது நம் ரத்தத்திலேயே ஊறி இருக்கிறது, ஊரோடு ஒத்து வாழ நமக்கு நடக்கும் அநியாயங்களை பொறுத்துக் கொள்கிறோம் என்றெல்லாம் பல கருக்களை பொருத்துகிறார்கள். ஆனால் என் கண்ணில் காரணம் எல்லாம் யோசிக்கவே கூடாது, அப்போதுதான் கதையின் பயங்கரம் நமக்கு நன்றாக உரைக்கும். உதாரணமாக டாஃப்னே டு மாரியரின் Birds குறுநாவலில் பறவைகள் ஏன் மனிதர்களை தாக்குகின்றன என்பது அநாவசியம். அது போலத்தான் இந்தச் சிறுகதையும். இவற்றை எல்லாம் அனுபவிக்கணும், ஆராயக் கூடாது. என் கண்ணில் இந்த sub-texts எல்லாம் வாசிப்பு அனுபவத்தை குறைத்துவிடுகின்றன.

மீண்டும் இந்தச் சிறுகதையைப் படித்தபோது ஷிர்லி ஜாக்சனின் தொழில்நுட்பமும் (craft) நன்றாகத் தெரிகிறது. சிறுகதையை கட்டமைத்திருக்கும் விதம், ஒரு சிறு ஊரை அவர் சித்தரித்திருக்கும் விதம், பேர் பேராக அடுக்கிக் கொண்டே போவது, 77 வருஷமாக லாட்டரியைப் பார்க்கிறேன் என்று ஒரு முதியவரின் பெருமிதம், எல்லாம் பிரமாதமாக வந்திருக்கின்றன.

இந்த மாதிரி ஒரு சிறுகதையை என்னால் கற்பனை கூட செய்ய முடியாது. அதற்கு மூளையில் வேறு மாதிரி wiring வேண்டும் என்று நினைக்கிறேன்.

ஜாக்சனின் சிறுகதைகளில் எனக்கு மிகவும் பிடித்த இன்னொன்று – One Ordinary Day, with Peanuts. படித்துப் பாருங்கள்! அதைப் பற்றி என்றாவது விவரமாக எழுத வேண்டும்.

ஜாக்சனின் Bus திறமையாக எழுதப்பட்ட இன்னொரு சிறுகதை. கிழவியின் கனவும் சரி, முத்தாய்ப்பும் சரி, அருமையாக வந்திருக்கிறது.

படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: எழுத்துக்கள்

தொடர்புடைய சுட்டிகள்:

லிங்கன் லாயர் தொடர்: Resurrection Walk

Michael Connelly

மைக்கேல் கானலி எனக்குப் பிடித்த த்ரில்லர் நாவல் எழுத்தாளர்களில் ஒருவர்.

கானலியின் மிகச் சிறந்த பாத்திரம் ஹாரி போஷ். போஷ் கொலைகாரர்களைப் பிடிப்பதை தன் ஸ்வதர்மமாக கொண்ட காவல் துறை அதிகாரி. வியட்நாமில் போரிட்டவன். 20 புத்தகமாவது வந்திருக்கும் என்று நினைக்கிறேன். போஷ் புத்தகங்களின் பலங்கள் இரண்டு. போஷின் நாயகத்தன்மை. ஷெர்லக் ஹோம்ஸ் மற்றும் டிக் ஃப்ரான்சிஸ், டாஷியல் ஹாம்மெட், ரேமண்ட் சாண்ட்லரின் நாயகர்கள் போல குற்றவாளிகளை விடாமல் துரத்துபவன். அந்த சித்திரம் நன்றாக வந்திருக்கும். இரண்டாவதாக இவை நல்ல police procedurals – அதாவது காவல் துறையின் விதிகள், வழக்கில் தண்டனை கிடைக்க வேண்டுமென்றால் விதிகளை எப்படிப் பின்பற்ற வேண்டும், காவல்துறையின் உள்குத்து அரசியல்கள் எல்லாம் நன்றாக விவரிக்கப்படும்

ஆனால் போஷை விட மிக்கி ஹாலர் பாத்திரம்தான் பிரபலம். அதற்குக் காரணம் மாத்யூ மக்கானகி நடித்த Lincoln Lawyer திரைப்படம் அடைந்த பெருவெற்றி. என்னதான் புத்தகம் விற்றாலும் திரைப்படங்களின் reach வேறுதான்.

ஹாலர் வக்கீல். போஷுக்கும் ஹாலருக்கும் ஒரே அப்பா வேறு, ஆனால் அது மெதுவாகத்தான் தெரிகிறது. ஆறேழு புத்தகங்கள் வெளியாகி இருக்கின்றன. ஹாலர் புத்தகங்களின் பலம் நீதிமன்றத்தில் வாதாடுவதின் – அதுவும் குற்றவாளிகளுக்காக வாதாடுவதின் நுணுக்கங்களை விவரிப்பது. உதாரணமாக ஜாமீன் பணம் ஆயிரம் டாலர் என்றால் நூறு டாலர் கட்டினால் போதுமாம். அது திரும்ப வரவே வராதாம். சில நீதிமன்ற விசாரணைக் காட்சிகள் மிக அருமை. ஹாலருக்கு சில சமயம் வழக்குகள் கிடைப்பதில்லை, பணத்துக்காக என்னவெல்லாமோ செய்ய வேண்டி இருக்கிறது. ஹாலரின் வெற்றிகள், சிரமங்கள், தோல்விகள், ஜூரிக்களை தேர்ந்தெடுப்பது. அரசு வக்கீலும் defense வக்கீலான ஹாலரும் ஆடும் ஆட்டங்கள் எல்லாம் நன்றாக வந்திருக்கும்.

Version 1.0.0

Resurrection Walk (2023) கேள்விகள் எழாமல் படிக்கக் கூடிய, விறுவிறுவென்று போகும் இன்னொரு நாவல். ஆனால் ஃபார்முலா நாவல்தான், கானலியின் ஃபார்முலா கொஞ்சம் காலாவதி ஆகிக் கொண்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது. கானலியின் சிறந்த நாவல்களில் ஒன்று அல்ல, ஆனாலும் சுவாரசியத்துக்காக படிக்கக் கூடிய பொழுதுபோக்கு நாவல்.

மிக்கி ஹாலரும் ஹாரி போஷும் இணைந்து தவறாக சிறைப்படுத்தப்பட்டிருக்கும் ஒரு பெண்மணிக்கு விடுதலை வாங்கித் தருகிறார்கள். அதுதான் நாவல்.

ஹாரி காலமெல்லாம் குற்றவாளிகளைப் பிடித்து தண்டனை வாங்கித் தருவதையே தன் ஸ்வதர்மமாகக் கொண்டவன். மிக்கியோ குற்றம் செய்தவர்களோ நிரபராதிகளோ, விடுதலை வாங்கித் தருவதையே லட்சியமாகக் கொண்டவன்.  இருவருக்கும் நல்ல உறவு இருக்கிறது. ஹாரி ஓய்வு பெற்றுவிட்டான். இப்போது புற்றுநோய். medical insurance தேவைப்படுகிறது.  ஹாரி அபூர்வமாக சில சமயம் மிக்கிக்கு உதவி செய்திருக்கிறான்தான், ஆனால் இப்போது medical insurance தேவைக்காக ஹாரி மிக்கியிடமே வேலைக்கு சேர்கிறான். மிக்கி தவறாக தண்டனை விதிக்கப்பட்ட சில நிரபராதிகளுக்கு விடுதலை வாங்கித் தந்திருக்கிறான். அதனால் கைதிகள் பலரும் தாங்களும் நிரபராதிகளே, எனக்கு உதவி செய்யுங்கள் என்று கேட்கிறார்கள். ஹாரிக்கு மிக்கியிடம் வேலை செய்வதில் சில மனத்தடைகள், சங்கடங்கள் இருக்கின்றன. தண்டனை வாங்கித் தருவதல்ல, விடுதலை வாங்கித் தருவதுதான் வேலை என்பது அவன் வாழ்க்கை முறைக்கே எதிரானது. ஆனால் நிரபராதிகளுக்கு விடுதலை என்பது இருவருக்கும் ஒத்து வரக் கூடியதுதான். இந்த மாதிரி கேஸ்களில் ஏதாவது விஷயம் இருக்கிறதா என்று ஆராயும் வேலையை ஹாரி எடுத்துக் கொள்கிறான்.

அப்படி கிடைக்கும் ஒரு கேஸில் ராபர்டோ என்ற காவல்துறை அதிகாரியை அவரது மனைவி லூசிண்டா சுட்டுக் கொன்றுவிட்டதாக சிறையில் இருக்கிறாள். தான் நிரபராதி, வக்கீலின் அறிவுரையின் பேரில் வழக்காடாமல் தண்டனையை ஏற்றுக் கொண்டுவிட்டேன் என்கிறார். இதை ஆங்கிலத்தில்/லத்தீனில் no contest/nolo contendre என்பார்கள். ஹாரிக்கு சில முரண்கள் தென்படுகின்றன. உதாரணமாக பிணத்தின் புகைப்படத்தில் ராபர்டோ மறைவான இடத்தில் ஒரு gang tattoo குத்திக் கொண்டிருப்பது தெரிகிறது, அதனால் ராபர்டோ காவல் துறை அதிகாரியாக இருந்தாலும் குற்றங்களில் ஈடுபடுபவன், அவற்றுக்கு துணை போனவன் என்று யூகிக்கிறான். லூசிண்டா தனது கைகளில் துப்பாக்கி குண்டின் சுவடு இருக்கிறதா என்று சோதனை செய்தவள் ஒரு பெண் அதிகாரி என்கிறாள். அந்தப் பெண்ணைப் பற்றி வழக்கு தஸ்தாவேஜுகளில் எந்தக் குறிப்பும் இல்லை. ஹாரிக்கு gang பிரச்சினைகளால் யாரோ கொலை செய்துவிட்டு பழியை லூசிண்டா மேல் போட்டுவிட்டார்களோ என்று சந்தேகம். மேலும் லூசிண்டாவுக்காக வழக்காடிய வக்கீல் எப்படியாவது வழக்கை முடித்தால் போதும் என்று இருந்திருக்கிறான்.

ஹாரி லூசிண்டாவை சோதித்த பெண் அதிகாரி ராபர்டோவுடன் பணி புரிந்து சாஙகர் என்பவள் என்று கண்டுபிடிக்கிறான். மிக்கி தவறான தண்டனை என்று வழக்கு தொடுக்கிறான். செயற்கை நுண்ணறிவு நிரல் (Artificial Intelligence Program) ஒன்றை வைத்து லூசிண்டாவின் உயரமே உள்ள யாரும் ராபர்டோ மேல் பாய்ந்த குண்டுகளை சுட்டிருக்க முடியாது என்று நிரூபிக்கிறார்கள். ஆனால் செயற்கை நுண்ணறிவு நீதிமன்றங்களால் இன்னும் ஏற்கப்படாத அறிவியல் துறை, அதனால் உண்மை தெரிந்தாலும் அந்த நிரூபணம் நிராகரிக்கப்படுகிறது. துப்பாக்கி குண்டின் சுவடுகளை பரிசோதிக்க லூசிண்டாவின் கைகள் தேய்க்கப்பட்ட காகிதங்களில் லூசிண்டாவின் DNA இல்லை என்று நிரூபிக்கிறார்கள். ஆனால் இந்த மாதிரி மீள்விசாரணைகளில் புதிய தடயங்கள்தான் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்ற ஒரு technicality-யில் அதுவும் நிராகரிக்கப்படுகிறது. அதாவது உண்மை தெளிவாகத் தெரிகிறது, ஆனால் சட்டம் அந்த உண்மைகளை அங்கீகரிக்காது.

தகிடுதண்டா வேலைகள் செய்து சாங்கரின் DNA அந்த காகிதங்களில் இருக்கிறது என்பதை நிரூபிக்கிறார்கள். சாங்கர் மேலும் சாட்சி சொல்லக் கூடாது என்பதற்காக அவர் சார்ந்த மாஃபியா கும்பல் அவரை சுட்டுக் கொல்கிறது. லூசிண்டா விடுதலை, சுபம்!

படித்து முடித்த பிறகு யோசித்தால் உயரம் பற்றிய நிரூபணத்துக்கு செயற்கை நுண்ணறிவு தேவையே இல்லை; சாதாரண பள்ளி இயற்பியலே போதும் என்பது தெளிவாகப் புரிகிறது!

ஹாரி சாங்கர் ராபர்டோ கொலையான அன்று ராபர்டோவை பின்தொடர்ந்திருக்கிறாள் என்று நிறுவும் காட்சி, சாங்கர் அதற்கு சொல்லும் சப்பைக்கட்டுகள், அவை எல்லாம் பொய் என்று தெரிந்தாலும் அதை நிறுவ முடியாத நிலை, இன்னும் நேரம் வேண்டும் என்பதற்காக மிக்கி வேண்டுமென்றே நீதிபதியை சண்டைக்கு இழுத்து சிறை செல்லும் காட்சி, நீதிபதி மிக்கியின் தந்திரத்தை புரிந்து கொள்ளும் காட்சி எல்லாம் நன்றாக வந்திருக்கின்றன.

படிக்கலாம், ஆனால் படித்தே ஆக வேண்டிய நாவல் இல்லை. சுவாரசியத்துக்காக மட்டுமே படிக்கக் கூடிய பொழுதுபோக்கு நாவல் மட்டுமே. ஹாரி போஷ், மிக்கி ஹாலர் ஆகிய தொடர் பாத்திரங்கள் வருவதுதான் நாவலின் பெரிய கவர்ச்சி. த்ரில்லர் விரும்பிகளுக்கு மட்டும் பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: த்ரில்லர்கள்

தொடர்புடைய சுட்டிகள்:

ஜாக்கி சான் திரைப்படத்தின் மூலக்கதை

Foreigner (2017) ஜாக்கி சான் நடித்த திரைப்படம். Taken திரைப்படத்தின் கருதான். ஆனால் நல்ல மசாலா திரைப்படம்.

திரைப்படத்தின் மூலக்கதையை எழுதியவர் ஸ்டீஃபன் லெதர். அவர் 1992-இல் எழுதிய Chinaman என்ற நாவல்தான் இந்தத் திரைப்படமாக வந்தது.

எளிய சட்டகம்தான். IRA அமைப்பு சமாதானமாக போக முயற்சித்தாலும் வன்முறை மூலமாகவே பிரிட்டிஷாரை அயர்லாந்திலிருந்து வெளியேற்ற முடியும் என்று அமைப்புக்குள் பலரும் நினைத்த காலகட்டம். ஒரு சிறு குழு லண்டனில் பொதுமக்கள் நிறைய பேர் இருக்கும் இடங்களில் குண்டு வைக்கிறது.

அப்படி லண்டனில் ஒரு குண்டு வெடிப்பில் ஒரு இளம் வியட்நாமிய வம்சாவளி பெண்ணும் அவள் தாயும் இறக்கின்றனர். அப்பா நூயன் முன்னாள் வியட்நாம் ராணுவ வீரர். அமெரிக்காவுக்கு முதலில் எதிராகவும் பிறகு ஆதரவாகவும் போரில் ஈடுபட்டவர். வெடிகுண்டு செய்வது, வெடிப்பது, மறைந்திருந்து போரிடுவது ஆகியவற்றில் நிபுணர். இப்போது வயதாகிவிட்டது.

போருக்குப் பிறகு தப்பிக்கும் முயற்சியில் அவரது இரண்டு பெண்கள் இறந்துவிடுகிறார்கள். மிஞ்சியது மனைவியும் இந்தப் பெண்ணும்தான். அவர்களும் போயாயிற்று. எப்படியாவது பழி வாங்கத் துடிக்கிறார்.

குண்டு வைத்தது யார் என்று காவல்துறையை போட்டு துளைத்தெடுக்கிறார். அவர்கள் விரட்டிவிடுகிறார்கள். பிறகு ஒரு பத்திரிகையாளர் மூலமாக IRA அமைப்பின் அரசியல் கிளையின் ஒரு மூத்த அதிகாரியின் பெயரைத் – ஹென்னஸி – தெரிந்து கொள்கிறார்.

பெல்ஃபாஸ்ட்டுக்குப் போய் ஹென்னஸியை சந்திக்கிறார். ஹென்னஸி ஒத்துழைக்கவில்லை. ஒத்துழைக்க வைப்பேன் என்கிறார். ஹென்னஸியின் அலுவலகத்தில் ஒரு சின்ன குண்டுவெடிப்பை – எச்சரிக்கை விடுக்க – நடத்துகிறார். அன்று இரவு ஹென்னஸியின் காரில் குண்டு. ஹென்னஸி தனது பண்ணை வீட்டுக்கு சென்றுவிட அடுத்த நாள் அங்கும் குண்டு வைக்கிறார். தாக்க வரும் அடியாட்களை காயப்படுத்துகிறார். ஹென்னஸியை மிரட்டுகிறார். ஹென்னஸி எனக்கே தெரியாது, நானும் தேடிக் கொண்டிருக்கிறேன், இவர்கள் என் திட்டங்களுக்கு எதிராக இருக்கிறார்கள் என்கிறார்.

ஹென்னஸி சொன்னது உண்மைதான். இப்படி லண்டனில் குண்டு வைத்துக் கொண்டே போனால் பிரிட்டிஷார் மிகத் தீவிரமாக எதிரிகளை ஒடுக்கத்தான் செய்வார்கள். அதுவும் குண்டு வெடிப்புகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. அதை ஹென்னஸி விரும்பவில்லை. யாரென்று கண்டுபிடிக்க, அவர்களை பிரிட்டிஷ் காவல் துறையிடம் காட்டிக் கொடுக்க திட்டம் போடுகிறார். திட்டம் தோல்வி.

தோல்வி அடைவதை வைத்தே யார் இதை நடத்துகிறார்கள் என்று ஹென்னஸியால் கண்டுபிடிக்க முடிகிறது. நூயன் மாட்டிக் கொள்ளும் நிலையில் இருக்கும்போது அவருக்கும் சொல்லிவிடுகிறார்கள். கமாண்டோக்கள் இந்தக் குழுவைத் தாக்குவதற்கு சில நிமிஷங்கள் முன்னால் நூயனும் அங்கே சென்று அவர்களைத் தாக்குகிறார். கமாண்டோக்கள் தாக்குதலில் நூயனும் இறக்கிறார்.

கதையின் சிறந்த பகுதி நூயன் ஹென்னஸிக்கு கொடுக்கும் அழுத்தம்தான். சிறப்பாக விவரிக்கப்பட்டிருக்கிறது. அதுவும் வியட்நாமியரான நூயனை எல்லாரும் சீனர் என்றே குறிப்பிடுவது nice touch.

இன்னொரு nice touch; நூயனின் அத்தனை போராட்டத்துக்கும் பொருளே இல்லாமல் போவது. நூயன் வீட்டில் படுத்து தூங்கி இருந்தாலும் ஹென்னஸி யார் இப்படி குண்டு வைக்கிறார்கள் என்று கண்டுபிடித்து பிரிட்டிஷ் காவல் துறைக்கு சொல்லி இருப்பார். குண்டு வைத்த தீவிரவாதிகளை கொல்லும் முயற்சியில் நூயன் கமாண்டோக்களால் சுடப்பட்டு இறக்கிறார், அவரால் எதுவும் நடக்கவில்லை. அவரது போராட்டம், அவர் ஹென்னஸிக்குக் கொடுக்கும் அழுத்தம்தான் கதை, ஆனால் அந்த அழுத்தத்தால் எதுவும் மாறி இருக்காது என்பது நூயனின் போராட்டத்தை poignant ஆக மாற்றிவிடுகிறது.

விறுவிறுப்பாக செல்லும் நாவல். திரைப்படமும் விறுவிறுப்பாகத்தான் இருக்கிறது. ஆனால் இதெல்லாம் த்ரில்லர் விரும்பிகளுக்குத்தான். மற்றவர்கள் தவிர்த்துவிடலாம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: த்ரில்லர்கள்

தொடர்புடைய சுட்டிகள்:

பிடித்த சிறுகதை: “A Table Is a Table”

பீட்டர் பிச்ஸெல் (Peter Bichsel) எழுதிய சிறுகதை. எளிய சிறுகதைதான். ஆனால் புன்னகைக்காமல் படிக்க முடியாது. Whimsical பாணிக்கு சரியான உதாரணம். எனக்குத் தெரிந்த வரை தமிழில் இப்படி எழுதக் கூடியவர் கிருஷ்ணன் நம்பி ஒருவர்தான். இந்த மாதிரி ஒரு சிறுகதையை என்றாவது எழுதினால் என் ஜன்மம் சாபல்யம் அடையும்.

பிச்ஸெல் ஸ்விஸ் மொழியில் எழுதுபவர். நான் முதலில் ஆங்கிலத்தில்தான் படித்தேன். மொழிபெயர்த்தவர் லிடியா டேவிஸ். பிறகு எஸ்ரா தளத்தில் ஒரு மொழிபெயர்ப்பும் கிடைத்தது. சுசீந்திரன் என்பவர் மொழிபெயர்த்திருக்கிறார்.

நான் விவரிக்க எல்லாம் போவதில்லை. வசதிக்காக கீழே கதையைக் கொடுத்திருக்கிறேன், நேரடியாக படித்துக் கொள்ளுங்கள்!


A TABLE IS A TABLE

I want to tell a story about an old man, a man who no longer says a word, has a tired face, too tired to smile and too tired to be angry. He lives in a small town, at the end of the street or near the crossroads. It is almost not worthwhile describing him, hardly anything distinguishes him from other men. He wears a grey hat, grey pants, a grey jacket and in winter a long, grey overcoat, and he has a thin neck with dry, wrinkled skin, his white shirt collars are far too wide for him.

His room is on the top floor of the house, maybe he was once married and had children, maybe he used to live in another town. Certainly he was once a child, but that was at a time when children were dressed like grownups. One can see them this way in the grandmother’s photo album. In his room there are two chairs, one table, a rug, a bed, and a cupboard. On a small table stands an alarm clock, next to it lie old newspapers and the photo album, on the wall hang a mirror and a picture.

The old man would take a walk in the morning and a walk in the afternoon, exchange a few words with his neighbour, and in the evening sit at his table.

This never changed, it was the same even on Sundays. And when the man sat at the table, he would hear the clock ticking, always the clock ticking.

Then there came a special day, a sunny day, not too hot, not too cold, with birds chirping, friendly people, children playing – and the special thing was that suddenly the man liked all this.

He smiled.

“Now everything will change” he thought.

He undid the top button of his shirt, took his hat in his hand, quickened his pace, even had a spring in his step as he walked, and was happy.  He entered his street, nodded to the children, arrived in front of his house, climbed to the top of the stairs, took the key out of  his pocket, and unlocked the door of his room.

But in his room everything was the same, a table, two chairs, a bed. And when he sat down, he heard the ticking again, and all his happiness left him, because nothing had changed.

And the man was overcome with rage.

He saw in the mirror that his face was turning red, his eyes were squeezing shut; then he clenched his fists, lifted them up, and struck the tabletop with them, first only one blow, then another, and then he began to drum on the table and at the same time shout over and over:

“It must change, it must change!”

And he could no longer hear the alarm clock.

Then his hands began to hurt, his voice failed, then he could hear the clock again, and nothing changed.

“Always the same table,” said the man, “the same chairs, the bed, the picture. And I call the table a table, I call the picture a picture, the bed is named bed, and people refer to the chair as a chair.  But why, really?  The French call the bed ‘lee‘, the table ‘tahbleh‘, they name the picture ‘tahblo‘ and the chair ‘shez‘, and they understand one another. And the Chinese understand one another too.

“Why isn’t the bed called picture,” thought the man and smiled, then he laughed, laughed until the neighbours knocked on the wall and shouted “Quiet!”

“Now it’s changing” he shouted and from now on called the bed “picture”.

“I’m tired, I’ll go to picture,” he would say, and in the mornings he would often remain lying in picture for a long time and reflect on what he would now call the chair, and he named the chair “alarm clock”.

So he got out of bed, dressed himself, sat down on the alarm clock, and rested his arms on the table. But the table was no longer called table, it was now called rug.

So in the morning the man would leave his picture, get dressed, sit down at the rug on the alarm clock and reflect on which things he could now call by what names.

The bed he called picture.

The table he called rug.

The chair he called clock.

The newspaper he called bed.

The mirror he called chair.

The clock he called photo album.

The cupboard he called newspaper.

The rug he called cupboard.

The picture he called table.

And the photo album he called mirror.

So:

In the morning, the old man would remain lying in picture for a long time, at nine o’clock the photo album would ring, the man would get up and step onto the cupboard so that his feet wouldn’t freeze, then he would take his clothes out of the newspaper, get dressed, look in the chair on the wall, sit down on the clock at the rug and leaf through the mirror until he came to the table of his mother.

The man found this fun, and he practiced the whole day and memorized the new words.  Now everything was renamed: he was no longer a man, but a foot, and the foot was a morning, and the morning a man.

Now you can go on writing the story yourself. And then you can do as the man did and interchange the other words:

ringing is called stepping,
freezing is called looking,
lying is called ringing,
standing is called freezing,
stepping is called leafing.

So that it reads:

In the man, the old foot would remain ringing in picture for a long time, at nine o’clock the photo album would step, the foot would freeze up and leaf onto the cupboard so that it wouldn’t look at the morning.

The old man bought himself some blue school notebooks and wrote them full of the new words, and this kept him very busy, and he was now only rarely seen on the street.

Then he learned the new terms for all things, and as he did so he forgot more and more the right ones. He had a new language that belonged only to him.

From time to time he would dream in the new language, and then he translated the songs from his schooldays into his language, and he sang them softly to himself.

But soon translating was also hard for him, he had almost forgotten his old language, and he had to search for the right words in his blue notebooks. And talking to people made him anxious. He had to think for a long time what people call things.

His picture people call bed.

His rug people call table.<

His alarm clock people call chair.

His bed people call newspaper.

His chair people call mirror.

His photo album people call alarm clock.

His newspaper people call cupboard.

His cupboard people call rug.

His table people call picture.

His mirror people call photo album.

And it came to the point that the man had to laugh when he heard people talking.

He had to laugh when he heard the way someone said:

"Are you going to the soccer game tomorrow, too?" Or when someone said: "It’s been raining for two months now." Or when someone said: "I have an uncle in America."

He had to laugh, because he did not understand all that.

But this is not a funny story.

It began sadly and it ends sadly.

The old man in the grey coat could no longer understand people, that wasn’t so bad.

Much worse was that they could no longer understand him.

And therefore he said nothing more.

He was silent,
spoke only to himself,
did not even greet them.

தொகுக்கப்பட்ட பக்கம்: எழுத்துக்கள்

தொடர்புடைய சுட்டிகள்:

குல்சாருக்கு ஞானபீட விருது

பிரபல திரைப்பட இயக்குனர், பாடலாசிரியர், கவிஞர், எழுத்தாளர் குல்சாருக்கும், ஆன்மீகத் தலைவர், சமஸ்கிருத வல்லுனர், எழுத்தாளர், கவிஞர் ராம்பத்ராச்சார்யாவுக்கும் ஞானபீட விருது வழங்கப்பட்டிருக்கிறது.

குல்சாரை நான் திரைப்பட ஆளுமையாகவே அறிவேன். என் அரைகுறை ஹிந்திக்கே அவரது பாடல்கள் பிடித்திருக்கின்றன. ஆனால் அவரது புனைவுகளை நான் சுமார் என்றே மதிப்பிடுவேன். அவரது கவிதைகளை மதிப்பிடும் அளவுக்கு எனக்கு ஹிந்தி பத்தாது, அப்படியே ஹிந்தி தெரிந்திருந்தாலும் எனக்கும் கவிதைக்கும் காத தூரம். பாடல்களை வைத்து நிச்சயமாக சொல்ல முடியாதுதான். இருந்தாலும் நல்ல கவிஞராக இருக்கலாம், அதனால்தான் விருது என்று வைத்துக் கொள்ள வேண்டியதுதான்.

குல்சாரைப் பற்றியே நிச்சயமாக கருத்து சொல்ல முடியாது, ராம்பத்ராசார்யா சுத்தமாக முடியாது. துளசிதாசரைப் பற்றிய முக்கிய ஆராய்ச்சியாளராம். நான்கு காவியங்களை எழுதி இருக்கிறாராம். நூறு புத்தகங்களுக்கு மேல் எழுதி இருக்கிறாராம். விஸ்வஹிந்து பரிஷத் தலைவராம். இந்த ஆட்சியில் அதுவும் ஒரு முக்கிய காரணமாக இருந்திருக்கும். இருந்தாலும் குல்சாருக்கு சந்தேகத்தின் பலனை அளிப்பது போல வேதாந்தம், தர்க்கம் ஆகியவற்றை கரைத்துக் குடித்திருக்கும் நிபுணருக்கும் தர வேண்டியதுதான்.

ராம்பத்ராசார்யா சிறு வயதிலேயே கண் பார்வையை இழந்தவர். புத்தகங்கள் அனைத்தும் அவர் சொல்லச் சொல்ல அடுத்தவர்கள் வரி வடிவத்தில் மாற்றியதாம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: விருதுகள்

தொடர்புடைய சுட்டிகள்:

வன்னியரும் க்ஷத்ரியரும்

அர்த்தநாரீச வர்மா என்ற விடுதலைப் போராட்ட பங்களிப்பாளர், வன்னியர் ஜாதித் தலைவரைப் பற்றி சமீபத்தில் படித்தேன்.

வர்மா சேலத்துக்காரர். நிறைவாழ்வு வாழ்ந்திருக்கிறார். 1874-இல் பிறந்தவர் 0 வயதில் 1964-இல் இறந்தார். க்ஷத்ரியன் என்ற இதழை பல ஆண்டுகள் நடத்தி இருக்கிறார்.

என்னை ஆச்சரியப்பட வைத்தது அவர் எழுதிய ஸ்ரீவன்னிவம்சபிரகாசிகை (1912) என்ற சிறிய நூல். வன்னியர்கள் ஷத்ரியர்கள் என்று நிறுவ படாதபாடு படுகிறார். நான் “உயர்ந்த” ஐயர் ஜாதியில் பிறந்ததாலோ என்னவோ, என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. சாஸ்திரப்படி க்ஷத்ரியனாக இருந்தால் என்ன உசத்தி, எதற்காக இப்படி முடியைப் பிய்த்துக் கொள்கிறார்?

அதிலும் ஒரு பட்டியல் கொடுத்திருக்கிறார் பாருங்கள், அசந்துவிட்டேன். ஜாதிகள் பிறந்தது வர்ணக் கலப்பாலாம், அதாவது வேறுவேறு வர்ணத்தை சேர்ந்தவர்கள் மணந்து கொள்வதாலாம். அனுலோமம் (“உயர்ந்த” வர்ணத்து ஆண்கள் “தாழ்ந்த” குலத்துப் பெண்களை மணப்பது), பிரதிலோமம் (“தாழ்ந்த” குலத்து ஆண்கள் “உயர்ந்த” குலத்துப் பெண்களை மணப்பது) அதைத் தவிர சங்கர பேதம் – இது என்ன என்று அவர் விளக்கவில்லை – இவற்றால்தான் ஜாதிகள் உருவாயிற்றாம். அனுலோமத்திலேயே பிராமண அனுலோமம், க்ஷத்ரிய அனுலோமம் என்கிறார், அது என்ன பிராமண பிராமண வர்ணக் கலப்பு என்று புரியவில்லை.

அப்படி அனுலோமத்தால் அறுபது ஜாதியினரும் பிரதிலோமத்தால் ஆறு ஜாதியினரும் சங்கர பேதத்தால் 14 ஜாதியினரும் ஏற்பட்டனாராம். உதாரணமாக குருக்கள் பிராமண-பிராமண அனுலோமத்தால் உருவான ஜாதியாம். ஜோதிடர் பிராமண-க்ஷத் ரிய அனுலோமமாம். நாவிதரும் குயவரும் பிராமண ஆண்-வைசியப் பெண் கலப்பாம். கூத்தாடிகள் பிராமண ஆண்-சூத்திரப் பெண் கலப்பாம். இந்த மாதிரி விஷயமெல்லாம் உண்மையிலேயே ஏதாவது ஸ்மிருதி சாஸ்திரத்தில் எழுதப்பட்டிருக்கிறதா?

அப்புறம் சேர சோழ பாண்டிய பல்லவர் எல்லாரும் வன்னியர்தானாம். இவர்கள் எல்லாருமே யயாதியின் மகனான துர்வசுவின் வம்சாவளியினராம். பரதவர், நாடார்கள், வளையல் செட்டிகள் எல்லாரும்  தங்களை க்ஷத்ரியர் என்று சொல்லிக் கொள்வது பொய்யாம்.

நாடார்கள் தாங்கள் “தாழ்ந்த” ஜாதியினர் அல்ல என்று நிறுவ பல ஐதீகங்களை, தொன்மங்களை தங்கள் வசதிக்கேற்ப வளைத்துக் கொண்டார்கள், சில சமயம் உருவாக்கினார்கள் என்று படித்திருக்கிறேன். நாடார்கள் “தாழ்ந்த” ஜாதியினர் என்று கருதப்பட்டார்கள், ஒரு காலத்தில் அவர்கள் கோவிலுக்குள் வரத் தடை இருந்தது என்றும் தெரியும். அப்படி “தாழ்ந்த” ஜாதியினர் என்று கருதப்பட்டவர்கள் தாங்கள் “உயர்ந்த” ஜாதியினரே என்று நிறுவ போராடினால் ஏன் இப்படி செய்தார்கள்/செய்கிறார்கள் என்று புரிகிறது. வன்னியர்கள் எனக்குத் தெரிந்த வரை எப்போதும் “தாழ்ந்த” ஜாதியினராக கருதப்பட்டதில்லை, அவர்கள் ஏன் இப்படி போராட வேண்டும் என்பது எனக்கு புரியவில்லை.

ராமதாஸ் போன்றவர்கள் இவரைக் கொண்டாடுவார்கள் என்று நினைக்கிறேன்.

சிறிய புத்தகம், ஜாதி அபிமானம் எப்படி எல்லாம் வெளிப்படுகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. அதற்காகவே படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்

தொடர்புடைய சுட்டிகள்:

உமாசந்திரன்: முள்ளும் மலரும்

முள்ளும் மலரும் திரைப்படம் வெளியானபோது நான் சிறுவன். சிவாஜி எம்ஜிஆர் ஜெய்ஷங்கர் காலம் முடிந்து ரஜினியும் கமலும் நண்பர்கள் மத்தியில் நாயகர்களாக உருவாகிக் கொண்டிருந்த நேரம். நல்ல படம் என்று பார்த்தவர்கள் எல்லாரும் சொன்னார்கள். பாடல்கள் எல்லாம் பிரமாதமாக இருந்தன. ஆனால் வீட்டில் ஆடிக்கு ஒரு முறை அமாவாசைக்கு ஒரு முறைதான் திரைப்படம் பார்க்க அனுமதியும் காசும் கிடைக்கும். அதனால் வழக்கம் போல பார்க்க முடியவில்லை.

அதிர்ஷ்டவசமாக திரைப்படம் வெகு சீக்கிரம் தொலைக்காட்சியில் வந்தது. அப்போதெல்லாம் ஐம்பது வீடுகளில் ஒரு தொலைக்காட்சி இருந்தால் அதிகம். தெரிந்தவருக்கு தெரிந்தவருக்கு தெரிந்தவருக்கு தெரிந்தவர் என்று யார் வீட்டிலோ பத்துக்கு பத்து அடி இருக்கும் சின்ன அறையில் 40-50 பேர் அடைந்து கொண்டு பார்த்திருக்கிறோம். அப்படி பார்த்த திரைப்படங்களில் ஒன்று. அந்தத் தொலைக்காட்சி மகானுபாவர் வீட்டுக்கு அதற்கு முன்னும் போனதில்லை, பின்னாலும் போனதில்லை. அந்தக் குடும்பத்தில் ஒருவரையும் தெரியாது.

திரைப்படத்தை பார்த்து 40-45 வருஷம் இருக்கும். அப்போதிலிருந்து தேடிக் கொண்டிருந்த புத்தகம். சமீபத்தில்தான் படிக்க முடிந்தது.

என்னை வியக்க வைத்த நாவல். இந்த நாவலை வைத்து, இதன் பாத்திரங்களை வைத்து இத்தனை நல்ல படத்தை எப்படி மகேந்திரன் எடுத்தார் என்று ஆச்சரியமாக இருந்தது. எப்படி இந்தக் கருவை வைத்து ஒரு அழகிய திரைக்கதையை உருவாக்கினார்? அவரே பாதி படித்ததும் மூடி வைத்துவிட்டேன், எனக்கேற்ப ஒரு திரைக்கதையை உருவாக்கினேன் என்று சொல்கிறார். ஆனால் அவர் செய்திருப்பதெல்லாம் அனாவசிய பகுதிகளை தவிர்த்திருப்பதும் சில மெல்லிய மாற்றங்களை செய்திருப்பதும்தான். முடிவை மாற்றி இருக்கிறார், மங்காவின் பாத்திரத்தை கொஞ்சம். மற்றபடி கதையில் வரும் சம்பவங்கள்தான் அனேகமாக…

கதை தெரிந்ததுதான். நாவலின் முடிவு மட்டும்தான் கொஞ்சம் வேறுபடுகிறது. காளி கோபத்தில் தன் தங்கையையும் அவள் மணந்த எஞ்சினியரையும் விஞ்ச் விபத்தில் கொல்லப் பார்க்கிறான். மங்கா தன் உயிரைக் கொடுத்து காப்பாற்றிவிடுகிறாள், காளியும் அவளுடன் இறக்கிறான்.

1967-இல் கல்கி வெள்ளிவிழா நாவல் போட்டியில் முதல் பரிசு பெற்ற நாவல். உமாசந்திரன் பூர்ணம் விஸ்வநாதனின் சகோதரர்.

நாவல் அந்தக் காலத்தில் வெற்றி பெற்றிருக்கும்தான். ஆனால் வணிக நாவலே. ஓரளவு இயல்பான பாத்திரங்களால்தான் இன்னும் கொஞ்சம் தாக்குப் பிடிக்கிறது. ஆனால் திரைப்படத்தால்தான் நினைவில் நிற்கும். ஜெயமோகன் இதை தனது வணிக நாவல் பரிந்துரைப் பட்டியலில் சேர்க்கிறார்.

திரைப்படத்தைப் பாருங்கள் என்றுதான் பரிந்துரைப்பேன். நிறைய நேரம் இருந்தால் நாவலையும் படிக்கலாம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் வணிக நாவல்கள்

தொடர்புடைய சுட்டிகள்:

லீ சைல்டின் ஜாக் ரீச்சர் நாவல்கள்

அடுத்த ஜாக் ரீச்சர் நாவல் – Secret (2023) – வெளியாகி அதைப் படிக்கவும் படித்துவிட்டதால் மீள்மீள்மீள்…பதிவு.

இந்தத் தொடரை ஆரம்பித்தவர் லீ சைல்ட். அவர் இரண்டு மூன்று வருஷமாக எழுதுவதில்லை, ஆனால் அவரது தம்பி ஆண்ட்ரூ சைல்ட் தொடர்கிறார். இருபது முப்பது நாவல்கள் வந்திருக்கின்றன.

ஜாக் ரீச்சர் நாவல்கள் pulp fiction மட்டுமே. அதுவும் முதலில் இருந்த கவர்ச்சி, விறுவிறுப்பு எல்லாம் லீ சைல்ட் காலத்திலேயே குறைய ஆரம்பித்துவிட்டது. ஆண்ட்ரூ சைல்ட் காலத்தில் சொல்லவே வேண்டாம். லீ சைல்ட் காலத்தில் மூளையைக் கழற்றிவைத்துவிட்டு ரஜினிகாந்த் படம் பார்ப்பது போல என்று வைத்துக் கொண்டால் ஆண்ட்ரூ சைல்ட் காலத்தில் பாலகிருஷ்ணா நடித்த தெலுகு படம் பார்ப்பது போல இருக்கிறது.

இருந்தாலும் ஏன் விடாமல் படிக்கிறேன் என்றுதான் யோசித்துக் கொண்டிருந்தேன். Sunk cost fallacy என்றுதான் தோன்றுகிறது. நான் எப்போதாவது பாலகிருஷ்ணா படங்களைப் பார்ப்பதும் உண்டு.

ரீச்சர் நாவல்களின் கவர்ச்சி அவற்றின் சட்டகம்தான். எளிமையான சட்டகம்தான், ஆனால் நாயகத் தன்மை எங்கோ அடியில் மறைந்திருக்கிறது. சில விதங்களில் சாமுராய் கதைகளை, வெஸ்டர்ன் கௌபாய் நாயகர்களை நினைவுபடுத்துகிறது.  எங்கிருந்தோ வரும் ஒருவன் ஊரில் உள்ள குற்றச் சூழ்நிலையை ஒழிக்கும் கருதான் மீண்டும் மீண்டும். எதுவும் நினைவு வைத்துக் கொள்ள வேண்டிய நாவல் இல்லை. பழக்கமான வழியில் செல்லும், ஆனால் கொஞ்சம் புத்திசாலித்தனமான, த்ரில்லர் எழுத்து. தொடரில் பலவும் நல்ல பொழுதுபோக்கு நாவல்கள், பயணத்தில் படிக்க ஏற்றவை. எங்கிருந்தோ வந்து தீயவர்களை அழிக்கும் நாயகன் படிமத்தில் ஒரு கவர்ச்சி இருக்கிறது. அந்தக் கவர்ச்சியால்தான் இந்தத் தொடர் பெரிய வெற்றி பெற்றது. ஒரு நாவல் – One Shot டாம் க்ருய்ஸ் நடித்து திரைப்படமாகவும் வந்தது. தொலைக்காட்சி தொடரும் வந்தது.

ரீச்சர் ஆறடி மூன்றங்குலம் உயரமும் அதற்கேற்ற பருமனும் வலிமையும் சண்டையில் வெல்வதற்கே ஆன மனநிலையும் உடையவன். பற்றாக்குறைக்கு முன்னாள் ராணுவ போலீஸ்துறை அதிகாரி. கை சண்டை, துப்பாக்கி சுடுதல் ஆகியவற்றில் நிபுணன். ராணுவத்திலிருந்து வெளியே வந்த பிறகு அவனுக்கு வேலை, தொழில், குடும்பம், வீடு வாழ்க்கையை அமைத்துக் கொள்ள விருப்பமில்லை. அதனால் கால் போன பாதையில் அமெரிக்கா பூராவும் சுற்றுகிறான். முகவரியே கிடையாது. அணிந்திருக்கும் உடைகள் அழுக்கானால் அதைத் தூக்கிப் போட்டுவிட்டு புதிதாக வாங்கிக் கொள்வான். அணிந்திருக்கும் உடை, பல் தேய்க்க ஒரு பிரஷ் தவிர அவனுக்கு வேறு எதுவும் “சொத்து” கிடையாது. பெட்டி, படுக்கை, கார், அலைபேசி எதுவும் கிடையாது. ராணுவத்திலிருந்து ஓய்வூதியம் வருகிறது, பணம் பற்றாவிட்டால் எங்காவாது உடல் உழைப்பு தேவைப்படும் வேலை செய்து பணம் சம்பாதித்துக் கொள்வான். கால் போன போக்கில் நடப்பான், யாராவது லிஃப்ட் கொடுத்தால் சரி, இல்லாவிட்டால் பஸ், ரயில் எதிலாவது போவான்..

ஒவ்வொரு புத்தகத்திலும் அவன் போகுமிடத்தில் ஏதாவது பிரச்சினை இருக்கும். ரீச்சர் உதவுவான், துப்பறிவான், அடி உதை சண்டை போடுவான். வில்லன் யாரென்று கண்டுபிடிப்பான், அவர்களை அழித்துவிட்டு அடுத்த ஊருக்கு கிளம்பிவிடுவான்.

சமீபத்தில் படித்த Secret (2023) – சுமார்தான். போபால் விஷவாயு கசிவு மாதிரி 1969-இல் ஒரு சம்பவம் நடக்கிறது, ஆயிரம் பேருக்கு மேல் இறந்தாலும் ஏழே பேர் இறந்ததாக சொல்லி அமுக்கி விடுகிறார்கள். ஒரு அதிகாரி செய்த நாச வேலையால்தான் இது நடந்தது என்று அவன் மேல் பழி விழுகிறது. 23 வருஷம் கழித்து 1992-இல் அவனுடைய இரண்டு பெண்கள் அந்த திட்டத்தில் பங்கேற்ற ஒவ்வொருவரையும் கொல்கிறார்கள். ரீச்சர் இன்னும் ராணுவத்தில்தான் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறான். அந்தப் பெண்கள் யார் என்று துப்பு துலக்கி பெரிய அயோக்கியத்தனம் செய்த வில்லனைப் பிடிக்கிறான்.

jack_reacherஇந்தத் தொடரில் சிறந்த நாவலாக நான் கருதுவது One Shot (2005). ஐந்து கொலைகளில் குற்றம் சாட்டப்பட்டவன் மீண்டும் மீண்டும் சொல்வது – “நான் குற்றமற்றவன், Get me Jack Reacher” திறமைசாலியான அவன் நான் நிரபராதி என்று நிரூபிப்பான் என்கிறான். ஆனால் ரீச்சர் அவன் குற்றவாளி என்று நினைக்கிறான். என்னாகிறது என்பதுதான் கதை.

சிறந்த வில்லன் – ஹுக் ஹோபி – வருவது Tripwire (1999) என்ற கதையில். ஹோபி ரீச்சரையும், ரீச்சரின் முன்னாள் மேலதிகாரி கார்பரின் மகள் ஜோடியையும் கொல்ல முயற்சி செய்கிறான்.

Bad Luck and Trouble (2007) இன்னொரு நல்ல மசாலா நாவல். விவரமாக இங்கே.

Blue Moon (2019) ஜாலியான மசாலா கதை. லீ சைல்ட் மட்டும் எழுதிய கடைசி நாவல் இதுதான். ரொம்ப லாஜிக் எல்லாம் பார்க்கக் கூடாது. பயணத்தில் படிக்க ஏற்றது. வழக்கம் போல தனி மனிதனான ஜாக் ரீச்சர் ஊரில் போட்டி போடும் இரண்டு மாஃபியா கும்பல்களையும் அழிக்கிறான். க்ளிண்ட் ஈஸ்ட்வுட் நடித்த For a Few Dollars More திரைப்படத்தை கொஞ்சம் நினைவுபடுத்தியது. விஜய், அஜித் எல்லாம் இதை மூலக்கதையாக வைத்து படம் எடுக்கலாம், இன்று வருவதை விட கொஞ்சம் நன்றாகவே இருக்கும்.

Blue Moon-க்கு பிறகு வந்த நாவல்கள் – Sentinel, Better off Dead, No Plan B, Secret – ஆண்ட்ரூ சைல்டோடு இணைந்து எழுதப்பட்டவை.

இது வரை 29 நாவல்கள் வந்திருக்கின்றன.

  1. Killing Floor, 1997
  2. Die Trying, 1998
  3. Tripwire, 1999
  4. Running Blind, 2000
  5. Echo Burning, 2001
  6. Without Fail, 2002
  7. Persuader, 2003
  8. The Enemy, 2004
  9. One Shot, 2005
  10. The Hard Way, 2006
  11. Bad Luck and Trouble, 2007
  12. Nothing to Lose, 2008
  13. Gone Tomorrow, 2009
  14. 61 Hours, 2010
  15. Worth Dying For, 2010
  16. Affair, 2011
  17. A Wanted Man, 2012
  18. Never Go Back, 2013
  19. Personal, 2014
  20. Make Me, 2015
  21. Night School, 2016
  22. No Middle Name, 2017
  23. Midnight Line, 2017
  24. Past Tense, 2018
  25. Blue Moon, 2019
  26. Sentinel, 2020
  27. Better off Dead, 2021
  28. No Plan B, 2022
  29. Secret, 2023

தொகுக்கப்பட்ட பக்கம்: த்ரில்லர்கள்

தொடர்புடைய சுட்டி: லீ சைல்டின் தளம்

சவால்: அகதா கிறிஸ்டி மர்மத்தை கண்டுபிடியுங்கள்

அகதா கிறிஸ்டியின் நன்றாக கட்டமைக்கப்பட்ட நாவல்களில் ஒன்று Five Little Pigs (1942). புத்தகத்தின் இன்னொரு பெயர் Murder in Retrospect. கிறிஸ்டிக்கு இன்றும் இருக்கும் பிராபல்யத்துக்கு இந்த மாதிரி நாவல்களே காரணம்.

உங்களுக்கு ஒரு சவால். நான் கிறிஸ்டி கொடுத்திருக்கும் துப்புகளை என்னால் முடிந்த வரை சுருக்கமாக, ஆனால் முழுதாக கொடுத்திருக்கிறேன். உங்களால் கிறிஸ்டி போட்ட முடிச்சை அவிழ்க்க முடிகிறதா என்று பாருங்கள்!

என்ன கதை? அம்யாஸ் க்ரேல் மதிக்கப்படும் ஓவியர். 16 வருஷங்களுக்கு முன் விஷம் வைத்து கொல்லப்படுகிறார். மனைவிதான் கொன்றார் என்று வழக்கு. ஏனென்றால் அம்யாஸ் அவரது மனைவியை விட்டு விலகி வேறு ஒரு இளம் பெண்ணை மணம் செய்ய திட்டமிட்டிருக்கிறார். மனைவி தண்டிக்கப்பட்டு சிறையில் இறந்தும் விடுகிறார். அவரது மகள் வளர்ந்து பெரியவளாகி போய்ரோவிடம் வருகிறாள் – என் அம்மா எனக்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறாள், அதில் தான் நிரபராதி என்கிறாள், உண்மையைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று.

எளிய சட்டகம். அம்யாஸ் இறந்தபோது அங்கே அம்யாஸைத் தவிர்த்து ஐந்தே பேர்தான் இருக்கிறார்கள்.  மனைவி கரோலின்; அம்யாஸின் “காதலி”, எல்சா; அம்யாஸ் எல்சாவை ஓவியமாக வரைந்து கொண்டிருக்கிறார். அம்யாஸின் நண்பர், அண்டை வீட்டுக்காரர் ஃபிலிப்; ஃபிலிப்பின் அண்ணன் மெரடித் – அமெச்சூர் தாவர ஆராய்ச்சியாளர், பல விஷங்கள் அவரது சோதனைச்சாலையில் இருக்கின்றன; கரோலினின் சகோதரி, பதின்ம வயதினள் ஏஞ்சலா; ஏஞ்சலாவை பார்த்துக் கொள்ளும் governess வில்லியம்ஸ். இந்த ஐந்து பேர்தான் Five Little Pigs.

கரோலின், எல்சா, ஃபிலிப், மெரடித், ஏஞ்சலா, வில்லியம்ஸ் ஆறு பேராயிற்றே என்று யோசிக்கிறீர்களா? கிறிஸ்டி பதின்ம வயது சிறுமியையோ, அல்லது அம்யாஸ்-கரோலினின் குழந்தையையோ கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. இல்லை இறந்தே போய்விட்ட கரோலினை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்றும் வைத்துக் கொள்ளலாம். மேலும் அவருக்கு Five Little Pigs என்ற குழந்தைகள் பாடலை (nursery rhyme) பயன்படுத்த வேண்டும்.

போய்ரோ ஒவ்வொருவரையும் பேட்டி காண்கிறார். சில விஷயங்கள் தெளிவாகத் தெரிகின்றன.

  • அம்யாஸுக்கு ஓவியம் வரைவதுதான் முக்கியம், மிச்ச எல்லாம் – குடும்பம், காதல், பெண்கள், பணம்… – இரண்டாம் பட்சம்தான்.
  • எல்சா எல்லார் முன்னாலும் நானும் அம்யாசும் திருமணம் செய்து கொள்ளப் போகிறோம் என்று சொல்கிறாள். அம்யாஸும் அரை மனதாக அதை  பொதுவெளியில் ஒத்துக் கொள்கிறார். கரோலினோடு பெரிய சண்டை. அம்யாசிடம் உன்னை கொன்றேவிடுவேன் என்று கரோலின் சொல்வதை இரண்டு மூன்று பேர் கேட்டிருக்கிறார்கள்.
  • அம்யாஸுக்கு பல பெண்களோடு முன்னாலும் உறவு இருந்திருக்கிறது. ஆனால் இதற்கு முன்னால் எப்போதும் திருமணம் என்ற நிலைக்குப் போனதில்லை. ஒவ்வொரு முறையும் கரோலினிடம் திரும்பி வந்திருக்கிறார், மண உறவு வலிமையாகத்தான் இருந்திருக்கிறது.
  • கரோலின் மெரடித்தின் சோதனைச்சாலையிலிருந்து அம்யாஸைக் கொன்ற விஷத்தை யாருக்கும் தெரியாமல் எடுத்திருக்கிறாள்.
  • விஷம் அம்யாஸ் குடித்த பியரில் கலக்கப்பட்டிருக்கிறது, பியரை அம்யாஸுக்கு எடுத்துச் சென்றது கரோலின். விஷம் அம்யாஸின் கோப்பையில் கண்டுபிடிக்கப்பட்டது, ஆனால் பியர் புட்டியில் விஷத்தின் எந்தச் சுவடும் இல்லை.
  • கரோலினுக்கு சில சமயம் கட்டுக்கடங்காத கோபம் வரும். சிறு வயதில் தன் தங்கை ஏஞ்சலா குழந்தையாக இருந்தபோது ஒரு பேப்பர்வெயிட்டை தூக்கி அவள் மேல் அடித்திருக்கிறாள், ஏஞ்சலாவுக்கு ஒரு கண்ணில் பார்வை போய்விட்டது. குற்ற உணர்ச்சியால் ஏஞ்சலாவுக்கு நிறைய செல்லம் கொடுக்கிறாள், ஏஞ்சலாவுக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கிறாள்.
  • ஏஞ்சலாவுக்கும் அம்யாஸுக்கும் நிறைய சண்டை. ஏஞ்சலாவுக்கு கன்னாபின்னாவென்று கோபம் வரும். ஏஞ்சலாவும் அம்யாஸ் மீது ஒரு பேப்பர்வெயிட்டை தூக்கி அடித்திருக்கிறாள்.
  • கரோலின் கொலை வழக்கை விட்டேத்தியாக அணுகி இருக்கிறாள், தனக்கு தண்டனை கிடைத்தால் கிடைக்கட்டும் என்றுதான் இருந்திருக்கிறாள்.

வழக்கின் போது தெரியாத உண்மை ஒன்று போய்ரோவின் விசாரணையில் தெரிகிறது. கரோலின் பியர் புட்டியில் உள்ள ரேகைகளை துடைத்து அதை அம்யாஸின் கையில் திணித்திருக்கிறாள். அம்யாஸ் தற்கொலை செய்துகொண்டார் என்று ஸ்தாபிப்பதற்காக.

இந்த உண்மைகளை வைத்து போய்ரோவுக்கு கரோலின் கொலையாளி இல்லை என்று தெரிந்துவிடுகிறது. அவர் விளக்கிய பிறகு நமக்கும் புரிந்துவிடுகிறது. பிறகு யார் கொலை செய்தது? மேலே இருக்கும் உண்மைகளை வைத்தே அதையும் போய்ரோ கண்டுபிடித்துவிடுகிறார். உங்களால் ஊகிக்க முடிகிறதா?

போய்ரோ மேலும் தெளிவு பெறுவதற்காக எல்லாரிடம் ஆளுக்கு ஒரு கேள்வி கேட்கிறார். அவருக்கு ஏஞ்சலாவிடம் கேட்க எதுவும் இல்லை. ஒரு முறை அம்யாசோடு போட்ட சண்டையில் ஏஞ்சலா உனக்கு தொழுநோய் பிடித்து நீ அழுகி சாவாய் என்று சபித்திருக்கிறாள். அதனால் ஏஞ்சலாவிடம் போய்ரோ நீ இந்தக் கொலைக்கு முன்னால் Moon and Six Pence நாவலைப் படித்திருக்கிறாயா என்று கேட்கிறார். அந்த reference புன்னகைக்க வைத்தது.

எளிய சட்டகம், ஆனால் அந்த சட்டகம் நன்றாகப் பயன்படுத்தப்படுகிறது. நல்ல முடிச்சு. நன்றாக மறைக்கப்பட்டிருக்கும், போகிற போக்கில் சொல்லப்பட்டிருக்கும் துப்புகள் (clues).  பின்னால் அந்தத் துப்புக்கு இருக்கும் முக்கியத்துவம் தெரியும்போது அட ஆமாம் என்று தோன்ற வைக்கிறது. கிறிஸ்டியின் வழக்கமான red herring உத்தி – யாரையாவது கொலையாளி மாதிரி தோன்றவைத்துவிட்டு அவர் இல்லை என்று அடுத்தவருக்கு நகர்வது – இந்த நாவலில் குறைவாக, ஆனால் நன்றாக பயன்படுத்தப்படுகிறது.

துப்பறியும் நாவல்கள் பல முறை வெறும் விடுகதையாக முடிந்துவிடுகின்றன.  ஜான் டிக்சன் கார், ஆஸ்டின் ஃப்ரீமன் போன்றவர்கள் பிரமாதமான விடுகதைகளை கட்டமைக்கிறார்கள், சுவாரசியமான உத்திகளை கையாள்கிறார்கள், ஆனால் அவை அனேகமாக துப்பறியும் நாவல் விரும்பிகளை மட்டுமே கவர்கின்றன. அவற்றிலிருந்து கிறிஸ்டியை வேறுபடுத்துவது ஒன்றுதான். கிறிஸ்டியின் எல்லா நாவல்களிலும் அடிநாதமாக இருப்பது மனிதர்கள் மாறுவதில்லை என்ற கருத்துதான். உணர்ச்சிவசப்படுதல், கோழைத்தனம், வீரம், புத்திசாலித்தனம், அப்பாவித்தனம் என்று இருக்கும் அடிப்படை குணங்களை மாற்றிக் கொள்வது மிகக் கடினம். மாற்றிக் கொள்வது என்ன, கட்டுக்குள் வைத்திருப்பதே மிகக் கடினம். போய்ரோவின் துப்பறிதலின் அடிப்படை அதுதான். அதனால்தான் இந்த மாதிரி நாவல்கள் – பாத்திரங்கள் வெகு தட்டையாக இருந்தாலும் கூட – விடுகதைகளாக முடிந்துவிடாமல் ஒரு படி மேலே நிற்கின்றன.

நாவல் 1942-இல் எழுதப்பட்டது. இரண்டாம் உலகப் போரின்போது இப்படி ஒரு பொழுதுபோக்கு புத்தகம் நிச்சயம் வெற்றி பெற்றிருக்கும்.

துப்பறியும் நாவல் விரும்பிகள் நிச்சயமாக படிக்கலாம். விரும்பாதவர்களும் இதை ஒரு விடுகதையாக வைத்துக் கொண்டு மேலே இருக்கும் பட்டியலில் இருந்து யார் குற்றவாளி, ஏன் கரோலின் கொலையாளி இல்லை என்று யோசித்துப் பாருங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: துப்பறியும் கதைகள்

தொடர்புடைய சுட்டி: புத்தகத்தின் மின்பிரதி