உயிர்த்தேனைப் படிப்பது இரவு நேரத்தில் மங்கிய நிலவொளியில் மொட்டை மாடியிலோ தென்னந்தோப்பிலோ நட்சத்திரங்கள் மேலே ஏறுவதைப் பார்த்துக் கொண்டு பி.பி. ஸ்ரீனிவாசையோ மகாராஜபுரம் சந்தானத்தையோ தலத் மெஹ்மூதையோ ப்ளூ டான்யூபோ கேட்கும் சுகம். நல்ல தாகமாக இருக்கும்போது இனிய இளநீரோ எலுமிச்சை சாறோ அருந்தும் சுகம். பவழமல்லி மரத்தடியிலோ முல்லைக் கொடி அருகிலோ அமர்ந்து மார்கழி மாதக் காலைப் பனியின் மெல்லிய குளிரில் திருப்பாவையை தெருவில் நல்ல குரல் உள்ள பெண்கள் பாடிக் கொண்டு போவதைக் கேட்கும் சுகம். சொகுசான நாவல்.
இத்தனைக்கும் தி.ஜா. காட்டுவது கனவுலகம் மட்டுமே. காந்தி கூட இப்படி செங்கம்மா/பூவராகன்/கணேசப் பிள்ளை மாதிரி சகமனிதர்கள் மீது அன்பைப் பொழிந்திருப்பார் என்று எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் கனவுகள் சில சமயம் ஏதோ ஒரு எல்லையைத் தாண்டி மகத்தான மானிடக் கனவுகளாக மாறுகின்றன. உயிர்த்தேன் அப்படிப்பட்ட ஒரு கனவைத்தான் காட்டுகிறது.
1967-இல் ஆனந்த விகடனில் தொடராக வந்தது.
பிரமாதக் கதைப்பின்னல் உள்ள கதை எல்லாம் கிடையாது. பணம் நிறைய சம்பாதித்த பிறகு பூவராகன் தன் சொந்த கிராமத்துக்கு திரும்புகிறார். ஊரே சோம்பலில் தன்முனைப்பில்லாமல் மூழ்கி இருக்கிறது. அப்படி செய்யலாம் இப்படி செய்யலாம் என்று பேசுபவர்களால் ஒரு துரும்பைக் கூட இந்தப் பக்கம் அந்தப் பக்கம் நகர்த்த முடியவில்லை. பூவராகன் கார்வார் கணேசப் பிள்ளையின் மனைவி அழகி/அறிவாளி/அன்பு நிறைந்த செங்கம்மாவை சந்திக்கிறார். அவரது அப்பாவின் கனவான கோவில் புனரமைப்பு வேலையை எடுத்து நடத்துகிறார். செங்கம்மாவின் தாக்கத்தில் ஊருக்கு நல்லது செய்கிறார், சொந்த செலவில் பாலம் கட்டுகிறார், எல்லாருடைய விவசாய நிலத்தையும் கொழிக்க வைக்கிறார். ஊருக்கு ரோஷம் வருகிறது, இவரது அருமை புரிகிறது. ஊர்த் தலைவராகுங்கள் என்று கேட்டுக் கொள்கிறது. பூவராகன் இதில் செங்கம்மாவின் பங்களிப்புதான் அதிகம் அவளைத் தலைவி ஆக்குங்கள் என்கிறார். ஊரே மாறினாலும் பழனிவேல் ஒத்துழைக்க மறுக்கிறான். அதற்குக் காரணம் செங்கம்மா மீது அவனுக்கு இருக்கும் ஆசை. எப்படி முடிகிறது என்பதுதான் கதை.
பழனிவேல் செங்கம்மாவை இழுத்து அணைத்துக் கொள்ளும் காட்சிதான் கதையின் உச்சக்கட்டம். அதற்குப் பிறகு அவர்கள் வாழ்வை எப்படி எதிர்கொள்கிறார்கள்?
பத்து பக்கத்திலேயே சூடு பிடித்துவிடுகிறது. பூவராகன் தன் வீட்டு கிரகப்பிரவேசத்துக்கு அழைக்கவில்லை என்று சண்டை போடும் பழனிவேல் செங்கம்மாவை கௌதமரை மணந்த அகலிகை என்று விவரிக்கிறான். யார் இந்திரன்? தஞ்சாவூர் அடிவெட்டுப் பேச்சு, கும்பகோணம் குசும்பு என்றெல்லாம் என் குடும்பத்தில் சொல்வார்கள், என் அப்பாவிடம் இது அவ்வப்போது தெரியும். (எங்கள் பூர்வீகமும் தஞ்சாவூர் ஜில்லாதான்). ஜானகிராமன் மொழியில் சூட்சுமமாகப் பேசி காலை வாருவது. அது அட்சர சுத்தமாக வந்திருக்கிறது.
எனக்கு மிகவும் பிடித்த வசனம் பூவராகனின் மாமா மகனும் நல்ல நண்பனுமான நரசிம்மன் பூவராகனையும் செங்கம்மாவையும் இணைத்துப் பேசிவிட்டு தவறாகப் பேசினோம் என்று உணர்வது. தன் மனைவியிடம் நீ நான் சொல்வதை நம்பவில்லையா என்று கேட்க அவள் நீங்களே நம்பலியே என்கிறாள்.
எல்லாருக்கும் அனேகமாகப் பிடிக்கும் பாத்திரங்கள் சிற்பி ஆமருவி, செங்கம்மாவை முழுதாகப் புரிந்து கொண்ட அவள் கணவர் கார்வார் கணேசப் பிள்ளை. அவரை விடவும் ஒரு மாற்று அதிகமாக எனக்குப் பிடித்த பாத்திரம் பூவராகனின் மனைவி ரங்கநாயகி. கோட்டோவியம்தான் வரைந்திருக்கிறார், ஆனால் அருமையாக வந்திருக்கிறது. செங்கம்மாவின் ஆடிப் பிம்பமான அனுசூயாவின் நீட்சிதான் மரப்பசுவின் அம்மணி. பழனிவேலும் நம்பகத்தன்மை உள்ள பாத்திரம்.
இது என்னடா ஜெயமோகனின் நாவல் பரிந்துரைப் பட்டியலில் இடம் பெறவில்லையா என்று மீண்டும் தேடிப் பார்த்தேன். அவர் கண்ணில் இது தி.ஜா.வின் “மிகச் சுமாரான நாவல்களில் ஒன்று.” அவர் வார்த்தைகளில்:
ஜானகிராமனின் கதாபாத்திரங்களிலேயே பலவீனமானது செங்கம்மாதான் என்று கூடச் சொல்லலாம். அக்கால ஆர்வி, எல்லார்வி பாணி கதாபாத்திரம். ஆறுகட்டி ஊரின் நிலவியல், சமூக அமைப்பு, சாதியச் சிக்கல்கள் எதுவுமே இலக்கியத்திற்குரிய நுட்பத்துடனும் கூர்மையுடனும் சொல்லப்படவில்லை. வணிகக், கேளிக்கை எழுத்துக்குரிய மேலோட்டமான சித்திரங்களே உள்ளன. ஒப்புநோக்க இதேகாலத்தில் ஏறத்தாழ இதேபோல எழுதப்பட்ட எல்லார்வியின் கிராம மோகினி சுவாரசியமான படைப்பு.
…பழனி, அவனுடைய ரகசியக்காதலை அவன் வெளிப்படுத்தும் உச்சத் தருணம், அதன் பின் செங்கம்மாவின் மாற்றம் எல்லாமே அகிலன் நாவலின் பாணியில் உள்ளன
ஜெயமோகனின் ரசனையோடு நான் அபூர்வமாக வேறுபடும் தருணம். “ஆறுகட்டி ஊரின் நிலவியல், சமூக அமைப்பு, சாதியச் சிக்கல்கள்…” இவற்றைப் பேசியே ஆக வேண்டும் என்று அவர் நினைப்பது எல்லா நேரமும் பாயசம், பச்சடி என்று சம்பிரதாயமான விருந்து மட்டுமே சாப்பிட வேண்டும் என்பது போல இருக்கிறது. எனக்கு செங்கம்மாவும் (கொஞ்சம் குறைவாக அனுசூயா, பூவராகன், ஆமருவி, நரசிம்மன், கார்வார் கணேசப் பிள்ளை, ரங்கநாயகி எல்லாரும் காட்டுவது) எல்லாரையும் அவர்கள் குறைநிறைகளோடு ஏற்றுக் கொள்ளும் அன்பு. ஏற்றுக் கொள்வதோடு நின்றுவிடாமல் அவர்களை சரியான திசையில் செலுத்தும் சிறு உந்துதல்களைத் தரும் அன்பு. அது ஒரு மாபெரும் மனிதக் கனவு. இந்தக் கனவைத்தான் ஜெயகாந்தன் ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகத்தில் காட்டுகிறார். அந்த நாவலில் நாயகனின் அப்பா-அம்மா காதலை இன்னும் விரிவாகக் காட்டவில்லை என்று குறை சொல்வது போலத்தான் ஜெயமோகனின் விமர்சனம் எனக்குப் படுகிறது.
அதே நேரத்தில் இலக்கியம் என்று பார்த்தான் ஜேகே ஒரு படி மேலேதான் இருக்கிறார் என்பதையும் ஒத்துக் கொள்கிறேன். இதே கனவைத்தான் பாலகுமாரனும் சிவசு பாத்திரம் மூலமாக அகல்யா நாவலில் முன் வைக்க முயற்சிக்கிறார். செங்கம்மாவோடு ஒப்பிட்டால் சிவசு எத்தனை செயற்கையாகத் தெரிகிறான்?
நாவலைப் பற்றி எனக்கும் விமர்சனங்கள் உண்டு. தி.ஜா.வுக்கு பெண் மேல் obsession என்பதே ஒரு obsession ஆக இருக்கிறது. செங்கம்மாவுக்கும் பூவராகனுக்கும் ஊடாக இருக்கும் காமம் என்பது என் கண்ணில் சரியாக வரவில்லை, வலிந்து புகுத்தப்பட்ட மாதிரி இருக்கிறது. ஆனால் செங்கம்மா-பழனிவேல், செங்கம்மா-கணேசப் பிள்ளை காமம்/உறவு என்பது இயற்கையாக இருக்கிறது. கட்டற்ற பாலியல் உறவு என்பது தி.ஜா.வுக்கு ஒரு fantasy-யோ என்று தோன்றுகிறது. அனுசூயாவுக்கு கதையில் என்ன தேவை? கதையில் இரண்டு முடிச்சுகளைப் போட நினைத்திருக்கிறார்; பழனிவேலின் obsession என்ற முடிச்சு நன்றாக விழுந்திருக்கிறது, ஆனால் பாலியல் உறவு என்று அந்தப் பக்கமும் போகாமல் இந்தப் பக்கமும் போகாமல் பூவாரகனும் ஏன் ஊரில் உள்ள எல்லாருமே அல்லாடுவது என்னவோ கனவிலும் பெண்ணோடு கூடாமல் சுயஇன்பம் செய்து கொள்வது போல இருக்கிறது, சரியாக வரவில்லை.
அம்மா வந்தாளை விட சிறந்த நாவலை தி.ஜா. எழுதவில்லை. மோகமுள்ளுக்குத்தான் இரண்டாம் இடம் கொடுப்பேன். இந்த நாவலின் சிறப்பு ஒரு மகத்தான கனவைக் காட்டுவதுதான். ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் நாவலும் அப்படிப்பட்ட மகத்தான மானுடக் கனவைத்தான் காட்டுகிறது, ஆனால் இதை விடவும் சிறப்பாக எழுதப்பட்டதும் கூட, இன்னும் நம்பகத்தன்மை அதிகம் உள்ளதும் கூட. அதனால் என்ன? ரஃபியும் கிஷோரும் தலத்தை விட சிறப்பாக, அதிகமான பாடல்களைப் பாடி இருக்கிறார்கள்தான், ஆனாலும் தலத்துக்கு மனதில் இடம் இல்லாமல் போய்விடுகிறதா?
அதிசயமாக நண்பர் ரெங்காவும் இந்த நாவலை சுமார் என்றே மதிப்பிடுகிறார். எங்கள் ரசனை வேறுபடும் ஒரு அபூர்வமான தருணம். அவர் பழனியின் முடிவு நாடகத்தனமானது என்று சொல்வது எனக்கும் சரியே. ஆனால் அது எனக்கு சிறு குறையாகத் தெரிகிறது, அவருக்கு பெரிதாக உறுத்துகிறது. எனக்கு நாவலில் நினைவிருக்கப் போவது அனைவரையும் ஏற்றுக் கொள்வது என்ற கனவு மட்டும்தான். அதைத்தான் தி.ஜா. சொகுசான, இனிய வாசிப்பு அனுபவமாக வடித்திருக்கிறார் என்று கருதுகிறேன். அது ரெங்காவுக்குப் பெரிதாகத் தெரியவில்லை போலும்.
நாவலில் வரும் ஒரு பாசுரத்தோடு முடித்துக் கொள்கிறேன்.
பொலிக! பொலிக! பொலிக!
போயிற்று வல்லுயிர்ச் சாபம்
நலியும் நரகமும் நைந்த
நமனுக்கு இங்கு யாதொன்றுமில்லை
கலியும் கெடும் கண்டு கொண்மின்
கடல்வண்ணன் பூதங்கள் மண் மேல்
மலியப் புகுந்து இசை பாடி
ஆடி உழி தரக் கண்டோம்
கண்டோம் கண்டோம் கண்டோம்
கண்ணுக்கினியன கண்டோம்
தொண்டீர் எல்லீரும் வாரீர்
தொழுது தொழுது நின்றார்த்தும்…
இந்த உணர்வுதான் படிக்கும்போது ஏற்பட்டது, கண்ணுக்கினியன கண்டோம், வேறென்ன சொல்ல!
தொகுக்கப்பட்ட பக்கம்: தி.ஜா. பக்கம்
தொடர்புடைய சுட்டிகள்:
மாற்றுக் கருத்துகள் – ஜெயமோகனின் காட்டமான விமர்சனம், ரெங்கசுப்ரமணி விமர்சனம்
தமிழ் விக்கியில்
Like this:
Like ஏற்றப்படுகின்றது...