ஆங்கிலத்தில் எழுதப்பட்ட சிறந்த இந்திய நாவல்கள்

என் பதின்ம வயதுகளில் Indian English என்றால் ஆர்.கே. நாராயண், ராஜாராவ், முல்க்ராஜ் ஆனந்த் என்று சிலர் மட்டுமே. இவர்கள் அனைவரும் அனேகமாக விடுதலைக்கு முன் எழுத ஆரம்பித்தவர்கள். கொஞ்சம் பின்னால் வந்த குஷ்வந்த் சிங், மனோஹர் மல்கோங்கர் எல்லாம் கூட ஆங்கில ஆட்சியின், விடுதலைப் போராட்டத்தின் தாக்கம், பின்புலத்தை விட்டு வெளியே வரவில்லை. என் தலைமுறைக்கான எழுத்தாளர் எவரும் அப்போது கண்ணில் படவில்லை.

Indian English நாவல்களின் பட்டியல் ஒன்று கண்ணில் பட்டது. வசதிக்காக பட்டியல் மட்டும் கீழே.

 • ரோஹிண்டன் மிஸ்திரி, A Fine Balance
 • விக்ரம் சேத், A Suitable Boy
 • அருந்ததி ராய், God of Small Things
 • சல்மான் ரஷ்டி, Midnight’s Children
 • கிரண் தேசாய், Inheritance of Loss
 • கிரிகரி டேவிட் ராபர்ட்ஸ், Shantaram
 • அர்விந்த் அடிகா, White Tiger
 • சஞ்சீவ் சுஹோதா, Year of the Runaways
 • நீல் முகர்ஜி, Lives of Others
 • சஷி தரூர், Great Indian Novel
 • கிஷ்வர் தேசாய், Witness the Night
 • மஹேஷ் ராவ், Polite Society

இவற்றில் நான் படித்திருப்பது Great Indian Novel மட்டுமே. (பரிந்துரைக்கிறேன்.)

என் கண்ணில் இந்தப் பட்டியலின் முக்கியத்துவம் இது “நவீன” (modern) Indian English நாவல்களின் பட்டியல் என்பதுதான்.
சமீப காலமாகத்தான் நிறைய பேர்கள் அடிபடுகின்றன. அர்விந்த் அடிகா, உபமன்யு சட்டர்ஜி, அமிதவ் கோஷ், விக்ரம் சேத், அருந்ததி ராய், ரோஹிண்டன் மிஸ்திரி, சல்மான் ரஷ்டி புத்தகங்களைப் படித்தோமோ இல்லையோ கேள்வியாவது பட்டிருப்போம். நானும் கையில் கிடைத்தவற்றைப் படித்தேன். பல குப்பையாக இருந்தன – உதாரணமாக இந்து சுந்தரேசன். இனி மேலாவது கொஞ்சம் தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும், அதற்கு இந்தப் பட்டியல் உதவியாக இருக்கும்.

நான் படித்த வரையில் இவர்களில் ஆர்.கே. நாராயண்தான் மிகச் சிறந்தவர். Swami and Friends, English Teacher, A Horse and Two Goats போன்றவை உலகத் தரம் உள்ளவை. ஆனால் அவர் உலக அளவில் இரண்டாவது வரிசையில்தான் இருப்பார்.

நீங்கள் பரிந்துரைக்கும் Indian English நாவல் ஏதாவது உண்டா? இந்தப் பட்டியலில் எதையாவது படித்திருக்கிறீர்களா?

தொகுக்கப்பட்ட பக்கம்: பரிந்துரைகள்

2019 பரிந்துரைகள்

2019-இல் படிக்கும் சூழ்நிலை இல்லை. பல சொந்தப் பிரச்சினைகள்; வேலைப்பளு மிக அதிகம். அலுவலகத்துக்கு ட்ரெயினில் செல்லும் நேரத்தில் படித்ததுதான்.

போன ஆண்டுதான் என் அப்பா இறந்தார். அந்த நேரத்தில் கைகொடுத்த எழுத்தாளர் அம்பைக்கு நன்றி! – அவர் எழுதிய பிளாஸ்டிக் டப்பியில் பராசக்தி முதலியோர் அப்போது கைகொடுத்தது. சுஜாதாவின் அப்பா அன்புள்ள அப்பா கட்டுரையும்.  அப்பா என் சிறு வயதில் எனக்கு சொன்ன கதையை –ஆர்.எல். ஸ்டீவன்சனின் Treasure Island – மீண்டும் படிக்கும்போது ஒரு wry smile வந்துகொண்டே இருந்தது.

புதிதாக படித்தவற்றில் பரிந்துரைப்பவை:

 • பழைய காலத்து எழுத்தாளர் நாடோடியின் charming புத்தகங்கள்
 • ஏ.கே. செட்டியாரின் பிரயாண எழுத்து
 • பவா செல்லதுரையின் சில சிறுகதைகள் – வேட்டை, பச்சை இருளன், சத்ரு, ஏழுமலை ஜமா
 • காமிக்ஸாக ராமாயணம்
 • மஹாஸ்வேதாதேவியின் சிறுகதை, திரௌபதி
 • ராபர்ட் காரோ  தான்  நுண்விவரங்களைத் தேடும் எழுத்தாளனாக மாறியது எப்படி விவரிக்கும் கட்டுரை ஒன்று
 • கலிஃபோர்னியாவில் விவசாய  சாம்ராஜ்யம் பற்றி ஒன்று
 • இலா பட்  பற்றி பாலா எழுதிய ஒன்று
 • மெக்காலே இந்தியாவில் ஆங்கிலக் கல்வியின் அவசியம் பற்றி ஆற்றிய உரை (Macaulay Minute)
 • கோட்சேயின் வாக்குமூலம்
 • ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய Shooting the Elephant
 • சில ஆங்கில வார்த்தைகளின் ரிஷிமூலம் பற்றிய ஒரு கட்டுரை
 • ஜாக் லண்டனின் All Gold Canyon சிறுகதை
 • செகாவின் Lady with a Dog சிறுகதை
 • பெர்டோல்ட் ப்ரெக்டின் அருமையான கவிதை ஒன்று (ஹேமாவுக்கும் பிடித்தமானது.)
 • எட்டாம் ஹென்றி வரலாற்றுப் பின்னணியில் சி.ஜே. சான்சம் எழுதிய சாகச/துப்பறியும் கதைகள்
 • வரலாற்றுப் பின்னணியில்  ப்ரூஸ் அலெக்சாண்டர் எழுதிய சாகச/துப்பறியும் கதைகள்
 • அமெரிக்க சிவில் வார் பின்னணியில் பெர்னார்ட் கார்ன்வெல் எழுதிய சாகசக் கதைகள்

பிற அனைத்தும் மீண்டும் (மீண்டும்) படித்தவையே.

தொகுக்கப்பட்ட பக்கம்: பரிந்துரைகள்

Top 100 Thrillers

(மீள்பதிவு)

நான் த்ரில்லர்களை, துப்பறியும் கதைகளை விரும்பிப் படிப்பவன். பதின்ம வயதில் ஏற்பட்ட மோகம் இன்னும் விடவில்லை. அலிஸ்டர் மக்ளீன் புத்தகங்களை அந்தக் காலத்தில் மிகவும் விரும்பிப் படித்தேன். இன்று மைக்கேல் கானலி, சாரா பாரட்ஸ்கி என்று பலர் இருக்கிறார்கள்.

என்பிஆர் மக்கள் தேர்வுகளாக டாப் 100 த்ரில்லர் பட்டியல் ஒன்றை 2011-இல் வெளியிட்டிருக்கிறது. முன்னும் ஒரு முறை இதைப் பற்றி எழுதி இருக்கிறேன், இந்த முறை பட்டியலில் நான் கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைப்பவற்றை இணைத்திருக்கிறேன்.

வசதிக்காக டாப் டென் கீழே:
1. The Silence of the Lambs by Thomas Harris
2. The Girl with the Dragon Tattoo by Stieg Larsson
3. Kiss the Girls, by James Patterson
4. The Bourne Identity, by Robert Ludlum
5. In Cold Blood, by Truman Capote
6. The Da Vinci Code, by Dan Brown
7. The Shining, by Stephen King
8. And Then There Were None, by Agatha Christie
9. The Hunt for Red October, by Tom Clancy
10. The Hound of the Baskervilles, by Sir Arthur Conan Doyle

இந்தப் பட்டியலில் பாதியை – அதாவது ஐம்பது புத்தகங்களைப் படித்திருக்கிறேன். டாப் டென்னில் ஐந்தைப் படித்திருக்கிறேன். என் கண்ணில் டான் ப்ரவுன், ஜேம்ஸ் பாட்டர்சன் போன்றவர்களைப் படிப்பது வேஸ்ட். டாப் டென் பட்டியலில் And Then There Were None, Hound of the Baskervilles இரண்டையும் பரிந்துரைப்பேன். The Girl with the Dragon Tattoo, Bourne Identity, Hunt for Red October போன்றவற்றைப் படிக்கலாம். முழு பட்டியலில் நான் கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைப்பவை கீழே:

8. And Then There Were None, by Agatha Christie
10. The Hound of the Baskervilles, by Sir Arthur Conan Doyle
19. The Day of the Jackal, by Frederick Forsyth
23. The Count of Monte Cristo, by Alexandre Dumas
28. Presumed Innocent, by Scott Turow
29. The Maltese Falcon, by Dashiell Hammett
32. Gone Baby Gone, by Dennis Lehane
33. Gorky Park, by Martin Cruz Smith
39. The Spy Who Came in from the Cold, by John Le Carre
46. The Manchurian Candidate, by Richard Condon
47. Tinker, Tailor, Soldier, Spy, by John Le Carre
63. Shogun, by James Clavell

தொகுக்கப்பட்ட பக்கம்: பரிந்துரைகள்

2018 பரிந்துரைகள்

2018-இல் நான் படித்தவற்றில், மீண்டும் படித்தவற்றில், நினைவு கூர்ந்தவற்றில் பரிந்துரைப்பவை கீழே. எட்டு மாதம் லேட்!

தமிழ்:

ஆங்கிலம்:

தொகுக்கப்பட்ட பக்கம்: பரிந்துரைகள்

தமிழறிஞர் வரிசை 22: சிதம்பரநாதன் செட்டியார் தேர்வுகள்

(மீள்பதிவு) – முதல் பதிவு 2012 நவம்பரில்

சிதம்பரநாதன் செட்டியார் என்ற பேரை நான் முதல் முதலாகக் கேளிவ்ப்பட்டது 2009-இல் அவரது எழுத்துக்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டபோதுதான். அவர் எழுதிய தமிழ் சிறுகதை: தோற்றமும் வளர்ச்சியும் என்ற சின்னக் கட்டுரையைப் படித்துக் கொண்டிருந்தேன். அவருடைய இரண்டு பட்டியல்கள் கீழே. இவை எல்லாம் ஐம்பதுகளுக்கு முன் வந்த சிறுகதைகள் என்று நினைக்கிறேன். Curiosity value-க்காக மீண்டும் பதித்திருக்கிறேன். யாராவது பழைய நினைப்பைப் பற்றி பேச விரும்பினால் எழுதுங்கள்!

பத்திரிகைகளில் வந்த சிறந்த சிறுகதைகள்:

 1. கணையாழி எழுதிய நொண்டிக் குருவி
 2. ஜெகசிற்பியன் எழுதிய ஜல சமாதி
 3. சோமு எழுதிய கடலும் கரையும்
 4. ஞானாம்பாள் எழுதிய தம்பியும் தமையனும்
 5. கே.ஆர். கோபாலன் எழுதிய அன்னபூரணி
 6. சோமாஸ் எழுதிய அவன் ஆண்மகன்
 7. கௌசிகன் எழுதிய அடுத்த வீடு
 8. எஸ்.டி. ஸ்ரீனிவாசன் எழுதிய கனிவு

பிற மொழிகளில் மொழிபெயர்க்க வேண்டிய தகுதி படைத்த சிறுகதைகள்:

 1. கு.ப.ரா.வின் “காணாமலே காதல்”
 2. புதுமைப்பித்தனின் “வழி”
 3. கல்கியின் “விஷ மந்திரம்”
 4. சுத்தானந்த பாரதியாரின் “கடிகாரச் சங்கிலி”
 5. அகிலனின் “இதயச் சிறையில்”
 6. விந்தனின் “முல்லைக் கொடியாள்”
 7. லட்சுமியின் “வில் வண்டி”
 8. ஜீவாவின் “வேதாந்த கேசரி”
 9. டி.கே. ஸ்ரீனிவாசனின் “துன்பக் கதை”
 10. புஷ்பத்துறை சுப்ரமணியத்தின் “ஜீவசிலை”
 11. கணையாழியின் “நொண்டிக் குருவி”

பாதிப் பேர் யாரென்றே தெரியவில்லை. கல்கி, விந்தன், கு.ப.ரா.வின் சிறுகதைகள் சுமார் என்ற நிலைக்கு மேல் போகாது எல்லாம் வெட்டிக் கதைகள். கொஞ்சம் உருக்கமாக இருந்தால் இவருக்குப் பிடித்துப்போய்விடும் போலிருக்கிறது. இருந்தாலும்

செட்டியார் பெரியார் மன்றோ என்று முன்னாள் ஆங்கிலேய சென்னை கவர்னர் தாமஸ் மன்றோவைப் பற்றி எழுதிய புத்தகம் ஒன்றும் படித்தேன். எனக்குத் தெரியாத விவரங்கள், ஆனால் சுவாரசியமான புத்தகம் என்று சொல்லமாட்டேன். இங்கே வந்த ஆங்கிலேயர் எல்லாம் சுக வாழ்வு வாழ்ந்தார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். தாமஸ் மன்றோ கிழிந்த சட்டையும் அழுக்குத் துணியுமாக சுற்றி இருக்கிறார், சம்பளம் பற்றவில்லையாம்.

செட்டியாரைப் பற்றி மறைந்த சேதுராமன் எழுதிய அறிமுகம் கீழே:

கும்பகோணத்தைச் சேர்ந்த அமிர்தலிங்கம் செட்டியார், பார்வதியம்மாள் தம்பதியினருக்கு, ஏப்ரல் 3, 1907 அன்று பிறந்தவர், செந்தமிழ்க் காவலர் டாக்டர் அ. சிதம்பரநாத செட்டியார். மூன்று சகோதரிகளும், இரண்டு சகோதரர்களும் உடன்பிறந்தவர்களாவர். பள்ளிப் பருவத்தில், கும்பகோணம் பேட்டையிலுள்ள தொடக்கப்பள்ளியிலும், பின்னர் நேடிவ் உயர் நிலைப் பள்ளியிலும் இறுதி வகுப்பு வரை படித்துத் தேறினார். தொடக்கத்திலிருந்தே தமிழையும் ஆங்கிலத்தையும் சம அளவில் கற்று வந்தார் சிதம்பரநாதர். அதன் பின் கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் சேர்ந்தவர் தமது பி.ஏ. வகுப்பில் சிறப்புப் பாடமாகத் தமிழை எடுத்துக் கொண்டார். கல்லூரித் தேர்வில் வெற்றி பெற்றவர் 1928ல் சென்னைப் பல்கலைக் கழக அலுவலகத்திலும், பின்னர் தலைமைச் செயலகத்திலும் எழுத்தராகப் பணியாற்றினார். பணியிலிருக்கும் போதே அரசினர் நடத்திய வருவாய்த் துறைத் தேர்விலும், வரவு செலவு கணக்குத் தேர்விலும் முதலிடம் பெற்றவர். இவரது திறமையை நன்குணர்ந்த அன்றைய அரசு சென்னை அரசாங்க முகமதியக் கல்லூரியில் (அண்ணா சாலையிலுள்ள இன்றைய அரசு கலைக் கல்லூரி) தமிழாசிரியராக நியமித்தது. கல்லூரியில் தமிழ் ஆசிரியராக இருந்த போதே இடை நிலை வகுப்பிற்கு ஆங்கிலத் துணைப்பாடம் நடத்தவும் ஆங்கிலக் கட்டுரை ஏடுகளைத் திருத்தவும் அரசு இவரை நியமித்தது. மூன்று வருஷங்கள் கலைக் கல்லூரியில் பணியாற்றிய பின் பாலக்காடு அரசினர் கல்லூரியில் தமிழாசிரியராகப் பொறுப்பேற்றார்.

1933ல் பெரியநாயகி அம்மையை இவர் மணம் புரிந்து கொண்டார். அம்மையாரும் தமிழ் எழுத்தாளருமன்றி ஓவியக் கலை வல்லுநருமாவார். இவர் வரைந்த அண்ணல் காந்தியடிகளின் ஓவியம் இன்றும் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியை அணிசெய்கிறது.

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் 1933ல் தமிழ் எம்.ஏ. வகுப்பில் சேர்ந்த சிதம்பரநாதர் 35ல் முதலிடத்தில் தேறி, மீண்டும் சென்னை அரசு கலைக் கல்லூரியில் விரிவுரையாளரானார். இவரது புலமையை நன்குணர்ந்த அன்றைய துணைவேந்தர் ஸ்ரீநிவாச சாஸ்திரியார் பல்கலைக் கழகத்திலேயே, நாவலர் சோமசுந்தர பாரதியார் பேராசிரியாக இருந்த தமிழ்த்துறையிலேயே இவரை விரிவுரையாளராக்கினார்.

தமிழகத்தில் தமிழராய்ச்சியில் முதன் முதலாக டாக்டர் பட்டம் பெற்ற தமிழ்ப் பேராசிரியர் சிதம்பரநாதர்தான். பட்டத்திற்கு இவர் ஆராய்ந்தது தமிழ்ச் செய்யுள் இலக்கணம் (Advanced Studies in Tamil Prosody)

ஆங்கிலத்திலும் தமிழிலும் பல ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதியுள்ள சிதம்பரநாதரின் முதல் தமிழ் நூல் இந்திய சரித்திர மாலை (1930) – இவர் சுமார் இருபதுக்கும் மேலாக நூல்கள் எழுதியுள்ளார். சென்னைப் பல்கலைக்கழக வெளியீடான ஆங்கிலம் – தமிழ்ச் சொற்களஞ்சியம் என்ற நூலின் தலைமைப் பதிப்பாசிரியராகப் பொறுப்பேற்று, குறிப்பிட்ட காலத்துக்குள் நூலை வெளியிட்டார். 1958 ஏப்ரல் மாதம் சென்னைச் சட்டசபை மேலவைக்குப் போட்டியிட்டு இரு முறை வென்று உறுப்பினர் ஆனது குறிப்பிடத்தக்கது. சென்னையிலிருந்து வெளிவந்த மாத இதழான “செந்தமிழ்ச் செல்வி”க்கு மதிப்புறு ஆசிரியராகவும் பணியாற்றினார்.

திரு சிதம்பரநாதச் செட்டியார் 22 நவம்பர் 1967ல் மதுரையில் காலமானார். இவர் இறக்கும்போது மதுரைத் தியாகராசர் கல்லூரியில் 1965 முதல் முதல்வராக அரும்பணியாற்றிக் கொண்டிருந்தார்.

இவர் எழுதிய நூல்களின் பட்டியல் வருமாறு:

 1. இந்திய சரித்திர மாலை (1930)
 2. கட்டுரைக் கொத்து (1933)
 3. காக்காய் பிடித்தலும் குருவி பிடித்தலும் (சிற்றிலக்கண நூல் – 1940)
 4. பெரியார் மன்றோ (1941)
 5. Advanced Studies in Tamil Prosody (Doctoral thesis – 1942)
 6. உழைப்பால் உயர்ந்த ஒருவர் (புக்கர் வாஷிங்டன் (1952)
 7. முன்பனிக்காலம் (இலக்கியக் கட்டுரைகள் – 1951)
 8. சிறுகதையும் அதன் வளர்ச்சியும் (1954)
 9. தமிழோசை (1956)
 10. Cilappadikaram the earliest Tamil Epic (1956)
 11. தமிழ் காட்டும் உலகு(இலக்கியக் கட்டுரைகள் – 1957)
 12. வீட்டுத் திருமகள் (கட்டுரைகள் – 1958)
 13. மன்னுயிர்க்கன்பர் (ஆல்பர்ட் சுவைட்சர் – 1958)
 14. Introduction to Tamil Poetry (1958)
 15. சிறுகதைக் களஞ்சியம் (தொகுப்பாசிரியர் – 1959)
 16. Indian Words in English Dictionary (1964)
 17. ஆங்கிலம் தமிழ்ச் சொற்களஞ்சியம் (தலைமைப் பதிப்பாசிரியர்)
 18. மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆயிரந்திரு நாம அர்ச்சனை (1967)
 19. இளங்கோவின் இன்கவி (சிலப்பதிகாரத் திறனாய்வுக் கட்டுரைகள் – 1972)
 20. செங்கோல் வேந்தர் (1977)
 21. தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும் (1977)
 22. ஒத்தெல்லோ (ஆங்கில நாடகத் தமிழ் மொழி பெயர்ப்பு – சாகித்ய அகாதெமிக்காக)
 23. Ancient Tamil Kings – Their High Ideals

(ஆதாரம்: இந்திய இலக்கியச் சிற்பிகள்: அ. சிதம்பரநாதச் செட்டியார் – திரு ந.வேலுசாமி எழுதியது, சாகித்திய அகாதெமி முதல் பதிப்பு – 2005)

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழறிஞர்கள்

எழுத்தாளர் ஆர்வியின் சிறுகதை பரிந்துரைகள்

இந்த ஆர்வி நானில்லை. ஒரு காலத்தில் புகழ் பெற்ற எழுத்தாளர். கண்ணன் என்று சிறுவர் பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்தவர். போன தலைமுறைக்காரர்களுக்கு எழுத்தாளர் ஆர்வியைத் தெரிந்திருக்கும்.

அவர் 30-40களில் வெளிவந்த சிறுகதைகளில் தனக்கு பிடித்தவற்றை பரிந்துரைப்பதை இங்கே மற்றும் இங்கே பார்த்தேன். (பசுபதி சாரின் தளத்தில்தான்) இவற்றுள் சிலவற்றையே நான் படித்திருக்கிறேன். படித்தவரை எதுவும் என் பட்டியலில் இடம் பெறாது. ஆனால் அந்தக் காலகட்டத்துக்கு இந்தப் பரிந்துரைகள் ஒரு கண்ணாடியாக இருக்கின்றன.

வசதிக்காக இங்கே பட்டியலாக:

 1. வ.வே.சு. ஐயர்குளத்தங்கரை அரசமரம்
 2. கல்கிகேதாரியின் தாயார்
 3. எஸ்விவி – கோவில் யானை
 4. தீபன் – பாப்பாவும் மரப்பாச்சியும்
 5. கு.ப.ரா.திரைக்குப் பின்னே
 6. பிச்சமூர்த்திகவலை மாடு
 7. புதுமைப்பித்தன்ஸித்தி
 8. சிதம்பரசுப்ரமணியன்சசாங்கனின் ஆவி
 9. பி.எஸ். ராமையாபணம் பிழைத்தது
 10. த.நா. குமாரசாமிராமராயன் கோவில்
 11. தி.ஜ.ர.நொண்டிக்கிளி
 12. சி.சு. செல்லப்பாநொண்டிக் குழந்தை
 13. லா.ச.ரா.பச்சைக் கனவு
 14. கி. சந்திரசேகரன்வெள்ளையன்
 15. க.நா.சு.இரண்டாம் கல்யாணம்
 16. தி.ஜா.ரத்தப்பூ
 17. அ.கி. ஜயராமன் கண்ணம்மா
 18. கி.ரா.(A.K. ராமச்சந்திரன்)சொத்துக்குடையவன்
 19. குகப்ரியைரசியா
 20. கி. சரஸ்வதி அம்மாள்ஜரிகைச் சேலை
 21. புரசு பாலகிருஷ்ணன்பொன் வளையல்
 22. சாவித்திரி அம்மாள்பழைய ஞாபகங்கள்
 23. றாலி கண்டதும் காதல்
 24. எம்.வி. வெங்கட்ராம்வேதனா
 25. வல்லிக்கண்ணன்நல்லமுத்து
 26. ஆர். ஷண்முகசுந்தரம்கல்லினுள் தேரை
 27. கி.வா.ஜ.கலைச்செல்வி
 28. கா.ஸ்ரீ.ஸ்ரீ.மழையிடையே மின்னல்
 29. ஸேனாசண்டையும் சமாதானமும்
 30. ரா.ஸ்ரீ. தேசிகன்மழை இருட்டு
 31. கௌரி அம்மாள்தீர்மானம்
 32. அகிலன்காசு மரம்
 33. ஜி.எஸ். மணிஅலையும் அமைதியும்
 34. பி.வி.ஆர்.தழும்பு
 35. சோமுமுதல் குழந்தை
 36. ஆறுமுகம்களத்து மேடு
 37. ? – எங்கிருந்தோ வந்தான் (எழுதியவர் பேர் குறிப்பிடப்படவில்லை)
 38. குமுதினி – ? (சிறுகதையின் பெயர் ஆர்விக்கு மறந்துவிட்டதாம்)
 39. தேவன் – ? (சிறுகதையின் பெயர் ஆர்விக்கு மறந்துவிட்டதாம்)
 40. ஸ்ரீரங்கம் ராமகிருஷ்ணன் – ? (சிறுகதையின் பெயர் ஆர்விக்கு மறந்துவிட்டதாம்)

ஆர்வி எழுதிய ‘நிலா சிரித்தது‘ என்ற குறுநாவலை சமீபத்தில் படித்தேன், அதைப் பற்றி தனியாக எழுதுவதற்கில்லை. ஐம்பதுகளின் குடும்ப மெலோட்ராமா திரைப்படம் போல இருந்தது.

தொகுக்கப்பட்ட பக்கம்: பரிந்துரைகள்

சுதந்திரப் போராட்ட நாவல்கள்

ரொம்ப நாளாச்சு ஒரு பட்டியல் போட்டு. ஆகஸ்ட் 15 வேற. போட்டுடுவோமே!

கண்ணதாசன்: ஊமையன் கோட்டை (ஊமைத்துரை)
கமலப்ரியா: கொங்குத் தங்கம் (தீரன் சின்னமலை பற்றிய நாவல்)
கல்கி: அலை ஓசை, தியாகபூமி, மகுடபதி
கா.சி. வேங்கடரமணி: முருகன் ஓர் உழவன், தேசபக்தன் கந்தன்
கு. ராஜவேலு: 1942
கோவி. மணிசேகரன்: மறவர் குல மாணிக்கங்கள்
சாண்டில்யன்: புரட்சிப் பெண்
சி.சு. செல்லப்பா: சுதந்திர தாகம்
சிதம்பர சுப்ரமணியன்: மண்ணில் தெரியுது வானம்
ர.சு. நல்லபெருமாள்: கல்லுக்குள் ஈரம்

இவற்றில் ஊமையன் கோட்டை, கொங்குத் தங்கம், மகுடபதி, மறவர் குல மாணிக்கங்கள், புரட்சிப் பெண் ஆகியவற்றை தவிர்த்துவிடலாம். அலை ஓசை, தியாகபூமி, முருகன் ஓர் உழவன், தேசபக்தன் கந்தன், மண்ணில் தெரியுது வானம், கல்லுக்குள் ஈரம் எல்லாம் சுமார் ரகம். 1942, சுதந்திர தாகம் இவற்றை நான் படித்ததில்லை.

இத்தனைதான் ஞாபகம் இருக்கிறது. நிச்சயமாக இன்னும் வந்திருக்க வேண்டும், உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்களேன்!

தொகுக்கப்பட்ட பக்கம்: பரிந்துரைகள்

ஹிந்தி நாவல் பரிந்துரைகள்

பிற இந்திய மொழிகளின் இலக்கியம் பற்றி நமக்கு அதிகம் தெரிவதில்லை. என் பதின்ம வயதுகளில் காண்டேகர், பங்கிம் சந்திர சாட்டர்ஜி ஆகியோரின் சில நாவல்களை மட்டும்தான் நான் வளர்ந்த கிராமங்களின் நூலகங்களில் பார்த்திருக்கிறேன். இருபது வயது வரைக்கும் நான் கேள்விப்பட்டிருந்த எழுத்தாளர்கள் இவர்கள் இருவர், தாகூர், தேவதாஸ் புகழ் சரத் சந்திர சாட்டர்ஜி, மற்றும் பிரேம்சந்த் மட்டுமே. அதற்குப் பிறகும் கன்னட, மலையாள, வங்காள இலக்கியத்தோடு கொஞ்சம் பரிச்சயம் ஏற்பட்டது. தெலுகு, வடகிழக்கு மாநிலங்கள், ஒரியா, மராத்தி, குஜராத்தி, ஏன் ஹிந்தி, உருது கூட அங்கொன்றும் இங்கொன்றுமாக ஏதோ படித்ததுதான். பிரேம்சந்த், ஃபனீஸ்வர்நாத் ரேணு, மாணிக் பந்தோபாத்யாய், பைரப்பா, அனந்தமூர்த்தி, தகழி, பஷீர், காண்டேகர், தாகூர், இஸ்மத் சுக்டை, மாண்டோ, ஃபகீர் மோஹன் சேனாபதி ஆகியோரைத்தான் ஓரளவாவது படித்திருக்கிறேன்.

ஏன்? இரண்டு காரணங்கள். ஒன்று மொழிபெயர்ப்புகள் சுலபமாக கிடைப்பதில்லை. இரண்டாவது என்ன படிப்பது என்று தெரிவதும் இல்லை. India Novels Collective என்ற இந்தத் தளம் இந்தக் குறையை கொஞ்சம் நிவர்த்தி செய்கிறது. பல இந்திய மொழிகளிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட நாவல்களை மொழிபெயர்க்கப் போகிறார்களாம். இப்போதைக்கு ஹிந்தி தேர்வுகளை மட்டும் பட்டியல் போட்டிருக்கிறார்கள். வசதிக்காக பட்டியல் கீழே.

Year of Publication Author Novel
1936 Premchand Godan
1937 Jainendra Tyagpatra
1940-44 Agyeya Shekar: Ek Jeevani
1946 Hazari Prasad Dwivedi Banbhatt Ki Aatmakatha
1949 Dharamvir Bharathi Gunahon Ki Devata
1954 Phanishwarnath Renu Maila Aanchal
1958 Yashpal Jhoota Sach
1966 Krisna Sobti Mitro Marjani
1966 Mohan Rakesh Andhere Band Kamre
1966 Rahi Masoom Raza Aadha Gaon
1968 Srilal Shukla Raag Darbari
1974 Bhisham Sahni Tamas
1976 Govind Mishra Lal Pili Zameen
1982 Manohar Shyam Joshi Kasap
1986 Abdul Bismillah Jhini Jhini Bini Chadariya
1992 Vishnu Prabhkar Ardhanarishwar
1993 Surendra Varma Mujhe Chand Chahiye
Nagarjun Ratinath Ki Chachi
Usta Priyamvada Pachpan Khambhe Laal Deewaarein

இவற்றில் நான் தமஸ்ஸையும் கோதானையும் மட்டுமே அரைகுறையாகப் படித்திருக்கிறேன். நீங்கள் யாராவது எதையாவது படித்திருக்கிறீர்களா? படித்திருந்தால் தவறாமல் மறுமொழி எழுதுங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: பரிந்துரைகள்

BBC – 100 Stories That Shaped the World

பொதுவாக இந்த மாதிரி பட்டியல்களில் – அதுவும் இத்தனை பெரிய பட்டியலில் பாதி தேர்வுகள் நமக்கும் சரியாகப் பட்டால் அதிகம். அதுவும் பிபிசி, நியூ யார்க் டைம்ஸ் என்று மேலை உலக நிறுவனங்களாக இருந்தால் அவற்றில் அனேகமாக மேலை உலகப் படைப்புகள்தான் இருக்கும். Tokenism ஆக சீனாவிலிருந்து, ஜப்பானிலிருந்து, இந்தியாவிலிருந்து சில படைப்புகளை பட்டியலில் சேர்த்துக் கொள்வார்கள். இதுவும் அப்படித்தான். அதிலும் தோபா டேக் சிங்கை எல்லாம் சேர்த்திருப்பது ரொம்பவே அதிகப்படி. (இத்தனைக்கும் எனக்குப் பிடித்த சிறுகதைதான், நானே மொழிபெயர்த்திருக்கிறேன்.) இருந்தாலும் இப்படி ஒரு பட்டியலைப் பார்த்தால் அதில் எத்தனை படித்திருக்கிறேன் என்று எண்ணாமல் கடக்க முடிந்ததில்லை. சும்மா ஜாலியாக படித்துப் பாருங்கள்!

பிபிசியின் பட்டியல் இங்கே. டாப் டென் மட்டும் கீழே வசதிக்காக.

 1. The Odyssey (8th Century BC) – Homer
 2. Uncle Tom’s Cabin (1852) – Harriet Beecher Stowe
 3. Frankenstein (1818) – Mary Shelley
 4. Nineteen Eighty-Four (1949) – George Orwell
 5. Things Fall Apart (1958) – Chinua Achebe
 6. One Thousand and One Nights (8th-18th Centuries)
 7. Don Quixote (1605-1615) – Miguel de Cervantes
 8. Hamlet (1603) – William Shakespeare
 9. One Hundred Years of Solitude (1967) – Gabriel García Márquez
 10. The Iliad (8th Century BC) – Homer

தொகுக்கப்பட்ட பக்கம்: பரிந்துரைகள்

பிரமிள் தேர்வுகள்

பிரமிளின் இந்தக் கட்டுரை 1987-இல் அரும்பு என்ற பத்திரிகையில் வந்திருக்கிறது. தி.ஜா. ஃபேஸ்புக் குழுமத்தில் பார்த்தேன். வசதிக்காக இங்கே மீள்பதித்திருக்கிறேன். அவர்களுக்கு நன்றி!


முதல் நாவல் என்று கருதப்படும் பிரதாப முதலியார் சரித்திரம், அன்றைய சமூக நிலையினைச் சிறுசிறு நிகழ்ச்சிகள் மூலம் சித்தரிக்கிறது. கமலாம்பாள் சரித்திரத்தில் வாழ்வின் துயில்நிலையிலிருந்து இரண்டு பாத்திரங்கள் ஆத்மிகமாக விழிப்படையும் பயணம் சித்தரிக்கப்படுகிறது. பத்மாவதி சரித்திரமும் பிரச்சினைகளைக் கட்டுக்கோப்பாகக் கொண்டதுதான். இவற்றில் உள்ள சம்பாஷணைத் திறனும் பாத்திரங்களும், இன்று கூட வீர்யம் குன்றாதவை.

இந்த ஆரம்பங்களை, வை.மு. கோதைநாயகி அம்மாள் போன்றவர்களின் மலிவான உணர்ச்சிக் கதைகளும் வடுவூர் துரைசாமி ஐயங்கார் போன்றோரின் ருசிகரக் கதைகளும், இரண்டு புறமும் இழுத்தன. நமது வாழ்வினையும் மனிதர்களையும் கவனிக்காமல், வெளிநாட்டு நாவல்களது தழுவல்களை நமது வாழ்வின் சித்தரிப்பாக காட்டும் அவசரத் தொடர்கதைகள் தொடர்ந்தன. பத்திரிக்கை வியாபாரத்துக்காக இதைக் கூசாமல் செய்த கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி, நமது பகைபுலத்தை உபயோகிக்கிறபோது கூட, நிகழ்ச்சிகளின் ஒழுங்கும் தர்க்கமும் வெளிநாட்டு சுவாரஸ்ய கதைகளினது தழுவல்களாகவே இருந்தன. டி.கே.சிதம்பரநாத முதலியார் இதை வெளிப்படையாகவே குறிப்பிட்டிருக்கிறார். கல்கி ஆரம்பித்த இந்த சுவாரஸ்யத் தழுவல், தமிழ்வாணனிலிருந்து சுஜாதா ஈறாகத் தொடர்ந்திருக்கிறது. பெருவாரிப் பத்திரிகையினில், இந்தத் தோரணையைக் கையாளாததுடன், இலக்கிய பூர்வமாகக் கணிக்கத் தக்க எழுத்தையும் கூட படைத்தவர்கள் தி. ஜானகிராமனும் த. ஜெயகாந்தனும்தான். இத்தகைய திறனாளிகளைப் படிப்பது, இவர்களை விட நுட்பமாக எழுதுவோரை ரசிப்பதற்கான ஒரு ஆரம்பப் பயிற்சியாகவேனும் இருக்கும்.

இடதுசாரி எழுத்தாளர்கள், தங்களது அரசியல் தீர்வைத்தான் கலைஞர்கள் யாவருமே வெளியிட வேண்டும் என்று கூப்பாடு போட ஆரம்பித்தபோது, எழுத்துலகில் மிகுந்த குழப்பம் பிறந்தது. இடதுசாரி பக்கம் தலையைத் திருப்பி, சல்யூட் அடித்தபடி நடை போடும் படைப்புகள் பிறந்தன. தொன்மையான மரபில் ஊறிய கிராம வாழ்வும் சமூக வாழ்வும், ஒரு பூர்வகுடித்தனமான சரீர வாழ்வாக மட்டும் இவர்களால் சித்திரிக்கப்பட்டுள்ளது. இதற்காக, காமம் சம்மந்தமான சில சுவாரஸ்ய அம்சங்களையும் இவர்களுள் ஓரிருவர் உபயோகித்துள்ளனர். எதையுமே பிரச்னையாக்கி ஒழுக்கத்துடன் தொடர்புபடுத்தும் மனித இயற்கைக்கூட, இவர்களுக்கு அத்துபடியாகவில்லை.

நாவலை ஒரு கலைப் படைப்பாக சிறப்பிக்கக் கூடிய மனம் சிந்தனை சார்ந்த மனமாக இருக்கவேண்டும். பாத்திரங்களது செயல்களுக்கும் முடிவுகளுக்கும் சிந்தனையே ஆதாரமாக வேண்டும். அப்போதுதான் நாவலின் பரந்த களம் அலுப்பு தராது. வெறும் சரீரப் பிரச்சினைகளைச் சார்ந்த மதிப்பீடுகள், ஒரு சில பக்கங்களுக்குள் பிசுபிசுத்துவிடும். மனித மனம் மதிப்பீடுகளை உருவாக்கி அவற்றை அநுபவத்துடன் பொருத்தி விசாரிக்கும் குணத்தைக் கொண்டது. இந்த அடிப்படையுடன், நாவலின் கட்டுக்கோப்புக்குள் முரண்படாதவாறு பாத்திரம் இயற்கையாக வளரவும் வேண்டும். இதற்காக, இயற்கையில் உள்ளதை அப்படியே போட்டோ பிடித்த மாதிரி எழுதவேண்டும் என்று கருதுவது தவறு. பார்க்கப் போனால், ஒவ்வொரு நாவலும் உலகை ஆதாரமாக கொண்டு வளர்ந்த வேறு ஒரு உலகம்தான். எனவே, ‘யதார்த்தம்’ என்பதன் பொருளை, நாவலின் கட்டுக்கோப்புக்குள் ஏற்படும் தர்க்கங்களுக்குள்தான் பார்க்க வேண்டும். இது, இன்று தங்களை விமர்சகர்கள் என்று நம்பிக்கொண்டிருக்கும் சிலருக்குப் புரியாதது, தெரியாதது.

இன்றைய தலைமுறை வாசகர்களுள் எத்தனை பேர், பொய்த்தேவு என்ற நாவலைப் படித்திருப்பார்கள் என்பது சந்தேகம். இதை எழுதியவர் க.நா. சுப்ரமண்யம். தமிழின் மிகச் சிறந்த நாவல் என்று இதைத்தான் சொல்ல வேண்டும்…

புயலிலே ஒரு தோணி, ஒரு கலவர நிலையை அதன் பின்னணியில் மட்டுமே சித்தரிக்கும் நாவல். சுஜாதா பாணியில் எழுதப்பட்ட நாவல் என்றுதான் அதைச் சொல்லவேண்டும். விசேஷமாக, ஜே.ஜே.யை மிகச் சிறப்பிப்பதற்காக வேண்டுமென்றே செய்யப்பட்ட தேர்வு இது. மிகச் சிறந்த தமிழ் நாவலை எழுதிய க.நா.சு. இந்த நாவலை நாவலே அல்ல என்று கூறியதுக்காக, க.நா.சு.வின் நாவலைக் கீழிறக்கிக் கூட இந்தக் குழு கணித்திருக்கிறது. க.நா.சு.வுடன் எனக்கும்தான் தீவிரமான அபிப்ராய வேறுபாடுகள் உள்ளன. அதற்காக, ஒரு சிறந்த நாவலைச் சிறப்பில்லாத நாவல் என்று கூறிவிட முடியுமா?

மோகமுள், தன்னளவில் ஒரு பூரணமான நாவல். தலைப்பைத் தொட்டு நிற்கும் பிரச்சினையுடன் தொடர்புள்ள வேறு பிரச்சினைகளின் கிளைகளும் அதற்கு உண்டு. ஜே.ஜே. சில குறிப்புகளில் எந்த விதப் பிரச்சினையுமே இல்லை. இடதுசாரிகளின் பார்வையை, சரியாக காட்டாமலே, அதை ஓரிரு பாத்திரங்களின் மூலம் ஆசிரியர் கிண்டல் பண்ணுகிறார். இந்தப் பாத்திரங்கள் குறுக்கு வழியில் இடதுசாரி அரசியலை உபயோகித்தமையால் இந்தக் கிண்டல். ஆனால் மதிப்பீடுகளின் யாத்திரையோ அதைப் பிரதிப்பலிக்கும் பாத்திரமோ நாவலின் இல்லாததால், இந்தக் கிண்டல் ஆழமற்ற விகடக் கச்சேரியாகவே நிற்கிறது.

உலகை ஆதாரமாகக் கொண்டு வளர்ந்த இன்னொரு உலகின் ‘யதார்த்தம்’ கூட ஜே.ஜே.யில் இல்லை. ஏனெனில், தன்னளவில் தர்க்கபூர்வமாக ஒருமை பெறாத உலகம் அது. ஜே.ஜே. என்பவன் சந்திக்கும் முதல் மனிதனாலேயே, உணர்வு நாசம் பெறுகிறான் என்கிறார் ஆசிரியர். நாவலில், அவனைச் சந்திக்கும் முக்கியப் பாத்திரம்தான் உணர்வு நாசம் பெறுகிறது. ஜே.ஜே. என்ற பாத்திரமே பிறருக்கு உணர்வு நாசம் தரும் பாத்திரம்தான். இப்படித் தன்முரணான ஒரு உலகம் தன்னளவில் யதார்த்தமானதல்ல. மேலும், ‘அவனுடைய உயிர் திராவிட உயிர் என்றாலும் தமிழ் உயிர் அல்ல’ என்ற மறைமுகமான இனவாதமும் நாவலில் உண்டு. இதை நான் விரிவாக வேறு இடங்களில் விமர்சித்துக் காட்டி உள்ளேன்.

புயலிலே ஒரு தோணி, ஒரு கலவர நிலையையும் அதனூடே தப்பி ஓடிவருவதையும் ‘டாக்குமெண்டரி’யாக, அதுவும் சுவாரஸ்யத்தை முன்னிறுத்தி எழுதப்பட்ட நாவல். பிரச்சினை என்று மதிப்பீட்டு ரீதியாக எதையும் எழுப்பாத நாவல்.

பின் இரு நாவல்களையும் விடச் சிறந்தவை என்று, கீழேவரும் நாவல்களை குறிப்பிட முடியும். (கீழுள்ள வரிசைக்கிரமத்துக்கு விசேஷ அர்த்தம் இல்லை.)

1. கமலாம்பாள் சரித்திரம்பி. ஆர். ராஜமையர்
2. பொய்த்தேவுக. நா. சுப்ரமண்யம்
3. நாகம்மாள்ஆர். ஷண்முகசுந்தரம்
4. ஒரு நாள்க. நா. சுப்ரமண்யம்
5. வாழ்ந்தவர் கெட்டால்க. நா. சுப்ரமண்யம்
6. அசுரகணம்க. நா. சுப்ரமண்யம்
7. ஜீவனாம்சம்சி.சு. செல்லப்பா
8. வாடிவாசல்சி.சு. செல்லப்பா
9. மோகமுள்தி. ஜானகிராமன்
10. புத்தம்வீடுஹெப்ஸிபா ஜேசுதாசன்
11. நிழல்கள்நகுலன்
12. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்த. ஜெயகாந்தன்

பொய்த்தேவு: சிறந்த தமிழ் நாவல். அரும்பு, மார்ச்-ஏப்ரல் 1987.

தொகுக்கப்பட்ட பக்கம்: பரிந்துரைகள்