நேருவைப் பற்றி காந்தியின் செயலாளர்

இன்று நேருவின் 128-ஆவது பிறந்த நாள். நேரு இந்தியா கண்ட மாமனிதர். இன்றைய இந்தியாவின் முக்கியச் சிற்பிகளின் ஒருவர். அவர் குறையே இல்லாத, தவறே செய்யாத மனிதர் அல்லர். ஆனால் அவரது சாதனைகள் அவரது தவறுகளை விட பல மடங்கு அதிகம் என்பது தெள்ளத் தெளிவான உண்மை.

நேரு விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் அல்லர். அப்படி நேருவே நினைத்திருக்க மாட்டார். ஆனால் சமீப காலத்தில் நேருவை எதற்கெடுத்தாலும் குற்றம் சொல்லும் போக்கு பரவலாகிக் கொண்டிருக்கிறது – குறிப்பாக ஹிந்துத்துவர்களிடம். ஏறக்குறைய வன்மம்தான் வெளிப்படுகிறது. கூர்மையான சிந்தனையாளரான அரவிந்தன் நீலகண்டனே ஒரு முறை தமிழகக் கோவில்களில் உள்ள சிற்பங்கள் வெகு அலட்சியமாக சேதப்படுத்தப்படுவதை நேருவிய சிந்தனை முறையின் தாக்கம் என்று குறிப்பிட்டிருந்தார். எல்லாப் பிரச்சினைகளுக்கும் கணவனே காரணம் என்று உறுதியாக நம்பும் மனைவிகளின் நினைவுதான் வந்தது. விமர்சனங்கள் வேறு, வன்மம் வேறு.

விமர்சனங்கள் – அதுவும் வரலாற்று நாயகர்களைப் பற்றிய நடுநிலையான விமர்சனங்கள் – தேவை. வரலாற்று நாயகர்களைப் பற்றிய பிம்பங்கள் பல சமயம் உண்மைக்கு அருகில் இருக்கின்றன, ஆனால் முழு உண்மைக்கு கொஞ்சம் தூரத்தில் இருக்கின்றன. காந்தியின் பிரதம சீடர் என்று கருதப்படும் நேரு காந்தியை விமர்சித்தவர்களில் ஒருவர் என்பது வியப்பளிக்கலாம். நேருவின் தன் சுயசரிதையில் காந்தியை தீவிரமாக விமர்சித்திருக்கிறாராம். காந்தியின் தனிப்பட்ட செயலாளரான (private secretary) மஹாதேவ் தேசாய் நேருவின் சுயசரிதையை ஆங்கிலத்திலிருந்து குஜராத்திக்கு மொழிபெயர்த்திருக்கிறார். அப்படி மொழிபெயர்க்கும்போது தீவிர காந்தி பக்தர்கள் காந்தியைப் பற்றிய விமர்சனங்கள் உள்ள புத்தகத்தை மொழிபெயர்ப்பது காந்திக்கு விரோதமான செயல் என்று தேசாயை குறை சொல்லி இருக்கிறார்கள். நேரு ஆதரவாளர்கள் – குறிப்பாக அன்றைய சோஷலிஸ்டுகள் – தேசாய் நேருவின் எண்ணங்களைத் திரித்துவிடுவார் என்று பயப்பட்டிருக்கிறார்கள். அப்படி என்றால் எத்தனை தீவிரமான விமர்சனமாக இருக்க வேண்டும்?

தேசாய் தன் மொழிபெயர்ப்புக்கு ஒரு முன்னுரை எழுதி இருக்கிறார். மிகச் சிறப்பான முன்னுரை. அதை மட்டும்தான் படித்திருக்கிறேன், இனி மேல்தான் நேருவின் சுயசரிதையைத் தேட வேண்டும். இந்தப் பதிவு அந்த முன்னுரையைப் பற்றித்தான்.

மஹாதேவ் தேசாயின் வார்த்தைகளில் – நேரு தன் சுயசரிதையில்:

காந்திஜியின் செயல்களையும் வேலைத் திட்டத்தையும் தத்துவத்தையும் கடுமையாகத் தாக்கியிருக்கிறார். சில இடங்களில் கண் மூக்கு தெரியாமல் தாக்கி இருக்கிறார்.

ஆனால் தேசாயின் கண்ணில் நேரு எண்ணங்களை விண்ணிலும் பாதங்களை மண்ணிலும் திடமாக வைத்துக் கொண்டிருப்பவர். கருத்து வித்தியாசம் காந்தியையும் அவரை தெய்வமாகக் கொண்டாடியவர்களையும் நேருவையும் பிரித்துவிடவில்லை!

நேரு தடியடியை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை – அப்போது ஓடிவிட வேண்டும் என்ற பயம், திருப்பி அடிக்க வேண்டும் என்ற ஆங்காரம் எல்லாவற்றையும் உணர்ந்திருக்கிறார். மயிரிழையில்தான் தான் தீரத்தோடு அந்த தடியடியை எதிர்கொண்டேன் என்று வெளிப்படையாகச் சொல்கிறார். காந்தியின் மிகப் பெரிய தாக்கமே இதுதான் – தன் தவறுகளை ஒத்துக் கொள்ளும் தைரியம். தன்னால் மாற முடியும், தவறுகளைத் திருத்திக் கொள்ள முடியும் என்ற துணிவுள்ளவர்கள்தான் தவறுகளை ஒத்துக் கொள்ள முடிகிறது. கோழைகள்தான் வரிந்து சப்பைக்கட்டு கட்டுகிறார்கள்.

முன்னுரையிலிருந்து சில வரிகளை அப்படியே கொடுத்திருக்கிறேன்.

ராஜி (compromise) செய்து கொள்வது அவருக்கு (நேருவுக்கு) பிடிக்காத விஷயம். ஆனால் அவரது வாழ்வு முழுவதும் ராஜியாக இருக்கிறது. காந்திஜியின் இணையற்ற துணிவும் ஆண்மையும் ஜவஹரை அவர்பால் இழுக்கின்றன. ஆனால் காந்திஜியின் சமயப் பற்றும் ஆன்மீகப் போக்கும் மேனாட்டுப் முறையில் வளர்ந்த ஜவஹருக்கு விளங்கவில்லை. ஆகையினால் எரிச்சல் உண்டாகிறது.

ஜவஹரும் காந்திஜியைப் பார்த்து ‘அவர் சாதாரண நடைமுறைகளைக் கடந்தவர். மற்றவர்களை நாம் நிதானிப்பது போல அவரையும் நிதானித்து மதிப்பிட முடியாது’ என்று கூறுகிறார். கூறிவிட்டு தானே மதிப்பிடுகிறார்.

ஒத்துழையாமை இயக்கத்தை காந்திஜி நிறுத்தியது ஒழுக்கக் கேடு

அஹிம்சை நமக்குப் பெரிதும் உதவும். ஆனால் அது முடிவான லட்சியத்துக்கு நம்மை அழைத்துச் செல்லுமா என்பது சந்தேகம்தான்.

அவருடைய வீட்டு வாசலில் நிற்கும் ஆயிரக்கணக்கான யாத்திரிகர்களைப் பார்த்து ‘இவர்களையும் இவர்களது முன்னோர்களையும் இந்தியாவின் நாலாமூலையிலிருந்தும் ஆயிரக்கணக்கான வருஷங்களாய் புண்ணிய கங்கையில் நீராடும்படி வரவழைக்கிற இந்த மதம் எவ்வளவு அற்புதமானது’ என்று கூறுகிறார்.

தேசாய் நேருவைப் பற்றி எடை போடுவது:

ஜவஹர் மிகவும் சிக்கலான பேர்வழி. அவர் முரண்பாடுகளின் அதிசயமான கலப்பு. உறுதியும் சந்தேகமும் நம்பிக்கையும் அதன் குறைவும் மதமும் அதன் வெறுப்பும் கலந்தவர். ஓய்வொழிவற்ற உழைப்பும் துன்பமும் துயரமும் நிறைந்த வாழ்க்கை வேறு விதமாக இருக்க முடியாது.

முன்னுரையை இணைத்திருக்கிறேன். (தமிழில் மொழிபெயர்த்தவர் யார் என்று தெரியவில்லை). கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

பின்குறிப்பு: மஹாதேவ் தேசாய் கிட்டத்தட்ட 25 வருஷங்கள் – தான் இறக்கும் வரை – காந்தியின் செயலாளராகப் பணி புரிந்தவர். காந்தியின் செயலாளர் என்றால் சிறை செல்லாமலா? பல முறை சிறைக்கு சென்றிருக்கிறார், சிறையில்தான் இறந்தார். காந்தியின் சுயசரிதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் இவர்தான்.

தொகுக்கப்பட்ட பக்கம்: விடுதலைப் போராட்டம்

தொடர்புடைய சுட்டி: மஹாதேவ் தேசாயின் மகன் நாராயண் தேசாய் காந்தி ஆசிரமத்தில் வளர்ந்ததைப் பற்றி எழுதிய புத்தகம்