ஆர்.எம். வீரப்பன் மறைவு

ஆர்.எம். வீரப்பன் நிறைவாழ்வு வாழ்ந்து 98 வயதில் மறைந்தார்.

வீரப்பன் எம்ஜிஆர் விசுவாசி என்பது தெரிந்ததே. எம்ஜிஆரை வைத்து பல திரைப்படங்கள் எடுத்திருக்கிறார். அனேகமாக எல்லாமே வெற்றிப் படங்கள். எம்ஜிஆர் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திய பிறகும் நிறைய வெற்றிப் படங்களை எடுத்தவர். அறநிலையத் துறை அமைச்சராக பல ஆண்டுகள் இருந்தார். எம்ஜிஆரின் உடல்நிலை மோசமானபோது கட்சி அவர் கைக்குள்தான் இருந்தது. ஆனால் மக்கள் செல்வாக்கில்லாதவர், ஜானகியை முன்னால் வைத்து தான் கிங்மேக்கராக இருக்க அவர் எடுத்த முயற்சிகள் தோல்வி அடைந்தன. ஜெயலலிதா மீது எப்போதுமே கொஞ்சம் காழ்ப்பு இருந்திருக்கிறது. இருந்தாலும் ஜெ மந்திரி சபையிலும் கொஞ்ச நாள் இருந்தார். அதற்குப் பிறகு அரசியல் அஸ்தமனம்தான்.

சிலிகன்ஷெல்ஃபில் புத்தகங்கள்தான். வீரப்பன் எம்ஜிஆர் யார் என்று ஒரு புத்தகத்தை எழுதி இருக்கிறார். அதில் எம்ஜிஆரை விட ஜெயலலிதா பற்றிதான் அதிகம் எழுதி இருக்கிறார். ஜெ மீது எப்போதும் எம்ஜிஆருக்கு ஒரு soft corner இருந்திருக்கிறது. ஜெ தான் எம்ஜிஆரின் ‘துணைவி’, தன்னால் எம்ஜிஆரை அடக்கி ஆள முடியும் என்று காட்ட அறுபதுகளின் இறுதியிலும் எழுபதுகளின் ஆரம்பத்திலும் முயன்றாராம். ஆர்எம்வீயின் தலையீட்டால்தான் ஜெ உலகம் சுற்றும் வாலிபனில் நடிக்க முடியாமல் போயிற்றாம். ஆர்எம்வீ ஜெவை நீங்கள் அழைத்துச் சென்றால் உங்கள் கீப்பை அழைத்துக் கொண்டு ஜாலியாகப் போகிறீர்கள் என்றுதான் பேச்சு வரும் என்ற் வெளிப்படையாகவே எம்ஜிஆரிடம் சொன்னாராம். அப்போது ஆரம்பித்த உரசல் அரசியலிலும் நீடித்திருக்கிறது.

உண்மையில் சந்திரகலாவுக்கு பதில் ஜெ உலகம் சுற்றும் வாலிபனில் நடித்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்றுதான் தோன்றுகிறது.

ஆர்எம்வீ தன் நினைவுகளை உண்மையாக எழுதி இருந்தால் அவை முக்கியமான ஆவணமாக இருந்திருக்கும். இப்போதைக்கு இந்த ஒரு புத்தகம் அறுபதுகளில் இறுதியில், எழுபதுகளில் ஆரம்பத்தில் ஜெ-எம்ஜிஆர் உறவைப் பற்றி ஊர் உலகத்தில் என்ன நினைத்தார்கள் என்பதைக் கொஞ்சம் தெளிவாக்குகிறது. படிக்கலாம், ஆனால் இதெல்லாம் தமிழர்களுக்கு மட்டும்தான்…

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் அபுனைவுகள்

தொடர்புடைய சுட்டி: ஒரு பழைய கிண்டல் பதிவு

அசோகமித்ரன் தி.ஜா.வுக்கு எழுதிய அஞ்சலி

தி.ஜா. 1982-இல் மறைந்தபோது அசோகமித்ரன் எழுதிய அஞ்சலி: (கல்கிக்கு நன்றி).

ஜானகிராமன் மறைவு பற்றி கேள்விப்பட்டதும் நானும் ஐய்யய்யோ என்றுதான் கத்தினேன். வெயில் திடீரென்று சகிக்க முடியாத தீவிரத்தை அடைந்த மாதிரி இருந்தது.

அசோகமித்ரன் இதை விட உணர்ச்சிகரமாக எழுதியது அபூர்வம்தான் என்று நினைக்கிறேன். இத்தனை அடக்கி வாசிப்பது எத்தனை உணர்வுபூர்வமான தருணமாக இருக்கிறது!

(சாஹித்ய அகாடமி பரிசு ஜானகிராமனுக்கு) மறுக்கப்பட்ட பல் ஆண்டுகளில் அகாடமி குழுவினரின் விவாதங்களை யாராவது வெளிப்படுத்த முடியுமானால் பல விசித்திரமான தகவல்கள் தெரிய வரலாம்.

என்ற வரிகள் தி.ஜா.வை விட அசோகமித்திரனின் ஆளுமையைத்தான் வெளிப்படுத்துகின்றன. தி.ஜா.வுக்கு விருது தரப்பட தாமதம் என்பதை எத்தனை மென்மையாகச் சொல்கிறார்? அசோகமித்ரனால் முடிந்த கடுமையான விமர்சனமே இவ்வளவுதான் என்று நினைக்கிறேன்.

அசோகமித்திரனின் கதைகளில்தான் இப்படி எல்லாம் நடக்கும் என்று பார்த்தால் அவர் வாழ்விலுமா? சிதம்பர சுப்ரமணியனைத் தேடி அலைந்ததை விவரிக்கிறார் – அவரது டச் தெரியும் வரிகள்

ஒரு வாரம் பொறுத்து சரியான முகவரி தெரிந்து கொண்டு நான் சிதம்பர சுப்ரமணியன் வீட்டுக்குப் போனேன். அந்தத் தெருவே வேறு. அவரை எனக்குப் பார்க்க வாய்ப்பில்லை. அன்று அவர் காலமாகிவிட்டிருந்தார்.

எழுத்தாளர் ராஜரங்கன் என்று குறிப்பிடுகிறார். யார் என்றே தெரியவில்லை.

தி.ஜா. தஞ்சாவூரின் மண் வாசனையை எழுத்தில் கொண்டு வந்தவர் என்பதை விட தஞ்சாவூர் போன்ற நீண்ட பாரம்பரியத்தில் வந்தவர்களுக்கு நவீன வாழ்க்கையின் சவால்களோடு செய்து கொள்ளும் சமரசங்களை எழுதியவர் என்கிறார். மிகச்சரி. கி.ரா. கரிசல் மண் வாசனையை எழுத்தில் கொண்டு வந்தார்; தி.ஜா. அந்த பாரம்பரியத்திற்கு உள்ள சவால்களை எழுதினார் என்பது நல்ல அவதானிப்பு.

அசோகமித்திரன் அம்மா வந்தாளை விட உயிர்த்தேனை உயர்வாக மதிப்பிடுகிறார் என்பது வியப்பு. அவர் சிறுகதைகளைப் பற்றி சொல்லவே இல்லை என்பது பெருவியப்பு!

வசதிக்காக கீழே.


ஒருவர் அந்தரங்கமாகப் பழகிவிட்டால் அவர் பேராற்றல் படைத்தவரானாலும் அவருடைய மனிதப் பண்புகள்தான் முதலில் நினைவு வருகிறது. வியாழன் நவம்பர் 18 பிற்பகல் சுமார் 1 மணிக்கு தி. ஜானகிராமன் இறந்துட்டார் என்ற செய்தி எனக்குக் கிடைத்தபோது அவர் எனக்காக வெயிலில் வாடி வதங்கிய தருணங்கள்தான் உடனே மனதில் தோன்றின. ஏனோ நாங்கள் இருவரும் நெடுநேரம் பேசியதெல்லாம் நல்ல வெயில் நேரமாக இருந்திருக்கிறது. அவர் டில்லிக்குக் குடி போகும் முன் சென்னையில் வசித்த நாட்களில் சைக்கிளில்தான் எங்கும் போவார், வருவார். இருபது வருடங்களுக்கு மேலாகிறது – என்னுடைய கதை முதன்முதலாக இல்லஸ்ட்ரேடட் வீக்லியில் வெளியாகி இருந்தது. ஜானகிராமன் வழியில் என்னைப் பார்த்து சைக்கிளை நிறுத்தினார். நல்ல புரட்டாசி வெயிலைப் பொருட்படுத்தாமல் ஒரு மணி நேரம் பேசிக் கொண்டிருந்தோம். அவருக்கு மிகவும் பெருமை, சந்தோஷம்.

இன்னொரு சித்திரைப் பகல். கடுமையான வெயில். “சிதம்பர சுப்ரமணியத்துக்கு உடம்பு சரியில்லையாம். போய்ப் பார்த்துவிட்டு வருவோம்.” என்றார். அவர் வைத்திருந்த முகவரிக்குப் போனோம். அங்கு சிதம்பர சுப்ரமணியன் இல்லை.  அடுத்த வீட்டுக்குப் போனோம். அங்கும் இல்லை. ஒவ்வொரு வீடாக அந்தத் தெருவில் இருந்த அனைத்திலும் விசாரித்தோம். எழுத்தாளர் சிதம்பர சுப்ரமணியன் பற்றிக் கேள்விப்பட்டது கூடாது. அன்று மாலையே ஜானகிராமன் டில்லி திரும்ப வேண்டி இருந்தது. ஒரு வாரம் பொறுத்து சரியான முகவரி தெரிந்து கொண்டு நான் சிதம்பர சுப்ரமணியன் வீட்டுக்குப் போனேன். அந்தத் தெருவே வேறு. அவரை எனக்குப் பார்க்க வாய்ப்பில்லை. அன்று அவர் காலமாகிவிட்டிருந்தார்.

இந்தத் தீபாவளிக்கு மறு நாள் நானும் எழுத்தாளர் ராஜரங்கனும் ஜானகிராமனைப் பார்க்கப் போயிருந்தோம். அவர் வீட்டில் இல்லை. ஆஸ்பத்திரியில் சேர்த்திருந்தார்கள். நெருக்கடி ஒன்றும் இல்லை. சில பரிசோதனைகளை ஒழுங்காகப் செய்து பார்க்கத்தான். நல்ல வெயில், இப்போது சிரமப்படுத்த வேண்டாம், ஒரு மாலைப் பொழுதில் போய்ப் பார்க்கலாம் என்று திரும்பி வந்துவிட்டோம். அந்த மாலை வருவதற்குள் அவர் போய்விட்டார்.

ஜானகிராமனின் கலையுணர்வு அவருடைய சிறுகதைகளிலும் நாவல்களிலும் எல்லாருக்கும் தெரியக் கிடைக்கும். ஆனால் சாதாரண அன்றாடப் பேச்சு வார்த்தைகளிலும் செய்கைகளிலும் கூட அவருடைய மென்மையான, பண்பட்ட தன்மை அவரோடு நெருங்கிப் பழகியவர்களுக்குத்தான் தெரியும். அவருக்கு யாரையும் வெறுக்க முடிந்திருக்க முடியாது. அதனால்தான் அவருடைய படைப்புகளிலும் முற்றிலும் தீய பாத்திரம் என்று ஒன்று கிடையாது. குரோதமும் துவேஷமும் எப்போதோ வெளிப்பட சந்தர்ப்ப சூழ்நிலைதான் காரணம்.

ஜானகிராமன் நிறைய எழுதியும் சாவு அவருடைய கவனத்தை அதிகம் பெற்றதில்லை. மனித சிருஷ்டியின் நிரந்தரத்தன்மைதான் அவருள் நிறைந்திருக்க வேண்டும். தஞ்சாவூர் மண் வாசனையை தமிழ் உரைநடையில் வார்த்தவர் என்று எல்லாரும் அவரை அடையாளம் கூறுகிறார்கள். அதை விட தஞ்சாவூர் போன்ற நீண்ட பாரம்பரியம் உடைய கலாசாரத்தின் பிரதிநிதிகள் சமரசங்கள் மிகுந்த இன்றைய வாழ்க்கையில் தங்களை பொருத்திக் கொள்ள முயலும் ஆழ்ந்த துன்பத்தைத்தான் அவர் பிரதிபலிக்க முயற்சி செய்தார் என்பதுதான் பொருத்தமானது.

ஜானகிராமனின் பெண் பாத்திரங்கள் பெரிதும் விவாதிக்கப்பட்டவை. ஜானகிராமனின் மகோன்னதப் பாத்திரங்களும் பெண்கள்தான். அவருடைய சிறந்த படைப்புகளாக மோகமுள்ளையும் அம்மா வந்தாளையும் கூறுகிறார்கள். ஆனால் அவரது பாத்திரங்கள் பரிபூரணமாக வெளிப்பட்ட நாவல் உயிர்த்தேன் என்றே தோன்றுகிறது.

ஜானகிராமன் எழுதின நாடகங்கள் (நாலு வேலி நிலம், வடிவேலு வாத்தியர், டாக்டருக்கு மருந்து) எஸ்.வி. சஹஸ்ரநாமத்திற்காக அவரது உந்துதலில் எழுதப்பட்டவை. ஜானகிராமனோடு நெருங்கிப் பழக எனக்கு வாய்ப்பு ஏற்பட்டதே சஹஸ்ரநாமம் வீட்டில்தான். கலாசாகரம் ராஜகோபால், என்.வி. ராஜாமணி, கு. அழகிரிசாமி, பி.எஸ். ராமையா, முகவை ராஜமாணிக்கம் என ஒரு தமிழ்க் கலை இலக்கியத்திற்கு சஹஸ்ரநாமத்தின் சேவா ஸ்டேஜ் மையமாக இருந்தது.

யாரையும் உற்சாகப்படுத்துவது ஜானகிராமனின் இயல்பு. அதனாலேயே ஒவ்வொரு தலைமுறையிலும் அவருக்கு ஏராளமான நண்பர்கள் உண்டு. பல இந்திய மொழிகளிலும், ஆங்கிலத்திலும், ரஷ்ய மொழியிலும் அவருடைய நாவல்கள் மொழிபெயர்க்கப்பட்டு ரசிக்கப்பட்டிருக்கின்றன. உலகின் பல நாடுகளில் இலக்கியக் குழுவினர் மதிக்கும் தமிழ் எழுத்தாளர்களில் அவர் தனி இடம் பெற்றவர்.

சாஹித்ய அகாடமி பரிசு ஜானகிராமனுக்கு அளிக்கப்பட்டது பற்றி எல்லா அரசு செய்தி ஸ்தாபனங்களும் குறிப்பிட்டிருக்கின்றன. ஆனால் அது அவருக்கு மறுக்கப்பட்ட பல் ஆண்டுகளில் அகாடமி குழுவினரின் விவாதங்களை யாராவது வெளிப்படுத்த முடியுமானால் பல விசித்திரமான தகவல்கள் தெரிய வரலாம்.

மரணம் எப்போது நேர்ந்தாலும் அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. ஜானகிராமன் மறைவு பற்றி கேள்விப்பட்டதும் நானும் ஐய்யய்யோ என்றுதான் கத்தினேன். வெயில் திடீரென்று சகிக்க முடியாத தீவிரத்தை அடைந்த மாதிரி இருந்தது.

ஜானகிராமன் கடைசி முறையாக சுவாசம் விட்டு அமைதி அடைந்த போதும் நல்ல வெயில் அடித்துக் கொண்டிருந்தது.

நவம்பர் 19, 1982

அசோகமித்திரன்


அசோகமித்திரன் எழுதிய வெகுஜனப் பத்திரிகை குமுதம் ஒன்றுதான் என்று நினைத்திருந்தேன். குறைந்த பட்சம் கல்கியிலும் எழுதி இருக்கிறார். அவரது (சுமாரான) சிறுகதை ஒன்றும் – பளு – கண்ணில் பட்டது.

தொகுக்கப்பட்ட பக்கம்: அஞ்சலிகள், தி.ஜா. பக்கம், அசோகமித்ரன் பக்கம்

தொடர்புடைய சுட்டிகள்:

அஞ்சலி: பேராசிரியர் பசுபதி

பேராசிரியர் பசுபதி மறைந்த செய்தி கொஞ்சம் திடுக்கிட வைத்தது. பைபாஸ் சர்ஜரி என்று சொல்லி இருந்தார், ஆனால் பதிவுகள் தொடர்ந்து கொண்டேதான் இருந்தன. இதோ வந்துவிடுவார் என்றுதான் நினைத்திருந்தேன். என்ன ஆயிற்று என்று தெரியவில்லை.

பார்த்ததில்லை, பேசியதில்லை, இணையம் மூலமாகத்தான் பழக்கம். ஆனாலும் மிகவும் வருத்தம் தந்த செய்தி. சஹிருதயர் என்றே உணர்ந்திருந்தேன். இருபது வருஷம் முன்னால் பிறந்திருந்தால் என் ரசனை ஏறக்குறைய அவரைப் போலத்தான் இருந்திருக்கும். இருபது வருஷம் பிந்திப் பிறந்திருந்தால் அவர் ரசனை என்னைப் போலத்தான் இருந்திருக்கும்.

அவரது தளத்தைப் படிப்பது எப்போதும் ஆர்வம் ஊட்டும் ஒன்று. பழைய பத்திரிகைகளின் சிறந்த ஆவணம். எங்கிருந்துதான் இத்தனை பத்திரிகைகளை பிடிக்கிறாரோ என்று வியந்திருக்கிறேன்.

கவிதை இயற்றிக் கலக்கு, சங்கச் சுரங்கம் என்ற புத்தகங்களையும் எழுதி இருக்கிறார்.

என் போன்றவர்களுக்கு இணையம் மூலமாகத்தான் பழக்கம். ஆனால் அவருக்கு வேறு ஒரு பக்கமும் உண்டு. பசுபதி கிண்டி பொறியியல் கல்லூரி ஆரம்பித்து பிறகு சென்னை ஐஐடி, பிறகு யேல் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்ற பொறியாளர். பிறகு டோரண்டோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார். Professor Emeritus என்ற நிலைக்கு உயர்ந்தார்.

இந்த இழப்பிலிருந்து மீள ஆண்டவன் அவர் குடும்பத்துக்கு பலத்தை அருளட்டும்…

தொகுக்கப்பட்ட பக்கம்: அஞ்சலிகள்

அஞ்சலி: பா. செயப்பிரகாசம்

அடுத்தடுத்து இரண்டு எழுத்தாளர் மறைவு.

பா. செயப்பிரகாசத்தை நான் அதிகம் படித்ததில்லை. நிஜமான பாடல்கள் சிறுகதை பிடித்திருந்ததால்தான் இந்த அஞ்சலியை எழுதுகிறேன்.

இன்குலாபுக்கு சாஹித்ய அகடமி விருது வழங்கப்பட்டபோது நடுவர் குழுவில் இருந்த பா. செயப்பிரகாசத்தை ஜெயமோகன் அதிகார வெறி பிடித்த ஆக்டோபஸ், இலக்கியம் பற்றி அறியாதவர், ராஜேஷ்குமாருக்கும் அசோகமித்திரனுக்கும் வித்தியாசம் தெரியாதவர் என்று கழுவி ஊற்றினார். அரசு உயர் அதிகாரி இடதுசாரி புரட்சி அமைப்பின் தலைவராக எப்படி இருக்க முடியும் என்ற கேள்வியை எழுப்பினார். ஒருவர் மீது மற்றவர் அவதூறு வழக்கு தொடுத்தனர் என்று நினைவு.

ஆனால் என் கண்ணில் செயப்பிரகாசம் இலக்கியவாதிதான். இது ஒரே ஒரு சிறுகதைத் தொகுப்பைப் படித்த பிறகு எழுந்த எண்ணம்தான், sample size சிறியதுதான். என்றாலும் இப்படிப்பட்ட சிறுகதைகளை எழுதியவருக்கு அசோகமித்திரன் என்ன எழுதினார், ராஜேஷ்குமார் என்ன எழுதுகிறார் என்று தெரியாமல் இருக்க முடியாது. எனக்கே தெரிகிறது.

ஆனால் செயப்பிரகாசம் முன்னணியில் இருக்கும் இலக்கியவாதி அல்லர். அவர் எழுதிய எந்த சிறுகதையும் நான் ஒரு anthology-யைத் தொகுத்தால் அதில் இடம் பெறாது. இது சுவை வேறுபாடு அல்ல, அவர் எங்கோ பின்னால்தான் நிற்கிறார். ஏழைகளின் உலகத்தை, குறிப்பாக கிராமத்தில் ‘கீழ்ஜாதியினரை’ பற்றிய “முற்போக்கு” கதைகள்தான் மீண்டும் மீண்டும். பல இடங்களில் இதைத்தான் சொல்லப் போகிறார் என்று தெரிந்துவிடுகிறது. ஆனால் அவரது எழுத்தில் தெரியும் genuineness அவரை இலக்கியத்துக்கு அருகிலாவது கொண்டு வருகிறது. சுமாரான எழுத்தாளர் என்றே மதிப்பிடுகிறேன். இதுவும் அந்த ஒரு சிறுகதைத் தொகுப்பை வைத்து எழும் கருத்துதான்.

செயப்பிரகாசத்தை நல்ல எழுத்தாளராக மதிக்காத ஜெயமோகனே கூட அவரது இதழியல் பங்களிப்பு முக்கியமானது என்று அங்கீகரிக்கிறார். செயப்பிரகாசம் மன ஓசை என்ற சிற்றிதழின் ஆசிரியராக இருந்தவர்.

அவரது ஆளுமையை அவரோடு நேரடியாகப் பழகிய பெருமாள் முருகன் தன் அஞ்சலிக் கட்டுரையில்சி விவரித்திருந்தார். என்ன காரணத்தாலோ இப்போது தலைப்பு மட்டுமே இருக்கிறது. பெ. முருகன் உட்பட்ட பலருக்கு நிறைய உதவி செய்திருக்கிறராம். அதிகார பீடங்களை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டவர், நிறைய உதவி செய்பவர், முன்னோடி இதழியலாளர், சில நல்ல சிறுகதைகளை எழுதியவர் ஆகிய நான்குமே சரியாக இருக்க வாய்ப்பிருக்கிறது.

செயப்பிரகாசம் ஒரு தளத்தை நடத்திக் கொண்டிருந்தார்.

வழக்கமான வரிதான் – எழுத்தாளருக்கு அஞ்சலி என்பது அவரது படைப்புகளைப் பற்றி எழுதுவதுதான். அவரது அக்னி மூலை சிறுகதைத் தொகுப்பை பற்றி எழுதியதை மீள்பதித்திருக்கிறேன்.


பா. செயப்பிரகாசத்தின் பேரை அங்கே இங்கே கேட்டிருந்தாலும், அவருடைய அம்பலக்காரர் வீடு சிறுகதையை எங்கோ (விட்டல்ராவ் தொகுத்த இந்த நூற்றாண்டு சிறுகதைகள் தொகுதி என்று நினைக்கிறேன்) படித்திருந்தாலும் சமீபத்தில் ஜெயமோகன் அவரைக் கழுவி ஊற்றியபோதுதான் அவரது பெயர் பிரக்ஞையில் ஏறியது. கையில் கிடைத்த ஒரு சிறுகதைத் தொகுப்பைப் – அக்னி மூலை – படித்துப் பார்த்தேன்.

இந்தக் கதைகளில் எனக்குப் பிடித்தவை ‘நிஜமான பாடல்கள்‘. ஏழை கொத்தாசாரி கோவில் வேலை கிடைக்கும், பிள்ளைகளுக்கு சோறு போடலாம் என்ற எதிர்பார்ப்பு தகரும்போது சாமி சிலையை உடைக்கிறான். இந்த மாதிரி ஒற்றை வரி சுருக்கங்களை வைத்து இந்தக் கதையை மதிப்பிட முடியாது, படித்துத்தான் பார்க்க வேண்டும். வளரும் நிறங்கள் சிறுகதையில் அந்தக் கால சண்டியரை இன்று அடையாளம் கண்டு கொள்ளும் தருணம் நன்றாக வந்திருந்தது. அக்னி மூலை, ஒரு ஜெருசலேம் போன்றவை பரவாயில்லை ரகம். அம்பலக்காரர் வீடு, தாலியில் பூச்சூடியவர்கள் இரண்டும் அவரது சிறுகதைகளில் அவ்வப்போது தேர்ந்தெடுக்கப்பட்டு தொகுக்கப்படுகின்றன.

பா. செயப்பிரகாசம் ‘முற்போக்கு’ எழுத்தாளர் என்று நினைக்கிறேன். ஏழைகளின் உலகத்தை, குறிப்பாக கிராமத்தில் ‘கீழ்ஜாதியினரை’ பற்றிய கதைகள்தான் மீண்டும் மீண்டும். ‘முற்போக்கு’ எழுத்து என்றல்ல, சட்டகத்தை வைத்து அதற்குள் எழுதப்படும் எழுத்து அனேகமாக இலக்கியம் ஆவதில்லை. பல இடங்களில் இதைத்தான் சொல்லப் போகிறார் என்று தெரிகிறது. ஆனால் அவரது எழுத்தில் தெரியும் genuineness அவரை இலக்கியத்துக்கு அருகிலாவது கொண்டு வருகிறது. சுமாரான எழுத்தாளர் என்றே மதிப்பிடுகிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் எழுத்தாளர்கள்

தொடர்புடைய பக்கங்கள்:
செயப்பிரகாசத்தின் தளம்
பா.செயப்பிரகாசத்தின் தாலியில் பூச்சூடியவர்கள் சிறுகதை
பா.செயப்பிரகாசத்தின் தடையம் சிறுகதை
பா.செயப்பிரகாசத்தின் மகன் சிறுகதை
பா.செயப்பிரகாசத்தின் புத்தர் ஏன் நிர்வாணமாக ஓடினார் சிறுகதை
பா.செயப்பிரகாசத்தின் மூளைக்காய்ச்சல் சிறுகதை

அஞ்சலி: தெளிவத்தை ஜோசஃப்

காலம் தாழ்ந்த அஞ்சலிதான், தெளிவத்தை ஜோசஃப் மறைந்து ஒரு வாரத்திற்கு மேல் இருக்கும் என்று நினைக்கிறேன்.

எந்த எழுத்தாளனுக்கும் அஞ்சலி என்பது அவர் எழுத்துக்களைப் பற்றி பதிவு செய்வதுதான் என்று நான் உறுதியாகக் கருதுகிறேன். அவரது சில எழுத்துக்களைப் பற்றி.

தெளிவத்தை ஜோசஃப் பற்றி முதன்முதலாக கேள்விப்பட்டது அவருக்கு விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டபோதுதான். தமிழகத்தில் அதிகம் தெரியாத நல்ல எழுத்தாளரைத் தேடிப் பிடித்து விருது கொடுத்த ஜெயமோகனையும் விஷ்ணுபுரம் குழுவினரையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

நூலகம் தளத்தில் ஜோசஃப்பின் சில புத்தகங்கள் கிடைத்தன. சில சிறுகதைகள் – மனிதர்கள் நல்லவர்கள், கத்தியின்றி ரத்தமின்றி – இணையத்தில் கிடைக்கின்றன.


நாமிருக்கும் நாடே 1979-இல் வெளிவந்த சிறுகதைத் தொகுப்பு. மீன்கள் சிறுகதை இந்தத் தொகுப்பின் சிறந்த சிறுகதை. ஜெயமோகன் இந்தச் சிறுகதையை தன் சிறந்த சிறுகதைகள் பட்டியலில் சேர்க்கிறார். அவரது வார்த்தைகளில்:

என்னுடைய நவீனத் தமிழிலக்கிய அறிமுகம் நூலில் சிறந்த நூறு தமிழ்ச் சிறுகதைகள் – விமர்சகனின் சிபாரிசு என்ற பட்டியலில் நான் சேர்த்திருந்த கதை இது. மீன்கள் மலையகத் தொழிலாளர் வாழ்க்கையின் ஒரு எரியும் துளி. அவர்கள் வாழ்க்கையின் தலையாய பிரச்சினையை பிரச்சார நெடியில்லாமல் சித்தரிக்கிறது இது.

பாவண்ணன் இந்த சிறுகதையை இங்கே விலாவாரியாக அலசுகிறார்.

இந்தத் தொகுப்பில் சில கதைகள் சாதாரண – தீட்டு ரொட்டி, மண்ணைத் தின்று – கொஞ்சம் பிரச்சார நெடி அடிக்கும் “முற்போக்கு” கதைகள்தான், ஆனால் அவற்றிலும் உண்மையான சித்திரம் தெரிகிறது. நம்பகத்தன்மை, உண்மை எல்லா கதைகளிலும் நிறைந்திருக்கிறது. தேய்வழக்காகிவிட்ட கூப்பாடுகள் இல்லை. பள்ளியை சோதனை செய்ய வரும் அதிகாரி (சோதனை), கடன் வாங்கி சினிமா பார்க்க கிளம்பும் விடலைகள் (ஒரு தோட்டத்துப் பையன்கள் படம் பார்க்கப் போகிறார்கள்), கஷ்டப்பட்டு பணம் சேர்த்து தமிழகத்தில் நிலம் வாங்கி அதை அனுபவிக்க முடியாத கிழவன் (நாமிருக்கும் நாடே), பேத்தியை இளமைக் கனவு பற்றி எச்சரிக்கும் பாட்டி (பாட்டி சொன்ன கதை), உயர்தர தேயிலையை அடுக்கும் இடத்தில் வேலை செய்தாலும் மோசமான தேனீரைக் குடிக்கும் தொழிலாளி (கூனல்), குரங்கு பற்றிய ஒரு கதை (அது!) எல்லாவற்றையுமே சொல்லலாம்.


விஷ்ணுபுரம் விருது வழங்கப்பட்டபோது ஜோசஃபின் சில சிறுகதைகளை ஜெயமோகனே மீன்கள் என்ற பேரில் தொகுத்திருந்தார்.

மீன்கள் சிறுகதையைத் தவிர மழலை என்ற சிறுகதை அருமையான முத்தாய்ப்பு கொண்டது. அறைக்குள் குழந்தை மாட்டிக் கொள்கிறது. கொண்டியைத் திறக்க படாதபாடு படுகிறார்கள், தாத்தா ஒருவர் எப்படியோ குழந்தைக்கு கதவைத் திறக்க சொல்லித் தருகிறார், குழந்தை வெளியே வந்துவிடுகிறது. இன்னொரு முறை இப்படி நடக்காமல் இருக்க என்ன செய்யலாம் என்று குழம்புகிறார்கள். குழந்தை எனக்குத்தான் கதவைத் திறக்கத் தெரியுமே என்று நினைத்துக் கொள்கிறது!

அம்மா என் மனதைத் தொட்ட சிறுகதை. என் அம்மாவையே கண்டேன். சுலபமாக வந்து போகக் கூடிய செலவில், தூரத்தில் மூத்த மக்ன் இல்லை. அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை, மீண்டும் மீண்டும் வந்து பார்ப்பதின் சிரமங்கள். பாசமுள்ள குடும்பம் அருமையாக சித்தரிக்கப்படுகிறது. கோழி வெட்டும் தம்பி, இடப்பற்றாக்குறை வீடு, பேத்தி மீது பாசத்தைப் பொழியும் பாட்டி…

சிலுவை சிறுகதையும் நல்ல் முத்தாய்ப்பு கொண்டது. வர வேண்டிய பணம் வரவில்லை, கிறிஸ்துமஸ் அன்று உடுத்திக் கொள்ள முடியவில்லை. ஆலயத்துக்கு லாரியில் செல்ல அழைப்பு வருகிறது, அப்பா மறுக்கிறார். பிள்ளைகளுக்கு லாரியில் செல்ல கொள்ளை ஆசை. அப்பா கடுப்பில் தண்ணி அடித்து மட்டையாகிவிட, அம்மா கிளம்பச் சொல்கிறாள்!

இருப்பியல் (மகள் திருமணத்துக்காக அப்பா மதம் மாற வேண்டிய சூழ்நிலை, பாதிரியாருக்கு சம்மதமில்லை), மனிதர்கள் நல்லவர்கள் (பிச்சைக்காரனுக்கு ஒரு ரூபாய் பிச்சை கிடைக்க அவன் திருடிவிட்டான் என்று நினைக்கிறார்கள்), பயணம் (நெரிசல் பஸ்ஸில் சிங்களருக்கு சலுகை), கத்தியின்றி ரத்தமின்றி (காந்தி பற்றி உரையாற்ற இருப்பவர் அநியாயத்தை எதிர்த்து வன்முறையில் ஈடுபடுகிறார்), பாவசங்கீர்த்தனம் (பாவமன்னிப்பு கேட்டுக் கொண்டே அதே தவறை மீண்டும் மீண்டும் செய்யும் பெரிய மனிதர்..) என்றும் சில சிறுகதைகள். படிக்கலாம்.

ஆனால் மீன்கள் உட்பட்ட எந்த சிறுகதையும் நான் தமிழின் நல்ல சிறுகதைகள் என்று நான் தொகுத்தால் இடம் பெறாது. அது சுவையின் வேறுபாடுதான் என்று நினைக்கிறேன்.

படிக்க வேண்டும் என்று நினைத்திருக்கும் நாவல் குடை நிழல். எப்போது வாய்ப்பு கிடைக்குமோ தெரியவில்லை.

முக்கியமான (இலங்கை) தமிழ் எழுத்தாளர், ஏதாவது கிடைத்தால் படித்துப் பாருங்கள்! நூலஹம் தளத்தையாவது எட்டிப் பாருங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: தெளிவத்தை ஜோசஃப் பக்கம், அஞ்சலிகள்

பீட்டர் ப்ரூக்: அஞ்சலி

பிரபல நாடக, திரைப்பட இயக்குனர் பீட்டர் ப்ரூக் நேற்று மறைந்தார்.

பீட்டர் ப்ரூக்கை நான் மகாபாரத நாடக/திரைப்பட இயக்குனராக மட்டுமே அறிவேன். அவரது ஒன்பது மணி நேர திரைப்படம் (நாடகத்தின் ஒளி வடிவம் என்றும் சொல்லலாம்) மகாபாரதத்தை வேற்று கலாசாரத்தவர் எப்படி உள்வாங்கிக் கொள்ளலாம் என்று கொஞ்சமாவது புரிய வைக்கும்.

யோசித்துப் பாருங்கள், நாம் – குறைந்தபட்சம் என் தலைமுறை இந்தியர்களுக்கு – பீமன் யார், அர்ஜுனன் யார், திரௌபதி யார், கிருஷ்ணன் யார், ராமனும் ராவணனும் அனுமனும் யார் யார் என்றெல்லாம் விளக்க வேண்டியதில்லை. எந்த வித சிரமமும் இல்லாமல் அவர்களைப் பற்றி பேசிக் கொள்கிறோம். அர்ஜுனன் வில்லு என்று பாட்டு ஆரம்பித்தால் அது யாருப்பா அர்ஜுனன் என்று கேள்வி கேட்க மாட்டோம். ஆனால் ஒரு சராசரி ஐரோப்பியருக்கு இதெல்லாம் முடியாது அல்லவா?

ப்ரூக்கின் சவால் அதுதான். மகாபாரதம் போன்ற ஒரு சிக்கலான கதைப்பின்னல் உள்ள கதையை மேலை நாட்டு பார்வையாளர்களுக்கு புரிய வைக்க வேண்டும். அதற்கு முதலில் அதை தான் உள்வாங்கிக் கொள்ள வேண்டும். மகாபாரதத்தை இலக்கியமாக அணுகுவதா, மதச்சார்புள்ள தொன்மமாக அணுகுவதா, கிருஷ்ணனின் மாயாஜாலங்களை எப்படி விளக்குவது என்பதை எல்லாம் மனதில் தெளிவாக்கிக் கொள்ள வேண்டும். ஒன்பது மணி நேரம் (இடைவேளைகளுடன் 11 மணி நேரம்) உட்கார்ந்து பார்ப்பது என்பது மேலை நாட்டவருக்கு மட்டுமல்ல, நமக்குமே சிரமம்தான். ஒன்பது மணி நேரம் பார்வையாளர்களை கட்டிப் போடுவது என்பது அசாதாரணம். ஆனால் ஒன்பது மணி நேரம் என்பது மகாபாரதத்துக்கு மிகக் குறைவு. அந்த ஒன்பது மணி நேரத்தில் மகாபாரதம் என்ற மாபெரும் இலக்கியத்தின் சாரத்தை புரிய வைக்க வேண்டும். நம்மூர் என்றால் பாரதத்தில் நடுவிலிருந்து ஆரம்பிக்கலாம், போரிலிருந்து ஆரம்பிக்கலாம், யாருக்கும் பின்புலம் என்ன, முன்கதை என்ன என்று தெரியும். அதுவும் முடியாது.

ப்ரூக் அந்த சவாலை வென்றிருக்கிறார். பாரதத்தை எனக்கு திருப்தியாக காட்டிய ஒரே நாடக/திரைப்பட வடிவம் இதுதான் பி.ஆர். சோப்ரா மகாபாரதம் கலாபூர்வமான வெற்றி அல்ல, ஆனால் அதுவே இந்திய முயற்சிகளில் சிறந்தது என்று கருதுகிறேன். மாயாபஜார் போன்ற திரைப்படங்கள் சிறு பகுதியை, கிளைக்கதையை காட்டுவதில் வெற்றி பெற்றிருக்கின்றன. ஆனால் அவை முழுவடிவம் இல்லை. எனக்கு மகாபாரதப் பித்து நிறையவே உண்டு, தானவீரசூர கர்ணா மாதிரி காலாவதி ஆகிவிட்ட மிகை நடிப்பு திரைப்படங்களையும் விடமாட்டேன், அதனால் என் வெற்றி தோல்வி கணிப்பை எல்லாம் ரொம்ப நம்பக் கூடாது.

ப்ரூக் பாத்திரங்களுக்கு இந்தியர்களை மட்டும் தேர்ந்தெடுக்கவில்லை. என் நினைவு சரி என்றால் திரௌபதியாக நடித்த மல்லிகா சாராபாய் மட்டுமே இந்தியர். (சாராபாயின் நடிப்புக்கு ஒரு ஜே!) பீமனாக, பீஷ்மராக நடித்தவர்கள் கறுப்பர்கள் என்று நினைக்கிறேன். அர்ஜுனன் ஐரோப்பிய நடிகர். துரோணர் ஜப்பானியர் என்பது நன்றாக நினைவிருக்கிறது. ஒரு விதத்தில் பார்த்தால் இது வெறும் gimmick மட்டுமே. ஆனால் இன்னொரு விதத்தில் பார்த்தால் மகாபாரதம் உலகத்தின் பொக்கிஷம் என்பதை வலியுறுத்தவும் செய்கிறது.

ப்ரூக் ஆஸ்கர் விருது பெற்ற ழான்-க்ளாட் காரியருடன் கிட்டத்தட்ட பத்து வருஷம் இந்த நாடகத்தை உருவாக்க உழைத்திருக்கிறார். இந்தியாவின் பல இடங்களில் பல வடிவங்களைப் பார்த்து படித்து ஆராய்ந்திருக்கிறார். குறிப்பாக கேரள கதகளி வடிவங்கள், தமிழகத்தின் தெருக்கூத்து வடிவங்களை இவருக்கும் காரியருக்கும் பெரிய முன்னுதாரணமாக இருந்திருக்கிறது. காரியர் இந்த அனுபவங்களை Big Bhishma in Madras புத்தகத்தில் சுவாரசியமாக (குறைந்தபட்சம் எனக்கு சுவாரசியமாக) விவரித்திருக்கிறார். 1985-இல் நாடகம் ஃப்ரெஞ்சு மொழியில் அரங்கேறி இருக்கிறது. நாடகத்தில் பல நாடுகளைச் சேர்ந்த 16 நடிகர்கள். நடிகர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பாத்திரங்களி ஏற்று நடித்திருக்கிறார்கள். முன்னர் சொன்ன மாதிரி ஒன்பது மணி நேர நாடகம், இடைவேளைகளுடன் சேர்த்து 11 மணி நேரம்.

நாடகம் நான்கு வருஷங்கள்தான் நடந்திருக்கிறது. 1987-இல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு ஆங்கிலத்தில் இரண்டு வருஷம். நாடகத்தில் மூன்று பாகங்கள் – Game of Dice, Exile in the Forest, War. 1989-இல் தொலைக்காட்சி தொடராக ஆறு மணி நேர நிகழ்ச்சியாக சுருக்கப்பட்டிருக்கிறது. பிறகு மூன்று மணி நேர திரைப்படமாக சுருக்கப்பட்டிருக்கிறது. நான் பார்த்தது தொலைக்காட்சித் தொடர் என்று நினைக்கிறேன், மூன்று மணி நேரம் அளவு சின்ன நிகழ்ச்சி இல்லை.

மகாபாரதத்தை மேலை நாட்டவருக்கு “மொழிபெயர்க்கும்” முயற்சியில் அதன் சாரத்தை விட்டுவிட்டார், இது தோல்வி, ப்ரூக்கின் காலனிய மனப்பான்மைதான் தெரிகிறது என்றெல்லாம் சில விமர்சனங்களைப் பார்த்திருக்கிறேன். நான் அவற்றை வன்மையாக மறுக்கிறேன். வியாசரே மகாபாரதத்தை முழுமையாக எழுதவில்லை என்று குறை சொல்லலாம், ப்ரூக் தனக்கென வகுத்துக் கொண்ட நேரத்தில் பாரதத்தை சிறப்பாக சித்தரித்திருக்கிறார் என்றுதான் நான் கருதுகிறேன்.

மீண்டும் ஒரு முறை; இலியட், ஆடிஸி, பியோவுல்ஃப், கில்கமேஷ் போன்ற காவியங்களில் அகச்சிக்கல்கள் குறைவு. பியோவுல்ஃப் எல்லாம் பீமன், பகாசுரன், இடும்பன் மாதிரி நாலு பேர் மட்டுமே உள்ள ஒரு காவியத்தை எழுதுவது போலத்தான். இத்தனை குறைந்த நேரத்தில் மகாபாரதத்தின் சாரத்தை புரிய வைப்பது உலக மகா கஷ்டம். அதில்தான் ப்ரூக் வெற்றி பெற்றிருக்கிறார்.

ப்ரூக் பல ஷேக்ஸ்பியர் நாடகங்கள், Lord of the Flies உள்ளிட்ட பல நாடகங்கள், தொடர்கள், திரைப்படங்களை இயக்கி இருக்கிறார். மகாபாரத இயக்குனர் என்பதைத் தாண்டி நான் அதிகம் அறியேன். குருக்ஷேத்திரப் போரை மையமாக வைத்து Battlefield என்று ஒரு நாடகத்தையும் எழுதி இயக்கி இருக்கிறாராம், அதையாவது பார்க்க/படிக்க வேண்டும்.

ப்ரூக்க்கு 2021-இல் பத்மஸ்ரீ கொடுத்திருக்கிறார்கள். கொடுத்த அரசுக்கு ஒரு ஜே! இத்தனை நாள் தாமதத்துக்கு ஒரு boo!

நானே சிலிகன்ஷெல்ஃபில் எழுதுவதை சில மாதங்களாக நிறுத்தி வைத்து ஏறக்குறைய வனவாசத்தில்தான் இருந்தேன். ஆனால் பீட்டர் ப்ரூக் பற்றி எழுதியே ஆக வேண்டும் என்ற உத்வேகம்…


தொகுக்கப்பட்ட பக்கம்: அஞ்சலிகள், மகாபாரதம்

தொடர்புடைய சுட்டிகள்:
தொலைக்காட்சித் தொடர்
பீட்டர் ப்ரூக் விக்கி குறிப்பு

ஜாக் ஹிக்கின்ஸ் மறைவு

பிரபல சாகச நாவல் எழுத்தாளர் ஜாக் ஹிக்கின்ஸ் சில நாட்களுக்கு முன்னால் மறைந்தார்.

என் சிறு வயதில் நான் விரும்பிப் படித்த சாகச நாவல் எழுத்தாளர்களில் ஹிக்கின்ஸ் ஒருவர். 85 நாவல்கள் எழுதி இருக்கிறார். Eagle Has Landed (1975) அவரை வெற்றிகரமான எழுத்தாளராக ஆக்கியது. அதற்கு முன் ராஜேஷ்குமார் தரத்தில் நிறைய pulp நாவல்கள். Eagle Has Landed-ஏ pulp நாவல் என்றும் சொல்லலாம்தான், ஆனால் கொஞ்சம் உயர்தர pulp நாவல். அதற்குப் பிறகும் பல நாவல்கள் எழுதி இருக்கிறார். எதுவும் இந்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. ஆனால் சில நாவல்கள் – Storm Warning (1973), Prayer for the Dying (1976) – இந்தத் தரத்தில் இருந்தது என்று சிறு வயதில் நினைத்தேன். இப்போது படித்தால் என்ன நினைப்பேனோ தெரியாது. என் பதின்ம வயதுகளில் Exocet (1983) என்ற நாவலும் பிரபலமாக இருந்தது. 1982-இல் நடந்த ஃபாக்லண்ட்ஸ் போரில் எக்சோசெட் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டன என்று நினைவு.

ஹிக்கின்ஸ் மீண்டும் மீண்டும் கையாண்ட கரு அயர்லாந்து கலவரம்/போர். IRAவை களமாக வைத்து நிறைய எழுதி இருக்கிறார்.

நான் படித்த முதல் நாவலும் Eagle Has Landed-தான். 15, 16 வயதில் படித்தேன். ஜெர்மானிய படை வீரர்களை உயர்ந்த பண்புகள் உள்ள வீரர்களாக சித்தரித்ததுதான் – குறிப்பாக திட்டம் வகுக்கும் மாக்ஸ் ராடல், ஜெர்மானிய தளபதி கர்ட் ஸ்டைனர், அவரது துணை அதிகாரி ரிட்டர் நியூமன், அவர்களுக்கு உதவியாக வரும் ஐரிஷ்கார லியம் டெவ்லின், கப்பல் தலைவர் கோனிக், விமானம் ஓட்டும் பீட்டர் கெரிக் ஆகியோரின் நாயகத் தன்மைதான் அந்த நாவலை சாதாரண சாகச நாவல் என்ற நிலையிலிருந்து உயர்த்தியது என்பதெல்லாம் பிற்காலத்தில்தான் புரிந்தது. நீர் ஏவுகணைகள் (torpedos) மேல் பயணித்து அவற்றை எதிரி கப்பல்கள் மீது செலுத்துவது, ஆங்கிலேயப் பிரதமர் சர்ச்சிலை இங்கிலாந்திலிருந்து கடத்தி வரப் போடப்படும் திட்டங்கள், ஆற்றில் விழுந்த சிறுமியைக் காப்பாற்ற ஒரு ஜெர்மானிய வீரன் தன் உயிரைக் கொடுப்பது, அந்தத் தியாகத்தின் மூலமே திட்டம் தோல்வி அடைவது, ஆழமான காதல், அந்தக் காதல் சாகசக் கதையை முன்னே நகர்த்த தேவையாக இருப்பது, கடைசியில் சர்ச்சில் பற்றிய திருப்பம் எல்லாம் அந்த வயதில் மனதை மிகவும் கவர்ந்தது. எடுத்தால் கீழே வைக்க முடியாது.

மைக்கேல் கெய்ன், டொனல்ட் சதர்லாண்ட், ராபர்ட் டுவால் நடித்து 1976-இல் திரைப்படமாகவும் வந்தது.

வேறு சில நாவல்களைப் பற்றி தனியாக எழுதுவதற்கில்லை. பால் ஷவாஸ் (Paul Chavasse) என்ற உளவாளியை வைத்து ஒரு சீரிசை ஆரம்பித்தார். Bormann Testament (1962) எல்லாம் சுமாரான pulp நாவல்களே.

ஷான் டில்லன் (Sean Dillon) சீரிஸில் சில கதைகளை மட்டுமே படித்தேன். A Devil Is Waiting (2012), White House Connection (1999) போன்ற நாவல்கள் sloppy ஆக இருந்தன.

என் கண்ணில் ஹிக்கின்ஸை – அதுவும் Eagle Has Landed நாவலை பதின்ம வயதில் படிப்பதுதான் உத்தமம். அதையே இன்று படிக்கும்போது மிகைப்படுத்தி இருப்பது தெரிகிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: த்ரில்லர்கள்

அஞ்சலி: செல்வராஜு நடராஜன்

இந்தத் தளத்தின் மிகப் பிரபலமான பதிவை எழுதிய செல்வராஜு நடராஜன் கொரோனா பாதிப்பால் மறைந்தார். அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

செல்வராஜ் BSNL-இல் பொறியாளராகப் பணியாற்றி இருக்கிறார். தீவிர வாசகர். தமிழ் நாவல்கள், சிறுகதைகளை மட்டும் படிக்காமல் அவற்றின் பரிந்துரைகளையும் விடாமல் படித்தார். அந்தப் பரிந்துரைகளை வைத்து meta-பரிந்துரைகள் எழுதினார். அவரது அணுகுமுறையை Wisdom of the Crowds என்று சுருக்கமாகச் சொல்லலாம். இணையத்திலிருந்தும் புத்தகங்களிலிருந்தும் பரிந்துரைகளைத் தேடிப் பிடித்து எண்ணினார். எந்த நாவலை, எந்த சிறுகதையை எத்தனை பேர் பரிந்துரைத்திருக்கிறார்கள் என்று கணக்கெடுத்தார். அதிலிருந்து பத்து பரிந்துரை பெற்ற நாவல்/சிறுகதை, ஒன்பது பரிந்துரை பெற்ற படைப்பு என்று தரவரிசைப்படுத்தினார்.

சுவாரசியமான, வித்தியாசமான அணுகுமுறை. ஆனால் ஜனநாயகத்தில் எனக்கும் ஒரு ஓட்டுதான், ஜெயமோகன் போன்ற சிறந்த விமர்சகருக்கும் ஒரு ஓட்டுதான், ராஜேஷ்குமார் படைப்புகளைத் தாண்டாதவருக்கும் அதே ஒரு ஓட்டுதான். இணையத்திலோ சகட்டுமேனிக்கு எழுதித் தள்ளலாம். அதனால் இந்த அணுகுமுறையில் தரமற்ற படைப்புகள் பரிந்துரைக்கப்பட்டுவிடுமோ என்று எனக்கு ஒரு அச்சம் இருந்தது. ஆனால் அவரது இந்த meta-தரவரிசை அனேகமாக ஒரு நல்ல விமர்சகரின் தர வரிசையாகத்தான் இருந்தது. Wisdom of the Crowds அணுகுமுறை செல்லுபடியாகும் என்று என்னை உணர வைத்தது.

அவரது தேடல் மிக அகலமானது. இணையத்தில் 2003-04 காலத்தில் நான் பூரி என்ற பெயரில் சில விவாதக் குழுமங்களில் நிறைய பேசிக் கொண்டிருந்தேன். மனிதர் அதைக் கூட தேடிக் கண்டுபிடித்து தனது கணிப்பில் சேர்த்துக் கொண்டிருக்கிறார்.

அவரது பிரபலமான பதிவு – 150 சிறந்த சிறுகதைகள்இங்கே.

அவாது இழப்பு மிக வருத்தம் தருகிறது. எனது அஞ்சலி.

தொகுக்கப்பட்ட பக்கம்: அஞ்சலிகள்

ராஜீவ் காந்தி கொலையை விசாரித்த ரகோத்தமன் மறைவு

ராஜீவ் காந்தி கொலையை விசாரித்த ரகோத்தமன் மறைந்தார். விசாரித்த குழுவில் கார்த்திகேயனுக்கு அடுத்த படியில், இரண்டாம் இடத்தில் இருந்தாவர். அவர் எழுதிய புத்தகத்தைப் பற்றிய பதிவை மீள்பதித்திருக்கிறேன்.

தமிழர்களுக்கு மறக்க முடியாத அதிர்ச்சி ராஜீவ் படுகொலை. ராஜீவின் உடல் சின்னாபின்னமாகிக் கிடந்த புகைப்படம் மறக்க முடியாத ஒன்று.

அதுவும் ஓரிரு மாதங்களில் சிவராசனைப் பிடித்தார்களா, வழக்கு முடிந்ததா என்றால் அதுவுமில்லை. நாலைந்து வருஷம் ஜெயின் கமிஷன், சந்திரசாமி சதி, சுப்ரமணியசாமியின் “திடுக்கிடும்” குற்றச்சாட்டுகள் என்று ஏதாவது நியூஸ் வந்துகொண்டே இருந்தது. இதில் வெளியே வராத விஷயங்கள் இருக்கிறது என்று தோன்ற வைத்தது.

வழக்கைத் துப்பறிந்த முக்கிய அதிகாரியான ரகோத்தமன் எழுதிய இந்தப் புத்தகம் சில விஷயங்களைத் தெளிவுபடுத்துகிறது. ரகோத்தமன் தலைமை அதிகாரி கார்த்திகேயனுக்கு அடுத்த இடத்தில் இருந்திருக்கிறார். அவருக்கு புலனாய்வில் என்ன நடந்தது, என்ன நடக்கவில்லை என்பதாவது நிச்சயமாகத் தெரிந்திருக்கும்.

ராஜீவ் இறந்த அன்று இதைச் செய்தது பஞ்சாப் தீவிரவாதிகளா, அஸ்ஸாம் தீவிரவாதிகளா என்றெல்லாம்தான் யோசித்திருக்கிறார்கள். புலிகளின் பேர் அவ்வளவாக அடிபடவில்லை. ராஜீவைக் கொன்று புலிகள் தமிழகத்தின் ஆதரவை இழக்கமாட்டார்கள் என்று நம்பி இருக்கிறார்கள். அவர்களுக்குக் கிடைத்த ஒரே துப்பு ஹரிபாபுவின் காமிரா.

காமிராவை வைத்து ஹரிபாபுவின் வீட்டுக்குப் போயிருக்கிறார்கள். ஹரிபாபுவை வேலைக்கு வைத்திருந்த சுபா சுந்தரத்தின் மீது கண் விழுந்திருக்கிறது. நளினியைத் தொடர ஆரம்பித்திருக்கிறார்கள். முருகன், சின்ன சாந்தன், சிவராசன் என்று ஒவ்வொன்றாக கண்ணிகளைப் பிடித்திருக்கிறார்கள். திறமையான சதி, சிறப்பான புலனாய்வு.

ஆனால் ஹரிபாபுவின் காமிரா தற்செயலாகக் கிடைக்கவில்லை என்றால் புலனாய்வு தடுமாறிப் போயிருக்கும், எங்கே ஆரம்பிப்பது என்றே தெரியவில்லை என்பதை ரகோத்தமனே ஒத்துக் கொள்கிறார். அதிர்ஷ்டவசமாகக் கிடைத்த சதியின் ஒரு முனையை வைத்துக் கொண்டு எல்லாவற்றையும் கண்டுபிடித்திருக்கிறார்கள். சதிகாரர்களுக்கு ஹரிபாபுவின் அவசியம் என்ன? ராஜீவ் துண்டு துண்டாக சிதறி இருப்பதை புகைப்படம் பிடித்து வைத்துக் கொண்டு பார்த்து பார்த்து மகிழ்வார்களா? பயங்கர சைக்கோத்தனமாக இருக்கிறது. ஒரு வேளை தாங்கள் சாதாரணர்கள், ராஜீவுக்கு மாலை போடுவது எங்கள் வாழ்வின் முக்கியத் தருணங்களில் ஒன்று, அதை புகைப்படம் பிடித்து வைத்துக் கொள்கிறோம் என்று தங்கள் அபாயமின்மையின் நம்பகத்தன்மையை அதிகரிக்க ஒரு புகைப்படக்காரரைக் கூட்டி வந்தார்களோ?

ரகோத்தமனுக்கு புலனாய்வின் போக்கில் முழு திருப்தி இல்லை. தனக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்படவில்லை என்று நினைக்கிறார். குறிப்பாக மரகதம் சந்திரசேகரின் குடும்பத்தவர், கருணாநிதி, வைக்கோ, தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களை விசாரிக்க வேண்டாம் என்று தான் கட்டுப்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டுகிறார். இது உண்மையாக இருக்கும் என்றுதான் நான் நினைக்கிறேன். வைக்கோவுக்கு சதியில் சம்பந்தம் இருக்கிறதோ இல்லையோ பிரபாகரனுக்கும் புலிகளுக்கும் நெருக்கமானவர் அவர் என்பது தெரியாத தமிழன் கிடையாது. புலிகள் இப்படி தமிழ்நாட்டில் புகுந்து ராஜீவை படுகொலை செய்திருக்கிறார்கள், உங்களுக்கு ஏதாவது தெரியுமா என்றாவது விசாரிக்க வேண்டாமா? நாலைந்து வருஷம் கழித்து ஜெயின் கமிஷன் மட்டும்தான் அவரை விசாரித்ததாம். மரகதம் சந்திரசேகர் இந்திரா-ராஜீவுக்கு நெருக்கமானவராம். ராஜீவ் தமிழ்நாட்டுக்கு வந்ததே ம. சந்திரசேகர் மேல் இருந்த அன்பினால்தானாம். ஆனால் அவரது குடும்பத்தவரை ஏமாற்றிதான் ராஜீவுக்கு அருகே வந்திருக்கிறார்கள் என்பது தெளிவு. அவர்கள் யாரையும் சங்கடப்படுத்த வேண்டாமென்று மேல் அதிகாரிகள் நினைத்ததால் அவர்களை நெருங்க முடியவில்லையாம். கருணாநிதி அதே நாளில் ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் கூட்டத்துக்கு சில மணி நேரம் முன்னால் நடக்க இருந்த பொதுக் கூட்டத்தை ரத்து செய்திருக்கிறார். மேற்பார்வைக்கு இது ஒரு தற்செயல் நிகழ்ச்சி போலத் தெரியலாம். கருணாநிதியும் இது சாதாரணமாக நடப்பதுதானே என்று சொன்னாராம். ரகோத்தமன் அப்படி கருணாநிதி கலந்து கொள்ளும் கூட்டம் ரத்து என்பது நடந்ததே இல்லை என்கிறார். அப்படி இதுதான் கருணாநிதி வாழ்க்கையில் ரத்து செய்யப்பட்ட முதல் பொதுக்கூட்டம் என்றால் அது நிச்சயமாக ஒரு சந்தேகத்துக்குரிய நிகழ்ச்சி. ஆனால் விசாரிக்க வேண்டாம் என்று முட்டுக்கட்டை போடப்பட்டதாம். சிவராசனை தன்னால் உயிரோடு பிடித்திருக்க முடியும், ஆனால் கமாண்டோ படைகளோடு காத்திருக்கும்படி பணிக்கப்பட்டேன், அதற்குள் சிவராசன் தற்கொலை செய்துகொண்டுவிட்டான் என்கிறார்.

ரகோத்தமன் வைக்கும் இரண்டாவது முக்கியக் குற்றச்சாட்டு மெத்தனம் – குறிப்பாக ராஜீவ் பாதுகாப்பு ஏற்பாடுகளில். ராஜீவ் வர வேண்டிய விமானம் சில பிரச்சினைகளால் மெதுவாக கிளம்பி இருக்கிறது, கூட்டத்துக்கு தாமதமாக வந்திருக்கிறார். அவர் அப்படி தாமதமாக வருவது பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும் காவல்துறைக்கு தெரியவில்லை, ஆனால் சிவராசனுக்குத் தெரிந்திருக்கிறது. ராஜீவுக்கு யார் யார் மாலை போடுவார்கள் என்பதை ஒரு துண்டுக் காகிதத்தில் எழுதி வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் யார், என்ன விலாசம் என்று ஒரு அடிப்படை விவரமும் போலீசிடம் கிடையாது.

புத்தகத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் சொல்லப்படும் விவரங்களை வைத்துப் பார்த்தால்:

  1. ராஜீவைக் கொலை செய்ய இவ்வளவு திறமையாக சதி செய்ய முடியும் என்ற பிரக்ஞையே நமக்கு அப்போது இல்லை. பாதுகாப்பு என்றால் பத்து போலீஸ்காரர்கள் பழைய போல்ட் ஆக்ஷன் துப்பாக்கிகளோடு கீழே நிற்பார்கள். அதிமுக்கியத் தலைவர், நிறைய பாதுகாப்பு என்றால் நூறு போலீஸ்காரர்கள். இப்படிப்பட்ட ஒரு சதியை தடுக்கும் வல்லமை நமக்கு அப்போது இல்லை.
  2. ராஜீவ் கொல்லப்படுவதை புகைப்படம் எடுத்து வைத்துக் கொள்ளும் எண்ணம் இல்லாவிட்டால், புகைப்படம் எடுத்த ஹரிபாபு இறந்திருக்காவிட்டால், காமிரா ஸ்தலத்திலேயே விட்டுப் போயிருக்காவிட்டால், கொலையாளிகள் தப்பி இருக்க நிறைய வாய்ப்பு இருந்திருக்கும்.
  3. தமிழ்நாட்டில் அப்போது புலிகளுக்கு எல்லா மட்டத்திலும் தொடர்பு இருந்திருக்கிறது – இந்திரா குடும்பத்தின் மீது பக்திப் பரவசத்தோடு இருந்த மணிசங்கர் ஐயர், வாழப்பாடி ராமமூர்த்தி, மரகதம் சந்திரசேகர் உட்பட. அன்று ஈழத் தமிழர்களிடம் இருந்த அனுதாபத்தை எப்படி உபயோகித்துக் கொள்வது என்று புலிகளுக்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது.
  4. வைக்கோ போன்றவர்களுக்கு இப்படி ஒரு முயற்சி நடக்கப் போகிறது என்று தெரிந்திருக்கலாம். இல்லை பிரபாகரன் புத்திசாலித்தனமாக யாருக்கும் விஷயத்தைச் சொல்லாமலும் இருந்திருக்கலாம். ஆனால் விசாரிப்பதற்கான முகாந்திரம் இருக்கிறது. அரசியல் தலைவர்களை மென்மையாக நடத்தி இருக்கிறார்கள்.
  5. எனக்கு இந்திய தரப்பில் சதி எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை. ஆனால் இந்தியர்களுக்கே உரிய மெத்தனம், பழைய தொடர்புகள் இன்று வெளியே தெரியக்கூடாது என்ற எண்ணம் இருந்ததாகத் தெரிகிறது.

எது எப்படி இருந்தாலும் சிறப்பாகத் துப்பறிந்திருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. ரகோத்தமன் சுட்டிக் காட்டும் குறைகள் இன்றாவது நீக்கப்பட்டால் நன்றாக இருக்கும்.

நல்ல ஆவணம், சுவாரசியமாகவும் இருக்கிறது. படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொடர்புடைய சுட்டிகள்:
ஈழத் தமிழர்கள், விடுதலைப் புலிகள் பற்றி சில பதிவுகள்

அஞ்சலி – பெ.சு. மணி

ஆவண முக்கியத்துவம் உள்ள நிறைய புத்தகங்களை எழுதிய பெ.சு. மணி தனது 87-ஆவது வயதில் மறைந்தார்.

நம் நாட்டில் மறைந்த தலைவர்களைப் பற்றி எழுதப்படும் புத்தகங்கள் புகழ் மாலைகளாக மட்டுமே இருக்க வேண்டும் என்று ஒரு எழுதப்படாத விதி இருக்கிறது. (காந்தியும், நேருவும், ஓரளவு ஈ.வே.ரா.வும் மட்டுமே விதிவிலக்கு.) மஹாராஷ்டிரத்தில் சிவாஜி அஃப்சல் கானை வஞ்சகமாகத் தாக்கினார் என்று எழுதிவிட்டு நீங்கள் மும்பை பக்கம் போவது அபாயம். அல்லது ஒரு பக்க சார்புடைய “வரலாறு” பலத்த பிரச்சாரத்தால் நிலைநிறுத்தப்பட்டுவிடுகிறது, அது (முழு) உண்மையல்ல என்று புரிந்து கொள்வதே மிகக் கடினம். ராஜாஜி குலக்கல்வி திட்டத்தைக் கொண்டு வந்தார் என்று இன்றும் தமிழ்நாட்டில் அனேகர் நம்பத்தான் செய்கிறார்கள்.

பெ.சு. மணியின் முக்கியத்துவம் இங்கேதான். அவருக்கும் பெரும் ஆகிருதி உள்ள தலைவர்களிடம் குறைகளை சுட்டிக் காட்டுவதில் தயக்கம் இருக்கத்தான் செய்தது. ஆனால் அவர் விடாமல் அன்றைய பத்திரிகைகளில், அவருக்கு முன் எழுதப்பட்ட பத்திரிகைகளில் உள்ள விவரங்களை சேகரித்து தன் புத்தகங்களில் பதிவு செய்திருக்கிறார்.

உதாரணமாக வ.வே.சு. ஐயர் சேரன்மாதேவி குருகுலத்தில் இரு பிராமணச் சிறுவர்களுக்கு தனிப்பந்தியில் உணவு பரிமாறியது தமிழகத்தில் பெரிய சர்ச்சையை உருவாக்கியது, பிராமண-அபிராமணப் பிரிவை, பிரச்சினைகளை பெரிதாக்கியது. பொதுவாக இருக்கும் பிம்பம் ஐயர் பொதுப்பந்தியில்தான் உணவு பரிமாறப்படும் என்று வாக்குறுதி தந்துவிட்டு தனிப்பந்திக்கு ஏற்பாடு செய்துவிட்டார், அவருக்கு ராஜாஜி உட்பட்ட பிராமண காங்கிரஸ் தலைவர்கள் ஆதரவு தந்தார்கள், அதனால் ஈ.வே.ரா. காங்கிரஸை விட்டு வெளியேறி நீதிக் கட்சியில் சேர்ந்தார், ஈ.வே.ரா.வின் பிராமண வெறுப்பு உறுதிப்பட்டது ராஜாஜி போன்றவர்களும் ஐயரை ஆதரித்ததால்தான் என்பதுதான். அதிலும் முன்னாள் தமிழக முதல்வர் ஓமந்தூர் ராமசாமி முதலியாரின் பையன்கள் அவரிடம் தனிப்பந்தி பிராமணப் பையன்களுக்கு மட்டும் நல்ல உணவு (உப்மா?), எங்களுக்கு பழைய சோறு? மாதிரி என்னவோ என்று கண்ணீர் வடித்ததாகவும் அதனால்தான் பிரச்சினை பூதாகாரமாக வெடித்ததாகவும் ஒரு கதை உலவுகிறது. (ஈ.வே.ரா.வே அப்படி சொன்னார் என்று நினைவு.)

அது உண்மைதான், ஆனால் முழு உண்மை அல்ல. ஐயர் பொதுப்பந்தி என்று எந்த வாக்குறுதியும் தரவில்லை என்று தெரிகிறது. ஆனால் தனிப்பந்தி தவறான அணுகுமுறை என்று அவரும் உணர்ந்தே இருக்கிறார். ஆசிரமத்தில் ஆளைச் சேர்க்க படாதபாடு பட்டிருக்கிறார், இரு குடும்பத்தினரிடம் தனிப்பந்திக்கு ஒத்துக் கொண்டிருக்கிறார் என்று தெரிகிறது. அப்படி ஒத்துக் கொண்டும் கொஞ்ச நாள் பொதுப்பந்திதான் நடந்திருக்கிறது. குடும்பத்தினரின் வற்புறுத்தலோ, அல்லது கூட இருந்த ஆசாரவாதி மகாதேவ ஐயரின் அழுத்தமோ தனிப்பந்தி ஆரம்பித்திருக்கிறது. ஐயர், அவர் குடும்பத்தினர் அனைவரும் பொதுப்பந்தியில்தான் சாப்பிட்டிருக்கிறார்கள். (உப்மா, பழைய் சோறு இத்யாதி யாரோ கட்டிவிட்ட கதை.) ராஜாஜி, டி.எஸ்.எஸ். ராஜன் உட்பட பலரும் தனிப்பட்ட முறையில் கண்டித்திருக்கிறார்கள், ஆனால் பொதுவில் கண்டிக்க தயங்கி இருக்கிறார்கள். இது ஒரு public relations disaster ஆக மாறி இருக்கிறது. ஐயருக்கு அதை எப்படி சமாளிப்பது என்ற ஞானம் இல்லை. அந்த இரு மாணவர்களை விலக்கி இருக்கலாம், பொதுப்பந்தி என்று வற்புறுத்தி இருக்கலாம், இல்லை காங்கிரஸ் கொடுத்த நன்கொடையை திருப்பிக் கொடுத்திருக்கலாம். ஐயர் குழம்பி இருக்கிறார். காவ்யகண்ட சாஸ்திரி என்ற பெரியவர் (பிராமணர்) பொதுப்பந்தியில் ஆதிதிராவிடர் சமைத்து எல்லாரும் சாப்பிடுங்கள் என்று ஒரு வழி சொல்ல, அதை எதிர்த்தவர்கள் அபிராமண தலைவர்கள், மற்றும் அபிராமண சிறுவர்களின் பெற்றோர்கள். வ.வே.சு. ஐயர் சரி என்றிருக்கிறார்! (யார் யார் எதிர்த்தார்கள் என்ற தகவல் இல்லை) ஐயரை எதிர்த்த பல தலைவர்கள் – ஈ.வே.ரா., வரதராஜுலு நாயுடு உட்பட்ட பலர் – அதே காலகட்டத்தில் அவரைப் புகழ்ந்தும் இருக்கிறார்கள். நாயுடு குருகுலத்துக்குப் போய் அங்கே எந்தத் தவறும் நடக்கவில்லை என்று சொல்லி இருக்கிறார். ஐயர் இறந்தபோது அவருக்கு ஈ.வே.ரா. எழுதிய அஞ்சலியை நானே படித்திருக்கிறேன்.

பெ.சு. மணி வ.வே.சு. ஐயர் எழுதிய புத்தகத்தில் மேலே சொன்னவற்றில் பல விவரங்கள் இருக்கின்றன. இவற்றை அவர் அன்று வந்து பத்திரிகைக் குறிப்புகளிலிருந்தும் புத்தகங்களிலிருந்துமே சேகரித்திருக்கிறார். ஆச்சரியப்படும் விதத்தில் ஐயர் செய்தது தவறு என்று வெளிப்படையாக சொல்லியும் இருக்கிறார். இதனால்தான் அவரது புத்தகங்கள் முக்கியமானவை. வியக்க வைக்கும் படிப்பு, உழைப்பு.

அவரது கட்டுரைத் தொகுப்பு ஒன்றில் குத்தி கேசவப் பிள்ளை, கா.சி. வேங்கடரமணி, வரதராஜுலு நாயுடு போன்றவர்களைப் பற்றிய அரிய தகவல்கள் கிடைக்கின்றன.

அவரைப் போன்றவர்களின் இழப்பு சுலபமாக ஈடு செய்ய முடியாதது. அவருக்கு என் அஞ்சலி.

தொகுக்கப்பட்ட பக்கம்: அஞ்சலிகள்

தொடர்புடைய சுட்டிகள்: