எழுத்தாளர் ராஜாஜி

தலைவர் ராஜாஜியைப் பற்றி அனைவருக்கும் தெரியும். சுதந்திரப் போராட்டத்தின் முக்கியத் தலைவர். காந்தியின் சம்பந்தி. மகாபுத்திசாலி என்று பேர் வாங்கியவர். இந்தியாவின் கவர்னர் ஜெனரல், உள்துறை மந்திரி, சென்னை மாகாண முதல்வர் என்று பல பதவிகள் வகித்தவர். காந்தியின் அணுக்கர் என்றாலும் காந்திக்கு எதிரான அரசியல் நிலையை எடுக்கத் தயங்கியவரில்லை. அரசியல் எழுத்தும் பேச்சும் ஆகியவை அவரது வாழ்வில் நிறைய உண்டு என்பதை சொல்லவே தேவை இல்லை.

அவர் நிறைய எழுதியும் இருக்கிறார். தனக்கு தெரிந்தவற்றை தமிழில் கொண்டுவர வேண்டும் என்ற துடிப்பு – அதுவும் விடுதலைக்கு முன் நிறையவே – இருந்திருக்கிறது. விசாலமான படிப்பும் இருந்திருக்கிறது. இதிகாசங்கள் மற்றும் உபநிஷதங்களை தமிழில் கொண்டுவருதல், அறிவியல், தத்துவம் என்று பலவற்றையும் அறிமுகப்படுத்தி எழுதி இருக்கிறார். (அறிமுகக் கட்டுரைகள் பலவும் இன்று காலாவதி ஆகிவிட்டன.) பல வித விளக்கங்கள், புனைவுகள், மொழிபெயர்ப்புகள், பத்திரிகை நடத்துதல் என்று பலவும் முயற்சித்திருக்கிறார். கலைச்சொற்களை உருவாக்க பெரிதும் முயற்சித்திருக்கிறார்.

1922-இல் முதல் முறை சிறை சென்று மீண்ட பிறகு தன் முதல் புத்தகத்தை எழுதி இருக்கிறார் – சிறையில் தவம்.

கல்கி பத்திரிகை ஆரம்பித்தது அவருக்கு எழுத வசதியாக இருந்திருக்கும். அவரது பல புத்தகங்களும் கல்கியில் தொடராக வந்தவைதான். பல புத்தகங்கள் இன்னொரு சீடரான சின்ன அண்ணாமலை நடத்திய தமிழ்ப்பண்ணை பதிப்பகம் மூலம் வெளி வந்திருக்கின்றன.

வியாசர் விருந்து (மகாபாரதம்), சக்ரவர்த்தி திருமகன் (ராமாயணம்) இரண்டையுமே தமிழுக்கு அவரது முக்கியப் பங்களிப்பாகக் கருதுகிறேன். இவற்றை கட்டாயம் படிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறேன். இரண்டும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன, தலைவராக, முதல்வராக, அமைச்சராக அவரது பங்களிப்பு நாளை மறக்கப்படலாம். ஆனால் இந்தியாவுக்கு – ஏன் உலகத்துக்கே – அவரது மறக்க முடியாத கொடை இந்த இரண்டு புத்தகங்கள்தான். நான் என்ன, அவருமே அப்படித்தான் கருதி இருக்கிறார். அவரது வார்த்தைகளிலேயே:

நாட்டுக்கு நான் பல பணிகள் செய்ததாக நண்பர்கள் போற்றுவதுண்டு. அவற்றிலெல்லாம் வியாசர் விருந்தும் சக்ரவர்த்தி திருமகனும் எழுதி முடித்ததுதான் மேலான பணி என்பது என்னுடைய கருத்து.

இரண்டுமே கல்கி பத்திரிகையில் தொடராக வந்தன. பத்து பனிரண்டு வயதில் முதன்முதலாக வியாசர் விருந்தைப் படித்தது எனக்கு ஒரு பெரிய கண்திறப்பு. அதற்குப் பிறகு பல முறை மீண்டும் மீண்டும் படித்திருக்கிறேன். எளிமையான ஆரம்ப கட்ட அறிமுகங்கள்தான், ஆனாலும் என் கண்ணில் மிக முக்கியமானவை.

அவர் இவற்றை எழுதுவதற்கு முக்கியக் காரணம் ஈ.வெ.ரா.தான் என்று எனக்கு ஒரு நினைப்பு உண்டு. என்னதான் நட்பு, பந்தம் என்றாலும் ஈ.வெ.ரா.வின் நயமும் நாகரீகமும் இல்லாத shrill பேச்சு முறை அவருக்கு எரிச்சல் மூட்டி இருக்க வேண்டும். நீ தமிழர்களை ராமாயணத்தை எரிக்கச் சொல்கிறாயா, நான் அவர்களை ராமாயணத்தை படிக்க வைக்கிறேன் என்று அவர் மனதில் தோன்றி இருக்கும். தனக்கு பணம் வராவிட்டால் பரவாயில்லை, குறைந்த விலையில் இவை இரண்டும் பதிக்கப்பட வேண்டும் என்று வானதி பதிப்பகம் திருநாவுக்கரசிடம் சொன்னாராம். இருவரில் யார் வென்றது என்று சொல்ல வேண்டியதில்லை.

1958-இல் சக்ரவர்த்தி திருமகனுக்காக அவருக்கு சாஹித்ய அகடமி விருது தரப்பட்டது. அது ஒரு மோசமான முன்னுதாரணம். அவர் ராமாயணத்தை மறுவாசிப்போ அல்லது மறுபடைப்போ (transcreation) செய்யவில்லை. வால்மீகிக்கும் கம்பனுக்கும் போக வேண்டிய விருதை அவர் மறுத்திருக்க வேண்டும். ஆனால் அவரை பின்னாளில் சாஹித்ய அகடமி ஃபெல்லோவாகத் தேர்ந்தெடுத்தது என் கண்ணில் சரியே. என்ன, க.நா.சு.வும், தி.ஜா.வும் அவருக்கு முன்னால் சாஹித்ய அகடமி ஃபெல்லோக்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

தத்துவங்களை தமிழில் கொண்டு வர நிறைய முயற்சி செய்திருக்கிறார். உபநிஷதப் பலகணி, கண்ணன் காட்டிய வழி போன்றவை மிகச் சுருக்கமாக முறையே உபநிஷதங்களின், பகவத்கீதையின் சாரத்தை சொல்லும் முயற்சி. என் கண்ணில் வெற்றி பெறவில்லை. ஆனாலும் அவை எழுதப்பட்ட காலத்தில் முக்கியமானவையாக இருந்திருக்கும். சிறையில் கூட வகுப்புகள் நடத்துவாராம், அவற்றைத்தான் எழுத்து வடிவமாக்கி இருப்பார் என்று நினைக்கிறேன். என்ன, அச்சமில்லை, பஜகோவிந்தம், ராமகிருஷ்ண உபநிஷதம் (1950, கல்கி தொடர்) போன்றவை எனக்கான புத்தகங்கள் அல்ல.

ஸோக்ரதர் (சாக்ரடீஸ் வாதங்களின் மொழிபெயர்ப்பு) குறிப்பிட வேண்டிய இன்னொரு புத்தகம்.

அவர் அறிவியலை எளிமைப்படுத்தி எழுதிய புத்தகங்கள் இன்று காலாவதி ஆகிவிட்டனதான். ஆனால் திண்ணை ரசாயனம் (1946-இல் புத்தகம், அதற்கு முன் கல்கி தொடர்) போன்ற புத்தகங்களை எத்தனை பாராட்டினாலும் தகும். தமிழில் வேதியியலின் முக்கிய கருத்துக்களை – அணு vs மூலக்கூறு (molecule – அவர் பயன்படுத்தும் தமிழ் வார்த்தை “புணர்பொருள்”), கரிம vs கனிம வேதியியல் (organic, inorganic chemistry – organic chemistry-க்கு மிக அழகான தமிழ் வார்த்தையை உருவாக்கி இருக்கிறார் – யாக்கை ரசாயனம்!) – மிக அருமையாக, ஆங்கில, மணிப்பிரவாள, தமிழ் வார்த்தைகளை பயன்படுத்தி விளக்கி இருக்கிறார். அனலம் (ஆக்சிஜன்), வளிரம் (நைட்ரஜன்), நீரகம் (ஹைட்ரஜன்) என்று பல வார்த்தைகளை உருவாக்கி இருக்கிறார். யாக்கை ரசாயனம்/வேதியியலாவது வழக்கில் வந்திருக்கலாம். தாவரங்களின் இல்லறம் என்ற புத்தகத்தையும் குறிப்பிடலாம்.

அவரது அறிமுகக் கட்டுரைகள் பல இன்று காலாவதி ஆகிவிட்டன. ராஜாஜி கட்டுரைகள் என்ற தொகுப்பை இன்று தவிர்த்துவிடலாம்.

விமோசனம் என்ற பத்திரிகையை நடத்தி இருக்கிறார். கல்கி உதவி ஆசிரியராக இருந்தார் என்று நினைவு. மதுவிலக்கு பிரசாரத்துக்காகவே எழுதி இருக்கிறார். கல்கி மதுவிலக்கு பிரச்சாரத்துக்கு என்று அரைத்த மாவையே அரைக்க வேண்டி இருக்கிறதே என்று அலுத்துக் கொண்டாராம். பத்திரிகை பத்து மாதம் நடந்ததாம், அப்புறம் ராஜாஜி சிறை சென்றார் என்று நினைவு, கல்கி இதுதான் சான்ஸ் என்று பத்திரிகையை இழுத்து மூடிவிட்டாராம்.

பல சிறுகதைகளும் உண்டு. விடுதலைக்கு முன் நிறையவே எழுதி இருக்கிறார். மணிக்கொடியில் கூட அவரது சிறுகதைகள் வந்திருக்கின்றனவாம். நாவல் எதுவும் எழுதியதாக எனக்குத் தெரியவில்லை.

ஒரு புனவெழுத்தாளராக அவருடைய பலம் கதைகளில் தெரியும் நம்பகத்தன்மை. அவரைத்தான் யதார்த்தவாத எழுத்தின், ஷண்முகசுந்தரம் போன்றவர்களின் முன்னோடியாகக் கருத வேண்டும். ஆனால் கதைகளில் எப்போதும் ஒரு வாத்தியார் மனப்பான்மை தெரியும். நீதிபோதனை இல்லாமல் அவரால் எழுதவே முடியவில்லை. அனேகமாக ஒவ்வொரு கதையையும் நல்லுபதேசம் செய்வதற்காகவே எழுதி இருக்கிறார். பொதுவாக நயம் குறைவு. அதனால்தான் அவர் முன்னோடி எழுத்தாளர், முன்னணி எழுத்தாளர் இல்லை.

தேவானை, திக்கற்ற பார்வதி போன்ற கொஞ்சம் நீளமான சிறுகதைகளில் அவரது பலம் நன்றாகத் தெரிகிறது. எந்த விதமான மிகை உணர்ச்சியும் இல்லாமல் கள் ஒரு விவசாய/நெசவுக் குடும்பத்தை எப்படி அழிக்கிறது என்பதை எழுதி இருக்கிறார்.

தேவானையில் நெசவுத் தொழில் நசித்துப் போவதால் நகரத்துக்கு செல்லும் அண்ணன்; அவனைத் தொடரும் குடும்பம்; வேலையில் சேரும் தங்கை தேவானை. அங்கே மேஸ்திரி மூலம் குழந்தை. பிறகு பிச்சை எடுக்கும் நிலை. இந்தக் கதையை உயர்த்துவது தேவானை ஒரு காலத்தில் வீட்டு வேலை செய்த குடும்பத்தை சேர்ந்த ராமநாதையர் அவளை கண்டுகொண்டு அவள் எங்கே என்று மீண்டும் மீண்டும் பிச்சைக்காரர்கள் கூட்டத்தில் தேடும் சித்திரம்.

தி. பார்வதியின் முதல் வரி:

கறுப்பனை வேறே வைத்தார்கள்.

பதின்ம வயதில் வேறே வைத்தார்கள் என்றால் தனிக்குடித்தனம் என்று புரிந்து கொண்ட கணத்தில் இது அழகான சொற்பிரயோகம் என்று நினைத்தது நன்றாக நினைவிருக்கிறது.

குடியானவக் குடும்பத்து கறுப்பன் கள்ளிற்கு அடிமையாகி, கடன் வாங்கி, கடன் கொடுத்தவன் கறுப்பனின் மனைவி பார்வதி தொடர்பு வைத்துக் கொண்டு, கறுப்பன் அவனை வெட்ட, அவன் சிறை செல்ல, சோரம் போனவள் என்று குடும்பத்தார் ஒதுக்க, பார்வதி தற்கொலை செய்து கொள்கிறாள். இப்படி சுருக்கமாக எழுதினால் கதையின் பயங்கரம் விளங்கவே விளங்காது. முழுவதும் படிக்கத்தான் வேண்டும். அதிலும் வழக்கு காட்சிகள் மிக நன்றாக வந்திருக்கின்றன.

திக்கற்ற பார்வதியை ஜெயமோகன் சிறந்த வணிக நாவல்கள் பட்டியலில் சேர்க்கிறார். ராஜாஜியின் மறைவுக்குப் பின் (1974) ஸ்ரீகாந்த், லட்சுமி நடித்து சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் திரைப்படமாகவும் வந்தது.

அன்னையும் பிதாவும், முகுந்தன், ஜகதீச சாஸ்திரிகள் கனவு, அறியாக் குழந்தை ஆகிய சிறுகதைகள் தீண்டாமையின் கொடுமையைப் பற்றி. இவற்றில் அறியாக்குழந்தை 4 வயது சிறுவனுக்கு தீண்டாமை புரியவில்லை என்பதை அழகாகக் காட்டுகிறது. முகுந்தனும் நல்ல சிறுகதை. ஜாதி ஆசாரம் பார்த்த தன் தாயே பறையர் ஜாதியில் மீண்டும் மறுபிறவி எடுத்திருப்பதாக உணரும் முகுந்தன். அன்னையும் பிதாவும் சிறுகதையும் நன்றாக எழுதப்பட்டது. தான் “பறையன்” என்பதை மறைக்கும் அர்த்தநாரி. இவை எல்லாமே படிக்கக் கூடிய சிறுகதைகள்.

பட்டாசுக்கட்டு நல்ல முடிச்சு உள்ளது. திருடும்போது தன் மகனுக்காக பட்டாசையும் சேர்த்து திருடும் அப்பன்.

தீபாவளியின் தேவதரிசனம் சுமாரான கதைதான். ஆனால் ராமனும் கண்ணனும் யுதிஷ்டிரனும் கையால் நூற்ற கதர்தானே கட்டி இருப்பார்கள் என்று கேட்பது நயமாக இருந்தது.

மதுவிலக்கை முன்னிறுத்தும் சிறுகதைகள் யாருக்காக எழுதப்பட்டவை என்று எனக்கு ஒரு கேள்வி உண்டு. அதை தேவானையும் திக்கற்ற பார்வதியும் கறுப்பனும் படித்திருக்க மாட்டார்கள், மிஞ்சி மிஞ்சிப் போனால் ஜகதீச சாஸ்திரியும் முகுந்தனும் அர்த்தநாரியும் படித்திருக்கலாம். அவர்கள் படித்து என்ன பயன்?

புதுமைப்பித்தன் ரவா உப்புமா, போண்டா சாம்பார், ராஜாஜி சிறுகதைகள் ஆகியவற்ற தவிர்க்காவிட்டால் நோய்தான், பத்தியமாக இருக்க வேண்டும் என்று நக்கலடிப்பாராம். ஆனால் அவரே ராஜாஜியின் கதைகள் பிரச்சாரக் கதைகள்தான், இருந்தாலும் ராஜாஜி அவற்றை நயம்பட எழுதி இருக்கிறார் என்றும் சொன்னாராம்.

சபேசன் காப்பி அபூர்வமாக உபதேசம் இல்லாத ஒரு கதை. காப்பி நன்றாக விற்பதும், திடீரென்று மார்க்கெட் சரிவதும். வணிக எழுத்துதான், ஆனால் அழகாக இருக்கிறது. கூனி சுந்தரி “மரத்தை ம்றைத்தது மாமத யானை” என்ற வேதாந்தக் கருத்தை விவரிக்கிறது.

அவருடைய அரசியல் உரைகள் அவ்வப்போது தொகுக்கப்பட்டிருக்கின்றன. Indian Communists போன்றவை இன்று சுவாரசியமாக இல்லை.

குறை ஒன்றும் இல்லை அவரது பிரபலமான சாஹித்யம். அதைத் தவிர வேறு ஏதாவது சாஹித்யத்தை எழுதி இருக்கிறாரா தெரியவில்லை.

ராஜாஜி அசோகமித்ரனோ ஜெயமோகனோ இல்லைதான், ஆனாலும் அவரும் இலக்கியவாதியே. வியாசர் விருந்தும் சக்ரவர்த்தி திருமகனும் அவாது புனைவுகளை மங்கவைத்துவிட்டன, அவரது சிறுகதைகளைத் தொகுத்துப் போடலாம். (60 சிறுகதைகள் எழுதி இருக்கிறாராம்.)

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் எழுத்தாளர்கள், தமிழ் எழுத்தாளர்கள்

தொடர்புடைய சுட்டி: எழுத்தாளர் ராஜாஜி பற்றி விகடனில்