சுஜாதா: நில் கவனி தாக்கு

sujathaநில் கவனி தாக்கு சுஜாதாவின் ஆரம்ப கால முயற்சிகளில் ஒன்று. விறுவிறுவென்று போகும் கதை. ஜேம்ஸ் பாண்ட் பாணியில் எழுத வேண்டும், அந்தக் காலகட்டத்தின் யூத்துக்கு அப்பீல் ஆக வேண்டும் என்று முனைந்திருக்கிறார். அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். கடைசி ட்விஸ்ட் இந்தக் கதையை நினைவு கொள்ள வைக்கிறது.

விறுவிறுப்பாக செல்லும் சாகசக் கதை. இன்றும் படிக்கலாம். ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர் கதைகளுக்கு ஒரு படி மேலாகத்தான் மதிப்பிடுகிறேன்.

Version 1.0.0

நாயகன் இளைஞன், உளவுத்துறை அதிகாரி. அவரது திறமையான உயர் அதிகாரி நடேசன். விஞ்ஞானி ராமச்சந்திரனை விமான நிலையத்திலிருந்து பாதுகாப்பாக அழைத்து வரும் பணி. ரேணு என்ற அழகியைப் பார்த்து ஜொள்ளு விடுவதில் கோட்டை விட்டுவிடுகிறார். ராமச்சந்திரன் கடத்தப்படுகிறார். காபரே பார்த்து, ரேணுவை பயமுறுத்தி, ரேணுவின் மனத்தை மாற்றி அவள் உதவியைப் பெற்று, ராமச்சந்திரனை மீட்கிறார். ஆனால் பார்த்தால் நடேசனே துரோகி, அவர்தான் கடத்தலை ஏற்பாடு செய்திருக்கிறார். நடேசனை கைதாகிறார், ஆனால் தப்பியும் விடுகிறார். அங்கே ஒரு ட்விஸ்டோடு கதை முடிகிறது.

குறுநாவலை மீண்டும் படித்தபோது எங்கெல்லாம் அவர் அன்றைய எழுதப்படாத விதிகளுக்குக் கட்டுப்பட்டு எழுதி இருக்கிறார், எங்கெல்லாம் மீற முயன்றிருக்கிறார் என்பதைத்தான் புன்னகையோடு படித்துக் கொண்டிருந்தேன். ஜேம்ஸ் பாண்ட் பாணி என்று தீர்மானித்தாயிற்று, அதனால் சாகசக் கதையாகவே இருந்தாலும் நாயகி அவசியம்; நாயகியோடு சில தடவல்கள் இன்னும் அவசியம். காபரே நடனம் ஒன்றை புகுத்தி இருக்கிறார், நிச்சயம் எழுபதுகளின் ஆரம்பத்தில் கிளுகிளுப்பாக உணர்ந்திருப்பார்கள். இவற்றை எல்லாம் அதிகம் உறுத்தாமல் கதைப்போக்கில் புகுத்தி இருப்பதில்தான் அவரது சாமர்த்தியம் தெரிகிறது.

நிச்சயமாக சுஜாதா ரசிகர்கள் படிக்க வேண்டும். மற்றவர்களும் படிக்கலாம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: சுஜாதா பக்கம்

சுஜாதா: விடிவதற்குள் வா

1980களின் ஆரம்பத்தில் கன்யாகுமரி மாவட்டத்தில் மண்டைக்காடு என்ற கிராமத்தில் ஹிந்துக்களுக்கும் கிறிஸ்துவர்களுக்கும் நடுவே கலவரம் வெடித்தது. அதைப் பின்புலமாக வைத்து எழுதப்பட்ட கதை.

நாவலில் கிராமத்தின் பேர் மணற்காடு. துபாயிலிருந்து திரும்பி வரும் கனகசபை. திருமணம் ஆகி சில ஆண்டுகள் முடிந்துவிட்டாலும் மனைவி கிரிஜாவோடு சில வாரங்களே பழகி இருக்கிறான். கிரிஜாவுக்கு நகை ஆசை அதிகம். வந்து பார்த்தால் மனைவியைக் காணவில்லை. பக்கத்து வீட்டில் இருக்கும் மலையாளி அக்கா-தம்பி தேவகி-உண்ணிக்கு எந்த விவரமும் தெரியவில்லை. அவனுக்குத் தெரிந்தவர்கள் – சதாசிவம், ரத்தினசாமி – யாருக்கும் விவரம் தெரியவில்லை. கிரிஜா நாகர்கோவிலில் உள்ள தன் அம்மா வீட்டிற்கும் போகவில்லை. கனகசபைக்கு பக்கத்து வீட்டு தேவகி மீது ஆசை ஏற்படுகிறது.

ஊரில் பிரச்சினை வெடிக்க ஒரு காரணத்துக்காக காத்திருக்கிறது. கோவிலுக்கு எதிரே சர்ச் கட்டப்பட்டிருக்கிறது. சர்ச்சில் லவுட்ஸ்பீக்கர் தொழ அழைக்கிறது. பாதிரியார் நகைக்கு ஆசைப்பட்டு கிரிஜாவைக் கொன்று புதைத்துவிட்டார் என்று ஒரு புரளி கிளம்புகிறது. சர்ச்சைத் தோண்டுவோம் என்று கிளம்புகிறார்கள். கனகசபை ஆட்சேபிப்பதை யாரும் பொருட்படுத்தவில்லை. அடிதடி. வன்முறை வலுத்துக் கொண்டே போகிறது. துப்பாக்கி சூட்டில் உண்ணி உட்பட சில இறப்புகள். கடைசியில் பார்த்தால் கிரிஜா ஏதோ ஒரு ஆஸ்பத்திரியில் நினைவிழந்து கிடந்திருக்கிறாள், அவள் நகைக்கு ஆசைப்பட்டு அவளை அடித்திருக்கிறார்கள்.

நாவலின் சிறப்பான அம்சம் கலவரம் மெதுமெதுவாக பலம் பெறுவதின் சித்தரிப்புதான். நம்பகத்தன்மையுடன் எழுதப்பட்டிருக்கிறது. இப்படித்தான் நடந்திருக்க வேண்டும் என்று நினைக்க வைக்கிறது. கிரிஜா காணாமல் போனதும் அவள் மீள்வதுமான அபத்தத்தின் சித்தரிப்பு என் கண்ணில் சுமார்தான். உண்ணி பாத்திரம் – 16 வயது சிறுவனுக்கு துபாய் சென்று பணம் சம்பாதிப்பதுதான் கனவு – நன்றாக வந்திருக்கிறது.

சுஜாதாவின் திறமை தெரிகிறது. ஆனால் படித்தே ஆக வேண்டிய நாவல் இல்லை.

தொகுக்கப்பட்ட பக்கம்: சுஜாதா பக்கம்

சுஜாதா: “பதவிக்காக”

பதவிக்காக சுஜாதாவின் சுமாரான, எளிய, ஆனால் சுவாரசியமான நாவல்களில் ஒன்று. சம்பவங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கப்பட்டிருக்கின்றன. சில கொஞ்சம் செயற்கையாக, அதீதமாக இருக்கின்றன. கதை எப்படி செல்லும் என்றும் சுலபமாக யூகிக்க முடிகிறது.

பிறகு எதற்காகப் பதிவு? மூன்று காரணங்கள். ஒன்று வாரப்பத்திரிகை தொடர்கதையை எப்படி எழுத வேண்டும் என்பதற்கான பிரமாதமான எடுத்துக்காட்டு இது. இரண்டாவது எண்பதுகளின் அரசியல் சூழல் நன்றாக வந்திருக்கிறது. எல்லாவற்றிலும் முக்கியமாக, எளிய நாவலிலும் அங்கங்கே மனித இயல்பை வெகு அனாயாசமாகக் காட்டிவிடுகிறார். அவரது திறமை எளிய வணிக நாவலிலும் தெரிகிறது. முனைந்து எழுதி இருந்தால், இன்னும் பெரிய உச்சங்களைத் தொட்டிருப்பார்….

என்ன கதை? தன்ராஜ் சுயேச்சையாக நின்று தேர்தலில் ஜெயிக்கிறான். அன்றைய ஆளும் கட்சியில் முதல்வர் ஆறுமுகத்துக்கும் நம்பர் 2 அரங்க ராமானுஜத்துக்கும் (அரங்கரா) அதிகாரப் போட்டி. நடுவே கவர்னர் வர்மா வேறு குட்டையைக் குழப்புகிறார். பிரதமர் இந்தப் போட்டியில் தன் கட்சிக்கு ஆதாயம் உண்டா என்று பார்த்துக் கொண்டிருக்கிறார்.

தன்ராஜ் தன் முதல் சட்டமன்றப் பேச்சில் அரசைத் தாக்குகிறான், கொஞ்சம் கவனம் பெறுகிறான். தெளிவாகப் பேசக் கூடிய, ஆங்கிலம் தெரிந்த, இளைஞனான தன்ராஜ் தனக்கு ஆதரவாக வருவானா என்று ஆறுமுகம், அரங்கரா இருவரும் முயற்சிக்கிறார்கள். ஆறுமுகத்தை எதிர்த்து ஓட்டளிக்கக் கூடியவர்கள் என்று யார் மேல் எல்லாம் சந்தேகம் இருக்கிறதோ அவர்கள் எல்லாரும் திறமையாக நந்தி ஹில்ஸ் பக்கம் “சிறை” வைக்கப்படுகிறார்கள். கவர்னர் உரையின்போது ஆளே இல்லை. எதிர்க்கும் அரங்கரா சட்டமன்றத்திலிருந்து நீக்கப்படுகிறார். என்ன அநியாயம் என்று தன்ராஜ் அரங்கரா பக்கம் சாய்கிறான். தெளிவாக ஆங்கிலம் பேசுவதால் அரங்கரா அவனை உதவியாக வைத்துக் கொண்டு டெல்லியில் பேசி தட்டி முட்டி முதல்வராகிறார். தன்ராஜை சபாநாயகர் பதவியில் வைக்கிறார்.

அரங்கராவுக்கு பெண்கள் என்றால் பலவீனம். அவரோடு ஒரு வீடியோ எடுத்து பணம் கொடு என்று கௌரி என்ற துணை நடிகை மிரட்டுகிறாள். அவள் கொல்லப்பட, கேஸை விசாரிக்கும் நேர்மையான போலீஸ் அதிகாரி மாற்றப்பட, விசாரிக்கும் நிருபர் சாவித்ரி மீது கொலை முயற்சி நடக்கிறது. வீடியோ தன்ராஜிடம் கிடைக்கிறது. தன்ராஜ் விசாரித்தால் சபாநாயகருக்கே சிறை. அரங்கரா ஆறுமுகம் சண்டை, வீடியோ பிரச்சினை என்று மாநிலம் பற்றி எரிகிறது. பிரதமர் அரங்கராவும் வேண்டாம் ஆறுமுகமும் வேண்டாம் தன்ராஜை முதல்வராக்கலாமா என்று யோசிக்கிறார். தன்ராஜ் சொந்த வாழ்க்கை சோகத்தால் அரசியலிலிருந்தே  ஒதுங்கிவிடுகிறான்…

அப்படி என்ன சோகம்? தன்ராஜின் இளமைப் பருவக் காதலி ஜமுனாவோடு – இப்போது மணமானவள் – அவனுக்கு மீண்டும் உறவு ஏற்படுகிறது. அவள் கர்ப்பம். அதை வைத்து அரங்கரா அவனை மிரட்டுகிறார். கடைசியில் பேப்பரில் அவள் பேரும் நாறுகிறது. அவள் தற்கொலை செய்துகொள்கிறாள்…

நந்தி ஹில்ஸில் எம்எல்ஏக்கள் சிறைப்படுவது அன்றைய பாஸ்கரராவிடமிருந்து என்.டி. ராமராவ் தன் சட்டமன்ற உறுப்பினர்களை காப்பாற்றிய நிகழ்ச்சியை நினைவுபடுத்துகிறது. சட்டசபை அடிதடிகள் கருணாநிதி-எம்ஜிஆர் காலத்தை, குறிப்பாக வி.என். ஜானகி போதிய ஆதரவில்லாமல் முதல்வர் ஆகி, சட்டமன்றத்தில் போலீஸ் தடியடி நடத்தியதை நினைவுபடுத்துகிறது. எண்பதுகளில் செய்தித்தாள் படித்தவர்களுக்கு பல நிகழ்ச்சிகள் நினைவு வரும்…

சரியான வாரப்பத்திரிகை தொடர்கதை சூத்திரத்தை பிடித்திருக்கிறார். ஒவ்வொரு வாரமும் ஏதாவது பரபரப்பான சம்பவத்தை விவரிக்கிறார். அரங்கராவின் சபலம், கௌரி பிளாக்மெயில் செய்வது, அரசியல் களேபரங்கள், தன்ராஜின் ஆழமான ஈர்ப்பு….

ஆனால் எல்லாவற்றையும் விட அங்கங்கே தெரியும் மனித சுபாவம்தான் பிரமாதம். சிறு கோட்டோவியம் போட்டு அழகாகச் சித்தரிக்கிறார். ஜமுனாவின் கணவன் ஜமுனா தன்ராஜோடு படுப்பதை எடுத்துக் கொள்ளும் விதம் – தியாகச்சுடராக நடந்து கொள்கிறான், தன்ராஜின் குழந்தையை தன் குழந்தையாக வளர்க்கத் தயாராக இருக்கிறான், தன்ராஜ் மீண்டும் மீண்டும் ஜமுனாவை சந்திப்பதை எந்த விதத்திலும் தடுப்பதில்லை. கடைசியில் ஜமுனா தற்கொலை செய்து கொள்ளும்போது எந்த விதத்திலும் உதவாமல் அவள் இறப்பதை, அவள் குழந்தை இறப்பதை பார்த்துக் கொண்டே இருக்கிறான். அந்தக் காட்சி இல்லாவிட்டால் இந்தப் பாத்திரம் மகா சப்பையாக இருந்திருக்கும். அவள் இறந்த பிறகு அடுத்த திருமணத்திற்கும் தயாராக நிற்கிறான்!

ஜமுனா தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் தவிப்பது, உண்மையை தன்ராஜின் மனைவியிடம் உடைத்துவிடுவது, துணை நடிகை கௌரியின் பாத்திரம், கவர்னர் வர்மா பாத்திரம், நிருபர் சாவித்ரி மேல் போலீஸ் அதிகாரி கோகுலுக்கு ஏற்படும் ஈர்ப்பு எல்லாம் இயல்பாக இருக்கின்றன…

குறைகள்? நிறைய. உண்மையான சித்தரிப்பு குறைவுதான். சம்பவங்களை அடுக்கிக் கொண்டே போகத்தான் திட்டமிட்டிருக்கிறார். அரங்கராவின் அடியாள் சின்னப்பன் நடந்து கொள்ளும் விதம் கொஞ்சம் செயற்கையாக – caricature ஆக இருக்கிறது. எளிதில் யூகிக்கக் கூடிய கதைப்பின்னல்.

சுஜாதா இதை விட நல்ல நாவல்கள் எழுதி இருக்கிறார்தான். ஆனால் எனக்கு எப்போதும் அவர் எழுத்து மீது ஒரு soft corner உண்டு. அவரது தொழில் திறமை (craft), touches,  அரசியல் சித்தரிப்புகளில் நம்பகத்தன்மை தெரிகின்றன. சுஜாதா ரசிகர்களுக்கு கட்டாயம் பரிந்துரைப்பேன். மற்றவர்களும் படிக்கலாம், ஆனால் கறாராகப் பார்த்தால் படித்தே ஆக வேண்டிய நாவல் இல்லை.

தொகுக்கப்பட்ட பக்கம்: சுஜாதா பக்கம்

 

சுஜாதாவின் “24 ரூபாய் தீவு”

சிறு திருத்தங்களுடன் மீள்பதிவு. மீள்பதிவுக்காக மீண்டும் படித்தபோது என் எண்ணங்கள் மாறவில்லை என்று தெரிகிறது…

சுஜாதாவின் கச்சிதமான புனைவுகளில் ஒன்று.

எழுபதுகளும் எண்பதுகளும்தான் சுஜாதா புனைவுகளின் பொற்காலம் என்று தோன்றுகிறது. அறுபதுகளில் he was finding his feet. எண்பதுகளின் பிற்பாதியிலேயே அவரது creative juices வற்ற ஆரம்பித்துவிட்டது என்று நினைக்கிறேன்.

24 ரூபாய் தீவு புகழ் பெற்ற நாவல். குமுதத்தில் தொடர்கதையாக வந்தது. பிற்காலத்தில் ஒண்டித்வனி என்று கன்னட திரைப்படமாகவும் வந்தது. (கொலை செய்யப்பட்டது என்கிறார் சுஜாதா) இப்போது கிழக்கு பதிப்பகத்தார் வெளியிட்டிருக்கிறார்கள். விலை 80 ரூபாய் இப்போது என்னவோ தெரியாது, ஆனால் 80 ரூபாயாக இருக்க வாய்ப்பில்லை.

எளிய கதை. விஸ்வநாத் ஒரு நிருபன். மத்யமர் பிராமணக் குடும்பம். அம்மா, மூன்று தங்கைகள். ஒரு பெண் அவனுக்கு ஃபோன் செய்து அனல் பறக்கும் செய்தி தருகிறேன் வீட்டுக்கு வா என்கிறாள். போனால் பெண்ணின் பிணத்தைத்தான் பார்க்க முடிகிறது. தற்செயலாக அங்கே இருக்கும் ஒரு நாட்குறிப்பை (dairy) தள்ளிக் கொண்டு வந்துவிடுகிறான். நாட்குறிப்பில சில கவிதைகளைப் படிக்கிறான். முழுதும் படிக்காமல் நாட்குறிப்பை டாக்சியிலேயே விட்டுவிடுகிறான். செய்தித்தாளில் பக்கத்தை நிரப்ப ஏதோ எழுதும்போது இந்தப் பெண்ணின் மரணம், மற்றும் நாட்குறிப்பில் இருக்கும் கவிதைகளைக் குறிப்பிடுகிறான்.

நாட்குறிப்பை திருப்பித் தா என்று செத்துப் போன பெண்ணின் தங்கை கேட்கிறாள். நான்தான் அந்தக் கவிதையை எழுதினேன் தா என்று ஒரு “கவிஞன்” கேட்கிறான். பணம் தருகிறேன் தா என்று ஒரு மாமா கேட்கிறார். அடிப்பேன் தந்துவிடு என்று சில ரவுடிகள் கேட்கிறார்கள். நாட்குறிப்பைத் தா தா என்று பலரும் பல விதமாகக் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். பெரிய அரசியல் தலைவரும் தற்போதைய முதல்வரைக் கவிழ்த்து தான் முதல்வராக முயற்சிக்கும் கோபிநாத் இவனைக் கூப்பிட்டு அந்த நாட்குறிப்பைப் பற்றி விசாரிக்கிறார். முதல்வருக்கும் இறந்தவளுக்கும் தொடர்பு இருந்திருக்கலாம், நான் உனக்கு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்கிறேன் என்கிறார்.

விவகாரம் பெரிதாகி முதல்வர் ராஜினாமா, கோபிநாத் முதல்வர். அடுத்த நாளே இவன் பத்திரிகையில் இந்தப் பெண்ணைப் பற்றி செய்தி போடுவதை நிறுத்துகிறார்கள். இவன் எதிர்க்க வேலையிலிருந்து தற்காலிகமாக நீக்குகிறார்கள். விஸ்வநாத்தின் 15 வயதுத் தங்கை சீரழிக்கப்படுகிறாள். விஸ்வநாத் கைது செய்யப்படுகிறான். நாட்குறிப்பு எங்கே எங்கே என்று அழுத்தம் தரப்படுகிறது. கடைசியில் வேலையிலிருந்தே தூக்கிவிடுகிறார்கள். தன் பொருட்களை எல்லாம் அலுவலகத்திலிருந்து எடுத்து வரும்போது நாட்குறிப்பு அங்கே பல குப்பைகளோடு கிடக்கிறது. நாட்குறிப்பில் என்ன இருக்கிறது, ஏன் எல்லாரும் இப்படி அதை அடையத் துடிக்கிறார்கள், விஸ்வநாத் என்ன ஆனான் என்பதுதான் கதையின் முடிவு.

கதையின் பெரிய பலம் ஹீரோயிசம் எதுவும் இல்லாதது. விஸ்வநாத் நம் பக்கத்து வீட்டில் பார்க்கக் கூடியவன். அதிசாதாரணன். கடைசி வரைக்கும் அப்படித்தான். அவனுடைய தெளிவு வியக்க வைக்கிறது, ஆனால் படிக்கும்போது அது துருத்திக் கொண்டு தெரிவதில்லை. மேலும் அந்தத் தெளிவு செயலாக மாறுவது அபூர்வமாக இருப்பதுதான் அவன் குணாதிசயமாக இருக்கிறது. அதை கடைசி வரைக்கும் அப்படியே வைத்திருப்பது சுஜாதாவின் திறமையைக் காட்டுகிறது. அவனுடைய அடிப்படை சுபாவம் மாறுவதே இல்லை.

அவன் குடும்பத்தார், அலுவலகத்தில் வேலை செய்பவர்கள், அரசியல்வாதிகள் எல்லாருமே நாம் பார்க்கக் கூடியவர்களே. கதையின் நம்பகத்தன்மை சிறப்பாக இருக்கிறது. அப்புறம் சுஜாதாவின் நடை, சின்னச் சின்ன ஜோக்குகள், கிளுகிளுப்புக்காக கொஞ்சம் sexual references (இன்று காலாவதியாகிவிட்டவை) எல்லாம் உண்டு.

பலவீனம் சுலபமாக யூகிக்கக் கூடிய வில்லன்கள். சில பக்கங்களிலேயே நாட்குறிப்பில் அடையாளம் காட்டப்படப் போகும் வில்லன் யார் என்று தெரிந்துவிடுகிறது. இன்னொரு விதத்தில் சொன்னால் கதை, கதையின் முடிச்சு எல்லாம் சீக்கிரமே புரிந்துவிடுகிறது. ஆனால் “திரைக்கதை” நன்றாக இருக்கிறது.

இதில் கணேஷ்-வசந்த் இருவரும் உண்டு. சின்ன பாத்திரம்தான், விஸ்வநாத்தை ஜாமீனில் எடுக்கும் வக்கீல்கள். கணேஷ் சென்னை வந்தாயிற்று. ஆனால் இன்னும் முழு கணேஷாக மாறவில்லை. வசந்த் மாதிரி ஓரிரு இடங்களில் பேசுகிறார்…

சுஜாதாவின் சிறந்த நாவல்களில் ஒன்று. படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: சுஜாதா பக்கம்

தொடர்புடைய சுட்டி:
ஒண்டித்வனி பற்றி சுஜாதா

சுஜாதாவின் அறிவியல் சிறுகதைகள்

சுஜாதாவின் அறிவியல் சிறுகதைகள் அனேகமாக காலாவதி ஆகிவிட்டவை. (தமிழாசிரியர், திமலாவைத் தவிர). ஆலையில்லாத ஊருக்கு இலுப்பைப்பூ கேஸ்தான். அவருடைய கதைகளில் பெரும் கேள்விகள் எழுவதே இல்லை. அவர் புதிதாக எந்த கருவையும் உருவாக்கிவிடவும் இல்லை. சின்னச் சின்ன நகாசு வேலைகள், (உதாரணம் – கவிதை படிக்கும் ரோபோ) மெல்லிய நகைச்சுவை ஆகியவைதான் அவற்றின் பலம். ஒரு ரோபோ உயிர் பெறும் கருவை அலுப்புத் தட்டும் வரையில் பயன்படுத்தி இருக்கிறார்.

ஆனால் அறிவியல் புனைவுகள் எனக்கு அறிமுகம் ஆனதே சுஜாதா மூலம்தான். 1976 வாக்கில் கல்கி பத்திரிகையில் ஏழெட்டு சிறுகதைகளை எழுதினார். காலப்பயணம், நடப்பதை முன் கூட்டியே சொல்லும் கம்ப்யூட்டர், அணு ஆயுதப் போரில் அழிந்த உலகம் என்று பல கருக்களை வைத்து எழுதினார். அந்த வயதில் மிகவும் கவர்ந்தன. அறிவியல் புனைவுகளின் சாத்தியங்கள் புரிந்தன. ஒரு அதிசயம் நடந்துவிட்டால் அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்று யோசிக்க வைத்தன. குறிப்பாக கால எந்திரம் சிறுகதையில் இறந்த காலத்தில் ஏற்படும் சிறு மாற்றமும் வரலாற்றை முழுமையாக மாற்றிவிடலாம் என்ற கருத்தை முதல் முறையாகப் படித்தேன். ஆங்கிலத்தில் SF படித்தவர்களுக்கு அது தேய்வழக்காகக் கூட இருக்கலாம். ஒன்பது பத்து வயது சிறுவனுக்கு அது கண்திறப்பு.

அந்த கல்கி சிறுகதைகளின் தொகுப்பு கிடைத்தது, அதைப் பற்றித்தான் எழுத வேண்டும் என்று நினைத்தேன். பிறகு பிற அறிவியல் சிறுகதைகளையும் பற்றி எழுத ஆரம்பித்துவிட்டேன்.

கல்கி சிறுகதைகளில் அன்று எனக்கு மிகவும் பிடித்திருந்த சிறுகதை தமிழாசிரியர். இன்று படித்ததைப் போலவே நினைவிருக்கிறது. இன்றும் புத்திசாலித்தனமான கரு என்றே கருதுகிறேன்.

என்ன கதை? பல நூறு ஆண்டுகள் கடந்துவிட்டன, தமிழ்தான் உலகத்தின் பொதுமொழி. ஆனால் தமிழ் எக்கச்சக்கமாக மாறிவிட்டது. சங்கத தமிழை இன்று நாம் புரிந்து கொள்ள கஷ்டப்படுவது போல நமது தமிழை அன்று யாராலும் புரிந்து கொள்ள முடியாது. அது பழந்தமிழ், வழக்கொழிந்துவிட்டது. தமிழ் சுருங்கிவிட்டது – “உனக்குப் புரிகிறதா?” என்பது “புரி?” என்று மாறுகிறது. புரியவில்லை என்று சொல்ல வேண்டுமா? “அபுரி!” பழந்தமிழை கற்ற ஒரே ஒருவர்தான் இன்னும் இருக்கிறார் – அவர்தான் தமிழாசிரியர். பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கிறார். பல வருஷங்களாக ஒரு மாணவனும் பழந்தமிழைப் படிக்க வரவில்லை. அவரது வேலை அபாயத்தில். திடீரென்று 2 பேர் வருகிறார்கள். மாணவர்கள் கிடைத்துவிட்டார்கள், வேலைக்கு இருந்த அபாயம் போயிற்று என்று இவருக்கு சந்தோஷம். பல்கலைக்கழகத் தலைவர் மாணவர்களை பார்வையிட வருகிறார், யாரையும் காணவில்லை. தமிழாசிரியர் அவர்களைத் தேடுகிறார். கடைசியில் அவர்கள் வேற்றுக் கிரகத்திலிருந்து படையெடுத்து வருபவர்கள், தங்கள் தொடர்பு மொழியாக பழந்தமிழை பயன்படுத்தி இருக்கிறார்கள் என்று தெரிகிறது. எந்தக் கம்ப்யூட்டராலும் உடைக்க முடியாது இல்லையா? தமிழாசிரியருக்கு இப்போது அசதித் துறையில் வேலை. (சதியின் எதிர்ச்சொல் அசதி!)

மொழி எப்படி மாறக் கூடும், எப்படி குறைவான ஒலிகளைக் கொண்டு அதே கருத்துக்களை சொல்ல முயற்சிக்கும் என்பதெல்லாம் அப்போது (இப்போதும்) உற்சாகமூட்டிய கருத்துக்கள். சதி-அசதி வார்த்தை விளையாட்டெல்லாம் இத்தனை வருஷம் கழித்தும் மறக்கவில்லை. இரண்டாம் உலகப் போரின்போது நவாஹோ இந்தியர்களின் மொழியை ரகசிய தொடர்பு மொழியாக பயன்படுத்தினார்களாம். சுஜாதா எங்காவது இந்தச் செய்தியைப் படித்திருப்பார் என்று நினைக்கிறேன்.

கல்கி சிறுகதைகளில் தேவன் வருகை அவருக்கு பிடித்தமானது என்று தெரிகிறது. ஆனால் ஓ. ஹென்றி ட்விஸ்ட் மட்டுமே உள்ள, கடைசி வரிக்காகவே எழுதப்பட்ட சிறுகதை. கடவுள் ஆறு மணிக்கு தரிசனம் தருகிறேன் என்கிறார். பிறகு என்ன? சூரியன் சிறுகதை அவ்வப்போது anthology-களில் இடம் பெறுகிறது. அணுகுண்டுப் போரால் நிலப்பரப்பு முழுதும் கதிர்வீச்சு, மனிதர்கள் பூமிக்கடியே வாழ்கிறார்கள். ஒரு சிறுவனுக்கு சூரியனைப் பார்க்க விருப்பம். காலமானவர் சிறுகதையில் பத்திரிகையின் ஜீவநாடியான கம்ப்யூட்டர் நாளை பத்திரிகை ஆசிரியர் இறக்கப் போவதை இன்றைய செய்தியாக பிரசுரிக்கிறது. நகர்வலம் சிறுகதையில் மூழ்கிவிட்ட சென்னை சுற்றுலாத் தலமாக மாறி இருக்கிறது. வாசல் சிறுகதையில் உணவுப் பற்றாக்குறையை சமாளிக்க மக்களைக் கொல்லும் நாட்டின் தலைவர் நரகத்துக்கு செல்கிறார். யயாதி சிறுகதையில் 25 வயதுக்கு திரும்ப மருந்து சாப்பிடும் அறுபது வயதுக்காரர் கொஞ்சம் அதிகமாக மருந்தை சாப்பிட்டுவிடுகிறார். ரூல் நம்பர் 17-இல் அரசு குழந்தை பிறப்பை கடுமையாக கட்டுப்படுத்தும் வேளையில் ஒரு clerical error-ஆல் அனுமதி இருக்கிறது என்று நினைக்கும் அப்பா. கால எந்திரம் அந்த வயதில் கொஞ்சம் சிந்திக்க வைத்த கதை. 2020களின் மனிதன் தொல்காப்பியரை சந்திக்கிறான்.

பிற சிறுகதைகளில் திமலா சிறப்பானது. அவரது திறமை வெளிப்படும் அபூர்வ SF. இன்னும் 500 வருஷம் கழித்து கோவில், சடங்கு எல்லாம் எப்படி நடக்கும்? திருப்பதியில் ஜருகண்டி ஜருகண்டி என்று இன்னும் சொல்லிக் கொண்டிருப்பார்களா? பல தளங்களில் யோசிக்க வைக்கும் சிறுகதை. விஞ்ஞானம் முன்னேறிக் கொண்டே போனால் சடங்குகள் சார்ந்த ஆன்மீகம் என்னவாகும் என்ற கேள்வியை எழுப்புகிறார்.

அறிவியல் சிறுகதைகள் என்று சொன்னாலும் இவற்றில் அறிவியல் சிறுகதைகள், அமானுஷ்ய சிறுகதைகள் எல்லாவற்றையும் பற்றியும் கலந்து கட்டி எழுதி இருக்கிறேன். மீண்டும் ஜீனோ, என் இனிய இயந்திரா, சொர்க்கத்தீவு, சில பல கணேஷ்-வசந்த் நாவல்கள் ஆகியவற்றை அறிவியல் புனைவுகள் என்று வகைப்படுத்தலாம்தான், ஆனால் நாவல்களை தவிர்த்திருக்கிறேன்.

ஒரு நாள் போன்ற சிறுகதைகளில் அவர் முனைந்திருந்தால் நல்ல சிறுகதைகள் கிடைத்திருக்கலாம். நல்ல கரு. திமலாவின் பாதிப்பு உள்ள சிறுகதை. கனவு வாழ்க்கை வாழ விரும்பும் ஒருவனை விவரிக்கிறது. தலைதீபாவளி கொண்டாட்டம். ஆனால் அன்றைய முன்னேறிய நாகரீகத்தில் தலைதீபாவளி என்ற பேச்சே கிடையாது. ஆசைப்படும் எஞ்சினியருக்காக ஒரு அனுபவத்தை உருவாக்கித் தருகிறார்கள்.

சோம்னா (1971) நல்ல அறிவியல் சிறுகதை என்பதை விட நல்ல சிறுகதை. கொஞ்சம் போரடித்துக் கொண்டே போயிற்று, கடைசி வரியில் மாற்றிவிடுகிறார்.

அவருக்கு இரண்டு கருக்களில் ஓரளவு விருப்பம் இருந்திருக்கிறது. ரோபோ உயிர் பெறுவது, பல நூறாண்டுகளுக்குப் பின் பெண்களின் நிலை. இவற்றை வைத்து பல சிறுகதைகளை எழுதி இருக்கிறார். பிற்காலத்தில் அவர் எழுதிய மீண்டும் ஜீனோ போன்றவை ரோபோ உயிர் பெறும் கருவை வேறு விதமாக யோசித்ததுதான்.

ரோபோ உயிர் பெறும் கருவை வைத்து எழுதியவற்றில் திவாவில் உயிர் பெற்ற ரோபோ தன்னை உருவாக்கியவனைக் கொல்கிறது.

பெண்களின் நிலை கருவை வைத்து எழுதியவற்றில் வாசனை சிறுகதையில் பெண்கள் அருகிவிட்டனர், உலகிலேயே பத்து பெண்கள்தான் இருக்கின்றனர், அவர்களை கண்காட்சியில் வைத்து காட்டுகிறார்கள். வெளியில் இருக்கும் சில பெண்கள் காட்சிப் பொருளாக மாற விரும்பாமல் ஒளிந்து வாழ வேண்டிய நிலை. ஒன்பதாவது பெண் சிறுகதையில் பெண்கள் குழந்தை பெற விரும்புவதில்லை. ஏமாற்றி தாயாக்குபவர்களுக்கு அரசு ஊக்கப் பரிசு தருகிறது. முன்னால் சொன்ன கல்கி சிறுகதைகளில் ஒன்று. மஞ்சள் ரத்தம் சிறுகதையில் அறைக்கு வரும் பெண் ரோபோவோ என்று சந்தேகித்தால் அவள் பூமியின் மனுஷி.

டாக்டர் ராகவானந்தம் வரும் சிறுகதைகள் அனேகமாக அறுபதுகளில் எழுதப்பட்டவை. அவற்றில் சுஜாதா உத்தேசித்தது மெல்லிய நகைச்சுவையை மட்டுமே. ராகவானந்தம் விஞ்ஞானி. எதையாவது கண்டுபிடிப்பார், அது வேலைக்காகாது. இந்தக் கருவை வைத்து சின்னதாக தமாஷ் செய்வார். ராகவேனியும் 277 சிறுகதையில் உலகை அழித்துவிடக் கூடிய புதிய element ஒன்றைக் கண்டுபிடித்துவிட்டு அதை ஆஃப் செய்ய முயற்சிக்கிறார்கள். 1000 வருஷங்கள் வாழ்வது எப்படி சிறுகதையில் காயகல்பம் சாப்பிட்டுவிட்டு 300 வருஷம் உயிரோடு இருக்கும் ஒருவரை சந்திக்கிறார்கள். வாட்டர் கார் விவகாரத்தில் பெட்ரோலுக்கு பதிலாக தண்ணீரை வைத்து காரை ஓட்டுகிறார்கள்.

ராகினி என் வசமாக அமானுஷ்ய சிறுகதை என்றுதான் வகைப்படுத்த வேண்டும். பெரியவர் என்னவெல்லாமோ வித்தை காட்டுகிறார். அஷ்டமாசித்தி தெரிந்தவர் போலிருக்கிறது. முடிவு வரிக்காகவே எழுதி இருக்கிறார். நல்ல வரிதான் – “நான் எழுந்து சென்று அந்தக் கூட்டத்தில் மறைவதை நானே பார்த்தேன்”. ஆனால் அது மட்டும் பத்தாது.

அனாமிகா போன்ற சிறுகதைகள் SFதானா என்பதே சந்தேகம்தான். சுனாமியில் இறந்த ஒரு பெண்ணின் கையில் சுஜாதாவின் விஞ்ஞானச் சிறுகதைகள் புத்தகம் இருந்ததாம். அதைக் கேட்ட நெகிழ்வில் இறந்து போன பெண் சுஜாதாவிடமே பீச்சில் வந்து பேசுவதாக ஒரு கதை. ராகினி என் வசமாக சிறுகதையை கொஞ்சம் உல்டா செய்தது போல இருக்கிறது.

ஜில்லு சிறுகதை கல்கி சிறுகதையான சூரியனை நினைவுபடுத்தியது. கதிரியக்க மழை பெய்யப் போகிறது. அரசு ஊரையே காலி செய்கிறது. நாய்க்கு இடமில்லை. சிறுவன் தன் நாயோடு ஓடிவிடுகிறான்.

சில சமயம் அவர் படித்த கதைகளை தமிழ்ப்படுத்தி இருக்கிறார். மிஸ்டர் முன்சாமி ஒரு 1.2.1 (1969) Flowers for Algernon-இன் தமிழ் வடிவம்.

இன்னும் இருக்கின்றன, ஆனால் நினைவில் வந்தது, சமீபத்தில் படித்தது இவ்வளவுதான்.

பொதுவாக அறிவியல் புனைவுகளில் அறிவியல் plausible ஆக இருந்தால் நல்லது. இன்று நடக்காவிட்டாலும் இன்னும் ஆயிரம் வருஷங்கள் கழித்து நடக்கும் சாத்தியக்கூறு இருந்தால் நல்லது. ஆனால் சுஜாதா இந்த சிறுகதைகளில் பொதுவாக உத்தேசிப்பது மெல்லிய நகைச்சுவையை மட்டுமே.பல கதைகளில் சின்னதாக தமாஷ் பண்ணவே எழுதி இருக்கிறார். அதுவும் டாக்டர் ராகவானந்தம் கதைகளில் இது மிகத் தெளிவாகத் தெரியும்.

விதிவிலக்குகள் இருந்தாலும் பொதுவாக இன்று படிக்கும்போது அவரது அறிவியல் சிறுகதைகள் பெரிதாக கவர்வதில்லை. அடுத்த தலைமுறை இளைஞர்களைக் கவரும் என்ற நம்பிக்கையும் எனக்கில்லை. இன்று அவரது தீவிர ரசிகர்கள், அல்லது முன்னோடி முயற்சிகளில் ஆர்வமுள்ளவர்கள் தவிர்த்து வேறு யாருக்கும் இதில் ஆர்வம் இருக்கப் போவதில்லை. உங்கள் பதின்ம வயது மகனோ மருமகளோ nephew-ஓ niece-ஓ தமிழில் என்ன படிக்கலாம் என்று கேட்டால் இவற்றை பரிந்துரைத்துவிடாதீர்கள். திமலா கூட உலகமகா தரிசனம் என்று சொல்லிவிட முடியாது. தமிழாசிரியர் புத்திசாலித்தனமான சிறுகதை, அவ்வளவுதான்.

அதற்காக அவரது முன்னோடி முயற்சிகளை குறைத்து மதிப்பிடுவதற்கும் இல்லை. கால்குலேட்டர்கள் வந்துவிட்டதால் பதினாறாம் வாய்ப்பாடு வரை சொல்லிக் கொடுத்த மூன்றாம் வகுப்பு ஆசிரியர் மேல் மரியாதை போய்விடுகிறதா என்ன? ஆனால் அவருக்கு நன்றி சொல்ல இந்த பதிவு. இன்றும் அவரே தமிழின் முதன்மை அறிவியல் சிறுகதைகளை எழுதி இருக்கிறார். (ஜெயமோகனின் முயற்சிகளை நான் gothic fiction என்றே வகைப்படுத்துவேன்.)

அவரது அறிவியல் அபுனைவுகளைப் பற்றியும் ஒரு வார்த்தை. இன்று இவற்றால் பெரிய பயன் இல்லை. அவற்றின் தாக்கத்தை இன்றைய இன்டர்நெட் யுகத்தில் உணர்வது கஷ்டம். ஆனால் ஒரு காலத்தில் அவற்றுக்கு இருந்த மவுசு மிக அதிகம். ஒரு தலைமுறைக்கே அறிவியலில் ஆர்வத்தை வளர்த்தவர் அவர். கடவுள் இருக்கிறாரா இன்றும் படிக்கக் கூடிய அறிமுகப் புத்தகம். ஏன் எதற்கு எப்படி, ஜீனோம், ஒரு விஞ்ஞானப் பார்வையிலிருந்து போன்ற புத்தகங்களை இன்று நாஸ்டால்ஜியாவுக்காகத்தான் படிக்க வேண்டும். அவற்றைப் பற்றி எழுத பெரிதாக எதுவும் இல்லை.

படிக்க வேண்டுமென்றால் தமிழாசிரியர், திமலா இரண்டை மட்டுமே பரிந்துரைப்பேன். முன்னோடி மட்டுமே. இன்றும் தமிழில் இவரை அடித்துக் கொள்ள ஆளில்லை என்பதுதான் வருத்தம். எனக்கு அந்த வெற்றிடத்தை நிரப்ப வேண்டும் என்ற கனவு உண்டு…

தொகுக்கப்பட்ட பக்கம்: சுஜாதா பக்கம்

சுஜாதா: பிரிவோம் சந்திப்போம்

பெரிய இடைவெளி விழுந்துவிட்டது.

30-35 வருஷங்களுக்கு முன் விகடனில் பிரிவோம் சந்திப்போம் தொடர்கதையாக வந்தது. அப்போதெல்லாம் சுஜாதாவின் சாகசக் கதைகள்தான் எனக்கு comfort-food ஆக இருந்தது. இதுவோ காதல் கதை. அப்போதெல்லாம் காதல் கதைகள் என்றால் பிடிக்காது. ஒரு வாரம் படித்தால் அடுத்த வாரம் விட்டுவிடுவேன்.

இடைவெளிக்குப் பிறகு மீண்டும் comfort-food ஆக சுஜாதா நாவல் ஒன்றைத் தேடினேன். இது கண்ணில் பட்டதும் சரி முழுவதுமாகப் படித்துப் பார்ப்போம் என்று ஆரம்பித்தேன்.

கதையில் அங்கங்கே ஓட்டைகள் தெரிந்தாலும் நாயகன் ரகுவின் முதல் காதல், காதல் முறிந்ததால் ஏற்பட்ட காயம், அடி வாங்கியதாலேயே முழுவதும் மறக்க முடியாமல் – not able to completely move on – தவிப்பது எல்லாம் நன்றாக வந்திருக்கின்றன. இரண்டாவது “காதலி” ரத்னாவின் பாத்திரம், திருமணத்துக்கு முந்தைய மதுவின் சித்திரம், ரகுவின் அப்பாவின் அறிவுபூர்வமான அணுகுமுறை எல்லாம் நன்றாக வந்திருக்கின்றன.

ஆனால் ரகுவின் அப்பா சரியாக ரகுவுக்கு திருமணம் நிச்சயம் ஆகும்போது இன்னொரு பெண்ணை “வைத்துக் கொள்வது” என்னடா சினிமாத்தனமாக இருக்கிறதே என்று தோன்ற வைக்கிறது. ராதாகிருஷ்ணன் மனைவியை முன்னாள் காதலனோடு ஊர் சுற்ற அனுப்புவது என்னடா தெலுகு சினிமாத்தனமாக இருக்கிறதேன் என்று நினைக்க வைக்கிறது. எதற்காக அனுப்ப வேண்டும்? ரத்னாவோடு நிச்சயதார்த்தம் என்றால் சரியாக அங்கே மது வந்து காரியத்தைக் கெடுக்கிறாள்.

ரகுவின் இளிச்சவாய்த்தனம் நிச்சயமாக அந்தக் கால இளைஞர்களால் அவன் பாத்திரத்தில் தன்னை கொஞ்சமாவது காண வைத்திருக்கும். (தொடர்கதை வந்தது இதயம் திரைப்பட முரளி காலம்…)

அமெரிக்காவின் சித்தரிப்பு சில சமயங்களில் புன்னகைக்க வைக்கிறது. குறிப்பாக இந்தியாவை மறக்க முடியாத முதல் தலைமுறையின் கலாசாரத் தடுமாறல்கள்.

வாரப்பத்திரிகை தொடர்கதையில் not able to completely move on என்பதை அருமையாக, உண்மையாக சித்தரிப்பது சுஜாதாவின் திறமையை உணர வைக்கிறது. ஒவ்வொரு வாரமும் ஒரு ட்விஸ்ட் வைக்க வேண்டும் என்பதால் சேர்க்கப்பட்டிருக்கும் சினிமாத்தனமான நிகழ்ச்சிகள் எத்தனை திறமை வாய்ந்த எழுத்தாளரையும் நீர்த்துப் போக வைக்கும் என்பதை புரிய வைக்கிறது. சுஜாதா வாரப் பத்திரிகை பிராபல்யம் என்ற மாயைக்குள் சிக்காமல் இருந்தால்… என்று பெருமூச்சு விட வைக்கிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: சுஜாதா பக்கம்

சுஜாதா: செப்டம்பர் பலி

செப்டம்பர் பலி எழுபது-எண்பதுகளில் வாரப் பத்திரிகை தொடர்கதையாக வந்தது என்று நினைவு. அப்போது அங்கும் இங்குமாக படித்திருக்கிறேன்.

இன்று முழுமையாகப் படிக்கும்போது வாரப் பத்திரிகை தொடர்கதைகளில் அவ்வப்போது ஏற்படும் கச்சிதக் குலைவு இல்லாமல் சீராகச் செல்வது தெரிகிறது. சினிமாத்தனமான நிகழ்ச்சிகளிலும் நம்பகத்தன்மை இருக்கிறது. அங்கங்கே சுஜாதாவின் டச் தெரிகிறது. ஆனால் எளிமையான வணிக நாவல் என்பதும் தெளிவாகப் புரிகிறது.

என்ன கதை? பெங்களூர். எளிய மனிதன் தங்கசாமி மீது கொலைக்குற்றம் ஜோடிக்கப்படுகிறது. மூன்று வருஷம் சிறை. பணக்காரப் பெண் வினோதினியோடு தற்செயலாக பழக்கம். சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு நிழலான முதலாளியைத் தேடுகிறான். வினோதினி உதவுகிறாள். காதல். அவளது அப்பாவும் சம்மதிக்கிறார். முடிவில் வழக்கமாக தமிழ்ப்படங்களில் வருவது போல வில்லன் யார் என்று ஒரு திடுக்கிடும் திருப்பம். தங்கசாமியால் ஒன்றும் செய்யமுடியாது. வில்லன் கோஷ்டியோடு கைகோர்ப்போம், செப்டம்பருக்குள் அவர்களை பலி கொடுப்போம் என்று வினோதினி அவனுக்கு தைரியம் தருகிறாள்.

ஓட்டைகள் இல்லாமல் இல்லை. முதலாளியைத் தேடும் தங்கசாமி தனக்குத் தெரிந்த சின்ன லெவல் வில்லன் கோஷ்டி ஆசாமிகள் – பட்டர், வக்கீல் – மூலம் அடுத்த நிலை வில்லன்கள் பக்கம் போக முயற்சியே எடுப்பதில்லை. இன்னொரு ஓட்டையை விவரித்தால் வில்லன் யார் என்று தெரிந்துவிடும், அதனால் வாயைப் பொத்திக் கொண்டுவிடுகிறேன்.

சுஜாதாவின் டச் சில இடங்களில் தெரிகிறது. பெண் பாத்திரங்கள் – வினோதினி, கிருஷ்ணவேணி – நன்றாக வந்திருக்கின்றன. நடைமுறையில் நடக்காதுதான், ஆனாலும் வினோதினி-தங்கசாமி ஈர்ப்பு இயல்பாக இருக்கிறது. சிறையில் அத்துமீறல்களைக் கண்டுகொள்ளாத அதிகாரி, போலீஸ் விசாரணைகள் இயல்பாக இருக்கின்றன(ர்).

இந்த நாவலைப் படிக்கும்போது எனக்கு மீண்டும் மீண்டும் தோன்றிய எண்ணம் இதை ஏன் திரைப்படமாக எடுக்கவில்லை என்பதுதான். இது நல்ல மூலக்கதை. விஜய் போன்றவர்களை நாயகனாக வைத்து மாஸ் திரைப்படமாக எடுக்கலாம். தனுஷ் போன்றவர்களை நாயகனாகப் போட்டு நடிக்கவும் வைக்கலாம். யாராவது உதவி இயக்குனர்கள் இந்தப் பக்கம் வந்தால் யோசிங்கப்பா!

படிக்கலாம். ஆனால் எளிய வணிக நாவல்தான்.

தொகுக்கப்பட்ட பக்கம்: சுஜாதா பக்கம்

சுஜாதாவின் “நிர்வாண நகரம்” – மீள்பதிவு

பத்து வருஷங்கள் முன்னால் எழுதிய பதிவு. என் எண்ணங்கள் இன்னும் கொஞ்சம் தெளிவாகி இருக்கின்றன.

நிர்வாண நகரம் போன்ற (சில) நாவல்களில் சுஜாதா சாகச நாவல், வணிக நாவல், வாரப் பத்திரிகை தொடர்கதை ஆகியவற்றின் எல்லைகளைத் (constraints) தாண்டி இலக்கியம் படைத்திருக்கிறார். அதிலும் அனாயாசமாகத் தாண்டி இருக்கிறார். வீரேந்தர் செவாக்கும் நிறைய செஞ்சுரி அடித்திருக்கிறார். ராஹுல் திராவிடும். ஆனால் திராவிட் எதிர்கொள்ளும் ஒவ்வொரு பந்திலும் அவரது உழைப்பு தெரியும். செவாக் எதிர்கொள்ளும் ஒவ்வொரு பந்திலும் ஒரு அலட்சியம், இதெல்லாம் என்ன ஜுஜுபி என்ற ஒரு attitude தெரியும். அதே போலத்தான் வாரப் பத்திரிகையில் எழுதினால் என்ன, வாசகர்களின் எதிர்பார்ப்புகளை வாராவாரம் ஒரு முடிச்சு போட்டு கட்டமைக்க வேண்டிய அவசியம் இருந்தால் என்ன, சாகசங்களை வைத்து பக்கத்தை நிரப்ப வேண்டிய தேவை இருந்தால் என்ன, இதை எல்லாம் மீறி இலக்கியம் படைப்பது பிஸ்கோத் வேலை என்ற மாதிரி ஒரு attitude தெரிகிறது.

இந்த நாவலைப் பற்றி எழுதுபவர்கள் இதன் குறும்புத்தனத்தைத்தான் பெரிதும் சிலாகிக்கிறார்கள். ஆனால் அந்த குறும்புத்தனத்திலேயே ஆழ்ந்துபோய் அவை நகர வாழ்வின் வெறுமையையும் சிறப்பாகக் காட்டுவதை தவற விட்டுவிடுகிறார்கள். எனக்கு அந்த சித்தரிப்பால்தான் இது இலக்கியமாக உயர்கிறது.

இலக்கியம்தான், ஆனால் இரண்டாம், மூன்றாம் வரிசை இலக்கியம். இது வாழ்வின் பெரிய தரிசனங்களைக் காட்டிவிடவில்லை. உங்களைப் பெரிதாக சிந்திக்க வைத்துவிடாது. விஷ்ணுபுரம் மைக்கேலாஞ்சலோவின் Sistine Chapel என்றால் இது ரெட்டைவால் ரங்குடு கார்ட்டூன். (நானும் குறும்புத்தனத்தை மட்டும்தான் இங்கே முன்வைக்கிறேனோ?)

அன்று எழுதியது கீழே.


நான் சுஜாதாவின் பரம விசிறி ஆனது இந்தப் புத்தகத்தைப் படித்துதான். அந்த phase ஒரு பத்து வருஷமாவது நீடித்தது. இந்தக் கதை குங்குமத்தில் தொடராக வந்தபோது படித்தேன். சமீபத்தில் மீண்டும் படித்தேன்.

முதல் அத்தியாயத்திலேயே தூள் கிளப்பினார். தற்காலிக கிளார்க்காக இருக்கும் சிவராஜுக்கு மெடர்னிடி லீவில் போன பெண் திரும்பி வருவதால் நாளையிலிருந்து வேலை இல்லை. விஷயம் தெரிந்ததும் சிவராஜ் கேட்கும் கேள்வி: வேற யாராவது கிளார்க்குகள் கர்ப்பமா இருக்காங்களா சார்?” ஹோட்டலில் டேபிளுக்கு காத்திருக்கும் சிவராஜ் நினைக்கிறான் – “சினிமா இன்டர்வல்லில் எனக்கு முன்னால் நிற்பவன் மட்டும்தான் குடம் குடமாக மூத்திரம் போவான்” சென்னை என்ற நகரம் தன் தனித்தன்மையை அழிப்பதைப் பொறுக்க முடியாமல் சிவராஜ் சென்னையைப் பழி வாங்க தீர்மானிக்கிறான். அப்புறம் ஒரு ஜட்ஜ் கொலை, சிவராஜ் அடுத்தபடி ஒரு டாக்டரை கொல்லப் போகிறேன் என்று போலீசுக்கு ஜீவராசி என்ற பெயரில் லெட்டர் எழுதுவது, போஸ்டர் அடித்து கமிஷனர் ஆஃபீசுக்கு முன்னாலே ஓட்டுவது, டாக்டர் கொலை, ஒரு எம்.எல்.ஏ.க்கு மிரட்டல், வனஜா தன்னை கல்யாணம் செய்து கொள் என்று சிவராஜை கேட்பது, திருமணத்தால் சிவராஜுக்கு வாழ்க்கை நிலையாக அமையப் போவது, கணேஷ்-வசந்த் வருகை, எம்.எல்.ஏ. மரணம், கணேஷ் வசந்த் சிவராஜை கண்டுபிடிப்பது என்று கதை போகிறது.

மிகவும் கலக்கலான கதை. வசனம் பிரமாதம். ஒரு பம்மாத்து இன்டர்வ்யூவில் சிவராஜை கேட்கிறார்கள் – “நீங்கள் எதற்காக இந்த வேலையை விரும்புகிறீர்கள்?” “என் வாழ்நாளின் ஆதர்சம் உங்கள் கம்பெனியில் ஒரு டெஸ்பாட்ச் கிளார்க்காக சேர வேண்டும் என்பதுதான்”. ஒரு டாக்டரை சிவராஜ் பார்க்கிறான். அவர் சொல்கிறார் – “சுவாமி நான் ஒரு ஜி.பி. மனசு சரியில்லைனா சைக்காட்ரிஸ்டிடம் போங்கோ.” சிவராஜின் பதில் “எனக்கு ரெண்டு கொட்டையும் வலிக்கிறது டாக்டர்.”

இத்தனை வருஷம் கழித்து மீண்டும் ஒரு முறை படித்தேன். சுவாரசியம் குன்றவே இல்லை. சின்ன சின்ன விஷயங்களில் ஒரு காட்சியை தத்ரூபமாக படம் பிடித்திருக்கிறார். உதாரணமாக டாக்டரை சிவராஜ் பார்ப்பதற்கு முன்னால் ஒரு அம்மாள் பச்சையா வெளிக்குப் போறான் டாக்டர் என்று குழந்தையை கையில் வைத்துக் கொண்டு கவலையோடு சொல்லிக் கொண்டிருப்பார். கமிஷனர் பேட்டியில் ஹிந்து நிருபர் யோசித்து கேள்வி கேட்பதற்குள் கமிஷனர் போய்விடுவார். பாத்திரப் படைப்பும் நன்றாக இருக்கும். சிவராஜின் தனிமை, கையாலாகாத்தனம் எல்லாம் சிறப்பாக வந்திருக்கும். வனஜா, எம்.எல்.ஏ., சந்தடி சாக்கில் பெண் ரோசலினுக்கு மாப்பிள்ளை பார்க்கும் போலீஸ் அதிகாரி, எல்லாவற்றையும் சிறப்பாக எழுதி இருப்பார்.

உடுமலை பதிப்பகத்தில் (இன்றும்) கிடைக்கிறது. விலை எழுபது நூறு ரூபாய். வாங்குங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

இது விஷ்ணுபுரமோ, கரைந்த நிழல்களோ இல்லை. ஆனால் என் கண்ணில் இது இலக்கியமே. ஆனால் ஜெயமோகன் போன்றவர்கள் இந்த மாதிரி ஒரு புத்தகத்தை பொருட்படுத்துவதில்லை. இது ரசனை வேறுபாடா, இல்லை என் படிப்பு முறையின் குறைபாடா தெரியவில்லை. ஆனால் ஒன்று நிச்சயம். சுஜாதா existential angst பற்றி ஒரு கதை எழுதி இருந்தால் தூள் கிளப்பி இருப்பார்!

தொகுக்கப்பட்ட பக்கம்: சுஜாதா பக்கம்

சுஜாதாவின் குறுநாவல் – “வைரங்கள்” (மீள்பதிவு)

சுஜாதாவின் சிறந்த படைப்புகளில் ஒன்று, ஆனால் பெரிதாக கவனம் பெறவில்லை.

கச்சிதமான கதை.

எங்கோ ஒரு மலையடிவாரத்தில் வைரங்கள் இருக்கின்றன. தற்செயலாக தெரிந்து கொள்ளும் ஒரு பணக்கார சேட்டுப் பையன் நிலத்தை அபகரிக்க முயற்சி செய்கிறான். இதில் ஒரு கிளீனர் சிறுவன், ஒரு ஊமைச் சிறுமி என்று பாத்திரங்கள்.

கிளீனராக வரும் சிறுவன் கலக்கலான பாத்திரப் படைப்பு. சுஜாதாவுக்கு எப்போதும் இந்த மாதிரி உழைக்கும் வர்க்க சிறுவர்களை படைப்பது பைன் ஹாத் கா கேல். அவர்கள் மேல் அழுத்தும் வறுமையும், அதே நேரத்தில் அந்த வயதுக்கே உரிய ததும்பி நிற்கும் உற்சாகமும் நன்றாக சித்தரிப்பார். அவன் ஊமைச்சிறுமியுடன் விளையாடுவதும், அக்காவை காப்பாற்றுவதும் எல்லாமே நன்றாக வந்திருக்கும். சேட்டு பையனின் பணத்திமிர், ஜியாலஜி ஃப்ரொஃபசரின் ஜம்பம், டீக்கடைக்காரனின் தோற்கப்போகும் தன்னம்பிக்கை என்று ஒரு கை தேர்ந்த ஓவியனின் லாகவத்தோடு ஓரிரண்டு வரிகளில் ஒரு நல்ல சித்திரத்தை நமக்கு காட்டுகிறார்.

சுஜாதாவின் பலங்களில் ஒன்று அவர் உபதேசங்களை கவனமாகத் தவிர்ப்பது. இதெல்லாம் ஒரு பலமா, எந்த நல்ல எழுத்தாளனும் உபதேசம் செய்வதில்லையே, அசோகமித்திரன் உபதேசம் செய்வாரா என்ன என்று உங்களுக்கு தோன்றினால் நீங்கள் நா.பா., அகிலன் மாதிரி எழுத்தாளர்களைப் படித்ததில்லை என்று பொருள். அப்படி கதைகளை வாரப் பத்திரிகைகளில் படித்து வளர்ந்த ஒரு கூட்டத்துக்கு சுஜாதா ஒரு revelation என்றுதான் சொல்ல வேண்டும். அவர் ஒரு சமூக அவலத்தை, அறச்சீற்றம் உருவாக்கும் ஒரு நிகழ்ச்சியை, வெகு கவனமாக ஃபோட்டோ பிடிப்பது போல எடுத்துக் காட்டுவார். அறச்சீற்றம் என்பது அவர் எழுத்தில் இருக்கவே இருக்காது. இந்தப் புத்தகமும் அப்படித்தான். நகரம், ஒரு லட்சம் புத்தகங்கள், ஜன்னல் மலர், குருபிரசாதின் கடைசி தினம், ஒரு மெக்கானிக் செட்டில் இரு சிறுவர்கள் ஒரு நடிகையின் மகளுக்கு நண்பர்களாவது (கதை பேர் நினைவு வரவில்லை) என்று பல புனைவுகளை சொல்லலாம்.

சுஜாதாவின் சிறந்த புனைவுகளில் ஒன்று. படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: சுஜாதா பக்கம்

சுஜாதாவின் “ஊஞ்சல்” நாடகம் (மீள்பதிவு)

பத்து வருஷங்களுக்கு முன் (2010-இல்) எழுதிய பதிவு. என் எண்ணங்கள் இன்னும் மாறவில்லை. ஒரு எழுத்தை மாற்றாமல் மீள்பதித்திருக்கிறேன்.

தமிழின் சிறந்த நாடகங்களுள் ஒன்று.

பொதுவாகவே தமிழில் நல்ல நாடகங்கள் குறைவு. ஷேக்ஸ்பியரும், இப்சனும், பெர்னார்ட் ஷாவும், பெர்டோல்ட் ப்ரெக்டும், ஆர்தர் மில்லரும் இன்னும் தமிழில் இல்லை. அந்த விதத்தில் சுஜாதா ஒரு முன்னோடி. நல்ல நாடகங்கள் எழுத முயற்சி செய்திருக்கிறார். ஊஞ்சலில் அவர் வெற்றியும் பெற்றிருக்கிறார். ஏறக்குறைய டென்னசி வில்லியம்சின் நாடகங்களை நினைவுபடுத்துமாறு அவர் இன்னும் சில நாடகங்களை – டாக்டர் நரேந்திரன், சரளா இப்போது நினைவு வருகிறது – எழுதி இருக்கிறார். குப்பைகளும் உண்டு. உதாரணமாக சிங்கமய்யங்கார் பேரன் எனக்கு தேறவில்லை.

கதை என்ன பிரமாதக் கதை? அப்பா வரதராஜன் ஒரு காலத்தில் பெரிய எஞ்சினியரிங் பிஸ்தா, கவர்னரே இவர் வீட்டுக் கல்யாணத்துக்கு வருகிறார். இன்று பெண்ணின் சம்பளத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். மனிதனின் வீழ்ச்சியை, அப்பா ஒரு anachronism ஆக மாறிவிட்டதை, அருமையாக சித்தரித்திருக்கிறார். ஐயோ, திறமையான, பல வெற்றிகளை அடைந்த மனிதன் இன்று இப்படி சொதப்புகிறானே என்று நமக்கு ஒரு பச்சாதாபத்தை ஏற்படுத்துவதில் சுஜாதா வெற்றி பெற்றிருக்கிறார். இந்த மாதிரி பெருங்காயம் வைத்த டப்பாக்களை அவரே நிறைய பார்த்திருப்பார். அதை அற்புதமாக கொணடு வந்திருக்கிறார்.

சுஜாதாவுக்கு நன்றாகத் தெரிந்த பிராமண milieu. வசனங்கள் மிகவும் இயற்கையாக இருக்கின்றன. அது இந்த நாடகத்தின் பெரிய பலம். அப்பா பாத்திரம் மட்டுமில்லை, ஒரு காலத்தில் அப்பாவின் உதவியாளனாக இருந்து இன்று பெரிய தொழிலதிபராக இருக்கும் மதி, பெண் கல்யாணி, அம்மா பாத்திரம், பெண்ணின் காதலனாக வருபவர் எல்லாமே ரத்தமும் சதையும் உள்ள நிஜ மனிதர்கள். சில காட்சிகள் – கல்யாணி பணத்தை அப்பாவுக்கு தருகிறேன் என்பது, வரதராஜன் பஸ் கம்பெனியில் ட்ரிப் ஷீட் எழுதப் போகும் சீன், மதியின் கம்பெனிக்கு சென்று அவனை சந்திக்கும் சீன், மதியின் உதவியாளர்கள் இவரது ப்ராஜெக்ட் தேறாது என்று மதியிடம் சொல்வது எல்லாம் மிக அருமையாக வந்திருக்கும்.

இந்த நாடகத்தை நான் வீடியோவில் பார்த்தேன். ஒரு நல்ல நடிகனுக்கு இந்த நாடகம் ஒரு பிரமாதமான வாய்ப்பு. பூர்ணம் விஸ்வநாதன் இந்த ரோலுக்கு பொருத்தமானவர்தான், ஆனால் ஓவர்ஆக்டிங் செய்து கொலை செய்துவிட்டார். உண்மையை சொல்லப்போனால் அவரது மிகை நடிப்பில் ஏற்பட்ட கடுப்பு எழுத்தின் திறமையையே மறைத்துவிட்டது. கடுப்பேற்றும் மிகை நடிப்புக்கும் இதற்குத் தேவையான ஆர்ப்பாட்டமான நடிப்புக்கும் ஒரு மயிரிழைதான் இடைவெளி, அந்த இடைவெளியை பூர்ணம் தவறவிட்டுவிட்டார். இதை இன்றைய நடிகர்கள் – பிரகாஷ் ராஜ் மாதிரி யாராவது நடித்தால் நன்றாக வரும். பூர்ணமே கூட இன்னொரு நாளில் அருமையாக நடித்திருக்கலாம். என் துரதிருஷ்டம், வீடியோ எடுக்கப்பட்ட அன்று அவர் சொதப்பிவிட்டார்.

ஊஞ்சல் நாடகத்தைப் பற்றி பேசும்போது ஜெயமோகன் சிலாகித்திருக்கிறார். உண்மையில் நான் தமிழில் நல்ல நாடகம் இல்லை என்று சொன்னபோது சுஜாதாவின் நாடகங்களைப் பற்றி அவர்தான் நினைவுபடுத்தினார். அதற்குப் பிறகுதான் நான் ஊஞ்சல் நாடகத்தை தேடிப் பிடித்து படித்தேன் – பூர்ணத்தின் மிகை நடிப்பால் இந்த நாடகத்தை ஒதுக்கிய நான் மறுவாசிப்பு செய்ய அவரே காரணம். இதைப் பற்றி எங்காவது எழுதி இருக்கிறாரா என்று நெட்டில் தேடிப் பார்த்தேன், தென்படவில்லை. இந்த பதிவு அவர் கண்ணில் பட்டால் ஏதாவது சொல்வார் என்று நம்பிக்கை…

ஜெயமோகன் ஏற்கனவே சொல்லி இருக்கிறார், எனக்குத்தான் தேடத் தெரியவில்லை. 🙂 அவரது விளிம்புகளில் ரத்தம் கசிய – சுஜாதா நாடகங்கள் பதிவிலிருந்து ஒரு excerpt:

அதிகமாக கவனிக்கப்படாத ஒரு உலகம் சுஜாதாவின் நாடகங்கள்.

சுஜாதா தன் அனேகமான நாடகங்களில் தோற்று காலாவதியாகும் ஒரு தலைமுறையை தன் கதைக்கருவாக எடுத்துக் கொண்டிருக்கிறார்.

பாரதி இருந்த வீடு, சிங்கமய்யங்கார் பேரன், டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கு, அன்புள்ள அப்பா , ஊஞ்சல் போன்ற பெரும்பாலான நாடகங்களில் மையக் கதாபாத்திரம் புதிய காலகட்டத்தால் கைவிடப்பட்டிருக்கிறது. வீம்புடன் தன் காலாவதியான சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறது. அல்லது மெல்ல மெல்ல சமாதானம் செய்து கொள்கிறது. அந்த வீம்பின் பரிதாபம், அதை விட அந்த சமரசத்தின் பரிதாபம். அதன் வழியாக அந்நாடகங்கள் மேலும் முக்கியமான வினாக்களை எழுப்புகின்றன.

சுஜாதாவின் நாடகங்கள் வாசிப்புக்கும் சரி, மேடைக்கும் சரி, எல்லாரையும் ஈர்த்து ரசிக்க வைக்கும் தன்மை கொண்டவை.

ஜெயமோகனின் மறுமொழியையும் இங்கே இணைத்திருக்கிறேன். ஜெயமோகன் இந்த தளத்தை அனேகமாக தினமும் பார்க்கிறார் என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. (குறிப்பாக இந்த பதிவை ஜெயமோகனின் கவனத்துக்கு கொண்டு போன உத்தம் நாராயணனுக்கு நன்றி!)

சுஜாதா அவரது நாடகங்களில் அவருக்குச் சாத்தியமான முழுமையான கலைவெற்றியை அடைந்திருக்கிறார் என்பது என் எண்ணம். இன்றும் இந்த தளத்தில் அவரது ஆக்கங்களுடன் ஒப்பிட ஜெயந்தன் [நினைக்கப்படும்] மட்டுமே இருக்கிறார்.

இந்திரா பார்த்தசாரதி [மழை,போர்வை போர்த்திய உடல்கள், ஔரங்கசீப்] முக்கியமான நாவலாசிரியர். ஆனால் யதார்த்த நாடக ஆசிரியரல்ல. யதார்த்தத்தை மேடையில் இயல்பாக நிகழ்த்துவதில் ஜெயந்தனின் நினைக்கப்படும் வரிசை நாடகங்களே வெற்றிபெற்றன. ஆனாலும் அவற்றில் உள்ள ’சாட்டையடி’த்தன்மை கொஞ்சம் அதிகம். சுஜாதா இன்னமும் தெளிவான யதார்த்தத்தை முன்வைத்தார். ஆகவே இப்போதைக்கு அவரே முதலிடம் பெறுகிறார்.

சுஜாதாவின் சிறுகதைகளுக்கு தமிழிலக்கியத்தில் முக்கியமான இடம் உண்டு. நடுத்தர வர்க்க வாழ்க்கையை கச்சிதமாகச் சொன்ன கதைகள் அவை. அவற்றின் கச்சிதமே கலைவெற்றியாக கருதப்படுகிறது. ஆனால் காலப்போக்கில் அந்த இயல்பு தன் கவர்ச்சியை இழக்கிறதோ என இப்போது ஐயப்படுகிறேன். அவரது கதைகளில் தூய நகைச்சுவை கதைகளான குதிரை போன்றவை மேலும் முக்கியமானவை என நினைக்கிறேன்.

ஆனால் நாடகங்கள் நகைச்சுவையும் யதார்த்தமும் இயல்பாக இழைபின்னி வெற்றியடைகின்றன. இயல்பான உரையாடல்கள கச்சிதமாக அமைப்பதில் அவர் ஒரு மேதை. உரையாடல்கள் இயல்பாக இருந்தால் கச்சிதமாக இருக்காது, கச்சிதமாக இருந்தால் இயல்பாக அமையாது. இந்த இக்கட்டை சுஜாதா இயல்பாகத் தாண்டிச் சென்று வெல்கிறார். அது இந்நாடகங்களை வெற்றிகரமாக ஆக்குகிறது.

இந்நாடகங்களின் குறை என்னவென்றால் உணர்ச்சி உச்சமோதல்களும் கவித்துவமும் இல்லை என்பது. ஆனால் அது இந்த வகையான யதார்த்த நாடகங்களின் இயல்பும் அல்ல.

அருமையான தீம், பாத்திரப் படைப்பு, வசனங்கள், powerful காட்சி அமைப்பு எல்லாமே இந்த நாடகத்தின் பெரிய பலங்கள். கட்டாயமாகப் படியுங்கள், முடிந்தால் (பூர்ணம் சொதப்பிய வீடியோவாக இருந்தாலும் சரி) பாருங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் நாடகங்கள், சுஜாதா பக்கம்

தொடர்புடைய சுட்டி:
சுஜாதாவின் நாடகங்களைப் பற்றி ஜெயமோகன் – விளிம்புகளில் ரத்தம் கசிய
சிமுலேஷனின் விமர்சனம்