முத்துகிருஷ்ணன் சமீபத்தில் ஊர் சுற்றிய அனுபவங்கள் இங்கே.
கோடை காலத்தின் வெப்பத்தை அனுபவிக்க கிடைக்கும் கடைசி சந்தர்ப்பமாக அமைவது லேபர் நாள் விடுமுறை மட்டுமே. இந்த முறை சான் பிரான்ஸிஸ்கோவிற்கு வடக்கே செல்லலாம் என ஒரு மாதத்திற்கு முன்பே முடிவெடுத்தாகி விட்டது. முன்பு வேலை பார்த்த இடத்தில் பழக்கமாகி, பின்பு ஒரே நாளில் இருவருக்கும் வேலை போய் இன்னும் நெருக்கமான நட்பாகி போன நண்பன, அவனுடைய மனைவி, நான் என மூன்று பேர் இறுதியில் கிளம்பலாம் என முடிவானது. எப்போதும் போல பொறுப்பாக பராக்கு பார்த்துக் கொண்டே வருவது என்னுடைய பழக்கம் என்பதால் அவர்கள் இருவரும் பயணத் திட்டத்தை வகுத்தார்கள். நான் எல்லாவற்றிற்கும் சரி என்று தலையை மட்டும் ஆட்டினேன். என் தரப்பிலிருந்து வைக்கப்பட்ட ஒரே கோரிக்கை – கலிஃபோர்னியாவின் எல்லையை தாண்டி ஒரு இடத்திற்கு சென்று வரவேண்டும் என்பதே. காரில் செல்லாம் என்று முடிவெடுத்திருந்ததால் மற்றொரு மாநிலத்தில் நுழைய கூடுதல் ஆர்வம் ஏற்பட்டு விட்டது.
ஏதோவொரு திட்டத்தை வகுத்து என்னிடம் சொன்னார்கள் அதில் கிரேட்டர் ஏரி, ஷாஸ்தா மலை, ஓரிகன் மாநிலம் என்ற மூன்று சொற்களைக் கேட்டவுடன் உடனே ஆமோதித்து விட்டேன். வேறெதுவும் தெரியாது, அறிந்து கொள்ளவும் ஆர்வம் காட்டவில்லை. 10 மணிநேரம் சாலையில் மாறும் நிலவெளிகளினூடே ஒரு பயணம் என்ற எண்ணம் மட்டும் உற்சாகத்தைக் கொடுத்தது.
செப்டம்பர் 1 அதிகாலை கிளம்பி லாஸென் எரிமலை தேசியப் பூங்காவிற்கு செல்வது என முடிவெடுத்தோம். சான் ஹோஸே விமான நிலையத்திலிருந்து வாடகைக்கு கார் எடுத்து விட்டோம். முந்தைய நாள் இரவு கிளம்பி நண்பனின் வீட்டிற்கு போய் விட்டேன். படுப்பதற்கு 12 மணி ஆகி விட்டது. காலை 3 மணிக்கெல்லாம் எழுந்து கண் எரிய குளித்து, பிஸ்கட், டீ குடித்துவிட்டு 4 மணி வாக்கில் கிளம்பி விட்டோம். எப்போதும் போல நான் பின்னால் உட்கார்ந்து கொண்டு இருட்டை வேடிக்கை பார்த்துக் கொண்டே தூங்கி விட்டேன்.
கார் எதன் மீதோ ஏறியபோது உண்டான அதிர்வில் எழுந்தேன். நெடுஞ்சாலை எண் 5 இல் வடக்கு நோக்கி வளைகுடா பகுதியின் குன்றுகள் சூழ்ந்த நிலங்களிலிருந்து விடுபட்டு வெட்டவெளியில் பயணப்பட்டுக் கொண்டிருந்தோம். கீழ் திசையில் சூரிய உதயத்தின் நீல நிற வானம் உருவாகிக் கொண்டிருந்தது. கடைசியாக சூரிய உதயத்தை எப்போது பார்த்தேன் என்ற ஞாபகம் இல்லை, பார்த்திருக்கவே வாய்ப்பிலை என்றுதான் தோன்றுகிறது. தூக்கம் கலைந்து விட்டது. பக்கத்தில் பூனைக் குட்டியை போல் காமிரா இருந்தது. வலது பக்கமாக திரும்பி கண்ணாடிக்கு அருகில் முகத்தை வைத்துக் கொண்டு – கண்ணாடியில் படர்ந்த மூச்சு காற்றின் ஆவியை துடைத்துக் கொண்டே – எழப் போகும் சூரியனின் திசையை பார்த்துக் கொண்டே இருந்தேன்.
தெளிந்த வானம் என்றாலும் அடி வானில் மெல்லிய நீரோட்டம் போல மேகங்கள் இருந்தன. நிலப்பரப்பின் அடியிலிருந்து வரும் விடி வெள்ளியின் வெளிச்சம் மஞ்சள் நிறமாவதற்கு முன்னாலேயே மேகங்களால் கீறப்பட்டு வெவ்வேறு அடர்த்தியுடன் கூடிய நீல கோடுகளாக வெளிவந்தது. காமிராவால் உள்ளிழுக்க முடியாத அளவு மெல்லிய நிற பேதங்களுடைய கிரணங்களாக நீல வானம் சில நிமிடங்கள் இருந்தது. ஒரு விளையாட்டு போல அந்த கிரணங்களை கண்களை சிறுத்து நோக்கினால் காணாமல் போகும் ஆனால் எதையும் குறிப்பிட்டு கவனிக்காமல் மொத்தமாக கிழக்கை பார்த்துக் கொண்டிருந்தால் அவை தம்மை வெளிக்காட்டும். சில நிமிடங்களில் மஞ்சள் ஒளி சூழ சிகப்பு நிறத்தில் சூரியன் உதயமானது. காமிராவை கொண்டு பல புகைப்படங்களை எடுத்தேன். ஓடும் வாகனத்தில் இருந்து குறைந்த ஒளியுள்ள ஒன்றை படம் பிடிக்க விலைகூடிய லென்ஸ் தேவைப்படுவதால் சகிக்கக் கூடிய தரத்தில் ஒன்றிரண்டு புகைப்படங்கள் மட்டுமே சாத்தியப்பட்டது.
நண்பன் பெங்களூரில் பிறந்து, வளர்ந்தவன். ராக், டிரான்ஸ், மெட்டாலிக்கா என்று பெரிய தொகுப்பை காரில் ஓட விட்டுக் கொண்டிருந்தான். காலை சாப்பாட்டிற்காக ரெட் பிளஃப் என்ற சிற்றூரின் உணவு விடுதிக்கு சென்றோம். அது மாதிரி அமெரிக்க சிற்றூரின் உணவு விடுதி. சமைப்பவரும், பரிமாறுபவரும், சாப்பிட வருபவரும் ஒருவருக்கொருவர் நன்கு அறிமுகமானவர்களாக இருந்தார்கள். பேர் சொல்லி கூப்பிட்டு பேசிக் கொண்டார்கள். மூன்று இந்தியர்கள் நுழைந்தவுடன் சில தலைகள் திரும்பின, ஒரு முறை கூர்ந்து பார்த்துவிட்டு தம் வேலைகளுக்கு திரும்பிச் சென்றன. பான் கேக், காபி, ஆம்லெட் என சிற்றுண்டியை முடித்துவிட்டு லாசென் எரிமலைப் பூங்காவை 10 மணி அளவில் அடைந்தோம்.

லாஸெனின் முகப்பை அடைவதற்கு பல மைல்களுக்கு முன்பே மலைகள் சூழ்ந்த இடங்களுக்குள் வந்து விட்டோம். நூற்றாண்டுகளாக பொங்கி, வெடித்த எரிமலையிலிருந்து வீசப்பட்ட எரியும் கற்கள் சாலையின் இரு புறங்களிலும் குளிர்ந்து, கருமை நிறம் கொண்ட பாறைகளாக சிதறிக் கிடந்தன. பல மைல்களுக்கு சீரான இடைவெளியில் கிடப்பதைப் காணும் பொழுது அவை வீசி எறியப்பட்ட இடம் வெகு தொலைவில் உள்ளது என புலப்பட்டது. இள மஞ்சள் நிறத்திற்கு மாறிப் போன புற்களும் சிறு தாவரங்களும் அந்த பாறைகளை மூடியிருந்தன.
லாஸென் பூங்காவின் அதிகாரப்பூர்வமான முகப்பில் வந்து அனுமதிச் சீட்டு வாங்கி உள்ளே நுழைந்தோம். கூடாரமிட்டு இரவைக் கழிப்பதற்கான எல்லா இடங்களும் முன்பதிவு செய்யப்பட்டு நிரம்பிவிட்டன என்று அறிவிப்பு பலகையில் இட்டிருந்தார்கள். நாங்கள் வாகனம் செல்லும் சாலையினூடே லாஸெனைக் கடந்து செல்வதாக மட்டுமே திட்டமிட்டிருந்தோம். நல்ல பனிப் பொழிவு ஏற்படும் இடம் என்றாலும் கூட கோடை வெயில் உக்கிரமாக இருந்தது.
சாலையின் வழியே கடக்கும் போது லாஸெனில் காணக் கிடைப்பது ஏரிகளும், பள்ளத்தாக்குகளும்தான். அனுபவமின்மையால் முதலில் எதிர்கொண்ட ஏரியை காண இறங்கி விட்டோம். அதன் பெயர் எமரெல்ட் ஏரி. பெயருக்கு ஏற்றாற் போல பளிங்கு பச்சை நிறமுடைய நீரினாலமைந்த ஏரி அது. அதே நேரம் பெயருக்கு பொருத்தம் இல்லாத ஒரு குளம் மட்டுமே. அரை வட்ட வடிவில் எழுந்திருந்த சிறு மலைகளை சுவர்களாக கொண்டு அவற்றிலிருந்து உருகும் பனியால் நிரம்பிய மரகத ஏரி. அந்த இடத்தின் தனியியல்பு என்பது காட்சி அல்ல, அங்கிருந்த நிசப்தமே. காற்றின் சலனங்கள் ஏதுமில்லால் நீர் நின்று கொண்டிருப்பது போலிருந்தது. நாங்கள் யாரும் இயல்பாகவே பேசவில்லை. நான் காமிராவைக் கொண்டு படம் பிடித்துக் கொண்டிருந்தேன். அரை மணி நேரம் கழித்து, செல்ல வேண்டிய தூரம் மிக அதிகமானதால் அவர்கள் போகலாம் என சொன்னார்கள்.
அடுத்தது. சில மைல்களுக்குள்ளேயே ஹெலன் ஏரியை அடைந்தோம். முந்தையது போலில்லாமல் இது ஒரு ஏரி என்று சொல்லத் தக்க வண்ணம் விரிந்து கிடந்தது. சாலை ஏரியைச் சுற்றி மேலே செல்வதால் அதை பார்த்துக் கொண்டே சென்றோம். எமெரெல்ட் ஏரியில் செலவழித்த நேரத்தை இங்கே சேமித்துக் கொள்ளலாம் என்று இறங்கவில்லை. ஹெலன் ஏரியைச் சுற்றி மரங்களற்ற மலைச் சுவர்கள் மட்டுமே இருந்த காரணத்தாலோ என்னவோ அது ஒற்றை நீல நிறமோடு இருந்தது. ஹெலனை கடக்கும் பொழுது துணுக்குற செய்யும் காட்சி சாலையின் மறு பக்கத்தில் பிரம்மாண்டமாக உயர்ந்து நிற்கும் மலைகள்தான். சாலையிலிருந்து ஆரம்பிக்கும் மலைகளில் ஒரு செடி கூட வளரவில்லை. மொத்த மலையும் உடைக்கப்பட்ட பல லட்சம் பெரும் கற்குவியல்களால் உருவாகியுள்ளது. வானத்திலிருந்து இறங்கி வந்த பெருந்தச்சன் எதையோ கட்டி எழுப்ப ஆயுத்தமாகி பிறகு கைவிட்டு சென்ற கதையின் சான்றுகள் போல அவை பல மைல்களுக்கு கொட்டிக் கிடந்தன. இன்னும் ஒரு மாதத்தில் இவையனைத்தும் பனியின் அடியில் புதைந்து விடும். அப்போது இந்த இடம் மேலும் அழகாக தோன்றலாம் ஆனால் இந்த பிரம்மாண்டம் மிச்சமிருக்குமா என்பது சந்தேகமே.
அந்த சாலையின் அதிகபட்ச உயரமான 8500 அடி வரை சென்று கீழிறங்கினோம். அடுத்ததாக லாஸென் எரிமலை சிகரத்தை பார்த்து உருவாகியிருந்த ஸம்மிட் ஏரியில் என்று இறங்கினோம். 7000 அடி உயரத்தில் அமைந்திருந்த அந்த ஏரி 10,000 அடி உயரத்தை கொண்ட லாஸென் சிகரத்தை பார்த்துக் கிடந்தது. அடர்ந்த ஆஸ்பென் மற்றும் பைன் மரங்களால் சூழப்பட்ட கரையில் ஒதுக்கப்பட்ட இடங்களில் முன்பதிவு செய்தவர்கள் கூடாரமிட்டிருந்தார்கள். சிலரை பார்க்க முடிந்தது, மற்றவர்கள் முதுகில் பைகளைய்க் கட்டிக் கொண்டு மலைகளினூடே நடக்க சென்றுவிட்டார்கள். வெயில் உச்சிக்கு ஏறிவிட்டிருந்தமையால் கண் கூசும் அளவிற்கு ஏரி மிளிர்ந்து கொண்டிருந்தது. வெறும் மரங்களினால் ஆன கரையும், மலையும், வீசிக் கொண்டிருக்கும் காற்றும் சேர்ந்து ஒளிர்ந்து கொண்டிருக்கும் பச்சை நீறமாக ஸம்மிட் ஏரி இருந்தது. சுற்றளவில் பெரிதாக இருப்பினும் ஆழமற்ற ஏரி அது. நான்கடி உயரமுடைய பாறைகளும், சரிந்து கிடக்கும் மரங்களும் ஏரியின் நடுவே நீர் மட்டத்தை தாண்டி வெளியே நீட்டிக் கொண்டிருந்தன. முகப்பில் வாங்கிய வரைபடத்தில் போட்டிருந்தபடி, லாஸெனின் மிகச் சிறந்த இடங்களை ( ஓவிய மணற்குன்று, ஸல்ஃபர் கரைகள்) காண பல கிலோ மீட்டர் நடக்க வேண்டும். மறுபடியும் அனுபவமின்மையால் குடி தண்ணீர் நாங்கள் வைத்திருக்கவில்லை. கொஞ்ச நேரம் ஏரி கரை வழியே அதைச் சுற்றி வந்தோம். பிறகு அதிகரித்துக் கொண்டேயிருக்கும் வெப்பத்தில் தண்ணீர் இல்லாமல் காட்டிற்குள் அதிகம் நடக்க வேண்டாம் என வேண்டா வெறுப்பாக முடிவெடுத்துவிட்டு திரும்பினோம்.
லாஸென் எரிமலை கடைசியாக 1915இல் மிகப் பெரிதாக வெடித்தது. அதிலிருந்து வெளிவந்த புகையும், சாம்பலும், எரியும் கற்களும் மலையின் வடக்கு நிலவெளியை முழுவதுமாக அழித்து விட்டன. அடுத்த 100 ஆண்டுகளில் சிறிது சிறிதாக மண்ணும், தாவரங்களும் தங்களை புதுப்பித்து மலைச்சரிவை சுற்றி வளர ஆரம்பித்துள்ளன. அந்த பேரழிவின் காரணமாக சம்மிட் ஏரிக்கு வடக்கே உள்ள நிலப்பகுதிக்கு “அழிக்கப்பட்ட இடம்” என்ற பெயரிட்டுள்ளார்கள். மலைப்புறம் முழுவதும் ஸெடர், பைன், ஆஸ்பென் மரங்களால் சூழப்பட்ட சாலையில் பயணித்து பூங்காவின் முடிவில் இருந்த மன்ஸானிடா ஏரியை அடைந்தோம். வருகிற பாதை முழுவதும் பல்வேறு சிறு ஓடைகளையும், ஏரிகளையும் பார்த்துக் கொண்டே வந்ததால் அந்த ஏரியை பார்ப்பதை விட வயிற்று பசி முக்கியமாக இருந்தது. விருந்தினர் கூடத்தில் வழி கேட்டு முக்கிய சாலையில் இருந்து பிரிந்து அரை மைல் தூரத்தில் இருந்த ஓய்வெடுக்கும் பகுதிக்கு சென்றோம். பெரும் ராட்சஸர்கள் போல் வளர்ந்திருந்த மரங்களுக்கு மத்தியில் மரத்தாலான வீடுகளும், பெட்றோல் கிடங்கும், ஒரு உணவு விடுதியும் கொண்ட ஓய்வு பகுதியில் பிஸ்ஸாவுடன் மதிய சாப்பாடு முடிந்தது.
எல்லா இடங்களிலும் குளியலறையும், கழிப்பறையும் மிக சுத்தமாக பராமரித்து வருகிறார்கள். இந்தியர்களும், சீனர்களும்தான் பார்த்துவிட்டு நகரும் சுற்றுலா பயணிகளாக இருந்தனர். அமெரிக்கர்கள் அல்லது வெள்ளையர்களில் பெரும்பாலானோர் தங்களுடைய வண்டியோடு ஒரு வீட்டையும் வைத்து இழுத்து வந்து அங்கு தங்குவதற்காக வருகிறார்கள். பெரிது, சிறிது, வெள்ளை, பழுப்பு என எல்லா விதங்களிலும் நாய்களை அவர்களுடன் காண முடிந்தது.
காரில் பெட்ரோல் நிரப்பி விட்டு அடுத்ததாக லாவா படுகைகளை நோக்கி கிளம்பினோம். லாஸெனில் இருந்து ஓரிகனை நோக்கி செல்லும் நெடுஞ்சாலை 139இல் இருந்து மேற்கில் பிரிந்து செல்லும் சாலையில் சென்றால் மோடாக் இயற்கை பூங்காவின் உள்ளே லாவா படுகைகள் அமைந்துள்ளன. மோடாக் என்பது ஒரு செவ்விந்திய குழுவின் பெயராகும். காலம்காலமாக அவர்களுடைய காலச்சாரத்தின் பகுதியாக இங்கிருக்கும் லாவா படுகைகளும், நிலத்தடி குகைகளும் இருந்து வந்துள்ளன. எழுதப்பட்ட வரலாறு உருவான காலத்திற்கு முன்பே கற்கால மனிதர்களின் உறைவிடமாகவும் இந்த பகுதி இருந்துள்ளது. 139இல் இருந்து பிரிந்து செல்லும் சாலையில் செல்லும் பொழுது அப்படி ஒரு இடத்திற்குதான் நாம் செல்கிறொம் என்று உள்ளுணர்வில் தோன்றுகிறது . ஒரு வாகனம் மட்டுமே போககூடிய அளவு குறுகிய, உடைந்த சாலை, சுற்றிலும் மஞ்சள் பூக்கள் கொண்ட இரண்டடி புதர்களால் சூழப்பட்டு, புரியாத வடிவில் எழுந்திருக்கும் சிறு குன்றுகள், அவற்றைத் தாண்டி வானமும் மண்ணும் தொடும் தூரம் வரை விரிந்து கிடக்கும் வெளி, அதில் எதையோ பார்த்துக் கொண்டு நிற்கும் தூரத்து ஒற்றை மலைகள் என 15 மைல்களுக்கு மனித நாகரிகத்தை விட்டு விலகி விலகிச் செல்வது போன்ற ஒரு பயணம். விருந்தினர் கூடத்தின் கூரையை பார்ப்பது வரை நாங்கள் செல்வது சரியான பாதைதானா என்ற குறுகுறுப்பு மனதில் இருந்தது. அப்போது நேரம் மாலை 4:30 மணி. 7 நாட்களுக்கு செல்லுபடியாகும் நுழைவுச் சீட்டை வாங்கிவிட்டு விசாரித்தோம். அங்கிருக்கும் குகைகளை எப்போதும் போய் பார்க்கலாம் ஆனால் அவர்றை பார்க்க கட்டாயம் கைவிளக்குகள் வேண்டும். அந்த அலுவலகத்தில் விளக்குகளை மாலை 5 மணி வரை வாடகைக்கு தருகிறார்கள். மறுபடியும் அனுபவமின்மையால் ஒரு குகையை பார்க்க வருகையில் கை விளக்கை கொண்டு வர வேண்டும் என்ற அறிவு எங்களுக்கு இல்லை. ஆனால் சிரத்தையுடன் பிஸ்கட், சிப்ஸ் போன்றவற்றை தேவைக்கு ஏற்றவாறு கொண்டு வந்திருந்தோம். வேறு வழியில்லை கிரேட்டர் ஏரியிலிருந்து திரும்புகையில்தான் குகைகளை பார்க்க இயலும் என்பது தெளிவானது. மிக சொற்ப எண்ணிக்கையில்தான் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். அங்கு வேறென்ன பார்ப்பதற்கு உள்ளது என விசாரித்ததில், குகைகள் தவிர லாவாவால் உருவான எரிமலை பள்ளம், புகைபோக்கி போன்ற பாறை உருவாக்கங்கள் மற்றும் பல லட்சம் ஆண்டுகளாக பொழிந்து வடிந்து போன தீக் குழம்புகளை கண்டவாறே செல்லக் கூடிய ஒரு சுற்றுச் சாலை போன்றவற்றைக் குறித்த தகவல்கள் கிடைத்தன.
இப்போது நண்பர்கள் இருவரும் என்னை ஓட்ட சொல்லிவிட்டார்கள். குதிரை போன்று இருந்த க்ரைஸ்லர் காரில் தார் போடப்படாத ரோட்டில் பின்னால் பார்க்க முடியாத அளவிற்கு புழுதியை கிளப்பிக் கொண்டு பயணிக்க ஆரம்பித்தோம்.
விருந்தினர் விடுதியை விட கூடுதல் ஆளரவமற்ற பகுதியில் “Mammoth Crater” என்ற இடத்தை தேடிச் சென்றோம். கிரைஸலரின் அகலத்தில் முக்கால் பகுதியே பொருந்தும் ரோட்டில் சென்று அடைந்தோம். உண்மையில் அது ஒரு பெரிய ராட்சஸனின் திறந்த வாய் போலிருந்தது. சிறு எரிமலையின் விளிம்பிலிருந்து நடுவே பார்ப்பது போன்ற ஒரு உணர்வை அந்த பள்ளம் உண்டாக்கியது. விளிம்பிலிருந்து பள்ளத்தை அருகில் சென்று பார்க்க தடுப்பு கம்பிகளுடன் சிறு படிக்கட்டு அமைத்திருக்கிறார்கள். பராமரிப்பு அற்று அது பாதியில் உடைந்திருந்தது. ஆனாலும் அதன் வழியே இறங்கி போய் பார்வையாளர் இடத்திலிருந்து பள்ளத்தைப் பார்த்தோம். மூன்று பக்கங்களிலிருந்தும் பெரும் மணல் சரிவைப் போல நிலம் சரிந்து விழுந்து கிடந்தது. அதன் சுற்றளவு நிச்சயமாக ஒரு மைலுக்கு கூடுதலாகவும், ஆழம் பத்து மாடிக் கட்டடம் அளவிற்கும் இருக்கலாம். அந்த சரிவில் பல மரங்கள் வளர்ந்திருந்தன. பல ஆயிரம் வருடங்களுக்கு முன் இங்குதான் பூமி விலகி லாவா அருவியாக இந்த பகுதி முழுவதும் எரிந்து ஓடியிருக்கிறது. இன்று எல்லாம் அடங்கி தொல்லைத் தரக்கூடிய அமைதியும், ஆழத்தையும் தன்னில் வைத்துக் கொண்டு வாய் பிளந்து கிடக்கிறது. ஆழத்தையும், விரிவையும் ஒரு சேர கண்களாலும், மனதாலும் உள்வாங்க இயலவில்லை. ஒன்றை பார்க்கையில் மற்றொன்று சிறிதாகி விடுகிறது. இதைப் போன்ற இடங்களில் மனது இங்கும் அங்கும் ஓடுவது போல தோன்றுவது உண்டு, அது அங்கிருக்கும் அமைதியால் கூட இருக்கலாம். நெற்றியில் அடிக்கும் சூரிய ஒளியால் அந்த ஆழத்தை ஒரு புகைப்படம் கூட சரியாக உள்வாங்கவில்லை.
அடுத்ததாக சுற்றுச் சாலையை பிடிக்கும் வழியில் இருந்த லாவா புகைபோக்கிகளை பார்வையிட்டோம். சம வெளியில் எரிமலைக் குழம்பு வெடித்து வெளிவருகையில் அது சிறு குன்றுகளாக உறைந்து விடும். அது சில காலங்களில் ஒரு கட்டுமானமாக மாறி அதன் நடுவில் உள்ள குழிகளின் வழியே லாவா வழிந்து கொண்டேயிருக்கும். நாளடைவில் வெளியிலிருந்து பார்ப்பதற்கு அவை இயற்கையாக உருவான பிரம்மாண்ட புகைபோக்கிகளாக மாறிவிடும். அப்படி உருவான மூன்று புகைபோக்கி சகோதிரிகள் அங்கிருந்தனர். அந்த குன்றுகள் இறுகிப் போன கூர்மையான முனைக் கொண்ட கருப்பு களிமண் பாறைகளை போல இருந்தன. எனக்கு அவற்றை பார்த்த போது ஜுராஸிக் பார்க் படத்தில் டைனோசரின் சாணத்தை பிரம்மண்டமாக்கி அங்கு வைத்திருப்பது போல தோன்றியது. ஒவ்வொன்றிற்கும் நடுவே மேலெழும் குழாய் போன்ற அமைப்பு உருவாகியிருந்தது. ஒன்றில் மட்டுமே துளை இருந்தது மற்றவைகள் மூடிவிட்டன. அந்த சிறு துளையைச் சுற்றி கம்பிகளால் ஆன வேலி போட்டிருந்தார்கள். ஒரு தடுப்பு கம்பியை மட்டும் மேல் நோக்கி நகர்த்திக் கொள்ளும் வசதி செய்யப்பட்டிருந்தது. அதை தூக்கிவிட்டு நெஞ்சு வரை உள்ளே நுழைத்து பூமியின் ஆழத்திற்கு குடைந்து போகும் துளையை செங்குத்தாக கண்டேன், படம் பிடித்தேன், ஆ,ஓ என கத்தி எதிரொலித்தேன்.
அடுத்ததாக ஓரிகன் செல்லும் நெடுந்சாலையை அடையும் சுற்றுச் சாலையில் பயணம் தொடங்கியது. மடாக் இயற்கை காட்டில் வழியே அமைந்திருந்த சாலையில் கொஞ்சம் கொஞ்சமாக பாலை போன்ற நிலம் மாறி செழிப்பான நிலம் எங்களை எதிர் கொண்டது. எரிமலை சாம்பல்களும், பாறைகளும் குளிர்ந்த பிறகு அவ்விடம் செழிப்படையும் என்பது கண்முன்னே தெரிந்தது. இங்கு நடந்தது எரிமலை வெடிப்பு அல்ல, மாறாக சம வெளியிலும், சிறு மலைகளிலும் பூமி பிரிந்து உருவான லாவாவின் பிரம்மாண்ட ஒழுக்கு. அந்த சாலை “சாத்தானின் வளாகம்” என்ற பெயரிடப்பட்ட லாவா ஒழுக்கை அறுத்துச் சென்றது. சாலையில் இடது பக்கம் ஆயிரம் அடி உயரமான மதிலைப் போன்று சீரான மலை, வலது பக்கம் சம வெளி. மலையிலும், சமவெளியிலும் மஞ்சள் நிறத்தில் காய்ந்து போன நெடும் புற்கள். ஆனால் அவற்றின் இடையில் மலையின் மறு பக்கத்திலிருந்து நிரம்பி வடிந்ததைப் போல பல மைல்களுக்கு சாய்வாக வரி வரியாக கருப்பு பாறைகள். சம வெளியில் அவையெல்லாம் ஒன்று சேர்ந்து பெரும் சுனையைப் போல ஓடி, உறைந்து போனதற்கான சான்றுகள் கொத்திப் போடப்பட்ட நிலம் போல மஞ்சள் புல்வெளியின் நடுவே பெரும் வளாகமாக கிடந்தது.
தண்ணீர் தொட்டியிலிருந்து ததும்பி வடியும் நீரை தரையிலிருந்து எறும்பு காண்பதைப் போல, பல லட்சம் வருடம் முன்பு இங்கு நடந்த இயற்கையின் தாண்டவத்தின் மௌன சாட்சிகளை இருபக்கங்களிலும் பார்த்துக் கொண்டே பயணப்பட்டுக் கொண்டிருந்தோம்.
அந்த பகுதியை கடந்தவுடன் முழுவதுமாக பாறைகளும், மலைகளும் பின்வாங்கி, புல்வெளிகளும், டூலே ஏரியின் நீண்ட கரையும் ஆரம்பித்து விட்டது. டூலே ஏரியின் மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இருந்த பறவைகளை காணும் இடத்தில் நின்று ஏரியையும், அங்கு வந்து இறங்கும் பறவைகளையும் பார்த்துக் கொண்டிருந்தோம். அவை என்ன பறவைகள் என தெரியவில்லை. குருவிகளைப் போல வெடுக்கென்று திசை திருப்பி பறந்து கொண்டிருந்தன. நண்பன் அதன் பெயர் “Swallow” என்று கூறினான். அதைத் தவிர காடைகளை அடையாளம் காண முடிந்தது. அங்கிருந்து ஏரியின் மறுபுறம் அமைந்த சிறு மலையும், விளைச்சல் நிலங்களும், தானிய கிடங்குகளும், அந்த நேரம் கடந்து சென்று கொண்டிருந்த ரயில் வண்டியும் கார்ட்டூனில் வரும் பொம்மைகளைப் போல தெரிந்தன.
லாவா மலைகளின் மறுபக்கம் நடைபெறும் சூரிய அஸ்தமனத்தை காண இயலாது என்பதால் மேலும் காத்திருக்காமல் ஓரிகனை நோக்கி கிளம்பி விட்டோம். ஓரிகனுக்கான பயணம் நெடுஞ்ச்சாலை 111இல் வலது பக்கம் விளைச்சல் நிலங்களும், இடது பக்கம் சரி சமமாக வரும் ரயில் தண்டாவளங்களுடன் சென்றது. எல்லா விளைச்சல் நிலங்களும் மஞ்சள் நிறத்திற்கு மாறிவிட்டன. அவற்றில் குறைந்தபட்சம் 4 தானிய கிடங்குகளும், தானியங்களை பொதிவதற்கான கருவிகள் கொண்ட கட்டடங்களும் இருந்தன. வளைகுடா பகுதியிலிருந்து இதை முதலில் பார்த்திருந்தால் ஆச்சரியப்பட்டிருப்போம், லாவா மலையிலிருந்து வந்து இதைப் பார்த்த போது ஆரம்பத்திலிருந்த ஆச்சரியம் சலிப்பாக மாறிவிட்டது.
இரவு 8:30 மணிக்கு க்ளாமத் அருவி நகரில் தங்கும் விடுதியை அடைந்தோம். க்ளாமத் அருவி பெரிய ஊர் என சொல்லி விட இயலாது. 9 மணிக்கு எரியும் பசியுடன் மறுபடியும் ஊருக்குள் சென்ற போது ஆள் நடமாட்டம் அற்று இருந்தது. இணையத்தில் பார்த்து வைத்திருந்த கடைகள் எல்லாம் 9 மணிக்கு மூடி விட்டார்கள். நம்பகத்தன்மையோடு கூடிய ருசியுடன் சாப்பிட டென்னிஸ் தொடர் சங்கிலி உணவு விடுதிக்கு 10:30 மணி வாக்கில் சென்றோம். அடுத்த நாள் கிரேட்டர் ஏரிக்கு காலை 9 மணிக்கு கிளம்பலாம் என்று முடிவானது. அதற்கு பின், இந்த கட்டுரையை எழுத ஆரம்பிக்கலாம் என நோட் புத்தகத்தை எடுத்து வைத்து படுக்கையில் சாய்ந்து உட்கார்ந்த ஞாபகம் உள்ளது.
தொகுக்கப்பட்ட பக்கம்: பயணங்கள், முத்துகிருஷ்ணன் பதிவுகள்
Like this:
Like ஏற்றப்படுகின்றது...