அனுத்தமா: கேட்ட வரம்

அனுத்தமா படிக்கலாமா வேண்டாமா என்று குழம்ப வைக்கும் தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். சிவசங்கரி, இந்துமதி வகை எழுத்தாளரோ என்று சந்தேகம். அதனால் பல வருஷங்களாகத் தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்தேன்.

ஜெயமோகன் தனது சிறந்த வணிக நாவல்கள் பட்டியலில் கேட்ட வரத்தை சேர்த்திருக்கிறார். அவரது பட்டியலில் இருக்கும் ஒவ்வொரு நாவலையும் படிக்க வேண்டும் என்று எனக்கு ஒரு நப்பாசை.

கேட்ட வரத்தை பல முறை ஆரம்பித்தேன், ஆனால் என்னால் தொடர முடியவில்லை. துவக்ககட்ட சுவாரசியம் எனக்குப் போதவில்லை. எப்படியோ கடைசியில் படித்து முடித்தேன்.

நாவல் நிச்சயமாக சராசரி சிவசங்கரி நாவலை விட நன்றாகவே இருக்கிறது. எனக்கு நினைவிருக்கப்போவது கிராமத்து அக்ரஹார விழாச்சூழல்தான். நானே என் சிறு வயதில் அக்ரஹாரத்து சூழல், அபிராமண கிராமத்து விழாச்சூழல் இரண்டையும் பார்த்திருக்கிறேன். இன்றும் திருவையாறு தியாகராஜர் உற்சவம் போன்ற விழாச்சூழல்களில் இவற்றின் சாயல் தெரியலாம். ஆனால் இந்தச் சூழல் இன்று இல்லை என்றேதான் நினைக்கிறேன். அந்தச் சூழலை மெய்நிகர் அனுபவமாக சித்தரித்தற்காகத்தான் இன்று இந்தப் புத்தகத்தைப் படிக்கலாம்.

கேட்டவரம்பாளையம் கிராமத்தில் பாரம்பரியமாக ராமநவமி நாட்களில் பஜனை நடைபெறுகிறது. ஊரே (அக்ரஹாரமே) கூடி நடத்துகிறது. பல ஊர்களுக்கு சென்றுவிட்டாலும் ஊர்க்காரர்கள் விழாவுக்காக் விடுப்பு எடுத்துக் கொண்டு வருகிறார்கள். ஊரிலேயே இருப்பவர்களோடு சேர்ந்து ஏற்பாடுகளை செய்கிறார்கள். அனேகமாக எல்லாருக்கும் பஜனை மடத்தில் ஒன்றாகத்தான் சாப்பாடு, டிஃபன், காப்பி எல்லாம். பல ஊர்களிலிருந்து பாடகர்கள், இசைக்கலைஞர்கள், கதாகாலட்சேபம் செய்பவர்கள் எல்லாரையும் அழைத்து வருகிறார்கள். உள்ளூர்க்காரர்களும் சேர்ந்து பாடுகிறார்கள், ஆடுகிறார்கள், கொண்டாடுகிறார்கள்.

இந்தப் பின்புலத்தில் ஊர்க்காரனான வாசுதேவன் – ஒரு பொறியாளன் – தன் மேலதிகாரியான கலெக்டரின் பட்டப்படிப்பு முடித்த இளம் மகள் மாயாவை விழா பார்க்க அழைத்து வருகிறான். மாயா மனதளவில் இன்னும் முதிர்ச்சி அடையாத சிறுமிதான். பட்டிக்காட்டு பழக்க வழக்கங்கள் அவளுக்கு கொஞ்சம் ஒத்துவரவில்லை. வாசுதேவனுக்கு ஏறக்குறைய திருமணம் நிச்சயமாகிவிட்டது. ஆனால் திடீரென்று பெண்ணின் அப்பா அவளுக்கு வேறு மாப்பிள்ளை பார்க்கிறார். அவன் நண்பனான ராஜாமணி மனைவியைப் பிரிந்திருக்கிறான். பிள்ளைப்பேறுக்காக தாய் வீடு போன லலிதா 3-4 வருஷம் கழித்தும் ராஜாமணியோடு சேர்ந்து வாழமுடியவில்லை. மாயாவுக்கு வழக்கமான பாணியில் வாசுதேவனின் நண்பன் கிருஷ்ணாராவோடு மோதல், பிறகு காதல். அவள் சிறுமி என்ற நிலையிலிருந்து இளம் பெண்ணாக மாறுகிறாள். என்ன நடக்கிறது என்பதுதான் கதை.

ராஜாமணியின் நான்கு வயதுப் பையனின் சித்தரிப்பு நன்றாக வந்திருக்கிறது. கிருஷ்ணாராவ்-மாயா ஈர்ப்பு இன்னும் படிக்க முடிகிறது. ஊர்க்காரர்களின் (தளர்வான) பந்தங்கள் அழகாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. அனுத்தமாவின் சொந்த ஊரிலும் இப்படி ஏதாவது விழா இருந்திருக்க வேண்டும், அந்த அனுபவத்தைத்தான் பின்புலமாக வைத்து எழுதி இருக்கிறார் என்று தோன்றுகிறது.

கேட்டவரம்பாளையம் நிஜமான ஊர். திருவண்ணாமலை அருகில் இருக்கிறது.

கலைமகள், கல்கி போன்ற பத்திரிகைகளில் ஐம்பது-அறுபதுகளில் வந்திருந்தால் பெரிதும் ரசிக்கப்பட்டிருக்கும். இன்று கொஞ்சம் வயதாகிவிட்டதுதான், ஆனால் காலாவதி ஆகிவிடவில்லை. படிக்கக் கூடிய நாவல்தான், ஆனால் படித்தே ஆக வேண்டிய நாவல் இல்லை.

இன்னும் ஓரிரண்டு புத்தகமாவது படித்துப் பார்க்கலாம் என்று தோன்றுகிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் எழுத்தாளர்கள்

அருண்மொழிநங்கை பதிவு

அருண்மொழிநங்கையை அனேகரும் ஜெயமோகனின் மனைவி என்றுதான் தெரிந்து வைத்திருக்கிறோம். அவர் நினைத்தால், முயன்றால், எழுத்தாளர் என்றே அடையாளம் கொள்ளலாம்.

அவரது சிறு வ்யது நினைவுகள் சுவாரசியமானவை. குறிப்பாக நுரை. நுரை ஒரு ஏழெட்டு வயது சிறுமியின் கண்ணிலிருந்தே சொல்லப்படுகிறது, அந்தக் கண்ணோட்டம் தவறிக்கூட கொஞ்சம் பெரியவளான பெண்ணின் கண்ணிலிருந்து சொல்லப்படவில்லை. படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

அவர் முயன்றால் லா.ச.ரா.வின் பாற்கடல் பாணியில் தன் குடும்ப நினைவுகளை எழுதலாம். நமக்கு அவ்வளவு அதிர்ஷ்டம் இருக்கிறதா பார்ப்போம்… (பாற்கடல்தான் எனக்கு மிகவும் பிடித்தமான லா.ச.ரா. நூல்.)

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் எழுத்தாளர்கள்

பவா செல்லதுரை பேட்டி

பவா செல்லதுரை தன் கதை சொல்லல் நிகழ்ச்சிகளின் மூலம் புகழ் பெற்றவர். இந்தக் கதை சொல்லல் அவரது எழுத்துக்களை மங்க அடித்துவிட்டது என்று எனக்கு ஒரு எண்ணம் உண்டு. என் இளமைப்பருவத்தின் பாறைகளையும் வறண்ட குன்றுகளையும் உடும்புகளையும் ஓணான்களையும் மல்லாட்டைப் பயிறையும் பற்றி எழுத அவரை விட்டால் வேறு ஆளில்லை.

அவரது பேட்டி ஒன்று கண்ணில் பட்டது. கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் எழுத்தாளர்கள்

எழுத்தாளர் ராஜேந்திர சோழன்

ராஜேந்திர சோழன் பல சிறுகதைகளை எழுதி இருக்கிறார். அஸ்வகோஷ் என்ற பேரிலும் எழுதி இருக்கிறார்.

இடதுசாரி சார்புடையவர் என்று தெரிகிறது. ஆனால் நான் படித்த வரையில் அவரது சிறுகதைகள் “முற்போக்கு”, “இடதுசாரி”, பணக்காரனின் அடக்குமுறை சிறுகதைகள் அல்ல. (நீதி என்ற சிறுகதை ஒரு விதிவிலக்கு). அவர் எழுதுவது வெளிப்படையான, போலித்தனம் அற்ற அடிமனத்து உணர்வுகளை. அது தற்செயல் சிறுகதையின் காமம் ஆகட்டும், பொழுது சிறுகதையில் சூதாட்டத்தின் ஈர்ப்பு ஆகட்டும், நண்பனுக்கு வேலை கிடைத்துவிட்டதால் ஏற்படும் resentment ஆகட்டும். இன்னும் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்துகிறார். ஆனால் படித்தே ஆக வேண்டிய எழுத்தாளர் என்ற உணர்வை ஏற்படுத்தவில்லை. Intriguing, but not a must-read.

ஜெயமோகன் ராஜேந்திர சோழனின் பாசிகள், புற்றில் உறையும் பாம்புகள், வெளிப்பாடுகள் ஆகிய சிறுகதைகளை தன் தமிழின் சிறந்த சிறுகதைகள் பட்டியலில் சேர்க்கிறார். புற்றில் உறையும் பாம்புகளை பாலியல் வழியாக மனித தரிசனங்களைத் தரும் சிறந்த சிறுகதைகளில் ஒன்றாகக் குறிப்பிடுகிறார். எஸ்ராவும் புற்றில் உறையும் பாம்புகளை தமிழின் 100 சிறந்த சிறுகதைகளில் ஒன்றாகக் கருதுகிறார்.

புற்றில் உறையும் பாம்புகள் சிறுகதை நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் இதே கருவை வைத்து அழகிரிசாமி இன்னும் அருமையான கதை ஒன்றை எழுதி இருக்கிறார் என்று நினைவு. சிறுகதையின் பெயர்தான் நினைவு வரவில்லை.

ஜெயமோகன் புற்றில் உறையும் பாம்புகள் சிறுகதை பாலியல் சித்தரிப்பு எழுத்தின் திருப்புமுனை, எழுதப்பட்ட காலத்தில் பெரிய விவாதங்களை உருவாக்கியது என்கிறார். இன்னொரு இடத்தில் ராஜேந்திர சோழனின் கதைகள் “அப்பட்டமான யதார்த்தத்தைச் சொன்னபடி காமத்தின் நுண்ணிய அக இயக்கங்களுக்குள் சென்ற படைப்புகள்” என்றும் சொல்கிறார். அப்பட்டமான யதார்த்தம் என்பது உண்மைதான் – குறிப்பாக தற்செயல் போன்ற சிறுகதைகளில். ஆனால் அப்படி திருப்புமுனையாக எனக்கு எதுவும் தெரியவில்லை. அவரது வார்த்தைகளில்:

தமிழில் பாலியல் சித்தரிப்பு எழுத்தில் முக்கியமான திருப்புமுனை என்றால் ராஜேந்திர சோழன் எழுதிய புற்றில் உறையும் பாம்புகள் போன்ற சிறுகதைகளையும் சிறகுகள் முளைத்து என்னும் சிறிய நாவலையும்… சுட்டிக் காட்டலாம். அவை அக்காலகட்டத்தில் ஆழமான விவாதங்களை உருவாக்கியவை. ஒழுக்க நெறிகளுக்கு அப்பால் பாலுறவுத் தளத்தில் நிகழும் நுட்பமான சுரண்டலை ஆழமாகச் சித்தரித்தவை அவரது ஆக்கங்கள்.

தற்செயல் என்ற சிறுகதைத் தொகுதி கிடைத்தது. படிக்கலாம், ஆனால் படித்தே ஆக வேண்டிய சிறுகதை என்று எனக்கு பட்டது இழை என்ற சிறுகதை மட்டுமே. நொய் நொய் என்று குறை சொல்லிக் கொண்டே இருக்கும் மனைவி மிக இயல்பாக கலவியில் ஈடுபடுகிறாள். மற்றவற்றில் ஊற்றுக்கண்கள் என்ற சிறுகதை வேலைக்குப் போகும் நண்பன் மீது இருக்கும் resentment மாறுவது இரண்டும் ஓரளவு நன்றாக இருந்தது.

ஆபீதின் தற்செயல் சிறுகதையை தன் தளத்தில் பதித்திருக்கிறார்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் எழுத்தாளர்கள்

அஞ்சலி – எழுத்தாளர் அகஸ்தியன்/கடுகு மறைவு

அகஸ்தியன் நான் படித்த செங்கல்பட்டு செயின்ட் ஜோசஃப் பள்ளியில் படித்தவர். எனக்கு ஒரு இருபத்தைந்து வருஷம் சீனியராக இருப்பார். அவருடன் கூடப் படித்தவர்கள் பிரபல இயக்குனர் ஸ்ரீதரும், சித்ராலயா கோபுவும். சில முறை இணையம் வழியாக பேசி இருக்கிறோம். பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தேன், இனி மேல் முடியாது…

அவருடைய எண்பதாவது பிறந்த நாள் போது எழுதிய பதிவை அஞ்சலியாக மீள்பதிக்கிறேன்.

பி.எஸ். ரங்கநாதன் என்கிற அகஸ்தியன் என்கிற கடுகு எழுதிய தொச்சு-கமலா கதைகளை நான் சிறு வயதில் ரசித்திருக்கிறேன். இப்போதும் அவரது தளத்தில் அவ்வப்போது படிக்கும்போது புன்னகைக்கிறேன்.

நான் படிக்கும்போது ஸ்ரீதர் படித்த பள்ளி என்று பெருமை அடித்துக் கொள்வார்கள். அப்போது அகஸ்தியன் கதைகளைப் படித்துக் கொண்டிருந்தாலும் இவரும் படித்த பள்ளி என்று தெரியாமல் போய்விட்டது.

அவர் ஃப்ரீமான்ட் பக்கம் போன வருஷம் வந்திருந்தபோது சந்திக்க முடியாமல் போய்விட்டது. சரி திரும்பி வராமலா போய்விடுவார்?

அவருடைய திவ்ய பிரபந்த உரை மிகவும் சிறப்பானது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். சென்னை போகும்போது வாங்க வேண்டும். “கமலாவும் நானும்” புத்தகமும்தான்.

அவருக்கு எண்பது வயதாகிவிட்டதாம்! நூறு வயது வாழ வாழ்த்துக்கள்!

கடுகுவின் எழுத்து பொழுதுபோக்கு மட்டும்தான். படித்துவிட்டு மறந்துவிடக் கூடியவைதான். என் கண்ணில் அப்படிப்பட்ட எழுத்துகள் தேவையானவையே. அதுவும் நல்ல டீசன்டான நகைச்சுவை எழுத்து என்பது தமிழில் மிக அபூர்வம், கல்கி, எஸ்.வி.வி., தேவன், நாடோடி, துமிலன், சாவி போன்றவர்கள் ஆரம்பித்து வைத்த பாரம்பரியத்தை தொடர்ந்தவர் இவர். என் கண்ணில் கல்கி, தேவன், எஸ்.வி.வி. ஆகிய மூவருக்கும் அடுத்த இடத்தில் இருக்கிறார். இந்த எழுத்துப் பாணி மறைந்து கொண்டிருப்பது நமக்கு நஷ்டமே.

நண்பர் உப்பிலி ஸ்ரீனிவாஸ் ஹிந்துவில் வந்த இந்த கட்டுரை சுட்டியை அனுப்பி இருந்தார், அவருக்கு நன்றி!

தொடர்புடைய சுட்டிகள்:
கடுகுவின் தளம்
ஹிந்து கட்டுரை

சுத்தானந்த பாரதியார்

சுத்தானந்த பாரதியை நான் முதன்முதலாக கேள்விப்பட்டது ‘மாலை மயங்குகின்ற நேரம்‘ என்ற திரைப்படப் பாடலின் மூலம்தான். மிகவும் அருமையான பாடல்.

suddhanandha_bharathi
suddhanandha_bharathi

அகஸ்தியர் யாத்திரை ஜாலியாக படிக்க எழுதப்பட்ட புத்தகம். அகஸ்தியர் லண்டனுக்குப் போய் பெண்களுடன் நடனமாடுகிறார், மாமிச உணவை புறம் தள்ளுகிறார். மேலை நாகரிகம் பற்றி ரேடியோவில் லெக்சர் அடிக்கிறார். The ambience of this book is charming. மின்பிரதி இங்கே.

அகஸ்தியர் யாத்திரை புத்தகம் கிளப்பிவிட்ட curiosity-ஆல் இவரைப் பற்றி மேலும் தேடினேன். புனைவுகளில் நாகரிகப் பண்ணை என்ற சகிக்க முடியாத சிறுகதைத் தொகுப்புதான்  கிடைத்தது. ஹரிஜன் நாடகம் வெறும் பிரசாரம் மட்டுமே.

பல அபுனைவுகளை எழுதி இருக்கிறார். பெரியோர் வரலாறு, தமிழ் உணர்ச்சி, இனிய தமிழ் இலக்கணம், அறநூல் என்று புத்தகங்கள்,  ஆறுமுக நாவலர், முத்துத்தாண்டவர், முத்துசாமி தீட்சிதர் ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகள் கண்ணில் பட்டன.

ஹிந்தி கற்றுக் கொள்ள வேண்டும், அதன் மூலம்தான் தமிழை வடநாட்டில் பரப்ப முடியும் என்று வாதாடி இருக்கிறார்.

முனைந்து மொழிபெயர்த்திருக்கிறார். டான்டேயின் Divine Comedy இவரை பெரிதும் கவர்ந்திருக்கிறது. ஆங்கிலத்திலும் ஃப்ரெஞ்சிலும் படித்து மனம் நிறையாமல் இத்தாலியனும் கற்று பிறகு மொழிபெயர்த்திருக்கிறார். விக்டர் ஹ்யூகோவின்  Les Miserables உள்ளிட்ட பல நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார்.

கவிஞர். எனக்கும் கவிதைக்கும் கொஞ்ச தூரம். அதனால் நான் புரட்டிக் கூட பார்க்கவில்லை. எனக்கு பிடித்தது பாடுவதற்காக அவர் எழுதிய சாஹித்தியங்கள்தான் – ‘எப்படி பாடினரோ‘ போல.

நிறைவாழ்வு வாழ்ந்திருக்கிறார், 1897-இல் பிறந்தவர் 1990-இல்தான் இறந்திருக்கிறார். ஊர் ஊராக சுற்றி இருக்கிறார். ஆனால் என்ன செய்வது, எப்படி தன் வாழ்வை பொருளுள்ளதாக ஆக்கிக் கொள்வது என்று தவித்திருக்கிறாரோ என்று தோன்றுகிறது. அவரைப் பற்றிய பல விவரங்களை இங்கே காணலாம்.

நான் பரிந்துரைப்பது அகஸ்தியர் யாத்திரையை மட்டும்தான். முடிந்தால் அவரது பாடல்களையும் கேட்டுப் பாருங்கள்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் எழுத்தாளர்கள்

கோபிகிருஷ்ணன் சிறுகதைகள்

கோபிகிருஷ்ணனைப் பற்றி சாரு நிவேதிதா மூலம் கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் பெரிதாகப் படித்ததில்லை. அவருக்கு உளவியல் பிரச்சினைகள் இருந்தனவாம். கடவுளின் கடந்த காலம் போன்ற சிறுகதைகளில் அது தெரிகிறது. ஆனால் என்ன கதை என்றுதான் புரியவில்லை.

படித்த வரையில் intriguing எழுத்தாளர். பிரச்சினைகளால் அமுக்கப்படும் சாதாரண, அனேகமாக கீழ் நடுத்தர வர்க்க மனிதனுக்கு எதிர்ப்பைத் தெரிவிக்கக் கூட வழி இல்லை, சும்மா ஒப்புக்கு “என்ன கொடுமை சரவணன்” என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிடுகிறான் என்ற உணர்வை ஏற்படுத்துகிறார் – குறிப்பாக புயல் சிறுகதையில். எனக்கு மிகவும் பிடித்த சிறுகதை உரிமை. மொழி அதிர்ச்சி ஓரளவு நல்ல சிறுகதை.

மொழி அதிர்ச்சி திறமையாக எழுதப்பட்ட சிறுகதை. புன்னகைக்காமல் இருக்க முடியாது. ஆனால் ஒரு தளத்தில் வெறும் gimmick எனவும் தோன்றுகிறது. சின்ன சிறுகதை, படித்துப் பாருங்கள்!

உரிமை எனக்குப் பிடித்த சிறுகதைகளில் ஒன்று. ஒரு கணத்தில் உறவில் ஏற்படும் விரிசலை பிரமாதமாகக் காட்டிவிடுகிறார். இதன் இன்னொரு பக்கமாக ஒரு ரூபாய்க்கு ஒரு கதையை சொல்லலாம். உறவில் சின்ன உறுத்தல் இருந்துகொண்டே இருப்பதைக் காட்டுகிறார். ஆனால் உரிமை அளவுக்கு வரவில்லை.

இழந்த யோகம் சிறுகதை படிக்கலாம். சிகரெட் பழக்கத்தை முன்புலத்தில் வைத்து பெண்ணின் பால் ஏற்படும் ஈர்ப்பின் தாக்கத்தைக் காட்டுகிறார்.

புயல் சிறுகதையில் ஒரு பக்கம் பார்த்தால் நம்பகத்தன்மை அதிகம் – கணவன் பிரச்சினையை எதிர்கொள்ளும் விதம். இன்னொரு பக்கம் பார்த்தால் எல்லாரும் ஒரே நாளில் மனைவியிடம் இத்தனை பாலியல் சீண்டல்கள் நடப்பதில் நம்பகத்தன்மை குறைவாக இருக்கிறது. படிக்கலாம்.

இதுவும் சாத்தியம்தான் சுமார். Platonic love சித்தரிப்பு.

பீடி, சமூகப்பணி, மகான்கள், கடவுளின் கடந்த காலம் போன்றவற்றை எப்படி வகைப்படுத்துவது என்றே தெரியவில்லை. சமூகப்பணி சிறுகதையில் மெல்லிய நகைச்சுவை ஓடுகிறதுதான், ஆனால் இரண்டையும் தவிர்க்கலாம்.

கோபிகிருஷ்ணனின் இரு சிறுகதைகளை – மொழி அதிர்ச்சி, காணி நிலம் வேண்டும் – ஜெயமோகன் தனது சிறந்த சிறுகதைகள் பட்டியலில் வைக்கிறார். எஸ்ராவின் பட்டியலில் அவரது சிறுகதைகள் இடம் பெறவில்லை. ஆனால் கோபிகிருஷ்ணனின் படைப்புலகம் பற்றி எழுதியதை அழியாச்சுடர்கள் தளத்தில் பதித்திருக்கிறார்கள்.

அவரது சிறுகதைத் தொகுப்புகளை வாங்கி படித்துப் பார்க்க வேண்டும் என்று தோன்ற வைக்கிறார். ஒரே ஒரு கதை படிக்க வேண்டுமென்றால் உரிமையைப் படித்துப் பாருங்கள்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் எழுத்தாளர்கள்

தமிழில் பெண் எழுத்தாளர்கள்

(மீள்பதிவு)

நான் சின்ன வயதில் குமுதம் விகடன் படித்து வளர்ந்தவன். அப்போதெல்லாம் பெண் எழுத்தாளர்களின் கதைகள் என்று ஒரு genre அவற்றில் சக்கைபோடு போட்டுக் கொண்டிருந்தது. குடும்பச் சச்சரவுகள், மாமியார்-மருமகள் சண்டை, நாத்தனார் கொடுமை, வரதட்சிணை கேட்கும் “கோழைகள்”, வேலைக்குப் போகும் பெண்களின் பிரச்சினைகள் என்று பெண்களின் உலகத்தைப் பற்றி அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் அவற்றை விரும்பிப் படிக்கும் பெண்கள் நிறைய பேர் இருந்தார்கள். எனக்கோ இந்தக் கதைகள் அப்பீல் ஆனதே இல்லை. ஆனால் அவற்றைப் படித்து பக்கத்து வீட்டுப் பெண்களிடமும் எதிர் வீட்டுப் பெண்களிடமும் கடலை போட வேண்டிய தேவை இருந்தது. அதுவும் சிவசங்கரி எழுதிய ஒரு தொடர்கதையில் அருண் என்று ரொம்ப நல்லவன் ஒருவன் வருவான். தான் விரும்பும் பெண்ணை அவள் விரும்பும் தன் நண்பனுக்கு மணம் முடித்து வைப்பது என்ன, நண்பனுக்கு தன் கம்பெனியிலேயே வேலை போட்டுத் தருவது என்ன, நண்பனுக்கு விபத்து நேர்ந்ததும் அந்தப் பெண்ணுக்கு வேலை போட்டுத் தருவது என்ன என்று ரொம்ப நல்லவனாக இருப்பான். கடுப்பாக இருக்கும். ஆனால் இந்தப் பெண்கள் எல்லாம் ஆஹா அருண் ஓஹோ அருண் என்று புகழும்போது தலையை மட்டும் ஆட்டிவிடுவேன். 🙂

என் காலத்தில் சிவசங்கரிதான் இந்த genre-இன் ராணி. இந்துமதி கொஞ்சம் மேல்தட்டு குடும்பங்களைப் பற்றி எழுதி பிரபலமாக இருந்தார். (லக்ஷ்மிக்கு ஒரு பெரிய வாசகர் கூட்டம் இருந்தது. ஆனால் மெதுமெதுவாக அவரது பாணி கதைகள் கலைமகளுக்குப் போய்க் கொண்டிருந்தன.) அப்போது சூடுபட்டதால் பொதுவாக தமிழ் பெண் எழுத்தாளர்களைத் தவிர்த்தே வந்திருக்கிறேன். ஆர். சூடாமணி, அனுத்தமா, ராஜம் கிருஷ்ணன், திலகவதி போன்றவர்களை நான் இன்னும் படிக்காததற்கு அதுதான் காரணம். ஒரே ஒரு விதிவிலக்கு அம்பை. நான் விரும்பிப் படிக்கும் ஒரே பெண்ணிய எழுத்தாளர் அவர்தான். அவர் பெண்களைப் பின்புலத்தில் வைத்து இலக்கியம் படைக்கிறார். இருபத்து சொச்சம் வயதில் முதன்முறையாக “வீட்டின் மூலையில் ஒரு சமையலறை” சிறுகதைத் தொகுப்பைப் படித்தபோது உண்மையிலேயே அது ஒரு revelation ஆக இருந்தது. (கிருத்திகா, ஹெப்சிபா ஜேசுதாசன் போன்றவர்களை எல்லாம் நான் பெண் எழுத்தாளர்கள் என்று கோடு போட்டுப் பிரிப்பதே இல்லை. அவர்கள் எழுத்தாளர்கள், அவ்வளவுதான். வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டும் என்றால் எனக்குப் பூமணி தலித் எழுத்தாளர் அல்ல, தலித் பின்புலத்தை வைத்து எழுதி இருக்கும் எழுத்தாளர்.)

குங்குமம் தோழி தளத்தில் அப்படி என்னை வெறுப்படைய வைத்த genre சிறுகதைகள் பலவற்றையும் தொகுத்துப் போட்டிருக்கிறார்கள். இதைப் பற்றி முன்பும் குறிப்பிட்டிருந்தேன். சிறுகதைகளை ஒன்றாகப் படிக்கும்போது சமுக மாற்றங்கள் (கார்த்திகை சீர் செய்யாததால் வாழாவெட்டியாக இருக்கும் பெண்!) தெரிகிறது. காலத்தால் பழைய கதைகள் எல்லாம் பிராமணக் குடும்பங்களின் கதைகள். மாற்றங்களை இந்த சிறுகதைகள் பிரதிபலிப்பது சுவாரசியமாக இருக்கிறது.

குங்குமம் தோழி தளத்தினரின் criterion பெண் எழுத்தாளர்கள் எழுதி இருக்க வேண்டும் என்பதுதான், சிறுகதைகளின் தரம் அல்ல. அதனால் முக்கால்வாசி சிறுகதைகள் தண்டம். ஆனால் வேறு எங்கே குகப்ரியை, கோமகள், கு.ப. சேது அம்மாள் (கு.ப.ரா.வின் சகோதரி), கமலா விருத்தாசலம் (புதுமைப்பித்தனின் மனைவி), கீதா பென்னட், ஜோதிர்லதா கிரிஜா எழுத்துக்களை எல்லாம் படிக்க முடியும்? (உஷா சுப்ரமணியனையும் கமலா சடகோபனையும் இன்னும் காணோம். உ. சுப்ரமணியனின் ஒரு சிறுகதை – காபரே பார்த்துவிட்டு அந்த வேகத்துடன் குண்டு மனைவியுடன் சுகிக்கும் ஒரு தொழிலதிபர் – தரமானது என்று எனக்கு மங்கலாக ஒரு நினைவு)

எனக்கு இன்னும் படிக்க வேண்டும் என்று தோன்ற வைத்தது வை.மு. கோதைநாயகி அம்மாளும், குமுதினியும்தான். Fluff-தான். ஆனால் வை.மு.கோ. ஒரு முக்கியமான முன்னோடி என்று தோன்றுகிறது. குமுதினியின் எழுத்தில் என்னவோ ஒரு special charm இருக்கிறது. இலக்கியத் தரம் வாய்ந்த சிறுகதை வேண்டுமென்றால் அம்பையின் “வீட்டின் மூலையில் ஒரு சமையலறை” மட்டும்தான்.

ஒன்றாகப் படித்துப் பாருங்கள், ஒரு genre எப்படி எல்லாம் உருமாற்றம் பெற்றிருக்கிறது என்று புரிந்து கொள்ளலாம்.


தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் எழுத்தாளர்கள்

தொடர்புடைய சுட்டிகள்:
வை.மு. கோதைநாயகி அம்மாள்
குமுதினியின் சில்லறை சங்கதிகள் லிமிடெட்
குமுதினியின் “அந்தப்புர தபால்”

அண்ணாதுரையின் படைப்புகள்

அண்ணாவின் முக்கியப் பங்களிப்பாக நான் கருதுவது அவரது நாடகங்களைத்தான். அவரது நாடகங்கள் குறைகள் மலிந்தவையே. பிரச்சார நெடி அடிப்பவையே. பிராமண பாத்திரம் – இல்லை இல்லை பார்ப்பன, ஆரிய பாத்திரம் – என்றால் அந்தப் பாத்திரம்தான் வில்லன். அவரது நாடகத்தின் கதைகள் அவரது “முற்போக்கு” வசனங்களை மாட்ட உதவும் சட்டகம் (frame) மட்டுமே. தற்செயல் அதிசய நிகழ்ச்சிகள் கொண்ட மிகை உணர்ச்சி, ஃபார்முலா நாடகங்களே. ஆனால் ஓரிரவு அந்த ஃபார்முலாவை மீறுகிறது. சிவாஜி கண்ட ஹிந்து சாம்ராஜ்யம் நாடகத்தை மீறிய கலைத் தாக்கம் உடையது. வேலைக்காரி தமிழ் நாடக வரலாற்றில் முக்கியமான நாடகம். (ஆனால் நல்ல நாடகம் இல்லை.) இவை மூன்றையுமே அவரது முக்கியப் பங்களிப்பாக நான் கருதுகிறேன்.

பிற நாடகங்களில் சந்திரோதயம் நாடகம் குறிப்பிட வேண்டிய ஒன்று. இதில் பிரச்சாரத்துக்காக அவர் பயன்படுத்தும் உத்திகள் புத்திசாலித்தனமானவை. நாடகத்தின் நடுவே திமுக செயலாளர் நெடுஞ்செழியனின் ரேடியோ பேச்சாக ஒரு சிறு உரை; புத்திசாலித்தனமான வசனங்கள் (கடவுள் நம்பிக்கை உள்ள வேலைக்காரனை அவனது எஜமான் காலைத் தூக்கிக் கொண்டு நில் என்கிறான். இரண்டு நிமிஷத்தில் கால் வலிக்கிறது என்று அவன் காலை கீழே வைக்க நடராஜர் மட்டும் எப்படிய்யா காலைத் தூக்கிக் கொண்டே நிற்கிறார் என்று கேட்கிறான். அது கல்லுங்க என்று அந்த வேலைக்காரன் சொல்லிவிடுகிறான்.) 1943-இல் எழுதப்பட்ட நாடகம், ஆனால் பிற்காலத்தில் கொஞ்சம் அப்டேட் செய்திருக்கிறார். திமுக செயலாளர் நெடுஞ்செழியன், அரியலூர் ரயில் விபத்து என்றெல்லாம் வருகிறது.

நீதிதேவன் மயக்கம் என்ற நாடகத்தையும் குறிப்பிடலாம். நாடகத்தில் ராவணன் தன் கேசை எமன் முன்னால் வாதிடுகிறான். இதை வைத்து “கடவுள்கள்”, தேவர்கள் செய்த அநீதிகளை எடுத்துச் சொல்லி வாங்கு வாங்கென்று வாங்குகிறார். சிந்திக்க ஆரம்பிக்கும் காலத்தில் – பதின்ம வயதுகளி – தோன்றக் கூடிய சாதாரணக் கேள்விகளின் தொகுப்புதான். இருந்தாலும் அந்தக் காலத்தில் தேவை இருந்திருக்குமோ என்று தோன்றுகிறது.

ஆனால் அனேகமான நாடகங்கள் தண்டமே. ராகவாயணம்காதல் ஜோதி நாடகங்களில் பார்ப்பனர்களை வில்லன்களாக காட்ட வேண்டும் என்ற முனைப்பு மட்டுமே தெரிகிறது. இந்த லட்சணத்தில் இது ஜெய்ஷங்கர், ரவிச்சந்திரன், காஞ்சனா நடித்து திரைப்படமாகவும் வேறு வந்தது. சொர்க்கவாசல் இன்னொரு தண்டம். நன்கொடைகண்ணாயிரத்தின் உலகம், ரொட்டித்துண்டு, கல் சுமந்த கசடர், இரக்கம் எங்கே, புதிய மடாதிபதி போன்ற இன்னும் சில பிரச்சார நாடகங்களையும் படித்துத் தொலைத்திருக்கிறேன். கண்ணீர்த்துளி நாடகத்தில் காமராஜர் ஒரு முக்கிய பாத்திரம் – அவர் ஈ.வே.ரா.வை சாமர்த்தியமாக ஏய்த்துவிட்டதாக எழுதி இருக்கிறார்.

வேலைக்காரி, ஓரிரவு, நல்லதம்பி, ரங்கோன் ராதா சினிமாவாகப் பார்த்திருக்கிறேன்.

நான் அண்ணாதுரையின் சிறுகதைகள்/நாவல்களை அதிகமாகப் படித்ததில்லை. செவ்வாழை என்ற சிறுகதை தவிர வேறு எதுவும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய தரத்திலும் இல்லை. பிரச்சாரக் கதைதான், ஆனால் சராசரி பிரச்சாரக் கதையை விடப் பரவாயில்லை என்று சொல்லலாம். அதுவும் மலையாளைப் படைப்பு ஒன்றைத் தழுவியது, ஒரிஜினல் சரக்கு அல்ல என்று ஜெயமோகன் தகவல் தருகிறார்.

இமையம் எழுதிய இந்த கட்டுரையில் சில விவரங்கள் கிடைக்கின்றன. 113 சிறுகதைகள் எழுதி இருக்கிறாராம். எல்லாவற்றிலும் பிரசாரம்தான் போலிருக்கிறது. தன்னை வருத்திக் கொள்ள விரும்புபவர்களுக்காக (for masochists) – பித்தளை அல்ல பொன்னேதான் என்ற தொகுப்பு ப்ராஜெக்ட் மதுரை தளத்தில் கிடைக்கிறது.

படித்தவற்றில் சிறந்தது ரங்கோன் ராதா (1947). பிரச்சார நோக்கம் உள்ள, நயம் குறைவான நாவல்தான், ஆனால் அதுதான் இருப்பவற்றில் சிறந்தது. வண்டிக்காரன் மகன் படுசுமார். என் வாழ்வு (1940) பெரும் ஏமாற்றம். இவ்வளவு தண்டமாக எழுதுவார் என்று தெரியாமல் போனது. வில்லன்களை முனைந்து பார்ப்பனராகக் காட்டுவது, சாமியாரின் இன்ப வெறி, தாசிகள் என்று போகிறார். கலிங்க ராணி நாவல் தண்டம். வில்லனுக்கு பேர் கூட இல்லை, ‘ஆரியன்’ என்றே குறிப்பிடுகிறார். குமரிக் கோட்டம் என்று குறுநாவலில் கீழ்ஜாதிப் பெண்ணை மணம் செய்து கொள்ள விரும்பும் மகனை வீட்டை விட்டு விரட்டிவிடும் அப்பா இன்னொரு கீழ்ஜாதிப் பெண்ணிடம் மயங்குகிறார், அதனால் திருந்தி சுயமரியாதை இயக்கத்தில் சேர்ந்துவிடுகிறார். அந்தக் காலத்து திராவிட இயக்கத்தினர் விரும்பிப் படித்திருப்பார்கள் என்று எனக்கு நம்பிக்கை இல்லை. இன்று தவிர்த்துவிடுவது ஓடிவிடுவது பெட்டர். கபோதிபுரத்து காதல், குமாஸ்தாவின் பெண் குறுநாவல்கள் தண்டம்.  கன்னி விதவையான கதை, தசாவதாரம், வாழ்க்கைப்புயல் சிறுகதை தொகுப்புகளைத் தவிர்ப்பது நலம்.

அண்ணாவின் எழுத்துகளை நாட்டுடமை ஆக்கினார்களா இல்லையா என்று கூடத் தெரியவில்லை. தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் மின் நூலகத்தில் அவரது படைப்புகள் எதுவும் இது வரை இல்லை. நல்ல விமர்சகர்கள் என்று நான் கருதும் எவரும் – க.நா.சு., சுஜாதா, ஜெயமோகன் இத்யாதியினர் – யாரும் அவரது எழுத்துகளைப் பற்றி நல்லபடியாக ஒரு வார்த்தை சொன்னதில்லை. அவரது எழுத்துகளை யாரும் ஆய்வு செய்தும் நான் பார்த்ததில்லை.

நான் படிக்க விரும்பியவற்றில் கம்பரசம் ஆகியவற்றைப் படித்து எழுதியும் விட்டேன். ரங்கோன் ராதா இன்னும் கிடைக்கவில்லை.

அவரது அபுனைவுகள் பதின்ம வயதில் தோன்றக் கூடிய சிந்தனைகளை எழுதியது போலத்தான் இருக்கிறது. புராண மதங்கள் சிந்திக்க ஆரம்பிக்கும் காலத்தில் தோன்றக் கூடிய சாதாரணக் கேள்விகளின் தொகுப்பு – கிருஷ்ணன் செய்தது அயோக்கியத்தனம் (வியாசரே அப்படி சொல்கிறார்), அவனை வழிபடலாமா இத்யாதி. இவற்றுக்கு அந்தக் காலத்திலாவது தேவை இருந்திருக்குமோ என்று தெரியவில்லை. அண்ணா கண்ட தியாகராயர் போன்றவை அலங்காரத் தமிழில் விஷயமே இல்லாமல் எழுதப்பட்டவை. பணத்தோட்டம் “பனியா” ஆதிக்கம் பற்றி பேசுகிறது. படிக்கும்போது தென்னிந்தியர்களுக்கு எதிராகக் கிளம்பிய சிவசேனா நினைவுதான் வந்தது. ஆரிய மாயை போன்ற புத்தகங்களோ ஏறக்குறைய இன்றைய ஹிந்துத்துவர்கள் “அன்னிய” இனங்களைப் பற்றிப் பேசுவது போல இருக்கிறது. எண்ணித் துணிக கருமம் அவர் திராவிட நாடு என்ற பிரிவினை கோரிக்கையை ஏன் கைவிட்டார் என்பதற்கான விளக்கம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் எழுத்தாளர்கள்

தொடர்புடைய சுட்டிகள்:
ஓரிரவு நாடகம்
சிவாஜி கண்ட ஹிந்து சாம்ராஜ்யம் நாடகம்
வேலைக்காரி நாடகம்
கம்பரசம்

வாசந்தியின் சில கதைகள்

Vaasanthiவாசந்தியை இலக்கியவாதி அல்லது வணிக எழுத்தாளர் என்று சுலபமாக வகைப்படுத்திவிட முடியவில்லை. இலக்கியவாதி என்றால் எங்கோ கடைசி வரிசையில் நிற்கிறார். வணிக எழுத்தாளர் என்று பார்த்தால் பொருட்படுத்தக் கூடிய வணிக எழுத்தாளர். இந்தப் பதிவுக்காக அவரது சில பல புத்தகங்களைப் படிக்கும் வரையில் நானும் அவரைப் பெண் எழுத்தாளர் என்றுதான் வகைப்படுத்தி இருந்தேன், லக்ஷ்மி, சிவசங்கரி, இந்துமதி வகையறா, ஆனால் அந்த வரிசையில் முதல்வர் என்றுதான் நினைத்திருந்தேன். நிச்சயமாக இல்லை, கிருத்திகா, அம்பை, பாமா, ஹெப்சிபா ஜேசுதாசன் அளவுக்கு வரவில்லை என்றாலும் அவருக்கு பெண் எழுத்தாளர் என்ற அடையாளம் தேவையில்லை. எழுத்தாளர் என்று சொன்னால் போதும்.

ஜெயமோகன் இவரது மௌனப்புயல், ப்ளம் மரங்கள் பூத்துவிட்டன நாவல்களை தனது இரண்டாம் வரிசை இலக்கியப் பட்டியலிலும், ஜெய்ப்பூர் நெக்லஸ், நிற்க நிழல் வேண்டும் ஆகிய நாவல்களை தன் பரப்பிலக்கியப் பட்டியலிலிலும் தேர்ந்தெடுத்திருக்கிறார். என்னைப் பொறுத்த வரை நிற்க நிழல் வேண்டும், மூங்கில் பூக்கள் இரண்டும் இலக்கியம். ப்ளம் மரங்கள் பூத்துவிட்டன குறுநாவல் வணிக நாவல் இல்லைதான், ஆனால் பெரிய இலக்கியமும் இல்லை.

வாசந்தியின் பாத்திரங்கள் பொதுவாக மேல்மட்டத்தவர்கள். ஓரளவு மென்மையானவர்கள். ஓரளவு சிந்திக்கக் கூடியவர்கள். ஆனால் திருப்பி திருப்பி வருபவர்கள். அதனால் முதல் சில நாவல்களுக்குப் பிறகு அலுத்துவிடுகிறார்கள். என் பதின்ம வயதில் அவரது பாத்திரங்கள் எதற்கெடுத்தாலும் ஓ போடுவதால் அவரது புத்தகங்களைப் பார்த்தாலே ஓ என்று கிண்டல் செய்வேன்.

ஒரே ஒரு புத்தகம் படிக்க வேண்டுமென்றால் நான் பரிந்துரைப்பது மூங்கில் பூக்கள் என்ற குறுநாவலைத்தான். மிசோரத்தில் டீச்சராக வேலை செய்யும் தமிழ்ப் பெண். ராணுவ அதிகாரி ராஜீவுடன் காதல், உறவு. அவள் வகுப்பில் “டெரரிஸ்ட்” தலைவர் லால்கங்காவின் மகன் சுங்கா வந்து சேருகிறான். டெரரிஸ்ட் தலைவர் என்றாலும் லால்கங்கா மிசோரத்தில் சாதாரணமாக புழங்குபவர். சுங்கா தொல்லை தரும் மாணவன் என்று அவனுக்கு பெயர் இருக்கிறது. உண்மையில் அவன் சாதாரணமான, அழகை ரசிக்கும் மாணவன். தன் அப்பா மீது கொஞ்சம் வெறுப்பு வேறு. டீச்சருக்கும் அவனுக்கும் நட்பு ஏற்படுகிறது. பொறாமை கொண்ட ராஜீவ் சுங்கா மீது ஜீப்பை ஏற்றி கொன்றுவிடுகிறான். டீச்சருக்கு அங்கிருந்து தப்பிக்க வேண்டிய நிலை. மிஜோரத்திலிருந்து ஷில்லாங் வந்து விமானம் ஏறும்போது அவளுக்கு தனக்கு ஜீப் கொடுத்து உதவியது லால்கங்காதான் என்று தெரிய வருகிறது.

மிஜோரப் பின்புலம், அழகான பூக்கள், அன்பு ஆகியவற்றை வைத்து ஒரு நல்ல கதை பின்னி இருக்கிறார். இது மலையாளத்தில் பத்மராஜன் இயக்கி கூடெவிடே என்ற திரைப்படமாகவும் வந்தது.

எனக்கு இதைத்தான் ஜெயமோகன் தன் பரப்பிலக்கிய லிஸ்டில் சேர்க்க நினைத்து தவறுதலாக ப்ளம் மரங்கள் பூத்துவிட்டன குறுநாவலைக் குறிப்பிட்டுவிட்டாரோ என்று ஒரு சந்தேகம் உண்டு.

மற்ற நாவல்களில் கடைசி வரை எனக்கு ஓரளவு பிடித்த நாவல். அப்பாவோடு வாழும் டாக்டர் பெண். தான் மகனாகப் பிறக்கவில்லை என்று அப்பாவுக்கு கொஞ்சம் வருத்தம் உண்டு என்று அவளுக்குத் தெரிகிறது. அது chip on the shoulder ஆக இருக்கிறது. அவளுடைய மனநிலையை நன்றாக சித்தரித்திருக்கிறார்.

சிறை என்ற நாவலும் பரவாயில்லை. மும்பை குண்டுவீச்சு பின்னணியில் ஒரு நிரபராதி நிருபன் மாட்டிக் கொள்கிறான்.

கடை பொம்மைகள் என்ற நாவலையும் குறிப்பிடலாம். பெண் குழந்தை வேண்டாமென்று நிராகரிக்கப்பட்ட குழந்தையை வெள்ளைக்கார அம்மா ஒருவர் எடுத்து வளர்க்கிறார். கொஞ்சம் கொஞ்சமாக அது பெண் குழந்தைகளுக்கான இல்லமாகவே மாறிவிடுகிறது. வளர்ந்த பெண் தனக்குப் பிறகு இந்த இல்லத்தை எடுத்து நடத்துவாள் என்று அந்த வெள்ளைக்கார அம்மா எதிர்பார்க்க, இவள் உள்ளம் தடுமாறுகிறது.

ஆகாச வீடுகள் என்ற நாவலும் எனக்கு ஓரளவு பிடித்திருந்தது. கிராமம், அக்ரஹாரம். ஆணாதிக்கம். மாமா சபேசனுக்கு தன் எட்டு வயது மகன் ராஜு மீது அதீத அன்பு, அதை வெளிப்படுத்தத் தெரியாமல் திட்டிக் கொண்டே இருப்பார்.

யுகசந்தி என்ற நாவலும் எனக்கு ஓரளவு பிடித்திருந்தது. சம்பிரதாயமான பிராமணக் குடும்பம். முதல் பையன் போலந்துக்காரியை மணந்து கொள்கிறார். இரண்டாமவர் ஒரு முஸ்லிம் பெண்ணை. முதல் பையன் ஐம்பது வயதுக்கப்புறம் இன்னொரு பெண்ணோடு போய்விடுகிறார். விதவை அம்மா, முதல் பையனின் பெண் என்று கதாபாத்திரங்கள். நடுவில் இடதுசாரி சார்புடைய வள்ளியின் கிளைக்கதை.

டைம் பாஸ் என்ற அளவில் ஆர்த்திக்கு முகம் சிவந்தது (நேபாளத்தில் ஒரு பணக்காரக் குடும்ப இளைஞனுக்கு முதுகெலும்பு முறிந்துவிடுகிறது. பார்த்துக் கொள்ளப் போகும் தமிழ்நாட்டு நர்சுக்கும் அவனுக்கும் காதல்), அக்னிக்குஞ்சு (வீண் சந்தேகத்தால் பிரிந்த அம்மா-அப்பா பெண்ணுக்கு பதினெட்டு வயதாகும்போது சமாதானம் ஆகிறார்கள்), இடைவெளிகள் தொடர்கின்றன (ஒரு கல்லூரி நகரம். அங்கே புது லைப்ரரியனாக வரும் அழகான இளம் பெண். எல்லார் பிரச்சினைகளையும் தீர்க்கிறாள்), காதலெனும் வானவில் (அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு வரும் குடும்பத்தின் பதின்ம வயதுப் பெண்), மீண்டும் நாளை வரை (அவசரப்பட்டு சந்தேகப் பிராணி கணவனை மணக்கும் பெண் அவனைப் பிரிந்து சொந்தக் காலில் நிற்கிறாள்), நான் புத்தனில்லை (மேல் தட்டு குடும்பத்தின் அம்மா இன்னொருவனை விரும்புகிறாள்), நழுவும் நேரங்கள் (அப்பாவின் முன்னாள் காதலி, இந்நாள் தோழியால் குடும்பத்தில் குழப்பம். தோழிக்கு கான்சர். மகள் எல்லாரையும் ஒன்று சேர்க்கிறாள்), பொய்யில் பூத்த நிஜம் (சேர்ந்து வாழும் பெண்ணையும் மகனையும் விபத்தில் பட்ட அடியால் மறந்து போகும் ஆண்), சந்தியா (பெற்றோர்களின் அழுத்தத்தைத் தாங்க முடியாமல் நார்வே செல்லும் பெண் அந்தக் கலாசாரத்தின் வெறுமையைப் புரிந்து கொள்வது), வசந்தம் கசந்தது (குடும்பத்தைப் புறக்கணிக்கும் அரசியல் தலைவி மீண்டும் குடும்பத்தில் ஒன்றுவது), வீடு வரை உறவு (ஒரு சம்பல் கொள்ளைக்காரனின் – டாகுவின் – மனமாற்றம்), வேர்களைத் தேடி (உயர் மத்தியதரக் குடும்பம். விவாகரத்து ஆன பெண். அயோத்தியாக் கலவர பின்புலம்), யாதுமாகி (அதே பத்தினிக்கு இன்னல் வரும் ஃபார்முலா, அதே பெண்களை யாரும் புரிந்து கொள்வதில்லை புலம்பல். நடப்பது கொஞ்சம் மேல்தட்டு குடும்பங்களில். ராதிகாவுக்கு ப்ரமோஷன் கிடைப்பதை புருஷன் விரும்பவில்லை. ஆணாதிக்கக் குடும்பம். எதிலோ தொடர்கதையாக வந்திருக்க வேண்டும், உதவி ஆசிரியர் யூஸ்லெஸ். ஒரு பாத்திரத்தின் பெயர் பாதியில் மாறிவிடுகிறது, அதை புத்தகமாகப் போட்ட பிறகும் யாரும் கவனிக்கவில்லை) ஆகிய நாவல்/குறுநாவல்கள் இருக்கின்றன.

தவிர்க்க வேண்டியவை எல்லைகளின் விளிம்பில் (மேல்மட்ட ஊழல் அதிகாரியின் பெண்ணை மணக்கும் மத்தியதர வர்க்க பாலு, அவனுடைய புதுமைப்பெண் தங்கை மாலு) இன்றே நேசியுங்கள் (முதலாளியால் கொலை செய்யப்பட்ட யூனியன் லீடரின் மனைவிக்கு நூல் விடும் முதலாளியின் வாரிசு).

தவிர்க்க வேண்டிய இன்னொரு குறுநாவல் ஜனனம் அதைத் தனியாக குறிப்பிட காரணம் ஒன்றுதான். இது “யாரோ எழுதிய கவிதை” என்று சிவகுமார், ஜெயஸ்ரீ, ராஜேஷ் நடித்து ஸ்ரீதர் இயக்கத்தில் திரைப்படமாக வந்தது. என் போதாத காலம், நான் அதைப் பார்த்திருக்கிறேன். ஒரு காலத்தில் அம்னீஷியா என்பது பரவலாக பயன்படுத்தப்பட்ட ஒரு உத்தி. இந்த கதையிலும் அதுதான். விபத்து, ஒரு அழகான பெண் மட்டும் தப்பிக்கிறாள். அவளுக்கு அம்னீஷியா வந்து பேர் கூட மறந்து போக வேண்டுமே? போகிறது. வைத்தியம் பார்க்கும் டாக்டருக்கும் அவளுக்கும் காதல் வர வேண்டுமே! வருகிறது. அவளுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி இருக்க வேண்டுமே? ஆகி இருக்கிறது. அவளைத் தேடும் கணவனுக்கு அவளுக்கு காதல் ஏற்பட்ட பிறகுதான் அவள் இருக்கும் இடம் தெரிய வேண்டுமே? தெரிகிறது. அவளைத் தேடி வரும் கணவன் அவள் காதலைக் கண்டு விலகுவதோடு கதை முடிகிறது. புத்தகமே cliched என்னும்போது சினிமாவை மட்டும் குறை சொல்லி பயனில்லை. மலையாளத்தில் பத்மராஜன் இயக்கி இன்னிலே என்ற திரைப்படமாகவும் வந்தது.

தவிர்க்க வேண்டிய இன்னொரு குறுநாவல் வேர் பிடிக்கும் மண். நண்பன் இரண்டு பெண்களை மணந்து வாழ்வதைக் கண்டு ஏற்கனவே மணமான ரமேஷுக்கும் கொஞ்சம் நப்பாசை. கரெக்டாக அவன் வாழ்க்கையில் ஒரு பெண் குறுக்கிடுகிறாள். கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்று கதை போகிறது. இது பாலகுமாரனை குறி வைத்து எழுதப்பட்ட புத்தகம் என்று ஒரு கிசுகிசுவை எங்கோ படித்திருக்கிறேன். வம்பு பேசும் ஆசையில்தான் இதை தனியாகக் குறிப்பிட்டிருக்கிறேன்.

தேடல் என்று சிறுகதை நினைவிருக்கிறது. பல இன்னல்கள் கண்ட பத்தினி மனநிலை பிறழ்ந்துவிடும் என்று போகும். ஏன் நினைவிருக்கிறது என்றே தெரியவில்லை.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் எழுத்தாளர்கள், தமிழ்ப் பெண் எழுத்தாளர்கள்