(முழு) மஹாபாரதம் தமிழில் முழுமை பெற்றது

கிட்டத்தட்ட ஏழு வருஷம் முன்னால் அருட்செல்வப் பேரரசனின் முயற்சி பற்றி கேள்விப்பட்டேன். அப்போது ஆதிபர்வத்தின் ஆரம்பத்தில் இருந்தார். அனேகமாக அவரைப் பற்றி முதலில் பதிவு செய்தது நானாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். ஜெயமோகன் கூட என் மூலம்தான் கேள்விப்பட்டார் என்று நினைவு. (என் நினைவு தவறாகவும் இருக்கலாம்.) நான் எழுதியதை எத்தனை பேர் பார்த்திருப்பார்கள் என்பது வேறு விஷயம். 🙂

ஏழெட்டு வருஷம் அயராத உழைத்து இன்று முழுவதையும் மொழிபெயர்த்தும் முடித்துவிட்டார். அவரது தளராத முயற்சியைக் கண்டு பிரமிப்பாக இருக்கிறது. சிலிகன் ஷெல்ஃபில் நாலு நாளைக்கு ஒரு பதிவு போடவே நுரை தள்ளுகிறது, எந்தப் பிரச்சினை வந்தாலும் முதலில் நிறுத்துவது இங்கே எழுதவதைத்தான். பாருங்கள் அவர் முடித்து ஓரிரு மாதம் இருக்கும், இப்போதுதான் அவரை வாழ்த்தி இங்கே நாலு வரி எழுத முடிந்திருக்கிறது. அவரை எத்தனை பாராட்டினாலும் தகும். மஹானுபாவுலு!

இப்போது ஹரிவம்சத்தை மொழிபெயர்க்க ஆரம்பித்திருக்கிறார். அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

2013 மே மாதம் எழுதிய ஒரிஜினல் வரிகள் கீழே…

mahabharathamஎனக்கு மகாபாரதம் அறிமுகமானது எனது பாட்டி மற்றும் அம்மா மூலமாகத்தான். அது ஒரு குழந்தைக்கேற்ப எளிமையாக்கப்பட்ட கதை. பதின்ம வயதில் ராஜாஜியின் சுருக்கத்தைப் படிக்கும்போதுதான் பிரமித்துப் போனேன். அப்புறம் வில்லிபாரதத்தைப் படித்தேன். அதில் இருந்த சின்னச் சின்ன மாற்றங்கள் தெரிந்தது. மூலத்தைப் படிக்க வேண்டும் என்று ஆர்வம் கிளம்பியது, ஆனால் சமஸ்கிருதம் தெரியாது. அங்கும் இங்குமாகப் பல பிரதி பேதங்களைப் படித்தேன். மனம் நிறைவு அடையவே இல்லை.

arul_selvap_perarasanகிசாரி மோகன் கங்குலி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததுதான் மூலத்துக்கு மிகவும் நெருக்கமானது என்று கேள்விப்பட்டேன். இப்போது அருள் செல்வப் பேரரசன் என்பவர் இதை தமிழில் மொழிபெயர்த்து வருகிறார். இது வரை ஆதி பர்வத்தில் நூற்றி சொச்சம் அத்தியாயங்களை மொழிபெயர்த்திருக்கிறார். அவருக்கு ஒரு ஜே!

கங்குலின் மொழிபெயர்ப்பு இணையத்தில் கிடைக்கிறது ஆனால் படிக்க கை கூடி வரவில்லை. பிரச்சினை என்னவென்றால் அது எடிட் செய்யப்படாத ஒரு படைப்பு போல இருப்பதுதான். எக்கச்சக்க கூறியது கூறல், பிராமணர்களை வலிந்து புகழ்தல் எல்லாம் நிரடுகின்றன. இருந்தாலும் ஒரு நாள் படிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். எனக்கு எப்போதுமே தமிழில் படிப்பது ஆங்கிலத்தில் படிப்பதை விட ஒரு மடங்கு சுலபம். எனவே தனிப்பட்ட முறையிலும் அவருக்கு நன்றி!


தொகுக்கப்பட்ட பக்கம்: தொன்மங்கள்

சங்கநிதி பத்மநிதி

சிறு வயதில் – இப்போது கூட – எனக்கு தொன்மங்களின் மீது அதிக ஆர்வம் உண்டு. அவ்வப்போது குபேரனிடம் சங்கநிதி பத்மநிதி என்று இரண்டு பெரும் செல்வங்கள் விளையும் செடிகள் உண்டு என்று கேள்விப்பட்டிருந்தேன். பணம் என்ன செடியில் காய்க்கிறதா என்று கேட்பார்கள், ஆனால் இவை இரண்டும் குபேரன் தோட்டத்து செடிகளில் காய்க்கின்றனவாம். ஆனால் அவை என்ன என்று யாருக்கும் தெரியவில்லை. கதாகாலட்சேபம் செய்யும் பௌராணிகர்கள் கூட ஒன்று சங்கு வடிவிலும் மற்றது தாமரை வடிவிலும் இருக்கும் என்று சொன்னார்களே தவிர வேறு எதுவும் சொல்லவில்லை. அதுவும் தெரிந்து சொன்னார்களோ இல்லை பேரை வைத்துக் கொண்டு சும்மா அடித்துவிட்டார்களோ என்று எனக்கு அப்போது ஒரு சின்ன சந்தேகம் இருந்தது.

சமீபத்தில்தான் தெரிந்துகொண்டேன். சங்கநிதி என்பது கோடி கோடி – அதாவது 10^14. பத்மநிதி என்றால் கோடி கோடி கோடி கோடி கோடி. அதாவது கோடி கோடி கோடி சங்கநிதி. அதாவது 10^35. இத்தனை தங்கக் காசுகளா? வைரங்களா? அதை இன்னொரு நாள் கண்டுபிடிப்போம்!

பெரிய எண்களுக்கு இப்படி பெயர் வைப்பது அவ்வப்போது நடப்பதுதான். Googol என்பது 10^100, googolplex என்பது 10^googol – அதாவது 10^(10^100). இந்தப் பெயரை வைத்தவர் எட்வர்ட் காஸ்னர் என்னடா கூகிள் மாதிரியே இருக்கிறதே, ஸ்பெல்லிங் மட்டும் கொஞ்சம் மாறுகிறதே என்று நினைக்கிறீர்களா? கூகிள் என்ற பெயர் கூகோலை தற்செயலாக தவறாக எழுதிவிட்டதால் உண்டானது என்று சொல்கிறார்கள், உண்மையா பொய்யா தெரியாது.

இன்று புது வருஷம் பிறக்கிறது. உங்கள் அனைவர் வீட்டிலும் இந்த வருஷம் சங்கநிதியும் பத்மநிதியும் பூத்து காய்த்து குலுங்கட்டும்!

தொகுக்கப்பட்ட பக்கம்: தொன்மங்கள்

சித்திர ராமாயணம்

1936-இல் எழுதப்பட்ட – எழுதப்பட்ட என்றால் சரியாக இல்லை, உருவாக்கப்பட்ட புத்தகம் ஒன்று கிடைத்தது. ராமாயணம் வெகு சுருக்கமாக எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் புத்தகத்தில் முக்கால்வாசி சித்திரங்கள்தான். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இணைத்திருக்கிறேன், பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன். சாம்பிளுக்கு இரண்டு பக்கம் கீழே.

முதல் பக்கம்

லங்காதகனம்

தொகுக்கப்பட்ட பக்கம்: தொன்மங்கள், காமிக்ஸ்

வாரியாரின் ‘ராமகாவியம்’

kirupananda_vaariyarஎன் சிறு வயதில் கிருபானந்த வாரியாரின் குரல் மிகவும் பழக்கமான ஒன்று. அனேகமாக ஒலிபெருக்கியில், அபூர்வமாக நேரடியாக. கோவில், திருவிழா என்றால் பின்னணியில் இந்தக் குரலைக் கேட்காத என் தலைமுறையினர் இருக்க முடியாது. அவரும், புலவர் கீரனும், பாலகிருஷ்ண சாஸ்திரிகளும் புகழ் பெற்று விளங்கினார்கள். அதுவும் வாரியாரின் குரல் அவருக்கான ஸ்பெஷல் சொத்து.

அவர் எழுதிய புத்தகம் என்று ஒன்று இணையத்தில் கிடைத்தது. ராமகாவியம். இலக்கியம், மறுவாசிப்பு என்றெல்லாம் இல்லை. ராமாயணத்தை அவர் பாணியில் சொல்கிறார், அவ்வளவுதான். படிக்கும்போதும் அவரது குரல்தான் கேட்டுக் கொண்டே இருந்தது. அவரே நேரடியாக சொல்வது போல இருந்தது.

யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று மின்பிரதியை இணைத்திருக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தொன்மங்கள்

பியோவுல்ஃப்

beowulfஎனக்குப் பிடித்தமான தொன்மங்களில் பியோவுல்ஃபும் ஒன்று.

என்ன பிரமாதமான தொன்மம்? பீமன் பகாசுரனைக் கொல்வதுதான். இங்கே பகாசுரனுக்கு பதிலாக க்ரெண்டல். க்ரெண்டல் மனிதனுக்கும் (ஆதாமின் மகன் கெய்ன்?) ஒரு பெரும் நீர்வாழ் monster-க்கும் (நாகம்? ட்ராகன்? ஆக்டோபுஸ்?) பிறந்த பாதி மனிதன். க்ரெண்டல் அரசன் ஹ்ரோத்காரின் புதிதாகக் கட்டப்பட்ட மாபெரும் அரண்மனைக்கு இரவில் வந்து அங்கே விருந்துண்ண வந்தவர்களையும், காவலர்களையும், வீரர்களையும் கொல்கிறான். ஹ்ரோத்கார் மயிரிழையில் தப்பிக்கிறான். எல்லாரும் பயந்து அந்த மாளிகைப் பக்கமே போவதில்லை. அண்டை நாட்டுக்காரனான பியோவுல்ஃப் மாளிகையில் தங்கி இரவில் க்ரெண்டலோடு போரிடுகிறான். க்ரெண்டலின் கையை உடலிலிருந்து பிடுங்கிவிடுகிறான். க்ரெண்டல் ஓடிவிட, க்ரெண்டலின் தாய் வந்து கண்ணில் பட்டவர்களை எல்லாம் கொல்கிறது. தாயைத் தேடி பியோவுல்ஃப் நீருக்குள் இருக்கும் பெரும் குகைக்கே போகிறான். தாயைக் கொல்கிறான், அரை உயிரோடு இருக்கும் க்ரெண்டலையும் கொல்கிறான். பெரும் புகழோடு ஊர் திரும்புகிறான்.

தன் நாட்டுக்கு அரசனாகிறான். வயதான காலத்தில் இன்னொரு ட்ராகனை தேனீக்களை வைத்துத் தந்திரமாகக் கொல்கிறான். ஆனால் காயம்பட்டு இறந்து போகிறான்.

இந்த மாதிரி மொட்டையான கதைச் சுருக்கங்களை வைத்து பியோவுல்ஃபை எடை போட முடியாது. சாகசக் கதை என்ற அளவிலும் சரி, தொன்மம் என்ற அளவிலும் சரி உள்ளங்களைக் கவரக் கூடியது. அந்தக் கால “சூதர்களும்”, உடல் வலிமையை பிரதானமாக வைத்த காலமும் அற்புதமாகச் சித்தரிக்கப்படுகின்றன. அதுவும் இதையெல்லாம் வாய்விட்டுப் படிக்க வேண்டும்.

பியோவுல்ஃப் இன்னும் பிரபலமான கதைதான். சமீபத்தில் கூட திரைப்படமாக வந்தது.

இதுதான் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட முதல் “கதை”யாகக் கருதப்படுகிறது. ஆனால் கதை நடப்பது ஸ்காண்டிநேவிய நாடுகளில், டென்மார்க்கில். கூடன்பர்க் தளத்தில் படிக்கலாம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தொன்மங்கள்

அமிஷ் திரிபாதியின் மெலுஹா-சிவா புத்தகங்கள்

amish_tripathiதிரிபாதி இந்த சீரிஸில் மூன்று புத்தகங்களை – Immortals of Meluha (2010), Secret of Nagas (2011), Oath of the Vayuputras (2013) – எழுதி இருக்கிறார். இரண்டு லட்சம் பிரதிகள் விற்றிருக்கின்றனவாம். ஐம்பது கோடி டர்ன்ஓவராம். இது வரை வெளிவந்த எல்லா தமிழ் புத்தகங்களிள் மொத்த விற்பனைத் தொகை ஐம்பது கோடி இருக்குமா என்று தெரியவில்லை.

shiva_trilogyபுத்தகங்களின் களம் இந்தியக் கடவுள்கள், தொன்மங்கள். தட்சனின் மகள் சதி (தாட்சாயணி) சிவனை மணந்தது, சிவனுக்கும் தட்சனுக்கும் பிணக்கு ஏற்பட்டது, சதி தட்சனின் யாகத்திற்குச் சென்று அங்கே உயிர் நீத்தது, சிவ-பார்வதியின் பிள்ளைகளாக பிள்ளையாரும் முருகனும் அவதரித்தது, சிவன் திரிபுரத்தை எரித்தது, முருகன் சூரனை வென்று தேவ சேனாதிபதி ஆனது எல்லாம் நம் தொன்மங்கள். அவற்றை எல்லாம் கலந்து கட்டி ஒரு pulp fiction-ஐ உருவாக்கி இருக்கிறார். பிருகு முனிவர்தான் வில்லன். பரசுராமரும் பகீரதனும் பிருஹஸ்பதியும் சிவனின் தோழர்கள்-பக்தர்கள். அது எப்படி என்று கேள்வி கேட்பவர்கள் இதைத் தவிர்த்து விடுங்கள்.

புத்தகத்தின் பலம் அவரது கற்பனை வளம். பிள்ளையாருக்கு யானை முகம் எப்படி வந்தது? காளிக்கு பல கைகள் எப்படி வந்தது? சரஸ்வதி நதி மறைந்தது எப்படி? இவற்றுக்கெல்லாம் சில சுவாரசியமான hypothesis-களை முன்வைக்கிறார். குறிப்பாக பிள்ளையாரின் யானை முகத்துக்கான காரணமாக அவர் சொல்வது நன்றாக இருக்கிறது.

புத்தகத்தின் பலவீனங்களோ பல. ஏறக்குறைய இன்றைய அறிவியல் அன்றே இருப்பதாக வைத்துக் கொள்கிறார். சரி இருந்துவிட்டுப் போகட்டும். அதற்காக அன்றைய மனிதர்களும் கிலோமீட்டர் மாதிரி இன்றைய அளவைகளைப் பயன்படுத்தினால் எப்படி? இன்றைய அறிவியல் மட்டுமல்ல, இன்றைய மாநிலப் பிரிவுகள் (ராஜஸ்தான், குஜராத் என்று அப்போதே பேசுகிறார்கள். ராஜஸ்தான் என்ற அமைப்பு உருவானதே 1950-களில்தான்.), இன்றைய மொழியே கதை மாந்தர்களால் பயன்படுத்தப்படுகிறது.

திரிபாதி இலக்கியம் படைக்கவில்லை. ஏறக்குறைய மார்வெல் காமிக்ஸ் போன்ற கதை அமைப்பை முன் வைக்கிறார். பதின்ம வயதினர்கள் ரசிக்கலாம். அவர்களுக்கு நம் தொன்மங்கள் பற்றி கொஞ்சம் அறிமுகம் கிடைக்கலாம். மற்றவர்களுக்கு இது டைம் பாஸ்.

தொகுக்கப்பட்ட பக்கங்கள்: இந்தியப் புனைவுகள், தொன்மங்கள்

ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு ரெட்டைத் தாழ்ப்பாள் – அப்டீன்னா?

வெண்பாவிற் புகழேந்தி என்று புகழ் பெற்றவரும், நளவெண்பாவை எழுதியவருமான புகழேந்திப் புலவருக்கும் ஒட்டக்கூத்தருக்கும் நடுவே பலத்த போட்டி இருந்தது என்று கர்ணபரம்பரைக் கதைகள் உண்டு. அந்தப் போட்டியிலிருந்து முளைத்ததாம் இந்த “பழமொழி”.

சுந்தரராமன் தன் தளத்தில் அசோகமித்ரன் கட்டுரை ஒன்றை digitize செய்து பதித்திருக்கிறார். அதிலிருந்து:

சீதனமாக சோழ அரசியுடன் அனுப்பப்பட்ட புகழேந்தியை சொல்வார் பேச்சு கேட்டு சோழ மன்னன் சிறையில் அடைத்திருக்கிறான். இதை அறிந்த அரசி கோபத்துடன் தன் அறைக்குள் தாளிட்டுக் கொள்கிறாள்.
அவள் கோபத்தைத் தணிக்க அரசன் ஒட்டக்கூத்தரை அனுப்புகிறான். அவர் பாடிய செய்யுள் அரசிக்கு இன்னும் கோபமூட்டிவிடுகிறது. “என் இடை பற்றியும் அழகு பற்றியும் பாட இவன் யார்? ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு ரெட்டைத் தாழ்ப்பாள்!”

asokamithranஅசோகமித்ரன் இந்தக் கதையை வினோத ரசமஞ்சரி என்ற புத்தகத்தில் படித்ததாகக் குறிப்பிடுகிறார். அவ்வையார், கம்பன், ஒட்டக்கூத்தர், புகழேந்தி, காளமேகம், பொய்யாமொழிப் புலவர், ஏகம்பவாணன் பற்றிய பல கர்ணபரம்பரைக் கதைகள் அடங்கிய தமிழ் இலக்கிய வரலாற்றுச் சுரங்கம் என்று இந்தப் புத்தகத்தைப் புகழ்கிறார். போதாக்குறைக்கு பரமார்த்த குரு கதை வேறு இருக்கிறதாம். 1891-இல் நிச்சயமாக ஒரு பதிப்பு வெளியாகி இருக்கிறதாம். அதற்கு முன்பும் பதிப்புகள் வந்திருக்கலாம் என்று அசோகமித்ரன் யூகிக்கிறார். (வீராசாமி செட்டியார் (1855) தாம் எழுதிய உரைநடைக் கட்டுரைகளைத் தொகுத்து ‘வினோத ரசமஞ்சரி’ என்று வெளியிட்டார் என்று இந்தப் பதிவில் படித்தேன்.) சமீப காலத்தில் விஜயா பதிப்பகத்தினர் வெளியிட்டிருக்கிறார்கள் என்றும் நினைவு கூர்கிறார்.

அசோகமித்ரன் குறிப்பிடும் பிற இரு புத்தகங்களும் (வாதூலன் எழுதிய “கர்நாடக சங்கீதத்தை ரசியுங்கள்“, சுந்தரராமன் எழுதிய “ராகசிந்தாமணி“) கூட சுவாரசியமானவையாகத் தெரிகின்றன.

என்றாவது தேடிப் பிடித்து இதையெல்லாம் வாங்க வேண்டும்.

தொகுக்கப்பட்ட பக்கம்: கர்ணபரம்பரைக் கதைகள்