ஆதவன் சிறுகதைகள்

இளம் வயதில் என் பெயர் ராமசேஷன் (1980) நாவலைப் படித்து மகிழ்ந்து போனேன். ஆனாலும் நான் ஆதவனை அதிகம் படித்ததில்லை. கை தவறவிட்ட எழுத்தாளர்.

ஆதவனின் எழுத்துக்களில் சுஜாதாவின் சாயல் தெரியும். இ.பா.வின் சாயலும். பலரும் அவரை இ.பா.வின் சிஷ்ய பரம்பரை என்றே கருதுகிறார்கள். யார் யார் மீது தாக்கம் செலுத்தினார் என்று சொல்வதற்கில்லை. ஆனால் இ.பா. என்னை பெரிதாகக் கவர்ந்ததில்லை. ஆதவனையோ இ.பா.வை விட உயர்ந்த இடத்தில்தான் வைக்கிறேன்.

இளைஞர்களின் உலகத்தை – குறிப்பாக அறுபது, எழுபதுகளின் இளைஞர் உலகத்தை ஆதவனால் பிரமாதமாக சித்தரிக்க முடிந்திருக்கிறது. அதுவும் என், எனக்கு நெருக்கமான நண்பர்களின் மனநிலை, சிந்தனை முறை போலவே அவரது இளைஞர்களின் மனநிலையும் சித்தரிக்கப்பட்டது அவரது கவர்ச்சியை அதிகப்படுத்தியது. (நான் எழுபது, எண்பதுகளின் இளைஞன்).

என்ன, அவரது நாயகர்கள் போல மனதில் தோன்றியதை எல்லாம் வெளியில் சொல்லிவிட முடிந்ததில்லை. அப்படி தப்பித் தவறி சொல்லிவிட்டால் திமிர் பிடித்தவன் என்ற பேச்சைக் கேட்க வேண்டி இருந்தது. கல்லூரியிலாவது டோண்ட் கேர் என்று போக முடிந்தது, வேலைக்கு போன பிறகு கொஞ்சம் ஜாக்கிரதையாகப் பேசத் தொடங்கினேன். இன்றும் என் நெருங்கிய நண்பன் ஒருவனோடு பணி புரிகிறேன், அலுவலக மீட்டிங்களில் அவன் அடக்கி வாசிக்கும் தருணங்கள் எனக்கு மட்டும் புரிகின்றன and vice versa.

சிவப்பாய் உயரமாய் மீசை வச்சுக்காமல் பிரமாதமான சிறுகதை. மொழியில் உள்ள உற்சாகம் சுஜாதாவை நினைவுபடுத்தியது, ஆனால் அந்த அளவு உரத்த, ஆர்ப்பாட்டமான குரல் இல்லை. அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் என்பதை ஒரு அலுவலக சூழலுக்கு அற்புதமாகக் கொண்டு வந்துவிட்டார்.

முதலில் இரவு வரும் எழுபதுகளின், அறுபதுகளின் நகர்ப்புற மத்தியதரக் குடும்பங்களை, குறிப்பாக பிராமணக் குடும்பங்களை நுண்மையாக சித்தரிக்கிறது. என்னையும், என் அத்தை பையன்களையும் பெண்களையும் அப்பாவையும் அம்மாவையும் அத்தைகளையும் அத்திம்பேர்களையும் மாமாக்களையும் மாமிகளையும் பெரியப்பாக்களையும் பெரியம்மாக்களையும் பார்க்க முடிகிறது.

ஒரு பழைய கிழவரும் ஒரு புதிய உலகமும் என் அப்பாவைத்தான் நினைவுபடுத்தியது. வேறு உலகங்களுக்குள் சென்றுவிட்ட பிள்ளைகள்; ரத்த உறவு இல்லையென்றால் அந்த உலகத்தில் அவரால் அவ்வப்போது கூட நுழைய முடியாது. இன்று எனக்கும் என் பெண்களுக்கும் அதுதான் நடக்க ஆரம்பித்திருக்கிறது. மிகச் சிறப்பாக அதைக் காட்டிவிடுகிறார்.

லேடி சிறுகதையில் வீடுகளில் வேலை பார்க்கும் பாப்பாவின் சித்திரம் பிரமாதம். மகன் பெரிய ஆளாக வருவான் என்ற அவள் கனவு கொஞ்சம் விரிசல் விடும் இடம் நன்றாக வந்திருக்கிறது.

புதுமைப்பித்தனின் துரோகம் லேசாக புன்முறுவல் செய்ய வைத்தது. திருவல்லிக்கேணி ஒண்டுக்குடித்தனத்தில் வாழும் எழுத்தாளனுக்கு இருக்கும் பெருமிதம் அவன் எழுத்தும் ரசனையும்தான். அதிலும் பணக்கார நண்பன் போட்டிக்கு வந்தால்?

புகைச்சல்கள் இன்னும் ஒரு நல்ல சிறுகதை. புதிதாகத் திருமணம் ஆன கணவன் மனைவி உறவு அன்பு, காமம், அடுத்தவரை சீண்டிப் பார்த்தல், சண்டை, பிறக்கப் போகும் குழந்தை என்று மெதுமெதுவாக சமநிலை (equillibrium) அடைவதை நன்றாக சித்தரிக்கிறார்.

ஒரு தற்கொலை சிறுகதை மிகச் சீராக தன் முத்தாய்ப்பான முடிவை நோக்கிச் செல்கிறது. முடிவு வரிகள் மிக ஆழமானவை.

வாழ்க்கையை முழுதும் உணராமலேயே அந்தப் பெண் செத்துப் போய்விட்டாள். மெல்ல மெல்ல செத்துக் கொண்டே இருப்பதை உணராமல் நாங்கள் வாழ்ந்து கொண்டே இருப்போம்.

கௌரவம் சிறுகதை சுமார்தான். ஆனால் சிறுவனின் கண்ணில் உலகம் விவரிக்கப்படுவது நன்றாக இருக்கிறது.

நிழல்கள் சிறுகதையில் அந்தக் காலத்து ஜென்டில்மன் காதல் நன்றாக வெளிப்படுகிறது. காமம் வேண்டும், ஆனால் பல மனத்தடைகள்… மூன்றாமவன், கருப்பை சிறுகதைகள் சுமார்தான்.

ஆதவனின் 4 சிறுகதைகள் –  ஒரு பழைய கிழவரும் புதிய உலகமும், முதலில் இரவு வரும், சிவப்பாய் உயரமாய் மீசை வச்சுக்காமல், லேடி – ஜெயமோகனின் முக்கிய தமிழ் சிறுகதைகள் பட்டியலில் இடம் பெறுகின்றன. இரண்டு சிறுகதைகள் – சிவப்பாய் உயரமாய் மீசை வச்சுக்காமல், ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள் – எஸ்ராவின் 100 சிறந்த தமிழ் சிறுகதைகள் பட்டியலில் இடம் பெறுகின்றன.

ஆதவன் இளம் வயதிலேயே (45 வயது) இறந்துவிட்டார். அவர் இறந்த பிறகு முதலில் இரவு வரும் என்ற சிறுகதை தொகுப்புக்காக சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது. (1987)

காகித மலர்கள் (1977) நாவலை தன் முதன்மையான தமிழ் நாவல்கள் பட்டியலிலும் என் பெயர் ராமசேஷன் நாவலை இரண்டாம் வரிசை தமிழ் நாவல்கள் பட்டியலிலும் ஜெயமோகன் சேர்த்திருக்கிறார். எஸ்ரா காகித மலர்களை தன் சிறந்த புத்தகங்கள் பட்டியலில் சேர்த்திருக்கிறார்.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆதவன் பக்கம்

தொடர்புடைய சுட்டிகள்: