கல்கியின் சிறுகதைகள்

சரித்திர நாவல்களை – குறிப்பாக பொன்னியின் செல்வனை – விட்டால் கல்கியின் எழுத்து அப்படி ஒன்றும் பிரமாதமானது இல்லை. அவர் எழுதியதை “பத்திரிகை எழுத்து” என்று சொல்லலாம். சுலபமாக படிக்கலாம், கொஞ்ச நேரத்தில் மறந்தும் போய்விடும். இன்றைக்கு அவைக்கு இருக்கும் முக்கியத்துவம் எல்லாம் ஒரு ஆவண முக்கியத்துவமே.

குறிப்பாக அவரது சிறுகதைகளில் எதுவுமே நினைவு வைத்துக்கொள்ள வேண்டியவை இல்லை. எந்த சீரியசான தமிழ் சிறுகதை தொகுப்பிலும் அவரது சிறுகதைகளை நீங்கள் பார்க்க முடியாது. நல்ல கதை, கச்சிதமாக எழுதப்பட்டிருக்கிறது என்று சொல்லக்கூடிய வெகு சில கதைகளையே எழுதி இருக்கிறார். அவரது சிறுகதைகளில் சில சமயம் வடிவ கச்சிதம் காணக் கிடைக்கிறது. சில சமயம் நல்ல ambience-ஐ உருவாக்குகிறார். ஆனால் உங்களை அறையும் கதை என்று நீங்கள் எதையும் பார்க்க முடியாது. வேறு வார்த்தைகளில் சொன்னால் அவருக்கு சில சமயம் form கை வருகிறது, ஆனால் நல்ல content என்பதை உருவாக்க முடிவதில்லை.

மேலும் காப்பி அடித்திருக்கிறார், பிரச்சார நெடி மட்டுமே இருக்கும் கதைகளை எழுதி இருக்கிறார். ஆனால் அந்த காலகட்டத்தில் சுவாரசியமாக இருந்தன, பரவலாக படிக்கப்பட்டன. அந்தக் கால கட்டத்தைப் பற்றி நாம் புரிந்துகொள்ள – குறிப்பாக மத்தியதர, ஓரளவு படித்த, பிராமணச் சூழலைப் பற்றி புரிந்து கொள்ள – உதவும் ஆவணங்கள். அவருக்குப் பின்னால் தேவன், சுஜாதா என்று ஒரு நீண்ட பாரம்பரியமே அவர் போட்ட ரூட்டில் போயிருக்கிறது.

பொதுவாக அவரது குறுநாவல்கள் – மகுடபதி, சோலைமலை இளவரசி, தியாகபூமி, பொய்மான் கரடு போன்றவை – மெலோட்ராமாவாக இருந்தாலும் சிறுகதைகளை விட உயர்ந்த தரத்தில் இருக்கின்றன. படிக்கலாம். ஆனால் அவரது “பத்திரிகை எழுத்தில்” படிக்க வேண்டியவை அவரது கட்டுரைகளே. ஏட்டிக்குப் போட்டி, ஓ மாம்பழமே போன்ற தொகுப்புகள் இன்றும் கிடைக்கின்றன, படிக்கவும் சுவாரசியமானவை.

சமீபத்தில் அவரது பல சிறுகதைகளை படிக்க முடிந்தது. அவற்றைப் பற்றிய என் குறிப்புகள்:

 1. தப்பிலி கப்: இது அவரது சிறந்த கதைகளில் ஒன்று. மிக கச்சிதமாக எழுதப்பட்ட கதை. கிண்டி ரேசில் பணத்தை விடும் ஒரு எழுத்தாளனும் நடிகனும் ரேசின் தீமைகளைப் பற்றி ஒரு நாடகம் உருவாக்குகிறார்கள். பெரிய ஹிட். எப்படி போகும் என்று யூகிக்கலாம்.
 2. மயிலைக் காளை: இதுவும் மிக கச்சிதமாக எழுதப்பட்ட கதை. கதை பூராவும் நகைச்சுவை இழையோடும். கிருஷ்ணக் கோனானும் பூங்கொடியும் ஒருவர் மேல் ஒருவர் ஆசைப்படுகிறார்கள். பூங்கொடி அவள் மாமாவின் பணத்தை திருடிவிட்டாளோ என்று ஒரு சந்தேகம்.
 3. “தவில் கந்தப்பன்” கதைகள்: நாடகக்காரி, தேரழுந்தூர் சிவக்கொழுந்து, வீணை பவானி என்று மூன்று கதைகள். மூன்றும் அந்த காலத்து இசை, நாடகக் கலைஞர்கள் வாழ்க்கையை பின்புலமாக கொண்டவை. சுவாரசியமான கதைகள், ஆனால் சுலபமாக யூகிக்கக் கூடியவை, கொஞ்சம் வளவளா. நாடகக்காரியில் கணவன்-மனைவி நாடகக் கலைஞர்கள், அவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள். கொஞ்சம் அதிகமான கற்பனை; வீணை பவானியில் ஒரு “தாசி” குலத்துப் பெண், தான் விரும்பியவனுக்கு உண்மையாக இருக்கும் கதை. பின்புலம் இந்த கதைகளை சுவாரசியமாக ஆக்குகிறது.

நான் படித்த வரையில் இவைதான் ஓரளவாவது நினைவு வைத்துக் கொள்ளக்கூடிய கதைகள். மிச்சம் எல்லாம் டைம் பாஸ், வேஸ்ட் என்றுதான் பிரிக்க வேண்டும். செயற்கைத்தனம், பகல் கனவு, நம்பகத்தன்மை இல்லாதது என்று பல குறைகள் தெரியும். இங்கே நான் லிஸ்ட் போட்டிருப்பது அவற்றை மற்றவர்கள் தவிர்க்கலாமே என்ற ஆசையினால்தான்.

 1. தெய்வயானை: சாராயக் கடை குத்தகைக்காரர் ஆசைப்படும் பெண் சாராயம் குடிக்கிறாள் என்று தெரிந்து தொழிலுக்கு முழுக்கு போட்டுவிடுகிறார். டைம் பாஸ்.
 2. அரசூர் பஞ்சாயத்து: எனக்கு இந்த கதை புதுமைப்பித்தனின் “துன்பக் கேணியை” நினைவுபடுத்துகிறது. கொஞ்சம் மெலோட்ரமாடிக்கான மதுவிலக்கு பிரச்சாரக் கதைதான், ஆனால் படிக்கலாம்.
 3. கவர்னர் வண்டி: இன்னும் ஒரு மதுவிலக்கு பிரச்சாரக் கதை. டைம் பாஸ்.
 4. தீப்பிடித்த குடிசைகள்: அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா! ஒரு தேர்தல் வேட்பாளர் நடத்தும் ட்ரிக். டைம் பாஸ்.
 5. வஸ்தாத் வேணு: பக்கத்து வீட்டில் குடி வந்திருக்கும் போலீஸ்காரனை வீட்டை விட்டு துரத்த வேணு எடுக்கும் முயற்சிகள். டைம் பாஸ்.
 6. என் தெய்வம்: சாம்பமூர்த்தியின் அம்மா கணவன் இறந்தபிறகு ஒரு சிறு குழந்தையை தன் குழந்தையாக வளர்க்கிறாள். சாம்பமூர்த்தியின் காதலில் அம்மாவின் “கற்பு” பிரச்சினையாகிறது. நல்ல நடை.
 7. எஜமான விசுவாசம்: விசுவாசமான வாட்ச்மன், வேலையை விட்டு தூக்கிய பிறகும் ஆஃபீஸ் தீ விபத்தில் எரியாமல் காப்பாற்றுகிறான். ஆனால் இன்ஷூரன்சுக்காக தீ வைத்ததே முதலாளிதான். டைம் பாஸ்.
 8. மயில்விழி மான்: டைம் பாஸ் சிறுகதை. எங்கோ ஒரு தீவில் இன்னும் வாழும் சங்க காலத்து தமிழர்கள்
 9. ஜமீந்தார் மகன்: டைம் பாஸ் கதை. பர்மாவிலிருந்து வரும் அகதிகளுக்குள் காதல்
 10. பிரபல நட்சத்திரம்: கணவன் மனைவி பிரிய, மனைவி சினிமா ஸ்டார் ஆகிறாள். டைம் பாஸ்.
 11. ஒற்றை ரோஜா: டைம் பாஸ். தன் கூந்தலில் இருக்கும் ரோஜாவில் ஒரு வைரத்தை வைத்திருக்கும் நாயகி.
 12. இது என்ன சொர்க்கம்: சொர்க்கத்தில் இருக்கும் இரண்டு பேர் பூமியின் காப்பி, டிஃபன், செய்தித்தாளுக்காக ஏங்குகிறார்கள். டைம் பாஸ்.
 13. சினிமாக் கதை: புருஷன் பெண்டாட்டி சண்டை. டைம் பாஸ்.
 14. எங்கள் ஊர் சங்கீதப் போட்டி: இதை விவரிப்பது கஷ்டம். டைம் பாஸ்.
 15. ரங்கதுர்க்கம் ராஜா: வேஸ்ட். ஆள் மாறாட்டம் அப்படி இப்படி என்று போகிறது.
 16. புது ஓவர்சியர்: பிரேம்சந்தின் சால்ட் இன்ஸ்பெக்டர் கதையின் அப்பட்டமான காப்பி. பிரேம்சந்த் நன்றாக எழுதி இருப்பார்.
 17. பாங்கர் விநாயகராவ்: மதுவிலக்கு பிரசார நெடி அடிக்கும் நாடகம்.
 18. கோவிந்தனும் வீரப்பனும்: வேஸ்ட். மது விலக்கு பிரச்சாரக் கதை.
 19. சின்னத் தம்பியும் திருடர்களும்: வேஸ்ட். காக்கா நரி ஸ்டைலில் ஒரு மதுவிலக்கு பிரச்சாரக் கதை.
 20. விதூஷகன் சின்னமுதலி: சின்னமுதலிக்கு மது உள்ளே போகாவிட்டால் கோமாளி வேஷம் போடமுடியாது. இன்னும் ஒரு மதுவிலக்கு பிரச்சாரக் கதை.
 21. சுயநலம்: வேஸ்ட். இன்னும் ஒரு மதுவிலக்கு பிரச்சாரக் கதை.
 22. கைலாசமய்யர் காபரா: ரயிலில் சக பயணி ஒரு கொலை செய்துவிட்டதாக கைலாசமய்யரை பயமுறுத்துகிறான்.
 23. லஞ்சம் வாங்காதவன்: லஞ்சம் வாங்கும் பராங்குசத்தின் கதி.
 24. தூக்குத் தண்டனை: தவறான தீர்ப்பால் தூக்குக்கு போகும் இளைஞன் சாகும் முன்னால் ஜட்ஜை ஆவியாகச் சந்திக்கிறான்.
 25. ரங்கூன் மாப்பிள்ளை: ஒரு யுத்தப் பைத்தியத்தின் கதை.

ஜான் ஸ்டைன்பெக்கின் “பேர்ல்”

நோபல் பரிசு வென்ற ஜான் ஸ்டைன்பெக் பக்கத்து ஊர்க்காரர். (சாலினாஸ்) Grapes of Wrath என்ற நாவல் ஸ்டைன்பெக்கின் மாஸ்டர்பீசாக கருதப்படுகிறது. யாராவது படித்திருக்கிறீர்களா?

ஆனால் எல்லாரும் புகழ்ந்த Of Mice and Men என்ற புத்தகம் என்னை கொஞ்சமும் கவரவில்லை.கொஞ்ச நாள் முன்பு ஜெயமோகன் இங்கு வந்திருந்தபோது அவரும் ஸ்டைன்பெக்கைப் பற்றி அவ்வளவு உற்சாகமாகப் பேசவில்லை. இதனாலேயே அவர் புத்தகங்களை படிப்பதை தள்ளிப் போட்டுக்கொண்டே வந்தேன்.

சமீபத்தில் யாரோ ஒரு நண்பர் 1947-இல் வெளிவந்த அவரது Pearl என்ற புத்தகத்தை காப்பி அடித்துத்தான் சுஜாதாவைரங்கள்” என்ற புத்தகத்தை எழுதினார் என்று சொன்னார். வைரங்கள் எனக்குப் பிடித்த சுஜாதா புனைவுகளில் ஒன்று. சரி இதுதான் மூல கதை என்றால் மோசமாக இருக்காது என்ற நம்பிக்கையில் படிக்க ஆரம்பித்தேன். சின்ன புத்தகம், நூறு பக்கம் கூட இருக்காது என்பது இன்னும் கொஞ்சம் உற்சாகம் தந்தது.

மிகவும் சிம்பிளான கதை. ஏழை மீனவன் கினோவுக்கு ஒரு பெரிய முத்து கிடைக்கிறது. அந்த முத்தை அவனிடமிருந்து ஏமாற்றியோ இல்லை திருடியோ பெற ஊரே முயற்சிக்கிறது. திருட வரும் ஒருவனை கினோ கொன்றுவிடுகிறான். பிறகு மனைவி, குழந்தையோடு ஊரிலிருந்து தப்பி ஓடுகிறான். அவனை துரத்துகிறார்கள். என்ன நடக்கிறது என்பதுதான் கதை.

என்னவோ ஒரு தொன்மத்தைப் படிப்பது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்துகிறார் ஸ்டைன்பெக். அதை எப்படி சாதித்தார் என்று என்னால் விளக்க முடியவில்லை.

புத்தகத்தின் முதல் பாதி எப்படி வெள்ளையர்கள் இந்த மீனவர்களை சுரண்டுகிறார்கள் என்று அருமையாக விவரிக்கிறது.

இருந்தாலும் புத்தகத்தில் ஏதோ குறைகிறது. ஒரு விதத்தில் மெலோட்ராமா நிறைந்த சினிமா பார்ப்பது போல இருக்கிறது.

படிக்கலாம்.

P.S. வைரங்கள் நாவலுக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஜான் ஸ்டைன்பெக் பக்கம்

ஜாக் லண்டன் எழுதிய “எ பீஸ் ஆஃப் ஸ்டேக்” – எனக்குப் பிடித்த சிறுகதைகள் சீரிஸ்

ஆங்கிலத்தில் படிக்க ஆரம்பித்தபோது என்னைக் கவர்ந்த ஒரு விஷயம் விளையாட்டைப் பற்றிய புனைவுகள். தமிழில் இப்படிப்பட்ட புனைவுகள் அபூர்வம். வாடிவாசல், சுஜாதாவின் இரண்டொரு கிரிக்கெட் பற்றிய புனைவுகள், பத்து செகண்ட் முத்தம் என்ற நாவல் மட்டுமே நினைவு வருகின்றன.

A Piece of Steak கொஞ்சம் வயதான ஒரு ஏழை பாக்சரின் ஒரு குத்துச்சண்டையைப் பற்றி விவரிக்கிறது. ஜெயித்தால்தான் பணம். ஆனால் பசியோடும் போட்டியிட வேண்டி இருக்கிறது. பிறகு? நேராக படித்துக் கொள்ளுங்கள்.

ஜாக் லண்டனைப் பற்றி என்ன சொல்ல? சிம்பிளான, அதே நேரத்தில் சிறந்த புனைவுகளை எழுதி இருக்கிறார். Call of the Wild, Sea Wolf, White Fang போன்றவை கட்டாயம் படிக்க வேண்டியவை. பக்கத்து ஊரில்தான் (ஓக்லாண்ட்) வாழ்ந்திருக்கிறார்.

இந்திரா சௌந்தரராஜன்

தமிழில் pulp fiction என்றால் பட்டுக்கோட்டை பிரபாகர், ராஜேஷ்குமார், சுபா மூவரும்தான் என்று நினைத்திருந்தேன். இந்திரா சௌந்தரராஜன் என்றும் ஒருவர் இருக்கிறார் என்று சமீபத்தில்தான் தெரிந்தது. படித்த வரையில் கதைகளின் தரம் ஒன்றும் பெரிதாக பேசும்படி இல்லை. ஆனால் விஷுவலாக சில கதைகளை நினைத்துப் பார்த்தால் சுமாரான திகில் படமாக வரலாம். இவர் பேசாமல் டிவி சீரியல் எழுதலாம் என்று தோன்றுகிறது. நான் படித்த பல கதைகளில் எல்லாம் என்னவோ அமானுஷ்ய நிகழ்ச்சி மாதிரி ஆரம்பித்து கடைசியில் எல்லாம் ஒரு செட்டப், சதி என்று முடிக்கிறார்.

மரகத லிங்கம்: படித்ததில் இது ஒன்றுதான் பஸ்ஸில் படிக்கும் தரத்திலாவது இருக்கிறது. கோவிலிலிருந்து மரகத லிங்கம் திருடு போகிறது, திருடியவர்களுக்கு பல விதமான துன்பங்கள்.

நீலா நீலா ஓடி வா: வேஸ்ட். இதற்கு கதைச்சுருக்கம் எழுதுவது அதை விட பெரிய வேஸ்ட். ஆனால் நாளைக்கு இது என்ன கதை என்று தெரியாமல் திருப்பி படித்துவிடக் கூடாது, அதற்காக எழுதுகிறேன். துணிச்சலான பெண் நீலா, பெரிய மனிதர்கள்/இளம் பெண்களை கடத்தி நிர்வாணமாக ஃபோட்டோ எடுத்து மிரட்டும் ஒரு கும்பலைப் பிடிக்கிறாள்.

கன்னிப் பருந்து: அதே நீலாதான், அதே வேஸ்ட்தான். ஆனால் நீலாவுக்கு இப்போது ரம்யா என்று பேர். பேய் இருக்கும் அபார்ட்மென்ட்டில் குடிபுகுந்து அங்கே பேய் எதுவும் இல்லை, திருட்டு வைரங்கள் ஒளித்து வைக்கப்பட்டிருக்கின்றன என்று கண்டுபிடிக்கிறாள்.

மந்திர வலை: சூனியம் கீனியம் என்று பயமுறுத்தி இரண்டு தொழிலதிபர்கள் பதுக்கி வைத்திருக்கும் தங்கத்தை கண்டுபிடிக்கிறார்கள். இன்னும் ஒரு வேஸ்ட்.

சர்ப்பபலி: எங்கும் துரத்தும் பாம்புகள். மந்திரவலை மாதிரியே முடிச்சு.

தென்கிழக்கு மின்னல்: கொள்ளுத்தாத்தா கட்டிப்போட்ட துர்தேவதைகளால் இன்று பிரச்சினையா?

உச்சியிலே: போதை மருந்து விற்கும் ஒருவன் அப்ரூவர் ஆகிறான். வேஸ்ட்.

ஓசைப்படாமல் ஒரு கொலை: மகா தண்டம்.

ஒன்றின் நிறம் இரண்டு: தண்டம். கிராமம், அப்பாவி ஹீரோ, அப்பாவி ஹீரோயின், ஹீரோயின் மேல் கண் உள்ள வில்லன்களான ஊர்ப் பெரிய மனிதர், சாராயம் காய்ச்சும் ரவுடி என்று கதை போகிறது.

யாகப் பசுக்கள்: தண்டம். கூட்டுறவு சங்கம் வைத்து நெசவாளர்கள் வாழ்க்கையை உயர்த்தும் ஹீரோவின் கையை வெட்டி விடுகிறார்கள். நியாயம் கேட்டு உண்ணாவிரதம் இருந்து இன்ஸ்பெக்டரின் மனதை மாற்றி…

புதிதாய் ஒரு நட்சத்திரம்: தண்டம். மும்பை விபசார விடுதிக்கு கடத்தப்படும் பெண். அவளைக் காப்பாற்றும் எழுத்தாளன், கைவிடும் காதலன். வில்லன்களை போலீசில் அடையாளம் காட்டும் ஹீரோயின். அவளையே மணக்கும் எழுத்தாளன்.

பஸ்ஸில் படிக்கலாம் என்றால் கூட பட்டுக்கோட்டை பிரபாகர் பெட்டர் என்று தோன்றுகிறது. இவரை முழுமையாக தவிர்க்கலாம். ஆனால் இவர் பாப்புலராக இருக்க வாய்ப்புகள் இருக்கின்றன. இவர் கதைகளை படித்தவர்கள் யாராவது இருந்தால் என்ன நினைக்கிறீர்கள் என்று சொல்லுங்களேன்!

ஜெயமோகனின் “ரப்பர்”

ஜெயமோகனின் “ரப்பர்”


இந்திய அரசாங்கம் மட்டும் கிட்டதட்ட 6,15,200 ஹெக்டேரில் (1 ஹெக்டேர் = 2.47 ஏக்கர்) ரப்பர் தோட்டம் சாகுபடி செய்கிறது. இதில் கேரளாவும், தமிழ்நாடும் சேர்ந்து 5,21,973 ஹெக்டேரில், அதாவது மொத்த ரப்பர் சாகுபடியில் கிட்டதட்ட 85 விழுக்காடு, தங்கள் பிராந்தியாத்தின் நிலங்களை ரப்பருக்காக வழங்கியுள்ளது. இதில் 82 சதவிகிதம் கேரளாவிலும் 3 சதவிகிதம் தமிழ்நாட்டிலுமாக அரசாங்கம் ரப்பர் பயிர்செய்கை புரிந்திருக்கிறது. அதாவது கேரளாவில் 5,02,740 ஹெக்டேரிலும் தமிழநாட்டில் 19,233 ஹெக்டேரிலும் ரப்பர் சாகுபடி நடக்கிறது. இது போக தனியார் நிறுவனங்கள் எவ்வளவு ரப்பர் தோட்டங்கள் வைத்திருக்கிறது என்று தெரியவில்லை.

காட்டை அழித்து ரப்பர் தோட்டங்களாக மாற்றுவது ஒரு சுற்றுசூழலிய பிரச்சனை.

 • ரப்பர் தோட்டங்களில் பறவைகள் வசிப்பதில்லை.
 • நிலத்தடி நீர், மற்றும் காட்டை அழிப்பத்தனால் இயற்க்கை நீர் உற்பத்தி முதலியன குறைகிறது.
 • நதிகளுக்கு தண்ணீர் வளமாக வருவதில்லை.
 • ரப்பர் போன்ற ஒருபயிர் தோட்டங்களால் கேரளாவில் மட்டும் 30% சதவிகித இயற்க்கை காடுகள் அழிந்துவிட்டது.
 • பதினைந்து முதல் 20 சதவிகித பருவமழை குறைந்துவிட்டது.
 • ஒரு பயிர் அபிவிருத்தியினால் மண் வளமும் நீர்வளமும் குறைகிறது.
 • இயற்கை காடுகளை அழிப்பதனால் வண்டல் மண் அதிகமாகிறது.

இது இந்த தசாப்தத்தின் புள்ளிவிவரங்கள். கடந்த தசாப்தத்திலும் இது போன்ற சூழலே நிலவி வந்தது. இந்த  சுற்றுசூழல் பிரச்சனையை பின்புலமாக வைத்து உருவாக்கப் பட்ட கதைதான் ஜெயமோகனின் “ரப்பர்” என்ற சிறந்த இலக்கியப் படைப்பு. ஜெயமோகனின் முதல் நாவல். 1990ல் வெளிவந்தது. அவருடைய 29 வயதில் எழுதினார். அமரர் அகிலன் நினைவுப் பரிசை பெற்றார். நேஷனல் புக் ட்ரஸ்ட் இந்திய மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட தேர்வு செய்திருந்தது. மொழிபெயர்த்ததா என்று தெரியவில்லை. இண்டியன் லிட்ரேச்சர் இதழில் (சாகித்ய அகடமி பிரசுரம்) ஒரு முக்கிய தமிழ் நாவலாக விமர்சகர் என்.எஸ்.ஜெகன்னாதனால் குறிப்பிடப் பட்டுள்ளது.

பொன்னு பெருவட்டர் நிறுவிய தோட்ட சாம்ராஜ்யத்தை செல்லய்யா பெருவட்டர் நடத்தி செல்வது கதை. பொன்னு பெருவட்டர் வாழ்ந்த வாழ்க்கையை பெருவட்டரின் மரணப் படுக்கையிலிருந்து பின்னோக்கி எடுத்து சென்று சித்தரிக்கிறார் ஜெயமோகன். பெருவட்டரின் கீழ்படிதல், அடிமைத்தனம், கடின உழைப்பு, ஆணவம், உறுதி, இரக்கம், இரக்கமின்மை போன்ற பல்வேறு உணர்ச்சிகள் பிற கதாபாத்திரங்களிடம் நிறுவியிருக்கும் உறவுகள் மூலம் வெளிப்படுகிறது. அனைத்து உணர்வுகளையும் விளக்கும் வண்ணம் கதை அமைந்திருப்பது நாவலுக்கு ஒரு முக்கிய வலிமை. தன் வயோதிகத்தினாலும், நோயினாலும் ஏற்பட்ட இயலாமை பெருவட்டரின் மனதை பக்குவப்படுத்தி அவரை வாழ்க்கை போராட்டத்தில் இருந்து விலகச் செய்து சம்பவங்களை விதியிடம் ஒப்படைத்து விட்டு சிந்திக்க வைக்கிறது. மனதின் ஓரத்தில் குற்ற உணர்ச்சி அரித்துக் கொண்டே இருக்கிறது. அந்த மனத்துடன் மரணத்திற்க்காக காத்துக் கொண்டிருக்கிறார்.

பெருவட்டரின் கலை உணர்ச்சி தன் வீட்டின் கட்டடமைப்பும், அவர் வீட்டு வரவேற்ப்பரையில் அமைந்துள்ள ”ரெம்ப்ராண்ட் – த அடரேஷன் ஆஃப் தெ மாகி” குறியீடாக சித்தரிக்கப்பட்டுள்ளது. அந்தக் குறியீடே அவர் மத வழி நம்பிக்கையையும் உணர்த்துவது போல் அமைந்தாலும் பின்னால் அவருடைய மதமாற்றத்தின் காரணம் பொருளியல் வாழ்க்கையச் சார்ந்தது என்று அறிய வரும் பொழுது நம் மனதில் ஓங்கி அறைந்து நம்மை சிந்திக்கத் தூண்டுகிறது. நம்பிக்கை வாழ்வின் ஒரு கருவிதானா? பிஷப் தங்கள் வீட்டிற்கு விருந்துக்கு வரவேண்டும் என்று நினைப்பது வியாபாரம் நிமத்தமே என்பதும், அவர் வரவேண்டுமென்றால் மதமாற்றமே வழி என்பதும் பொருளியல் யதார்த்தங்கள். ஆனால் மதம் மாறும் நிகழ்ச்சி தர்க்கத்துக்கோ, உணர்ச்சிகளுக்கோ உட்படுத்தப் படாமல் ஒரு ஆதாயத்தின் நிமத்தமாக நடக்கும் அற்ப நிகழ்ச்சியாகி விடுகிறது பெருவட்டர் குடும்பத்தில். அங்கே நம்பிக்கையென்பதே ஒரு ”பொருள்” என்ற அளவில் மட்டுமே மதிக்கப் படுகிறது.

பெருவட்டரை பார்க்க வரும் பாஸ்டர் ஜோசஃப் ராஜேந்திரன் பெருவட்டரின் அவமதிப்பினால் தன் சுயத்தை இழந்து “கிறிஸ்து நொட்டினாரு” என்று பாயும் சம்பவம் பாதிரியாரைப் பற்றி ஒரு அதிர்ச்சியூட்டும் தரிசனம். அவரும் மனிதன் தான். பின்னால் சர்ச், பெருவட்டரின் குடுமபத்தை பாஸ்டரை அவமதித்ததற்க்காக தண்டிக்க முயலும் பொழுது, பாஸ்டரின் கிறிஸ்து அவமதிப்பை மறந்து விடுவது அல்லது மறைத்து விடுவது சர்ச்சின் இரட்டை தரத்தினை சித்தரிக்கிறது. திரும்பிப் பார்க்கையில் இந்த சம்பவத்தின் பொழுது லிவியின் நிதானம் தவறாமை ஆச்சர்யம் அளிக்கிறது. சில சமயங்களில் அப்பாவி மனிதர்கள் நிதானம் இழப்பதும் பாவிகள் நிதானமாக நடந்துக் கொள்வதும் பிறரின் மதிப்பீடுகளை நிலை குலையச் செய்கிறது.

பெருவட்டர் மனைவியின் மேல் வைத்திருக்கும் அன்பும், பரிவும் கடுமை என்ற எதிர்மறை மொழியினால் வெளிப்படுகிறது. அவர் ”மறைத்துக் காட்டும்” பரிவுகளை விட பெருவட்டத்தி அதைப் புரிந்துக் கொள்வது இன்னும் சிறப்பு. ஜெயமோகன் அற்புதமாக இந்த நுணுக்கங்களை சித்தரித்திருக்கிறார்.

குஞ்ஞியிடம் பெருவட்டர் வைத்திருக்கும் இரக்கம் வெளிப்படும் அதே சமயத்தில் ஏன் அவர் அப்புக்குட்டன் நாயரிடம் இரக்கமற்று நடக்கிறார்? அதற்கு குன்னத்துக்கல் கொலை தான் காரணமா? நாயர்கள் கை ரத்தம் படிந்தக் கை. தன்னை அனாதையாக்கிய வம்சம். அப்படித்தான் நியாயப் படுத்திக் கொள்ளமுடிகிறது. அல்லது நியாயப் படுத்த வேண்டாம் என்ற கோணத்திலும் பார்க்கத்த் தூண்டுகிறது. பணம் அவரை உருமாற்றி, குணம் மாற்றி கொண்டிருந்த காலம் அல்லவா அது? பெருவட்டர் சராசரி மனிதர் தான் என்ற யதர்ர்தம் உறைக்கிறது. தன்னை கடைசி காலத்தில் பார்க்க வந்த ஏபி நாயரிடம் ”கொன்னும் கொள்ளையடிச்சும் வலியனாவி என்னத்தக் கண்டேன்” என்று புலம்புகையில் சராசரி மனிதனாகவே அப்புக்குட்டன் நாயரை கையாண்டிருக்கிறார் என்ற தரப்புதான் உயர்ந்து நிற்கிறது. தன்னை இறுதி கட்டத்தில் கவனித்துக் கொள்ளும் குஞ்ஞியின் அனபை புரிந்து கொள்ளமுடிகிறது அவரால். செயற்கரிய செயலையும் செய்யமுடிகிறது. குஞ்ஞிக்கு நிலம் எழுதி வைக்கிறார்.

குன்னத்துகல்லை விட்டு குடியான் ரகளையின் பொழுது அகதிகளாக பெருவட்டர் குடும்பம் அவருடைய நான்கு வயதில் புலம் பெயரும் காட்சியை ஒரு திரைப்படக் காட்சி கூட விவரிக்க முடியாத ஒன்று. ஜெயமோகன் அனுபவித்துக் வாசகர்கள் கண்முன் காட்சியை விரிக்கிறார். வழக்கத்திற்கு மாறுபட்டு, ஜெயின் ஆயிரம் வார்த்தைகளுக்கு ஒரு சித்திரம் என்ன ஆயிரம் சித்திரம் தான் இணையாகுமா என்று எதிர் மறையாக சிந்திக்க வைக்கிறது, ஜெயின் வருணனை. அந்த ஏழைக் குடும்பம் கரடு முரடாக பேசிக்கொண்டாலும், அளவில்லாத அன்பை மறைத்து வாழும் குடும்பமல்லவா? நுணுக்கங்களை வாசகர்கள் விரிவு படுத்தி பார்ப்பதற்க்கென இடம் அளிப்பதே சிறந்த இலக்கியம் என்ற ஜெ சொல்லியிருக்கிறார். அதற்கு இந்த காட்சி சிறந்தப் பயிற்சி. அந்தப் பயணத்தின் போது குடுமபத்தை மாட்டு வண்டியில் ஏற்றிவிட்டு முன்னால் நடந்து செல்லும் தந்தை, வ்ழியில கிழங்கை சுட்டு உண்பது, வண்டியில் ஆகாயத்தை நோக்கி மல்லாந்து படுத்து வரும் பொன்னுமனியின் மேல் சற்று முன்னர் “சும்மா வருவியா, அலவு திரும்பணுமா” என்று கடிந்துக் கொள்ளும் தாய், பாசம் கொப்பளிக்கும் மனத்துடன் தன் கையை அவன் மேல் படரவிடுவது – எத்தனை குறீயீடுகள்?

சாயும் பொழுதின் மேல் இரவு படிப்படியாக படரும் காட்சி போன்ற வர்ணனையை அனுபவிக்க, வாசகர்கள் இந்த வாசிப்பு அனுபவம் என்ற இன்பப் பயணத்தில் சற்றே இளைப்பாறி, இளைப்பாறி செல்ல வேண்டும். வேகமாக செல்வது காட்சியை உளவாங்கிக் கொள்ளாமல் தவர விடுவதுடன், அந்த சுகமான இதமான அனுபவத்தை  இழக்க நேரிடும். அந்த வகையில் மிக அடர்த்தியாக எழுதியுள்ளார் ஜெயமோகன்.

திரேஸின் (சின்ன பெருவட்டத்தி) மன ஓட்டத்தில் ஹுயுப்ரிஸும், நர்ர்ஸிஸிசமும் (hubris and narcissism – தமிழாக்கம் தெரியவில்லை) நிறைந்திருக்கிறது. போலி வாழ்க்கை. தானும் அமைதியில்லாமல் சின்ன பெருவட்டரையும் அமைதியில்லாமல் ஆக்குகிறார். சின்ன பெருவட்டர் எல்லா உணர்ச்சிகளையும் இழந்த பணமுள்ள ”பெரிய” மனிதர்களின் மனச்சிக்கலின் குறியீடு. இவர்களைப் பார்க்கும் பொழுது நமக்கு பாரிதாபம் மட்டும் தான் படத்தோன்றுகிறது. எவ்வளவு பொருள் சேர்த்தாலும் அதன் விலையாக நமது மன அமைதியை தரவேண்டுமென்றால், அப்படி ஒரு வாழக்கையின் பயன் தான் என்ன? அர்த்தம் தான் என்ன?

இயற்க்கையையே ஒட்டி வாழும் கண்டன்காணி ஒரு அற்புதமான படைப்பு. மிகவும் எளிய மனிதர். அன்பு இவரிடம் அல்லவா இருக்கும். தூய்மையான அன்பை பகிர்ந்துக் கொளவது இவர்களிடம் மற்றும் இவர்களால் அல்லவா இயலும்?  கொள்ளுப் பேரன் டாக்டர் லாரன்ஸ் தொழில் நிமத்தம் பரபரப்பு வாழ்க்கையை தேர்ந்தெடுக்கவில்லை. பெரும் பணம்  பாவத்தின் பலன் என்ற கருத்துடையவன். தள்ளாத வயது தாத்தா கண்டன்காணியின் பெருவட்டரை சென்று பார்க்க வேண்டும் என்ற ஆசைக்கு மதிப்பளித்து பொறுமையாக  பெருவட்டரை சந்திக்க அழைத்து வருவது அன்பின் உச்சமல்லவா? இதை நன்கு உள் வாங்க வேண்டுமானால் இன்றைய நகர்புற காட்சியை சற்றே நினைவுபடுத்திப் பார்க்க வேண்டும். “பெரிசு மேல போறதுக்கு ஏ வண்டி தான் கிடச்சுதா, சாவுகிரக்கி”, “சாகப் போற நேரத்தில பிராணன வாங்குது கிழம்” என்றெல்லாம் கடுஞ்சொல் கூறிபோகும் அறைகுறை கல்வியறிவு படைத்த  நகர் புற மனிதர்களின் தொலைந்து போன அகங்கள் எங்கே? டாக்டர் லாரன்ஸ் போன்ற இளைஞர்களின் மாபெரும் விழுமியங்கள் எங்கே?  பெருவட்டர் அன்புடன் கண்டன்காணியை தொட்டுப் பார்க்கவேண்டும் என்று சொல்லவும் அந்த தள்ளாத வயதில் தரையில் இருந்து எழுநது வந்து கட்டிலில் பெருவட்டரின் பக்கத்தில் வந்தமரும் மாசற்ற தூய இருதயம் பெருவட்டரை நெகிழ வைக்க, அதை பார்த்த தானும் நெகிழ அதை வாசிக்கும் வாசகனை நெகிழ வைக்கிறார் ஜெ. இந்த சம்பவம் பல புதிய தரிசனங்களை அடையவைக்கின்றன.

சமுதாயம் நாகரிகம் என்ற பெயரில் இயற்க்கையின் பயன்களை புறந்தள்ளி வர்த்தகத்திற்க்காக இஅற்க்கையை தங்கள் கட்டுக்குள் வளைத்து அதன் போக்கை மாற்றி எள்ளி நகையாடுவது எவ்வளவு ஆபத்தானது என்று தெரிந்தும் அலட்சியப்படுத்துகிறது. அரசாங்கமும் இந்தச் அலட்சியத்தில் பங்கு ஏற்கிறது. நன்கு பார்த்தால் அரசாங்கம் தான் இந்த பாவங்களுக்கு முழுப் பொறுப்பு எடுக்க வேண்டும். அது தான் இதை நடைமுறைப் படுத்துகிறது. இயற்க்கையை அழிக்கும் சக்திகளுள் ஒன்று தான் சமுதாயத்தை அழிக்கும் தீய சக்தி.

பெருவட்டர் குடும்பத்தில் தூய்மையான கண்ணீருக்காக ஏங்கும் பிரான்சிஸிஸ் தன்னிடம் சிறிதளவே மிஞ்சியிருக்கும் அன்பை ஆற்றோர குழந்தைகள் மூலம் கண்டடைகிறான். டாக்டர் லாரன்ஸுடன் பிரான்சிஸ் தொடர்பு கொள்ளும் பொழுது தன் வாழக்கையின் மாபெரும் தரிசனத்தை அடைகிறான்.

A slide show about Rubber

This slideshow requires JavaScript.

(என் வரையில் இது ஒரு பெரிய இலக்கிய ஆக்கம். விழுமியங்களை இழந்த, நாம் வாழும் சூழலில் ஜெயமோகனின் இன்றைய சிறுகதைகளில் வரும் அறம் என்ற அந்த மாபெரும் ரிவைவலிஸம் ரப்பர் உருவான – இருபது வருடங்களுக்கு முன்னரே – காலக் கட்டத்திலேயே தொடங்கி விட்டது. ஜெயமோகன், உங்கள் தொண்டு மேலும் மேலும் வளர வேண்டும் என்று மனம் நெகிழ்ந்து கூறுகிறேன்)

எனக்குப் பிடித்த சிறுகதைகள் – நாஞ்சில்நாடனின் “வனம்”

நேரம் குறைவு, பதிவு எழுத வேண்டும் என்றும் ஒரு ஆசை. இன்றைக்கு எனக்குப் பிடித்த ஒரு சிறுகதையைப் பற்றி எண்ணி இரண்டே வரி.

கருத்து, வடிவ கச்சிதம் இரண்டும் ஒரே கதையில் சிறந்து விளங்கும்போது கதை எங்கோ போய்விடுகிறது. நாஞ்சில்நாடனின் வனம் அப்படிப்பட்ட ஒரு சிறுகதை. “போ மோளே பெட்டென்னு” என்று அந்த பஸ் ஓட்டுனரை சொல்ல வைக்கும் இடத்தில் கலை, தொழில் நுட்பம் (art and craft) இரண்டும் ஓங்கி நிற்கின்றன. ஒரு மாஸ்டருக்குத்தான் கைவரும் இது.

பதித்த சுல்தானுக்கு நன்றி!

தொகுக்கப்பட்ட பக்கம்: நாஞ்சில்நாடன்

உலகின் சிறந்த மூடிய அறை மர்மம் (லாக்ட் ரூம் மிஸ்டரி)

துப்பறியும் கதைகளில் locked room mystery என்பது ஒரு sub-genre. அதாவது இழுத்து தாழ்ப்பாள் போடப்பட்ட அறைக்குள் ஒரு பிணம். பிணத்தைத் தவிர வேறு யாரும் அறையில் கிடையாது. எப்படி மரணம் நடந்தது?

இந்த வகைக் கதைகள் அனேகமாக ஒரு புதிர் மாதிரி இருக்கும். நம்பகத்தன்மை என்பதெல்லாம் பற்றி ரொம்ப யோசிக்கக்கூடாது. Probable இல்லாவிட்டாலும் possible என்று இருந்தால் போதும். பாத்திரப் படைப்பு, கருத்து, தரிசனம், இலக்கியம் என்று தேடுபவர்கள் எல்லாம் இந்தப் பக்கம் வராதீர்கள்.

ஜான் டிக்சன் கார் (John Dickson Carr) இந்த வகை நாவல் எழுதுபவர்களில் தலை சிறந்தவர் என்று கருதப்படுகிறார். அவர் எழுதிய அத்தனை நாவல்களிலும் த்ரீ காஃபின்ஸ் (Three Coffins) மிக சிறந்ததாக கருதப்படுகிறது.

கதையின் மர்மங்களை எடுத்துக் கொள்ளுங்களேன்; எங்கோ ஹங்கேரி, ட்ரான்சில்வேனியா பக்கத்திலிருந்து தப்பி ஓடி வந்த அகதி க்ரிமாட். இப்போது லண்டனில் ஒரு இளைஞிக்கு அப்பா. ஓரளவு வசதியாக இருக்கிறார். ஒரு நாள் இரவு நண்பர்களுடன் ஒரு மதுச்சாலையில் (pub) பேசிக்கொண்டிருக்கும்போது அங்கே ஒரு மாஜிக் காட்டுபவன் வந்து அவரை மிரட்டுகிறான். க்ரிமாட் அசரவில்லை. ஆனால் நாலைந்து நாளில் க்ரிமாட் தனது தாழ்ப்பாள் போடப்பட்ட அறையில் சுடப்பட்டு இறந்து கொண்டிருக்கிறார். அன்று பனி (snow) பெய்துகொண்டிருக்கிறது. ஜன்னல் வழியாக தப்பித்தால் அங்கே கால் சுவடுகள் இருக்க வேண்டும், எதுவும் இல்லை. சுட்டது க்ரிமாடை மிரட்டிய மாஜிக் நிபுணன் என்று நினைக்கிறார்கள், அந்த மாஜிக் நிபுணன் க்ரிமாடின் சகோதரன் என்றும் யூகிக்கிறார்கள்.

அந்த சகோதரன் க்ரிமாடை சுடப்பட்ட அதே துப்பாக்கியால் சுடப்பட்டு இறக்கிறான். அவன் இறப்பது ஒரு தெருவின் நடுவில். எங்கும் பனி. போஸ்ட்மார்ட்டம் துப்பாக்கியை ஏறக்குறைய அவன் மீது வைத்து சுட்டிருக்கிறார்கள் என்று சொல்கிறது. அவன் தெரு நடுவில் இறக்கும்போது அவனை இரண்டு சாட்சிகள் பார்க்கிறார்கள். அவன் அருகில் யாருமில்லை. பனியில் கால் சுவடுகளும் இல்லை.

டாக்டர் கிடியன் ஃபெல் துப்பறிகிறார். மர்மத்தை கண்டுபிடிக்கிறார். அனேகமாக யாராலும் யூகிக்க முடியாத தீர்வு என்று நினைக்கிறேன். ஆனால் improbable தீர்வுதான்.

கதாபாத்திரங்கள் கொஞ்சம் போர்தான். அதுவும் ஃபெல் உலக மகா போர். மர்மத்துக்காக மட்டும்தான் படிக்க வேண்டும்.

நடுவில் ஃபெல் locked room mysteries பற்றி ஒரு லெக்சர் கொடுக்கிறார். அது ஒரு நல்ல ஆய்வுக் கட்டுரை.

துப்பறியும் கதை பிரியர்களுக்காக மட்டும்.

சுஜாதாவின் பாதி ராஜ்யம்

(இது ஒரு RV போஸ்ட்)

குமுதத்தில் குறுநாவலாக வந்தது. அறுபதுகளில் வந்தது என்று படித்தேன், எப்போது வந்தது என்று தெரியவில்லை. கணேஷ் இன்னும் டெல்லியில்தான் இருக்கிறார்.

சின்ன knotதான். நீரஜா என்று ஒரு க்ளையண்ட். அவரது அப்பா ஒரு கொலைக்கேசில் ப்ளாக்மெய்ல் செய்யப்படுகிறார். கணேஷ் எப்படி knotஐ அவிழ்க்கிறார் என்று சொல்லிவிட்டால் அப்புறம் கதையை படிக்க வேண்டிய அவசியம் இல்லை. அதனால் மிச்சத்தை காகிதத்தில் காண்க. தன்னை காப்பாற்றிய கணேஷுக்கு பாதி ராஜ்யம் தருவதாக அப்பா சொல்ல, கணேஷ் நீரஜாவை பார்க்கிறார். நல்ல வேளையாக கல்யாணம் கில்யாணம் ஆகாமல், நீரஜா அவருக்கு அசிஸ்டன்டாக அடுத்த கதையில் (ஒரு விபத்தின் அனாடமி) வருகிறார்.

டெல்லியின் ஜியாக்ரஃபி, முக்கியமாக ரோடுகள் பேசப்படுகின்றன. நாற்பது வருஷங்களில் எல்லாம் மாறிப் போயிருக்கும். கணேஷிடம் கொஞ்சம் வசந்தின் குணங்கள் தெரிகின்றன. முக்கியமாக கணேஷ் சைட் அடித்த ஒரே பெண் நீரஜாவாகத்தான் இருக்கும். பழைய நாவல்கள் – அனிதா இளம் மனைவி, நைலான் கயிறு இதையெல்லாம் திருப்பி படித்த பிறகுதான் உறுதியாக சொல்ல முடியும்.

இந்த கதையும், ஒரு விபத்தின் அனடாமியும் “பாதி ராஜ்யம்” என்ற தொக்குப்பில் கிடைக்கின்றன. நான் சான் ஹோசே நூலகத்தில் எடுத்து படித்தேன்.

இந்தக் குறுநாவல் இருக்கும் மின்னூலை விமல் தரவேற்றி இருக்கிறார்.

ஜெயமோகனின் சமீபத்திய சிறுகதை சீரிஸ்

சில வேலைகளில் முழுமூச்சாக ஈடுபட வேண்டும், ஓரளவு அந்த வேலைகள் நிறைவேறும்வரை இணையம் போன்ற distraction-களை குறைத்துக்கொள்ள வேண்டும் என்று தம் பிடிக்க ஆரம்பித்திருக்கிறேன். இருந்தாலும் இந்த பதிவை எழுதாமல் இருக்க முடியவில்லை.

ஜெயமோகனின் சமீபத்திய நிஜ மனிதர்களை வைத்து எழுதப்பட்ட சிறுகதை சீரிசை விரும்பிப் படித்தேன். தினமும் காலை பதினோரு மணி வாக்கில் எப்படா தளம் அப்டேட் ஆகும் என்று காத்திருப்பேன். கதை வந்தால் ஒரே மூச்சில் படித்துவிடுவேன். (பெருவலி தவிர – அந்தக் கதை வந்தபோது எனக்கும் முதுகுவலி. கதையும் முதுகுவலி என்று ஆரம்பித்ததும் சரி இந்த கதையை மட்டும் நாலு நாள் கழித்துப் படித்துக் கொள்ளலாம் என்று தள்ளி வைத்துவிட்டேன்.) பல கதைகளில் கண் கலங்கியது. கதையைப் படித்து அழுதெல்லாம் பல காலம் ஆகிவிட்டது, புண்யாத்மா எத்தனை பேரை அழ வைத்தாரோ தெரியவில்லை. 🙂

எத்தனையோ பிரச்சினை; குடும்பம், வேலை, பணம், சாப்பாடு, தூக்கம், commute என்று ஒரு முடிவில்லாத வட்டத்தில் (infinite loop) ஓடிக் கொண்டிருக்கும் வாழ்க்கை மும்முரத்தில் நாம் மேன்மை சாத்தியம் என்பதையே மறந்துவிடுகிறோம். துனியா க நாரா ஜமே ரஹோ என்று கிளம்பிவிடுகிறோம். டி.எஸ். எலியட் சொன்ன மாதிரி – Here we go round the prickly pear at five o’clock in the morning – அறத்துக்கும் மேன்மைக்கும் ஏது நேரம்? திரும்பிப் பார்த்தால் தொந்தி சரிந்து மயிரே வெளிர்ந்து (என் கேசில் உதிர்ந்து) காலம் ஓடிவிட்டிருக்கிறது.

இந்தக் கதைகளிலிருந்து நான் பெற்றது ஒன்றுதான் – மனிதனுக்கு மேன்மை, அறம், லட்சியவாதம் எல்லாம் சாத்தியமே. எல்லாரும் காந்தி, புத்தன், ராமனுஜன் ஆக முடியாது, அந்த மாதிரி கோடியில் ஒருவர்தான் இருக்க முடியும் என்ற எண்ணம் வேண்டாம். நூற்றில் ஒருவராக இருக்கலாம் – முயற்சியாவது செய்யலாம். உண்மை மனிதர்களை மூலமாக வைத்து பாத்திரங்களைப் படைத்து, “small scale” லட்சியவாதிகளை காட்டி, விதவிதமான லட்சியவாதிகளை காட்டி இதைத்தான் சொல்கிறார். என்னால் என்றும் காந்தியாக ஆகமுடியாது என்று எனக்குத் தெரியும். ஆனால் பணம் போனால் மயிரே போச்சு என்று எண்ணும் கோட்டிக்கார பூமேடையாக இருக்கலாம். முடியாதா, அநீதிக்கு தலை வணங்காத கறுத்தான் நாடாராக இருக்க முயற்சிக்கலாம். முடியாதா, அநீதிகளை அலட்சியம் செய்து தன் தொழிலில் நிறைவு காணும் யானை டாக்டராக இருக்கலாம்; பெருவலியைத் தாண்டி பத்திரிகை நடத்தும் கோமலாக இருக்கலாம். நடக்காதா, மாணவர்களே வாழ்க்கை என்று இருக்கும் பேராசிரியராக இருக்கலாம், பலனை எதிர்பாராத கெத்தேல் சாஹிபாக இருக்கலாம், அட ஒன்றும் வேண்டாம், ஏமாற்றக் கூடாது என்று நினைக்கும் ஆச்சியாக இருக்க முடியாதா?

ஆயிரம் தவறு செய்தாலும், எத்தனை வயது ஆகி இருந்தாலும், மேன்மை இன்னும் சாத்தியமே. தளராதீர்கள் என்று இந்தக் கதைகள் எனக்கு சொல்கின்றன. நன்றி, ஜெயமோகன்!

இனி கதைகளைப் பற்றி:
பொதுவாக எல்லா கதைகளிலும் பாத்திரங்கள் மிக நன்றாக படைக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக கோட்டி கதையின் பூமேடை, அறம் கதையின் ஆச்சி மற்றும் எழுத்தாளர், மத்துறுதயிர் கதையின் பேராசிரியர் மற்றும் குமார், வணங்கான் கதையின் கறுத்தான் நாடார் மற்றும் நேசமணி, யானை டாக்டர் கே, நூறு நாற்காலிகள் கதையின் தர்மா மற்றும் அம்மா ஆகியவை superb!

எல்லாமே படிக்க வேண்டிய கதைகள்தான். என்றாலும் கருத்து, வடிவம் எல்லாமே கச்சிதமாக அமைந்திருப்பது அறம், வணங்கான், யானை டாக்டர் ஆகியவற்றில்தான் என்றே கருதுகிறேன். ஜெயமோகனுக்கும் யானைக்கும் ஏதோ ஒரு ராசி உண்டு. வணங்கான், யானை டாக்டர் இரண்டிலும் உச்சக்கட்டம் யானையோடு நிகழ்வது தற்செயல் இல்லை. 🙂

பூமேடையின் பாத்திரப் படைப்பு, நூறு நாற்காலிகள் தர்மாவின் நாயாடி பின்புலத்தால் அவன் படும் சித்திரவதையின் விவரிப்பு ஆகியவை அவற்றை உயர்த்துகிறது.

Inspiring கதைகள் என்று நான் கருதுவது சோற்றுக்கணக்கு, வணங்கான், யானை டாக்டர், மெல்லிய நூல் ஆகியவை.

சிறப்பான தரிசனம் உள்ளவை என்று நான் கருதுவது மயில்கழுத்து, மெல்லிய நூல், யானை டாக்டர். மயில்கழுத்தில் அழகுக்கான தேடலும், அந்த தேடல் தரும் துயரமும் இல்லாவிட்டால் தான் இல்லை என்று சொல்வது மனித வாழ்க்கையின் சாரத்தையே சுருக்கமாக சொல்கிறது. புதுமைப்பித்தனின் ஒரு கதையில் (கதை பேர் என்ன?) மனிதன் கடவுளை புறக்கணித்து இரும்பை ஊத ஆரம்பிக்கும் ஒரு இடத்தை நினைவுபடுத்தியது. இன்னொரு விதத்தில் மணிக் பந்தோபாத்யாய் எழுதிய ப்ரொகொதிஹாசிக் (Primeval) என்ற கதையை நினைவுபடுத்தியது. மெல்லிய நூல் சமரசங்களைப் பற்றி சொல்வதை நான் முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன். மிகவும் சிம்பிளான கருத்து, நடைமுறைப்படுத்துவதுதான் உலகமகா கஷ்டமாக இருக்கிறது. யானை டாக்டரில் யானைகள் டாக்டரை உரிமையோடு அணுகக்கூடிய நண்பராக ஏற்கும் உச்சக்கட்டம், எல்லாம் ஒன்றுதான் என்று உணர்த்தும் இடம் மிக அற்புதமானது.

என்னை சிந்திக்க வைத்த கதை ஓலைச்சிலுவை. டாக்டர் சாமர்வெலின் சேவை மகத்தானது. ஆனால் பிணத்தை புதைக்க வேண்டுமென்றால் கூட அதை கிருஸ்துவப் பிணமாக மாற்றித்தான் புதைக்க வேண்டும் என்று நினைப்பதில், இல்லை அப்படி நினைக்கும் லண்டன் மிஷனை ஏற்பதில் அவருக்கு எந்த தயக்கமும் இல்லை. குழந்தைகளோடு சாகப் போகிறவளைக் காப்பாற்ற வேண்டுமென்றால் மதம் மாற வேண்டும் என்ற நிலையைப் பற்றி அவரிடம் எந்த குற்ற உணர்ச்சியும் இல்லை. ஒரு superiority complex – காட்டுமிராண்டி கும்பலை கடைத்தேற்ற வந்தவர் என்ற நிலையில்தான் இருக்கிறார் என்று தோன்றியது. அவரது சேவை இந்த அணுகுமுறையை மறைக்கக்கூடாது. அவரும் அவர் காட்டும் ஏசுவும் சோற்றுக்கணக்கு பார்ப்பவர்கள். அவருடைய மனமாற்றம் சுட்டப்படுகிறது (அவர் மெல்ல மெல்ல இந்தியராக மாறிக்கொண்டே இருப்பது), ஆனாலும் அது இன்னும் விவரமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். சாமர்வெல் என்ற உண்மை மனிதரின் வாழ்க்கையில் அப்படிப்பட்ட மாற்றம் நிகழ்ந்தது, அவர் மதமாற்ற முயற்சிகளையே கடைசி வருஷங்களில் நிறுத்தினார் என்பதற்கான ஆதாரம் இருக்கிறதா தெரியாது. அப்படி இல்லை என்றால் ஒரு எழுத்தாளர் இவ்வளவுதான் அவரது மாற்றத்தைப் பற்றி சொல்ல முடியும் என்பதையும் உணர்கிறேன்.

என்னுடைய டாப் மூன்று கதைகள் – வணங்கான், அறம், யானை டாக்டர்

அத்தனை கதைகளிலும் சிறந்த வரி“இல்ல, போன மாசம் பணம் கெட்டி மாத்தியாச்சு. இப்பம் தோட்டியாக்கும்’ (கோட்டி)

என்னை மிகவும் inspire செய்த வரிகள்“சமரசங்களில் வெல்வது நமது பலவீனம். சமரசங்களுக்குப் பிறகு நாம் கோபமும் துவேஷமும் கொண்டவர்களாகிறோம். வன்முறை அவ்வுணர்வுகளின் வெளிப்பாடுதான். பிறர் மீது மட்டுமல்ல, நம் மீதே அவ்வன்முறை திரும்புகிறது.” (மெல்லிய நூல்)

நான் கண்ட குறைகள்:
பத்திரிகைகளுக்கு எழுதுவதில் ஒரு லாபம் உண்டு. யாராவது ப்ரூஃப் பார்ப்பார்கள். இணையத்தில் தானே ராஜா தானே மந்திரி. இதனால் சில பிழைகள் தப்பிவிடுகின்றன. அவை typo-க்களாக இருக்கலாம். (உலகம் யாவையும் கதையில் ஓம் என்பது ஆங்கிலத்தில் ohm என்று எழுதப்பட்டிருக்கிறது) வார்த்தைப் பிழைகளாக இருக்கலாம். (அதே கதையில் “நடராஜகுரு ஆவதற்கான கூட்டுப்பருவத்தில் இருந்தார்.” என்பது “நடராஜகுரு ஆவதற்கான கூட்டுப்புழுப் பருவத்தில் இருந்தார்.” என்று இருக்க வேண்டும். அறம் கதையில் முதலில் செட்டியார் 25000 ரூபாய் தரவேண்டும் என்று எழுதி இருந்தார், அதை ஐம்பதுகளுக்கு பொருத்தமாக மூவாயிரம் என்று திருத்தினார். ஆனால் பியூனின் சம்பளம் நூறு ரூபாய் என்று எழுதி இருந்ததை மாற்ற மறந்துவிட்டார். சில இடங்களில் வட்டார வழக்கு சரியாக இல்லை. (பிராமண வழக்கில் கழுவி-அலம்பி, அத்தை-அம்மா பற்றி நானே அவரிடம் குறை சொன்னேன், அவரும் அதற்கு பதில் சொன்னார். இருந்தாலும் நான் convince ஆகவில்லை. 🙂 ) ஜெயமோகன் எங்கோ பிராமண மொழி அழிந்துகொண்டிருக்கிறது, அதைத்தான் தன் கதைகளில் பிரதிபலித்திருக்கிறேன் என்று விளக்கம் சொன்னார். அவர் ஐம்பதுகளில் அமைத்திருக்கும் தாயார் பாதம், மயில் கழுத்து கதைகளுக்கு அந்த விளக்கம் பொருந்தாது, இன்றைக்கு நடப்பதாக ஒரு கதை எழுதினால்தான் அந்த விளக்கத்தைத் ஏற்றுக் கொள்ள முடியும்.
இந்த குறைகள் எல்லாம் ப்ரூஃப் பார்ப்பவர் அளவில் உள்ள குறைகளே. பெரிய விஷயம் இல்லை. nitpicking-தான். இருந்தாலும் இவையும் இருக்கக்கூடாது என்றுதான் விரும்புகிறேன்.

உண்மை, பிரபல மனிதர்களை வைத்து எழுதப்படும் கதைகளில் ஒரு பிரச்சினை உண்டு. பாத்திரத்துக்கும் உண்மை மனிதரை எவ்வளவு தூரம் பிரதிபலிக்க வேண்டும்? எழுத்தாளருக்கு poetic license என்பது எவ்வளவு உண்டு? கோமல் எட்டடி உயரம் என்று எழுத முடியாது. ஆனால் கோமலுக்கு பூண்டு ரசம் உண்மையில் பிடிக்குமோ பிடிக்காதோ, பிடிக்கும் என்று எழுதலாம் என்று நினைக்கிறேன். அதாவது யாராலும் ஆதாரங்களோடு மறுக்க முடியாத மாதிரி எழுத வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் கதை என்று வந்துவிட்டால் அவர்கள் கதாபாத்திரங்களே, உண்மை மனிதர்கள் இல்லை. கோமலுக்கும் ஜெயமோகனுக்கும் நடுவே நெருங்கிய நட்பு இல்லை, ஆனால் ஒரு bond இருந்தது, அதனால் ஜெயமோகனிடம் (மட்டும்) அவர் தன் தரிசனத்தை பகிரிந்துகொண்டார் என்பது நிஜ வாழ்க்கையில் உண்மையாக இருக்கலாம். அந்த bond-ஐ படிப்பவர்கள் யூகத்துக்கு விட்டுவிடக்கூடாது, அதை கதையில் விளக்கியாக வேண்டும். இல்லாவிட்டால் கதையின் நம்பகத்தன்மை குறைவாகத்தான் இருக்கும். என் கருத்தில் இதை ஜெயமோகனே புரிந்து கொள்ள கொஞ்சம் கஷ்டப்படுகிறார். கதையின் நம்பகத்தன்மை குறைவு என்று நான் சொன்னதை ஏறக்குறைய தனது நம்பகத்தன்மை குறைவு, தான் பீலா விடுகிறேன் என்று நான் சொன்னதாக புரிந்துகொண்டு எனக்கு பதில் அளித்திருந்தார்.

பல கதைகளை என்னால் யூகிக்க முடிந்தது. சோற்றுக்கணக்கு கதையில் ராமலக்ஷ்மி என்று வந்ததும் சரி இவன் ராமலக்ஷ்மியைத்தான் மணக்கப் போகிறான் என்று புரிந்துகொள்ள முடிந்தது. தாயார் பாதத்தில் அலம்பி விட்டுக்கொண்டே இருக்கும் பாட்டி என்று படித்ததும் எப்போதோ தாத்தா சாக்கடையில் தள்ளி இருப்பார் என்று யூகிக்க முடிந்தது. யானை டாக்டர் அந்த யானையில் காலிலிருந்து பியர் புட்டியை எடுத்ததும் Androcles and the lion மாதிரி யானை மீண்டும் இவரை சந்தித்து இவரை அடையாளம் கண்டு இவருக்கு உதவி செய்யும் இல்லை கேட்கும் என்று தெரிந்தது. உலகம் யாவையும் கதையில் கொஞ்ச தூரம் போனதும் சரி டேவிஸ் அடுத்த லெவலுக்கு – ஒரே பிரபஞ்சம் – என்று சொல்லப்போவதுதான் தரிசனம் என்று தெரிந்தது. சில சமயம் கதை எப்படிப் போகும் என்று தெரிந்தாலும் (அறம் நிகழ்ச்சியை ஜெயமோகனே நான் உள்ளிட்ட சில நண்பர்களிடம் நேரடியாக சொல்லி இருக்கிறார்; யானை டாக்டர்) கதை இத்தனை powerful ஆக இருந்தால் அது ஒரு பிரச்சினையாக இல்லை. ஆனால் யூகிக்க முடிவது பொதுவாக கதையின் சுவாரசியத்தை குறைத்தது.

மத்துறுதயிர், நூறு நாற்காலிகள், உலகம் யாவையும் போன்ற கதைகளில் தரிசனம்/உச்சக்கட்டம் கதையின் பில்டப் அளவுக்கு சிறப்பாக இல்லை.

பெருவலியில் கோமல் முதுகுவலியை மீறி பத்திரிகை நடத்தியதும், இமயம் வரை நடந்ததும்தான் என்னை கவர்கின்றன. அவரது தரிசனம் இல்லை. எனக்கு அது அற்புதமான தருணம் என்று தெரிந்தாலும், அது ஒரு மாதிரி theoretical ஆக தெரிவது.

கதைகளின் உண்மை மனிதர்கள்:

 1. அறம்எம்.வி. வெங்கட்ராம் எழுத்தாளர்; கரிச்சான் குஞ்சு, ஜெயமோகன் அவரவர் பேரிலேயே வருகிறார்கள். பழனியப்பா பிரதர்ஸ் புத்தக பதிப்பாளர்கள். சாமிநாதன் யார்?
 2. சோற்றுக்கணக்குகெத்தேல் சாஹிப்
 3. மத்துறு தயிர் – பேராசிரியர்-ஜேசுதாசன்; ராஜம் – ராஜ மார்த்தாண்டன்; குமார்-வேதசகாயகுமார்; டெய்சிபாய் – ஹெப்சிபா ஜேசுதாசன்; பச்சைமால், ஜெயமோகன், சுந்தர ராமசாமி, அ.கா. பெருமாள் அவரவர் பேரில்; , குமாரபிள்ளை யார்?
 4. வணங்கான்மார்ஷல் நேசமணி
 5. தாயார் பாதம் – ராமன்-தி. ஜானகிராமன்; பாலு-சுந்தர ராமசாமி
 6. யானை டாக்டர் – டாக்டர் கிருஷ்ணசாமி கிருஷ்ணமூர்த்தி (திருத்திய தியாகராஜனுக்கு நன்றி!) அவர் பேரிலேயே; கதைசொல்லி யார்?
 7. மயில்கழுத்து – ராமன்-தி. ஜானகிராமன்; பாலு-சுந்தர ராமசாமி; மதுரை சுப்பு ஐயர் – மதுரை மணி ஐயர், சந்திரா-சந்திரலேகா, கிருஷ்ணன் – கிருஷ்ணன் நம்பி cameo
 8. நூறு நாற்காலிகள் – கதைசொல்லி யார்? சுந்தர ராமசாமி, ஜெயமோகன் cameos
 9. ஓலைச்சிலுவை – டாக்டர் சாமர்வெல் அவர் பேரிலேயே. ஜேம்ஸ் யார்?
 10. மெல்லிய நூல் – காந்தி, அய்யன்காளி அவர்கள் பேரிலேயே. சிண்டன், சோகன்ராம் யார்?
 11. பெருவலிகோமல், ஜெயமோகன்
 12. கோட்டிபூமேடை ராமையா. கதைசொல்லி யார்?
 13. உலகம் யாவையும்காரி டேவிஸ், நடராஜகுரு, ஜெயமோகன்

இங்கே நிஜ மனிதர்கள் என்று நான் குறிப்பிட்டிருப்பவர்கள் எல்லாம் என் யூகங்களே. ஜெயமோகனே வெளிப்படையாக சொன்னால்தான் அது செய்தி. இந்த விளக்கம் எல்லாம் தேவை இல்லை, எல்லாருக்கும் தெரிந்த விஷயம்தான் என்று நினைத்திருந்தேன். எதற்கு வம்பு?

டிக் ஃபிரான்சிஸ் எழுதிய நெர்வ்

ஆசைக்கு ஒரு பதிவு.

எனக்கு பொதுவாக டிக் ஃபிரான்சிஸ் எழுதிய த்ரில்லர்கள் பிடிக்கும்.

ஃபிரான்சிஸ் ஒரு முன்னாள் குதிரைப் பந்தய ஜாக்கி. ஆங்கிலேயர். இங்கிலாந்து அரச குடும்பத்தினரின் குதிரைகளை எல்லாம் ரேசில் ஓட்டி இருக்கிறார். ஜாக்கி தொழிலிருந்து ரிடையர் ஆன பிறகு எழுத ஆரம்பித்தார். எல்லாமே குதிரைப் பந்தய பின்புலம் உள்ள த்ரில்லர்கள். சில சமயம் ஹீரோ ஜாக்கியாக இருப்பார். வங்கி அதிகாரி, பத்திரிகையாளர், துப்பறிபவர், பைலட், குதிரை தரகர், ரேஸ்கோர்ஸ் நிறுவன பங்குதாரர், சமையல் செய்பவர், வைன் வியாபாரி என்று பலதரப்பட்டவர்கள் ஹீரோவாக வருவார்கள். ஆனால் எல்லாருக்கும் குதிரை பந்தய பின்புலம் இருக்கும்.

ஃபிரான்சிசின் ஹீரோக்கள் எல்லாரும் ஒரே அச்சில் வார்த்தவர்கள். கூர்மையான மூளை உடையவர்கள். எந்த பிரச்சினை வந்தாலும் கலங்கமாட்டார்கள், அதை தீர்க்க முயற்சி எடுப்பார்கள். உணர்ச்சிகளுக்கு அடிமையாகமாட்டார்கள், ஆனால் உணர்ச்சிகளுக்கு உரிய இடம் தருவார்கள். Strong ethical core உடையவர்கள். எது சரி எது தவறு என்பதை பற்றி உறுதியான கருத்து உடையவர்கள். ஆனால் தண்டனை தருவதை விட, பழி வாங்குவதை விட பிரச்சினையை எப்படி தீர்ப்பது என்பதற்குத்தான் முக்கியத்துவம் தருவார்கள். புத்தகத்தில் எங்கேயாவது ஏறக்குறைய சித்திரவதை அனுபவிப்பார்கள், ஆனால் தன் நோக்கத்திலிருந்து மாறமாட்டார்கள். அலட்டல் இல்லாத புத்திசாலி செயல் வீரர்கள் என்று சொல்லலாம். எனக்கு நானும் அப்படித்தான் என்று ஒரு நினைப்பு. சரி விடுங்கள் அப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஒரு நினைப்பு. 🙂 அதுவே இந்த புத்தகங்கள் என்னை ஈர்ப்பதற்கு பெரிய காரணம் ஆக இருக்கலாம்.

Nerve அவர் எழுதிய சிறந்த நாவல்களில் ஒன்று. 1964-இல் வெளிவந்தது.

சிம்பிளான கதை. ராப் ஃபின் விளிம்பு நிலையில் இருக்கும் ஒரு steeplechase ஜாக்கி. நிலையான வருமானம் கிடையாது. கஷ்ட ஜீவனம். அது என்னவோ முதல் படியில் இல்லாத ஜாக்கிகளை துரதிருஷ்டம் துரத்துகிறது. ஆர்ட் மாத்யூஸ் தற்கொலை செய்து கொள்கிறான். பீட்டர் க்ளூனி ஒதுக்குப்புறமான ஒரு மலைப்பாங்கான இடத்தில் கொஞ்சம் சக்திக்கு மீறி வீடு வாங்குகிறான். அவன் வீட்டிலிருந்து வர இருக்கும் ஒரே ரோடில் ஒரு நாள் ஒரு ஆர்மி லாரி கவிழ்ந்து அவனுக்கு லேட்டாகிறது. அடுத்த வாரம் மீண்டும் ஒரு பெரிய கார் ரோட்டை அடைத்து நிற்கிறது, அவனுக்கு மீண்டும் லேட்டாகிறது. அவனுடைய குதிரை ட்ரெய்னர் அவனை வேலையை விட்டு தூக்கிவிடுகிறார். கிரான்ட் புக்கிகளுக்கு டிப்ஸ் தருகிறான் என்ற வதந்தியால் அவனுக்கு வேலை போகிறது, அவனுக்கு நெர்வஸ் ப்ரேக்டவுன். இந்த நிலையில் ஃபின் மீது ஜேம்ஸ் அக்ஸ்மின்ஸ்டர் என்ற ஒரு ட்ரெய்னரின் கண் விழுகிறது. ஃபின்னுக்கு ஓரளவு வேலை கிடைக்கிறது. ஜேம்ஸின் முதல் சாய்ஸ் ஜாக்கி பிப்பின் கால் உடைந்துபோகிறது. ஃபின்னுக்கு மேலும் சான்ஸ்கள் கிடைக்கிறது, வெற்றி மேல் வெற்றி.

ஒரு ரேசில் ஃபின்னின் குதிரை கீழே விழுகிறது, ஃபின்னுக்கு நல்ல அடி, கொஞ்சம் concussion. அதற்கு அடுத்தபடி ஃபின் ஓட்டும் எந்த குதிரையும் தூங்கி வழிகிறது, சரியாக ஓடமாட்டேன் என்கிறது, 28 ரேஸ்களில் ஃபின் வரிசையாக தோற்கிறான். குதிரை சரியாக ஓடவில்லை என்று எந்த ட்ரெய்னரும் நம்ப மறுக்கிறார்கள். ஃபின்னுக்கு குதிரையை வெல்லுமாறு ஓட்டும் தைரியம் போய்விட்டது, Finn lost his nerve என்று எல்லாரும் பேசுகிறார்கள். ஃபின்னும் தளர்ந்துபோகிறான். எப்படியோ சக்தியை வரவழைத்துக்கொண்டு துப்பறிய ஆரம்பிக்கிறான். 28 ரேசிலும் ஒரு பெரிய ஆள் பந்தயத்துக்கு முன் குதிரைக்கு கொஞ்சம் சர்க்கரை கொடுத்திருக்கிறான் என்று கண்டுபிடிக்கிறான். ஜேம்சிடம் உண்மையை நிரூபிக்கிறான். ஜேம்ஸ் அவனுக்கு ஒரு பெரிய ரேசில் நல்ல வாய்ப்பு தருகிறார். ரேசுக்கு முந்தைய நாள் ஃபின் கடத்தப்படுகிறான். அவன் கைகள் கட்டப்பட்டு கூரையிலிருந்து தொங்க விடப்படுகிறான். ஒரு ஏழெட்டு மணி நேரம் அப்படி தொங்கினால் ரத்த ஓட்டம் நின்று கையே துண்டிக்கப்பட வேண்டிய நிலை வரலாம்.

ஃபின் ஹீரோ, அவன் மேல் அணுகுண்டு விழுந்தாலும் பிழைத்துத்தான் தீர வேண்டும். எப்படி தப்பித்தான், யார் அந்த வில்லன், ஜாக்கிகளுக்கு ஏன் பிரச்சினைகள் வருகின்றன, வில்லன் எப்படி பிடிபட்டான் என்பதுதான் மிச்ச கதை.

ஃபின் கட்டி தொங்கவிடப்படும் இடம்தான் கதையின் உச்சக்கட்டம். மிக அருமையாக வந்திருக்கிறது.

விறுவிறுப்பான கதை. இரண்டு மூன்று வருஷத்துக்கு ஒரு முறையாவது படிப்பேன். இன்னும் எடுத்தால் கீழே வைக்க முடிவதில்லை. த்ரில்லர் விரும்பிகள் கட்டாயம் படியுங்கள். மற்றவர்களும் முயற்சி செய்யலாம். ஒரே ஒரு ஃபிரான்சிஸ் புத்தகம் படித்துப் பார்க்கலாம் என்று நினைத்தால் இதை விட Forfeit என்ற புத்தகத்தை படித்துப் பாருங்கள்.

ஃபிரான்சிஸ் ஆங்கிலேயர். அவருடைய புத்தகங்கள் பிரிட்டிஷ் கவுன்சில் நூலகங்களில் சுலபமாக கிடைக்கும். இருபது முப்பது புத்தகம் எழுதி இருக்கிறார். அதில் ஒரு ஆறேழு நல்ல த்ரில்லர்கள் என்று சொல்லலாம். ஆறேழு புத்தகமாவது சொதப்பியும் இருக்கிறார். எனக்கு இப்போது நினைவு வரும் நல்ல புத்தகங்கள் Forfeit, Whiphand, Odds Against மற்றும் Danger.