சுஜாதாவின் அறிவியல் சிறுகதைகள்

சுஜாதாவின் அறிவியல் சிறுகதைகள் அனேகமாக காலாவதி ஆகிவிட்டவை. (தமிழாசிரியர், திமலாவைத் தவிர). ஆலையில்லாத ஊருக்கு இலுப்பைப்பூ கேஸ்தான். அவருடைய கதைகளில் பெரும் கேள்விகள் எழுவதே இல்லை. அவர் புதிதாக எந்த கருவையும் உருவாக்கிவிடவும் இல்லை. சின்னச் சின்ன நகாசு வேலைகள், (உதாரணம் – கவிதை படிக்கும் ரோபோ) மெல்லிய நகைச்சுவை ஆகியவைதான் அவற்றின் பலம். ஒரு ரோபோ உயிர் பெறும் கருவை அலுப்புத் தட்டும் வரையில் பயன்படுத்தி இருக்கிறார்.

ஆனால் அறிவியல் புனைவுகள் எனக்கு அறிமுகம் ஆனதே சுஜாதா மூலம்தான். 1976 வாக்கில் கல்கி பத்திரிகையில் ஏழெட்டு சிறுகதைகளை எழுதினார். காலப்பயணம், நடப்பதை முன் கூட்டியே சொல்லும் கம்ப்யூட்டர், அணு ஆயுதப் போரில் அழிந்த உலகம் என்று பல கருக்களை வைத்து எழுதினார். அந்த வயதில் மிகவும் கவர்ந்தன. அறிவியல் புனைவுகளின் சாத்தியங்கள் புரிந்தன. ஒரு அதிசயம் நடந்துவிட்டால் அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்று யோசிக்க வைத்தன. குறிப்பாக கால எந்திரம் சிறுகதையில் இறந்த காலத்தில் ஏற்படும் சிறு மாற்றமும் வரலாற்றை முழுமையாக மாற்றிவிடலாம் என்ற கருத்தை முதல் முறையாகப் படித்தேன். ஆங்கிலத்தில் SF படித்தவர்களுக்கு அது தேய்வழக்காகக் கூட இருக்கலாம். ஒன்பது பத்து வயது சிறுவனுக்கு அது கண்திறப்பு.

அந்த கல்கி சிறுகதைகளின் தொகுப்பு கிடைத்தது, அதைப் பற்றித்தான் எழுத வேண்டும் என்று நினைத்தேன். பிறகு பிற அறிவியல் சிறுகதைகளையும் பற்றி எழுத ஆரம்பித்துவிட்டேன்.

கல்கி சிறுகதைகளில் அன்று எனக்கு மிகவும் பிடித்திருந்த சிறுகதை தமிழாசிரியர். இன்று படித்ததைப் போலவே நினைவிருக்கிறது. இன்றும் புத்திசாலித்தனமான கரு என்றே கருதுகிறேன்.

என்ன கதை? பல நூறு ஆண்டுகள் கடந்துவிட்டன, தமிழ்தான் உலகத்தின் பொதுமொழி. ஆனால் தமிழ் எக்கச்சக்கமாக மாறிவிட்டது. சங்கத தமிழை இன்று நாம் புரிந்து கொள்ள கஷ்டப்படுவது போல நமது தமிழை அன்று யாராலும் புரிந்து கொள்ள முடியாது. அது பழந்தமிழ், வழக்கொழிந்துவிட்டது. தமிழ் சுருங்கிவிட்டது – “உனக்குப் புரிகிறதா?” என்பது “புரி?” என்று மாறுகிறது. புரியவில்லை என்று சொல்ல வேண்டுமா? “அபுரி!” பழந்தமிழை கற்ற ஒரே ஒருவர்தான் இன்னும் இருக்கிறார் – அவர்தான் தமிழாசிரியர். பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கிறார். பல வருஷங்களாக ஒரு மாணவனும் பழந்தமிழைப் படிக்க வரவில்லை. அவரது வேலை அபாயத்தில். திடீரென்று 2 பேர் வருகிறார்கள். மாணவர்கள் கிடைத்துவிட்டார்கள், வேலைக்கு இருந்த அபாயம் போயிற்று என்று இவருக்கு சந்தோஷம். பல்கலைக்கழகத் தலைவர் மாணவர்களை பார்வையிட வருகிறார், யாரையும் காணவில்லை. தமிழாசிரியர் அவர்களைத் தேடுகிறார். கடைசியில் அவர்கள் வேற்றுக் கிரகத்திலிருந்து படையெடுத்து வருபவர்கள், தங்கள் தொடர்பு மொழியாக பழந்தமிழை பயன்படுத்தி இருக்கிறார்கள் என்று தெரிகிறது. எந்தக் கம்ப்யூட்டராலும் உடைக்க முடியாது இல்லையா? தமிழாசிரியருக்கு இப்போது அசதித் துறையில் வேலை. (சதியின் எதிர்ச்சொல் அசதி!)

மொழி எப்படி மாறக் கூடும், எப்படி குறைவான ஒலிகளைக் கொண்டு அதே கருத்துக்களை சொல்ல முயற்சிக்கும் என்பதெல்லாம் அப்போது (இப்போதும்) உற்சாகமூட்டிய கருத்துக்கள். சதி-அசதி வார்த்தை விளையாட்டெல்லாம் இத்தனை வருஷம் கழித்தும் மறக்கவில்லை. இரண்டாம் உலகப் போரின்போது நவாஹோ இந்தியர்களின் மொழியை ரகசிய தொடர்பு மொழியாக பயன்படுத்தினார்களாம். சுஜாதா எங்காவது இந்தச் செய்தியைப் படித்திருப்பார் என்று நினைக்கிறேன்.

கல்கி சிறுகதைகளில் தேவன் வருகை அவருக்கு பிடித்தமானது என்று தெரிகிறது. ஆனால் ஓ. ஹென்றி ட்விஸ்ட் மட்டுமே உள்ள, கடைசி வரிக்காகவே எழுதப்பட்ட சிறுகதை. கடவுள் ஆறு மணிக்கு தரிசனம் தருகிறேன் என்கிறார். பிறகு என்ன? சூரியன் சிறுகதை அவ்வப்போது anthology-களில் இடம் பெறுகிறது. அணுகுண்டுப் போரால் நிலப்பரப்பு முழுதும் கதிர்வீச்சு, மனிதர்கள் பூமிக்கடியே வாழ்கிறார்கள். ஒரு சிறுவனுக்கு சூரியனைப் பார்க்க விருப்பம். காலமானவர் சிறுகதையில் பத்திரிகையின் ஜீவநாடியான கம்ப்யூட்டர் நாளை பத்திரிகை ஆசிரியர் இறக்கப் போவதை இன்றைய செய்தியாக பிரசுரிக்கிறது. நகர்வலம் சிறுகதையில் மூழ்கிவிட்ட சென்னை சுற்றுலாத் தலமாக மாறி இருக்கிறது. வாசல் சிறுகதையில் உணவுப் பற்றாக்குறையை சமாளிக்க மக்களைக் கொல்லும் நாட்டின் தலைவர் நரகத்துக்கு செல்கிறார். யயாதி சிறுகதையில் 25 வயதுக்கு திரும்ப மருந்து சாப்பிடும் அறுபது வயதுக்காரர் கொஞ்சம் அதிகமாக மருந்தை சாப்பிட்டுவிடுகிறார். ரூல் நம்பர் 17-இல் அரசு குழந்தை பிறப்பை கடுமையாக கட்டுப்படுத்தும் வேளையில் ஒரு clerical error-ஆல் அனுமதி இருக்கிறது என்று நினைக்கும் அப்பா. கால எந்திரம் அந்த வயதில் கொஞ்சம் சிந்திக்க வைத்த கதை. 2020களின் மனிதன் தொல்காப்பியரை சந்திக்கிறான்.

பிற சிறுகதைகளில் திமலா சிறப்பானது. அவரது திறமை வெளிப்படும் அபூர்வ SF. இன்னும் 500 வருஷம் கழித்து கோவில், சடங்கு எல்லாம் எப்படி நடக்கும்? திருப்பதியில் ஜருகண்டி ஜருகண்டி என்று இன்னும் சொல்லிக் கொண்டிருப்பார்களா? பல தளங்களில் யோசிக்க வைக்கும் சிறுகதை. விஞ்ஞானம் முன்னேறிக் கொண்டே போனால் சடங்குகள் சார்ந்த ஆன்மீகம் என்னவாகும் என்ற கேள்வியை எழுப்புகிறார்.

அறிவியல் சிறுகதைகள் என்று சொன்னாலும் இவற்றில் அறிவியல் சிறுகதைகள், அமானுஷ்ய சிறுகதைகள் எல்லாவற்றையும் பற்றியும் கலந்து கட்டி எழுதி இருக்கிறேன். மீண்டும் ஜீனோ, என் இனிய இயந்திரா, சொர்க்கத்தீவு, சில பல கணேஷ்-வசந்த் நாவல்கள் ஆகியவற்றை அறிவியல் புனைவுகள் என்று வகைப்படுத்தலாம்தான், ஆனால் நாவல்களை தவிர்த்திருக்கிறேன்.

ஒரு நாள் போன்ற சிறுகதைகளில் அவர் முனைந்திருந்தால் நல்ல சிறுகதைகள் கிடைத்திருக்கலாம். நல்ல கரு. திமலாவின் பாதிப்பு உள்ள சிறுகதை. கனவு வாழ்க்கை வாழ விரும்பும் ஒருவனை விவரிக்கிறது. தலைதீபாவளி கொண்டாட்டம். ஆனால் அன்றைய முன்னேறிய நாகரீகத்தில் தலைதீபாவளி என்ற பேச்சே கிடையாது. ஆசைப்படும் எஞ்சினியருக்காக ஒரு அனுபவத்தை உருவாக்கித் தருகிறார்கள்.

சோம்னா (1971) நல்ல அறிவியல் சிறுகதை என்பதை விட நல்ல சிறுகதை. கொஞ்சம் போரடித்துக் கொண்டே போயிற்று, கடைசி வரியில் மாற்றிவிடுகிறார்.

அவருக்கு இரண்டு கருக்களில் ஓரளவு விருப்பம் இருந்திருக்கிறது. ரோபோ உயிர் பெறுவது, பல நூறாண்டுகளுக்குப் பின் பெண்களின் நிலை. இவற்றை வைத்து பல சிறுகதைகளை எழுதி இருக்கிறார். பிற்காலத்தில் அவர் எழுதிய மீண்டும் ஜீனோ போன்றவை ரோபோ உயிர் பெறும் கருவை வேறு விதமாக யோசித்ததுதான்.

ரோபோ உயிர் பெறும் கருவை வைத்து எழுதியவற்றில் திவாவில் உயிர் பெற்ற ரோபோ தன்னை உருவாக்கியவனைக் கொல்கிறது.

பெண்களின் நிலை கருவை வைத்து எழுதியவற்றில் வாசனை சிறுகதையில் பெண்கள் அருகிவிட்டனர், உலகிலேயே பத்து பெண்கள்தான் இருக்கின்றனர், அவர்களை கண்காட்சியில் வைத்து காட்டுகிறார்கள். வெளியில் இருக்கும் சில பெண்கள் காட்சிப் பொருளாக மாற விரும்பாமல் ஒளிந்து வாழ வேண்டிய நிலை. ஒன்பதாவது பெண் சிறுகதையில் பெண்கள் குழந்தை பெற விரும்புவதில்லை. ஏமாற்றி தாயாக்குபவர்களுக்கு அரசு ஊக்கப் பரிசு தருகிறது. முன்னால் சொன்ன கல்கி சிறுகதைகளில் ஒன்று. மஞ்சள் ரத்தம் சிறுகதையில் அறைக்கு வரும் பெண் ரோபோவோ என்று சந்தேகித்தால் அவள் பூமியின் மனுஷி.

டாக்டர் ராகவானந்தம் வரும் சிறுகதைகள் அனேகமாக அறுபதுகளில் எழுதப்பட்டவை. அவற்றில் சுஜாதா உத்தேசித்தது மெல்லிய நகைச்சுவையை மட்டுமே. ராகவானந்தம் விஞ்ஞானி. எதையாவது கண்டுபிடிப்பார், அது வேலைக்காகாது. இந்தக் கருவை வைத்து சின்னதாக தமாஷ் செய்வார். ராகவேனியும் 277 சிறுகதையில் உலகை அழித்துவிடக் கூடிய புதிய element ஒன்றைக் கண்டுபிடித்துவிட்டு அதை ஆஃப் செய்ய முயற்சிக்கிறார்கள். 1000 வருஷங்கள் வாழ்வது எப்படி சிறுகதையில் காயகல்பம் சாப்பிட்டுவிட்டு 300 வருஷம் உயிரோடு இருக்கும் ஒருவரை சந்திக்கிறார்கள். வாட்டர் கார் விவகாரத்தில் பெட்ரோலுக்கு பதிலாக தண்ணீரை வைத்து காரை ஓட்டுகிறார்கள்.

ராகினி என் வசமாக அமானுஷ்ய சிறுகதை என்றுதான் வகைப்படுத்த வேண்டும். பெரியவர் என்னவெல்லாமோ வித்தை காட்டுகிறார். அஷ்டமாசித்தி தெரிந்தவர் போலிருக்கிறது. முடிவு வரிக்காகவே எழுதி இருக்கிறார். நல்ல வரிதான் – “நான் எழுந்து சென்று அந்தக் கூட்டத்தில் மறைவதை நானே பார்த்தேன்”. ஆனால் அது மட்டும் பத்தாது.

அனாமிகா போன்ற சிறுகதைகள் SFதானா என்பதே சந்தேகம்தான். சுனாமியில் இறந்த ஒரு பெண்ணின் கையில் சுஜாதாவின் விஞ்ஞானச் சிறுகதைகள் புத்தகம் இருந்ததாம். அதைக் கேட்ட நெகிழ்வில் இறந்து போன பெண் சுஜாதாவிடமே பீச்சில் வந்து பேசுவதாக ஒரு கதை. ராகினி என் வசமாக சிறுகதையை கொஞ்சம் உல்டா செய்தது போல இருக்கிறது.

ஜில்லு சிறுகதை கல்கி சிறுகதையான சூரியனை நினைவுபடுத்தியது. கதிரியக்க மழை பெய்யப் போகிறது. அரசு ஊரையே காலி செய்கிறது. நாய்க்கு இடமில்லை. சிறுவன் தன் நாயோடு ஓடிவிடுகிறான்.

சில சமயம் அவர் படித்த கதைகளை தமிழ்ப்படுத்தி இருக்கிறார். மிஸ்டர் முன்சாமி ஒரு 1.2.1 (1969) Flowers for Algernon-இன் தமிழ் வடிவம்.

இன்னும் இருக்கின்றன, ஆனால் நினைவில் வந்தது, சமீபத்தில் படித்தது இவ்வளவுதான்.

பொதுவாக அறிவியல் புனைவுகளில் அறிவியல் plausible ஆக இருந்தால் நல்லது. இன்று நடக்காவிட்டாலும் இன்னும் ஆயிரம் வருஷங்கள் கழித்து நடக்கும் சாத்தியக்கூறு இருந்தால் நல்லது. ஆனால் சுஜாதா இந்த சிறுகதைகளில் பொதுவாக உத்தேசிப்பது மெல்லிய நகைச்சுவையை மட்டுமே.பல கதைகளில் சின்னதாக தமாஷ் பண்ணவே எழுதி இருக்கிறார். அதுவும் டாக்டர் ராகவானந்தம் கதைகளில் இது மிகத் தெளிவாகத் தெரியும்.

விதிவிலக்குகள் இருந்தாலும் பொதுவாக இன்று படிக்கும்போது அவரது அறிவியல் சிறுகதைகள் பெரிதாக கவர்வதில்லை. அடுத்த தலைமுறை இளைஞர்களைக் கவரும் என்ற நம்பிக்கையும் எனக்கில்லை. இன்று அவரது தீவிர ரசிகர்கள், அல்லது முன்னோடி முயற்சிகளில் ஆர்வமுள்ளவர்கள் தவிர்த்து வேறு யாருக்கும் இதில் ஆர்வம் இருக்கப் போவதில்லை. உங்கள் பதின்ம வயது மகனோ மருமகளோ nephew-ஓ niece-ஓ தமிழில் என்ன படிக்கலாம் என்று கேட்டால் இவற்றை பரிந்துரைத்துவிடாதீர்கள். திமலா கூட உலகமகா தரிசனம் என்று சொல்லிவிட முடியாது. தமிழாசிரியர் புத்திசாலித்தனமான சிறுகதை, அவ்வளவுதான்.

அதற்காக அவரது முன்னோடி முயற்சிகளை குறைத்து மதிப்பிடுவதற்கும் இல்லை. கால்குலேட்டர்கள் வந்துவிட்டதால் பதினாறாம் வாய்ப்பாடு வரை சொல்லிக் கொடுத்த மூன்றாம் வகுப்பு ஆசிரியர் மேல் மரியாதை போய்விடுகிறதா என்ன? ஆனால் அவருக்கு நன்றி சொல்ல இந்த பதிவு. இன்றும் அவரே தமிழின் முதன்மை அறிவியல் சிறுகதைகளை எழுதி இருக்கிறார். (ஜெயமோகனின் முயற்சிகளை நான் gothic fiction என்றே வகைப்படுத்துவேன்.)

அவரது அறிவியல் அபுனைவுகளைப் பற்றியும் ஒரு வார்த்தை. இன்று இவற்றால் பெரிய பயன் இல்லை. அவற்றின் தாக்கத்தை இன்றைய இன்டர்நெட் யுகத்தில் உணர்வது கஷ்டம். ஆனால் ஒரு காலத்தில் அவற்றுக்கு இருந்த மவுசு மிக அதிகம். ஒரு தலைமுறைக்கே அறிவியலில் ஆர்வத்தை வளர்த்தவர் அவர். கடவுள் இருக்கிறாரா இன்றும் படிக்கக் கூடிய அறிமுகப் புத்தகம். ஏன் எதற்கு எப்படி, ஜீனோம், ஒரு விஞ்ஞானப் பார்வையிலிருந்து போன்ற புத்தகங்களை இன்று நாஸ்டால்ஜியாவுக்காகத்தான் படிக்க வேண்டும். அவற்றைப் பற்றி எழுத பெரிதாக எதுவும் இல்லை.

படிக்க வேண்டுமென்றால் தமிழாசிரியர், திமலா இரண்டை மட்டுமே பரிந்துரைப்பேன். முன்னோடி மட்டுமே. இன்றும் தமிழில் இவரை அடித்துக் கொள்ள ஆளில்லை என்பதுதான் வருத்தம். எனக்கு அந்த வெற்றிடத்தை நிரப்ப வேண்டும் என்ற கனவு உண்டு…

தொகுக்கப்பட்ட பக்கம்: சுஜாதா பக்கம்

அஞ்சலி: பா. செயப்பிரகாசம்

அடுத்தடுத்து இரண்டு எழுத்தாளர் மறைவு.

பா. செயப்பிரகாசத்தை நான் அதிகம் படித்ததில்லை. நிஜமான பாடல்கள் சிறுகதை பிடித்திருந்ததால்தான் இந்த அஞ்சலியை எழுதுகிறேன்.

இன்குலாபுக்கு சாஹித்ய அகடமி விருது வழங்கப்பட்டபோது நடுவர் குழுவில் இருந்த பா. செயப்பிரகாசத்தை ஜெயமோகன் அதிகார வெறி பிடித்த ஆக்டோபஸ், இலக்கியம் பற்றி அறியாதவர், ராஜேஷ்குமாருக்கும் அசோகமித்திரனுக்கும் வித்தியாசம் தெரியாதவர் என்று கழுவி ஊற்றினார். அரசு உயர் அதிகாரி இடதுசாரி புரட்சி அமைப்பின் தலைவராக எப்படி இருக்க முடியும் என்ற கேள்வியை எழுப்பினார். ஒருவர் மீது மற்றவர் அவதூறு வழக்கு தொடுத்தனர் என்று நினைவு.

ஆனால் என் கண்ணில் செயப்பிரகாசம் இலக்கியவாதிதான். இது ஒரே ஒரு சிறுகதைத் தொகுப்பைப் படித்த பிறகு எழுந்த எண்ணம்தான், sample size சிறியதுதான். என்றாலும் இப்படிப்பட்ட சிறுகதைகளை எழுதியவருக்கு அசோகமித்திரன் என்ன எழுதினார், ராஜேஷ்குமார் என்ன எழுதுகிறார் என்று தெரியாமல் இருக்க முடியாது. எனக்கே தெரிகிறது.

ஆனால் செயப்பிரகாசம் முன்னணியில் இருக்கும் இலக்கியவாதி அல்லர். அவர் எழுதிய எந்த சிறுகதையும் நான் ஒரு anthology-யைத் தொகுத்தால் அதில் இடம் பெறாது. இது சுவை வேறுபாடு அல்ல, அவர் எங்கோ பின்னால்தான் நிற்கிறார். ஏழைகளின் உலகத்தை, குறிப்பாக கிராமத்தில் ‘கீழ்ஜாதியினரை’ பற்றிய “முற்போக்கு” கதைகள்தான் மீண்டும் மீண்டும். பல இடங்களில் இதைத்தான் சொல்லப் போகிறார் என்று தெரிந்துவிடுகிறது. ஆனால் அவரது எழுத்தில் தெரியும் genuineness அவரை இலக்கியத்துக்கு அருகிலாவது கொண்டு வருகிறது. சுமாரான எழுத்தாளர் என்றே மதிப்பிடுகிறேன். இதுவும் அந்த ஒரு சிறுகதைத் தொகுப்பை வைத்து எழும் கருத்துதான்.

செயப்பிரகாசத்தை நல்ல எழுத்தாளராக மதிக்காத ஜெயமோகனே கூட அவரது இதழியல் பங்களிப்பு முக்கியமானது என்று அங்கீகரிக்கிறார். செயப்பிரகாசம் மன ஓசை என்ற சிற்றிதழின் ஆசிரியராக இருந்தவர்.

அவரது ஆளுமையை அவரோடு நேரடியாகப் பழகிய பெருமாள் முருகன் தன் அஞ்சலிக் கட்டுரையில்சி விவரித்திருந்தார். என்ன காரணத்தாலோ இப்போது தலைப்பு மட்டுமே இருக்கிறது. பெ. முருகன் உட்பட்ட பலருக்கு நிறைய உதவி செய்திருக்கிறராம். அதிகார பீடங்களை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டவர், நிறைய உதவி செய்பவர், முன்னோடி இதழியலாளர், சில நல்ல சிறுகதைகளை எழுதியவர் ஆகிய நான்குமே சரியாக இருக்க வாய்ப்பிருக்கிறது.

செயப்பிரகாசம் ஒரு தளத்தை நடத்திக் கொண்டிருந்தார்.

வழக்கமான வரிதான் – எழுத்தாளருக்கு அஞ்சலி என்பது அவரது படைப்புகளைப் பற்றி எழுதுவதுதான். அவரது அக்னி மூலை சிறுகதைத் தொகுப்பை பற்றி எழுதியதை மீள்பதித்திருக்கிறேன்.


பா. செயப்பிரகாசத்தின் பேரை அங்கே இங்கே கேட்டிருந்தாலும், அவருடைய அம்பலக்காரர் வீடு சிறுகதையை எங்கோ (விட்டல்ராவ் தொகுத்த இந்த நூற்றாண்டு சிறுகதைகள் தொகுதி என்று நினைக்கிறேன்) படித்திருந்தாலும் சமீபத்தில் ஜெயமோகன் அவரைக் கழுவி ஊற்றியபோதுதான் அவரது பெயர் பிரக்ஞையில் ஏறியது. கையில் கிடைத்த ஒரு சிறுகதைத் தொகுப்பைப் – அக்னி மூலை – படித்துப் பார்த்தேன்.

இந்தக் கதைகளில் எனக்குப் பிடித்தவை ‘நிஜமான பாடல்கள்‘. ஏழை கொத்தாசாரி கோவில் வேலை கிடைக்கும், பிள்ளைகளுக்கு சோறு போடலாம் என்ற எதிர்பார்ப்பு தகரும்போது சாமி சிலையை உடைக்கிறான். இந்த மாதிரி ஒற்றை வரி சுருக்கங்களை வைத்து இந்தக் கதையை மதிப்பிட முடியாது, படித்துத்தான் பார்க்க வேண்டும். வளரும் நிறங்கள் சிறுகதையில் அந்தக் கால சண்டியரை இன்று அடையாளம் கண்டு கொள்ளும் தருணம் நன்றாக வந்திருந்தது. அக்னி மூலை, ஒரு ஜெருசலேம் போன்றவை பரவாயில்லை ரகம். அம்பலக்காரர் வீடு, தாலியில் பூச்சூடியவர்கள் இரண்டும் அவரது சிறுகதைகளில் அவ்வப்போது தேர்ந்தெடுக்கப்பட்டு தொகுக்கப்படுகின்றன.

பா. செயப்பிரகாசம் ‘முற்போக்கு’ எழுத்தாளர் என்று நினைக்கிறேன். ஏழைகளின் உலகத்தை, குறிப்பாக கிராமத்தில் ‘கீழ்ஜாதியினரை’ பற்றிய கதைகள்தான் மீண்டும் மீண்டும். ‘முற்போக்கு’ எழுத்து என்றல்ல, சட்டகத்தை வைத்து அதற்குள் எழுதப்படும் எழுத்து அனேகமாக இலக்கியம் ஆவதில்லை. பல இடங்களில் இதைத்தான் சொல்லப் போகிறார் என்று தெரிகிறது. ஆனால் அவரது எழுத்தில் தெரியும் genuineness அவரை இலக்கியத்துக்கு அருகிலாவது கொண்டு வருகிறது. சுமாரான எழுத்தாளர் என்றே மதிப்பிடுகிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் எழுத்தாளர்கள்

தொடர்புடைய பக்கங்கள்:
செயப்பிரகாசத்தின் தளம்
பா.செயப்பிரகாசத்தின் தாலியில் பூச்சூடியவர்கள் சிறுகதை
பா.செயப்பிரகாசத்தின் தடையம் சிறுகதை
பா.செயப்பிரகாசத்தின் மகன் சிறுகதை
பா.செயப்பிரகாசத்தின் புத்தர் ஏன் நிர்வாணமாக ஓடினார் சிறுகதை
பா.செயப்பிரகாசத்தின் மூளைக்காய்ச்சல் சிறுகதை

அஞ்சலி: தெளிவத்தை ஜோசஃப்

காலம் தாழ்ந்த அஞ்சலிதான், தெளிவத்தை ஜோசஃப் மறைந்து ஒரு வாரத்திற்கு மேல் இருக்கும் என்று நினைக்கிறேன்.

எந்த எழுத்தாளனுக்கும் அஞ்சலி என்பது அவர் எழுத்துக்களைப் பற்றி பதிவு செய்வதுதான் என்று நான் உறுதியாகக் கருதுகிறேன். அவரது சில எழுத்துக்களைப் பற்றி.

தெளிவத்தை ஜோசஃப் பற்றி முதன்முதலாக கேள்விப்பட்டது அவருக்கு விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டபோதுதான். தமிழகத்தில் அதிகம் தெரியாத நல்ல எழுத்தாளரைத் தேடிப் பிடித்து விருது கொடுத்த ஜெயமோகனையும் விஷ்ணுபுரம் குழுவினரையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

நூலகம் தளத்தில் ஜோசஃப்பின் சில புத்தகங்கள் கிடைத்தன. சில சிறுகதைகள் – மனிதர்கள் நல்லவர்கள், கத்தியின்றி ரத்தமின்றி – இணையத்தில் கிடைக்கின்றன.


நாமிருக்கும் நாடே 1979-இல் வெளிவந்த சிறுகதைத் தொகுப்பு. மீன்கள் சிறுகதை இந்தத் தொகுப்பின் சிறந்த சிறுகதை. ஜெயமோகன் இந்தச் சிறுகதையை தன் சிறந்த சிறுகதைகள் பட்டியலில் சேர்க்கிறார். அவரது வார்த்தைகளில்:

என்னுடைய நவீனத் தமிழிலக்கிய அறிமுகம் நூலில் சிறந்த நூறு தமிழ்ச் சிறுகதைகள் – விமர்சகனின் சிபாரிசு என்ற பட்டியலில் நான் சேர்த்திருந்த கதை இது. மீன்கள் மலையகத் தொழிலாளர் வாழ்க்கையின் ஒரு எரியும் துளி. அவர்கள் வாழ்க்கையின் தலையாய பிரச்சினையை பிரச்சார நெடியில்லாமல் சித்தரிக்கிறது இது.

பாவண்ணன் இந்த சிறுகதையை இங்கே விலாவாரியாக அலசுகிறார்.

இந்தத் தொகுப்பில் சில கதைகள் சாதாரண – தீட்டு ரொட்டி, மண்ணைத் தின்று – கொஞ்சம் பிரச்சார நெடி அடிக்கும் “முற்போக்கு” கதைகள்தான், ஆனால் அவற்றிலும் உண்மையான சித்திரம் தெரிகிறது. நம்பகத்தன்மை, உண்மை எல்லா கதைகளிலும் நிறைந்திருக்கிறது. தேய்வழக்காகிவிட்ட கூப்பாடுகள் இல்லை. பள்ளியை சோதனை செய்ய வரும் அதிகாரி (சோதனை), கடன் வாங்கி சினிமா பார்க்க கிளம்பும் விடலைகள் (ஒரு தோட்டத்துப் பையன்கள் படம் பார்க்கப் போகிறார்கள்), கஷ்டப்பட்டு பணம் சேர்த்து தமிழகத்தில் நிலம் வாங்கி அதை அனுபவிக்க முடியாத கிழவன் (நாமிருக்கும் நாடே), பேத்தியை இளமைக் கனவு பற்றி எச்சரிக்கும் பாட்டி (பாட்டி சொன்ன கதை), உயர்தர தேயிலையை அடுக்கும் இடத்தில் வேலை செய்தாலும் மோசமான தேனீரைக் குடிக்கும் தொழிலாளி (கூனல்), குரங்கு பற்றிய ஒரு கதை (அது!) எல்லாவற்றையுமே சொல்லலாம்.


விஷ்ணுபுரம் விருது வழங்கப்பட்டபோது ஜோசஃபின் சில சிறுகதைகளை ஜெயமோகனே மீன்கள் என்ற பேரில் தொகுத்திருந்தார்.

மீன்கள் சிறுகதையைத் தவிர மழலை என்ற சிறுகதை அருமையான முத்தாய்ப்பு கொண்டது. அறைக்குள் குழந்தை மாட்டிக் கொள்கிறது. கொண்டியைத் திறக்க படாதபாடு படுகிறார்கள், தாத்தா ஒருவர் எப்படியோ குழந்தைக்கு கதவைத் திறக்க சொல்லித் தருகிறார், குழந்தை வெளியே வந்துவிடுகிறது. இன்னொரு முறை இப்படி நடக்காமல் இருக்க என்ன செய்யலாம் என்று குழம்புகிறார்கள். குழந்தை எனக்குத்தான் கதவைத் திறக்கத் தெரியுமே என்று நினைத்துக் கொள்கிறது!

அம்மா என் மனதைத் தொட்ட சிறுகதை. என் அம்மாவையே கண்டேன். சுலபமாக வந்து போகக் கூடிய செலவில், தூரத்தில் மூத்த மக்ன் இல்லை. அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை, மீண்டும் மீண்டும் வந்து பார்ப்பதின் சிரமங்கள். பாசமுள்ள குடும்பம் அருமையாக சித்தரிக்கப்படுகிறது. கோழி வெட்டும் தம்பி, இடப்பற்றாக்குறை வீடு, பேத்தி மீது பாசத்தைப் பொழியும் பாட்டி…

சிலுவை சிறுகதையும் நல்ல் முத்தாய்ப்பு கொண்டது. வர வேண்டிய பணம் வரவில்லை, கிறிஸ்துமஸ் அன்று உடுத்திக் கொள்ள முடியவில்லை. ஆலயத்துக்கு லாரியில் செல்ல அழைப்பு வருகிறது, அப்பா மறுக்கிறார். பிள்ளைகளுக்கு லாரியில் செல்ல கொள்ளை ஆசை. அப்பா கடுப்பில் தண்ணி அடித்து மட்டையாகிவிட, அம்மா கிளம்பச் சொல்கிறாள்!

இருப்பியல் (மகள் திருமணத்துக்காக அப்பா மதம் மாற வேண்டிய சூழ்நிலை, பாதிரியாருக்கு சம்மதமில்லை), மனிதர்கள் நல்லவர்கள் (பிச்சைக்காரனுக்கு ஒரு ரூபாய் பிச்சை கிடைக்க அவன் திருடிவிட்டான் என்று நினைக்கிறார்கள்), பயணம் (நெரிசல் பஸ்ஸில் சிங்களருக்கு சலுகை), கத்தியின்றி ரத்தமின்றி (காந்தி பற்றி உரையாற்ற இருப்பவர் அநியாயத்தை எதிர்த்து வன்முறையில் ஈடுபடுகிறார்), பாவசங்கீர்த்தனம் (பாவமன்னிப்பு கேட்டுக் கொண்டே அதே தவறை மீண்டும் மீண்டும் செய்யும் பெரிய மனிதர்..) என்றும் சில சிறுகதைகள். படிக்கலாம்.

ஆனால் மீன்கள் உட்பட்ட எந்த சிறுகதையும் நான் தமிழின் நல்ல சிறுகதைகள் என்று நான் தொகுத்தால் இடம் பெறாது. அது சுவையின் வேறுபாடுதான் என்று நினைக்கிறேன்.

படிக்க வேண்டும் என்று நினைத்திருக்கும் நாவல் குடை நிழல். எப்போது வாய்ப்பு கிடைக்குமோ தெரியவில்லை.

முக்கியமான (இலங்கை) தமிழ் எழுத்தாளர், ஏதாவது கிடைத்தால் படித்துப் பாருங்கள்! நூலஹம் தளத்தையாவது எட்டிப் பாருங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: தெளிவத்தை ஜோசஃப் பக்கம், அஞ்சலிகள்

தமிழ்பிரபா: பேட்டை

பேட்டை (2018) நாவலில் எழுத்தாளரின் திறமை தெரிகிறது. ஆனால் இன்னும் நன்றாக இருந்திருக்கலாம் என்று நினைக்க வைத்தது.

பேட்டை சிந்தாதிரிப்பேட்டையில் ஆங்கிலேயர் ஆட்சியில் குடியேறிய பள்ளர் ஜாதியினர் – அங்கே பல பரம்பரைகளாக வாழ்ந்தவர்களின் – வாழ்க்கையை நுண்ணுலகமாக (microcosm) காட்டுகிறது. வாழ்க்கை முறை நம்பகத்தன்மையோடு சித்தரிக்கப்படுவதுதான் நாவலின் வெற்றி. ஆனால் தரிசனங்களோ, இல்லை வரலாற்றின் வீச்சோ எதுவுமில்லை. அது பற்றாக்குறை உணர்வைத்தான் ஏற்படுத்துகிறது.

நாவல் கிழக்கிந்திய கம்பெனி காலத்தில் நெசவாளர்களை சென்னைக்கு அருகில் குடியேற்றுவதில் இருந்து ஆரம்பிக்கிறது. சுத்திகரிப்பு வேலைகளுக்காக சில தலித்களும் வருகிறார்கள். ஜாதி முறைப்படி வீடுகள் கட்டப்படுகின்றன. தலித்களுக்கு ஊரில் இடமில்லை, அவர்கள் ஊருக்கு வெளியேதான். பிறகு நாவல் நேராக சமகாலத்துக்கு வந்துவிடுகிறது. எண்பதுகளின் பிற்பகுதி என்று வைத்துக் கொள்ளலாம். இன்று நாறும் கூவத்தின் அருகில் வீட்டு வசதி வாரியக் டியிருப்புகள். அனேகரும் தலித்கள். கணிசமானவர்கள் கிறிஸ்துவர்கள். புதிதாக திருமணம் ஆன ரெஜினா. அவள் உடலில் அவள் மாமியாரின் ஆவி புகுந்து கொள்கிறது. பாதிரியார் பேயை ஓட்டுகிறார். ரெஜினா தீவிர மத நம்பிக்கை உடையவளாக மாறுகிறாள். மகன் ரூபன். நண்பர்கள். சிலர் கேரம் விளையாடுகிறார்கள். ரூபன் பன்னாட்டு நிறுவனங்களுக்காக வேலை செய்யும் நிறுவனத்தில் சேர்கிறான். பொருளாதார ரீதியில் பிறந்த சூழலுக்கு அடுத்த படிநிலையில் இருக்கிறான். கம்பெனிக்கு அழைத்துச் செல்ல தினமும் கார் வருகிறது. அவனுக்கு ஒரு மடிக்கணினி தரப்படுகிறது. ஒரு பெண்ணோடு உறவு ஏற்பட்டு முறிகிறது. நண்பர்களின் வாழ்வு திசைதிரும்புகிறது. காதல். அவனையும் ஒரு பேய் பிடிக்கிறது. குண்மாகிறது…

நாவல் எப்படியோ ரூபனின் சூழலை காட்டிவிடுகிறது. அது சென்னைத் தமிழில் கெட்ட வார்த்தைகள் விரவிய பேச்சா, அதிதீவிரமாக மதமாற்றம் செய்ய முயற்சிக்கும் கிறிஸ்துவ சபைகளின் சித்தரிப்பா, மதுவும் போதையும் வாழ்வின் ஒரு பகுதியாக இருப்பதா, கேரம் போர்ட் விளையாட்டுப் பின்புலத்தின் விவரிப்பா, ரூபனின், அவன் நண்பன் சௌமியனின், குடிகார யோசப்பின் அகச்சிக்கல்களா என்று குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை.

நாவலின் சிறந்த பகுதி ரூபன்-இவாஞ்சலின் காதல். இயற்கையாக இருக்கிறது. இன்னொரு சிறந்த பகுதி பாதிரியார் மிக இயல்பாக தன் வட்டத்துக்குள் வருபவர்களின் மத நம்பிக்கைய தீவிரப்படுத்துவது. பெரிய பாத்திரங்களான நகோமி ஆயா, இறந்து போகும் நண்பன் சௌமியன் போன்றவர்கள் செதுக்கப்பட்டிருக்கிறார்கள். சிறு பாத்திரங்கள் கூட – டிஜிடல் யுகத்தில் முக்கியத்துவத்தை இழக்கும் ஓவியர் பூபாலன், குடித்துவிட்டு லந்து செய்யும் ரூபனின் அப்பா, கொஞ்சம் லூசான ஆமோஸ், செத்துப் போன மாமியார் கிளியாம்பா – நல்ல படைப்புகள்

சரித்திர வீச்சு இல்லை என்றால் முதல் ஓரிரு அத்தியாயங்களுக்கு – சிந்தாதிரிப்பேட்டை எப்படி நிறுவப்பட்டது – அவசியமே இல்லை. நாவலில் இன்னும் ஒருங்கமைதி (coherence) அதிகரித்திருக்கும். நாயகன் ரூபனுக்கு பேய் பிடிக்கும் இடம் எனக்கு ஒட்டவில்லை. அதுவும் அவன் சொல்லும் காரணம் செயற்கையாக இருக்கிறது. நாயகன் நாவல் எழுத விழைவது, ஃபேஸ்புக்கில் பதிவு போடுவது எல்லாமே நாவலோடு ஒட்டவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் அவற்றில் கொஞ்சம் தன்வரலாற்றுச் சாயல் இருக்குமோ என்று தோன்ற வைத்தது.

நாவல் எனக்கு மெரினா எழுதிய மாப்பிள்ளை முறுக்கு நாடகத்தை நினைவுபடுத்திக் கொண்டே இருந்தது. அதே பாணி எழுத்து, சிந்தாதிரிப்பேட்டையில் கூவம் ஆற்றின் கரையில் வீட்டு வசதி வாரியம் குடியிருப்புகளில் வாழும் கிறிஸ்துவ தலித் பின்புலத்தை வைத்து எழுதப்பட்ட மாதிரி இருக்கிறது.

நல்ல எழுத்துதான். ஆனால் ஏதோ – இல்லை நிறையவே குறைகிறது என்ற உணர்வை ஏற்படுத்துகிறது. படித்தே ஆக வேண்டும் என்று சொல்லமாட்டேன். ஆனால் சராசரிக்கு மேலான எழுத்துதான். உங்கள் நூலகத்துக்கு வாங்கலாம்தான். ஆனால் இன்னும் தரமான இலக்கியம் படைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் நாவல்கள்

தொடர்புடைய சுட்டி: நண்பர் ரெங்காவின் விமர்சனம்

தமிழறிஞர் வரிசை: ந. சுப்பு ரெட்டியார்

சுப்பு ரெட்டியார் திருப்பதி பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை தலைவராக பணியாற்றியவர். தூரனுக்குப் பிறகு கலைக் களஞ்சியம் தொகுப்பு பணியில் இருந்தவர். கஷ்டப்பட்டு முட்டி மோதிதான் பதவிகளைப் பெற்றிருக்கிறார் என்று தெரிகிறது. அதனால்தானோ என்னவோ, அவர் பொதுவாக யாரைப் பற்றியும் குறை சொல்வதில்லை. அடக்கியே வாசிக்கிறார்.

ரெட்டியார் சம்பிரதாயமான – அதாவது அந்தக் காலகட்டத்தின் politically correct கருத்துக்களை பிரதிபலிக்கிறார். பாரதியார் மகாகவி, பாரதிதாசனும் நல்ல கவிஞர் (பாண்டியன் பரிசுக்கெல்லாம் மதிப்பீடு எழுதி இருக்கிறார்), ராஜாஜியும் காமராஜும் நல்ல தலைவர்கள், ஈ.வே.ரா. வாழ்க, தான் வேலை செய்த பல்கலைக்கழகத்துக்கு மானியம் வழங்கிய கலைஞர் நல்ல முதல்வர். ஆனாலும் அவரது வாழ்க்கைக் குறிப்புகளில் உண்மை இருக்கிறது, அந்தக் காலகட்டத்தின் – 1915 வாக்கில் பிறந்தவர் – 1935இலிருந்து 1980 வரையான காலகட்டத்தின் சித்திரம் கிடைக்கிறது. என்ன, அவரது வாழ்க்கையைப் பற்றி நிறைய விவரங்களும் இருக்கின்றன. அதில் பல எனக்கு சுவாரசியமாக இல்லை.

நீங்காத நினைவுகள் புத்தகம் அவரது வாழ்க்கையில் அவர் சந்தித்த முக்கிய ஆளுமைகளைப் பற்றி பேசுகிறது. பிரபலமானவர்கள் என்று பார்த்தால் காங்கிரஸ் காலத்து கல்வி அமைச்சர் அவினாசிலிங்கம் செட்டியார், மற்றும் நெ.து. சுந்தரவடிவேலு. சுந்தரவடிவேலுக்கு ஈ.வே.ரா.வின் முழு ஆதரவு இருந்திருக்கிறது, அது அவருக்கு பதவி உயர்வு பெற உதவி இருக்கிறது. சென்னைப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருந்த ஏ.எல். முதலியார் உதவி செய்யவே மாட்டாராம், பணக்கார வீட்டுப் பையன்களுக்கு மட்டும்தான் உதவுவாராம். ந. சஞ்சீவி இவரை விட ஜூனியராம், ஆனால் ஏ.எல். முதலியார் பரிந்துரையில் கல்லூரி விரிவுரையாளர் ஆனாராம். சஞ்சீவியே ஒரு முறை என்னை விட அதிக தகுதி இருந்தும் ரெட்டியாருக்கு அந்தப் பதவி கிடைக்கவில்லை என்று குறிப்பிட்டாராம்.

பல்சுவை விருந்து அவர் எழுதிய பல கட்டுரைகளின் தொகுப்பு. ராஜாஜி, காமராஜைப் பற்றி விதந்தோதுகிறார். கி.ஆ.பெ. விஸ்வநாதம் பற்றி ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார். எனக்கு இன்னும் கி.ஆ.பெ.யின் பங்களிப்பு என்ன என்று சரியாகப் புரியவில்லை. ஹிந்தியை எதிர்த்து நிறைய போராடி இருக்கிறார் போல.

பட்டினத்தடிகள் பற்றி ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார். பட்டினத்தார் என்பவர் ஒருவர் அல்ல, மூன்று பேர் பட்டினத்தார் என்று அறியபப்டுகிறார்கள் என்று நிறுவுகிறார். பரணி பொழிவுகள் நல்ல விளக்கம். தமிழறிஞர் என்று தெரிகிறது.

வடவேங்கடமும் திருவேங்கடமும் புத்தகத்தில் அவர் எழுப்பும் கேள்வி மிக சரியானது. எனக்கும் ரொம்ப நாளாகவே இந்தக் கேள்வி உண்டு. எங்கோ தமிழகத்துக்கு வடகிழக்கு மூலையில் இருக்கும் ஒரு சிறு ஊர் எப்படி தமிழகத்தின் வட எல்லையாக இருக்க முடியும்? திருப்பதிக்கு நூறு கிலோமீட்டர் கிழக்கே எது வட எல்லை? மேற்கே? பழவேற்காடுதான் தமிழகத்தின் வட எல்லை, அல்லது மதனபள்ளிதான் தமிழகத்தில் வட எல்லை, அல்லது உடுப்பிதான் தமிழகத்தின் வட எல்லை என்றால் எப்படி உணர்வோம்? இதையேதான் அவரும் கேட்கிறார். இன்றைய திருப்பதி வேறு, வட எல்லையாக சொல்லப்பட்ட திருவேங்கடம் வேறு என்று நிறுவுகிறார்.

வடநாட்டு திருப்பதிகள், மலைநாட்டு திருப்பதிகள், பாண்டிநாட்டு திருப்பதிகள் புத்தகங்களை தமிழிற்கு நல்ல பயண இலக்கியப் பட்டியலில் சேர்க்கலாம்.

வைணவ புராணங்கள் என்ற புத்தகத்தைப் படித்தபோது இந்த மாதிரி அரிய புத்தகங்களைத் தேடுவது அந்தத் தலைமுறையோடு போய்விட்டதோ என்ற வருத்தத்தை உண்டாக்குகிறது.

அவரது உழைப்பு வியக்க வைக்கிறது. இன்றும் இப்படிப்பட்டவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அ.கா. பெருமாள், ஆ.இரா. வேங்கடாசலபதி மாதிரி இரண்டு மூன்று பேரைத்தான் தெரிகிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழறிஞர் வரிசை

தேவன்: ஸ்ரீமான் சுதர்சனம்

என் கணிப்பில் தேவன் இலக்கியம் படைக்க வேண்டும் என்று விரும்பியவர் அல்லர். அவருக்கு விகடன் வாசகர்களுக்கு பிடித்த வகையில் எழுத வேண்டும் என்பதுதான் நோக்கம். வணிக எழுத்தைத் தாண்டி எழுத வேண்டும் என்று எண்ணவில்லை. ஆனால் அவர் திறமை உள்ள எழுத்தாளர். அதனால் சில சமயம் வாரப் பத்திரிகைகளின் வரம்புகளை அவரால் மீறி இலக்கியம் படைக்க முடிந்திருக்கிறது. துப்பறியும் சாம்பு, ஜஸ்டிஸ் ஜகன்னாதன், சில சமயம் குழந்தைகளின் விவரிப்புகள், ஸ்ரீமான் சுதர்சனம் ஆகியவை என் கண்ணில் minor classics.

ஸ்ரீமான் சுதர்சனம் என்னைக் கவர முக்கியமான காரணம் அதில் விவரிக்கப்படும் பற்றாக்குறை பிரச்சினை நம்பகத்தன்மையோடு எழுதப்பட்டிருப்பதுதான். குடும்பம் நடத்த பணப் பற்றாக்குறை என்பது எனக்கு மிகவும் நன்றாகவே தெரிந்த, நானே உணர்ந்த பிரச்சினைதான். சுதர்சனம் மனைவியின் ஆசைகளை நிறைவேற்ற, தன்/மனைவியின் குடும்பத்தினருக்காக எதிர்பாராத செலவுகளை ஏற்றுக் கொள்ள படும் சிரமங்கள் எனக்கு நன்றாகவே புரிந்தது. எந்த மத்தியதர வர்க்கத்தினருக்கும் இது நன்றாகவே புரியும். அந்த உண்மையான சித்திரத்துக்காகவே இந்தப் புத்தகத்தை மேலாக மதிக்கிறேன்.

சுஜாதா கூட இதுதான் தனக்குப் பிடித்த தேவன் புத்தகம் என்று எங்கோ சொல்லி இருக்கிறார். அவரும் பணக் கஷ்டத்தை சந்தித்திருப்பார் என்று யூகிக்கிறேன்.

என்ன கதை? சுதர்சனம் 125 ரூபாய் சம்பளம் வாங்கும் குமாஸ்தா. அலுவலகத்தில் மாய்ந்து மாய்ந்து வேலை செய்கிறான். ஆனால் அவனுக்கு சரியான அங்கீகாரம் இல்லை, அவன் மேலதிகாரி கங்காதரம் பிள்ளை அவனை கொஞ்சம் அமுக்கி வைத்திருக்கிறார். பணப் பற்றாக்குறை. கொஞ்சம் வசதி உள்ள வீட்டுக்கு வாடகைக்கு போக ஆசை, ஆனால் கட்டுப்படி ஆகாது. கடைசியில் அலுவலகத்த்ல் திருடுகிறான். அவன் அதிர்ஷ்டம், அந்தத் திருட்டு நிறுவனம் தள்ளுபடி செய்யும் ஒரு கடனில் அது அமுங்கிவிடுகிறது. மனைவியின் பெற்றோர் மருத்துவம் செய்து கொள்ள ஊரிலிருந்து வருகிறார்கள். செலவு அதிகரிக்கிறது, மீண்டும் திருடுகிறான். மாமியார் மாமனாருக்கு செலவழிக்கிறான், நமக்கு செலவழித்தால் என்ன என்று இவன் உறவினர் ஊரிலிருந்து வருகிறார்கள். மீண்டும் திருட்டு. இதற்குள் முதலாளிக்கு அவன் வேலையின் தரம், உழைப்பு எல்லாம் தெரிய வருகிறது. ஒரு திருட்டிலிருந்து 80000 ரூபாயை வேறு காப்பாற்றுகிறான். அவனுக்கு முதலாளி 2000 ரூபாய் பரிசு தருகிறார். சுதர்சனத்துக்கு மனம் உறுத்துகிறது. தன் குற்றத்தை ஒத்துக் கொள்கிறான், பரிசை மறுக்கிறான். முதலாளி எனக்கு ஏற்கனவே தெரியும் என்கிறார். அவனை மன்னித்து உத்தியோக உயர்வும் தருகிறார்.

கதையின் பிரமாதமான உத்தி செலவுகளை பட்டியல் போடுவதுதான். என்ன செலவு, எத்தனை ரூபாய் தேவை என்று மீண்டும் மீண்டும் விவரிப்பதுதான். மனைவி கணவனோடு அன்னியோன்னியமாக இருந்தாலும் பணப் பிரச்சினைகளை முழுதாக உள்வாங்கிக் கொள்ள முடியாமல் இருப்பதும் உண்மையான சித்தரிப்பு. என் தலைமுறையில் கூட புருஷன் என்ன சம்பாதிக்கிறான் என்று தெரியாத மனைவிகள் உண்டு.

கடைசியில் deux ex machina ஆக முதலாளி மன்னிப்பது கூட செயற்கையாகத் தெரியவில்லை. அதிலும் சுதர்சனம் தான் புதிய நிறுவனத்தில் வேலைக்குப் போவதாக நினைத்திருக்க, அந்த நிறுவனத்தின் “முதலாளி” சுதர்சனத்தின் வேலைக்கு மனு போட்டிருப்பது நல்ல டச்!

அன்றைய வணிகப் பத்திரிகைகளின் கல்கி உட்பட்ட மற்ற எழுத்தாளர்களோடு ஒப்பிட்டால் தேவனின் பாத்திரங்கள் ஓரளவு நிஜமானவை. இதிலும் சுதர்சனம், அவனது உறவினர்கள், மாமனாருக்கு கண் வைத்தியம் பார்க்கும் மருத்துவர், முதலாளி பரமேஸ்வர முதலியார், மேலதிகாரி கங்காதரம் பிள்ளை என்று பலரும் உண்மையான் பாத்திரங்கள். நாகநந்தி போன்ற அதீதங்கள் கிடையாது. லட்சியம் பேசிக் கொண்டு பூமிக்கு இரண்டு அங்குலம் மேலேயே நடப்பவர்கள் இல்லை. (ஆனால் தேவனின் நாவல்களில் அதிசயத் தற்செயல் நிகழ்ச்சிகள் நிறையவே உண்டு…)

ஸ்ரீமான் சுதர்சனம் 1951-52 வாக்கில் எழுதப்பட்ட நாவல் (என்று நினைக்கிறேன்.) அப்போது மாதம் 125 ரூபாய் என்பது சென்னை நகரத்தில் கணவனும் மனைவியும் வாடகை கொடுத்து வாழ்வதற்கே பத்தாது என்றால் வியப்புதான். 1960களில் ஆசிரியை வேலைக்குப் போன என் அம்மாவுக்கு இளம் வயது கனவே 100 ரூபாய் சம்பளம்தான். எழுபதுகளின் இறுதியில் கூட என் அத்தை பெண்கள் 300-400 ரூபாய் சம்பளத்துக்கு வேலைக்குப் போயிருக்கிறார்கள். சுகவாழ்வுக்கு வாய்ப்பில்லை, ஆனால் இத்தனை பற்றாக்குறையா என்று தோன்றியது.

ஸ்ரீமான் சுதர்சனம் எனக்குப் பிடித்த தேவன் படைப்புகளில் ஒன்று. கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

பக்கம்: தேவன் பக்கம்

அரவிந்தன் நீலகண்டன்: கொஞ்சம் தேனீர் கொஞ்சம் ஹிந்துத்துவம்

அரவிந்தன் நீலகண்டனுக்கும் எனக்கும் ஏகப் பொருத்தம். அவரது அரசியல் நிலைப்பாடு அவர் கண்களை மறைக்கிறது என்பது என் வருத்தம். நான் ஒரு முட்டாள் என்பது அவரது முடிவு.

அரசியல் நிலைப்பாடு அவர் கண்களை மறைக்கிறது என்று நான் நினைப்பதற்கு ஒரே ஒரு உதாரணம் தருகிறேன். ஒரு முறை கி.ரா.வுக்கு பத்மஸ்ரீ விருது தர அ.நீ./ஜடாயு/ராஜமாணிக்கம் போன்றவர்கள் பரிந்துரைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். அ.நீ.யின் பதில் – கி.ரா.வுக்கு தகுதி இருந்தால் அவருக்கு பத்மஸ்ரீ விருது தருவதில் தவறில்லை. பாவம் அ.நீ. கி.ரா.வின் இலக்கியத் தகுதி என்ன என்று இனி மேல்தான் தெரிந்து கொள்ளப் போகிறார். ஆனால் ஜடாயுவோ அவருக்கும் ஒரு படி மேல். என்ன மயிருக்கு இவருக்கு விருது தருவது என்றார்…

அதனால்தான் கொஞ்சம் தேனீர் கொஞ்சம் ஹிந்துத்துவம் என்னை வியப்படைய வைத்தது. இந்தப் புத்தகத்தில் அ.நீ. எழுதி இருப்பதோடு நான் ஏறக்குறைய முழுமையாக இசைகிறேன்!

முதல் கட்டுரை மதன்மோகன் மாளவியா பற்றி. 2014-இல் மாளவியாவுக்கு பாரதரத்னா விருது வழங்கப்பட்டது. (பல ஆண்டுகள் முன் மறைந்த தலைவருக்கெல்லாம் பாரதரத்னா என்பது கேலிக்கூத்து என்பது வேறு விஷயம்) அப்போது தி.க. தலைவர் வீரமணி மண்ணுருண்டை மாளவியா என்று அவரை எள்ளி நகையாடி இருக்கிறார். ஏனென்றால் மாளவியா வட்ட மேஜை மாநாட்டுக்காக கடல் கடந்து சென்றபோது ஒரு மண்ணுருண்டையை எடுத்துச் சென்றிருக்கிறார். சாஸ்திரங்கள் கடல் கடந்து போவதைத் தடுக்கின்றன என்பது தெரிந்ததே. அந்த விதியை சமாளிக்க மாளவியா இப்படி செய்திருக்கிறார். அது முட்டாள்தனமான குறியீடாகவே இருந்துவிட்டுப் போகட்டும், அது அவரது நம்பிக்கை அல்லவா? அதில் அடுத்தவர் எப்படி மூக்கை நுழைக்கலாம்? நம்மூர் வெய்யிலில் கறுப்புச் சட்டை அணிவது புத்திசாலித்தனம்தானா? மாளவியா தலித் எதிர்ப்பாளர் என்று வீரமணி சொன்னாராம். ஆனால் மாளவியா ஹிந்து மகாசபையின் சிறப்பு மாநாட்டில் சொன்னாராம். (அ.நீ.யின் மொழிபெயர்ப்பு – தலித் என்ற வார்த்தையை மாளவியா பயன்படுத்தி இருக்க மாட்டார்…)

என் தலைப்பாகையை நான் ஹிந்து மதத்தை சார்ந்த என் தலித் சகோதரர்கள் காலடிகளில் ஏன் வைக்கக் கூடாது?… என் தலித் சகோதரர்கள் கோவிலுக்குள் சென்று வழிபடக் கூடாது என்று சொல்ல எனக்கு என்ன உரிமை இருக்கிறது?

மாளவியாவை ஆசாரவாதியான ஹிந்துதான். ஆனால் அவரது கருத்துக்கள் மாறி இருக்கின்றன. அவர் பெண்களுக்கான வாக்குரிமையை எதிர்க்கவும் செய்தார், பின்னாளில் ஆதரிக்கவும் செய்தார். வேறென்ன வேண்டும்?

ஆர்.எஸ்.எஸ். நிறுவனர்களில் ஒருவரான மூஞ்சே 1931-இலோ என்னவோ முசோலினியை சந்தித்தாராம். அ. மார்க்ஸ் இதைப் பற்றி குறையாக சொன்னாராம். 1936 வாக்கில் இத்தாலி அபிசீனியாவை ஆக்கிரமிக்கும் வரை ஃபாசிசம் சர்வதேச அளவில் ஒரு கெட்ட வார்த்தை இல்லை. முசோலினி – ஏன் ஹிட்லர் கூட – அவரது நாட்டை சரியான திசையில் நடத்திச் செல்கிறார் என்ற எண்ணம் பொதுவாக சில வருஷங்களாவது இருந்தது. அந்தக் காலகட்டத்தில் மூஞ்சே முசோலினியை சந்தித்ததில் என்ன தவறு? அ.நீ. காந்தியே 1931-இல் முசோலினியை சந்தித்தாரே என்கிறார். சரிதானே?

சவர்க்கார் மன்னிப்பு கேட்டார் என்ற அர்த்தமற்ற குற்றச்சாட்டை அவ்வப்போது கேட்டிருக்கலாம். என்ன சிறையிலேயே உட்கார்ந்திருக்க வேண்டுமா? அதை விட வெளியே பயனுள்ள காரியம் எதையாவது செய்ய வேண்டுமென்றால் இந்த மாதிரி உத்திகளை பயன்படுத்துவதில் ஒரு தவறுமில்லை. போராடும்போது சிறைவாசம் என்பது அரசின் மனச்சாட்சியை – அதாவது பொதுப்புத்தியை – உறுத்தவோ, இல்லை சிறை சென்றவர்கள் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்து அரசுக்குப் பிரச்சினை எற்படுத்தினாலோ மட்டுமே பயனுள்ள உத்தி. சவர்க்காரின் சிறைவாசத்தால் அவருக்கு மட்டுமே பிரச்சினை, பிரிட்டிஷ் அரசுக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை. அதனால் அவர் வெளியே வந்து வேறு ஏதாவது முறையில் பங்களிக்க முயன்றிருக்கிறார். அதனால் அவரது தியாகத்தை குறைத்து மதிப்பிட முடியுமா என்ன? இதெல்லாம் கேனத்தனமான பேச்சு. அதைத்தான் அ.நீ.யும் விவரிக்கிறார்.

இவை உதாரணங்கள் மட்டுமே. ஏறக்குறைய எல்லா கட்டுரைகளுடனும் முழுமையாக உடன்படுகிறேன். என் கண்ணில் அ.நீ., ஜடாயு போன்றவர்களின் முக்கியத்துவமே அரசியல் நிலைப்பாடுகளால் வேண்டுமென்றேயோ இல்லை உணராமலோ இப்படிப்பட்ட வாதங்களை முன் வைப்பவர்களை வன்மையாக மறுப்பதுதான். ஆனால் அவர்களும் இப்படியே அரசியல் நிலைப்பாட்டால் இதே போன்ற வாதஙகளை எதிர்ப்பக்கத்திலிருந்து முன் வைப்பதுதான் சோகம்.

படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் அபுனைவுகள்

அல்பேர் கம்யூ: Stranger

Stranger (1942) நான் படித்த சிறந்த புத்தகங்களில் ஒன்று.

பல வருஷங்களாகப் படிக்க வேண்டும் என்று நினைத்திருந்த நாவல்தான். எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் 30-35 வருஷங்களுக்கு முன் பரிந்துரைத்தார். சின்ன நாவலும் கூட. வாங்கி வைத்தும் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் ஏனோ படிக்க கைவரவில்லை.

ஒரு வழியாக புத்தகத்தைத் திறந்து பத்து பக்கம் படித்ததும் புத்தகம் மனதை மிகவும் கவரப் போகிறது என்று தெரிந்தது. ஒரு வார்த்தையைக் கூட தவறவிடக் கூடாது என்று தோன்றியது. பத்து பத்து பக்கமாகத்தான் இரண்டு மூன்று வாரங்களாகப் படித்தேன்.

நாவலின் நாயகன் மியூர்சால்ட் (Meursalt – எப்படி உச்சரிக்க வேண்டும் என்று தெரியவில்லை) தன் அம்மாவின் இறப்பைப் பற்றி தெரிந்து கொள்வதிலிருந்து கதை ஆரம்பிக்கிறது. மியூர்சால்ட் வாழ்வது அல்ஜியர்ஸ் நகரத்தில் – நாவல் எழுதப்பட்ட காலத்தில் அல்ஜீரியா ஃப்ரான்சின் ஒரு பகுதி. அங்கே ஏதோ ஒரு நிறுவனத்தில் வேலை. அம்மா இருந்தது வயதானவர்களுக்கான ஒரு விடுதியில் (Home). மியூர்சால்ட்டுக்கு அம்மாவை அடக்கம் செய்ய வேண்டியது ஒரு கடமை, பொறுப்பு, அவ்வளவுதான். அம்மாவுடன் பெரிய பந்தமோ, அம்மா இறந்ததால் பெரிய இழப்போ எதுவுமில்லை. விடுதிக்கு செல்கிறான், பிணத்தின் அருகில் உட்கார்ந்திருக்கிறான், அம்மாவின் சில நண்பர்கள் வருகிறார்கள். அம்மாவுடன் மிகவும் நட்பாக இருக்கும் ஒருவர் உடல்நிலை முடியாமல் இருந்த போதிலும் கஷ்டப்பட்டு நடந்து வந்து இறுதிச் சடங்குகளில் பங்கேற்கிறார். அவருக்கு இருக்கும் துக்கம் கூட மியூர்சால்ட்டுக்கு இல்லை.

இந்தப் பகுதி மிக அழகாக விவரிக்கப்படுகிறது. கம்யூவின் உத்தி மியூர்சால்ட்டின் கண்கள் வழியாக நுண்விவரங்களை அடுக்கிக் கொண்டே போவது. பால் விட்ட காப்பி குடிப்பது, விடாமல் அழும் ஒரு கிழவி, கிழவிகளின் தொப்பைகள், பற்கள் விழுந்துவிட்டதால் குவிந்திருக்கும் வாய்கள் என்று அடுக்கிக் கொண்டே போகிறார். அவை அனைத்தும் நமக்கு சொல்வது ஒன்றே. மியூர்சால்ட்டுக்கு எந்த மன அழுத்தமும் இல்லை, அம்மாவை சட்டுபுட்டென்று அடக்கம் செய்துவிட்டு தன் வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும். அதை இத்தனை அருமையாக விவரிக்க முடியுமா!

மியூர்சால்ட் அல்ஜியர்ஸுக்கு திரும்புகிறார். ஒரு காலத்தில் கூட வேலை செய்த மரியோடு உறவு ஏற்படுகிறது. தன் வீட்டு பால்கனியில் நின்று சிகரெடி பிடிக்கிறார். மதிய உணவுக்கு செல்கிறார். பஸ்ஸை துரத்திப் பிடித்து ஏறுகிறார். பக்கத்து வீட்டுக்காரர் சல்மானோ வளர்க்கும் சொறிநாய் ஓடிவிடுகிறது. ரேமண்ட் என்ற “நண்பர்” – பெண் தரகன் என்று நம்பப்படுபவன் – தனது “தோழி” தன்னை ஏமாற்றுவதாகவும் அவளுக்கு பாடம் கற்பிக்க – அதாவது அடிக்க – மியூர்சால்ட்டின் உதவியுடன் அவளை வீட்டுக்கு வர வைக்கிறான். விவகாரம் முற்றி போலீஸ் வரை போகிறது. மியூர்சால்ட் சாட்சி சொல்லி ரேமண்டை விடுவிக்கிறான். நிறுவன முதலாளி பாரிசில் ஒரு கிளை ஆரம்பிக்கப் போகிறேன், அங்கே போகிறாயா என்று கேட்கிறார். நீங்கள் சொன்னால் போகிறேன் என்கிறான். அவனுக்கு பெரிதாக விருப்பமும் இல்லை, போகக் கூடாது என்ற எண்ணமும் இல்லை. முதலாளி கொஞ்சம் ஆர்வமாக இருப்பா என்கிறார். மரி என்னைத் திருமணம் செய்து கொள்கிறாயா என்று கேட்க சரி என்கிறான். ஆனால் அவனுக்கு அதிலும் விருப்பமும் இல்லை, வெறுப்பும் இல்லை.

இந்தப் பகுதியிலும் மியூர்சால்ட்டின் சித்திரம் மிகக் கச்சிதமாக காட்டப்படுகிறது. நடப்பது நடக்கட்டும் என்று இருப்பவன். யாராவது எதையாவது கேட்டால் செய்து கொடுப்பான். விருப்பு வெறுப்பால் அல்ல, அதுதான் சுலபம் என்பதால். He goes with the flow, things happen to him, he doesn’t make anything happen.

விடுமுறைக்காக ரேமண்ட், மரி, மியூர்சால்ட் எல்லாரும் ரேமண்டின் நண்பனின் கடற்கரை பங்களாவுக்கு செல்கிறார்கள். அங்கே ரேமண்டின் “தோழி”யின் சகோதரனை பார்க்கிறார்கள். ஏற்கனவே சின்னத தகராறு இருக்கிறது. இப்போதும் சின்ன அடிதடி. ரேமண்ட் ஏதாவது செய்துவிடக் கூடாது என்று ரேமண்டின் துப்பாக்கியை மியூர்சால்ட் வாங்கிக் கொள்கிறான். திருப்பி வெளியே போகும்போது அந்த சகோதரன் கத்தியைக் காண்பிக்கிறான். நல்ல வெயில் அடிக்கிறது. வியர்வை. மியூர்சால்ட் அவனை சுட்டுவிடுகிறான். முதல் குண்டு பாய்ந்த பிறகு அருகில் சென்று கொஞ்சம் தாமதித்து இன்னும் நான்கு முறை சுடுகிறான்.

இதுவும் ஒரு சிறப்பான பகுதி. ஏன் சுடுகிறான்? கோபத்தால் அல்ல. பகையால் அல்ல. பின் எதற்காக? கடுமையான் வெயிலால்தான்; கண்ணைக் கூட வைக்கும் பிரகாசமான சூரிய ஒளியால்தான்; வியர்வை ஓடுவதால்தான். இதை நீங்களே உணர்ந்தால்தான் உண்டு, வார்த்தைகளில் சொல்லி மாளாது.

கைது. சிறை. இவனுக்காக நியமிக்கப்படும் வக்கீல் அம்மாவைப் பற்றி இவன் விட்டேத்தியாகப் பேசுவதைக் கண்டு கொஞ்சம் அதிர்கிறார். விசாரிக்கும் அதிகாரி இவனுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை, செய்த கொலையைப் பற்றி குற்ற உணர்வும் இல்லை என்பதைப் புரிந்து கொண்டு நிறையவே அதிர்கிறார். சிறையில் பல மாதங்கள். நடப்பது நடக்கட்டும் என்று இருப்பவன் அல்லவா? அதுவும் பழகிவிடுகிறது.

வழக்கு நடக்கிறது. அம்மாவின் இறப்பு பெரிதாக பாதிக்கவில்லை என்பது முக்கியமான அவதானிப்பாக மாறுகிறது. மனசாட்சியே இல்லாதவன் என்று அரசு தரப்பு வக்கீல் வலுவாக வாதிடுகிறார். கம்யூவின் வார்த்தைகளிலேயே:

I summarized The Stranger a long time ago, with a remark I admit was highly paradoxical: In our society any man who does not weep at his mother’s funeral runs the risk of being sentenced to death. I only meant that the hero of my book is condemned because he does not play the game.

மியூர்சால்ட்டுக்கு மரணதண்டனை விதிக்கப்படுகிறது. அவனை தன் குற்றத்தை உணரச் செய்ய ஒரு பாதிரியார் முயல்கிறார். கடைசிப் பக்கங்களில் மியூர்சால்ட் முதல் முறையாக ஒரு உணர்ச்சியை – கோபத்தை – வெளிப்படுத்துகிறான். உனக்குத் தெரிந்தவற்றை விட சாவின் விளிம்பில் இருக்கும் எனக்கு அதிகமாகவே தெரியும் என்கிறான்.

மியூர்சால்ட்டின் வாழ்க்கை வெறுமையானதா? என்னைக் கேட்டால் இல்லை என்றுதான் சொல்வேன். நாயகத் தன்மை உடையவன் என்றுதான் சொல்வேன். வாழ்க்கையின் என்னென்னவோ நடக்கிறது, அவ்வளவுதான். ஏன் நடக்கிறது, எதற்காக கொலை செய்தான் என்று கேள்விக்கெல்லாம் அர்த்தமே இல்லை. வெறுமையான வாழ்க்கை போல சித்தரித்துவிட்டு அப்படி வாழ்பவன் நாயகன் என்று உணர வைப்பதில்தான் கம்யூவின் திறமை இருக்கிறது.

படிக்கும்போது எனக்கு ஒரு கேள்வி இருந்தது. இந்த நாவலில் காலனிய மனப்பான்மை வெளிப்படுகிறதா? ரொம்ப யோசித்த பிறகும் ஆமாம் என்றுதான் சொல்ல வேண்டி இருக்கிறது. இறந்தவன் ஒரு அரேபியன். அவ்வளவுதான். அவன் ஃப்ரெஞ்சுக்கார வெள்ளையனாக இருந்தாலும் கதையில் எந்தக் குறைவும் இருக்காதுதான். ஆனால் அந்த பெயரில்லாத அரேபியனின் அர்த்தமற்ற சாவு என்பதில் கம்யூவின் அடிமனதில் காலனிய மனப்பான்மை அவரை அறியாமலே வெளிப்பட்டிருக்கிறது என்றுதான் நினைக்கிறேன். அதே போல கமேல் தாவூத் என்ற அல்ஜீரிய எழுத்தாளருக்கும் தோன்றி இருக்கிறது. இறந்து போன அரேபியனின் கண்ணோட்டத்திலிருந்து The Meursalt Investigation என்ற புத்தகத்தை எழுதி இருக்கிறார்.

படிக்கும்போது எனக்கு நாஞ்சில் நாடனின் கதைகள் – குறிப்பாக சதுரங்க குதிரை – நினைவு வந்து கொண்டே இருந்தன. சதுரங்க குதிரையின் நாராயணனுக்கு மியூர்சால்ட் ஆக மாற நிறையவே வாய்ப்புண்டு.

கம்யூ நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் (1957)

க்ளாசிக் என்று நான் சில புத்தகங்களைத்தான் வகைப்படுத்துவேன். அவற்றில் ஒன்று. கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: கம்யூ பக்கம்

அமெரிக்காவில் அண்ணாமலை

பாஜகவின் தமிழகத் தலைவரான அண்ணாமலை சான் ஃப்ரான்சிஸ்கோ பகுதிக்கு வந்திருந்தார், போன ஞாயிறு (அக்டோபர் 9, 2022) அன்று ஒரு நிகழ்ச்சியில் பேசினார்.

எங்கோ தொலைதூரத்தில் வாழ்ந்தாலும், இந்தியாவில் ஓட்டுரிமை இல்லாவிட்டாலும் எனது வேர்கள் இன்றும் என்றும் இந்தியாவில்தான். அதனால் இந்திய அரசியல் களம் என் பிரகஞையில் இருக்கத்தான் செய்கிறது. அண்ணாமலை இது வரையில் இருந்த எந்தத் தமிழக பாஜக தலைவரை விட சிறப்பாக செயலபடுகிறார் என்று தெரிகிறது. என் பாஜக எதிர்ப்பு நிலையும் கொஞ்சம் நீர்த்துவிட்டதுதான். அதனால் நானும் போயிருந்தேன்.

நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு முன்பேயே பைசா வசூல் ஆகிவிட்டது, அதாவது மனத்திருப்தி. முத்துகிருஷ்ணன் (முகின்), பாலாஜி இருவரும் வந்திருந்தார்கள். பகவதி பெருமாளும் நானும் ஒன்றாகப் போயிருந்தோம். நண்பர்களைப் பார்த்ததே மகிழ்ச்சி.

அண்ணாமலை நன்றாகப் பேசினார்.

கூட்டம் பாஜக/மோடி ஆதரவுக் கூட்டம். அதனால் கூட்டத்தின் எதிர்பார்ப்புகளுக்கு தீனி போட்டார். நிறைய மோடி புகழ். திமுக பற்றி நிறைய கிண்டல். ஆனால் தரம் தாழ்ந்து ஒரு இடத்தில் கூட பேசவில்லை. அப்படி பேசி இருந்தால் கூட்டம் அதற்கும் கை தட்டி இருக்கும், அது அவருக்கும் தெரிந்துதான் இருக்கும்.

மோடி அரசின் சாதனைகளாக அவர் பட்டியல் இட்டவற்றில் என் நினைவில் இருப்பவை:

  • கோவிடை கையாண்ட விதம்: என் கண்ணிலும் இது சாதனையே. இந்தியா போன்று மக்கள் தொகை அதிகமான ஒரு நாட்டில், அதுவும் நெருக்கடி நிறைந்த பெருநகரங்கள் அதிகம் உள்ள நாட்டில் இது போன்ற ஒரு தொற்று நோயைக் கட்டுக்குள் வைத்திருப்பதை எத்தனை பாராட்டினாலும் தகும். அதுவும் இந்தியாவிலேயே மருந்துகள், கருவிகள் உற்பத்தி, அவற்றை ஏற்றுமதி செய்யும் நிலையில் இருப்பது – மோடி அரசுக்கு ஒரு ஜே!
  • காஷ்மீருக்கு மட்டும் அதிகப்படி உரிமைகளை வழங்கிய சட்டப் பிரிவு 370-ஐ நீக்கியது: இதற்கு முதுகெலும்பு வேண்டும். நீக்கியதற்கான பின்விளைவுகளும் எதுவும் இல்லை
  • UPI: அனேக இந்தியர்க்ளுக்கு இன்று வங்கிக் கணக்கு இருக்கிறது, பணப் பரிமாற்றம் இன்டர்நெட் வழியாக நடக்கிறது. அது ஒவ்வொரு கட்டத்திலும் ஊழலைக் குறைக்கிறது.
  • உக்ரெய்னிலிருந்து இந்தியர்களை பத்திரமாக கூட்டி வந்தது. இரு பக்கமும் பேசி 7 மணி நேர ஜன்னலை உருவாக்கி இந்தியர்களை உக்ரெயினிலிருந்து வெளியே கொண்டு வந்தார்களாம்.

சூழ்நிலை பொருந்தி வந்திருந்தால் இவற்றை காங்கிரஸ் ஆட்சியில் இருந்திந்தாலும் செய்திருக்கும். ஒரு ராஜீவ் காந்தியோ, நரசிம்ம ராவோ, மன்மோகன் சிங்கோ இவற்றை செய்யும் திறமை, ஆகிருதி உள்ளவர்கள்தான். ஆனால் 370-ஆம் பிரிவை நீக்கும் தைரியம் பாஜக/மோடிக்கு மட்டுமே உண்டு.

அண்ணாமலை நிச்சயமாக மிகைப்படுத்தி இருப்பார்தான். ஆனால் அனைத்திற்கும் அடியில் உண்மை இருக்கிறது என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை. Demonetization போன்றவற்றை அவர் குறிப்பிடவே இல்லை.

நிறைய spin-உம் இருக்கத்தான் செய்தது. எட்கர் தர்ஸ்டன்தான் ஜாதியைக் கண்டுபிடித்தார், அதற்கு முன் இந்தியாவில் ஜாதிப் பிரச்சினையே கிடையாது என்பதுதான் மிகச் சிறப்பான spin. மதச் சார்பற்ற, ஹிந்து சனாதன தர்மத்தை கடைப்பிடிக்கும் இந்தியாவை தனது vision ஆகச் சொன்னார், அதில் உள்ள முரண்பாடு அவருக்கு, கூட்டத்தினருக்கோ புரிந்ததாகத் தெரியவில்லை. நூபுர் ஷர்மா ஜாக்கிரதையாகப் பேசி இருக்க வேண்டும், அவர் மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கை சரிதான் என்று சொன்னவர், ஸ்டாலின் ஜாக்கிரதையாப் பேசுங்கப்பா என்று சொல்வதை நிறையவே கிண்டலடித்தார்.

நொட்டை சொல்வது சுலபம். ஆனால் overall favorable impression-தான். இவரைப் போன்ற படித்த இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும். நிச்சயமாக திராவிடக் கட்சிகளுக்கு நல்ல மாற்றாக இருப்பார். நான் தமிழகத்தில் இருந்தால் இவருக்காகவே பாஜகவுக்கு ஓட்டு போடலாமா என்று ஒரு நிமிஷமாவது யோசிப்பேன்.

நான் இன்னும் பாஜகவை நம்பவில்லை என்பதை பதிவு செய்கிறேன். ஆனால் நான் நம்புகிறேனா இல்லையா என்பதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. குறைந்த பட்சம் நான் இந்தியக் குடிமகனாக இருந்தாலாவது என் நம்பிக்கைகளை இன்னும் கொஞ்சம் பொருட்படுத்தலாம். நானோ அமெரிக்கக் குடிமகன். பெரும்பான்மையான இந்தியர்கள் மோடி மீதும் பாஜக மீதும் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள், அதுதான் முக்கியம். எனக்கும் கூட மோடிக்கு சமமான ஆகிருதி உள்ள எந்தத் தலைவரும் இன்று இந்தியாவில் இல்லை என்று தெளிவாகத் தெரிகிறது. அண்ணாமலை போன்ற அடுத்த தலைமுறையினரை உருவாக்கிவிட்டால் பாஜக இன்னும் வலிமை பெறும், எதிர்க்கட்சிகள் இன்னும் பலவீனம் ஆகும்…

ஆர்வம் இருப்பவர்கள் முழுபேச்சையும் இங்கே கேட்கலாம்

தொகுக்கப்பட்ட பக்கம்: நிகழ்ச்சிகள்

நான் படித்த முதல் ஆங்கில நாவல்

ஏழெட்டு வயதில் படிக்கும் கிறுக்கு ஆரம்பித்தது. எங்கள் கிராம நூலகத்தில் இருந்த சிறுவர் புத்தகங்களை எல்லாம் ஒரு வருஷத்தில் முடித்துவிட்டேன் என்று நினைக்கிறேன். (சின்ன நூலகம் 🙂 ) பிறகு கோகுலம்; முத்து காமிக்ஸ்; சாண்டில்யன்; குமுதம்/விகடன்; அபூர்வமாக சில அவணிக நாவல்கள் (சில நேரங்களில் சில மனிதர்கள், சாயாவனம்…); ஹிந்துவில் விளையாட்டு, குறிப்பாக கிரிக்கெட் பக்கம். பொன்னியின் செல்வன். சுஜாதா. கையில் கிடைத்ததை எல்லாம் படிக்கும் வெறி, ஆனால் நூலகங்கள்தான் என்ன படிக்கிறேன் என்பதை நிர்ணயித்தன. (சிறு வயதில் லா.ச.ரா., அசோகமித்திரன் இருவரையும் படித்துவிட்டு என்ன எழவுடா இது என்று அலுத்துக் கொண்டதும் உண்டு)

ஆனால் ஆங்கிலப் புத்தகங்களின் பக்கம் போகவில்லை. முதலில் நான் வளர்ந்த கிராமங்களில் கிடையாது. நகரத்துக்கு வந்த பிறகும் ஒரு அச்சம். இதெல்லாம் நமக்குப் புரியுமா என்று ஒரு சஞ்சலம். வாடகை நூலகங்களில் 25 பைசா கொடுத்தால் ஒரு ஆங்கிலப் புத்தகம் கிடைக்கும் என்று நினைவு. அது அப்போது பெரிய பணம்தான், ஆனால் நண்பர்கள் பகிர்ந்து கொண்டிருப்போம். அச்சம்தான் ஒரு வருஷமாவது ஆங்கிலப் புத்த்கம் பக்கம் போவதை தள்ளிப் போட்டது.

13-14 வயதில்தான் எனிட் ப்ளைடனையே படித்தேன். கோடை விடுமுறையில் மாடியில் இருந்த கண்ணாமணி வீட்டில் கிடைத்த, ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் எழுதிய, There is a Hippie on the Highway (1970) முதல் நாவல். பிறகு இன்னொரு சேஸ் – Lay Her among the Lillies (1950) அடுத்தபடி ஒரு ஹரல்ட் ராபின்ஸ்A Stone for Danny Fisher. அதற்கப்புறம் மடை திறந்து பாயும் நதி அலைதான், வாரத்திற்கு பத்து புத்தகம் படித்ததெல்லாம் உண்டு.

மனம் கவர்ந்த முதல் ஆங்கில எழுத்தாளர் அலிஸ்டர் மக்ளீன். இரண்டாமவர் பி.ஜி. உட்ஹவுஸ். ஆனால் சேஸ் புத்தகம் என்ன கிடைத்தாலும் படிப்பேன். பல முறை அவரது வடிவ கச்சிதத்திற்கு சபாஷ் போட்டிருக்கிறேன். என்றாவது எல்லா சேஸ் புத்தகங்களையும் சேஸ் செய்து முடிக்க வேண்டும் என்று ஒரு நப்பாசை உண்டு.

Hippie on the Highway அவரது நாவல்களில் சராசரிதான். இதை விட சிறந்த நாவல்களை சேஸ் எழுதி இருக்கிறார்தான். ஆனால் படித்தபோது என் உலகம் திடீரென்று விரிந்துவிட்டது. அமெரிக்கா அருகில் வந்தது. ஹிப்பிகள், வன்முறை, குற்ற உலகம், கொலைகள், கொள்ளை, செக்ஸ் எல்லாம் நிறைந்த உலகம் தெரிந்தது. இந்தப் புத்தகம் சொதப்பி இருந்தால் மேலும் தேடுவதற்கான உந்துதல் மங்கி இருந்திருக்கும். சேஸே எழுதிய சில மோசமான புத்தகங்களிலிருந்து ஆரம்பித்திருந்தால் கூட ஆங்கிலப் புத்தகங்களைப் படிப்பது சில மாதங்களாவது தள்ளிப் போயிருந்திருக்கும் இன்னும் நாலு எனிட் பளைடனை மட்டுமே படித்திருந்தால் அடப் போங்கடா என்று கையை உத்றி இருக்கலாம்.

என்ன கதை? வியட்நாம் போரிலிருந்து திரும்பும் ஹாரி மிட்சல். நீச்சல் வீரன், ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்றவன். மையாமி அருகில் வேலை கிடைக்குமா என்று பார்க்கிறான். நடை, யாராவது காரில் லிஃப்ட் கொடுத்தால் உண்டு. ஆனால் மையாமி அருகில் போதைப் பொருள் அடிமைகளான், இளைஞர்களான ஹிப்பிகள் காரை நிறுத்தினால் ஓட்டுனரை அடித்து உதைத்து இருப்பதை பிடுங்கிக் கொள்கிறார்கள். ஹாரி அப்படி நாலு ஹிப்பிகள் ராண்டியை அடிக்க வரும்போது அவர்களோடு சண்டை போடுகிறான். ராண்டி தனக்கு சுற்றுலா காலத்தில் மட்டும் பாரடைஸ் நகரத்தில் ஒரு பெரிய ஹோட்டலின் மதுச்சாலையில் வேலை உண்டு என்றும் அங்கே கடலில் நீந்துபவருக்கு ஆபத்து ஏற்பட்டால் காப்பாற்றும் lifeguard வேலை வாங்கித் தருவதாகவும் சொல்கிறான். இருவரும் இரவில் பாரடைஸ் நகரத்துக்கு நடந்து கொண்டிருக்கிறார்கள். லிஃப்ட் கிடைக்கிறது. ஓட்டி வரும் பெண் தான் மிகவும் களைத்திருப்பதாகவும், காரின் பின்னால் இணைக்கப்பட்டிருக்கும் காரவனில் தூங்கப் போவதாகவும் சொல்கிறாள். காலையில் பார்த்தால் பெண்ணைக் காணவில்லை, காரவனில் ஒரு பிணம்.

ஹிப்பிகள் பற்றிய் அச்சம் நிலவும் சூழலில் காவல்துறை தங்களை நம்பாது, தாங்கள்தான் லிஃப்ட் கொடுத்தவரைக் கொன்றுவிட்டோம் என்று ஜோடித்துவிடும் என்று ஹாரியும் ராண்டியும் அஞ்சுகிறார்கள். பிணத்தைப் புதைக்கிறார்கள்.பிணத்தின் தலையில் போலி முடி- விக் இருக்கிறது. புதைக்கும்போது அது கையோடு வர, விக்கிற்கு அடியில் ஒரு பாரடைஸ் நகர விமான நிலையத்தின் left luggage locker-களில் ஒன்றுக்கு சாவி ஒட்டப்பட்டிருக்கிறது. இருவரும் காரையும் காரவனையும் வேறு வேறு இடங்களில் விட்டுவிடுகிறார்கள். பாரடைஸ் நகரத்துக்கு சென்று வேலைக்கு சேர்கிறார்கள்.

மெதுமெதுவாக அவர்களுக்கும் சில உண்மைகள் தெரிகின்றன. இறந்தவன் பால்டி ரிக்கார்ட். அவன் இறபப்தற்கு முன்னால் ஒரு படகு கிடைக்குமா என்று அல்லாடி இருக்கிறான். பால்டியும் ராண்டியின் ஹோட்டல் முதலாளி சோலோவும் ஒரு காலத்தில் நண்பர்கள்; இரும்புப் பெட்டியை உடைத்து திருடுபவர்கள். ஆனால் இப்போது சோலோ ஹோட்டல் நடத்திக் கொண்டிருக்கிறான்.

பால்டி சோலோவிடம் படகு கேட்டிருக்கிறான். சாதாரணமாக விசாரிக்கும் காவல்துறை அதிகாரி லெப்ஸ்கி ஹாரி விமான நிலையத்திலிருந்து ஒரு பெட்டியைக் கொண்டு போவதை பார்க்கிறார். பெட்டியில் ஒரு காகிதம் ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறது – அதில் இருப்பது பக்கத்தில் உள்ள ஒரு தீவின் பெயர், ஒரு தேதி.

காவல்துறையினர் ஹாரியும் ராண்டியும் விட்டுப் போன காரைக் கண்டுபிடிக்கிறார்கள். பால்டிதான் அந்தக் காரை வாடகைக்கு எடுத்தது என்று தெரிகிறது. பால்டி இறந்துவிட்டான் என்று யூகித்து அவன் பிணத்தைத் தேடிக் கண்டுபிடிக்கிறார்கள். காரோடு காரவன் போனதாகக் கேள்விப்பட்டு காரவனைத் தேடிப் பிடிக்கிறார்கள். பால்டியின் தோழியைத் தேடிப் போனால் அவள் கொல்லப்படுகிறாள். ஆனால் சோலோ, ஹாரி மீது சந்தேகம் வலுக்கிறது.

சோலோவின் மகள் நீனாவும் ஹாரியும் உறவு கொள்கிறார்கள். விடுமுறை நாளன்று அந்தத் தீவுக்கு செல்கிறார்கள். தீவின் உள்ளே சுலபமாக செல்ல முடியாத இடத்தில் – கடலின் அடியில் நீந்திச் செல்ல வேண்டும் – ஒரு படகு இருக்கிறது.படகில் இருப்பது 3 லட்சம் டாலர் மதிப்புள்ள க்யூபன் சுருட்டுக்கள். ஆனால் ஹாரிக்கு நீனாதான் காரை ஓட்டி வந்து பிணம் உள்ள காரவனை தன் தலையில் கட்டியவள் என்று தெரிந்துவிடுகிறது. நன்றாக நீந்தக் கூடிய ஒருவனால்தான் அங்கே செல்ல முடியும் என்பதால்தான் சோலோவும் நீனாவும் இன்னொரு வில்லனும் ஹாரியை பிடித்திருக்கிறார்கள்.

லெப்ஸ்கி சோலோவை நெருங்கிவிட்டார். ஒரு சூழ்ச்சி மூலம் சோலோவை உண்மையை சொல்ல வைக்கிறார். நீனாவும் இன்னொரு வில்லனும் இறந்துவிடுகிறார்கள். ஹாரி நியூ யார்க்க்கு திரும்புவதை கால்வதுறையினர் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுகிறார்கள். திரும்பும்போது ஹாரிக்கு வரும் வழியில் தனக்கு லிஃப்ட் கொடுத்த சாம், ஹோட்டல்காரர் எல்லாரும் ஹிப்பிகளால் கொடுமையாகத் தாக்கப்பட்டிருப்பது தெரிகிறது.

14 வயதில் இந்தக் கதை ஏற்படுத்திய தாக்கம் மிக ஆழமானது. அதுவும் ஹாரி என்னென்னவோ செய்தும் ஹிப்பிகளின் வன்முறை அவன் நண்பர்களை வீழ்த்துவது – அதன் அபத்தம், pointlessness – என்னை மிகவும் கவர்ந்தது. கதைப் பின்னலும் கச்சிதமாக இருந்தது (இன்று குறைகள் தெரிகின்றன், மேம்படுத்தப்பட்ட ராஜேஷ்குமார்தான்). ஆனால் அதன் தாக்கம் என் உலகம் திடீரென்று இந்தியாவுக்கு வெளியே விரிந்ததுதான். Left Luggage Lockers, Lifeguard, கடலுக்கடியில் நீந்திச் செல்லும் பாதை என்பதெல்லாம் பெரிய புதுமை.

கறாராகப் பார்த்தால் படிக்கலாம் என்று மட்டும்தான் சொல்ல வேண்டும். ஆனால் என் நூலகத்திற்கு வாங்க வேண்டும்.

தொகுக்கப்பட்ட பக்கம்: த்ரில்லர்கள்