பிரத்யேக

புல்லட்டின் போர்ட் (அண்மைய பதிவுகளுக்கு கீழே scroll செய்யவும்)

சில பல வருஷங்களாகவே அதிகமாக இருந்த மனச்சோர்வு ஒரு வழியாகக் குறைய ஆரம்பித்திருக்கிறது.. மூக்கின் அருகில் இருந்த நீர் இப்போது கழுத்து மட்டத்துக்குப் போயிருக்கிறது. ஒரு காலத்தில் நூலகங்களில் தவம் கிடந்தவன்தான்; ஆனால் வீட்டிலிருந்து ஒரு மைல் கூட இருக்காத நூலகத்துக்கு இரண்டு மூன்று மாதம் முன்னால்தான் போனேன் – ஐந்து வருஷம் கழித்து!  படிப்பதே குறைந்துவிட்டது. சின்ன எழுத்துக்களைப் படிக்க முடியாதது ஒரு மனத்தடையாக இருக்கிறது. பார்ப்போம், இந்த வருஷமாவது கொஞ்சம் படிக்க முடிகிறதா என்று!



நான் எழுதும் பதிவுகளில் பாதிக்கு மேல் புத்தகம் பற்றிதான். அதனால் புத்தகங்களுக்காக ஒரு தனி ப்ளாக் ஆரம்பிக்கலாம் என்று ரொம்ப நாளாக யோசனை. இன்று ஆரம்பித்துவிட்டேன்!

சிறந்த சிறுகதைகள், சிறந்த நாவல்கள் என்று இரண்டு ஸ்டிக்கி பதிவுகள் வைத்திருக்க யோசனை. படிக்கும்போது, நினைவு வரும்போது இந்தப் பதிவுகளில் சேர்த்துவிட எண்ணம்.

ஒரு ப்ளாகையே சமாளிக்கமுடியவில்லை, இதில் இன்னொன்றா என்று சில சமயம் தோன்றுகிறது. ஓடுகிற வரை ஓடட்டும்!

ஜெயமோகன் இந்த தளத்தைப் பற்றி தன் ப்ளாகில் புத்தகங்களைப்பற்றிய ஆர்வம் கொண்டவர்கள் வாசிக்கவேண்டிய தளம் என்று குறிப்பிட்டு எங்களை கவுரவித்திருக்கிறார்.

எங்கள் பிற தளங்கள்:

தொகுக்கப்பட்ட பக்கம்: சுய அறிமுகம்

ஐசக் பாஷவிஸ் சிங்கர்

1978-இல் நோபல் பரிசு வென்றவர் ஐசக் பாஷவிஸ் சிங்கர். சிங்கர் யூதர். போலந்தில் பிறந்து அமெரிக்காவில் குடியேறியவர். யிட்டிஷ் மொழியில் மட்டுமே எழுதினார்.

சில சிறுகதைகளே படித்திருக்கிறேன், என்றாலும் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் என்று முடிவுக்கு வந்துவிட்டேன். Gimpel the Fool சிறுகதையைப் பற்றி கொஞ்சம் விவரமாக இங்கே.

Spinoza of the Market Street சிறுகதையை ஒன்றுக்கு மேற்பட்ட தளங்களில் படிக்கலாம்.சிம்பிளான காதல் கதையாக, ஆராய்ச்சியிலும் படிப்பிலும் வாழ்க்கையை கழித்துவிட்ட கிழத்துக்கு வாழ்க்கை புரியும் கதையாக, தான் வாழ்நாள் முழுவதும் வாழ்க்கையைப் பார்த்த கோணம் திடீரென்று விரிவடையும் கதையாக, எப்படி வேண்டுமானாலும் படிக்கலாம். படியுங்கள்! நல்ல சிறுகதை.

A Wedding in Brownsville சிறுகதையை நான் முழுமையாகப் புரிந்து கொண்டேனா என்பது சந்தேகமே. ஆனாலும் சுவாரசியமான, நல்ல சிறுகதை என்று தெளிவாகத் தெரிகிறது. நாஜிக்களிடமிருந்து தப்பித்த சில பல ஒரு கிராமத்து யூதர்கள். தப்பித்தவர்களில் அனேகர் இன்று நியூ யார்க்கில். ஒருவர் வெற்றி பெற்ற, வயதாகிக் கொண்டிருக்கும் மருத்துவர். அவர் மனைவியும் ஒரு முன்னாள் ஜெர்மானியர், ஆனால் பிறப்பால் யூதர் அல்லர். மனைவியின் ஒரு சகோதரர் நாஜி; இன்னொருவர் கம்யூனிஸ்ட். இருவருமே கொல்லப்பட்டார்கள். மருத்துவர் நியூ யார்க் நகரின் தூரப்பகுதி ஒன்றில் தன் கிராமத்து மனிதர் ஒருவர் குடும்பத் திருமணத்துக்குப் போகிறார். போகும் வழியில் ஒரு விபத்தைப் பார்க்கிறார். திருமணக் கொண்டாட்டத்திலும் பேச்சு எப்போதும் யார் தப்பித்தார், யார் இன்னும் உயிரோடிருக்கிறார், யார் இறந்தார் என்றுதான் சுழன்று சுழன்று வருகிறது. திடீரென்று மருத்துவர் தன் இறந்தபோய்விட்டதாய் சொல்லப்படும் தன் முன்னாள் காதலியைப் பார்க்கிறார். காதல் அப்படியேதான் இருக்கிறது, மணந்து கொள்ளலாம் என்று பேசிக் கொள்கிறார்கள். ஆனால் காதலிக்கு வயதே ஆகவில்லை. விபத்தில் பார்த்தது தன்னைத்தானா என்று மருத்துவருக்கு ஒரு நொடி தோன்றுகிறது. தான் பார்க்க வந்த திருமணம் நடக்கிறது…

கதையின் மிகச் சிறந்த பகுதி யார் பிழைத்தார்கள், யார் இறந்தார்கள் என்று மீண்டும் மீண்டும் பேசிக் கொள்ளும் இடம்தான். அதற்காகவே படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

Yentl

Yentl இன்னொரு நல்ல சிறுகதை. சராசரி மனைவியாக வாழ விரும்பாத, கல்வி கற்க விரும்பும் பெண் ஆண் வேடம் பூண்டு மதக் கல்வி கற்கிறாள். அவளை ஆண் என்று நினைத்து பழகும் நண்பன் அவிக்டார். நண்பனின் முன்னாள் காதலி ஹடஸ் என்று ஒரு முக்கோணக் காதல். யெண்ட்ல்/அன்ஷெலின் பாத்திரப் படைப்பு சிறப்பாக இருக்கிறது. பார்பாரா ஸ்ட்ரெய்சாண்ட் நடித்து திரைப்படமாகவும் வந்தது.

தொகுக்கப்பட்ட பக்கம்: சிங்கர் பக்கம்

தொடர்புடைய சுட்டிகள்:

டாம் க்ளான்சி: Patriot Games

க்ளான்சியின் த்ரில்லர்களில் எனக்கு மிகவும் பிடித்தது இதுதான்.

க்ளான்சியின் அத்தனை பலங்களும் நன்றாக வெளிப்படும் நாவல். விறுவிறுப்பு, நாயகன் ஒரே நேரத்தில் நாயகத்தன்மையையும் சாதாரணன்-தன்மையையும், – என்ன, கொஞ்சம் திறமையான சாதாரணன் – வெளிப்படுத்துதல், நுண்விவரங்கள் என்று அத்தனையும் உண்டு. அங்கங்கே இழுக்கவும் செய்யும், ஆனால் கிடுகிடுவென்று படிக்கவும் தூண்டும்.

Version 1.0.0

சிஐஏவுடம் சில மெல்லிய தொடர்புகள் உள்ள ஜாக் ரயன். இங்கிலாந்திற்கு சென்றிருக்கும்போது தீவிரவாதிகள் இளவரசர் குடும்பம் இருக்கும் காரைத் தாக்குவதைப் பார்க்கிறார்; யோசிக்காமல் களத்தில் இறங்கி ஒருவனைக் கொல்கிறார், ஒருவனைப் பிடித்துக் கொடுக்கிறான், தோளில் குண்டு பாய்கிறது. ராஜ குடும்பத்தினர் நண்பர்கள் ஆகிவிடுகிறார்கள்.

தாக்கிய தீவிரவாத கும்பல் ஐரிஷ் தீவிரவாத இயக்கம். அன்றைய (இன்றும்) முக்கிய தீவிரவாத இயக்கம் IRA (Irish Republican Army). இது அதிலிருந்து பிரிந்த ஒரு சிறு குழு. ULA என்று பெயர். ULA-IRA நடுவே நிறைய பிரச்சினைகள் உண்டு. அன்றைய கடாஃபியின் லிபியா இந்தக் குழுவிற்கு பயிற்சியும் பணமும் கொடுக்கிறது. மாட்டிக் கொண்ட தீவிரவாதி ஷான் மில்லரை ULA சிறையிலிருந்து மீட்கிறது.

ஐரிஷ் தீவிரவாத இயக்கங்களுக்கு அமெரிக்காவில் கொஞ்சம் ஆதரவு உண்டு. பணம் நிறைய வருவது அங்கிருந்துதான். அதனால் அமெரிக்காவில் தாக்குதல் நடத்தமாட்டார்கள். ஆனால் ULA அமெரிக்காவில் ரயன் குடும்பத்தைத் தாக்குகிறது. IRA-வுக்கு கெட்ட பெயர். ரயனின் மனைவி காதியும் மகள் சாலியும் செத்துப் பிழைக்கிறார்கள்.

ரயன் சிஐஏவில் சேர்கிறார். ULA பற்றி ஆராய்கிறார். அமெரிக்காவிற்கு இங்கிலாந்து இளவரசர் வரப் போகிறார், ரயனின் வீட்டுக்கு வருகிறார் என்று ULA-வுக்கு தெரிகிறது. மீண்டும் அவர்களைக் கடத்த, ரயனைத் தாக்கத் திட்டம். அதிர்ஷ்டவசமாக எல்லாரும் பிழைக்கிறார்கள், தீவிரவாதிகள் பிடிபடுகிறார்கள், சுபம்!

இளம் வயதில் படித்தபோது ஒரே மூச்சில் படித்தது நன்றாக நினைவிருக்கிறது. முக்கியமான காரணம் மனதில் நானே ஜாக் ரயனாக இருந்தது போன்ற பகல் கனவுதான் என்று நினைக்கிறேன். இளவரசர் சார்லஸைக் காப்பாற்றுவது, சர் பட்டம் கொடுக்கப்படுவது…

1987-இல் எழுதப்பட்ட நாவல். பெருவெற்றி பெற்ற நாவல். 1990-இல் ஹாரிசன் ஃபோர்ட் நடித்து திரைப்படமாகவும் வந்தது.

த்ரில்லர் விரும்பிகளுக்கு பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: த்ரில்லர்கள்

தொடர்புடைய சுட்டி: Hunt for Red October

தலித் தலைவர்: இரட்டைமலை சீனிவாசன் ஜீவிய சரித்திரம்

இரட்டைமலை சீனிவாசன் என்ற பெயரை அங்கும் இங்கும் கேட்டிருந்தாலும் அவர் தமிழக தலித் தலைவர்களில் ஒருவர் என்பதைத் தவிர எனக்கு வேறு எதுவும் தெரியாது. சமீபத்தில் இரட்டைமலை சீனிவாசன் ஜீவிய சரித்திர சுருக்கம் (1939) என்ற அவரது புத்தகத்தின் மின்பிரதி கிடைத்தது. காப்புரிமை மீறல் என்றுதான் நினைக்கிறேன், இருந்தாலும் ஆர்வத்தை அடக்க முடியாமல் படித்துவிட்டேன். புலவர் வே. பிரபாகரன் என்பவர் தொகுத்திருக்கிறார்.

சீனிவாசனுக்கு இந்திய அரசு தபால்தலை வெளியிட்டிருக்கிறது. கோட் சூட் மீசையோடு கம்பீரமாக முன்னால் இருப்பவர்தான் அவர். (அம்பேத்கர் பின்னால்)

ஜீவிய சரித்திரம் மிகச் சிறிய புத்தகம். 40 பக்கம் இருக்கலாம். விவரங்கள் அதிகமாக இல்லை. ஆனால் அங்கங்கே அவர் எழுதி இருக்கும் வரிகள் மிகச் செறிவானவை, பலதும் யோசிக்க வைக்கின்றன.

  1. சீனிவாசன் 1860-இல் மதுராந்தகம் அருகே உள்ள கோழியாலம் என்ற ஊரில் பிறந்தவர். சிலர் 1859 என்கிறார்கள், ஆனால் அவரது புத்தகத்தில் 1860 என்றே குறிப்பிடப்பட்டிருக்கிறது. அவரது குடும்பம் தஞ்சாவூருக்கும் பிறகு கோவைக்கும் குடிபெயர்ந்திருக்கிறது.
  2. குடும்பத்தின் செல்வ விவரங்களைப் பற்றி அவர் எதுவும் குறிப்பிடவில்லை, சிலர் ஏழைக் குடும்பம் என்கிறார்கள் சிலர் செல்வந்தர் குடும்பம் என்கிறார்கள். ஆனால் பள்ளிப் படிப்பிற்கு ஓரளவு பணம் தேவைப்பட்ட அந்த நாட்களில் அவர் பள்ளியில் சேர்ந்திருக்கிறார்.
  3. 400 மாணவர்கள் கொண்ட பள்ளியாம் அதில் இவரையும் சேர்த்து 10 பேர்தான் அபிராமணர்களாம். தன் ஜாதி தெரிந்தால் தன்னை இழிவுபடுத்துவார்கள் என்று யாருடனும் பழகமாட்டாராம். எல்லா ஜாதியினருக்கும் கல்வி கிடைத்தது என்று தரம்பால் ஆவணங்களை முன் வைப்பதற்கும் இவர் அனுபவத்துக்கும் எத்தனை வேறுபாடு? 70-80 வருஷத்திற்குள் இத்தனை மாறிவிட்டதா?
  4. சிலர் இவர்தான் முதல் தலித் பட்டதாரி என்கிறார்கள். ஆனால் சீனிவாசன் தன் கல்லூரி நாட்களைப் பற்றி எதுவுமே சொல்லவில்லை. அதனால் கல்லூரியில் படிக்கவில்லை என்றே யூகிக்கிறேன்.
  5. பிறகு வேலைக்கு சேர்ந்திருக்கிறார். தலித் (அவர் காலத்தில் பறையர், சாம்பவர்) நிலை குறித்து தீவிரப் பிரக்ஞை இருந்திருக்கிறது. அந்தக் காலத்தில் பறையர்கள் ஓரளவு உயர்ந்த நிலையில் இருந்தார்கள் என்பதற்கு ஆதாரமாக இடிந்த நந்தன் கோட்டை என்று எதையெல்லாமோ பார்த்திருக்கிறார். (ஸ்டாலின் ராஜாங்கம் இதை நந்தன் என்ற மாமன்னன் இருந்தான் என்பதற்கு ஆதாரமாகக் கொள்கிறார்). 1772-இல் தலித் குடியானவர்களின் நிலையைப் பற்றி அன்றைய ஆங்கில அரசு கவலை கொண்டது என்று ஆவணம் இருக்கிறதாம்/இருந்ததாம். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை என்கிறார்.
  6. பறையர் மகாஜன சபையை 1891-இல் ஆரம்பித்திருக்கிறார்.
  7. 1893-இல் பறையன் என்ற பத்திரிகையை ஆரம்பித்திருக்கிறார். பறையன் என்பதில் தாழ்வில்லை என்று வலியுறுத்தவே பறையன் என்று பத்திரிகைக்கு பெயர் வைத்திருக்கிறார். விலை ஒரு அணா. அந்தக் காலத்திற்கு இது மிக அதிகமான விலை என்று நினைக்கிறேன். முதல் இதழ் வெளியிட பத்து ரூபாய் செலவானதாம். நானூறு பிரதிகள் விற்றனவாம்.
  8. பத்திரிகை பிரபலமாகி இருக்கிறது. ஒரு அவதூறு வழக்கில் நூறு ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாம், யார் எவ்வளவு கொடுத்தார்கள் என்றே தெரியவில்லை, அபராதம் கட்டப்பட்டுவிட்டது என்கிறார்.
  9. 1893-இல் இந்தியாவில் ஐசிஎஸ் பரீட்சை நடத்தப்பட வேண்டும் என்று முயற்சி நடந்திருக்கிறது. அப்படி நடந்தால் “உயர்ஜாதியினர்” தலித்களை அடக்கி ஆள்வார்கள் என்று எதிர்த்திருக்கிறார். அவர் இதற்காகப் பெற்ற 3000க்கும் மேற்பட்ட கையெழுத்துகள் 112 அடி நீள காகிதத்தை நிறைத்திருந்தனவாம்.
  10. அந்த மனுவில் இருந்ததாக அவர் சொல்லும் இரண்டு செய்திகள்; அன்று மயிலாப்பூரில் பிராமணர் வாழும் தெரு ஒன்றில் இங்கே பறையர் நுழையக் கூடாது என்று அறிவிப்பு இருந்ததாம். பச்சையப்பன் கல்லூரியில் அன்று பறையருக்கு அனுமதி இல்லையாம். பின்னாளில் இவை இரண்டும் ஒழிய அந்த மனுவே காரணம் என்கிறார்.
  11. 1895-இல் அன்றைய வைசிராய் எல்ஜின் பிரபு சென்னை வந்திருக்கிறார். பறையர் மஹாஜன சபை சார்பில் இவர் ஆறேழு பேரை அழைத்துக் கொண்டுபோய் வைசிராயை சந்தித்திருக்கிறார். பறையர்களுக்கு அங்கீகாரம் கிடைத்தது அதுதான் முதல் தடவையாம். அது வரை ஜாதி ஹிந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள், ஆங்கிலோ-இந்தியர்கள் போன்ற “இனங்களுக்குத்தான்” அப்படி அங்கீகாரம் இருந்ததாம்.
  12. லண்டன் வரை சென்று தலித் மக்களின் துயரத்தை விளக்கி இருக்கிறார். லண்டன் போகவே சில வருஷங்கள் பிரயாணம் செய்திருக்கிறார். நோய், பணமின்மை காரணத்தால் அங்கங்கே தங்க வேண்டி இருந்திருக்கிறது.
  13. புத்தகத்தில் சொல்லப்படவில்லை; ஆனால் அதற்குப் பிறகு தென்னாப்பிரிக்காவில் பல வருஷம் இருந்திருக்கிறார். காந்திக்கு குறளை அறிமுகம் செய்து வைத்தார், தமிழ் கற்றுக் கொடுத்தார் என்கிறார்கள். உண்மையா, மிகைப்படுத்துதலா தெரியவில்லை.
  14. சட்டசபை உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். கிணறுகள், சாலைகள், பொது கட்டிடங்கள் ஆகியவற்றிலிருந்து “தாழ்த்தப்பட்ட” ஜாதியினரை விலக்கக் கூடாது என்று ஒரு மசோதாவை நிறைவேற்றி இருக்கிறார். பல சீர்திருத்தங்களை முயன்றிருக்கிறார், சில வெற்றி. உப்புக்கு வரி மிகக் குறைவாகத்தான் இருக்கிறது, அதனால் ஏழைகளுக்கு எந்தக் கஷ்டமும் இல்லை, உப்பு வரியை விலக்கக் கூடாது, வரிப்பணத்தை வைத்து தலித்களுக்கு ஏதேனும் உதவி செய்யலாம் என்றும் போராடி இருக்கிறார். இது உப்பு சத்தியாகிரகத்துக்கு முன்பா பின்பா என்று தெரியவில்லை.
  15. 1926-இல் ராவ்சாஹிப் பட்டம், 1930-இல் ராவ்பஹதூர் பட்டம், 1936-இல் திவான்பஹதூர் பட்டம்.
  16. 1928-29-இல் தானும் அம்பேத்கரும் தலித் பிரதிநிதிகளாக வட்ட மேஜை மாநாட்டுக்குப் போனோம், 1930-இல் அம்பேத்கர் மட்டும் போனார் என்கிறார். எனக்குத் தெரிந்த வரை 1930, 31, 32-ஆம் ஆண்டுகளில்தான் வட்டமேஜை மாநாடுகள் நடந்தன. இது என்ன குழப்பமோ தெரியவில்லை. அப்போது ஜார்ஜ் மன்னரை சந்தித்திருக்கிறார், மன்னருக்கு தீண்டாமை என்றால் என்ன என்றே தெரியவில்லை. சீனிவாசன் விளக்கியதும் அதிர்ந்துவிட்டாராம். மன்னரை தன் போன்ற அஒரு “தீண்டத் தகாதவர்” சந்தித்தது குறியீட்டு ரீதியாக பெரிய விஷயமாக உணர்ந்திருக்கிறார்.
  17. காந்தியை தென்னாப்பிரிக்காவிலிருந்தே தெரியுமாம். தீண்டாமையை ஒழிக்க காந்தி எடுத்த முயற்சிகளை “உயர்ஜாதியினர்” ஏற்றுக் கொள்வதாக நடிக்கிறார்கள், உண்மையில் அவர்கள் மனம் மாறவில்லை என்று கருதி இருக்கிறார். அம்பேத்கரோடு சேர்ந்து தலித்களுக்கு தனித் தொகுதிகள் வேண்டும் என்று காந்தியை எதிர்த்திருக்கிறார். ஆனால் அவரது வார்த்தைகளிலேயே: வாதாடி வெற்றி பெறுவதை இவர் தவிர்த்து உண்ணாவிரதமிருப்பது வீரத்தன்மையை இழந்து இரக்கத்தைத் தேட வேண்டியவரானார் என்பதைக் கண்டு என் மனமிரங்கி (பூனா) ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டேன்.
  18. புத்தகத்தில் இல்லை; ஆனால் இவரது தங்கை அயோத்திதாசரை மணந்தாராம்.
  19. புத்தகத்தில் இல்லை; 85-86 வயது வரை வாழ்ந்திருக்கிறார். தாத்தா என்று அன்போடு அழைக்கப்பட்டிருக்கிறாராம்.

இன்னும் விவரமாக எழுதி இருக்கக் கூடாதா என்று நினைக்க வைத்துவிட்டார்.

ஸ்டாலின் ராஜாங்கம் பதிப்பித்த வடிவத்தை காலச்சுவடு பதிப்பகத்தில் (125 ரூபாய் விலை) வாங்கலாம். நான் ஊருக்குப் போகும்போது கட்டாயம் வாங்கிவிடுவேன். வாங்குங்கள், குறைந்த பட்சம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்

தொடர்புடைய சுட்டி: இரட்டைமலை சீனிவாசன் விக்கி குறிப்பு

வரலாற்று சாகச நாவல்: Sharpe’s Regiment

bernard_cornwellபெர்னார்ட் கார்ன்வெல் எழுதும் ரிச்சர்ட் ஷார்ப் நாவல்கள் கொஞ்சம் உயர்தர சாண்டில்யன் நாவல்கள். விறுவிறுப்புக்கு பஞ்சமே இல்லை. வேகத்தடை (speedbreaker) போல காதல் காட்சிகள், பெண் வர்ணனைகள் வராது. எல்லாவற்றையும் விட பெரிய வித்தியாசம் போர்கள் ஓரளவு தத்ரூபமாக சித்தரிக்கப்படுவதுதான். எல்லா சாகச நாவல்களிலும் உள்ள மாதிரி நாயகன் இறக்க முடியாது மாதிரி சில விதிகள் இருந்தாலும் ரத்தம் தெறிக்கிறது. இதை ரஃபேல் சபாடினி நாவல்களிலோ, ராமேஜ் நாவல்களிலோ, ஹார்ன்ப்ளோயர் நாவல்களிலோ உணர முடிவதில்லை.

richard_sharpeஇரண்டாவதாக அன்றைய சமூக நிலை – உயர்குடியினர், ராணுவ ஊழல்கள், திறமையை அமுக்கும் அரசியல் – என்று பல முகங்களின் குறுக்குவெட்டு சித்திரம் கிடைக்கிறது. குறிப்பாக திறமை இருந்தும் பிறந்த குடி, அந்தஸ்து ஆகியவற்றால் அமுக்கப்படுவது. அது கர்ணன் காலத்திலிருந்தே அழியாத அலுப்பு தராத கரு. அதை அருமையாக வெளிப்படுத்த்கிறார். சாண்டில்யனுக்கும் இவருக்கும் உள்ள பெரிய வித்தியாசம் இதுதான். யாராவது அயல் நாட்டினர் சாண்டில்யன் நாவல்களை மட்டும் படித்து இந்தியாவைப் பற்றி ஒரு சித்திரத்தை உருவாக்கிக் கொண்டால் இந்தியாவில் ஜாதி என்று ஒன்று இருந்ததா என்று சந்தேகப்படுவார்கள்.

மேலும் சாகச நாவல்களை படிக்கும் பதின்ம வயது மனநிலை ஏழு கழுதை வயதாகியும் எனக்குப் போகவில்லைதான். அதனால் இந்தத் தொடர் நாவல்களை நான் பரிந்துரைக்கிறேன்.

அனேகமான ஷார்ப் நாவல்கள் ஸ்பெயினில் வெல்லிங்டன் பிரபுவுக்கும் நெப்போலியனின் தளபதிகளுக்கும் இடையே நடந்த போர்களை பின்புலமாகக் கொண்டவை. பின்னால் எழுதப்பட்ட சில நாவல்கள் ஷார்ப்பின் ஆரம்ப வாழ்வை – இந்தியாவில் – சித்தரிக்கின்றன. வெல்லிங்டன் பிரபு – அப்போது அவர் பேர் வெல்லஸ்லி – இந்தியாவில் திப்பு சுல்தானோடு போரிட்டு வென்றவர். அவரது உயிரை ஒரு போரில் ஷார்ப் காப்பாற்றி இருக்கிறான். அதனால்தான் சிப்பாயாக இருந்தவனுக்கு அதிகாரியாக பதவி உயர்வு கிடைக்கிறது.

கார்ன்வெல் சுவாரசியத்துக்காக, வரலாற்றை அவ்வப்போது கொஞ்சம் திரித்துக் கொள்வேன் என்று ஒத்துக் கொண்டிருக்கிறார், அது இந்திய நாவல்களில்தான் எனக்கு நன்றாகவே தெரிந்தது. குறிப்பாக திப்பு சுல்தான் வரும் Sharpe’s Tiger நாவலில்.

ஒன்று சொல்ல வேண்டும், இந்திய வரலாற்று நாவல்களில் ஒன்ற முடிவதைப் போல வேறு வரலாற்று நாவல்களில் ஒன்ற முடிவதில்லை. ஸ்பெயினில் இந்தப் போரில் வெல்லிங்டன் தோற்றிருந்தால் நெப்போலியனின் ஐரோப்பிய வெற்றி முழுமை அடைந்திருக்கும் என்று கார்ன்வெல்லே தெளிவாகச் சொல்கிறார். அதனால் என்ன என்று எந்த யோசனையும் எழுவதில்லை. திப்பு சுல்தான் இந்தப் போரில் வென்றிருந்தால் என்று யோசனை வந்தால் அடடா, மிஸ்ஸாகிவிட்டதே என்று தோன்றுகிறது!

ஷார்ப்பிற்கு பெரிய பின்கதை உண்டு. அவன் லண்டனின் சேரிகளில் வளர்ந்த ஒரு அனாதை. பச்சையாகச் சொன்னால் தேவடியாப்பையன். பதின்ம வயதில் திருடன். தண்டனையிலிருந்து தப்பிக்க கிழக்கிந்திய கம்பெனி ராணுவத்தில் சேர்கிறான். சிப்பாயாகச் சேர்ந்தவன் மெதுமெதுவாக அதிகாரி பதவிக்கு உயர்கிறான். அன்றைய ஆங்கிலேய ராணுவத்தில் அதிகாரி பதவிகள் உயர்குடியினருக்குத்தான் கிடைக்கும். பல சமயம் விலை கொடுத்து வாங்கப்படும். இந்த மாதிரி ஏழ்மை பின்புலம் உள்ளவன் சிப்பாயிலிருந்து சின்ன பதவி உயர்வு பெற்று சார்ஜெண்ட் ஆகலாம், ஆனால் அதிகாரி ஆவது மகா அபூர்வம். அப்படியே அதிகாரி ஆனபிறகும் அந்தஸ்து பிரச்சினை, சரியாக ஒட்ட முடியாது. ஆனாலும் ஷார்ப்பின் போர்த்திறனால் அவன் சகித்துக் கொள்ளப்படுகிறான்.

இந்தத் தொடரின் முக்கியக் களம் ஸ்பெயின் நாடுதான். (சில prequels இந்தியாவில் நடக்கின்றன.) நெப்போலியன் ஏறக்குறைய ஐரோப்பாவை பிடித்தாயிற்று. ஸ்பெயினில் வெல்லிங்டன் அவனது படைகளைத் திறமையாக எதிர்த்து வெல்கிறார். அந்த யுத்தத்தின் பல போர்கள்தான் இந்தத் தொடரின் களம். நெப்போலியனின் வீழ்ச்சியில் ஸ்பெயின் யுத்தத்து தோல்விதான் முதல் படியாம். (அடுத்தது ரஷியப் படையெடுப்பு, கடைசியாக வாட்டர்லூ போர்.)

வெல்லிங்டனின் உயிரைக் இந்தியாவில் காப்பாற்றி இருப்பதால் வெல்லிங்டன் ஷார்ப்பை அறிவார். அவன் சிறந்த வீரன், நேரடி தாக்குதல்களை தலைமை வகித்து நடத்தக் கூடிய நல்ல தளபதி என்பதை உணர்ந்திருக்கிறார். கடினமான பணிகளை திறமையாக செய்யக் கூடியவன் என்று நினைக்கிறார். ஆனால் அன்றைய எழுதப்படாத விதிகள் அவரது கையைக் கட்டிப் போட்டிருக்கின்றன, ஷார்ப்புக்கு அவன் திறமைக்கேற்றபடி பதவி உயர்வு கொடுத்துவிட முடியாது. தொடரின் முதல் நாவலான Sharpe’s Eagle-இல் ஷார்ப் ஒரு lieutenant. 25-30 rifle வீரர்களின் தலைவன். வாட்டர்லூ போரிலும் அப்படித்தான், அவனது திறமை அந்தச் சிறு குழுவை நடத்துவதில்தான் வெளிப்படுகிறது. ஆனால் கர்னல் பதவி வரைக்கும் உயர்கிறான்.

காலவரிசைப்படி பார்த்தால் ஷார்ப் இந்தியப் போர்களுக்குப் பிறகு ஸ்பெயினில் வெல்லிங்டன் பிரபுவின் தலைமையில் நெப்போலியனின் படைகளை எதிர்த்துப் போராடுகிறான். ஷார்ப்பின் உயிர் நண்பனாக மாறும் அவனுடைய சார்ஜெண்ட் பாட்ரிக் ஹார்பர் எப்போதும் துணையாக இருக்கிறான். ஹார்பருக்கு ஷார்ப்தான் மேலதிகாரி, அதனால் வெளிப்பார்வைக்கு கொஞ்சம் மரியாதையாக நடந்து கொள்ள வேண்டி இருக்கும்.

நெப்போலியன் வாட்டர்லூவில் இறுதித் தோல்வி அடையும் வரை விடாத போர்கள். அதற்குப் பிறகு ஷார்ப் தன் முன்னாள் எதிரி ஒருவனின் மனைவியோடு ஏழைப் பண்ணையாராக வாழ்கிறான்.

நான் பரிந்துரைக்கும் புத்தகங்கள் Sharpe’s Eagle, Sharpe’s Gold, Sharpe’s Company, Sharpe’s Siege, Sharpe’s RegimentSharpe’s Waterloo, மற்றும் Sharpe’s Assassin. ஒரே ஒரு புத்தகம் படிக்க வேண்டுமென்றால் Sharpe’s Regiment-ஐ பரிந்துரைக்கிறேன்.

Version 1.0.0

Sharpe’s Regiment (1986) நாவலில் ஸ்பெயினில் விடாது போர் நடந்து கொண்டிருக்கிறது. ஷார்ப் இந்த நாவலின் காலத்தில் மேஜர். அவனது படையில் (regiment) – தெற்கு எஸ்ஸெக்ஸ் படை – ஆட்கள் இறந்து கொண்டே இருக்கிறார்கள். ஒரு படையில் ஆயிரம் பேர் இருப்பார்களோ என்னவோ. ஒரு அளவுக்கு மேல் ஆட்கள் இறந்தால் படையைக் கலைத்து ஆட்களை வேறு வேறு படைகளில் சேர்த்துவிடுவார்கள். பல போர்களில் ஒன்றாகப் போரிட்டவர்கள், அவர்களுக்குள் நல்ல பந்தம் இருக்கிறது. மேலும் இங்கிலாந்தில் இந்தப் படையில் சேர ஆள் எடுக்கிறார்கள் என்று தெரியும், ஆனால் இங்கிலாந்திலிருந்து ஸ்பெயினுக்கு பல மாதங்களாகியும் யாரும் வந்து சேரவில்லை. இதோ வருவார்கள் அதோ வருவார்கள் என்று சாக்குப்போக்கு கடிதங்கள் மட்டும் இங்கிலாந்திலிருந்து வந்து கொண்டிருக்கின்றன.

ஷார்ப், ஹார்பர், இன்னும் இரண்டு அதிகாரிகள் இங்கிலாந்தில் என்ன நடக்கிறது என்று விசாரிக்கப் போகிறார்கள். ஷார்ப், ஹார்பர் இருவருமே ஓரளவு புகழ் பெற்றவர்கள். ஒரு ஃப்ரெஞ்சு சின்னத்தை இருவரும் போரில் கைப்பற்றியது இங்கிலாந்தில் பேசப்படும் நிகழ்ச்சி. பட்டத்து இளவரசனுக்கே இவர்களைப் பற்றி நேரடியாகத் தெரியும். இளவரசன் எல்லாம் சவுகரியமாக மாளிகையில் சுகபோகம் அனுபவிப்பன், அவ்வளவுதான். போர், அதற்கு தேவையான தளவாடங்கள், செலவுகள் எதைப் பற்றியும் பெரிதாக அலட்டிக் கொள்ள மாட்டான், ஆனால் வெற்றிகளைக் கொண்டாடுவான். ஷார்ப் தெற்கு எஸ்ஸெக்ஸ் படையில் 700 சிப்பாய்களுக்கு சம்பளம் கொடுக்கப்படுகிறது என்று கண்டுபிடிக்கிறான், ஆனால் படையைக் காணவில்லை. படைக்கு இன்னும் ஆள் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் தெரிகிறது. இளவரசனிடமே நேரடியாக புகார் செய்தாலும் ராணுவ மந்திரி ஃபென்னர் இது எல்லாம் காகிதப் பிரச்சினை, சில விதிகளை சமாளிக்க இப்படி எல்லாம் செய்யப்படுகிறது என்று சமாளித்துவிடுகிறான். ஷார்பைக் கொல்லவும் முயற்சி நடக்கிறது, ஆனால் ஷார்ப் தப்பிக்கிறான்.

ஷார்ப்பும் ஹார்பரும் வேலையற்ற நாடோடிகள் போல மாறுவேடத்தில் ஊர் ஊராகப் போகிறார்கள். அவர்கள் திட்டம் தெற்கு எஸ்ஸெக்ஸ் படைக்கு ஆள் எடுக்கும் எவனையாவது கண்டுபிடித்து படையில் சேர்வது, சேர்ந்தால் படை எங்கிருக்கிறது என்று தெரிந்துவிடும். ஆள் எடுப்பவர்கள் ஷார்ப்/ஹார்பர் பேரைச் சொல்லிதான், அவர்கள் புகழை வைத்துதான் ஆளே பிடிக்கிறார்கள். இவர்களது திட்டம் வெற்றி, படை இருக்கும் இடத்துக்குப் போய்விடுகிறார்கள். அங்கே படைகள் ஏறக்குறைய சிறையில் இருக்கின்றன. சில படைகளுக்கு – குறிப்பாக மேற்கிந்தியத் தீவுகளுக்கு போக வேண்டிய படைகளுக்கு – ஆளே சேர்வதில்லை.  வில்லன்கள் – மந்திரி ஃபென்னரும் அவர்களில் அடக்கம் – அடிப்படை பயிற்சி முடிந்த பிறகு அந்த மாதிரி படைகளுக்கு இந்த சிப்பாய்களை விற்று பணம் சம்பாதிக்கிறார்கள்.

ஷார்ப்பும் ஹார்பரும் சிறையிலிருந்து தப்புகிறார்கள். மேஜர் ஷார்ப், சார்ஜெண்ட் ஹார்பராகத் திரும்பி வருகிறார்கள். இருக்கும் படையை லண்டன் நோக்கி நடத்திச் செல்கிறார்கள். ஆனால் எந்த தஸ்தாவேஜுகளும் இல்லாமல் இவர்கள் தரப்பை நிரூபிக்க முடியாது, ஷார்ப்பிற்கு இருக்கும் பதவியும் போகும் அபாயம். அதிர்ஷ்டவசமாக அவையும் கிடைக்க, ஊழல் முடிவுக்கு வருகிறது. வில்லன்கள் தப்புகிறார்கள். ஷார்ப்பால் ஸ்பெயினுக்கு ஒரு படையை அழைத்துச் செல்ல முடிகிறது.

மிகச் சிறப்பாக எழுதப்பட்ட சாகச நாவல். இப்படி நடந்திருக்க வாய்ப்புண்டு என்று நம்மை நம்ப வைக்கிறது. வில்லன்களுக்கு தண்டனை கிடைக்காதது, ஏறக்குறைய் சித்திரவதை செய்யும் சிறு அதிகாரிகள் ஷார்ப்புக்கு படை நடத்த தேவைப்படுவது, அதனால் அவர்களுக்கும் தண்டனை கிடைக்காதது எல்லாம் அந்த நம்பகத்தன்மையை அதிகப்படுத்துகின்றன. ஃபென்னர் மிகச் சுலபமாக ஷார்ப்பை சமாளிப்பது, ஷார்ப்பின் ஒரு கால “நண்பன்”/மேலதிகாரி லாஃபோர்ட் ஷார்ப்புக்கு பதவி உயர்வு கொடுத்து ஊழலைப் பூசி மெழுக முயற்சிப்பது எல்லாம் நன்றாக வந்திருக்கின்றன.

சிறை முகாமின் சித்தரிப்பு, அங்கிருந்து ஷார்ப்/ஹார்பர் தப்பிக்கும் காட்சி, மீண்டும் அதே முகாமுக்கு வந்து படை நடத்தும் காட்சி பிரமாதமானவை.

சாகச நாவல் விரும்பிகள் தவற விடக் கூடாது. மற்றவர்களுக்கும் பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: பெர்னார்ட் கார்ன்வெல் பக்கம்

தொடர்புடைய சுட்டி: கார்ன்வெல் தளம்

ஆதவன் சிறுகதைகள்

இளம் வயதில் என் பெயர் ராமசேஷன் (1980) நாவலைப் படித்து மகிழ்ந்து போனேன். ஆனாலும் நான் ஆதவனை அதிகம் படித்ததில்லை. கை தவறவிட்ட எழுத்தாளர்.

ஆதவனின் எழுத்துக்களில் சுஜாதாவின் சாயல் தெரியும். இ.பா.வின் சாயலும். பலரும் அவரை இ.பா.வின் சிஷ்ய பரம்பரை என்றே கருதுகிறார்கள். யார் யார் மீது தாக்கம் செலுத்தினார் என்று சொல்வதற்கில்லை. ஆனால் இ.பா. என்னை பெரிதாகக் கவர்ந்ததில்லை. ஆதவனையோ இ.பா.வை விட உயர்ந்த இடத்தில்தான் வைக்கிறேன்.

இளைஞர்களின் உலகத்தை – குறிப்பாக அறுபது, எழுபதுகளின் இளைஞர் உலகத்தை ஆதவனால் பிரமாதமாக சித்தரிக்க முடிந்திருக்கிறது. அதுவும் என், எனக்கு நெருக்கமான நண்பர்களின் மனநிலை, சிந்தனை முறை போலவே அவரது இளைஞர்களின் மனநிலையும் சித்தரிக்கப்பட்டது அவரது கவர்ச்சியை அதிகப்படுத்தியது. (நான் எழுபது, எண்பதுகளின் இளைஞன்).

என்ன, அவரது நாயகர்கள் போல மனதில் தோன்றியதை எல்லாம் வெளியில் சொல்லிவிட முடிந்ததில்லை. அப்படி தப்பித் தவறி சொல்லிவிட்டால் திமிர் பிடித்தவன் என்ற பேச்சைக் கேட்க வேண்டி இருந்தது. கல்லூரியிலாவது டோண்ட் கேர் என்று போக முடிந்தது, வேலைக்கு போன பிறகு கொஞ்சம் ஜாக்கிரதையாகப் பேசத் தொடங்கினேன். இன்றும் என் நெருங்கிய நண்பன் ஒருவனோடு பணி புரிகிறேன், அலுவலக மீட்டிங்களில் அவன் அடக்கி வாசிக்கும் தருணங்கள் எனக்கு மட்டும் புரிகின்றன and vice versa.

சிவப்பாய் உயரமாய் மீசை வச்சுக்காமல் பிரமாதமான சிறுகதை. மொழியில் உள்ள உற்சாகம் சுஜாதாவை நினைவுபடுத்தியது, ஆனால் அந்த அளவு உரத்த, ஆர்ப்பாட்டமான குரல் இல்லை. அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் என்பதை ஒரு அலுவலக சூழலுக்கு அற்புதமாகக் கொண்டு வந்துவிட்டார்.

முதலில் இரவு வரும் எழுபதுகளின், அறுபதுகளின் நகர்ப்புற மத்தியதரக் குடும்பங்களை, குறிப்பாக பிராமணக் குடும்பங்களை நுண்மையாக சித்தரிக்கிறது. என்னையும், என் அத்தை பையன்களையும் பெண்களையும் அப்பாவையும் அம்மாவையும் அத்தைகளையும் அத்திம்பேர்களையும் மாமாக்களையும் மாமிகளையும் பெரியப்பாக்களையும் பெரியம்மாக்களையும் பார்க்க முடிகிறது.

ஒரு பழைய கிழவரும் ஒரு புதிய உலகமும் என் அப்பாவைத்தான் நினைவுபடுத்தியது. வேறு உலகங்களுக்குள் சென்றுவிட்ட பிள்ளைகள்; ரத்த உறவு இல்லையென்றால் அந்த உலகத்தில் அவரால் அவ்வப்போது கூட நுழைய முடியாது. இன்று எனக்கும் என் பெண்களுக்கும் அதுதான் நடக்க ஆரம்பித்திருக்கிறது. மிகச் சிறப்பாக அதைக் காட்டிவிடுகிறார்.

லேடி சிறுகதையில் வீடுகளில் வேலை பார்க்கும் பாப்பாவின் சித்திரம் பிரமாதம். மகன் பெரிய ஆளாக வருவான் என்ற அவள் கனவு கொஞ்சம் விரிசல் விடும் இடம் நன்றாக வந்திருக்கிறது.

புதுமைப்பித்தனின் துரோகம் லேசாக புன்முறுவல் செய்ய வைத்தது. திருவல்லிக்கேணி ஒண்டுக்குடித்தனத்தில் வாழும் எழுத்தாளனுக்கு இருக்கும் பெருமிதம் அவன் எழுத்தும் ரசனையும்தான். அதிலும் பணக்கார நண்பன் போட்டிக்கு வந்தால்?

புகைச்சல்கள் இன்னும் ஒரு நல்ல சிறுகதை. புதிதாகத் திருமணம் ஆன கணவன் மனைவி உறவு அன்பு, காமம், அடுத்தவரை சீண்டிப் பார்த்தல், சண்டை, பிறக்கப் போகும் குழந்தை என்று மெதுமெதுவாக சமநிலை (equillibrium) அடைவதை நன்றாக சித்தரிக்கிறார்.

ஒரு தற்கொலை சிறுகதை மிகச் சீராக தன் முத்தாய்ப்பான முடிவை நோக்கிச் செல்கிறது. முடிவு வரிகள் மிக ஆழமானவை.

வாழ்க்கையை முழுதும் உணராமலேயே அந்தப் பெண் செத்துப் போய்விட்டாள். மெல்ல மெல்ல செத்துக் கொண்டே இருப்பதை உணராமல் நாங்கள் வாழ்ந்து கொண்டே இருப்போம்.

கௌரவம் சிறுகதை சுமார்தான். ஆனால் சிறுவனின் கண்ணில் உலகம் விவரிக்கப்படுவது நன்றாக இருக்கிறது.

நிழல்கள் சிறுகதையில் அந்தக் காலத்து ஜென்டில்மன் காதல் நன்றாக வெளிப்படுகிறது. காமம் வேண்டும், ஆனால் பல மனத்தடைகள்… மூன்றாமவன், கருப்பை சிறுகதைகள் சுமார்தான்.

ஆதவனின் 4 சிறுகதைகள் –  ஒரு பழைய கிழவரும் புதிய உலகமும், முதலில் இரவு வரும், சிவப்பாய் உயரமாய் மீசை வச்சுக்காமல், லேடி – ஜெயமோகனின் முக்கிய தமிழ் சிறுகதைகள் பட்டியலில் இடம் பெறுகின்றன. இரண்டு சிறுகதைகள் – சிவப்பாய் உயரமாய் மீசை வச்சுக்காமல், ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள் – எஸ்ராவின் 100 சிறந்த தமிழ் சிறுகதைகள் பட்டியலில் இடம் பெறுகின்றன.

ஆதவன் இளம் வயதிலேயே (45 வயது) இறந்துவிட்டார். அவர் இறந்த பிறகு முதலில் இரவு வரும் என்ற சிறுகதை தொகுப்புக்காக சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது. (1987)

காகித மலர்கள் (1977) நாவலை தன் முதன்மையான தமிழ் நாவல்கள் பட்டியலிலும் என் பெயர் ராமசேஷன் நாவலை இரண்டாம் வரிசை தமிழ் நாவல்கள் பட்டியலிலும் ஜெயமோகன் சேர்த்திருக்கிறார். எஸ்ரா காகித மலர்களை தன் சிறந்த புத்தகங்கள் பட்டியலில் சேர்த்திருக்கிறார்.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆதவன் பக்கம்

தொடர்புடைய சுட்டிகள்:

14 வயது தலித் முன்னோடியின் குமுறல்

முக்தா சால்வேயின் பெயரை சமீபத்தில்தான் கேள்விப்பட்டேன். மஹாராஷ்டிரர்; மாங் என்ற ஜாதியில் 1840-41 வாக்கில் பிறந்தவர்.மாங் ஜாதியினர் அன்றைய ஜாதி முறையில் அடித்தட்டில் இருந்திருக்கிறார்கள்.

11-12 வயதில் முக்தா ஜ்யோதிராவ்-சாவித்ரிபாய் ஃபூலே தம்பதியினர் நடத்தி வந்த பள்ளியில் சேர்ந்திருக்கிறார். 1855-இல், 14 வயதில், அவர் எழுதிய சிறு கட்டுரை – மாங் மஹரச்ய துக்விசாயி – மூலம் மட்டுமே இன்று நினைவு கூரப்படுகிறார். இந்தக் கட்டுரை ஞானோதயா என்ற பத்திரிகையில் வெளியானதாம். அவரைப் பற்றிய வேறு விவரங்கள் தெரியவில்லை.

1855-இல் முக்தா எழுதிய கட்டுரை 2008-இல் வெளியான  பிரஜ் ரஞ்சன் மணி என்பவர் எழுதிய A Forgotten Liberator: The Life and Struggle of Savitribai Phule என்ற புத்தகத்தில் வெளியாகி இருக்கிறது. மணி இதுவே ஒரு தலித் பெண் எழுதிய முதல் கட்டுரையாக இருக்கக் கூடும் என்கிறார்.

கட்டுரை கிடைக்குமா என்று தேடினேன், அம்பைதான் உதவிக்கு வந்தார். ஆங்கிலக் கட்டுரைக்கான இணைப்பு இங்கே. தமிழில் மொழிபெயர்த்திருக்கிறேன்…

நடுவில் மஹர்கள் மாங் ஜாதியினரை தங்களை விடத் தாழ்ந்தவர்களாகக் கருதுகிறார்கள் என்ற வரிகள் கட்டுரையின் ஓட்டத்தோடு சரியாகப் பொருந்தவில்லைதான், ஆனால் 14 வயதுப் பெண் அப்படி ஒட்டாமல் சில வரிகளை எழுதி இருந்தாலும் வியப்பில்லை…


தீண்டத் தகாத பெண்ணான என் இதயத்தில் விலங்குகளை விடவும் தாழ்ந்தவளாகக் கருதப்படும் என் மக்களின் – மஹர்கள் மற்றும் மாங் ஜாதியினர் – வலியும், வேதனையும் நிறைந்திருக்கிறது. அனைத்தையும் படைத்த இறைவன் என்னை அப்படி உணர வைத்திருப்பதை எண்ணும்போது, எனக்கு அடக்க உணர்ச்சிதான் ஏற்படுகிறது. இதனால் ஏற்படும் மனோபலத்தால், அவனது பெயரால், இந்தக் கட்டுரையை எழுதுகிறேன். இறைவனே மாங்களையும் படைத்தான், மஹர்களையும் படைத்தான், பிராமணர்களையும் படைத்தான்; அவனே இதை எழுதும் அறிவையும் எனக்குக் கொடுத்திருக்கிறான். என் உழைப்புக்கான வெற்றியையும் அவனே தருவான்.

நம்மை வெறுக்கும், நம்மை விட தம்மை உயர்ந்தவர்களாகக் கருதும், இந்தப் பெருந்தீனி பிராமணர்களின் வாதங்களை நாம் வேதங்களின் அடிப்படையில் மறுக்க முயற்சித்தால், இந்தப் பிராமணர்கள் வேதங்கள் அவர்களது தளம், அவர்களது சொத்து என்கிறார்கள். வேதங்கள் பிராமணர்களுக்கே மட்டுமே உரிமையானது என்றால், அவை நமக்கானவை அல்ல.

வேதங்கள் பிராமணர்களுக்கே மட்டுமே உரியவை என்றால் அது நமக்கான புனித நூல் இல்லை என்பது ஊரறிந்த ரகசியம். நமக்கு புனித நூலும் இல்லை, எந்த மதமும் இல்லை. வேதங்கள் பிராமணர்களுக்கு மட்டுமே உரித்தானவை என்றால் நாம் வேதங்களின்படி நடக்க வேண்டிய அவசியமில்லை. பிராமணர்கள் சொல்வது போல் நம் ஜாதியினர் வேதங்களைப் பார்ப்பதே பெரும் பாவம் என்றால், அவற்றின்படி நடப்பது முட்டாள்தனத்தின் உச்சம் அல்லவா? முஸ்லிம்கள் குரான் காட்டும் வழியில் தங்கள் வாழ்க்கையை நடத்திக் கொள்கிறார்கள், ஆங்கிலேயர்கள் பைபிளைப் பின்பற்றுகிறார்கள், பிராமணர்களுக்கு அவர்களது வேதம் இருக்கிறது. அவர்கள் அனைவரும் நல்லதோ, கெட்டதோ, அவர்களுக்கான மதத்தை பின்பற்றுவதால், பின்பற்ற மதம் இல்லாத நம்மை விட ஓரளவு மகிழ்ச்சியாகவே இருக்கிறார்கள். இறைவா, எங்கள் மதம் எது என்று தயவு செய்து தெளிவுபடுத்து!  நாங்களும் பின்பற்ற உனது உண்மையான மதம் என்ன என்பதை எங்களுக்கும் கற்றுக் கொடு. ஒரு சாராரை உயர்த்தி மற்றவரை தாழ்த்தும் இந்த பூமியிலிருந்து மறையட்டும்! எங்கள் புத்தியில் அப்படிப்பட்ட ஏற்றத்தாழ்வுகள் உள்ள மதத்தைப் பற்றிய பெருமிதம் எப்போதும் நுழையாமல் இருக்கட்டும்.

ஏழை மாங்/மஹர்களை நமது நிலத்திலிருந்து துரத்திவிட்டு இவர்கள் அங்கே பெரும் மாளிகைகளை கட்டிக் கொண்டனர். அது மட்டுமல்ல. மாங்/மஹர்களை சிவப்பு ஈயம் கலந்த எண்ணையைக் குடிக்க வைத்து அவர்களை அந்த மாளிகைகளின் அஸ்திவாரங்களில் புதைத்தனர். பல தலைமுறைகளாக நமது ஏழை மக்கள் அழிந்தே போயினர். இந்த பிராமணர்கள் நம்மை இழிவான நிலையில் வைத்திருக்கிறார்கள்; மாடுகளை விட கேவலமானவர்கள் என்று எண்ணுகிறார்கள். பாஜிராவ் பேஷ்வா காலத்தில் நம்மை கழுதைகளை விட கேவலமாக நடத்தவில்லையா? நொண்டிக் கழுதையை நீங்கள் அடித்தால் அதன் எஜமானன் உங்களை எதிர்ப்பான். ஆனால் மாங்/மஹர்களை அடிக்கும் வழக்கத்தை எதிர்க்க யார் இருந்தார்கள்? பாஜிராவ் ஆட்சியில் ஒரு மாங்கோ மஹரோ ஆயுதப் பயிற்சிசாலையை கடந்தால் அவர் தலையை சீவி அதை பந்தாகவும் தங்கள் வாட்களை மட்டையாகவும் கொண்டு விளையாடுவார்கள். உள்ளே சென்றாலே தண்டனை என்றால் கல்வி பெறுவது எப்படி, கல்விக்கான உரிமை எங்கிருந்து வரும்? எப்படியோ ஒரு மாங்கோ மஹரோ எழுதப் படிக்க கற்றுக் கொண்டுவிட்டது பாஜிராவுக்குத் தெரிந்தால் அவர் சொல்வார்: மாங்/மஹர் கல்வி பெறுவது ஒரு பிராமணனின் வேலை வாய்ப்பைப் பறிக்கிறது. அவர் சொல்வார் “என்ன தைரியம் இவர்களுக்கு கல்வி கற்க? பிராமணர்கள் தங்கள் கடமைகளை இந்த நீசர்களிடம் ஒப்படைத்துவிட்டு விதவைகளின் தலைகளை சிரைக்கும் வேலையை எடுத்துக் கொள்ள வேண்டுமா?” கல்வி கற்ற மாங்/மஹர்களை பாஜிராவ் எப்போதும் தண்டிப்பார்.

இரண்டாவதாக, இந்த பிராமணர்கள் நாம் கல்வி கற்பதை தடை செய்ததோடு திருப்தி அடைந்தார்களா? இல்லை. பாஜிராவுக்கு காசியில் மோசமான இறப்பு கிடைத்தது. ஆனால் இங்கே உள்ள மஹர்கள் – மாங் ஜாதியினரைப் போலவே தீண்டத் தகாதவர்கள் – மாங் ஜாதியினரை தவிர்க்கிறார்கள். அவர்களுக்கும் சில பிராமண குணங்கள் உண்டாகி இருக்கின்றன, தங்களை மாங் ஜாதியினரை விட உயர்ந்தவர்களாகக் கருதுகிறார்கள். மாங் ஜாதியினரின் நிழலே அவர்களுக்கு தீட்டாம்! தங்கள் புனித ஆடைகளோடு தாங்கள் உயர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொண்டு திரியும் இந்தக் கல்நெஞ்சுக்கார பிராமணர்கள், நம்மை தீண்டத் தகாதவர்கள் என்று ஒதுக்குவதால் நாம் படும் துயரங்களைப் பற்றி ஒரு துளியும் கவலைப்படுகிறார்களா? நாம் தீண்டத் தகாதவர்கள் என்பதால் நமக்கு யாரும் வேலை தருவதில்லை. வேலை இல்லையேல் பணம் இல்லை. வறுமையில் வாடுகிறோம். ஓ மெத்தப் படித்த பண்டிதர்களே, உங்கள் சுயநலம் நிரம்பிய புரோகிதத் தொழிலை நிறுத்திவிட்டு, உளுத்துப்போன உங்கள் ஞானக் கூச்சல்களை நிறுத்திவிட்டு, நான் சொல்ல வருவதைக் கேளுங்கள். எங்கள் பெண்கள் பிரசவிக்கும்போது, அவர்கள் தலைக்கு மேல் கூரை கூட இல்லை. மழையிலும் குளிரிலும் அவர்கள் அனுபவிக்கும் கஷ்டங்கள்தான் எத்தனை எத்தனை! உங்கள் அனுபவங்களிலிருந்து இதைப் புரிந்து கொள்ள முயற்சியுங்கள். பிரசவ காலத்தில் அவர்களுக்கு ஏதாவது நோய் ஏற்பட்டால், அவர்கள் மருத்துவர் செலவுக்கும் மருந்துச் செலவுக்கும் எங்கே போவார்கள்? உங்களில் காசு வாங்காமல் மனிதத்தன்மையோடு அவர்களை பார்த்துக் கொள்ளும் மருத்துவர் எவராவது எப்போதாவது இருந்திருக்கிறார்களா?

பிராமணக் குழந்தைகள் மாங்/மஹர் குழந்தைகளை கல்லால் அடித்து காயப்படுத்தினால் கூட அவர்களுக்கு முறையிட தைரியமில்லை. அவர்கள் பிராமணர்களின் மிச்சம் மீதி உணவைத்தான் பிச்சையாகப் பெற்று வாழ வேண்டும், அதனால் சத்தம் போடாமல் இதை எல்லாம் சகித்துக் கொள்கிறார்கள். அய்யோ! ஓ கடவுளே! இது என்ன கொடுமை! இந்த அநியாயங்களைப் பற்றி நான் இன்னும் எழுதினால் நான் குமுறிக் குமுறி அழ வேண்டி இருக்கும். இப்படிப்பட்ட அடக்குமுறை இருப்பதால்தான் கருணை உள்ள இறைவன் நமது நலம் விரும்பும் பிரிட்டிஷ் அரசை நமக்குத் தந்துள்ளான். இந்த அரசின் கீழ் நமது துன்பங்கள் எத்தனை தூரம் குறைந்திருக்கின்றன எனபதைப் பார்ப்போம்.

முற்காலத்தில் தங்கள் வீரத்தை வீட்டில் எலிகளை மட்டும் கொன்றே காட்டிய கோகலேக்களும் அபதேக்களும் ட் ரிம்காஜிக்களும் அந்தலாக்களும் பன்சராக்களும் கேலேக்களும் பெஹ்ரேக்களும் (இவை எல்லாம் பிராமணப் பெயர்கள்) நம்மை எந்தக் காரணமும் இல்லாமல் கொடுமைப்படுத்திக் கொண்டிருந்தனர். கர்ப்பிணிகளிடம் கூட அவர்கள் இரக்கம் காட்டவில்லை. இது இப்போது நின்றுவிட்டதுதான். புணே பேஷ்வாக்களின் காலத்தில் மஹர்களும் மாங்களும் துன்புறுத்தப்படுவதும் சித்திரவதைக்கு ஆளாக்கப்படுவதும் சாதாரண நிகழ்ச்சியாக இருந்தது, இப்போது அப்படி நடப்பது நின்றுவிட்டது. கோட்டைகளைக்கும் மாளிகைகளைக்கும் அஸ்திவாரம் போடும்போது நரபலி கொடுக்க நம்மை இன்று யாரும் உயிரோடு புதைப்பதில்லை. நம் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அந்தக் காலத்தில் ஒரு மஹரோ மாங்கோ பகட்டான துணிகளை அணிந்தால் பிராமணர்கள் மட்டுமே அப்படிப்பட்ட துணிகளை அணிய வேண்டும் என்பார்கள். அப்படிப்பட்ட துணிகளை நாங்கள் அணிந்தால் எங்கள் மேல் திருட்டுப் பட்டம் கட்டப்படும். நாங்கள் உடை அணிந்தால் அவர்களது மதம் தீட்டாகிவிடும். அப்படி உடை அணிபவர்களை மரத்தில் கட்டி வைத்து அடிப்பார்கள். முன்பெல்லாம் உயர்ஜாதியினருக்கு எதிராக என்ன நடந்தாலும், அதற்கான தண்டனையாக தலையை சீவி விடுவார்கள். இப்போது அது நின்றிருக்கிறது. அதிகமான, சுரண்டல் வரிகள் நிறுத்தப்பட்டுவிட்டன. தீண்டாமை சில இடங்களில் நிறுதப்பட்டிருக்கிறது. விளையாட்டு மைதானங்களில் கொல்வது நிறுத்தப்பட்டிருக்கிறது. இப்போது எங்களால் கடைகளுக்குப் போக முடிகிறது. பாரபட்சமற்ற பிரிட்டிஷ் ஆட்சியில் இப்படி பல நடந்து கொண்டிருக்கிறன. முன்பு எங்களை புழுதியாக மிதித்த பிராமணர்கள் இப்போது எங்கள் துயரங்களைத் துடைக்க முன்வந்திருக்கிறார்கள் என்பதை நான் வியப்புடன் பதிவு செய்கிறேன். எல்லா பிராமணர்களும் அல்லதான். சைத்தானின் தாக்கம் உடையவர்கள் முன் போலவே எங்களை நடத்துகிறார்கள். எங்களை எங்கள் துயரங்களிலிருந்து விடுவிக்கப் பாடுபடும் பிராமணர்களை அவர்கள் தாக்குகிறார்கள், ஜாதிப்பிரஷ்டம் செய்கிறார்கள். ஆனால் சில உத்தமர்கள் மாங்/மஹர்களுக்காக பள்ளிகள் நடத்துகிறார்கள், பிரிட்டிஷ் அரசு அப்படிப்பட்ட பள்ளிகளுக்கு ஆதரவு தருகிறது. ஓ மாங்/மஹர்களே! நீங்கள் ஏழ்மையாலும் நோயாலும் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள். அறிவு என்ற மருந்து ஒன்றே உங்களை குணப்படுத்தும். இன்றைய காட்டுமிராண்டித்தனமான மூட நம்பிக்கைகளை உங்களிடமிருந்து அகற்றும். நீங்கள் நேர்மையும் ஒழுக்கமும் உள்ளவர்களாக மாறுவீர்கள். உங்கள ஒடுக்குவது நிற்கும். உங்களை விலங்குகள் போல நடத்த அஞ்சுவார்கள். அதனால் கஷ்டப்பட்டு உழையுங்கள், படியுங்கள். கல்வியைப் பெற்று நல்ல மனிதர்களாக மாறுங்கள். ஆனால் கல்வி உங்களை நல்ல மனிதர்களாக மாற்றும் என்று என்னால் நிரூபிக்க முடியாது. உதாரணமாக, நல்ல கல்வியைப் பெற்றவர்களும் மோசமான செய்கைகளால் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறார்கள்!

 

நீலகண்ட பிரம்மச்சாரி

நீலகண்ட பிரம்மச்சாரியைப் பற்றி நான் முன்னால் அறிந்தவற்றை இரண்டு வரியில் எழுதிவிடலாம். ஆஷ் கொலை வழக்கில் சிறை சென்றவர் (அவர்தான் சூத்திரதாரி என்று நினைத்திருந்தேன்), பிற்காலத்தில் சாமியாராகிவிட்டவர். கப்பலோட்டிய தமிழன் திரைப்படத்தில் ஒரு சிறு பாத்திரம்.

தற்செயலாக பாரதி பயிலகம் தளத்தில் அவரைப் பற்றி ஒரு கட்டுரை தென்பட்டது. தஞ்சை வெ. கோபாலனுக்கு ஒரு ஜே!

பிபின் சந்திர பால் 1907-இல் சென்னை வந்ததும் அவர் ஆற்றிய சொற்பொழிவுகளும் ஒரு inflection point என்று தோன்றுகிறது. சில படித்த இளைஞர்களிடம் ஆங்கில ஆட்சி பற்றி இருந்த அதிருப்தி திரண்டிருக்கிறது. சிறிய எண்ணிக்கை உள்ள கூட்டம்தான் என்று நினைக்கிறேன், நூறு பேர் இருந்திருப்பார்களா என்று தெரியவில்லை, ஆனால் அவர்கள் இணைந்திருக்கிறார்கள். பிரம்மச்சாரி அப்போதுதான் பாரதியை சந்தித்திருக்கிறார். சூரத் காங்கிரஸிற்கு பாரதி, வ.உ.சி.யோடு போயிருக்கிறார், அப்போதுதான் காங்கிரஸ் திலகர் கட்சி கோகலே கட்சி என்று இரண்டாக உடைந்திருக்கிறது. வங்காளத் தீவிரவாத இயக்கத்தினரோடு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. தென்னிந்தியாவில் தீவிரவாத இயக்கத்தைப் பரப்ப வேண்டும் என்று கிளம்பி வந்திருக்கிறார்.

பழைய பாளையக்காரர்களை திரட்டினாராம், ஆயிரக்கணக்கில் ஆள் திரட்டினார் , ஆஷ் கொலையால் புரட்சி நடக்காமல் போய்விட்டது என்கிறார் கோபாலன். எனக்கு சுத்தமாக நம்பிக்கை இல்லை. 40-50 பேர் இருந்தால் அதிகம் என்று நினைக்கிறேன்.

ஆஷ் கொலையில் இவருக்கு நேரடியான பங்கில்லையாம். கொலை நடந்தபோது காசியில் இருந்தாராம். அதனால் தைரியமாக சரணடைந்திருக்கிறார். ஆனால் அன்றைய ஆங்கில அரசு வ.உ.சி.யின் செல்வாக்கு, ஆஷ் கொலை ஆகியவற்றை கண்டு அஞ்சியது என்று தோன்றுகிறது. வாஞ்சி இறந்தாயிற்று, இவரைத்தான் முதல் குற்றவாளி ஆக்கி இருக்கிறார்கள்.

இவருக்காக வாதாடிய வக்கீல்களில் ஆந்திரகேசரி என்று பின்னாளில் புகழ் பெற்ற தங்குதூரி பிரகாசாவும் உண்டு. மூன்று நீதிபதிகளில் இருவர் பிரம்மச்சாரி குற்றவாளி என்று தீர்ப்பளிக்க, சி. சங்கரன் நாயர் மட்டும் dissenting judgment. கடைசியில் ஏழாண்டுகள் கடுங்காவல். பெல்லாரி சிறையிலிருந்து தப்பியும் இருக்கிறார், ஆனால் பிடிபட்டுவிட்டார்.

சிறைவாசத்துக்குப் பிறகு கஷ்ட ஜீவனம். பிச்சையே எடுத்தாராம். பாரதியிடம் அவ்வப்போது ஓரணா இரண்டணா வாங்கிச் சென்று சாப்பிடுவாராம். இவரது பசியைப் பார்த்த ஆவேசத்தில்தான் பாரதி “தனி ஒருவனுக்கு உணவில்லையேல்” என்ற வரிகளையே எழுதினாராம். பாரதியின் மரண ஊர்வலத்தில் பங்கேற்ற இருபது பேரில் இவரும் ஒருவராம்.

1922-இல் கம்யூனிசம் பற்றி புத்தகம் எழுதியதற்காக மீண்டும் சிறை, இந்த முறை பெஷாவரிலும் ரங்கூனிலும் பத்தாண்டு சிறைவாசமாம். சிறையிலிருந்து வந்த பிறகு கர்நாடகத்தின் நந்தி ஹில்ஸ் அருகே சாமியாராக வாழ்க்கை. 1936-இல் காந்தியோடு சந்திப்பு. 1978-இல் இறப்பு.

என்ன எதிர்பார்த்து போராடினார்? புகழ் கூட கிடைக்கவில்லை. பெரும் கனவுகளைக் காண்பதில் – அவை நிறைவேறாவிட்டாலும் கூட – இருக்கும் திருப்தி ஒன்றுதான் அவருக்கு கிடைத்திருக்கிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: விடுதலைப் போராட்டம்

தொடர்புடைய சுட்டி: தஞ்சை வெ. கோபாலன் பதிவு

அகதா கிறிஸ்டி: Death Comes as the End

agatha_christieஆர்தர் கானன் டாயிலுக்கு அடுத்தபடி என்றால் அகதா கிறிஸ்டிதான். பெரும் புகழும் வெற்றியும் பெற்ற எழுத்தாளர். ஹெர்க்யூல் பொய்ரோ, மிஸ் மார்பிள் என்ற இரண்டு புகழ் பெற்ற துப்பறியும் நிபுணர்களை உருவாக்கியவர்.

ஒரு சட்டகத்தை அடிக்கடி பயன்படுத்துவார். ஒரு கொலை நடக்கும். ஏழெட்டு பேரில் யாரோ ஒருவர்தான் கொலை செய்திருக்க வேண்டும். கொலை செய்தது இவனா அவளா என்று யோசிக்கும்போது அடுத்த கொலை விழும். கதைப் பின்னல் (well plotted mysteries), வாசகர்களை மீண்டும் மீண்டும் தவறாக யூகிக்க வைத்தல் (red herrings) எல்லாம் இந்த சட்டகத்தில் சிறப்பாக வெளிப்படும். அழுத்தமான, நம்பகத்தன்மை உள்ள பாத்திரங்கள் பற்றி எல்லாம் அவர் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.

போய்ரோ, மிஸ் மார்பிள் இல்லாமலும் நிறைய எழுதி இருக்கிறார். அவற்றில் சில சிறந்த துப்பறியும் கதைகளும் கூட. இந்தப் பதிவு அப்படிப்பட்ட ஒரு நாவல் பற்றித்தான்.

Death Comes as the End (1945) புத்தகம்தான் நான் படித்த முதல் கிறிஸ்டி. படிக்கும்போது 15 வயதிருக்கலாம். முதல் புத்தகத்திலேயே மனதைக் கவர்ந்துவிட்டார்.

கதை நடப்பது பழங்கால எகிப்தில். அப்பா, அவருடைய புது துணைவி அதாவது வைப்பாட்டி, மூன்று வயது வந்த மகன்கள், இருவருக்கு திருமணம் ஆகி குழந்தைகள் இருக்கின்றன. விதவை மகள். வயதான பாட்டி. புது துணைவி வந்ததும் வீட்டில் சச்சரவுகள். துணவி இறக்கிறாள். அது கொலை மாதிரி இருந்தாலும் விபத்து என்று பூசி மழுப்பிவிடுகிறார்கள்.

அதன் பிறகு வரிசையாக மரணங்கள். மூத்த மகன் மட்டும்தான் விஷம் கொடுக்கப்பட்டும் பிழைத்திருக்கிறான். யார் குற்றவாளி என்ற சந்தேகத்தை அருமையாக மாற்றிக் கொண்டே இருப்பார். மறுவாசிப்பில் தட்டையான பாத்திரங்கள், அங்கங்கே இழுப்பது எல்லாம் தெரிந்தது. ஆனால் பதின்ம வயதில் படித்தபோது புத்தகத்தை கீழே வைக்க முடியவில்லை.

கிறிஸ்டியின் பலங்கள் – குறிப்பாக red herring உத்தி – மிகச் சிறப்பாக வெளிப்படும் நாவல். படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன். துப்பறியும் நாவல் விரும்பிகள் தவறவிடக் கூடாது.

தொகுக்கப்பட்ட பக்கம்: துப்பறியும் கதைகள்

தொடர்புடைய சுட்டிகள்:

சுரேஷ்குமார இந்திரஜித் சிறுகதைகள்


சுரேஷ்குமார இந்திரஜித் நான் அவ்வளவாகப் படிக்காத எழுத்தாளர். இணையத்தில் அங்கும் இங்கும் கிடைத்த சிறுகதைகளை மட்டுமே படித்திருக்கிறேன். ஜெயமோகன், எஸ்ரா முறையே பரிந்துரைத்த விரித்த கூந்தல், மறைந்து திரியும் கிழவன் போன்ற சிறுகதைகளை நான் பெரிதாக ரசிக்கவில்லை. அதனால் புத்தகங்களையும் வாங்கவில்லை, இணையத்தில் கிடைத்த பிற சிறுகதைகளையும் படிக்காமல் தவிர்த்துக் கொண்டே இருந்தேன்.

ஆனால் இந்திரஜித் இரண்டு வகையான சிறுகதைகளை எழுதுகிறார் என்று தோன்றுகிறது. ஒன்று எனக்குப் புரியக் கூடிய, நெகிழ்வான, உறவுகளின், பந்தங்களின் சிறுகதைகள். இரண்டாவதாக ஜெயமோகன், எஸ்ரா போன்ற வேற லெவல் வாசகர்களுக்கான மாஜிகல் ரியலிசம் கலந்த சிறுகதைகள். முதல் வகை சிறுகதைகள் இரண்டு – பெரியம்மை, செம்பொன் சிலை – அழகானவை.

பெரியம்மை நெகிழ்வான கதை. அண்ணன் தம்பி உறவை அழகாக விவரிக்கிறது. அதுவும் பெரியப்பா பாட்டு பாடுவது, கதை பெரியப்பாவை சுற்றிச் சுழன்றாலும் தலைப்பு பெரியம்மை என்று இருப்பது எல்லாம் நல்ல டச்! படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

செம்பொன் சிலை இன்னொரு நெகிழ்வான கதை. வேலை இல்லாத இளைஞன், பக்கத்து வீட்டுப் பெண், அப்பாவின் இன்னொரு மனைவி, அமிர்தாஞ்சனம் தடவிக் கொள்ளும் அம்மா என்று அருமையான பாத்திரங்களைப் படைத்திருக்கிறார்.

அங்கயற்கண்ணி சிறுகதையை அவரது தமிழுக்காகவே படிக்க வேண்டும். தமிழுக்காகத்தான் படிக்க வேண்டும், வேறு ஒன்றுமில்லை. ஆனால் அருமையான தமிழ்.

மறைந்து திரியும் கிழவன் போன்ற கதைகளை நான் பெரிதாக ரசிக்கவில்லை. பொதுவாக இது போன்ற மாஜிகல் ரியலிசம் கதைகள் நான் ரசிப்பது அபூர்வமே. சிறுமியும் வண்ணத்துப் பூச்சிகளும், விரித்த கூந்தல் சிறுகதைகளும் எனக்கு சுமார்தான்.

ஜெயமோகன் விரித்த கூந்தல், பிம்பங்கள் சிறுகதைகளை தன் தமிழின் சிறந்த சிறுகதைகள் பட்டியலில் சேர்த்திருக்கிறார். எஸ்ரா மறைந்து திரியும் கிழவன் சிறுகதையை தன் 100 சிறந்த சிறுகதைகள் பட்டியலில் சேர்த்திருக்கிறார்.

அடுத்த முறை ஊருக்குப் போகும்போது இவரது சிறுகதைத் தொகுப்பு எதையாவது வாங்க வேண்டும்…

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் எழுத்தாளர்கள்

தொடர்புடைய சுட்டிகள்:

அஜிதனின் சில சிறுகதைகள்

அஜிதனை அனேகமாக ஜெயமோகனின் மகன் என்றுதான் பலரும் அறிந்திருப்போம். ஆனால் அவ்ர் தன்னளவில் ஒரு சுவாரசியமான எழுத்தாளராகத் தெரிகிறார். அடர்த்தியான, நுண்விவரங்கள் நிறைந்த எழுத்து பாணி. சில சமயம் இத்தனை விவரம் தேவையா என்று தோன்ற வைத்துவிடுகிறார்.

ஆனால் படுசுமாராக எழுதும் எனக்கே என் கதைகள் பெரிய வெளியாக, பெரிய காட்சித் தொகையாக இருக்கின்றன. என் திறமை குறைவாக இருப்பதால் எதை சொல்ல வேண்டும் எதை விட்டுவிட வேண்டும் என்பது சரியாகக் கை வரவில்லை. மனதில் தெரிவதில் நான் பத்து சதவிகிதத்தை எழுதினால் அதிகம், அதுவும் அனேகமாக உரையாடல் மூலம்தான் சொல்ல முடிகிறது. அஜிதனால் மனதில் தெரிவதை பெருமளவு எழுதி விட முடிகிறது என்று நினைக்கிறேன்.

போர்க் ரோஸ்ட் சிறுகதையை எடுத்துக் கொள்ளுங்கள். பன்றிக்கறி சமைப்பதை விலாவாரியாக விவரிக்கிறார். இத்தனை விவரங்கள் இருப்பதால், அவை தன்னளவில் முழுமையாக இருப்பதால் கதையை இறக்கும் நிலையில் இருக்கும் பாட்டியின் தீனி ஆசை என்றே கூட படித்துவிடலாம். ஆனால் லேய் உந்தாத்தா இருக்காம்லா என்ற அரை வரிதான் கதை. குறைந்த பட்சம் எனக்கு அப்படித்தான் தோன்றியது. அப்படிப் படித்தால் கதை வேறு ஒரு தளத்துக்குப் போகிறது. பெரிய லட்டில் புதைந்திருக்கும் ஒரு முந்திரியை தவற விடுவது போல இந்த வரியை தவற விடலாம். அதனால்தான் கொஞ்சம் அடர்த்தி குறைவாக இருந்தால் இன்னும் நன்றாக இருக்குமோ என்று தோன்றுகிறது.

1134 கப்பல்கள் சிறந்த சிறுகதை. சிறுவனின் வளர்ச்சி என்று சுருக்கிவிடலாம். ஆனால் நுண்விவரங்கள், விவரிப்புகள், கப்பலோட்டிய சிறுவன், ஆசிரியையை வெட்டுவேன் என்று கிளம்பும் அப்பா, நாய் குட்டன், இட்லிப்பூவிலிருந்து தேன் குடிப்பது, எல்லாவற்றையும் விட முக்கியமாக தங்கை பாப்பு – கலக்கிவிட்டார். வாழ்க! கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

நங்கேலி என் கண்ணில் எளிமையான கதை. ஆனால் ஒரு தொன்மத்தின் கவர்ச்சி இருக்கிறது. ராதிகாவின் வேர்கள் என்னவாக இருக்கும் என்று அஜிதன் கோடி காட்டி இருப்பதுதான் எனக்கு இதை சிறுகதை ஆக்குகிறது.

மூன்று குறுங்கதைகளில் இரண்டாவது எட்கர் ஆலன் போவை நினைவுபடுத்தியது.

நிலைவிழி சிறுகதையில் இறக்கப் போகும் பெண்ணின் மன ஓட்டங்களை நன்றாக சித்தரிக்கிறார். ஆனால் கதையின்  முத்தாய்ப்பு எனக்கு கதையோடு ஒட்டாத மாதிரி இருந்தது.

அஜிதனை நான் பார்த்ததில்லை. என்றாவது சந்திக்க வேண்டும்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் எழுத்தாளர்கள்

தொடர்புடைய சுட்டிகள்: