நம் அலமாரிகள்

எத்தனை பேர் இந்த கார்ட்டூன் உங்களையே சித்தரிப்பதாக உணர்கிறீர்கள்?

தொகுக்கப்பட்ட பக்கம்: காமிக்ஸ்

தொடர்புடைய சுட்டி: க்ராண்ட் ஸ்னைடர்

ஜெகசிற்பியன்: பத்தினிக் கோட்டம்

சிறு வ்யதில் ஜெகசிற்பியன் ஓரளவு பரிச்சயமான பெயர்தான். ஆனால் அதிகம் படித்ததில்லை. அவர் கல்கியில் எழுதும்போது நாங்கள் விகடன் வாங்கினோம், விகடனில் எழுதும்போது குமுதம் வாங்கினோம் என்று நினைக்கிறேன். 🙂

ஜெயமோகனின் நாவல் பட்டியலைப் பார்த்தபோது – பத்து வருஷத்துக்கு முன்னால் – சில புத்தகங்களைத் தேடிப் பிடித்துப் படித்தேன். திருச்சிற்றம்பலம், நாயகி நற்சோணை. இவை இரண்டும் காகித விரயமே. என்ன இவருக்கு காகிதம் இலவசமாகக் கிடைத்ததா, இத்தனை வளவளவளவளவளவளவளவளவென்று எழுதுகிறாரே என்றுதான் தோன்றியது. ஜெயமோகனின் பட்டியலில் உள்ள ஒவ்வொரு நாவலையும் படிக்க வேண்டும் என்று எனக்கு ஒரு நப்பாசை உண்டு. ஆனால் ஜெகசிற்பியன் என்றால் பயந்தேன்.

பல வருஷம் கழித்து கொஞ்சம் தைரியம் வந்து பத்தினிக் கோட்டம் நாவலைப் படிக்க ஆரம்பித்தேன். இதுவும் வளவளதான். நகுபோலியனின்மழநாட்டு மகுடம்” சிறுகதையை நினைவுபடுத்தும் பாணிதான். தற்செயல் நிகழ்ச்சிகள் நிறைந்ததுதான். ஆனால் திருச்சிற்றம்பலத்துக்கு பரவாயில்லை.

சாளுக்கிய அரசன் விக்ரமாதித்தன் பல்லவ அரசன் பரமேஸ்வரவர்மனைத் தோற்கடித்ததையும் பரமேஸ்வரவர்மன் மீண்டும் எழுந்து வந்ததையும் விவரிக்கிறது. இதில் வழக்கமான அரண்மனைச் சதிகள். அவ்வளவுதான் கதை. ஆயிரம் பக்கமாவது இருக்கும். கதையைக் காப்பாற்றுவது சம்பவங்களின் தொடர்ச்சி. ஏதாவது நடந்து கொண்டே இருக்கிறது. அது நடக்கக் கூடியதுதானா, அதிசயத் தற்செயல் நிகழ்ச்சியா என்பதெல்லாம் இரண்டாம் பட்சம்.

பத்தினிக் கோட்டம் ஜெயமோகனின் பட்டியலில் இரண்டாம் வரிசை வரலாற்று நாவல்களில் இடம் பெறுகிறது.

தமிழ் வணிக/வரலாற்று நாவல்கள் எப்படி பரிணமித்தன என்பதில் ஆர்வம் உள்ளவர்களுக்கு மட்டுமே பரிந்துரைப்பேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் வரலாற்று நாவல்கள்

இ.பா. இப்போது சாஹித்ய அகடமி ஃபெல்லோ

சாஹித்ய அகடமி ஃபெல்லோவாக இந்திரா பார்த்தசாரதி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

இ.பா.வுக்கு 91 வயது ஆகிவிட்டதாம். ஏதோ இப்போதாவது தேர்ந்தெடுத்தார்களே என்று சந்தோஷப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான்.

தமிழுக்காக இது வரை ஐந்தே பேர்தான் ஃபெல்லோவாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். ராஜாஜி (1969), தெ.பொ. மீனாட்சிசுந்தரம் (1975), ஜெயகாந்தன் (1996), கமில் சுவலபில் (1996), இப்போது இ.பா.

கி.ரா., அசோகமித்ரன், சுந்தர ராமசாமி, க.நா.சு., லா.ச.ரா., தி.ஜா. போன்றவர்களுக்கு இந்த கௌரவம் கொடுத்திருக்கப்பட வேண்டும். அது என்ன ஓரவஞ்சனையோ தெரியவில்லை. சரி, பூமணிக்காவது அடுத்த முறை கொடுத்துவிடுங்கப்பா!

தொகுக்கப்பட்ட பக்கம்: இ.பா. பக்கம், விருதுகள்

சிறுகதை பரிந்துரை: ம்ருகமோக்ஷம்

வல்லினம் இதழில் படித்த சிறுகதை.

படிக்கப் படிக்க இந்தக் கதை எங்கே போகிறது என ஆர்வத்தை பெருக வைத்து கதை. கொஞ்சம் புதிரான கதைதான். தத்துவ விசாரத்தில் எல்லாம் எனக்கு பெரிதாக ஆர்வமில்லைதான், ஆனால் பிடித்து நிறுத்தி படிக்க வைத்த கதை.

மிருகங்களின் மனதில் என்ன ஓடுகிறது? எங்கள் வீட்டு செல்லப் பிராணியான தோருக்கு இறந்த காலம் பற்றி ஏதாவது பிரக்ஞை உண்டா? அவன் எங்களை எல்லாம் சற்று பெரிய நாய்கள் என்றுதான் நினைக்கிறானா? படிக்கப் போயிருக்கும் என் பெண்கள் ஆறு மாதம் கழித்து திரும்பி வந்தால் அவர்களை நினைவிருக்குமா? ஆறு மாதம் அவர்கள் இல்லை என்பது தெரியுமா?

இறப்புக்கு அருகே சென்ற அனுபவங்கள் (Near Death Experience) பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். உடலுக்கு வெளியே இருப்பது, இருட்டு, வெளிச்சம், மீண்டும் உடலுக்குள் நுழைதல் என்று பல வித உணர்வுகளை அப்படி அனுபவப்பட்டவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்.

இந்த இரண்டு கருக்களையும் கலந்து ஒரு அருமையான கதையை உருவாக்கி இருக்கிறார். சில பல பிராணிகளுடன் ஏதோ உறவு கொண்ட மனிதன் (எஜமானன்) இறக்கும்போது எப்படியோ அவர்கள் மனதைத் தொட்டுவிடுகிறான், அவர்களின் உலகம் விரிவடைகிறது. திடீரென்று மனித மனம், அதன் விசாலம் பற்றி அவற்றுக்கு பிரக்ஞை ஏற்படுகிறது. அதற்குப் பின் நாயும் பன்றியும் குதிரையும் குரங்கும் பிராணியாகவும் இருக்க முடியவில்லை, மனிதனாகவும் இருக்க முடியவில்லை. இடைவிடாத தேடல். மோட்சம், பிரம்மம் எல்லாம் கோடி காட்டப்படுகின்றன.

அந்தத் தேடலை சித்தரிப்பதில்தான் இந்த சிறுகதை வெற்றி பெறுகிறது. எழுதிய விஜயகுமாருக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள்! கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் சிறுகதைகள்

அம்ரிதா ப்ரீதம்: பிஞ்சர்

அம்ரிதா ப்ரீதம் சாஹித்ய அகடமி, ஞானபீடம், பத்மவிபூஷன் விருது பெற்ற பஞ்சாபி எழுத்தாளர். பிஞ்சர் (1950) (எலும்புக்கூடு என்று அர்த்தமாம்) புகழ் பெற்ற நாவல். இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையை பின்புலமாக வைத்து எழுதப்பட்ட சிறந்த நாவல்களில் ஒன்று என்கிறார்கள்.

பிஞ்சர் எளிமையான, நேரடியான நாவல். எளிமையும், நேரடியாகக் கதை சொல்லுதலும் என் கண்ணில் குறைகள் அல்ல. மேலும் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை போன்ற மாபெரும் மனித சோகங்களை நேரடியாக, உண்மையாக விவரித்தாலே போதும், சிறப்பாக வரும். அந்த மாதிரி அசாதாரண வரலாற்றுத் தருணங்களை பின்புறமாக வைத்து எழுதும்போது, கொஞ்சம் திறமை இருந்தாலே போதும்; இத்தனை சாகசம் புரிய முடியுமா, இத்தனை குரூரமாக நடந்து கொள்வார்களா, இத்தனை கருணையா, நம்பகத்தன்மை குறைவாக இருக்கிறதே என்றெல்லாம் தோன்றப் போவதில்லை. அதுவும் பிரிவினை நடந்து மூன்று வருஷங்களுக்குள் எழுதப்பட்ட நாவல். யார் நினைவிலும் இந்த நிகழ்ச்சிகள் மரத்துப் போயிருக்காது, காயம் ஆறியே இருக்காது. அம்ரிதா கொஞ்சம் அல்ல, நிறையவே திறமை உடையவர்.

15-16 வயதுப் பெண் பூரோவுக்கு பக்கத்து கிராமத்து ராம்சந்துடன் திருமணம் நிச்சயம் ஆகியிருக்கிறது. பூரோவின் குடும்பத்தினருக்கும் ஷேக் குடும்பத்தினருக்கும் இரண்டு தலைமுறைப் பகை. ஷேக் குடும்பத்தினர் முஸ்லிம்கள். இளைஞன் ரஷீதாவை பூரோவை கடத்தி வருமாறு தூண்டுகிறார்கள். ரஷீதாவுக்கோ பூரோவை கண்டதும் காதல். கடத்திவிடுகிறான். சில நாட்களுக்குப் பின் பூரோ தப்பிக்கிறாள், ஆனால் அவள் குடும்பத்தினர் அவளை ஏற்க மறுக்கிறார்கள். வேறு வழி இல்லாமல் ரஷீதாவிடம் திரும்ப, ரஷீதா அவளை திருமணம் செய்து கொள்கிறான். வேறு கிராமத்துக்கு போய்விடுகிறார்கள். பூரோ இப்போது ஹமீதா. ஜாவேத் பிறக்கிறான். ரஷீதாவுக்கு அவள் மேல் உண்மையான அன்பு, ஆனால் ஹமீதாவின் மனம் ஊசலாடிக் கொண்டே இருக்கிறது. ஒரு முறை ராம்சந்தின் கிராமத்துக்கு சென்று அவனை சந்திக்கவும் சந்திக்கிறாள்.

ஆகஸ்ட் 15, 1947. பிரிவினை. கொலை, கற்பழிப்பு, கொள்ளை. ராம்சந்த் இந்தியாவுக்கு செல்ல காத்திருக்கும்போது பூரோ அவனை சந்திக்கிறாள். ராம்சந்த் தன் தங்கையையே மணந்து கொண்டதையும், ராம்சந்தின் தங்கை லாஜோ தன் தம்பியை மணந்ததையும் அறிகிறாள். லாஜோ ஒரு முஸ்லிம் குடும்பத்த்தால் கைப்பற்றப்பட்டிருக்கிறாள். ஹமீதா ரஷீதாவின் உதவியோடு லாஜோவை காப்பாற்றி தன் தம்பியோடு இணைத்து வைக்கிறாள். எங்களுடன் இந்தியாவுக்கு வந்துவிடு என்று தம்பி அழைக்கும்போது ஹமீதா நான் ரஷீதாவின் மனைவி என்று பாகிஸ்தானில் தங்கிவிடுகிறாள்.

கதையின் பலம் ஹிந்து-முஸ்லிம் உரசல் பின்புலம், பூரோவின் பாத்திரப் படைப்பு, புது சூழ்நிலையில் நட்புக்கு ஏங்கும் ரஷீதா, அனாதைக் குழந்தையை எடுத்து வளர்க்கும் கருணை, அது ஹிந்துக் குழந்தை, எங்களிடம் கொடுக்க வேண்டும் என்று அழிச்சாட்டியம் செய்யும் கிராமத்து பெரியவர்கள், ராம்சந்தின் காலடி மண்ணை நெற்றியில் பூரோ குங்குமமாக தடவிக் கொள்ளும் காட்சி, ரஷீதாவின் மாறாத அன்பின் சித்தரிப்பு. பலவீனம், அது பிரிவினையைப் பற்றி பேசியே ஆக வேண்டும் என்று அம்ரிதா நினைத்தது. பூரோவின் அகச்சிக்கல்களோடு நிறுத்தி இருந்தால் கதை வேறு தளத்திற்குப் போயிருக்கும். அதனால் எளிய கதை என்ற நிலையைத் தாண்டவில்லை. அம்ரிதாவை குறை சொல்லிப் பயனில்லை. பிரிவினையால் தான் அடைந்த மனப் பாதிப்புகளை பதிவு செய்ய வேண்டும் என்றுதான் எழுதவே ஆரம்பித்திருப்பார்.

2003-இல் ஊர்மிளா மதோண்ட்கர், மனோஜ் பாஜ்பாய் நடித்து திரைப்படமாகவும் வந்தது.

நான் படித்தது குஷ்வந்த் சிங்கின் ஆங்கில மொழிபெயர்ப்பில்.

படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: இந்தியப் புனைவுகள்

கடுப்பேற்றும் சாஹித்ய அகடமி விருது

வாழும் வள்ளுவம் (1987) 1988-இல் சாஹித்ய அகடமி விருது பெற்ற புத்தகம்.

நான் கி.வா.ஜ.வின் வீரர் உலகம் போன்றவற்றுக்கெல்லாம் விருதா என்று குறைப்பட்டுக் கொண்டேன். கள்ளிக்காட்டு இதிகாசத்துக்கு விருது கொடுத்தார்களே என்று மூக்கால் அழுதேன். இந்தப் புத்தகத்தை விருதுக்கு தேர்ந்தெடுத்தவர்களோடு ஒப்பிட்டால் அவற்றை தேர்ந்தெடுத்தவர்களை கோவில் கட்டி கும்பிடலாம். என்ன எழவுக்குடா இதற்கெல்லாம் விருது?

நான் குழந்தைசாமியை குறையே சொல்லமாட்டேன். அவர் நல்ல பொறியாளர், கல்வியாளர். அவருக்கு குறள் பிடித்திருக்கிறது. நாலு கட்டுரை எழுதினார். அவரது கருத்துகள் நேர்மையாகத்தான் இருக்கின்றன. உதாரணமாக குறளில் இல்லாதது எதுவுமில்லை என்பதெல்லாம் உயர்வு நவிற்சி என்பதைத் தெளிவாகச் சொல்கிறார். கற்பு, பெண் பற்றிய விழுமியங்கள் மாறிவிட்டன , தெய்வம் தொழாள் எல்லாவற்றையும் இன்று ஏற்பது கொஞ்சம் கஷ்டம் என்பதையும் தெளிவாகச் சொல்கிறார். ஆனால் புதிய கண்ணோட்டம் எதுவுமில்லை. விருதை மறுத்திருக்கலாம் என்று வேண்டுமானால் குறை சொல்லலாம், ஆனால் அவரும் மனிதர்தான், அதெல்லாம் கொஞ்சம் கஷ்டம்தான்.

தவறு எல்லாம் தேர்ந்தெடுத்தவர்கள் மேல்தான். அனேகமாக ஜால்ராக்கள் தேர்வுக்குழுவில் இருந்திருக்க வேண்டும், செல்வாக்குடையவர் என்று தெரிந்து அவருக்கு விருதைக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் ஜால்ரா அடிப்பதற்கும் ஒரு எல்லை வேண்டும். தேர்வுக்குழு உறுப்பினர்கள் யாரென்று தெரிந்தால் தயவு செய்து சொல்லுங்கள், ஆசை தீர நாலு வார்த்தை திட்டிக் கொள்கிறேன். அயோக்கியப் பசங்களா!

பொதுவாக இந்த மாதிரி இலக்கியத் திறனாய்வுக்கு விருதே கொடுக்கக் கூடாது. அதிலும் இத்தனை சாதாரணமான கட்டுரைகளுக்கு கொடுப்பதாக இருந்தால் அடுத்தபடி எனக்கும் சிலிகான்ஷெல்ஃபில் மாய்ந்து மாய்ந்து எழுதுவதற்கு சாஹித்ய அகடமி விருதைக் கொடுத்துவிடலாம்.

பயங்கரக் கடுப்பாக இருக்கிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: விருதுகள்

மனோன்மணீயம்

மேம்படுத்தப்பட்ட மீள்பதிவு, ஒரிஜினல் பதிவு இங்கே.

manonmaneeyam_sundaram_pillaiசுந்தரம் பிள்ளையைப் பற்றிய பதிவில் மனோன்மணீயம் (1891) நல்ல நாடகம் இல்லை, முன்னோடி நாடகம் மட்டுமே என்று குறிப்பிட்டிருந்தேன். ஏதோ ஒரு ஆர்வத்தால் நாடகத்தைப் படிக்க ஆரம்பித்தேன். நான் படித்ததெல்லாம் உரைநடை கதைச்சுருக்கமே, ஒரிஜினல் கவிதை இல்லை என்று தெரிந்தது. நல்ல நாடகம் இல்லை என்று சொன்னதை வாபஸ் வாங்கிக் கொள்கிறேன், என் எண்ணம் மாறிவிட்டது.

கவிதையின் கற்பூர வாசனை எனக்குத் தெரிவதில்லைதான். ஆனால் தமிழின் ஆசிரியப்பா மாதிரி சிறந்த சந்தம் உள்ள ஒரு வடிவம் அபூர்வம். அசை பற்றியெல்லாம் எனக்கு சரியாக நினைவில்லை. ‘தானனா தானா தானனா தானா’ என்ற ஆசிரியப்பா வடிவம் நேர்-நிரை, நேர்-நேர், நேர்-நிரை, நேர்-நேர் என்ற அமைப்பில் இருப்பது அற்புதமான சந்தம். இந்த சந்தத்திலேயே 100, 120 பக்கத்துக்கு எழுதி இருக்கிறார், அபாரம்! ஒரு முறையாவது வாய்விட்டுப் படித்துப் பார்க்க வேண்டும்.

புதுக்கவிதை வரவேற்கப்பட வேண்டிய ஒன்றுதான், ஆனால் இந்த சந்தத்தை, வெண்பாவின் வடிவ நேர்த்தியை புதுக்கவிதை மறக்கடித்துவிட்டதே என்ற வருத்தத்தை மனோன்மணீயம் ஏற்படுத்திவிட்டது. (எனக்கு கலிப்பா, வஞ்சிப்பா எல்லாம் பள்ளியில் படிக்கும்போதே ததிங்கிணத்தோம்.)

அருமையான சில வரிகள் கீழே.

ஓவியந்தொழில் வலோன் நீவியக் கிழியில்
தீட்டுவான் புகுந்த சித்திரம், நீட்டுந்
தூரியந்தொடத் தொடத் துலங்குதல் போல
சூரியன் பன்னிறக் கதிர்கள் தொடத்தொட
உருவு தோன்றாவணம் ஒன்றாய்ச் செறிந்து
கருகிருள் மயங்கிய காட்சி கழிந்து
சிறிது சிறிதாய் உறுப்புகள் தெளியத்
தோன்றுமித் தோற்றம் நன்றே!

ஸ்டீரியோடைப் பாத்திரங்கள்தான். கதையும் அவருடையதல்லதான். ஆனால் கச்சிதமாக ஒரு கதையை உருவாக்கி/எடுத்தாண்டு இருக்கிறார். வடிவ கச்சிதத்துக்காகவே படிக்கலாம், கவிதையாக எழுதி இருப்பது இதன் தரத்தை உயர்த்துகிறது. படித்துப் பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

நாடகத்தின் மூலம் லிட்டன் பிரபு எழுதிய Secret Way.

திரைப்படத்தையும் பரிந்துரைக்கிறேன். சுந்தரம் பிள்ளை பதிவிலிருந்து:

மனோன்மணீயம் மனோன்மணி என்ற பேரில் டி.ஆர். சுந்தரம் இயக்கத்தில் பி.யூ. சின்னப்பா, டி.ஆர். ராஜகுமாரி நடித்து திரைப்படமாகவும் வந்தது. முழுத் திரைப்படமும் யூட்யூபில் கிடைக்கிறது. கே.வி. மஹாதேவன் இசையமைத்த முதல் படம் இதுதானாம். சின்னப்பா நல்ல குண்டாக இருந்தாலும் முதலில் வரும் கத்திச் சண்டை பயிற்சிக் காட்சியில் நன்றாக நடித்திருப்பார். (கிட்டத்தட்ட ஐந்தாவது நிமிஷத்தில் வருகிறது) வசனமும் நன்றாக இருக்கும், பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.


தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் நாடகங்கள்

தொடர்புடைய சுட்டி: மனோன்மணீயம் மின்னூல்

Historical Curiosity: 10 சிறந்த இந்தியர்கள்

ராமச்சந்திர குஹா தளத்தில் பார்த்தது.

1926-இல் பத்து சிறந்த வாழும் இந்தியர்கள் யார் என்று ஒரு பத்திரிகை – Indian National Herald (நேரு நிறுவிய பத்திரிகை அல்ல) – ஒரு தேர்வு வைத்திருக்கிறது. வாசகர்களை அவர்கள் தேர்வுகளை அனுப்புமாறு கேட்டுக் கொண்டிருக்கிறது. பத்திரிகை பம்பாயிலிருந்து வெளிவந்த ஆங்கிலப் பத்திரிகை, பதில் அனுப்பிய வாசகர்கள் அனேகமாக பம்பாய்வாசிகள், ஆங்கிலம் தெரிந்தவர்கள். வருஷமோ 1926. நேருவும் படேலும் ராஜாஜியும் அம்பேத்கரும் இன்னும் பெருந்தலைகளாகவில்லை. சி.வி. ராமனுக்கு இன்னும் நோபல் கிடைக்கவில்லை. பேசும் படங்கள் வரவில்லை. திலகர், கோகலே, சி.ஆர். தாஸ் மறைந்துவிட்டார்கள். யார் யார் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்று நினைக்கிறீர்கள்?

அம்பை (left arrow) க்ளிக்கினால் பட்டியலைக் காணலாம்.

1926-இன் 10 சிறந்த வாழும் இந்தியர்கள்
பிரமுகர் பெற்ற ஓட்டுக்கள்
காந்தி 9308
தாகூர் 7391
ஜகதீச சந்திர போஸ் 5954
மோதிலால் நேரு 4035
அரவிந்த கோஷ் 3907
ப்ரஃபுல்ல சந்திர ராய் 3524
சரோஜினி நாயுடு 3519
மதன் மோஹன் மாளவியா 2618
லாலா லஜபதி ராய் 2568
வி.எஸ். ஸ்ரீனிவாச சாஸ்திரி 1516

பி.சி. ராய், சரோஜினி நாயுடு, மாளவியா, ஸ்ரீனிவாச சாஸ்திரி படித்த மேல்தட்டு வர்க்கத்தின் பிரக்ஞையில் இருந்தார்கள், இத்தனை பிரபலம் என்பது ஆச்சரியம்!

தொகுக்கப்பட்ட பக்கம்: வரலாறு

2021: நாட்டுடமை

தமிழக அரசு சிலம்பொலி சு. செல்லப்பன், தொ. பரமசிவன், இளங்குமரனார், முருகேச பாகவதர், சங்கர வள்ளிநாயகம் மற்றும் செ. ராசு ஆகியோரின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்படும் என்று அறிவித்திருக்கிறது.

ஒருவரின் எழுத்து நாட்டுடமை ஆக்கப்படுவது அவரை கௌரவப்படுத்துவது என்று எனக்கு ஒரு நினைப்பு உண்டு. தமிழின் செல்வங்கள் என்றே அறியக் கூடியவர்கள் (பாரதி தரத்தில்), தமிழறிஞர்கள் (வையாபுரிப் பிள்ளை தரத்தில்), முக்கியமான, இன்று மறக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ் எழுத்தாளர்கள் (க.நா.சு. தரத்தில்), ஒரு காலகட்டத்தில் முக்கியமாக இருந்து காலாவதி ஆகிவிட்ட தமிழ் எழுத்தாளர்கள் (மு.வ. தரத்தில்) ஆகியோரின் எழுத்துகள் நாட்டுடமை ஆக்கப்பட்டு அவர்களின் எழுத்துக்களை இணையத்தில் ஏற்றுவது சிறந்த செயல். இதை தமிழ் பல்கலைக்கழகமோ, அல்லது உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகமோ செய்தால் இன்னும் உத்தமம். ஆனால் அவையும் நடைமுறையில் அரசின் ஒரு பங்காகத்தான் இன்று இருக்கின்றன.

இந்த அறுவரில் தொ. பரமசிவன் ஒருவரை மட்டுமே முன்னரே படித்திருந்தேன். அவரது அழகர்கோவில் ஒரு tour de force. இன்னும் ஒரு முறை நிதானமாகப் படிக்க வேண்டும். அந்த ஒரு புத்தகத்துக்காகவே இந்த முடிவை மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன். அறியப்படாத தமிழகம் புத்தகத்தை படிக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன்.

சிலம்பொலி செல்லப்பனின் பேரைக் கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் படித்ததோ கேட்டதோ இல்லை. கல்வித்துறை, தமிழ்த்துறை அதிகாரியாக பணியாற்றி இருக்கிறார். தமிழ் இலக்கியத்தைப் பற்றி நிறைய எழுதி இருக்கிறார். நல்ல தேர்வாக இருக்கும் என்றுதான் தோன்றுகிறது.

இளங்குமரனார் திராவிட இயக்க சார்புடைய தமிழறிஞர் என்று தோன்றுகிறது. பல இலக்கிய விளக்கங்களை எழுதி இருக்கிறார். பள்ளி ஆசிரியராக பணி புரிந்திருக்கிறார்.

முருகேச பாகவதர் அடித்தள மக்களின் உணர்வுகளை கவிதையாக எழுதியவராம். Scheduled Caste Federation என்ற அமைப்பில் பணியாற்றியவராம். காந்தீயவாதியாம்.

செ. ராசு கல்வெட்டு ஆராய்ச்சியாளராம். கொங்கு நாட்டு வரலாறு பற்றி நிறைய எழுதி இருக்கிறார் என்று தெரிகிறது. அவரது பஞ்சக் கும்மிகள் மற்றும் கொங்கு நாட்டு மகளிர் புத்தகங்கள் பற்றி ஜெயமோகன் விரிவாக எழுதி இருக்கிறார். ராசுவைப் பற்றி மு. இளங்கோவன் நிறைய தகவல்கள் தருகிறார். விவரங்கள் தந்த ஸ்ரீனிவாச கோபாலனுக்கு நன்றி!

சங்கர வள்ளிநாயகம் கல்லூரி பேராசிரியராக பணியாற்றி இருக்கிறார். அதிகம் தெரியவில்லை. இவரது புகைப்படம் கிடைக்கவில்லை. இவரது ஒரு புத்தகம் – வ.உ.சி.யும் தமிழும் – இணையத்தில் கிடைக்கிறது. நடை கொஞ்சம் செயற்கையாக இருந்தாலும் விவரங்கள் உள்ள புத்தகம். (வலிந்து கிரந்த எழுத்துகளைத் தவிர்ப்பது பற்றி எனக்கு ஒவ்வாமை உண்டு.) இவர் கோவில்பட்டியைச் சேர்ந்தவர் என்றும், அங்கு 50 ஆண்டுகளுக்கு மேல் திருக்குறள் மன்றம் நடத்தியவர் என்றும், பிறமொழிச் சொற்களைக் கேட்டாலே கோபம் வரும் அளவுக்கும் தீவிரமான தனித்தமிழ்வாதி என்றும் ஸ்ரீனிவாச கோபாலன் தகவல் தருகிறார்.

யாருக்காவது இன்னும் விவரம் தெரிந்தால் எழுதுங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: நாட்டுடமை பக்கம்

கிரீஷ் கார்நாட்: நாகமண்டலா

கார்நாடின் நாடகங்களில் ஏதோ குறைகிற உணர்வு ஏற்படும். அப்படி எந்தக் குறையும் தெரியாத நாடகங்களில் ஒன்று நாகமண்டலா.

நாகமண்டலா நாட்டார் நாடகம் ஒன்றை, கூத்து ஒன்றை, பாசரின் நாடகம் ஒன்றைப் பார்க்கும் உணர்வை ஏற்படுத்துகிறது. நாட்டார் கதையை குறை இல்லாமல், மிகைப்படுத்துதல் இல்லாமல் சொல்கிறார். கார்நாட் செய்திருப்பதெல்லாம் நகாசு வேலைகள் மட்டுமே. அதனால்தான் இந்த நாடகம் சிறப்பாக வந்திருக்கிறது.

நாகமண்டலாவின் கதை பல காலமாக சொல்லப்படும் நாட்டார் கதைதான். மதனகாமராஜன் கதை ஒன்றில் கூட வருகிறது. கணவன் அப்பண்ணாவை தன் பக்கம் இழுப்பதற்காக தயாரிக்கப்பட்ட வசிய மருந்தை பயத்தினால் மனைவி ராணி பாம்புப்புற்றில் கொட்டி விடுகிறாள். ராஜநாகம் வசியமாகி விடுகிறது. இரவில் அப்பண்ணா போல் உருவம் எடுத்து வந்து ராணியுடன் கூடுகிறது. கர்ப்பம் ஆனது தெரிந்ததும் கணவன் நான் தொடாமலே எப்படி கர்ப்பம் என்று கத்துகிறான். மனைவி தான் உத்தமி என்கிறாள். தன் கற்பை நிரூபிக்க பாம்புப் புற்றில் கைவிட்டு சத்தியம் செய்கிறாள் – என்னவென்று? நான் தொட்டது இரண்டே ஆண்கள், ஒன்று என் கணவன், இன்னொன்று இந்த நாகம் என்று! நாகம் அவள் தலை மேல் படம் எடுக்கிறது, அவள் தோளில் மாலையாகிறது. ஊரார் தெய்வப்பிறவி என்று கொண்டாடுகிறார்கள். கணவன் மனைவி சேர்கிறார்கள். ஆனால் ராணியை மறக்க முடியாத நாகம் அவள் தலை முடியையே தூக்குக் கயிறாக பயன்படுத்தி இறந்துவிடுகிறது. இதற்குள் உண்மை தெரிந்த ராணி தன் மகனை ஈமச் சடங்குகள் செய்யச் சொல்கிறாள்.

ராணி செய்யும் சத்தியத்தில்தான் கதை கதையாகிறது. சிறப்பான denouement.

ஆரம்பக் காட்சியை கார்நாட் மிக நன்றாக எழுதி இருக்கிறார். ஊரிலிருக்கும் சுடர்கள் எல்லாம் இரவில் கோவிலில் கூடுவது நல்ல கற்பனை. எல்லாரையும் போரடித்து தூங்க வைக்கும் நாடக ஆசிரியர் ஒரு இரவு முழுவதும் தூங்காமல் இருக்க வேண்டிய நிர்ப்பந்தம், கதை மனதிலிருந்து தப்பி இளம் பெண் உருவத்தில் வருவது என்று நல்ல காட்சிகள்.

நாகமண்டலா கன்னடத்தில் பிரகாஷ் ராஜ் நடித்து அஷ்வத் இயக்கத்தில் திரைப்படமாக (1997) வந்தது. இங்கே பார்க்கலாம்.

நாகமண்டலா நல்ல நாடகம். படியுங்கள், பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: நாடகங்கள்