கி. ராஜநாராயணனுக்கு சாஹித்ய அகாடமி பரிசு கிடைத்தபோது

கி.ரா.வுக்கு எழுபது வயதில், 1991-இல் சாஹித்ய அகாடமி விருது கிடைத்தது. (அப்படி என்றால் இப்போது அவருக்கு கிட்டத்தட்ட தொண்ணூறு வயதா! சீக்கிரம் பத்மஸ்ரீ, பத்மபூஷன் ஏதாவது கொடுங்கப்பா!) அப்போது அவர் விகடனுக்கு அளித்த பேட்டி. நன்றி, விகடன்!

ரசிகமணி டி.கே.சி.யின் கடைசி காலத்து சீடரான கி.ரா.வின் முழுப் பெயர் ராயங்கலஸ்ரீ கிருஷ்ணராஜ நாராயணப் பெருமாள் ராமானுஜம். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு புதுவை பல்கலைக்கழகம் நாட்டுப் புறக்கதைகளைத் தொகுத்துக் கொடுக்கச் சொல்லி அழைக்க, அதற்காகப் புதுவை வந்தவர் அப்படியே தங்கிவிட்டார். 70 வயதிலும், தனது 60 வயது மனைவி கணவதி அம்மாளுடன் புதுவை நேரு வீதியில் கலகலப்பான மூடில் ஷாப்பிங் வருவார் கி.ரா.!

முந்தா நாள் (18.12.91) ராத்திரி ஏழரைக்கு டி.வி. தமிழ் நியூஸ்லே எனக்குச் சாகித்ய அகாடமி பரிசு கிடைச்சிருக்குன்னு சொன்னவுடனே, பெரிய குதூகலம் ஏதும் இல்லே. மாறா, அவ்ளோ தூரம் டெல்லிக்குப் போய் பரிசை வாங்கணுமேங்கிற மலைப்புதான் ஏற்பட்டுச்சு! ஏன்னா, பயணம்னாலே எனக்கு ஒரு பயம், தயக்கம், அலுப்பு, சலிப்பு!

இந்தப் பரிசு, விகடனில் நான் எழுதின கோபல்லபுரத்து மக்களுக்காகக் கிடைச்சதுலே எனக்குத் திருப்திதான் என்றாலும், 1976-லே சத்தியமூர்த்தியோட மகள் லட்சுமி கிருஷ்ணமூர்த்தி வெளியிட்ட என்னோட நாவலான கோபல்ல கிராமத்துக்கே இது கெடைச்சிருக்கணும்.

ஆனா, இப்போ கிடைச்சதிலே ஒரு சந்தோஷம் என்னன்னா, அப்போ சாகித்ய அகாடமி பரிசுத் தொகை 5,000 ரூபாய்; இப்போ 25,000 ரூபாய்ங்கறதுதான்!

ஆந்திராவிலிருந்து இருநூறு வருஷங்களுக்கு முன்னாலே எங்களோட கரிசல் பாலைவனத்துலே தங்கி, அதை ஊராக்கிய கம்மா நாயுடு பரம்பரையினரைப் பத்தின இந்த நாவல்ல, அந்த மக்களின் பிரச்னைகள், வாழ்க்கை முறைகளைச் சொன்னாலும், எனக்கும் முந்தி இப்படிக் கரிசல் சொன்னவர் எழுத்தாளர் கு.அழகிரிசாமிதான்.

அழகிரிசாமி கரிசல் இலக்கியம் தொடங்கினார். ‘இதோ, இதுதான் கரிசல் இலக்கியம்’ என அதற்கு ஒரு முழுமை கொடுத்தவன் நான். மேலும், அழகிரிசாமி கரிசல் மட்டும் சொல்லாமல், எல்லாவற்றையும் எழுதினார். ஆனால், நானோ அதை மட்டுமே சொன்னேன்; சொல்கிறேன்; சொல்வேன்!

கணையாழி காலம்கிற மாதிரி அப்போ சரஸ்வதி (இதழ்) காலம். விஜயபாஸ்கரன் அதோட ஆசிரியர். ஜெயகாந்தன், சுந்தர ராமசாமியெல்லாம் அதிலேயிருந்துதான் பொறந் தாங்க. நானும் அப்போ கம்யூனிஸ்ட்டா? அதால, ஜெயகாந்தன் மூலமா ‘சரஸ்வதி’க்கு நான் அறிமுகம் ஆனேன். அதுலே எழுதத் தொடங்கினேன். நானும் அங்கேதான் பொறந்தேன். முன்னே, 1971-ல் தமிழக அரசின் ஆயிரம் ரூபாய் பரிசு எனக்குக் கிடைச்சுது. அதற்கு அப்புறமும் தமிழக அரசோட மற்ற பரிசுகளும் கிடைச்சிருக்கு.

ஆனா, இப்போ – அப்போன்னு எப்பவுமே, எந்தக் காலத்திலுமே எனக்கு இலக்கிய தாகம், லட்சியம் என்கிறதெல்லாம் கொஞ்சமும் கிடை யாது. பார்க்கிறேன்; கேட்கிறேன்; சிந்திக்கிறேன்; எழுதறேன். அவ்ளோதான்! அப்படி என் மக்களைப் பற்றி எழுத ஆசைப்பட்டேன்; எழுதுகிறேன். அவை பிரசுரமாகின்றன. அவ்ளோதான்! இதற்குப் பணமும் கிடைக்கிறதே, அப்புறம் என்ன!

– மகிழ்ச்சியாய்க் கூறிய ராஜநாராயணன், தொடர்ந்தார்…

பணத்துக்காகச் சும்மாவேனும் எழுதிக் குவிப்பது, கொட்டுவதிலெல்லாம் எனக்கு உடன்பாடில்லை. நிதானமா எழுதணும்; அதனால அது சிறப்பா இருக்கணும்னு விரும்பறேன்.

முதல்ல நிறைய நாட்டுப்புறக் கதைகளைத் திரட்டி, சேகரிச்சுப் பின்னால எழுதப்போறேன். அதுலயே இனிமே முழுசா கவனம் பண்ணணும்னு நெனச்சிட்டிருக்கேன். இந்த நிதானத்துக்குக் காரணம் சின்ன வயசிலிருந்தே எனக்கு இசையிலே ஏராள ஈடுபாடு; அதுதான் பாட்டு கத்துக்கிட்டேன்; தொண்டையிலே கட்டி வந்து நின்னுபோச்சு. பின்னாலே வயலின் கத்துக்கப் போனேன்; அதுவும் ரொம்ப நாள் நீடிக்கலை!

சின்ன வயசிலே இடைசெவலில் என் வீட்டுக்கு எதிர் வீட்டில்தான் காருகுறிச்சி அருணாசலம் மாப்பிளெ ஆனார். அவர் நாதஸ்வர வித்வான் என்கிறதைவிட, ரொம்பவும் சிறந்த பாடகர். மாமனார் வீட்டுக்கு வந்து அங்கே சட்டையைக் கழற்றிப் போட்டுவிட்டு நேரே எங்க வீட்டுக்கு வந்து உட்கார்ந்து பாட ஆரம்பித்து விடுவார். நான் அவரோட பாட்டின் பரம ரசிகன்.

எனக்குள் ஒரு வேடிக்கை உண்டு. ஒரு தச்சு ஆசாரி அழகா நாற்காலி செஞ்சா, அதைச் செய்யணும்னு எனக்கும் தோணும். சவத்துக்கு அடிக்கிற மோளத்திலே லயிச்சு, அப்படி வாசிக்க நினைப்பேன். எட்டாவது வரை ஸ்கூலுக்குப் போனேன்; ஆனா படிக்கல; ஸ்கூல்ல எதுவுமே படிக்கல. நான் படிச்சதெல்லாம் வெளியிலே இந்தப் பரந்த உலகத்திலேதான். எல்லாத்துக்கும் ஆசைப்பட்டேன்; எல்லாத்திலேயும் லயிச்சேன்; கடைசியிலே எதுவுமே நிக்கலே. அதான் எழுத ஆரம்பிச்சுட்டேன்!

என்று குற்றால அருவி போலக் கலகலவென பொழிகிறார் கி.ரா.

இரா. முருகன் சிபாரிசுகள்

இரா. முருகன் பிரபல தமிழ் எழுத்தாளர். அவரைப் பற்றி கேள்விப்படாதவர்களுக்கும் அவர் கமலின் “உன்னைப் போல் ஒருவன்” படத்துக்கு வசனம் எழுதினார் என்று தெரிந்திருக்கலாம். அவர் தனக்குப் பிடித்த 81 படைப்புகள் என்று ஒரு லிஸ்ட் போட்டிருக்கிறார். (பாஸ்டன் பாலாவுக்கு நன்றி!) அந்த லிஸ்டில் எல்லாவற்றையும் நான் படித்ததில்லை – படித்தவை பற்றி ட்விட்டர் ஸ்டைலில் சிறு குறிப்புகள்.

லிஸ்டின் வரிசையை நான் கன்னாபின்னாவென்று மாற்றி நாலு சின்ன லிஸ்ட்களாக போட்டிருக்கிறேன். இந்த சிபாரிசுகளைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், படித்தவை, படிக்காதவை பற்றி எழுதுங்களேன்!

நாங்கள் பதிவு எழுதி இருப்பவை:

 1. சுந்தர ராமசாமியின் ‘ஒரு புளிய மரத்தின் கதை’ – தமிழின் முக்கிய நாவல்களில் ஒன்று. பக்சின் பதிவு இங்கே.
 2. க.நா.சுவின் ‘பொய்த்தேவு’ – எனக்கு மிகவும் பிடித்த நாவல்களில் ஒன்று. இதைப் பற்றிய பதிவு இங்கே.
 3. ஜெயகாந்தனின் ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’ – அற்புதமான புத்தகம்! பதிவு இங்கே.
 4. இந்திரா பார்த்தசாரதியின் ‘குருதிப்புனல்’ – பதிவை இங்கே காணலாம்.
 5. லா.ச.ராவின் ‘அபிதா’ – பதிவு இங்கே.
 6. அண்ணாவின் ‘ஓர் இரவு’ – நான் படித்ததில்லை. ஆனால் திரைப்படமாக பார்த்திருக்கிறேன். திரைப்பட விமர்சனம் இங்கே. இந்த நாடகத்தைப் பற்றி கல்கி சொன்னது இங்கே.
 7. சுஜாதாவின் ‘ஊஞ்சல்’ – நல்ல நாடகம். பதிவு இங்கே.
 8. ஜானகிராமனின் ‘நடந்தாய் வாழி காவேரி’ – சாரதாவின் பதிவை இங்கே காணலாம்.

ஆர்வி படித்திருப்பவை:

 1. கு.ப.ராவின் ‘விடியுமா’ – இந்த சிறுகதையை புரிந்து கொள்ள நான் கஷ்டப்பட்டேன். இப்போதும் புரிந்துவிட்டது என்று நிச்சயமாக சொல்வதற்கில்லை. அத்திம்பேர் இருக்காரா போய்ட்டாரா? போய்ட்டார் என்றுதான் நினைக்கிறேன். 🙂 என் லிஸ்டில் வராது. இங்கே படிக்கலாம்.
 2. புதுமைப்பித்தனின் ‘கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்’ – அருமையான சிறுகதை. என் anthology-இல் நிச்சயமாக இடம் பெறும்.
 3. கு. அழகிரிசாமியின் ‘ராஜா வந்திருக்கிறார்’ – நெகிழ்ச்சியான சிறுகதை. இங்கே படிக்கலாம்.
 4. கிருஷ்ணன் நம்பியின் ‘மருமகள் வாக்கு’ – கிருஷ்ணன் நம்பியின் உன்னதமான சிறுகதை. இங்கே படிக்கலாம். என் anthology-இல் நிச்சயமாக இடம் பெறும்.
 5. வண்ணநிலவனின் ‘எஸ்தர்’ – அருமையான சிறுகதை, இங்கே படிக்கலாம். என் anthology-இல் நிச்சயமாக இடம் பெறும்.
 6. வண்ணதாசனின் ‘தனுமை’ – நல்ல சிறுகதை, ஆனால் என் anthology-இல் வராது. இங்கே படிக்கலாம்.
 7. திலீப் குமாரின் ‘மூங்கில் குருத்து’ – நல்ல சிறுகதை, ஆனால் என் anthology-இல் வராது.
 8. காஞ்சனா தாமோதரனின் ‘வரம்’ – முன்பு எப்போதோ படித்தது, பெரிதாக என்னைக் கவரவில்லை.
 9. ஜி. நாகராஜனின் ‘நாளை மற்றுமொரு நாளே’ – ஜி. நாகராஜனின் பிரமாதமான குறுநாவல்.
 10. கி. ராஜநாராயணனின் ‘கோபல்ல கிராமம்’ – கி.ரா.வின் அற்புதமான நாவல்.
 11. தி. ஜானகிராமனின் ‘மோகமுள்’ – தமிழின் முக்கிய நாவல்களில் ஒன்று. இதைப் பற்றி பக்ஸ் எழுதுவான் எழுதுவான் என்று பார்க்கிறேன், இன்னும் அவனுக்கு கை வரவில்லை.
 12. கல்கியின் ‘தியாகபூமி’ – மெலோட்ராமா நிறைந்த சினிமாத்தனமான நாவல். சினிமாவின் திரைக்கதைதானே!
 13. தோப்பில் முகம்மது மீரானின் ‘ஒரு கடலோரக் கிராமத்தின் கதை’ – படிக்கலாம். ஆனால் சூப்பர் டூப்பர் என்றெல்லாம் சொல்வதற்கில்லை.
 14. அசோகமித்திரனின் ‘பதினெட்டாவது அட்சக் கோடு’ – என்னைப் பெரிதாக கவரவில்லை.
 15. பெருமாள் முருகனின் ‘நிழல் முற்றம்’ – அருமையான புத்தகம்.
 16. ஜெயமோகனின் ‘ரப்பர்’ – நல்ல நாவல், ஆனால் முழுமையான வெற்றி அடையவில்லை என்றுதான் சொல்வேன்.
 17. கோமல் சாமிநாதனின் ‘தண்ணீர் தண்ணீர்’ – நாடகமும் அருமை, சினிமாவும் அருமை.

படிக்காதவை, கேள்விப்படாதவை, இந்த புனைவுகளில் பலவும் என் படிக்க வேண்டிய லிஸ்டில் இருக்கின்றன.

 1. விந்தனின் ’பாலும் பாவையும்’
 2. பா. ஜெயப்பிரகாசத்தின் ‘இன்னொரு ஜெருசலேம்’
 3. நீல. பத்மனாபனின் ‘பள்ளி கொண்டபுரம்’
 4. மாதவனின் ‘சாலைக்கடைத் தெருக் கதைகள்’
 5. பொன்னீலனின் ‘உறவுகள்’
 6. கு. சின்னப்பபாரதியின் ‘தாகம்’
 7. சோ. தர்மனின் ‘நசுக்கம்’
 8. இமயத்தின் ‘கோவேறு கழுதைகள்’
 9. பா. செல்வராஜின் ‘தேனீர்’
 10. பாமாவின் ‘கருக்கு’
 11. ராஜம் கிருஷ்ணனின் ‘அமுதமாகி வருக’
 12. கிருத்திகாவின் ‘வாசவேஸ்வரம்’
 13. அம்பையின் ‘சிறகுகள் முறியும்’
 14. பிரபஞ்சனின் ‘வானம் வசப்படும்’
 15. சே. யோகநாதனின் ‘மீண்டும் வந்த சோளகம்’
 16. பெ. கருணாகரமூர்த்தியின் ‘அகதி உருவாகும் நேரம்’
 17. நகுலனின் ‘நிழல்கள்’
 18. மா. அரங்கநாதனின் ‘காடன் மலை’
 19. பாவண்ணனின் ‘பாய்மரக் கப்பல்’
 20. எம்.வி. வெங்கட்ராமின் ‘காதுகள்’
 21. தஞ்சை பிரகாஷின் ‘கள்ளம்’
 22. குமார செல்வாவின் ‘உக்கிலு’
 23. நரசய்யாவின் ‘கடலோடி’
 24. தமிழவனின் ‘ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள்’
 25. சி.சு. செல்லப்பாவின் ‘சுதந்திர தாகம்’
 26. நாகூர் ரூமியின் ‘குட்டி யாப்பா
 27. சாரு நிவேதிதாவின் ‘எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் பேன்ஸி பனியனும்’
 28. பா.விசாலத்தின் ‘மெல்லக் கனவாய்ப் பழங்கதையாய்’
 29. பாவை சந்திரனின் ‘நல்ல நிலம்’
 30. ஜெயந்தனின் ‘நினைக்கப்படும்’
 31. எஸ்.பொவின் ‘நனவிடைத் தோய்தல்’
 32. வல்லிக்கண்ணனின் ‘புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்’
 33. ந. பிச்சமூர்த்தியின் ‘காட்டு வாத்து’
 34. சுதேசமித்திரனின் ‘அப்பா’
 35. யுகபாரதியின் ‘மனப்பத்தாயம்’
 36. அ. சீனிவாசராகவனின் (’நாணல்’) ‘வெள்ளைப் பறவை’
 37. சுகுமாரனின் ‘பயணத்தின் சங்கீதம்’
 38. அபியின் ‘மவுனத்தின் நாவுகள்’
 39. பழமலயின் ‘சனங்களின் கதை’
 40. கலாநதி கைலாசபதியின் ‘ஒப்பியல் இலக்கியம்’
 41. எஸ். ராமகிருஷ்ணனின் ‘கற்பின் கனலி’
 42. ஆர்.கே. கண்ணனின் ‘புதுயுகம் காட்டிய பாரதி’
 43. கீல் கண்ணனின் சிறுகதைத் தொகுப்பு
 44. சிட்டி

கீழே இருப்பவை எல்லாம் கவிதைகள் என்று நினைக்கிறேன், பொதுவாக எனக்கு கவிதை அலர்ஜி உண்டு என்பதால் படிக்க வாய்ப்பு குறைவு. ஆனால் லிஸ்டில் உள்ள பலரும் புகழ் பெற்ற கவிஞர்கள், பொதுவாக புதுக்கவிதை எழுதுபவர்கள்.

 1. ஞானக்கூத்தனின் ‘அன்று வேறு கிழமை’ – கவிதை அலர்ஜி இருந்தாலும் இவரது இரண்டு கவிதைகளை ரசித்தேன். அந்தக் கவிதைகள் இங்கே.
 2. சி. மணியின் ‘வரும், போகும்’
 3. கலாப்ரியாவின் ‘எட்டயபுரம்’
 4. மனுஷ்யபுத்திரனின் ‘என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள்’
 5. மீராவின் ‘ஊசிகள்’
 6. சோ. வைத்தீசுவரனின் ‘நகரத்துச் சுவர்கள்’
 7. பிரம்மராஜனின் ‘கடல் பற்றிய கவிதைகள்’
 8. மஹாகவியின் ‘குறும்பா’
 9. மு. மேத்தாவின் ‘கண்ணீர்ப் பூக்கள்’
 10. காமராசனின் ‘கறுப்பு மலர்கள்’
 11. அப்துல் ரகுமானின் ‘பால்வீதி’
 12. கல்யாண்ஜியின் ‘புலரி’
தொகுக்கப்பட்ட பக்கம்: லிஸ்ட்கள்
தொடர்புடைய சுட்டி: இரா. முருகனின் தளம்

சுஜாதாவின் “நிறமற்ற வானவில்” நாவல்

தனியாக பதிவு போடும் அளவுக்கு குறிப்பிட வேண்டிய புத்தகம் இல்லைதான். ஆனால் கூட்டாஞ்சோறு தளத்தில் ஏற்கனவே இதைப் பற்றி ஒரு பதிவு போட்டிருப்பதால் இதைப் பற்றி இங்கே தனியாக எழுதுகிறேன்.

விகடனில் தொடர்கதையாக வந்தது. ஒவ்வொரு வாரமும் ஒரு அதிர்ச்சியோடு முடிக்க வேண்டும் என்று முயன்றது தெரிகிறது. சிம்பிளான கதை. கிருஷ்ணமூர்த்தியின் மனைவியும் மூன்று வயது மகளும் விபத்தில் இறந்துவிடுகிறார்கள். எப்படி எதிர்கொள்வது? பித்துப் பிடித்து அலையும் கிருஷ்ணமூர்த்தியின் மனம் இளம் விதவை சுப்ரியாயை சந்திக்கும்போது கொஞ்சம் வாழ்க்கைக்கு மீள்கிறான். சுப்ரியாயை தற்செயலாக சந்தித்தது எல்லாம் தற்செயல் இல்லை, தன் பாஸ் மணவாளன் செட்டப் என்று அறியும்போது வாழ்க்கை இன்னும் வெறுத்துவிடுகிறது. அழுக்கும் பிசுக்குமாக இருக்கும் ஒரு அநாதை சிறு பெண்ணை சந்தித்து அவளை தன் பெண்ணாக வளர்க்க முடிவு செய்கிறான், அப்போதுதான் அவனால் மீண்டும் வாழ முடிகிறது.

கிருஷ்ணமூர்த்தியின் துக்கம் நன்றாக வந்திருக்கிறது. மூர்த்தியை மயக்க முயற்சிக்கும் சுப்ரியா, பாஸ் மணவாளன் கொஞ்சம் செயற்கையாகத்தான் இருக்கிறது. முடிவும் அப்படித்தான், ஆனால் uplifting!

பதின்ம வயதில் கிருஷ்ணமூர்த்தியின் மனைவி கல்யாணி (படுக்கையில்) பேசும் ஒரு வசனம் – இதையெல்லாம் மோந்து பாப்பாளா? – படித்து அதிர்ந்தது நினைவிருக்கிறது.

சில இடங்கள் நன்றாக இருந்தாலும், நினைவு வைத்துக்கொள்ள வேண்டிய நாவல் இல்லை.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் நாவல்கள், சுஜாதா

தொடர்புடைய பதிவுகள்:

 • நிறமற்ற வானவில் – உப்பிலி ஸ்ரீனிவாசின் பதிவு
 • சுஜாதாவின் குறுநாவல் – “வைரங்கள்”
 • சுஜாதாவின் “ஊஞ்சல்” நாடகம்
 • சுஜாதாவின் “மத்யமர்”
 • சுஜாதாவின் “வசந்த காலக் குற்றங்கள்”
 • சுஜாதாவின் “கொலை அரங்கம்”
 • சுஜாதாவின் “அப்பா அன்புள்ள அப்பா”
 • சுஜாதாவின் “பத்து செகண்ட் முத்தம்”
 • சுஜாதாவின் “காந்தளூர் வசந்தகுமாரன் கதை”
 • சுஜாதாவின் குறுநாவல் – “வைரங்கள்”

  கச்சிதமான கதை.

  எங்கோ ஒரு மலையடிவாரத்தில் வைரங்கள் இருக்கின்றன. தற்செயலாக தெரிந்து கொள்ளும் ஒரு பணக்கார சேட்டுப் பையன் நிலத்தை அபகரிக்க முயற்சி செய்கிறான். இதில் ஒரு கிளீனர் சிறுவன், ஒரு ஊமைச் சிறுமி என்று பாத்திரங்கள்.

  கிளீனராக வரும் சிறுவன் கலக்கலான பாத்திரப் படைப்பு. சுஜாதாவுக்கு எப்போதும் இந்த மாதிரி உழைக்கும் வர்க்க சிறுவர்களை படைப்பது பைன் ஹாத் கா கேல். அவர்கள் மேல் அழுத்தும் வறுமையும், அதே நேரத்தில் அந்த வயதுக்கே உரிய ததும்பி நிற்கும் உற்சாகமும் நன்றாக சித்தரிப்பார். அவன் ஊமைச்சிறுமியுடன் விளையாடுவதும், அக்காவை காப்பாற்றுவதும் எல்லாமே நன்றாக வந்திருக்கும். சேட்டு பையனின் பணத்திமிர், ஜியாலஜி ஃப்ரொஃபசரின் ஜம்பம், டீக்கடைக்காரனின் தோற்கப்போகும் தன்னம்பிக்கை என்று ஒரு கை தேர்ந்த ஓவியனின் லாகவத்தோடு ஓரிரண்டு வரிகளில் ஒரு நல்ல சித்திரத்தை நமக்கு காட்டுகிறார்.

  சுஜாதாவின் பலங்களில் ஒன்று அவர் உபதேசங்களை கவனமாகத் தவிர்ப்பது. இதெல்லாம் ஒரு பலமா, எந்த நல்ல எழுத்தாளனும் உபதேசம் செய்வதில்லையே, அசோகமித்திரன் உபதேசம் செய்வாரா என்ன என்று உங்களுக்கு தோன்றினால் நீங்கள் நா.பா., அகிலன் மாதிரி எழுத்தாளர்களைப் படித்ததில்லை என்று பொருள். அப்படி கதைகளை வாரப் பத்திரிகைகளில் படித்து வளர்ந்த ஒரு கூட்டத்துக்கு சுஜாதா ஒரு revelation என்றுதான் சொல்ல வேண்டும். அவர் ஒரு சமூக அவலத்தை, அறச்சீற்றம் உருவாக்கும் ஒரு நிகழ்ச்சியை, வெகு கவனமாக ஃபோட்டோ பிடிப்பது போல எடுத்துக் காட்டுவார். அறச்சீற்றம் என்பது அவர் எழுத்தில் இருக்கவே இருக்காது. இந்தப் புத்தகமும் அப்படித்தான். நகரம், ஒரு லட்சம் புத்தகங்கள், ஜன்னல் மலர், குருபிரசாதின் கடைசி தினம், ஒரு மெக்கானிக் செட்டில் இரு சிறுவர்கள் ஒரு நடிகையின் மகளுக்கு நண்பர்களாவது (கதை பேர் நினைவு வரவில்லை) என்று பல புனைவுகளை சொல்லலாம்.

  சுஜாதாவின் சிறந்த புனைவுகளில் ஒன்று. படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.

  தொகுக்கப்பட்ட பக்கம்: சுஜாதா, தமிழ் நாவல்கள்

  தொடர்புடைய சுட்டிகள்:

 • சுஜாதாவின் “ஊஞ்சல்” நாடகம்
 • சுஜாதாவின் “மத்யமர்”
 • சுஜாதாவின் “வசந்த காலக் குற்றங்கள்”
 • சுஜாதாவின் “கொலை அரங்கம்”
 • சுஜாதாவின் “அப்பா அன்புள்ள அப்பா”
 • சுஜாதாவின் “பத்து செகண்ட் முத்தம்”
 • சுஜாதாவின் “காந்தளூர் வசந்தகுமாரன் கதை”
 • பரிதிமாற்கலைஞரின் மதிவாணன்

  இது ஒரு மீள்பதிவு.

  புத்தகம் தமிழ் virtual பல்கலைக்கழக மின் நூலகத்தில் கிடைக்கிறது. நூறு பக்கங்கள் இருக்கலாம். சின்ன புத்தகம்தான். மாத நாவல் சைஸ்தான் இருக்கும். அந்த காலத்து புஸ்தகம் ஆயிற்றே என்று படித்துப் பார்த்தேன்.

  தாவு தீர்ந்துவிட்டது. பரிதிமாற்கலைஞர் பயன்படுத்துவது பண்டிதத் தமிழ். அதை புரிந்து கொள்ளவே கோனார் நோட்ஸ் வேண்டி இருக்கிறது. ஒரு முப்பது பக்கம் தாண்டிய பிறகுதான் ஒரு மாதிரி குன்சாக புரிகிறது. கதையில் சுவாரசியம் என்பது இல்லவே இல்லை.

  இந்த கால கட்டத்தில்தான் பாரதியார் எழுதி இருக்க வேண்டும். அட பாரதியை விடுங்கள், காலத்தால் இவருக்கு முந்தைய வேதநாயகம் பிள்ளை கூட இதை விட சுலபமான தமிழில் இதை விட சுவாரசியமாக எழுதி இருக்கிறார். இத்தனைக்கும் பரிதிமால் கலைஞர் தமிழ் அறிஞர், முன்னோடி என்று புகழப்படுபவர். ஏன் இப்படி படுத்துகிறார்? பாரதிக்கு தமிழ் உலகம் பெரும் கடமைப்பட்டிருக்கிறது – இந்த மாதிரி பண்டிதத் தமிழிலிருந்து வெளியே வந்ததற்கு. (பாரதிக்கு பிற்பட்ட வடுவூராரின் தமிழ் கூட கொஞ்சம் படுத்தல்தான்.)

  பரிதிமாற்கலைஞர் பற்றி தமிழ் விக்கிபீடியா

  ஜெயகாந்தனின் சினிமா பங்களிப்பு

  இது ஒரு cross-reference பதிவு. ஜெயகாந்தனின் சினிமா பங்களிப்பு என்ற பதிவை அவார்டா கொடுக்கறாங்க தளத்தில் எழுதி இருக்கிறேன். முடிந்தால் பாருங்கள்!

  வசதிக்காக இங்கேயே இப்போது மீள்பதித்துவிட்டேன்.

  அம்ஷன்குமார் எழுதிய நல்ல கட்டுரை ஒன்று கண்ணில் பட்டது. ஜெயகாந்தன் ஒரு டஜன் சினிமாவில் பங்கு பெற்றிருந்தால் அதிகம். ஆனால் அந்த படங்களின் தரம் உயர்வாக இருக்கிறது!

  கட்டுரையிலிருந்து தெரிய வரும் அவர் பங்களிப்பு உள்ள படங்கள்:

  1. உன்னைப் போல் ஒருவன், 1965: திரைக்கதை, இயக்கம். தயாரிப்பும் அவர்தானோ?
  2. யாருக்காக அழுதான், 1966: திரைக்கதை, இயக்கம். தயாரிப்பும் அவர்தானோ?
  3. காவல் தெய்வம், 1969:மூலக்கதை, திரைக்கதை, வசனம். கே.விஜயன் இயக்கம். (கை விலங்கு என்ற குறுநாவல்)
  4. சில நேரங்களில் சில மனிதர்கள், 1977: மூலக்கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள். இயக்கம் பீம்சிங்.
  5. ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், 1978: மூலக்கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள். இயக்கம் பீம்சிங்.
  6. கருணை உள்ளம், 1978: மூலக்கதை, திரைக்கதை, வசனம். இயக்கம் பீம்சிங்.
  7. எத்தனை கோணம் எத்தனை பார்வை, 1983: வசனம், மூலக்கதை. இயக்கம் லெனின்.
  8. சினிமாவுக்குப் போன சித்தாளு, 2001: இயக்கம் கௌதமன் (குறுநாவல்)
  9. ஊருக்கு நூறு பேர், 2003: மூலக்கதை. லெனின் இயக்கம்.
  10. புதுச்செருப்பு: இயக்கம்
  11. பாதை தெரியுது பார்: தென்னங்கீற்று ஊஞ்சலிலே பாட்டு
  12. காத்திருந்த கண்கள்: ட்ரீட்மென்ட்?
  13. நேற்று இன்று நாளை: (எம்ஜிஆர் படம் இல்லை) குறும்படம், 67-இல் வந்ததாம். இயக்கம்+தயாரிப்பு?
  14. நல்லதோர் வீணை: தொலைகாட்சி படம், மூலக்கதை
  15. li>காத்திருக்க ஒருத்தி (தொடர்கதை) – கே.பாலசந்தர் 1983 (குறுநாவல்)

   அவர் யாருக்காக அழுதான் படத்தை விமர்சித்திருக்கிறார்.

   தியேட்டர்களுக்குச் சென்று ஜனக் கும்பலோடு உட்கார்ந்து படத்தைப் பார்த்தேன். ரசிகர்கள் வாரிக்கொண்டார்களே வாரி! படத்தின் ஆரம்பத்தில் 3 நிமிட நேரம் வெள்ளைத் திரையில் ஒன்றுமே தோன்றாது படம் ஓடும். தேய்ந்த பிரிண்ட்டின் கீறல்களை ரசிகர்கள் பார்த்துக் கொண்டிருப்பார்கள். அசரீரியாக நான் இந்தப் படத்தைப் பற்றி 3 நிமிட நேரம் பிரசங்கம் செய்வேன். பேச்சைத் தொடர்ந்து கண்ணதாசன் எழுதிய ஒரு நல்ல பாட்டு. ஒரு நல்ல பாட்டைக் கூடக் கேட்க விடாமல் ரசிகர்களை அடித்து விரட்ட முடியும். அதற்கு மேல் படத்தில் நாகேஷை நடக்க வைத்தும் படுக்க வைத்தும் சாப்பிடச் செய்தும் இசைத்தட்டில் இரண்டு பக்கம் வருகிற மாதிரி ஒரு பாட்டுக் காட்சி ரீல்.

   தான் இயக்கிய படத்தையே இப்படி கிழிகிழி என்று கிழிக்கும் மனிதரின் integrity பிரமிக்க வைக்கிறது.

   அம்ஷன்குமார் சொல்லும் பல படங்களை பார்த்ததில்லை. பார்த்தவர்கள் சொல்லுங்களேன்! சாரதா, காவல் தெய்வம் பற்றி ஏதாவது எழுதி இருக்கிறீர்களா?

   இன்னும் பெரிய பங்களிப்பாக இருந்தால் நன்றாக இருந்திருக்கும். நமக்குதான் அதிர்ஷ்டம் இல்லை.

   தொகுக்கப்பட்ட பக்கம்: ஜெயகாந்தன், சினிமா

   தொடர்புடைய சுட்டிகள்:
   அம்ஷன்குமார் எழுதிய கட்டுரை
   ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் – சாரதா விமர்சனம்
   சில நேரங்களில் சில மனிதர்கள் பக்சின் விமர்சனம், ஆர்வியின் விமர்சனம், சாரதாவின் விமர்சனம்
   ஜெயகாந்தனின் ‘எத்தனை கோணம் எத்தனை பார்வை’

  இந்திரா பார்த்தசாரதி பற்றி பாரதிமணி

  இந்திரா பார்த்தசாரதி பற்றி பாரதி மணி இங்கே ஒரு அருமையான கட்டுரை எழுதி இருக்கிறார். (சுட்டி கொடுத்த ஸ்ரீனிவாசுக்கு நன்றி!)

  பாரதி மணி (க.நா.சு.வின் மாப்பிள்ளை) இ.பா.வின் நீண்ட நாள் நண்பர். டெல்லி பழக்கம். அவருடைய நாடகங்கள் பலவற்றை மணி மேடை ஏற்றி இருக்கிறார். அப்படி ஒரு நாடகம் மூலம்தான் மணிக்கு அவரது மனைவியுடன் பழக்கமே ஏற்பட்டதாம்!

  நல்ல கட்டுரை படித்துப் பாருங்கள்!

  தொகுக்கப்பட்ட பக்கம்: இந்திரா பார்த்தசாரதி

  தொடர்புடைய சுட்டிகள்:

  நாட்டார் மரபு ராமாயணத்தில் ஒரு அற்புதமான, கவித்துவமான சம்பவம்

  ராமாயணம் பற்றி ஜடாயு சில மாதங்களுக்கு முன் எழுதிய ஒரு கட்டுரையை சமீபத்தில் படித்தேன். நல்ல கட்டுரை.

  கட்டுரையின் முதல் பகுதி ஒரு கவிதை!

  புகழ் பெற்ற ஆங்கிலக் கவிஞரும், மொழிபெயர்ப்பாளருமான ஏ.கே.ராமானுஜன் தனது ஒரு நூலில் குறிப்பிடும் ஒரு சம்பவம். கர்நாடகத்தில் பல பகுதிகளிலும் நாட்டார் மரபுகளில் வாய்மொழியாகவே புழங்கும் ராமாயணக் கதைகளை அவர் தொகுத்துக் கொண்டிருந்தார். அதில் ஒரு கதையில் இப்படி ஒரு பிரசங்கம். ராமன் வனவாசம் ஏற்றுக்கொண்டு காட்டுக்குக் கிளம்பும் நேரம்; சீதை தானும் வருவேன் என்று அடம் பிடிக்கிறாள். காட்டில் என்னவெல்லாம் கஷ்டங்கள் உண்டு என்று எடுத்துச் சொல்லி ராமன் அவளைத் தடுக்க முயல்கிறான்……சீதை அவற்றையெல்லாம் கேட்டுக் கொண்டும் தன் பேச்சிலேயே நிற்கிறாள். ராமன் அவளுக்கு மேலும் மேலும் எடுத்துச் சொல்கிறான். அப்போது சீதை இறுதியாக “எனக்குத் தெரிந்த எல்லா ராமாயணத்திலும், ராமனோடு கூடவே சீதையும் காட்டுக்குப் போவாள். எனவே, எப்படி நீங்கள் என்னைத் தடுக்க முடியும்?” என்று கேட்கிறாளாம்!

  முழுவதையும் படித்துப் பாருங்கள்!

  தொகுக்கப்பட்ட பக்கம்: தொன்மங்கள்

  பிடித்த கவிதைகள்

  சான்ஸ் கிடைக்கும்போதெல்லாம் எனக்கு கவிதை அலர்ஜி என்று சொல்லிக் அலட்டிக் கொள்வது ஒரு பழக்கமாகவே ஆகிவிட்டது. அதற்காக எந்த கவிதையுமே பிடிக்காது என்றில்லை. நினைவில் இருக்கும் சில நல்ல கவிதைகள் இங்கே.

  யாயும் ஞாயும் யாராகியரோ
  எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
  நீயும் யானும் எவ்வழி அறிதும்
  செம்புலப் பெயல் நீர்போல
  அன்புடை நெஞ்சந்தாங் கலந்தனவே
        – செம்புலப் பெயல்நீரார் (அழகான உவமைக்காக)

  காமம் காமம் என்ப காமம்
  அணங்கும் பிணியும் அன்றே நினைப்பின்
  முதைச்சுவர் கழித்த முற்றா இளம்புல்
  மூத்த தைவந் தாங்கு
  விருந்தே காமம் பெருந்தோளாயே
        – யார் எழுதியது? (அற்புதமான படிமம்)

  அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவின்
  எந்தையும் உடையேம்; எம் குன்றும் பிறர் கொளார்;
  இற்றைத் திங்கள் இவ்வெண் நிலவின்
  வென்று ஏறி முரசின் வேந்தர் எம்
  குன்றும் கொண்டார்; யாம் எந்தையும் இலமே
        – அங்கவை+சங்கவை? யாம் எந்தையும் இலமே என்ற கடைசி வார்த்தைகள் இந்த கவிதையை எங்கோ கொண்டு போகிறது.

  படைப்புப் பல படைத்துப் பலரோடு உண்ணும்
  உடைப்பெருஞ் செல்வர் ஆயினும், இடைப்படக்
  குறுகுறு நடந்து, சிறுகை நீட்டி,
  இட்டும், தொட்டும், கவ்வியும், துழந்தும்
  நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்,
  மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
  பயக்குறை இல்லைத் தாம் வாழும் நாளே.
        – பாண்டியன் அறிவுடை நம்பி (உண்மை, முற்றிலும் உண்மை.)

  இனி நினைந்து இரக்கம் ஆகின்று; திணி மணல்
  செய்வுறு பாவைக்குக் கொய் பூத் தைஇ,
  தண் கயம் ஆடும் மகளிரொடு கை பிணைந்து,
  தழுவுவழித் தழீஇ, தூங்குவழித் தூங்கி,
  மறை எனல் அறியா மாயம் இல் ஆய்மொடு
  உயர் சினை மருதத் துறை உறத் தாழ்ந்து,
  நீர் நணிப் படி கோடு ஏறி, சீர்மிக,
  கரையவர் மருள, திரையகம் பிதிர,
  நெடு நீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து,
  குளித்து மணற் கொண்ட கல்லா இளமை
  அளிதோ தானே! யாண்டு உண்டு கொல்லோ–
  தொடித் தலை விழுத் தண்டு ஊன்றி, நடுக்குற்று,
  இரும் இடை மிடைந்த சில் சொற்
  பெரு மூதாளரேம் ஆகிய எமக்கே?
        – யார் எழுதியது? (அடுத்த வருஷம் 25 ஆண்டு reunion என்று பேசும்போது இந்த கவிதைதான் நினைவு வருகிறது)

  சுடர்த்தொடீ கேளாய்! தெருவில் நாம் ஆடும்
  மணல் சிற்றில் காலில் சிதையா, அடைச்சிய
  கோதை பரிந்து, வரிப்பந்து கொண்டு ஓடி,
  நோதக்க செய்யும் சிறுபட்டி, மேலோர் நாள்
  அன்னையும் யானும் இருந்தேமா..’இல்லிரே!
  உண்ணுநீர் வேட்டேன்’ எனவந்தாற்கு, அன்னை,
  அடர்பொற் சிரகத்தால் வாக்கி, ’சுடரிழாய்
  உண்ணுநீர் ஊட்டிவா’ என்றாள் என யானும்
  தன்னை அறியாது சென்றேன்; மற்று என்னை
  வளைமுன்கை பற்றி நலியத் தெருமந்திட்டு,
  ’அன்னாய்! இவன் ஒருவன் செய்தது காண்’ என்றேனா,
  அன்னை அலறிப் படர்தரத் தன்னையான்
  ’உண்ணுநீர் விக்கினான்’ என்றேனா, அன்னையும்
  தன்னைப் புறம்பு அழித்து நீவ மற்று என்னைக்
  கடைக்கண்ணால் கொல்வான் போல் நோக்கி நகைக்கூட்டம்
  செய்தான் அக் கள்வன் மகன்.
        – யார் எழுதியது? (காதலில்லாத வாலிபமா என்று தோன்றவைக்கும் அருமையான கவிதை)

  யானை முறித்த கொம்பு என்று வரும் இன்னொரு கவிதையும் அற்புதம். வார்த்தைகள்தான் நினைவு வரவில்லை.

  வையம் தகளியா, வார் கடலே நெய்யாக
  வெய்ய கதிரோன் விளக்காக – செய்ய
  சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல் மாலை
  இடர் – ஆழி நீங்குகவே

  அன்பே தகளியா, ஆர்வமே நெய்யாக
  இன்பு உருகு சிந்தை இடு திரியா – நான் உருகி
  ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன், நாரணற்கு
  ஞானத் தமிழ் புரிந்த நான்

  திருக் கண்டேன்; பொன்மேனி கண்டேன்; திகழும்
  அருக்கன் அணி நிறமும் கண்டேன்; – செருக் கிளரும்
  பொன் ஆழி கண்டேன், புரி சங்கம் கைக் கண்டேன்
  என் ஆழி வண்ணன்பால் இன்று
        – முதல் மூன்று ஆழ்வார்கள் (வையம் தகளியா என்பது மிகவும் உன்னதமான படிமம், கடற்கரையில் சூரியோதயம், அஸ்தமனம் காணும்போதெல்லாம் நினைவு வரும் கவிதை)

  கற்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ
  திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்திருக்குமமோ
  மருப்பொசித்த மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும்
  விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே
        – ஆண்டாள் (“சுவை”யான ஆங்கிள்!)

  பஞ்சி ஒளிர் விஞ்சு குளிர் பல்லவம் அனுங்க
  செஞ்செவிய கஞ்ச நிமிர் சீறடியளாகி
  அஞ்சொலிள மஞ்ஞையென அன்னமென மின்னும்
  வஞ்சியென நஞ்சமென வஞ்சமகள் வந்தாள்
  – கம்ப ராமாயணம் (வார்த்தை நயத்துக்காக)

  வாரணம் பொருத மார்பும் வரையினை எடுத்த தோளும்
  நாரத முனிவர்க்கேற்ப நயம்பட உரைத்த நாவும்
  தாரணி மௌலி பத்தும் சங்கரன் கொடுத்த வாளும்
  வீரமும் களத்தே போட்டு வெறுங்கையோடிலங்கை புக்கான்
        – கம்ப ராமாயணம் (வீரத்தையும் களத்தில் விட்டுவிட்டு வந்தான் என்று சொல்வது இந்த கவிதையை உச்சத்துக்கு கொண்டு போகிறது)

  வான் நகும் மண் நகும் என்று ஆரம்பிக்கும் இன்னொரு கம்ப ராமாயணக் கவிதை (யார் தன்னைப் பார்த்து சிரித்தாலும் கவலை இல்லை ஜானகி சிரிப்பாளே என்றுதான் ராவணனுக்கு கவலையாம். வார்த்தைகள் நினைவிருப்பவர் அனுப்புங்கள்)

  முத்தைத்தரு பத்தித் திருநகை
  அத்திக்கிறை சத்திச் சரவண
  முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும்

  முக்கட்பர மற்குச் சுருதியின்
  முற்பட்டது கற்பித் திருவரும்
  முப்பத்துமு வர்க்கத் தமரரும் அடிபேண….
        – அருணகிரிநாதர் (சந்தத்துக்காகவே – அதுவும் நடுவில் தொக்குத்தொகு தொகு தொகு என்று வரும் இடம் அபாரம்!)

  தடித்த ஓர் மகனை தந்தையீண்டு அடித்தால, தாய் உடன் அணைப்பாள். தாய் அடித்தால்
  பிடித்து ஒரு தந்தை அணைப்பான், இங்கு எனக்குப் பேசிய தந்தையும் தாயும்
  பொடித்திருமேனி அம்பலத்தாடும் புனித நீ ஆதலால், என்னை
  அடித்தது போதும் அணைத்திட வேண்டும். அம்மை அப்பா இனி ஆற்றேன்
  – திரு அருட்பா

  சூதர் மனைகளிலே அண்ணே
  தொண்டு மகளிருண்டு
  சூதிற் பணயமென்றே அங்கோர்
  தொண்டச்சி போனதில்லை

  ஏது கருதி வைத்தாய் அண்ணே
  யாரைப் பணயம் வைத்தாய்
  மாதர் குல மகளை அன்பே
  வாய்ந்த வடிவழகை
        – பாரதி, பாஞ்சாலி சபதம், பீமன் தருமன் கையை எரிக்க வேண்டும் என்று சொல்லும் பாடல்

        A Telephone Conversation
  The price seemed reasonable, location
  Indifferent. The landlady swore she lived
  Off premises. Nothing remained
  But self-confession. “Madame,” I warned,
  “I hate a wasted journey—I am African.”
  Silence. Silenced transmission of
  Pressurized good breeding. Voice, when it came,
  Lipstick coated, long gold-rolled
  Cigarette-holder pipped. Caught I was, foully.
  “HOW DARK?”… I had not misheard… “ARE YOU LIGHT
  OR VERY DARK?” Button B. Button A. Stench
  Of rancid breath of public hide-and-speak.
  Red booth. Red pillar box. Red double-tiered
  Omnibus squelching tar. It was real! Shamed
  By ill-mannered silence, surrender
  Pushed dumbfoundment to beg simplification.
  Considerate she was, varying the emphasis —
  “ARE YOU DARK? OR VERY LIGHT?” Revelation came.
  “You mean — like plain or milk chocolate?”
  Her assent was clinical, crushing in its light
  Impersonality. Rapidly, wave-length adjusted,
  I chose. “West African Sepia” — and as afterthought,
  “Down in my passport.” Silence for spectroscopic
  Flight of fancy, till truthfulness clanged her accent
  Hard on the mouthpiece. “WHAT’S THAT?” conceding
  “DON’T KNOW WHAT THAT IS.” “Like brunette.”
  “THAT’S DARK, ISN’T IT?” “Not altogether.
  Facially, I am brunette, but madam, you should see
  The rest of me. Palm of my hand, soles of my feet
  Are a peroxide blonde. Friction, caused —
  Foolishly madam — by sitting down, has turned
  My bottom raven black — One moment madam!” — sensing
  Her receiver rearing on the thunderclap
  About my ears — “Madam,” I pleaded, “wouldn’t you rather
  See for yourself?”
        – Wole Soyinka (HOW DARK? என்று கேட்கும் இடம் அற்புதம்!)

  இன்னும் ஒன்று:
              – பருத்த தொந்தி
  நம்மதென்று நாமிருக்க நாய்நரிகள் பேய்க்கழுகு
  தம்மதென்று தாமிருக்கும்தான்!
        – தாயுமானவரா பட்டினத்தாரா?

  தொகுக்கப்பட்ட பக்கம்: கவிதைகள்

  சுஜாதா – 25

  இன்றைக்கு ஒரு கெஸ்ட் போஸ்ட். நண்பர் விமல் அனுப்பிய செய்தி. அவருக்கும் விகடனுக்கும் நன்றி!

  சுஜாதா என்றால் சுவாரஸ்யம். அழகியலையும் அறிவியலையும் குழைத்த பேனா. கன்னி மொழி, கணினி மொழி இரண்டுக்கும் அடையாளமான சுஜாதாவின் பெர்சனல் பக்கங்கள்.

  1. ஸ்ரீரங்கத்தைப் பூர்வீகமாகக்கொண்ட ரங்கராஜன் (சுஜாதா) பிறந்தது சென்னையில். தமிழ் இலக்கிய உலகில் பிரகாசமாக இருந்த சுஜாதா பிறந்தது 1935 மே 3.
  2. நாவல்கள், சிறுகதைகள், நாடகங்கள், தொகை நூல்கள் என 200-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதி இருக்கிறார் சுஜாதா. புத்தகங்கள் எல்லாமே பல பதிப்புகள் கண்டவை. இன்னமும் விற்பனைப் புரட்சி செய்பவை. ஒரே ஒரு கவிதைத் தொகுப்பு ‘நைலான் ரதங்கள்’!
  3. முதல் சிறுகதை 1958-ல் ‘சிவாஜி’ பத்திரிகையில் வெளிவந்தது. அந்தப் பிரதி அவர் கைவசம் இல்லை. ‘கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்கு எனது ராஜ்ஜியத்தில் பாதியும், எனது மகளையும் திருமணம் செய்து வைக்கிறேன்’ என நகைச்சுவையாக எழுதினார். அடுத்த சிறுகதை ‘இடது ஓரத்தில்’ 1967-ல் வெளிவந்தது. முதல் நாவல் நைலான் கயிறு!
  4. பண்டிதர்களின் சுமையை நீக்கி புறநானூறு, திருக்குறள், சிலப்பதிகாரம், ஆழ்வார் பாசுரங்களோடு உரை எழுதினார் சுஜாதா. பெருத்த வரவேற்பைப் பெற்றன இந்த உரைகள்!
  5. இரண்டு நாய்க் குட்டிகளைச் செல்லமாக வளர்த்தார். பெயர் மிமி, கிவி. அமெரிக்கா செல்லும்போது அந்த நாய்க் குட்டிகளை பாலுமகேந்திராவின் வீட்டில் விட்டுச் சென்ற அனுபவம் கூட உண்டு. வயதாகி, அந்த நாய்கள் இறந்த பிறகு மீண்டும் வளர்ப்புப் பிராணிகள் வளர்ப்பதைத் தவிர்த்துவிட்டார்!
  6. முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமும் சுஜாதாவும், திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியிலும் சென்னை எம்.ஐ.டி. பொறியியல் கல்லூரியிலும் ஏழு வருடங்கள் ஒன்றாகப் படித்தவர்கள். இருவரும் பல சிகரங்கள் தொட்ட பிறகும் அந்த நட்பு உறுதியாக இருந்தது!
  7. 20 திரைப்படங்களுக்கு மேல் பணியாற்றி இருக்கிறார். கமல், மணிரத்னம், ஷங்கர் படங்களில் பணியாற்றும்போது, மிகவும் திறமையாக வெளிப்படுவார்!
  8. சுஜாதா இறுதியாக திரைக்கதை எழுதிய படம் ஷங்கரின் ‘எந்திரன்’. கமலுக்காக எழுதியது. பிறகு ரஜினி என முடிவானதும், திருத்தங்கள் செய்து முழுவதுமாக எழுதிக் கொடுத்துவிட்டார்.
  9. ஒரே சமயத்தில் தமிழகத்தில் ஏழு பத்திரிகைகளில் தொடர்கதைகள் எழுதிக்கொண்டு இருந்தார் சுஜாதா. எப்படிச் சாத்தியம் எனக் கேட்டதற்கு, ஒரு வாரத்துக்கு 28 பக்கங்கள் எழுத முடியாதா எனத் திருப்பிக் கேட்டு அதைச் சுலபமாக்கிவிடுவார்!
  10. தேர்தலில் பயன்படும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சுஜாதாவின் முக்கியமான கண்டுபிடிப்புகளில் ஒன்று. இதற்காக, பிரசித்தி பெற்ற ‘வாஸ்விக்’ விருது பெற்றார். பின்னாளில் அதன் மீது எவ்வளவோ குறைகள் எழுந்தாலும், அவை எதுவும் நிரூபணமாகவில்லை என்பதுதான் உண்மை!
  11. சுஜாதாவின் கம்ப்யூட்டர், லேப்டாப் இரண்டையும் திறந்தால் உடனே தெரிவது ஸ்ரீரங்கம் ரெங்கநாதரின் கோபுர தரிசனம். எந்தக் காரணத்தை முன்னிட்டும், அதை மாற்றவே இல்லை!
  12. சுஜாதாவின் கணேஷ், வஸந்த் கதாபாத்திரங்கள் தமிழகக் குடும்பங்கள் மத்தியில் ரொம்பவே பிரபலம். வாசகர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கணேஷ், வஸந்த் என்று பெயர் சூட்டி மகிழ்ந்த காலங்கள் உண்டு. கணேஷ், வஸந்த் கதையில் வஸந்த் இறக்கும் தருவாயில் இருப்பதாக ஒருமுறை எழுதிவிட, அவர் என்ன பிளட் குரூப் என விசாரித்து சுஜாதாவுக்குத் தந்திகள் பறந்தன!
  13. கணையாழி இலக்கிய இதழில் 35 வருடங்கள் கடைசிப் பக்கம் என்று பத்தியைத் தொடர்ந்து எழுதினார். ஓர் எழுத்தாளர் இத்தனை வருடங்கள் தொடர்ந்து பத்தி எழுதியது சாதனை!
  14. ஒரு காலத்தில் விடாது புகைப்பார். பிறகு, ஹார்ட் அட்டாக்கில் பாதிக்கப்பட்டதும் திடீரென புகைப்பழக்கத்தை நிறுத்திவிட்டார். அதை முன்வைத்து விகடனில் எழுதிய கட்டுரை பிரசித்தி பெற்றது!
  15. உலகின் முக்கியமான எழுத்தாளர்களின் ஒரு புத்தகத்தையாவது படித்துவிட வேண்டும் என அடிக்கடி சொல்வார். அதைக் கிட்டத்தட்ட செய்து காட்ட சிரத்தையோடு முயற்சி செய்தவர்!
  16. புனைகதை எழுத்தாளராக இருந்தும் நூற்றுக்கணக்கான புதுக்கவிஞர்களை அறிமுகப்படுத்திக்கொண்டே இருந்தார். சுஜாதாவின் அறிமுகக் கண்பட்டவர்கள் இன்று உச்சத்தில் இருப்பது ஆச்சர்யமானது!
  17. ஹாலில் ஒரு புத்தகம், பெட்ரூமில் வேறு ஒரு புத்தகம், பாத்ரூமில் இன்னொரு புத்தகம், க்யூவில் நிற்கும்போது ஒரு புத்தகம் என மாறி மாறிப் படிக்கிற வழக்கமுடையவர் சுஜாதா!
  18. 1993-ல் மைய அரசின் அறிவியல் தொழில்நுட்ப விருதான என்.சி.டி.சி. விருது, ஊடகங்களில் அறிவியல் சிந்தனையைப் பரப்பியதற்காக சுஜாதாவுக்கு அளிக்கப்பட்டது!
  19. சுஜாதா எழுதின நாடகங்கள் பலவற்றை பூர்ணம் விஸ்வநாதன்தான் மேடையேற்றினார். அவர் எழுதிய நாடகங்களின் தொகுப்பு 900 பக்கங்களில் வெளிவந்திருக்கிறது. ‘கடவுள் வந்திருந்தார்’ நாடகம் பரபரப்பு பெற்றது!
  20. இறப்பதற்கு நாலு மாதங்களுக்கு முன்பே மூத்த மகனைக் கூப்பிட்டு, ‘அம்மாவைப் பார்த்துக்கோ’ என்று சொன்னார். அதன் அர்த்தம் யாரும் புரிந்துகொள்ளாத தருணம் அது!
  21. அப்பா இறக்கிற வரை மீசை வைத்திருந்தார் சுஜாதா. அவர் இறந்தபோது, மீசையை எடுத்தவர் மீண்டும் வைத்துக்கொள்ளவில்லை!
  22. பெண் குழந்தை இல்லையே என்ற வருத்தம் சுஜாதாவுக்கு இருந்ததாகச் சொல்வார்கள். ஆனால், அப்படி எந்த வருத்தமும் அவருக்கு இருந்தது இல்லை என மனைவி சுஜாதா குறிப்பிடுகிறார்!
  23. பங்களா வீடு, பென்ஸ் கார் என எதற்கும் ஆசைப்பட்டதில்லை சுஜாதா. தன் மூத்த மகன் திருமணம் செய்துகொள்ளவில்லை என்பது தான் சுஜாதாவின் வருத்தமாக இருந்தது!
  24. கணிப்பொறியியல், இலக்கியம், நாட்டார் வழக்காறு, தமிழ் செவ்விலக்கியங்கள், நாடகம், சினிமா, துப்பறியும் கதைகள், சிறுகதைகள், விஞ்ஞானக் கதைகள்,குறுநாவல்கள், இசை என்று சுஜாதா தொடாத துறைகளே இல்லை!
  25. சுஜாதாவின் பிரபலமான மெக்ஸிகோ சலவைக்காரி ஜோக்கைக் கடைசி வரைக்கும் அவர் வாசகர்களுக்குச் சொல்லவே இல்லை. ஆனால், மிக நெருங்கிய நண்பர்கள் அத்தனை பேருக்கும் அந்த ஜோக்கைச் சொல்லி வாய்விட்டுச் சிரிப்பார் சுஜாதா. செம கிக் ஜோக் அது! (விமலுக்கு அந்த ஜோக் தெரியுமாம். அதையும் பதிப்பார் என்று நம்புகிறேன்.)

  தொகுக்கப்பட்ட பக்கம்: சுஜாதா